Feb 18, 2011

கரிசலின் உன்னதக் கதை சொல்லி கி.ரா- எஸ்.ரா

கடவுள் விடுகிற மூச்சைப் போல காற்று வீசும் கரிசல்வெளி
வெயிலின் சமுத்திரத்தில் யாவும் முங்கிய நிசப்தம்
கருஞ்சாம்பல் மண்பரப்புக்குள் மெல்ல முனகும் சிருஷ்டிகரம்
                                                                                                               - தேவதச்சன்

கரிசல் நிலத்தைப் பற்றிய துல்லியமான சித்திரத்தை தேவதச்சனின் இந்தக் கவிதை நமக்குத் தருகிறது.

முள்வேலிக்குள் சிக்கிக் கொண்ட கிழிந்த துணியெனப் படபடத்த படியே ஆகாசத்தின் ஒரே kee.ra.11 இடத்தில் நின்று கொண்டிருக்கும் சூரியனும், ஆட்டுஉரல்களில்கூட நிரம்பி வழியும் வெயிலும், குடிநீருக்காக அலைந்து திரியும் பெண்களும், கசப்பேறிய வேம்பும், கானலைத் துரத்தியலையும் ஆடுகளும், தாகமும் பசியும் அடங்காத காட்டு தெய்வங்களும் கொண்டதுதான் கரிசல் வெளி.

கரிசலில் பிறப்பவர்கள் இயல்பிலே வெக்கை குடித்தவர்கள். வாழ்க்கை இவர்களுக்கு எவ்விதமான சுகபோகத்தையும்  தந்துவிடவில்லை. தினப்பாடுகளைக் கடந்து போவதற்கே சமர் செய்து பழகிய மனிதர்கள். குறிப்பாக இங்குள்ள விவசாயிகள் வானத்தோடு பேசிப் பழகிப்போனவர்கள். மழையைக் கொண்டு செல்லும் மேகம் வேறு ஊரை நோக்கிப் போகிறதே என்று ஆத்திரப்பட்டு மேகங்களை விரட்டி மடக்கி இழுத்துவரப் பின் தொடர்பவர்கள்.

ஆடுமாடுகளை எப்பாடுபட்டாவது நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற மனஉறுதிகொண்டவர்கள். வெயிலோடு வந்து சேர்பவர்களுக்குக் கருப்பட்டியும் செம்பு நிறைய தண்ணீரும் தந்து தாகசாந்தி செய்பவர்கள். ஆண் பெண் என்று பேதமில்லாத  உழைப்பாளிகள்.  வெள்ளந்தி  மனிதர்கள்.  விடாத நம்பிக்கை கொண்டவர்கள். நடந்து அலைந்து பழகிய கால்களும்,  கஷ்டங்களைக்  கண்டு கலங்கி விடாத நெஞ்சுரமும்  கொண்ட  இந்த  மக்களின் வாழ்க்கை அடுத்த  நூற்றாண்டை  நோக்கி அதி நவீன இந்தியா வளர்ந்து செல்லும் போதுகூட கவனிக்கப்படாமலே தானிருக்கிறது.

இன்று எல்லா கிராமங்களையும் வியாபித்துள்ள டிவியும், மெட்ரிக்குலேசன் பள்ளிகளும், ரியல் எஸ்டேட்டும்தான் இந்த ஊர்களுக்கும் புதிய வருகை. நெடுஞ்சாலையை ஒட்டிய கிராமங்கள் யாவும் சாலையைப் பார்த்து திரும்பிக் கொண்டு விட்டன. ஒதுங்கிய கிராமங்களில் உள்ளவர்கள் ஊரை சபித்தபடியே இதில் மனுசன் குடியிருப்பானா என்று அருகாமை நகரங்களை நோக்கி நகரத்துவங்கிவிட்டார்கள்.

இருபது வருசங்களுக்கு முன்பு தீப்பெட்டித் தொழிற்சாலைகள் கரிசல் பூமியின்  தலைவிதியைப் புரட்டிப் போட்டது. இன்று அதுவும் சுவடழிந்து போய்விட்டது. படிப்பு, வேலை, என்று வெளியேறத் துவங்கி விட்ட அடுத்த தலைமுறையோடு நிலங்களை விற்று காசாக்கி வங்கியில் இட்டு அதிலிருந்து வாழ்வது என்ற நடைமுறை மெல்லப் பரவி வருகிறது.

கரிசல் கிராமங்களைக் கடந்து போகும்போது கண்ணில் படும் காட்சிகள் துயரமானவை. இங்கே உழவுமாடுகளைக் காண்பது அரிதாகி விட்டது. ஊரில் விவசாயம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து போயிருக்கிறது. திண்ணை உள்ள வீடுகள் கண்ணில் படவேயில்லை. கிணறுகள் கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன. அதில் சிறார்கள் கிரிக்கெட் ஆடுகிறார்கள்.

மாட்டுவண்டிகள் அச்சாணி முறிந்து கிடக்கின்றன. வண்டி செய்யும் ஆசாரிகள் தொழிலை விட்டே  போய்விட்டார்கள். நகரத்தில் நடைபெறும் கட்டட வேலைகளுக்காக மொத்த மொத்தமாக ஆள் கூட்டிப் போகப்படுகிறார்கள். குடும்பமே கூலிக்காக நகரங்களை நோக்கிக் கிளம்புகிறது. திரும்பி வருவார்களா என்று தெரியாது. ஆனால் இந்தக் கிராமங்களைக் கடந்து செல்லும் சூரியனும் காற்றும் உலர்ந்த மேகங்களும் அப்படியே இருக்கின்றன. வாழ்க்கை மட்டும் புரண்டு கிடக்கிறது

இந்தச் சூழலில் கரிசல் வாழ்வின் நுட்பங்களையும், அதன் கடந்தகாலக் கதைகளையும் இந்தக் கிராமங்களில் வாழ்ந்து மறைந்த மனிதர்களைப் பற்றிய நினைவுகளையும் அறிந்து கொள்வதற்கு இலக்கியப் பதிவுகளே துணை செய்கின்றன.

அப்படி கரிசலைத் தன் எழுத்தின் வழியே ஆவணப்படுத்திய உன்னதக் கதை சொல்லி கி. ராஜநாராயணன். தனி ஒரு ஆளாக அவர் செய்த பங்களிப்பில் இருந்தே கரிசல் எழுத்தாளர்கள் என்று ஒரு மரபு உருவானது.

பூமணி, பா.ஜெயபிரகாசம் கோணங்கி, தமிழ்ச்செல்வன், தேவதச்சன், சோ. தர்மன். முத்தானந்தம், உதயசங்கர், காசிராஜன், கௌரி சங்கர், சாரதி, ஜோதி விநாயகம், மேலாண்மை பொன்னுசாமி, அப்பண்ணசாமி பாரததேவி, என நீளும் கரிசல் எழுத்தாளர்கள் பட்டியல் வளர்ந்து கொண்டேதானிருக்கிறது.

இந்தியாவில் வேறு ஏதாவது ஒரு மொழியில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் ஒன்றாக எழுத்தாளர்கள் ஆனதும் இரு வருமே குறிப்பிடத்தக்க வகையில்  இலக்கியத்தை வளப்படுத்தி சாகித்ய அகாதமி பெற்றதும் நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை. தமிழ் இத்தகைய பெருமைக்குரியது.

தூத்துக்குடி மாவட்டத்தின் இடைசெவல் கிராமத்தில் பிறந்த கு.அழகிரிசாமியும் கி.ராஜநாராயணனனும்  தமிழின் இரண்டு முக்கிய படைப்பாளிகள். இருவரும் பால்யகாலம் முதல் நண்பர்கள். ஒன்றாக வளர்ந்தவர்கள். இருவருமே  எழுத்தாளர்களாகி சாகித்ய அகாதமி பெற்றிருக்கிறார்கள்.

முறையான பேருந்து வசதி கூட இல்லாத கிராமம் அது. கோவில்பட்டி - திருநெல்வேலி பிரதான சாலையில் இருந்து கூப்பிடும் தூரத்தில் உள்ளது. நாளைக்கு ஆயிரம்கார்கள்,  பேருந்துகள்  பிரதான  சாலையில் கடந்து போகின்றன. ஆனால் இலக்கியவாதிகள்  பிறந்த ஊர் கவனம் கொள்ளப் படாமலே கிடக்கிறது.

கு. அழகரிசாமி இடைசெவல் மனிதர்களைத் தன் எழுத்தில் பதிவு நுட்பமாகச் செய்திருக்கிறார். ஆனால் அவர்கள் மொழியில் பதிவு செய்யவில்லை. கிராவின் முக்கிய பங்களிப்பு மக்கள் தமிழில் கதைகளை எழுதியதே. அது பேச்சிற்கும் எழுத்திற்குமான இடைவெளியை வெகுவாகக் குறைத்தது.  நம் எதிரில் ஒருவர் அமர்ந்து கதை சொல்வது போன்ற நெருக்கத்தை உருவாக்கியது.

வட்டார வழக்கு என்று இதை நான் சொல்லமாட்டேன். மாறாக இது ஒரு மரபு. இரண்டாயிர வருட தமிழ் இலக்கியத்தில் நிலம் சார்ந்து உருவாக்கப்பட்ட இலக்கிய மரபின் தொடர்ச்சியிது. தமிழின் நீண்ட கதை சொல்லும் மரபில் இது கரிசல் மரபு என்று அடையாளப்படுத்தலாம்.

கரிசல் எழுத்தின் பீஷ்மராக கி.ராவைச் சொல்ல வேண்டும். சொந்த மண்ணையும் மக்களையும் அவர்களின் வேர்மூலங்களையும் பதிவு செய்த கிராவின் எழுத்து தமிழ் நவீன இலக்கியத்தில் புதிய வாசலைத் திறந்துவிட்டது. ஆப்பிரிக்க இலக்கியம் இன்று என்ன காரணங்களுக்காக உலக அரங்கில் பேசப்படுகின்றதோ அதை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னதாகவே கரிசல் எழுத்தின் வழி தமிழில் துவக்கி வைத்தவர் கிரா.

kee.ra.9 வோலே சோயிங்கா, சினுவா அச்சுபே, என்று ஆப்பிரிக்க எழுத்தாளர்களுக்குக் கிடைத்துள்ள உலக அங்கீகாரம் இன்றுவரை கிராவிற்குக் கிடைக்கவில்லை. அதைச் செய்ய வேண்டியது தமிழ்ச் சமூகத்தின் கடமை.

1992இல் கிராவிற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது என்ற தகவல் தெரிய வந்தவுடன் நானும் கோணங்கியும் கோவில்பட்டியில் இருந்து அவரைக் காண்பதற்காக பாண்டிச்சேரி புறப்பட்டோம். வழி முழுவதும்  கிராவைப் பற்றியே பேச்சு. குடும்பத்து மனிதர் ஒருவர் கௌரவிக்கப்படுகிறார் என்பது போன்ற கூடுதல் சந்தோஷம்.

கோணங்கியை கிரா மிகச் செல்லமாக அழைப்பார். உரிமையோடு பேசுவார். ஒருமுறை நானும்  கோணங்கியும் அவரைச் சந்திக்க இடை செவல் சென்றபோது கோணங்கி கதையைப் பற்றி வியந்து வியந்து சொல்லிக் கொண்டிருந்தார் கிரா.

அவர் படித்து ரசித்த கதைகளைப் பற்றிச் சொல்வதைக் கேட்பது ரசமான அனுபவம். அப்படி ஒரு எழுத்தாளன் எழுதும் போதுகூட அனுபவித்திருப்பானா  என்று  தெரியவில்லை. அவ்வளவு நேர்த்தியாக  பலாப்பழத்தைச் சுளை சுளையாக எடுத்துக் கையில் தருவது போல விளக்கிச் சொல்வார்.

பாண்டிச்சேரிக்குப் போய் இறங்கி கிரா வீட்டினைத் தேடிச் சென்றோம். இடைசெவலில் இருந்த அவர் புதுவைப் பல்கலைக் கழகத்தின் நாட்டார் வழக்காற்றியல் துறையின் வருகைதரு பேராசிரியராகப் புது அவதாரம் எடுத்திருந்தார். புதுவை வாசம் அவரது தன்னியல் பிறகு மெருகேற்றியிருந்தது. பிரெஞ்சு இலக்கியவாதிகளைப் போல நைனாவும் வாக்கிங் போகிற அழகு பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது என்று கோவில்பட்டியில் நண்பர்கள் பேசிக் கொள்வார்கள்

ஊரில் இருந்த நாட்களில் கிராவைப் பார்த்திருக்கிறேன். கோவில்பட்டியிலிருந்து இடைசெவல் போகின்ற டவுன்பஸ்ஸிற்காக கோபாலன் கம்பெனி முன்னால் உள்ள புளிய மரத்தடியில் நின்று கொண்டிருப்பார். அவரோடு காத்திருப்பவர்கள் அத்தனை பேரும் விவசாயிகள். அவரும் ஒரு விவசாயியே. ஒரே சிறப்பு, கதை எழுதத்தெரிந்த விவசாயி.

கோவில்பட்டியின் புழுதியை தாங்கிக் கொண்டு பஸ் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருப் பதைக் கண்டிருக்கிறேன். சில நாட்கள் தேவதச்சன் கடையில் வந்து நின்று அவரோடு பேசிக் கொண்டிருப்பார். கையில் எப்போதும் ஒரு மஞ்சள் பையிருக்கும். தெரிந்த முகத்தைப் பார்த்தவுடன் முகத்தில் சிரிப்பு மலரும். இணக்கமாகப் பேசத் துவங்குவார்.

கிரா விவசாய சங்கத்தில் தீவிரமாக இருந்த நாட்கள் அது. அதைப் பற்றி தேவதச்சனுடன் விவாதம் செய்தபடியே இருப்பார். தொலைவில் நின்றபடியே பார்த்துக் கொண்டிருப்பேன்.

அன்றைக்கு பாண்டிச்சேரியில் அவர் வீட்டிற்குப் போன போது இம்புட்டு தொலைவிலிருந்து வந்திருக்கிறார்களே என்று எங்களுக்கு ஒரே உபசாரம். கிரா வீடு உபசரிப்பிற்குப் பெயர் போனது. அதிலும் கணவதி அம்மாவின் அன்பு அளப்பறியது. விருந்தாளிகளைக் கவனிப்பதற்கு என்று தனியே படித்திருப்பார்கள் போலும். அப்படிப் பார்த்துப் பார்த்துக் கவனிப்பார்கள்.

சாகித்ய அகாதமி விருது கிடைத்ததை ஒட்டி நிறைய பேர் வருவதும் பாராட்டுவதுமாக இருந்தார்கள். நாங்கள் அவரைத் தொந்தரவு படுத்த வேண்டாம் என்று கிளம்பி அங்கிருந்து சென்னைக்குக் கிளம்பினோம். வழியிலும் கிரா பற்றிய பேச்சு நீண்டது. நைனா அப்படியே இருக்காரு என்று கோணங்கி வியந்தபடியே வந்தார்.

நான் கிராவை முதன்முறையாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் என்ற ஊரில் நடை பெற்ற இலக்கிய முகாமில் சந்தித்ததைப் பற்றிச் சொன்னேன்.

அந்த முகாம் ஒரு டூரிங் தியேட்டரில் நடைபெற்றது. பகலில் காட்சிகள் கிடையாது என்பதால் இலக்கிய முகாம் நடத்த இடம் தந்திருந்தார்கள். முப்பது நாற்பதுபேர் வந்திருப்பார்கள். கிரா கரிசல்கதைகள் பற்றி உரையாற்றினார். கந்தர்வன் முற்போக்கு இலக்கியம் பற்றிப் பேசினார். தோழர் எஸ்.ஏ.பெருமாள் மாக்சிம் கார்க்கி பற்றிப் பேசினார். இப்படி பகல் முழுவதும் நடந்தது. அந்தப் பயிற்சி முகாமிற்குப் போகும் முன்பு என் அண்ணன் அங்கே நடப்பதைக் குறிப்பெடுத்து வர வேண்டும் என்று சொல்லியிருந்தான்.

ஆகவே நான் முதல்வரிசையில் அமர்ந்தபடியே ஒரு நோட்டில் மிகக் கவனமாகக் குறிப்புகளை எழுதிக் கொண்டேயிருந்தேன். கிரா என்னை ஏதோ ஒரு பத்திரிகையின் செய்தியாளர் என்று நினைத்திருக்க  வேண்டும். மதிய உணவின் போது எந்தப் பத்திரிகை என்று கேட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பிறகு அவரே விளக்கிச் சொன்னார். நான் கல்லூரியில் படிக்கின்றவன் என்று சொன்னதும், அப்படியா, நான் தப்பா நினைச்சிட்டேன் என்றபடியே இதை என்ன செய்வீங்க என்று கேட்டார். நான் தெரியலை என்றேன். அவருக்குச் சிரிப்பு வந்தது. பிறகு எதுக்கு இந்த சள்ளை பிடிச்ச வேலை என்று கேட்டார்.

மதியம் நான் குறிப்பு எடுக்கவேயில்லை. அதை அவர் கவனித்து  சிரித்துக் கொண்டார். சில எழுத்தாளர்களைச் சந்திக்கும்போது நாம் விரும்பாமலே வேறு ஒரு பிம்பம் நம்மைப் பற்றி உண்டாகிவிடும். அப்படிப் பலமுறை எனக்கு நடந் திருக்கிறது என்று சொன்னேன். கோணங்கியும் சிரித்துக் கொண்டார்

இதற்கு முன்பாக நான் கிராவைப் படிக்கத் துவங்கிய விதமும் திருகு தாளமாகவே நடந்தேறியது.

ஆல்பெர் காம்யூ, காப்கா, சார்த்தர், ஹெஸ்ஸே என்று தேடி வாசித்துக் கொண்டிருந்த நாட்களில் கிராவின் கதைகள் எனக்கு அறிமுகமானது. அவரைப் படிக்கப் படிக்க யாரோ தெரிந்த மனிதர் தான் சந்தித்த  விஷயங்களை நேரிடையாகச் சொல்கிறாரோ என்று தோன்றியது. இது ஒன்றும் பெரிய s விஷயமில்லையே இதை எதற்குக் கொண்டாடுகிறார்கள் என்றும் மனதில்பட்டது.

சிறுகதைகள் என்றால் வடிவ நேர்த்தியும் கவித்துவமான மொழியும் பன்முகத்தன்மையும் கொண்டிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பிக் கொண்டிருந்தேன். அப்படி இல்லாத கதைகளை யார் எழுதியிருந்தாலும் உடனே நிராகரிக்க வேண்டும் என்றும் பழகியிருந்தேன்.

இதனால் கிராவின் சிறுகதைகளைப் படித்தவுடன் ஒரு தபால் அட்டையில் இவை எல்லாம் என்ன கதைகள் என்பது போல கடுமையாக விமர்சனம் செய்து அனுப்பி நீங்கள் காம்யூ, சார்த்தர், ம்யூசில் ஹெஸ்ஸே எல்லாம் படிக்க வேண்டும் என்று நீண்ட பட்டியலை எழுதியிருந்தேன். சில நாட்களில் அவரிடமிருந்து பதில் வந்தது. நீங்கள் நிறைய படிக்கிறீர்கள். இது ஜீரணமாக கொஞ்ச நாள் ஆகும். அப்புறம் என்னைப் படித்துப் பாருங்கள் என்று எளிமையாக எழுதியிருந்தார். அது உண்மை என்று புரிந்தது.

ஆரம்பகால இலக்கியவாசகன் எப்போதுமே பரபரப்பும் எடுத்தெறியும் விமர்சனங்களும் கொண்டிருப்பான். அப்படித்தான் நானும் இருந்தேன். ஆனால் தொடர்ந்த வாசிப்பும் எழுத்தும் பார்வையை விசாலப்படுத்தியது. பல விஷயங்களைப் புரிய வைத்தது.

மண்ணையும் மனிதர்களையும் எழுதுவது அத்தனை எளிதல்ல என்பதைப் புரிந்து கொள்ளத் துவங்கிய பிறகு அவரது கதைகளைப் படிக்கத் துவங்கினேன். கதைகளில் சம்பவங்கள் மட்டுமின்றி பறவைகள், மிருகங்கள், மனித நம்பிக்கைகள், சடங்குகள், வெயில், மழை, காற்று, மண் என்று நுட்பமாக விரிந்து கொண்டே போனதோடு தனித்துவமான கிராமத்துச் சொற்கள், அசலான கேலி, பாலியல் சார்ந்த பதிவுகள் என்று கதையுலகம் வளர்ந்து கொண்டே போனது.

கிரா ஒரு கதைக்களஞ்சியம் போலிருந்தார். முதன்முறையாக என்னைச் சுற்றிய உலகை நான் பார்த்துக் கொள்ளத் துவங்கினேன். மஞ்சனத்திச் செடியும் தும்பையும் நெருஞ்சியும் அவர் கதைகளில் வந்தது போல ஏன் என் எழுத்திற்குள் வரவேயில்லை என்று கேட்டுக் கொண்டேன். தவிட்டுக் குருவிகள், தைலான், செம்போத்து, நாரை, கௌதாரி போன்ற பறவைகள் ஏன் நவீனக் கதைகளை விட்டு விலகிப் பறந்து போகின்றன. கார்க்கியின் கிழவி இஸர்கீலை ரசிக்கத் தெரிந்த எனக்கு ஏன் கிராவின் பப்பு தாத்தா சாதாரணமாகத் தெரிந்தார் என்று குற்றவுணர்ச்சி கொள்ளத் துவங்கினேன்.

தத்துவமும் மெய்யியலும் மட்டுமே வாழ்வின் தரிசனங்களை உருவாக்குபவை என்று நினைத்துக் கொண்டிருந்தது மாறி வாழ்வின் அன்றாடச் செயல்பாடுகளில் இருந்து பெறும் அகதரிசனம் தத்துவம் தரும் உன்னத நிலைகளைவிடவும் வலிமையானது என்று புரிந்தது.

கிராவைத் தேடித் தேடி வாசித்தேன்.  அவரது  படைப்புலகில்  எனக்கு மிக  விருப்பமானது கோபல்ல கிராமம் நாவல். அது இலக்கியப்பதிவு மட்டுமில்லை. ஒரு சமூகம் எப்படி நம்மண்ணில் வேர் ஊன்றியது என்ற சரித்திர ஆவணம். நாட்டார் மரபு எப்படி நிலம் கடந்து தொடர்கின்றன என்று ஆய்வதற்கான  சான்றுப் பொருள். நினைவுகள் எவ்வளவு வலிமையானவை என்பதை நிரூ பணம் செய்யும் சாட்சி. மானுடவியல் நோக்கில் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதைச் சுட்டிக்காட்டும் ஆய்வுப்படைப்பு. இப்படி அது பன்முக நிலைகளில் முக்கியத்துவம் வாய்ந்த நாவலது.

கிராவின் சிறுகதைகள் சொல்மரபிலிருந்து உருவானவை. அவை கதைகளின் வழியே மனித வாழ்வின் துயர்களை, சந்தோஷங்களை, அகச்சிக்கல்களைப் பேசுகின்றன. அவர் அலங்காரமாகக் கதை சொல்வதில்லை. ஆனால் உயிரோட்டமாகக் கதை சொல்கிறார். கடலைச் செடியை மண்ணிலிருந்து பிடுங்கினால் எப்படி வேரில் ஒட்டிய மண்ணோடு சேர்ந்து வருமோ அப்படியான படைப்பது. எளிய கிராமத்து மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை அவர் அளவு உன்னிப்பாக எழுதியவர் வேறு எவருமில்லை.

விஞ்ஞானத்தின் வருகை கிராமத்து வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போட்டது என்பதைப் பற்றிய பதிவுகள் தமிழில் அதிகம் இல்லை. கிரா அதைக் கவனமாகப் பதிவு செய்திருக்கிறார். டீ தயாரிக்கும் கம்பெனிகள் எப்படி இலவசமாக தேயிலைகளை வீடு வீடாகக் கொண்டு வந்து கொடுத்தார்கள் என்பதில் துவங்கி, கடிகாரம் வந்தது ரயில் வந்தது என்று நீண்டு விஞ்ஞானம் கிராமத்தில் நுழையும் போது ஏற்படும் அதிர்ச்சிகளை அசலாகப் பதிவு செய்திருக்கிறார். அது போலவே சுதந்திரப் போராட்ட நாட்களில் தமிழ்க் கிராமங்கள் எப்படியிருந்தன என்பதற்கும் அவரது கதைகளே நேர் சாட்சிகள்.

திருடனை எப்படிக் கழுவேற்றினார்கள் என்பதை அவரது கதையில்தான் முதன்முறையாக வாசித்துத் தெரிந்து கொண்டேன். சமணர்களைக் கழுவேற்றிய சரித்திர உண்மைகளைப் படித்து அறிந்திருந்த போதும் கழுமரம் எப்படியிருக்கும் அது என்னவிதமான தண்டனை என்பதை அவரே முதன்முதலில் விரிவாக விளக்கி எழுதியிருந்தார்.

ஒரு முறை நகுலனைச் சந்திக்கச் சென்றபோது அவர் தன்னுடைய அம்மா கிராவின் கதை ஒன்றை அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். கரிசல்காட்டில் ஒரு சம்சாரி என்ற கதையது. அந்தத் தலைப்பு அவளை ஏதோ செய்தது. அடிக்கடி தலைப்பை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பாள். பெண்கள் நாம் படிக்கும் அதே கதைகளை வேறு விதமாகப் படிக்கிறார்கள் போலும் என்றபடியே உங்களுக்கு கிராவைப் பிடிக்குமா என்று கேட்டார். ஆமாம் என்றபடியே உங்களுக்கு என்று கேட்டேன். இரண்டு கைகளையும் உயர்த்தியபடியே அசலான எழுத்தாளர் என்று சொல்லிச் சிரித்தார். நகுலனின் எழுத்தில் கிராவின் எழுத்து பற்றிய நுட்பமான பதிவு சில இடங்களில் வெளிப்பட்டுள்ளது.

கதவு என்ற கிராவின் கதை அது எழுதப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து வாசிக்கபட்டும் கொண்டாடப்பட்டும் வருகிறது. சமீபத்தில் பிரெஞ்சில் இருந்து வந்த ஒரு ஆய்வாளரைச் சந்தித்தேன். அவர் அந்தக் கதையை தான் பிரெஞ்சில் வாசித்திருப்பதாகவும் அது அற்புதமான கதை என்றும் சொல்லி வியந்தார்.

எழுத்தாளர் என்ற முறையில் தன் மண்ணையும் மக்களையும் இலக்கியமாக்கியதோடு கிராவின் பணி முடிந்துவிடவில்லை. நேரடியான அரசியல் ஈடுபாடும் கொண்டவர் கிரா. இடதுசாரி இயக்கங்களுடன் சேர்ந்து பணியாற்றியவர். சிறை சென்றவர். விவசாய சங்கங்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு இரண்டுமுறை சிறை சென்றிருக்கிறார்.

அதுபோலவே நாட்டுப்புறக் கதைகளைச் சேகரித்துப் பாதுக்காக வேண்டும், அது தனிவகை இலக்கியம் என்று பல ஆண்டுக்காலமாக அவர் மேற்கொண்ட முயற்சி தற்போது ஆயிரம் பக்கத்திற்கும் மேலான பெரிய நூலாக வெளிவந்துள்ளது.

அத்தோடு நாட்டுப்புறக்கதைகள் பற்றி ஆய்வு செய்யவும் கற்றுத் தருவதற்காகவும் புதுவைப் பல்கலைக்கழகம் அவரை பேராசிரியர் ஆக்கி கௌரவப்படுத்தியது. நாட்டுபுறக் கதைகளிலும் பாலியல் சார்ந்த கதைகளைச் சேகரிப்பதில் பலரும் முகச்சுழிப்பு கொண்டபோது பாலியல் மனிதனின் ஆதார இச்சை, அதை எதற்காக விலக்க வேண்டும் என்று பாலியல் கதைகளைச் சேகரித்து, அதைத் தனித்த நூலாகவும் மாற்றியவர் கிரா.

இன்னொரு பக்கம் கரிசல் வட்டாரச் சொற்களைத் தொகுத்து அகராதி உருவாக்கியிருக்கிறார். கடித இலக்கியம் என்ற வகையை மேம்படுத்தியது அவரது கடிதங்கள். அழகிரிசாமிக்கும், நண்பர்களுக்கும் அவர் எழுதிய கடிதங்கள் அபூர்வமான இலக்கியத் தன்மை கொண்டவை.

தாமரை, சாந்தி, தீபம் என்று இலக்கிய இதழ்களில் எழுதிக் கொண்டிருந்த கிரா விகடனில் எழுதியதன் வழியே பரவலான பொது வாசகர்களைச் சென்று சேர்ந்தார். அது அவருக்கெனத் தனித்த வாசக பரப்பை உருவாக்கியது. இசையிலும் பழந்தமிழ் இலக்கியங்களில் அவர் கொண்டுள்ள ஈடுபாடு அலாதியானது. விளாத்திகுளம் சாமிகளிடம் நேரடியாக இசை பயின்றிருக்கிறார். டிகேசியிடம் கம்பராமாயணம் கேட்டு அறிந்திருக்கிறார். இப்படி ஆயிரம் சிறப்புகள் கிராவிற்கு உண்டு.

சென்றஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிராவைச் சந்தித்தேன். கையைப் பிடித்தபடியே அன்போடு பேசிக்கொண்டிருந்தார். அவரோடு அவரது பேரன் நின்றிருந்தார். சென்னையில் கணிப்பொறித் துறையில் வேலை செய்கின்றவர். அவரை அறிமுகம் செய்து வைத்து இவன் உங்களைத்தான் விரும்பிப் படிக்கிறான் என்று சொல்லி சென்னையில்தான் இருக்கான், உங்களைச் சந்திக்கச் சொல்கிறேன் என்று சொன்னார். பத்து நிமிசம்தான் பேசியிருப்போம். ஆனால் மனதில் விளக்கிச் சொல்லமுடியாத சந்தோஷம் உருவானது.

மகாகவி தாந்தேயின் கண்ணில் பட்ட புலி ஒன்று அவரது கவிதையின் வழியே நித்தியத்துவம் அடைந்து விட்டது என்று போர்ஹே ஒரு கதையை எழுதியிருப்பார். ஒரு வகை யில் கிராவின் வழியே கரிசல் கிராமங்கள் தன் வாழ்க்கையை எழுதிப் பாதுகாத்து வைத்துக் கொண்டுவிட்டன என்றே தோன்றுகிறது

*****

நன்றி: உயிர்மை

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

7 கருத்துகள்:

இரா. பாலா on February 18, 2011 at 9:45 AM said...

கி.ரா வின் எழுத்துக்களைபோல எஸ்.ரா வும் நம்முடன் நேரடியாக
உரையாடியதைப்போன்றதொரு அனுபவம்.மிக அருமையான பகிர்வு.
R.பாலா-சிங்கப்பூர்.

Aranga on February 18, 2011 at 9:51 AM said...

அழகான கட்டுரை , கிராவின் ஆளூமை மிகப்பெரிது . நன்றி

sureshkumar on February 20, 2011 at 1:29 PM said...

கி.ரா வின் எழுத்துக்கள் அனைவரும் படிக்கவேண்டியவை.

R.S.KRISHNAMURTHY on September 16, 2011 at 5:08 PM said...

கி.ரா.மண்ணைப் படித்தவர், எஸ்.ரா, மனிதனைப் படித்திருக்கிறார் இங்கே! ஏற்கனவே கி.ரா.வைப் பற்றிப் படித்திருந்தால் கூட, இப்போதும் படிப்பது இனிமை, இனிமை! பதிவிற்கு நன்றி!

MARUTHU PANDIAN on January 28, 2012 at 11:47 AM said...

Writer S. Ramakrishnan, from did you learn this art of writing? If Writers like Ki. Rajanarayanan have done a service to Tamil language and culture by capturing it in their writings, you are doing an equal service by introducing them and their writings to people like me. I am from Kovilpatti and i have heard about Ki.Ra from my father. I have read his "Kathavu" during school days as a text for Tamil.

Now i have read this article about Ki.Ra i am going read all of his works.

Thank You So Much....

MARUTHU PANDIAN on January 28, 2012 at 11:48 AM said...

Writer S. Ramakrishnan, from did you learn this art of writing? If Writers like Ki. Rajanarayanan have done a service to Tamil language and culture by capturing it in their writings, you are doing an equal service by introducing them and their writings to people like me. I am from Kovilpatti and i have heard about Ki.Ra from my father. I have read his "Kathavu" during school days as a text for Tamil.

Now i have read this article about Ki.Ra i am going read all of his works.

Thank You So Much....

இளவேனில் on May 29, 2018 at 2:33 PM said...

அருமையான பதிவு.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்