Feb 23, 2013

வந்தான்,வருவான்,வாராநின்றான் - நாஞ்சில்நாடன்

ஜீன்மாத மழையில் நனைந்து கொள்ளலாம் என மே மாத வெயில் சாலைகளையும் உயர்ந்த அடுக்குக் கட்டிடங்களையும் சாக்கு படுதாவும் பாலிதீன் கூரையும் வேய்ந்த குடிசைகளையும் ஓட்டுக்கூரை வரி வீடுகளையும் பழுக்கக் காய்ச்சிக் கொண்டிருந்தது.அபூர்வமாய் தென்பட்ட மரங்களின் நாசித் துவாரங்களில் எல்லாம் தூசி அடைத்துக் கொண்டு வெயில் அதனை இறுக்கிக் கொண்டிருந்தது. காலை ஒன்பது மணி முதல் மதியம் இரண்டு மணி வரை வெயிலில் அலைவதென்பது அன்றாடம். தலையில் இருந்து மயிர்க்காடுகள் வழியாக நீரூற்றுக்கள் வழிந்தன. அன்று வெயில் மேலும் காட்டமாக இருந்தது. தூசுகள் மினுங்கிய சந்துகள் nanவழியாக நிறைய அலைய வேண்டியது இருந்தது.

மொரார்ஜி மில்லின் இரண்டாவது யூனிட் பக்கமுள்ள சந்து வழியாக பிரகாஷ் மில்லுக்கு நடந்து  போய்வருவது என்பது செளகரியமான காரியம் அல்ல.அந்த பாதையில் பஸ்கள் போவதில்லை.நகரின் அந்தப் பகுதியில் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.டாக்ஸியில் போனால் கட்டுப்படி ஆகாது.அந்த வெயிலிலும் இறுக்கமான சாட்டின் பாவடையும் ரவிக்கையும் போட்டுக்கொண்டு குடிசை வாசல்களில் புணர்ச்சிக்கூலிக்கு ஆள் தேடிக்கொண்டு நிற்கும் பருவம் தாண்டிய தெலுங்குக்காரிகள்.

நாக்கை வறட்டியது தாகம்.எலுமிச்சம் பழமும் இஞ்சியும் சேர்த்துச் சதைத்த கரும்புச்சாறு ஐஸ் போட்டு இரண்டு தம்ளர்கள் இறங்கியும் நாவறட்சி தணியவில்லை.

மாலையில் மூக்கு ‘ஙொணஙொண’ என்றது.தொண்டையில் இளஞ்செருமல்.அடுத்த நாள் காலையில் மூக்கு அவ்வளவாய் ஒழுக வில்லை என்றாலும் நாசித்திமிர்கள் ‘கணகண’வென்று தணிந்து எரியும் அடுப்பாய் காந்தின.அன்று மேலும் அலைச்சல்,வெயில்,தூசி,ஐஸ் போட்ட கரும்புச் சாறு.

மூன்றாம் நாள் எழுந்திருக்கும்போது மேல் எல்லாம் வலிப்பது போலிருந்தது.வறண்ட இருமல்.சுவாசிக்கச் சற்று சிரமமாக இருந்தது.ஒருநாள் ஓய்வெடுத்தால் சரியாகிப் போகும் என்று வேலைக்குப் போகவில்லை.இரவில் மூச்சுவிடும்போது விரல்களால் இருபக்க செவித்துவாரங்களை அடைத்துவிட்டுக் கேட்டால் விசில் அடிப்பது போல் சன்னமான ஒலி.மறுநாள் காலையில் பாத்ரூம் போய்விட்டு வந்தாலே மூச்சு வாங்கியது. தொடர்ந்து பேசினாலும் இருமல் வந்தது.நெற்றியில் வியர்வை துளிர்த்தது.விக்ஸ்,அமிர்தாஞ்சன்,கோல்ட்ரின் பிளஸ்,ஆக்‌ஷன் நானூற்றுத் தொண்ணூற்று எட்டு எதுவும் எடுபட வில்லை. சுக்கும் மிளகும் தட்டிப்போட்ட கருப்பட்டிக் காப்பி சற்று இதமாக இருந்ததே தவிர நிவாரணம் இல்லை.

சாயங்காலம் மெதுவாக நடந்து கடைத்தெருப்பக்கம் வந்தான்.வழக்கமாய் இது போன்ற சில்லறை உபாதைகளுக்காய் பார்க்கும் வாமன்ராவ் பாட்டீல் அன்று வார விடுமுறை.நல்ல டாக்டராய் பார்த்துக் காட்டலாம் என்று பாலிகிளினிக் வாசல்களில் பெயர்ப்பலகைகளை படித்துக்கொண்டு நடந்தான்.மனதுக்கு பிடித்த மாதிரி ஒரு பெயரும் அமையவில்லை.ஜரிவாலா,லோகன்ட் வாலா,பாட்லி வாலா என்று தொழிலுகு சம்பந்தமில்லாமல்...சூரத் மிட்டாய் வாலா கடைக்கு அடுத்த வாசலில் டாக்டர் விஜய் நெகலூர் என்று கண்டிருந்தது.இவரே ஆகலாம் என்று முதல் மாடி ஏறி போனான்.மாடிப்படி ஏறுகையில் இளைத்தது.மூச்சு வாங்கும் சத்தம் சன்னமான சோகரசம் பிழியும் ஷெனாய் வாத்தியம் போல பொதுமக்களுக்குக் கேட்குமோ என்று அச்சமாக இருந்தது.

டாக்டர் இருந்தார்.கூட்டம் அதிகமில்லை.’இந்த நோயினால் நீங்கள் செத்து போகத்தான் வேண்டுமென்றால் கவலைப்பட்டு பயனில்லை. சாகப்போவதில்லை என்றால் எதற்காக கவலைபட வேண்டும்’ என்ற ரீதியில் ஆங்கில வாசகம் கொண்ட அட்டை சுவராசியம் தருவதாக இருந்தது.

தன்முறை வந்ததும் உள்ளே போனான்.சுருக்கமாகச் சொன்னான்.குழல் வைத்து பரிசோதித்து,நாக்கை நீட்டச் சொல்லி டார்ச் அடித்துப் பார்த்தார்.கண் இமைகளைத் தாழ்த்திப் பார்த்தார். பலமாக மூச்சை இழுத்துப் பிடித்து நிறுத்தச் சொன்னார்.மிகச்சிரமமாக இருந்த்தது.நெற்றியில் வியர்வை துளிர்த்தது. குறுஞ்சுவாசம் பறிந்தது.

“கடுமையான பிராங்கைடிக் அட்டாக்.எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால்தான் நுரையீரலுக்கு ஏற்பட்டிருக்கும் சேதத்தை அனுமானிக்க முடியும்.ஆனால், எக்ஸ்ரே எடுக்கும்போது, இந்த நிலையில் மூச்சை இழுத்துப் பிடித்து நிறுத்திக் கொள்வது முடியாத காரியம். கூட யார் வந்திருக்கிறார்கள்?”

“ஒருத்தரும் இல்லை.தனியாகத்தான் வந்தேன்.”

“உடனே அட்மிட் ஆவது நல்லது.குளுகோசுடன் நரம்பு மூலமாகத் தொடர்ந்து ஒருநாள் மருந்து செலுத்த வேண்டும்.”

“மாத்திரையிலே சரியாகாதா டாக்டர்?”

“சரியாகும்.ஆனால்,நாளாகும்.நான் சொல்வது உடனே கண்ட்ரோல் ஆகும்.”

“வீட்டுக்கு தகவல் சொல்லணும்.”

“அதுக்கு வேணும்னா ஏற்பாடு செய்யலாம்.”

“இல்லை.பயந்திருவாங்க. நாளை காலையிலே வந்து அட்மிட் ஆயிருவேன்.”

“சரி.அப்படியே செய்வோம்.இப்போ இண்ட்ரா வெயின்ல ஒரு இன்ஜக்சன் தர்றேன்.கொஞ்சம் ரிலீஃப் இருக்கும்.”

காலரா தடுப்பு ஊசியும் அம்மை குத்தும் மாத்திரம் மற்றும் ஏற்றுக்கொண்ட உடம்பு.நரம்புக்கு அலைந்து தேடிப்பிடித்து ஊசி மூலம் மருந்து செலுத்தும்போது உடல் முழுவதும் ஒரு கணப்புப் பரவியது.சூடாகச் சற்றுப் பருகத் தந்தனர்.

“எப்படி வந்தீங்க?”

“நடந்துதான்.”

“போகும்போது ஆட்டோல போங்க.தூசு வந்தா கர்சீப்பால மூக்கைப் பொத்திக் கொள்ளணும்.”

வீடு வந்து சேர்ந்து,நயமாக சொன்னான்.இரா முழுக்க காலையில் போய் அட்மிட் ஆகிக்கொள்வதா,இல்லை வேறு டாக்டரைப் பார்க்கவா என்று சர்ச்சை.எரிகிற கொள்ளியில் எதுவானால் என்ன என்றொரு தேறுதல்.காட்சிகளைத் தாறுமாறாகப் பிரித்துப் போட்டது பொல் கனவுகள்.

ஊரில் விறகுக்கம்பு தறிக்கையில் வெட்டுக்கத்தி காலில் பாய்ந்து நெல் நீளத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து கொப்பளித்த ரத்தம் பார்த்து மயக்கம் வந்து விட்டது ஒருமுறை.

கல்யாணம் ஆகுமுன் அறையில் உடன் தங்கியவன் குடல்வால் அறுவை சிகிச்சை செய்து படுக்கையில் கிடந்தபோது பார்க்கப் போனதில் அவன் மயக்கம் தெளியாமல் கிடந்தது காண தலைச்சுற்று வந்தது.

காலையில் வெந்நீர் போட்டுக் குளித்து அரைகுறையாய் ஆகாரம் செய்து,ஆட்டோ பிடித்து நர்சிங் ஹோம் போய்ச் சேர்ந்தபோது டாக்டர் வந்திருந்தார்.

படுக்கை எதுவும் காலியாக இல்லை.தற்காலிகமாய் இண்டன்ஸிவ் கேர் யூனிட் காலியாக இருந்ததால் அதில் படுக்கப் போட்டார்கள்.இரும்புக் கட்டில் உயரம் சரிசெய்து குளுக்கோஸ் பாட்டில் ஸ்டாண்ட் போட்டு, பாட்டில் தொங்கவிட்டு, இடது புறங்கையில் நரம்பு பிடித்து,ஊசி ரப்பர் குழல் எல்லாம் பொருத்தி குளுகோஸ் சொட்டுச் சொட்டாக இறங்க ஆரம்பித்தபின் மருந்தொன்றை அதில் மஞ்சளாய் கலந்துவிட்டுப் போனாள் செவிலி.பார்க்க நன்னாரி சர்பத் போல இருந்தது. நிமிடத்துக்கு ஆறு சொட்டுகள் வீதம் இறங்கி கொண்டிருந்தது.

டாக்டர் வந்து பார்த்துவிட்டு, சொட்டுகளைச் சற்று துரிதப்படுத்தி விட்டுப் போனார். மனைவியிடம் வீட்டுக்குப் போய்விட்டு மத்தியானம் சாப்பிடச் சூடாக ஏதும் கொண்டு வரச் சொன்னார்.கையை அதிகம் அசைக்க வேண்டாம் என்றும் பாத்ரூம் போக வேண்டுமானால் நர்சிடம் சொல்லி குளுக்கோஸை நிறுத்திவிட்டு சட்டென்று போய்வரும்படியும் சொன்னார்.

ஏ.சி ரூம் குளிர்ச்சியாக இருந்தாலும் நேரம் நகராமல் புழுக்கமாக இருந்தது.ஏதாவது படிக்கக் கொண்டுவந்திருக்கலாம்.

நிமிடத்துக்கு பதினேழு சொட்டுகள் என இறங்கிக் கொண்டிருந்தன. அவ்வளவு அழகும் சதைப்பிடிப்பும் நிறப்பொலிவும் இல்லாத மலையாளத்து நர்ஸ் ஒருத்தி வந்து மிகவும் வேகமாகப் போகிறது என்று கூறி குறைத்துவிட்டுப் போனாள்.

தீவிரமான பசியாக இல்லை.ஐந்து விரல்களில் பிசைந்து தின்னும் ஈடுபாடு ஸ்பூனில் கிளறிச் சாப்பிடுவதில் இல்லை.கீரைத் தண்டு புளிக் கறியும் சோற்றுப் பருக்கைகளும் சம்மந்தமில்லாமல் கிடந்தன. பாத்ரூம் போய்விட்டு வந்தபின் மறுபடியும் ஊசியில் மடித்து வைத்திருந்த ட்யூபைச் செருகிய நர்ஸ் சொட்டுக்களின் வேகத்தை அதிகரித்துவிட்டுப் போனாள். நிமிடத்துக்கு இருபத்தி மூன்று சொட்டுக்கள் வீதம் இறங்கிக் கொண்டிருந்தது. சனியன் சாயங்காலத்துக்குள் தீர்ந்தால் சரி என்று தோன்றியது.

சரியாக உறக்கம் வரவில்லை. இடது கையை அசையாமல் வைத்துக் கொண்டு மல்லாந்து படுத்துப் பிணம்போல் எவ்வாறு தூங்க முடியும்? கையை மட்டும் கட்டில் தள நிரப்பில் வைத்துக்கொண்டு சற்றுநேரம் உட்கார்ந்திருந்தான். நெடுநேரம் அவ்வாறு உட்காரலாகாது என்று வேறு ஒரு நர்ஸ் அதட்டிவிட்டுப் போனாள். பூமி இருசில் சுழல்வதற்கான அரவங்கள் அற்றுப்போனது போல் இருந்தது.

ஏழு மணிக்கு டாக்டர் வந்தார்.மருந்து தீரும் தறுவாயில் இருந்தது.மூச்சுவிடுவதில் சற்று ஆசுவாசம் கிடைத்திருப்பது போலத் தோன்றியது.ஆனால் ஒரு விதமான வாந்தி வரும் உணர்வும் லேசான தலை சுற்றலும் புலப்பட்டுக் கொண்டிருந்தது.டாக்டரிடம் சொன்னான்.இவ்வளவு வேகமாக மருந்தை அட்ஜஸ்ட் செய்தது யார் என்று நர்ஸை சத்தம் போட்டார்.

“ஐ யாம் சாரி..இருபத்தி நாலு மணி நேரம் மருந்து போயிருக்கணும்.வேகமாக ஓடி விட்டது. பீப்பில் ஆர் ஸோ கேர்லெஸ் யூ ஸீ…எனிவே நத்திங் டு வொரி.. நீங்க ரெஸ்ட் எடுத்துக்குங்க.காலையில் பார்க்கிறேன்.”

எட்டு மணி வாக்கில் குளுக்கோஸ் ஸ்டாண்ட்,கையில் செருகி இருந்த ஊசி, ரப்பர் குழல் எல்லாம் அப்புறப்படுத்திவிட்டு,காயம் இருந்த இடத்தில் சதுரப் பொட்டு ஒன்றை ஒட்டிவிட்டுப் போனாள்.

இரவு மெல்ல இறங்கிக்கொண்டிருந்தது. நர்சிங் ஹோம் காற்றில் மிதந்த அரசிலைச் சருகு போல் அலைந்து அலைந்து அடங்கிக் கொண்டிருந்தது. நல்ல உறக்கத்தில் இருந்த போது ‘தடதட’ வென்று சத்தம் கேட்டது. அவசர அவசரமாக ஒருவரைக் கொண்டு வந்து காலியாக இருந்த மற்ற கட்டிலில் கிடத்தினார்கள். குள்ளமாக உருட்டுக் கட்டை போல இருந்தார். ஐம்பது வயது இருக்கும். சூழல்,பதட்டம் நிறைந்ததாக மாறியது.

இரவு ட்யூட்டியில் இருந்த பயிற்சி டாக்டரைச் சுற்றி இரண்டு மூன்று நர்சுகள். இ.சி.ஜி. இயந்திரம் பொருத்திய உடன் உணர்ச்சிமயமான தமிழ் திரைக்காவியம் போலப் படம் தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. கனமான ஊசி ஒன்றைப் போட்டுவிட்டுப் போனார்கள். சற்று நேரத்தில் டாக்டர் நெகலூர் வரும்போது சுரேஷ் பிரதான் ஆழ்ந்த சுக நித்திரையில் இருந்தார். மாஸ்ஸிவ் அட்டாக், பிழைக்கும் வாய்ப்பு ஐம்பதுக்கு ஐம்பது என்று சொன்னார்கள்.

இரவு பதினொன்றரை மணி இருக்கும்.உறவுகள்,தெரிந்தவர்கள் ஒவ்வொருவராய் வந்து பார்த்து போனவாறு இருந்தனர். கவலை தோய்ந்த முகங்கள். சேலைத்தலைப்பை வாயில் புதைத்தபடி மனைவி,உடன் பிறந்தவள்…

யாராவது ஒருவர் இரவு அருகில் தங்கலாம் என்று மற்றவரைத் துரத்தியவாறு இருந்தனர். ஆரிய நிறம் மாசற்று இறங்கியிருந்த, மீன் மாமிசம் உண்கிற காயஸ்த பிராம்மணர் என்று தெரிந்தது.

தூக்கம் முற்றிலுமாக பறந்து விட்டது. சாவின் மூச்சுக்காற்று நரை படர ஆரம்பித்திருந்த காதோர முடிகளைக் கலைத்துக்கொண்டிருப்பது காணக்கிடைத்தது. தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உயிருக்கு மனிதன் என்ன நாற்பத்தெட்டு மணி நெரக் கெடு வைப்பது என்று இலேசான நகைப்பொலி.

என்ன வேலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை.பெண்கள் கல்யாணத்துக்கு நிற்பார்களோ என்னவோ? அல்லது தங்கைகளுக்கு கல்யாணம் செய்து களைத்துப் போனவராகக்கூட இருக்கலாம். குடியிருக்கும் ஃபிளாட்டுக்கு இன்னும் பத்தாண்டுகளுக்கு தவணை பாக்கி இருக்கலாம்.

காலதூதர்கள் சற்று கருணை காட்டலாம் என்று தோன்றியது.கருணை காரணமாக ஆள் மாறித் தன்னைக் கொண்டு போய்விடவும் வாய்ப்பு உண்டு என்று எண்ணியபோது கிலி சூழ்ந்தது. கருணை என்பது கூடத் தன்னலம் தாண்டித்தான் போலிருக்கிறது.

உறங்க வேண்டும் போலவும் உறக்கம் வராமலும் களைப்பாக இருந்தது. சற்று கண்ணயர்ந்தபோது தடாலென ஒரு சத்தம். அடித்துப் பிடித்து எழுந்து பார்த்தபோது ப்ரதான் கட்டிலில் இருந்து உருண்டு கீழே கிடந்தார். காவலுக்கு இருந்தவரும் கண்ணயர்ந்தார் போலும். இரண்டு பேருமாய்த் தூக்கி கிடத்தும் கனத்தில் இல்லை அவர். சத்தம் கேட்டு ஓடிவந்த நர்சுகளும் பயிற்சி டாக்டருமாய் சேர்த்துப் பிடித்து கட்டிலில் கிடத்தி, மறுபடியும் உபகரணங்கள் பொருத்தி, காவலுக்கு இருந்தவரை எச்சரித்து…

மணி ஒன்றே முக்காலாகி இருந்தது. மேலும் அரைமணி ஆகியும் உறக்கம் வரவில்லை. காலதூதர்கள் போய் விட்டார்களோ என்னவோ! ஒருவேளை சிரமபரிகாரம் செய்துவிட்டு மறுபடியும் வரலா. அவர்கள் மீண்டும் வரும் வேளையில் இங்கு இருக்க வேண்டாம் என்று தோன்றியது. வேறெங்காவது போய்ப் படுத்தால் இனிமேலும் நான்கு மணி நேரமாவது தூங்கலாம். வீட்டிலிருந்து மூடுவதற்குக் கொண்டு வந்திருந்த பெட்ஷீட்டையும் நர்சிங்ஹோம் தலையணையயும் எடுத்துக்கொண்டு நடந்தான். பயிற்சி டாக்டர் மேஜை மீது தலைகவிழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். நர்சுகள் யாரும் தென்படவில்லை. வெளியே வந்து சற்று எட்டிப் பார்த்தான். நள்ளிரவு தாண்டிய காற்றின் சலங்கையொலி.வராந்தாவில் வாட்ச்மேன் படுத்திருந்தான். டாக்டரைக் காண வருபவர் உட்காரும் பெஞ்சு ஒன்று காலியாகக் கிடந்தது. தலையோடு போர்த்திக் கொண்டு கிடந்ததுதான் தெரியும். கொசுக்களின் ராகமாலிகைகூட அவ்வளவாகத் துன்புறுத்தவில்லை.உறக்கச் சுழல் இழுத்துக்கொண்டு போயிற்று.

தோளைப் பிடித்து யாரோ உலுக்குவது போலிருந்தது. பரபரத்து விழித்தவனுக்கு இடம் பொருள் ஏவல் ஒன்றும் புலனாகவில்லை. மலையாளத்தில் நர்ஸ் ஒருத்தி அதட்டிக்கொண்டிருந்தாள்.

“நிங்கள் எந்தாணு இது காட்டிக் கூட்டியது? ஞான் பேஷண்டைக் காணாத எவிடயொக்க அன்யேஷிச்சு!ம்…ஆளு தரக்கேடில்லல்லோ..போயின்…பெட்டில போய் கிடக்கான்…”

சுவர்க்கடிகாரம் நாலேகால் காட்டியது. சற்று நேரம் உறங்கக் கிடைத்ததே பாக்கியம். ப்ரதான் உடலில் மாட்டியிருந்த ஈ.சி.ஜி திரை சற்று பதட்டம் குறைந்ததுப்போல் இருந்தது.

பாத்ரூம் போய், பல் துலக்கிவிட்டு வந்தபோது சூடாக ‘சாய்’ தந்தார்கள். மூச்சிரைப்பு சற்று அடங்கி நிதான கதிக்கு வந்தது போலத் தோன்றியது. எட்டரை மணிக்கு டாக்டர் வந்து ப்ரதானை நெடுநேரம் பரிசோதித்தார். அவர் கால்மாட்டில் தொங்கிய அட்டவணையில் சில வரைந்தார். பிறகு இவனிடம் வந்து, “ஆர் யூ ஃப்லீங் பெட்டர்?”என்று கேட்டார்.அட்டவணையை பார்த்தார்.”பல்ஸீம் பி.பியும் அதிகமாக இருக்கு..சாயங்காலம் பார்த்துவிட்டு டிஸ்சார்ஜ் செய்கிறேன்” என்றார்.இரவில் தூங்காததையும் பதட்டமான சூழலையும் சொன்னான். “அதற்கென்ன, படுக்கையை மாற்றி விடுகிறேன்” என்றார். இறைஞ்சுவது போல் மறுபடியும், “சார்” என்றான். “பயப்படாதீங்க…ஒரு டாக்டருக்கு எப்ப டிஸ்சார்ஜ் செய்யக்கூடாது என்பது தெரியும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ப்ரதானுக்கு இந்த அவஸ்தை எல்லாம் இல்லை.ஒன்றும் அறியாத உயிர் ஒடுங்கும் நிலையில் கிடந்தார்.

நர்ஸ் வந்து, “ஹோ..நிங்கள் ஒரு சல்லியமாணல்லோ! ஏ.சி.ரூமில் சுகமாயிட்டு கிடந்தா மதி. பெட் ஒழியண்டே…” என்று சொல்லிப் போனாள்.

ப்ரதானுக்கு பகல் பூராவும் விசிட்டர்கள். “துமாலா காய் ஜாலா ஹோ?” என்று அவனைப் பற்றியும் இரண்டொரு உசாவல்கள். மறுபடியும் மாலைவரை ஒரு வேலையும் இல்லாத காத்திருப்பு. இப்படி டென்ஷன் ஆகிக்கொண்டிருந்தால் மாலையும் பி.பி குறையாது என்று தோன்றியது. ப்ரதானுக்கு இன்னும் ஞாபகம் வரவில்லை. கடுமையான செடேட்டிவ் கொடுத்திருப்பார்கள்.

மாலையில் பில்லுக்கு பணம் செலுத்தி, நிறைய அறிவுரைகள் வாங்கி, தொடர்ந்து சாப்பிடும் மாத்திரைகள் எழுதி வாங்கி, ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்து படுத்தபோது விச்ராந்தியாக இருந்தது.

காதுகளை இரண்டு விரல்களாலும் பொத்திக்கொண்டு மூச்சுச் சத்தத்தை கவனித்தான்.எலிக்குஞ்சுகள் பொந்துக்குள் இல்லை.ஆவி பறக்கும் சோறும் வழுதுணங்காய் மொளவச்சமும் முகத்தில் மோதியது.படுத்ததும் தூக்கம் அள்ளிக்கொண்டோடிற்று.

இரண்டு நாட்கள் பொறுத்து அலுவலகம் புறப்படும்போது, மாலை திரும்புகையில் நர்சிங் ஹோம் போய் ப்ரதானைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று தோன்றியது. ஒருவேளை இறந்து விட்டிருந்தாலோ என்ற அச்சம் தினமும் தடை செய்துகொண்டிருந்தது. பிறகு மறந்து போய்விட்டது.

சதங்கை ஏப்ரல்-ஜூன் 1996

தட்டச்சு : ராகின்

Feb 10, 2013

கனவு-அன்று-கனவு -அபி

கனவு-அன்று-கனவு

எல்லாம் முடிந்துவிட்டது எனக்
கடைசியாக வெளியேறிய போது
கவனித்தான்
பின்புலமற்ற
தூய நிலவிரிவு ஒன்றுabi_photobw01
அவனுக்காகக் காத்திருப்பதை

கனவுபோன்று இருந்தாலும்
கனவு அன்று அது

ஒளியிலிருந்து
இருளை நோக்கிப்
பாதிவழி வந்திருந்தது
அந்த இடம்

கிழக்கும் மேற்கும்
ஒன்றாகவே இருந்தன
தூரமும் கூடத்
தணிந்தே தெரிந்தது

தெரிந்ததில்
எப்போதாவது ஒரு மனிதமுகம்
தெரிந்து மறைந்தது
ஒரு பறவையும் கூடத்
தொலைவிலிருந்து தொலைவுக்குப்
பறந்துகொண்டிருந்தது

சஞ்சரிக்கலாம்
மறந்து மறந்து மறந்து
மடிவுற்றிருக்கலாம் அதில்
நடக்க நடக்க
நடையற்றிருக்கலாம்

ஆயினும்
உறக்கமும் விழிப்பும்
துரத்திப் பிடிப்பதை
அவற்றின் மடிநிறைய
தலைகளும் கைகால்களும்
பிதுங்கிக் கொண்டிருப்பதைப்
பார்க்கும் நிமிஷம்
ஒருவேளை வரலாம்

கனவு அன்று எனத் தோன்றினாலும்
கனவாகவே இருக்கலாம்


மாலை - எது

தூசி படிந்த புளியமர வரிசையை
வைதுகொண்டே
மணலில் வண்டியிழுக்கின்றன மாடுகள்

வண்டுகளும் பறவைகளும்
தோப்புகளுக்குள்
இரைச்சலைக் கிளறி
எதையோ தேடிக்கொண்டிருக்கின்றன

இருண்டு நெருங்கி வளைக்கும்
மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்கில்
இங்கும் அங்கும் பாய்ந்து நிரம்பித்
ததும்புகிறது
என் வலி

பொழுது நிரம்புகிறது
ஒரு இடுக்கு விடாமல்
O

தூசி படிந்த இரைச்சலுக்கடியில்
சாத்வீக கனத்துடன்
இது எது?

இருள் இருண்டு காட்டிய வெளிச்சத்தில்
இடறாத என் பாதங்களினடியில்
இது எது
என் சாரங்களின் திரட்சியுடன்
வலியுடன்
அலங்கரித்த விநோதங்களை
அகற்றிவிட்டு
எளிய பிரமைகளின் வழியே
என்னைச் செலுத்தும்
இது எது?


மாலை - தணிவு

காடு எரிந்த கரிக்குவியலில்
மேய்ந்து களைத்துத்
தணிந்தது வெயில்
என்னோடு சேர்ந்து

இதோ இதோ என்று
நீண்டு கொண்டே போன பாதைகள்
மடங்கிப்
பாலையினுள், முள்வெளி மூழ்கச்
சலனமற்று நுழைந்துகொண்டன

விவாதங்கள்
திரும்புவதற்கு அடையாளமிட்டுப் போன
வழிகளில்
அறைபட்டுத் திரும்பின

முடிவுகள்
அரைகுறைப் படிமங்களாக வந்து
உளறி மறைந்தன

பசியும் நிறைவும்
இரண்டும் ஒன்றாகி
என் தணிவு

வேறொரு விளிம்பைச்
சுட்டிக் காட்டாத
விளிம்பில்
தத்தளிப்பு மறைந்த
என் தணிவு

நிகழும் போதே
நின்றுவிட்ட என் கணம்
குளிரத் தொடங்கியது
என் தணிவைத் தொட்டு


மாலை - காத்திருத்தல்

விஷப்புகை மேவிய வானம்
மூச்சுக்குத் தவிப்பது தெரிகிறது

அறிந்தவைகளின் மறுபுறங்கள் திரண்டு
மின்னி இடித்து
வெறியோடு வருகின்றன
அல்ல அல்ல அல்ல என்று
பொழிந்து பிரவகிக்க
அழித்துத் துடைத்து எக்களிக்க
வருவது தெரிகிறது

அடர்வனங்களின்
குறுக்கும் நெடுக்குமாக
ஆவேசக் காட்டாறுகள்
பதறி ஓடி
வாழ்வைப் பயிலும்

உண்டு-இல்லை என்பவற்றின் மீது
மோதிச் சிதறி
அகண்டம்
ஒரு புதிய விரிவுக்குத் தயாராவது புரிகிறது
O

காத்திருக்கிறேன்
இதுவே சமயமென
எனது வருகைக்காக
என் குடிசையில் வாசனை தெளித்து
சுற்றிலும் செடிகொடிகளின்
மயக்கம் தெளிவித்து
அகாலத்திலிருந்து
இந்த மாலைப்பொழுதை விடுவித்து-

காத்திருக்கிறேன்
மறுபுறங்களிலிருந்து
வெற்றி தோல்வியின்றித் திரும்பும்
என் வருகையை எதிர்நோக்கி

விடைகள்
விடைகள்
மிகவும் மெலிந்தவை

ஏதோ சுமந்து வருவன போல
முக்கி முனகி வியர்வை துளித்து
நம் முகத்தில்
திருப்தி தேடுபவை

தரையில் கால்பாவாது
நடக்கவும்
நீரில் நனையாமல்
நீந்தவும்
அறிந்தவை

முந்தாநாள்
ஒரு விடையை
எதிர்ப்பட்டேன்

என்னைப் பார்த்தவுடன்
அது
உடையணிந்து
உருவுகொண்டது

தன்னை ஒருமுறை
சரிபார்த்துக் கொண்டதும்
எங்களைச் சுற்றி
ஒரு அசட்டுமணம் பரப்பிவிட்டு
என்னை நேர்கொண்டது

நான்
ஒன்றும் சொல்லவில்லை

நெளிந்தது

கலைந்து மங்கும்தன்
உருவை
ஒருமித்துக் கொள்ளக்
கவலையோடு முயன்றது

சுற்றிலும் பார்த்துவிட்டு
ஒருமுறை
என்னைத் தொடமுயன்றது

நான்
எதுவுமறியாத
பாவனை காட்டியதில்
ஆறுதலுற்றுக்
கொஞ்சம் நிமிர்ந்தது

எதிர்பாராது வீசிய காற்றில்
இருவரும்
வேறுவேறு திசைகளில்
வீசப்பட்டோம்

திரும்பப்போய்த்
தேடிப்பார்த்த போது
சாமந்திப்பூ இதழ்கள் போல்
பிய்ந்து கிடந்தன
சில
சாகசங்கள் மட்டும்


காலம் - புழுதி

எங்கிலும் புழுதி
வாழ்க்கையின் தடங்களை
வாங்கியும் அழித்தும்
வடிவு மாற்றியும்
நேற்று நேற்றென நெரியும் புழுதி

தூரத்துப் பனிமலையும்
நெருங்கியபின் சுடுகல்லாகும்
கடந்தாலோ
ரத்தம் சவமாகிக் கரைந்த
செம்புழுதி

புழுதி அள்ளித்
தூற்றினேன்

கண்ணில் விழுந்து
உறுத்தின
நிமிஷம் நாறும் நாள்கள்


காலம் - சுள்ளி

காடு முழுதும்
சுற்றினேன்

பழைய
சுள்ளிகள் கிடைத்தன

நெருப்பிலிட்டபோது
ஒவ்வொன்றாய்ப்
பேசி வெடித்துப்
பேசின

குரலில்
நாளைச்சுருதி
தெரிந்தது

அணைத்து,
கரித்தழும்பு ஆற்றி
நீரிலிட்டபோது
கூசி முளைத்துக்
கூசின இலைகள்

தளிர் நரம்பு
நேற்றினுள் ஓடி
நெளிந்து மறைந்தது

Feb 7, 2013

வறுமையிலும் வாழ்வைக் கொண்டாடிய கரிச்சான்குஞ்சு-ரவிசுப்ரமணியன்

தன் படைப்புகளை முன்நிறுத்தாது தன்னை முன்னிறுத்தும் போக்கு மலிந்த தமிழ்ச் சூழலில் தன் படைப்புகளின் மேன்மை வழியே தன்னை அறிந்துகொள்ளவைத்தவர் கரிச்சான் குஞ்சு.

நம் காலத்தில் வாழ்ந்து மறைந்திருந்தாலும் கீழான வகைதொகைகளில் அவர் சிக்கிவிடவில்லை. கலைக்குள் இயங்குவதை ஒரு நோன்பென நோற்று ஆழமான அமைதியோடு படைப்புக்கு உண்மையாய் இருந்து அதற்குச் செழுமை சேர்த்தவர் கரிச்சான் குஞ்சு. அவரது படைப்புகளைத் தேடுபவர்களே கண்டடைய முடியும். அதனால் தான் அவர் போன்ற கலைஞர்களை, அவர்கள் வாழ்ந்த காலங்கடந்தே நாம் முழுமையாகக் கண்டுணரும்படி நேர்ந்துவிடுகிறது.

தன் சிறுகதைகள் குறுநாவல்கள், நாவலில், எந்த ஒரு கருத்துக்காகவும் கொள்கைக்காகவும்karichankunju தனிப்பட்ட குரலில் அவர் மாய்ந்து உருகுவதையோ எதிர்ப்புக் குரல் எழுப்புவதையோ நாம் காண முடியாது. தான் கண்ட, கேட்ட, அனுபவித்த, உணர்ந்த, கற்பனை செய்த விஷயங்களை அலட்டலில்லாமல் தன் படைப்புகளின் வழி முன்வைத்தவர் கரிச்சான் குஞ்சு.

அது ஒரு சமனான நிலை. அந்த நிலை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஏகாந்திகளுக்குச் சித்திக்கும் ஒருவித நிலை. வாழ்வில் தன்னைச் சுற்றி நடப்பவற்றையும் தனக்கே நேர்ந்தவற்றையும்கூட ஒரு பார்வையாளனாகக் கவனித்து அதை முன்வைப்பது. ஒரு சம்பவம், அவமானம், துயரம், சந்தோஷம், பகடி இப்படி ஏதோ ஒன்றை அவர் தன் படைப்பின் வழியே நம் பார்வைக்குக் கொண்டுவருகிறார். முன்னனுமானம், மனச் சாய்வு, தீர்மானங்கள், அபிப்ராயங்கள் போன்றவை இல்லாமல், தன்னிலை என்ற ஒன்றும் இல்லாமல் ஒரு விஷயத்தைப் படைப்பாக்கி நம் பார்வைக்கு வைப்பது போலத்தான் அது நமக்குத் தோன்றும். ஆனால் இங்குதான் கரிச்சான்குஞ்சு நுட்பமான உலகில் பிரவேசிக்கிறார். அவர் கண்டுணர்ந்த, அனுபவித்த, ஆயிரம் விஷயங்களில் அவர் நமக்கு எதைச் சொல்ல வந்தார் என்ற இடத்திலிருந்து ஆரம்பிக்கிறது விஷயம். விமர்சனமோ புகாரோ இன்ன பிறவோ ஏதுமின்றி ஒன்று எப்படி நடந்ததோ அப்படியே அதைச் சொல்கிறேன் என்னும் பாவத்தைக் காட்டி அதில் ஏதோவொன்றை நாம் உணரும்படி வைப்பார். ஆனால் அவர் பாத்திரங்கள் எழுப்புகிற தர்க்கங்கள், படைப்பினை நகர்த்திச் செல்லுகிற பாதை, உள்ளடக்கமாகக் குங்குமப் பூ ரேகையாய் ஓடும்

ஒரு தத்துவார்த்த இழை, இவை மூலம் அவர் எழுப்புகிற த்வனி, இந்த இடங்களில்தான் கண்ணுக்குத் தெரியாத கவிதை உணர்வாய், விண்டு சொல்ல முடியாத அனுபூதியாய், கரிச்சான் குஞ்சுவின் ஆளுமை விரவிக்கிடக்கிறது. ஒரு வகையில் இவைதான் அவர் எழுப்ப விரும்பும் குரலின் தடங்கள். இவற்றின் வழியாகத்தான் அவர் சொல்ல விரும்பும் எல்லாவற்றையும் நமக்குள் லாவகமாகக் கடத்துகிறார்.

சொல்லியும் சொல்லாமல் செல்லும் இந்த விட்டேத்தியான போக்கை அவர் கதையைக் கட்டமைத்த விதத்தின் வழியேகூட நாம் உணரமுடியும். அதீதக் கவனத்துடன் இழுத்துக் கட்டப்பட்டு கிண் என்று நாதம் எழுப்புபவை அல்ல அவரது கதைகள். தளர்வான கதைகள். சில சமயம் சளசளப்பும் தொய்வுமாய் வழக்கமான கதை சொல்லும் பாணியிலிருந்து சற்று விலகிச் செல்லும் கதைகள். எல்லோரையும் சட்டென ஈர்க்கும் யத்தனத்தையோ செதுக்கி எடுத்து மினுமினுப்பாய்த் துலக்கிப் பார்வைக்கு வைப்பதையோ பிரகடனங்களையோ அவர் படைப்புகளில் நாம் காணமுடியாது. இதை மீறிச் செறிவான கட்டமைப்புடன் அமைந்த சில படைப்புகளும் அதற்கான யத்தனமின்றி அதனியல்பில் பிறந்தவையே.

ஒரு பரதேசி ஒப்பனைகள் ஏதுமின்றி இடுப்பை மறைக்கமட்டும் உடுத்தியபடி தன் போக்கில் காலாற நடக்கும் ஒருவித மனோ நிலையில் எழுதப்பட்டவை போலத்தான் இந்தக் கதைகள் தோன்றுகின்றன. இதை அவர் அறிந்தோ அறியாமலோ செய்திருக்கக்கூடும்.

இளமையில் வறுமை, பால்யகால உறவுகளின் அனுசரணையற்ற தன்மை, அனாதை போலப் பாட சாலைகளில் கழிந்த பால்யம், அவர் படித்த வேதாந்தத் தத்துவங்கள், எல்லாமுமாகச் சேர்ந்து லௌகீக வாழ்விலும் அவரை ஒட்ட விடாமலேயேதான் வைத்திருந்தன. அவர் வீட்டுக்குள்தான் வாழ்ந்தார். ஓட்டுக்குள் பழுத்துருளும் விளாம் பழம் போல் ஓட்டுக்குள்ளிருந்தும் ஒட்டியும் ஒட்டாமல் விட்டு விடுதலையான வாழ்வைத்தான் வாழ்ந்தபடி இருந்தார்.

பொதுவாக அவருக்குக் குடும்பப் பொறுப்பு இருக்கவில்லைதான். ஆனால் அதே சமயம் முற்றமுழுக்க உறவுகளை அறுத்துக்கொண்டார் என்றும் சொல்லிவிட முடியாது. அவரது மகள்களை அவர் பெயர் சொல்லிக்கூட அழைக்கமாட்டார். ‘குழந்தே’, ‘குழந்தே’ - என்றுதான் கூப்பிடுவார். அவர்களைப் படிக்கவைக்க அவர் பட்ட பாட்டையும் திருமணம் செய்து வைக்க அவர் பட்ட அல்லாட்டத்தின் ஒரு பகுதியையும் நான் அறிவேன். அவர் தனது நண்பர் ல.கி.ராமானுஜத்துக்கு மன்னார்குடி 36, கீழ நாலாந் தெருவிலிருந்து 09.08.1977இல் எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்:

“மூத்தவளுக்கு மணம் முடித்தே ஆகவேண்டும். வயது இருபத்தி ஒன்பது முடிந்துவிட்டது. அவமான உணர்ச்சியுடன்தான் நடமாடிக்கொண்டிருக்கிறேன். நிச்சயம் விரைவில் ஆகவேண்டும். இறையருள் எப்படியோ. மனசை இம்சிக்கும் தீய கனவுகளை நான் பெரிதுபடுத்திக் கொண்டால் கொஞ்சமாய் மிஞ்சி மங்கிக்கிடக்கும் ஆத்ம விலாசமும் மாய்ந்தே போய்விடும். ஆனால் அப்படித்தான் மனம் குழம்பிச்செத்த நிலை. மனம் மாய்ந்துதான் போய்க்கொண்டிருக்கிறது. உண்மையில் மனம் மாய்ந்துவிட்டால் நான் ஒரு பரமஹம்சன். அமுதத்தாரையைக் குடித்துக்கொண்டு ஆனந்த சாகரத்தில் திளைப்பேன். அந்த மஹா பாக்கியமெல்லாம் இந்த பாவிக்கேது”

பல சிரமங்களுக்குப் பின் அந்தக் கல்யாணத்தை 21.04.1978 அன்று நடத்தி வைத்திருக்கிறார். தன் அம்மாவோடு அவருக்கு வந்த பெரும் கருத்து வேறுபாடே அவரது மகள்களைப் படிக்க வைப்பதில்தான் தொடங்கியது. “என்னத்துக்குடா பொண் குழந்தைகளைப் படிக்க வைச்சுண்டுருக்க? நான் சொல்றேன் கேளு. இவாள்ளாம் படிச்சுட்டு இப்ப என்ன பண்ணப் போறா? அவள்களுக்கு கல்யாணத்த பண்ணி வைச்சிப்புடு” என்று அவர்கள் சொல்ல, “எப்பாடு பட்டாவது நான் அவாளைப் படிக்க வச்சுடுவேன்” என்று இவர் பிடிவாதமாய் சொல்ல, “அப்படின்னா நீ என் முஞ்சிலயே முழிக்காத. நான் செத்துட்டா தலைகாணிக்கு அடில பணம் வைச்சிருக்கேண்டா. அத எடுத்து நீ எனக்கு காரியம் பண்ணிடு” என்று சொல்லிவிட்டார். அந்தப் பாட்டியோடு பேத்திகள் சீராடிக் கொண்டிருந்தாலும் கரிச்சான்குஞ்சுக்கு இந்தச் சண்டையால் தனது அம்மாவை அவரது கடைசி காலம் வரை பார்க்க முடியவில்லை.

இன்னொரு பக்கம் அவர் சீட்டாடினார். ரேசுக்குப் போனார். எது பற்றியும் கவலை கொள்ளாமல் இருந்தார். வேலை பார்த்த சில இடங்களில் தவறு நடக்கையில் சகித்துக்கொண்டிராமல் சமரசம் கொள்ளாமல் சண்டைபோட்டு விலகிவந்தார். கோபக்காரர். சாப்பாட்டுப் பிரியர். தாம்பூலக் காதலன். கிடைத்த பணத்தை உடனே செலவிட்டுவிடுபவர். அறச்சினம் கொண்டவர். துன்பங்களை அலட்சியப்படுத்தியவர். கோபத்தில் கெட்ட வார்த்தை பேசுபவர். வேதம் படித்தவர். கம்யூனிசத்தில் சற்று மோகம். இசை ரசிகர். விச்ராந்தி மனோநிலையில் இருப்பவர். இப்படி கரிச்சான் குஞ்சுவின் விசித்திரக் குணாம்சங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். கொஞ்சம் கொஞ்சம் பிடிமானம் இருந்தாலும் சராசரி வாழ்வில் ஒட்டாத மேலும் கீழுமான இந்த ஏற்ற இறக்கமான நிலைதானே ஒரு அசல் கலைஞனின் சாமுத்ரிகா லட்சணம். அவன் மன நிலையில் அவன் அப்படித்தானே வாழமுடியும்.

ஆனால் இது போன்ற விசித்திரப் பிறவியை வீடு சகித்துக்கொள்ளுமா? அது வரவு செலவு கணக்குகளால் ஆனது. அதைப் புரிந்து சகித்துக்கொள்ள வேறோரு கலைமனம் தேவைப்படுகிறது. திருமதி கரிச்சான் குஞ்சுவான சாரதா அம்மாளும் அவருடைய மகள்களும் பல சமயம் அவரைக் கடிந்துகொண்டதை அவரோடு சண்டையிடுவதை நான் நேரில் கண்டதுண்டு. ஆனால் அது அவர்கள் தவறல்ல. அவர்களின் கருத்துலகம் வழியே, அவர்களின் புரிதல்கள் வழியே, அவர்களின் அன்றாடச் சிரமங்கள் வழியே அவரைப் பார்த்த பார்வை அது. இது கரிச்சான் குஞ்சுக்கு மட்டுமல்ல பெரும்பாலும் தேர்ந்த கலைஞர்களெல்லாம் எதிர்கொள்கிற லௌகீகச் சிக்கல்தான். சம்பாத்தியமில்லாத, செல்வாக்கில்லாத புருஷனை வீடு சகித்துக்கொள்ளாது. சகித்துக் கொள்ளவும் முடியாதுதான். இப்படி ஆதார இருப்பிடத்திலிருந்தும் வீசிக் கலங்கடிக்கிற காற்றுக்கும் மத்தியில்தான் ஒரு கலைஞன் தன் படைப்பின் சுடரை அணையாமல் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆனால், காலம் கடந்து கரிச்சான் குஞ்சுவின் மகள்கள் அவரைக் கொண்டாடத்தான் செய்தார்கள். வாடகை வீடுகளில் அவர் குடியிருந்த காலங்களில் வீட்டுக்காரன் ஒருவன் “வாடகை குடுக்க வக்கில்ல. உனக்கு ஹிண்டு பேப்பர் ஒரு கேடா” என ஒருமுறை கேட்டிருக்கிறான். அதனால் விஜயா அவருக்காகவே சொந்த வீடு கட்டும் முயற்சி எடுத்துப்பெரும் சிரமத்திற்கிடையில் அதைக் கட்டி முடித்தது. பிரபாவின் ப்ரியங்கள் சொல்லில் அடங்காதது. கரிச்சான்குஞ்சு ஈஸிச்சேரில் அமர்ந்து விஸ்தாரமாக பாவ அபிநயங்களோடு நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்க அவரது மேன்மை அறிந்த காலத்தில் அவர் காலடியில் அமர்ந்தவாறே பிரபா அதை வியந்து கேட்டுக்கொண்டிருக்கும். அவர் மறைந்து இவ்வளவு காலத்துக்குப் பின்னும் அதற்கு இவ்வளவு வயதாகியும்கூட எப்போது அவரைப் பற்றி பேசினாலும் நெகிழ்ந்து அழுதுவிடுகிறது பிரபா.

ஒருமுறை கரிச்சான்குஞ்சுவுக்குக் கடுமையாக உடல்நிலை பாதித்தபோது அவர் மகள் விஜயாவும் நானும் கும்பகோணம் செட்டி மண்டபம் அருகே உள்ள விமல் மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தோம். அந்த முதல் நாள் முழுக்கத் தவிப்பும் வலியும் சஞ்சலமுமாக இருந்தார். பிறகு தூக்கத்துக்கான மருந்துகள் தரப்பட்டு ஊசிகள் போடப்பட்டுக் காலையில் கண்விழித்தார். “என்ன சார் எப்படி இருக்கீங்க. இப்ப வலி ஏதும் இல்லியே” என்று கேட்டேன். “ஆத்மாவுக்கு வலி உண்டா என்ன?” என்றார்.

09.08.1983இல் பாண்டிச்சேரியிலிருந்து ஞானாலயா கிருஷ்ண மூர்த்திக்கு எழுதிய கடிதத்திலும் ஆத்மாவைக் குறிப்பிட்டுள்ளார். “வறுமையும் வேதனையும் எனக்குப் பிடித்த தோழர்கள். ஆனால் அது என் ஆத்மாவைப் பாதிக்கவில்லை என்றே நினைத்துக்கொள்கிறேன். அது எவ்வளவு தூரம் சரியோ எனக்குத் தெரியாது”

ஆத்மா என்று அவர் எதைச் சொல்கிறாரென எனக்குப் புரியவில்லை. த்வன்யா லோகா மொழிபெயர்ப்பான தொனி விளக்கில், தொனியின் முக்கியத்துவம் குறித்து தனது கருத்தைத் தனியே அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்டிருந்தார். இந்த ஆத்மா பற்றி அவர் குறிப்பிடுவதை அதிலும் கவனித்தேன். அதைப் படித்தபின் அதன் உட்பொருள் எனக்கு விளங்கிற்று.

”சொல்லும் பொருளும் காவியத்திற்கு உடல். ரஸம் முதலியவை உயிர், தொனி, ஆத்மா. உயிர் உடலில் இருந்து விலகுமெனில் ஆத்மா என்பது அவ்வியக்கம் மாத்திரம் இல்லை. உணர்வுகளே ஆத்மா ஆகும். உயிரும் ஆத்மாவும் கூடித் தான் சரீரமென்பது நேரும். அவை இல்லையெனில் வெறும் சரீரம் உயிரும் உணர்வும் அற்றது ஆகும் என்பதை நினைவில் கொள்க” என்று குறிப்பிடுகிறார்.

பார்வைக் குறைபாடுகள் இருந்தும் உடல் நலிவு இருந்தும் எழுத வேண்டுமென்ற ஆவல் அவரிடம் சதா இருந்துகொண்டே இருந்தது. அது போலவே அவர் எழுதிப் பாதியில் நிறுத்தியவை சில. தனது சுயசரிதைத் தொடர் ஒன்றைத் திருச்சியில் இருந்து வந்த மனிதம் இதழில் தொடங்கி அது நான்கு இதழோடு நின்றதும் நிறுத்திவிட்டார். மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் பற்றிய ஒரு நாவல் எழுத எண்ணி அவர் பற்றிய ஏராளமான வரலாற்றுத் தகவல்களைப் பல நூல்நிலையங்கள் சென்று குறிப்பெடுத்துச் சேகரித்து வைத்திருந்தார். கடைசிவரை அதை அவரால் எழுத இயலவில்லை.

02. 05. 1978இல் மன்னார்குடியிலிருந்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராமானுஜம் இருவரையும் சேர்த்து விளித்து எழுதிய ஒரு கடிதத்தில் எழுதுகிறார்.

“1937 முதல் 1947 வரையிலான சமகால வரலாற்றுப் பின்னணியில் நாவல் எழுத முடிவாகிவிட்டது. இது வெறும் வரலாறாகிவிடுமோ என்று பயப்படுகிறீர்களா? இருக்காது. கதையம்சமே நிறைய இருக்கும். பிராமணசமூகத்தின் ஸனாதனிகள், ஆஷாடபூதிகள், போலி ஆச்சாரங்கள், முதலியவை தோலுரிக்கப்பட வேண்டும். இவ்வளவும் எழுத முற்றிலும் எனது குடும்பச் சூழ் நிலையிலிருந்து விலகி தத்துவம், சிந்தனை, தவம், தனிமை என்று இருந்தால் முடிந்துவிடும். காதல் கதைகள்தான் நிறைய வருகின்றனவே. உண்மையான நாவலை எழுதிப் படைக்கப் பார்க்கிறேனே நான்”

இது தொடர்பான இன்னொரு கடிதம் 27. 11. 1981இல் பாண்டிச்சேரி 123 செட்டித்தெருவில் இருந்து கிருஷ்ணமூர்த்திக்கு எழுதியது. முன் நான் குறிப்பிட்ட கடிதம் 78. இது 81. இந்தக் கடிதத்தில் இப்படிச் சொல்கிறார்.

“இங்கே எனக்கு நேரமே கிடையாது. ஓய்வு மிகக்குறைவு. இரவுகளில் எழுதலாம் என்றால் கண் ஒத்துழைக்க மறுக்கிறது. முன்பெல்லாம் இரவுகளில் தூங்குவது முட்டாள்தனம் என்று திமிரடியாய் இருந்ததற்கு இப்போது தண்டனை. இருந்தாலும் ஏதாவது செய்யத் தீர்மானித்துவிட்டேன். அடுத்த வருஷம் பிறந்த பிறகாவது மெல்ல மற்றொரு நாவலை அரசியல் மற்றும் ஆன்மீகப் பின்னணியில் ஜாதி, சமய சர்ச்சைகளோடு எழுதப்போகிறேன். ஆமாம் எழுதத்தான் போகிறேன். தினந்தோறும் சிறிது சிறிதாக எழுத உத்தேசம். ஏற்கனவே திட்டம் போட்டு நிறையச் சிந்தனை  செய்த கரு அது. ஆகவே சில மாதங்களில் முடித்துவிடலாம். ஒருவேளை பக்கம் குறைந்தாலும் நாவல் தரமுடையதாய் அமையும். வரலாற்று விவரங்கள் 1939 முதல் 1948வரை அடிபடும். முறையற்ற பிராமணர்கள் சவுக்கடிபடுவார்கள். சீர்திருத்தக்காரர்களும் செல்லாக் காசாய் இளிப்பது காட்டப்படும். பெரியாரின் தொண்டும் அதன் பயனும் உரிய பாராட்டைப் பெறும். அதேவேளை அவர் செய்த நாத்திகப் பிரச்சாரத்தின் போலித்தன்மையும் ஆத்திகத்தின் போலித்தன்மைக்கு அப்பால் உள்ள நிஜமான ஆத்திகமும் விளக்கப்படும். அந்தக் கதையில் நானே ஒரு பாத்திரமாக அமைவேன். (இது உண்மையும் கூட) ஆகவே தயவு செய்து கலைஞரின் நெஞ்சுக்கு நீதி எனக்கு வேண்டும். திருப்பிக் கொடுக்கப்படும் வகையில் எனக்கு கிடைக்குமாறு செ ய்தல் வேண்டும். இதை எழுதும் போது இரவு 10:30 பாரதி படித்துக்கொண்டிருக்கிறேன். அடடா, படிக்கப் படிக்க புதுமை”

எழுதுவதில் திட்டங்களும் ஆசைகளும் இருந்தது போலவே தான் உயிரோடு இருக்கும்போதே தனது புத்தகங்களின் மறுபதிப்புகள் வந்துவிட வேண்டுமென்றும் கரிச்சான் குஞ்சுக்குத் தணியாத ஆசை இருந்தது. அதை ஓரளவே அப்போது எங்களால் நிறைவேற்ற முடிந்தது. ஏற்கனவே வெளிவந்திருந்த அவரது ஏழு கதைத் தொகுதிகளில் இருந்து தொகுத்து நர்மதா பதிப்பகம். அன்றிரவே தொகுப்பை எண்பதுகளில் வெளியிட்டது. அதன் பின் பேராசிரியர். மது. ச. விமலானந்தம் அவர்கள் முயற்சியால் கீர்த்தி வாசன் என்ற தொழிலதிபரால் அவரது கழுகு என்ற நாடகத்தொகுதி வெளிவந்தது.

சிம்மம் என்றும் ஞானபண்டிதர் என்றும் பிரியமாக அழைத்ததோடு மட்டுமல்லாமல் தனது கதைகளில் கரிச்சான் குஞ்சைச் சிறுசிறு பாத்திரங்களாகவும் உலவவிட்டவர் ஜெயகாந்தன். பொதுவாய்த் தனது சபையில், தான் அமரும் நாற்காலியில் யாரையும் அமர அனுமதிக்காத ஜெயகாந்தன் அவரை அதில் அமர வைத்துப் பேசச்சொல்லிக் கேட்டுக்கொண்டிருப்பார். அந்த ஜே.கேயின் முயற்சியால் 197Ravi Aathi 1A 8இல் மீனாட்சி புத்தகநிலையம் பசித்த மானிடம் புத்தகத்தை வெளியிட்டது.

“அதன் மறுபதிப்பு இனி எப்போ வருமோ தெரியலை” என வெகு காலமாய்ச் சொல்லிக்கொண்டிருந்தார் கரிச்சான் குஞ்சு. 1990இல் என்னிடமும் அது குறித்துப் பேசியுள்ளார். 09.04.1982இல் பாண்டிச்சேரியிலிருந்து அவர் தனது நண்பர் ஞானாலாயா கிருஷ்ண மூர்த்திக்கு எழுதிய கடிதத்தில் சலிப்போடு இப்படிச் சொல்கிறார். “பசித்த மானிடம் மறுபதிப்பு வர வேண்டுமென்பது என் ஆசை. அது நிறைவேறப் போவதில்லை. போகட்டும்”

அந்த நாவலை 1978க்குப் பிறகான நீண்ட இடைவெளிக்குப் பின் 2005இல் காலச்சுவடு வழியாகக் கொண்டுவந்தேன். கண்ணன் இதற்கு முன்பணமாகப் புத்தகம் வெளிவரும் பலமாதங்களுக்கு முன்பே 2004இல் ஒரு தொகையை என்னிடம் தந்தார். சாரதா அம்மாளிடம் நான் அதை வடபழனி தங்கவேல் காலனியில் சென்று தந்தபோது, “அவர் இருந்தபோதுகூட புஸ்தகம் வருமின்ன எழுத்துக்கான பணத்த நான் பாக்கல சுப்ரமண்யம். அவர் இப்ப இல்லாமயும் குடுக்கறார். அத அப்படியே சுவாமி படத்துக்கு மின்ன வச்சுரு” என்று தழுதழுத்தார்.

சிறுகதைகள், குறுநாவல்கள், நாடகங்கள் எனப் படைப்பிலக்கியத் தளத்தில் பல காலம் அவர் இயங்கி வந்திருந்தாலும் பசித்த மானிடம் என்ற ஒரு நாவலின் வீச்சு, அவரை இலக்கியத்தின் பல தளங்களிலும் இயங்குபவர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தது. அந்த நாவல் இப்போது நான்காம் பதிப்பைத் தாண்டிச் செல்கிறது. மூன்று பதிப்புகளின் ராயல்டி தொகையாக மட்டும் இதுவரை முப்பத்து ஐய்யாயிரம் வந்துள்ளது. காலச்சுவடின் வழியாகவே அவரது சிறுகதைகளும் இந்த ஆண்டு வெளிவரும் என்பது என் நம்பிக்கை.ஞானத்தால் பெற்ற பயமின்மையும் மார்க்ஸியச் சிந்தனைப் போக்கில் இருந்த சன்னமான ஈடுபாடும் சேர்ந்து, அவர் எந்தச் சபையிலும் எந்த விஷயத்தையும் துணிச்சலாகப் பேசுபவராகவே இருந்தார். காஞ்சிப் பெரியவர் சந்திர சேகரேந்திர சுவாமிகளுடனான சதஸில் அத்வைதம் குறித்த விவாதங்களில் ஈடுபடும்போது த்வைதம் என்றால் ஜீவாத்மா, பரமாத்மா என்று இரண்டு. அத்வைதம் என்றால் இரண்டுமல்லாத ஒன்று என்கிறபோது கடவுளும் இல்லை. அப்போ அதுவும் நாத்திகம்தானே என்று அவர் காஞ்சிப் பெரியவரிடம் விவாதித்ததை நண்பர் தேனுகாவிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் கரிச்சான்குஞ்சு.

1986இல் இலங்கை எழுத்தாளர் மார்க்ஸியச் சிந்தனையாளர் டேனியல் இறப்புக்கு

பொ.வேலுச்சாமியின் கோழி முட்டை ஏற்றும் வண்டியில் அமர்ந்து அவரது இறுதிச்சடங்குக்குச் சென்றதும் கம்யூனிச ஊர்வலங்களில் கலந்துகொண்டு கோஷமிட்டு சென்றதும் இதனால்தான். அதே பார்வை கொண்ட, சிக்கல் சிடுக்கான நிரடான மொழியில் அமைந்த தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயா எழுதிய ஆங்கிலப் புத்தகமான வாட் ஈஸ் லிவ்விங் அன்ட் வாட் ஈஸ் டெட் இன் இண்டியன் பிலாசஃபி என்ற புத்தகத்தை எளிமையாக அவர் தமிழில் மொழிபெயர்த்ததும் அதனால்தான்.

பொ.வேலுச்சாமியும் பொதியவெற்பனும் அந்தப் புத்தக மொழிபெயர்ப்புக்குக் காரணமாக இருந்தாலும் அது மொழிபெயர்க்கப்பட்டதும் அதன் அதிக பக்கங்களால் பதிப்பாளர்கள் அதை வெளியிட முன் வரவில்லை. (அது வெளிவந்தபோது அதன் பக்கங்கள் எழுநூற்றி ஐம்பத்தி ஐந்து) அதை வெளியிட யார் யாரிடமோ அணுகி கடைசியில் தேனுகா அவரது நண்பர் சவுத் விஷன் பாலாஜி வழியாக அந்தப் புகழ்பெற்ற மொழிபெயர்ப்பான இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் புத்தகத்தைக் கொண்டுவந்தார் பாலாஜி. அந்தப் புத்தகத்துக்காக ஐயாயிரம் ரூபாயைக் கரிச்சான்குஞ்சுக்கு தந்தார் அவர். அது அப்போது அவருக்குப் பெரிய தொகையாக இருந்தது.

காஷ்மீரத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆனந்தவர்த்தனரின் த்வன்ய லோகவைத் தொனி விளக்கு என்ற பெயரில் அவர் மொழிபெயர்த்த புத்தகமும் தமிழுக்கான பிற மொழி வரவுகளில் முக்கியமானது. க்ரியாவுக்காக மொழி பெயர்க்கப்பட்ட த்வன்ய லோகம் க்ரியா ராமகிருஷ்ணனுக்கும் அவருக்குமான சிறு கருத்து முரண்பாடால் வெளிவராமல் போனது. அதன் பின் அதனை நான் மீராவின் அன்னம் பதிப்பகம் வழியே கொண்டுவர முயற்சி எடுத்து அவரிடம் கொண்டுபோய்ச் சேர்த்தேன். அவரும் ஏனோ சில வருஷங்கள் அதனை வெளியிடாமலே இருந்தார். கரிச்சான் குஞ்சுவின் மறைவுக்குப் பின் அதை அவர் இருக்கும்போது வெளியிடாததற்கு வருத்தப்பட்டுப் பின் அதை அச்சாக்கமும் செய்துவிட்டார். அப்போது திடீரென அதன் கடைசி அத்தியாயம் காணவில்லை என்று மீரா சொல்ல எனக்கு என்னசெய்வதெனப் புரியவில்லை. அப்போது கரிச்சான் குஞ்சுவும் இல்லை. மறுபடி எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. இதற்கிடையில் மீராவும் உடல் நலமின்றி இருந்து மறைந்துவிட்டார். கடைசியில் மீராவின் மகன் கதிரிடமிருந்து அதை வாங்கி வந்தேன். நண்பர் கி. அ. சச்சிதானந்தன் அதில் விடுபட்ட பகுதிகளை சமஸ்கிருத அறிஞர்களின் உதவியோடு ஒழுங்கு செய்ய முதலில் முயன்றார். பின்பு அவரே “கரிச்சான் குஞ்சு உயிரோடு இல்லாததால, இன்னாத்துக்குப்பா அதுல போயி திருத்தம் பண்ணி, இல்லாத இன்னோர்த்தனை வச்சி எழுதிச் சேத்துகினு. வேண்டாப்பா. வுடுப்பா அப்படியே போட்றலாம்” என்று சச்சி முடிவு செய்யவே அதை அவ்விதமே வெளியிட நண்பர் சந்தியா நட்ராஜன் சம்மதித்து 2004இல் அதை வெளியிட்டார்.

1992இல் அவர் மறைந்த பிறகு நானும் தேனுகாவும் கரிச்சான் குஞ்சு பற்றிய கருத்தரங்கமொன்றை நடத்தத் திட்டமிட்டோம். பிறகு முத்துவையும் பொதியவெற்பனையும் அதில் சேர்த்துக்கொண்டோம். கும்பகோணம் ஜனரஞ்சனி ஹாலில் கருத்தரங்கம் நடந்தது. அதில் கரிச்சான் குஞ்சுவின் படத்தைத் திறந்துவைத்து அவர் பற்றியும் எம்.வி.வி நடத்திய தேனி இதழில் இணைந்து அவர் துணை ஆசிரியராகப் பணியாற்றியது பற்றியும் அவரது பன்முக ஆற்றல் பற்றியும் எம்.வி.வி. பேசினார். அந்த விழாவில் அவரது சிறு நாடகப்பிரதியான காலத்தின் குரலை நானும் தேனுகாவும் எங்கள் சொந்தச் செலவில் புதிய நம்பிக்கை இதழ் ஆசிரியர் பொன் விஜயன் வழியாகக் கொண்டு வந்தோம்.

அதே கும்பகோணம் ஜனரஞ்சனி ஹாலிலும் காந்திபார்க்கிலும் கோபால்ராவ் நூலகத்திலும் அவருடைய பேச்சைக் கேட்டுத்தான் என் கல்லூரி காலங்களில் அவர் மீது எனக்குப் பெரும் மதிப்பு உருவாகி இருந்தது. சில வேளைகளில் எம். வி. வியும் அவர்கூட இருப்பார். வெங்கட்ரமணா ஓட்டலில் காபி சாப்பிட்ட பின் முத்து பீடாக் கடையின் தாம்பூலம் துலங்கப் பேச்சு போய்க்கொண்டிருக்கும். அதன் பின் அவரை வீட்டுக்குச் சென்று பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது. நானும் இன்று திரைப்பட வசன கர்த்தாவாக இருக்கும் பிருந்தாசாரதியும் இப்போது கோவையில் தமிழாசிரியராப் பணிபுரியும் செந்தில் வேலுவும் வெற்றிலைச் சீவல் வாங்கிக்கொண்டு அவரைப் பார்க்க மாசம் ஒரு தடவையாவது சென்றுவிடுவோம். கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் எழுதிய கவிதைகளை வாங்கி அவர் ஆர்வமாய்ப் படிப்பார். அப்போது கம்பராமாயணப் பாடல்களை அனுபவித்து ரசனையோடு பாடம் எடுப்பது போலச் சொல்வார். அவருக்குப் புதுக்கவிதைகள்மீது அத்தனை ஈடுபாடில்லை. மரபின் செழுமையை உண்டுகளித்துத் திளைத்த மனத்திற்கு அப்படி ஒரு விலகல் இருந்ததில் எங்களுக்கு ஆச்சர்யமும் இல்லை.

கவிதை பற்றி ஏராளமான விஷயங்களைச் சொல்வார். தொல் காப்பியம் யாப்பெருங்கலக்காரிகை பற்றியெல்லாம் பேசுவதோடு உசிதமல்லாததை விலக்கி உசிதமானதை மட்டும் வைத்தால் கவிதை ஆகும் என்று சொல்லும் ஷேமேந் திரரின் ஔசித்திய விசாரம், நேர்கோட்டில் போனால் உரை நடை அதைச் சற்று வளைத்து நெளித்து போட்டால் கவிதை என்று சொல்லும் குந்தகாவின் வக்ரோத்தி ஜீவிதம், கவிதைக்குள் எழுப்பும் த்வனி பற்றிய ஆனந்தவர்தனரின் த்வன்ய லோகா போன்ற கவிதை இயல் சார்ந்த புத்தகங்கள் பற்றியெல்லாம் விரிவாகச் சொல்வார். வயசு வித்யாசமின்றி எதைப் பற்றியும் அவரிடம் பேச முடியும். அருவி போல விஷயங்கள் கொட்டும். அவரைவிட்டு விலக மனம் வராது. எத்தனை நூலகம் போய்ப் படித்தாலும் அவ்வளவு விஷயங்கள் கிடைக்காது. பேச்சின் போது அமர்ந்தபடியே குதிப்பார், சப்தமிடுவார். சத்தமாகச் சிரிப்பார். கைதட்டுவார். சில சமயம் மூக்கு கண்ணாடி கீழே விழும். தனது கைத்தடியை எடுத்துத் தரையில் தட்டுவார். வெற்றிலை எச்சில் தெறிக்கும். கோபத்தில் சில சமயம் தாயோளி என்றும் வள்ளார ஓளி முண்டைகளா, வக்காள ஓழிகளா என்றும் கெட்டவார்த்தைகள் சிதறும். எதைப் பேசினாலும் அதை உல்லாசமாய் அனுபவித்துப் பேசுவார். அது வெறும் பேச்சாக இராது. ஒரு நிகழ்வு போலவே இருக்கும். கண் உபாதைக்கும் இதய நோய்க்கும் ஆட்பட்டபின் இந்த வேகம் கொஞ்சம் குறைந்தது.

கரிச்சான்குஞ்சு வடமொழி விற்பன்னராக இருந்தாலும் ஹிந்தி, ஆங்கிலம் அறிந்திருந்தாலும் தமிழ் மொழியின் மீது அவர் கொண்டிருந்த மாளாத அன்பு அவரது செயல்களில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னதற்கேற்ப கும்பகோணம் சங்கர மடத்தில் உரை நிகழ்த்தி இருக்கிறார். அதற்குத் தேனுகா அவரை அழைத்துப் போவார். சமஸ்கிருதத்தில் உரை அமைய வேண்டுமென்று சொல்லப்பட்டாலும் அதன் கடைசிப் பகுதிகளில் அவர் தமிழில் பேசித்தான் முடிப்பார். அது போலவே அவர் பள்ளிகளில் கம்பராமாயணம் நடத்தும்போது வால்மீகி ராமாயணத்தையும் சேர்த்துச் சொல்லி நடத்தியிருப்பதை அவரிடம் படித்த மாணவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.

உயர்சாதியில் பிறந்திருந்தாலும் அவர் கரிசனங்கள் மிகச் சாதாரணர்கள்மீதும் எளியவர்கள் மீதுமே இருந்தது. அவர் சார்ந்த சமூகத்தின் சில மடமைகளின் மீது அவருக்குக் கடுமையான விமர்சனங்கள் இருந்தன. அவர் எழுதிய நாவலில் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு குஷ்டரோகியின் கதையையே எடுத்துக்கொள்கிறார். ஓரினப்புணர்ச்சி பற்றிய விஷயங்களைத் தமிழில் முதன்முதலாக எழுதியவர் அவர். ரகசியமாய் நடக்கும் ஒரு விஷயத்தைப் பொது வெளிக்குக் கொண்டுவருகிறார். சமூகம் அது குறித்த பார்வையையும் விவாதத்தையும் முன்னெடுக்கத் தன் படைப்பின் வழியே ஒரு ஒரு சாளரத்தைத் திறந்துவைக்கிறார். இந்தத் தொனியை அவரின் பல படைப்புகளில் நாம் காணமுடியும்.

சமூகம் பேசக் கூசுகிற விஷயத்தை எழுதும் இது போன்ற துணிச்சல் அவருக்கு புதிதல்ல. அவரது பால்ய காலத்தில் 1937 ஜூன் முதல் 1941 மே வரை மதுரையில் உள்ள ராமேஸ்வரம் தேவஸ்தானப் பாடசாலையில் வடமொழியும் தமிழும் பயிலும்போது அவர் சில நாடகங்களில் நடித்துள்ளார். அதில் பட்ட நாராயணரின் “வேணீ சம்ஹாரம்” என்ற பாரதக் கதையை ஆதாரமாகக் கொண்ட நாடகத்தில் நடித்தபோது கர்ணனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் கடும் வாக்குவாதம் நடக்கும் காட்சி. இதில் அஸ்வத்தாமனாகக் கரிச்சான் குஞ்சு நடித்தார். “இங்கே பார் கர்ணா நான் எதற்கும் தயங்கமாட்டேன் என் பூணூலைக்கூட அறுத்தெறிவேன்’’ என்று பேசி சவால்விட வேண்டிய கட்டத்தில் அவர் உண்மையாகவே பூணூலை அறுத்தெறிந்துவிட்டார் என்கிறார் அவருடன் அந்தப் பாடசாலையில் உடன் பயின்ற பி.எச்.சிவசுப்ர மணியன். பூணூலை அறுப்ப தென்பது அபச்சாரம். அதுவும் வேதபாடசாலையில் பயிலும் ஒரு மாணவன் அறுப்பது என்பது பெரும் அதிர்ச்சியான விஷயம். அன்று முதல் அவருக்கு அங்கு அஸ்வத்தாமா என்ற பட்ட பெயர் நிலைத்திருக்கிறது.

வேதாந்த நோக்கில் அவர் பாரதியின் ஆத்ம பக்குவத்தைப் பற்றி எழுதிய பாரதி தேடியதும் கண்டதும் நூலும் கு.ப.ரா. பற்றி விரிவாக அவர் எழுதிய கட்டுரைத் தொகுப்பும் அவரது தமிழ் இலக்கியப் பங்களிப்பில் பிரதானமானவை.

பாரதி நூற்றாண்டின் போது பாரதி பற்றியும் அவர் படைப்புகள் பற்றியும் நூற்றுக்கணக்கான புத்தங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் எல்லாம் சேதாரம். மிகையில்லாமல் பரவசமில்லாமல் அவரை வெளிப்படுத்திய புத்தகங்கள் கனகலிங்கத்தின் என் குருநாதர், கரிச்சான் குஞ்சுவின் பாரதி தேடியதும் கண்டதும், யதுகிரியம்மாள் எழுதிய பாரதி சில நினைவுகள் போன்ற வெகுசிலவே தேறுகின்றன’’ என்று அவரது பசித்த மானுடத்தை மிகச்சிறந்த நாவலாக குறிப்பிட்டு கா.நா.சு பேசியுள்ளார். தாய் வார இதழிலும் எழுதினார்.

பாரதி போலவே கரிச்சான் குஞ்சும் வேதங்களில் தோய்ந்தவர்தான். இன்னும் கூடுதலாக சுக்ல யஜீர் வேதத்தின் பகுதியான பிருஹ தாரன்ய உபநிஷத்தைச் சுரத்தோடு அத்யயனம் செய்தவர். அப்படிக் கனம் முறையில் கடினமான வேதப் பகுதிகளைப் பயின்ற கனபாடிகளுக்கு இணையானவர் அவர். பாரதியின் படைப்புகளில் வேதங்களின் தாக்கங்கள் பற்றியும் அவர் பேசியுள்ளார்.

பாரதி “ஜெயபேரிகை கொட்டடா கொட்டடா, ஜெயபேரிகை கொட்டடா. பயமெனும் பேய்தனை அடித்தோம், பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம். வியனுலகனைத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வினைக் கைபிடித்தோம். ஜெயபேரிகை கொட்டடா கொட்டடா. ஜெயபேரிகை கொட்டடா’’ என்று பாடுகிறார். ஆனால் வேதங்களைத் தங்கள் அளவில் ஆழமாக உள் வாங்கிக்கொண்ட இருவருமே வேத வாழ்வைக் கைப்பிடிக்கவில்லை, அசல் கலைஞனின் வாழ்க்கையையே வாழ்ந்தனர்.

மனித மனத்தின் அடியில் படிந்து போயிருக்கும் தன்முனைப்பு, காமம், பொருந்தாக்காமம், செல்வம் சேர்ப்பதில் உள்ள வேட்கை, அதன் பொருட்டு நடக்கும் கேவலங்கள், பக்தியின் பெயரால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் போலித்தனங்கள் என்று எல்லாவற்றையும் மறைக்காமல் ஒளிக்காமல் தன் படைப்புகள் மூலம் நம் முன்வைக்கிறார் கரிச்சான் குஞ்சு. எதையும் எதிர் பார்க்காமால் எதன் மீதும் மறைந்தோ சாய்ந்தோ ஒளிந்தோ கொள்ளாமல் நேரிடையாகக் கணீரென்ற குரலில் தளுக்கின்றி அவர் சத்தியத்தைப் பேசுவது அவர் படைப்புகளின் வழியே இன்னமும் கேட்கிறது.

ஒன்றித் திளைத்து வெளிப்படும் அவரது சுவாரஸ்யமான சம்பாஷனை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடிகிற ஒன்றல்ல. கடும் வாசிப்பும் வாசித்ததைக் கேட்பவன் கிறங்குமாறு சொல்வதிலும் சமர்த்தர். ருசியான உணவும் பேச்சும் தாம்பூலமும் சிரிப்பும் குதூகலமுமாய் அவர் வாழ்வைக் கொண்டாடிக் கொண்டு தானிருந்தார். எல்லாவிதத் துயரங்களோடும் அவர் சுகவாசியாகச் சந்தோஷமாக நிம்மதியாக இருந்ததைத்தான் நான் எப்போதும் கண்டிருக்கிறேன். ஒரு வகையில் எனக்கு அப்போது ஆச்சரியமாக இருந்தது. தரித்திரத்தை எக்காளம் செய்து அவர் சிரித்து விளையாடிய விளையாட்டு அது என்று இப்போது புரிகிறது.

***

தமிழ் பல்கலைக்கழகமும் சாகித்ய அக்காதெமியும் இணைந்து தஞ்சையில் 10.08.2012இல் நடத்திய கரிச்சான்குஞ்சு கருத்தரங்கில் கரிச்சான் குஞ்சு குறித்தும் அவர் படைப்புகள் குறித்தும் ரவிசுப்பிர மணியன் வாசித்த கட்டுரை

நன்றி: காலச்சுவடு

Feb 6, 2013

புவியீர்ப்புக் கட்டணம் - அ.முத்துலிங்கம்

கடிதத்தை உடைக்கும்போதே அவனுக்கு கை நடுங்கியது. அது எங்கேயிருந்து வந்திருக்கிறது என்பது தெரியும். இது மூன்றாவது நினைவூட்டல். மூன்று மாதங்களாக அவன் புவியீர்ப்பு கட்டணம் கட்டவில்லை. இப்போது உடனே கட்டவேண்டும் என்று இறுதிக் கடிதம் வந்திருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாகத்தான் இந்த தொல்லை. அதற்கு முன் இப்படி விபரீதமான ஒரு துறை - புவியீர்ப்பு துறை - உண்டாகியிருக்கவில்லை. amuthu

'அம்மையே!'

'சொல்லுங்கள், நான் உங்களுக்கு இன்று எப்படி உதவலாம்?' 

'புவியீர்ப்பு கட்டணத்தை கட்டும்படி மீண்டும் நினைவூட்டல் கடிதம் வந்திருக்கிறது.'

'நீங்கள் யார் பேசுவது?'

'நான் 14 லோரன்ஸ் வீதியிலிருந்து பேசுகிறேன்.'

'சரி, உங்களுக்கு என்ன பிரச்சினை?'

'இந்தக் கட்டணம் அதிகமாக இருக்கிறது. இன்னொருமுறை பரிசீலிக்கமுடியுமா?'

'இதோ கணினியில் உங்கள் கணக்கை திறந்திருக்கிறேன். சென்றமாதமும் உங்களோடு பேசியிருக்கிறேனே. அதற்கு முதல் மாதமும் இதே கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். ஆரம்பத்தில் இருந்து ஒழுங்காக பணம் கட்டி வந்த உங்களுக்கு திடீரென்று என்ன நடந்தது?'

'என்னுடைய நிதிநிலைமை மோசமாகிவிட்டது.'

'அதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும்? எங்கள் துறையின் விதிமுறைகள் அடங்கிய கையேட்டை உங்களுக்கு அனுப்பியிருந்தோமே. அதன் பிரகாரம்தான் கட்டணம் அமைத்திருக்கிறோம்.'

'அம்மையே, உங்கள் கையேடு மிகவும் பாரமாக உள்ளது. எழுத்துக்கள் எறும்புருவில் படித்து முடிப்பதற்கிடையில் ஓடிவிடுகின்றன. உங்கள் கட்டண அமைப்பும் ஒன்றுமே புரியவில்லை. மிக அநியாயமாக இருக்கிறது.'

'புரியாதது எப்படி அநியாயமாகும்? நீங்கள் தண்ணீருக்கு கட்டணம் செலுத்துகிறீர்கள். மின்சாரக் கட்டணம், சமையல்வாயு கட்டணம், சூரியஒளி வரி, காற்றுத்தூய்மை வரி என்று சகலதும் கட்டுகிறீர்கள். தொலைக்காட்சி, தொலைபேசி, செல்பேசி எல்லாம் பட்டுபட்டென்று தீர்த்துவிடுகிறீர்கள். இதிலே மாத்திரம் என்ன குறை கண்டீர்கள்?'

'அம்மையே, புவியீர்ப்புக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். ஆதியிலிருந்து அது இருந்துகொண்டுதானே இருக்கிறது. நியூட்டன் அதைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர்கூட இருந்திருக்கிறது என்று சொல்கிறார்களே. இவ்வளவு நாளும் அதற்கு வரி விதிக்கவில்லை. இப்பொழுது இரண்டு வருடங்களாக அதற்கும் வரி கட்டவேண்டுமென்றால், எப்படி?'

'ஐயா, நீங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தக் கேள்வியை இரண்டு வருடத்திற்கு முன்னரே கேட்க உங்களுக்கு தோன்றவில்லை? தண்ணீரை உங்கள் வீட்டுக்கு கொண்டுவருகிறோம். காற்றை தூய்மையாக்கி சுவாசிக்க வழங்குகிறோம். கூரையிலே விழும் சூரிய ஒளியில் உங்கள் சாதனங்கள் இயங்குவதற்கு அனுமதிக்கிறோம். சமையலுக்கு வாயு தருகிறோம், மின்சாரம் தருகிறோம். எல்லாவித கட்டணமும் கட்டிவிடுகிறீர்கள். ஆனால் புவியீர்ப்புக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள். யோசித்து பாருங்கள், புவியீர்ப்பு இல்லாமல் உங்களால் ஒரு நிமிடம்கூட வாழ முடியுமா? கார் ஓட்ட முடியுமா? நடக்க முடியுமா? உங்கள் பிள்ளைகள் ஓடியாடி விளையாடமுடியுமா? ஒன்றுக்குப் போவதுபோல ஒரு சின்னக் காரியம்கூட உங்களால் செய்யமுடியாதே?'

'அம்மையே, என்னுடைய சுண்டெலி மூளையில் இவையெல்லாம் புரிய தாமதமாகிறது. ஆனால் உங்கள் துறை என்ன செய்கிறது? புவியீர்ப்பை சுத்தம் செய்கிறதா அல்லது வீடு வீடாய் கொண்டுபோய் அதை இறக்குகிறதா? இது மிகப் பெரிய அநியாயமாகப் படவில்லையா?'

'அமெரிக்காவில் உள்ள அத்தனை பேரும் புவியீர்ப்பு கட்டணம் கட்டுகிறார்கள். ஐரோப்பா கட்டுகிறது. சில ஆப்பிரிக்க நாடுகளும் கட்டத் தொடங்கிவிட்டன. உலகம் படுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு தேசப்பற்றாளராக நடக்கவில்லை. புவியீர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தும், அதனை முற்றிலும் பயன்படுத்தியும், அதற்கான கட்டணத்தை நீங்கள் கட்டத் தயங்குவது விசனத்துக்குரியது. இதைப் பற்றி நான் மேலிடத்துக்கு முறைப்பாடு செய்யவேண்டியிருக்கும்.'

'அம்மையே, உங்கள் இனிமையான குரலும் 'முறைப்பாடு' என்ற வார்த்தையும் ஒரே வாசகத்தில் வரலாமா? இந்த துறை துவங்கிய காலத்திலிருந்து நான் கட்டணத்தை சரியாகக் கட்டி வந்தேன். எனக்கு தேசப்பற்றும், பூமிப்பற்றும், புவியீர்ப்பு பற்றும் அதிகம் உண்டு. புவியீர்ப்பு கவிதை ஒன்றாவது படிக்காமல் நான் தூங்கப் போவதில்லை. அம்மையே, எப்படியும் கட்டிவிடுகிறேன். சிரமத்துக்கு மன்னிக்கவும். வணக்கம்.'

'வணக்கம்.'

'ஹலோ.'

'ஹலோ.'

'அது யார்? 14 லோரன்ஸ் வீதிதானே? வீட்டுச் சொந்தக்காரரா பேசுவது?'

'நான்தான், சொல்லுங்கள்?'

'ஐயா, நான் புவியீர்ப்பு துறையிலிருந்து பேசுகிறேன். நீங்கள் கடந்த நாலு மாதம் கட்டணம் கட்டாமல் எங்கள் சேவையை பயன்படுத்தி வருகிறீர்கள். உங்கள் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டம் நெருங்கி வருகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.'

'அம்மையே, இது என்ன அநியாயம். நான் பணக் கஷ்டத்திலிருக்கிறேன், கொஞ்சம் கருணை காட்டுங்கள். நான் கட்டமுடியாது என்று சொல்லவில்லையே, எனக்கு சிறிது அவகாசம் கொடுங்கள். புவியீர்ப்பு முடிவதற்கிடையில் எப்படியும் கட்டிவிடுவேன்.'

'நீங்கள் இடக்காகப் பேசுவதாக நினைக்கிறீர்கள். உங்களுக்கு இத்துடன் எட்டு அவகாசம் கொடுத்தாகிவிட்டது. எங்கள் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் நீங்கள் ஏமாற்றும் பேர்வழி என்று தெரிகிறது. நீங்கள் உடனடியாக முழுப்பணத்தையும் கட்டாவிட்டால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.'

'அம்மையே, பெரிய வார்த்தை சொல்லலாமா? ஏமாற்றுவது என்ற வார்த்தையை எழுத்துக்கூட்டக்கூட எனக்கு வல்லமை போதாது. நான் அப்படியான ஆளும் அல்ல. சின்ன வயதில் அம்மாவின் கோழிக்குஞ்சு ஒன்றை அவருக்கு தெரியாமல் திருடி விற்றது பற்றி யாரோ சொல்லியிருக்கிறார்கள். தேவ சங்கீதம் போல ஒலிக்கும் உங்கள் குரலில் இந்த வார்த்தைகள் வரலாமா? நான் இந்த மாதம் முழுக்காசையும் கட்டிவிடுகிறேன்.'

சரி, அப்படியே செய்யுங்கள். அடுத்த மாதம் எங்கள் துறையிலிருந்து ஒருவர் உங்களை அழைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

'மெத்தச் சரி. அம்மையே, ஒரு விளக்கம் கூறவேண்டும்.'

'சொல்லுங்கள்.'

'ஒவ்வொரு மாதமும் இந்தக் கட்டணம் ஏறிக்கொண்டே வருகிறதே, அது ஏன்?'

'நாங்கள் அனுப்பிய சுற்றறிக்கை 148.8 ஐ நீங்கள் படிக்கவில்லையா?'

'இல்லை, அம்மையே.'

'அதில் 48வது பக்கத்தை படிக்கவேண்டும். புவியீர்ப்பை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் மனைவி பயன்படுத்துகிறார். உங்கள் இரண்டு பிள்ளைகளும் பயன்படுத்துகிறார்கள். உங்கள் எடை மாதாமாதம் கூடுகிறதல்லவா, அதுதான் காரணம். உங்கள் எட்டு வயது மகனைக் கேட்டிருந்தால் அவன் பதில் சொல்லியிருப்பானே.'

'உங்களுக்கு எப்படி என் மகனின் வயது எட்டு என்று தெரியும், இது பெரிய அநியாயமாக இருக்கிறதே.'

'ஐயா, எங்களுக்கு எல்லாம் தெரியும். உங்கள் மகன் பிறந்தது அல்பெர்ட் மார்ட்டின் மருத்துவமனையில், அவனுடைய எடை பிறக்கும்போது 7 றாத்தல் 8 அவுன்ஸ் என்பதும் பதிவாகியிருக்கிறது. உங்கள் மனைவியின் சுற்றளவு அதிகமாகி வருகிறதே, அதைக் கவனித்தீர்களா?'

'நீங்கள் எல்லைமீறிப் பேசுகிறீர்கள்?'

'ஏன் கட்டணம் கூடுகிறது என்று கேட்டீர்கள், அதற்கு காரணம் கூறினேன். இந்த திட்டத்தால் பயன் பெற்றவர்கள் அதிகம். சிலர் தங்கள் எடையை கணிசமாகக் குறைத்துவிட்டார்களே.'

'அம்மையே, எங்கள் எடை எப்படி உங்களுக்கு தெரியும்?'

'நீங்கள் சுற்றறிக்கை 133.6 ஐ படித்திருக்கவேண்டும். உங்களுடைய இன்றைய எடை 174, கடந்த மாதம் அது 172 ஆக இருந்தது. உங்கள் வீட்டு மூலைகளில் பொருத்தியிருக்கும் மந்திரக் கண்கள் இந்த தகவல்களை எமக்கு அனுப்புகின்றன.'

'அம்மையே, நாங்கள் இரண்டு வாரகாலம் இந்த நாட்டில் இல்லை. வெளிநாட்டுக்கு பயணம் போயிருந்தோம். அதற்கு கழிவு ஒன்றும் இல்லையா? நாங்கள் இந்த நாட்டு புவியீர்ப்பை பயன்படுத்தவில்லையே?'

'ஐயா, இதையெல்லாம் எங்கள் துறை முன்கூட்டியே ஆழமாக சிந்தித்திருக்கிறது. உங்கள் சட்டத்தரணிமூலம் ஒரு சத்தியக்கடதாசி தயாரித்து அனுப்பிவிடுங்கள். இந்தத் தேதியிலிருந்து இந்த தேதிவரை நாங்கள் இந்த நாட்டு புவியீர்ப்பை பாவிக்கவில்லை. நாங்கள் பயணம் சென்ற தேசத்தில் அவர்களுக்கு சேரவேண்டிய புவியீர்ப்பு கட்டணத்தை செலுத்திவிட்டோம். இப்படி எழுதி அனுப்புங்கள். நாங்கள் அதற்கான கழிவை உங்கள் கணக்கில் சேர்த்துவிடுவோம்.'

'நன்றி அம்மையே, நன்றி. உங்கள் அறிவுக்கூர்மை என் நெஞ்சைத் துளைத்தாலும் உங்கள் குரல் இனிமை என்னை திக்குமுக்காடவைக்கிறது. இன்னும் ஒரேயொரு கேள்வி கேட்க அனுமதிப்பீர்களா?'

'சரி, கேளுங்கள்.'

'என்னுடைய மாமியார் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவர் ஒரு கட்டிலில் தூங்குகிறார். அவருக்கு பக்கத்தில் ஒரு கிளாசில் அவர் பல் தூங்குகிறது. அவர் புவியீர்ப்பை பாவிப்பதே இல்லை. அதற்கு ஏதாவது சலுகை உண்டா?'

'இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்களே. நான் வெட்கப்படுகிறேன். உங்கள் மாமிக்கு புவியீர்ப்பு இல்லையென்று வையுங்கள். அவரால் கட்டிலில் படுத்திருக்கமுடியுமா? இப்பொழுது செவ்வாய் கிரகத்தை தாண்டியல்லவோ பறந்து போய்க்கொண்டிருப்பார்.'

'மன்னியுங்கள். என்னுடைய மூளையை பிரகாசிக்க வைத்துவிட்டீர்கள். இன்றே புவியீர்ப்பு கட்டணத்தை கட்டிவிடுவதாக வாக்குறுதியளிக்கிறேன்.'

'முதலில் செய்யுங்கள்.'

'ஹலோ'

'ஹலோ'

'ஐயா, உங்கள் வாக்குறுதியும் செவ்வாய் கிரகத்தை தாண்டி பறந்து கொண்டிருக்கிறது. இறுதி எச்சரிக்கை தருவதற்காக வருந்துகிறேன். இன்னும் ஒரு வாரத்திற்குள் நீங்கள் நிலுவைக் கட்டணம் முழுவதையும் கட்டிவிடவேண்டும்.'

'அம்மையே, இது என்ன இப்படி வெருட்டுகிறீர்கள். நான் என்ன வைத்துக்கொண்டு இல்லையென்கிறேனா? காற்று வரி கட்டினேன், வாயு கட்டணம் கட்டினேன், தண்ணீர் கட்டணம் கட்டினேன், மின்சாரக் கட்டணம் கட்டினேன்.'

'அதைத்தான் நானும் கேட்கிறேன். எல்லாத் துறைகளுக்கும் கட்டுகிறீர்கள், புவியீர்ப்புக் கட்டணத்தை கட்டுவதற்கு மட்டும் தயக்கம் காட்டுகிறீர்கள்.'

'அதன் காரணம் உங்களுக்கு தெரியும்தானே.'

'இல்லை, தெரியாது. தயவுசெய்து என் அறிவைக் கூட்டுங்கள்.'

'மின்சாரக் கட்டணம் கட்டாவிட்டால் இணைப்பை துண்டித்துவிடுவார்கள். தண்ணீர் கட்டணம் கட்டாவிட்டால் தண்ணீரை வெட்டிவிடுவார்கள். காற்று, தொலைபேசி, வாயு எல்லாத்தையும் வெட்டிவிடுவார்கள். புவியீர்ப்பு கட்டணம் கட்டாவிட்டால் அதை துண்டிப்பீர்களா? நியூட்டன் திரும்ப பிறந்து வந்தால்கூட அதைச் செய்யமுடியாதே.'

'ஐயா, சுற்றறிக்கை வாசிக்கத் தெரியாத நீங்கள் இவ்வளவு சிந்திப்பீர்கள் என்றால் இந்த துறையை நடத்தும் விஞ்ஞானிகள் எவ்வளவு சிந்திப்பார்கள். சென்றவாரம் செய்தித்தாள் படித்தீர்களா?'

'நீங்கள் என்னுடைய நாலாம் வகுப்பு உபாத்தினிபோல கேள்விக்கு மேல் கேள்வி கேட்கிறீர்கள்.'

'ஐயா, நீங்கள் சுற்றறிக்கைதான் படிப்பதில்லை, பேப்பர் என்ன பாவம் செய்தது, அதைப் படிக்கலாம் அல்லவா?'

'அம்மையே, என் கனவில் துர்தேவதைகள் வந்து என்னை ஆட்டிப்படைக்கின்றன. நான் என்ன செய்ய?'

'சரி, துர்தேவதைகள் போனபிறகு பேப்பரை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.'

'அம்மையே, என் ஆவலைப் பெருக்கவேண்டாம். தாங்கமுடியவில்லை. பேப்பரில் என்ன செய்தி வந்தது, தயைகூர்ந்து செப்புங்கள்.'

'செப்புகிறேன். ஒருவர் எட்டுமாதத்துக்கு புவியீர்ப்பு கட்டணம் கட்டாமல் உங்களைப்போல ஏமாற்றிக்கொண்டே வந்தார்.'

'அப்படியா?'

'அவருக்கு தண்டம் விதித்தோம், அவர் அதையும் கட்டவில்லை. ஆகவே புவியீர்ப்பை அவர் இனிமேல் பாவிக்கக்கூடாது என்று தீர்மானித்தோம்.

'பிறகு என்ன நடந்தது?'

'அவரை விண்வெளிக்கலத்தில் ஏற்றிச்சென்று புவியீர்ப்பு இல்லாத இடத்தில் இறக்கிவிட்டோம். அவர் ஒரு தடவை பூமியை சுற்றி வந்தார். அதற்கிடையில் மனது மாறி சம்மதித்துவிட்டார். திரும்பவும் அவரை பூமியில் கொண்டுவந்து இறக்கிவிட நேர்ந்தது.'

'உண்மையாகவா!'

'மனிதர் முழுக்காசையும் கட்டினார்; தண்டத்தையும் கட்டினார்; வட்டியையும் கட்டினார். ஆனால் ஒரு பிரச்சினை?'

'அது என்ன?'

'விண்வெளிக்கலத்தில் ஏற்றிச்சென்ற பயணச் செலவு, விண்வெளி உடையின் விலை இன்ன பிற செலவுகளை மாதாமாதம் கட்டுகிறார். 2196 மாதங்களில் கட்டிமுடித்துவிடுவார்.'

'2196 மாதங்களா?'

'ஓமோம், கட்டிமுடிக்க 183 வருடங்கள் ஆகும்.'

'அவ்வளவு வருடம் வாழ்வாரா?'

'அது தெரியாது. அவருடைய பிள்ளைகள் நிலுவைக் கணக்குக்கு உத்திரவாதம் கொடுத்திருக்கிறார்கள்.'

'அம்மையே, நான் இன்றே உங்கள் கட்டணத்தை ஒருசதம் மிச்சம் வைக்காமல் கட்டிவிடுகிறேன்.'

'ஹலோ.'

'ஹலோ.'

'உங்களைப் பற்றி புவியீர்ப்புத்துறையினர் சிலாகித்து சொன்னார்கள். நீங்கள் கட்டணத்தை உடனுக்குடன் கட்டிவிடுவதாக புகழ்கிறார்கள்.'

'நன்றி. நீங்கள் யார் பேசுவது? தொண்டை அடைத்த வாத்தின் குரல்போல இருக்கிறதே!'

'நான்தான் பூமிப்பயணத்துறையில் இருந்து பேசுகிறேன்.'

'இது என்ன புதுத்துறையா?'

'என்ன ஐயா எங்களுடைய கடிதம், சுற்றறிக்கை ஒன்றும் கிடைக்கவில்லையா? மூன்று மாதக் கட்டணம் நிலுவையில் இருக்கிறதே.'

'என்ன கட்டணம்?'

'பூமிப் பயணக் கட்டணம். அதாவது பூமி சூரியனைச் சுற்றி வருவது உங்களுக்கு தெரியும். ஒரு முறை பூமி சூரியனைச் சுற்றும்போது நீங்கள் 149,600,000 மைல்களைக் கடக்கிறீர்கள். நினைத்துப் பாருங்கள், இத்தனை மைல்கள் நீங்கள் இலவசமாகப் பயணம் செய்கிறீர்கள். ஒரு சதம் செலவு இல்லாமல். இனிமேல் இது இலவசம் கிடையாது. பயணத்துக்கு கட்டணம் கட்டவேண்டும்.'

'அப்படியா. அருமையான விசயம். இனிமேல் நாள் நாளாக எண்ணாமல் மைல் மைலாக எண்ணலாம். நினைத்துப் பார்க்கும்போதே புல்லரிக்கிறது.'

'முதலில் மூன்று மாதக் கட்டணத்தை அனுப்பிவிடுங்கள். பிறகு புல்லரியுங்கள். நீங்கள் பயணம் செய்த தூரம் 37,400,000 மைல்கள்.'

'அதற்கென்ன. பாட்டுப் பாடிக்கொண்டு ஒரு காசோலை எழுதி ஒப்பம் வைத்து அனுப்பிவிடுகிறேன். ஒரு கேள்வி அம்மையே. இதிலே, விமானத்தில் இருப்பதுபோல முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என்று இருக்கிறதா?'

'இல்லை. இல்லவே இல்லை. எல்லோரும் சரிசமம்தான்.'

'மிச்சம் நல்லது. சமத்துவம் என்றால் எனக்கு பிடிக்கும். என்னுடைய அம்மாவுக்கும் பிடிக்கும்.'

'உங்களுக்கு ஒரு சலுகையும் இருக்கிறது.'

'அப்படியா, சொல்லுங்கள்.'

'லீப் வருடத்தில் ஒரு நாள் அதிகம் அல்லவா? ஆனால் நாங்கள் கட்டணத்தை கூட்டப்போவதில்லை. லீப் வருடத்திலும் அதே கட்டணம்தான்.'

'நம்பவே முடியவில்லை. இந்த நற்செய்தி கொடுத்த உங்களுக்கு ஒரு முத்துமாலை பரிசளித்தாலும் தகும். அல்லாவிடில் புள்ளி விழாத சிவந்த அப்பிள் கொடுத்தாலும் தகும். கேட்கும்போதே மனம் புளகிக்கிறது. அம்மையே, பணக்காரர்களுக்கு நல்ல வசதியிருக்கிறது. அவர்கள் அதிக கட்டணம் கட்டலாம் அல்லவா?'

'பாருங்கள், உங்கள் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்கிறது. உங்களைப்போல ஆட்கள்தான் பூமிக்கு தேவை. நீங்கள் விமானத்தில் போகும்போது அளவுக்கு அதிகமான பொதி கொண்டுபோனால் மிகை கட்டணம் கட்டவேண்டும். அப்படித்தான் இங்கேயும்.'

'உதாரணமாக?'

'ஒரு பணக்காரரிடம் நாலு வீடுகள், ஐந்து கார்கள், அப்படி ஏராளமான பொருள்கள் இருந்தால் அவர் மிகை கட்டணம் கட்டவேண்டும். சாதாரண குடும்பத்தவர்கள் மிகை கட்டணம் கட்டத் தேவையில்லை. உங்களுக்கு அந்த அபாயம் கிடையாது.'

'அம்மையே, உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. இன்றே என் பயணக் கட்டணத்தை அனுப்பிவிடுவேன்.'

'நல்லது. அது என்ன சத்தம்?'

'ஒன்றுமில்லை. பூமி பிரண்டு மறுபக்கம் திரும்பும் சத்தம்.'

'சரி, நீங்கள் என்னிடம் பத்து நிமிடம் பேசியபோது 11000 மைல்கள் பிரயாணம் செய்துவிட்டீர்கள். அதற்கும் சேர்த்து பணத்தை கட்டிவிடுங்கள்.'

'உடனே, உடனே செய்வேன். இதனிலும் பார்க்க மகிழ்ச்சி தரும் விசயம் எனக்கு வேறு என்ன இருக்கிறது? இன்னொன்று.'

'என்ன?'

'நான் ஒரு சுற்றுலா போவதற்கு திட்டமிட்டிருந்தேன். இந்தப் பெரிய பிரபஞ்ச பயணம் போகும்போது சின்னஞ்சிறு சுற்றுலா என்ன கேடு என்று அதை நிறுத்திவிட்டேன். அந்தக் காசை மிச்சம் பிடித்து பூமிப் பயணக் கட்டணத்தை உடனேயே கட்டிவிடுகிறேன்.'

'பூமிப் பற்றாளர் என்றால் நீங்கள்தான்.'

'அம்மையே, ஓர் ஆலோசனை. நட்சத்திரங்கள் சும்மா சும்மா மினுங்கிக்கொண்டு கிடக்கின்றன. அதற்கு ஒருவரும் வரி கட்டுவதில்லை. சந்திரன் வளர்வதும் தேய்வதுமாய் இருக்கிறான். அவனையும் வளைத்துப் போடவேண்டும். ஒருவருமே கவனிப்பதில்லை.'

'அருமையான யோசனை. கவனிக்கிறோம். கவனிக்கிறோம்.'

நன்றி: அ.முத்துலிங்கம்

Feb 5, 2013

மா. அரங்கநாதன் நேர்காணல்

நேர்காணல்: ஆர்.சி.ஜெயந்தன்  

படங்கள் : செழியன் ஓவியம்- ஜேகே

உங்கள் கதைகளில் முத்துக்கருப்பன் என்ற பாத்திரம் தொடர;ந்து வருகிறது. உண்மையில் முத்துக்கருப்பன் யார்?

‘‘என்னால் விளக்கிச் சொல்ல முழயாத சில உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருவதற்கு உதவி செய்கிறவன் முத்துக்கருப்பன். கதை என்றால் என்ன - கவிதை ma aranganathanஎன்றால் என்ன என்று கேட்டால் சரியான பதில் சொல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அது என்னவென்று தொpந்தால் அது இனிமேல் இருக்காது இல்லையா? கடவுள் சமாச்சாரம்கூட அப்படித்தானே!’’

பிராமண எதிர்ப்பு என்பது உங்களது படைப்புகளில் அதிகமாக இருக்கிறது. சைவப்  பின்னணி கொண்ட நீங்கள், பிராமண எதிர்ப்பைக் கையில் எடுத்தது ஏன்? நீங்கள் எதிர்ப்பது பிராமண வைதீகம் என்றால் இன்றைய உலகமய, பின்நவீனத்துவகாலகட்டத்திலும் அது தன்னைத் தகவமைத்துக் கொள்கிறதா?எந்தெந்த வகையில்? அதை எப்படி எதிர்கொள்வது?

‘‘வைதீக எதிர்ப்பு என்பதுதான் சரி - பிராமண எதிர்ப்பு அல்ல. பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்தாலும் அது பூரணமாகவே இருக்கும் என்று சொல்லும் உபநிடதம் எப்படி வைதீகமாகும்? அது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருப்பதால் அதை ஏற்றுக்கொள்ளலாம்; அதையே மற்றவர்கள் சொன்னால் ஏற்க வேண்டியதில்லை என்பது வைதீகம். உண்மையில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது எல்லாம் வைதீக மதத்திற்கோ வைதீகவாதிகளுக்கோ சொந்தமானவை அல்ல. ஓர் அரசன் வைதீகவாதிகள் பக்கம் என்றால் எல்லாமே வடமொழியில் எழுதப்பட்டுவிடும். ஆங்கிலேயர் காலத்தில் அரசு மொழியான ஆங்கிலத்தில் தான் எல்லாம் எழுதப்பட்டன. பரதநாட்டியம், கர்நாடக இசை போன்ற தென்னாட்டுக் கலைகளும் வடமொழியில்தான் எழுதப்பட்டன. தில்லை நடராசனின் ஊழிக்வுத்து, இட்லி என்ற பலகாரம் - இவைபற்றிகூட ஆங்கிலத்தில்தான் முதலில் கட்டுரைகள் எழுதப்பட்டன. இட்லியும் தில்லை நடராசனும் ஆங்கிலேயர் சமாச்சாரங்களா? இன்னொன்று, வடமொழியின்மீது எந்த வெறுப்பும் அப்போது இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. வைதீக எதிர்ப்பு இருந்தது. காஞ்சிப் பெரியவர் உரைகளைப் படியுங்கள். எந்தக் காலத்திலும் சமஸ்கிருதம் தாய்மொழியாகப் பேசப்படவில்லை என்பது அவர்கூற்று.

சைவப் பின்னணி என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? மொத்தமாக பக்தி இயக்கமே தென்னாட்ழல், தமிழ்நாட்ழல்தான் தோன்றியது. அதுவும் வைதீக எதிர்பிற்கான முயற்சியே. வேதங்களில் பூர்வ குடிமக்களின் சிவலிங்கம் நிந்திக்கப்படுகிறது. விஷ்ணு, உபேந்திரன் என்ற பெயரில் - இந்திரனின் வேலைக்காரனாகச் சொல்லப்படுகிறார். இவைபோன்ற கீழ்த்தரங்களை எதிர்த்துக் கிளம்பியது தான் பக்தி இயக்கம் வேதகாலத்திற்கு முன்னரே கருப்பண்ணசாமி, சுடலைமாடன் என்று பின்னர் அறியப்படுகிற பூர்வகால கடவுளரைத் திரும்பவும் தக்க இடத்திற்குக் கொண்டுவரச் செய்த முயற்சியே இது. இந்தக் கடவுளரையும், வேதநாயகன் என்று பட்டம் சூட்டி அந்த பக்தி இயக்கத்தையும் வைதீகம் தன்னோடு சோ;த்துக் கொண்டு விட்டது. பெண் தெய்வ வணக்கம் வேதகால ஆhpயர்க்கு இல்லை. ஆனால் இங்கே கருமாரி அம்மனைக்கூட கிருஷ்ணமாhp என்று பெயர்மாற்றி வேத மந்திரங்களால் அர்ச்சனை செய்து, எந்த விஷயத்தில் ஆதாயம் இருக்கிறதோ அங்கே ஒரு சமஸ்கிருதப் பெயர் சூட்டப்பட்டு, அதைத் தங்களுடையதாக ஆக்கிக் கொதண்டுவிடுவதில் வைதீகம் கைதெர்ந்த ஆதிக்க சக்தி. ரஸ்ஸல், பெர்னாட்ஷா, பொpயார் ஆகியோhpன் கொள்கைகள் சீரும் சிறப்பஜம் அடைந்தால், சார்வாகன், ஜாபலி ஆகியோர் பெயர்களைக் கூறி பொpயார் போன்றவர்களையும் தங்கள் பக்கம் இழுத்துவிடும். இதுதான் வைதீகம்.

இப்படிப்பட்ட வைதீகம் சிக்மன் ப்ராய்டின் மனோதத்துவம் மற்றும் அமைப்பியல், பின்நவீனத்துவக் கோட்பாடு ஆகியவற்றில் தன்னை தகவமைத்துக் கொள்வதா கஷ்டம்?

சைவ சித்தாந்தம் என்பது பக்தி இயக்க காலத்து சைவ சமயம் அல்ல. அதுவும் சொல்லப்பட்ழருக்கலாமே ஒழிய, பக்தி இயக்க காலத்திற்கு முன்பே தொன்றுதொட்டு தென்னாட்ழல் இருந்து வந்தது - சங்க காலத்திலும் சில கவிதைகளில் தொpவது - இதையே கொள்ள வேண்டும். நமக்குத் தெரிந்தவரையில் பூங்குன்றன் போன்றோரிலிருந்து வள்ளலார் ஈறாக நம் சித்தர் பெருமக்கள் தந்தது. இதில் திருமூலாpன் கொடை மிக அhpது என்று சொல்ல வேண்டும்.’’

இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? இதற்கு எதிரிடையாக ஓர் இலக்கியவாதி என்ன செய்ய வேண்டும்?

‘‘எதையும் செய்ய வேண்டாம். இதுதான் வைதீகம் என்று அதை அறிந்து கொள்வது மட்டுமே உண்மையான வைதீக எதிர்ப்பு ஆகும். ஜே. கிருஷ்ணமூர்த்தி சொல்வதும் கிட்டத்தட்ட இதுவேதான்.

ஒளி வருவதும், இருள் அகலுவதும் வேறு வேறல்ல இதுதான் இருள் என்று அறிந்து கொள்வதுதான் ஒளி அப்போதே இருள் அகன்று விடுகிறது. கோபம் என்ற ஒன்றாக நாம் மாறும் போது அல்லது கோபம் அடைகிறபோது, கோபமடைந்த நம்மை நாமே பார்த்துக் கொள்ள முடியுமானால் அது சாந்தம். சிவம் - சிவன் இதுபற்றி வேறொன்றையும் சொல்ல வேண்டும்.

தமிழ்கூறும் சிவனும் ஒரு சித்தன்தான் அவன் நிலந்தரு திருவிற்பாண்டியன் என்று அறியப்படுபவன் ஏதோ ஒரு கடல் அhpப்பின்போது, நில மிழந்த மக்களுக்கு நிலத்தைப் பங்கிட்டு அளித்த வேடர் தலைவனாக இருக்க வேண்டும். நெருப்பின் பயனைப் புதிதாகத் தொpந்து சொன்னவனாகவும் இருக்கக்கூடும் வைதீகவாதியான ஆதிசங்கரர்கூட இந்த உண்மையைப் புறக்கணிக்க முடியாது சிவனுக்கு இந்த உருவத்தையே அளிக்கிறார். நப்பின்னையின் காதலன் - மாட்டுச் சண்டை வீரன் கண்ணனை காசியபக்கொத்திரத்து விஷ்ணு என்று ஆக்கிவிட்டாலும்கூட, தமிழ்ச் சித்தனாகிய சிவனை ஒன்றும் செய்ய முடியவில்லை.

மாணிக்கவாசகரே இதைப் பற்றிக் கூறுகிறார்:

காட்டகத்து வேடன் வலைவாணன்

நாட்டிற் பரிப்பாகன்....’

அவரின் இந்த வரிகளோடு பட்டினத்தாருக்கு மருதப்பன் அளித்த மண்ணையும் சாணி வரட்டியையும் சேர்த்துக் கொண்டால் சிவனது சித்தமும் சித்தரின் சிவமும் தெரிந்துவிடும். பழந்தமிழர் கூறும் நாநில மக்கள் அவர்கள்.’’

போரற்ற - அமைதியான - சக மனித நேயத்தைக் கட்டமைக்கும் கலை, இலக்கியச் செயல்பாட்டினை உங்கள் படைப்புகிள்ன வழியே நான் புhpந்துகொள்கிறேன். உண்மையில் நீங்கள் படைப்புகளின் வழியே எதைக் கட்டமைக்க விரும்புகிறீர்கள்? நீஙகள் படைப்புகளின் வழியே எதைக் கட்டமைக்க விரும்புகிறீர்கள்?நீங்கள் விரும்பியது கை கூடியதா?

‘‘கட்டமைப்பு என்று கூறும்போது ஒன்று சொல்ல வேண்டும். கட்டமைப்புடன் வெகு காலத்திற்கு இருந்து வந்த ஒன்றுகூட, ஏற்கெனவே வேறுபட்ட கட்டமைப்பு ஒன்றின் சிதறடிக்கப்பட்ட மாற்றங்கள்தான். இப்போது இருக்கிற கட்டமைப்பு சிதறடிக்கப்படுவதும் காலநியதிதான். ஏற்கெனவே பல கூறுகளாக வெடித்த பகுதிகள்தான், இப்போது ஒரு கட்டமைப்புடன், இருந்து வருகிற நம்முடைய நிலவுலகு என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம் அல்லவா? புதிதாக கட்டமைத்துத் தருவதற்கு நாம் அறிவுலகவாதிகள் அல்ல. பார்;வையின் வழியே உணர்ந்து கொள்வதை புhpந்து கொள்ளாவிட்டாலும், மாற்றம் என்று அதை அறிந்து கொண்டு அல்லது உணர்ந்து கொண்டு image_7 சொல்வதோடு அல்லது சொல்ல முய்ற்சிப்பதோடு பணி முடிகிறது.’’

ஐம்பதுகளில் எழுதத் தொடங்கிவிட்ழுர்கள். அந்த காலகட்டத்தில் தொடங்கி இன்றுவரை நீங்கள் எழுதிய எல்லா சிறுகதைகளின் வடிவ நேர்த்தி என்பது ஆச்சரிய மூட்டக்கூடியதாகஇருக்கிறது. கதைகளின் வடிவம் என்பது நீங்களே திட்டமிடுவதா?இல்லை, கதையின் உள்ளடக்கம் அதைத் தீர்மானித்துக் கொள்கிறதா?

‘‘ஏற்கெனவே திட்டமிட்ட பயணங்கள் எல்லாம் கட்டுரை எழுதப் பயன்படலாமே ஒழிய படைப்பாகிவிடா. கதையின் வடிவம் ஒரு சொல்லிலோ ஒரு சொற்றொடரிலோ காற்புள்ளி, அரைப்புள்ளியிலோ தோன்றி நிற்கும். தோன்றிய பின்னர் அதுவே தானாக எல்லாவற்றையும் சேர்த்து முழுமையாக்கும் நகுலன் சொன்னது போல, ‘நான் எழுதி முடித்த பின்னரே என்ன எழுதினேன் என்பது தெரியவருகிறது’ என்பது உண்மை. கவிதையானது படைப்பிலக்கியத்தின் தலைச்சன் குழந்தை என்றால் மற்றவை அதன்பின் வந்தவை.’’

எளிமையும் பாpசோதனையும் கைகோர்த்துக் கொண்ட நவீனத் தன்மையில் புதுமைப்பித்தனுக்கு இணையாக உங்கள் கதைகள் மதிக்கப்படுகின்றன. இத்தகைய படைப்பாளுமை தொடக்ககாலத்திலேயே உங்களுக்கு எவ்வாறு சாத்தியப்பட்டது? மற்றொரு ஆச்சாpயமான கூறு, நவீனத் தன்மையோடு மரபு சார்ந்த விஷயங்களைத் திட்டமிட்டு முன்வைக்கிறீர்கள்?

‘‘கம்பனும் அதைத்தானே செய்தான்.

கருப்பெந்திரம் முதலாயன் கண்டாள் இடர் காணாள்

பொருப்பெந்திய தோளானொடு விளையாடினள் போனாள்.’

கரும்புச்சாறு பிழியும் இயந்திரம் பார்த்து விளையாடிக் கொண்டே சீதை போனாள் என்று எப்படிக் கூறுகிறான் பாருங்கள் திரேதா யுகத்து ராமன் கதையில் கருப்பேந்திரம் வருகிறது. கம்பனுக்கும் அது தெரியும். அவன் அதைப் பொருட்படுத்தவில்லை - நாமும் அப்படித்தான். உண்மையான படைப்பு அனுபவத்தில் காலம் என்பது இல்லை.’’

ஒரு தேசிய இனம் சார்ந்த வாழ்வியலைப் படைக்கும் போது,மரபுகளையும் இன வரை வியல் கூறுகளையும் தவிர்த்து விட்டு அல்லது முக்கியத்துவம் தராமல் தொட்டுக் கொண்டு எழுதுவது படைப்பாதுமா? எது உங்களை எழுத வைத்தது?

‘‘ஒரு காக்கையை இன்னொரு காக்கை பார்ப்பதுபோல நம்மால் பார்க்க முடியாது நம்முடைய பார்வை வேறு காக்கை சிறகினிலே என்று சொல்லிவிட்டு கண்ணபிரானிடம்தான் வந்து சேரமுடிகிறது. பார்வை படைப்பைப் பொறுத்த விஷயம். ஒரு கருத்தைச் சார்ந்ததாக இருக்காது. ஒரு விலங்கியல்வாpத நாய் ஒன்றைப் பார்க்கும் முறையில் படைப்பாளி பார்ப்பதில்லை. ஒரு எஜமானன் தனது நாயைப் பார்ப்பது போன்றும் அவன் நோக்குவதில்லை. ஒரு குழந்தை முதன்முறையாக நாயைப் பார்ப்பது போன்று அவன் பார்வை இருக்கும். சொல்லப்போனால் அவன் பார்க்கவில்லை - பார்த்தல் என்ற நிகழ்ச்சி அங்கு நடைபெறுகிறது. அதற்கு முன்னால் நாயை அவன் பார்த்திருக்க மாட்டானோ என்று நாம் எண்ணும் வகையில் அது இருக்கும். நாயை நம்மால் விளக்கிச் சொல்ல முடியாது. ‘கண்டறியாதனக் கண்டே;ன’ என்று கவிதை பாடிய நாவுக்கரசர், அதற்கு முன்னால் யானையைப் பார்த்ததில்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

அதை ஏன் சொல்ல வேண்டும் - இது மிகவும் அடிப்படையான கேள்வி தத்துவஞானி சார்த்தர் மூன்று கேள்விகளை எழுப்புகிறார். ஏன் எழுதுகிறான், என்ன எழுதுகிறான், யாருக்காக எழுதுகிறான் என்பன. இவற்றில் கடைசி கேள்வியான யாருக்காக எழுதுகிறான் என்பது கொஞ்சம் விவாதத்திற்குரியது. ஏன் எழுதுகிறான் என்பதைத்தான் இப்போது நீங்கள் கேட்கிறீர்கள். தன்னைப் பற்றிய நினைவோ, படைக்கிற படைப்பின் கதி பற்றிய நினைவோ இல்லாமல் தோன்றுவதுதான் உண்மையான படைப்பு இலக்கியம். எண்ணங்கள் சார்பாக இல்லாதபோதுதான் - ஏற்கெனவே தான்கொண்ட சிந்தனைகள் மேல் ஏற்றப்படாதபோதுதான், ஆபாசங்கள் அற்ற புனிதம் ஏற்படுகிறது. சாக்கடைகளும் காவிhpகளும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஆதவனும் நிலவும் அன்று வந்த அதிசயங்களாகத் தோன்றுகின்றன. உலகம் சோதிமயமாகத் தொpகிறது மங்கிக் கிடக்கிறது - மனிதன் மாறவே இல்லை - இத்தகைய கூற்றுகள் வெளிவர படைப்பாளி பெற்ற உணர்வுதான் காரணம்.’’

சமகாலத்தின் முக்கியமான சிறுகதை ஆசிhpயர் என்று உங்களை ‘இந்தியா டுடே’ கட்டுரையில்பிரபஞ்சன் குறிப்பிட்டுள்ளார். ஆனால் உங்கள் முதல் நூல் என்பது கட்டுரைத் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. அதுவும் கவிதை இயல்சார்ந்த மிக முக்கிய தரிசனமாக ‘பொருளின் பொருள்’ கட்டுரை அமைந்திருக்கிறது. முதலில் கட்டுரைத் தொகுப்பு வெளியானது ஏன்? கவிஞர்கள் நிறைந்த இலக்கிய உலகில் உங்கள் கட்டுரைத் தொகுப்புக்கு வரவேற்பு எப்படி இருந்தது?

‘‘என்னுடைய முதல் நூலாக பொருளின் பொருள்தான் வரவேண்டும் என்று விரும்பினேன். 1952-ல் முதல் கதை வெளிவந்தபோதும்கூட கவிதை பற்றிய நூலுக்கு முக்கியத்துவம் தர ஒரே ஒரு காரimage_4 ணம் மட்டுமே உள்ளது. என்னைப் பொறுத்த வரை படைப்பிலக்கியம் சம்பந்தப்பட்ட பல ஐயப்பர்டுகளுக்கு கவிதை அம்சமே நல்ல ஒருபதிலைத் தந்தது. ஒன்றை எதனால் கவிதை என்று சொல்கிறோமோ அதைப்பற்றி எண்ண ஆரம்பித்து விட்டால் மற்றவை பற்றிய - அதாவது சிறுகதை, நாவல், நாடகம் போன்றவற்றிற்கும் பதில் கிடைத்துவிடும்.

அந்தக் கட்டுரை நூலிற்கு சிறுபத்திhpகை வாசகரிடையே மிகுந்த வரவேற்பு இருக்கிறது. மூன்று பதிப்புகள் வெளியாகி உள்ளன.’’

நீங்கள் முன்னிறுத்தும் கவிதைக் கோட்பாடு என்பது எதனடிப்படையில் அமைந்தது? கவிதையியல் சார்ந்த நூல்கள் இங்கே அதிகம் எழுதப்படாததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? கவிதை குறித்து இத்தனை புரிதலும் சிலாகிப்பும்கொண்ட நீங்கள் கவிதைகள் எழுதியிருக்கிறீர்களா?

‘‘உண்மையோடு உறவுவைத்துக் கொள்ளாத எதுவும் படைப்பு ஆவதில்லை. கவிஞனின் படைப்பு உண்மையைத் தவிர வேறு எதையும் கொண்டதில்லை. கவிதையில் நோக்கம் என்ற ஒன்று இருந்திருந்தால் அது நிறைவேறியவுடன் அது இல்லாமல் போய்விடும். எடுத்துக்காட்டாக உலகில் பசிப்பிணி இல்லாத நிலை ஒன்று ஏற்பட்டு விட்டால், பொருளாதார சம்பந்தமான நூல்கள் அனைத்தும் வேண்டாதவை ஆகிவிடலாம். அந்த நிலையிலும்கூட, ‘இரந்தும் உயிர் வாழ்தல் வெண்டின் பரந்து கெடுக’ என்ற வள்ளுவனின் கவிதை ஒரு - கணம் நம்மை மவுனமாக்கிவிடும். இத்தனைக்கும் பசிப்பிணியைப் போக்க எந்த வழியையும் அந்தக் கவிதை சொல்லவில்லை. காரண காரியங்களோடு இருக்கும் எந்தப் பொருளும் நிலைப்பது கிடையாது. அன்பு என்று நாம் உணர்வதிலே நோக்கமோ எந்த வித காரண கார்pயங்களோ இல்லை.

கவிதையியல் சார்ந்த நூல்கள் இங்கே அதிகம் எழுதப்படவில்லை செய்யுள் மூலமாக எல்லாவற்றையும் எழுதிப் பர்க்கப்பட்ட ஆதிகால மொழிகளில் பின்நவீனத்துவ - மாந்திரீக எதார்த்தப் படைப்புகள் தமிழில் மட்டுமே இருக்கின்றன.

நான் கவிதை எழுதியது கிடையாது எழுதும் உத்தேசமும் இல்லை என்னால் எழுத முடியாது என்று சொன்னால் அதையும் ஒப்புக் கொள்ளலாம் கவிதை பற்றி எழுதுவற்கு கவிஞனாக இருக்க வேண்டும் மென்று சொல்லுவது வேடிக்கையாகிவிடும்.’’

உங்கள் படைப்புலகை முன்வைத்து ரவிசுப்ரமணியம் இயக்கியிருக்கும் டாக்குமென்டாpயில், ஆங்கிலப் படங்களை விரும்பிப் பார்ப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். உங்கள் படைப்பாளுமைக்கு ஆங்கிலப் படங்கள் எந்த வகையிலாவதுஉதவி இருக்கிறதா? சினிமா பற்றி எழுதியிருக்கிறீர்களா?

‘‘சிறு வயது முதற்கொண்டே ஆங்கிலப் படங்களை முடிந்த வரை பார்த்து வந்தேன். சொந்த கிராமத்திலிருந்து பத்து மைல் நடக்க வேண்டியிருக்கும் உலக இலக்கியம் பற்றி அறிந்து கொள்ள இப்படங்கள். பெருமளவில் உதவி இருக்கின்றன. கிராமங்களில் புத்தகங்கள் கிடைப்பது அhpது. சிலசமயம் படங்கள் பார்த்த பின்னரே அந்தப் புத்தகங்களைப் படிக்கும் நிலை ஏற்படும். டிக்கன் ‘இரு நகரக் கதை’, பெர்ல்பக் ‘நல்ல நிலம்’ போன்றவை அப்படித்தான் பார்க்கப்பட்டன. படிப்பதற்கும் பார்ப்பதற்கும் ஆங்கிலப் படங்களைப் பொறுத்தவரை சிறிதளவு வித்தியாசமே தொpந்தது. எல்லாவற்றாலும் பாதிக்கப்பட்டுத்தான் நாம் இருக்கிறோம். பிறகு சொன்னை வந்து புத்தகங்கள் படிப்பதும் படங்கள் பார்ப்பதும் எளிதான பின்னர், அவைபற்றி ‘சினிமா கதிர்’ பத்திhpகையில் எழுதி உள்ளேன். சில குறிப்பிட்ட இயக்குனர்கள் (வில்லியம் வைலர், ஸ்டான்லி கிராமர் போன்றோர்), சில குறிப்பிட்ட நடிகர்கள் (பிராண்டோ, ஜேம்ஸ்டீன்), சில இலக்கிய கர்;தாக்களின் படங்கள் (‘ஹெமிங்வே’, ‘டிக்கன்ஸ், ‘டென்னஸி வில்லியம்ஸ்’) பற்றியும் எழுதி இருந்தேன். ஆனால் அதைத் தொடரவில்லை.’’

அதே டாக்குமென்டாpயில் நவீனப் பெண் கவிஞர்களில் பலர் ஆபாசமாக எழுதுவதை ஆதரித்துக் கருத்து தெரிவித்துள்ளீர்களே?

‘‘பெண் கவிஞர்கள் என்று சொல்வதுகூட தவறு. ஆபாசம் எது என்பது பற்றித்தான் பேசினேன். எழுத்தில் அல்லது படைப்பிலக்கியத்தில் ஆபாசம் தேவையா, தேவையில்லையா என்று அல்ல. உலக எழுத்துக்களில் தொண்ணூறு சதவிகிதம் ஆபாசம்தான். அவற்றைக் கொளுத்தலாம். ஆனால் எது ஆபாசம்?

டால்ஸ்டாய் மகாத்மா காந்தியின் கரு போன்றவர் அவருடைய ‘அன்னா கரினீனா’ நாவலில் அந்த அன்னாவும், விரான்சியும் நடந்து கொள்வது பாலியல் நெறிமுறைக்கு எதிரானது என்பதை எல்லாரும் அறிவர். ஆனால் அந்த அன்னாவை நினைத்தால் வருத்தமல்லவா ஏற்படுகிறது? டால்ஸ்டாய் துஸரத்தில் வாழ்ந்தவர். நம்மிடையே இருக்கும் அசோகமித்திரனின் ‘மணல்’ என்கிற கதையை எடுத்துக்கொள்ளுங்கள். அதிலே அந்தப் பெண்மிகுந்த மனப் போராட்டத்திற்குப் பின்னர் அந்தப் பூங்காவை நோக்கி நடக்கத் தொடங்குகிறாள் என்று கதையை முடிக்கிறார். எதற்காகப் போகிறாள் என்று அவர் சொல்லவில்லை. கதையின் தொனி தெளிவுபடுத்துகிறது. அது பாலியல் நெறிமுறைக்கு இழுக்கு தரும்’ விஷயம்தான். ஆனால் அந்தப் பெண்ணை நினைத்தால் கண்ணீரல்லவா வருகிறது. ஆபாசத்தில் கண்ணீர் வருமா?

கவிதையில் நவீனம், சங்க காலம் என்றெல்லாம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. கவிதை அம்சம்தான் அதன் தலையாய விதி. பின்நவீனத்துவம் என்றும்; மாந்திhPக எதார்த்தம் என்றும் வேறு பல பெயர்களாலும் அழைக்கப்படுகிற படைப்பில் கவிதை அம்சம் இருந்தால் அது கவிதை தான். பாரதத்தில் பாஞ்சாலி, சபை முன்னிலையில் துகில் உhpயப்பட்டபோது, அது துச்சாதனன் மீது கோபத்தைக் கிளறிற்றே தவிர ஆபாசம் தொனிக்கவில்லை. நளாயினி என்ற பத்தினிப் பெண் தனது கற்பினால் சூhpயனையே உதிக்காமல் செய்துவிட்டு, வரம்வாங்கி, கணவன் குஷ்டரோகம் நீங்கிய பின்னர் ஐந்து மிருகங்களாக உருமாறி தம்பதிகளாக வாழ்ந்து, அடுத்த ஜென்மத்தில் பாஞ்சாலியாகப் பிறந்து ஐந்து கணவர்களை அடைந்தது பற்றிக் கூற வேண்டுமானால், முன்னதுஅதாவது சூரியனையே உதிக்காமல் செய்தது ஒரு வைதீக நோக்கு இரண்டாவது ஐந்து மிருகங்களாக மாறியது பற்றிச் சொல்வது, அந்தக் காலத்தின் அந்த படைப்பாளி மறைமுகமாக வெளிப்படுத்திய ஒரு பெண்ணின் மவுனமான எதிர்ப்புக் குரல் என்று சொல்ல வேண்டும். பெண்ணின் எதிர்ப்புக் குரல் ஆபாசமா? நால் வருணம் அவசியம் என்பதை நேரடியாகவும் மறைமுகமாகவும் தோன்றச் செய்யும் எழுத்துக்கள் ஆபாசமா இல்லையா? ஆபாசம் என்றால் என்ன? உண்மை அல்லாதது எல்லாமே ஆபாசம். இதுதான் சாp என்று நான் நம்புகிறேன்.’’

தமிழ்க்கவிதைப் பரப்பில் பாரதிக்குப் பிறகு, எழுத்து பாணிக் கவிதைகள், எழுத்துக்குப் பிறகானநவீனபாணிக் கவிதைகள்,இப்போது பெண்மொழிக் கவிதைகள், ஈழ மற்றும் புகலிடக் கவிதைகள் என்று பகுக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கவிதைகளில் எதை நீங்கள் முன் நிறுத்துகிறீர்கள்?

‘‘கவிதைகள் எழுதப்பட்ட பிற்பாடு ஒரு வசதிக்காக இதுபோல பகுத்துக் கொள்ளலாம். கவிதை அம்சம் கொண்ட எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.’’

இனி உங்கள் கதைகளுக்கு வருவோம்... நீங்கள் குறிப்பிடும் வைதீக எதிர்ப்பு என்பது உங்கள் படைப்பில் அதிகமிருக்கும் அதே நேரம், சைவ சமயத்தை முன்னிறுத்தும் ஒரு தன்மையும் இருக்கிறது. ஒரு படைப்பாளிக்கு மதம் சார்ந்த பற்று அவசியமா?

‘‘ஒரு சித்தாந்தம் பின்னர் சைவ சமயம் என்ற பெயரால் தன்னை முன்னிறுத்தி இருக்கலாம். பின்னர் அதில் வைதீகமும் கலந்து இருக்கலாம். ஆனால் நான் குறிப்பிடும் அந்த சித்தாந்தம் வைதீக மதம் சார்ந்தது அல்ல. ஒரு குளிப்பிட்ட நிகழ்ச்சி பற்றி எழுதும்போது பின்புலமாக இருக்கும் சிலவற்றைச் சொல்லத்தான் வேண்டும். இந்த தென்னாட்ழற்கே உhpய சிலவற்றிலும் வைதீக சாயல், தொpகிறது. அதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.’’

உங்கள் மொத்த கதை உலகமும் முது;துக்கருப்பன் என்ற பாத்திரம் வழியே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தகைய குறியீட்டுத் தன்மை தரும்தாக்கம் ஆழமானதாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்திற்கு முத்துக்கருப்பனைக் குறியீடாகக் கொள்ள முடியுமா? தமிழன் தனது எல்லா அடையாளங்களையும் துறந்து வரும் நிலையில், முத்துக்கருப்பனும் கட்டுடைந்து போகிறான் இல்லையா?

‘‘கட்டுடைந்து போதல் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும். மனிதனின் வீழ்ச்சியை முத்துக்கருப்பனின் வீழ்ச்சியாகவும் எடுத்துக்கொள்ளலாம். எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதே முத்துக்கருப்பனை இன்றைய காலகட்டத்திற்குக் குறியீடாகக் கொள்ள முடியும் என்பதால்தான்.’’

சமீபத்தில் வெளிவந்திருக்கும் ’காளியூட்டு’ நாவல் சுதந்திரப் போராட்டத்தைப் image_8 பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது... இத்தனை தாமதமாக அச்சுக்கு வந்தது ஏன்?

‘‘குறிப்பிட்ட எந்த காரணமும் இல்லை. பாதி எழுதி, பின்னர் சில ஆண்டுகள் கழித்து தொடர்ந்து எழுதி முடித்தேன்.’’

தமிழில் விமர்சகர்கள் குறைவாக இருப்பதன் பின்னணி என்ன?

‘‘பூர்வகால மொழிகள் எல்லாவற்றிற்குமே இம்மாதிரிப்பட்ட குறைகள் உண்டு. நவீனத்தில் சீக்கிரமாக உள்புகுந்துவிட முடியாது.’’

முன்றில்’ சிற்றிதழை நீங்கள் ஆரம்பித்த பின்னணி என்ன? அதன் பங்களிப்பாக நீங்கள் கருதியது என்ன? உங்களது இலக்கிய நண்பர்கள் என்று யாரையெல்லாம் சொல்வீர்கள்?

‘‘ஐம்பதுகளின் ஆரம்பத்திலேயே நான் சென்னை வந்து விட்டபோதிலும் இலக்கிய நண்பர்கள் என்று யாரும் இல்லை. புதுமைப்பித்தன், கு.ப.ரா. போன்றோhpன் படைப்புகளைப் பதினைந்து வயதிலேயே படித்துக் கொண்டிருந்த போதிலும், சென்னை வந்த பின்னர் க.நா.சு.வைக்கூட சந்திக்கவில்லை. பள்ளியில் படிக்கும்போது நம்பி என்கிற கிருஷ்ண நம்பி ஒருவனைத்தான் சொல்ல முடியும். சென்னையில் பெரிய நூல் நிலையங்கள் எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. அப்போது ‘பிரசண்ட விகடன்’, ‘பொன்னி’, ‘கலைமன்றம்’, ‘சினிமா கதிர்’, ’புதுமை ஆகிய பத்திhpகைகளில் முடிந்த வரை எழுதிவந்தேன். அலுவலக நண்பர்கள் அதிகமில்லை. திரு பக்தவத்சலம் என்னும் நண்பர் ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றச் செயலாளராக இருந்தார். என் அலுவலக நண்பரும் கூட கவிதை பற்றி நான் சொன்ன சில விஷயங்களைப் பட்டிமன்றத்தில் பேசலாமே என்று கூறினார். நான் தயங்க, முதலில் கட்டுரையாக எழுதிப் படிக்கலாம் என்று வற்புறுத்தினார். என்னுடைய முதல் மேடைப்பேச்சு அங்கேதான். அந்தக் கட்டுரைக்கு எதிர்ப்பு ஒன்றும் இல்லை. எனவே தொடர்ந்து இலக்கியக் கட்டுரைகளை அங்கே படித்தேன். அந்தக் கட்டுரைகளையே சிறிது விரிவாக எழுதி ‘பொருளின் பொருள் என்ற நூலாக நண்பர்களின் உதவியோடு வெளியிட்டேன் அதற்கு சிறுபத்திரிகை வாசகர்களிடம் வரவேற்பு இருந்தது. இந்தப் புத்தகத்தைப் ற்றி ஒரு விமர்சனக் கூட்டமும் நடந்தது. அதிலே அசோகமித்திரன், ஞானக்கூத்தன், சா.கந்தசாமி, ஆத்மநாம், இராசகோபால், கலைஞன் மாசிலாமணி போன்றோர் கலந்து கொண்டனர். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் இவர்களில் யாருக்குமே என்னைப் பற்றித் தொpயாது. பின்னர் க.நா.சு. அவர்களும் சென்னைவந்து அந்த புத்தகத்தைப்பற்றி பேசினார். அந்த சமயத்தில் என்னுடைய சிறுகதைகள் நிறைய வெளிவந்து ‘வீடுபேறு’ என்ற தலைப்பில் தொகுதியாகவும் வெளிவந்தது. க.நா.சு. சென்னையிலேயே நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்தபடியால், சிறுபத்திரிக்கை ஒன்று ஆரம்பிக்கலாம் என்று அப்போது நண்பர்கள் ஆர்வமூட்ட, ‘முன்றில்’ ஆரம்பிக்கப்பட்டது. சிறப்பாசிரியராக க.நா.சு. இருந்தார். அசோகமித்திரன், சா. கந்தசாமி, ஞானக்கூத்தன் ஆகியோரும் நகுலன், வல்லிக்கண்ணன் போன்றோரும் தொடர்ந்து எழுதினர். இருபது இதழ்கள் வரை வந்தது. எதையும் எதிர்பார்க்காதபடியால் எந்த ஏமாற்றமும் இல்லை. ‘முன்றில்’ சிறுபத்திரிகையோடு ‘முன்றில்’ பதிப்பகத்தையும் தொடங்கி சில புத்தகங்களை வெளியிட்டோம். புதிய எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று ‘முன்றில்’ அறிமுகப்படுத்தி இருக்கிறது.

தொண்ணூறுகளில் ‘முன்றில்’ கருத்தரங்கு சென்னையில் மூன்று நாட்கள் நடந்தது. கிட்டத்தட்ட எல்லா எழுத்தாளர்களும் கலந்து கொண்டனர். பக்கத்து மாநிலங்களிலிருந்தும் வந்திருந்தனர். கவிஞர் பழமலய், நாகார்ஜூனன், சாரு நிவேதிதா, பன்னீர் செல்வம், எஸ் இராமகிருஷ்ணன், கோணங்கி, கோவை ஞானி ஆகியோருடன் காசியபன், லாச.ரா. போன்றோரும் வந்து உரையாற்றினர். இந்த கருத்தரங்கு பற்றி ஒரு தொகுப்பு நூலும் வந்தது. இதை முக்கியமாகச் சொல்ல வேண்டும்.

தருமு சிவராமு என்னும் பிரமிள் தனது கடைசி காலத்தில் ‘முன்றி’லில் எழுதினார். அவருக்கு வேண்டாதவர் யாரோ, அவர்கள் கட்டுரைகளைப் பிரசுhpத்து விட்டால் போதும் - மன்னன் கொபத்தில் நிலை கொள்ளாமல் தவிப்பார். ஆனால் மிகச் சிறந்த கவிஞர்.

‘முன்றி’வில் புதிதாக எழுதத் தொடங்கிய சிலர் பின்னால் தீவிர எழுத்தாளர்களாக ஆயினர். அவர்களில் பா. வெங்கடேசன் ஒருவர். இன்னொரு விஷயம் ‘முன்றி’லில் எழுதியவர்கள் எதையும் - அதாவது பணம் எதையும் எதிர்பார்த்தது கிடையாது. ‘முன்றில்’ வெளியீடுகளான சில புத்தகங்களைத் தந்ததுண்டு.

வல்லிக்கண்ணன், நகுலன், மீரா ஆகியோர் வருவதுண்டு. தி.க.சி. அடிக்கடி வருவார் கருத்தரங்கு தவிர இலக்கிய கூட்டங்களையும் மாதம்தோறும் பல்வேறு இடங்களில் ‘முன்றில்’ நடத்;தியது. க.நா.சு. இருக்கும்போதும் உலக இலக்கியங்கள் பற்றிக் கூட்டங்கள் நடந்தன. அவர் மறைவிற்குப் பின்னும் பல கூட்டங்கள் அசோகமித்திரன், இராஜதுரை, பேராசிரியர். பஞ்சாஙகம் போன்றோருடன் நடந்தன. இதையெல்லாம் ‘முன்றில்’ பங்களிப்பாகச் சொல்லலாம்.

சிறந்த எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் பக்கத்திலேயே இருந்தபடியால் அவருடைய உதவிகள் - அவர் காலமாவது வரை கிடைத்தது. ஆதிமூலத்தின் பங்கை குறிப்பாகச் சொல்ல வேண்டும். எழுத்தாளர்கள் லதா இராம கிருஷ்ணன், அமரந்தா, க்ருஷா;கினி, பெருந்தேவி ஆகியோரும் உதவினர்.

இஞ்சி காய்ந்து சுக்கான ஒரு கவிஞன் வந்து பெற வேண்டியதைப் பெற்றுச் சென்றது உண்டு.’’

இன்றைய இலக்கிய உலகம் என்பது, பெரும்பான்மையானவர்கள்,தங்களுடைய படைப்புகளை அல்லது புத்தகங்களை வியாபார ரீதியாக வெற்றிபெறச் செய்யும் விற்பனைப் பிரதிநிதிகளாகச் செயல்படும் அவலநிலையில் கவிழ்ந்து கிடக்கிறது. ஆனால்தகுதியும் எழுத்தில் சாதனையும் இருந்தும், குறைந்த பட்சமாக உங்களை முன்னிறுத்திக் கொள்வதில் கூட எத்தனம் எதுவும் இல்லாமல் அதைp காக்கிறீர்கள். ஆரவாரமான இலக்கிய உலகில் உங்களின் இந்தக் குணம் ஆச்சரியமூட்டுகிறது... உங்களின் கூச்ச சுபாவம்தான் இதற்குக் காரணமா?

‘‘மேடைக் கூச்சம் இருந்தது. இப்போது இல்லை. எழுபது வயதிற்குமேல் என்ன கூச்சம் வேண்டிக் கிடக்கிறது. என்னைவிட சிறந்தவர்கள் என்னளவு வசதிகூட இல்லாமல் இருப்பதை நினைக்கும்போது வேறு எந்த எதிர்பார்ப்பும் வேண்டியதில்லை; ஏமாற்றமும் இல்லை.’’

எந்தப் படைப்பாளியிடமும் காணப்படாத - கேள்விப்படாத ஒரு விஷயம் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன்... உங்களுக்கு ஜோதிடத்தில் ஈடுபாடு உண்டாமே... நிஜம்தானா? இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?

‘‘கன்னிமாராவில் வேண்டிய புத்தகங்கள் கிடைக்காதபோது, கிடைத்த சிலவகைப்பட்ட புத்தகங்களில் ஒன்று ஜோதிடம் அங்கே இருக்கிற ஜோதிடப் புத்தகங்கள் முழுவதும் ஆங்கிலம் படித்து முடிக்கப் பெற்றன. உடனடியாக ஒன்று தொpந்தது. வேண்டுமென்றே தமிழில் அவசியமில்லாத வார்த்தைகளைப் போட்டு நம்மைக் குழப்பியிருக்கிறார்கள். ஆங்கிலம் எளிமையாக இருந்தது. காலண்டர் இல்லாத காலத்தில் பஞ்சாங்கம்தான் அந்த வேலையைச் செய்தது. ஜோதிடத்தில் தொண்ணூறு சதவிகிதம் வானசாஸ்திரமும், மனோதத்துவ ரீதியில் மனித மனம் போகிற போக்கில் ஒவ்டிவாரு கிரகத்தின் பலன்களையும் எழுதி வைத்துள்ளனர். இதைப் பற்றி விரிவாக எழுதினால் ஒரு புத்தக அளவிற்கு வரும்.

கலைஞன் மாசிலாமணி அவர்கள் பட்டண வாழ்க்கையை விhpவான அளவில் ஒரு நாவல் உருவத்தில் கொண்டுவர முடியுமா என்று கேட்டிருக்கிறார். முடியுமா என்று பார்க்க வேண்டும்.’’

 

நன்றி: மா. அரங்கநாதன் தளம்

Feb 4, 2013

மைத்ரேயி - ஸில்வியா

பொய்சொல்லியாகிய நீ மைத்ரேயியை உன் கட்டுரையில் சாகக்கிடத்தியபோது மழை பிடித்துக்கொண்டது. சித்தப்பிரமையின்பாற்பட்ட அந்த மழை விடாமல் பெய்துகொண்டே இருந்ததை  ஏதேனும் சங்கேத மொழியில் பதிவு செய்ய நீ முடிவு செய்தாய். அரசாங்க அதிகாரிகள், நாய்கள், குடும்பிகள், மந்திரவாதிகள், தேசங்கள், கொரில்லாக்குரங்குகள், பெண்கள், இலக்கிய ஆசிரியர்கள், காமுகர்கள், குற்றவாளிகள், பாம்புகள், தத்துவ அறிஞர்கள், பேய்கள், ஆயுத வியாபாரிகள், அரசியல்வாதிகள், செருப்பு நக்கிகள், உளவியல் அறிஞர்கள், ஆகியோர் விளையாடும் விளையாட்டுக்களைப் பற்றிய கட்டுரை எழுதுமாறு நீ பணிக்கப்பட்டிருந்தாய். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் ஒரே காரணத்தினாலேயே எந்த நேரமும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படலாம் என்ற சமூகச் சூழலில், வரலாற்றின் அவல காலகட்டத்தில், உmdm6 ன் மனநோய் மருத்துவன் அரசாங்க முத்திரை பதித்த பழுப்பு நிற உறையினுள் கட்டுரை எழுதுவதற்கான ஆணையைக்கொண்டு வந்தபோது உன் அறை ஜன்னலில் உட்கார்ந்து மழை வருகிறதா என்று வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த நீ பயந்து போனாய். உன் நரம்புகளனைத்தும் மின்சாரம் தாக்கியவை போலத் துடிக்க சாவு மின் தூசுகளாய் உன் கண் முன்னால் ஓடி மறைந்தது. காற்றில் முளைத்த பொய்கள் வாழ்வின் ஆதாரங்களாய் உன் நாவைத் தழுவிக்கொண்டன. வார்த்தைகள் வீசி மின் கம்பிக்கூண்டுகளைத் தயாரித்து அதனுள்ளே கவலையின்றி வாழலாம் என்று நீ அந்தக் கணத்தில் அறிந்துகொண்டாய். அதே கணத்தில்தான் மழைக்கான அறிகுறிகளும் தென்படலாயின. நாகமும் கட்டுவிரியனும் விஷம் கக்குவதை மறந்து, வால் நுனிகளில் நின்று, தாபப்பெருமூச்சுக்களுடன் தங்கள் வழவழத்த அடிப்பாகங்கள் தழையத் தழையக் கூடும்போது அப்பாம்புகளின் கண்களில் பட்டுத் தெறித்த  பௌர்ணமி நிலவின் ஒளிக்கிரணங்களாலான உடலோடு முழுப்பெண்ணாய் மைத்ரேயி உன் கண்களின் முன் தோன்றியதும் அக்கணத்தில்தான். உன் கவிதை வரிகளாலான ஏழு பால்வீதிகளுக்கு அப்பால் இருந்து ஒளித்துகளாய் அரை நொடியில் வந்து நீண்ட பொன்னிறக் கூந்தல் காட்டுக்குதிரையின் வெல்வெட்டுத் தினவுடன் திகழ்ந்த பிசிறில்லாத வட்ட வடிவப் பிருஷ்டங்களின் மேலும், பின்னந்தொடைகளின் மேலும் அளைய அளைய, நீல நிற மணற்பரப்பில் அஸ்தமனச் சூரியனை நோக்கி நிர்வாணமாய் சென்றுகொண்டிருந்ததையும் நீ அப்போதுதான் பார்த்தாய். உன் நாபிக்குக் கீழிருந்து தோண்டி எடுத்த எழுத்துக்களை நாவில் கூட்டி “மைத்ரேயீ”, “மைத்ரேயீ” என்று அலறி மயங்கிச் சரிந்தாய். நீ மீண்டும் விழித்தது உன் விளையாட்டு பற்றிய கட்டுரையின் மையப் பகுதியில்தான். அப்போது மைத்ரேயி உன் தாபக் கூச்சலை கேட்டவள் போலவும் கேட்காதவள் போலவும் நின்று, கால்களை அகட்டித் தலையை இடது கால் பெருவிரலை நோக்கிக் கவிழ்த்து கால்களின் இடைவெளியூடே உன்னைப் பார்த்தாள். அஸ்தமனச் சூரிய கிரணங்கள் அவள் யோனியில் பட்டு செந்நிறமாய்ப் பிரகாசித்ததில் அவள் முகம் மறைந்துபோக அவள் முகம் தெரியாத விரகம் தாளமுடியாதவனாய் நாய்களின் விளையாட்டு பற்றிய பகுதியை எழுத ஆரம்பித்தாய். வெறி நாய்களைப் பற்றியும் சொறி நாய்களைப் பற்றியும் விவரித்தபோது உன் மொழி தானாகவே உலகக்கொலை ஆயுத வியாபாரிகளின் உடல்களையும் உருவங்களையும் பற்றி பேச ஆரம்பிக்க அருவெறுப்பு தாளமாட்டாமல் ஆசுவாசம் தேடி, அமைதியையும் அறத்தையும் உலகுக்கு மீண்டும் கொண்டுவரப்போகின்ற மைத்ரேய புத்தனைப் பற்றிச் சிந்தித்தாய். மழைக்கு முந்தைய குளிர்காற்று வீசத் துவங்கும் வரை மைத்ரேய புத்தன் பெண்ணாய் இருக்கக்கூடுமென்ற யூகம் கூட உனக்கு இல்லை. முதலில் மழைக்கு முன் வீசுகின்ற இந்த குளிர் காற்றே உனக்குப் புதிது. நீ பிறந்து வளர்ந்த பிரதேசத்தில் மழை ஏழு கோடி வருடங்களுக்கு ஒரு முறையே பெய்யும். அப்படிப் பெய்வதற்கு முன் பாதிப் புணர்ச்சியில் பிரிக்கப்பட்ட உடல்களாய் பூமி வெக்கையை அள்ளி வீசி மனிதர்களின் மூத்திரத்தைக் கடுக்கச் செய்து வியர்வையாய் வழிவதை அனல் நாக்கினால் நக்கும். பொய்க்கின்ற மழையோ தெருவோரங்களில் காய்ந்து கிடக்கும் மலத்தினை கரைத்து எழுகின்ற நாற்றத்தோடு நாற்றமாய் சுவாசப்பைகளில் நிறைத்துவிடும். போன தடவை உனக்கு மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்டபோது உன் சொந்த ஊரில் எல்லோரும் மல நாற்றம் அனுபவித்தார்கள்.

இங்கே மழை வித்தியாசமானதுதான். வைத்தியசாலை மனோகரமான இடத்திலமைய வேண்டும் என்பதற்காக இங்கே மைத்திருக்கிறார்கள் போலும். சிறு நீல மலர் ஒன்றைத் தோட்டத்தில் உன்னிப்பாய் நீ பார்த்து நிற்கையில் அதன் நிறம் ஆகாசமாய் வெளியாய் மணலாய் விகசிக்க, குளிர் காற்று முலை முலையாய் வீசியது. கோடிக்கணக்கான பால் ததும்பும் முலைக்காம்புகள் உன் உடல் முழுவதும் ஈரப்பத வெம்மையுடன் உராய நீ மழைக்காக ஆயத்தமானாய். பின்னர் தோட்டத்திலிருந்து உன்னை உள்ளே இழுத்துச் செல்ல உன் எலும்பின் குருத்துக்கள் பொசுங்குமாறு சூடுபோட வேண்டியிருந்தது. ஒரு பெருங்கூட்டமே உன்னை இழுத்துச் சென்று அறையில் அடைத்தது. உன் சதை பொசுங்கிய நாற்றம் விளைவித்த பிரம்மையில் பெய்யாத மழையின் கூரைச் சத்தம் கேட்டு உன் வலது கரத்தில் நரம்பு வெடித்து ரத்தம் வழிந்தது.  உன் வலி ஆற்ற மைத்ரேயி வந்தாள்.  உன் அறையின் கூரை மேல் நோக்கி திறக்க உலோக மத்தளத்தில் வாசிக்கப்பட்ட கொடூர இசையாய்  வார்த்தைகள் உன் கட்டுரையில் கொட்டியதும் அப்போதுதான் போலும். வார்த்தைகளைக் கூட்டுவதற்கும், ஊதிப்பெருக்குவதற்கும், அச்சுக்கோர்ப்பதற்கும், காற்றில் ஓதுவதற்கும், விளையாடுவதற்கும் இவ்வளவு பெரிய தண்டனையைத் தருவார்கள் என்று யாரும் உனக்குச் சொல்லவில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் வலியை வார்த்தைகளில் முழுங்குவதைத் தவிர வேறெந்த உபாயமும் உனக்குத் தெரியாதே  தெரியாதே மைத்ரேயி தெரியாதே. ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுரைக்குள்ளாக ஓடும் ஒழுங்கமைக்க இயலாத வலியின் கவிதைக் கீற்று உன் அந்தரங்கமல்லவா? அதை எப்படி வெளிச் சொல்வாய்? வலி ஆற்ற வந்தவள் இசைச் சொற்களாய் உன் நரம்பு மண்டலம் முழுவதும் வியாபிக்க அவளின் ஒற்றை விரலசைவில் உன் உடல் முழுவதும் அதிர்ந்தது.

உன் சமிக்ஞைகளுள் சிறந்தவற்றை எல்லாம் உன் லிங்க முனையில் கூட்டி ஆறாத தவிப்புடன் காத்து நின்றாய். காத்து நிற்க வைக்கப்பட்டாய். பரிதவிப்பின் வெறி குத்திட்டு நின்ற லிங்க முனையில் கனன்றபோது கோடிக்கணக்கான வார்த்தைகள் தங்களின் வலி விவரிக்க இயலாத நபும்சகம் உணர்ந்து உலகிலுள்ள அத்தனை நூலகங்களிலிருந்தும் வான் நோக்கி கிளம்பி, புவி ஈர்ப்பு மறந்து, தங்களுக்குள் சண்டையிட்டு ரத்த களறியாக்கி, பிரபஞ்சத்தின் இருள் மூலை தேடி இயற்கை எய்தின. கோடிக்கணக்கான மக்களின் நாவசைவுகளுக்கும் அதே கதிதான். மொழிகளற்று விழித்த பொருளுலகு எங்கும் வியாபித்தபோது உனக்கு மிஞ்சியது உன் லிங்க முனை வீர்யம் மட்டுமே. அப்போது இப்போது எப்போது என்ற பேதம் மறந்தாய். எல்லாம் முன் கூட்டியே சங்கல்பித்து ஒரே கணத்தில் சங்கமமாக கணமே யுகமாய் நீளுவதாய் இருந்தது. எல்லாம் அப்படியே இருந்தது எல்லாம் அப்படியே இருந்தது எல்லாம் அப்படியே இருந்தது எல்லாம் அப்படியே இருந்தது எல்லாம் அப்படியே இருந்தது எல்லாம் அப்படியே இருந்தது எல்லாமே அப்படியே இருந்தது எல்லாம் அப்படியே இருந்தது எல்லாம் அப்படியே இருந்தது. என் மொழியை மட்டுமாவது எனக்குக் கொடுத்துவிடேன் என் மொழியை மட்டுமாவது எனக்குக் கொடுத்துவிடேன் என்று அரற்றினாய்.  உயிரின் ஊற்று விறைப்பில் அடங்கி நிற்க முடியாத தாபத்தில் மைத்ரேயியின் யோனிக்கசிவின் மணம் அறைக்காற்றில் பாறாங்கல்லாய் உறைந்து நிற்பதாய் பிரம்மை கொண்டாய். உன் மனத்தின் அந்தகார இருள் சுவாச இழைகளாய் வெளிப்பட்டு கல்லில் பட்டு மோதி கிளப்பிய வெப்பத்தில் அதிகாரிகளின் விரைகள் வெந்து சாம்பலாயின. எஞ்சிய வெப்பம் மேகங்களின் மோதல்களில் மின்னல்களாயிற்று. காலபேதமற்ற சிந்தனையின் துகள்கள் உன்னிலிருந்து சுருள் சுருளாய் சிதைவுற்ற சுருள்களாய் பல திக்குகள் நோக்கியும் வெளிப்பட உன் கட்டுரையில் நீ தடுக்கி விழுந்தாய். சரிதான் சரிதான் உன் கட்டுரையில் நீ தடுக்கி விழுந்தாய். கிடைத்தது வாய்ப்பு என்று உன்னை இழுத்துச் சென்றார்கள் தற்கொலையா கொலையா என்ற சூழலில் கொலையைத் தேர்ந்தெடுக்கக்கூடிய விளையாட்டு வீரன் நீ இல்லையா இல்லையா என்று கேட்டுக்கொண்டே உன்னை இழுத்துச் சென்றார்கள். துன்புறுத்துவதில் இன்பமா துன்புறுவதில் இன்பமா எங்கே சொல் சொல் பார்க்கலாம் என்றார்கள். இரண்டுமற்றது என் மொழி இரண்டுமற்றது என் ஜீவிதம் என்று நீ கதறக் கதற உன்னை இழுத்துச் சென்றார்கள். அவர்களுக்கு பிறரின் மூளை வழி எழுதும் தாந்தரீகம் இயல்பாகக் கைவந்தது. தங்களின் இருள் மயக்கச் சுருள் சிதைவுப் பாதைகளில் சதைத் திசுக்கள் பாகாய் உருகிவழியக் காணாமல் போனவர் பலர் என கலகலத்து தங்களுக்குள் கதை பேசினர். உலகின் நிர்மாணங்களை உருவாக்கியவர்களின் முகங்கள் அவர்களுக்கு இருந்தன. கட்டுரையில் தடுக்கி விழுந்தாயா என்று நகைத்தார்கள். மனித உயிரின் பெருக்கத்தை அறுதி செய்ய வந்த கடைசீக் கொழுந்தா நீ என்று பற்களை நறநறத்தார்கள். பாவாடையைத் தொடைகளுக்கு மேல் ஏற்றிவிட்டுக் கொண்டு ஓடிய கார்மெனிடம் உன் சமிக்ஞைகள் பத்திரமாய் இருப்பதாய் நீ சமாதானமாய் இருந்தாய். யாவரும் சமாதானமாயிருங்கள் என மெல்லிய குரலில் சொல்லிப்பார்த்தாய். கட்டுரையில் நீ சமாளித்து நின்ற வரி உன்னை இந்த மனநோய் மருத்துவமனையில் கண்டது.

இந்த மருத்துவமனையோ, மாற்றங்களற்ற தமிழ்ச் சமூகமோ, நண்பர்களற்ற கொடூரத் தனிமையோ, பாலுறவு மறுக்கப்பட்ட இறுக்கமான சூழ்நிலையோ உன்னைத் தற்கொலைக்கோ கொலைக்கோ தூண்டமுடியாது என்பதில் உறுதியானவனாய் இருந்தாய். உன் உடலின் தளர்ச்சியில் மேற்சொன்னவற்றின் சுவடுகள் பதியவிடாத அறமொழியை கண்டுபிடிப்பாய். அந்த அறியப்படாத மொழித் தளமல்லவா மைத்ரேயி? மொழியுடனும் மொழியற்றும் உள்ள புள்ளியிலிருந்து நீளும் தளத்தில் மொழி பற்றிய மொழி பற்றிய மொழி பற்றிய மொழி பற்றிய மொழி பற்றிய மொழி பற்றிய மொழியில் எழுதப்பட்ட காதல் யதார்த்தத்தின் சிடுக்குகளை உடைக்க எழும்பும் அழகின் உண்மை உயிரை எப்போதும் எப்படியும் காப்பாற்றும். கார்மெனைப் போல தூய்மையற்றவள் மைத்ரேயி என்றார்கள். கார்மெனைப் போல கற்பனையானவள் மைத்ரேயி என்றார்கள். கார்மெனைப் போல மைத்ரேயியையும் நீ கடைசியில் கொல்ல நேரிடும் என்றார்கள். மைத்ரேயி ஒரு அருவமே என்று சூளுரைத்தார்கள்.  அப்போது நீ மைத்ரேயியின் இதழ்களில் உன் நாவினால் துழாவி முத்தமிட்டாய். அவள் உன் நெற்றியில் விழுந்த சுருள் முடிகளை நுனிவிரல்களினால் நீக்கி டான் ஜுவான் டான் ஜுவான் என்று தாபத்துடன் முணு முணுக்க உன் நகம் அவள் நாபியில் மெலிதாகக் கீறியதால் வெறிகொண்டு மேலெழும்பி ஆக்கிரமித்தாள். மொழி பற்றிய மொழி விளையாட்டாய் உன் கட்டுரை இருக்கவே அவர்கள் குழம்பிப்போனார்கள். குறைந்தபட்ச முயற்சியிலேயே பலரின் அஸ்திவாரங்கள் விழுந்துவிடுவதைக் கண்டு நீ நகைத்தாய். மண்ணில் தூறல்கள் விழ ஆரம்பித்தன. பூக்காத மரங்களெல்லாம் காலம் தப்பிப் பூத்தன. மழை மழை மழை என மனம் கெக்கலித்தது. கட்டுரையின் பாதியில், எல்லோரையும் கூட்டிக்கொண்டு வந்து மழை பெய்வதைக் காட்டினாய். கட்டுரை திசை திரும்பிவிட்டதாய் முணுமுணுத்தார்கள். கற்பனைக்கும் யதார்த்தத்திற்குமுள்ள வேறுபாட்டினை நீ மறந்துவிட்டதாய் மனு எழுதி அரசாங்கத்திற்குப் போட்டார்கள். அரசாங்கம் தன் சீடர்களுக்கெல்லாம் தன் மொழியில் ஆணைகள் பிறப்பித்தது. சீடர்கள் அனைவரும் உனக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிக்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் இல்லையென்றால் உன்னைப்போன்ற மனம் பேதலித்த உயிர்களின் பெருக்கத்தை உறுதி செய்து விடுவாயென்றும் உயிர் பெருக்க இயலாத பிற இனத்தவர்களுக்கு அது பெரும் கேடென்றும் கோட்பாடுகள் இயற்றினர். மால்தூசிற்கு சிலைகள் வடிக்க அரசாங்கம் ஆனையிட்டது. அந்த அரசாங்கத்திற்கு வெளி நாடுகளின் பண உதவி ஏராளமாய் கிடைத்தது.  சுவருக்குச் சுவர் ஆபாச முக்கோணங்கள் வரையப்பட்டன. ஏழைகள், குற்றவாளிகள், மனநோயாளிகள் ஆகியோர் இனப்பெருக்கத்திற்கு லாயக்கற்றவர்கள் என அரசாங்கம் அறிவித்தது. அந்நிய செலாவணி பெற வேறு வழியில்லை என தொலைக்காட்சியில் வல்லுநர்கள் வாதிட்டனர். கருத்தடை சாதனங்கள் பற்றிய பாசுரங்கள் இயற்றப்பட்டன.

காமசூத்திரங்களுக்குப் புதிய விளக்கவுரைகள் எழுதப்பட்டு பத்திரிக்கை விளம்பரங்கள் வெளிவந்தன. அரசாங்கத்தோடு ஒத்துழைத்த புரட்சிகரக் குழுக்கள் பிம்பங்களை மணந்து சுய இன்பம் காண்பதே அதீத புரட்சி என்று எடுத்தியபின. வரலாற்றில் ஓரினப்புணர்ச்சியாளர்களும், பிரம்மச்சாரிகளும் மட்டுமே ஆட்சியாளர்களாயும் மதத்தலைவர்களாயும் இருந்து வந்திருக்கிறார்கள் என்ற உண்மையை மறைத்து அவர்கள் சமூகத்தின் விளிம்புகளிலுள்ளோர் எனப் பொய் சொல்ல ஆரம்பித்தனர். இயற்கையை அழித்து மனிதன் பல்கிப் பெருகி வாழ்வதை விட இனவிருத்தி செய்யாமல் மனித இனம் அழிந்து போவது மேல் என்றார்கள். இயற்கையோடும், மனிதன் மனிதனோடும் இணைந்து வாழ வேறு மாற்று வழியே இல்லையா என்று நீ கேட்டபோது வசவுச் சொற்கள் உன்னை நோக்கி வீசப்பட்டன. தூறல் தொடர்ந்து விழுந்துகொண்டிருந்தது. மைத்ரேயியிடம் சேகரமான உன் சமிக்ஞைகள் மகளாய்த் தோற்றம்கொள்ளும் என உறுதியாய் நீ நம்பியிருந்தாய். மகள்! என்ன அழகான வார்த்தை! மைத்ரேயியே குட்டிப் பெண்ணாய் வந்தது போல உன் மகள் தத்தி தத்தி உன்னிடம் ஓடி வருவதைப் போன்ற கனவுகள் உனக்கு ஏராளம். அக்குட்டிப்பெண்ணை அள்ளி எடுத்துத் தோளில் ஏற்றிக்கொண்டு பசுமையான வயல்வெளிகளூடே நடந்து செல்வது போல வந்த கனவை நீ பலமுறை காண விரும்பினாய். ஆனால் அது ஒரே ஒரு முறைதான் வந்தது. மகளே, மக்ளே, மக்களே என்று பல ஏற்ற இறக்கங்களுடன் சத்தமாகச் சொல்லிப் பார்த்தாய். அவளுக்கு எவ்வளவு சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று நினைத்து நீ மலைத்துப் போனாய். அவள் நிச்சயமாக பியானோ வாசிப்பாள். சின்னதாக கவுண் அணிந்துகொண்டு கட்டுக்கடங்காத தலை முடி நெற்றியில் விழ விழ உன்னைப் பார்த்து குறும்புத்தனமான புன்னகையுடன் Chopinஐ வாசிக்க நீ சொக்கிப் போனாய். மோளே மோளே மகளே என்ற பின்னணி இசை மனத்தின் அடிநாதமாய் ஒலிக்க, வசவுகள் மறந்து இருந்தபோது உன் கட்டுரை வரிகள் இயல்பான லயத்துடன் ஓடின. விளையாடுவதிலும் ஆனந்தமிருக்கிறது என்று உனக்குள் சொல்லிக்கொண்டாய். கண்ணாடியில்த் தெரியும் பிம்பத்தைத் தந்திரமாக வெற்றிகொள்ளும் வித்தையை உன் மகளுக்கு கற்றுத் தருவதற்கான பாடத்திட்டமொன்றை நீ உருவாக்கினாய். பிம்பங்கள் அனைத்திலிருந்தும் அவளை விடுபடவைக்கப் போகும் அந்தப் பாடத்திட்டம் பல நூறு புத்தகங்களையும் இசைத் தட்டுகளையும் கொண்டதாக இருந்தது. ‘புனித ஜெனெ’யை அதில் சேர்ப்பது குறித்து உன் மனம் ஒரு கணம் ஊசலாடியபோது உன் கட்டுரையில் நீ அடி வாங்கினாய். பலத்த அடி. உன் வார்த்தைகள் உதிர்ந்து விழ ஆரம்பித்தன. மழை வலுத்துப் பெய்தது அப்போதைய நிலையில் உனக்கு எரிச்சலூட்டக்கூடியதாய் இருந்தது. உன் மகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க நீ யார் என்ற கேள்வியில் நீ உன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாய். சொற்களை பொறுக்கி எடுத்துக் கோர்த்தபோது அவளுக்கு வேண்டியதை அவள் தேர்ந்தெடுத்துக்கொள்வாள் என்று புரிந்தது.

உனக்கும் உன் மகளுக்கும் என்ன உறவு? உனக்கும் யாருக்கும்தான் என்ன உறவு? தளைகளற்ற உறவு என்ற பதச் சேர்க்கையை பரிசோதித்துப் பார்த்தாய். அப்பதச்சேர்க்கையின் உள் முரண் புரிந்த மறு கணமே நீ பிரேதமில்லை என உணர்ந்துகொண்டாய். யாருமே பிரேதமில்லை என்பதும் தெரிய வந்தது. நீ ஒரு அனாதை. எல்லோருமே அனாதைகள். அ-னா-தை. இவ்வுலகம் அனாதைகளின் உலகம். அனாதைத்தன்மையை இயல்பானதாக ஏற்றுக்கொண்டு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் நாம். அதுவே அறம் வீரம் ஆண்மை பெண்மை. ஹா ஹா முதலாளித்துவத்தின் அடிப்படையை சுலபத்தில் அடைந்துவிட்டாய் நீ. அனாதைத்தனம் உன் ரோமக் கால்களில் விஷ ஊசிகளாய் துளைத்து வெளியே வர என் மகள் எனக்கு வேண்டும் என்று விடாமல் கதறினாய். மைத்ரேயி ‘பிறக்காத குழந்தைக்கு ஒரு கடிதம்’ நாவலை வாசித்துக்கொண்டிருந்தது உனக்குத் தெரியாது ஏனெனில் மைத்ரேயியை நீ சந்தித்து இருநூற்றி பன்னிரெண்டு நாட்கள் ஆறு மணிகள் பதினேழு நிமிடங்கள் இருபத்தியிரண்டு விநாடிகள் ஆகின்றன. இந்த நாட்களில் எண்பத்தெட்டாயிரம் கோடி வார்த்தைகள் ஜீவ மூச்சாய் உன்னிடமிருந்து வெளிப்பட்டன. தனியாய் சாப்பிட்டுத் தனியாய்த் தூங்கி, தனியே நடந்துபோய்த் தனியாய் குடித்து தனியாய் கனவு கண்டு தனியாய் அழுதுத் தனியாய்ப் படித்து தனியாய்  எழுதித் தனியாய் சிரித்து தனியாகத் தன்னை வெறுத்து தனியாய்த் தனியாய் இருந்து தனியாய் சிந்தித்து தனியாய் புத்தி பேதலித்து இருந்த உனக்கு மைத்ரேயிக்கான அவ்வார்த்தை ஜீவ மூச்சன்றி வேறு என்ன? உன் மகள் தமிழிலேயே சிந்தித்துத் தமிழிலேயே இலக்கியம் படைப்பாள் என்று கனவு வந்தது அந்த வார்த்தைக் கூட்டத்தின் லயம் உனக்கு பிடிபட்ட போதுதானே? மைத்ரேயி எங்கே போனாய் நீ? உன் கட்டுரையில் மஞ்சள் மலர்கள் பெரிது பெரிதாய் பூத்த அக்காலத்தில் எங்கே போனாள் மைத்ரேயி? விடாமல்ப் பெய்யும் இந்த மழை நல்லதுக்குப் பெய்கிறதா என்ன? மைத்ரேயி எங்கே போனாய் நீ? என்ன செய்கிறாய்? புத்தி பேதலித்த உன்னை நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறாளோ என்னவோ? உன் குழந்தையை அவள் சுமப்பாளா என்ன? கருவிலேயே கொன்றுவிட்டாளென்றால்? எங்கோ ஒரு வயலினின் தந்தி ஒன்று நாரசமாய் அறுந்துபோகக் குழந்தை பருவ நினைவு ஒன்று உன்னைத் தொற்றியது. வெயில் கொடூரமாகத் தாக்கிய மதியப் பொழுதொன்றில் அந்த மருத்துவச்சியின் கொல்லை பிண்டங்களால் நாறியபோது அவள் பகவத் கீதை வாசித்திருக்கக் கண்டாய். காலம் காலமாய் கொலை பாதகத்தைத் தூண்டும் போதனை. உயிரழிக்க, உயிரை நசிவுக்குள்ளாக்க, உயிரை அவலத்திற்குள்ளாக்க மதத்தைத் தவிர வேறெதற்கு சக்தி இருக்கிறது? மதத்தை எதிர்த்த உன் நண்பர்களெல்லாம் மதவாதிகளாய் மாறிப்போன அங்கதத்தை என்னவென்று சொல்ல? அப்படி மாறிப்போனபோதுதான் அவர்கள் உன்னைக் காட்டிக்கொடுத்தார்கள். நீ ஒழிக்கப்படவேண்டியவன் என்றார்கள். எல்லாம் இழந்த நிலையில் நீ உடைந்து போனபோது மைத்ரேயி வரவில்லை. சரண் புகுந்தேன் காப்பது உன் தர்மம் என்றாய். மைத்ரேயி வரவில்லை. முன்பு வந்தாளே! எங்கே போனாள் அவள்? சிநேகிதி, குட்டிப்பெண்ணே, எங்கே போனாய் நீ? தொடர்ந்து பெய்யும் மழை எதை உணர்த்துகிறது என்று அறியாமல் போயிற்று. உன் கட்டுரையில் வார்த்தைகள் வெறும் ஓசைகளாக நீ வெறுமையானாய். எதைப்பிடித்துக்கொண்டு தொங்குவாய் இப்போது? அறிகுறிகள் காணும் சக்தியும் உன்னிடமிருந்து இல்லாமல் போயிற்று. மழைக்காலத்தில் பூத்த மாமரம், குலை தள்ள மறுத்த வாழை, இலைகள் உதிர்த்து நின்ற மருதாணி, விரியும்போது இடியோசை எழுப்பிய மல்லிகை, விழுவதற்கு யத்தனித்து அந்தரத்தில் நின்ற பன்னீர்ப்பூக்கள், பிஞ்சிலேயே முற்றிவிட்ட முருங்கை, பூக்காமலேயே காய்த்த கொய்யா என அறிகுறிகள் லயமற்றுக் குதிக்க, அவை வேறெதையும் உணர்த்த மறுத்து அவையாகவே இருக்க உன் சித்தம் முழுமையாகக் கலங்கியது. சொன்னார்களே ஐயா சொன்னார்களே மனித வேட்கைக்கு ஏற்ப இயற்கை தோற்றம் தருமெனச் சொன்னார்களே ஐயா சொன்னார்களே. நம்பிக்கை வைப்பதற்கான ஒரே ஒரு அறிகுறி தா மைத்ரேயி ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு மண்ணே மண்ணு. போடாப் போடா பொக்கே எள்ளுக் காட்டுக்குத் தெக்கே, சிறுமை கண்டு அயராது இரு மனமே அயராதிரு. மோகத்தைக் கொன்று விடு. ஆசையைக்கொன்று விடு. மைத்ரேயியைக் கொன்றுவிடு. எளியவாம் எல்லோருக்கும் கொல்லுதல் அரியவாம் கொல்லாதிருத்தல். கொன்றுவிடு கொலையே முழுமையான ஆக்ரமிப்பு. கொன்றுவிடு. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு. மழை புயலுடன் கலந்த மழையாயிற்று. உன் கட்டுரையில் புதைகுழிகள் தென்படலாயின. கண்கள் வெடித்துச் சிதறிய கதக்களிக் கலைஞனைத் தெரியுமா உனக்கு?

உணர்ச்சியின் உண்மையில் நம்பிக்கை வைத்தோரே கேளுங்கள்: கொலை மறுத்த உணர்ச்சியின் உண்மை தற்கொலை மட்டுமே. அன்பு, தியாகம் என்ற வார்த்தைகளை எழுத்துக்கூட்டி உச்சரித்துப் பார்த்தாய். கொன்றுவிடு மைத்ரேயியைக் கொன்றுவிடு. என்கிருந்து கேட்கிறது இந்த அபத்தக் குரல்? உன் புருவங்களுனூடே கொடூரமான வலி ஒன்று ஓட உன் கண்களின் வெள்ளைப்படலத்தில் செந்நிற நரம்புகள் முடிச்சிட்டுக்கொண்டன. உன் விளையாட்டு பற்றிய கட்டுரையில் விளையாட்டுக்குத் தேவையான அக ஒழுக்கத்தைப் பற்றிச் சிந்திப்பதன் மூலம் உன்னை மீட்டெடுக்க முயற்சி செய்தாய். அப்போது மழை உள்ளே பெய்ததா வெளியே பெய்ததா என்று உனக்கு நினைவில்லை. இறையனார் அகப்பொருளுரை களவு கற்பு எண்ணிம் கைகோள் இரண்டனுள் களவு சிறப்புடைத்து. பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும் நீத்த கன்று உறைதல் அறத்தாறு அன்றே. பூப்பு புறப்பட்ட முந்நாளும் உள்ளிட்ட பன்னிரு நாளும் கூடி உறைய, படுங்குற்றம் என்னோ எனின், பூப்பு புறப்பட்ட ஞான்று நின்ற கரு வயிற்றிலே அழியும்; இரண்டாம் நாளின் நின்ற கரு வயிற்றிலே சாம்; மூன்றாம் நாள் நிற்கும் கருவுக்கு குறு வாழ்க்கைதாம்; வாழினும் திரு நின்றாம்; அதனால் கூடக்கூடாது என்ப. தமிழ் என்பதற்கே அகப்பொருள் என்றுதான் பொருள். இந்நூல் என் நுதலிற்றோ எனின் தமிழ் நுதலிற்று. விளையாட்டின் வகைகள்: விற்பூட்டு, விதலையாப்பு, வாசிநீக்கு, கொண்டு கூட்டு, ஒரு சிறை நிலை, ஆற்றொழுக்கு முதலிய ஐந்து வகையான சூத்திரக்கிடங்கை விளக்க வேண்டுமா என்ன? இவற்றையெல்லாம் எப்படி இழந்தோம்? எப்படி திரும்பப் பெறப்போகிறாய் நீ? இயற்கையே ஒத்துழைப்பு தா. தயவு செய்து பேசு. விடாமல்ப் பெய்யும் இம்மழை எதற்காகப் பெய்கிறது மைத்ரேயி? கருணையுடன் நடந்து கொள். வாழ்தலை மரணத்திலிருந்து தப்புதல் என்றிருக்கும் எங்களுக்கு எங்கள் சந்ததிகளே எதிர்காலம். மரபுக் கடத்தியின் துணுக்கு சமிக்ஞைகளுக்குள் ஒட்டிச் செல்லும் நீ பலகோடி சந்ததிகளுக்கு அப்பால் உயிர்ப்படையலாம். யாரே அறிவர் உன் உயிரின் உணர்ச்சியை? யாரே அறிவர் உன் உணர்ச்சியின் உயிரை? மைத்ரேயி தயவு செய்து உன் கர்ப்பத்தைக் காப்பாற்று. மகளே மகளே மகளே என்று மீண்டும் மீண்டும் அரற்றினாய். மெய் வரு போகம் ஒக்க உடன் உண்ட அரவு பை அல்குலாரே தயவு செய்து கர்ப்பம் தாங்குங்கள். மைத்ரேயி உன் மேனி வெப்பத்தால் படுக்கை தீய்ந்து போன அந்த இரவினை நினைத்துப் பார். காம வேதனை ஆற்றமாட்டாது கண்களிலிருந்து நீர் பெருகி வழிய, வழிந்த கண்ணீர் கொங்கையின் நுனியிடத்திலே சிந்த, உலைக்களத்திலே எழுகிற புகைபோல பெருமூச்சு வீசியதால் வறண்டு போன மிதிலைக் காட்சிப் படல சீதையைப் போல விளங்கினாயே அதே இரவுதான். அந்த இரவின் பதிவு உயிர் தரிக்கின்ற உடலாய் வெளிவருவதிலுள்ள இன்பத்தை நினைத்துப் பார். அடி மைத்ரேயி எங்கே போனாயடி நீ? விழி தீ சிந்த நின்றாய் நீ. உன்னோடு ரமிக்கையில் புது மணமதுவின் தேறலை ரசித்தவள் இப்போது எங்கே போனாள்? தண்டுதலின்றி ஒன்றித் தலைத் தலைச் சிறந்த காதல் உண்டபின் மெலிந்து துயின்ற மைத்ரேயி எங்கே? மழை பிரளய வெள்ளமாய் உருமாறியது. உன் கட்டுரையில் நீ பாடை கட்ட ஆரம்பித்தாய். வேறு வழியில்லை. சாகவும் இயலாமல் வாழவும் இயலாமல் உழல்கின்ற வேதனையில் தொடர்ந்து அவலத்துடன் இருப்பதை விட அவளைக் கொன்று விட்டுக் குற்ற உணர்வில் சாவது மேல். உன் உடலெங்கும் விஷ நகங்கள் முளைக்க ஆரம்பித்தன. அந்த நகங்களைக் கூர்மைப்படுத்த அரசியலைக் கையாண்டாய்.

முகமற்ற நிழலுருவங்கள் அர்த்தம் பெற, உடல் பெற, வேறு வழியின்றி உன்னோடு சேர்ந்து கெக்கலித்தன. மாயைகளை உருவாக்கி அந்தக் கேவல நிழல்களின் இருப்பை நியாயப்படுத்தினாய். மைத்ரேயின்/மரணத்திற்கு/கொலைக்கான முஸ்தீபுகளை நிழல்களின் மூளை வழி விளையாட்டு வினாக்களாய் ஓட விட்டாய். உன் கட்டுரையில் இது நாள் வரை மறைத்து வைத்திருந்த உன் கோரைப் பற்கள் மெதுவாக வெளித் தெரியலாயின. சிதையின் வெளிச்சம் மட்டுமே வெளிச்சமாய் இருக்க முடியும் என்று போதனைகள் செய்தாய். இனி திரும்பவும் பழைய இடத்திற்குப் போக இயலாது என்ற நிலைமையை உனது போதனையின் பதிவுகள் ஏற்படுத்தின. உன் நிழல்கள் உன்னை வென்றனவா நீ அவற்றை வென்றாயா என்பதை எதிர்காலம் அல்லவா சொல்லும்? உன் எதிர்காலம் உன் மகள் மட்டுமே என்று உணர்ந்திருந்தாலும் அந்த உணர்வின் தாக்கத்தைத் தொடர்ந்து தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தாய். மைத்ரேயி மைத்ரேயி மைத்ரேயி எங்கே போனாய் நீ? உன் உயிரின் கடிகாரம் மைத்ரேயியின் விநாடிகளோடுத் தேங்கிப் போனது போல இருப்பது மாயை மட்டுமே என்றாள் உன் அம்மா. உன் அம்மா! அவள் மட்டும் உனக்குத் தாயன்பு என்றால் என்ன என்பதை சிறிது காட்டியிருந்தாளேயென்றால் நீ இப்படி ஆகியிருக்க மாட்டாயோ என்னவோ. வேறு யாரை குற்றம் சொல்லி என்ன பயன்? உன்னை நீயே குற்றம் சுமத்தி சுய பச்சாதாபத்தில் ஆழ்வதாலும் என்ன பயன்? வருத்தத்துடன் சிதை வெளிச்சத்தைத் தூண்டிவிட்டு, மனக்கருத்தாக இருந்த மைத்ரேயியை வசியம் செய்து உருவமாய் வெளிக்கொணர்ந்தாய்.

சாவுப்படுக்கை தயாராகிவிட்டது என்று அவளிடம் உணர்ச்சியற்ற குரலில் அறிவித்தாய். அவளும் வசியத்திற்கு ஆட்பட்டவளாய்த் தானே சென்று அதில் படுத்துக்கொண்டாள். ஒரே ஒரு முத்தம் தருவாயா என்று ஆதங்கத்துடன் கேட்டாள். இத்தனை நாட்கள் காணாமல் போனபோது நீ இதே போல எத்தனை தடவை கதறியிருப்பாய் என்ற நினைவில் பதிலளிக்க மறுத்தவனாய் திரும்பி நின்று கொண்டாய். ஒரே ஒரு முத்தம் என்றாள் மைத்ரேயி மீண்டும். அதன் பின் கொன்று விடு என்று முணுமுணுத்தாள். மழை யாருக்கும் பயனற்று தொடர்ந்து பெய்தது. உன் கட்டுரைகள் அரசாங்கத்திற்கு ஆதரவானவை என்ற அறிவிப்பு வெளியாகியது. உந்தன் சாவினைப் பற்றி மைத்ரேயி அக்கறை கொள்ளாது காணாமல் போனபோது நீ மட்டும் அவளின் சாவைப் பற்றி கவலைப்படுவதேன்? என்ன ஆயிற்று உன் அக ஒழுக்கம்? எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையிலும், எல்லாவற்றையும் இழந்த நிலையிலும், தாங்க முடியாத அவதிக்குள்ளானபோதிலும், நீ கொல்ல மறுத்தாய். மைத்ரேயி என்று கதறி மைத்ரேயியை சிதையிலிருந்து தூக்கி ஆரத் தழுவி முத்தமிட்டாய். உன் முதுகுத் தண்டில் அவளின் தாப நகங்கள் கீறின. புத்தனே, புத்தனே என்று அரற்றினாள். உண்மை எது பொய் எது என்று அறியா நிலையில் பைத்திய ரேகை முகத்திலோட நகைத்தாய். புதிர்களோடும், அவலங்களோடும், சந்தேகங்களோடும், நம்பிக்கையற்ற தன்மைகளோடும் கொல்ல மறுத்து உயிர்போற்றிய உன் நகைப்பொலி கேட்டு மழை சடாரென்று வெறித்தது. உன் நகைப்பொலியை கட்டுரையில் பிரதி செய்த  தொந்தி பெருத்த சிரிக்கும் மைத்ரேய புத்தர்கள் உருவானார்கள். சிரிக்கும் புத்தர்களின் உருவங்களைக் கண்டு குழந்தைகள் சிரித்தன. உயிரின் நீட்சி சிரித்தது. சிரிக்கும் புத்தர்கள் எல்லா இடங்களிலும் தோற்றம் பெற ஆரம்பித்தனர். மைத்ரேய புத்தா மைத்ரேய புத்தா என்ற குரல்களின் எழுச்சியில் உடல்கள் ஜீவத் துடிப்பின் சௌந்தரியத்தைப் பெற்றன. அந்த சௌந்தரியத்தின் ஒளி வழங்கிய மகிழ்ச்சியில் உன் விளையாட்டு பற்றிய கட்டுரையை இவ்வாறாக முடித்தாய்.

--------------------------------

கல்குதிரை 1989

நன்றி: எம்.டி.முத்துக்குமாரசாமி தளம்

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்