Dec 31, 2010

அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்

மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ளே பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று பஸ்ஸுக்காகக் காத்து நின்று கொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தித் தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக் கொண்டு செல்லுகின்றனர். வழக்கமாகக் கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த சாம்பல் நிற ‘வேனு’ம் விரைகிறது. அரை மணி நேரத்திற்கு அங்கே ஹாரன்களின் சத்தமும் குளிரில் விறைத்த மாணவிகளின் கீச்சுக் குரல் பேச்சும் சிரிப்பொலியும் மழையின் பேரிரைச்சலோடு கலந்தொலித்துjayakanthan_1_050408 த் தேய்ந்து அடங்கிப் போனபின் - ஐந்தரை மணிக்கு மேல் இருபதுக்கும் குறைவான மாணவிகளின் கும்பல் அந்த பஸ் ஸ்டாண்டு மரத்தடியில் கொட்டும் மழையில் பத்துப் பன்னிரண்டு குடைகளின் கீழே கட்டிப் பிடித்து நெருக்கியடித்துக் கொண்டு நின்றிருக்கிறது.

நகரின் நடுவில் ஜனநடமாட்டம் அதிகமில்லாத, மரங்கள் அடர்ந்த தோட்டங்களின் மத்தியில், பங்களாக்கள் மட்டுமே உள்ள அந்தச் சாலையில் மழைக்கு ஒதுங்க இடமில்லாமல், மேலாடை கொண்டு போர்த்தி மார்போடு இறுக அணைத்த புத்தகங்களும் மழையில் நனைந்து விடாமல் உயர்த்தி முழங்காலுக்கிடையே செருகிய புடவைக் கொசுவங்களோடு அந்த மாணவிகள் வெகுநேரமாய்த் தத்தம் பஸ்களை எதிர்நோக்கி நின்றிருந்தனர்.

-வீதியின் மறுகோடியில் பஸ் வருகின்ற சப்தம் நற நற வென்று கேட்கிறது.

“ஹேய்.... பஸ் இஸ் கம்மிங்!” என்று ஏக காலத்தில் பல குரல்கள் ஒலிக்கின்றன.

வீதியில் தேங்கி நின்ற மழை நீரை இருபுறமும் வாரி இறைத்துக் கொண்டு அந்த ‘டீஸல் அநாகரிகம்’ வந்து நிற்கிறது.

”பை... பை”

“ஸீ யூ!”

“சீரியோ!”

-கண்டக்டரின் விசில் சப்தம்.

அந்தக் கும்பலில் பாதியை எடுத்து விழுங்கிக் கொண்டு ஏப்பம் விடுவதுபோல் செருமி நகர்கிறது அந்த பஸ்.

பஸ் ஸ்டாண்டில் பத்துப் பன்னிரண்டு மாணவிகள் மட்டுமே நின்றிருக்கின்றனர்.

மழைக் காலமாதலால் நேரத்தோடே பொழுது இருண்டு வருகிறது.

வீதியில் மழைக் கோட்டணிந்த ஒரு சைக்கிள் ரிக்‌ஷாக்காரன் குறுக்கே வந்து அலட்சியமாக நின்று விட்ட ஓர் அநாதை மாட்டுக்காகத் தொண்டை கம்மிப் போன மணியை முழக்கிக் கொண்டு வேகமாய் வந்தும் அது ஒதுங்காததால் - அங்கே பெண்கள் இருப்பதையும் லட்சியப் படுத்தாது அசிங்கமாகத் திட்டிக்கொண்டே செல்கிறான். அவன் வெகு தூரம் சென்ற பிறகு அவனது வசை மொழியை ரசித்த பெண்களின் கும்பல் அதை நினைத்து நினைத்துச் சிரித்து அடங்குகிறது.

அதன் பிறகு வெகு நேரம் வரை அந்தத் தெருவில் சுவாரசியம் ஏதுமில்லை. எரிச்சல் தரத்தக்க அமைதியில் மனம் சலித்துப் போன அவர்களின் கால்கள் ஈரத்தில் நின்று நின்று கடுக்க ஆரம்பித்து விட்டன.

பஸ்ஸைக் காணோம்!

அந்த அநாதை மாடு மட்டும் இன்னும் நடுத் தெருவிலேயே நின்றிருக்கிறது; அது காளை மாடு; கிழ மாடு; கொம்புகளில் ஒன்று நெற்றியின் மீது விழுந்து தொங்குகிறது. மழை நீர் முதுகின் மீது விழுந்து விழுந்து முத்து முத்தாய்த் தெறித்து, அதன் பழுப்பு நிற வயிற்றின் இரு மருங்கிலும் கரிய கோடுகளாய் வழிகிறது. அடிக்கடி அதன் உடலில் ஏதேனும் ஒரு பகுதி - அநேகமாக வலது தொடைக்கு மேல் பகுதி குளிரில் வெடவெடத்துச் சிலிர்த்துத் துடிக்கிறது.

எவ்வளவு நாழி இந்தக் கிழட்டு மாட்டையே ரசித்துக் கொண்டிருப்பது; ஒரு பெருமூச்சுடன் அந்தக் கும்பலில் எல்லாவிதங்களிலும் விதி விலக்காய் நின்றிருந்த அந்தச் சிறுமி தலை நிமிர்ந்து பார்க்கிறாள்.

...வீதியின் மறு கோடியில் பஸ் வருகின்ற சப்தம் நற நறவென்று கேட்கிறது.

பஸ் வந்து நிற்பதற்காக இடம் தந்து ஒதுங்கி அந்த மாடு வீதியின் குறுக்காகச் சாவதானமாய் நடந்து மாணவிகள் நிற்கும் பிளாட்பாரத்தருகே நெருங்கித் தனக்கும் சிறுது இடம் கேட்பது போல் தயங்கி நிற்கிறது.

“ஹேய்.. இட் இஸ்மை பஸ்!...” அந்தக் கூட்டத்திலேயே வயதில் மூத்தவளான ஒருத்தி சின்னக் குழந்தை மாதிரிக் குதிக்கறாள்.

“பை... பை....”

”டாடா!”

கும்பலை ஏற்றிக் கொண்டு அந்த பஸ் நகர்ந்த பிறகு, பிளாட்பாரத்தில் இரண்டு மாணவிகள் மட்டுமே நிற்கின்றனர். அதில் ஒருத்தி அந்தச் சிறுமி. மற்றொருத்தி பெரியவள் - இன்றைய பெரும்பாலான சராசரி காலேஜ் ரகம். அவள் மட்டுமே குடை வைத்திருக்கிறாள். அவளது கருணையில் அந்தச் சிறுமி ஒதுங்கி நிற்கிறாள். சிறுமியைப் பார்த்தால் கல்லூரியில் படிப்பவளாகவே தோன்றவில்லை. ஹைஸ்கூல் மாணவி போன்ற தோற்றம். அவளது தோற்றத்தில் இருந்தே அவள் வசதி படைத்த குடும்பப் பெண் அல்ல என்று சொல்லிவிட முடியும். ஒரு பச்சை நிறப் பாவாடை, கலர் மாட்சே இல்லாத... அவள் தாயாரின் புடவையில் கிழித்த - சாயம் போய் இன்ன நிறம் என்று சொல்ல முடியாத ஒருவகை சிவப்பு நிறத் தாவணி. கழுத்தில் நூலில் கோத்து ‘பிரஸ் பட்டன்’ வைத்துத் தைத்த ஒரு கருப்பு மணிமாலை; காதில் கிளாவர் வடிவத்தில் எண்ணெய் இறங்குவதற்காகவே கல் வைத்து இழைத்த - அதிலும் ஒரு கல்லைக் காணோம் - கம்மல்... ‘ இந்த முகத்திற்கு நகைகளே வேண்டாம்’ என்பது போல் சுடர் விட்டுப் பிரகாசித்துப் புரண்டு புரண்டு மின்னுகின்ற கறை படியாத குழந்தைக் கண்கள்...

அவளைப் பார்க்கின்ற யாருக்கும், எளிமையாக, அரும்பி, உலகின் விலை உயர்ந்த எத்தனையோ பொருள்களுக்கு இல்லாத எழிலோடு திகழும், புதிதாய் மலர்ந்துள்ள ஒரு புஷ்பத்தின் நினைவே வரும். அதுவும் இப்போது மழையில் நனைந்து, ஈரத்தில் நின்று நின்று தந்தக் கடைசல் போன்ற கால்களும் பாதங்களும் சிலிர்த்து, நீலம் பாரித்துப் போய், பழந்துணித் தாவணியும் ரவிக்கையும் உடம்போடு ஒட்டிக் கொண்டு, சின்ன உருவமாய்க் குளிரில் குறுகி ஓர் அம்மன் சிலை மாதிரி அவள் நிற்கையில், அப்படியே கையிலே தூக்கிக் கொண்டு போய் விடலாம் போலக் கூடத் தோன்றும்...

“பஸ் வரலியே; மணி என்ன?” என்று குடை பிடித்துக் கொண்டிருப்பவளை அண்ணாந்து பார்த்துக் கேட்கிறாள் சிறுமி.

“ஸிக்ஸ் ஆகப் போறதுடீ” என்று கைக்கடிகாரத்தைப் பார்த்துச் சலிப்புடன் கூறிய பின். “அதோ ஒரு பஸ் வரது. அது என் பஸ்ஸாக இருந்தால் நான் போயிடுவேன்” என்று குடையை மடக்கிக் கொள்கிறாள் பெரியவள்.

“ஓ எஸ்! மழையும் நின்னுருக்கு. எனக்கும் பஸ் வந்துடும். அஞ்சே முக்காலுக்கு டெர்மினஸ்லேந்து ஒரு பஸ் புறப்படும். வரது என் பஸ்ஸானா நானும் போயிடுவேன்” என்று ஒப்பந்தம் செய்து கொள்வது போல் அவள் பேசுகையில் குரலே ஓர் இனிமையாகவும், அந்த மொழியே ஒரு மழலையாகவும், அவளே ஒரு குழந்தையாகவும் பெரியவளுக்குத் தோன்ற சிறுமியின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி...

“சமத்தா ஜாக்கிரதையா வீட்டுக்குப் போ” என்று தன் விரல்களுக்கு முத்தம் கொடுத்துக் கொள்கிறாள்.

பஸ் வருகிறது... ஒன்றன் பின் ஒன்றாய் இரண்டு பஸ்கள் வருகின்றன். முதலில் வந்த பஸ்ஸில் பெரியவள் ஏறிக் கொள்கிறாள்.

“பை.. பை!”

“தாங்க் யூ! என் பஸ்ஸும் வந்துடுத்து” என்று கூவியவாறு பெரியவளை வழி அனுப்பிய சிறுமி, பின்னால் வந்த பஸ்ஸின் நம்பரைப் பார்த்து ஏமாற்றமடைகிறாள். அவள் முக மாற்றத்தைக் கண்டே இவள் நிற்பது இந்த பஸ்ஸுக்காக அல்ல என்று புரிந்து கொண்ட டிரைவர், பஸ் ஸ்டாண்டில் வேறு ஆட்களும் இல்லாததால் பஸ்ஸை நிறுத்தாமலே ஓட்டிச் செல்லுகிறான்.

அந்தப் பெரிய சாலையின் ஆளரவமற்ற சூழ்நிலையில் அவள் மட்டும் தன்னந் தனியே நின்றிருக்கிறாள். அவளுக்குத் துணையாக அந்தக் கிழ மாடும் நிற்கிறது. தூரத்தில் - எதிரே காலேஜ் காம்பவுண்டுக்குள் எப்பொழுதேனும் யாரோ ஒருவர் நடமாடுவது தெரிகிறது. திடீரென ஒரு திரை விழுந்து கவிகிற மாதிரி இருள் வந்து படிகிறது. அதைத் தொடர்ந்து சீறி அடித்த ஒரு காற்றால் அந்தச் சாலையில் கவிந்திருந்த மரக் கிளைகளிலிருந்து படபடவென நீர்த் துளிகள் விழுகின்றன. அவள் மரத்தோடு ஒட்டி நின்று கொள்கிறாள். சிறிதே நின்றிருந்த மழை திடீரெனக் கடுமையாகப் பொழிய ஆரம்பிக்கிறது. குறுக்கே உள்ள சாலையைக் கடந்து மீண்டும் கல்லூரிக்குள்ளேயே ஓடிவிட அவள் சாலையின் இரண்டு பக்கமும் பார்க்கும்போது, அந்தப் பெரிய கார் அவள் வழியின் குறுக்கே வேகமாய் வந்து அவள் மேல் உரசுவது போல் சடக்கென நின்று, நின்ற வேகத்தில் முன்னும் பின்னும் அழகாய் அசைகின்றது.

அவள் அந்த அழகிய காரை, பின்னால் இருந்து முன்னேயுள்ள டிரைவர் ஸீட் வரை விழிகளை ஓட்டி ஓரு ஆச்சரியம் போலப் பார்க்கிறாள்.

அந்தக் காரை ஓட்டி வந்த இளைஞன் வசீகரமிக்க புன்னகையோடு தனக்கு இடது புறம் சரிந்து படுத்துப் பின் ஸீட்டின் கதவைத் திறக்கின்றான்.

“ப்ளிஸ் கெட் இன்... ஐ கேன் டிராப் யூ அட் யுவர் ப்ளேஸ்” என்று கூறியவாறு, தனது பெரிய விழிகளால் அவள் அந்தக் காரைப் பார்ப்பதே போன்ற ஆச்சரியத்தோடு அவன் அவளைப் பார்க்கிறான்.

அவனது முகத்தைப் பார்த்த அவளுக்கு காதோரமும் மூக்கு நுனியும் சிவந்து போகிறது; “நோ தாங்க்ஸ்! கொஞ்ச நேரம் கழிச்சு.. மழை விட்டதும் பஸ்ஸிலேயே போயிடுவேன்..”

”ஓ! இட் இஸ் ஆல் ரைட்.. கெட் இன்” என்று அவன் அவசரப் படுத்துகிறான். கொட்டும் மழையில் தயங்கி நிற்கும் அவளைக் கையைப் பற்றி இழுக்காத குறை...

அவள் ஒரு முறை தன் பின்னால் திரும்பிப் பார்க்கிறாள். மழைக்குப் புகலிடமாய் இருந்த அந்த மரத்தை ஒட்டிய வளைவை இப்போது அந்தக் கிழ மாடு ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

அவளுக்கு முன்னே அந்தக் காரின் கதவு இன்னும் திறந்தே இருக்கிறது. தனக்காகத் திறக்கப்பட்டிருக்கும் அந்தக் கதவின் வழியே மழை நீர் உள்ளே சாரலாய் வீசுவதைப் பார்த்து அவள் அந்தக் கதவை மூடும்போது, அவள் கையின் மீது அவனது கை அவசரமாக விழுந்து பதனமாக அழுந்துகையில், அவள் பதறிப்போய்க் கையை எடுத்துக் கொள்கிறாள். அவன் முகத்தை அவள் ஏறிட்டுப் பார்க்கிறாள். அவன் தான் என்னமாய் அழகொழகச் சிரிக்கிறான்.

இப்போது அவனும் காரிலிருந்து வெளியே வந்து அவளோடு மழையில் நனைந்தவாறு நிற்கிறானே..

“ம்... கெட் இன்.”

இப்போது அந்த அழைப்பை அவளால் மறுக்க முடியவில்லையே...

அவள் உள்ளே ஏறியதும் அவன் கை அவளைச் சிறைப்பிடித்ததே போன்ற எக்களிப்பில் கதவை அடித்துச் சாத்துகிறது. அலையில் மிதப்பது போல் சாலையில் வழுக்கிக் கொண்டு அந்தக் கார் விரைகிறது.

அவளது விழிகள் காருக்குள் அலைகின்றன. காரின் உள்ளே கண்ணுக்குக் குளிர்ச்சியாய் அந்த வெளிறிய நீல நிறச் சூழல் கனவு மாதிரி மயக்குகிறது. இத்தனை நேரமாய் மழையின் குளிரில் நின்றிருந்த உடம்புக்கு, காருக்குள் நிலவிய வெப்பம் இதமாக இருக்கிறது. இந்தக் கார் தரையில் ஓடுகிற மாதிரியே தெரியவில்லை. பூமிக்கு ஓர் அடி உயரத்தில் நீந்துவது போல் இருக்கிறது.

’ஸீட்டெல்லம் எவ்வளவு அகலமா இருக்கு! தாராளமா ஒருத்தர் படுத்துக்கலாம்’ என்ற நினைப்பு வந்ததும் தான் ஒரு மூலையில் மார்போடு தழுவிய புத்தகக் கட்டுடன் ஒடுங்கி உட்கார்ந்திருப்பது அவளுக்கு ரொம்ப அநாகரிகமாகத் தோன்றுகிறது. புத்தக அடுக்கையும் அந்தச் சிறிய டிபன் பாக்சையும் ஸீட்டிலேயே ஒரு பக்கம் வைத்த பின்னர் நன்றாகவே நகர்ந்து கம்பீரமாக உட்கார்ந்து கொள்கிறாள்.

“இந்தக் காரே ஒரு வீடு மாதிரி இருக்கு. இப்படி ஒரு கார் இந்தா வீடே வேண்டாம். இவனுக்கும் - ஐயையோ - இவருக்கும் ஒரு வீடு இருக்கும் இல்லையா?... காரே இப்படி இருந்தா இந்தக் காரின் சொந்தக்காரரோட வீடு எப்படி இருக்கும்! பெரிசா இருக்கும்! அரண்மனை மாதிரி இருக்கும்... அங்கே யாரெல்லாமோ இருப்பா. இவர் யாருன்னே எனக்குத் தெரியாதே?.. ஹை, இது என்ன நடுவிலே?... ரெண்டு ஸீட்டுக்கு மத்தியிலே இழுத்தா மேஜை மாதிரி வரதே! இது மேலே புஸ்தகத்தை வச்சுண்டு படிக்கலாம். எழுதலாம் - இல்லேன்னா இந்தப் பக்கம் ஒருத்தர் அந்தப் பக்கம் ஒருத்தர் தலையை வச்சுண்டு ‘ஜம்’னு படுத்துக்கலாம். இந்தச் சின்னவிளக்கு எவ்வளவு அழகா இருக்கு, தாமரை மொட்டு மாதிரி இருக்கு. ம்ஹூம். அல்லி மொட்டு மாதிரி! இதை எரிய விட்டுப் பார்க்கலாமா? சீ! இவர் கோபித்துக் கொண்டார்னா!”

-”அதுக்குக் கீழே இருக்கு பாரு ஸ்விட்ச்” அவன் காரை ஓட்டியவாறே முன்புறமிருந்த சிறிய கண்ணாடியில் அவளைப் பார்த்து ஒரு புன்முறுவலோடு கூறுகிறான்.

அவள் அந்த ஸ்விட்சைப் போட்டு அந்த விளக்கு எரிகிற அழகை ரசித்து பார்க்கிறாள். பின்னர் ‘பவரைஇ வேஸ்ட் பண்ணப்படாது’ என்ற சிக்கன உணர்வோடு விளக்கை நிறுத்துகிறாள்.

பிறகு தன்னையே ஒரு முறை பார்த்துத் தலையிலிருந்து விழுகின்ற நீரை இரண்டு கைகளினாலும் வழித்து விட்டுக் கொள்கிறாள்.

‘ஹ்ம்! இன்னிக்கின்னு போய் இந்த தரித்திரம் பிடிச்ச தாவணியைப் போட்டுண்டு வந்திருக்கேனே’ என்று மனதிற்குள் சலித்துக் கொண்டே, தாவணியின் தலைப்பைப் பிழிந்து கொண்டிருக்கையில் - அவன் இடது கையால் ஸ்டியரிங்கிற்குப் பக்கத்தில் இருந்த பெட்டி போன்ற அறையின் கதவைத் திறந்து - ‘டப்’ என்ற சப்தத்தில் அவள் தலை நிமிர்ந்து பார்க்கிறாள் - ‘அட! கதவைத் திறந்த உடனே உள்ளே இருந்து ஒரு சிவப்பு பல்ப் எரியறதே’ - ஒரு சிறிய டர்க்கி டவலை எடுத்துப் பின்னால் அவளிடம் நீட்டுகிறான்.

“தாங்ஸ்” - அந்த டவலை வாங்கித் தலையையும் முழங்கையையும் துடைத்துக் கொண்டு முகத்தைத் துடைக்கையில் - ‘அப்பா, என்ன வாசனை!’ - சுகமாக முகத்தை அதில் அழுந்தப் புதைத்துக் கொள்கிறாள்.

ஒரு திருப்பத்தில் அந்தக் கார் வளைந்து திரும்புகையில் அவள், ஒரு பக்கம் “அம்மா” என்று கூவிச் சரிய ஸீட்டின் மீதிருந்த புத்தகங்களும் மற்றொரு பக்கம் சரிந்து, அந்த வட்ட வடிவ சின்னஞ்சிறு எவர்சில்வர் டிபன் பாக்ஸும் ஒரு பக்கம் உருள்கிறது.

“ஸாரி” என்று சிரித்தவாறே அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்தபின் காரை மெதுவாக ஓட்டுகிறான் அவன். தான் பயந்துபோய் அலறியதற்காக வெட்கத்துடன் சிரித்தவாறே இறைந்து கிடக்கும் புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டு எழுந்து அமர்கிறாள் அவள்.

ஜன்னல் கண்ணாடியினூடே வெளியே பார்க்கையில் கண்களுக்கு ஒன்றுமே புலப்படவில்லை. கண்ணாடியின் மீது புகை படர்ந்ததுபோல் படிந்திருந்த நீர்த் திவலையை அவள் தனது தாவணியின் தலைப்பால் துடைத்துவிட்டு வெளியே பார்க்கிறாள்.

தெருவெங்கும் விளக்குகள் எரிகின்றன. பிரகாசமாக அலங்கரிக்கப்பட்ட கடைகளின் நிழல்கள் தெருவிலுள்ள மழை நீரில் பிரதிபலித்துக் கண்களைப் பறிக்கின்றன. பூலோகத்துக் கீழே இன்னொரு உலகம் இருக்கிறதாமே, அது மாதிரி தெரிகிறது...!

“இதென்ன - கார் இந்தத் தெருவில் போகிறது?”

“ஓ! எங்க வீடு அங்கே இருக்கு” என்று அவள் உதடுகள் மெதுவாக முனகி அசைகின்றன்.

“இருக்கட்டுமே, யாரு இல்லைன்னா” என்று அவனும் முனகிக்கொண்டே அவளைப் பார்த்துச் சிரிக்கிறான்.

”என்னடி இது வம்பாப் போச்சு” என்று அவள் தன் கைகளைப் பிசைந்து கொண்ட போதிலும் அவன் தன்னைப் பார்க்கும்போது அவனது திருப்திக்காகப் புன்னகை பூக்கிறாள்.

கார் போய்க்கொண்டே இருக்கிறது.

நகரத்தின் ஜன நடமாட்டம் மிகுந்த பிரதான பஜாரைக் கடந்து, பெரிய பெரிய கட்டிடங்கள் நிறைந்த அகலமான சாலைகளைத் தாண்டி, அழகிய பூங்காக்களும் பூந்தோட்டங்களூம் மிகுந்த அவென்யூக்களில் புகுந்து, நகரத்தின் சந்தடியே அடங்கிப்போன ஏதோ ஒரு டிரங்க் ரோடில் கார் போய்க் கொண்டிருக்கிறது.

இந்த மழையில் இப்படி ஒரு காரில் பிரயாணம் செய்து கொண்டிருப்பது அவளுக்கு ஒரு புதிய அனுபவமானபடியால் அதில் ஒரு குதூகலம் இருந்த போதிலும், அந்தக் காரணம் பற்றியே அடிக்கடி ஏதோ ஒரு வகை பீதி உணர்ச்சி அவளது அடி வயிற்றில் மூண்டு எழுந்து மார்பில் என்னவோ செய்து கொண்டிருக்கிறது.

சின்னக் குழந்தை மாதிரி அடிக்கடி வீட்டுக்குப் போக வேண்டும் என்று அவனை நச்சரிக்கவும் பயமாயிருக்கிறது.

தன்னை அந்த பஸ் ஸ்டாண்டில் தனிமையில் விட்டுவிட்டுப் போனாளே, அவளைப் பற்றிய நினைவும், அவள் தன் கன்னத்தைக் கிள்ளியவாறு சொல்லிவிட்டுப் போனாளே அந்த வார்த்தைகளும் இப்போது அவள் நினைவுக்கு வருகின்றன: “சமத்தா ஜாக்கிரதையா வீட்டுக்குப் போ.”

’நான் இப்ப அசடாயிட்டேனா? இப்படி முன்பின் தெரியாத ஒருத்தரோட கார்லே ஏறிண்டு தனியாகப் போறது தப்பில்லையோ?.. இவரைப் பார்த்தால் கெட்டவர் மாதிரித் தெரியலியே? என்ன இருந்தாலும் நான் வந்திருக்கக் கூடாது - இப்ப என்ன பண்றது? எனக்கு அழுகை வரதே. சீ! அழக் கூடாது.. அழுதா இவர் கோபித்துக் கொண்டு ‘அசடே! இங்கேயே கிட’ன்னு இறக்கி விட்டுட்டுப் போயிட்டா? எப்படி வீட்டுக்குப் போறது? எனக்கு வழியே தெரியாதே.. நாளைக்கு ஜூவாலஜி ரெக்கார்ட் வேற ஸப்மிட் பண்ணனுமே! வேலை நிறைய இருக்கு.’

”இப்ப நாம எங்கே போறோம்” - அவளது படபடப்பான கேள்விக்கு அவன் ரொம்ப சாதாரணமாகப் பதில் சொல்கிறான்.

“எங்கேயுமில்ல; சும்மா ஒரு டிரைவ்..”

“நேரம் ஆயிடுத்தே - வீட்டிலே அம்மா தேடுவா...”

“ஓ எஸ் திரும்பிடலாம்”

-கார் திரும்புகிறது. டிரங்க் ரோடை விட்டு விலகிப் பாலைவனம் போன்ற திடலுக்குள் பிரவேசித்து, அதிலும் வெகு தூரம் சென்று அதன் மத்தியில் நிற்கிறது கார். கண்ணுக்கெட்டிய தூரம் இருளும் மழையும் சேர்ந்து அரண் அமைந்திருக்கின்றன. அந்த அத்துவானக் காட்டில்,  தவளைகளின் கூக்குரல் பேரோலமாகக் கேட்கிறது. மழையும் காற்றும் முன்னைவிட மூர்க்கமாய்ச் சீறி விளையாடுகின்றன.

காருக்குள்ளேயே ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியவில்லை.

திடீரென்று கார் நின்றுவிட்டதைக் கண்டு அவள் பயந்த குரலில் கேட்கிறாள்: “ஏன் கார் நின்னுடுத்து? பிரேக் டௌனா?”

அவன் அதற்குப் பதில் சொல்லாமல் இடி இடிப்பது போல் சிரிக்கிறான். அவள் முகத்தைப் பார்ப்பதற்காகக் காரினுள் இருந்த ரேடியோவின் பொத்தானை அமுக்குகிறான். ரேடியோவில் இருந்து முதலில் லேசான வெளிச்சமும் அதைத் தொடர்ந்து இசையும் பிறக்கிறது.

அந்த மங்கிய வெளிச்சத்தில் அவள் அவனை என்னவோ கேட்பதுபோல் புருவங்களை நெறித்துப் பார்க்கிறாள். அவனோ ஒரு புன்னகையால் அவளிடம் யாசிப்பது போல் எதற்கோ கெஞ்சுகிறான்.

அப்போது ரேடியோவிலிருந்து ஒரு ‘ட்ரம்ப்பட்’டின் எக்காள ஒலி நீண்டு விம்மி விம்மி வெறி மிகுந்து எழுந்து முழங்குகிறது. அதைத் தொடர்ந்து படபடவென்று நாடி துடிப்பதுபோல் அமுத்தலாக நடுங்கி அதிர்கின்ற காங்கோ ‘ட்ரம்’களின் தாளம்... அவன் விரல்களால் சொடுக்குப் போட்டு அந்த இசையின் கதிக்கேற்பக் கழுத்தை வெட்டி இழுத்து ரசித்தவாறே அவள் பக்கம் திரும்பி ’உனக்குப் பிடிக்கிறதா’ என்று ஆங்கிலத்தில் கேட்கிறான். அவள் இதழ்கள் பிரியாத புன்னகையால் ‘ஆம்’ என்று சொல்லித் தலை அசைக்கிறாள்.

ரேடியோவுக்கு அருகே இருந்த பெட்டியைத் திறந்து இரண்டு ‘காட்பரீஸ்’ சாக்லெட்டுகளை எடுத்து ஒன்றை அவளிடம் தருகிறான் அவன். பின்னர் அந்த சாக்லெட்டின் மேல் சுற்றிய காகிதத்தை முழுக்கவும் பிரிக்காமல் ஓர் ஓரமாய்த் திறந்து ஒவ்வொரு துண்டாகக் கடித்து மென்றவாறு கால் மேல் கால் போட்டு அமர்ந்து ஒரு கையால் கார் ஸீட்டின் பின்புறம் ரேடியோவிலிருர்ந்து ஒலிக்கும் இசைக்கெற்பத் தாளமிட்டுக்கொண்டு ஹாய்யாக உட்காந்திருக்கும் அவனை, அவள் தீர்க்கமாக அளப்பது மாதிரிப் பார்க்கிறாள்.

அவன் அழகாகத்தான் இருக்கிறான். உடலை இறுகக் கவ்விய கபில நிற உடையோடு, ‘ஒட்டு உசரமாய்’. அந்த மங்கிய ஒளியில் அவனது நிறமே ஒரு பிரகாசமாய்த் திகழ்வதைப் பார்க்கையில், ஒரு கொடிய சர்ப்பத்தின் கம்பீர அழகே அவளுக்கு ஞாபகம் வருகிறது. பின்னாலிருந்து பார்க்கையில், அந்தக் கோணத்தில் ஓரளவே தெரியும் அவனது இடது கண்ணின் விழிக்கோணம் ஒளியுமிழ்ந்து பளபளக்கிறது. எவ்வளவு புயலடித்தாலும் கலைய முடியாத குறுகத் தரித்த கிராப்புச் சிகையும் காதோரத்தில் சற்று அதிகமாகவே நீண்டு இறங்கிய கரிய கிருதாவும் கூட அந்த மங்கிய வெளிச்சத்தில் மினுமினுக்கின்ரன. பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது அந்த ஒளி வீசும் முகத்தில் சின்னதாக ஒரு மீசை இருந்தால் நன்றாயிருக்குமே என்று ஒரு விநாடி தோன்றுகிறது. ஓ! அந்தப் புருவம்தான் எவ்வளவு தீர்மானமாய் அடர்ந்து செறிந்து வளைந்து இறங்கி, பார்க்கும்போது பயத்தை ஏற்படுத்துகிறது! அவன் உட்கார்ந்திருக்கும் ஸீட்டின் மேல் நீண்டு கிடக்கும் அவனது இடது கரத்தில் கனத்த தங்கச் சங்கிலியில் பிணிக்கப்பட்ட கடிகாரத்தில் ஏழு மணி ஆவது மின்னி மின்னித் தெரிகிறது. அவனது நீளமான விரல்கள் இசைக்குத் தாளம் போடுகின்றன. அவது புறங்கையில் மொசு மொசுவென்று அடர்ந்திருக்கும் இள மயிர் குளிர் காற்றில் சிலிர்த்தெழுகிறது.

“ஐயையோ! மணி ஏழாயிடுத்தே!” சாக்லெட்டைத் தின்றவாறு அமைதியாய் அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவள், திடீரென்று வாய்விட்டுக் கூவிய குரலைக் கேட்டு அவனும் ஒரு முறை கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொள்கிறான்.

காரின் முன்புறக் கதவை அவன் லேசாகத் திறந்து பார்க்கும்போது தான், மழையின் ஓலம் பேரோசையாகக் கேட்கிறது. அவன் ஒரு நொடியில் கதவைத் திறந்து கீழே இறங்கி விட்டான்.

“எங்கே?” என்று அவள் அவனிடம் பதற்றத்தோடு கேட்டது கதவை மூடிய பிறகே வெளியே நின்றிருக்கும் அவனது செவிகளில் அமுங்கி ஒலிக்கிறது. “எங்கே போறீங்க?”

“எங்கேயும் போகலே.. இங்கேதான் வரேன்” என்று ஆங்கிலத்தில் கூறியவாறு அந்தச் சிறுபோதில் தெப்பலாய் நனைந்துவிட்ட அவன் பின் ஸீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறான்.

அவள் அருகே அமர்ந்து, ஸீட்டின் மீது கிடந்த - சற்று முன் ஈரத்தைத் துடைத்துக் கொள்வதற்காக அவளுக்கு அவன் தந்த டவலை எடுத்து முகத்தையும் பிடரியையும் துடைத்துக் கொண்டபின், கையிலிருந்த சாக்லெட் காகிதத்தைக் கசக்கி எறிகிறான். அவள் இன்னும் இந்த சாக்லெட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் கொண்டிருக்கிறாள். அவன் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறிய டப்பாவை எடுக்கிறான். அதனுள் அடுக்காக இருக்கும் மிட்டாய் போன்ற ஒன்றை எடுத்து வாயிலிட்டுக் கொண்டு அவளிடம் ஒன்றைத் தருகிறான்.

“என்ன அது?”

“சூயிங்கம்.”

“ஐயே, எனக்கு வேண்டாம்!”

”ட்ரை.. யூ வில் லைக் இட்.”

அவள் கையிலிருந்த சாக்லெட்டை அவசர அவசரமாகத் தின்றுவிட்டு அவன் தருவதை மறுக்க மனமின்றி வாங்கக் கை நீட்டுகிறாள்.

“நோ!” - அவள் கையில் தர மறுத்து அவள் முகத்தருகே ஏந்தி அவள் உதட்டின் மீது அதைப் பொருத்தி லேசாக நெருடுகிறான்.

அவளுக்குத் தலை பற்றி எரிவதுபோல் உடம்பெல்லாம் சுகமான ஒரு வெப்பம் காந்துகிறது. சற்றே பின்னால் விலகி, அவன் கையிலிருந்ததைத் தன் கையிலேயே வாங்கிக் கொள்கிறாள்: “தாங்க் யூ!”

அவனது இரண்டு விழிகளும் அவளது விழிகளில் செருகி இருக்கின்றன. அவனது கண்களை ஏறிட்டுப் பார்க்க இயலாத கூச்சத்தால் அவளது பலஹீனமான பார்வை அடிக்கடி தாழ்ந்து தாழ்ந்து தவிக்கிறது. அவளது கவிழ்ந்த பார்வையில் அவனது முழந்தாள் இரண்டும் அந்த ஸீட்டில் மெள்ள மெள்ள நகர்ந்து தன்னை நெருங்கி வருவது தெரிகிறது.

அவள் கண்ணாடி வழியே பார்க்கிறாள். வெளியே மழையும் காற்றும் அந்த இருளில் மூர்க்கமாய்ச் சீறி விளையாடிக் கொண்டிருக்கின்றன. அவள் அந்தக் கதவோடு ஒண்டி உட்கார்ந்து கொள்கிறாள். அவனும் மார்பின் மீது கைகளைக் கட்டியவாறு மிகவும் கௌரவமாய் விலகி அமர்ந்து, அவள் உள்ளத்தைத் துருவி அறியும் ஆர்வத்தோடு அவளைப் பயில்கிறான்.

“டூ யூ லைக் திஸ் கார்?” - இந்தக் கார் உனக்குப் பிடித்திருக்கிறதா?” என்று ஆங்கிலத்தில் கேட்கிறான். அவனது குரல் மந்த்ரஸ்தாயில் கரகரத்து அந்தரங்கமாய் அவளது செவி வழி புகுந்து அவளுள் எதையோ சலனப்படுத்துகிறது. தனது சலனத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு புன்னகையுடன் சமாளித்து அவளும் பதில் சொல்கிறாள்: “ஓ! இட் இஸ் நைஸ்.”

அவன் ஆழ்ந்த சிந்தனையோடு பெருமூச்செறிந்து தலை குனிந்தவாறு ஆங்கிலத்தில் சொல்கிறான்: “உனக்குத் தெரியுமா? இந்தக் கார் இரண்டு வருஷமாக ஒவ்வொரு நாளும் உன் பின்னாலேயே அலைஞ்சிண்டிருக்கு - டூ யூ நோ தட்?” என்ற கேள்வியோடு முகம் நிமிர்த்தி அவன் அவளைப் பார்க்கும்போது, தனக்கு அவன் கிரீடம் சூட்டிவிட்டது மாதிரி அவள் அந்த விநாடியில் மெய் மறந்து போகிறாள்.

“ரியலி..?”

“ரியலி!”

அவனது வெப்பமான சுவாசம் அவளது பிடரியில் லேசாக இழைகிறது. அவனது ரகசியக் குரல் அவளது இருதயத்தை உரசிச் சிலிர்க்கிறது. “டூ யூ லைக் மீ?” ‘என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?’

”ம்” விலக இடமில்லாமல் அவள் தனக்குள்ளாகவே ஒடுங்குவதைக் கண்டு அவன் மீண்டும் சற்றே விலகுகிறான்.

வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. ரேடியோவிலிருந்து அந்த ‘ட்ரம்ப்பட்’டின் இசை புதிய புதிய லயவிந்நியாசங்களைப் பொழிந்து கொண்டிருக்கிறது.

“ரொம்ப நல்லா இருக்கு இல்லே?” - இந்தச் சூழ்நிலையைப் பற்றி, இந்த அனுபவத்தைக் குறித்து அவளது உணர்ச்சிகளை அறிய விழைந்து அவன் கேட்கிறான்.

“நல்லா இருக்கு.. ஆனா பயம்மா இருக்கே...”

“பயமா? எதுக்கு.. எதுக்குப் பயப்படணு?” அவளைத் தேற்றுகின்ற தோரணையில் தோளைப் பற்றி அவன் குலுக்கியபோது, தன் உடம்பில் இருந்து நயமிக்க பெண்மையே அந்தக் குலுக்கலில் உதிர்ந்தது போன்று அவள் நிலை குலைந்து போகிறாள்: “எனக்குப் பயம்மா இருக்கு; எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு...”

“எதுக்கு இந்த ஸர்டிபிகேட் எல்லாம்? “ என்று தன்னுள் முனகியவாறே இந்த முறை பின்வாங்கப் போவதில்லை என்ற தீர்மானத்தோடு மீண்டும் அவளை அவன் நெருங்கி வருகிறான்.

“மே ஐ கிஸ் யூ?”

அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. நாக்கு புரள மறுக்கிறது. அந்தக் குளிரிலும் முகமெல்லாம் வியர்த்துத் தேகம் பதறுகிறது.

திடீரென்று அவள் காதோரத்திலும் கன்னங்களிலும் உதடுகளிலும் தீயால் சுட்டுவிட்டத்தைப் போல் அவனது கரங்களில் கிடந்த அவள் துடிதுடித்து, ‘ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கதறக் கதற, அவன் அவளை வெறிகொண்டு தழுவித் தழுவி... அவள் கதறல் மெலிந்து தேய்ந்து அடங்கிப் போகிறது. அவனைப் பழி தீர்ப்பது போல இப்போது அவளது கரங்கள் இவனது கழுத்தை இறுகப் பின்னி இணைந்திருக்கின்றன.

வெளியே...

வானம் கிழிந்து அறுபட்டது! மின்னல்கள் சிதறித் தெறித்தன! இடியோசை முழங்கி வெடித்தது!

ஆ! அந்த இடி எங்கோ விழுந்திருக்க வேண்டும்.

“நான் வீட்டுக்குப் போகணும், ஐயோ! எங்க அம்மா தேடுவா...”

காரின் கதவைத் திறந்து கொண்டு பின் ஸீட்டிலிருந்து அவன் இறங்குகிறான். அந்த மைதானத்தில் குழம்பி இருந்த சேற்றில் அவனது ஷூஸ் அணிந்த பாதம் புதைகிறது. அவன் காலை உயர்த்தியபோது ‘சளக்’ என்று தெறித்த சேறு, காரின் மீது கறையாய்ப் படிகிறது. திறந்த கதவின் வழியே இரண்டொரு துளிகள் காருக்குள் இருந்த அவள் மீதும் தெறிக்கின்றன.

உடலிலோ மனத்திலோ உறுத்துகின்ற வேதனையால் தன்னை மீறிப் பொங்கிப் பொங்கி பிரவகிக்கும் கண்ணீரை அடக்க முடியாமல் அவனறியாதவாறு அவள் மௌனமாக அழுது கொண்டிருக்கிறாள்.

முன்புறக் கதவைத் திறந்து டிரைவர் சீட்டில் அமர்ந்த அவன் சேறு படிந்த காலணியைக் கழற்றி எறிகிறான். ரேடியோவுக்கருகில் உள்ள அந்தப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, மூசு மூசென்று புகை விட்டவாறு ‘சூயிங்கம்’மை மென்று கொண்டிருக்கிறான்.

இந்த விநாடியே தான் வீட்டில் இருக்க வேண்டும் போலவும், அம்மாவின் மடியைக் கட்டிக்கொண்டு ‘ஹோ’ வென்று கதறி அழுது இந்தக் கொடுமைக்கு ஆறுதல் தேடிக் கொள்ள வேண்டும் போலவும் அவள் உள்ளே ஓர் அவசரம் மிகுந்து நெஞ்சும் நினைவும் உடலும் உணர்ச்சியும் நடுநடுங்குகின்றன.

அவனோ சாவதானமாக சிகரெட்டைப் புகைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.அதைப் பார்க்க அவளுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வருகிறது. அந்தக் காருக்குள்ளே இருப்பது ஏதோ பாறைகளுக்கு இடையேயுள்ள ஒரு குகையில் அகப்பட்டது போல் ஒரு சமயம் பயமாகவும் மறு சமயம் அருவருப்பாகவும் - அந்த சிகரெட்டின் நெடி வேறு வயிற்றைக் குமட்ட- அந்த மைதானத்தில் உள்ள சேறு முழுவதும் அவள் மீது வாரிச் சொரியப்பட்டது போல் அவள் உடலெல்லாம் பிசுபிசுக்கிறதே....

நரி ஊளைமாதிரி ரேடியோவிலிருந்து அந்த ‘ட்ரம்ப்பட்’டின் ஓசை உடலையே இரு கூறாகப் பிளப்பது போல் வெளியேறிப்  பிளிறுகிறதே...

அவள் தன்னை மீறிய ஓர் ஆத்திரத்தில் கிறீச்சிட்டு அழுகைக் குரலில் அலறுகிறாள். “ என்னை வீட்டிலே கொண்டு போய் விடப்போறீங்களா, இல்லையா?”

அவனது கை “டப்” என்று ரேடியோவை நிறுத்துகிறது.

“டோண்ட் ஷவ்ட் லைக் தட்!”  அவன் எரிச்சல் மிகுந்த குரலில் அவளை எச்சரிக்கிறான். “கத்தாதே!”

அவனை நோக்கி இரண்டு கரங்களையும் கூப்பிப் பரிதாபமாக அழுதவாறு அவள் கெஞ்சுகிறாள். “எங்க அம்மா தேடுவா; என்னைக் கொண்டுபோய் வீட்டிலே விட்டுட்டா உங்களுக்குக் கோடிப் புண்ணியம்” என்று வெளியே கூறினாலும் மனதிற்குள் “என் புத்தியைச் செருப்பால அடிக்கணும். நான் இப்படி வந்திருக்கவே கூடாது. ஐயோ! என்னென்னவோ ஆயிடுத்தே” என்ற புலம்பலும் எங்காவது தலையை மோதி உடைத்துக் கொண்டால் தேவலை என்ற ஆத்திரமும் மூண்டு தகிக்கப் பற்களை நறநறவென்று கடிக்கிறாள். அந்த விநாடியில் அவள் தோற்றத்தைக் கண்டு அவன் நடுங்குகிறான்.

“ப்ளீஸ்... டோண்ட் க்ரியேட் ஸீன்ஸ்” என்று அவளைக் கெஞ்சி வேண்டிக் கொண்டு, சலிப்போடு காரைத் திருப்புகிறான்...

அந்த இருண்ட சாலையில் கண்களை கூசவைக்கும் ஒளியை வாரி இறைத்தவாறு உறுமி விரைந்து கொண்டிருக்கிறது கார்.

“சீ! என்ன கஷ்டம் இது! பிடிக்கலேன்னா அப்பவே சொல்லி இருக்கலாமே. ஒரு அருமையான சாயங்காலப் பொழுது பாழாகி விட்டது. பாவம்! இதெல்லாம் காலேஜீலே படிச்சு என்ன பண்ணப் போறதோ? இன்னும் கூட அழறாளே!” அவன் அவள் பக்கம் திரும்பி அவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறான். “ஐ ஆம் ஸாரி.. உனது உணர்ச்சிகளை நான் புண்படுத்தி இருந்தால், தயவு செய்து மன்னித்துக் கொள்.”

...அவளை அவளது இடத்தில் இறக்கி விட்டுவிட்டு இந்த நிகழ்ச்சியையே மறந்து நிம்மதி காண வேண்டும் என்கிற அவசரத்தில் அவன் காரை அதிவேகமாக ஓட்டுகிறான்.

இன்னும் மழை பெய்துகொண்டு இருக்கிறது.

சந்தடியே இல்லாத ட்ரங்க் ரோட்டைக் கடந்து, அழகிய பங்களாக்களும் பூந்தோட்டங்களும் மிகுந்த அவென்யூக்களில் புகுந்து, பெரிய பெரிய கட்டிடங்கள் மிகுந்த அந்தப் பிரதான பஜாரில் போய்க்கொண்டிருந்த கார் ஒரு குறுகலான தெருவில் திரும்பி அவளது வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.

‘இஞ்கே நிறுத்துங்கள். நான் இறங்கிக் கொள்ளுகிறேன்’ என்று அவளாகச் சொல்லுவாள் என்று அவளது தெரு நெருங்க நெருங்க அவன் யோசித்துக் காரை மெதுவாக ஓட்டுகிறான். அவள் அந்த அளவுக்குக்கூட விவரம் தெரியாத பேதை என்பதைப் புரிந்துகொண்டு அவனே ஓரிடத்தில் காரை நிறுத்திக் கூறுகிறான். “வீடு வரைக்கும் கொண்டு வந்து நான் விடக்கூடாது. அதனாலே நீ இங்கேயே இறங்கிப் போயிடு.... ம்” அவளைப் பார்க்க அவனுக்கே பரிதாபமாயும் வருத்தமாயும் இருக்கிறது. ஏதோ குற்ற உணர்வில், அல்லது கடன் பட்டுவிட்டது போன்ற நெஞ்சின் உறுத்தலில் அவனது கண்கள் கலங்கி விவஸ்தையற்ற கண்ணீர் பளபளக்கிறது. அவனே இறங்கி வந்து ஒரு பணியாள் மாதிரி அவளுக்காகக் காரின் கதவைத் திறந்து கொண்டு மழைத் தூறலில் நின்றுக் கொண்டிருக்கிறான். உணர்ச்சிகள் மரத்துப்போன நிலையில் அவள் தனது புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டு கீழே விழுந்திருந்த அந்தச் சிறிய வட்ட வடிவமான எவர்சில்வர் டிபன் பாக்ஸைத் தேடி எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கி அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் தலை குனிந்து நிற்கிறாள்.

அந்தச் சிறிய தெருவில், மழை இரவானதால் ஜன நடமாட்டமே அற்றிருக்கிறது. தூரத்தில் எரிந்து கொண்டிருக்கும் தெரு விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் தன் அருகே குள்ளமாய் குழந்தை மாதிரி நின்றிருக்கும் அவளைப் பார்க்கும்போது அவன் தன்னுள்ளே தன்னையே நொந்து கொள்கிறான். தனக்கிருக்கும் அளவிறந்த சுதந்திரமே எவ்வளவு கேவலமான அடிமையாக்கி இருக்கிறது என்பதை அவன் எண்ணிப் பார்க்கிறான்.

“ஆம். அடிமை! - உணர்ச்சிகளின் அடிமை!” என்று அவன் உள்ளம் உணருகிறது. அவன் அவளிடம் ரகஸியம் போல் கூறுகிறான்: “ஐ ஆம் ஸாரி!”

அவள் அவனை முகம் நிமிர்த்திப் பார்க்கிறாள்... ஓ! அந்தப் பார்வை!

அவளிடம் என்னவோ கேட்க அவன் உதடுகள் துடிக்கின்றன. “என்ன..” என்ற ஒரே வார்த்தையோடு அவனது குரல் கம்மி அடைத்துப் போகிறது.

“ஒண்ணுமில்லே” என்று கூறி அவள் நகர்கிறாள்.

அவளுக்கு முன்னால் அந்தக் கார் விரைந்து செல்கையில் காரின் பின்னால் உள்ள அந்தச் சிவப்பு வெளிச்சம் ஓடி ஓடி இருளில் கலந்து மறைகிறது.

கூடத்தில் தொங்கிய அரிக்கேன் விளக்கு அணைந்து போயிருந்தது. சமையலறையில் கை வேலையாக இருந்த அம்மா, கூடம் இருண்டு கிடப்பதைப் பார்த்து அணைந்த விளக்கை எடுத்துக்கொண்டு போய் ஏற்றிக் கொண்டு வந்து மாட்டியபோது, கூடத்துக் கடிகாரத்தில் மணி ஏழரை ஆகிவிட்டதைக் கண்டு திடீரென்று மனசில் என்னவோ பதைக்கத் திரும்பிப் பார்த்தபோது, அவள் படியேறிக் கொண்டிருந்தாள்.

மழையில் நனைந்து தலை ஒரு கோலம் துணி ஒரு கோலமாய் வருகின்ற மகளைப் பார்ததுமே வயிற்றில் என்னமோ செய்தது அவளுக்கு: “என்னடி இது, அலங்கோலம்?”

அவள் ஒரு சிலை அசைவது மாதிரிக் கூடத்துக்கு வந்தாள்; அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் ஒரு சிலை மாதிரியே அசைவற்று நின்றாள். “அம்மா!” என்று குமுறி வந்த அழுகையைத் தாயின் தோள்மீது வாய் புதைத்து அடைத்துக் கொண்டு அவளை இறுகத் தழுவியவாறே குலுங்கிக் குலுங்கி அழுதாள்!

அம்மாவின் மனசுக்குள், ஏதோ விபரீதம் நடந்துவிட்டது புரிவது போலவும் புரியாமலும் கிடந்து நெருடிற்று.

”என்னடி, என்ன நடந்தது? ஏன் இவ்வளவு நேரம்? அழாமல் சொல்லு” தன்மீது விழுந்து தழுவிக்கொண்டு புழுமாதிரித் துடிக்கும் மகளின் வேதனைக்குக் காரனம் தெரியாவிட்டாலும், அது வேதனை என்ற அளவில் உணர்ந்து, அந்த வேதனைக்குத் தானும் ஆட்பட்டு மனம் கலங்கி அழுது முந்தானையோடு கண்களைத் துடைத்தவாறு மகளின் முதுகில் ஆதரவோடு தட்டிக் கொடுத்தாள்: “ஏண்டி, ஏன் இப்படி அழறே? சொல்லு”

தாயின் முகத்தைப் பார்க்க முடியாமல் அவள் தோளில் முகம் புதைத்தவாறு அவள் காதில் மட்டும் விழுகிற மாதிரி சொன்னாள். அழுகை அடங்கி மெதுவாக ஒலித்த குரலில் அவள் சொல்ல ஆரம்பித்த உடனேயே தன்மீது ஒட்டிக் கிடந்த அவளைப் பிரித்து நிறுத்தி, விலகி நின்று சபிக்கப்பட்ட ஒரு நீசப் பெண்ணைப் பார்ப்பதுபோல் அருவருத்து நின்றாள் அம்மா.

அந்தப் பேதைப் பெண் சொல்லிக் கொண்டிருந்தாள். “மழை கொட்டுக் கொட்டுனு கொட்டித்து! பஸ்ஸே வரல்லே. அதனால்தான் காரிலே ஏறினேன் - அப்புறம் எங்கேயோ காடுமாதிரி ஒரு இடம்.... மனுஷாளே இல்லை... ஒரே இருட்டு. மழையா இருந்தாலும் எறங்கி ஓடி வந்துடலாம்னு பார்த்தா எனக்கோ வழியும் தெரியாது.. நான் என்ன பண்ணுவேன்? அப்புறம் வந்து வந்து... ஐயோ! அம்மா...அவன் என்னெ....”

-அவள் சொல்லி முடிப்பதற்குள் பார்வையில் மின்னல் பூச்சிகள் பறப்பதுபோல் அந்த அறை அவளது காதிலோ, நெற்றிப் பொருத்திலோ எங்கேயோ வசமாய் விழுந்தது. கூடத்து மூலையில் அவள் சுருண்டு விழ, கையில் இருந்த புத்தகங்கள் நாற்புறமும் சிதறி டிபன் பாக்ஸ் கீழே விழுந்து கணகணத்து உருண்டது.

“அடிப்பாவி! என் தலையிலே நெருப்பைக் கொட்டிட்டாயே..” என்று அலறத் திறந்த வாய், திறந்த நிலையில் அடைபட்டது.

அது நான்கு குடித்தனங்கள் உள்ள வீடு. சத்தம் கேட்டுப் பின் கட்டிலிருந்து சிலர் அங்கே ஓடி வந்தார்கள்.

“என்னடி, என்ன விஷயம்?” என்று ஈரக்கையை முந்தானையில் துடைத்துக் கொண்டு சுவாரசியமாய் விசாரித்த வண்ணம் கூடத்துக்கே வந்து விட்டாள் பின் கட்டு மாமி.

“ஒண்ணுமில்லை. இந்தக் கொட்டற மழையிலே அப்படி என்ன குடி முழுகிப் போச்சு? தெப்பமா நனைஞ்சுண்டு வந்திருக்காள். காசைப் பணத்தைக் கொட்டிப் படிக்க வெச்சு, பரீட்சைக்கு நாள் நெருங்கறப்போ படுத்துத் தொலைச்சா என்ன பண்றது? நல்ல வேளை, அவ அண்ணா இல்லே; இருந்தால் இந்நேரம் தோலை உரிச்சிருப்பான்” என்று பொய்யாக அங்கலாய்த்துக் கொண்டாள் அம்மா.

”சரி சரி, விடு. இதுக்குப் போய் குழந்தையே அடிப்பாளோ?” பின் கட்டு அம்மாளுக்கு விஷயம் அவ்வளவு சுரத்தாக இல்லை. போய்விட்டாள்.

வாசற் கதவையும் கூடத்து ஜன்னல்களையும் இழுத்து மூடினாள் அம்மா. ஓர் அறையில் பூனைக்குட்டி மாதிரிச் சுருண்டு விழுந்து - அந்த அடிக்காகக் கொஞ்சம் கூட வேதனைப் படாமல் இன்னும் பலமாகத் தன்னை அடிக்க மாட்டாளா, உயிர் போகும் வரை தன்னை மிதித்துத் துவைக்க மாட்டாளா என்று எதிர்பார்த்து அசைவற்றுக் கிடந்த மகளை எரிப்பது போல் வெறித்து விழித்தாள் அம்மா.

‘இவளை என்ன செய்யலாம்?... ஒரு கௌரவமான குடும்பத்தையே கறைப்படுத்திட்டாளே?... தெய்வமே! நான் என்ன செய்வேன்?” என்று திரும்பிப் பார்த்தாள்.

அம்மாவின் பின்னே சமையலறையிலே அடுப்பின் வாய்க்குள்ளே தீச்சுவாலைகள் சுழன்றெரியக் கங்குகள் கனன்றுக் கொண்டிருந்தன....

‘அப்படியே ஒரு முறம் நெருப்பை அள்ளி வந்து இவள் தலையில் கொட்டினால் என்ன’ என்று தோன்றிற்று.

-அவள் கண் முன் தீயின் நடுவே கிடந்து புழுவைப் போல் நெளிந்து கருகிச் சாகும் மகளின் தோற்றம் தெரிந்தது.

‘அப்புறம்? அத்துடன் இந்தக் களங்கம் போய் விடுமா? ஐயோ! மகளே உன்னை என் கையால் கொன்ற பின் நான் உயிர் வாழவா?... நானும் என் உயிரைப் போக்கிக் கொண்டால்?’

‘ம்... அப்புறம்? அத்துடன் இந்தக் களங்கம் போயிடுமா?’ அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. மகளின் கூந்தலைப் பற்றி முகத்தை நிமிர்த்தித் தூக்கி நிறுத்தினாள் அம்மா.

நடுக் கூடத்தில் தொங்கிய அரிக்கேனின் திரியை உயர்த்தி ஒளி கூட்டி அதைக் கையில் எடுத்துக் கொண்டு மகளின் அருகே வந்து நின்று அவளைத் தலை முதல் கால்வரை ஒவ்வோர் அங்குலமாக உற்று உற்றுப் பார்த்தாள். அந்தப் பார்வையைத் தாங்க மாட்டாமல் அவள் முகத்தை மூடிக் கொண்டு “ஐயோ அம்மா! என்னைப் பார்க்காதேயேன்” என்று முதுகுப் புறத்தைத் திருப்பிக் கொண்டு சுவரில் முகம் புதைத்து அழுதாள்....

“அட கடவுளே! அந்தப் பாவிக்கு நீ தான் கூலி கொடுக்கணும்” என்று வாயைப் பொத்திக் கொண்டு அந்த முகம் தெரியாத அவனைக் குமுறிச் சபித்தாள் அம்மா. அவளைத் தொடுவதற்குத் தனது கைகள் கூசினாலும், அவளைத் தானே தீண்டுவதற்குக் கூசி ஒதுக்கினால் அவள் வேறு எங்கே தஞ்சம் புகுவாள் என்று எண்ணிய கருணையினால் சகித்துக் கொண்டு தனது நடுங்கும் கைகளால் அவளைத் தொட்டாள். ‘என் தலையெழுத்தே’ என்று பெருமூச்செறிந்தவாறு, இவளைக் கோபிப்பதிலோ தண்டிப்பதிலோ இதற்குப் பரிகாரம் காண முடியாது என்று ஆழமாய் உணர்ந்து அவளைக் கைப்பிடியில் இழுத்துக் கொண்டு அரிக்கேன் விளக்குக்டன் பாத்ரூமை நோக்கி நடந்தாள்.

‘இப்ப என்ன செய்யலாம்? அவனை யாருன்னு கண்டு பிடிச்சுட்டா?..... அவன் தலையிலேயே இவளைக் கட்டிடறதோ? அட தெய்வமே... வாழ்க்கை முழுதும் அப்படிப்பட்ட ஒரு மிருகத்தோட இவளை வாழ வச்சுடறதா? அதுக்கு இவளைக் கொன்னுடலாமே? என்ன செய்யறது!’ என்று அம்மாவின் மனம் கிடந்து அரற்றியது!

பாத்ரூமில் தண்ணீர்த் தொட்டியின் அருகே அவளை நிறுத்தி மாடத்தில் விளக்கை வைத்துவிட்டு, தானறிந்த தெய்வங்களையெல்லாம் வழிபட்டு இந்த ஒன்றுமறியாப் பேதையின்மீது பட்டுவிட்ட கறையைக் கழுவிக் களங்கத்தைப் போக்குமாறு பிரார்த்தித்துக் கொண்டாள் அம்மா.

குளிரில் நடுங்குகிறவள் மாதிரி மார்பின்மீது குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு கூனிக் குறுகி நின்றிருந்தாள் அவள்.

கண்களை இறுக மூடிக்கொண்டு சிலை மாதிரி இருக்கும் மகளிடம் ஒரு வார்த்தை பேசாமல் அவளது ஆடைகளை யெல்லாம் தானே களைந்தாள் அம்மா. இடுப்புக்குக் கீழ் வரை பின்னித் தொங்கிய சடையைப் பிரித்து அவளது வெண்மையான முதுகை மறைத்துப் பரத்தி விட்டாள். முழங்கால்களைக் கட்டிக் கொண்டு ஒரு யந்திரம் மாதிரிக் குறுகி உட்கார்ந்த அவள் தலையில் குடம் குடமாய் தொட்டியிலிருந்த நீரை எடுத்துக் கொட்டினாள். அவள் தலையில் சீயக்காய்த் தூளை வைத்துத் தேய்த்தவாறு மெல்லிய குரலில் அம்மா விசாரித்தாள்: “உனக்கு அவனைத் தெரியுமோ?...”

“ம்ஹூம்...”

“அழிஞ்சு போறவன். அவனை என்ன செய்தால் தேவலை!”

- பற்களைக் கடித்துக் கொண்டு சீயக்காய் தேய்த்த விரல்களைப் புலி மாதிரி விரித்துக் கொண்டு கண்களில் கொலை வெறி கொப்பளிக்க வெறித்த பார்வையுடன் நிமிர்ந்து நின்றாள்.

’ம்.... வாழை ஆடினாலும் வாழைக்குச் சேதம், முள் ஆடினாலும் வாழைக்குத்தான் சேதம்’ - என்று பொங்கி வந்த ஆவேசம் தணிந்து, பெண்ணினத்தின் தலை எழுத்தையே தேய்த்து அழிப்பது போல் இன்னும் ஒரு கை சீயக்காயை ஆவள் தலையில் வைத்துப் பரபரவென்று தேய்த்தாள்.

ஏனோ அந்தச் சமயம் இவளை இரண்டு வயசுக் குழந்தையாக விட்டு இறந்து போன தன் கணவனை நினைத்துக் கொண்டு அழுதாள். ‘அவர் மட்டும் இருந்தாரென்றால் - மகராஜன், இந்தக் கொடுமையெல்லாம் பார்க்காமல் போய்ச் சேர்ந்தாரே?’

“இது யாருக்கும் தெரியக் கூடாது கொழந்தே! தெரிஞ்சா அதோட ஒரு குடும்பமே அழிஞ்சு போகும். நம் வீட்டிலேயும் ஒரு பொண் இருக்கே, அவளுக்கு இப்படி ஆகி இருந்தா என்ன பண்ணுவோம்னு யோசிக்கவே மாட்டா. பரம்பரை துவேஷம் மாதிரி குலத்தையே பாழ் பண்ணிடுவா... மத்தவாளைச் சொல்றேனே. இன்னொருத்தருக்குன்னா என் நாக்கே இப்படிப் பேசுமா? வேற மாதிரித்தான் பேசும். எவ்வளவு பேசி இருக்கு!” என்று புலம்பிக் கொண்டே கொடியில் கிடந்த துண்டை எடுத்து அவள் தலையைத் துவட்டினாள். தலையை துவட்டியபின் அவளை முகம் நிமிர்த்திப் பார்த்தாள். கழுவித் துடைத்த பீங்கான் மாதிரி வாலிபத்தின் கறைகள் கூடப் படிவதற்கு வழியில்லாத அந்தக் குழந்தை முகத்தைச் சற்று நேரம் உற்றுப் பார்த்து மகளின் நெற்றியில் ஆதரவோடு முத்தமிட்டாள். “நீ சுத்தமாயிட்டேடி குழந்தே, சுத்தமாயிட்டே. உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி, ஜலம் இல்ல. நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே. நீ பளிங்குடீ. பளிங்கு.. மனசிலே அழுக்கு இருந்தாத்தான்டி அழுக்கு. உம் மனசு எனக்குத் தெரியறது. உலகத்துக்குத் தெரியுமோ? அதுக்காகத்தான் சொல்றேன். இது உலகத்துக்குத் தெரியவே கூடாதுன்னு. என்னடீ அப்படிப் பார்க்கறே? தெரிஞ்சுட்டா என்ன பண்றதுன்னு பார்க்கறியா? என்னடி தெரியப் போறது? எவனோடயோ நீ கார்லே வந்தேன்னுதானே தெரியப் போறது? அதுக்கு மேலே கண்ணாலே பார்க்காததெப் பேசினா அந்த வாயைக் கிழிக்க மாட்டாளா? ம்... ஒண்ணுமே நடக்கலேடி, நடக்கலே! கார்லே ஏறிண்டு வந்ததை மட்டும் பார்த்துக் கதை கட்டுவாளோ? அப்பிடிப் பார்த்தா ஊர்லே எவ்வளவோ பேரு மேல கதை கட்ட ஒரு கும்பல் இருக்கு. அவாளே விடுடி.. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். உன் மனசிலே ஒரு கறையுமில்லே. நீ சுத்தமா இருக்கேன்னு நீயே நம்பணும்கிறதுக்குச் சொல்றேன்டி... நீ நம்பு.. நீ சுத்தமாயிட்டே, நான் சொல்றது சத்யம், நீ சுத்தமாயிட்டே....? ஆமா - தெருவிலே நடந்து வரும்போது எத்தனை தட்வை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடறோம்... அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடறோம்? கழுவிட்டு பூஜை அறைக்குக் கூடப் போறோமே; சாமி வேண்டாம்னு வெரட்டவா செய்யறார் - எல்லாம் மனசுதான்டி... மனசு சுத்தமா இருக்கணும்... ஒனக்கு அகலிகை கதை தெரியுமோ? ராமரோட பாத துளி பட்டு அவ புனிதமாயிட்டாள்ன்னு சொல்லுவா, ஆனா அவ மனசாலே கெட்டுப் போகலை. அதனாலேதான் ராமரோட பாத துளி அவ மேலே பட்டுது. எதுக்குச் சொல்றேன்னா... வீணா உன் மனசும் கெட்டுப் போயிடக் கூடாது பாரு.. கெட்ட கனவு மாதிரி இதெ மறந்துடு.. உனக்கு ஒண்ணுமே நடக்கல்லே..”

கொடியில் துவைத்து உலர்த்திக் கிடந்த உடைகளை எடுத்துத் தந்து அவளை உடுத்திக் கொள்ளச் சொன்னாள் அம்மா.

“அதென்ன வாயிலே ‘சவக் சவக்’ன்னு மெல்லறே?’

“சூயிங்கம்.”

“கருமத்தைத் துப்பு... சீ! துபுடி. ஒரு தடவை வாயைச் சுத்தமா அலம்பிக் கொப்புளிச்சுட்டு வா” என்று கூறிவிட்டுப் பூஜை அறைக்குச் சென்றாள் அம்மா.

சுவாமி படத்தின் முன்னே மனம் கசிந்து உருகத் தன்னை மறந்து சில விநாடிகள் நின்றாள் அம்மா. பக்கத்தில் வந்து நின்ற மகளை “கொழந்தே, ‘எனக்கு நல்ல வாழ்க்கையைக் கொடு’ன்னு கடவுளை வேண்டிக்கோ. இப்படி எல்லாம் ஆனதுக்கு நானுந்தான் காரணம். வய்சுக்கு அந்த பொண்ணை வெளியே அனுப்பறமே, உலகம் கெட்டுக் கெடக்கேன்னு எனக்கும் தோணாமே போச்சே? என் கொழந்தே காலேஜீக்கும் போறாளேங்கற பூரிப்பிலே எனக்கு ஒன்னுமே தோணல்லே. அதுவுமில்லாம எனக்கு நீ இன்னும் கொழந்தை தானே! ஆனா நீ இனிமே உலகத்துக்குக் கொழந்தை இல்லேடி! இதை மறந்துடு என்ன, மறந்துடுன்னா சொன்னேன்? இல்லே, இதை மறக்காம இனிமே நடந்துக்கோ. யார்கிட்டேயும் இதைப் பத்திப் பேசாதே. இந்த ஒரு விஷயத்திலே மட்டும் வேண்டியவா, நெருக்கமானவான்னு கிடையாது. யார்கிட்டேயும் இதைச் சொல்லலேன்னு என் கையில் அடிச்சு சத்தியம் பண்ணு, ம்: ஏதோ தன்னுடைய ரகசியத்தைக் காப்பாற்றுவதற்கு வாக்குறுதி கேட்பதுபோல் அவள் எதிரே கையேந்தி நிற்கும் தாயின் கை மீது கரத்தை வைத்து இறுகப் பற்றினாள் அவள்: “சத்தியமா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்...”

“பரீட்சையிலே நிறைய மார்க் வாங்கிண்டு வராளே, சமத்து சமத்துன்னு நினைச்சிண்டிருந்தேன். இப்பத்தான் நீ சமத்தா ஆகியிருக்கே. எப்பவும் இனிமே சமத்தா இருந்துக்கோ” என்று மகளின் முகத்தை ஒரு கையில் ஏந்தி, இன்னொரு கையால் அவள் நெற்றியில் விபூதியை இட்டாள் அம்மா.

அந்தப் பேதையின் கண்களில் பூஜை அறையில் எரிந்த குத்து விளக்குச் சுடரின் பிரபை மின்னிப் பிரகாசித்தது. அது வெறும் விளக்கின் நிழலாட்டம் மட்டும் அல்ல. அதிலே முழு வளர்ச்சியுற்ற பெண்மையின் நிறைவே பிரகாசிப்பதை அந்தத் தாய் கண்டு கொண்டாள்.

அதோ, அவள் கல்லூரிக்குப் போய்க்கொண்டிருக்கிறாள். அவள் செல்லுகின்ர பாதையில் நூற்றுக்கணக்கான டாம்பீகமான கார்கள் குறுக்கிடத்தான் செய்கிறன. ஒன்றையாவது அவள் ஏறிட்டுப் பார்க்க வேண்டுமே! சில சமயங்களில் பார்க்கிறாள். அந்தப் பார்வையில் தன் வழியில் அந்தக் காரோ அந்தக் காரின் வழியில் தானோ குறுக்கிட்டு மோதிக்கொள்ளக் கூடாதே என்ற ஜாக்கிரதை உணர்ச்சி மட்டுமே இருக்கிறது.

-----------------

*(எழுதப்பட்ட காலம்: 1966) 

நன்றி: சுயதரிசனம் (சிறுகதைத் தொகுப்பு), ஜெயகாந்தன் - எட்டாம் பதிப்பு: ஜனவரி 1994 மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1)*

Dec 30, 2010

தண்ணீர்-கந்தர்வன்

வெயில் குரூரமாயடித்துவிட்டுத் தணியத் தொடங்கிய வேளை; பாசஞ்ஜர் ரயிலின் கூவல் வெகு தொலைவிலிருந்து அருவலாகக் கேட்டது. வல்லநேந்தல் தாண்டியதும் இன்ஜின் டிரைவர்கள் இப்படித்தான் ஒலி எழுப்புவார்கள். திண்ணைக்கு ஓடிவந்து, தூணைப் பிடித்துக் கொண்டு திரும்பிப் பார்த்தாள் இந்திரா. தூரத்தில் ரயில் வருவது மங்கலாகத் தெரிந்தது.kantharvan
உள்ளே அம்மா 'பொட்டுத் தண்ணியில்லை ' என்று ரயில் ஊதல் கேட்டு அனிச்சையாகச் சொ ல்லிக் கொண்டிருந்தது. ஐயா, சினை ஆட்டைப் பார்த்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தார். ஐயாவுக்கு எப்போதும் கணக்குத்தான். ஆடு குட்டி போட... குட்டி பெருத்துக் குட்டிகள் போட்டுக் குபேரனாகும் கணக்கு.
இந்திரா குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு வாரியைத் தாண்டி ஓடினாள். மேட்டை எட்டும்போது ஏழெட்டுப் பெண்கள் இடுப்பில் குடங்களோடு ஓடிவந்து இந்திராவை முந்தப் பார்த்தார்கள். எல்லோரும் வாலிபப் பெண்கள். முந்துகிற பெண்களை பிந்துகிற பெண்கள் சடைகளைப் பிடித்து இழுத்தார்கள். கைகளைப் பிடித்து மடக்கினார்கள். அடுத்தவர் குடங்களைப் படபடவென்று கையால் அடித்தார்கள். சிரிப்பும் கனைப்புமாக ஓடினாலும் முந்துபவர்களைப் பார்த்து நொடிக்கொருமுறை கடுகடுவென்று கோபமானார்கள். அடுத்த நொடியில் முந்தும்போது சிரித்துக் கொண்டார்கள்.
மேட்டில் ஏறும்போது ஒருவரையொருவர் கீழே சறுக்கிவிடச் செய்தார்கள். 'ஏய் செல்வி, இன்னொரு தடவை என்னை இழுத்து சறுக்கிவிட்டானா இழுத்த கையை முறிச்சுப்புடுவேன் ' ' என்று ஒரு பெண் கத்தியது. சறுக்கிவிட்டதில் முழங்கையில் அரைத்து ரத்தம் தெரிந்தது -- இரண்டு மூன்று குடங்களைத் தூக்கிக்கொண்டு மறுபடி மேடு ஏறினார்கள். புயல் நுழைவது போல் ரயில் நிலையத்துக்குள் பாய்ந்தார்கள். கிளித்தட்டு விளையாட்டில் தங்கள் தங்கள் இடங்களில் ஓடிவந்து நிற்கும் ஆட்களைப் போல் பிளாட்பார நுனியிலிருந்து கடைசி வரை இடைவெளிவிட்டு இடம்பிடிக்க முடியாத பெண்கள் இங்கும் அங்கும் ஆலாகப் பறந்தார்கள். இடங்களை பிடித்துக் கொண்டுவிட்ட பெண்களிடம் கெஞ்சினார்கள். சில பூஞ்சையான பெண்கள் இடம் கிடைக்காததற்காக ஓரத்தில் நின்று அழுதார்கள். சில துடியான பெண்கள் இடம்பிடித்த பெண்களைத் தள்ளிவிட, அவர்களோ தங்கள் குடங்களாலேயே அடித்தார்கள். இரக்கமில்லாமல் விரட்டினார்கள். நேற்றோ முந்தாநாளோ போன சனிக்கிழமையோ தன்னை இதே போல் விரட்டியது 'நல்லா இருந்திச்சா ? ' என்றனர்.
இந்திரா இதில் படுகெட்டியான பெண். எல்லோருக்கும் முன்பாக இடம்பிடித்ததோடு மட்டுமில்லாமல், பதட்டமேயில்லாமல் அலட்சியமாக நிற்கிற அழகைப் பார்த்தால் ஐந்தாறு வருசங்களாக அதே இடத்தில் நிற்பது போல இருந்தது. இடம் பிடிக்க முடியாத பெண்கள் சுவர்களில் சாய்ந்துகொண்டு எகத்தாளம் பேசினார்கள். ஸ்டேஷன் மாஸ்டர் வெள்ளை உடைகளோடும் பச்சைக் கொடியோடும் வந்தவர் இந்த சச்சரவைப் பார்த்துவிட்டு, 'ஒரு நாளைக்கு ஸ்குவார்டை வரச்சொல்லி எல்லோரையும் அள்ளிக்கிட்டுப் போயி ஜெயில்ல போடுறேன் ' ' என்றார். பெண்கள் இடுப்புக் குடங்களுக்குள் முகங்களைக் கவிழ்த்து வக்கணையாகச் சிரித்தார்கள்.
ரயில் சத்தம் நெருங்கிக் கொண்டிருக்கையில் இந்திராவைப் படாரென்று தள்ளிவிட்டு, அந்த இடத்தில் டெய்லர் மகள் ராணி நின்று கொள்ள முயன்றாள். இந்திரா கொஞ்சம் தடுமாறிவிட்டு அவளை அலாக்காகத் தூக்கிப் போட்டுவிட்டு மறுபடி வந்து நின்றுவிட்டாள். கீழேவிழுந்த டெய்லர் மகள் ஆங்காரமாக ஒடிவந்துஇந்திராவின் தலைமுடியைப் பிடித்தாள். இந்திரா அவளைக் குடத்தால் முதுகில் அடித்தாள். அடிக்குப் பயந்து குனிகிறாளென்று நினைத்து நிமிர்ந்தவளுக்கு முழங்கையில் சுரீரென்று வலித்தது. டெய்லர் மகள் கடித்துவிட்டாள். பல் பதிந்துவிட்டது. அவளைக் காலால் எத்திவிட்டாள் இந்திரா.
ரயில், காட்டுயானை பிளிறிக்கொண்டு வருவதுபோல் நிலையத்துக்குள் நுழைந்தது. பயணிகள் யாரும் இறங்கு முன்பாக இந்திரா குடத்தோடு பெட்டிக்குள் பாய்ந்தாள். முகம் கழுவும் பேசின் குழாயை அழுத்தி செம்பில் தண்ணீர் பிடித்தாள். செம்பு பாதி நிறையுமுன் குடத்தில் ஊற்றினாள். ஊற்றிய வேகத்தில் மறுபடி செம்பில் பிடித்தாள்.
ரயில்களில் இந்த வசதியில்லை, அந்த வசதியில்லை என்று இந்திரா எதைப் பற்றியும் நினைத்ததில்லை. ஏனென்றால், ரயிலில் இதுவரை பயணமே செய்ததில்லை. ஆனால், திறந்தால் தண்ணீர் கொட்டுகிற மாதிரி ரயிலில் குழாயில்லை என்பது அவளது குறை. உள்ளங்கையை வைத்து அழுத்திக்கொண்டு முகங் கழுவுபவர்களே சிரமப்பட வேண்டியிருக்கிறது. குடம் தண்ணீர் பிடிக்க வேண்டுபவள் எவ்வளவோ பாடுபட வேண்டியிருக்கிறது.
கதவைப் பிடித்துக்கொண்டு கழுத்தை வெளியே நீட்டிப் பார்த்தாள். அந்தக் கோடியில் சிவப்பு விளக்குதான் எரிந்தது. வேகம் வேகமாக அரைச்செம்பும் கால் செம்புமாகப் பிடித்துக் குடத்தில் ஊற்றிக்கொண்டிருந்தாள். இந்தக் குழாயில் தண்ணீர் சனியனும் விறுவிறுவென்று வந்துவிடாது; இந்தப் பீடைக் குடமும் நிறைந்து தொலைக்காது.
இதுதான் நாளை சாயந்திரம் வரை வீட்டுக்குக் குடிதண்ணீர் இதுவும் கிடையாதென்றால், பிலாப்பட்டிக்குப் போக வேண்டும் நல்ல தண்ணீருக்கு.
இந்த ஊரும் அக்கம்பக்கத்து ஊர்களும் உவடு அரித்துப் போய்விட்டன. ஊருக்குள் நாலு இடங்களில் கிணறு வெட்டிப் பார்த்தார்கள். உப்பென்றால் குடலை வாய்க்குக் கொண்டுவருகிற உப்பு ' கடல் தண்ணீரை விட ஒருமடங்கு கூடுதலான உப்பு கிணற்றுத் தண்ணீரில் உப்பளம் போடலாம் என்றார்கள்.
எல்லா ஊர்களும் தீய்ந்துபோய்விட்டன. பஸ்ஸில் போகும் போது கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயற்காடுகளில் பச்சை நிறத்தையே பார்க்க முடியாது. ஜனம் எதைத்தின்று வாழ்கிறது என்று இந்தப் பக்கத்தில் பயணம் செய்கிறவர்கள் அதிசயமாகப் பார்ப்பார்கள்.
எழவெடுத்த காற்று பகலென்றும் ராத்திரியென்றுமில்லாமல் பிசாசாயடிக்கும். தடுக்கத் தாவரங்கள் இல்லையென்று பள்ளிக்கூடத்து வாத்தியார் சொல்வார். காற்று சுற்றிச்சுற்றி அடிக்கும். வறண்ட காற்று, ரத்தத்தை உறிஞ்சும் காற்று என்பாள் பாட்டி. மணலை அள்ளித் தலைகளில் இறைக்கும் காற்று ஈரமில்லாத எருக்கிழங்காற்று.
எல்லா ஊரிலும் பருவகாலத்தில் மழை பெய்யும். புயல் வந்தால்தான் இந்தப் பக்கம் பூராவுக்கும் மழை. மழை பெய்வதில்லை...பெய்தாய் பேய் மழை ' கண்மாய், ஊருணி எல்லாம் உடைப்பெடுத்து வெள்ளம் போய் மூன்றாம் நாள் மறுபடி நீரில்லா பூமியாகக் கிடக்கும். ஆகாயத்துக்கும் பூமிக்கும் இந்த ஊர்ப்பக்கம் நிரந்தரப் பகை.
ஐயா காலத்தில் உலகம்மாள் கோயில் கிணறு மட்டும் நல்ல தண்ணீர் கிணறாக இருந்தது. ஏற்றம் வைத்து இறைப்பார்கள். அதிகாலை முதல் டின் கட்டி நாலைந்து இளவட்டங்கள் இறைத்துக் கொண்டே இருந்தார்கள். பெண்கள் தலையில் ஒரு குடம், இடுப்பில் ஒரு குடமென்று எடுத்துவந்தார்கள். ஜனங்கள் இலுப்பை மரத்துக்காய், கண்மாய்க் கரம்பை என்று தலை தேய்த்து ஜன்னி வருகிற மாதிரி சுகமாகக் குளித்தார்கள். சனிக்கிழமைகளில் வானவில்லாக எண்ணெயும் வாசனையாகச் சீயக்காயும் மிதக்கும், நந்தவனத்துக்குப் பாயும் தண்ணீரில்.
இப்போது எல்லாமே பூண்டற்றுப் போய்விட்டன. முல்லை மணந்த நந்தவனம் குட்டிச்சுவர்களில் சின்ன அடையாளங்களோடு பாழடைந்து கிடக்கிறது. கிணற்றில் முள்ளை வெட்டிப் போட்டிருக்கிறார்கள். மழைபெய்து குண்டுக்கால் நிறையும் வரை குடிக்கத் தண்ணீர் வேண்டிப் பெண்கள் குடங்களோடு பிலாப்பட்டிக்குப் போகிறார்கள்.
இங்கிருந்து வில்லனூர் தாண்டி, பொன்னனூர் தாண்டி பிலாப்பட்டி போகவேண்டும். வழி பூராவிலும் காட்டுக் கருவேல் மரங்களைப் பார்க்கலாம், காக்காய் கத்துவதைக் கேட்கலாம். எதிர்ப்படுகிற ஆம்பிளைகள் முரட்டு மீசைகளோடு தெரிவார்கள். நிசப்தமான முள் காடுகளின் நடுவில் கரடு முரடான ஆம்பிளைகள் கறுப்புக் கறுப்பாயிருமுவது இந்திராவுக்குப் பீதியூட்டும். இரண்டு கண்மாய்கள், நான்கு ஊருணிகள் நஞ்சைகள் -- புஞ்சைகள் தாண்டிப் போகையில், எல்லாமே வெடித்து விரிவோடிக்கிடக்கும். இதில் இரண்டு சுடுகாடுகளைத் தாண்ட வேண்டும். கர்ப்பஸ்திரீகள் குடங்களோடு செல்கையில் மற்ற பெண்கள் ஓரங்களில் நடந்து சுடுகாட்டை மறைப்பார்களாம்.
மூணு மைல் தூரம் நடக்கவேண்டும் பிலாப்பட்டிக்கு. ஊருணிக்குப் பக்கமாயிருக்கிறது அந்த நல்ல தண்ணீர் கிணறு. ஊற ஊறத்தான் இறைக்கவேண்டும். மதியம் வரை பிலாப்பட்டி ஜனம் மட்டும் இறைத்துக்கொள்ளும். மதியத்துக்குமேல் வெளியூர் ஆள்களுக்கு விடுவார்கள்.
வண்டித் தண்ணி, சைக்கிள் தண்ணி அப்புறம்தான் இடுப்புக் குடத்துக்கு. ஏழூர் பெண்கள் இளசும் கிழடுமாகக் குடங்களை வைத்துக்கொண்டு வானத்தையும் வையத்தையும் வைதுகொண்டு நிற்பார்கள். மாட்டாஸ்பத்திரி திண்ணைதான் இவ்வளவு ஜனத்துக்கும் நிழலிடம். காய்ந்து கருவாடாகக் கிடந்து, ஒரு சொட்டு சிந்தாமல் நடந்து ஊர் திரும்பி, வீட்டுப் படியேறினால் பொழுது சாய்ந்துகொண்டிருக்கும்.
அம்மாதான் தினமும் பிலாப்பட்டிக்குப்போய் வந்து கொண்டிருந்தது. வயிற்றில் கட்டி வந்ததிலிருந்து இந்திரா குடத்தை எடுத்தாள். நாலு மாசத்துக்கு முன்தான் ரயில் நிலைய ஓரத்து வீடுகளில் இந்தப் பேச்சு வந்தது. 'ஒலகம் பூராவும் தண்ணில்லைன்னாலும் சரி, நாள் தவறாம ரயிலுக்கு மட்டும் எங்கெருந்தாவது கொண்டு வந்து ஊத்திவிட்டுருறான் பாரு. ' இப்படிப் பேசிப்பேசியே மூன்று மணிக்கு வரும் பாசஞ்சர் ரயிலைக் குறிவைத்துத் தண்ணீர் பிடிக்க ஆரம்பித்தார்கள்.
மூன்று மணி ரயிலுக்கு மதியம் பன்னிரண்டு மணிக்கே பெண்கள் வந்தார்கள். நிலையத்தின் இரண்டு வேப்பமரங்களினடியிலும் ஒரு சிமெண்டு பெஞ்சின் மீதும் அட்டவர்க்கமா உட்கார்ந்தார்கள். இடம்பிடிக்கும் தகராறுகள் இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு நடந்து ரயில் நிலலியம் ஒரு இரைச்சலான முச்சந்தியானது. ஊர்க்கதை, உலகக் கதைகள் எல்லையில்லாமல் பேசப்பட்டன. இந்திரா இந்த நேரங்களில் அதிகமாகக் கனவு கண்டாள். உள்ளூரில் எவனுக்கும் கழுத்தை நீட்டிவிடக் கூடாதென்றும் பிலாப்பட்டி மாதிரி தண்ணீருள்ள ஊர்களிலிருந்து பெண்கேட்டு வருவது மாதிரி கனவு காண்பாள்.
பிலாப்பட்டிக்கு நடந்துப்போய் தண்ணீர் தூக்கிவந்த ராத்திரிகளில், கால் வலியோடு விடிய விடியக் கிடந்திருக்கிறாள். நோவோ நோக்காடோ, பொம்பிளை பிலாப்பட்டி போயாக வேண்டும். தண்ணீர் கொண்டுவந்து சோறு பொங்கவேண்டும். குடிக்கக் கொடுக்கவேண்டும்.
இந்திரா மாதிரி அமைதியாக மற்ற பெண்கள் கனவு காணாமல் இடம்பிடிக்க அடிதடி சண்டைகளில் இறங்குவதையும் ரயில் நிலையமே அவர்கள் ஆதிக்கத்துக்குப் போய்க்கொண்டிருப்பதையும் ஸ்டேஷன் மாஸ்டர் விரும்பவில்லை. சிப்பந்திகளைக் கொண்டு ஒருநாள் வீடு வரை விரட்டினார். அன்று ஒரு பொட்டுத் தண்னீர்கூட ரயிலிலிருந்து யாராலும் கொண்டுபோகமுடியவில்லை.
பாய்ண்ட்ஸ்மேன் பக்கத்து ஊர்க்காரர். அவரை வைத்துப் பேசித்தான் இந்த ஏற்பாடு. ரயில் வரும்போதுதான் வரவேண்டும். வந்து சத்தம் போடக்கூடாது. தண்ணீர் கொஞ்சம்தான் பிடிக்க வேண்டும். இவற்றுக்குக் கட்டுப்பட்டு வருவதாகப் பேர்; சண்டை இன்னும் நாறிக்கொண்டுதானிருக்கிறது. எந்தச் சண்டை எப்படி நடந்தாலும் இந்தப் பெண்களுக்கு ஆறாத ஆச்சரியம் ஒன்று உண்டு. நம் ஊர் தண்ணீரை விட ஒசத்தியான தண்ணீர் ரயில் குழாயில் வரும்போது, ஏன் சில ரயில் பயணிகள் வெள்ளை வெள்ளை பாட்டில்களில் தண்ணீரைப் பதினைந்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் வாங்கி வைத்துக்கொண்டு திரிகிறார்களென்று.
சாயங்காலங்களில் எப்போதாவது இந்திரா கடைத் தெருவுக்குப் போகும்போது, டாக்கடை வாசல்களில் பார்த்திருக்கிறாள். இடுப்பில் மல்லு வேட்டியும் தோளில் வல்ல வேட்டுமாக ஒரு கிலோ ரெண்டுகிலோ மீசைகளோடு கனம் கனமான ஆம்பிளைகள் வானத்தை வில்லாக வளைக்கப் போவதாகப் பேசினார்கள். எல்லா நேரங்களிலும் பிலாப்பட்டிக்குப் போகும்போதுகூட பெண்கள் அடுத்த வீட்டுச் சங்கதிகளைக் காது மூக்கு வைத்துப் பேசினார்கள். ஊருக்கு உப்புத் தண்ணீரை நல்ல தண்ணீராக்கும் மிஷின் மட்டு வருகிற கூறையே காணோம்.
இந்திரா உள்ளங்கையை இன்னும் அழுத்திக் கொண்டிருந்தாள். தண்ணீர் சன்னமாக வந்தது குழாயில். பாதிக்குடம் கூட நிறையவில்லை. இன்ஜினிலிருந்து ஊதல் ஒலி வந்தது. அம்மா 'சொட்டுத் தண்ணியில்லை ' என்று முனகியது ஞாபகத்துக்கு வந்தது. சில நேரங்களில் இன்ஜினிலிருந்து ஊதல் ஒலி வந்தாலும் புறப்படத் தாமதமாகும். உள்ளங்கையில் ரத்தம் வரும்படி இன்னும் வேகமாகக் குழாயை அழுத்தினாள். ரயில் நகர்கிற மாதிரி இருந்தது. இன்னும் கொஞ்சம் மட்டிலும் பிடித்துக் குடத்தில் ஊற்றிவிட்டுக் குதித்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டே உள்ளங்கையை மேலும் அழுத்தினாள்.
ரயில் வேகம் அதிகரித்து பிளாட்பார முனை வருவது போலிருந்தது. படபடவென்று செம்பை எடுத்துக் குடத்தைப் பாதையில் வைத்துவிட்டுக் குதிக்கப் போனாள். முழங்கை வரை கண்ணாடி வளையல்களணிந்த ஒரு வடக்கத்திப் பெண் ஓடிவந்து இவளை இழுத்து வண்டிக்குள் தள்ளிவிட்டுக் கோபமாகக் கத்தினாள். மொழி புரியவில்லையென்றாலும், 'தற்கொலை பண்ணிக் கொள்ளவா பார்த்தாய் ? ' என்கிற மாதிரி ஒலித்தது.
சினை ஆட்டைப் பார்த்தபடி கணக்குப் போட்டுக்கொண்டிருந்த ஐயா காலாற கடைத் தெருவுக்குப் போனபோது சின்னவன் ஓடிவந்து இரைத்துக்கொண்டே சொன்னான்; 'ரயில் போயிருச்சு... அக்கா இன்னும் வரலை. ' ஐயா ரொம்ப சாதாரணமாகச் சொன்னார், 'எங்கெயாவது வாயளந்துகிட்டிருக்கும். போய் நல்லாப் பாருலெ. '
'நல்லாப் பாத்துட்டுத்தான் அம்மா சொல்லச் சொன்னுச்சு. '
லேசான பதட்டத்துடன் வீடு வந்தவரிடம் அம்மா படபடவென்று சொன்னாள். 'ஓடுங்க... அந்த ரயிலைப் பிடிங்க. எம்மக அதிலெதான் போயிட்டா. அடுத்த டேசன்ல பிடிங்க போங்க ' அண்ணன் வீடு, தம்பிவீடு, மச்சினன் வீடுகளிலிருந்துஆட்கள் ஓடி வந்தார்கள். நாலைந்து பேர் சேரவும் வேட்டிகளை மடித்துக் கட்டிக்கொண்டு மெயின் ரோட்டுக்கு ஓடினார்கள். இரண்டு பஸ்கள் போய் மூன்றாவதாக வந்த ராமநாதபுரம் பஸ்ஸில் ஏறியும் ஏறாமலுமாக கண்டக்டரிடம் கத்தினார்கள். 'பாசஞ்சர் ரயிலைப் பிடிப்பா... '
டிக்கெட் கொடுப்பதில் மும்முரமாயிருந்த கண்டக்டர், அதைச் சாதாரண முறையில் கேட்டுக்கொண்டு பதறாமலுமிருக்கவே ஐயாவின் மைத்துனர் பாய்ந்தார்... 'பொண்ணு ரயிலோட போயிருச்சுனு நாங்க ஈரக்குலையைப் பிடிச்சுக்கிட்டுக் கத்துறோம். சிணுங்காமக் கேட்டுக்கிட்டு நிக்கிறீரு. டிரைவர்ட்ட சொல்லுமய்யா, வேகமா ஓட்டச் சொல்லி... '
விவகாரம் வேண்டாமென்று கண்டக்டரும், 'வேகமாப் போங்கண்ணே ' என்று ஒப்புக்குச் சொல்லிவிட்டு டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார். கும்பல், டிரைவரிடம் போய் கத்தியது. டிரைவர் விரட்டிக்கொண்டுபோய்ச் சேர்ந்தார்.
இவர்கள் போய்ச் சேர்ந்த போது ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஈ எறும்புகூட இல்லை. ஸ்டேஷன் மாஸ்டரிலிருந்து ஒவ்வொருவரிடமாக விசாரித்தார்கள். 'குடத்தோட ஒரு பொண்ணு எறங்குச்சா... ? 'வென்று. யாரும் பார்த்ததாகச் சொல்லவில்லை. போன ஆட்களில் குயுக்தியான ஒருவர் சொன்னார்; 'புள்ளைட்ட டிக்கெட் இல்லைங்கிறதனாலெ யாருக்கும் தெரியாம ஒளிஞ்சு ஒளிஞ்சு வெளியே போயிருக்கும்யா. '
ரயில் நிலையத்துக்கு வெளியே ஆட்டோ ஸ்டாண்ட், ரிக்ஷா ஸ்டாண்ட், சைக்கிள் கடை, பேக்கரி எல்லா இடங்களிலும் கேட்டார்கள். 'குடத்தோட ஒரு பொண்ணு இந்தப் பக்கமா போச்சா ? 'வென்று. ராமநாதபுரம் வடக்குத் தெருவில், அத்தை வண்டிக்காரத் தெருவில், சின்னம்மா வீடு, தெரிந்தவீடு, அறிந்தவீடு பூராவும் தேடிவிட்டு பஸ் ஸ்டாண்டுக்குப் போனார்கள். அந்த குயுக்திக்காரர் வெகு நம்பிக்கையாகச் சொன்னார். 'புள்ளைட்ட காசிருக்காது. இங்கெதான்யா நிக்கணும்... நம்மூர் ஆளுக யாரும் வருவாகளான்னு ' பால்கடை, பழக்கடை, டாக்கடையென்று ராமநாதபுரத்தையே சல்லடை போட்டு சலித்துப் பார்த்துவிட்டுக் கவலையும் அசதியுமாக ஆட்கள் ஊர் திரும்பினார்கள்.
வீட்டு வாசலில் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்த கூடத்தில் ஒருவர் 'மெட்ராஸ்உக்கே போயிருச்சோ புள்ளை ' என்று சந்தேகமெழுப்ப....ஐயா கத்தினார், 'ஒன் கழுத்தைக் கடிச்சு மென்னுபுருவேன்; பேசாம இரு ' ஐயா கூட போய்த் திரும்பிய ஆள்களில் ஒருவர் கூட்டத்தின் கவலையைக் கவனித்து விட்டுச் சொன்னார். 'நாம அடுத்தடுத்த ஸ்டேஷன்களுக்குப் போய் பார்த்திருக்கணும் எங்கெயாவது புள்ளை எறங்கி தெசை தெரியாம நிக்குதான்னு... இங்கெ உக்காந்து என்ன செய்யிறது ' '
அம்மாவுக்கு இந்தப் பேச்சுக்களைக் கேட்டுக் குமட்டலும் மயக்கமுமாய் வந்தது. இந்தக் கூட்டத்தில் யாரும் எட்டமுடியாத யோசனைக்குப் போய் பொருமிக்கொண்டும் வாயில் முந்தானையை அழுத்திக்கொண்டும் சொன்னாள், 'எம்புள்ளை எந்த ஊரு தண்டவாளத்திலெ விழுந்து கெடக்கோ ' அவளால் அடக்கமுடியவில்லை. அவளை யாரும் பிடித்து அடக்கவும் முடியவில்லை.
ஆவேசம் வந்தவள் போல் ரயில் நிலையத்துக்கு ஓடினாள். பின்னாலேயே ஐயாவும் ஊர் ஜனமும் ஓடியது. பொழுது இருட்டிக் கொண்டு வந்தது. அம்மா தண்டவாளத்தின் ஓரத்திலேயே ஓட ஆரம்பித்தாள். பத்தடி ஓடியதும் ஐயா, அம்மாவைப் பிடித்து இழுத்து நிறுத்திவிட்டுக் கூர்ந்து பார்த்தார். தூரத்தில் ஒரு உருவம் தெரிந்தது. நெருங்க நெருங்க அம்மாதான் முதலில் கத்தினாள். 'அந்தா, இந்திரா வருது. '
இடுப்பில் தண்ணீர்க் குடத்தோடு இந்திரா. கூட்டத்தருகில் வந்தாள். அம்மா நிறை பூரிப்பில் விம்மிக்கொண்டு போய்க் குடத்தை வாங்கினாள். நிறைகுடம், சொட்டு சிந்தாமல் கொண்டு வந்துவிட்டாள். மகள் வந்து சேர்ந்ததில் மலர்ந்துபோய் ஐயா கேட்டார்... 'பயமகளே.. இதையும் சொமந்துக்கிட்டா வரணும்; இத்தனை மைலுக்கும் ? '
இந்திரா சொன்னாள்.. 'ஊக்கும்.. நாளைக்கு வரை குடிக்க எங்கெ போறது ? '
******
நன்றி: திண்ணை

Dec 28, 2010

போர்த்திக் கொள்ளுதல்-வண்ணதாசன்

கடைசியில் ஒரு மட்டுக்கும் போர்வை வாங்கியாகிவிட்டது. அவன் விரித்துப் படுத்தெழுந்த ஜமுக்காளத்தையோ அல்லது இடுப்பில் இருக்கிற கைலியையோ போர்த்திக் கொண்டு தூங்குவதைக் காலையில் பார்க்கும் போதெல்லாம் ஒரு போர்வை எப்படியாவது இந்த மாதம் வாங்கிவிட வேண்டும் என்று சரசு நினைப்பாள். ராத்திரி படுக்கும்வரை படித்துக் கவிழ்ந்து வைத்த வாரப் பத்திரிகையையும் கண்ணாடியையும் எடுத்து ஜன்னலில் வைத்த கையோடு அவனை எழுப்பி நேரே ஒரு போர்வை வாங்கிக் கொண்டுவரச் சொல்லத் தோன்றும்.

ஆனால் அவனுக்கு இப்படியெல்லாம் உடனுக்குடன் வாங்குகிற குணமில்லை. வாங்க ஓடாது. ஒரு  kalyanji (2) காரியத்தை உடனே செய்து முடிக்க அவன் பழகியிருக்கவில்லை.

இந்தப் போர்வைகூட கோவாப்ரேடிவ் ஸ்டோரில் பார்த்து சரசுதான் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள். சரசுவுக்கு அந்தப் போர்வையை வாங்க முடிந்ததில் ரொம்ப சந்தோஷம் இருந்தது. அவளுக்குக் கல்யாணம் ஆன சமயத்தில் அவள் இரண்டு ஜமுக்காளங்களும் நாலு தலையணை களையும் மாத்திரமே கொண்டுவர முடிந்தது. ஒரு புழுவைப் போலச் சிறுமைப்பட்டுக் கொண்டேதான் அவள் அவனுடன் வாழ்வு நடத்த நுழைந்தாள். அவனுக்குத் தான் அல்லாமல் வேறு யாராவது வசதியான இடத்திலிருந்து வாழ்க்கைப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்று சரசு பல சமயங்களில் நினைக்கிறாள். எதை மிச்சப்படுத்தியாவது அவனுக்குக் கட்டில் வாங்கிக் கொடுக்க அவளுக்கு ஆசை யிருந்தது. அதை அவனுடைய பிரியத்தைத் தாங்க முடியாத ஒரு இரவில் சொன்னபோது சரசுவால் அழத்தான் முடிந்தது.

''நீங்க வேற யாரையாவது கட்டியிருக் கலாம்'' என்று திரும்பத் திரும்பச் சொல் வாள். 'சீச்சீ' என்று மட்டும் சொல்லி அவளைத் தேற்றுவான். அது ஒப்புக்காகத் தேற்றுவது போல இருக்கும். 'வேறே யாரையாவது கட்டியிருந்தாலாவது நான் நிம்மதியாக இருந்திருப்பேன்' என்று அவனே தன்னிடம் ஒருநாள் சொல்லிவிடுவானோ என்ற பயம் ரேவதியைப் பெற்று ஐந்து வருஷத்திற்கு அப்புறம் இந்தப் போர்வையை வாங்கிக் கொண்டு வருகிற வினாடிவரை இருக்கிறது.

''என்னம்மா வாங்கிட்டு வந்திருக்கே? சட்டையா!'' என்று வந்ததும் வராததுமாக ரேவதி கேட்டபொழுது சட்டென்று ஒரு கோபம் அதன் மீது வந்தது. சரசுவுக்கு ரேவதிமீது முதலில் ஒரு வினாடி கோபம் தான் எப்பொழுதும் வருகிறது. அப்புறம்தான் பிரியம். ஓர் ஆண் குழந்தைமூலம் தான் கொண்டுவராத எல்லாச் சீதனங்களையும் ஈடுகட்டிவிடலாம் என்று சரசு நினைத்திருந்த வேளையில் அவள் பெண்ணாகவே பிறந்ததனால் ஏற்பட்ட கோபம். கல்யாணத்துக்கு முன்னால் நினைக்கிறதை எல்லாம் சிறிது சிறிதாக முழுமையாக நடத்தி வந்ததுக்கு மாறாக, அவளும் மொத்தமாக ஏமாற்றிவிட்டாள் என்ற கோபம்.

''சட்டை இல்லேம்மா. அப்பாவுக்குப் போர்வை. ராத்திரிப் போர்த்திக்கிடுறதுக்கு'' சரசுவின் போர்வைக்குள் அவன் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருப்பான். கால் பாதத்தில் கூடக் கொசுக் கடிக்காத அளவுக்கு முழுக்கப் போர்த்திக் கொள்ளலாம். ஜமுக்காளம், கைலி எல்லாம் இனிமேல் அதனதன் வேலைகள் செய்யும். ஆனால் ஒரு போர்வையை அவள் கூடுதலாகத் துவைக்க வேண்டும். தினசரி ரேவதியின் யூனிபாரத்தைச் சாயந்தரம் ஸ்கூலில் இருந்து வந்ததும் கழற்றச் சொல்லித் துவைத்துக் காயப்போட்டு வருகிறபோது போர்வையை ஒரு மாதத்திற்கு ஒருமுறை துவைப்பதில் கஷ்டமில்லை. ஆனால் ஒரு போர்வையை அலசத் தண்ணீர் நிறைய வேண்டும். தண்ணீராவது இறைத்துக் கொள்ளலாம். சோப் நிறையத் தேவைப்படும். காயப்போட்டதும், கொடி முழுக்க நான்தான் என்று தொங்கும். மழைக்காலத்தில் எப்படிக் காயும்?

ரேவதியிடம் போர்வையைப் பற்றிச் சொல்லிக் கொண்டே யூனிபாரத்தைக் கழற்றி வேறு கவுன் போடச் சொன்னாள். ரேவதிக்கு யூனிபாரத்தைத் தவிர வேறு கவுன்கள் அதிகம் இல்லை. வேறு கவுன்கள் வாங்கிவிடலாம். போகிற வழியில் டெய்லரிடம் ¦¡ல்ல வேண்டும். அதுவரை வெட்டுத் துணியில் கவுன்கள் தைக்கப் படுகிறதும் விறக்கப்படுகிறதும் வேறு யாருக்கும் தெரிந்து விடாமல் இருக்க வேண்டும். வெட்டுத் துணிகளாலேயே ஒட்டுப் போடப்பட்டுத் தைத்த ஒரு பெரிய போர்வையின் கற்பனையில் புதைந்து அவள் சிரித்துக் கொண்டாள்.

சைக்கிளைத் தார்சாவில் ஓரமாக வைக்கிறதற்கு முன்னாலேயே வீட்டில் நடக்கிற ஒவ்வொன்றையும் பற்றிச் சொல்லி முடித்துவிடுகிற ரேவதி போர்வையைப் பற்றியும் தனக்கு முந்திச் சொல்லிவிடுவாள் என்று நினைத்தாள். சரசுவுக்கு தானே இதைச் சொல்லவேண்டும் போல இருந்தது. வாயால் சொல்லக்கூடாது. அவன் தூங்கிவிட்ட பிறகு போர்த்துவதன் மூலம் சொல்லவேண்டும். காலையில் போர்வையே அவனுக்குச் சொல்லியிருக்கும்.

போர்வையை நெஞ்சுவரை ஏற்றிக் கட்டிச் சாமியார் மாதிரி முடிச்சுப் போட்டுக் கொண்டு ''அம்மா! தாயே!'-

போர்வையை முக்காடிட்டுப் பூச்சாண்டி காட்டி-

'ஒருநாள் கால்பக்கம் வைத்தது மறுநாள் முகத்துப் பக்கம் வராமல் இருக்கணும்னா அடையாளத்துக்கு முடிச்சுப் போட்டுக் கிடணும் ஒரு மூலையிலே' சரசு அவனிடம்-

சலவைக்கு எல்லா அழுக்கையும் போர்வையில் வைத்து மூட்டையாகக் கட்டி-

சரசுவின் தம்பி யாரிடமிருந்தோ காமிரா இரவல் வாங்கி வந்து படமெடுக்கும் போது சரசுவுக்கும் ரேவதிக்கும் பின்னால் போர்வை தொங்க-

மனதின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சரசு போர்வையை விரித்து விரித்துப் பார்த்தாள். ரேவதி வெறுந்தரையில் படுத்துத் தூங்கியிருந்தாள். அது எப்போதும் இப்படி வெறுந்தரையில்தான் முதலில் தூங்கும். அப்புறம்தான் துணியை விரித்துத் தூக்கிப் போட வேண்டும். தூங்குகிற ரேவதியைத் தூக்கிப் போடுகிற சிரமத்துக்கு சரசு அலுப்பதே இல்லை. ரேவதி தூங்கும்போது அப்படியே அவளுடைய அப்பாவைப் போல 'ஒருச் சாய்ந்து' இருப்பாள். சரசுவுக்கும் ரேவதியுடன் அப்படியே படுத்துக் கொள்ளத் தோன்றியது.

ஆனால் படுப்பதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. எவ்வளவு நேரம் இருந்தாலும் ஜோலி சிறிது சிறிதாக இருப்பது போலிருக்கிறது. தொலைந்து போன சாமான்கள் கிடைப்பது போல் ஏதாவது ஒன்று மாற்றி ஒன்று வேலை வருகிறது. வேலை முடிகிறதும் முடியாததும் அவன் சாப்பிடுவதைப் பொறுத்து இருக்கிறது. அவன் நேரா நேரத்துக்குச் சோறு சாப்பிடுவதில்லை. திரும்பத் திரும்ப கூப்பிட வேண்டும். 'வாரேன்' என்பான். வரமாட்டான்.

சில சமயம் லைப்ரரி புத்தகங்கள், சில சமயம் வாரப்பத்திரிகைகளிடம் அவன் இருப்பான். ஒரு வாரத்தின் எல்லா நாட்களிலும் தினம் ஒன்று வருகிற அளவுக்குப் பத்திரிகைகள் அவனுடைய ஆபீஸ் கிளப்பிற்கு வருகின்றன. முதலில் புத்தகம் படிக்கிற காரணத்திற்காகவே இவன் கிளப்பிற்குக் காரியதாரிசியாக இருப்பது போல இருக்கும். மாதாமாதம் பேப்பர் பையன் பில்லைக் கொடுக்கும்போது இவன் புத்தகங்களை வரவு வைத்திருப் பதற்கும் செலவுத் தொகைக்கும் பொருத்தம் இருக்காது. இவள்தான் அதையும் சரிபார்த்து வைக்க வேண்டும்.

சில நாட்களில் ஆபீஸில் இருந்து வீட்டுக்கு வரும்போதே சிடுசிடுவென்று வருவான். நாற்காலியை இழுத்து ஜன்னல் விளம்பில் கா¡லை நீட்டிக் கொண்டு தூங்குவான். இருட்டின பிறகுகூட விளக்கைப் போடாமல் அப்படியே உட்கார்ந்திருப்பான். "உடம்புக் குச் செளகரியமில்லையா? வேலை ஜாஸ்தியா?" எப்படிக் கேட்டாலும், ''ஒண்ணு மில்லை'' என்பதற்குமேல் பதில் வராது.

கல்யாணம் ஆன சமயம் லேசாக மண்டையிடி வந்தால்கூட சரசு அவனிடம் சொல்லிக் கொண்டுதான் இருந்தாள். அவளுக்குத் தலைவலி அடிக்கடி வரும். அவனுக்கு இவளுடைய தலைவலியை மாத்திரம் பொறுத்துக் கொள்ள ஏன் முடியவில்லை? அவள் தலைவலி என்று படுத்திருக்கையில் அவன் அனாவசியமாக எரிச்சலுற்றுத் தலைவலியைவிட வேதனை தருகிற ஒரு முணுமுணுப்புக் கொள்வான். ஒரு தடவை 'எப்பப் பார்த்தாலும் தலைவலி. உடம்பும் குச்சி. சதையே கிடையாது... சீக்காளி மாதிரி...'' என்று குரலே கசக்கிற மாதிரி திரும்பிப் படுத்துக் கொண்டான். ஒரு நுனிவிரல்கூட சரசுவின் மேல் படாமல் ஜாக்கிரதையாக இருந்தான். பக்கத்தில் படுத்துக் கொண்டே ரொம்ப விலகினது போல ஆகிற இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் சரசுவின் குழந்தைதான் சரசுவுக்கு அழத் துணைதரும். இந்த அழுகையைக்கூட அவன் பார்க்காமல் அழவேண்டும்.

இவள் அழுவாள் என்று எதிர்பார்த்தது போல, இவள் அழுதிருக்கிறாளா என்று பார்த்துத் திருப்திப்பட்டுக் கொள்வது போலச் சரசுவின் பக்கத்தில் வந்து தலைமாட்டில் உட்கார்ந்து தலையணையில் நனைகிற முகத்தை ரொம்ப உக்கிரமாகக் கன்னத்தில் கையைக் கொடுத்துத் திருப்பி, ''அழுதியா?'' என்று கேட்டு, அழுகிறாயா என்றால் என்ன சொல்ல? அதுதான் அழுகிறாளே. சரசு பேசாமல் இருப்பாள். "இப்ப என்னத்துக்கு அழுகை?" - அவனுக்குச் சொல்ல சரசுவுக்கு எந்தப் பதிலும் இருக்காது. மேலும் அழுகையைத் தவிர. "எதுக்கு அழுதுகிட்டு இருக்கே, சொல்லு.. சொல்லு..'' என்று திரும்பித் திரும்பிக் கேட்பான். 'உன்னைப் பிடிக்கவில்லை' என்று சொல்லாமல் குத்தி வாங்குகிறது போல இருக்கும் அது. சரசு குழந்தைக்குப் பக்கத்தில் மேலும் அணைத்து படுத்துக் கொள்வாள். குழந்தையின் கை, உடம்பு, தலையெல்லாம் நீவிக் கொடுத்து மூச்சு விடுகையில் தட்டுப்படுகிற வளையலும் பொறுக்குப் போலக் கிளம்பி நிற்கிற குழந்தையின் நெற்றிப் பொட்டும், குருட்டு விரலாக ஊர்ந்து ஊர்ந்து தடவுகையில் ஓர் ஒடுக்கமான பாதை போல் தட்டுப்படுகிற தலை வகிடும் சரசுவுக்கு அவளுடைய அம்மாவை, இறந்துபோன சிநேகிதியை எல்லாம் ஞாபகமாக்கிப் பக்கத்தில் படுத்துக் கொள்ளச் செய்யும்.

''ரேவதி தூங்கியாச்சா?'' - கதவைத் திறந்து கொண்டே வந்தவனைக் கண்டதும் சரசு எழுந்தாள். "ரேவதி தூங்கியாச்சா'' என்றால் அது ரேவதியின் தூக்கத்தைப் பற்றியில்லை. சரசுதான் பதில் சொல்ல வேண்டும். சொன்னாள், "வேலை ஒண்ணும் இல்லையேண்ணு இப்பதான் படுத்தேன்".

கதவுப் பக்கம் வந்ததும்தான் அவன்கூட இன்னொருத்தரும் வந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. தலையை விகிட்டிலிருந்து இரணடு பக்கமும் தவுக் காதுப்பக்கம் செருகலாகக் கோதிவிட்டப்படி 'வாங்க' என்று சொன்னாள். உட்காரச் சொல்லி அவன் நாற்காலியை இழுத்துப் போட்டான். சரசு கோதுமையையும் சீனியையும் வாங்கி வைத்திருந்த பையைக் கீழே இறக்கி வைத்துவிட்டு ஸ்டூலைக் கொண்டுவந்து போட்டாள். ஸ்டூலின் கீறலுக்குள் சிந்தி யிருந்த சீனி மினுங்கியது. கொண்டுவந்து போடுகிற அவசரத்தில், ஸ்டூலின் கால்கள் வாசல் பக்கம் தட்டியது. சரசுவை ஒரு தடவை பார்த்துவிட்டு அவன் ஸ்டூலை வாங்கிப்போட்டான். அறைந்தால்கூட இப்படிப் பார்க்கிறது போல வலிக்காது.

அவனுக்காகவே அவள் கொண்டு வந்து போட்டதென்றாலும் ஸ்டூலைக் காலியாக வைத்துவிட்டுச் சன்னல் விளிம்பில் உட்கார்ந்து வந்தவருடன் பேச ஆரம்பித்தான். அவர் போக வேண்டுமென்று சொன்ன இடத்திற்குப் புறப்படுகிற விடிகாலை பஸ்ஸையும், பஸ் நிற்கிற இடத்திலிருந்து அவர் நடக்க வேண்டிய திசையையும் அவன் விவரித்துச் சொல்லிக் கொண்டிருந்தான்.

சரசுவுக்குப் போர்வையை அவனிடம் காட்ட வேண்டும் போல இருந்தது. ''நீங்க என்ன? அவங்க இப்போதான் வந்திருக் காங்க. வந்து சரியாக உட்காரக்கூட இல்லை. அதுக்குள்ளேயே புறப்படுகிறதுக்கு வழி சொல்லி ஆகுது!" என்று பேச்சைத் துவக்கலாம். முகத்தில் கொஞ்சம் சிரிப்பைச் சிந்தினபடி இரண்டடி எட்டி வந்து இதைச் சொன்னால் போதும். அப்புறம், "அதுக் கில்லை, நாளைக்குக் காலம்பற பார்க்க வேண்டிய முக்கியமான ஜோலியிருக்கு. இல்லைண்ணா நம்ம வீட்டில தங்குகிறதுக்கு என்ன?'' என்பார். வந்தவரே பேசிக் கொண்டு இருக்கிற போது, 'போர்வையை வாங்கியிருக்கேன். பாருங்க வந்து' என்று எப்படிக் கூப்பிடுவது?

"ரேவதியைக் கொஞ்சம் தூக்கிப் படுக்கையில் போடுங்களேன். தரையிலேயே படுத்துக் தூங்கிட்டுது" - சரசு கூப்பிட்டாள். மூன்றாவது ஆள் எதிரே இருக்கும் போது சரசு சொல்கிறவைகளை அவன் கனிவாகவே செய்வான். படுக்கைகளை விரிப்பது, மறுநு¡ட்களையில் மடித்துச் சுருட்டி வைப்பது எல்லாம் நடக்கும்.

''வாரேன்'' என்று வந்து ரேவதியை ஏந்தி எடுத்துப் பாயில் போட்டான். பாயின் சுருக்கத்தை ரேவதியின் காலை கொஞ்சம் தூக்கி நேர் செய்து விட்டு நிமிர்ந்தபோது சரசு போர்வையை எடுத்துக் காட்டிக் கொண்டு நின்றாள்.

''வாங்கினேயா?'' என்று கேட்டான். குரலில் சந்தோஷம் இருந்தது. அடர்த்தியான ஊதாவும் செங்கல் காவியும் அகலம் சதுரம் சதுரமாக ஓடியிருந்த போர்வையை லுங்கிபோல இடையில் கட்டிக் கொண்டு 'நல்லாயிருக்கா?' என்று சிரித்தான். விலையைக் கேட்டதும் 'பரவாயில்லையே' என்று தோளில் இருந்து கால் விரல்வரை படுதாபோல் தொங்கவிட்டான்.

சரசு கொசுக்களும் குளிரும் தொடமுடியாத அவனுடைய தூக்கத்திற்கான கற்பனையில் இருந்தாள். அவனுக்கு இந்த முகம் மாறிவிடுவதற்கு முன், கொஞ்சம் தலையைச் சாய்த்துக் கண்ணை மூடுகிற நேரம் அவனுடைய மடியில் படுக்கவேண்டும் என்ற ஆசையில் இருந்தாள். இருந்தவள் சட்டென்று முகம் மாறி அவனிடம் கேட்டாள்.

"என்ன சாப்பிடுறீங்க ரெண்டு பேரும்?''

''பாயாசமும் சோறும் வெச்சிருக்கையா?'' - சரசுவை அவன் கிண்டல் பண்ணினான். அந்த அளவுக்குப் போர்வை அவனை மென்மையாகச் செய்திருந்தது.

''சரி சொல்லுங்க... என்ன சாப்பிடுறீங்க?'' - சரசு மறுபடியும் கேட்டாள். இனிமேல் அவர்கள் சாப்பிடுவதானால் இரண்டு பேருக்கும் தோசை மாவு இல்லை. பழைய சோறும் காணாது. உப்புமாதான் கிண்ட வேண்டும். இவ்வளவு மணிக்குப் பிறகு இரும்புச் சட்டியைக் காய வைத்து, பச்சை மிளகாயை அரிந்து, கடுகு உளுத்தம்பருப்புத் தாளித்து... பத்து மணிக்கு மேல் ஆகிவிடும். ரேவதியின் யூனிபாரத்தைத் துவைத்து இனிமேல்தான் போட வேண்டும். படுக்கிறதானால் தலையணை உறைகளை மாற்றி ஆக வேண்டும்.

'சாப்பாடு ஆச்சு ரெண்டு பேருக்கும்'

சரசுவுக்கு இதைக் கேட்டதும் நிம்மதியாக இருந்தது. ஆனாலும் ''நல்லாயிருக்கே.. வீட்டுக்கு வரும் போதே வெளியில சாப்பாடு பண்ணிக் கூட்டிக்கிட்டு வர்றதாக்கும். ரெண்டு வாய் வேணும் வேண்டாம் என்கிறதைச் சாப்பிட்டு விட்டுப் படுங்க'' - சரசு விருந்தாளியிருந்த பக்கம் போய்ச் சொன்னாள். வந்தவுடன் இருட்டிலிருந்து, அப்புறம் கொஞ்சம் தெரிந்ததும் தெரியாததுமாக. இப்போது முகத்தை முழுவதுமாகக் காட்டியும் பார்த்தும்.

''சாப்பாட்டுக்கு என்ன இப்ப? நம்ம வீட்டில சாப்பிடச் சொல்லலைன்னு ஆவலாதியா சொல்லப் போறோம்?'' வந்தவர் சிரித்துக் கொண்டே போனார்.

''அதெல்லாம் இல்லை, ஒரு தோசையாவது சாப்பிடலாம். கல் போட்டாச்சு!'' சரசு சொல்லி, அது தீர்மானமாக மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே அவன் உள்ளே பரணில் தொங்கிக் கொண்டிருந்த தலையணைகளையும் படுக்கையையும் தள்ள ஆரம்பித்தான்.

இரண்டு படுக்கை தலையணைகளைத் தன் கையிலேயே நேரடியாக எடுத்துக் கொண்டு போய்விடலாம். அவன் அப்படிச் செய்யவில்லை. சிறுபிள்ளையைப் போல அவற்றை மேலிருந்து தள்ளி கீழே தாறுமாறாக விழுந்தபின் அவனுடைய படுக்கையை மாத்திரம் எடுத்துக்கொண்டு, அவள் படுக்கையை தொள தொளவென்று துவண்டிருக்கிற தலையணை நசுங்கும்படி மிதித்து விட்டுப் போனான். ஒரே இடத்தில் படுக்கிறபோது அடுத்த படுக்கையையும் எடுத்துக் கொண்டு போய்ப் போட்டால் என்ன? விரித்து வைக்கக்கூட வேண்டாம். இப்போது இழுத்துப் போடுகிற மாதிரி அங்கே கொண்டு போய்ப் பக்கத்தில் தாறுமாறாகப் போட்டு வைத்திருந்தால்கூடப் போதும். எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, உள் பாவாடையில் அடிச்சேலையில் ஈரம் தெறிக்க 'எப்படா விழுவோம்' என்று வருகிறவளுக்கு விரித்து வைத்திருக்கிற படுக்கை எவ்வளவு நிம்மதியாக இருக்கும்.

"இருங்க, இருங்க, உறையை மாற்றித் தாரேன். எல்லாம் பிசினா இருக்கு'' - சரசு சொல்லிக் கொண்டு இருக்கையில் அவன் தலையணையைச் சொத்தென்று வீசி விட்டுப் போனான். பக்கத்தில்தான் சரசு இருக்கிறாள். கை எட்டிக் கொடுத்தால் இப்படி வீசுவதைவிட எவ்வளவு மிருதுவாக இருக்கும்.

ஜமுக்காளத்தைத் திடீரென உதறுவது கேட்டது. ஜமுக்காளத்தை இப்படிச் சத்தமாக உதறாமல் அவர் விரிப்பதில்லை. ரேவதி குழந்தையாகத் தொட்டிலில் கிடக்கையில் எத்தனையோ தடவை இந்தச் சத்தத்தில் பதறிச் சிணுங்கியிருக்கிறது. சரசுவைப் போல் அது இப்போது எல்லாவற்ற்றுக்கும் பழகிவிட்டது.

'ஒரு செம்பில் தண்ணி கொண்டா' - சரசுவிடம் சொல்லிக் கொண்டே வெளுத்த உறை போட்ட தலையணைகளை அவன் கையில் எடுத்து பிதுங்கல் இல்லாமல் சீராக்கிக் கொண்டு போனான். ரொம்பக் களிம்பாக இருக்கிற செம்பை அவசரத்தோடு அவசரமாகச் சாம்பலில் கழுவிக் கொண்டிருந்த சரசுவைத் தேடி அடுக் களைக்குள் வந்தபடி அவன் கேட்டான்.
''போர்வையை எங்க வெச்சிருக்கே?''

''அங்கேதானே இருக்கு'' சரசு தண்ணீரில் முக்கிச் செம்பை அலசினாள்.

''அங்கே அங்கேன்னா எங்கே?'' தூக்கத்தில் எழும்பினது போல ஒரு எரிச்சலுடன் வாசல்படிப் பக்கத்திலிருந்து குரல் சீறினது. ''நான் கேட்கிறேன். நீ உன் பாட்டில் ஜோலியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயே'' என்ற சீறல் அங்கணக் குழிக்கும் அம்மியடிக்கும் இடையிலுள்ள இருட்டில் பம்மினது போல உட்கார்ந்திருந்த சரசுக்குள் கொஞ்ச நேரத்துக்கு முன்பு போர்வையைப் பார்த்த சமயத்தில் கிண்டல் பண்ணின அவனுடைய முகம் கிழிந்து தொங்கினது.

''உங்ககிட்டே காண்பிச்சுட்டு அலமாரியில் தானே வச்சேன்'' - சரசு செம்பை அலம்பியிருந்தாள். தண்ணீருக்குள் கைகள் அமிழ்ந்து கிடப்பது ஒரு வேலைக்காக என்றாலும் நன்றாகத்தானிருக்கிறது. செம்பில் தண்ணீரை எடுத்துக் கொணட சரசு வரும்போது போர்வையை எடுத்துவிட்டுத் திறந்தபடி விட்டுவிட்டிருந்த அலமாரி தெரிந்தது. இருட்டுக்குள் புகையடித்துப் போய் நின்ற அலமரியின் மேல் தட்டில் அவள் கொண்டு வந்த குறைவான எவர்சில்வர் பாத்திரங்கள் மிகக் குறைவாகப் பளபளத்தன.

சேலையானால் அவள் இன்றைக்கு என்ன கிழமை என்று பார்த்திருப்பாள். போர்வையை இன்றைக்கே உபயோகப் படுத்தினாலும் பாதகமில்ல. எவ்வளவு சீக்கிரம் உபயோகத்துக்கு வருகிறதோ அவ்வளவு சீக்கிரம் அவன் உடலைப் போர்த்தித் தூங்குவான். சாதாரண வளர்த்திக்குக் கூடுதலான உயரம் இருப்பவர்கள்கூட முழுதாகக் கொள்ளும் படியாகப் போர்வைக்கு 'வீதி' தாரளமாக இருந்தது. சரசுவும் ரேவதியும் அவனுமாக மூன்று பேர் நெருங்கிப் படுத்தாலும் அது கொள்ளும்.

சரசு செம்பும் தம்ளருமாகத் தண்ணீரை ஜன்னலில் வைத்த போது வந்தவரிடம் அவன் போர்வையை கொடுத்துக் கொண்டிருந்தான். சரசுவுக்கு மேற்கொண்டு எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் ஒரு சோர்வு வந்தது.

'புதுசாத் தெரியுது' என்று போர்வையை ஒரு பாகம் அளவுக்குப் பிரித்து இரண்டு கைகளிலும் வைத்துக் கொண்டு அவனிடம் அதன் விலையைப் பற்றி, வந்தவர் விசாரித்தார்.

இனிமேல் எப்போது போர்த்தினாலும் சரசுவுக்கு அது பழசுதான். இன்றைக்கு உபயோகப்படுத்தவே படாமல் மடித்த வாக்கில் தலையண¨மேல் விரிந்திருந் தால்கூட அது சாயம்போன சேலையைப் போலத்தான் இனி.

ஒரு காலின் மேல் இன்னொரு புறங்காலால் தேய்த்துக் கொண்டு அவன் விலையைச் சொன்னான். தானே விலை விசாரித்துக் கடையில் வாங்கிய பாவனையில் பேசினான். பிரார்த்தனை போலப் பூத்துவிட்ட ஒரு மெளனத்திற்குப் பின் சரசு உள்ளே நகர்ந்தாள். நகர்ந்து வர வர அவன் சொல்வது கேட்டது.

''இந்தப் பக்கத்தில் கொசுக்கடி கொஞ்சம் ஜாஸ்தி. போர்த்திக்கிட்டால் கொஞ்சத்துக்கு கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கு மேன்னுதான் கொடுத்தேன்..'' அவனுக்கும் ஒரு சங்கடம் இருந்தது போல இருந்தது. சொல்லிக் கொண்டே உள்ளே சரசு குருவி லைட்டை பொருத்தின கையுடன் உள்ளே நடமாடுகிற பக்கம் பார்த்தான். சரசு அலமாரியிலிருந்த ஒரு கிழிந்த சேலையை ஒரு வேளை அவனுக்குப் போர்த்திக் கொள்ள கொடுக்கலாம் என்ற விழைவுடன் வைத்துக் கொண்டு நின்றாள்.

''போர்வையை என் கிட்டேக் கொடுத் திட்டீங்களே.. நீங்க போர்த்திக்கிடலியா?'' - வந்தவர் படுக்கையில் சாய்ந்து மெதுவாக மடங்கினபடி கேட்டார்.

''சீச்சீ... நான் போர்த்திக்கிடுறதே இல்லை. போர்த்தினோமோ போச்சு. அவ்வளவுதான் அப்புறம் விடிய விடியத் தூக்கமே வராது. சிவராத்திரிதான்'' - கண்ணாடியைக் கழற்றின வித்தியாசமான முகத்துடன் விளக்கை அணைப்பதற்காக ஸ்விட்ச் பக்கம் போய்க் கொண்டே அவன் சொன்னான்.

இதைச் சொல்லும்போது அவன் முகம் எப்படியிருக்கிறது என்று சரசு பார்க்க முடியாதபடி விளக்கு சுத்தமாக அணைந் திருந்தது. பழஞ்சேலையால் குழந்தையை மூடிவிட்டு அவள் படுக்கிற சமயம் உள்ளங் கையால் தோள்பட்டையில் சுளீர் என்று அறைவது வெளிப்பக்கம் கேட்டது.

கொசுக்கள் இப்போதே அவனிடம் வந்திருக்க வேண்டும்.

*********

Dec 27, 2010

நவீன எழுத்தாளனின் தலைவிதி-சுந்தர ராமசாமி

கன்னியாகுமரி மாவட்ட தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் நான்காவது சிறப்பு மாநாட்டின் தொடக்கவுரை - 28.12.90

கன்னியாகுமரி மாவட்டத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நான்காவது சிறப்பு மாநாட்டை ஒட்டி நடைபெறவிருக்கும் இக் கருத்தரங்கின் தொடக்கவுரையை நிகழ்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நானும் இதில் பங்கு பெற வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்த என் நண்பர்sura---drawing2.5 டாக்டர். பத்மனாபன் அவர்கட்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல தலைப்புக்களில் பல்வேறு அறிஞர்கள் இங்கு கட்டுரைகள் படிக்க இருக்கிறார்கள். கல்வி, வரலாறு, திருக்கோயில்கள், பண்டைய இலக்கியம், தற்கால இலக்கியம், கலைகள், நாட்டார் கலைகள், இதழியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்ற புலவர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைத்து இந்தக் கருத்தரங்கிற்கு வலிமை சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன். எழுத்தாளர் மாநாட்டைச் சார்ந்து நடக்கும் கருத்தரங்கம் என்பதால் இன்றைய தமிழ்ப் பின்னணியில் நவீன எழுத்தாளனின் தலைவிதி பற்றி ஒருசில வார்த்தைகள் கூறுவது தவறாக இருக்காது என்று நம்புகிறேன்.

தமிழ் மொழி உலக மொழிகளில் மிக மேலானது என்பது நமக்குத் தெரியும். மேலான மொழி என்றால் என்ன ? எந்த மொழியிலும் ஒருவர் பேச அந்த மொழி அறிந்த மற்றொருவருக்குப் புரிகிறது. ஒருவர் எழுத மற்றொருவர் படித்துத் தெரிந்து கொள்கிறார். ஓசையில் மட்டும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழிகளும் இருக்கின்றன. ஓசையிலும் எழுத்து வடிவிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழிகளும் இருக்கின்றன. கருத்துப் பரிவர்த்தனை எல்லா மொழிகளிலுமே நிகழ்ந்து கொண்டிருக்கும் போது தமிழின் தனிச் சிறப்பு என்ன ? ஏன் அதை வளர்ச்சியடைந்த மொழி என்கிறோம் ? அதன் தொன்மையைச் சொல்லி ஏன் பெருமிதம் கொள்கிறோம் ?

மொழி மேலானது என்றால் அந்த மொழியில் மேலான இலக்கியங்கள் இருக்கின்றன என்று அர்த்தம். சங்கக் கவிஞர்களும் தொல்காப்பியனும், வள்ளுவனும், கம்பனும், இளங்கோவும், பாரதியும் மேலானவற்றை, உலக இலக்கியங்களோடு ஒப்பிடத் தகுந்தவற்றை எழுதியிருக்கிறார்கள். இவை போன்ற படைப்புக்களைக் கழித்துவிட்டால் பரிமாற்றத்திற்கு மட்டுமே உபயோகப்பட்டு நிற்கும் ஒரு சாதனமாகத் தமிழ் சுருங்கிவிடும்.

நேற்று வாழ்ந்த தரமான படைப்பாளிகள் நம் மொழியையும் கலாச்சாரத்தையும் செழுமைப்படுத்தியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் வழியில் தோன்றியிருக்கும் இன்றைய எழுத்தாளர்கள் தங்களால் இயன்ற அளவு தரத்தைக் கூட்டி நம் மொழியையும் கலாச்சாரத்தையும் செழுமைப்படுத்தி வருகிறார்கள். உலக இலக்கியங்களுடன் ஒப்பிடத்தகுந்த படைப்புகள் தமிழில் குறைவாகவும் இந்திய இலக்கியங்களுடன் ஒப்பிடத்தகுந்த படைப்புக்கள் தமிழில் நிறைவாகவும் வந்துகொண்டிருக்கின்றன.

ஆக, இந்த எழுத்தாளர்கள்தாம் நம் மொழியின் வளத்தை, கலாச்சாரத்தின் செழுமையை, சிந்தனைகளின் கூர்மைகளைத் தமிழில் உருவாக்கி வருகிறார்கள். இவர்களை மட்டுமே நான் எழுத்தாளர்கள் என்று அழைக்கிறேன். இவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்கள். சோரம் போகாமல், சமரசங்களில் சரியாமல், இழிவுகளை ஏற்க மறுத்து, புறக்கணிப்புகளால் மனம் குன்றாமல் உயர்வானவற்றையும் உன்னதமானவற்றையும் இயன்ற வரையிலும் இவர்கள் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் பார்வை சார்ந்து, ஏற்று நிற்கும் தத்துவங்கள் சார்ந்து, தங்கள் நம்பிக்கைகள் சார்ந்து, இவர்கள் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றொரு வகையினர் மொழியைத் தங்கள் சுய லாபங்களுக்காக, பணம், புகழ், பரிசு ஆகிய மூன்று சுய லாபங்களுக்காக, பயன்படுத்தி சந்தைக்கு ஏற்ப சரக்குகளைத் தயாரித்து அவற்றை விற்றுத் தங்கள் குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளக்கூடியவர்கள். லட்சக்கணக்கான வாசகர்கள் கொண்ட பிரபல இதழ்கள் மூலம் இவர்களின் தயாரிப்புகள் பொழுதுபோக்கு வாசகனை எட்டுகின்றன. எந்த மேலான விதிகள் சார்ந்தும் இவர்கள் ஒழுகவில்லை. இதழின் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இவ்விதழ் ஆசிரியர்கள் என்னும் வர்த்தகர்கள் எந்த விதமான சரக்கைக் கொள்முதல் செய்ய விரும்புகிறார்களோ அதற்கேற்ப சரக்கைத் தயாரித்துக் கொடுக்கக்கூடிய வணிக உற்பத்தியாளர்கள் இவர்கள். மறைமுகமான அல்லது நேரடியான ஆபாசம், பாலுணர்வைத் தூண்டும் தந்திரங்கள், தமிழ் வாழ்க்கையில் பார்க்கக் கிடைக்காத காதல் காட்சிகள், நிஜமான வாழ்க்கைக்கு எதிராகப் பொய்யான வாழ்க்கை, உண்மையான பிரச்சனைகளுக்கு எதிராகப் போலியான பிரச்சனைகள், மெய்யான தீர்வுகளுக்கு எதிராக கற்பனையான தீர்வுகள் இவையே அவர்களுடைய வழிமுறைகள். இவர்களுக்கு வருமானம் உண்டு. புகழ் உண்டு, அரசியல் செல்வாக்கு உண்டு. வானொலியிலும் டி.வியிலும் சந்தர்ப்பங்கள் உண்டு. பல்கலைக் கழகங்கள் ஆதரிக்கின்றன. ஆராய்ச்சி மாணவர்கள் இவர்களுடைய ஜோடனைகளை ஆராய்ச்சி செய்து பட்டம் பெறுகிறார்கள். எழுத்தாளர்கள் தங்களைத் தேடி பரிசுகள் வருவதற்காக நெடுங்காலமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வணிக எழுத்தாளர்கள் பரிசுகளுக்குக் கொடுக்க வேண்டிய அரசியல் விலை தந்து உடனுக்குடன் அவற்றைப் பெற்று முந்தியில் சொருகிக் கொண்டு போகிறார்கள். அத்துடன் மூன்றாம் தர வணிகத் தயாரிப்புகள்தான் இன்று நூல் நிலையங்களையும் பெரிதும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன.

மேலானவற்றை உருவாக்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளன் ஐந்நூறு அல்லது ஆயிரம் பிரதிகள் விற்கும் சிறு பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருக்கிறான். தமிழ் மக்களின் எண்ணிக்கை 5 கோடிக்கு மேல் என்கிறார்கள். மேடையில் முழங்குகிறவர்கள் இன்னும் அதிகமாகக் கூடச் சொல்கிறார்கள். எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது. தமிழ் எழுத்தாளன் ஒருவன் அவன் மேலானவற்றைப் படைக்க வேண்டும் என்று எண்ணிவிட்டான் என்றால், ஐம்பது வருடம் விடாப்பிடியாக எழுதிய பின்பும் அவனால் இரண்டாயிரம் வாசகர்களைச் சென்றடைய முடியாது. அவன் தனியாக சிற்றிதழ்களுக்கு வெளியே நின்று ஒரு புத்தகம் எழுதினால், அதுவும் தரமான புத்தகம் என்றால் ஆயிரம் பிரதிகள் விற்க ஐந்து வருடங்கள் வரையிலும் ஆகும். ஐம்பது வருடங்கள் தொடர்ந்து எழுதிய பின்பும் அவன் ஒரு சமூக சக்தியாக உருவாவது இல்லை. திட்டமிட்ட புறக்கணிப்புகள் மூலம் அவன் குரல்வளை நெரிகிறது. இருப்பினும் அவன் எழுதிக் கொண்டிருக்கிறான். தரத்தைக் காப்பாற்ற முன்னும் தமிழ் எழுத்தாளனின் சோதனைகள் மிகக் கொடுமையானவை. எனக்குத் தெரிந்து உலக மொழிகள் எவற்றிலும் மதிப்பீடுகளையும் தரங்களையும் போற்றும் எழுத்தாளன் இந்த ஒரே காரணத்திற்காக இவ்வளவு மோசமான சோதனைகளை எதிர்கொள்வதில்லை.

ஆனால், காலம் அவ்வளவு கொடுமையாக இல்லை. எழுத்தாளனின் படைப்புக்கள் காலத்தை எதிர்த்து வெல்லும் போது, பொழுதுபோக்கு ஜோடனைகள் காலத்தால் சாகடிக்கப்படுகின்றன. ஆனால் காலத்தின் நடவடிக்கைகள் சாவகாசமானவை. எழுத்தாளனின் ஆயுளோ அதிகமாகவும் இல்லை. பாரதியைப் புறக்கணித்த புலவர்கள் இருந்த இடம் இன்று தெரியவில்லை. பாரதி நின்று கொண்டிருக்கிறார். கல்கி தேய்ந்து கொண்டிருக்கிறார். புதுமைப்பித்தன் வளர்ந்து கொண்டிருக்கிறார். தாம் வாழ்ந்த காலத்தில் மிக மோசமான புறக்கணிப்புகளுக்கும் வசவுகளுக்கும் ஆளான வையாபுரிப் பிள்ளை மறு அவதாரம் எடுத்திருக்கிறார். அவரைத் தூற்றிய புலவர்களின் வாரிசுகள் வையாபுரிப் பிள்ளைக்கு உரிய மதிப்புத் தந்து அவரை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று இப்போது வேண்டுகோள் விடுக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். டி.கே.சியின் தமிழ் பற்று, கவிதைப் பற்று, தமிழ் இசைப் பற்று ஆகியவை இன்று தமிழ் வாழ்வின் ஒரு பகுதியாக மலர்ந்து விட்டன. இக் கருத்துக்களை அவர் கூறிவந்த காலங்களில் அவர் மிக மோசமான விமர்சனங்களுக்கு ஆளாக வேண்டி இருந்தது

ஆனால் தன் ஆயுளுக்குப் பின் நிதி வழங்கப்படும் காலத்தை மட்டுமே நம்பி ஒரு எழுத்தாளன் வாழ நிர்ப்பந்திக்கப்படுவது ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தின் இருப்பைக் காட்டவில்லை. அரசியல், கல்வித்துறைகள், இலக்கிய அமைப்புகள், திரைப்படங்கள், சமய நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் வணிக மதிப்பீடுகளை ஏற்றுக் கொண்டு குறுகிய வழிகளில் செயல்படுவதைப் போற்றும் ஒரு சமூகம் நோயுற்ற ஒரு சமூகம் என்பதில் தவறில்லை. இந்த நோயின் காரணமாக மேலான மதிப்பீடுகள் இன்று முற்றாகச் சரிந்து விட்டன. மட்டுமல்ல தாழ்ந்து கிடக்கும் மதிப்பீடுகள்தான் நடைமுறை சாத்தியமானவை என்ற நியாயமும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. வணிக சினிமாவின் சீரழிந்த மதிப்பீடுகள்தான், தமிழ் அறிவுவாதிகள் என்று கூறிக் கொண்டு நெளியும் அநேகரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அடிப்படையில் இது நிலவுடைமை சமூகத்தின் மதிப்பீடுகள் ஆகும். யார் உண்மையில் அறிவுவாதிகளோ, யார் தரத்திற்காகவும் மேன்மைக்காகவும் நிற்கிறார்களோ அவர்களை மக்களுக்குத் தெரியாது. யார் யாரை மக்களுக்குத் தெரியுமோ அவர்கள் மக்களின் அடிப்படை நாகரிகத்தையே சிதைத்து அந்தச் சிதைவிலேயே தங்கள் குறுகிய நோக்கங்களின் வெற்றிகளில் திளைப்பவர்கள். இப்படிப் பார்க்கும் போது தமிழ் எழுத்தாளனின் தலைவிதியும் தமிழ் சமூகத்தின் தலைவிதியும் ஒன்றுதான். இதுதான் இன்றைய தமிழின் தலையாய பிரச்சனை. இந்தப் பிரச்சனைகளை விரிவாக, மிக ஆழமாக ஆராய்வதுதான் இன்றைய தமிழ் எழுத்தாளர்களின் முதல்பட்ச வேலை.

*****

Dec 25, 2010

உலகம் : ஒரு பெரிய எழுத்து கதை - எஸ் . ராமகிருஷ்ணன்

பிரபவ வருடம்

சித்திரை இரண்டாம் நாள்

முகாம். திருவாவடுதுறை ,

தேவரீர் பண்டிதமணி துரைச்சாமி முதலியார் சமூகத்திற்கு,

தங்கள் அடிப்பொடியான் வலசைஏகாம்பரநாதன் எழுதும் மடல்

திருப்புல்லணி பால்வண்ணசாமி எழுதிய பசுபதி விளக்கம் நுாலில் அடிக்குறிப்பாக இடம்பெற்றிருந்த ஆற்காடு ரத்னசாமி முதலியாரால் எழுதப்பட்டதாக சொல்லபடும் (ஒரு வேளை தழுவி எழுதப்பட்டதாக கூட இருக்கலாம் ) உலகம் : ஒரு பெரிய எழுத்து கதை என்ற நுாலை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளவேண்டி நான் கடந்த சில மாதங்களாக திsraருவாவடுதுறை சந்நிதானத்தில் உள்ள சரஸ்வதி நுாலகத்தில் காலம் கழித்து வருகிறேன். இந்த நுாலை பற்றி மெய்ஞானவிளக்கவுரையில் குமரேசஅடிகள் குறிப்பிடுவதை தவிர வேறு எந்த தகவலையும் என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. மேலசிவபுரி தமிழ்பாடசாலையில் தாங்கள் தமிழ்பணியாற்றிய போது தங்களிடம் சிவஞானபோதத்திற்கு பொருள்விளக்கம் கேட்டு நான் வந்திருந்ததை தாங்கள் மறந்திருக்க மாட்டார்கள். சிவஞானபோதத்திற்கு தாங்கள் காட்டிய வழி தான் இன்று என்னை திருவாவடுதுறை வரை கொண்டுவந்து சேர்ந்திருக்கிறது. கொளத்துார்தேசிகரின் சைவசித்தாந்த வழிகாட்டியில் இது குறித்த சங்கேதமாக சில வாசகங்கள் இடம்பெற்றிருந்த போதும் மூலநுாலைப்பற்றிய விபரங்கள் தெளிவாகயில்லை.

ஸ.

சூளைமேட்டிலிருந்த நவஜோதி அச்சகத்தில் 1906ம் வருடம் அச்சிடப்பட்டு வெளியாகியுள்ள இந்த புத்தகம் வெளியாகியுள்ளது என்ற குறிப்பை சாமிநாத சர்மா பட்டியல் ஒன்றில் கூட பார்வையிட நேர்ந்தது, இதை பற்றிவிசாரிக்க அவரது வீட்டிற்கு சென்றபோது வித்வான் சாமிநாத சர்மாவை சந்திக்கும் பேறு கிடைக்கவில்லை, ஆனால் அவரது நேர்வழி மாணாக்கர் கனகசபாபதியின் வீட்டை கண்டுபிடித்தறிந்து உசாவிய போது அவர் தான் பலவருடகாலம் சாமிநாத சர்மாவிற்கு படியெடுத்து தரும் பணியில் இருந்ததால் இப்புத்தகம் குறித்து கேள்வியுற்றிருப்பதாகவும் சர்மாவும் மேற்படி நுாலை வாசிக்க வேண்டும் என்ற பேராவல் கொண்டிருந்தாகவும் தெரிவித்தார். சூளைமேட்டில் உள்ள சிவன்கோவில் தெருவில் தான் நவஜோதி அச்சகம் இருந்ததாக அவர் தெரிவித்தபடி நான் அச்சகவிலாசத்தை பெற்றுக்கொண்டு நேரில் விசாரித்து வரலாமென்று சென்றிருந்தேன்.

சூளைமேட்டில் அதே இடத்தில் நவஜோதி அச்சகம் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அவர்களிடம் இந்த நுாலைப்பற்றி விசாரித்த போது அதன் உரிமையாளர் தாங்கள் பனிரெண்டுவருடமாகவே இந்த அச்சகத்தை வாங்கி நடத்திவருவதாகவும் அதற்கு முன்பாக அச்சக உரிமையாளராகயிருந்த சிவனொளி குடும்பத்தில் சில விபரீத சம்பவங்கள் நடந்து போனதால் அவர்கள் சென்னையை விட்டு திரும்பவும் தங்களது பூர்வீக ஊரான வந்தவாசிக்கு போய்விட்டதாகவும் ஒருவேளை அங்கே சென்று விசாரித்தால் இந்த நுாலை பற்றிய விபரம் தெரியக்கூடும் என்றார். நான் வந்தவாசியில் அவர்களது விலாசம் கிடைக்குமா என கேட்டதற்கு சரியான விலாசமாகயில்லை ஆனால் அவர்கள் வீட்டின் அருகே ஒரு தேவார பாடசாலையிருந்தாக சொல்லியிருக்கிறார்கள் என்றார். நான் நவஜோதி அச்சகத்தில் அச்சேறிய வேறு ஏதாவது தமிழ் நுால்கள் இருக்ககூடுமா என்று கேட்டதற்கு அச்சகத்தில் இருந்த புத்தகங்கள் யாவற்றிற்கும் வீட்டிலிருந்த பெண்மணி தீவைத்து கொளுத்தியதில் யாவும் எரிந்து போய்விட்டதாகவும் இது தான் அந்த வீட்டில் முதலாக நடந்த துர்சம்பவம் என்று சொல்லியதோடு ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு அவசரமாக ரசீதுகள் அடித்துக் கொண்டிருப்பதால் இரவு திரும்பி வருவதாகயிருந்தால் தனக்கு தெரிந்த விபரங்களை சொல்வதாக உரிமையாளர் கோலப்பன் சொல்லியிருந்தார். நான் வந்தவாசிக்கு சென்று விசாரித்துவிட்டு திரும்பிவரும் போது அவரை பார்ப்பதாக சொல்லியடி ரயில்கெடிக்கு சென்றேன்

வந்தவாசி மிகசிறிய ஊராகயிருந்தது. சமணசமயத்தை சார்ந்த குடும்பங்கள் அதிகமிருப்பதாக வாசித்திருக்கிறேன். தேவாரப்பாடசாலையை கண்டுபிடிப்பது எளிதாகவேயிருந்தது. ஆனால் அதை ஒட்டிய வீட்டில் யாருமேயில்லை. வீடு இடிந்து நிலைகதவு கூட பிடுங்கி போகப்பட்டிருந்தது. துார்ந்து போயிருந்த ஒரு கிணற்றை தவிர வேறு எதுவும் அங்கேயில்லை ஒரு வேளை அருகில் இருக்க கூடுமோ என்று தேடியபோது இரண்டு வீடுகள் தள்ளி முதுகுன்றத்தில் தபால்துறையில் வேலைசெய்யும் குமாஸ்தா சேதுப்பிள்ளையின் வீடு இருந்தது. அவர்கள் சிவனொளியின் குடும்பம் சூளைமேட்டில் குடியிருப்பதாகவும் அவரது வீட்டில் சில துர்சம்பங்கள் நடந்து போய்விட்டதால் வேறு இடத்திற்கு மாறி போயிருக்க கூடுமென்றார்கள்.

சேதுப்பிள்ளையின் தாயார் மிகுந்த அன்போடு எனக்கு உப்பிட்ட கூழும் வெங்காயமும் தந்து சாப்பிடச் சொன்னார். சேதுப்பிள்ளையின் தாயாருக்கு சிவனொயின் மனைவி ஒன்றுவிட்ட தங்கை முறை வரக்கூடியவள் தான் என்றும் சிவனொளி ஒன்று சொல்லிக் கொள்கிறமாதிரி பண்டிதர் இல்லை என்றும் அவருக்கு கொஞ்சம் சித்தகலக்கம் இருந்ததாகவும் சில வேளைகளில் அதைப்பற்றி வீட்டு பெண்கள் பேசிக் கொண்டதாகவும் சொன்னார். நம்பமுடியாமல் நான் சிவனொளிக்கு சித்தம் பேதலித்திருந்திருந்தா என்று கேட்டேன். சில நேரம் அச்சாகிவந்த சில புத்தகங்களை படித்து சிவனொளி அழுது கொண்டிருப்பதை பார்த்திருப்பதாக பெண்கள் சொல்லியிருக்கிறார்கள் என்றும் சேதுப்பிள்ளையின் தாயார் சொன்னாள்.

நான் கூழை குடித்துவிட்டு சிவனொளியின் மனைவி தான் அச்சகத்தில் தீவைத்துவிட்டதாக பேசிக்கொள்கிறார்களே என்று கேட்டேன். சேதுவின் தாயார் குழப்பத்துடன் அப்படியெல்லாமிருக்காது அந்த மனுசன் அபாண்டமாக பழியை போட்டிருக்கிறான். அவரே கொளுத்திவிட்டிருப்பான். அச்சகத்தில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் போட வேண்டுமென்ற போது சீராக கொண்டுவந்திருந்த அட்டிகையை கழட்டி கொடுத்தவள் பூரணவல்லி, அவள் தீவைத்திருக்க மாட்டாள், இத்தனைக்கும் அவளது தகப்பனார் சப்ஜட்ஜாகயிருந்தவர், கல்விமான் என்று சொல்லிக் கொண்டே போனாள். சிவனொளியின் வீட்டார் சூளைமேட்டில் குடியிருக்கவில்லை என்றும் நான் ஒரு புத்தகத்திற்காக அவர்களை தேடியலைவதாகவும் சொன்னேன்.

புறப்படும் சமயத்தில் சேதுவின் தாயார் ஒரேயொரு சம்பவத்தை கேள்விபட்டதாகவும் அது நிஜம் தானா என்று தனக்கு தெரியாது என்றும் சொன்னார். இச்சம்பவமாவது

சிவனொளிக்கு ஆறு பெண்பிள்ளைகளும் இரண்டு பையன்களுமிருந்தார்கள். ஒன்பதாவதாக ஒரு பெண்சிசுவை பிரவசித்து குருதிப்போக்கு அதிகமாகி இத்துப்போன உடலோடு படுக்கையில் கிடந்தாள் பூரணவல்லி. குழந்தையும் லிர்க்கைப்போலிருந்தது. முன்கட்டில் அச்சகமும் பின்கட்டில் வீடுமிருந்தது. அநேகமாக பிரசவமாகி ஆறாம் நாளோ என்னவோ, அச்சகத்திற்கு வெண்பாபுலி பிச்சையாபிள்ளை தனது பரிவாரங்களுடன் வந்திருந்தார். திருக்குறளுக்கு தான் புதிதாக எழுதிய உரையை சீடர்களுக்கு வாசித்துகாட்டுவதற்காக அழைத்து வந்திருந்தார். அச்சகத்தில் இருந்த சிவனொளிக்கு பிச்சையாபிள்ளையை விசேசமாக உபசரிக்க முடியாதபடிக்கு வீட்டில் சுககேடாகியிருக்கிறாளே என்று ஆத்திரமாகயிருந்தது. வெற்றிலை சீவலும், அதிசரமும், சீங்குழலும் தட்டில் கொண்டுவந்து வைத்தபடி சிவனொளியின் மூத்தபெண் அடுப்படிக்கும் அச்சகத்தின் முகப்பறைக்கும் அலைந்து கொண்டிருந்தாள்.

காலையிலிருந்தே குழந்தையின் அழுகை சப்தம் கேட்டபடியிருந்தது. பிச்சையாபிள்ளை அதிசரத்தினை பற்றிய சிலேடைபாடல் ஒன்றை கட்டிக்கொண்டிருந்தார். குழந்தையின் அழுகை சிவனொளியின் காதுகளை துளையிடுவதை போல கேட்டுக் கொண்டேயிருந்திருக்க வேண்டும். கோபத்துடன் எழுந்து உள்ளே போய் அவள் படுத்திருந்த அறையை சாவியால் பூட்டி சாவியை துாக்கி பரணில் எறிந்துவிட்டு திரும்பவும் வந்து உட்கார்ந்து கொண்டார். மதியம் வீட்டிலே விருந்துக்கும் ஏற்பாடிகியிருந்தது. கறிவேப்பிலை பொடியை வெண்பாபுலி சாதத்தில் போட்டபடியே வெந்த சோற்றிற்கும், மூடனுக்குமாக ஒப்புமையை பற்றிய ஒருபாடலை புனைந்தார். இரவுவரை பேசிக்கொண்டிருந்துவிட்டு யாவரும் திருப்பருத்திக்குன்றம் செல்வதாக வண்டியை அமர்த்துக் கொண்டு புறப்பட்டார்கள் சிவனொளியின் கடைசிமகன் பரணில் ஏறி சாவியை தேடியெடுத்து அறையின் கதவை திறந்துவிட்டான். அறையிலிருந்த வெளிச்சத் துடைத்து எறியப்பட்டிருந்தது. மூத்தமகள் நற்பின்னை பூண்டுகஞ்சி கொண்டு போய் தாயாரிடம் கொடுத்தபோது அம்மா கட்டிலில் இருந்து அவளை திரும்பி பார்க்கவேயில்லை. பிள்ளையை யாரும் துாக்கவும் விட மறுத்துவிட்டாள். அதன்பிறகு பூரணவல்லடி குளிப்பதற்கோ, சாப்பிடுவதற்கு என எதற்கும் மறுக்க துவங்கினாள். பிள்ளைகள் அவளை இழுத்துவந்து சாப்பிடச் செய்தார்கள். குழந்தை அழுவதாக ஒலியெழுப்பினால் உடனே அவள் தன்விரலை குழந்தையின் வாயில்கொடுத்து அழுகையை அடக்கிவிடுவாள்.

சிவனொளியிடம் பேச்சே அற்றுப்போனது. அவர் சில சமயம் அந்த அறைக்குள் நுழைந்த போது அவள் தன்பற்களை நரநரவென கடிப்பதை கேட்டிருக்கிறார். அதை கேட்டதும் அவருக்கு மிகுந்த ஆத்திரமாகவரும், அறையிலிருந்த இருளை போலவே அவளும் உருமாறிக்கொண்டு வருவதாக நினைத்தபடி அவசரமாக வெளியே வந்துவிடுவார். ஒரு இரவு அவர் அச்சகவேலையாட்களை அனுப்பிவிட்டு சாப்பிட உட்கார்ந்திருந்த போது அவசர அவசரமாக வெளியே எழுந்து போன பூரணவல்லி புத்தககட்டுகளின் மீது சூடவில்லைகளை கொளுத்தி போட்டுவிட்டு அவை தீபற்றி எரிவதை பார்த்துக் கொண்டிருந்தாள் கண்இமைக்கும் நேரத்தில் காகிதங்கள் எரியத்துவங்கி புகை வீடெங்கும் நிரம்பியது. சிவனொளி ஒடிவருவதற்குள் நெருப்பு அச்சுகாகிதங்களில் பற்றி எரியத்துவங்கியது. இரவு முழுவதும் நெருப்பை அணைக்க முடியவேயில்லை. சிவனொளி தன்மனைவியை ஒங்கிஒங்கியறைந்தார். பிள்ளைகள் தகப்பனுக்கும் தாயாருக்குமான மூர்க்கமான சண்டையை பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது நடந்த சில நாட்களுக்கு பிறகு பூரணவல்லிக்கு பித்தம் தலைக்கேறிவிட்டதாக காளஹஸ்திக்கு சிட்சைக்கு அனுப்பிவிட்டார்கள். அதுவரைக்கும் தான் தனக்கு தெரியும் என்றாள் சேதுவின் தாயார்

வேதனையாகயிருந்தது. திரும்பவும் அந்த அச்சகத்திற்கு போய் விசாரிக்க மனம் ஒப்பவில்லை. அதனால் நான் ஊர் திரும்பிவிட்டேன். அதன் பிறகு தான் மேலகரத்திலிருந்த சிவசுப்ரமணிய ஒதுவாரை பற்றி கேள்விபட்டேன். அவர்கரதலைபாடமாக தேவாரத்தை அறிந்து வைத்திருந்தவர். ஒருவேளை அவருக்கு மேற்படி நுாலைப்பற்றிய விபரங்கள் தெரிந்திருக்ககூடும் என்று அவரை சந்திப்பதற்காக சென்றேன்.

நான் நினைத்திருந்த உருவத்திற்கும் அவருக்கும் சம்பந்தமேயில்லை. காய்ந்த வாழையிலை போன்று மெலிந்துபோன உடலுடன் ஒற்றை தட்டுவேஷ்டி கட்டியபடி காடுடையார்கோவிலில் தான் ஒதுவாராகயிருப்பதாக தெரிவித்தார். எனது பெயரை மறந்துவிட்டவரை போல அடிக்கொரு தரம் கேட்டுக் கொண்டார். நான் ஏகாம்பரநாதன் என்று சொன்னதும் ஏகாம்பரத்தின் விளக்கமென்ன என்று தெரியுமா என்று கேட்டார். நான் அவர் சொல்லி கேட்க சித்தமாகயிருப்பதாக தெரிவித்தேன்.

ஆமிரம் என்ற வடசொல் மாமரத்தை குறிக்கும் ஏக ஆமிரம் என்பது ஏகாமிரமாகி பின்னர் ஏகாம்பரம் என திரிந்திருக்கின்றது. கச்சிஏகம்பம் என்று தேவாரத்தில் பாடப்பெற்ற திருக்கோவிலில் பழமையாக மாமரம் இருப்பதை பார்த்திருக்கீறீர்களா ? கம்பை என்னும் வேகவதியாற்றை அடுத்துள்ளமையால் ஏகம்பம் என்ற பெயர் பெற்றிருக்கவும் கூடும் என்றார். நான் ஆச்சரியத்துடன் அவரை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் பத்தொன்பதாவது தலைமுறையாக தான் ஒதுவாராகயிருப்பதாக சொல்லியபடி எதற்காக இந்த நுாலை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கேட்டார். நான் மிகுந்த சங்கோஜத்துடன் மனதில் ஒரு சந்தேகம் அதை தெளிவு பெறுவதற்காக அலைந்து கொண்டிருப்பதாக சொன்னேன். ஆச்சரியத்துடன் அவர் சந்தேகத்தில் ஒன்று இரண்டு என்று பேதமிருக்கிறதா என்ன ? சந்தேகம் ஒரு காட்டை போன்றது ஒன்றுக்குள் ஒன்று விரிந்து கொண்டே போய்க்கொண்டிருக்கும். சந்தேகத்தை தீர்த்துவிடக்கூடாது. இத்தனை வருடமாக தேவாரம் பாடும் எனக்கு இருக்கும் சந்தேகங்களை நீங்கள் கேட்டால் பயந்து போய்விடுவீர்கள். சில நேரங்களில் எனக்கு தேவாரப் பாடல்கள் யாவும் நானே புனைந்தது போலதானிருக்கிறது. ஞானசம்பந்தர் திருநாவுக்கரசர், மாணிக்க வாசகர் எல்லாம் வெறும் பெயர் தானே ?. ஈசனுக்கு ஆயிரம் பெயர் இருப்பது போல இதுவும் ஒரு மயக்கம் தானோ என்னவோ ? நான் அவரது நிழலை போல ஒடுக்கத்துடன் கூடவே நடந்து வந்தேன்.

இருவரும் வீடு வந்து சேர்ந்த போது அவர் தன்னிடம் ஒன்றிரண்டு ஏடுகளை தவிர வேறு எதுவும் கிடையாது என்றும் தனக்கு அச்சடிக்கப்பட்ட புத்தகங்களை பிடிக்கவில்லை. காகிதங்கள் வெள்ளைகாரர்கள் மலம் துடைக்க பயன்படுத்துகிறார்கள் என்று தனக்கு தெரியும் என்றார். நான் அது வேறுவகையான காகிதம் என்றேன். ஒதுவார் அதைக் கேட்டுக்கொண்டதாக தெரியவில்லை. புன்சிரிப்போடு நான் தேடிவந்த புத்தகத்தின் பெயரை திரும்பவும் கேட்டார். உலகம் ஒரு பெரிய எழுத்துகதை என்று சொன்னேன். அவர் திண்ணையில் சாய்ந்தபடியே பனையோலை விசிறியால் வீசிக்கொண்டு விரலால் ஏதோ கணக்கு போட்டார். பிறகு வெற்றிலை சாற்றை துப்பிவிட்டு என் நினைவில் அப்படியொரு புத்தகம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் இது புத்தகமல்ல ஒரு சங்கேதம் என்றே தெரிகிறது. எதற்கும் தேவாரஏட்டில் கயிறுசாத்திபார்த்து சொல்வதாக சொல்லியபடி தன்வீட்டிலிருந்த தேவாரஏடுகளை எடுத்துவந்து கண்ணை மூடிக்கொண்டு கயிற்றை ஊடேஇழுத்து ஒரு ஏட்டை தனியே பிரித்து வாசித்தார். ஞானசம்பந்தரின் பாடல் ஒன்று வந்தது. அவர்பாடலை பண்ணோடு பாடியபடி நீங்கள் தேடிவந்த நுால் திருவெண்காட்டில் இருக்ககூடும் என்றார். நான் எனது சந்தேகத்தின் சுமையை உடல் முழுவதும் ஏந்திக் கொண்டபடி அவரிடமிருந்து வீடு திரும்பினேன்.

இரண்டு மாதகாலம் அந்த நுாலை மறந்துவிட்டு நித்யகாரியங்களில் ஈடுபடவேண்டும் என்று மனதை கட்டுப்படுத்திக் கொண்டேன். இந்த நுால் ஒரு சங்கேதம் என்று ஒதுவார் சொன்னது மிகவும் சரியானதாகவேயிருந்தது. நானாக மனதில் அந்த நுாலினை பற்றி சில கற்பனைகளை உருவாக்க ஆரம்பித்தேன். சிலவேளைகளில் அந்தக் கற்பனையில் உருவான பாடல்களை தொகுத்து எழுத துவங்கினேன். சில நாட்கள் தொடர்ந்தாற் போல இந்த நுாலைப்பற்றிய எண்ணங்கள் உருவாகும், அப்போது சில காட்சி ரூபத்திலும் சில தெளிவற்றும் மனதில் தோன்றும். நான் ரகசியமாக அந்த காட்சிகளையும் கருத்துக்களையும் காகிதத்தில் எழுதிவரத்துவங்கினேன். ஆறேழு மாதங்களுக்கு பிறகு நான் எழுதியிருந்த காகிதங்களை ஒன்று சேர்த்து பார்க்கும் போது அது சிறிய நுால்வடிவிலிருந்தது. அந்த நுாலிற்கும் உலகம் ஒரு பெரிய எழுத்துகதை என்று தலைப்பிட்டு நல்லுாரில் உள்ள அச்சகம் ஒன்றில் அச்சிற்கும் கொடுத்து வந்தேன். அச்சு கோர்க்கும் போது அருகிலே இருந்து பார்க்கவேண்டும் என்று ஆசையாகயிருக்கும். ஆனாலும் தினமும் மாலையில் நல்லுாருக்கு போய் அச்சகத்தில் வேலை நடைபெறுகிறதா என்று பார்த்துக் கொண்டு மட்டும் வருவேன். ஒரு இரவில் உறக்கத்தில் யாரோ சொல்வது போல கேட்டது.

தேவாரப்பாடல்கள் எல்லாம் நான் எழுதியது போல தானிருக்கிறது. எல்லாம் வெறும் பெயர்கள் தானே ?

பயத்துடன் கண் விழித்து எழுந்து கொண்டேன். ஒதுவார் சொன்னதை தான் நான் செய்திருக்கிறேனா ? இப்போதே போய் அச்சடிக்க கொடுத்த புத்தகத்தை நிறுத்திவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு விடியும்வரைக்கும் பொறுமையில்லாமல் நல்லுாருக்கு புறப்பட்டேன். நான் போய்சேர்ந்த போது விடிகாலையாகியிருந்தது. நல்லுாரிலிருந்த அருமருந்துடையார் கோவில் திறந்திருந்தது. கோவிலினுள் நுழையும் போது தேவாரப்பாடல் கேட்டுக் கொண்டிருந்தது. பிரகாரத்தில் நின்றபடி கேட்டுக் கொண்டிருந்தேன். காலைவெளிச்சம் படர்ந்து வருவது போல அப்பாடல் கோவிலின் பிரகாரத்தில் மெதுவாக ஒளியை உண்டாக்கி கொண்டிருந்தது. தேவாரம் ஒரு பாடல் அல்ல ஒரு ஜோதி அல்லது ஒளிப்பிரவாகம் என்று மனதில் தோன்றியது. நெடுநேரம் பிரகாரத்திலே நின்றிருந்தேன். தேவாரத்தை பாடிய மனிதன் போய்விட்டிருக்ககூடும். ஆனால் கோவிலின் கற்துாண்களில் அப்பாடலின் ரீங்காரம் ஒளிந்திருந்தது. ஒதுவாரின் குரல்கேட்டுகேட்டு சாந்தம் கொண்டிருந்த கோவில்கற்களை பார்க்கும் போது மனதில் இதுவரையில்லாத ஒரு பேரமைதி உண்டானது. கல்யானை ஒன்றின் காதை நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். மனது அதை விட்டு அகலவேயில்லை. யானையின் சிரிப்பு எப்படியிருக்கும் என்று அப்போது தான் தெரிந்து கொண்டேன். மடைப்பள்ளிக்காரர்களில் ஒருவன் எனக்கு திருவமுது தந்தபோது தான் தன்னுணர்வு பெற்றேன். தையல் இலையை பிரகாரத்திலே வைத்துவிட்டு அச்சகத்திற்கு விரைந்து சென்றேன்.

அன்று மாலையோடு அச்சுகோர்ப்பு முடிவதாகயிருந்தது. நான் அதுவரை செய்த வேலைக்குரிய கூலியை தருவதாக சொல்லியபடி எனது கைப்பிரதியை வாங்கிக் கொண்டுவீடு திரும்பினேன். எனக்கு சந்தேகமாகயிருந்தது. ஒருவேளை நான் எழுதியது தான் அந்த புத்தகமா. ? சில நாட்களில் அதை வீட்டில் வைத்திருக்கவே அச்சமுண்டாகியது. அதை வேண்டுமென்றே கோவிலின் தலவிருட்சத்தினடியில் சுருட்டிவைத்துவிட்டு வந்தேன். யாரோ ஒருவன் அதை எடுத்துப் போய் படிக்க கூடுமல்லவா ? அவன் இதுதான் உலகம் ஒரு பெரிய எழுத்துபுத்தகம் என்று படிக்ககூடுமானால் அதன் மூலப்புத்தகத்தை விடவும் எனது நுால் முக்கியமானதாகிவிடுமல்லவா ? மனதில் சந்தோஷமும் ஏமாற்றிவிட்டோமோ என்ற குற்றஉணர்ச்சியும் ஒன்றாக தோன்றியது. நான் சில நாட்கள் இதற்காகவே வெளியூர் பயணத்திற்கு ஆயுத்தமானேன்.

தற்செயலாகவா அல்லது திட்டமிட்டுதான் வந்தேனா என்று தெரியாமல் திருவெண்காட்டிற்கு வந்திருந்தேன். திருவெண்காட்டுபதிகம் எனக்கு விருப்பமானது.. பாடல்பெற்ற ஸ்தலத்தில் அமர்ந்து கொண்டு மனதை வேறுகாரியங்களுக்கு பழக்கப்படுத்த முயற்சித்தேன். அப்போது என் அருகில் அமர்ந்தபடி வில்வகாய் ஒன்றை கையில் வைத்தபடியிருந்தவர் என்னை பார்த்து சிரித்தபடி உலகம் ஒரு பெரிய எழுத்து கதைதானா ? என்று கேட்டார். நான் பயத்துடன் உங்களுக்கு அதைப்பற்றி தெரியுமா என்று கேட்டேன். மனது உடலின் உள்ளேயிருப்பதில்லை. அது உடலுக்கு வெளிளேயிருக்கிறது தெரியுமா என்றார். நம்பமுடியாமல் நிஜமாகவா ? என்றேன். காற்று உடலுக்குள் சென்றுவெளியேறி வருவதை நம்புகிறாயா ? அப்படியானால் மனமும் அது போல உள்ளும் வெளியும் சென்றுவரக்கூடியது ஒரிடத்தில் நிரந்தரமாகதங்காதது என்றால் நம்பமாட்டாயா என்று கேட்டார்

எனது குழப்பம் உலகத்தால் பெரிதாக்கபட்டுக் கொண்டேயிருந்தது. நான் என்ன செய்வது என்று அவரிடம் கேட்டேன். அவர் வில்வகாயை என்னிடம் கொடுத்துவிட்டு சிரித்தபடியே கோவிலை விட்டு வெளியேறி நடந்தார். நான் வில்வகாயுடன் கோவிலை விட்டுவெளியே வந்த போது மாலையாகியிருந்தது. இரண்டுமூன்று நாட்கள்திருவெண்காட்டிலேயிருந்தேன். மனது மெதுவாக அடங்க துவங்கியது. பிறகு ஊர் திரும்பினேன்.

வழியெல்லாம் நான் எதற்காக ஒரு நுாலைதேடி அலைக்கழிக்கபடுபவனாக உருமாறினேன் என்பதை பற்றியே நினைத்துக் கொண்டு வந்தேன். எனது ஊரில் சரவணக்குளம் என்று ஒரு குளமிருக்கிறது. அதில் எப்போதும் கலங்கிய நிலையில் தண்ணீர் இருக்கும். அதன் கரையில் ஒருவாகைமரமிருந்தது. ஒரு காலத்தில் பெரிய குளமாகயிருந்திருக்க கூடும். நான் சிறுவனாகயிருந்த போது அது இடிந்து துார்ந்து கிடந்தது. குளத்தை சுற்றி அடர்ந்திருந்த செடிகொடிகளில் எதையாவது பறிப்பதற்காக நான் செல்வேன். ஒரு நாள் அரளிப்பூவை பறித்து கையில் வைத்துக் கொண்டு வரும் போது ஒரு ஆள் என்னைப் பெயர் சொல்லி கூப்பிட்டான்.

அவனை நான் முன்னதாக அறிந்திருக்கவில்லை. அவன் அருகில் போனதும் சிரித்தபடியே உனக்கு நெல்லிக்காய் பிடிக்குமா என்று கேட்டான். பிடிக்கும் என்று சொன்னேன். அவன் எதற்காக பிடிக்கும் என்று கேட்டான். நான் நெல்லிக்காயை தின்றபிறகு தண்ணீர்குடித்தால் இனிப்பாகயிருக்கும் என்றேன். அவர் சிரித்துக் கொண்டே நாக்கில் இனித்துக் கொண்டேயிருக்கும் இன்னொரு பொருளை கொடுத்தால் தின்று பார்ப்பாயா என்று கேட்டார். நான் சரியென்று சொன்னேன். அவர் என்னை அருகில் இழுத்து காதில் ஒரு பாடலை சொன்னார். அப்பாடலை எப்படி பிரித்து பொருள் கொள்ள வேண்டும் என்றும் சொல்லி தந்தார். ஆச்சரியமாகயிருந்தது. அப்பாடலை ஒவ்வொரு விதத்தில் பிரிக்கும் போது ஒரு அர்த்தம் தந்ததோடு நாவில் அறியாத ஒரு சுவை நிறைவது போலவேயிருந்தது. வீட்டிற்கு திரும்பி பலமுறை அப்பாடலை பிரித்து பிரித்து மனதிற்குள்ளாக பாடினேன். அன்றைக்கு காரணமில்லாமலே எனக்கு சிரிப்புவந்து கொண்டிருந்தது. பிறகு எப்போது தனிமையிலிருந்தாலும் அப்பாடலை நாவு உருட்டத் துவங்கிவிடும். மனதில் சந்தோஷம் நிரம்பும். அதன் பிறகு பித்தேறியது போல நான் யார்யாரோ எழுதிய பாடல்களை, நுாற்களை வாசிக்க துவங்கினேன். மனதில் ஆசை அடங்கவேயில்லை.

என் கதையை நான் விஸ்தாரமாக தங்களிடம் முன்னதாகவே சொல்லியிருக்கிறேன். இப்போது நினைவு படுத்த வேண்டிய காரணம். நான் திருவெண்காட்டிலிருந்து ஊர்திரும்பி சில நாட்களுக்கு பிறகு எனது கனவில் நான் சிறுவயதில் சந்தித்த மனிதன் வந்தார். என்னிடம் நீ அடுத்த வெள்ளிகிழமை திருச்சுழிக்கு சென்றால் அங்கே சிவப்பு பை கொண்டுவரும் ஒருவன் உன்னை சந்திப்பான் அதை வாங்கிகொண்டு வந்துவிடு உனக்கு தெளிவு கிடைக்கும் என்றார். நான் அவர் சொன்னநாளில் திருச்சுழிக்கு சென்றேன். கனவில் சொன்னது போலவே ஒருவன் என் எதிரில் வந்து சிவப்பு பையை என்னிடம் தந்துவிட்டு சென்றார். வீடுதிரும்பும் வரை அதில் என்ன இருக்கிறது என்றே பார்க்கவில்லை. இரவில் பிரித்து பார்த்த போது அதனுள் தலைப்பிடப்படாத ஒரு நுால் இருந்தது. ஆனால் அது என்ன மொழியில் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. தமிழ்போலவும் சில நேரங்களில் வெறும் குறிகளாலும் நிரம்பியிருந்தது. அதை எப்படி வாசிப்பது என்று தெரியவில்லை. முன்னும் பின்னும் புரட்டியபடியிருந்தேன். சில நாட்கள் பிறகு இன்னொரு கனவு வந்தது. அக்கனவில் அதே ஆள் திரும்பவும் என்னிடம் தோன்றி நீ அழகர்கோவிலுக்கு போ.. உன்னை யார் கூப்பிட்டு இந்த புத்தகம்பற்றி கேட்கிறார்களோ அவர்களிடம் கொடுத்துபடிக்க சொல், நீதேடும் நுாலை கண்டடைவாய் என்றார். நான் அதன்பிறகு பலமுறை அழகர்கோவிலுக்கு போய்வந்தேன். யாரும் என்னிடம் பேசவேயில்லை.

ஒரு நாளில் சுனையருகேயிருக்கும் மண்டபத்தில் உட்கார்ந்திருந்த போது ஒரு ஆள் என் முதுகை தட்டி எத்தனை நாட்களாக இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறாய் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசமாட்டேன் என்கிறாயே ? எங்கே அந்த புத்தகம் என்றார். எனக்கு வியப்பாகயிருந்தது. பலமுறை இதே ஆளை பார்த்திருக்கிறேன் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசியதேயில்லை. பதட்டத்துடன் பையிலிருந்த புத்தகத்தை அவர் கையில் கொடுத்தேன்.. அவர் தனக்கு எழுதப்படிக்கதெரியாது நான் இதை என்ன செய்வது என்றார். நான் குழப்பத்துடன் உங்களுக்கு படிக்க தெரியும் என்றார்களே என்றேன். அவர் அப்படியா சொன்னார். அப்போ கொடு படித்து பார்க்கலாம் என வாங்கி ஒரு பாடலை பாடினார். அதன் அர்த்ததை சொல்லாமலே சபாஷ் என்றபடி புத்தகத்தை என்னிடம் கொடுத்துவிட்டு எனக்கு ஒரு உதவி செய்வாயா என்று கேட்டார். நான் என்ன செய்ய வேண்டும் என்றேன். ஒரேயொரு வாசனை சோப் வேண்டும், வாங்கித் தரமுடியுமா என்றார். நான் மதுரையிலிருந்து வாங்கிவந்து தருவதாக சொன்னேன். அவர் தான் ஒரு ஹோட்டலில் வேலை செய்வதாக சொல்லியபடி கடந்து போய்விட்டார்.

ஒரு முறையல்ல இருபத்திநான்கு முறை வெவ்வேறு வாசனை சோப்புகள் வாங்கி தந்துவிட்டேன். ஆறேழு மாதமாகியும் அவர் எனக்கு புத்தகத்தை வாசித்துகாட்டவேயில்லை. ஒரு நாள் நான் கோபமடைந்து கத்தியதும் அவர் ஆத்திரத்துடன் அந்த புத்தகத்தை வாங்கி என் கண் எதிரிலே கழிவுநீர்குட்டையில் துாக்கி எறிந்தார். நான் சப்தமாக அழுதேவிட்டேன். அவர் என்னை பற்றிய கவனமேயின்றி திரும்பவும் தன்வேலையை கவனிக்க சென்றுவிட்டார். நான் அவரை மறுமுறை பார்த்த போது அவர் நான்வைத்திருந்தது உண்மையான புத்தகமல்ல. என்றதோடு புத்தகத்தில் இருப்பது எதுவும் உண்மையுமல்ல என்றார். அவரை நான் என்ன செய்வது என்று தெரியமால் வீடு திரும்பினேன்.

இதுவரை தங்களிடம் சொல்லாத ஒரு சேதியை இங்கே குறிப்பிட வேண்டியதிருக்கிறது எனக்கு பதினான்கு வயதிலே திருமணம் நடந்துவிட்டது. நான் மாமனாரின் வீட்டில் தான் இருந்துவருகிறேன். எனது சமீபத்திய செயல்கள் அவர்களை வெகுவாக பாதித்திருக்க வேண்டும் எனது வீட்டிற்கு நான் திரும்பிவந்த நாளில் எனது மாமனார் மிகுந்த ரெளத்திரம் கொண்டவராக என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டார். நான் அவமானத்தாலும்., இனி என்ன செய்வது என்று தெரியாமலும் வெளியேறினேன். சில நாட்கள் அதே ஊரில் திரிந்தேன் . பிறகு எப்படியாவது அந்த பெரிய எழுத்து கதையை திரும்பவும் அடைந்தே தீர்வது என்று தேடி திரிய ஆரம்பித்தேன்.

எனக்கு இந்த உலகத்தை புலன்களால் மட்டும் அறிவது போதுமானதாகயில்லை. உலகம் பெரிய எழுத்து கதை என்ற நுால் உலகை புலனுக்கு அப்பால் அறிந்து கொள்வதை பற்றியதாகயிருக்க கூடும் என்று எனக்கு ஒரு ஐயமிருக்கிறது.

இப்போது எனது வயது நாற்பதை கடந்து விட்டிருக்கிறது. இந்த நுாலகத்தில் உள்ள ஒரு லட்சத்து பதினாயிரம் பிரதிகளில் அந்த நுால் இருக்ககூடுமா என்று ஐயமாகவேயிருக்கிறது. உண்மையில் அப்படியொரு நுால் வெளியாகியிருக்கிறதா அல்லது என்னை போலவே பலரும்அடைந்த ஒரு அனுபவம் தான் அப்படியொரு கற்பனைபுத்தகமாக குறிப்பிடப்படுகிறதா ? என்னால் இதை பற்றி எவ்விதத்திலும் முடிவுசெய்ய முடியவில்லை. தாங்கள் பல்கலை நுாற்களை கற்றறிந்த மேதை. தாங்கள் தான் இதற்கு விடைதர வேண்டும். தாங்கள் பதில் அனுப்பும் நாள்வரை நான் ஆதின நுாலகத்தில் தான் தங்கியிருப்பேன்.

தாங்கள் தங்களது மாணாக்கனுக்கு வழிகாட்டி உதவிசெய்யவேண்டும் என்று தாழ்பணிந்துகேட்டுக் கொள்கிறேன். உங்கள் பதிலில் தான் எனது எதிர்காலம் அடங்கியுள்ளது.

என்றும் தங்கள் பாதம்பணிந்த

ஏகாம்பரநாதன்

***

நன்றி:திண்ணை

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்