Oct 30, 2011

பேனாக்கள் – பூமணி

அவன் தாத்தா ரொம்பநாளாய் ஒரு பேனா வைத்திருந்தார். அவன் சின்ன வயசாயிருக்கும்போதே அவர் பையில் இருந்தது. கடைசிவரைக்கும் புதிசுமங்காமல் வைத்திருந்தாரே அதுதான் பெரிய காரியம். பையிலிருந்து அபூர்வமாய்த்தான் எடுத்து இரண்டு வரி எழுதுவார். எழுதும்போது கவரைப் பையில் குத்தியாகணும். பேனாவுக்குப் பின்னால் சொருகி எழுதுவதேயில்லை. கை நடுக்கத்திலும் தானாகவே மையடைப்பார். வெள்ளைத் துணி வைத்து மெனக்கிட்டு துடைத்து வெண்கலக் குடம் மாதிரி விளக்குவார்.poomani2

இத்தனைக்கும் மிஞ்சி மிஞ்சிப் போனால் பத்து ராம ஜெயம், நாலு பிள்ளையார் சுழிதான் எழுதியிருப்பார்.

தாத்தா கம்பூன்றி போகும் போதும் வரும்போதும் சட்டையில் மினுங்கிய பேனா அவனைத்  தொடர்ந்து உறுத்தியது. எத்தனையோ தடவை அபேஸ் பண்ணத் திட்டம் போட்டிருக்கிறான். பாச்சா பலிக்கவில்லை. அவர் பேனாவை கண்ணுக்குப் படும்படியாய் வைத்தால்தானே. ஒன்று அவர் போட்டிருக்கும் சட்டையில் இருக்கும் அல்லது மேஜை டிராயருக்குள்ளிருக்கும். டிராயர் சாவியையாவது வெளியே வைக்கட்டுமே. அரணாக் கயிற்றில் வாளிப்பு போட்டு வேட்டி மடியில் வைத்துக்கொள்வார். சில சமயம் குளிக்கையில் கழட்டி வைத்துவிடுவார் என்று கொட்டாவி விட்டிருக்கிறான். ஆனால் கைத்தடி மட்டுமே வீட்டு மூலையில் சாத்தியிருக்கும். சாவி அரணாக்கயிற்றில் மணியாட்டும்.

அவர் அசந்த நேரம் பார்த்து சாவியைக் கழட்டி விடலாமா என்றுகூட யோசித்தான். அப்படி அசந்த நேரமே தெரியாது. முக்கால் வாசி கண்ணை மூடிக்கொண்டுதான் இருப்பார். தூங்குகிற மாதிரி இருக்கும். எதிரே பூச்சி பறந்தால்கூட அருவங் கேட்டு விடுவார். எக்குத் தப்பாய் மாட்டிக்கொண்டால் கம்படி வாங்கிகட்ட வேண்டியதுதான்.

அவன் அப்பாவிடமும் ஒரு பேனா இருக்கத்தான் செய்தது. அது தாத்தா பேனா போல் இல்லை. அவன் வைத்திருந்த பேனாவுக்கும் மோசமாயிருந்தது. அவர் பஞ்சுக் கணக்கெழுதி பேனாவைப் படாதபாடு படுத்தியிருந்தார். அப்பா கூட தாத்தா பேனாவில் கண் வைத்திருப்பது பிந்தித்தான் தெரிய வந்தது. ஒரு நாள் பேச்சுவாக்கில் சொன்னார்:

”நயினா ஒங்களுக்கு இனி அந்தப்பேனா எதுக்கு சும்மாதானே வச்சிருக்கீக எனக்குக் குடுத்திருங்க. நாண் கணக்கெழுதிக்கிறென்”.

“ஏம்பா வேறபேனா கணக்கெழுத மாட்டன்னா சொல்லுது”.

அப்பா மறு பேச்செடுக்க வில்லை. தாத்தாவா கொக்கா.

அதற்குப் பிறகு தாத்தா அப்பாவிடம் அடிக்கடி பேனா கேட்க ஆரம்பித்தார்.

“ராமானுஜம் ஒம் பேனாவைக் கொஞ்சம் குடுத்து வாங்கிறயா. என்னதில் மையில்லையோ என்னமோ எழுத்து சரியாவே தெரியலே. கசியிற மாதிரியும் தோணுது.”

அப்பா முணுமுணுத்தவாறே பேனா கொடுப்பார்.

“கசியிதோ புதுசா”

அவன் பாட்டி அதைவிடக் கில்லாடி. கழுத்துப் பிடிக்காமல் நகை போட்டுக் கொண்டு கிறுங்காது. அவன் அம்மாவும் எத்தனையோ பிரயத்தனம் பண்ணிப் பார்த்து விட்டாள். மசியவில்லை.

பாட்டி குளிக்கும்போது நீட்டி முழக்கிக் கூப்பிடுவாள்.

“நாகலெச்சிமி ஓரெட்டு வந்து முதுகத் தேச்சுத் தண்ணி ஊத்தீட்டுப் போயிரு”

அம்மா காசலையாய்ப் போய் உடம்பெல்லாம் தேய்த்து விடுவாள். கழுத்தோரம் தேய்க்க வரும்போது மட்டும் பாட்டி சாதாரணமாயச் சொல்வாள்.

“இனி நான் தேச்சுக்கிறம்மா. நீ போயி வீட்டு வேலையப் பாரு”

திரும்பும்போது அம்மா சத்தம் கேட்கும்.

“அவ்வளவு சாமானவும் கழுத்திலை போட்டுக் குளிக்கீகளே, அடிக்கடி தண்ணி பட்ட என்னாத்துக்காகும் கண்ணி இத்துப்போகாதோ”

அதற்குங் கூட பாட்டி நடுக்கத்திலே பதில் வைத்திருப்பாள்.

“ஆமடியம்மா தண்ணிக்கு இத்துப்போற சாமானும் செஞ்சு குடுப்பான் பாரு எனக்கு”

அம்மா வெளியூருக்குப் போகிற சமயம் நகைகளை இரவல் கேட்டால்கூட பாட்டி கொடுப்பதில்லை.

“காலங் கெடக்கிற கெடையில சாமான் போடவா முடியுது. ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போகவே பயந்து கெடக்குது. இருக்கிறதப் போட்டுட்டுப் போனாப் போதும். ஆரும் கேட்க மாட்டாக”

நல்லவேளை அவன் அப்பா கூடப் பிறந்த அத்தையோ சித்தப்பாவோ இல்லை. அப்பா ஒருவர்தான். எப்படித்தான் அவரைப் பத்துவரை படிக்க வைத்தார்களோ.

தாத்தா சாக நாள் பிடித்தது. சட்டை போட்ட வாக்கில் ஈஸி சேரில் கண்ணயர்ந்திருந்தவர் எழுந்திருக்கவில்லை. சட்டைப்பையில் குத்தியிருந்த பேனாவை அப்பா எடுத்து அவர் பையில் சொருகிக் கொண்டார்.

அவன் கல்யாணச் சோறு தின்றுவிட்டுத்தான் கண்ணை மூடுவேன் என்று அடிக்கடி சொல்லுவார். பாவம், அதுவரை கூட்டில் உயிர் தங்கவில்லை.

அந்த யோகம் பாட்டிக்குத்தான் அடித்தது. அவன் வாத்தியார் வேலைக்குப் போய் கல்யாணம் முடித்து ஒரு மகனைப் பார்க்கும்வரை திடமாகவே இருந்தாள்.

எத்தனையோ முறை உயிர் இந்தா போகிறேன் என்று மிரட்டி முடக்குவாள். இரண்டாவது நாள் புடைத்தெடுத்த மாதிரி எழுந்து வெயில் காய்வாள்.

அம்மாவும் பீ மோத்திரம் எடுப்பதிலிருந்து சகல வேளைக்கும் சளைக்கவில்லை. அவன் மனைவியும் அம்மாவும் நான் முந்தி நீ முந்தி என்று பணிவிடை செய்தார்கள். காணாக்குறைக்கு அயலூரிலிருந்து அவன் அக்கா வேறு வந்து இருப்பு போட்டுக் கவனித்தாள்.

கடைசியில் தாமதமாய்த்தான் மூன்று பேருக்கும் பாட்டியைச் சுற்றி உட்கார்ந்து அழ வாய்த்தது. மயானத்திலிருந்து அப்பா கொண்டுவந்த பாட்டியின் நகைகளை அம்மா வாங்கிக் கொண்டாள். அவ்வளவையும் மறுநாளே மஞ்சள் தேய்த்துக் கழுவி அழுக்கெடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டாள்.

அவன் அக்கா அதற்குப் பிற்கு அவ்வளவாய் வீட்டுக்கு வருவதில்லை. முக்கியமான காரியத்திற்கு வந்தாலும் அவன் மனைவியுடன்தான் பெரும்பாலும் பேசிக் கொண்டிருந்து விட்டுப் புறப்படுவாள்.

தாத்தா பேனாவை அப்பா வைத்துக் கொண்டது அவனுக்குக் கூட வருத்தந்தான். வெளியே எவ்வளவோ நல்ல பேனா விற்கத்தான் செய்கிறான். எல்லாம் தாத்தா பேனாவாக முடியாது. என்னேரமும் தங்கமாய் மினுங்கும். மூடியெது கீழ்ப்பாகமெது என்று கண்டுபிடிக்க முடியாதபடி திரடில்லாத வழவழப்பு. பேப்பரில் வைத்தால் பொரிந்து தள்ளும். முந்தி ஒருநாள் எழுதிப்பார்த்தது. வைத்திருந்தால் அப்படிப் பேனா வைத்திருக்கணும்.

பள்ளிக்கூடம் போய் கொஞ்ச நாளில் அவன் மகன் பேனா கேட்டு அடம் பிடித்தான்.

ஒரு பழைய பேனாவை எடுத்து ஒக்கிட்டுக் கொடுத்தான். அது மறுநாளே இருந்த இடத்தில் வாய் பிளந்து கொண்டு கிடந்தது. அவன் வைத்திருந்த பேனாவையே கேட்டு அழுதான்.

அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அப்பா மேஜைப்பக்கம் கைகாட்டி விட்டான். அவ்வளவுதான் அவர் குளிக்கப் போன சமயம் பேனாவை எடுத்து தரையில் எழுதி பின்னால் வளைத்து நெக்கைத் திருகி மறை கழண்டு ஆட்டம் குளோஸ். தாத்தாவைப் போல் அப்பாவுக்கு முன்னெச்சரிக்கை கிடையாது.

அப்பா பையனை பிடித்து கண்டபடி காதைத் திருகி வீங்கவைத்த பிறகும் கோபம் தணியவில்லை. எல்லோரையும் திட்டித் தீர்த்தார்.

“வீட்ல புள்ளையா பெத்து வச்சிருக்குதுக. கால சனியனா எறங்கியிருக்கானே..ஆகமான பேனா போச்சே.”

“என்னமோ பேனா போனதுக்குப் போயி புள்ளய இந்தப்பாடு படுத்தியிருக்கீகளே. இதுல்லனா வேற ஒண்ணு வாங்கிக்கிறது.”

“ஒனக்கென்ன தெரியும் அறிவு கெட்டவளே. இப்படிப் பேனா எவங்கிட்ட இருக்கும்.”

அவனும் அவன் மனைவியும் ஒன்றுமே பேசவில்லை. பிறகும் இரண்டு மூன்று நாட்கள் பையனை அவர் கண்ணில் படவிடாமல் வைத்துக்கொண்டதோடு அவன் பேனாவைப் பத்திரப் படுத்தவும் செய்தான்.

தாத்தா பேனாவுக்கு எங்கும் நெக்குக் கிடைக்கவில்லை. அவன் கேட்டான்.

“அத எங்கிட்டக் குடுந்திருங்களேம்ப்பா. எப்படியாச்சும் நெக்குச் சம்பாரிச்சு எழுக்கிறேன்.”

“நீ சம்பாரிச்சு எழுதிக் கிழிச்சது போதும். அது எங்கிட்டயே இருக்கட்டும்.”

அவர் வேறு பேனாவை எழுதப் பயன்படுத்திய போதும் தாத்தா பேனாவை ஒரு பார்வைக்காக பையில் குத்தில் கொள்ளத் தவறுவதில்லை.

ஒருநாள் அவன் பள்ளிக்கூடன் கிளம்பிக்கொண்டிருந்த போது பையில் பேனாவைக் கவனித்து விட்ட அப்பா கேட்டார்.

“நல்லா பேனாவா சம்பாரிச்சிருக்கயே. இண்ணக்கி ஒருநாள் எழுதக்குடேன். என் பேனாவ ரிப்பேருக்குக் குடுத்திருக்கென்.”

அவனும் தயங்காமல் சொன்னான்.

“இது ஏற்கனவே ரிப்பேருப்பா. சும்மா கெடந்துச்சு. இண்ணக்கித்தான் ரிப்பேருக்குக் குடுக்கலாம்னு எடுத்திட்டுப் போறென்.”

நாலாவது நாள் அவன் ஒரு விளாரை எடுத்துக்கொண்டு மகனை விரட்டி விரட்டி அடித்தான். எல்லோரும் பிடிக்கப் பிடிக்க அடித்தான். அவன் அப்பா மிரண்டு போய் கண்டித்தார்.

“அடே ஒனக்கென்ன வந்திருச்சு இப்ப. புள்ளையா என்னன்னு நெனச்ச. மடத்தனமா அடிக்கயே.”

அவன் வயிற்றெரிச்சலில் கத்தினான்.

“அவன் பண்ணீருக்கிற காரியத்துக்கு முதுகுத் தொலிய உரிச்சாக் கூடக் காணாது. அருமையான பேனாவ ஆணிவேற அக்கு வேற கழட்டிப் போட்டுட்டானே பாவி.”

“பெரிய பேனா. போடா போ. அண்ணைக்கே ரிப்பேர்னு சொன்னயே. அது போயித் தொலஞ்சா இனியொண்ணு வாங்கிக்கயேன்.”

அவன் மகன் அவருக்குப் பின்னால் ஒளிந்து நின்றிருந்தான்.

***

நன்றி : ’தேடல்’( ஜூன் 1978)

Oct 20, 2011

தமிழின் முதல் சிறுகதை எது?- மாலன்

பயணமும் பணியும்

இந்த உரை ஏப்ரல் 26 2011 அன்று தமிழ்ச் சிறுகதைகள் -ஒரு நூறாண்டு என்ற தலைப்பில் சாகித்ய அகாதெமி ஏற்பாடு செய்திருந்த இரு நாள் கருத்தரங்கில் முதன்மை  உரையாக நிகழ்த்தப்பட்டது

 

இன்று சற்றே தேக்கமுற்றதுபோல் தோன்றும் நவீனத் தமிழ்ச் சிறுகதை நூறு வயதைத் தாண்டிவிட்டது என்பதை எண்ணும்போது ஒரு அரை நொடிக்குத் திகைப்பும், மகிழ்ச்சியும்,  அவற்றைத் தொடர்ந்து கலக்கமும் ஏற்படுகின்றன. நூறாண்டுகள் குறித்துப் பெருமை கொள்வதற்குimages நிறைய காரணங்கள் இருப்பதைப் போன்றே கவலை கொள்வதற்கும் காரணங்கள் இருக்கின்றன.

இதனாலேயே நவீனத் தமிழ்ச் சிறுகதை என்பதை ஒரு வரலாற்றுப் பார்வையில் அணுக வேண்டிய கட்டாயமும், அவசியமும் நமக்கு நேர்ந்திருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நவீனத் தமிழ்ச் சிறுகதையின் வரலாறு, குறிப்பாக அதன் ஆரம்பக் கட்டங்கள், குழம்பிக் கிடக்கின்றன. தமிழ்ச் சிறுகதையின் வரலாறு, நவீனத் தமிழ்ச் சிறுகதை தோன்றியதற்கு வெகுநாட்களுக்குப் பின்னர் இன்னும் குறிப்பாகச் சொன்னால், அது ஒரு இயக்கமாகப் பரிணமிக்கத் துவங்கியதற்குப் பின்னர் - அப்படிப் பரிணமித்ததின் விளைவாக - எழுதப்பட்டது. இது இயல்பானது. தவிர்க்க இயலாதது. ஆனால், வரலாற்றை எழுத முற்பட்ட இலக்கிய ஆசிரியர்கள், பேராசிரியர்கள், விமர்சகர்கள் இவர்களெல்லோரும் வரலாற்றை, வரலாற்றுப் பார்வை கொண்டல்ல, அவரவரது சமகாலப் பிரக்ஞை கொண்டு எழுத முற்பட்டார்கள் என்பதுதான் துரதிஷ்டவசமானது.

தமிழில் நவீனச் சிறுகதை பற்றி விவாதிக்கப்படும் போதெல்லாம், சிறுகதை என்பதைவிட ‘நவீன’த்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வந்திருக்கிறது. இங்கு நவீனம் என்பது மேற்குலகைச் சார்ந்ததாகவே அறியப்பட்டு, அப்படியே போதிக்கப்பட்டு, அப்படியே விவாதிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஐரோப்பியக் கலை வடிவங்களை இந்திய எண்ணங்களைக் கொண்டு படைத்துக் காட்டுவதே நவீனம் என்று இங்கு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இங்கு நவீனம் என்பது மரபின் தொடர்ச்சி அல்ல. மரபில் இருந்து முரண்பட்டது. அதற்கு நேர்மாறானது.நவீன இலக்கியத்தின் பிதாமகர்கள் என்று நம்பப்படுகிற மணிக்கொடிக்காரர்கள் ஸ்வீகரித்துக் கொண்ட நவீனம் இத்தகையதுதான்.

ஆனால், சுப்ரமணிய பாரதி கருதிய நவீனம் இதுவல்ல.

வருடக்கணக்கை வைத்துப் பார்த்தாலும் சரி, இலக்கியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு அளவிட்டாலும் சரி, தமிழின் நவீனச் சிறுகதை - வேறு பல சமகால இலக்கிய வடிவங்களைப் போல - சுப்ரமண்ய பாரதியிடமிருந்தே துவங்குகிறது. 1905லேயே, அவர், ஷெல்லிதாஸ் என்ற பெயரில்  சக்ரவர்த்தினியில் ‘துளஸீபாயி என்ற ரஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்’ என்ற புனைவை எழுதியிருந்தார். 1905ம் ஆண்டு நவம்பர் இதழில் துவங்கி, 1906 ஜூலை வரை, இதழக்கு இரண்டு பக்கங்கள் அளவில், நடுநடுவே இடைவெளி விட்டு ஐந்து இதழ்களில் அத்தியாயப் பகுப்புடன் அது பிரசுரமானது. ஐந்து இதழகளில் வெளியானது, அத்தியாயப் பகுப்பு இருந்தது என்பதால் அதை நாவல் என்றோ குறுங்காவியம் என்றோ, நெடுங்கதை என்றோ அவசரப்பட்டு முடிவுக்கு வந்துவிட வேண்டாம்.அதன் மொத்த நீளமே 11 பக்கங்கள்தான். குளத்தங்கரை அரசமரத்தை விடச் சிறியது. என்றாலும் நடுவிலே ஒரு சிறு கவிதையும், இடையிடையே நாடகப் பாணியும், ஷேக்ஸ்பியரின் மேற்கோளும் கொண்ட அதைச் சிறுகதை என ஏற்பதில் சிலருக்கு இருக்கும் தயக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் ஆறில் ஒரு பங்கை தவிர்த்துவிட முடியாது. ‘ஒரு நாவலுக்குரிய கருப்பொருளைக் கொண்டது’ என்று இன்றைய விமர்சகர்களால் புறக்கணிப்படும் அதை பாரதி ஒரு சிறிய கதையாகத்தான் கருதினார்.  நூறாண்டுகளுக்கு முன்பு, 1910ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் புதுச்சேரியிலே வசித்த போது, ‘ஆறில் ஒரு பங்கு ஓர் சிறிய கதை’ என்ற நூலைத் தன் சொந்த முயற்சியிலே மூன்றணா விலையுள்ள நூலாக வெளியிட்டார். அது 1911ம் ஆண்டு அரசு ஆணை ஒன்றின் மூலம் தடை செய்யப்பட்டது. அந்தத் தடையை நீக்குமாறு அரசாங்கத்தை அறிவுஜீவிகளும் பத்திரிகையாளர்களும் வலியுறுத்த வேண்டும் எனக் கோரி 1912ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி ஹிந்து நாளிதழுக்கு, ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதிக்குக் கடிதம் எழுதுகிறார் பாரதி

இதையே தமிழின் முதல் நவீனச் சிறுகதையாகக் கொள்ள வேண்டும். ஏன்?

அதை விளங்கிக் கொள்ள பாரதி கதை எழுத வந்த காலத்திற்கு நாம் பயணிக்க வேண்டும்.

பாரதியார் சிறுகதைகள் எழுத முற்பட்ட காலத்தில் , தமிழில் இரண்டு வகையான சிறுகதைகள் இருந்தன. ஒன்று காமக் களியாட்டக் கதைகள். மற்றொன்று அதற்கு நேர் எதிரான ஒழுக்க உபதேசக் கதைகள். 1869ல் வட்டுக்கோட்டை சதாசிவம் பிள்ளை தொகுத்து வெளியிட்ட நன்னெறி கதா சங்கிரகம் என்ற தொகுப்பின் முன்னுரையில், “மதன காமராஜன் கதை, பதுமைக்கதை, விவேகசாரம் ஆகிய இன்ப ரசக் கதைகள் பல தமிழில் உள்ளன. சிலகதைகள் இரண்டு பேர் ஒருவர் முகத்தை ஒருவர் கூச்சம் நாணமின்றி நோக்கி வாசிக்கத் தகுந்தவை அல்ல” என்று சொல்லி அதற்கு மாற்றாக “சன்மார்க்க சாதனைக்கும் போதனைக்கும் உரிய “ விஷயங்களைப் போதிப்பதற்காக அந்தத் தொகுப்பை வெளியிடுவதாகச் சொல்கிறார்.

புராணப் பாடல்களும், காதல் பிரபந்தங்களும், தனிமனிதப் புகழ்ச்சிகளும் தமிழ்க் கவிதை உலகில் bharathi1a மண்டிக் கிடந்த காலத்தில் கவிதையை மீட்டெடுத்ததைப் போலவே, காமக் களியாட்டங்களும், ஒழுக்க உபதேசங்களும் சிறுகதை உலகை ஆக்ரமித்திருந்த காலத்தில் பாரதி சிறுகதை உலகில் ஒரு புதிய மரபை உருவாக்கினார்.

சிறுகதை என்பது ஐரோப்பியக் கலைவடிவம் எனக் கருதப்பட்ட காலத்தில் அதை மறுதலிப்பது போல் பாரதி ஒரு புதிய சிறுகதை வடிவத்தை உருவக்கினார்.

தொல்காப்பியத்தில் பாட்டிடை வைத்த குறிப்பினானும் என்றொரு சூத்திரம் இருக்கிறது. எந்தெந்த இடங்களில் உரைநடை வரும் என்று சொல்லிக் கொண்டு போகும் அந்த சூத்திரத்தில் ’பொருள் மரபிலாப் பொய்மொழியானும்’ என்று ஒரு வரி இருக்கிறது. “யானையும் குருவியும் தம்முட் நட்பாடிப் பேசிக் கொள்வது போல என்று உரையாசிரியர்கள் அந்த வரிக்கு விளக்கம் தருகிறார்கள். அதற்கு அடுத்த வரி,’ பொருளோடு புணர்ந்த நகை மொழியானும்’  என்பது. அதற்கு அர்த்தம் உணமை கலந்த வேடிக்கைப் பேச்சு.

மரபிலிருந்து இந்த இரண்டு அம்சங்களையும் எடுத்துக் கொண்டு தனது கதைகளின் வடிவத்தை உருவாக்குகிறார் பாரதியார். அவரது காக்காய் பார்லிமெண்ட், காக்கை இலக்கணம் படித்த கதை, இவற்றில் காகங்கள் பேசிக் கொள்கின்றன.அதே சமயம் அவை உண்மை கலந்த வேடிக்கைப் பேச்சுப் பேசுகின்றன.

வாய் மொழியாகக் கதை சொல்லும் இந்திய மரபின் தொடர்ச்சியாகவே பாரதி தன்னுடைய சிறுகதையின் வடிவத்தைப் பெரும்பாலும் அமைத்துக் கொண்டார். அந்த வடிவத்தை, தான் வாழ்ந்த காலத்தில் அரசியல், சமூக விமர்சனங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டார். அதாவது வடிவம் பழையது, விஷயம் புதியது.

ஆனால், வடிவத்தின் அடிப்படையிலேயே இதுநாள்வரை சிறுகதையை மதிப்பிட்டு வந்திருக்கும் விமர்சகர்களும் வரலாற்று ஆசிரியர்களும் சிறுகதை வரலாற்றில் பாரதிக்கு உரிய பங்கைக் கொடுக்கவில்லை. பாரதியாருடைய சிறுகதைகளில் உருவ அமைதி இல்லை, வடிவம் பற்றிய பிரக்ஞை இல்லை. அவருடைய கதைகள் சம்பவங்களை உள்ளவாறே குறிக்கிறதேயன்றி உணர்வு நிலையைக் காட்டுவனவாக இல்லை என்று பிற்கால ஐரோப்பிய இலக்கணங்களைக் கொண்டு அவரது கதைகளை விமர்சகர்கள் அளவிட முயற்சித்திருக்கிறார்கள்.

ஐரோப்பியக் கதை வடிவங்கள் குறித்து பாரதி அறிந்து நிராகரித்தாரா? அல்லது அதைப் பற்றி அறியாமலேயே இந்திய மரபைத் தேர்ந்து கொண்டாரா? அதற்கான விடையை பாரதியின் குரலிலேயே கேட்கலாம்.

‘நமது நாட்டுக் கதைகளிலே பெரும்பாலும் அடிதொடங்கிக் கதாநாயகனுடைய ஊர், பெயர், குலம், கோத்திரம், பிறப்பு, வளர்ப்பெல்லாம் கிரமமாகச் சொல்லிக் கொண்டு போவது வழக்கம். நவீன ஐரோப்பியக் கதைகளிலே பெரும்பகுதி அப்படியல்ல. அவர்கள் நாடகத்தைப் போல கதையை நட்டநடுவில் தொடங்குகிறார்கள். பிறகு போகப்போக கதாநாயகனுடைய பூர்வவிருத்தாந்தங்கள் தெரிந்துகொண்டே போகும். என்று சின்னசங்கரன் கதையின் முன்னுரையில் எழுதுகிறார்.

நமது கதை மரபின் வடிவங்களை அறிந்திருந்த அளவிற்கு ஐரோப்பியக் கதை வடிவத்தையும் பாரதி அறிந்திருந்தார் என்பதற்குப் பற்பல சான்றுகளை நாம் சொல்லிக் கொண்டு போக முடியும். ஐரோப்பிய வடிவில் அமைந்த தாகூரின் சிறுகதைகளை அவர் மொழிபெயர்த்திருந்தார் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கவிதையில் புதுமை செய்த, கார்ட்டூன் போன்ற நவீன உத்திகளைத் தமிழ்ப் பத்திரிகை உலகில் அறிமுகப்படுத்திய, புதியன விரும்பு என்று உபதேசித்த பாரதியார், சிறுகதையில் மாத்திரம் ‘நவீன’ வடிவத்தை அறிந்தும் அதனை மறுதலித்து பழைய மரபினை விரும்பித் தேர்ந்தெடுத்தது ஏன்?

ஐரோப்பியக் கதை வடிவத்தை நிராகரித்து தமக்கென ஒரு வடிவத்தை உருவாக்கிக் கொண்ட பாரதியார் சிறுகதையின் பயன் குறித்தும் ஓர் மாறுபட்ட பார்வையே கொண்டிருந்தார். கதை என்பது இன்பம் பயக்கும் ஒரு கலை வடிவம் மட்டுமல்ல, அது செய்தி சொல்வதற்கான ஓர் ஊடகமும் கூட என்பதுதான் அந்தப் பார்வை. அவர், கலை கலைக்காகவே என வாதிடும் சுதத சுயம்பிரகாச இலக்கிய வாதியாக இல்லாமல், ஒரு சமூகப் பொறுப்புணர்வு கொண்ட பத்திரிகையாளராகவும் இருந்ததுதான் இந்த நோக்கை அவரிடம் உருவாக்கியிருக்க வேண்டும். சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும், அரசியல் நடப்புக்களையும் சொல்வதற்கு எப்படிப் பத்திரிகையைப் பயன்படுத்தினாரோ, அதே போல சிறுகதையையும் அவர் ஓர் ஊடகமாக வரித்துக் கொண்டார்.
அவரது துளசிபாயீ, பெண்கள் உடன்கட்டை ஏற நிர்பந்திக்கும் வழக்கத்தைச் சாடுகிறது.பூலோக ரம்பை பொட்டுக் கட்டும் வழக்கத்தின் கொடுமைகளைச் சித்தரிக்கிறது.காந்தாமணி பெண்கள் ருதுவாவதற்கு முன்பே அவர்களைத் திருமணம் செய்து கொடுக்கும் வழக்கத்தை இகழ்ந்து, அதற்கு மாற்றாகக் கலப்புத் திருமணத்தைக் கோடி காட்டுகிறது. ஸ்வர்ணகுமாரி, அரசியலில் மிதவாதத்தையும்,மத வழக்கங்களில் பழமைவாதத்தையும் பின்பற்றுவோரை நையாண்டி செய்து திலகரின் தீவிரவாதத்தையும் ராஜாராம் மோகன்ராயின் பிரம்மசமாஜத்தையும் உயர்த்திப் பிடிக்கிறது.ஆறில் ஒரு பங்கு தலித் மக்களை இழிவாக நடத்துவதை சினத்தோடு கண்டிக்கிறது.

ஆறில் ஒரு பங்கிற்கு அவர் எழுதிய முன்னுரையில் அவர் நோக்கம் அப்பட்டமாக வெளிப்படுகிறது:

“ஓரு ஜாதி, ஓருயிர். பாரதநாட்டிலுள்ள 30 கோடி ஜனங்களும்  ஒரு ஜாதி. வகுப்புகள் இருக்கலாம்.பிரிவுகள் இருக்கலாகாது.வெவ்வேறு தொழில் புரியலாம். பிறவி மாத்திரத்திலே உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கூடாது.மத பேதங்கள் இருக்கலாம். மதவிரோதங்கள் இருக்கலாகாது.இவ்வுணர்வே நமக்கு ஸ்வதந்திரமும் அமரத்தன்மையும் கொடுக்கும். வேறு வழியில்லைஇந்நூலை பாரதநாட்டில் உழவுத் தொழில் புரிந்து, நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரட்சிப்போராகிய  பள்ளர் பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதார்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.”

100 ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட மக்களை நம்மை ரட்சிப்பவர்கள், பரிசுத்தத் தன்மை வாய்ந்தவர்கள், இந்தியர்கள் அனைவரும் ஓரு ஜாதி என்று பகிரங்கமாகச் சொல்லக்கூடிய சூழ்நிலை தமிழ்ச் சமூகத்திலே இருக்கவில்லை. அந்தச் சூழ்நிலையில் தன் சொந்தப் பணத்தைக் கொண்டு வெளியிட்ட தனது நூலில் இந்தக் கருத்துக்களை முன் வைக்கிறார் என்பதை எண்ணிப் பார்த்தால், அவர் இந்த விஷயத்தில் கொண்ட அக்கறை விளங்கும்.

’புகையை நம்பி உணவை வெறுக்கும் மனிதர்களைப் போல’ என்று பாரதி ஓரிடத்தில் எழுதுகிறார். அதைப் போல சாரத்தை விட்டுவிட்டு வடிவத்தைக் கொண்டு சிறுகதைகளை மதிப்பிடும விமர்சகர்களின்  காரணமாக பாரதி புறக்கணிப்பட்டு வ.வே.சு அய்யர் நவீனச் சிறுகதைகளின் தந்தையாக, மூலவராக வரலாற்றில் முன்னிறுத்தப்படுகிறார். 

இந்த இடத்தில் அதிர வைக்கும் மூன்று உண்மைகளை நாம் எதிர்கொண்டாக வேண்டும்:

1.தமிழின் முதல் நவீனச் சிறுகதை என வகுப்பறைகளில் போதிக்கப்படும் குளத்தங்கரை அரசரமரம் ஒரு தழுவல் கதை. தாகூர் எழுதிய காட்டேர் கதா என்ற வங்கக் கதையின் தழுவல். அந்தக் கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு, 1914ம் ஆண்டு, கல்கத்தாவிலிருந்து வெளிவந்த மாடர்ன் ரிவ்யூ இதழில். The story of the river stair என்ற தலைப்பில் வெளியாயிற்று. ஐயரின் கதை 1915ல் விவேக போதினியில் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் அவரது மனைவியான பாக்கியலஷ்மி vavesu அம்மாள் பெயரில் வெளியாயிற்று. தாகூரின் கதையில் ஆற்றங்கரைப் படிக்கட்டு கதை சொல்கிறது. அய்யரின் கதையில் குளத்தங்கரை அரசமரம் கதை சொல்கிறது. எட்டு வயதில் விதவையான ஒரு பெண் யுவதியான பிறகு ஒரு பாலசன்யாசியிடம் மனதைக் கொடுத்து, அவரிடம் எந்தச் சலனமும் ஏற்படாததால் ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொள்வதைத் தாகூரின் கதை விவரிக்கிறது. சிறுவயதில் மணமுடிக்கப்பட்ட ருக்மணி வயது வந்த பிறகும் வரதட்சிணைக் கொடுமை காரணமாக கணவன் வீடு செல்ல முடியாத சூழலில் குளத்தில் குதித்து உயிரை விடுவதைச் சொல்வது ஐயரின் கதை.

2. சிறுகதையின் தந்தை என வர்ணிக்கப்படும் ஐயர் தனது சிறுகதைகளை தமிழ் இலக்கியத்தின் வகைகளில் ஒன்றாக ஆக்கி அதைச் செழுமைப்படுத்தும் நோக்கத்தோடு எழுதவில்லை. பிற்காலத்தில் பெரிய சரித்திரக் கதைகள் எழுதுவதற்காக கை பழகும் நோக்கத்தோடு எழுதினார் எனபது இரண்டாவது உண்மை.

3.பின்னால் வந்த மணிக்கொடிக்காரர்கள் (ஏன் சரஸ்வதியும் கூட) 
வ.வே.சு. ஐயரை, வடிவச் சிறப்பிற்காக சிறுகதையின் பிதாமகனாகக் கொண்டாடினார்கள். ஆனால் மணிக்கொடிக்காரர்களுக்கு சிறுகதை குறித்த புதிய பார்வையைக் கொடுத்தது, தன் வாழ்நாளில் ஒரு சிறுகதை கூட எழுதியிராத ஒரு பத்திரிகையாளர் என்பது வரலாற்றின் விசித்திரங்களில் ஒன்று. மணிக்கொடி நிறுவனர்களில் ஒருவரான கு.சீனிவாசன், பம்பாயில் இருந்து வெளிவந்த சன் என்ற ஆங்கிலப் பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, 29.4.34 தேதியிட்ட மணிக்கொடி இதழில் வெளியிடப்பட்டது. தமிழில் சிறுகதை எழுதும் முறையையும், ”சிறுகதை பற்றிய கொள்கைகளையும்,மேனாட்டு இலக்கியப் பயிற்சியின் அடிப்படையில் முதலில் விளக்கிய கட்டுரை இதுதான்....இந்தக் கட்டுரை ஒரு புதிய விழிப்பைக் கொடுத்தது” என்று சிட்டியும் சிவபாதசுந்தரமும் எழுதுகிறார்கள்.

பாரதியின் மறைவிற்குப் பிறகு, 1930-40களில் தமிழ்ச் சிறுகதையின் தடம் மாறிற்று. 1930கள் இலக்கியத்தின் உள்ளடக்கத்தைப் பத்திரிகைகள் தீர்மானித்த காலம். 1931ல் கல்கி விகடன் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். 1932ல் கலைமகள் வெளியிடப்படுகிறது.1933ல் மணிக்கொடி தோன்றுகிற்து. இந்தப் பத்திரிகைகளை வழி நடத்தியவர்களும் அவற்றின் பின் அணி வகுத்தவர்களும் முழு நேர எழுத்தாளர்கள். தங்கள் எழுத்துத் திறன் காரண்மாகவே அவர்கள் பத்திரிகை ஊழியர்களாகப் பணியாற்றினார்கள். அவர்களில் கல்கி, செல்லப்பா போன்ற சிலருக்கு தேச விடுதலை என்பதில் நாட்டமிருந்தாலும் சமூக விடுதலையில் பாரதிக்கு இருந்த நாட்டமும்  வேகமும் இவர்களுக்கு இல்லை. வ.ரா ஒரு விதிவிலக்கு. குடுமி கிராப் ஆனதைப் போல, வேட்டி கால்சாராய் ஆனதைப் போல, பின் கொசுவச் சேலைக்கட்டும், மடிசாரும், முன்னால் மடித்துச் செருகும் ஆறு கஜப் புடவை ஆனதைப் போல சிறுகதை என்பது படித்தவர்களின் அடையாளமாக நடுத்தரவர்க்கப் பார்வை கொண்ட Elitist instrument ஆக வடிவம் பெற்றது இந்த நாள்களில்தான்.

சமூக விமர்சனத்திற்காகப் பாரதி தந்துவிட்டுப் போன போர்வாளை ஏந்தும் திறம் இல்லாத பாரதியின் சந்ததிகள் அதை உருக்கி இலக்கிய அந்தஸ்து என்ற கீரிடம் செய்து அணிந்து கொண்டார்கள்.

பத்திரிகையாளர்களிடமிருந்து எழுத்தாளர்கள் கைக்கு மணிக்கொடி மாறியதும் இந்த கீரிடத்திற்கு மேலும் மெருகேற்றப்படது.’புதிதாக எழுத வேண்டும், புதியதைச் சொல்லவேண்டும், புதிய முறையில் சொல்ல வேண்டும், புதுமையைக் காண வேண்டும்’ என்பது அந்த எழுத்தாளர்களின் வேட்கையாக இருந்தது. அவர்கள் வடிவ அமைதி, கருத்தொருமை, பாத்திர ஒருமை, நிமிடத்தை நித்தியமாக்குவது என்பவற்றைப் பற்றி அதிகம் பேசினார்கள்.சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் பல நடுத்தரவர்க்கத்துப் படிப்பாளிகள் தங்கள் ஆங்கிலக் கல்வியின் பலத்தில் மணிகொடியில் எழுத முன்வந்தார்கள்.

ஆனால் உயர்கல்வி மறுக்கப்பட்டிருந்ததால் பெண்கள் மணிக்கொடியிலிருந்து விலகி நின்றார்கள் அல்லது விலக்கி வைக்கப்பட்டார்கள்.சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் பத்திரிகைகள் கதைகளை வெளியிட் ஆரம்பித்த நாள்களிலிருந்தே பெண்கள் கதை எழுதிவந்தார்கள். ஆனால் மணிக்கொடி கோஷ்டியைச் சேர்ந்தவர் என்று ஒரு பெண் எழுத்தாளரைக் கூடக் குறிப்பிட முடியாது.  மகளிர் மட்டும் எழுதிய கதைகளைக் கொண்ட இதழ் ஒன்றை வெளியிட முயன்ற போது பெண்களிடமிருந்து அதற்கான கதைகள் கிடைக்கவில்லை என்றும் அதனால் ஆண்களே பெண்களின் பெயரை இட்டுப் பக்கங்களை நிரப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டதென்றும் ராமையாவே மணிக்கொடிக் காலத்தில் எழுதுகிறார்.

தமிழ் மொழியைக் கதை சொல்லும் கருவியாக பயன்படுத்தப் பழகியிராத மெளனியின் ஆரம்பக் காலக் கதைகளைத் தான் திருத்தி வெளியிட்டதாகவும் வேறு ஒரு இடத்தில் சொல்கிறார் ராமையா. ஆனால் அந்தச் சலுகையைக் கூட அவர் பெண்களுக்குத் தரத் தயாராக இல்லை.

தமிழ்ச் சிறுகதைகளின் போக்கை மாற்றும் ஆற்றல் கொண்டிருந்த மணிக்கொடி, கால வெள்ளத்தில் காலூன்றி நிற்கும் திறன் கொண்டிருக்கவில்லை. அதன் சமகாலத்தில் தோன்றிய ஆனந்த விகடனும், கலைமகளும் இன்றும் இருக்கின்றன. ஆனால் மணிக்கொடி 1935லேயே மறைந்தது. நாற்பதுகளில் நடுவில் கு.ப.ரா மறைந்தார். புதுமைப்பித்தனும் ராமையாவும் திரைப்படத் துறைக்குப் போனார்கள். பிச்சமூர்த்தி அரசுப் பணிக்குப் போனார். க.நா.சு ஆங்கிலத்தில் எழுதப் போனார். செல்லப்பா விமர்சகராக அவதாரம் எடுத்தார். விடுதலைப் போரில் சிறை சென்று மீண்ட கல்கி 1941ல் கல்கி வார இதழைத் துவக்கி நெடுங்கதைகள் எழுதப் போய்விட்டார்.

ஆனால் பாரதியின் காலத்தில் ஊற்றாகத் துவங்கி முப்பதுகளில் குளமாகப் பெருகிய தமிழ்ச் சிறுகதை நாற்பதுகளின் மத்தியில் நதியாக நடக்கத் தொடங்கியது. சற்றே கலங்கிய நதி. சிறுகதையின் வடிவமும் எழுத்துத் திறனும் கைவரப் பெற்ற பல புதியவர்கள், பல சிற்றிதழ்களிலும் வெகுஜன இதழ்களிலும் நிறையவே எழுதினார்கள். வடிவம் பற்றிய விரிவுரைகளுக்கு அவசியமில்லாமல், வடிவ உணர்வு பிரஞ்கையிலேயே தங்கிவிட வாசக சுவாரஸ்யத்தை (Readability) முன்னிறுத்தி எழுதினார்கள். தமிழ்ச் சிறுகதை இன்னொரு திருப்பம் கண்டது.

அதன் ஒரு எதிர்விளைவாக தமிழ்ச் சிறுகதை மீண்டும் சமூக நோக்குள்ள படைப்புகளை நோக்கித் திரும்பியது. அரசியல் விடுதலை கண்டிருந்த தேசம் சமூக விடுதலையை எண்ணத் தலைப்பட்டதன் காரணமாக சோஷலிசம் பற்றிய விவாதங்கள் அரசியல் அரங்கில் ஒலித்துக் கொண்டிருந்தன. அந்தச் சூழலில்தான் ஐம்பதுகளின் நடுவில் சரஸ்வதி தோன்றியது. “நாட்டு மக்களை உயர்த்துவதற்காக எழுத வேண்டும் சமூகத்தை சக்தி வாய்ந்ததாக ஆக்குவதற்காக எழுத வேண்டும், கிராமவாசியும் புரிந்து கொள்ளக் கூடிய தமிழில் எழுத வேண்டும் என்று அமரர் வ.ரா அவர்கள் காட்டிய பாதைதான் நாங்கள் விரும்பும் பாதை என அறிவித்து கொண்டு 1955ல் சரஸ்வதி பிறந்தது. வ.ராவின் படத்தை அட்டையிலும் வெளியிட்டது. ஆனால் தங்களுடைய பெருமைக்குரிய முன்னோடிகளாக அது இட்ட பட்டியலில் பாரதியின் பெயர் இல்லை!

மணிக்கொடி நிறுவிய மிகையான பிம்பங்களைத் தகர்க்க சரஸ்வதி முயன்றது. வீர வணக்கம் வேண்டாம் எனப் புதுமைப்பித்தனைப் பற்றி திகசி எழுதினார். மெளனி வழிபாடு பற்றி ஏ.ஜெ.கனகரட்னா எழுதினார். மணிக்கொடி புதுமைப்பித்தனை முன்னிறுத்தியது என்றால் சரஸ்வதி ஜெயகாந்தனை முன்னிறுத்தியது.ஜெயகாந்தன் மூலம் சரஸ்வதியின் வழியே நகர்ப்புற அடித்தட்டு மக்களின் வாழ்க்கையும், மொழியும் விழுமியங்களும் தமிழுக்கு வந்து சேர்ந்தன.பாரதி கூட அளித்திராத கொடை இது. தமிழ்ச் சிறுகதைக்கு ஒரு புதிய மொழியைக் கொடுத்தவர் ஜெயகாந்தன். சரஸ்வதி கொடுத்த இன்னொரு கொடை சுந்தர ராமசாமி. ஜேகே, சு.ரா. இருவரும் தமிழ் இலக்கியத்தைப் பெரும்பாலும் தமிழர்தம் எதிர்ப்பிற்கிடையே முன்னெடுத்துச் சென்றவர்கள்.

அறுபதுகளின் இறுதியிலும் 70களிலும் எழுதவந்த தலைமுறை சந்தித்த  எதிர்ப்புக்கள் வேறு வகையானது. அவை எதிர்ப்புகள் கூட அல்ல, புறக்கணிப்பு. அது சமூகத்திடமிருந்தல்ல, சமூகத்தில் அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த நிறுவனங்களிடமிருந்து, இன்னும் வெளிப்படையாகச் சொன்னால், அரசு, அதிகார வர்க்கம்,கல்வியாளர்கள், வெகுஜனப் பத்திரிகைகள் காட்டிய புறக்கணிப்பை எதிர் கொண்டு அவர்கள் இயங்க வேண்டியிருந்தது.

1970ம் ஆண்டு நடைபெற்ற இலக்கியச் சிந்தனை ஆண்டுவிழாவில் அமெரிக்காவிலிருந்து வந்து தமிழ் கற்ற் மொழியியல் பேராசிரியர் ஆல்பர்ட் ஃபிராங்க்ளின்  நவீன இலக்கிய ஏடான நடை பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய போது, விழாவிற்குத் தலைமை தாங்கிய மதிப்பிற்குரிய நீதிபதி எஸ்.மகராஜன் “நடை”யை நான் பார்த்ததே இல்லை, நான் மட்டுமல்ல, பேராசிரியரிடமும் (பேரா.அ.சீனிவாச ராகவன்) கேட்டேன். அவரும் நடையைப் பார்த்ததில்லை என்று வெளிப்படையாகவே கூட்டத்தில் கூறினார். இந்திய இலக்கிய மேதைகள் என்று சாகித்ய அகதாமி ஒவ்வொரு மொழிக்கும் ஒரு புத்தகம் வெளியிட்டது. மற்ற் மொழிப் பேராசிரியர்கள் எல்லாம் சமீபத்திய இலக்கியப் படைப்பாளிகளைப் பற்றி (வங்காளம்: ஈஸ்வர சந்திர சாகர், தெலுங்கு: வீரேசலிங்கம் பந்துலு, மராத்தி: கேசவ தத், ஹிந்தி பிரேம் சந்த்) எழுதிய போது பேராசிரியர் மு.வ. சங்கம் மருவிய காலத்தில் வாழ்ந்த சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் பற்றி எழுதினார்.

சமகால இலக்கியம் என்பது அதிகார அமைப்புகளின் அலட்சியத்திற்கும் வெகுஜன் கவர்ச்சி இலக்கியத்திற்கும், இடையில் முடக்கப்பட்டுக் கிடந்த போது அதைச் சிறுகதைகள் மூலமும் புதுக்கவிதைகள் மூலமும் இளைஞர்கள் புதிய உயரங்களுக்குக் கொண்டு சென்ற வரலாறு 70களினுடையது. எழுபதுகளில் சிறு பத்திரிகைகளில் ரெள்த்திரம் பழகிய இளைஞர்கள் 90 களில் என்ன ஆனார்கள் என்பது சமூகவியலாளர்களின் ஆராய்ச்சிக்குரிய விஷயம்

இரண்டு முக்கியப் போக்குகள் எழுபதுகளில் எழுதிய சிறுகதைகளில் ஆதிக்கம் செலுத்தின. மனிதர்களின் துன்பங்களையும், நம்பிக்கைகளையும் உறவுகளையும் அதையொட்டி எழுந்த சிக்கல்களையும் சமூகப்பார்வையோடு எழுத முற்பட்ட கதைகள் ஒரு ரகம். உள்மன ஆசைகளையும், விகாரங்களையும், தேடல்களையும், விசாரணைகளையும் எழுத முற்பட கதைகள் ஒரு ரகம். ரகம் எதுவானாலும் தாங்கள் இலக்கிய முன்னோடிகளுக்கு வாரிசாக வந்தவர்கள் என்ற பெருமித உணர்வும், அவர்கள் அளித்துச் சென்ற இலக்கியத்தைச் செழுமைப்படுத்தும் கடமை  நமக்கிருக்கிறது என்ற பொறுப்புணர்வோடு அவர்கள் எழுதினார்கள்.

ஆனால் 90களில் எழுத வந்தவர்களின் படைப்புகள் வடிவம் உள்ளடக்கம் இரண்டிலும் இதுவரை அறியப்படாத, மரபுகளை மீறச் செய்யும் முயற்சிகளாக அமைந்தன. கதைகளை வாசகன் உணர்வு ரீதியாக விளங்கிக் கொள்ள இயலாது, தனது அறிவுத் தளத்திலிருந்தே அவற்றை அறிந்து கொள்ளத் தகும் என்ற் நிலை இருந்து வருகிறது.

இது ஒரு வகையில் பின்னோக்கிச் செல்வது. சமூகத்திலிருந்து அன்னியப்பட்டுத் தன் அறிவினுடைய அகந்தையைச் சார்ந்து நிற்பது   

கல்வி எல்லோருக்கும் மறுக்கப்பட்டிருந்த இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இலக்கியத்திற்குப் புனிதங்கள் கற்பிக்கப்பட்டன. இலக்கியம் அதிகாரத்தின் ஒரு அடையாளமாகத் திகழ்ந்தது.
மரபுத் தமிழ் வழியில் செய்யுள் எழுதிக் குவித்தவர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியினர் அவரைப் பெருந்தொகை கொடுத்து ஆசிரியர் வேலைக்கு அழைத்தபோது, ‘ஏழைகளாக இருக்கும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொண்டும் அவர்களுடன் சல்லாபம் செய்துகொண்டும் காவேரி ஸ்நானமும் சிவதரி சனமும் செய்துகொண்டுமிருப்பதுவே எனக்குப் பிரியமான காரியமாக இருக்கிறது. சாதாரண ஜனங்களோடு பழகுதல் இன்பத்தை விளைவிக்கும்’ என்று சொல்லி அந்த அழைப்பை மறுத்தவர். (உ.வ.சா., மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் பக். 258.) அவர் அதிகம் மொழியறிவு இல்லாத எளிய மக்களுக்கும் புரிய வேண்டும் என்ற நோக்கத்தில் பட்டீஸ்வரம் என்ற சிவதலத்தைப் பற்றி ஒரு  பதிற்றுப் பத்து அந்தாதி எழுதியிருந்தார். பெரிய இலக்கியப் பனுவல் அல்ல. கடவுள் மேல் பாடப்பட்ட துதி. அந்த நூலைக் கண்ட அவருடைய மாணவரும் இன்னொரு தமிழறிஞருமான தியாகராஜச் செட்டியார், பிள்ளையவர்களிடம் பெருஞ்சண்டைக்கு வந்துவிட்டார். ‘இப்படியும் ஒரு நூல் நீங்கள் பாடியது உண்டா, எதன் பொருட்டு இதனைப் பாடினீர்கள்?’ என்றெல்லாம் பிள்ளையவர்களிடம் கேட்டு, செட்டியார், ‘அந்த நூலைக் கிழித்து ஆற்றிலே போட்டுவிட வேண்டும்’ என்று வாதிட்டார்.
அதற்குப் பிள்ளையவர்கள், ‘என்னப்பா! மேலே மேலே ஓடுகிறாய்? இந்த மாதிரி நூலை நான் செய்திருக்கக்கூடாதா? சாதாரணமான ஜனங்களுக்கு இந்தமாதிரி இருந்தால்தானே தெரியவரும், கடினமாக இருந்தால் அவர்கள் அறிவார்களா? அவர்கள் மனதிற்படுமா?’ என்று கேட்டதாக உ.வே.சா. குறிப்பிடுகிறார்.

எழுதுவதைச் செய்யுளில்தான் எழுத வேண்டும். அதையும் சாதாரண மக்களுக்குப் புரிவதுபோல் எழுதுவது குற்றம் என்று கருதுப்பட்ட இந்தச் சூழ்நிலைதான் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் நிலவியது. அந்தச் சூழ்நிலையில்தான், ‘எளிய பதங்கள் எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக் கூடிய சந்தம் பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினை உடைய காவியம் ஒன்று செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோன் ஆகிறான்’ என்று மொழிக்கும் மக்களுக்குமிடையேயான உறவை வலியுறுத்துபவனாக வருகிறான் பாரதி.

எழுத்தை - இலக்கியத்தைத் தங்கள் அடையாளமாகக் கொண்டு அதற்குப் புனிதங்கள் கற்பித்து, புதிய பீடங்களை அமைத்துக் கொள்கிற போக்கு பாரதியின் மறைவுக்குப் பின், மீண்டும் மணிக்கொடி காலத்தில் - குறிப்பாகச் சிறுகதை, மணிக்கொடி காலத்தில் - தலை எடுக்கிறது. அதற்கொரு காரணம், அவர்கள் பாரதியைப் போல் சமூகக் கட்டமைப்பை மாற்ற முற்பட்டவர்கள் அல்ல. எழுத்து தவிர வேறெந்த நோக்கமும் இல்லாதவர்கள்.

மூன்று சான்றுகள்:

எப்பொழுதுமே ஒரு திட்டம் போட்டு குறிப்பிட்ட கருத்தை வற்புறுத்துவது என்ற எண்ணத்துடன் நான் ஒன்றுமே எழுதுவதில்லை. - தன் கதைகள் பற்றி ந.பிச்சமூர்த்தி (1942)


அநேகமாக அவனுடைய எழுத்துக்கு ஆண் பெண் உறவுதான் அடிப்படையான விஷயமாக இருக்கும். இவ்விஷயத்தைத் தவிர்த்து அவன் கதையோ, கவிதையோ எழுதவில்லை என்று கூடச் சொல்லலாம். -கு.ப.ரா. பற்றி ந.பிச்சமூர்த்தி (1944)


உலகை உய்விக்கும் நோக்கமோ கலைக்கு எருவிட்டுச் செழிக்கச் செய்யும் நோக்கமோ எனக்கோ, என் கதைகளுக்கோ சற்றும் கிடையாது. -தன் கதைகள் பற்றிப் புதுமைப்பித்தன்.


சமூக நோக்கம் இல்லாமல், சொந்த சந்தோஷத்திற்காக அல்லது துக்கத்திற்காக எழுதியவர்கள், எழுத்தைக் கொண்டு ஓர் அடையாளத்தை சமூக அந்தஸ்தை விரும்பி எழுத்தை வெகுஜனங்களிடமிருந்து விலக்கி எடுத்துச் செல்லும் புதிய பண்டிதர்களாக சந்நிதிகளாக அவதரித்தார்கள். பாரதியின் மறைவுக்குப் பிறகு 1930 - 1950 காலகட்டத்தில் இந்தப் பிறழ்வு நிகழ்ந்தது. இந்தப் பிறழ்வுக்கும் சிறுகதைகள்தான் கை கொடுத்தன என்பது வரலாற்றின் விசித்திரங்களில் ஒன்று.

ஒரு நூறாண்டுச் சிறுகதைகள் என்ற முகாந்திரத்தில்  தமிழ்ச் சிறுகதை வரலாற்றைப் பின் நோக்கிப் பார்ப்பது நட்சத்திரங்களை வெறும் பட்டியலிடுவதற்கோ, தனிமனிதத் துதி பாடலுக்கோ அல்ல.  வரலாற்றின் மறைவோட்டத்தை (Under Current) உய்த்துணர்ந்து கொள்ள என்ற எண்ணத்தில் என் கருத்துகள் இங்கு முன் வைக்கப்படுகின்றன. இன்றும் தமிழைப் புதிய பண்டிதர்களிடமிருந்து மீட்டெடுத்து வெகுஜனங்களிடையே எடுத்துச் செல்லவேண்டிய அவசியமிருப்பதை நினைவூட்டிக் கொள்ளவும் இவை உதவும்.

******

நன்றி : மாலன்.காம்

Oct 5, 2011

மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார இந்திரஜித்

TCX 6838 என்ற எண்ணுள்ள என் ஸ்கூட்டரில் விருமாண்டியைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தேன். சாலையின் இருபுறமும் தென்னந்தோப்புகளும், வயல்வெளிகளும் மாறிமாறி வந்து கொண்டிருந்தன. விருமாண்டி என் நண்பன். ஓடும் ஆற்றின் கரைகளில் விருமாண்டித்தேவர் குடும்பத்திற்குச் சொந்தமான தென்னந்தோப்புகள் இருக்கின்றன. தென்னந்தோப்புக்குள் ஓர் அழகான வீடும் அவர்களுக்கு இருந்தது. அநேகமாக விருமாண்டி மட்டுமே அங்கு இருப்பான். அவன் குடும்பத்தினர் ஊருக்குள் குடியிருந்தனர். தென்னந்தோப்பு வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் skindrajit3 தொலைவில் ஒரு கள்ளுக்கடை அங்கே அயிரை மீன் குழம்பு கிடைக்கும். ஆற்றில் வெகு நேரம் குளித்துவிட்டு விருமாண்டியின் தோப்பு வீட்டில், வாங்கி வைத்திருந்த கள்ளைக் குடித்துவிட்டு அயிரை மீன் குழம்புச் சாப்பாடு முடித்துத் திரும்பி வருவது ஆனந்தமான அனுபவம்.

சாலையில் ஓர் உருவம் வண்டியை நிறுத்தும் சைகையுடன் கைநீட்டி நின்று கொண்டிருந்தது. சற்று அருகில் வந்ததும்தான் நின்றுகொண்டிருக்கும் உருவம் இந்திரஜித் என்று தெரிந்தது. ஸ்கூட்டரை நிறுத்தினேன். விருமாண்டியைப் பார்த்துவிட்டு வரும் வழியில் தன்னுடைய மோட்டார் சைக்கிள் பழுதடைந்து நின்று விட்டதாக இந்திரஜித் கூறினான். தற்செயலாக நான் வந்தது நல்லதாகப் போயிற்று என்றும், மெக்கானிக்கை எனது வண்டியில் போய் அழைத்து வருவதாகவும் கூறினான். ‘உன்னுடைய மோட்டார் சைக்கிளுக்கு நான் காவலா?’ என்று கேட்டேன். ‘அந்த மோட்டார் சைக்கிளை எவனும் எடுத்துச் செல்ல முடியாது. அப்படி ஓர் கோளாறு. நீ இங்கு காத்திருக்க வேண்டாம். அதோ தெரிகிறதே ஓர் இடிந்த வீடு அதுவரை நடந்து சென்றுவிட்டு வா. பொழுது போகும்’ என்று கள் வாசனையடிக்க கூறினான் இந்திரஜித். ‘எதற்கு அங்கே போக வேண்டும்?’ என்று நான் கேட்டதற்கு, ‘போய்ப் பார் தெரியும்’ என்றவாறே என் ஸ்கூட்டரை வாங்கிக் கொண்டான். அவன் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் போது ஞாபகம் வந்தது. விருமாண்டி தோப்பு வீட்டில் இருக்கிறானா என்று கேட்டேன். விருமாண்டி, தென்னை மரங்களுக்கு உரம் வைக்கும் வேலையைச் செய்து கொண்டிருப்பதாகக் கூறிவிட்டு இந்திரஜித் கிளம்பினான். வயல் வெளியைப் பார்த்தேன். சற்று தூரத்தில் இடிந்த வீடு தெரிந்தது. அதை ஏன் பார்க்கச் சொல்கிறான் என்று எனக்குப் புரியவில்லை. போய்ப் பார்க்கலாம் என்று தோன்றியது. தென்னந்தோப்பையும், கதிர்கள் நிற்கும் வயல்களையும் கடந்து அந்த இடத்திற்குச் செல்ல வேண்டும். நடக்க ஆரம்பித்தேன். தென்னந்தோப்பைத் தாண்டி வயல்வரப்புகளில் செல்லும் போது எனக்குத் தடுமாற்றமாக இருந்தது. இரண்டு பெரிய புளிய மரங்களும் இடிந்த வீடும் திடல் போன்று காணப்பட்ட அந்த இடத்தில் இருந்தன. ஆள் அரவமற்ற இடம். நான் இடிந்த வீட்டை நோட்டமிட்டுக் கொண்டே உள்ளே ஜாக்கிரதை உணர்வுடன் நுழைந்தேன்.

உடைந்து கிடந்த சுவர்களின் மீது ஏறி நின்று உள் அறையை நோக்கினேன். உத்திரம் ஒன்று குறுக்காக விழுந்து கிடந்திருந்தது. உள் அறையின் ஜன்னலைப் பார்த்ததும் எனக்குத் திகில் ஏற்பட்டது. துருப்பிடித்த ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு நிலைத்த பார்வையுடன் ஒரு கிழ உருவம் நின்றுகொண்டிருந்தது. நிலைத்திருந்த கண்கள் அசைந்து என்னை நோக்கின. பைத்தியம் போல எனக்குத் தோன்றியது. உள் அறையின் வாசலில் கிடந்த செங்கற் குவியலின் மீது ஏறி நின்று அந்தக் கிழ உருவம் என்னை நோக்கியது. குளித்துப் பல காலம் ஆகியிருக்கும் போல அப்படி ஓர் அழுக்குத் தோற்றம். அடர்ந்த வெள்ளைத் தாடி, மீசை, தலை முடிகளுக்கிடையே கண்கள் அசைந்து கொண்டிருந்தன.

கிழவன் என்னை நோக்கிக் கேட்டான். ’நீ யார்?’ நான் என் பெயரைச் சொன்னேன். ‘நீ வெள்ளைக்காரன் உளவாளியா? உண்மையைச் சொல், யார் நீ?’ என்றான் கிழவன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘எந்த வெள்ளைக்காரன்?’ என்றேன். ‘எந்த வெள்ளைக்காரனா? அன்னியனை ஒப்புக் கொண்ட துரோகியா நீ?’ என்றான் கிழவன். ‘அன்னியன் போனது உங்களுக்குத் தெரியாதா?’ என்றேன். கிழவன் என்னைச் சற்றுநேரம் உற்றுப் பார்த்தான். ‘அப்படித்தான் சிலர் சொல்கிறார்கள். ஆனாலும் நம்புவதுதான் சிரமமாக இருக்கிறது. நம்பி வெளியே வந்தால் திரும்பவும் சூடு வைத்து விடுவார்களோ என்றுதான் இப்படித் திரிந்துகொண்டிருக்கிறேன். அன்னியர்களின் சூழ்ச்சியையும், தாட்சண்யமற்ற தன்மையையும் நான் நன்கு அறிந்திருக்கிறேன். அதனால்தான் நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.’ என்றான் அவன்.

‘நீங்கள் எவ்வளவு காலமாக மறைந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். ‘பல வருடங்கள் ஆனது போன்ற உணர்வை ஏற்படுத்தக் கூடியவை அந்தப் பத்து நாட்களும்!’ என்றான் கிழவன். ‘பத்து நாட்கள் என்பது என்ன கணக்கு?’ என்றேன். ‘பத்து நாட்கள் என்பது ஓர் யுகம்தான். 1942 ஆகஸ்டு 18-ந்தேதி பிடிபட்டு, ஒரு பத்து நாட்களைப் பல வருடங்களாகக் கழித்தேன். பத்து நாட்கள் என்பது பல காலம் ஆன மாதிரி, பல காலம் பத்து நாட்களாக நீண்டு கொண்டே செல்கின்றது. பத்து நாட்களிலும் நான் நரக வேதனையில் இருந்தேன் என்பதை அறிய வேண்டும். என் நண்பர்களைச் சித்திரவதையில் இழந்தேன் - இதோ பார் சூடுபட்ட காயங்களை....’ என்று சட்டையைக் கழட்டி நெஞ்சையும் முதுகையும் காட்டினான். குறுக்கும் நெடுக்குமாகச் சூடுபட்ட வடுக்கள் குரூரமாகக் காட்சி தந்தன.

நான் கிழவனை அமரச் சொன்னேன். ‘நீங்கள் என்னைக் கண்டு அஞ்ச வேண்டாம். நான் உங்கள் நண்பன். நீங்கள் வெளியே வரலாம். அன்னியன் இங்கு இல்லை என்பதுதான் உண்மை’ என்றேன். ‘அன்னியன் இங்கு இல்லை என்றால் சுபாஷ் சந்திரபோஸ் வந்துவிட்டாரா? 1941 ஜனவரி 26-ந்தேதி வீட்டுச் சிறையிலிருந்து தப்பித்த போஸ் வந்து விட்டாரா? அவரிடமிருந்து கடிதம் கொண்டு வந்தால் நான் மறைவிலிருந்து வரலாம். திரிபுரா காஸ்கிரஸ் மாநாட்டில் நான் அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். போஸ் அன்று கோபத்திலும் வருத்தத்திலும் இருந்தார். நான் மிகவும் கொந்தளித்துப் போயிருந்தேன். அவர் என்னைச் சமாதானப்படுத்தும் நோக்கில் பேசினார்.’ என்றான் கிழவன்.

நான், போஸ் இறந்துவிட்டதாகக் கூறப்படுவதைக் கூறலாமா என்று நினைத்து, பிறகு கூறாமல் பேச்சை மாற்றும் விதமாக, ’நீங்கள் எந்தக் கட்சியில் சேர்ந்திருந்தீர்கள்?’ என்று கேட்டேன். அதற்குக் கிழவன், நான், சங்கரய்யா, பெருமாள் ஆகியோர் நாராயணசாமி தலைமையில் இயங்கும் தலைமறைவு இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களாகச் சேர்ந்தோம். நீங்கள் பெயரைக் கேள்விப்பட்டிருக்கலாம்’ என்று சொல்லி ‘யுவபாரத்’ என்ற பெயரை ரகசியமாகச் சொன்னான். நான் அந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருப்பதாக ரகசியத்தைக் கேட்கும் பொறுப்பில் நானும் பாவனை செய்தேன்.

’குதிராம் போஸ் என்னைத் தனிப்பட்ட முறையில் கவர்ந்திருந்தார். அறுபத்து நான்கு நாட்கள் உண்ணாவிரதமிருந்து இறந்த ஜதீன் போஸ், சிட்டகாங் ராணுவத் தளவாடப் பாசறையைச் சூறையாடிய சூர்யா சென் ஆகியோர் எங்கள் அனைவரையும் ஈர்த்திருந்தார்கள். இவற்றையெல்லாம், ஏன் சொல்கிறேன் என்றால் நீண்டகாலமாகிவிட்ட பத்து நாட்களில் இவற்றையெல்லாம் பலர் மறந்திருக்கலாம். பலருக்குத் தெரியாமலேயே இருந்திருக்கலாம். பலருக்கு இட்டிலி தின்று கொண்டேயிருக்க வேண்டும் என்று தோன்றிக்கொண்டேயிருக்கும். வேறு விஷயங்கள் நினைவிலிருக்காது. யுவபாரத் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?’ என்றான் கிழவன். ‘தலைமறைவு இயக்கம் என்று நீங்கள் சொல்லும்போது அது பற்றி விபரங்கள் எனக்கு எப்படித் தெரியும். அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்பதைத்தான் நான் ஏற்கனவே கூறிவிட்டேனே’ என்றேன்.

'சொல்கிறேன். யுவபாரத் நாராயண சாமி தலைமையில் துவங்கியது. பெங்காலைச் சேர்ந்த அஜாய் போஸ் என்பவருக்கும் அவருக்குமிடையே தொடர்பு இருந்தது. நானும், என் நண்பர்கள் சங்கரய்யரும், பெருமாளும் அவரைத் தேவகோட்டையில் ஓரிடத்தில் ரகசியமாகச் சந்தித்தோம். எங்கள் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நம்பிக்கை தொடர்ந்தது - நான் மிகுந்த துணிச்சல்காரன் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே. காட்டுக்குள் போலீஸ் பட்டாளத்திடமிருந்து, சாமோன் ஆர்னால்டிடமிருந்து நான் மட்டும் தப்பித்து வந்தது மட்டுமே என் துணிச்சலைக் காண்பிக்காதா? அதுகூட தப்பு. அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். நாகனாறு பாலத்தை நாங்கள் வைத்த குண்டுதான் தகர்த்தது. சூப்பிரண்டு பெஞ்சமினைச் சங்கரய்யர்தான் சுட்டுக் கொன்றான். சங்கரய்யர் காங்கிரஸ் கட்சியிலும் இருந்துகொண்டு யுவபாரத்திலும் உறுப்பினராக இருந்தான். நாங்கள் ரகசியமாகக் கூடி ஒரு இடத்தில் மறைந்திருந்தபோது எங்களைப் போலீஸ் சுற்றிக் கொண்டது. பெருமாள் எல்லோரும் இறந்து விடலாமா என்று கேட்டான். பிறகு நாங்கள் கைதாகி நீதிமன்றத்தின் மூலம் சுதந்திர உணர்வை மக்களுக்கு உருவாக்கலாம் என்று நினைத்துக் கைதானோம். அது என்ன சந்தர்ப்பம் என்று தெரியுமல்லவா. காந்தி ஆகஸ்டு 8-ந்தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்திருந்தார். நாங்கள் 18-ந்தேதி கைதானோம். ஆனால், நாங்கள் போலீஸ் ஸ்டேசனுக்கோ நீதிமன்றத்திற்கோ கொண்டு செல்லப்படவில்லை. எங்கள் கண்களையும் கைகளையும் இறுகக் கட்டி அவிழ்த்தனர். காடு போலத் தோன்றியது. பிறகு கால்களில் விலங்கு போட்டனர். போலீஸ் அதிகாரி ஆர்னால்டு எங்கிருந்தோ வந்தான். அவன் வந்ததும், எங்களைத் தனித்தனியே மரத்தில் கட்டினர். அதற்கு முன் எங்கள் ஆடைகளை அவிழ்த்து விட்டனர். கையில் வைத்திருந்த லத்தியினால் முதலில் நாங்கள் பார்க்க, பெருமாளை அடித்தான். வலி பொறுக்க முடியாமல் பெருமாள் அலறியதை நாங்கள் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டுமிருந்தோம். கை ஓய்ந்ததும் சாவகாசமாகத் தண்ணீர் குடித்து ஓய்வெடுத்தான் ஆர்னால்டு. பெருமாளின் முகம், உடம்பெல்லாம் தடியினால் அடிபட்டு வீங்கிச் சிவந்திருந்தது. வலியில் முனகிக் கொண்டிருந்தான். ஓய்வெடுத்த பின் சங்கரய்யரை அடித்தான். என்னை அடிக்கும் முறை வருவதற்குள் நான் இறந்துவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இறக்கவில்லை. சங்கரய்யரை அடித்து ஓய்வெடுத்த பின் என்னருகே வந்து என்னை அடித்தான். அதைப் போன்றதொரு இம்சையை உங்களால் கற்பனை பண்ண முடியாது. வலியை அனுபவிக்காமல் இறந்துவிட வேண்டும் என்று மனம் விரும்பியது. வலியில் உயிர் துடித்தது. அப்படியே எங்களை விட்டுவிட்டு ஆர்னால்டும் அவரது பட்டாளமும் சென்றுவிட்டன. வலியில் எங்களுக்குப் பேசுவது கூட இயலாத காரியமாகிவிட்டது. பசி கொன்று கொண்டிருந்தது. நா வறட்சியில் தொண்டை தவித்துக் கொண்டிருந்தது. இரவு முழுக்கக் குளிர் பயங்கரமாகத் தாக்கியது. ஏதேதோ பூச்சிகள் உடம்பில் ஊர்ந்தன. உயிர் சீக்கிரம் போக வேண்டும் என்பதே பிரார்த்தனையாக இருந்தது. சூடு வாங்கித்தான் ஆக வேண்டும் என்று இருக்கும் போது என்ன செய்வது? அடுத்த நாள் ஆர்னால்டு பட்டாளத்துடன் வந்தான். சாவகாசமாக சிகரெட் பிடித்துக் கொண்டே நெருப்பை உருவாக்கச் சொன்னான். கையோடு கொண்டு வந்திருந்த இரும்புக் கம்பியை அதில் பழுக்கக் காய்ச்சச் சொன்னான். அவன் காரியம் எல்லாம் பதற்றமின்றி நிதானமாக இருந்தது. ஆத்திரப்பட்டோ, ஆவேசம் கொண்டோ காரியம் செய்யவில்லை. மிகவும் நிதானமாக காய்ச்சிய இரும்புக் கம்பியை எடுத்து வந்து சங்கரய்யரின் உடம்பில் இழுத்தான். கடைசியாக சங்கரய்யரின் வயிற்றில் குத்தினான். ஓர் அலறலில் சங்கரய்யரின் கழுத்து சாய்ந்தது. உயிர் போக வேண்டும் என்று என்னையறியாது அவசரமாகவும் வேகமாகவும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். ஆர்னால்டு கம்பியை நெருப்பில் காய்ச்சக் கொடுத்துவிட்டு,  ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். பிறகு சாவகாசமாக எழுந்து, அதை எடுத்து பெருமாளின் வயிற்றில் மாறி மாறிச் சொருகினான். அதற்குப் பிறகு கம்பியைக் காய்ச்சக் கொடுத்துவிட்டு ஓய்வெடுத்தான். பின் கம்பியை வாங்கிக்கொண்டு என்னை நோக்கி வந்தான். அவன் முகத்தில் அப்படி ஓர் அமைதி தவழ்ந்தது. என் உயிர் எழுந்து அவன் குரல்வளையை நோக்கிப் பாய்ந்தது. பிறகு சூன்யத்திற்குள் உயிர் சுருண்டது. கம்பியின் இழுப்பில் அலறினேன். உடம்பெல்லாம் எரிந்தது. சாவகாசமாகக் கம்பியினால் என் உடலில் கோடுகள் வரைவது போல் இழுத்தான். உயிர் அலறித் துடித்தது. சற்று நேரத்தில் கோடுகள் வரைவது நின்றது. கண்களைத் திறந்தேன். சாவகாசமாக சிகரெட் பிடித்துக்கொண்டு ஆர்னால்டு நின்றிருந்தான். பின் சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டுத் தன் பட்டாளத்துடன் வாகனத்தில் சென்றுவிட்டான். என்னை ஏன் கொல்லாமல் விட்டுச் சென்றான் என்று தெரியவில்லை. நினைவுகள் மங்கிக் கொண்டிருந்தன. உயிர் சாகத் துடித்துக் கொண்டிருந்தது. யாரோ போலீஸ்காரர் வெள்ளையாக இருந்தார். வானத்திலிருந்து வந்த வெள்ளைப் போலீஸா அல்லது இயேசுநாதரா என்று தெரியவில்லை. என் கட்டுகளை அவிழ்த்தார். என் கால் விலங்குகளை உடைத்தார். மடியில் கிடத்தி, வாயில் நீரூற்றினார். மருந்து போட்டார். என் காதருகே பிராயச்சித்தம் என்றார். போர்வையால் போர்த்தினார். வானத்தில் பறந்து மறைந்து சென்றார். பிறகு தோன்றினார். எனக்கு உணவூட்டினார். மறைந்தார். தோன்றினார். ஒரு நாள் மறைந்தே விட்டார். ரணத்தோடு எழுந்தேன். வெகு தூரம் நடந்து, பிச்சை எடுத்து உண்டு, அந்தப் புதிய இடத்தில் ஓர் அரசாங்க ஆஸ்பத்திரியில் சேர்ந்தேன். என்னை யாருக்கும் தெரியவில்லை. வானத்திலிருந்து வந்த வெள்ளைப் போலீஸ் அல்லது இயேசுநாதர் எனக்கு அப்படி ஓர் பாதுகாப்பை அளித்திருந்தார். அவரை என்னால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ‘மறைந்திரு’ என்றார். நானும் மறைந்திருக்கிறேன். இன்னும் மறைந்துகொண்டேயிருக்கிறேன். சுதந்திரத் தாய் வெற்றி கொண்ட பின் வரலாம் என்றிருக்கிறேன்.’ கிழவன் பேச்சை முடித்துவிட்டு வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

பிறகு எழுந்து, ‘உன்னிடம் சொன்னதை யாரிடமும் சொல்லாதே. நான் மறையப் போகிறேன். யாரிடமும் சொல்லாதே’ என்று எழுந்து என்னைப் பார்த்து மலங்கலாக விழித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு  ‘வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு வயல்களினூடே ஓடி, பார்வையிலிருந்து மறைந்தான்.

நான் திகைத்து நின்றிருந்தேன். கண்டதெல்லாம் கனவா அல்லது நினைவா என்ற பிரமை ஏற்பட்டது. மனம் துயரமாக இருந்தது. சிந்தனையிலேயே தென்னந்தோப்பையும் வயல்வெளிகளையும் கடந்து சாலைக்கு வந்தேன். சாலையில் என் ஸ்கூட்டர் மட்டும் நின்றிருந்தது. சாவி ஸ்கூட்டரிலேயே இருந்தது. இந்திரஜித் என்னைச் சந்தித்ததும் என் ஸ்கூட்டரை வாங்கிச் சென்றதும் உண்மைதானா என்று சந்தேகம் ஏற்படும் படியாக ஸ்கூட்டர் சாவியுடன் நின்று கொண்டிருந்தது. சாலையில் ஒருவரும் இல்லை.

*******

புதிய பார்வை, 16-30 ஜூன் 1993

தட்டச்சு :  சென்ஷி,      பிரதி  உதவி : அஜய் (சிலிகான் ஷெல்ஃப்)

Oct 4, 2011

நினைவோடை : பிரமிள் – சுந்தர ராமசாமி

(தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்)

சிவராமூவை (பிரமிள்) நான் நேரில் பார்ப்பதற்கு முன்பே அவர் மீது எனக்குக் கவர்ச்சியும், கவர்ச்சியினால் ஒரு மானசீக உறவும் ஏற்பட்டிருந்தது. அவர் சாதாரணமானவர் அல்ல என்ற நினைப்பு எப்படியோ மனதிற்குள் வந்திருந்தது. முதலில் படித்த ஒருவருடைய எழுத்து எது என்பதையோ, முதலில் ஒருவரைப் பார்த்தது எப்போது என்றோ சொல்லும்போது என் ஞாபகம் பற்றிச் சிறிது நம்பிக்கையில்லாமல்தான் இருக்கிறது. சிறு பிசகு அதில் இருக்கலாம். பெரிய பிசகு இருக்காது என்று நினைக்கிறேன். சிவராமூ எழுத்துவில் எழுதியிருந்த எஸ். பொ.வின் ‘தீ’ பற்றியSURApramizh கடிதம் மனதில் நன்றாகப் பதிந்திருந்தது. அது ஒரு விளாசல் கடிதம். விளாசல்கள் மீது எனக்கும் நம்பிக்கும் அந்த வயசில் ரொம்பக் கவர்ச்சி இருந்தது. எல்லாவற்றையும் நொறுக்கி எறியவேண்டும்! அந்த ஆவேசம்தான் மனதிற்குள். ஆவேசம் ஏற்படும்போது சந்தோஷமாக இருந்தாலும் பின்னால் தனியாக நான் யோசிக்கும்போது குறையாக இருந்தது. ‘தீ’ என்ற நாவலை நான் அப்போது படித்ததில்லை.

‘தீ’ வணிக எழுத்தல்ல. சிவராமூவின் விமர்சனத்திலிருந்தே அதை ஊகிக்க முடிந்தது. எஸ். பொ. தீவிரமாக எதையோ சொல்ல முயன்றிருக்கிறார். வழக்கத்திற்கு மாறாக ஏதோ ஒன்று. பழமையான மதிப்பீடுகளைக் குலைத்துப்போடப் பார்த்திருக்கிறார். அதில் அவர் வெற்றிபெறாமல்கூடப் போயிருக்கலாம். சிவராமூ சொல்கிற கருத்துக்கள் எல்லாமே சரி என்று வைத்துக் கொண்டாலும்கூட எதற்கு இவ்வளவு காரமான tone என்று நினைத்தேன். சிவராமூவைச் சந்தித்து, ‘ஓர் உயிரும் ஈருடலும்’ ஆன பின்பு பல சந்தர்ப்பத்திலும் இந்தக் கடிதத்தைப் பற்றிப் பேசியிருக்கிறேன். நிறைய விவாதித்திருக்கிறோம். அதற்குள் ‘தீ’யைப் படித்திருந்ததால் சிவராமூவின் கடிதத்தை நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்திருந்தது. எஸ். பொ.வை அவருடைய குறைகளுக்காக விமர்சிக்க வேண்டுமா அல்லது நிராகரிக்க வேண்டுமா என்பதைத்தான் சம்பாஷணைப் பாங்கில் நான் சிவராமூவிடம் ஒன்றிரண்டு முறை கேட்டேன். சிவராமூ தன்னை நியாயப்படுத்திப் பேசிக்கொண்டே இருந்தார். அவராகச் சில சமயம் தன்னை மறுபரிசீலனை செய்து சில சறுக்கல்களையும் அபூர்வமாக ஒத்துக்கொண்டு இருக்கிறார்.

திருவல்லிக்கேணியில் தமிழ்ப் புத்தகாலயமும் ஸ்டார் பிரசுரமும் ஒன்றாக இருந்த காலத்தில் தினமும் மாலையில் ஐந்தாறு எழுத்தாளர்கள் அங்கு வந்து கூடுவார்கள். க. நா. சு., செல்லப்பா, கு. அழகிரிசாமி மூவருக்கும் நிரந்தர ஆஜர் உண்டு. சில நாட்களில் அழகிரிசாமியுடன் நா. பார்த்தசாரதியும் சேர்ந்து வருவார். நானும் நம்பியும் சென்னையில் இருந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் தவறாமல் ஆசையுடன் அங்கு போவோம். கிண்டலும், கேலியும், நகைச்சுவையும் வெளிப்படும் அட்டகாசமான பேச்சுக்களாக இருக்கும். சிவராமூ செல்லப்பாவுடன் இருந்த நாட்களில் அவரையும் அங்கு அழைத்துக்கொண்டு போவாராம். அப்போதைய சிவராமூவைப் பற்றி என்னிடம் அதிகம் சொல்லியிருப்பவர் அழகிரிசாமி. பேசாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டிருப்பார் என்பதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்வார். அவருடைய கலகலப்பான சுபாவத்தால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடிந்திருக்கவில்லை போலிருந்தது. சிவராமூவுக்கு அப்போது வயசு மிகக்குறைவு. சென்னையும் அவருக்கு அன்னியமானது. அவரைச் சுற்றி எப்போதும் இருந்ததும் சீனியர் எழுத்தாளர்கள். இவையெல்லாம் காரணமாக இருந்திருக்கலாம் என்று நான் சொல்வேன். அழகிரிசாமி அவருடைய பேச்சுச் சாமர்த்தியத்திற்கு ஏற்றாற்போல், ‘ஐயா பேச வேண்டாம், ஒரு புன்னகை பூத்தால் தண்டனை உண்டா?’ என்று கேட்பார்.

ஒரு சில வருடங்களுக்குப் பின் சென்னைக்குச் சென்ற போது செல்லப்பாவுக்கு சிவராமூவைப் பற்றி ஒரு மறுபரிசீலனை உருவாகிக் கொண்டிருந்தது. சில சமயம் மனதைச் சங்கடப்படுத்தும் விதமாக நடந்துகொண்டு விடுகிறான், என்ன செய்வது என்றார். சிவராமூவின் மனதை முழுமையாக மௌனி ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததும் செல்லப்பாவுக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கலாம். சதா தன்னிடம் மௌனியைப்பற்றியே பேசிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். மௌனியைப்பற்றி சிவராமூ எழுதியிருக்கும் கத்தையையும் காண்பித்தார். பெரிய கத்தையாக இருந்தது. அதை அவர் காட்டிய முறையில் அதை வெளியிட வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இல்லை என்று தோன்றிற்று. சில விஷயங்களேனும் சிவராமூ முக்கியமாகச் சொல்லியிருப்பார் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. படித்துப் பாருங்களேன் என்று நான் செல்லப்பாவிடம் சொன்னேன். கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்க வேண்டும் என்றார் அவர். தொடர்ந்து எழுத்தைப் படித்துக்கொண்டிருந்த எனக்கு என்னிடம் காட்டிய கையெழுத்துப் பிரதியிலிருந்து செல்லப்பா அதிகமாகத் தேர்வு செய்யவில்லை என்றுதான் தோன்றிற்று.

ஒரு முறை அவர் சென்னைக்கு வந்தபோது - 1972 ஆக இருக்கலாம் - எனக்கு எழுதிய கடிதங்களில் எல்லாம் நாகர்கோவில் வர விருப்பம் தெரிவிக்கும் வரிகள் இருந்தன. வெளிப்படையாகச் சொல்லாத தினுசில். பத்மநாபன் தன்னை அழைத்திருப்பதாகவும் தனக்குத் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப் போகிறார் என்றும் எழுதியிருந்தார். பத்மநாபன் டில்லியிலிருந்து நாகர்கோவில் வந்து ஆரல்வாய்மொழி அண்ணா கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். இங்கிலீஷ் பேராசிரியர். ஒரு ஆசிரியராக அவருக்கு மிகவும் நல்ல பெயர் ஏற்பட்டிருந்தது. அவரும் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் சிவராமூவை, தான் அழைத்திருப்பதாகச் சொன்னார். அவரைத் தங்கவைக்க இடம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். நானும் அவரும் சேர்ந்து சிவராமூவைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பத்மநாபனுக்கு இருக்கிறதோ என்று நினைத்தேன். ஆனால் நான் அதிகமாகச் சம்பந்தப் பட்டுக் கொள்ளவில்லை. என் நிலை மோசமாக இருந்தது. வீட்டில் பிரச்சினைகள். வியாபாரத்திலும் பிரச்சினைகள். நம்பியைக்கூட அதிகம் பார்க்காமல் இருந்தேன்.

இந்நிலையில் சிவராமூ என் பொறுப்பில் வந்தால் சரிவர அந்தக் காரியத்தைச் செய்ய முடியாது என்று நினைத்தேன். அவர் சில மாதங்களேனும் இங்கு தங்கியிருக்க வேண்டும் என்ற யோசனையுடன் வருகிறார் என்பதும் தெரிந்தது. அவர் தங்கும் விஷயமாக நான் நிறைய பொறுப்புக்கள் எடுத்துக் கொள்ளும்படியாகத் தான் சந்தர்ப்பங்கள் உருவாகும்.

சிவராமூவுக்கு என் நிலையை மறைமுகமாகத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினேன். அவரைச் சந்திப்பதிலும், பேசுவதிலும் எனக்கும் நம்பிக்கும் இருக்கும் ஆசையைத் தெரிவித்திருந்தேன். மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. அவருடன் பேச ஆசைப்படும் விஷயங்கள் நிறைய இருந்தன. அவர் மர்மமாக இருந்தார். அவரைச் சுற்றியிருந்த மர்மங்களை எல்லாம் விரட்டிவிட்டு அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவருடைய வாசிப்பு, வேறு பாஷை எழுத்தாளர்களைப் பற்றியும், தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியும் அவருடைய அபிப்பிராயங்கள், திருகோணமலைப் பின்னணிகள், ஓவியம் பற்றிய ஈடுபாடுகள், ஆத்மீக ஞானம் பற்றிய அனுபவங்கள், ஜே. கிருஷ்ணமூர்த்தி, கவிதை சம்பந்தமாக அவர் தெரிந்து வைத்துக்கெண்டிருக்கும் ரகசியங்கள், இருந்திருந்து சிவானந்த சரஸ்வதியிடம் எப்படி அபிமானம் ஏற்பட்டது . . . இப்படிப் பல விஷயங்கள். சிவராமூவுக்கு எழுதிய கடிதத்தில் என் பிரச்சினைகளைச் சொல்லி, நான் விரும்பும் காரியங்கள் எதையுமே சந்தோஷமாகச் செய்ய முடியாத சோதனை இருப்பதையும் எழுதியிருந்தேன்.
ஒருநாள் சிவராமூ என் வீட்டுக்கு வந்தார். கையில் பெட்டியுடன், வேறு சில பைகளுடன். அறையைக் காலி செய்துவிட்டு வருவது தெரிந்தது. ‘சென்னையிலிருந்து நேராக வருகிறேன்’ என்றார். களைத்துப்போய் பறட்டையான கோலத்தில் இருந்தார். குளித்துவிட்டு வந்தபோது முகம் புதுசாக இருந்தது. அன்று என் வீட்டில் என் நண்பர்களான எழுத்தாளர்கள் ஒன்றிரண்டு பேர் இருந்தார்கள். காசியபன் இருந்தார். அது நல்ல ஞாபகம். கூட இருந்தது யார் என்பது ஞாபகம் இல்லை.

காசியபனுக்கு சிவராமூவை அறிமுகப்படுத்தி வைத்தேன். இவரா சிவராமூ என்று சத்தமாகக் கேட்டார். தன் ஜன்மத்தில் அவரைப் பார்க்க வாய்க்கும் என்று நினைத்திருக்கவில்லை போல் இருந்தது. நாகர்கோவிலில் அவர் இருந்த காலத்தில் நான் அவரை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் போதெல்லாம் ஏறத்தாழ இதே மாதிரி தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எனக்கு இது ஒருவிதமான சந்தோஷத்தையும் பெருமையையும் தந்தது. ஒவ்வொரு தடவை இப்படி நடக்கும்போது நான் சிவராமூவின் முகத்தைக் கவனிப்பேன். எதுவுமே நடக்காத மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு இருப்பார். அவரது சுபாவத்தில் இருந்த விசித்திரங்களையும் தந்திரங்களையும் கண்டு பிடிப்பதில் எனக்கும் நம்பிக்கும் ஒரு போட்டி இருந்தது. ஒவ்வொரு சமயம் நம்பியைச் சந்திக்கும்போதும் நாலைந்து புதிய கண்டுபிடிப்புகளைச் சொன்னேன். ஒரு தடவை நம்பி, ‘நான் உங்ககிட்ட தோத்துப் போயாச்சு, ஆளை விட்டுடுங்கோ’ என்றான். சிவராமூ விடம் மிக நெருக்கமாகிக் கொஞ்சலும் கேலியும் இருந்த காலத்தில் நானும் நம்பியும் மாற்றி மாற்றி ஸ்வரம் வாசிக்கும் நாதஸ்வரக்காரர்கள் மாதிரி சிவராமூ வின் தந்திரங்களை அவரிடமே அவிழ்த்து விடுவோம். அவருக்குச் சந்தோஷம் தாங்காது. நாங்கள் சொல்லும் ஒவ்வொன்றுக்கும் பெரிதாகச் சிரிப்பார். ஒரு தடவை, ‘ஓய், சூது வாது இல்லாம உலகத்தில பொழைக்க முடியாது சாமி’ என்றார்.

ஒவ்வொரு தடவை ஆரல்வாய்மொழியிலிருந்து சிவராமூ நாகர்கோவில் வரும்போதும் அவருடைய தங்கல்பற்றி விசாரிப்பேன். ‘போகுது ஓய், எல்லாம் டேர்ற்றி பிஸினஸ்’ என்பார். என்ன சொல்கிறார் என்பது புரியவேயில்லை. ஒரு நாள் இரண்டு நாள் என்னுடன் இருந்துவிட்டு மீண்டும் ஆரல்வாய் மொழிக்குப் போவார். நாகர்கோவிலில் இருக்கும்போது நான் அவருடன் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பே கிடையாது. அவர் அவருடைய உலகத்துக்குள்ளேயே ஆழ்ந்து கிடப்பார். படுத்துக்கொண்டே தியானம். கொஞ்சம் கொஞ்சம் படிப்பார். அவர் வெரோஷியஸ் ரீடரே அல்ல. தியானத்தில் எந்த வகை என்று கேட்டிருக்கிறேன். கிருஷ்ணமூர்த்தி என்பார். அல்லது ஜிட்டு என்பார். ஜே. கே. என்று சொல்வது அவருக்குப் பிடிக்காது. ‘மதராஸிலே ஜெயகாந்தன ஜே. கே. னு சொல்றாங்க ஓய்’ என்பார். நானும் அவரும் தியானத்தைப் பற்றி ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருப்போம். ஓஷோ பற்றி ஒரே பேச்சாக இருந்த காலம். ‘உங்களுக்குப் பிடிக்குமா?’ என்று கேட்டிருக்கிறேன். ‘நமக்கு ஒத்து வராது ஓய்’ என்று சொல்லியிருக்கிறார்.

உணவைப் பற்றியோ, ஆடை பற்றியோ அவருக்குக் கவனமே கிடையாது. உயிர் வாழ உண்ண வேண்டியிருக்கிறது. அம்மணமாக இருந்தால் பார்ப்பவன் உதைப்பான். அதற்கு மேலாக எதுவுமில்லை. என் வீட்டு மொட்டை மாடியின் நடுவிலிருந்த ஒரு கூரையின் நிழல் பன்னிரண்டு மணி வரையிலும் பக்கவாட்டில் இருக்கும். அந்த நிழலுக்குமேல் ஒரு பலாமரத்தின் கிளைகளும் வீச்சாக இருக்கும். அந்த இடத்தில் வெறும் தரையில் படுத்துக்கொண்டிருப்பார். திடீரென்று எழுந்திருந்து வெளியேபோய் சுற்றிவிட்டு வருவார். எங்கு போவார் என்பது தெரியாது. திரும்பி வரும்போது முகத்தைப் பார்த்தால் நாலைந்து மைல்கள் சுற்றியிருப்பதுபோல் தோன்றும். ஒரு காசு வீணாக்கமாட்டார். செலவழிக்கவே யோசிப்பார். பணமும் கையில் மட்டாகத்தான் எப்போதும் இருக்கும்.

ஆரல்வாய்மொழியில் அவர் அறை இருந்தாலும் பெரும்பாலும் அவர் என்னுடன்தான் இருப்பார். அப்படி இருப்பது திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. பேசிக்கொள்ளவும் பரஸ்பரம் கேலிசெய்து கொள்ளவும் நிறைய சந்தர்ப்பங்கள் கிடைத்துக்கொண்டிருந்தன. தோசை சாப்பிடுவதில் எனக்கு இருந்த பலவீனத்தை அவர் பலமாகப் பிடித்துக்கொண்டு கேலி செய்வார். எதாவது பிரச்சினைகளுக்கு நான் தரக்கூடிய விளக்கம் அவருக்குப் பிடிக்காமல் போகிறபோது, ‘உமக்குத் தோசை திங்கத்தான் தெரியும்’ என்பார். நம்பி, கூட இருந்தான் என்றால், ‘மாலாடு பிடிக்கும் என்று அவர் அம்மா சொல்லியிருக்கா’ என்று அவரை மேலும் தூண்டி விடுவான். இதுபோல் என்னை இறக்க அவரிடம் பல பிடிகள் இருந்தன. அதை உரிய சந்தர்ப்பத்தில் பயன்படுத்தவும் அவருக்குத் தெரியும்.

திடீரென்று ஒரு நாள் பெட்டி படுக்கையுடன் சிவராமூ என் வீட்டுக்கு வந்தார். அலங்கோலமாக இருந்தார். என்ன என்று கேட்டேன். ‘பெரிய சிக்கல் ஓய்’ என்றார். அதைப்பற்றிப் பின்னால் பேசிக்கொள்ளலாம் என்றேன். சொன்னார். தெளிவாகவே சொல்லவில்லை. அவருடைய வாழ்க்கையில் நடந்த எந்த விஷயத்தைப்பற்றிக் கேட்டாலும் சொற்ப வார்த்தைகளில் மென்று துப்புவார். நான் மீண்டும் மீண்டும் கேட்டு ஒரு மாதிரி விஷயத்தைப் புரிந்துகொண்டேன்.
டி. பி.யைக் கவனித்துக் கொண்டிருந்த கிழவியின் மகளுடன் அவருக்கு ஏதோ தகராறு ஏற்பட்டுவிட்டது. ‘அந்தப் பெண் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்திருக்கிறாள். நான் வந்துவிட்டேன்’ என்றார். அதற்குமேல் அவரிடமிருந்து புரிந்துகொள்ள முடியவில்லை.

எனக்கும் நம்பிக்கும் முப்பது வருடங்களில் ஏற்பட்ட நெருக்கமானது சிவராமூவுடன் நாலைந்து மாதங்களிலேயே எனக்கு ஏற்பட்டுவிட்டது. அவர் கொள்ளும் கோபங்கள் எல்லாம் எனக்குள் பெரிய வலியை ஆரம்பத்தில் தோற்றுவித்திருக்கவில்லை. அவர் என்னை நிறைய உற்சாகப்படுத்தியிருக்கிறார். ‘அஃக்’ பரந்தாமன் பல தடவை சிவராமூவைப் பார்க்க எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். ஒரு முறை பிரம்மராஜன்கூட வந்திருந்தார். அப்போது எனக்கு பிரம்மராஜன் என்று தெரியாது. ஏதோ ஒரு கல்லூரி மாணவர் என்றுதான் பதிவாகியிருந்தது. அவரும்கூட சிவராமூவைப் பார்க்கத் தான் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார் என்று நினைக்கிறேன். அப்படிப் பலரும் அவரைப் பார்க்க வருவதுண்டு. அஃக் பரந்தாமன் சிவராமூவின் கவிதைகளைத் தொகுத்து ஒரு புத்தகம் போட்டிருந்தார். அவருடைய முதல் கவிதைத் தொகுப்பு என்று நினைக்கிறேன். அதற்கு சாமிநாதன் தான் முன்னுரை எழுதியிருந்தார்.

எனக்கும் நம்பிக்கும் இடையில் இருந்த அதே அளவுக்கான நெருக்கம் எனக்கு சிவராமூவுடன் நாலைந்து மாதங்களிலேயே ஏற்பட்டிருந்தது என்று சொன்னேன் இல்லையா? அது பற்றி நம்பிக்கு உள்ளூர வருத்தம் இருந்தது. சில சமயங்களில், சிவராமூவுடன் நெருங்கிப் பழகாதீர்கள் என்று சொல்லுவான். ஏன் என்று கேட்பேன். அவரிடம் ஒருவித துர்புத்தி இருக்கிறது என்று சொல்லுவான். தனக்குச் சொந்தமாக இருந்த ராமசாமியை சிவராமூ வந்து எடுத்துக் கொண்டுவிட்டான் என்ற எண்ணம் நம்பி மனதில் இருந்ததாக எனக்குத் தோன்றியது. அந்த ஆற்றாமை காரணமாகத்தான் அவன் என்னை எச்சரிப்பதாக நான் எடுத்துக்கொண்டேன். பொதுவாகவே நான் அவனுடன் எந்த விஷயம் குறித்தும் எதிர்வாதம் செய்ய மாட்டேன். அவனிடம் லேசாகச் சொல்லிப் பார்ப்பேன். அதன் பின் விட்டு விடுவேன். ஏனென்றால் உணர்ச்சிபூர்வமாக ஒரு விஷயத்தைப்பற்றிப் பேச்சு நகரும்போது அவனால் அதை ஒரு பிரச்சினையாகத்தான் சொல்ல முடியுமே தவிர விவாதமாகக் கொண்டு போக முடியாது.

சிவராமூ யாராவது ஒருவரது வீட்டில் தங்கினார் என்றால் அந்த வீட்டிலிருப்பவர்களிடையே, கணவன் மனைவியிடையேகூட ஒரு பிரச்சினை நிச்சயம் உருவாகி விடும். பெரும்பான்மையான குடும்பங்களில் அப்படி நடந்திருக்கிறது. எங்கள் வீட்டில் அப்படியான பிரச்சினை வரவில்லை. ஆனால் அவர் கமலாவிடம் பேசும் போது என் மீது சந்தேகம் வரும்படியாக ஏதாவது பேசுவார். கிண்டல் மாதிரியும் இருக்கும். ஆனால் ஒருவித விஷ ஊசியை மறைத்துக் கொண்டிருப்பாகவும் தோன்றும். எங்கள் வீட்டில் அவரது முயற்சி ஏனோ வெற்றி பெறவில்லை. இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்திருந்தால் ஒருவேளை வெற்றி அடைந்திருந்தாலும் அடைந்திருக்கும். நம்பியின் வீட்டில் ஒரு பத்துப் பதினைந்து நாட்கள்தான் தங்கியிருந்தார். அதற்குள் அவனுக்கும் அவனது மனைவிக்கும் இடையில் ஒருவித மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டது. கொஞ்ச நாளில் அவர் அங்கிருந்து எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார். ‘நம்பியை இனி ஜென்மத்துக்கும் பார்க்க போவதில்லை’ என்று சொன்னார். அதை நம்பியிடம் சொன்னதும், அவர் என்ன அப்படிச் சொல்வது, அதற்கு முன்பே நான் அப்படித் தீர்மானித்து ஆகிவிட்டது என்று சொன்னான். இருவரிடமும் அதன் பின் பல தடவை என்ன நடந்தது என்று கேட்டிருக்கிறேன். இருவருமே எதுவுமே சொல்லவில்லை.

அவர் எங்கள் வீட்டில் தங்கியிருந்த நாட்களில் நான் என் அப்பாவுக்கு அவரை அறிமுகப்படுத்தி வைக்கவேயில்லை. சிவராமூவும் அதுபற்றிக் கவலைப்படவில்லை. எனக்கு என்ன தோன்றியது என்றால் என் அப்பாவின் மனதில் இரண்டு விதமான பட்டியல்கள் இருந்தன. பார்த்தசாரதி போன்றோரெல்லாம் ஒரு பட்டியலில் வருவார்கள். நாகராஜன் போன்றவர்கள் எல்லாம் இன்னொரு பட்டியலில் வருவார்கள். சிவராமூவையும் என் அப்பா இரண்டாவது பட்டியலில்தான் வைத்திருப்பார். எனவே, சிவராமூவை என் அப்பாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தால் ஏதாவது சண்டை வரும் என்று நினைத்து நான் அதைச் செய்திருக்கவில்லை. என் அப்பாவும் அதுபற்றி எதுவும் கேட்டிருக்கவில்லை.

கடிதம் எழுதினாரென்றால் மிகக் கடுமையாக விமர்சித்துதான் எழுதுவார். வெங்கட் சாமிநாதன் விமர்சித்து எழுதினாலும் மிகவும் மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் அவர் சொல்லும் விமர்சனங்களில் ஒரு தர்க்கபூர்வமான நியாயம் இருக்கும். சிவராமூ எழுதுவது அப்படி இருக்காது. அதோடு சாமிநாதன் எழுதியதற்கு நாம் விளக்கம் சொன்னால் அவர் அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுவார். உறவை மீண்டும் ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் சிவராமூ விடம் அது சாத்தியமில்லை. வேறு எழுத்தாளர்களுடன் எப்படி உறவு கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்த அளவில் இவ்விதமாகத் தான் இருந்து வந்தார். அதோடு சிவராமூவைப் பற்றிப் பேசும்போது வெ.சா. பற்றியும், வெ.சா. பற்றிப் பேசும் போது சிவராமூ பற்றியும் பேச வேண்டி வந்துவிடுகிறது. இரண்டு பேரும் தமிழ்ச் சூழலில் சேர்ந்தே இயங்கி வந்தார்கள் என்பதால் அது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் என்னளவில் இரண்டு பேரும் முற்றிலும் வேறான இரு நபர்கள்தான்.

அது மட்டுமல்லாமல் என்னைப் பற்றி மட்டுமல்ல, தமிழ் நாட்டில் இருக்கும் வேறு யாரைப் பற்றியும் எந்த விதமான விமர்சனத்தை வைப்பதற்கான அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு. அவர் சொல்பவற்றில் வெறும் கோணல் மட்டுமல்ல ஒருவித குரூரமும் இருக்கும். தினமணியில் வேலை கிடைத்ததும் கொல்லிப் பாவையை ராஜமார்த்தாண்டன், ராஜகோபாலிடம் ஒப்படைத்துவிட்டு மதுரைக்குப் போய்விட்டிருந்தார். ராஜகோபால் என்னைச் சந்தித்து எட்டு இதழ்கள் தன்னால் கொண்டு வர முடியும் என்றும் நான் கொஞ்சம் ஆதரவு தந்தால் உற்சாகமாக அதைச் செய்ய முடியும் என்றும் சொன்னார். நானும் என்னால் முடிந்த ஆதரவைத் தந்து வந்தேன். இது சிவராமூவுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. சிவராமூ ஏதாவது படைப்பை அனுப்பினாலும் ராஜகோபால் அதை வெளியிடத்தான் போகிறார். இத்தனைக்கும் பலருக்கும் என் மீது இருப்பதைவிட அதிக ஈடுபாடு சிவராமூ பேரில் இருந்திருக்கிறது. ராஜகோபால், ராஜமார்த்தாண்டனுக்கும் சிவராமூ பேரில் ஒருவித ஈர்ப்பும் மதிப்பும் இருந்திருக்கிறது. அது மிகவும் இயல்பான மிகவும் சாதாரணமான விஷயம்தான். நுட்பமான வாசகர் ஒருவர் அவர் பேரில் ஈடுபாடு கொள்வது என்பது மிகவும் இயல்பான விஷயம்தான். ராஜகோபாலுக்கு என்னைப் பற்றிக் கெட்டவார்த்தைகள் போட்டு -அவற்றையெல்லாம் வெளியில் சொல்லவே முடியாது -கடிதம் எழுதியிருக்கிறார். அதுபோல் பலருக்கும் எழுதியிருப்பார் என்றுதான் நான் நம்புகிறேன்.

அதன் பின் இரண்டு மூன்று வருடங்கள் கழித்து ராஜமார்த்தாண்டன் எங்கள் கடைக்கு வந்தார். அவர் சொன்னார், சிவராமூவும் வந்திருக்கிறார் என்று. எங்கே என்று கேட்டேன். வெளியில் நின்றுகொண்டிருக்கிறார் என்றார். இது அவருடைய குணம். நம்மைத் தர்மசங்கடத்துக்கு ஆளாக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதைச் செய்வார். பலவிதங்களில் அதைச் செய்வார்.

‘ஏன் வெளியில் நிற்கிறார்’ என்று கேட்டேன். ‘உள்ளே வரத் தயக்கமாக இருக்கிறது அவருக்கு’ என்று சொன்னார் ராஜமார்த்தாண்டன். ‘இது ஒரு வியாபார நிலையம்தானே. இங்கு யார் வேண்டுமானாலும், வரலாம். போகலாம்’ என்று சொன்னேன். போய் அழைத்து வந்தார். சௌக்கியமாக இருக்கிறீர்களா என்று கேட்டேன். இருக்கிறேன் என்று சொன்னார். கடையில் உள்ளே ஒரு அறை இருந்தது. அங்கு போனேன். அவர்கள் இருவரும் வந்தார்கள். சிவராமூ எதுவுமே பேசவில்லை. நாங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அதன் பின் இருவரும் போய்விட்டார்கள். அப்போது அவர் ராஜமார்த்தாண்டனுடன் தங்கியிருந்தார்.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து சிவராமூ மட்டும் கடைக்கு வந்தார். என்னிடம் இருந்து வாங்கியிருந்த நாற்பது பக்கம் நோட்டையோ எதையோ திருப்பித்தரும் சாக்கில் வந்தார். நீங்கள் எல்லாம் கணக்கு வழக்குகளில் துல்லியமாக இருக்கக் கூடியவர்கள். இந்தப் புத்தகத்தைத் திருப்பித் தரவில்லை என்று சிவில் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தாலும் தொடுத்துவிடுவீர்கள் என்பது போன்ற ஒரு தோரணையில் அதை வந்து கொடுத்தார். அவருக்கே அவையெல்லாம் மிகையான கற்பனைகள் என்பது தெரிந்துதான் இருந்தது. அதன் பின் அப்படியே மெல்ல ஒரு பழக்கம் உருவானது. அதன் பின் ராஜமார்த்தாண்டன் திருமணத்தின்போது ஒரு மாத காலம் எங்கள் வீட்டில் இருந்தார். அடிக்கடி ராஜமார்த்தாண்டனைப் போய்ப் பார்த்துவிட்டு வருவார். அப்போது சாமிநாதனைப் பற்றிக் கடுமையாகத் தாக்கிப் பேசுவார். நீங்கள் அதையெல்லாம் அவருக்குக் கடிதம் எழுதித் தெரியப்படுத்துங்களேன் என்று சொல்லுவேன். நீங்களும் சாமிநாதனும் ஒரு கட்சி என்பது எனக்குத் தெரியும் என்று என்னைத் தாக்குவார். ‘சாமிநாதன் இப்போது விளையாடிக் கொண்டிருக்கிறான். என் வசம் நான் நூற்றுக்கணக்கான யானைகளை வைத்திருக்கிறேன். ஒரு நாள் அவற்றை அனுப்பி வைப்பேன். அப்போது அவனுக்குத் தெரிய வரும் யாருடன் மோதுகிறோம் என்பது’ என்று சொல்லுவார்.

ஒரு நாள் எனக்கு ஒரு பெரிய பில் அனுப்பியிருந்தார். என்ன என்று பார்த்தால் எங்கள் குடும்பத்தில் இருந்த எல்லோருடைய பெயரையும் எண் கணித சாஸ்திரப்படி அவர் மாற்றிக் கொடுத்ததற்கான பில் அது. அவர் மாற்றிக் கொடுத்தது வாஸ்தவம்தான். அதற்கு பில் அனுப்பியிருந்தார். கமலாவுக்கு 900 ரூபாய். எனக்கு ஆயிரம். நான் அவளைவிட வயதில் மூத்தவன். உயரமாகவும் வேறு இருக்கிறேன். அதனால் எனக்கு நூறு ரூபாய் அதிகம். இப்படி வீட்டில் இருந்த எல்லோருக்கும் பெயரை மாற்றிய கணக்கில் ரூபாய் முப்பத்தைந்தாயிரம் நான் தரவேண்டும் என்று ஒரு பில் அனுப்பியிருந்தார். நான் அதற்குப் பதில் போடவேயில்லை. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. நாங்கள் சொல்லி அவர் பார்க்கவில்லை என்பதெல்லாம் அவருக்கு நன்கு தெரியும். இருந்தாலும் அப்படி எழுதினார். அதோடு நிற்காமல் நண்பர்கள் எல்லோருக்கும் ஒரு கடிதம் எழுதினார். ராமசாமி எனக்கு முப்பத்தைந்தாயிரம் ரூபாய் தரவேண்டியிருக்கிறது. நான் ரொம்பவும் கஷ்டப்படக்கூடியவன் என்பது உங்களுக்குத் தெரியுமே. ராமசாமியிடம் வசதி இருக்கிறது. இந்நிலையில் எனக்குச் சேர வேண்டிய முப்பத்தைந்தாயிரத்தை நீங்கள்தான் கேட்டு வாங்கித்தர வேண்டும் என்று கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதம் கிடைத்தவர்களில் ஒருவர்கூட, அவருடன் தங்கியிருந்தபோது அவர் உனக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார். அதோடு அவருக்கு இந்த விஷயங்களில் நம்பிக்கை கிடையாது. அவரிடம் போய் இப்படிக் கேட்பது சரியல்ல என்று -எனக்குத் தெரிந்து ஒருவர்கூட - எழுதியிருக்கவில்லை. ஆனால் பணத்தைக் கொடுத்துவிடும்படி பலர் எனக்குக் கடிதம் போட்டார்கள். தமிழ்ச் சூழல் மோசமாக இருக்கிறது என்பதுதான் எனக்கு உறுதிப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அந்தக் காரியத்தைச் செய்துவந்தார். என்னுடைய எல்லாக் கஷ்டங்களுக்கும் ராமசாமி பணம் தராததுதான் காரணம் என்று பார்க்கும் ஆட்களிடம் எல்லாம் சொன்னார்.

அப்போது மதுரையில் இருந்து வைகை பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. குமாரசாமிதான் அதன் எடிட்டராக இருந்தார். மோகனும் அவருக்கு உதவியாக இருந்தார். ‘அக்ரஹாரத்தில் கழுதை’ படத்தைப் பற்றி மூன்று பேருடைய விமர்சனத்தை அந்த இதழில் வெளியிட்டிருந்தார்கள். ஒன்று சிவராமூவினுடையது. இன்னொன்று ஜானகிராமனுடையது. இன்னொன்று என்னுடையது. பொதுவாக வேறு யாராவது இருந்தால் அந்தக் கடிதத்தைப் பிரசுரித்திருக்கமாட்டார்கள். நான் கடுமையாகவே விமர்சித்து எழுதியிருந்தேன். வசனங்களைக் குறைத்து காட்சிபூர்வமாகச் செய்வதற்கு நிறைய ஸ்கோப் அந்தக் கதையில் இருந்தது. இருந்தும் அதை ஒரு மேடை நாடகம் போல் வசனங்களால் நிரப்பிவைத்திருந்தார். இத்தனைக்கும்சாமிநாதனுக்கு நிறைய சினிமாக்கள் பார்த்த அனுபவம் இருந்தது. நிறைய சூட்சுமங்கள் தெரிந்துமிருந்தன. இருந்தும் அந்தத் திரைக்கதையை அவர் அப்படி ஏன் எழுதினார் என்பது புரியவேயில்லை. சிவராமூ பல தடவை சொல்லியிருக்கிறார் - அந்தத் திரைக்கதை நன்றாக இல்லை, க்ரியேட்டிவாக இல்லை என்று பல குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசியிருக்கிறார். ஆனால் நான் அதைப் பொருட்படுத்தியிருக்கவில்லை. ஏனென்றால் அவரது விமர்சனங்கள் எல்லாமே அரசியல் நோக்கங்கள் கொண்டவை. இன்று ஒன்று சொல்லுவார். நாளை வேறொன்று சொல்லுவார். என்னிடம் பேசியபோது அதை விமர்சித்த சிவராமூ முன்னுரை எழுதிய அந்த வசனம் புத்தக உருவத்தில் வந்தபோது பாராட்டி எழுதியிருந்தார். அது தெளிவான அரசியல் காரணங்கள் கொண்ட அணுகுமுறைதான். அந்த முன்னுரையைச் சாமிநாதன் பொருட்படுத்தி எடுத்துக்கொண்டாரா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது சிவராமூவின் உண்மையான அபிப்ராயம் அல்ல என்பது எனக்குத் தெரியும்.

அவர் என் வீட்டிலிருந்து பெட்டியை எடுத்துக் கொண்டு முழுவதுமாகப் பிரிந்து போனது என்பது ‘ஜே.ஜே : சிலகுறிப்புகள்’ எழுதுவதற்கு முன்பேதான் என்பது நன்கு நினைவிருக்கிறது. அதன் பின் அவரை நான் பார்க்கவேயில்லை. சென்னையிலோ வேறு எங்குமோ தற்செயலாகக்கூட அவரை நான் பார்க்க முடிந்திருக்கவில்லை. முதலில் என்னை விட்டுப் பிரிந்த பிறகு சென்னையில் போய் சில காலம் இருந்தார். சினிமாவில் சேர்ந்துவிட வேண்டும் என்று அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. இவர் என்று இல்லை, இவரைவிட எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும் தமிழ்த் திரையுலகத்தினருக்கு அவர்கள் தேவையே இல்லை என்பது இவருக்கும் நன்கு தெரியும். ஒரு சாதாரண ரசிகன்கூடச் சொல்லிவிடுவான், உங்களை அவர்கள் உள்ளே சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்று. ஆனால் அவர் விடாமல் முயற்சி செய்து வந்தார்.

அதன் பின் அவர் லயத்தில் என்னைப்பற்றி என்னவெல்லாம் எழுதினாரோ எல்லாவற்றையும் ஒன்றுகூட விடாமல் படித்திருக்கிறேன். அவர் என்ன நினைத்தாரென்றால் தனது வசைகளின் மூலம் என்னை அழித்து விட முடியும் என்று நினைத்தார். அவர் தாக்கி எழுதினால் ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ அழிந்துபோய்விடும் என்று நினைத்தார். பல நண்பர்கள்கூடச் சொன்னார்கள். அந்தக் கட்டுரை வந்ததும் ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ அழிந்துபோய்விட்டது என்று. நான் அப்படி நினைக்கவில்லை. ஆனால் அவர் அப்படி இந்த ஒரு நாவலை மட்டும் குறிப்பிட்டு ஏன் தாக்கிவந்தார் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. தமிழில் எத்தனையோ நாவல்கள் வந்திருக்கின்றன. அந்த நாவல் ஏன் அவரை அவ்வளவு சங்கடப்படுத்தவேண்டும். தனக்குப் பிடிக்கவில்லையென்றால் அதை விட்டு விட்டுத் தாண்டி ஏன் அவரால் போக முடியவில்லை. தமிழ்ச் சமூகத்தில் அந்த நாவலுக்கு இருக்கும் இடத்தைப் பற்றி, அவரது நண்பர்கள் அதைப்பற்றிச் சொல்வதுபற்றி அவர் ஏன் கவலைப்படவேண்டும். அந்த நாவலுக்கு ஏதோ சர்வதேச அளவில் முக்கியத்துவம் கிடைத்தது போல் என் மீதான வெறுப்பை அதன் மூலம் அவர் வெளிப்படுத்திவந்தார்.

நான் ஒரு பேட்டியில், தமிழில் மேஜர் பொயட்டே இல்லை, மைனர் பொயட்ஸ்தான் இருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தேன். அது அவரைக் குறித்துச் சொன்னதாகத்தான் அவர் நினைத்துக்கொண்டார். நான் அப்படிச் சொல்லியிருக்கவில்லை. என்றாலும் அவர் ஒரு மைனர் பொயட்தான் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. இவரை மேஜர் பொயட் என்று சொன்னால் கம்பனை என்னவென்று சொல்லுவீர்கள். பாரதியை என்னவென்று சொல்லுவீர்கள். அவர்களைச் சுட்டுவதற்கு ஒரு பெயர் இருக்க வேண்டுமே. சிவராமூ கவிதைகள் அதிகமாக ஒன்றும் எழுதியிருக்கவில்லை. ஒருவேளை அவர் தன் முழுக் கவனத்தையும் கவிதைகளுக்கு மட்டுமே செலவழித்திருந்தாரென்றால் அப்படி ஆகியிருக்கக்கூடும். இன்னொரு வகையில் சொல்வதானால் அவரது சுபாவத்தினால் அதிகமும் நஷ்டமடைந்தது அவர்தான். பாரதியோடு எல்லாம் அவரை ஒப்பிடவே முடியாது. முதலாவதாகப் பாரதி அளவுக்கு இவருக்கு, சமுதாய அக்கறை கிடையாது. எந்தத் தேசத்திலிருந்து வந்தார், அந்தத் தேசத்தின் இன்றைய நிலை என்ன? அதுபற்றி அவருக்கு எந்த அக்கறையும் இருந்தது கிடையாது. மனிதனுக்கும் பிரபஞ்சத்துக்கும் இடையிலான உறவு பற்றித்தான் அதிகமும் பேச முற்படுகிறார். ஆனால் அப்படியான ஒருவருக்கும் அவருடைய வாழ்க்கைக்கும் இருந்த முரண்பாடு இருக்கிறதே அதுதான் மிகவும் உறுத்தலாக இருந்தது. ஓயாமல் பிறரைக் கொத்திக்கொண்டேயிருக்கும் ஒரு பாம்பு, மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையிலான இணைப்பைப் பற்றித்தான் நான் எப்போதும் சிந்தித்து வருகிறேன் என்று சொன்னால் எப்படி இருக்கும், அதுபோல்தான் சிவராமூவின் செயல்களும்.

அவரைப் போன்ற ஆட்கள் பிற நாடுகளில் பல உயரிய கலைப் படைப்புகளைப் படைத்திருக்கிறார்கள். நமது மரபில் இப்படியான ஒரு நபரை முதன் முதலாகப் பார்க்கும்போது நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. எனக்கும்கூட ஆரம்பத்தில் சில சந்தேகங்கள் இருந்தன. அவற்றுக்கு அப்போதே செவி சாய்த்திருந்தேன் என்றால் விஷயங்கள் வேறுவிதமாக நடந்திருக்கக்கூடும். ஆனால் அப்போது ஏனோ அப்படி நடக்கவில்லை. ஆனால் அவர் மூலமாகக் கிடைத்த அனுபவமானது என் நண்பர்களை நான் வடிகட்டித் தேர்ந்தெடுக்கவோ, எச்சரிக்கையாகப் பழகவோ என்னை மாற்றியிருக்கவில்லை. நண்பர்கள் வீட்டுக்கு வரக்கூடாது என்று நான் சொன்னதேயில்லை. ஓரிரு மாற்றங்கள் என்னில் ஏற்பட்டிருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் சிவராமூவை, அவருடனான அனுபவத்தை தனியான ஒன்றாகத்தான் நான் பார்த்தேன்.

என்னைத் துன்புறுத்த வேண்டும் என்று பலருக்கு ஆர்வம் இருந்து வருவது எனக்குத் தெரியும். ஆனால் அவரைப் போல் ஒரு தொழிலாக அதைச் செய்பவர்கள் வேறு யாருமே கிடையாது.

*******

நன்றி: http://sundararamaswamy.com

Oct 2, 2011

பால்வண்ணம் பிள்ளை -புதுமைப்பித்தன்

பால்வண்ணம் பிள்ளை கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தா. வாழ்க்கையே தஸ்தாவேஜிக் கட்டுகளாகவும், அதன் இயக்கமே அதட்டலும், பயமுமாகவும், அதன் முற்றுப்புள்ளியே தற்பொழுது 35 ரூபாயாகவும் - அவருக்கு இருந்து வந்தது. அவருக்குப் பயமும், அதனால் ஏற்படும் பணிவும் வாழ்க்கையின் சாரம். அதட்டல் அதன் விதிவிலக்கு.

பிராணிநூல், மிருகங்களுக்கு, முக்கியமாக முயலுக்கு நான்கு கால்கள் என்று கூறமாம். ஆனால் பால்வண்ணம் பிள்ளையைப் பொறுத்தவரை அந்த அபூர்வப் பிராணிக்கு மூன்று கால்கள்தான். சித்தPudumai_Fi உறுதி, கொள்கையை விடாமை, இம்மாதிரியான குணங்கள் எல்லாம் படைவீரனிடமும், சத்தியாக்கிரகிகளிடமும் இருந்தால் பெருங் குணங்களாகக் கருதப்படும். அது போயும் போயும் ஒரு கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தாவிடம் தஞ்சம் புகுந்தால் அசட்டுத்தனமான பிடிவாதம் என்று கூறுவார்கள்.

பால்வண்ணம் பிள்ளை ஆபீஸில் பசு. வீட்டிலோ ஹிட்லர். அன்று கோபம். ஆபீஸிலிருந்து வரும் பொழுது - ஹிட்லரின் மீசை அவருக்கு இல்லாவிட்டாலும் - உதடுகள் துடித்தன. முக்கியமாக மேலுதடு துடித்தது. காரணம், ஆபீஸில் பக்கத்துக் குமாஸ்தாவுடன் ஒரு சிறு பூசல். இவர் மெக்ஸிகோ தென் அமெரிக்காவில் இருக்கிற தென்றார். இவருடைய நண்பர் பூகோள சாஸ்திரம் வேறு மாதிரிக் கூறுகிறதென்றார். பால்வண்ணம் பிள்ளை தமது கட்சியை நிரூபிப்பதற்காக வெகு வேகமாக வீட்டிற்கு வந்தார்.

பால்வண்ணம் பிள்ளைக்கும் அவருடைய மனைவியாருக்கும் கர்ப்பத் தடையில் நம்பிக்கை கிடையாது. அதன் விளைவு வருஷம் தவறாது ஒரு குழந்தை. தற்பொழுது பால்வண்ண சந்ததி நான்காவது எண்ணிக்கை; பிறகு வருகிற சித்திரையில் நம்பிக்கை.

இப்படிப்பட்ட குடும்பத்தில் பால்வண்ணக் 'கொடுக்கு'கள் 'பேபி ஷோ'க்களில் பரிசு பெறும் என்று எதிர்பார்க்க முடியாது. பால்வண்ணம் பிள்ளையின் சகதர்மிணி, உழைப்பிலும் பிரசவத்திலும் சோர்ந்தவள். தேகத்தின் சோர்வினாலும், உள்ளத்தின் களைப்பினாலும் ஏற்பட்ட பொறுமை.

கைக்குழந்தைக்கு முந்தியது சவலை. கைக் குழந்தை பலவீனம். தாயின் களைத்த தேகம் குழந்தையைப் போஷிக்கச் சக்தியற்று விட்டது. இப்படியும் அப்படியுமாக, தர்ம ஆஸ்பத்திரியின் மருந்துத் தண்ணீரும், வாடிக்கைப் பால்காரனின் கடன் பாலுமாக, குழந்தைகளைப் போஷித்து வருகிறது. அந்த மாதம் பால் 'பட்ஜட்' - எப்பொழுதும் போல் - நான்கு ரூபாய் மேலாகி விட்டது.

இம்மாதிரியான நிலைமையில் பால் பிரச்னையைப் பற்றி பால்வண்ணம் பிள்ளையின் சகதர்மிணிக்கு ஒரு யுக்தி தோன்றியது. அது ஒன்றும் அதிசயமான யுக்தியல்ல. குழந்தைகளுக்கு உபயோகமாகும்படி ஒரு மாடு வாங்கி விட்டால் என்ன என்பதுதான்.

தெய்வத்தின் அருளைத் திடீரென்று பெற்ற பக்தனும், புதிதாக ஒரு உண்மையைக் கண்டுபிடித்த விஞ்ஞானியும், 'சும்மா' இருக்க மாட்டார்கள். சளசளவென்று கேட்கிறவர்கள் காது புளிக்கும்படி சொல்லிக் கொட்டி விடுவார்கள். பால்வண்ணம் பிள்ளையின் மனைவிக்கும் அதே நிலை ஏற்பட்டது.

பிள்ளையவர்கள் வீட்டிற்கு வரும்பொழுது, அவர் ஸ்கூல் பைனல் வகுப்பில் உபயோகித்த பூகோளப் படம் எங்கு இருக்கிறது, மாடியிலிருக்கும் ஷெல்பிலா, அல்லது அரங்கிலிருக்கும் மரப் பெட்டியிலா என்று எண்ணிக் கொண்டு வந்தார்.

வீட்டிற்குள் ஏறியதும், "ஏளா! அரங்குச் சாவி எங்கே?" என்று கேட்டுக்கொண்டே மாடிக்குச் சென்று ஷெல்பை ஆராய்ந்தார்.

அவர் மனைவி சாவியை எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்தாள். அவளுக்குப் பால் நெருக்கடியை ஒழிக்கும் மாட்டுப் பிரச்னையை அவரிடம் கூற வேண்டும் என்று உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. ஆனால் மெக்ஸிகோ பிரச்னையில் ஈடுபட்டிருக்கும் பால்வண்ணம் பிள்ளையின் மனம் அதை வரவேற்கும் நிலையில் இல்லை.

"என்ன தேடுதிய?" என்றாள்.

     "ஒரு பொஸ்தகம். சாவி எங்கே?"

     "இந்தாருங்க. ஒங்ககிட்ட ஒண்ணு சொல்லுணுமே! இந்தப் புள்ளைகளுக்குப் பால் செலவு சாஸ்தியா இருக்கே! ஒரு மாட்டெத்தான் பத்து நூறு குடுத்து புடிச்சிப்புட்டா என்ன?" என்றாள்.

     "இங்கே வர வேண்டியதுதான், ஒரே ராமாயணம். மாடு கீடு வாங்க முடியாது. எம் புள்ளெய நீத்தண்ணியை குடிச்சு வளரும்!" என்று சொல்லி விட்டார். மெக்ஸிகோ வட அமெரிக்காவிலிருந்தால் பிறகு ஏன் அவருக்குக் கோபம் வராது?

பால் பிரச்னை அத்துடன் தீர்ந்து போகவில்லை. அவர் மனைவியின் கையில் இரண்டு கெட்டிக் காப்பு இருந்தது. அவளுக்குக் குழந்தையின் மீதிருந்த பாசத்தினால், அந்தக் காப்புகள் மயிலைப் பசுவும் கன்றுக் குட்டியுமாக மாறின.

இரண்டு நாள் கழித்துப் பால்வண்ணம் பிள்ளை ஆபீஸிலிருந்து வந்து புறவாசலில் கை கழுவச் சென்ற பொழுது, உரலடியில் கட்டியிருந்த கன்று, வைக்கோல் அசை போட்டுக் கொண்டிருக்கும் மாட்டைப் பார்த்து 'அம்மா' வென்று கத்தியது.

     "ஏளா?" என்று கூப்பிட்டார்.

மனைவி சிரித்துக் கொண்டே - உள்ளுக்குள் பயம் தான் - வந்தாள்.

     "மாடு எப்பொழுது வந்தது? யார் வாங்கிக் கொடுத்தா?" என்றார்.

     "மேலவீட்டு அண்ணாச்சி வாங்கித் தந்தாஹ. பாலு ஒரு படி கறக்குமாம்!" என்றாள்.

     "உம்" என்றார்.

அன்று புதுப்பால், வீட்டுப் பால் காப்பி கொண்டு வந்து வைத்துக் கொண்டு கணவரைத் தேடினாள். அவர் இல்லை.

அதிலிருந்து பிள்ளையவர்கள் காப்பியும் மோரும் சாப்பிடுவதில்லை.

அவர் மனைவிக்கு மிகுந்த வருத்தம். ஒரு பக்கம் குழந்தைகள். மற்றொரு பக்கம் புருஷன் என்ற குழந்தை. வம்சவிருத்தி என்ற இயற்கை விதி அவளை வென்றது.

இப்படிப் பதினைந்து நாட்கள்.

மாட்டை என்ன செய்வது?

அன்று இரவு எட்டு மணி இருக்கும். பால்வண்ணம் பிள்ளையும் சுப்புக் கோனாரும் வீட்டினுள் நுழைந்தார்கள்.

     "மாட்டைப் பாரும். இருபத்தஞ்சி ரூபா!" என்றார்.

     "சாமி! மாடு அறுபது ரூபாய் பெறுமே!" என்றார் சுப்புக் கோனார். "இருபத்தைந்து தான். உனக்காக முப்பது ரூபாய் என்ன? இப்பொழுதே பிடித்துக் கொண்டு போக வேண்டும்!"

     "சாமி! ராத்திரியிலா? நாளைக்கு விடியன்னே பிடிச்சிக்கிறேன்!" என்றார் சுப்புக்கோனார்.

     "உம் இப்பவே?"

மாட்டையவிழ்த்தாய் விட்டது.

மனைவி 'மாடு எழுபது ரூபாயாயிற்றே, குழந்தைகளுக்குப் பாலாயிற்றே' என்று தடுத்தாள். மேலும் வரும்படி வேறு வருகிறதாம்.

     "என் புள்ளெகள் நீத்தண்ணி குடிச்சு வளந்துக் கிடும்" என்றார் பிள்ளை.

சுப்புக் கோனார் மாட்டை அவிழ்த்துக் கொண்டு போகும் பொழுது, மூத்த பையன், "அம்மா! என் கன்னுக் குட்டி!" என்று எழுந்து உட்கார்ந்து கொண்டு அழுதான்.

     "சும்மா கெட, சவமே!" என்றார் பால்வண்ணம் பிள்ளை.

*****

மணிக்கொடி, 30-12-1934

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்