குவிந்த தூள்களில் கால் புதைய நின்று கொண்டிருந்த முருகேசன் இழுத்த வேகத் தோடே வாளை மேலே விட்டான். பக்கிரி ஒருவித அவசரமும் இல்லாதவர் போல, மேற்குப் பக்கத்தைப் பார்த்துக் கொண்டே நிதானமாக வாளை மேலே இழுத்தார். இவன் அவசரம் அவருக்கு எரிச்சலூட்டுவது போல இருந்தது.
ஒன்றாகிக் கொண்டிருந்த மேகங்கள் சிதைந்தோட காற்று வேகமாகத் திடீரென்று வீச ஆரம்பிததது. சுழன்று செல்லும் காற்று மணலையும் சருகுகளையும் அள்ளிக் கொண்டு சென்றது. கண்களை சுருக்கிக் கொண்டு முகத்தை இடதுபுறம் திருப்பிய வாறு வாளைக் கீழே விட்டார்.
நிதானமின்றி இறங்கும் வாளைப் பற்றிக் கொண்டு முருகேசன் ''என்னங்க மாமா?'' என்று கேட்டான்.
''காத்து கிளம்பிடுச்சு'' என்று சொல்லிக் கொண்டே வலது கண்ணைக் கசக்கிக் கொண்டு வெற்றிலை எச்சிலைக் கீழே உமிழ்ந்தார்.
''ரெண்டு நாளா கொஞ்சம் காத்துதான் மாமா''
''தண்ணி வர்ற காலமெல்ல'' கோவணமாக இருந்த வேட்டியை அவிழ்த்து உதறி முகத்தைத் துடைத்துக் கொண்டே, ''மேக் கித்து காத்து கிளம்பிட்டா, மண்ண வாரிக்கிட்டு வந்துடும்'' என்றார்.
''வாள செத்த பிடிங்க மாமா''
''ஏல செத்த இருலே''
வேட்டியை உதறிக் காற்றில் பறக்கவிட்டுக் கொண்டு இலுப்ப மரத்தடிக்குச் சென்றார். படபடவென்ற காற்றில் பறக்கும் வேட்டியை வெகு சிரமத்தோடு உருண்டையாகச் சுற்றி இலுப்பை மர வேரில் வைத்து அதன்மேல் கீழே கிடந்த அரைச் செங்கல்லை எடுத்து வைத்தார். கண்களுக்கு மேலே கையைக் குவித்து, மேற்குத் திக்கை நோட்டமிட்டதில் காற்றின் சப்தம் அடங்கிக் கொண்டு வருவதுபோல இவருக்குத் தோன்றியது. தன்னையும் மீறிப் பெரிதாகச் சிரித்துக் கொண்டார்.
''காத்தவராயன் பொண்டாட்டியை அடிக்கிறான் காத்தோ காத்தோ''
கீழே குனிந்து இரண்டு கையாலும் மணலை அள்ளிப் பறக்கவிட்டு, ஒரு குழந்தையைப் போல மணலில் கால்களால் நீளமாகக் கிழித்துக் கொண்டு திரும்பி வந்து மரத்தின் மேல் நின்று கொண்டு அரைநாண் கொடியை தளர்த்திக் கொண்டார் பக்கிரி.
மரத்தூள்களின் மேல் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த முருகேசன் நிமிர்ந்து பார்த்துச் சிரித்தான்.
இவர் இன்னும் கொஞ்சம் கோவணத்தைத் தளர்த்தி இழுத்துவிட்டுக் கொண்டு, ''என்னடா, என்னத்தக் கண்டுட்டுச் சிரிக்கற'' என்று கேட்டார்.
முழங்காலைச் சுற்றி இருந்த கைகளைப் பிரித்து திமிர் முறித்துக் கொண்டு சொன்னன்:
''சும்மாதாங்க மாமா''
''ஒக்கா, எதுக்கு நீ சிரிக்கறண்ணு எனக்குத் தெரியாதாடா?''
அவன் மறுபடியும் சிரித்தான்.
''மாமாவுக்குத் தெரியாதது உண்டா?''
குனிந்து மரப்பட்டையை எடுத்து அவன் மேலே வீசினார். அவன் குனிந்து மரத்தூள் களில் கையூன்றி நகர்ந்து கொண்டான். இவர் அவனை அடிக்க மரப்பட்டை தேடுவது போல ஒருமுறை அறுமரத்தின் மேல் கையை அப்படியும் இப்படியுமாக அசைத்துக் கொண்டு நடந்து சென்றார். இவர் அப்படிச் சென்றது, கோமாளி ஆடுவது போல இவனுக்குத் தோன்றியது. ஒரு முனையில் நிற்கும் அவரை, ஆழ்ந்த படியே பார்த்துக் கொண்டிருந்தான். இவரும் நின்று இவன் என்ன செய்கிறான் என்று பார்க்காதது போல் பார்க்கத் தொடங்கினார்.
இவன் வாளை ஒருமுறை ஆட்டினான்.
பக்கிரி அதைக் கவனிக்காதது மாதிரி மீசையை மேல் நோக்கித் தள்ளி உருட்டிக் கொண்டிருந்தார். இனி வேலை ஓடாது என்று தன்னுள் சொல்லிக் கொண்டான். 'கரையேறலாமா?' என்ற ஓர் எண்ணம் தோன்றியது. ஆனாலும், அதை அடக்கிக் கொண்டு மரத்தூளில் ஒரு காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டான். பீடி கருகிப் புகையாகும் வரையில் பக்கிரியிடமிருந்து குரல் ஏதும் வரவில்லை. இவனுக்கு எரிச்சலாகவும் வெறுப்பாகவும் இருந்தது. வாள் கட்டையை வேகத்துடன் பிடுங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு கரையேறினான்.
''என்னால கிளம்பிட்ட''
பக்கிரியின் பார்வை இவன் மேல் இறங்கியது.
முருகேசன் எரிச்சலுடன் வேகமாகத் திரும்பினான்:
''பொழுது சாயுதுல்லீங்க மாமா''
பக்கிரி இருகையும் கொட்டிச் சிரித்தார்.
''இந்த வயசுலியே இம்மாம் நெளிவு எடுக்க ஆரம்பிச்சிட்டா''
''இருந்தாலும் மாமா மாதிரி ஆக முடியுமா?''
பக்கிரி இவனை ஒரு சுற்றுச் சுற்றி வந்தார்.
''மாப்பிள, உன் சாமர்த்தியத்துக்கு எங்கயும் பொழச்சுக்குவ''
முருகேசன் எரிச்சலுடன் வேகமாகத் திரும்பினான். இவன் பார்வை அவர் மேல் இறங்கியது. வார்த்தையெதும் ஆடாமல் வாளை உருவி, மார்பில் சாய்த்துக் கொண்டு மணலில் பாதம் அழுந்தி சுவடுகள் பதிய நடந்தான். இவன் செல்வதை ஒருவிதமான ஏளனத்துடனும் புன்சிரிப்பு டனும் பார்த்துக் கொண்டே நின்றார் பக்கிரி. இவன் கொஞ்ச தூரம் சென்றதும், வேட்டியைக் கழுத்தில் சுற்றிக் கொண்டு, அவன் விட்டுச் செல்லும் சுவட்டில் வெகு கவனமாகக் கால் பதித்துச் சென்றார். இப்படிச் செய்வது இயல்பை இழந்து தாவிச் செல்வது போல இருந்தது. நடைபின்னியது.
''போடா போ'' என்று கீழே குனிந்து, கிளிஞ்சலை எடுத்து வீசினார். அது இவன்மேல் படாமல் மணலில் விழுந்தது. இப்படி விழுந்ததில் களிப்புற்றவர் போலத் தலையை அசைத்துக் கொண்டார்.
இம்மாதிரியான வறண்ட ஒரு கோடையில் மாலைப் பொழுதொன்றில் காவிரிக் கரையில் முருகேசன் வந்து சேர்ந்தது இவர் நினைவில் படர்ந்தது. அவன் வெகு தூரத்திலிருந்து நடந்து வருவது போலக் களைப்புடன் வந்தான். அவனைப் பார்த்ததுமே, லேசான பிடிமானம் விழுந்தது. அவனுடைய பெரிய தலை, ஒழுங்காகக் கத்தரித்து விடப்பட்ட கிராப்பு. சிறிய மீசை, மார்பு கொள்ளாமல் சுற்றிப் படர்ந்திருக்கும் மயிர்.
''ஆம்பளைன்னா இப்படித்தான் இருக்கணும்'' என்று தன்னுள்ளே சொல்லிக் கொண்டே அவன் தோள்மீது கை வைத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டார். அவனைப் பற்றி விசாரித்தறிய வேண்டும் என்ற நினைப்பே இவருக்குத் தோன்றவில்லை. அவனுடைய தோற்றமும் தோரணையும் தன்னோடு சரியாக நின்று வாளிழுக்க இவன் தகுதி யானவன் என்ற எண்ணத்தை இவருக்குத் தந்தது. தன்னுடைய தேர்வு சரியானது என்ற திருப்தி ஏற்பட்டபோதும் அவன் நடவடிக்கைகள் மகிழ்ச்சி தந்தபோதும் பக்கிரி தன்னைத் தானே ரொம்பவும் வியந்து மூன்றாம் மனுஷனைப் பாராட்டுவது போல வாய்விட்டுப் பாராட்டிக் கொள்வார்.
''முருகேசு''
வாளைக் கொட்டகையின் முன்னே சுற்றி விட்டு, வெள்ளை நாயைத் தட்டித் தடவிக் கொண்டிருந்தவன் லேசாகத் திரும்பினான்.
''ஏங்க தம்பி, குளிக்கப் போறீங்களா?''
''ஆமாங்க மாமா''
''குளிச்சிட்டு சுருக்கா வாங்க, ஒரு விசயம் பேசணும்''
''சரிங்க''
அவன் துண்டை எடுத்து உதறி காது மறைய முண்டாசு கட்டிக் கொண்டு சீட்டியடித்தவாறு, இறக்கத்தில் இறங்கிக் குளிக்கச் சென்றான்.
அவன் பார்வையிலிருந்து மறையும் வரையில் அப்படியே நின்று கொண்டிருந்த பக்கிரி மெல்ல நடந்து சென்று, எதிரே கிடந்த மரத்துண்டில் கால்களைத் தொங்கப் போட்டு உட்கார்ந்து, எலே, தங்கராசு, செத்த வெத்தல எடுத்தாடா என்றார்.
தங்கராசு பனைவோலையிலான வெற்றி லைப் பெட்டியைக் கொண்டு போய் வைத்தான். ஒரு கொட்டைப் பாக்கை எடுத்து, பாக்கு வெட்டியில் வைத்து நறுக்கிக் கொண்டே, ''எலே, என்ன கொளம்பு'' என்றார்.
''கொக்குங்க தாத்தா''
''கொக்கா, ஏதுலே'' பாக்கு வெட்டியி லிருந்து பாக்கு நழுவியது.
''நம்ப கண்ணியில உழுந்துச்சுத் தாத்தா''
''உன் கண்ணிலியா?''
அவன் கண்கன் பரக்க விரிய கைகளை வேகமாக அசைத்து கொண்டு ''ரெண்டு உழுந்துச்சீங்க தாத்தா, எடுக்கப் போறச்ச ஒண்ணு கண்ணியை அறுத்துக்கிட்டு போயிடுச்சுங்க தாத்தா.''
''இங்க வாடேல''
பக்கிரி அவன் தோள்மீது கைபோட்டு அணைத்துக் கொண்டார்.
''தேவல, உனக்கு ஒண்ணு அம்புட்டுச்சு, நான் உன்னாட்டம் இருக்கச்சே மூணு கண்ணி போட்டேன். மூணுத்தியும் கொக்கு அடிச்சுக்கிட்டுப் போயிடுச்சு.''
கைகொட்டிப் பெரிதாகச் சிரித்தார். சிரிப்பில் எச்சில் இவன் முகத்தில் தெறித்தது. புறங்கையால் துடைத்துக் கொண்டு இவர் பக்கம் திரும்பி ஆச்சரியத் தோடு, ''நிஜமா தாத்தா?'' என்று கேட்டான்.
இவனைத் தொடை இடுக்கில் அரவ ணைத்துக் கொண்டு ''நிஜமாகத்தான்'' என்று இன்னும் கால்களைக் குறுக்குகிறார். இவன் வியப்புற்று நம்ப மறுப்பது போல் பேச்சு ஏதுமின்றி அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். இவர் குனிந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டார். இவன் குறுஞ் சிரிப்புடன் அவர் மார்பில் மோதி எச்சலைத் துடைத்துக் கொண்டான்.
''எலே, ஒரு சுருட்டுக் கொண்டா''
இவன் நொண்டியடித்துக் கொண்டு சென்றான். நாய், எங்கிருந்தோ ஒரு எலும்பைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தது. இவன் வெறும் கையால், அதை விரட்டிக் கொண்டு குடிசைக்குள் சென்று சுருட்டை எடுத்து வந்து தந்தான்.
பக்கிரி சுருட்டைக் கையால் உருட்டிக் கொண்டே பார்வையைத் திருப்பினார். மாலைப் பொழுது மெல்ல அடங்க, மையிருள் கவிந்து கொண்டிருந்தது. சீரான காற்று, காற்று அடங்குகிறது என்று நினைத்துக் கொண்டார்.
துண்டையெடுத்து நன்றாக முறுக்கி முண்டாசு கட்டிக் கொண்டு, மீசையைத் திருகி சீட்டியடித்துக் கொண்டு தொடையில் தாளம் போட்டுக் கொண்டு திரும்புகையில்
முருகேசன் வேட்டியும் சட்டையும் துண்டும் போட்டுக் கொண்டு வெளியே வந்தான்.
பக்கிரி அவனை ஆழ்ந்து நோக்கினார்.
அவன் ஊர் நோக்கிச் செல்லும் பாதையில் நடக்க ஆரம்பித்தான். தாளம் நிற்க, மிகவும் சோகமான புன்சிரிப்பு இவரிடமிருந்து வெளிப்பட்டது. வேகமாகத் தலையசைத்துக் கொண்டார்.
''எங்க மாப்ள பயணம்'' குழைவுடனும் எரிச்சலுடனும் இவர் குரல் ஒலித்தது.
முருகேசன் தலையை உயர்த்தி இவரைப் பார்த்தான். சட்டையின் நுனியைப் பிடித்து கீழே இழுத்துவிட்டுக் கொண்டான். வலது பக்க முடியை ஒரு பக்கமாகக் கை தள்ளியது.
''சும்மாங்க மாமா, வைத்தீஸ்வரன் கோயிலு வரைக்கும்.''
''வைத்தீஸ்வரன் கோயிலுக்கா!'' எரிச்சல் உற்றவர்போல இவனைப் பார்த்தார். தலையை மேலும் கீழுமாகச் சிலுப்பிக் கொண்டு, குத்த வைத்திருந்த ஒரு காலைக் கீழே தொங்கப் போட்டுக்கொண்டு, ''இங்க செத்த வா'' என்றார்.
இவனுக்குக் கமலத்தின் நினைவு வந்தது. நான்கு நாட்களாக பயணப்பட்டு, தவறிப் போய்க் கொண்டே வந்தது. இன்றும் அது போலவே நடந்து போகுமா? தான் உண்மை யைச் சொல்லி இருக்கக் கூடாதோ என்று தன்னையே கேட்டுக் கொண்டு இவர் பக்கமாக வந்தான்.
''இப்படி மரத்துல குந்து''
இவன் அவருக்கு நேர் எதிரே மாமரத் துண்டில் இரண்டு கால்களையும் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான்.
''என்ன வைத்தனாங் கோயில்ல?'' இவர் ஏளனமாகச் சிரிப்பதை இவன் மிகவும் எரிச்சலுடன் கண்டு கொண்டான்.
''ஒண்ணுமில்ல..''
''வைத்தனாங் கோயில்லியா?''
இவன் தலையசைத்தான். ''கிழத்துக்கு எல்லாம் தெரிகிறது'' என்று தன்னுள்ளே சொல்லிக் கொண்டான்.
பக்கிரி சுருட்டைக் கையில் எடுத்துக் கொண்டு புகையை இவன் மூஞ்சிக்கு நேரே ஊதி விட்டு உடல் குலுங்க நகைத்தார். மரம் அறுக்கும் வாளால் கபடம் நிறைந்த இவர் கழுத்தை மெல்ல மெல்ல அறுக்க வேண்டும் போல இவனுக்குத் தோன்றியது. வலது காலைத் தூக்கி மரத்தின் மேல் வைத்துக் கொண்டு, இடது காலைத் தொங்கவிட்டுக் கொண்டு கொஞ்சம் போலப் பின்னுக்கு நகர்ந்து உட்கார்ந்து கொண்டு, ''தங்கராசு கள்ளெ இங்க கொண்டா'' என்றார்.
மரத்துண்டின் மேல் அவன் வெகு கவனத்தோடு கள்ளையும் கறியையும் கொண்டு வந்து வைத்தான். கள்ளிலிருந்து திடீரென்று மொச்சை நொடி கிளம்பியது. பக்கிரி ஒரு முறை சுருட்டை நன்றாக தம் இழுத்து, நெருப்பை மரத்துண்டில் உதிர்த்து, ''எலே, நீ சாப்பிட்டாச்சா'' என்று கேட்டார்.
''சாப்பிடணும்''
''போய் நெறையத் தின்னு'' என்று சொல்லி அவனைப் பார்த்துப் பல்லெல்லாம் வெளி யில் தெரியும்படியாகச் சிரித்தார். அவனோ, பொங்கி வரும் சிரிப்பைக் கைகளால் மறைத்து அடக்கிக் கொண்டு நிலவொளி யில் நொண்டியடித்துக் கொண்டு தன் நிழலைப் பிடிக்கத் தாவித் தாவிச் சென்றான்.
பக்கிரி கள் சட்டியை எடுத்து எதிரே வைத்துக் கொண்டார். கள்ளின் மேலிருந்த பன்னாடையைக் கவனத்தோடு எடுத்து உதறி ஒரு பக்கமாக வைத்துக் கொண்டு கள் சட்டியைத் தூக்கி கண்களின் அருகே கொண்டு வந்து பார்த்தார். ஈயா, பெரும் எறும்பா என்று தீர்மானிக்க முடியாத நிலையில் என்னவோ மிதப்பது தெரிந்தது. பன்னாடையை எடுத்து, இரண்டாக மடித்துக் கள்ளினுள் அமிழ்த்தி ஒட்டி மேலே தூக்கினார். பன்னாடை தூசிகளையும் பூச்சிகளையும் அரித்துக் கொண்டு வந்தது. அதை ஒரு பக்கமாக வீசிப் போட்டுவிட்டு முருகேசனைப் பார்த்துக் கொண்டு ''மாப்ள, பூச்சி பொட்டெல்லாம் கள்ள ஒண்ணும் பண்ணாது'' என்றார்...
அவன் அதை ஏற்றுக் கொள்வது மாதிரி தலையசைத்தான்.
''இப்படி வந்து பக்கத்துல குந்து மாப்ள''
''குடிங்க மாப்ள''
இவர் தண்ணீர் குடிப்பது மாதிரி கிண்ணியின் விளிம்பில் உதடுகளைக் குவித்து உறிஞ்சிக் குடித்தார். இவன் ஒரு மிடறு குடித்துவிட்டு இவரையே பார்த்துக் கொண்டு இருந்தான். இவன் மனம் கமலத்தை இன்று காண முடியாது போனது பற்றி வருந்திக் கொண்டிருந்தது. இரண்டு நாட்கள் சென்று வீணில் திரும்பினான். இன்று கட்டாயம் வரச்சொல்லி இருந்தாள். உவப்பாகக் கழிய வேண்டிய இரவு, வெறும் குடியில் ஒரு கிழத்துடன் முடிவதில் இவன் எரிச்சலுற்றான். கிண்ணியை ஒரு கையி லிருந்து இன்னொரு கைக்கு மாற்றி கொண்டான்.
''ஆச்சா'' இன்னொரு கிண்ணி நிரப்பிக் கொண்டு கேட்டார்.
''கொஞ்சம் இருக்கு''.
''ஒரு கிண்ணிக்கு இம்மாம் நேரமா?''
கிண்ணியைக் கையில் எடுத்துக் கொண்டு மரத்திலிருந்து கீழே இறங்கித் தரையில் நின்று கொண்டு வானத்தை நிமிர்ந்து பார்த்து...
''கையில கள்ளிருக்கு
வானத்துல நெலவுயிருக்கு
கொக்குக் கறியிருக்கு
- குட்டி
கொக்குக் கறியிருக்கு''.
என்று ராகம் இழுத்துப் பாடிக் கொண்டு குடித்துக் கொண்டு இவனைப் பார்த்துச் சிரித்தார். அவர் ஆட்டத்தையும் பாட்டையும் ரொம்பவும் ரசித்தான். கிழம் ரொம்பவும் விசித்திரமானதுதான் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
''கள்ளு எப்படி மாப்ள?''
இவன் பெருந்தொடையில் தட்டினார்.
''அமிர்தங்க மாமா''.
''தென்பாதி கள்ளுக்குத் தனி ருசி''
ஒரு காலைத் தரையில் நன்றாகப் பதித்துக் கொண்டு ஒரு சுற்று சுற்றினார். இன்றிரவு, வேடிக்கையாகக் கழியுமென்று இவனுக்குத் தோன்றியது. அவசரம் ஏதுமில்லாமல் நிதானமாகக் கள்ளைக் குடித்து விட்டு, கிண்ணியைக் கீழே வைத்தான்...
''கள்ளுக்குக் கறி கொண்டாட்டம்
கறிக்குக் கள்ளு கொண்டாட்டம்
ராமு மவன் பக்கிரிக்கு
ரெண்டுங் கொண்டாட்டம்
ரெண்டுங் கொண்டாட்டம்''.
கையைத் தரையில் ஊன்றிக் குனிந்து குட்டிக்கரணம் போட்டார். இவர் குரல் தனியாக வெகுதூரம் வரையில் கேட்கும் படியாக ஒலித்தது. முருகேசன் மரத்தில் நன்றாகச் சாய்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டான்.
நாய் இவன் தலைக்கருகில் வந்து குரைத் தது. இவன் படுத்தபடியே ஒரு கல்லை யெடுத்துப் போட்டான். நாய் பின் வாங்கிக் குரைத்துக் கொண்டே சென்றது. அதன் குரல் அமுங்கி அடங்கியது.
தங்கராசு எழுந்து வந்து ''கருப்பா இங்க வா'' என்று நாயை அழைத்துக் கொண்டு சென்றான்.
பக்கிரி மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு இன்னொரு கிண்ணி கள் ஊற்றிக் கொண்டார். மீசையைத் திருகி மேலே விட்டுக் கொண்டு யோசிக்கையில், குடிப்பது ஒரு சுகானுபவமாகவே இருந்து வருவதாகத் தோன்றியது. நிலவொளியில் பேசிக் கொண்டு பாடிக் கொண்டு ஆடிக் கொண்டு குடிப்பது நேர்த்தியான செய லாகவே பட்டது.
குடித்து, ஒருநாள் சின்னச் சண்டை யொன்று போட்டது தெளிவில்லாமல் நினைவில் படர்ந்தது. அதுவும் இது போலவே நிலவொளியில் நடந்திருக்கலாமோ என்பதும் தீர்மானிக்கமுடியாத நிலையில் இருந்தது.
''அப்போது தனக்கு இருபது இருப்தோரு வயசு இருக்குமோ? மீசை லேசாக அரும்பிக் கொண்டு வந்தது. உதடுகளுக்கு மேல் வளரும் மயிரை கை அடிக்கடி வருடிக் கொண்டிருந்த காலம் அது. ஏதோ ஒரு காரியமாக வடகரைக்குப் போய்விட்டு இரவில் திரும்ப வேண்டியிருந்தது. கூட ராமு வந்தான். மொடாக்குடியன், நிறைய குடித்துக் கொண்டே இருப்பான். அவன்தான் கள் வாங்கிக் கொடுத்தான். குடிக்க குடிக்க இன்னும் ஊற்றினான். பட்டாளக்காரன், நிதானம் இழக்காமல் பேசிக் கொண்டு குடித்தான். இவனை மிஞ்சவேண்டுமென்று ஒரு எண்ணம் தோன்றியது.
''மாப்ள போதும்''
கிண்ணியை வாங்கிக் கீழே வைத்தான் ராமு.
''நீங்க''
''நான் இன்னும் ரெண்டு போடுவேன்''
''நானுந்தா''
அவன் விசித்திரமாகப் பார்த்தான்.
''அப்பப் போடு''
மேலும் இரண்டு கிண்ணி இறங்கியது.
ராமு மேல் கை வந்து ''பக்கிரி படுத்துட்டு காலையில போவோம்..''
''நான் நடப்பேன்''
அவன் பெரிதாக நடந்து கொண்டு எழுந்தான், நடக்க நடக்க வேகம் கூடியது. இரண்டு மைல் தூரம் வந்ததும், கால் தரையில் பாவாமல் துவளுவது போலத் தோன்றியது. ராமு மரத்தடியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு முண்டாசை அவிழ்த்து இறுக்கிக் கட்டிக் கொண்டான். கொஞ்சம் போலத் திரும்பி ''குந்து பக்கிரி' என்று கையைப் பிடித்திழுத்து உட்கார வைத்தான்.
பக்கிரியின் மனம் திடீரென்று முரண்டு பிடிக்க ஆரம்பித்தது. அவர் கையை உதறினார்.
''அட குந்து மாப்ள'' பக்கிரி சிவப்புப் பட்டுத்துண்டை விரித்தார்.
பக்கிரி அவன் பக்கம் திரும்பிப் பார்த்தார். என்ன பதில் இதற்கு உரைப்பது என்று தெரியவில்லை. இவனும் என்னைப் போலவே நிறையக் குடித்திருக்கிறான். வெறி ஏறிக் கொண்டு இருக்கிறது. ஆனால் இன்னும் நிதானம் இழக்கவில்லை. நிதானம் இழந்து கொண்டு வருகிறான் போலும்.
இவன் அழைப்புக்கு என்ன பதில்?
குடியில் தன்னை இழந்து நிற்கிறானா?
இல்லை பட்டாளக்காரன் என்ற கோதாவில்
சண்டைக்கு அழைக்கிறானா?
தீர்மானிக்கவியலாத நிலையில் கண் களைத் தாழ்த்தி, கைகளைப் பின்னுக்குக் கட்டிக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். மணலில் நீண்டு கிடந்த பட்டுத் துண்டைக் காலால் எட்டித் தள்ளினான் ராமு. பக்கிரி அவசரமே இல்லாதவர் போல, ஓரடி முன்னே எடுத்து வைத்து ''எங்க இன்னொரு வாட்டித் தள்ளு''
''மாட்டனா?''
''தள்ளேன், பார்ப்போம்''
இடது காலால் துண்டை மணலில் ஒரு அறக்கு அறக்கினார் ராமு. இவர் மயிர் கால்கள் குத்திட்டன. இரண்டடி பின்னுக்கு நகர்ந்து, திடீரென்று அவர் வயிற்றில் தலை முட்டித் தரையில் வீசிப் போட்டார்.
அவர் கைகளையும் கால்களையும் உதறிக் கொண்டு பெரிதாகக் கத்திக் கொண்டு மணலில் விழுந்தார். இடுப்பில் வலி ஏறி, மார்புக்குள் இறங்குவது போல் இருந்தது. கண்களைத் திறந்து பார்க்கையில் இவர் கால் மார்பில் ஏறியிருந்தது. பலத்தையும் தைரியத்தையும் இழந்தவர் போல், கண்கள் சொருகிக் கொண்டு போக இவரைப் பார்த்தார். நான்கு கண்களும் ஒரு நேர்க் கோட்டில் நின்றன.
''என்ன மாப்ள, தமாஷ்க்கு பண்ணினா நிஜமாகவே சண்டைக்கு வந்துட்டியே"
கால் மார்பிலிருந்து தரையில் இறங்கியது.
ராமு கஷ்டப்பட்டுக் கொண்டு புரண்டு மணலில் கையூன்றி எழுந்தார். துண்டை யெடுத்து உதறி பக்கிரி தோளில் போட்டு "நம்ப மாப்ளகிட்ட ஒருத்தன் எதிர நிக்க முடியுமா'' என்று கேட்டார்.
தனக்கு இன்னும் நல்ல ஞாபகசக்தி இருக்கிறதே என்று பக்கிரி வியந்து கொண்டார்.
முருகேசன் காலியாக இருந்த இவர் கிண்ணியில் கள் ஊற்றி நிரம்பினான். கொக்குக் கறியைப் பல்லில் வைத்துக் கடித்து இழுத்தார் இவர். எலும்பு பல்லில் பிடிபடாமல் நழுவியது. அதைத் தூக்கி எறிந்து விட்டு கிண்ணியை எடுத்துக் கொண்டு போய் மணலில் உட்கார்ந்து கொண்டார்.
''தம்பி இப்படி வாங்க''.
முருகேசன் அவர் பக்கத்தில் சப்பணங் கட்டி உட்கார்ந்து கொண்டான். அவன் இவன் தொடையில் தட்டிப் பெரிதாக சிரித்தார். இவன் பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு புகையை வேகமாக ஊதி விட்டுவிட்டு வானத்தை நிமிர்ந்து பார்த் தான். நிலவு அலுமினியத் தட்டுப் போலப் பறந்து செல்வதாகத் தோன்றியது.
''இந்தக் கள்ளுக்கே இங்க தங்கிடலாம் மாப்ள''.
இவன் சிரித்தான்.
பக்கிரி மணலில் கால்களை நன்றாக நீட்டிக கொண்டார். கைகளைப் பின்னுக்கு வைத்துக் கொண்டு, ''தம்பி இத கேளுங்க''
''சொல்லுங்க மாமா''.
''சிங்கப்பூரிலே இருந்து வந்ததும், ரெண்டு வருஷம் சும்மா சுத்து சுத்துன்னு சுத்தினேன். போகாத இடமில்ல. எங்கயாச்சும் தங்கினா போதுமின்னு தோணுச்சு. அப்ப ராஜா ஐயர் ஞாபகம் வந்துச்சு.. போனேன். அவுரு வைத்தினாங் கோயில்ல தாசி வச்சுக்கிட்டு இருந்தாரு. நீ இங்க கெடயின்னு நம்பளப் போட்டாரு. நாலும் மாசம் வண்டி சரியா ஓடுச்சு. நாளு ஆக ஆகத் தாள முடியல. நேரா ஐயர்கிட்டப் போய், ''சாமி மிஞ்சிப் போச்சுன்னு" கால்ல உழுந்தேன். முதல்லே, அவருக்குப் புரியல. விவரமா சொன்னதும், இடி இடியின்னு சிரிச்சு போடா மட்டிப் பயலே. அதுக்கா உருவற. போடா போய் சும்மா அங்கேயே கிடன்னு சொன்னார்.
ஆனா. நம்மாலே போக முடியல. அப்படியே பொடி நடையா நடந்து குமாரசாமி படையாச்சிகிட்ட வந்தேன். அவரு ஒரு மகானு. குடிச்சுப்புட்டு அவரைப் பத்தி, நாத்த வாயால பேசக்கூடாது.
பக்கிரி கடைசிச் சொட்டுக் கள்ளை உறிஞ்சிக் குடித்து விட்டுக் கிண்ணியைக் கீழே வைத்தார.
வெள்ளை நாய் இவர்களைச் சுற்றிக் கொண்டு வந்தது.
முருகேசன் கையில் ஒட்டி இருந்த மணலைத்தட்டிக் கொண்டு எழுந்தான்.
''என்ன மாப்ள கிளம்பிட்டீங்க''
காலுக்குக் கீழே இருந்த கிண்ணியை எட்டி உதைத்தார்.
''ரெம்ப தண்ணீங்க மாமா''.
''இதுயென்ன தண்ணி? இன்னும் ரெண்டு கிண்ணி போடுவேன்.''
'''நீங்க போடுவீங்க''.
''ஏன்? உன்னால முடியாதா?''
அவர் இவன் பக்கமாக வந்து தோள் மீது கை வைத்தார். இவன் கால்களைத் தரையில் அழுத்திக் கொண்டு விசித்திரமாக இவரை நோட்டம் இட்டான். அவர் கை தோளிலிருந்து உயர்ந்து, இவன் முண்டா சைப் பற்றி இழுத்துப் பறக்க விட்டது. காற்றில் துவண்டு செல்லும் துண்டைப் பார்த்து, ஆனந்தத்தோடு கைகொட்டி மேலே எழும்பிக் குதித்தார். கீழே விழுந்த துண்டை, நாய் ஓடி வந்து இழுத்துக் கொண்டு சென்றது. நாயைப் பிடிக்க தங்கராசு எழுந்தார்.
பக்கிரி இவனுக்கு முன்னே வந்து நின்று கொண்டு "மாப்ள ஒரு கை பார்க்கலாமா?''
இவன் அவரை ஆழ்ந்து நோக்கினான்.
''என் சொல்லுற?''.
''நாளைக்கு வச்சுக்கலாம்.''
''இன்னிக்கு என்ன?''
''வேணாம்?''
''பயமா இருக்கா மாப்ள?''
இரண்டடி பின்னால் சென்ற பக்கிரி திடீரென்று குனிந்து மணலையள்ளி இவன் மூஞ்சியில் வீசினார். இவன் முகத்தை கைகளால் மூடிக் கொண்டான்.
''மாப்ளைக்கு ரோசம் கம்மிதான்''
இவன் மேல் பாய்ந்து மார்பில் ஒரு குத்துவிட்டு, பின்னால் நகர்ந்து கொண்டு சிரித்தார்.
உதட்டைப் பல்லால் கடித்துக் கொண்டு அவரையே பார்த்துக் கொண்டு நின்றான். பிறகு குனிந்து மெல்ல முன்னேறி, அவர் புட்டத்தில் ஒரு உதை கொடுத்தான். இவர் கைகளைப் பரப்பிக் கொண்டு மூஞ்சி மணலில் சொருக விழுந்தார்.
நாய் குறைத்துக் கொண்டு இவன் மேல் பாய்ந்தது. கைகளையும் கால்களையும் வீசி நாயைத் துரத்தினான். நாய் மெல்ல மெல்லப் பின் வாங்கியது. தங்கராசு பக்கிரியின் பக்கத்தில் உட்கார்ந்து, முகத்தில் படிந் திருந்த மணைலத் தட்டினான்.
மேகங்கள் அகல, நிலவு பிரகாசமாகத் தெரிய ஆரம்பித்தது.
பக்கிரி மெல்லக் கையூன்றி எழுந்து நின்று சுற்று முற்றும் பார்த்தார்.
''பய, உதையில் ஓடிட்டான?''
தங்கராசு பெரிதாகத் தலையசைத்தான்.
*******
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
Subscribe to:
Post Comments (Atom)
1 கருத்துகள்:
பகிர்ந்தமைக்கு நன்றிகள் ராம்
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.