(ஒரு இசைக்கலைஞர் சொன்ன கதை)
'நீர் எழுத்தாளர். கதை கிதை எல்லாம் எழுதுகிறீர். எனக்குப் பாடத்தான் தெரியும். எழுதத் தெரியாது. அதனால் நான் சொன்னதை அப்படியே நீர் எழுதும். நீர் தான் கண்டதையும் கேட்டதையும் எழுதுகிறவர் ஆச்சே.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் இசைக் கல்லூரியில் பயின்று பட்டம் வாங்கினேன். நானும் என்னுடைய சகபாடிகளான இன்னும் பத்தொன்பது பேரும் சேர்ந்து பட்டத் தாளைப் பெற்றுக் கொண்டோம். அதற்காக வழக்கம் போல ஒரு பட்டமளிப்பு விழா நடத்தினார்கள். நாங்கள் இருபது பேரும் மகா பாக்கியசாலிகள், ஏனென்றால் பட்டத்தாள்களை தன் கையாலேயே நேரிடையாக வழங்கினவர் இந்தியாவின் தலையாய அரசியல் பொருளதார --வியாபார--இலக்கிய--தொழில் பேரறிஞர். ஆவர் கையால் பட்டத்தாளைப் பெறக் கொடுத்து வைக்க வேண்டுமே ' அவர் என் பட்டத்தாளை என் கையில் கொடுத்து, என் கையைக் குலுக்கி, கும்பிடவும் கும்பிட்டு ஒரு புன்னகையும் புரிந்தார். எத்தனை பெரிய வாய்ப்பு ' இந்த விழாவுக்காகவே பிரத்யேகமாக 1500 மைல் ஏரப்ளேனில் பிரயாணம் செய்து வருகை தந்திருந்தார் அவர்- இந்த விழாவுக்காக--பிரத்யேகமாக --எங்களுக்குப் பட்டத்தாள்களை நேராக, தம் கையால் கொடுக்கவே நாங்கள் எவ்வளவு இறும்பூது எய்திருப்போம் என்பதை நீரே, கற்பனை செய்து கொள்வீர். நீர்தான் எழுத்தாளர் ஆச்சே '
எங்களை அவ்வளவு இறும்பூது கொள்ளச் செய்த பெரும்தகை யார் என்றா கேட்கிறீம் ? ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது. பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக்கூடாது. ஊரைப் பேரைச் சொன்னாலும் ஜாதிப் பேரைச் சொல்லக் கூடாது. அதனால் அவரை மிஸ்டர் கோடு கோடு கோடு என்று அழைக்கிறேன். மிஸ்டர்.....
திரு கோடு கோடு கோடு என்று திரு போட்டால் அவர் தமிழர் என்று நீர் கண்டு பிடித்து வம்பு பண்ணுவீர். அதனால்தான் அவரை மிஸ்டர் கோடு கோடு கோடு என்று அழைக்கிறேன். மேலும் இப்போதெல்லாம் சென்னையில் நாயுடு ரோடை, --ரோட் அதாவது கோடுரோடு என்றும் முதலியார் ரோடை - ரோட் அல்லது கோடு ரோடு என்றும், கிருஷ்ணமாச்சாரிரோடை கிருஷ்ணமா தார்பூசு ரோடு என்றும், வெங்கட அய்யர் ரோடை வெங்கட தார்பூசு ரோடு என்றும், சின்னசாமி கவுண்டர் ரோடை சின்னசாமி தார்பூசு ரோடு என்றும் மாற்றியுள்ளதை நீர் அறிந்திருப்பீம். எனவே ராஜத்துரோகமான காரியத்தைச் செய்யக்கூடாது என்றே எங்களுக்குப் பட்டமளித்த பெருந்தகை மிஸ்டர் கோடு கோடுகோடு என்று அழைக்கிறேன். முதல்கோடு ஊர் பெயர். இரண்டாவது கோடு இயற்பெயர். மூன்றாம் கோடு சாதிப் பெயர்.
பட்டத்தாள்களை அளிப்பதற்கு முன்னால் அவர் இந்தியாவின் தொன்மையான இசைக்கலை பற்றியும், மிக மிதத் தொன்மையான தமிழிசை பற்றியும் ஒரு மணி நேரம் உரையாற்றினார். சிலப்பதிகாரம் என்ன, சர்மவேதம் என்ன, திருக்குறள் என்ன, பரதமுனி என்ன, கூத்த நூல் என்ன -- இவைகளிருந்தெல்லாம் மேற்கோள்கள் காட்டி பாரத நாட்டு இசையின் பெருமையையும், முக்கியமாக தமிழகத்து இசையின் பெருமையையும் எடுத்து விளக்கியபோது, ஆகா ஆகா என்று சிலிர்த்துப் போனேன். அதே சமயம் நான் ரொம்ப சின்னவனாகியும் விட்டேன். எங்கள் வாத்தியார்களும் சின்னவர்களாகி விட்டார்கள். இசையை கரைத்துக் குடித்திருக்கிறார் இந்தப் பெரியவர். அஞ்சு வருஷம் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த வாத்தியார்கள் இதில் ஆயிரத்தில் ஒன்றைக் கூடச் சொல்லவில்லையே, ஏமாத்தி விட்டான்களே என்று வருந்தினேன். எங்களுக்கு சங்கீதம் கற்பிக்கிறேன் பேர்வழி என்று மடாத்தப்பளை மாதிரி கத்தியே அஞ்சு வருஷம் கத்திக் கத்திப் பொழுதை போக்கி விட்டான்களே, இந்தப் பெரியவர் ஒரு மணி நேரம் சொன்னதில் பத்தாயிரத்தில் ஒன்றுகூடச் சொல்லவில்லையே என்று மனம் கசிந்தேன். பட்டமளிப்பு முடிந்ததும். என்னைப் பாடச் சொல்லி ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்கு உள்ளூர பயம். முன் வரிசையில் திரு கோடு கோடு கோடு உட்கார்ந்திருக்கிறார். இசைக்கடல். பார்த்தால் ஒன்றும் தெரியாத மாதிரி உட்கார்ந்திருக்கிறார். இசை அறிவோ ஆழங்காணாத அறிவு. கஜமுகனே கணநாயகனே என்று பிரணவ சொரூபியான பிள்ளையார் மீதே பாரத்தைப் போட்டுப் பாடத் தொடங்கினேன். திரு கோடு கோடு கோட்டைக் கூடிய வரை பார்க்காமலே பாடிக்கொண்டிருந்தேன். நடு நடுவே அவரைப் பார்க்காமலும் இருக்க முடியவில்லை. அவர் அசையாமல் முகத்தில் எந்தக் குறியும் இல்லாமல் என்னையே பார்ப்பது தெரிந்தது. சில சமயம் பக்கத்தில் உள்ளவர்களைப் பார்ப்பார். யாராவது பலே என்று பாராட்டினால் அவரைத் திரும்பி பார்ப்பார். இன்னும் யாராவது ஆகா என்றால் அவரைத் திரும்பிப் பார்ப்பார். பிறகு என்னைப் பார்ப்பார். சாதாரண அல்பசந்தோஷி இல்லை என்று தீர்மானித்துக் கொண்டு நன்றாக உழைத்துப் பாடினேன். விரலால் தாளம் போடுவதைக் கூட அவர் யார் கண்ணிலும் படாதது போலவும் என் கண்ணில் கூட படாதது போலவும் பாடுவார். ஒன்றரை மணி நேரம் கழுவில் ஏற்றிவைத்தாற் போலிருந்தது. எப்படியோ தைரியமாகப் பாடி முடித்தேன்.
இசை அரங்கு முடிந்ததும் பிரின்சிபால் வந்தார். 'நல்லாத்தேறிட்டே போ ' என்று வாழ்த்தினார். திரு கோடு கோடு கோட்டின் முன்னாலேயே மற்றவர்களும். 'பிரமாதம் ' என்றும், 'ரொம்ப சுத்தம், ரொம்ப சுத்தம் ' என்றும், 'ரொம்ப பெரிசா வரப் போற ' என்றும் வாழ்த்தினார்கள். மிஸ்டர் கோடு கோடு கோடு தன் கையை நீட்டி என் கையைக் குலுக்கினார். 'ரொம்ப மகிழ்ச்சி. ரொம்ப ரொம்ப நல்லா பாடிட்டாங்க ' என்றார். அப்பாடா ' உயிர் வந்தது. நிஜமாகவே பிழைத்தேன். ஒரு சிங்கத்தின் வாயிலிருந்து புறப்பட்டுவிட்டேன். என்னைக் காப்பாற்றிய கணநாயகனுக்கு முன்னால் மனதுக்குள்ளேயே எண்சாண்கிடையாக விழுந்து விழுந்து கும்பிட்டேன். பத்திரிக்கைகளில் இசையரங்குகளைப் பற்றி விமர்சனம் எழுதிப் பணம் சம்பாதிக்கும் கால் வேக்காடு அரை வேக்காடுகள் பற்றி எல்லாம் எனக்குத் தெரியும். அவங்களெல்லாம் முக்காலே மூணு முக்கால் வீசம் மூங்காட்டுத் தம்பட்டம் என்றும் புலித்தோல் போர்த்தின புனுகு பூனை என்றும் எனககுத் தெரியும். நான் பயப்படுகிறதெல்லாம் இதையெல்லாம் கண்டுக்காமல் மந்திரி, தலைவர் மானேஜிங் டைரக்டர் என்றெல்லாம் பெரிய பெரிய பதவிகளில் இருந்து கொண்டு இரண்டாம் பேர் அறியாமல் சங்கீதத்தைக் கரைத்துக் குடிக்கும் மிஸ்டர் கோடு கோடு கோடு போன்றவர்களிடம் தான். நிஜமான சங்கீதம் அவர்களுக்குத் தான் தெரியும். அவங்களுக்கு இசை தொழில் இல்லையே. யாருக்கு பயப்பட வேண்டும் அவர்கள் ? அதனால் தான் மிஸ்டர் கோடு கோடு கோட்டின் வாயிலிருந்து 'ரொம்ப நல்லா பாடிட்டாங்க ' என்று வந்ததும் எனக்கு உயிரும் தைரியமும் வந்தது. 'வாங்கடா இப்ப அரை வேக்காடு விமர்சனங்களா ' ' என்று துடை தட்ட வேண்டும் போல் கை கூட புருபுருத்தது.
அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லாது போய்விட்டது. மறுநாள் காலை என்னை பிரின்சிபால் கூப்பிட்டார். 'மிஸ்டர் கோடு கோடு கோடு அவருடைய ஊரில் ஒரு பெரிய பள்ளிக்கூடம் நடத்துகிறார். அதில் இசையை ஒரு பாடமாக நுழைக்கப் போகிறார். உன்னைத் தான் அந்தப் பிரிவுக்கு முக்கிய ஆசிரியராகக் கூப்பிடுகிறார். ரொம்ப அதிர்ஷ்டம். இத்தனை சம்பளம் எடுத்த எடுப்பில் யாரும் குடுக்க மாட்டாங்க ' என்று சம்பளத் தொகையைச் சொன்னதும் உடனே ஒப்புக்கொண்டுவிட்டேன். ட்யூஷனே வைத்துக் கொள்ளவேண்டாம். கலியாணம். கோயில் திருவிழா என்றெல்லாம் நாடறிந்த வித்வான்களைத் தான் பாடக் கூப்பிடுகிறார்கள் என்னைப் போன்ற புதுசுகளுக்கு ஒரு தட்டில் குண்டஞ்சி ஐந்து முழம் அங்க வஸ்திரமும் வண்டி சார்ஜஉம் தான் கொடுப்பார்கள். ரேடியோக்காரன் வருஷத்துக்கு ரண்டுசான்ஸ் கொடுத்தால் பிரளயம். அதுக்கே ஆடிசனுக்கு வா. மனுப் போடு. பணம் கட்டு என்று எழுதுவான். கிடைச்சால் தான் போச்சு. எனவே மிஸ்டர் கோடு கோடு கோட்டின் பள்ளிக் கூடத்திலேயே இசைப் பேராசிரியராக வேலை ஒப்புக் கொண்டேன்.
நாலு மாசம் ஆயிற்று. ஏதோ தகராறில் பதவியை ராஜினாமா செய்து விட்டு மிஸ்டர் கோடு கோடு கோடு ஊரோடு வந்து தம்முடைய தொழிற்சாலைகளையும் வியாபாரங்களையுமே கவனிக்கத் தொடங்கினார். வெளி நாடுகளுக்குப் பெரிய பதவியில் அனுப்புகிறது என்றதையெல்லாம் மறுத்து தம் தொழிற் சாலைகளையும் கல்விச்சாலைகளையும் கவனிக்கத் தொடங்கினார்.
எங்கள் கல்லூரித் தலைவர் மிஸ்டர் சுப்ரமண்ய கோடு (ஜாதி பெயரைச் சொல்லாததற்கு மன்னிக்க வேணும்) என்னிடம் அடிக்கடி, 'பெரியவர் உங்களைப் பார்க்கணுமாம். அடிக்கடி சொல்லுகிறார் ' என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். எனக்குப் பயமாகத்தானிருந்தது. எதற்காக என்னைப் பார்க்க வேணுமாம் ?
அப்படி ஒரு கட்டம் இரண்டு தடவை வந்தது. பயம். நல்ல வேளையாக, குறிப்பிட்ட நாளுக்கு முதல் நாள் என் தகப்பனார் காலமானார். பிழைத்தேன். இரண்டாவது தடவை மிஸ்டர் கோடு கோடு கோடே ஒரு அவசர மீட்டிங் என்று சந்திப்பைக் கான்சல் செய்தார். மூன்றாம் தடவை தப்பித்துக் கொள்ள முடியவில்லை. என் உறவினர் யாரும் பரலோகம் போகவில்லை. மிஸ்டர் கோடு கோடு கோட்டிற்கும் அவசர் மீட்டிங்கும் இல்லை. அன்று ஞாயிற்றுக் கிழமை. ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் என்று மாட்டிக்கொள்ளலாம். அவருடைய இரண்டு தொழிற்சாலைகளில் லாக்-அவுட்.
எதற்காக கூப்பிடுகிறார் ? ஏதாவது 17 அட்சரம், 19 அட்சரம், 37 அட்சரம் என்று தெரியாத தாளத்தில் பல்லவி பாடச் சொல்லப் போகிறாரா ? இல்லை. வடமொழி தெலுங்கு கீர்த்தனத்திற்குப் பொருள் கேட்கப் போகிறாரா ? கணநாயகன் இப்போதும் காப்பாற்றுவான் என்று மீண்டும் அவர் மீது பாரத்தைப் போட்டு நடந்தேன்.
மிஸ்டர் கோடு கோடு கோட்டின் வீடு பெரிய அரண்மனைமாதிரி. வாசலில் இரண்டு கூர்க்கா ரயில்வே லெவல் கிராஸிங் பாய்ண்ட்ஸ் மேனின் கூண்டு போன்ற ஒரு கூண்டில் ஒரு காவலாளி காக்கி உடுப்பில் டெலிபோனுடன் உட்கார்ந்திருப்பார். அவர் ஃபோன் பண்ணி, அனுமதி பெற்று என்னை உள்ளே அனுமதித்தார்.
மிஸ்டர் கோடு கோடு கோடு தன்னறையில் வேட்டி சட்டை அணிந்து தனியாக உட்கார்ந்திருந்தார். போனவுடனே பிஸ்கட், மைசூர்பாகு, இட்டலி, சாம்பார் வடை, சுத்த நெய் எல்லாம் வந்தன. அவரும் என்னுடனே சாப்பிட்டார்.
'வேலை கடுமை. அதனாலே உங்களைச் சந்திக்க முடியவில்லை ' என்று மன்னிப்புக் கேட்பதுபோல் கேட்டுக் கொண்டார்.
'எனக்குத் தெரியாதா ? இப்படி உங்களோடு உட்கார்ந்து பேச முடியுமா ' உங்களுக்கு எத்தனை ஜோலி ' '
அறையில் வேறு யாருமில்லை.
'ஒன்றுமில்லை உங்களைக் கூப்பிட்டது ஒரு சின்ன விஷயத்திற்குதான். நீங்கள் எனக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் '
'பேஷா '
'ரொம்ப நாளாக கத்துக்கணும்னு ஆசை, வேலை பளுக்கள், வெளிநாட்டுக்குப் போறது இந்த மில்லுங்களை கவனிக்கிறது..... '
'எனக்குத் தெரியாதா ? நீங்க சொல்லணுமா ? என்னமோ சொல்லிக் கொடுக்கணும்னு சொன்னீங்களே, எதுவானாலும், எனக்குத் தெரிஞ்சவரையில் நான் சொல்லத் தயார். எதிலெ சொல்லணும். எனக்கு இந்த சங்கீதம் ஒன்று தானே தெரியும் ' '
'அதுலெதான். சங்கீதத்துலெதான். '
'என்ன சொல்லணும் ? நான் என்ன சொல்லணும் ' நீங்களே சமுத்ரமாச்சே, '
'சமுத்ரம்தான் சமுத்திரத்திலே கப்பலோட்டலாம். மீன் பிடிக்கலாம். இன்னும் எவ்வளவோ செய்யலாம். ஆனால் ஒரு அவுன்ஸ் கூட குடிக்க முடியாதே. '
'எனக்குப் புரியிலியே நீங்க சொல்றது. '
'ஒண்ணுமில்லெ. நீங்க இதைச் சொல்லிக் கொடுத்தாப் போதும். '
'எதை ? '
'இப்ப உங்க மாதிரி ஒரு பெரிய வித்வான் பாடுகிறார். கேட்கறவங்க பல பேர் 'ஆகா ஆகாங்கறாங்க. பலேபலேங்கறாங்க. நல்லதுடாப்பா நல்லதுடாப்பாங்கறாங்க அப்படியே கண்ணை மூடிக்கிறாங்க. இதெல்லாம் எப்படி செய்யறாங்க ? இதெல்லாம் எப்ப எப்ப செய்யணும் ? எப்ப கண்ணை மூடிக்கிறது ? எப்ப ஆகான்னு சொல்லணும் ? சும்மாகேட்டுக் கிட்டே இருக்கறாங்க. திடார்னு ஆகாங்கறாங்க. ஐயோன்னு கசியறாங்க. நம்ப மானேஜரு கேக்கறதைச் சில கச்சேரிங்கள்ள பார்த்திருக்கேன். திடார்னு ஆகாங்கறார். ஒரே ஒரு சமயம் கண்ணைத் துடைச்சுக்கிறார். இதெல்லாம் எப்படி ? எப்ப செய்யறது ? எதுக்காக இப்படி செய்யத் தோணுகிறது. இது தெரிஞ்சாப் போதும். இதுக்குத்தான் உங்களைக் கூப்பிட்டனுப்பிச்சேன். '
இதுதான் நடந்தது. நான் இப்போது ஒரு நிஜசிங்கத்தின் வாயிலேயே நுழைந்து விட்டதாகத் தோன்றிற்று.
மிஸ்டர் கோடு கோடு கோடு இப்போது இல்லை. சிலவருடங்கள் முன்பு காலமாகிவிட்டார். அந்த சந்திப்பை நினைத்தால் இப்போது என் உடல் நடுங்குகிறது. ஏனாம், நீர் எழுத்தாளராச்சே சொல்லும்.
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
11 கருத்துகள்:
சமுத்ரம்தான் சமுத்திரத்திலே கப்பலோட்டலாம். மீன் பிடிக்கலாம். இன்னும் எவ்வளவோ செய்யலாம். ஆனால் ஒரு அவுன்ஸ் கூட குடிக்க முடியாதே.
இப்படிதான்,இந்தப் பதிவும்.நன்றி !
ஹைய்யோ..ஹைய்யோ:-)))))))))))))))
சிரிச்சுச்சிரிச்சு இப்போ பல்லில் சுளுக்கல்;-))))
தி.ஜா.ரா. ஒரு சங்கீத சாகரம் என்பது அவரை படித்தவர்களுக்கு நன்கு தெரியும்.
நோகாமல் நக்கல் செய்து எழுதும் கலையை மற்றவர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.
ஆகா அருமை ! :-)
நோகாமல் நக்கல் செய்வது ... சரியாகச் சொன்னீர் மாணிக்கம்.. நல்ல கதை
அருமை
> ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது. பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக்கூடாது. ஊரைப் பேரைச் சொன்னாலும் ஜாதிப் பேரைச் சொல்லக் கூடாது. அதனால் அவரை மிஸ்டர் கோடு கோடு கோடு என்று அழைக்கிறேன்
> திரு கோடு கோடு கோடு என்று திரு போட்டால் அவர் தமிழர் என்று நீர் கண்டு பிடித்து வம்பு பண்ணுவீர்.
> பத்திரிக்கைகளில் இசையரங்குகளைப் பற்றி விமர்சனம் எழுதிப் பணம் சம்பாதிக்கும் கால் வேக்காடு அரை வேக்காடுகள் பற்றி எல்லாம் எனக்குத் தெரியும். அவங்களெல்லாம் முக்காலே மூணு முக்கால் வீசம் மூங்காட்டுத் தம்பட்டம் என்றும் புலித்தோல் போர்த்தின புனுகு பூனை என்றும் எனககுத் தெரியும்.
> எங்கள் கல்லூரித் தலைவர் மிஸ்டர் சுப்ரமண்ய கோடு (ஜாதி பெயரைச் சொல்லாததற்கு மன்னிக்க வேணும்)
இன்னும் பலவும் ரசித்தென்!!!!!! :-D :-D :-D சிரிப்பை அடக்கமுடியவில்லை!!
மன்னன் ஸார் அவர்! படிக்க ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை...என்ன ஒரு நடை! நன்றி, ராம் அவர்களே!
periyamanitharkal enpavarkal yaro eluthi godththathai mediyil pesi kai thattu vangupavarkal appadiyellam arivu kidaiyathu. ithu ippothullavarkalukkum porunthum.evergreen character..thisis thi.ja.-vidyashankar
சமூகத்தில் நடக்கும் அவலங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதில் தி ஜ வுக்கு இணை அவரேதான்.
ப்ரஹமண்யன்,
பெங்களூர்
ஆற்றங்கரையில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து இரண்டு கால்களையும் சிலுசிலுவென்று ஓடும் தண்ணீரில் நனைத்துக்கொண்டு நம்மைச் சுற்றிலும் மகிழம்பூக்கள் இரைந்துகிடக்க பறவைகளின் கீச்சொலிகள் காதுகளில் மேவ அப்படியே லயித்துக்கிடக்கும் அனுபவம் இருக்கிறதே அப்படியொரு அனுபவத்தை ஏற்படுத்தக்கூடியவை தி.ஜாவின் எழுத்துக்கள். அதன் ஒரு கீற்றை அனுபவிக்கத் தந்த ராம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.