Jul 20, 2009

பசுவய்யா கவிதைகள்-சுந்தர ராமசாமி

மந்த்ரம்
ட்யூப்லைட் சுந்தராச்சி உபயம்
குத்துவிளக்கு கோமுட்டிச்செட்டி உபயம்
உண்டியல்பெட்டி தெ.கு.வே. உபயம்
பஞ்சதிரி விளக்கு ஆண்டி நாடார் உபயம்
குண்டுச்சட்டி பால்பாயச உருளி த்ரிவிக்ரமன்
நாயர் உபயம்
சூடன்தட்டு ரீஜென்று மகாராணி உபயம்
தகரடப்பா ஆறு நித்யானந்தா உபயம்
அலுமினியப் போணி வமு.சல.பெ.ம.
அரிகரபுத்திரன் செட்டியார் உபயம்
ஸ்க்ரு ஆணி நட்டு பட்டு அம்மாள் உபயம்
தீபத்தட்டு பெரியன் தாத்தாச்சாரி உபயம்
சின்னத்தட்டு ஒரு டஜன்
வைரங்குளம் மிட்டாதார் உபயம்
வைரங்குளம் மிட்டாதார்
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அம்மா உபயம்
அவர் அம்மா
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அம்மா
அவர் அம்மா
அவர் அப்பா
நீ
நான்
அவள்
இவன்
அவன்
பூனை
புண்
பூ
புழு
பூச்சி
குண்டூசி
குத்தூசி
கடப்பாரை
லொட்டு லொடக்கு
எல்லாம்
ஸ்வாமி
உபயம்
ஸ்வாமி
சிற்பி
உபயம்
சிற்பி
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அம்மா உபயம்
அவர் அப்பா அவர் அம்மா
அவர் அம்மா அவர் அப்பா
எல்லாரும் ஸ்வாமி உபயம்
ஸ்வாமி
நம்ம உபயம்
நாம
ஸ்வாமி உபயம்
நம்ம பேரு சாமிமேலே
சாமி பேரு நம்மமேலே.
****************************
சவால்

நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை
துடைகள் பிணைத்துக் கட்ட
கயிறுண்டு உன் கையில்.
வாளுண்டு என் கையில்
வானமற்ற வெளியில் நின்று
மின்னலை விழுங்கிச் சூலுறும்
மனவலியுண்டு.
ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின் வாங்கல் அல்ல பதுங்கல்.
எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்.
எனது கொடி பறக்கிறது
அடிவானத்துக்கு அப்பால்.
****************************
நம்பிக்கை
தூரத் தொலைவில் அந்த நடையைக் கண்டேன்
அச்சு அசல் என் நண்பன்.
மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமெனத் திடுக்கிட்டேன்.
வேறு யாரோ.
அப்படி எண்ணாதிருந்தால் அவனே வந்திருப்பான்.
****************************
பூனைகள் பற்றி ஒரு குறிப்பு

பூனைகள் பால் குடிக்கும்.
திருடிக் குடிக்கும் கண்களை டிக்கொள்ளும் டிய கண்களால் சூரிய
அஸ்தமனம் ஆக்கிவிடும். மியாவ் மியாவ் கத்தும் புணர்ச்சிக்கு முன்
கர்ண கடூரச் சத்தம் எழுப்பும் எப்போதும் ரகசியம் சுமந்து வளைய வரும்
வெள்ளைப் பால் சம்பந்தமாக சர்வதேசக் கொள்கை கொண்டவை பெண்
பூனைகள் குட்டி போடும் ஒன்று அல்லது இரண்டு அல்லது ன்று அல்லது
நான்கு அல்லது குட்டிகளுக்ளு மியாவ் மியாவ் மியாவ் கத்தச் சொல்லித்
தரும். வாலசைவில் அழகைத் தேக்கிச் செல்லும் இரண்டு அடுக்குக்
கண்களில் காலத்தின் குரூரம் வழியும் பூனைகள் குறுக்கே
வராமலிருப்பது அவற்றுக்கும் நமக்கும் நல்லது. குறுக்கே தாண்டிய
பூனைகள் நெடுஞ்சாலைகளில் தாவரவியல் மாணவனின் நோட்டில் இலை
போல் ஒட்டிக்கிடப்பதைக் கண்டதுண்டு வேறு பூனைகள் குறுக்கிட்டுத்
தாண்டும் சிறிய பூனைகள்தான் பெரிய பூனைகள் ஆகின்றன.
பூனைகளின் முதுமையைக் கண்டறிவது கடினம் அவற்றின்
மரணத்திற்குச் சாட்சியாக நிற்பது கடினம் அவற்றின் பேறுகால
அனுபவங்கள் பற்றி நாம் யோசிப்பது காணாது இருப்பினும் அவை
இருக்கின்றன. பிறப்பிறப்பிற்கிடையே.
****************************
ஒரு படைத்தலைவர் மேலதிகாரிக்கு மனதில்  எழுதும் சொற்கள்

தாண்டிச் சென்றதும் பாலத்தைத் தகர்க்க
தங்கள் ஆணையை என் ரத்தத்தில்
எழுதிக் கொண்டிருக்கிறேன்
மேன்மை தங்கியவரே
குதிரைகளின் புட்டங்களில்
குதிரைகளின் முகங்கள் உரச
தாண்டிக் கெக்ணடிருக்கிறோம்
கடைசிக் குதிரை தாண்டியதும்
பாலம் பறந்து நதியில் மூழ்கும்.
தாண்டாமல் காத்திருக்கிறான் ஒரு வீரன்
தங்களிடம் சேதி சொல்ல
எப்படி மீண்டும் சேர்ந்து கொள்வேன்
என்று அவன் கேட்கவில்லை.
தான் செல்லப் பாலங்கள் இருக்குமா
செய்தி சொன்ன பின் நான் இருப்பேனா
என்று அவன் கேட்கவில்லை
தன் குதிரை இருக்குமா
என்று அவன் கேட்கவில்லை
தாங்கள் இருப்பீர்களா
என்று அவன் கேட்கவில்லை.
மேன்மை தங்கியவரே
தகர்ப்பது பெரிது இல்லை.
கேட்கப்படாத இந்தக் கேள்விகள்
அவற்றின் தகர்ப்பு...
****************************

நகுலன் கவிதைகள்

நகுலன்   நன்றி: 'ழ'  இலக்கிய இதழ்

நான்


எனக்கு யாருமில்லை
நான்
கூட...
இவ்வளவு பெரிய
வீட்டில்
எனக்கு இடமில்லை
இவ்வளவு
பெரிய நகரத்தில்
அறிந்த முகம் ஏதுமில்லை
அறிந்த முகம் கூட
மேற் பூச்சுக் கலைய
அந்நியமாக
உருக்காட்டி
மறைகிறது
என்னுருவங்
கலைய
எவ்வளவு
காலம்
கடந்து செல்ல வேண்டும்
என்ற நினைவுவர
''சற்றே நகர்''
என்று ஒரு குரல் கூறும்.

பிரமிள் கவிதைகள்

பிரமிள்

ஒளிக்கு ஒரு இரவு-


காக்கை கரைகிறதே
பொய்ப்புலம்பல் அது.
கடலலைகள் தாவிக் குதித்தல்
போலிக் கும்மாளம்.
இரும்பு மெஷின் ஒலி
கபாலம் அதிரும்.
பஞ்சாலைக் கரித்தூள் மழை
நுரையீரல் கமறும்.
அலமறும் சங்கு இங்கே
உயிர்ப்புலம்பல்.
தொழிலின்
வருவாய்தான் கும்மாளம்.
லாப மீன் திரியும்
பட்டணப் பெருங்கடல்.
தாவிக் குதிக்கும்
காரியப் படகுகள்.
இயற்கைக்கு ஓய்வு ஓயாத
மகத் சலித்த அதன்
பேரிரவு.

நிழல்கள்

பூமியின் நிழலே வானத் திருளா?
பகலின் நிழல்தான் இரவா?
இல்லை,
பூமிப் பந்தின் பின்னே
இருளின் பிழம்பு,
இரவில் குளித்து
உலகம் வீசும்
வெளிச்சச் சாயை பரிதி.
ஆமாம்.
இரவின் நிழலே பகல்;
இருளின் சாயை ஒளி.

சுப்பையா பிள்ளையின் காதல்கள்-புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன்
(1943க்கு முன்பு நன்றி: புதுமைப்பித்தன் கதைகள்; காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு, ஆகஸ்ட் 2000.)

வீரபாண்டியன்பட்டணத்து ஸ்ரீ சுப்பையா பிள்ளை ஜீவனோபயத்திற்காகச் சென்னையை முற்றுகை-யிட்டபொழுது, சென்னைக்கு மின்சார ரெயிலோ அல்லது மீனம்பாக்கம் விமான நிலயமோ ஏற்படவில்லை. மாம்பலம் என்ற `செமன்ட்’ கட்டிட நாகரிகம் அந்தக் காலத்திலெல்லாம் சதுப்பு நிலமான Êஏரியாக இருந்தது. தாம்பரம் ஒரு தூரப் பிரதேசம்.
1421531-1-sarong-party-girls
திருநெல்வேலியிலே, ரெயில்வே ஸ்டேஷன் சோலைக்குள் தோன்றும் ஒற்றைச் சிகப்புக் கட்டிடமாக, `ஜங்க்ஷன்’ என்ற கௌரவம் இல்லாமல், வெறும் இடைகழி ஸ்டேஷனாக இருந்தபோது திருவனந்தபுரம் `எக்ஸ்பிரஸ்’ மாலை நாலு அல்லது ஐந்து மணிக்குத் தஞ்சாவூர் மார்க்கமாகச் செய்த நீண்ட பிரயாணத்தின் சின்னங்களுடன் சோர்வு தட்டியது போல வந்து நிற்கும். அந்தக் காலத்தில் வீரபாண்டியன் பட்டணத்துக்குப் போகவேண்டும் என்றால், தபால் வண்டியானால் மலிவு; பிரம்மாண்டமான லக்ஷ்மி விலாஸ், கணபதி விலாஸ் சாரபங்க் ஏறினால் சீக்கிரம் செல்லலாம். அப்பொழுதெல்லாம் திருநெல்வேலி மைனர்கள் ஸ்ரீவைகுண்டம் வைப்பாட்டிமார் வீடுகளுக்கு ஜட்கா வண்டியில் போய்விட்டு இரவு பத்து மணிக்கெல்லாம் திரும்பிவிடுவார்கள். அந்தக் காலத்தில் எல்லாம் ஜட்கா என்றால் அவ்வளவு `மௌஸ்’.
அந்தக் காலத்திலெல்லாம் ஸ்ரீ சுப்பையா பிள்ளை ஒரு வாலிபன். ஊரையே வளைத்துக் கோட்டை கட்டிவிடும்படிப் பணம் சேர்த்துக் கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் புறப்பட்டவர் இன்னும் ஒருமுறை கூட _ அதாவது தம் கல்யாணம், தம்முடைய தகப்பனார் மரணம் இவைகளுக்காக ஐந்தாறு நாட்கள் ரஜா எடுத்துக்கொண்டு அந்தப் பிரதேசத்திற்கு மின்வெட்டு யாத்திரை செய்தது தவிர _ மற்றப்படி ஒரு முறைகூடச் சென்றதே இல்லை.
`தனலட்சுமி பிரொவிஷன் ஸ்டோர்ஸ்’ பூர்வத்தில் பேட்டைப் பிள்ளை ஒருவரால் பவழக்காரத் தெருவில், அப்பகுதியில் வசிக்கும் திருநெல்வேலி வாசிகளின் சுயஜாதி அபிமானத்தை உபயோகித்துச் சிலகாலம் பலசரக்கு வியாபாரம் நடத்தியது. அந்த வியாபாரத்தில் ஸ்ரீ சுப்பையா பிள்ளையும் பண வசூல், கணக்கு, வியாபாரம் என்ற நானாவித இலாகாக்களையும் நிர்வகித்தார், அதாவது `மான்ட் போர்ட்’ சீர்திருத்தக் காலத்து மாகாண மந்திரிகள் மாதிரி. பிறகு `தனலட்சுமி ஸ்டோர்ஸ்’ ஜவுளிக் கடையாக மாறி, திருநெல்வேலி மேலரத வீதி ஜவுளி வர்த்தகர்களில் சில்லறைப் பேர்வழிகளுக்கு மொத்தச் சரக்குப் பிடித்துக்கொடுக்கும் இணைப்புச் சங்கிலியாகி, பெரிய வர்த்தகம் நடத்துவதற்குக் காரணம் கம்பெனிக்கு ஆரம்பத்தில் கிடைத்த ஆதரவினால் ஏற்பட்ட லாபம் என்பதுடன், எதிரில் திறக்கப்பட்ட `மீனாட்சி பிரொவிஷன் அன்ட் பயர்வுட் ஸ்டோர்ஸ்’ என்பதை மறந்துவிடலாகாது. இது தஞ்சாவூர் ஐயர் ஆரம்பித்த கடை சர்க்கரையாகப் பேசுவார்; பற்று வரவும் சௌகரியத்திற்கு ஏற்றபடி இருந்தது. அவர் கடையில் கணக்கு வைத்ததால், குடும்பத் தலைவர்கள் வீட்டுத் தேவைகளுக்கு என்று தனி சிரமம் எடுத்துக்கொண்டு வெளியில் காலடி எடுத்துவைக்கவேண்டிய அவசியமில்லாது போயிற்று. மேலும் `தனலட்சுமி ஸ்டோர்ஸ்’ முதலாளி, தமக்கு அந்தப் பகுதி `திருநெல்வேலிச் சைவர்களுடன்’ ஏÊற்பட்ட நெருங்கிய தொடர்பால் கடையில் நேரடியாக வந்து வாங்குகிறவர்களுக்கு ஒரு மாதிரி, வீட்டில் இருந்துகொண்டு கணக்குச் சிட்டையை அனுப்பி மாசாமாசம் பாக்கி வைப்பவர்களுக்கு ஒரு மாதிரி என்று நடக்க ஆரம்பித்ததும் இதற்கு ஒரு துணைக் காரணம். விசேஷமாக மண்பானைச் சமையல் என்ற விளம்பரங்களுடன் சைவச் சாப்பாட்டு ஹோட்டல் ஒன்றும் மூடப்பட்டது. அதாவது `தனலட்சுமி ஸ்டோர்ஸி’ல் மொத்த வியாபாரம் நடத்திய ஹோட்டல் பிள்ளை, ஊரோடு போய்ச் சௌகரியமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் `ரிட்டயராகி’ விட்டார்; சாத்தூர் `டிவிஷனில்’ அவருடைய மகன் `ரெவின்யூ இன்ஸ்பெக்டர்’ உத்தியோகம் பார்த்ததால் அவருக்கு ஹோட்டல் நடத்துவது அகௌரவமாக இருந்தது. நிலபுலன்களைப் பார்க்கப் போவதாகச் சென்னைக்குச் செலவு பெற்றுக்கொண்டார். இப்படியாகத் `தனலட்சுமி ஸ்டோர்ஸ்’ ஜவுளிக்கடையாக மாறியது.
இந்த மாறுதலால் ஸ்ரீ சுப்பையா பிள்ளைக்கு அந்தஸ்தும் உயர்ந்தது; சம்பளமும் உயர்ந்தது. திருநெல்வேலிக் கடைப்பிள்ளைகள் வரும்போதும் போகும்போதும் காட்டும் சிரத்தையால் உப வருமானமும் ஏற்பட்டது. உடை, நாட்டு வேஷ்டியிலிருந்து மல் வேஷ்டியாயிற்று. பாங்கியில் பணமும் கொஞ்சம் சேர்ந்தது. அதனுடன் அவருடைய குடும்பமும் பெருகியது. குடும்ப `பட்ஜெட்’டில் வீட்டு வாடகை இனம் பெரும் பளுவாக இருந்தாலும் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற வசதி அளிப்பதாக இல்லை.
தேச விழிப்பின் முதல் அலையான ஒத்துழையாமை இயக்கம், பின்னர் அதன் பேரலையான உப்பு சத்தியாக்கிரகம் _ இவருடைய வாழ்விலோ, மனப்போக்கிலோ மாறுதல் ஏற்படுத்தவில்லை. வீரபாண்டியன்பட்டணத்தின் ஒரு சிறு பகுதியாகவே அவர் சென்னையில் நடமாடினார். ஜீவனோபாயம், பிறகு சௌகரியப்பட்டால் பிறருக்கு உதவி, சமூகத் தொடர்புகளுக்குப் பயந்து பணிதல் _ எல்லாம் சேர்ந்த உருவம் ஸ்ரீ சுப்பையா பிள்ளை. காலணாப் பத்திரிகைகள் காங்கிரஸின் சக்தியை அவரிடம் கொண்டுவந்து காட்டவில்லை என்றால், பவழக்காரத் தெரு, திருநெல்வேலி மேற்கு ரதவீதி, அப்புறம் நினைவிலிருக்கும் வீரபாண்டியன்பட்டணம் என்ற மூன்று சட்டங்களுக்குள்ளாகவே அவருடைய மனப் பிரதிமை அடங்கிக் கிடந்தது என்று வற்புறுத்துவது அவசியமில்லை.
மின்சார ரெயில் வண்டி அவருடைய வாழ்வில் ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்தியது. அவர் வேலை பார்த்த கடையின் பூர்வாசிரமத்தில், அதில் பற்று வரவு நடத்திய பெங்களூர் நாயுடு, ஒரு முழு வாழ்விலும் சம்பாதித்த Êஏமாற்றத்தின் சின்னங்களுடன் பழைய படி சொந்த ஊருக்குப் போய்விட விரும்பினார். அவருக்குத் தாம்பரத்தில் ஒரு சின்ன வீடு இருந்தது. ஸ்ரீ சுப்பையா பிள்ளைக்கு அவருடைய வார்த்தைகள்மீது நம்பிக்கை இருந்தது. அதன் விளைவாகப் பிள்ளையவர்களுக்குத் தாம்பரம் _ பீச் யாத்திரை பிரதி தினமும் லபித்தது. ஊருக்கெல்லாம் மின்சாரம் வந்தாலும் அவருக்கு அந்தப் பழைய மண்ணெண்ணை (கிரோசின்) விளக்குத்தான்; குழாய் வந்தும் அவருக்குத் தாம்புக் கயிறும் தவலையுந்தாம்.
பிள்ளையவர்கள் இத்தனை காலம் வீட்டு வாடகைக்குச் செலவு செய்தது, இப்பொழுது தனக்கும் தன் மூத்த பையனுக்கும் _ அவன் படிக்கிறான் _ ரெயில் பாஸுக்குச் செலவாயிற்று. விடியற்காலம் கிணற்றுத் தண்ணீர் ஸ்நானம். பழையது, கையில் பழையது மூட்டை, பாஸ், வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டணாச் சில்லறை. இந்தச் சம்பிரமங்களுடன் பவழக்காரத் தெருவை நோக்கிப் புறப்படுவார். இரவு கடைசி வண்டியில் காலித் தூக்குச் சட்டி, பாஸ், வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டணாச் சில்லறை, பசி, கவலை _ இவற்றுடன் தாம்பரத்திற்குத் திரும்புவார். `பெண்Êணுக்குக் கல்யாணம் காலாகாலத்தில் செய்யவேணும். மூத்தவனுக்குப் பரீக்ஷைக்குப் பணம் கட்ட வேÊணும். தோற்றுப் போய் வீட்டோடு இருக்கும் சின்னவனை Êஏதாவது ஒரு தொழிலில் இழுத்துவிட வேÊணும். நாளைக்குப் பால்காரனுக்குத் தவணை சொல்லாமல் பணம் Êஏதோ கொஞ்சம், கூடக் குறையவாவது கொடுக்க வேணும் . . . .’
பிள்ளையவர்கள் அநுட்டானாதிகள் முடித்துக்-கொண்டு, சாப்பிட்டு முடித்து `முருகா’ என்று கொட்டாவி விட்டபடி திண்ணையில் சரிவதற்குமுன் மணி பன்னிரண்டாகிவிடும். இப்படியே தினந்தோறும்.....
2
  காலை Êஏழு மணி சுமாருக்குத் திருவனந்தபுரம் `எக்ஸ்பிரஸ்’ விசில் சப்தம், `அவுட்டர் சிக்னல்’ அருகில் கேட்கும்பொழுது ஸ்ரீ சுப்பையா பிள்ளை தாம்பரம் ஸ்டேஷன் மாடிப் படிகளில் கால் வைப்பார். எதிரில் நிற்கும் டிக்கெட் பரிசோதகன் புது ஆசாமியாக இருந்தால் பாஸை எடுத்துக் காண்பித்துவிட்டு மேலேறுவார். இல்லாவிட்டால், சிந்தனைகளுடன், படிகளில் கால் உயர்ந்தேறிச் செல்லும்; கண்கள் தெற்கு நோக்கி ரெயில் வண்டி வரும் திசையைத் துழாவும், திருநெல்வேலியிலிருந்து தமக்குத் தெரிந்த யாரும் வந்தால் பார்க்கலாமே என்ற ஆசைதான். `எக்ஸ்பிரஸ்’ புறப்பட்ட பிறகுதான் மின்சார ரெயிலும் புறப்படும். ஆகையால் அந்த நேரத்தில், `எக்ஸ்பிரஸ் பிளாட்பார’த்திற்குச் சென்று இரவு முழுவதும் கொசுக்களுடன் மல்லாடிய சிரமத்தைச் செங்கற்பட்டு அவசரக் காப்பியில் தீர்த்துக் கொண்ட பாவனையில் ஜன்னல் வழியாகத் தலை நீட்டுபவர்களைப் பார்ப்பதில் ஒரு நாட்டம் பிள்ளையவர்களுக்கு எப்Êபொழுதும் உண்டு.
இடுப்பில் நாலு முழம் மல், தோளில் ஒரு துவர்த்து, மடியில் சம்புடம் வகையறா, கையில் போசன பாத்திரம் _ இந்தச் சம்பிரமங்களுடன் பிள்ளையவர்களை எப்பொழுதும் _ மழையானாலும் வெயிலானாலும் பார்க்கலாம். எப்பொழுதும் ஒரு வாரமாக க்ஷவரம் செய்யாத முகம், நெற்றியில் பளிச்சென்ற விபூதி, நனைந்துலரும் தலை மயிரைச் சிக்கெடுக்கும் வலக்கை இவைகளை நினைத்துக்கொண்டால் சுப்பையா பிள்ளையின் உருவம் வந்து நின்றுவிடும். மழைக் காலமானால் கையில் குடை ஒன்று எப்பொழுதும் விரித்துப் பிடித்தபடி போசன பாத்திரத்துடன் அதிகமாகக் காணப்படும்.
தெற்கு ரதவீதி ஜவுளி வியாபாரிகள் இவரிடம் தப்பித்துக்கொண்டு நேரடியான வியாபாரம் நடத்திவிடுவது துர்லபம்; அப்படி எப்பொழுதாவது நடத்த முயன்றிருந்தால் பிள்ளையவர்களுக்குத் தேக அசௌக்கியம், ரெயிலுக்கு வரத் தாமதமாயிற்று என்பதுதான் கணக்கு. இதனால் பிள்ளையிடம் கடை முதலாளிக்கு வெளிக்காட்டிக் கொள்ளப்படாத தனி வாஞ்சை _ `சுப்பையா இல்லாட்டா நம்ம கையொடிஞ்ச மாருதி’ என்பார் முதலாளிப் பிள்ளை இவ்வளவிருந்தும் பண விஷயத்தில் என்னவோ அவர் வெகு கறார்ப் பேர்வழி.
பிள்ளையவர்கள் ரெயிலில் ஏறுவதே ஒரு தினுசு. நடுமைய வண்டியில், வாசலுக்கு அருகில் உள்ள வலது பக்கத்து `ஸீட்டில்’ எஞ்சினுக்கு எதிர்ப்புறமாகத்தான் உட்காருவார். அது அவருடைய `ஸீட்’. புறப்படுகிற இடத்தில் ஏறிக் கடைசியாக நிற்கிற இடத்தில் வந்து இறங்குகிறதால் இந்த இடத்துக்கு அவரிடம் யாரும் போட்டிக்கு வந்ததே இல்லை. வந்திருந்தாலும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள். தாம்பரத்திலிருந்து `பீச்’ வரையில் உள்ள பக்கங்களிலும், பேட்டைகளிலும் இரண்டிரண்டு நிமிஷம் வண்டி நிற்கும் பொழுதுதான் அவருடைய நிஷ்டை கலையும். வண்டி `பீச்’ ஸ்டேஷனில் வந்து நின்றுவிட்டது. என்றவுடனேயே இறங்குவதில்லை. வெளியில் இறங்கியதும் வேஷ்டியை உதறிக் கட்டிக்கொண்டபின் துவர்த்து முண்டை உதறி மேலே போட்டுவிட்டு பிறகு ஜன்னல் வழியாக வண்டிக்குள் தலையையும் கையையும் விட்டு கையில் போசனப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு காலெட்டி வைப்பார் ஸ்ரீ சுப்பையா பிள்ளை. ஆர அமர மெதுவாக, சாவகாசமாக இறங்கி ஸ்டேஷனை விட்டு வெளியே போகும் கடைசிப் பிரயாணி சுப்பையா பிள்ளை. தாம்பரத்திலும் பீச்சிலும் வண்டியில் ஏறும் முதல் பிரயாணியும் அவர்தாம். அவரிடம் சொந்தமாகக் கடிகாரம் Êஏதும் இல்லை. அவரே ஒரு கடிகாரம்.
பிள்ளையவர்கள் வண்டியில் Êஏறி உட்கார்ந்-தாரானால் தலையை வெளி நீட்டாமல் ஜன்னல் பக்கமாகத் திரும்பிவிடுவார். `பீச் ஸ்டேஷன்’ கோட்டைச் சுவர்களில் கண்பார்வை மோதிக்கொள்ளும் வரையில் அந்தப் பாவனையில் கழுத்தே இறுகிவிட்ட மாதிரி உட்கார்ந்திருப்பார். பார்வையில் ஒரு குறிப்பு இருக்காது; அத்திசையில் இருக்கும் பொருள்கள், ஜீவன்கள் அவர் பார்வையில் விழும் என்பதில்லை; விழுவதில்லை என்று சொல்ல வேண்டும்.
ஆனால், இவைகளுக்கெல்லாம் விதிக்கு விலக்கு இந்த மீனம்பாக்கம் ஸ்டேஷன். இதை வண்டி நெருங்கும்பொழுது அவர் கண்கள் உயிர் பெறும். மிரண்டு சோலையுடன் கூடிய கப்பிக்கல் ரஸ்தாவையும் தாண்டி, தூரத்தில் தெரியும் விமான நிலயத்தில் தங்கும்.
`எப்பவாவது ஒரு தரத்துக்கு அஞ்சு ரூபாயை வீசி எறிந்துவிட்டு ஆகாசக் கப்பலில் ஏறிப் பார்த்து விட வேணும்’ என்பது அவரது தினசரி உத்தேசம் _ பிரார்த்தனை. எப்பவாவது . . . மினம்பாக்கத்தில் சிவில் விமான ஏற்பாடு அமைக்கப்பட்டதிலிருந்து நாளது தேதி வரை, அந்த `எப்பவாவது’ என்ற எல்லைக்கு முடிவுகாணவில்லை. வண்டி இரண்டு நிமிஷம் நின்று சென்னையை நோக்கிப் புறப்படும் வரையில் தில்லை நோக்கிய நந்தன்தான். வண்டி, `ஸ்டேஷன் பிளாட்பார’த்தை விட்டு நகர்ந்து வேகமெடுக்குமுன், இவரையும் வண்டியையும் வழியனுப்பிப் பின்தங்கி, மறுபடியும் தென்படும் விமான நிலயக் கட்டிடங்கள் பிள்ளையவர்களின் இரத்தவோட்டத்தைச் சிறிது துரிதப்படுத்துவதுதான் மிச்சம். அடுத்த ஸ்டேஷன் வருவதற்குமுன் அவருடைய மனம் ஜப்பான் சீட்டிகளிலும் புடைவைகளிலும் முழுகி மறைந்துவிடும். முக்குளித்து வெளிவரும்போதெல்லாம், மனமானது `பெண்ÊÊணுக்கு வரன் தேடுவது, மேயன்னா விலாசத்துப் பாக்கிக்காக இன்னொரு தடவை கடுதாசி போடுவது, இந்த வருசமாவது வைகாசிக்குக் காவடி எடுத்துவிட வேணும் என்று நிச்சயிப்பது _ இவ்விதமாக `பீச் ஸ்டேஷனை’ நெருங்கிக்கொண்டிருக்கும். ஒரு முறை திருநெல்வேலிப் பக்கமாகப் போனால் பெண்Êணுக்கு வரன் நிச்சயிப்பதுடன் காவடியையும் எடுத்துவிட்டு, சின்னப் பயலுக்கு Êஏதாவது ஒரு வழி செய்துவிட்டு வரலாம். ராதாபுரத்துப் பிள்ளை கொளும்புக்குப் போகையில் தாக்கல் எளுவதாகச் சொன்னார்கள். வந்து ஆறு மாசம் ஆச்சே, போனதும் எதுக்கும் ஒரு கடுதாசி போட்டுவிட்டு மறு வேலை பார்க்கÊணும். இந்தச் சேட்டுப் பயலைப் பார்த்துக்கிட்டு நேரா கடைக்குப் போயிட்டா அப்புறம் வெளிலே போகவேண்டி-யிருக்காது; முதலாளியையும் பாத்துப் பேச அப்பந்தான் சௌகரியம் . . . அவுஹ என்னமோ ஊருக்கு ஒரு மாசம் போயிட்டு வரணுமாமே _ விதிதான் . . . எப்படியும் கேட்டுப் பாக்கது . . . .’
வண்டி மாம்பலம் வந்து நின்றது. `பிளாட்பார’த்தில் ஜனக்கூட்டம்: ÊÊஏக இரைச்சல் கூடைக்காரிகளும் ஆபீஸ் குமாஸ்தாக்களும் அபேதமாக இடித்து நெருக்கிக்கொண்டு ஏறினார்கள். இந்த நெருக்கடியில், இவர் பார்வையில் விழும் வாசலில் பெரிய சாக்கு மூட்டையும் தாடியுமாக ஏÊறிய கிழவனாருக்குப் பின் பதினாறு வயசுப் பெண் ஒருத்தி `விசுக்’ என்று ஏறிக் கிழவனாருக்கு முன்னாக வந்து காலியாகக் கிடந்த பெஞ்சில் உட்கார்ந்துகொண்டாள். `பொம்பிளையா மாதிரியாக் காங்கலியே; நெருங்கித் தள்ளிக்கொண்டு மின்னாலே ஓடியாந்து உட்கார்ந்துகொண்டாளே; பொம்பிளை வண்டியில்லே’ என்று ஆச்சரியப்பட்டார் பிள்ளை.
வந்து உட்கார்ந்தவள் ஒரு மாணவி. வைத்தியத்துக்குப் படிப்பவள். கழுத்தில் `லாங் செயி’னுடன் ஒரு `ஸ்டெதஸ்கோப்’பும் அலங்காரத்துக்-காக (?) தொங்கிக்கொண்டிருந்தது. இன்ன வர்ணம் என்று நிச்சயமாகக் கூறமுடியாத பகல் வேஷ வர்ணங்களுடன் கூடிய ஒரு புடைவை. அதற்கு அமைவான `ஜாக்கெட்’. செயற்கைச் சுருளுடன் கூடிய தலைமயிரைக் காதைமறைத்துக் கொண்டையிட்-டிருந்தாள். காதிலிருந்து ஒரு வெள்ளிச் சுருள் தொங்கட்டம். கையில் புஸ்தகமோ, நோட்டோ அவர் நன்றாகக் கவனிக்கவில்லை. நெற்றி உச்சியை உள்ளங்கையால் தேய்த்துத் தினவு தீர்த்துக்கொண்டார். கண்களைக் கசக்கிக்கொண்டு, ஒரு வாரமாகக் கத்தி படாத முகவாய்க் கட்டையை தடவிக் கொடுத்துக்கொண்டு, ஜன்னல் வழியாக எதிர்ப்பக்கத்தில் தெரியும் வீடுகளைப் பார்த்தார். பார்வை மறுபடியும் அந்தப் பெஞ்சுக்குத் திரும்பியது.
சாக்கு மூட்டையுடன் திண்டாடிய கிழவனார் அதைத் தனது முழங்காலருகில் சரிய விட்டுவிட்டு இரண்டு கைகளாலும் தடியைப் பிடித்துக்கொண்டு கொட்டாவி விட்டு அசை போட்டபடி பெஞ்சியின் மூலையில் ஒண்டி உட்கார்ந்திருந்தார். பெண்ணோ சாவகாசமாகச் சாய்ந்து வண்டியில் நிற்கும் மற்றவர்கள்மீது ஒரு தடவை பார்வையைச் சுழற்றிவிட்டு, தனது கைப்பையைத் திறந்து அதற்குள் எதையோ அக்கறையாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். வண்டி புறப்பட்டது.
கோடம்பாக்கத்தின் `செமன்ட்’ சதுரக் கட்டிடங்களில் அவர் கண் விழுந்தது. `பெத்துப் போட்டா போதுமா . . .’ என்று அந்த நேரத்தில் வீட்டுக் கிணற்றடியில் தண்ணீர் சுமக்கும், வரன் நிச்சயிக்க வேண்டிய தமது மகளைப் பற்றி நினைத்தார். அவளைப் போல இவளையும் பெண் என்ற ரகத்தில் சேர்த்துக்கொள்ள அவர் மனம் மறுத்தது.
`ஷாக்’ அடித்ததுபோல் பிள்ளையவர்கள் கால்களைப் பின்னுக் கிழுத்தார். கூட்டத்தின் நெருக்கத்தால் அவளது செருப்புக் காலின் நுனி அவரது பெருவிரல் நுனியைத் தொட்டது. பரக்க விழித்த பார்வையுடன் பிள்ளையவர்கள் கால் உடல் சகலத்தையும் ஒடுக்கிச் சுருக்கி `ஸீட்டு’க்குள் இழுத்துக்கொண்டார். அந்தப் பெண்ணும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கையிலிருந்த புஸ்தகத்தில் ஆழ்ந்து விட்டாள். சிந்தனை அதில் விழவில்லை. அந்தப் பார்வை பிள்ளையவர்கள் மனசுக்குள் எதையோ தூண்டில் போட்டு இழுத்தது. நெற்றியில் வியர்வை அரும்ப ஜன்னல் வழியாக வலப்புறத்து வயல் கட்டிடக் குவியல்களைப் பார்த்தார்.
மனம் எப்பவோ நடந்த கல்யாண விஷயத்தில் இறங்கியது. வீரபாண்டியன்பட்டணத்துக் கருக்கு மாப்பிள்ளை _ மேளதாளக் குறவைகளுடன் வீட்டில் குடிபுகுந்த ஸ்ரீமதி பிள்ளையின் மஞ்சள் அப்பி சுத்துருவில் மருக்கொழுந்துடன் கூடிய நாணிக் கோணிய உருவம், பிறகு தேக உபாதையையும் குடும்பச் சுமையையும் தூக்கிச் சென்ற நாள், சங்கிலிகள், குத்துவிளக்கை அவித்துவைத்த குருட்டுக் காமம் . . . .
சடபட என்ற பேரிரைச்சலுடன் எதிர் லயனில் ஒரு மின்சார ரெயில் விரைந்து நெருங்கியது. வண்டிகள் ஒன்றையொன்று தாண்டிச் செல்லும் சில விநாடிகளில் காதையும் மனதையும் குழப்பும் கிடு கிடாய்த்த சப்தம்; எதிரே ஓÊடிமறையும் ஜன்னல்களில் தோன்றி மறையும் தலைகள் _ அப்பாடா! வண்டி சென்றுவிட்டது. சப்தமும் தூரத்தில் ஒடுங்குகிறது.
பிள்ளையவர்களின் மனம் ஓசையின் பின்பலத்தால் வேறு ஒரு திசையில் சஞ்சரிக்கிறது. `பிராட்வே’ முனையில் டிராமும் மோட்டாரும் மோதிக்கொள்ள நெருங்கிவிட்டது. இடையில் அந்தப் பெண். பிள்ளையவர்கள் அவளை எட்டி இழுத்து மீட்கிறார். ``தனியாக வந்தால் இப்படித்தான்’ என்கிறார். மீண்டும் ஓரிடத்தில் ஒரு ரிக்ஷாவில் அதே பெண்; சக்கரத்தின் கடையாணி கழன்று விழுகிறது. ஓடிப்போய் வண்டியைச் சரிந்துவிடாமல் தாங்கிக்கொள்கிறார். கூட்டம் கூடிவிடுகிறது. கூட்டத்திலே போராடி மல்யுத்தம் செய்து அவளை மீட்டுக்கொண்டு வருகிறார் . . . பிள்ளையவர்களின் மனசு சென்று சென்று அவள் உருவத்தில் விழுகிறது. முகத்தை ஜன்னல் பக்கம் திருப்புகிறார். `எழும்பூர் தாண்டிவிட்டதா’ என்று ஆச்சரியப்படுகிறார்.
பார்க் ஸ்டேஷன்!
கூட்டம் Êஏகமாக இறங்குகிறது. பிள்ளையவர்கள் பார்த்தபொழுது எதிர் `ஸீ’ட்’ காலியாக இருந்தது. கிழவனும் மூட்டை முடிச்சுக்களுடன் இறங்கிவிட்டான். அந்தப் பெண் எப்போது இறங்கினாள்? வந்த அவசரம் மாதிரிதான் போன அவசரமும் . . . வண்டியில் பெரும்பான்மையான கூட்டமும் இறங்கிவிட்டது. இவர் பெட்டியில் எல்லா இடங்களும் காலி.
மின்சார விசில் . . . .
வண்டி புறப்பட்டுவிட்டது. தலையை நீட்டி எட்டிப் பார்த்தார். அப்பாடா! ஒருத்தருமில்லை. காலை எதிர்ப் பெஞ்சில் நீட்டிக் கொண்டு பிடரியில் இரு கைகளையும் கோர்த்து அண்டை கொடுத்துக்கொண்டு கண்களை அரைவட்டமாகச் சொருகி யோசனையில் ஆழ்ந்தார். மறுபடியும் அந்தப் பெண்ணின் உருவம் மனசில் வந்து கூத்தாட ஆரம்பித்தது. விரல்களை வாயருகில் சொடக்கிவிட்டு `சிவா’ என்றபடி கொட்டாவி விட்டார்.
கோட்டை தாண்டி ரெயில் `தகதக’வென்ற கடலின் பார்வையில் ஓடிக்கொண்டிருந்தது. `வரும்போது ஞாபகமா பால்காரனுக்கு வழி பண்ணனும் . . . அடுத்த சீட்டை எடுத்தால் திருநெல்வேலி போய்வரச் செலவுக்குக் கட்டுபடியாகிவிடும். . . திருச்செந்தூரிலே ஒரு கட்டளை ஏற்படுத்திவிட்டால், முருகன் திருநீறாவது மாசா மாசம் கிடைக்கும் . . . .’
வண்டி ஊதியது.
`அந்தச் சின்னப் பையனுக்கு வேட்டி எடுக்கவா? போன மாசந்தானே ஒரு சோடி வாங்கினேன் . . . பயலெக் கண்டிக்கணும்.’
வண்டி வந்து நின்றது.
கீழே இறங்கி வேட்டியை உதறிக் கட்டினார். மேல்துண்டை உதறிப் போட்டுக்கொண்டார். ஜன்னல் வழியாக எட்டிப் போசனப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கால் எட்டி வைத்தார்.
டிக்கெட் இன்ஸ்பெக்டர் சரிபார்த்த கடைசிப் பிரயாணி ஸ்ரீ சுப்பையா பிள்ளை.

சூறாவளி, 13-08-1939

இரு படைப்புகள் சந்திக்கும் புள்ளியில்....-ஜெயமோகன்

ஜெயமோகன்

தல்ஸ்தோயியின் `புத்துயிர்ப்பு’, தஸ்தயேவ்ஸ்கியின் `குற்றமும் தண்டனையும்’ ஆகிய நாவல்களை ஒரேசமயம் படிப்பவர்கள் அவற்றுக்கு இடையேயான ஒற்றுமையை வியப்புடன் கண்டடையக் கூடும். நெஹ்ல்யுடோவின் `குற்றத்தையும் அதன் தண்டனை’-யையும் குறித்து தல்ஸ்தோய் எழுதுகிறார் என்றால் ரஸ்கால்நிகாபின் `புத்துயிர்ப்பு’ குறித்தே தஸ்தயேவ்ஸ்கி எழுதுகிறார். இருநாவல்களிலும் உள்ள வினா ஒன்றுதான். `குற்றம்’ `பாவம்’ என்பதெல்லாம் ஒப்பீட்டளவில் தீர்மானிக்கப்படுபவை. தண்டனையோ முழுமுற்றானது. அப்படியானால் முழுமுற்றாக `குற்றத்தையும்’, `பாவத்தையும்’ வரையறுத்துவிட முடியாதா?

நெஹ்ல்யுடோவ் போன்ற ஒரு பிரபுவிற்கு மஸலோவா போன்ற எளிய கிராமத்துப் பெண்ணை வலுக்கட்டாயமாக அடைவது ஒரு பிழையல்ல; ஒருவகையில் அதற்கான சுதந்திரம் தனக்கு உண்டு என்றுகூட அவன் கருதியிருக்கலாம். அவள் தலைமாட்டில் சில ரூபாய்களை வீசிவிட்டு வந்தபிறகு ஒருபோதும் அவன் திரும்பிப் பார்த்ததுமில்லை. ஆனால், வாழ்வின் முதிர்ந்த கணமொன்றில் கூண்டில் அவளைப் பார்க்கும்போது ஆழமான அகத்தூண்டல் ஏற்படுகிறது அவனுக்கு. அது குற்ற உணர்வோ, சமூகம் சார்ந்த பயமோ அல்ல. அடிப்படையான நீதியுணர்வின் கண்விழிப்புதான் அது. அவனை அனைத்தையும் துறக்க வைக்கிறது, சைபீரியா வரை இட்டுச் செல்கிறது.

வட்டித் தொழில் புரியும் கிழவியைக் கொலைசெய்ய ரஸ்கால்நிகாபுக்கு எல்லா நியாய தருக்கங்களும் உதவுகின்றன. அவன் கண்டுபிடிக்கப்படவுமில்லை; இன்னும் கூறப்போனால் நிரந்தரமாக தப்பியும் விட்டான். ஆனால், அவனுள் கண்விழித்துக்கொண்ட நெருப்பு ஒன்று அவனை எரிக்கத் தொடங்குகிறது.

தீவிரமான நீதியுணர்வின் இரைகளாக மாறிய இரு கதாபாத்திரங்களும் செல்லும் பாதை இவ்விரு மகத்தான படைப்புகளிலும் ஒன்றுபோலவே உள்ளன. வலிமிக்க சுயதரிசனம், சதையைப் பிய்த்து வீசுதலுக்கு இணையாக ஒவ்வொன்றையும் துறத்தல், இறுதியில் அவர்கள் அடையும் முடிவுகூட சமானமானதே. நியாயங்கள், நியமங்கள் மாறலாம். குற்றம் என்பதும் பாவம் என்பதும் மானுடத்தின் சாரமாகிய நீதியுணர்வால் தீர்மானிக்கப்படுபவையே என்று அவர்கள் கண்டடைகிறார்கள். துயருற்ற, அவமதிக்கப்பட்ட, இழிவிலும் மனிதத்தன்மையை கைவிடாத மானுடத்தின் பிரதிநிதியாகிய சோனியாவின் முன் ரஸ்கால்நிகாப் மண்டியிட்டு பாவமன்னிப்பு கோரும் இடம்மூலம் வெளிப்படுவது இந்த மகத்தான கண்டடைதலேயாகும்.

தமிழில் இதற்கிணையாகக் கூறப்படவேண்டிய இணைப்படைப்புகள் சில உண்டு, முதன்மையான உதாரணம் புதுமைப்பித்தனின் `செல்லம்மாள்’ மௌனியின் `மாறுதல்’. கதைச் சந்தர்ப்பம் பெருமளவு ஒத்துப் போகிறது. மனைவி இறந்து, பிணம் வீட்டுக்குள் கிடக்கிறது. மனம் உறைந்துபோன கணவன் அருகே விடிவதற்காகக் காத்து அமர்ந்திருக்கிறான் அவர்கள் அத்தருணத்தில் உணரும் வாழ்க்கைத் தரிசனமே இரு கதைகளிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

புதுமைப்பித்தனின் கதை பல பக்கங்களுக்கு விரிகிறது. அவர்களின் தாம்பத்திய உறவின் லௌகீகமான பலதளங்களைத் தொட்டு வளர்கிறது. சற்று உயிர் வந்ததுமே கணவனுக்கு சமையல் பண்ணக் கிளம்பிவிடும் செல்லம்மாள்தான் அரைப் பிரக்ஞை நிலையில் `இந்தப் பாவிகிட்டே என்னை ஒப்படைச்சிட்டியே’ என்று புலம்புகிறாள். கடுமையான வறுமை மூலம் பொருளற்றுப் போன வாழ்வு என்று, முதல் பார்வைக்குப் படும், அவர்கள் உறவுக்குள் உள்ள ஆழமான வன்முறையை பிரமநாயகம் பிள்ளையின் கையின் நிழல் செல்லம்மாளின் உயிர்க்குலையைப் பிடுங்குவது போலத் தோற்றமளிப்பது பற்றிய மூர்க்கமான படிமம் மூலம் வெளிப்படுத்துகிறார். கறாரான யதார்த்தச் சித்தரிப்பு கொண்ட இக்கதை நுட்பமான குறிப்புணர்த்தல்கள் மூலம் பற்பல ஊடுபாவுகளை வெளிப்படுத்தி மொத்த வாழ்வையே அத்தருணத்தில் விசாரணை செய்கிறது. மரணத்தின் மூலம் இறுதியாக தொகுக்கப்படுகையின் வழியாக மட்டும் அர்த்தம் கொள்ளும் ஓர் அவல நாடகமாகப் புதுமைப்பித்தன் வாழ்க்கையைக் காட்டுகிறார். இறுதியில் விடியும்போது, சங்கு ஒலிக்க சிதை நோக்கி கிளம்பும்போது மட்டுமே செல்லம்மாளின் வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு ஒழுங்குமுறை உருவாக முடியும். இல்லாதபோது அது வெறும் துயரம், உதிரி மகிழ்ச்சிகள் ஆகியவற்றின் குவியல்தான். விடிவதற்காக பிரமநாயகம்பிள்ளை காத்திருக்கிறார், மனைவியின் பிணமுகத்தில் அமர்ந்த ஈயை மந்தமாக விரட்டியபடி.

மௌனியின் கதையில் சம்பவ அடுக்குகளே இல்லை. ஒருவித பிரமைநிலையில் நகரும் வெற்றுக் காட்சிகள் மட்டுமே. பிணத்தருகே நின்ற கணவன் சன்னல் வழியாக தெருவைப் பார்க்கிறான். மாட்டுவண்டி செல்கிறது, தயிர்க்காரி செல்கிறாள். விடிகிறது. அர்த்தமற்ற காட்சிகள். அவை போலவே அர்த்தமற்ற காட்சிகள்தாம். வீட்டுக்குள் நிகழும் மரணமும், தனிமையும், காத்திருப்பும் என்கிறாரா மௌனி? வீட்டுக்குள் நிகழ்பவற்றுடன் நாம் தொடர்பு கொண்டிருப்பதனால் அவை நமக்கு முக்கியமான அர்த்தமுள்ள _ அல்லது அர்த்தமென்ன என்று யோசிக்க வேண்டிய _ நிகழ்வுகள். வெளியே உள்ளவை நம்முடன் தொடர்பு இல்லாததனால் அர்த்தமோ, ஒழுங்கோ இல்லாதவை என்று காட்டுகிறாரா? `எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?’ என்ற மௌனியின் வரி தன்னளவில் அத்தனை முக்கியமானதல்ல. இந்திய வேதாந்த மரபில் முன்பே கூறப்பட்டதும்கூட. ஆனால், மௌனியின் எல்லா கதைகளுடனும் கலந்து அவற்றுக்குத் திறவுகோலாகும் இயல்பு அதற்கு உண்டு. அதனாலேயே அவ்வரி க.நா.சுப்ரமணியத்தால் வலியுறுத்தப்பட்டது. வெளியே ஆடும் நிழல்களினூடாக மொத்த வாழ்வின் நிழலாட்டத்தை உணர்கிறான் பார்ப்பவன். மாறுதல் என்ற கதையின் அனுபவம் தரும் அகதரிசனம் இதுவே.

இவ்விரு படைப்பாளிகளையும் வகுத்துக் கொள்ள பெரிதும் உதவக்கூடியது இவ்விரு கதைகளையும் ஒப்பிடுவதுதான். புதுமைப்பித்தனுக்கு புறவய உலக இயக்கமே முக்கியம். அதன் எதிர் பிம்பமாகவே அவர் காட்டும் அகஉலக இயக்கம்கூட காணப்படுகிறது. புறஉலகச் சித்தரிப்புகளினூடாக குறிப்புணர்த்தலுக்கு ஏற்படும் சாத்தியங்களைப் பயன்படுத்தி அகஉலகின் ஆழங்களுக்கு வாசகனை நகரச் செய்வது அவரது பாணி. மௌனியின் படைப்புலகில் புறஉலகமே இல்லை. மாறுதல் கதை நடந்த நிகழ்வு. வெறும் மனப்பிராந்தியா என்றுகூட கூறிவிடமுடியாது. சம்பவங்களோ, கருத்துகளோ அல்ல, வெறும் படிமங்கள்தான் மௌனியின் கதையை வடிவமைக்கும் அடிப்படைக் கூறுகளாக உள்ளன. ஆகவே, புதுமைப்பித்தனின் இடம் கதையில் ஊன்றியது மௌனியின் இடம் கவிதையில். புதுமைப்பித்தனை வெற்றிபெற்ற கதைசொல்லி என்றும், மௌனியை தோற்றுப்போன கவிஞன் என்றும் ஒரு அந்தரங்கக் கணிப்பில் வகுத்துக் கொள்வது என் வழக்கம்; நிறைய ஐயங்களுடன்தான்.

காலம் தாண்டும் ஆற்றல்-சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி

(`நோபல் பரிசு பெற்ற சில கலைஞர்களையாவது பின்தங்கச் செய்யும் கலைஞனாகப் புதுமைப்பித்தனை உங்கள் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இம்முடிவுக்கு நீங்கள் வந்தததற்கான விமர்சனக் கண்ணோட்டத்தை விளக்க முடியுமா?’ என்கிற கேள்விக்கு சுந்தர ராமசாமி காலச்சுவடு; இதழ் 10, ஜனவரி 1995-_ல் எழுதிய பதிலின் சுருக்கம்.)


  புதுமைப்பித்தன் சிறுகதைகளும் கவிதைகளும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். அவரின் நாடகங்கள் பலவீனமானவை. கட்டுரைகள் அவ்வடிவத்திற்குள் இன்று உலகெங்கும் உறுதிப்பட்டு-விட்ட வாதத்தின் நீட்சி முழுமை பெறாமல் சிந்தனை-களின் தெறிப்புகளாக முடிந்து போகின்றன. கவிதைகள், பொருட்படுத்தத் தகுந்த சோதனை முயற்சிகள், ஆகக் கூடிய வெற்றியை அவர் பெற்றிருப்பது சிறுகதை-களில்தாம்.

புதுமைப்பித்தனுக்கு காலத்தின் மீதான பயணம் சாத்தியப்பட்டிருப்பது. இப்போது நிரூபணமாகிக்-கொண்டிருக்கிறது. அவர் எழுதி முடித்து இன்று அரை நூற்றாண்டு முடிந்துவிட்டது. வாழ்க்கைக் கோலங்களும், வாழ்க்கைப் பார்வைகளும் எவ்வளவோ மாறி-விட்டன. அவருக்குப்பின் வந்த பல படைப்பாளிகள் அவர் காட்டாத சோபைகளையும், விரிவுகளையும், ஆழங்களையும் தமிழுக்குத் தந்திருக்கிறார்கள். ஆனால் இன்றும் அவருடைய சிறுகதைகள் நம்முடன் நெருக்கமான உறவு கொள்கின்றன. நமக்கும் அவருக்குமான உறவில் சென்றுபோன காலத்தின் அலுப்பு ஊடுருவ முடியாமல் திணறுகிறது.

புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் பலவும் நிறைவின் அமைதி கூடாதவைதாம். ஆனால் நிறைவு கூடியவையும் கூடாதவையும், அன்றும் சரி, இன்றும் சரி படைப்பு வீரியம் கொண்டவையாகவே காட்சி அளித்து வருகின்றன. இந்த வீரியம் ஆழ்ந்த, நெருக்கமான உறவை வாசகர் மனதில் உருவாக்குகிறது. இதன் கவர்ச்சியும் அலாதியானது. கவர்ச்சியின் பளபளப்புக்கு நேர் எதிரான கவர்ச்சி இது. கவர்ச்சியின் பளபளப்பு கோலங்கள் சார்ந்தது எனில், வீரியம் சாராம்சம் சார்ந்தது. இன்றைய வாசகனும், அந்த வீரியத்தை அவருடைய மொழி சார்ந்தும் அவர் தேர்வு கொண்ட பொருள் சார்ந்தும், படைப்பை முன் வைத்த விதம் சார்ந்தும், ஊடுருவி நிற்கும் விமர்சனத்தின் கூர் சார்ந்தும் படித்து அனுபவிக்கலாம்.

நோபல் பரிசு பெற்ற இலக்கிய ஆசிரியர்களின் படைப்புகள் எல்லாமே ஆகத் தரமானவையாக இருக்கக்கூடும் என்பது நம் கற்பனை. வாசிப்பின் மூலம் நேர் பரிச்சயம் கொள்ளத் தவறும் போதும், தரத்தை சுய நிர்ணயம் செய்யும் ஆற்றலைப் பெறாத நிலையிலும் உருவாகிவரும் பிரமைகள், தாழ்வு மனப்பான்மையில் ஊறி நம் பார்வையைக் கெடுக்கிறது. அத்துடன் நோபல் பரிசுகள் தர நிர்ணயத்தில் வெற்றி பெற்றவையாக எப்போதும் அமைவதும் இல்லை. தோல்ஸ்தாய், காஃப்கா, ஜேம்ஸ் ஜாÊய்ஸ், இப்ஸன், ஆகஸ்ட் ஸ்ட்ரின்பெர்க், வலேரி, ரில்கே, மெர்சல் ப்ரூஸ்ட், கசாந்த் ஸாக்கீஸ் போன்றவர்களுக்குத் தரப்படாத நோபல் பரிசின் மீது உலக அரங்கில் கடுமையான விமர்சனங்கள் உள்ளன. இவ்வுன்னதப் படைப்பாளிகள் பெறாத பரிசை இவர்களுக்குக் கீழ்நிலையில் நிற்கும் படைப்பாளிகள் பலரும் பெற்றும் இருக்கிறார்கள்.

நோபல் பரிசு பெற்ற பலரும் காலத்தை எதிர்கொள்ள முடியாமல் சரிந்து கொண்டிருப்பது இப்போது கண்கூடு. இவர்களுடைய எண்ணிக்கையும் கணிசமானது. ஜவான் புனின், ஷோலக்கோவ் போன்ற ருஷ்ய ஆசிரியர்களும், ஜான் ஸ்டீன்பெக், சிங்ளேர் லூயி, பேள் எஸ் பக் போன்ற அமெரிக்க ஆசிரியர்களும் ஜான் கால்ஸ்வர்த்தி என்ற ஆங்கில ஆசிரியரும் காலத்தின் முன் பின்னகர்ந்து கொண்டிருப்பவர்களில் ஒரு சிலர், ரவீந்திரநாத் தாகூரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது நமக்கு மனச் சோர்வை தரக்கூடியதுதான். ஆனால், காலம் ஒரு படைப்பாளியை ஏந்தும் போதோ உதறும் போதோ அவன் பிறந்த தேசத்தைப் பற்றியோ அவன் எழுதிய மொழியைப்பற்றியோ அவ்வளவாகக் கவலைப்படுவது இல்லை.

ஆங்கிலம் அறிந்த தமிழ் வாசகர்கள் நான் குறிப்பிட்டிருக்கும் இவ்வாசிரியர்களின் படைப்புகளில் ஒரு சிலவற்றையேனும் படித்து இவர்களுடைய எழுத்தை புதுமைப்பித்தனின் எழுத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நோபல் பரிசு பெற்ற ஆசிரியர்களின் புத்தகங்களைத் தேடிக் கண்டு பிடிப்பதைக் காட்டிலும் ஆங்கிலத்தில் நோபல் பரிசு பெற்றவர்களின் புத்தகங்களைப் பெறுவது சுலபமாக இருப்பது நம் விசித்திரத் தலைவிதி. இவர்களின் எழுத்தின் ஒரு பகுதியைப் படித்துப் பார்த்தால் கூட காலத்தின் களிம்பு இவர்கள் மீது படிந்துவிட்டிருப்பது தெரியும். நமக்கும் இவர்களுக்கும் இடையிலான காலம் இவர்களுடனான நம் உறவிலும் பெரிய இடைவெளியை உருவாக்கியிருக்கிறது. இன்று இவர்களின் வீரியத்தை நம்மால் உணர முடிவதில்லை. புதுமைப்பித்தன், அவரிடம் நாம் எதிர்ப்பார்ப்பதைவிட குறைவாகத் தந்திருக்க, இவர்கள் ஒவ்வொருவரும் நாம் எதிர்பார்ப்பதைவிட அதிகம் தந்து நம்மை அலுப்புக்கு உள்ளாக்குகிறார்கள் என்ற உணர்வையே நாம் பெறுகிறோம். நம் சிரத்தையை இவர்களால் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும் முடிவதில்லை. இவர்களைப் படித்து ஒப்பிட்டுப்பார்த்தால் புதுமைப்பித்தனின் காலம் தாண்டும் ஆற்றலும், அவர் அளிக்கும் புத்துணர்ச்சியும் தற்பெருமை சார்ந்த மதிப்பீடு அல்ல என்பது தெரியவரும். தமிழ் வாசிப்பில் மட்டுமே நம்பிக்கை வைத்திருப்பவர்கள் தமிழில் நிறையவே படிக்கக் கிடைக்கிற ரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகளுடன் புதுமைப்பித்தனின் சிறுகதைகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம். தமிழில் படிக்கக் கிடைக்கும் நோபல் பரிசு பெற்ற ஆசிரியையான பேள் எஸ். பக்கின் `நன்னிலம்’ என்ற நாவலின் தரத்துடன் புதுமைப்-பித்தனின் எழுத்தின் தரத்தை ஒப்பிட்டுப் பார்த்து மதிப்பீடு செய்யலாம்.

Jul 19, 2009

மௌனி

11_mouniandvesa02

 

 

 

 

 

 

12_mounivesA

13_mouni1

14_mouni2

புதுமைப்பித்தன்

family-childfamily1

family-wife family-home

கதை மூலம்-கு.ப.ரா

கு. ப. ராஜகோபாலன்

உ.வே. சாமிநாதையருக்குப் பிறகு கி. வா. ஜகந்நாதன் கலைமகளின் ஆசிரியரானார். மிகப்பின்னாடிதான் என்றாலும், 1980களில் முதன்முறையாக கலைமகளின் அட்டையில் ஓவியர் மாருதியின் படம் வெளியான போது கலைமகள் வாசகர்கள் ஆச்சர்யப்பட்டு வாயடைத்துப் போனார்கள் என்பார்கள். அவர்களால் நம்பவே முடியவில்லை. கி.வா. ஜ காலத்திலேவா இது நடந்துவிட்டது! அந்த அளவுக்கு உ.வே.சா தொடங்கிவைத்த பாரம்பரியத்தை கி.வா.ஜகந்நாதன் காப்பாற்றிக்கொண்டு வந்திருக்கிறார். கி.வா.ஜ காலகட்டத்தில்தான் புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன், க.நா. சுப்பிரமண்யம், சி.சு. செல்லப்பா, ந. பிச்சமூர்த்தி, ந. சிதம்பரசுப்பிரமணியம் போன்றவர்களின் சிறுகதைகள் தொடர்ந்து கலைமகளில் வெளியாயின. த. நா. குமாரசுவாமி, த. நா. சேனாபதி ஆகியோர் வங்காளத்திலிருந்து மொழிபெயர்த்தவைகளும், வைக்கம் முகம்மது பக்ஷீரின் `எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது’ குறுநாவலும் வெளிவந்தது. இவையே கலை மகளின் பெருமையை புலப்படுத்த போதுமானது. 1942 ஆம் ஆண்டு தொடங்கி மேற்குறிப்பிட்டவர்கள் உட்பட பதினான்கு எழுத்தாளர்கள், கலைமகளில் தங்களுடைய சிறுகதைகள் எப்படி உருவாகின என்பது குறித்து எழுதினார்கள். அவற்றைத் தொகுத்து 1957 ஆம் ஆண்டு கலைமகள் காரியாலயம் `கதையின் கதை’ என்கிற புத்தகமாகக் கொண்டுவந்தது. புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் கு. ப. ராவின் கட்டுரை இது.

நதி மூலம். ரிஷி மூலம் என்பார்களே. அந்த மாதிரி, கதை மூலம் என்றும் ஒன்று உண்டு. அதைப்பற்றி அதிகம் கிளறாமல் இருப்பதே சிலாக்கியம். கிளறினால் கதை எழுதியவனுடைய அந்தரங்கமான அநுபவங்கள் எத்தனை, அம்பலத்துக்கு வரவேண்டி இருக்குமோ!

கேட்டதற்கு இல்லை என்று சொல்லாமல் நான் என்னுடைய கதை ஒன்று உதித்ததற்கு வெளிப்படையாக ஏற்பட்ட ஒரு காரணத்தை எழுதி அனுப்பினேன். ஆசிரியர் அதை மறு தபாலில் திருப்பி அனுப்பி, `க¬ லமகள் வாசகர்கள் உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை’ என்று எழுதினார்.

உண்மையாகவே எனக்குக் கவலை உண்டாகிவிட்டது._கலைமகள் வாசகர்கள் எதிர் பார்க்கும் உண்மைகளை நான் எப்படிச் சொல்லுவது? என்னுடைய அநுபவமும் அதன் பயனான கதையும் மேன்மை பெறப்பெற என்னுடைய மனத்தின் அந்தஸ்தும் பெருமையும் குன்றிவிடுகின்றன என்பது முதல் உண்மை.

சரி, சொல்லுவதென்று ஆரம்பித்தாயிற்று. தலைக்கு மேல் ஜலம் சாணானால் என்ன! முழமானால் என்ன?

மண்ணிலிருந்துதானே மலர் பிறக்கிறது? இதே நியதி எல்லா அழகுப் பொருள்களுக்கும் இருக்கிறது என்பதும் தெரிந்த விஷயம்.

சென்னையில் என்னுடன்கூட நான் இருந்த வீட்டில் ஒரு நண்பரும் குடியிருந்தார். அவர் ரஸிகசிரோமணி. வீடு கூட்டுவதற்கும் வேலை செய்வதற்கும் ஒரு பெண். அவளுக்குச் சுமார் பன்னிரண்டு வயசுதான் இருக்கும். ஆகவே வெகு சிறு பெண். பார்ப்பதற்கு மூக்கும் முழியுமாக நன்றாக இருப்பாள். அவ்வளவு அழகு வாய்ந்த பெண், அவ்வளவு வறுமையில் இருந்ததைக் கண்டபோது என் நண்பருக்குக் காளிதாஸன் சுலோகம் ஞாபகம் வந்தது: `ஸரஸிஜம் அநுவித்தம் சைவலேனா பிரம்யம். . . . . .’’

ஆகையால் சம்பளத்தைத் தவிர அவளுக்கு எங்களிடமிருந்து தினம் சராசரி நாலணாக் கிடைக்கும். என் நண்பர் என்னைப் போன்றவர் அல்ல; பேச்சில் பிரியம் கொண்டவர். ஆகவே அடிக்கடி அவள் பிறப்பு, பூர்வோத்தரம், குடும்ப சமாச்சாரங்கள் எல்லா வற்றையும் விசாரிப்பார். இப்படித் தன் புருஷர் அவளுடன் பேசியது என் நண்பர் மனைவிக்கு எதனாலோ அசூயையை உண்டாக்கிவிட்டது. அந்தப் பெண், வேலையே செய்வதில்லையென்று சாக்கு வைத்து, அவளை நிறுத்திவிட்டு, வேறு வேலைக்காரி ஒருத்தியை ஏற்பாடு செய்தாள்.

தன்னுடைய அசூயையை அவள் மறைக்கவில்லை. ``எப்பப் பார்த்தாலும் அந்தக் குட்டியோட என்ன பேச்சு? சம்பந்தம் பண்ணிக்கப் போறேளா? நன்னாருக்கு! நீங்கள் இப்படி இடங்கொடுத்துத்தான் அவள் வேலையே செய்வதில்லை. என்னால் ஆகிறதோ எல்லாம் செய்ய! அழகு பாக்கிறதுக்கா வேலைக்காரி!’’ என்ற மாதிரியில் பேசினாள்.

அவ்வளவு சிறிய பெண்ணிடம் தன் புருஷர் பேசியதைக் கண்டு, அந்த அம்மாளுக்கு ஏன் அசூயை ஏற்பட்டது? பெண் இயற்கை இதுதான் போலும்! புரூரவஸ் ஒரு சிறு வித்தியாதரப் பெண்ணைக் கொஞ்சம் உற்று நோக்கினான் என்று, ஊர்வசி கோபங்கொண்டு, அவனை விட்டுப் பிரிந்து ஓடியதாகக் காளிதாஸர்கூட எழுதியிருக்கிறார்.

இந்த அநுபவத்தை ஆதாரமாகக் கொண்டது என்னுடைய கதை `மின்னக்கலை’, அதில் மின்னக்கலை, யௌவனஸ்திரீ. அவளுக்கு ஆதரவாக இருப்பதற்காக அவளிடம் அதிக விலை கொடுத்துப் புல்லுக்கட்டு வாங்கிய பேர்வழி அவளிடம் வாத்ஸல்ய பாவத்துடன் நடந்து கொண்டார். அவளைத் தம் பெண்போலப் பாவித்தார். அவருக்குக் குழந்தை குட்டிகள் இல்லை. ஆனால் அவர் மனைவிக்கு அவர் மனோபாவம் அர்த்தமாகவில்லை. இளம் பெண் ஒருத்தியிடம் தன் புருஷர் அன்புடன் நடந்து கொண்டால் அது தப்பான எண்ணமாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவள் துணிபு.

இந்த அநுபவத்தை ஒட்டி, உண்மையாகவே ஒருத்தி புருஷன் மற்றொரு பெண்ணைச் சுயபுத்தியுடன் பார்த்தால், மனைவியின் மனநிலை எப்படி இருக்கும் என்பதைப் `பெண் மனம்’ என்ற கதையில் ஆராய்ச்சி செய்ய முயன்றிருக்கிறேன்.

நான் முதல் முதலாக எழுதிய கதை `நூர் உன்னிஸா.’ நான் திருச்சியில் மூன்றாவது பாரத்தில் படிக்கும்பொழுது என்னுடன்கூட மகமது அலி என்ற முஸ்லீம் பையன் படித்துக்கொண்டிருந்தான். அவனுக்குக் கணக்கு வராது. நானும் அப்படிக் கணக்கில் புலியல்ல. ஆனால், சனிக்கிழமை தோறும் அவன் என்னைத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய், கணக்குப் போட்டுக் கொடுக்கச் சொல்லுவான். அந்த மாதிரி ஒரு தடவை போன பொழுதுதான் நூர் உன்னிஸாவின் மூல விக்கிரகத்தைப் பார்த்தேன். அவ்வளவு அழகான சிறுமியை நான் இன்னும் பார்க்கவில்லை. அன்று பார்த்த அவள் முகமும் சாயலும் என் இளம் உள்ளத்தில் அப்படியே பதிந்துவிட்டன. இருபது வருஷங்களுக்குப் பிறகும் அவை என் மனத்தில் தங்கி, நூர் உன்னிஸாவின் வர்ணனையாக அமைந்தன. அந்தக் கதையில் பாக்கி எது? கற்பனை எது? உண்மை எது? என்று நான் சொல்ல வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?

என் கதைப் புத்தகத்தை விமரிசனம் செய்தவர்களில் யாரோ ஒருவர், நான் உடைந்த மனோரதங்கள், நிறைவேறாத ஆசைகள், தீய்ந்த காதல்கள் _ இவற்றைப் பற்றித் தான் எழுதுகிறேன் என்று எழுதிய ஞாபகம். இது குற்றச் சாட்டானால் நான் குற்றவாளிதான். நான் கவனித்த வரையிலும் என் அநுபவத்திலும் வாழ்க்கையிலும் அவை தாம் எங்கே திரும்பினாலும் கண்ணில் படுகின்றன.

`கண்டதை எழுதுவதுதானா கதை?’ என்று கேட்கலாம். கதை உருவமாகும்பொழுது, கண்டது மட்டுமின்றிக் காணாததும், தங்கத்துடன் செப்புச் சேருவதுபோல் சேருகின்றன. அந்த அநுபவம், காந்தத் துண்டுபோல, தான் இழுக்கக்கூடிய பல சிறு இரும்புத் தூள்களைப்போன்ற நிகழ்ச்சிகளையும் நிலைகளையும் ஆகர்ஷித்துக்கொள்ளுகிறது. தத்துவங்கள், ஆசிரியனுடைய அநுபவம் என்ற நிலையில் அடிபட்டு, பல்வேறு உருக்களில் கதைகளாக மாறுகின்றன.

சில கதைகளில் என் சொந்த அநுபவங்கள், கூடுதல், குறைவின்றி அப்படியே அமைந்திருக்கின்றன. `பண்ணைச் செங்கான்’, `புரியும் கதை’, `எதிரொலி’, `விடியுமா’, `தை’,_அடடா! என்ன சொல்லுகிறேன்! அந்தரங்கத்தையே திறந்து காட்ட ஆரம்பித்து விட்டேனே! முழுதும் சொன்னேனால் கலைமகள் வாசகர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்? பிறகு நான் கலைமகளில் தலைகாட்ட முடியாது. இப்பொழுது என்ன குறைவாகவா சொல்லியிருக்கிறேன்!

 

ஜி. நாகராஜனின் படைப்புலகம்-மனுஷ்யபுத்திரன்

மனுஷ்யபுத்திரன்

(1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

தமிழின் நவீன இலக்கிய வெளியில் மத்தியதர வாழ்வின் ஆசாபாசங்களும் பெருமூச்சுகளும் மதிப்பீடுகளும் நம்மை மிகவும் ஆயாசமடைய வைத்துள்ளன. இந்த நூற்றாண்டின் தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தமிழ் வாழ்க்கையின் பரப்பு சின்னஞ்சிறியது; சில உயர் இடைநிலை சாதிகளின் _ வர்க்கங்களின் அனுபவத்திலிருந்தும், கண்ணோட்டத்திலிருந்தும் உருவாக்கப்பட்டது. மத்தியதர வாழ்வின் அறவியல் அழகியல் பிரச்சனைகள் தமிழ் இலக்கியத்தின் பிரச்சனைகளாக இருந்து வந்துள்ளன. வரலாற்றின் ஏற்றத்தாழ்வுகள் வழியே கலை இலக்கியத்தை அவற்றின் நவீன வடிவங்களிலும் ஊடகங்களிலும் கையாளும் வாய்ப்பைப் பெற்றவர்கள் தம்முடைய வாழ்வின் நியதிகளையும் தர்மங்களையும் ஒட்டு மொத்த வாழ்விற்கான நியதிகளாக சித்தரித்தனர். இந்த நியதிகளுக்கு வெளியே இருந்த சமூக அடுக்குகளில் வாழ்வு எண்ணற்ற முரண்களோடு தனக்கான மொழியையும் குரலையும் தேடி காலத்தின் மௌனங்களுக்குள் விம்மிக் கொண்டிருந்தது.

இந்த நூற்றாண்டில் நமது அரசியல் பண்பாட்டு நீரோட்டத்தை ஒழுங்குபடுத்திய இரண்டு சக்திகள் காந்தீயமும் மார்க்ஸீயமும் ஆகும். மதங்கள், சாதிகள், வர்க்கங்கள், சமூக உறவுகள், மதீப்பீடுகள், ஒழுங்குகள் தர்க்கங்கள் என சகல பண்பாட்டுக் கூறுகளுக்கும் மறுவிளக்கங்கள் அளித்து ஒரு பொதுவான வாழ்க்கைக் கண்ணோட்டத்தை உருவாக்க முயன்றன. இந்த இரண்டு தத்துவங்களும் சமூகத்தை, வாழ்க்கையை, மனித உறவுகளை அவர்களது உடலை அவர்களது ஹிருதயத்தைப் பற்றித் திட்டவட்டமான முடிவுகளையும் இலட்சியங்களையும் கொண்டிருந்தன. அவை அதிகாரத்திற்கான வேட்கையோடு இணைந்திருந்ததால் புரிந்து கொள்வதைவிட மாற்றியமைப்பதில் தீவிரங்காட்டின. மனித இயல்புகள் அவற்றின் மேல் செலுத்தப்படும் வரையறைகள் பற்றி காந்தீயமும் மார்க்ஸீயமும் கொண்டிருந்த தவறான கற்பிதங்களால் அவை நம் கண்ணெதிரேயே சிதறிவிட்டன.

பெரும்பாலான தமிழ்ப்படைப்பாளிகள் காந்தீயத்தாலும் மார்க்ஸீயத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள். அவற்றின் நம்பிக்கைகளையும் வரையறைகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்றுக் கொண்டவர்கள். இதன் மூலம் உருவான இலக்கியவாதக் கண்ணோட்டத்துடன் வாழ்வின் முரண்களை எதிர்கொண்டனர். இந்த இலட்சியவாதக் கண்ணோட்டம் கூர்மையாக அம்முரண்களை வெளிப்படுத்துவதற்குப் பதில் மழுங்கடித்தது. அசௌகரியமான உண்மைகளை மூடிமறைத்தது. பொய்யான சமாதானங்களை வழங்கியது. இந்தப் பின்னணியைச் சேர்ந்த படைப்பாளிகள் தம்முடைய சாதீய வர்க்க இருப்பிற்கு வெளியே இருந்த விவசாயிகள், தொழிலாளர்கள், இழிந்த சாதிகள், வேசிகள், பொறுக்கிகள் பற்றி எழுதவே செய்தனர். ஆனால் நமது காலத்தில் மிகவும் அருவருக்கத்தக்க ஓன்றாகிவிட்ட மனிதநேயம் அல்லது சமூக அக்கறை என்ற மேலிருந்த குற்றவுணர்வுப் பார்வையிலிருந்து கடைப்பட்டோர் பற்றிய சித்திரங்கள் உருவாக்கப்பட்டதை இன்றைய நவீன ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த பொதுக்கருத்தியலுக்குள் அவர்களுக்கான அசலான இருப்பை இழந்திருந்த கடைப்பட்டோர் தமக்கான வாழ்வியலையும் அறவியலையும் வெளிப்படுத்தும்போது அவை அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன, ஜி. நாகராஜனின் படைப்புலகம் ஒரு மத்தியதர வாசகனுக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சி இத்தகையதுதான். அவனது எல்லா அடிப்படை தார்மீக நியதிகளையும் அது நிராகரித்து விடுகிறது.

ஜி. நாகராஜனின் உலகம் முழுக்க முழுக்க பாலுணர்ச்சியும் குற்றமும் சம்பந்தப்பட்டது. ஆனால் அது பாலுணர்வு மற்றும் குற்றம் சார்ந்த நடவடிக்கைகளை விவரிக்கும் ஒரு புனைவு அளிக்கக்கூடிய எந்தக் கிளுகிளுப்பையும் சுவாரசியத்தையும் தருவதில்லை. பாலுணர்ச்சியிலும் குற்றத்திலும் படிந்திருக்கும் கனவையும் சாகசத்தையும் நாகராஜன் இரக்கமில்லாமல் அழித்து விடுகிறார். சில சமயம் குரூரமான, சிலசமயம் வேடிக்கையான சில சமயம் அர்த்தமற்ற, சிலசமயம் நெகிழ்ச்சி மிகுந்த ரூபங்களைக் கொல்லும் பாலுணர்ச்சியும் குற்றமும் வாழ்வின் விசித்திரங்களை கண்டடைவதற்கான ஒரு பாதையே தவிர அவையே இலக்குகள் அல்ல பாலுணர்ச்சியும் வன்முறையும் முழுமையாக கட்டவிழும் நாகராஜனின் படைப்புக்களனில் மனிதன் அடையக்கூடிய அவமானங்கள் இம்சைகள், நம்பிக்கைக்கும் மீட்சிக்குமான தத்தளிப்புகள் மீட்சியற்றுப் போகையில் வாழ்வதற்கான சமாதானங்கள் என எண்ணற்ற தளங்கள் விரிகின்றன. நாகராஜனுக்கு மனிதனைப் பற்றியோ வாழ்க்கையைப் பற்றியோ கற்பிதங்கள் இல்லாததால் நிகழ்வுகளை அதன் ரத்தமும் தசையுமான வடிவில் மீட்டெடுக்கிறார். நடைமுறைத் தேவைகளும் வாழ்வதற்கான போராட்டமும் மனிதனின் இரகசிய ஆசைகளுமே வாழ்வின் திசைவழியை; தீர்மானிக்கின்றன; இலட்சியங்களும் மதிப்பீடுகளும் அல்ல என்பதை நாகராஜனின் குரூரமான யதார்தத் தளம் வெளிப்படுத்துகிறது.

ஜி. நாகராஜனையும் அவரது படைப்புகளையும் எப்படி வகைப்படுத்துவது? குறத்தி முடுக்கில் இவ்வாறு எழுதுகிறார்: `தங்களது கொள்கையாலும் நடத்தையாலும் சமூதாயத்திலிருந்து தங்களைத் தாங்களே பகீஷ்கரித்துக் கொண்டவர்களில் நானும் ஒருவன்’. இந்த சுயபகிஷ்காரத்தால் சமூகத்தின் ஒழுங்குகளை ஏற்றுக்கொண்டவர்களும் அந்த ஒழுங்குகள் குலைந்து விடாமல் அவற்றை இரகசியமாக மீறுகிறவர்களும் அடைகிற அடிப்படை பாதுகாப்பை இழந்தவர்கள் ஜி. நாகராஜனும் அவரது கதாபாத்திரங்களும். பொதுப் பண்பாட்டினால் குற்ற உலகினர் எனக் கருதப்படும் நாகராஜனின் பாத்திரங்கள் எளிமையும் பரிதவிப்பும் கனவுகளும் கழிவிரக்கமும் குற்ற உணர்ச்சியும் கொண்டவர்கள். `நாளை மற்றொரு நாளே’ யில் மிரட்டிப் பணம் பறிக்கும் கந்தன்தான் தன் குழந்தை இறந்து போனதற்கு அதன் பலூனை சிகரெட்டால் சுட்டு உடைத்ததுதான் காரணம் என நினைத்து மருகுகிறான்; மீனா புணர்ச்சி இன்பத்தின் முடிவில் காணாமல் போன மகளை நினைத்து அழுகிறாள். கந்தன் மீனாவை தன் வாழ்வின் நிச்சயமின்மை காரணமாக ஒரு நல்ல இடத்தில் சேர்ப்பித்துவிட வேண்டுமென்று நினைக்கிறான். ஒரு தந்தை அல்லது தாய், ஒரு சகோதரன் அல்லது பாதுகாவலன் வகிக்கக்கூடிய இடத்தை ஒரு விபச்சாரியின் காதலன் எவ்வாறு மேற்கொள்கிறான், அவர்களுக்கிடையிலான உறவின் இழைகளை எவை தீர்மானிக்கின்றன என்பதை பொதுவான மதிப்பீடுகளின் வழியே அறிய முடியாது. மனிதர்கள் தமக்கிடையே சுயமாக ஏற்படுத்திக் கொள்கிற உறவுகளின் அழங்காண முடியாத பந்தங்களிலிருந்து இத்தகைய தார்மீகப் பொறுப்புகள் எழுகின்றன. குறத்தி முடுக்கில் தங்கம் அவளை நேசிக்கிறவனுக்குப் பதில் அவளைக் கூட்டிக் கொடுத்த கணவனைத் தேடிப் போகிறாள். திருமணம் என்ற உறவிற்கான எல்லா நியமங்களும் அழிந்துவிட்ட ஒரு சூழலுக்குள் வந்த பிறகும் அவளது திருமண உறவிற்கும் பாலியல் தொழில் சார்ந்த பிற உறவுகளுக்கும் நடுவே ஒரு தீர்க்கமான இடைவெளி இருக்கிறது. (இந்த இடைவெளி தங்கத்திற்கும் அவளது உடலுக்குமான இடைவெளியா அல்லது பொதுப் பண்பாட்டிற்கும் அதிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்குமான இடைவெளியா அல்லது அறுபடாத உறவா எனும் கேள்விகள் எழுகின்றன.) `துக்க விசாரணை’ எனும் கதையில் ஒருவன் ரோகிணி என்ற விபச்சாரியின் மரணத்திற்குத் துக்கம் கேட்கப் போகிறான். பால்வினை நோயைக் கொடுத்ததற்காக ஒரு வாடிக்கையாளனிடம் செருப்படி வாங்கியதன் அவமானத்தால் ரோகிணி ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள் என்பதை அறிகிறான். ரோகிணியின் சாயல் கொண்ட துக்கம் விசாரித்தவளிடமே உறவு கொள்கிறான். இதுபோன்ற எளிதில் புரிந்து கொள்ள முடியாத விளக்கமளிக்க இயலாத ஏராளமான சம்பவங்கள் ஜி.நாகராஜனின் படைப்புகள் முழுவதும் நிறைந்திருக்கின்றன. ஜி. நாகராஜனின் மனிதர்கள் பாதுகாப்பின்மைக்குள் ஒரு பாதுகாப்பையும் உறவின்மைக்குள் ஒரு உறவையும் அவமானத்திற்குள் ஒரு தன்மானத்தையும் நெறியின்மைக்குள் ஒரு நெறியையும் உருவாக்கிக் கொள்ள எப்போதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜி. நாகராஜனின் படைப்புகள் மையமான பாத்திரங்களைக் கொண்டவையல்ல. ஒரு சூழலின் குறுக்கும் நெடுக்கமான எண்ணற்ற கோடுகளால் அவரது பாத்திரங்கள் அமைந்துள்ளன. அவை விசேஷமான இயல்புகள் மேல் கட்டப்படுவதில்லை. கந்தன், மீனா, தங்கம் போன்ற பாத்திரங்கள் கூட அவை தம் சூழலோடு கொள்ளும் உறவின் கூர்மை காரணமாக அழுத்தம் பெறுகின்றனவேயன்றி அவற்றின் தனித்துவங்களால் அல்ல. ‘நாளை மற்றொரு நாளே’, ‘குறத்தி முடுக்கு’ அவரது சிறுகதைகள் எல்லாவற்றிலும் அநேக பாத்திரங்கள் ஒரு மின்னலைப் போல கடந்து சென்று கொண்டேயிருக்கின்றன. அதே சமயம் அவை எதுவும் மங்கலானவை அல்ல. நாகராஜன் எதையும் விவரிப்பதோ அழுத்தம் கொடுப்பதோ இல்லை. அவரது பார்வையில் எதுவும் அவ்வளவு முக்கியமானதும் அல்ல. வாழ்வும் எழுத்தும் என்ற கதையில் கேட் அடைக்கப்பட்டுள்ள ரயில்வே கிராஸிங்கில் காத்துக் கிடக்கும் நாகராஜனின் சித்திரம் இது.

நாகராஜனைப் பொறுத்தவரை அடைக்கப்பட்டுள்ள கேட்டுகள் முன் திறப்பிற்காக பொறுமையிழந்து காத்திருப்பதுதான் வாழ்க்கை. திறப்பிற்கான அந்த முட்டி மோதல்களுக்கு மேல் அதற்கு எந்த அர்த்தமோ அழகோ இல்லை.

வாழ்வதற்கான போராட்டத்தில் சிதிலமடைந்துபோன அரசியல், அறிவியல், ஒழுக்கவியல் கற்பிதங்களை எதிர்கொண்ட நாகராஜனின் மொழி மனவறட்சியின் கூர்மையான அங்கத்துடன் உருவெடுக்கிறது. அரசியல் இயக்கங்கள் மனித நடத்தைகள் ஆசைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் இடையிலான நாடகங்கள் மேல் நாகராஜனின் எள்ளல் தீவிரமாக வெளிப்படுகிறது. புதுமைப் பித்தனுக்குப் பிறகு இவ்வளவு விமர்சன பூர்வமான மூர்க்கம் கொண்ட எள்ளலை நாகராஜனிடம் காணமுடிகிறது.

ஜி. நாகராஜனின் கதைகளில் காணப்படும் யதார்த்தவாத சித்திரிப்பு ஒரு தோற்றம் மட்டுமே. ஒரு அப்பாவி வாசகனை எளிதில் ஏமாற்றிவிடக்கூடிய தோற்றம் இது. பௌதீக உலகிற்கும் அக உலகிற்கும் இடையே அவரது மொழி மாறி மாறி இயங்கிக் கொண்டிருக்கிறது. இறந்தகாலமும் நிகழ்காலமும் நிஜமும் கனவும் பல இடங்களில் ஒன்றொடொன்று குழம்பி விழுகின்றன. வரிசைக்கிரமமாக அடுக்கப்பட்ட சம்பவங்களால் ஆனதல்ல நாகராஜனின் படைப்பு மொழி. உதாரணமாக டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் எனும் சிறுகதை அதன் உத்தியாலும் மொழியாலும் தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் மிக அபூர்வமான ஒரு படைப்பாக இருக்கிறது. ஜி. நாகராஜனின் படைப்புகளில் மிகச் சிறப்பான இயல்பு, அவர் உரையாடல்களை அமைக்கும் விதம். இரண்டு மனிதர்கள் கதையை நகர்த்துவதற்காக ஒரு செய்தியை பரிமாறிக்கொள்வது என்ற நோக்கில் அந்த உரையாடல்கள் அமைந்திருப்பதில்லை. அந்தக் கதைகளுக்கு வெளியேயும் ஒரு வாழ்க்கை முறையின் குரலாக அவை அமைந்திருக்கின்றன. இந்த உரையாடல்களில் மனிதர்களுக்கிடையேயான பேரங்களும் ஏமாற்றுகளும் பாசாங்குகளும் அவலத்தின் முடிவற்ற வெறுமையும் மிகச் சூட்சுமான குறியீடுகளுடன் அமைந்துள்ளன. அபாயமும், நிச்சயமின்மையும் சூழ்ச்சியும் நிறைந்த ஒரு விளையாட்டுக்களனில் சாதுர்யத்துடன் காய்களை நகர்த்துகிற விதமாக இந்த உரையாடல்கள் நிகழ்கின்றன. இந்தப் பேச்சுகளுக்கு விரிந்து கிடக்கும் இடைவெளிகளும் மௌனங்களும் நாகராஜன் தேர்ந்தெடுக்கிற இயல்பான துல்லியமான சொற்களின் மூலம் நம் மனங்களை அதிர்வடையச் செய்கின்றன.

ஜி. நாகராஜனின் படைப்புகள் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் அவரை ஆழமாக அறியவும் மதிப்பீடு செய்யவும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ள நாகராஜனின் தீவிர வாசகன் என்ற வகையில் இரண்டு கேள்விகள் என்னை அலைக்கழிக்கின்றன.

1. ஜி. நாகராஜனின் பிம்பத்திற்கும் அவரது வாசகனுக்குமான உறவு.

2. படைப்புச் சுதந்தரம் பற்றிய பிரச்சனைகள்.

ஜி. நாகராஜன் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்க்கைமுறை தொடர்ந்து விவாதத்திற்குள்ளாயிருக்கிறது. அதை ஒழுங்கீனத்தின் அராஜகத்தின் சீரழிவின் வெளிப்பாடாகப் பார்த்தவர்கள் இருந்திருக்கிறார்கள். தனி மனிதன் மேல் சமூகமும் பண்பாடும் சுமத்துகிற ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு கலகமாக விடுதலைக்கான யத்தனிப்பாகப் பார்த்தவர்கள் இருந்திருக்கிறார்கள். இந்த இரண்டு பார்வைகளுமே நமது ஒழுக்கவியல் எனும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தாம். ஆனால், நாகராஜன் மனிதர்கள் மேல் இத்தகைய விமர்சனத்தையோ புனைவையோ சுமத்துவதில்லை. அவரைப் பொறுத்தவரை அவர் வாழ்ந்த அவர் எழுதிய சூழல் ஒரு வாழ்க்கை முறை. மற்ற வாழ்க்கை முறைகளைப் போலவே அங்கும் சில சந்தோஷங்களும் துயரங்களும் உள்ளன. அதற்கென சில நியாயங்களும் அநியாயங்களும் இருக்கின்றன. அதனளவில் அது நல்லதோ கெட்டதோ அல்ல. எதற்கும் அது மாற்றோ, முன்னுதாரணமோ இல்லை. அங்கு விடுதலையும் ஒடுக்குமுறையும் வேறு அர்த்தங்களில் நிலவிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒரு இளம் படைப்பாளியைப் பற்றி எனக்குக் கடிதம் எழுதிய நண்பர் ஒருவர் அவர் ஜி. நாகராஜனைப் போல வாழ்ந்தார் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த இளைஞரின் வாழ்விற்குப் மரணத்திற்கும் அளிக்கப்பட்டிருந்த இந்த நற்சான்றிதழில் ஒட்டியிருந்த பெருமிதம் சங்கடம் தருவதாக இருந்தது. பாதுகாப்பிற்கும் உத்திரவாதத்திற்குமான சமூகத்தின் எல்லா வழிமுறைகளையும் தந்திரங்களையும் பின் பற்றுகிறவர்கள். அந்தப் பாதுகாப்புகள் இல்லாமல் போனவர்களை ஒன்று இலட்சிய புருஷர்களாக்குகிறார்கள் அல்லது தமது அழுகிப் போன நெறிமுறைகளின் பேரால் சீரழிந்தவர்களாக சித்தரிக்கின்றார்கள். இவையெல்லாம் மத்தியதர வர்க்கத்தினது இயலாமையின் வெளிப்பாடுகள். ஜி. நாகராஜனின் வாழ்வுப் படைப்பும் இந்த இயலாமைக்கு அப்பால் இருக்கின்றன. நாகராஜனின் படைப்புகளை அவரைப் பற்றிய பிம்பங்களிலிருந்து மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது.

இரண்டாவதாக ஜி. நாகராஜனின் படைப்புகளை அணுகக்கூடிய எந்த ஒரு வாசகனுக்கும் முதலில் தோன்றக்கூடிய மனப்பதிவு அவர் ஒரு துணிச்சலானக் கலைஞன் என்பதே. இந்த துணிச்சலுக்கு நாகராஜன் கொடுக்க வேண்டியிருந்த விலை சமூகத்திலிருந்து கொள்கையாலும் நடத்தையாலும் சுயபகீஷ்காரம் செய்து கொண்டதுதான். இருந்தும் குறத்திமுடுக்கின் முன்னுரையாக எழுதிய குறிப்பில் இவ்வாறு சொல்கிறார்.

தலைப்பு : என் வருத்தம். படைப்பாளிக்கு ஏன் சொல்லமுடியாத குறை எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது? சொல்வதையே தொழிலாகக் கொண்டவனுக்கு சொல்ல முடியாததன் துக்கம் இயற்கையானதுதான். அவனைப் பொறுத்தவரை படைப்புச் சுதந்தரம் என்ற கோஷமே அர்த்தமற்றது படைப்பியக்கத்தின் உள்ளார்ந்த செயல்பாட்டை உணரும் கலைஞன் படைப்புச் சுதந்தரம் என்ற கோஷத்தை முழங்க கூசிப் போவான். ஏனெனில் அவனது வெளிப்பாடு அவனது படைப்புத்திறனால் ; அவனது படைப்புத்திறன் அவனது மொழியால் ; அவனது மொழி அவனது மன இயக்கத்தால் ; அவனது மன இயக்கம் அவனது அனுபவங்களால் ; அவனது அனுபவம் அவனது சூழலால்; அவனது சூழல் அவனது சமுத்திரத்தால் கட்டுண்டு கிடக்கிறது.

படைப்பியக்கத்தில் இந்தக் கட்டுப்பாடுகள் ஒரு நேர் வரிசையில் நிகழாமல் இருக்கலாம். நான் சொல்ல விழும்புவது என்னவென்றால் படைப்பியக்கம் சுதந்தரம் பற்றிய பிரக்ஞையை அல்ல சுதந்தரமின்மை பற்றிய பிரக்ஞையே கொண்டு வருகிறது என்பதுதான். படைப்பாளியின் உள்ளார்ந்த வெளி எப்போதும் அவனுக்கு நெருக்கடி ஏற்படுத்துகிறது என்றால் அவனது புறவெளி வேறு வகையான நிர்ப்பந்தங்களை உண்டாக்குகிறது. கலையையோ இலக்கியத்தையோ அதற்குரிய தர்க்க நியாயங்களுடன் உணர்ந்து கொள்ளப் பக்குவப் பெறாத இந்தப் புறவெளி படைப்பாளியின் குரல் வளையில் நேரடியாக கத்தியை வைக்கிறது. உதாரணமாக வேசிகளைப் பற்றி கதை எழுதுகிற ஒருவனிடம், வேசிகளிடம் போய் விட்டு வந்த ஒருவனிடம் என்ன மொழியில் உரையாட முடியுமோ அதே மொழியில்தான் நமது சூழல் பேசுகிறது. அத்தகைய கதை ஓன்றை எழுதிய என் நண்பன் ஒருவனிடம் தமிழின் மிக முக்கியமான படைப்பாளி ஒருவர் `பி.மி.க்ஷி. பரிசோதனை செய்து கொண்டீர்களா’ என்று கேட்டார். ஒருவன் தன்னுடைய மனஇயக்கம் மற்றும் அனுபவங்களுக்கும் அவனது படைப்புகளுக்குமாக இடைவெளியை எந்த அளவிற்கு குறைக்கிறானோ அல்லது வரையறுக்கப்பட்ட அனுபவ எல்லைகளை எந்த அளவு மீறிச்செல்கிறானோ அந்த அளவு அவனது இருத்தல் அபாயங்களுக்குள்ளாகிறது. தமிழ் இலக்கியவாதிகள் பலர் இந்த அபாயத்தை எதிர்கொள்ள முடியாமல் தம் ஆமையோடுகளுக்குள் வசித்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் இந்தப் புறநெருக்கடியினை எதிர்கொள்ள திறன் மிகுந்த கலைஞன் தன் அனுபவங்களை வெவ்வேறு தளமாற்றங்களுக்குக் கொண்டு செல்கிறான். புதிய படைப்பு மொழியையும் வடிவத்தையும் உருவாக்குகிறான்.

வாழ்வின் அறியப்படாத பிரதேசங்களை நோக்கி பயணம் செய்ய விரும்பும் ஒரு இளம் படைப்பாளிக்கு ஜி. நாகராஜனின் படைப்புகள் அளிக்கும் திறப்பும் உத்வேகவும் அளப்பரியவை. வாழ்வை நிழலும் புகையுமில்லாமல் எதிர்கொள்வதற்கு ஜி. நாகராஜனின் எழுத்துக்கள் வெளிச்சம் தருகின்றன. வெளிப்பாட்டிற்கான அகவெளியையும் புறவெளியையும் எப்படி விஸ்தரிப்பது என்ற பிரச்சனையை எதிர்கொள்ளும் விதத்தில் எனக்குப் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.

கிருஷ்ணன் நம்பியின் கதைகள்-நகுலன்

நகுலன்                                                       

நன்றி: கிருஷ்ணன் நம்பி படைப்புலகம் தமிழாலயம் வெளியீடு.

நமக்குப் பழக்கமான விஷயங்களைப் பழக்கமான முறையில் காரியத்திறமையால் செய்வதால் சிறப்புப்பெறும் சிறப்பு கிருஷ்ணன் நம்பி கதைகளில் இல்லை. எந்த விஷயங்களையும் கலா பூர்வமாக உருவாக்குவதில் நாம் சற்றும் எதிர்பார்க்காத ஒரு இலக்கியத் தன்மையைப் பெற்றிருப்பது அவருடைய கலையின் சிறப்பு. இதனால்தான் அவருடைய கதைகளை முதல்முறை படிப்பதிலிருந்து அவைகளின் சிறப்பை நம்மால் உணரமுடிவதில்லை. ஒரு முறைக்கு இரு முறையாக நின்று நிதானமாகப் படிக்கையில் நமக்கு அவை ஒரு தனி இலக்கிய சுகத்தைத் தருகின்றன.

இவ்வாறு படிப்பதற்கு ஒரு பயிற்சியும் பக்குவமும் வேண்டும். நாம் சம்பிரதாயமாக ஏற்றுக் கொண்டு பழகிய சிறுகதை உருவை மறந்து அவர் சிருஷ்டி செய்திருக்கும் உருவை அறிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைப் பருவத்தில் எந்த அனுபவமும் நம்மை நேரிடையாகத் தாக்குகையில் அந்தத் தாக்குதலுக்குள்ள ஒரு சக்தியும் வசீகரமும் பிற்காலத்தில் நமக்கு ஷணித்து விடுகிறது. இதற்கு ஒரு காரணம் வயது ஆக ஆக நாம் த்வைத அடிப்படையில் இயங்கும் அறிவினால் வகை செய்யப்பட்ட அனுபவத்தின் நளினமான வடிவத்தைத்தான் காண்கிறோம்.

அனுபவத்திற்கும் அதை உணர்த்தும் மொழிக்கும் உள்ள வேறுபாட்டை அறிய முடியாத அளவில் மொழியையே அனுபவமாகக் குழப்பமடையவும் செய்கிறோம். அனுபவத்தைச் சம்பிரதாய உருவத்தில் காண்கிறோம். இதனால் தான் க.நா.சு. சொல்கிற மாதிரி ஒரு கவிஞனின் பார்வை சம்பிரதாய உருவத்திலிருந்து வேறுபட்டு இருப்பதால் நமக்கு அது கவர்ச்சியை அளிக்கிறது.

மேலும் எந்த அனுபவத்திலும் அவன் ஒரு நோக்கைப் பிரதானமாக வைத்துப் பார்க்கும்பொழுது கூட அதில் அமைந்திருக்கும் மாறுபட்ட பார்வைகளை ஒரு விகிதாம்சமாகக் காண்கிறான். அதனால்தான் அனுபவத்தை முழுமையாக வாங்கிக் கொள்ளும் குழந்தை நோக்கும் கலைஞன் நோக்கும் ஒரு மையத்தில் சந்திக்கின்றன என்று சொல்ல வேண்டும். இந்தத் தகுதிதான் ஒரு கலைஞன் பார்வையின் அடிப்படை என்று கூட எனக்குச் சொல்லத் தோன்றுகிறது.

மேலும், குழந்தையின் பார்வையில் அனுபவமும் மொழியும் வேறு பிரிந்து கிடக்கின்றன என்று சொல்ல வேண்டும்.

`கிருஷ்ணன் நம்பி கதைகள் சிலவற்றில் இந்த அடிப்படையை விளக்க விரும்புகிறேன். நீலக்கட’லின் ஆரம்பம் பாலியக் கட்டத்தைத் தாண்டியவன் சொல்வது, முடிவும் வயசானவன் பார்வைதான். நடுவில்தான் குழந்தை அனுபவ உலகை விவரிக்கும் குழந்தைப்பார்வை. பிரச்சினை இதுதான், சாவை நாம் எப்படி அணுகுகிறோம் _ குழந்தையாக இருக்கும் பொழுதும் பின்னரும். குழந்தைப் பருவத்தில் சாவு என்ற வார்த்தை தெரிந்தாலும் அதன் பயங்கரம் நம் கண்ணில் தென்படுவதில்லை. பின்னர் இதன் அடிப்படையே மாறுகிறது. ஒரு குழந்தையின் மரணம் `பால்ய’ அனுபவத்தில் இவ்வாறு விவரிக்கப்படுகிறது. `என் தம்பி ராமகிருஷ்ணனிடம் அன்றொரு நாள் ஸாமி அன்பு வைத்தார்.’ மேலும் ``இப்படி எல்லாம் பேசுகிற பாட்டிதான் `நீ எப்போது சாவாய்?’ என்று ஒருநாள் கேட்டதற்கு என்னிடம் கோபித்துக்கொண்டாள்’’ என்ற பகுதியையும் படிக்கின்றோம். சாவு தினத்தில் குப்பு மாமியின் பிட்டு வழக்கம்போல் சுவையாக இருந்ததைக் குழந்தைமனம் விகல்பமின்றி குறிக்கிறது. வேறு ஒரு இடத்தில் `நான் பெரியவனானபின் நன்றாக இங்கிலீஷ் படித்து (அப்பாவைப்போல) சிரிக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்’ இந்தக் குழந்தை இயல்புதான் மனிதனை மிருக இனத்திலிருந்து வேறுபடுத்துகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். கடைசியாகச் சாவதைக் கண்டு சிரித்தவனே, சாவைக்கண்டு பயப்படுவதாகக் கதை முடிகிறது.

குழந்தைப் பிராயத்திலிருந்து வயோதிகத்தில் சென்று அமையும் மனித உள்ளத்தின் ஒரு அனுபவச் சரித்திரம் இங்கு குறிப்பிடப்படுகிறது. கதையின் `நீலக்கடல்’ என்ற தலைப்பு ஒரு பாவனை நிறைந்த இலக்கியச் சிறப்பை உடையது. `எனக்கு ஒரு வேலை வேண்டும்’ என்பது ஒரு `கிறுக்கன்’ மனதைச் சித்திரிக்கிறது. முப்பது வயதானாலும் இவன் ஒரு மூன்று வயதுக் குழந்தையைப் போல் அனுபவத்தின் ஸ்தூல வடிவத்தைத் தான் ஏற்றுக் கொள்கிறான். இங்குகூட நம்பி இவனுக்கு எங்க ராஜப்பா எப்படி ஒரு மாதிரியாக அமைகிறான் என்பதிலிருந்து இந்தப் பாத்திர சிருஷ்டிக்கு ஒரு ஆழத்தைக் கொடுத்து விடுகிறார். இந்தக் கதையிலும் ஆரம்பமும் முடிவும் கலாரீதியாக அமைந்திருக்கின்றன.

விளையாட்டுத் தோழர்களில் ஒரு சின்னப் பாப்பாவுக்குக்கூட நாம் கூறுவதுமாதிரி அதற்குத் தேவாம்சம் மாத்திரம் இல்லாமல் அசுராம்சமும் இருக்கிறது என்பதைக் காட்டுகிறார். நம்பி ஒரு கதையிலும் பிரத்யஷ உலகை விட்டு ஒரு அங்குலம் கூட நகர மாட்டார் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.

`சுதந்திர தினம்’ என்பது ஒரு பையனின் சுதந்திர தினம் என்பதின் அனுபவத்தை விவரிக்கிறது. கொடி பிடிப்பது ; டீ பார்ட்டி, கலெக்டர் வருகை, ஒரு உருப்புரியாத பவித்திர உணர்ச்சி இவைதான் பையன் சுதந்திரத்திற்கு கொடுக்கக்கூடிய அர்த்தம். ஒரு கூட்டத்தில் தானும் கலெக்டரைப்போல கறுப்பா இருந்தாலும் தான் ஏன் ஒதுக்கப்பட வேண்டும் என்று அவன் உள்ளம் நினைக்கிறது. ஆனால், அந்தக் கூட்டம் அடுத்த கட்டத்தில் மாய்ந்து விடுகிறது.

`கணக்கு வாத்தியார்’ ஒரு சிறந்த கதை. அதுவும் நீலக்கடல்போல் வயதான பிறகு குழந்தை அனுபவத்தைப் பார்க்கும் முறையில் எழுதப்பட்டிருக்கிறது. கதை முடிவும் வயதானவனின் முடிவு. `கணக்கு வராத பிள்ளை மக்கு’ என்ற குரூரமான அபிப்பிராயத்தை நாம் எல்லோருமே அனுபவித்திருக்கிறோம் ; இங்கு `கணக்கு வாத்தியார்’ ஒரு பாவனா சிருஷ்டி. கதையின் முடிவு, கடவுளே கணக்கு வாத்தியாராகக் காட்சி அளிப்பது கதைக்கு ஒரு ஆழத்தைக் கொடுக்கிறது.

`தங்க ஒரு . . . ’ கதையும் சிறந்தது. தங்க ஒரு இடம் கிடைக்கவில்லை என்பதைத் தங்க ஒரு . . . என்று குறிப்பிடுவதில் ஒரு இலக்கியத்தன்மை இருக்கிறது. இது கலிவரின் யாத்திரையைப் பின்பற்றியது. கேலிச் சுவையைக் கலாபூர்வமாக ஆள்வதில் புதுமைப் பித்தனின் `கடவுளும் கந்தசாமி பிள்ளையையும்’ விடச் சிறப்பாக வந்திருக்கிறது என்பது என் அபிப்பிராயம். சமூக வாழ்வின் கொடுமைக்கு வளைந்து கொடுத்து கருவில் சிசுவாக மனிதன் குறுகும் அனுபவத்தைக் காரமாகக் காட்டுகிறது. செல்லா, நம்மை விடவும் அந்தக் குறுகல் பேர்வழி அதிருஷ்டசாலி இல்லை என்று உன்னால் நினைக்க முடிகிறதா? செருப்புக்கு ஏற்றபடியெல்லாம் அவனைச் சின்னது படுத்திக் கொண்டே வந்திருக்கிறான் இறைவன். இதை நமது தேவைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற காந்தியத் தத்துவத்தின் விபரீத உருவமாகவே ஆசிரியர் சித்தரித்திருக்கிறாரோ என்று கூட எனக்குத் தோன்றுகிறது. இந்தக் கதைகள் எல்லாவற்றிலும் நம்பி குழந்தை மனதை நுணுகி ஆராய்வதில் மனித மனதின் விகிதாம்சமான ஆசா பாசங்களைக் காட்டுகிறார். அவர் பார்வை மனிதனை மையமாகக் கொண்டது. பிரத்யஷ உலகிலிருந்து முன்கூறியபடி ஒரு அங்குலம் கூட நகராதது.

இங்கு கலைஞன் அனுபவத்தைப் பார்க்கும் பார்வைதான் முக்கியம். குறுகிய நீதி _ அநீதி வரம்புகளைத் தாண்டி அனுபவத்தைக் குழந்தைக் காண்பது போல், அதன் முழு வடிவத்தில் கண்டு _ வாழ்க்கையின் சம்பிரதாய மதிப்புகளைப் புறக்கணித்துவிட்டு கலைஞன் வாழ்க்கையைத் தன் போக்கில் பரிசீலனை செய்வதைப் பார்க்கிறோம். ஒவ்வொரு கதையையும் ஒரு கவிதை மாதிரி ரசிக்கலாம்.

சில கதைகளையே குறிப்பிடுகிறேன். `காணாமல் போன அந்தோனி’, `சிங்கப்பூர் பணம்’, `நாணயம்’, `சத்திரவாசலில்’, `சட்டை’, `கருமிப்பாட்டி’ எல்லாமே ஒரு வகையில் ஓ.ஹென்றியுடன் இணைத்துப் பேசப்படும் எதிர்பாராத முடிவைத்தாங்கியவை. ஆனால் ஒவ்வொன்றும் எடுத்துக்கொண்ட விஷய வேறுபாட்டாலும், ஆசிரியர் அனுபவத்தைப் பரிசீலனை செய்யும் போக்கிலும் சிறப்புப் பெறுகிறது. `நாணயம்’ தர்மத்தைப் பற்றிய பரிசீலனை. `சட்டை’ சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளைக் காட்டுவது, `சிங்கப்பூர் பணம்’ குழந்தை மனதை ஆராய்வதின் மூலம் வாழ்க்கையைப் பரிசீலனை செய்வது. சில கதைகளில் கதையம்சம் சொட்டையாக இருப்பதாகத் தோன்றினாலும் ஆசிரியரின் வாழ்க்கை பரிசீலனைக்காகவே கவிதையைப் போலப் படித்து ரசிக்கலாம். இங்குதான் நம்பியின் விளையாட்டுத் தன்மை கலாபூர்வமாக இருக்கிறது. இதை ஒட்டிக் கதை அம்சம், அதை ஒட்டிப் பாத்திர சிருஷ்டி, இவைகளை வைத்துக்கொண்டு கதைகளை எடைபோடுவது சரியான முறையன்று. `சத்திரத்து வாசலில்’ மனோதத்துவம் மிகவும் இலக்கியப் பூர்வமாகக் கையாளப்படுகிறது.

இந்தத் தொகுதியில் இரண்டைக் குறிப்பிட விரும்புகிறேன். இரண்டிலும் கதை அம்சம் குறைவு, இலக்கியச் சிறப்பு மிகுதி. ஒன்று எக்ஸெண்ட்ரிக். ஒரு ஏழையின் அனுபவத்தை விவரிக்கிறது.

இக் கதையில் வரும் கார், நாய் வர்ணனைகள் இலக்கியப் பூர்வமானவை. சில பகுதிகள் அசட்டு உணர்ச்சி சொட்டச் சொட்ட எழுதும் கதாரீதிகளைப் பரிகசிப்பதாக அமைத்திருக்கிறது. மேலும் விவிதாம்ச குணங்களைச் சித்திரிக்கும் பாத்ர சிருஷ்டி ஒரு சிறந்த வெற்றி.

`காலை முதல்’ கதையின் முடிவு சற்றுப் பலவீனமானது. இருந்தாலும் கம்பளிப் போர்வையினுள் உடம்பை நுழைத்துக் கொண்டு கூட்டுப் புழுவைப்போல் இயங்கும் ஒரு மனிதப் புழுவின் வாழ்க்கையைத் திறம்பட விவரிக்கிறது. படித்து ரஸிக்க வேண்டிய கதை.

நம்பி ஒரு அக உலகக் கலைஞர். அவர் பார்வை விளையாட்டுத் தன்மையும் விஷயமும் நிறைந்தது. அவர் உலகம் யதார்த்த நிலை பிறழாதது. ஆரம்பத்தில் கூறியபடி ஒரு `புற உலகக்’ கலைஞனாகத் தூய நிலையில் சிறந்த படைப்புக்களைப் படைத்து வெற்றியும் பெயரும் பெறுவதைவிட, ஒரு எழுத்தாளன் என்ற வகையில் நம்பியைப்போல், தோல்வி (இது தோல்வி என்றால்) அடைவதையே நான் மதிக்கிறேன்.

கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா-ஜி. நாகராஜன்

ஜி. நாகராஜன்

ஜூலை 1972  நன்றி : ஜி. நாகராஜன் படைப்புகள் காலச்சுவடு வெளியீடு.

``எனக்கு முதலில் பயமாய் இருந்தது; ஹாஸ்டலில் யாருமில்லை. ராணியும் ஜேனும் `ஷாப்பிங்’ சென்றிருந்தார்கள். எங்கள் மூவரைத் தவிர மற்றவர்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். நானும் கிளம்புவதாகத் தான் இருந்தேன். ஆனால் ராணிதான் இருவரும் ஒரு சினிமாப் பார்த்து விட்டுச் செல்லலாம் என்று வற்புறுத்திக்கொண்டிருந்தாள். மேலும் அந்தக் காதர் நான் குளிக்கப் போகும்போது, `பாப்பா, ஒரு நா இருந்திட்டுப் போயேன்’ என்றான். காதரை உனக்குத் தெரியுமே. மொட்டை மண்டை; பொக்கை வாய். அவனை நோட்டுப் புத்தகம், காகிதம், ஏதாவது வாங்கிக் கொண்டு வரச் சொல்லும்போது சமயங்களில் அவன் கை என்மீது பட்டுவிடும். அப்போது எனக்கு ஒரு மாதிரி இருக்கும். அவன் முகத்திலும் கள்ளத்தனம் தெரியும். ஆடவரே இல்லாத இடத்தில் அவன் ஒரே ஆடவனாக இருந்ததால் இருக்கும் என்று நினைத்துக்கொள்வேன்.

நான் என் அறையில் தனியே இருந்தேன். கொஞ்சம் பயம். இருந்தாலும் காதர் வர வேண்டும்போல் இருந்தது. அவன் வராது போய்விடுவானோ என்றுகூடப் பயம். ஹாஸ்டலில் அவனுக்கென்று ஒரு அறை உண்டு. அங்கு போய் ஏÊதாவது சாக்குச் சொல்லி அவனைப் பார்த்துவிடலாம் என்றுகூட நினைத்தேன். ஹாஸ்டலில் ஸ்டோர் ரூம்தான் அவனுடைய அறை. ஓரிரு தடவை அவனைக் கூப்பிட அங்கு சென்றிருக்கிறேன். மிகவும் சிறிய அறை, எப்படித்தான் காலை நீட்டிப் படுத்துறங்குவானோ? அந்த அறைக்குள் சென்று சுருண்டு படுத்துறங்க வேண்டும் என்ற ஆசை எனக்கு சில தடவைகள் வந்ததுண்டு.

காலடிச் சத்தம் கேட்டது. வழக்கமான மெல்லிய காலடிச் சத்தம். காதர் என் அறையைக் கடந்து இரண்டு எட்டு சென்றுவிட்டுத் திரும்பி நடந்து என் அறைக்குள் நுழைந்தான். `பாப்பாவுக்கு என்ன வேணும்?’ என்று கேட்பான் என்று எதிர்பார்த்தேன். உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டான். `என்ன காதர்?’ எனக் கத்தினேன். `ஏம் பாப்பா, கத்தறே, நான் கிளவன்’ என்றான் காதர். `ஏங் கதவே அடச்சே?’ என்றேன். `ஒன்னெத் தொட்டுக் கும்பிட’ என்று சொல்லிக்கொண்டே, காதர் மண்டியிட்டு என் இரு பாதங்களையும் பற்றினான். அவன் கை பட்டது எனக்கு இதமாக இருந்தது’’.

ஹெட்கிளார்க் சுகுணா உள்ளே வரவும் நிர்மலா கடிதத்தை மேஜைமீது வைத்து அதன்மீது ஒரு டேபிள் வெய்ட்டை வைத்தாள். ``பாரதி மூப்பனார் வந்திருக்காரு’’ என்றாள் சுகுணா. ``மூப்பனாரா? அவர் பில் பாஸ் ஆயிடுச்சின்னு சொல்லு. நாளைக்கழிச்சு வந்து செக்கை வாங்கிட்டுப் போகட்டும்’’ என்றாள் நிர்மலா. சுகுணா அறையை விட்டகலவும் கடிதத்தைத் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று தோன்றவில்லை நிர்மலாவுக்கு. அவள் ஏற்கனவே ஒருமுறை படித்த கடிதம்தான். இருந்தாலும் அது அவள் கையைச் சுற்றிச் சுற்றிக்கொண்டிருந்தது. இப்போது அவள் நினைவு அவளது மாணவிக் காலத்துக்குச் சென்றது. மூன்று மணி நேரம் மெய் மறந்து, ஒரு முக்கோணத்தின் ஒன்பது புள்ளி வட்டம் அதன் உள்வட்டத்தைத் தொட்டுச் செல்லும் என்று நிரூபித்தது; பதினேழு பக்கங்கள் கொண்ட ஒரு ஒழுங்குப் பல கோணம் வரைய ஒரு மாதம் தொடர்ந்து முயன்று தோல்வியுற்றது; ஒரு கோணத்துக்கு இரு சமவெட்டி உண்டு என்று ஏற்றுக்கொண்டாலன்றி, அதனை வரைய முறை காணமுடியாதென்று ஆசிரியரோடு வாதிட்டது; இறுதியில் ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்தை மெய்ப்பிக்க முயன்று `ரிசேர்ச்’ உதவித்தொகையை இழந்தது, எல்லாமே அவள் மனத்தினூடே பாய்ந்து சென்றன.

மறக்க முடியாத அப்பாவின் நினைவு! `நீ எம் மூத்த குழந்தையாப் பிறந்த பாவத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட்டுட்டேம்மா! இன்னைக்கு நெனெவிலே இருக்கு. உன்னை ஹாஸ்டல்லே வந்து பார்க்க வந்தேனே, அப்ப எல்லாக் குழந்தைகளும் விதவிதமாய் போட்டிட்டு, கவலையே இல்லாம, வரதும் போறதுமா இருக்கும்போது, நீ ஒரு கிழிஞ்ச ரவிக்கையைப் போட்டுக்கிட்டு எங்கூட ஸ்டேஷனுக்கு வரேனியே!’ `அய்யோ, அப்பா! இப்ப இதெல்லாம் பத்தி என்ன பேச்சு? நீங்க நிம்மதியா இருங்க. உங்களுக்கு ஒரு கவலையும் வேண்டாம். நான் எப்பவும் சந்தோஷமாத்தான் இருந்தேன்; இப்பவும் சந்தோஷமாத்தான் இருக்கேன். சாந்தாவைப் பத்தியோ, மனோகரைப் பத்தியோ கவலைப்படாதீங்க. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க ரொம்ப நல்லவர். ஆனா, நீங்க வாழத் தெரியாம வாழ்ந்திட்டீங்க...’

நிர்மலா மேஜை மீது இருந்த கடிதத்தை எடுத்துத் தொடர்ந்து படிக்கலானாள்.

``நிமிர்ந்து நின்றேன். என் பாதங்களைப் பற்றியிருந்த காதரின் கரங்கள் உயர்ந்துவந்து என் கணுக்கால்களை வருடின. காதரின் கைகள் மெல்ல உயர்ந்தன. என்னால் நிற்க முடியவில்லை; அப்படியே கட்டிலில் அமர்ந்தேன். `நில்லு பாப்பா, நில்லு’ என்று கெஞ்சினான் காதர். நான் மீண்டும் நிற்கவும், பொக்கை வாய் சிரிப்போடு, மண்டியிட்டு, காதர் என்னை நோக்கிக் கொண்டிருந்தான்...’’

நிர்மலா கடிதத்தை மேஜை மீது வைத்துவிட்டு இரு கைகளையும் அகல விரித்து சோம்பல் முறித்தாள்.

வருஷம் பூரா இரண்டு சேலை; மூணு ஜம்பர். அத்தனை அவமானமும் எதுக்கு? என்னத்தை சாதித்துவிட்டேன்? அர்த்தமில்லாத தியாகம். அது தியாகமா? அதுவுமில்லியே! ஒரு வகையில் நிர்ப்பந்தம்தானே? ஒன்றையும் காணவில்லையே! ஒரு தெய்வமும் எனக்குத் தட்டுப்படவில்லையே! ஒரு உண்மையும் பிடிபடவில்லையே! இருபது வருடங்களுக்கு முன் தோன்றிய வினாக்களுக்கு இன்னும் விடைகளில்லையே? சாந்தா சந்தோஷமாக இருக்கிறாள்; மனோகர் முன்னுக்கு வந்துவிட்டான். இப்ப இருவரும் சேர்ந்து `அக்காளுக்கு உலகம் தெரியவில்லை’ என்கிறார்கள்.

நிர்மலா கடிதத்தை எடுத்துத் தொடர்ந்து படித்தாள்.

``... என் கால்கள் தடுமாறின. எனக்குப் பசுவிடத்துப் பால் உண்ணும் கன்றின் நினைவு ஏற்பட்டு, அருகில் லயித்துத் தடுமாறினேன். காதர் எழுந்து என்னை அணைக்க வேண்டும்போல் இருந்தது. நான் விழுந்து விடாதபடி அவன் கைகள் ஆதரவாக என் பின்புறத்தைப் பற்றியிருந்தன.’’

மிஸ் நிர்மலா வாசித்த கடிதம் கடந்த ஆண்டு அவளது கல்லூரியில் படித்த லைலா தற்போது ஹாஸ்டலில் தங்கிப் படித்து வரும் இந்திராவுக்கு எழுதிய கடிதம். இந்திரா கவனக்குறைவாக அதைத் தனது சினிமா சஞ்சிகைக்குள் வைத்திருந்தாள். அந்த சஞ்சிகையை எடுத்த அண்ணன் மூலம் அது இந்திராவின் தகப்பனார் டாக்டர் சந்திரசேகரன் கைக்குப் போய்விட்டது. ``நான் ஒரு டாக்டர். எனவேதான் அளவுக்கு மீறிக் கலவரப்படாது, இந்தக் கடிதத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருவதோடு நிறுத்திக்கொண்டு, மேலும் பல்கலைக்கழக, அரசாங்க மட்டங்களில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்’’ என்று பயமுறுத்தாது, பயமுறுத்தியிருந்தார் டாக்டர்.

`அடேயப்பா, டாக்டரின் விசால புத்தியைப் பாராட்டத்தான் வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டே, நிர்மலா காதரைப் பற்றி நினைத்தாள். கிழவனுக்கு அப்படி ஒரு ஆசை! உம். எதைப்பற்றி ஆச்சரியப்படுவது? எல்லாமே ஆச்சரியப்பட வேண்டியதுதானே! நாமாக அது இயற்கை, இது இயல்பு, அது பகுத்தறிவு, இது நடைமுறை அனுபவம் என்று கற்பனை செய்துகொள்வதால்தானே இத்தனைப் `புதுமைகளும்’, `முரண்பாடுகளும்’, `இயற்கைக்கு மாறானவையும்!’ சன்னல் வழி வந்த சூரிய ஒளியின் பக்கம் நிர்மலா திரும்பினாள். ஒளி என்ன? புரியவில்லையே! மனிதனின் கணிதக் கட்டுக்கோப்புகள் அதை அடைத்து விடுவதால் அதைப் புரிந்துகொண்டதாகிவிடுமா? விஞ்ஞானிகளை முற்றிலும் புரிந்துகொள்ள முடிகிறதா? ஆமாம். `லாசரை’யும், `டி.வி.’யையும் படைத்துவிடுகிறார்கள். இருந்தாலும் அந்தக் காதர்! அந்தக் காதர்!! அவள் கல்லூரியில் முதலாண்டில் படித்த புத்தகம் ஒன்று இப்போது அவள் நினைவுக்கு வந்தது. அழகழகான படங்களைக் கொண்ட புத்தகம். ஐன்ஸ்டைனின் வியப்பு நிறைந்த கண்கள். நீல்ஸ்போரின் பெருமிதம். மிலிக்கனின் சாமர்த்தியம். டிப்ராலியின் அழகு... காதர் முகத்திலும் எப்படி அப்படி ஒரு ஒளி? இல்லை, வெறும் கற்பனையா? எல்லாமே நாமாக நினைத்துக் கொள்வதுதானா?

நிர்மலா மணியை அழுத்தவும் சுகுணா வந்தாள்.

``ஹாஸ்டல் வாச்மேன் காதரை வரச் சொல்லு.’’

``சரிங்க, மிஸ்.’’

மிஸ், மிஸ், மிஸ்... ஆனால், படிப்புக்குக் குறைச்சல் இல்லை. அந்தஸ்துக்குக் குறைச்சல் இல்லை. ஆமாம், அவமானத்துக்கும் குறைச்சல் இல்லை. எதுக்குமே குறைச்சல் இல்லை! ஆனால்... நிர்மலா தனது வலது கையைக் கொண்டு சேலையைச் சரி செய்துகொள்வதுபோல், இல்லை, மார்பகத்தைத் தடவிக்கொள்வது போல், சேலையைச் சரி செய்துகொண்டாள். லேசாக ஏதோ தட்டிற்று; அவ்வளவுதான்.

காதர் வந்து நின்றான். மொட்டை மண்டை. பொக்கை வாய்.

``ஹாஸ்டலுக்கு வேறே வாச்மேன் போட்டிருக்கேன்.’’

``நல்லதுங்க’’ என்றான் காதர்.

அரை நிமிடம் இருவரும் பேசவில்லை. நிர்மலா அந்தக் கடிதத்தைப் படிப்பதாகப் பாவனை செய்தாள்.

``உனக்குத் தோட்ட வேலை தெரியுமா?’’

``தோட்ட வேலைக்குத்தானே நம்ம காலேசுக்கு வந்தேன்?’’

``அப்படியா, எனக்குத் தெரியாதே! இனிமே எம் பங்களாத் தோட்டத்தெ கவனிச்சுக்க. ரத்தினம்மா ஹாஸ்டலைப் பார்த்துக்கட்டும்.’’

``உத்தரவு அம்மா’’ என்றான் காதர். இருந்தாலும் அவன் முகத்தில் ஒரு கள்ளத்தனம் இருந்ததாகப் பட்டது, மிஸ் நிர்மலாவுக்கு.

காதர் அறையை விட்டு வெளியேறவும், நிர்மலா தனது வலது கையைக் கொண்டு சேலையைச் சரி செய்துகொள்வது போல், இல்லை, மார்பகத்தைத் தடவிக்கொள்வது போல், சேலையைச் சரி செய்து கொண்டாள். லேசாக ஏதோ தட்டிற்று; அவ்வளவுதான்.

ஜி. நாகராஜன்-நடைவழிக் குறிப்புகள்-சி. மோகன்

சி. மோகன்

நவீன தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லைகளை அபாரமாக விஸ்தரித்தவர் ஜி. நாகராஜன். அது வரையான தமிழ்எழுத்து அறிந்திராத பிரதேசம் அவருடைய உலகம். வேசிகளும், பொறுக்கிகளும், உதிரிகளும் தங்கள் வாழ்வுக்கும் இருப்புக்குமான சகல நியாயங்களோடும் கெளரவத்தோடும் வாழும் உலகமது. ஜெயகாந்தனின் படைப்புலகில் இவர்கள் இடம் பெறுகிற போதிலும் அவருடைய மொண்ணையான மதிப்பீடுகளினால் அந்த உலகம் சிதைவுறுவதைப் போலல்லாமல் இயல்பான மலர்ச்சியைக் கொண்டிருக்கும் உலகம் ஜி. நாகராஜனுடையது. அவருடைய இரு நாவல்களுக்கும் தொடக்கமாக முன்வைத்திருக்கும் சிறு குறிப்புகள் அவருடைய படைப்புலகின் தன்மையையும் தனித்துவத்தையும் அறிய உதவும்.

'நாளை மற்றுமொரு நாளே'யில் இடம் பெற்றிருக்கும் தொடக்கக் குறிப்பு:

''இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை.

நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக் கூடிய சின்னத்தனங்கள்.

நிர்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல்.

விரும்பியிருந்தால் பெற்றிருக்கக் கூடிய நோய்கள்.

பட்டுக் கொண்டிருந்தால் அடைந்திருக்கக் கூடிய அவமானம்.

இவையே அவன் வாழ்க்கை.

அவனது அடுத்த நாளைப் பற்றி

நாம் தெரிந்து கொள்ள வேண்டாம்.

ஏனெனில் அவனுக்கும் நம்மில் பலருக்குப் போலவே

நாளை மற்றுமொரு நாளே!''

1929ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி, தாயாரின் ஊரான மதுரையில் 7ஆவது குழந்தையாகப் பிறந்தார். தந்தை கணேச அய்யர், வக்கீல். சிறு வயதில் தாயை இழந்த நாகராஜன் ஆரம்ப வருடங்களில் மதுரையில் தாய் வழிப்பாட்டி வீட்டிலும் பின்னர் திருமங்கலத்தில் தாய்மாமன் வீட்டிலும் வளர்ந்தார். இடையில் தந்தையார் அவரைத் தம்மிடம் அழைத்துக் கொண்டு பாடங்களைத் தாமே சொல்லிக் கொடுத்தார். 8,9 ஆம் வகுப்புகளை திருமங்கலம் நாடார் உயர்நிலைப் பள்ளியில் மீண்டும் மாமா வீட்டில் தங்கிப் படித்தார். மறுபடியும் பழனி சென்று 10,11 ஆம் வகுப்புகளை எம்.ஹெச். பள்ளியில் படித்தார். படிப்பில் படு சூட்டிகையான இவர் வகுப்பில் எப்போதும் முதல் மாணவனாகவே இருந்திருக்கிறார். கல்லூரிப் படிப்பை மதுரையில் மதுரைக் கல்லூரியில் மேற்கொண்டார். அப்போது கணிதத்தில் 100 சதவீத மதிப்பெண் பெற்று சி.வி. ராமனிடமிருந்து தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார்.

பட்டப் படிப்பு முடிந்ததும் காரைக்குடி கல்லூரியில் ஒரு வருடம் வேலை பார்த்தார். பின் சென்னையில் ஏ.ஜி. அலுவலகத்தில் ஓராண்டு பணி புரிந்தார். கல்விப் பணியில் அவருக்கிருந்த இயல்பான நாட்டம் காரணமாக, அவ்வேலையை உதறிவிட்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். இக்காலத்தில்தான் கம்யூனிச இயக்கத்தில் தன்னைத் தீவிரமாக இவர் வெளிப்படுத்திக் கொண்டதை அடுத்து கல்லூரி நிர்வாகம் இவரை வேலையிலிருந்து நீக்கியது.

இதன்பிறகு, திருநெல்வேலி வந்து பேராசிரியர் நா. வானமாமலை நடத்திய தனிப்பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார். கட்சிப் பண்களிலும் தீவிர முனைப்பு காட்டினார். இக்காலத்தில்தான் படைப்பாக்கத்திலும் தீவிரமாக ஈடுபட்டார். நெல்லையில் நான்கு ஆண்டுகள் அவர் பணி தொடர்ந்தது. போதையும் விலைமாதர் நட்பும் அவரிடம் உறவு கொள்ளத் தொடங்கியதும் இக்காலத்தில்தான். அவருடைய நடத்தைகள் கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தியபோது அவர் கட்சி அமைப்பிலிருந்து தாமாகவே ஒதுங்கிக்கொண்டு மதுரை வந்து சேர்ந்தார்.

கம்யூனிச கட்சி ஈடுபாடுகள் கொண்டவரும் நண்பருமான பேராசிரியர் சங்கர நாராணனன் மதுரையில் நடத்தி வந்த 'மாணவர் தனிப் பயிற்சி கல்லூரி' (எஸ்.டி.சி) ஆசிரியரானார். இக்காலத்தில சிறந்த ஆசிரியராக அவர் மதிப்பு உயர்ந்திருந்தது. இச்சமயத்தில்தான் உடன் பணியாற்றிய நண்பரொருவரின் ஏற்பாட்டின்படி ஆனந்தி என்ற பெண்ணை 1959ல் மணம் புரிந்தார். மணமான நான்காவது மாதம் ஆனந்தி இறந்து போனார். 1962 ஆம் ஆண்டு நாகலட்சுமி என்ற பள்ளி ஆசிரியையை மணமுடித்தார். இத்திருமண உறவில் கண்ணன், ஆனந்தி என்ற 2 குழந்தைகள் அவருக்கு இருக்கிறார்கள். இத்திருமணம் முடிந்த சில மாதங்களில் ராணுவத்தில் சேர்ந்தார். இவருடைய கம்யூனிச கட்சி உறவு வெளிப்படவே ராணுவத்திலிருந்து திரும்பினார்.

மதுரை வந்து கல்லூரியில் வகுப்பெடுக்கத் தொடங்கினார். அவருடைய பிரபல்யம் சொந்தமாக தனிப்பயிற்சி கல்லூரி ஒன்றைத் தொடங்க வைத்தது. அது வெற்றி பெறவில்லை. மீண்டும் எஸ்.டி.சி., வி.டி.சி., போன்ற தனிப்பயிற்சிக் கல்லூரிகளில் வகுப்பெடுத்தார். எந்த ஒன்றிலும் நின்று நிலைக்க முடியாமல் மாறி மாறி முயற்சிகள் மேற்கொண்டார். 70களின் ஆரம்பம் வரை இது தொடர்ந்தது. சென்னையில் யுனெஸ்கோ திட்டத்தின் கீழ் சில மாதங்களும், மதுரை காந்தி மியூசியத்தில் சில மாதங்களும் பணிபுரிந்தார்.

70களின் ஆரம்ப வருடங்களுக்குப் பிறகு, இவர் எந்த வேலையும் பார்க்கவில்லை. நாடோடி வாழ்க்கை தேர்வாகவோ, நிர்பந்தமாகவோ, சுபாவமாகவோ, ஆழ்மன விழைவாகவோ இவரை வந்தடைந்தது.

1981ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி மதுரை அரசு பொது மருத்துவமனையில் மரணமடைந்தார்.

தீவிரமான செயல்பாடுகள் கொண்டிருந்த காலத்தில் 'பித்தன் பட்டறை' என்ற பெயரில் பதிப்பகமொன்றை தொடங்கி தன்னுடைய புத்தகங்களை வெளியிட்டார். 'நாளை மற்றுமொரு நாளே', 'குறத்தி முடுக்கு' என்று இரு நாவல்களையும், 'கண்டதும் கேட்டதும்' சிறுகதைத் தொகுதியும் இவ்வகையில் வெளிவந்தவை. கடைசி ஏழெட்டு ஆண்டு கால நாடோடி வாழ்க்கையில் ஒரே ஒரு சிறுகதை மட்டுமே எழுதியிருக்கிறார்.

1969ல் என் 17ஆவது வயதில் ஜி. நாகராஜனிடம் நான் மாணவனாக இருந்தேன். பி.யூ.சி.யில் மூன்றாம் பாடத்தில் தவறி, மதுரையில் பிரசித்தி பெற்ற மாணவர் தனிப் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்தபோது கணிதப் பாடமெடுத்த ஆசிரியர் நாகராஜன். அப்போது ஒரு லட்சிய மனிதனாக என் மனதில் அவர் இடம்பிடித்திருந்தார். கம்பீரமும் பொலிவும் கூட முயங்கிய வசீகரத் தோற்றம். உடல் பயிற்சிகளினால் தின்மும் பெற்ற உடல்வாகு. தன்னம்பிக்கை மிளிரும் முகம். ஒவ்வொரு அசைவிலும் அணுகுமுறையிலும் பாந்தமாக வெளிப்படும் லயம். அவரைப்போல் ஆக வேண்டும் என்றுஎன் லட்சிய மனிதனாக அவரை ஸ்வீகரித்திருந்தேன். நாலு முழ அகலக் கரை வேட்டியிலும் வெள்ளை ஜிப்பாவிலும் படு சுத்தமாக எப்போதும் தோற்றமளிப்பார். நடக்கும்போது வலது கை நடு விரலுக்கும் சுட்டு விரலுக்குமிடையே சதா கனலும் சார்மினார் சிகரெட். இடது கை நடுவிரலும் சுட்டு விரலும் சிறு கத்திரி போல் அமைந்திருக்க, அவற்றின் இடுக்கில் வேட்டியின் பின்புற நடுமுனையை உயர்த்திப் பிடித்தபடி நடக்கும் லாவகத்தை அதிசயித்துப் பார்த்தபடி இருந்திருக்கிறேன். பின்னாளில் நான் வேட்டி கட்டத் தொடங்கியபோது அதே பாணியில் நடந்து பெருமிதம் கொண்டிருந்தேன்.

அதன் பிறகு 5 ஆண்டுகள் கழித்து - 1975 வாக்கில் - அவரைப் பார்த்தபோது தோற்றம் குலைந்து, நலம் குன்றியவரைப் போலிருந்தார். இப்போது நானும் கொஞ்சம் எழுதத் தொடங்கிவிட்டிருந்தேன். சிறு பத்திரிகைகளோடும், பிடித்த எழுத்தாளர்களோடும் நட்பு ஏற்படத் தொடங்கியிருந்தது. தருமு சிவராமுவோடு எனக்கு ஏற்பட்டிருந்த கடிதத் தொடர்பின் தொடர்ச்சியாக அவர் மதுரை வந்திருந்த சமயமது. நண்பர் குமாரசாமியின் பெரிய நாயகி அச்சக மாடி அறையில் சிவராமு தங்கியிருந்த நாட்களில் ஒருமுறை நாகராஜன் அங்கு வந்தார். என் லட்சிய ஆண்மகன் பிம்பமாக இருந்த அவரை சில ஆண்டு இடைவெளிக்குப் பின் பார்த்தபோதிருந்த தோற்றம் வேதனையானது. உடல் தளர்ந்து-விட்டிருந்தது. தயக்கம் சூடியிருந்தது முகம். அசைவிலும் அணுகுமுறையிலும் நிச்சயமற்ற தன்மை படர்ந்திருந்தது. அவருடைய அபாரமான நினைவாற்றல் மட்டும் எப்போதுமே கடைசி நாள் வரை பிரமிப்பூட்டுவதாகத்தான் இருந்திருக்கிறது. அந்த சந்திப்பில் 'நீ என் மாணவன் தானே' என்று கேட்டதிலிருந்து எண்ணற்ற உதாரணங்கள்.

இதற்குப் பின்னர் ஓரிரு தற்செயலான சந்திப்புகள் நிகழ்ந்த போதிலும், அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பின்னர், 1980ல்தான் அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்தது. அவருடைய மரண நாள் வரை இது நீடித்தது. ஒரு வங்கிக்கிளை நண்பர்களைப் பார்க்க அவர் அவ்வப்போது வந்து கொண்டிருந்த சமயமது. நானும் அங்கு அடிக்கடி போய்க்கொண்டிருந்தேன். இச்சமயத்தில் அவர் உடல் ஒடுங்கிப் போய்விட்டிருந்தது. மருத்துவமனையில் சேர்ந்து கொள்கிறீர்களா? என்று நண்பர்கள் வற்புறுத்திய போதெல்லாம் பிடிவாதமாக மறுத்துவிட்டார். அவர்மீது மதிப்பு கொண்டிருந்த 'வெற்றி தனிப்பயிற்சி கல்லூரி' முதல்வர் அவர் தங்க கல்லூரி விடுதியில் சிறு அறை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இச்சமயத்தில் ஒருநாள் வங்கிக்கு வந்த நாகராஜன் தன்னை மருத்துவமனையில் சேர்க்கும்படி நண்பர் சிவராமகிருஷ்ணனிடமும் என்னிடமும் கூறினார். சிவராமகிருஷ்ணன் தனக்குத் தெரிந்த மருத்துவர் மூலம் அரசு பொது மருத்துவமனையில் அவரைச் சேர்க்க ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினார். மறுநாள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துப் போகவிருப்பதைத் தெரிவிப்பதற்காக அதற்கு முதல் நாள் இரவு வி.சி.டி.யில் அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று நானும் சிவராமகிருஷ்ணனும் வெகுநேரம் அவரிடம் பேசிக் கொண்டிருந்தோம்.

மறுநாள் காலை, 1981 பிப்ரவரி 18ஆம் தேதி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, எல்லாப் பரிசோதனைகளும் முடிந்து வார்டில் சேர்த்துவிட்டு மதியம் 2 மணி போல் பிரிந்தபோது, கஞ்சா ஏதும் மருத்துவமனையில் உபயோகிக்க வேண்டாம். வெளியில் அனுப்பும்படி ஆகிவிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டேன். தன்னிடம் சிறு பொட்டலம் இருப்பதாகவும், கழிவறையில் வைத்து ரகசியமாக உபயோகித்துக் கொள்வதாகவும் கூறினார். 'சாயந்திரம் வரும்போது போட்டுக் கொண்டு வந்து தருகிறேன் இரவில் கழிவறையில் உபயோகித்துக் கொள்ளுங்கள்' என்றதும் என்னிடம் அதைக் கொடுத்து விட்டார்.

மீண்டும் சாயந்திரம் 5 மணி போல் சிவராமகிருஷ்ணனும் நானும் அவரைப் போய்ப் பார்த்தோம். அன்று அவர் பேசிய பேச்சுக்களை இன்னொரு சந்தர்ப்பத்தில் பதிவு செய்யக் கூடுமென நம்புகிறேன். நான் சிகரெட்டில் கஞ்சாவைப் போட்டுக்கொண்டு போயிருக்கவில்லை. 'போடத் தெரியவில்லை. இரவில் கழிவறை போய் போட்டுக் கொள்ளுங்கள்' என்று கொடுத்தேன். பேசிக் கொண்டிருந்தபோது கழிவறை போக வேண்டுமென்றார். எழுந்து நடக்க வெகுவாக சிரமப்பட்டார். சிவராமகிருஷ்ணனும் நானும் கைத்தாங்கலாக அழைத்துப் போனோம். அவரால் உட்காரக்கூட முடியவில்லை. தாள முடியாத அவஸ்தை. கழிவிரக்க வசப்பட்டவராக, 'கடவுளே, உன்னிடம் என்னைச் சீக்கிரம் அழைத்துக்கொள்' என்று வாய் விட்டு கதறி அழுதார். அன்று இரவு அவரைத் தொடர்ந்து பராமரிப்பது குறித்து பல வழிமுறைகளை யோசித்தோம்.

மறுநாள் காலை ஃப்ளாஸ்க்கில் காபியோடு போனபோது, அவர் உறங்கிக் கொண்டிருப்பதாக நினைத்தோம். ஆனார் அவர் இறந்துவிட்டிருந்தார். உபயோகிக்கப்படாமலேயே அந்தப் பொட்டலம் ஜிப்பாவில் இருந்தது. என் குற்ற உணர்வுகளில் ஒன்றாக பயன்படுத்தப்படாத அந்தப் பொட்டலம் நிலைத்துவிட்டிருந்தது.

கடவுளின் பிரதிநிதி-புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் (மணிக்கொடி, 25.11.1934 )
1
சிற்றூர் உண்மையிலேயே சிற்றூர்தான்.
அதன் எல்லை எல்லாம் ஒரே தெருவிற்குள். அந்தத் தெருவும் இடையிடையில் பல்விழுந்த கிழவியின் பொக்கை வாய் மாதிரி இடிந்தும் தகர்ந்தும் சிதறிய வீடுகள். அவ்வளவும் பிராமண வீடுகள். விவசாயம் என்று சம்பிரதாயமாக மண்ணைக் கிளறும் மண்ணைக் கவ்வும் சோம்பேறித்தனம். தெருவின் மேற்குக் கோடியில் முற்றுப் புள்ளி வைத்த மாதிரி கிழக்கே பார்த்த சிவன் கோயில்.
அங்கு கோவில் கொண்டருளிய சிவனாரும், அவ்வூர்வாசிகள் போலத்தான்.
கூறுசங்கு தோல் முரசு கொட்டோ சையல்லாமல்
சோறுகண்ட மூளி யார் சொல்.
சிவபிரான் உண்மையாகப் பிச்சாண்டியாக இருப்பதைக் காண வேண்டுமானால் சிற்றூருக்குத்தான் செல்ல வேண்டும்.
ஊருக்கு வெகு தொலைவில், அதாவது ஊருக்குப் பக்கத்திலிருக்கும் வாய்க்காலையும், வயல் காடுகளையும் தாண்டி ஊரின் சேரி.
இந்த அக்கிரகாரப் பிச்சைக்காரர்களுக்கு அடிமைப் பிச்சைக்காரர்கள்.
இரு ஜாதியருடைய நிலைமையும் ஒன்றுதான். ஒருவர் சேஷப் படாது பட்டினியிருந்தால், இன்னொருவன் அசுத்தத்துடன் பட்டினியிருக்கிறான்.
சேரிப் பட்டினிகளுக்கு அக்ரகாரப் பட்டினிகளின் மீது பரமபக்தி. இருவருக்கும் அந்தப் பெயர் தெரியாத கும்பினி ராஜ்யத்தில் பரம நம்பிக்கை, பயம்.
ஊர்க்காரர்களுக்கு பிரிட்டிஷ் அமல் அதன் பக்கத்தூரிலிருந்துதான். அதாவது ஐந்து மைல் தூரத்திலுள்ள பெத்துநாய்க்கன்பட்டியில் தான் கி.மு. என்ற பிரிட்டிஷ் பிரதிநிதி.
ஊர்க்காரர்களுக்குச் சுற்றுப் பிரயாணத்தில் நம்பிக்கை கிடையாது. கலியாணம், காட்சி, பிராமண போஜனம் விதிவிலக்காக அவர்களை வெளியூருக்கு இழுத்தால், மறுபடியும் தங்கள் இடிந்த வீட்டில் வந்து பட்டினி கிடக்கும் வரையில் கால் கொள்ளாது.
ஊர்க்காரர்களுக்கு அவர்கள் பிரதிநிதியும் மெய்க்காப்பாளருமான சிவபிரானின் மீது பரமபக்தி. இவ்வளவு சுபிட்சமாக இருப்பதும் நெற்றிக் கண்ணைத் திறக்க மறந்த சிவபிரானின் கருணை என்று நினைப்பவர்கள்.
கோவில் அர்ச்சகர் சுப்பு சாஸ்திரிகள் சிற்றூரைப் பொறுத்தமட்டிலும் வீட்டில் பட்டினியானாலும் நல்ல மதிப்பு உண்டு. வேத அத்தியயனத்தில் சிறிது பயிற்சி. பூஜை மந்திரங்கள் மனப்பாடம். வேதத்தின் அர்த்தம் அவருக்கும் தெரியாது. பரமசாது. தெரியாததினால் அதில் பக்தி.
கோவிலில் வரும் சிறு வரும்படிகளில் காலம் தள்ளி வந்தார். கோவில் சேவையில் கிடைக்கும் கூலி நியாயமாகப் பெற வேண்டியதுதான் என்று நினைப்பவர்; ஏனென்றால் அவருடைய தகப்பனாரும் அந்தத் தொழில் செய்தவர்.
ஊரில் நல்ல மனிதன் என்றால் சுப்பு சாஸ்திரிகள்.
இளகிய மனதுடையவர் என்றால் சுப்பு சாஸ்திரிகள்.
2
இம்மாதிரி சாந்தி குடிகொண்ட வாழ்க்கையிலே சூறைக்காற்று போல் புகுந்தது ஹரிஜன இயக்கம்.
அது ஊரையே ஒரு குலுக்கு குலுக்கியது.
திரு.சங்கர் சிற்றூரில் தமது தொண்டைப் பிரசாரம் செய்ய வந்தார். அவரும் ஜாதியில் பிராமணர். தியாகம், சிறை என்ற அக்னியால் புனிதமாக்கப்பட்டவர். சலியாது உழைப்பவர். உண்மையை ஒளிவு மறைவில்லாது போட்டு அடித்து உடைப்பவர்.
ஊருக்கு வந்ததும் சாயங்காலம் கோவில் முன்பு ஹிந்து தர்மத்தைப் பற்றிப் பேசப்போவதாக வீடுவீடாகச் சென்று சொல்லிவிட்டு வந்தார்.
அவ்வூர்க்காரர்கள் காந்தி என்ற பெயர் கேட்டிருக்கிறார்கள். அந்தப் பெயரின் மேல் காரணமற்ற பக்தி. கதருடையணிந்தவர்கள் எல்லாம் காந்தியின் தூதர்கள். இதைத் தவிர அவர்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது.
அன்று சாயங்காலம்.
மேற்கு வானத்திலே சூரியன் இருப்பது கிளைகளினூடு இடிந்த கோபுரத்தில் பாய்ந்த கிரணங்களால் தெரிந்தது. பாழ்பட்ட இலட்சியத்தை மறுபடியும் உயிர்ப்பிக்கப் பாயும் தெய்வீக ஜீவநாடி போல சூரிய கிரணங்கள் கோபுரத்தைத் தழுவின. அந்தப் பிரகாசத்தில் கோவில் பார்ப்பதற்குப் பரிதாபகரமாக இருந்தது.
துவஜஸ்தம்பத்தினடியில் நின்றுகொண்டு திரு.சங்கர் தமது பிரசங்கத்தை ஆரம்பித்தார்.
முதலில் சேரியின் தினசரி வாழ்க்கையையும் கடவுளற்ற இலட்சியமற்ற இருளில் அவர்கள் தடுமாறுவதையும் அவர்களும் நமது சகோதரர்கள் என்பதையும் வருணிக்கும் வரை சபையினர்கள் எல்லோரும் அவருடன் ஒத்து அபிப்பிராயப்பட்டனர்.
சுப்பு சாஸ்திரிகளுக்கு கேட்கும் பொழுது கண்களில் ஜலம் தளும்பியது.
பிறகு-
ஹரிஜனங்களைக் கோவில்களில் அனுமதிக்க வேண்டும் என்றும் அதைத் தடை செய்வதைப் போல் மகத்தான பாபம் கிடையாது என்றும் விஸ்தரிக்கலானார்.
சுப்பு சாஸ்திரிகளுக்கு நெஞ்சில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.
கோவிலுக்குள்ளா?
"அடா பாபி! உன் நாக்கு வெந்துபோகாதா?" என்றார்.
"காந்தி அப்படிச் சொல்லியிருக்கமாட்டார்" என்று மற்றொருவர் அபிப்பிராயப்பட்டார்.
திரு.சங்கர் இதற்கு வேதத்திலிருந்தும், ஹிந்து தர்ம சாஸ்திரங்களிலிருந்தும் ஆதாரம் கூற வேதங்களை இயற்றிய ரிஷிமூலங்களை விஸ்தரிக்கவாரம்பித்தார்.
சுப்பு சாஸ்திரிகளுக்குப் பெரும் கலக்கமாயிற்று. தான் இதுவரை நம்பிக்கை வைத்து அதன்படி ஒழுகுவதாக நினைத்த வேதமும் இப்படிக் கூறுமா? பாபி பொய் சொல்லுகிறான். உண்மையாக இருக்குமோ? இருந்தால் இதுவரை முன்னோர்கள் இது தெரியாமலா இருந்திருப்பார்கள்? கலக்கம், சந்தேகம், குழப்பம்.
உள்ளத்தின் கலக்கம் எல்லாம் சீறிக் கொதித்துக் கலங்கிய கண்ணீருடன் வெளிப்பட்டது.
"பதிதன்! சண்டாளன்! துரோகி! கோவிலைப் பாழ்படுத்த வருகிறான்" என்று என்னென்னமோ தழுதழுத்த குரலில் பிதற்றி விட்டு அகன்றுவிட்டார்.
உடனே கூடியிருந்த சபையும் பேசி வைத்ததுபோல கலைந்து போயிற்று.
துவஜஸ்தம்பத்தினருகில் அதைப் போல் மௌனமாக நிற்கும் திரு.சங்கரைத் தவிர வேறு யாருமில்லை.
இப்படிப்பட்ட வாயில்லாப் பூச்சிகளுக்கு என்னத்தைச் சொல்லுவது? நினைவு குவிந்த உள்ளத்துடன் ஊருக்கு வெளியே சென்றார். ஊர் இருக்கும் மனப்பான்மையில் அன்று அவர் பட்டினி இருக்க வேண்டும் என்பதைத் திட்டமாகத் தெரிந்து கொண்டார்.
ஊர் அன்றிரவு அல்லோலகல்லோலப்பட்டது.
இந்தப் பேச்சு சேரிப் பறையர்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. இம்மாதிரி மகத்தான பாவத்தைப் போதிக்கும் மனிதனை உதைக்க வேண்டும் என்று நினைத்துவிட்டார்கள். 'சாமி'களுக்குச் சரிசமானமாய் கோவிலுக்குள் இவர்கள் போக வேண்டும் என்று சொன்னால் கண், அவிந்து போகாதா?
திரு.சங்கர் என்னவோ நினைத்துக் கொண்டு ஊருக்கு மேற்குப் பக்கம் செல்லுகிறார்.
தூரத்திலிருந்து நாலைந்து கல்லை எறிந்துவிட்டு ஓடிவிடுகிறார்கள். ஒரு கல் அவர் மண்டையில் விழுந்து காயத்தை உண்டு பண்ணி விட்டது.
இதை எதிர்பார்க்கவில்லை.
திரும்பிப் பார்க்குமுன் தலைசுற்றி மயங்கி விழுகிறார்.
3
சுப்பு சாஸ்திரிகளுக்கு அன்று ஒன்றும் ஓடவில்லை. திரு.சங்கருக்கு அவர் வீட்டில் சாப்பாடு என்று அவர் சொல்லியிருந்தார்.
அதிதியின் கொள்கைகள் எப்படியிருந்தாலும் அதிதி, அதிதி தானே?
வெகு நேரமாகியும் சங்கர் வரவில்லை.
ஒரு வேளை கூச்சத்தினால் கோவிலில் இருக்கிறாரோ என்று போஜனத்தையும், கையில் விளக்கையும் எடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றார்.
அங்கு அவர் இல்லை.
கோவிலில் மடைப்பள்ளியில் போஜனத்தை வைத்து விட்டு மேற்குப்புறம் வாய்க்கால் பக்கமாகத் தேடிச் சென்றார்.
அங்கு சங்கர் மயங்கிக் கிடப்பதைக் கண்டதும் பதைபதைத்து, பக்கத்திலிருக்கும் வாய்க்காலில் ஓடி ஜலம் எடுத்துவந்து தெளித்து மூர்ச்சை தெளிவித்தார்.
திரு.சங்கரின் நிலைமை தெய்வ நிந்தனையின் கூலி என்று அவர் எண்ணக்கூட அவருக்கு நினைவில்லை.
அவரை மெதுவாகக் கோவிலுக்குள் அழைத்துச் சென்று போஜனத்தைக் கொடுத்து உண்ணச் சொன்னார்.
திரு.சங்கருக்கு இதில் ஆச்சரியப்படக்கூட நேரமில்லை.
அவ்வளவு தலைவலி.
உணவருந்தியதும் படுத்துக் கொண்டார். துணைக்கு சாஸ்திரிகளும் படுத்துக் கொண்டார்.
அன்று இருவருக்கும் தூக்கம் வரவில்லை. ஒருவருக்கு வலி இன்னொருவருக்குக் குழப்பம்.
நடுநிசி!
சாஸ்திரிகள் எழுந்து மூலஸ்தானத்தின் பக்கம் சென்று தமது உள்ளத்தின் கவலைகளை எல்லாம் சொல்லியழுதார். நம்பிக்கை உடைந்து போயிற்று. எதை நம்புவது என்ற சந்தேகம் வந்துவிட்டது.
"இதுவரை நடந்துவந்தது உண்மையா? அவர் சொல்லுவது உண்மையா? பேசாது இருக்கிறாயே நீயும் உண்மைதானா?"
இந்தப் பரிதாபகரமான குரல், வலியில் தூங்காதிருக்கும் திரு.சங்கருக்கு கேட்டது. குரலில் என்ன பரிதாபம்! என்ன சோகம்! என்ன நம்பிக்கை!
சங்கருக்கு துக்கம் நெஞ்சையடைத்தது. ஆனால் அந்தக் குரல் வலியைப் போக்கும் சஞ்சீவியாக இருந்தது.
"ஏ! தெய்வமே, நீயும் உண்மைதானா?"
இதற்குப் பதில் போல வானவெளியிலே நாலு மேகங்கள் ஒன்றாகக்கூடி கர்ஜித்துச் சிரித்தன.

மணிக்கொடி, 25.11.1934

மனித யந்திரம்-புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் (மணிக்கொடி, 25-04-1937 )
1
ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஒரு ஸ்டோர் குமாஸ்தா. அவர் உப்புப் புளி பற்று-வரவு கணக்கின் மூலமாகவும் படிக்கல்லின் மூலமாகவும் மனித வர்க்கத்தின் சோக நாடகங்களையும் மனித சித்தத்தின் விசித்திர ஓட்டங்களையும் அளந்தவர். 
அவருmodern-art-blackloveக்குச் சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாக அதே பாதை, அதே வீடு, அதே பலசரக்குக் கடையின் கமறல்தான் விதி. அதுவும் அந்தக் காலத்தில் அடக்கமான வெறும் மூலைத்தெரு ராமு கடையாகத்தான் இருந்தது. கடையும் பிள்ளையவர்களுடன் வளர்ந்தது. ஆனால் அதில் சுவாரஸ்யமென்னவெனில் வெறும் 'மீனாச்சி' ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையாகப் பரிணமித்தாலும் அவருக்கு அந்தப் பழையதுதான், அந்தக் காவியேறிய கம்பிக்கரை வேஷ்டிதான். கடைக்கு முன்னால் இருந்த காறையும் கூரையும் போய் 'ரீ-இன்போர்ஸ்ட் காங்க்ரீட், எலெக்ட்ரிக் லைட், கௌண்டர்' முதலிய அந்தஸ்துகள் எல்லாம் வந்துவிட்டன. கடையும் பிள்ளையும் ஒன்றாக வளர்ந்தார்கள்; ஆனால் ஒட்டி வளரவில்லை. கடையில் வரவு செலவு வளர்ந்தது; பிள்ளையவர்களுக்குக் கவலையும் வளர்ந்தது.
ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை பற்று வரவு கணக்குகளில் உள்ள சிக்கல்களையெல்லாம் அற்புதமாகத் தீர்த்து வைப்பார். அந்தக் காலத்தில் புன்னை எண்ணெய்க் குத்துவிளக்கடியில் இரவு பன்னிரண்டு மணிவரை மல்லாடுவார். இப்பொழுதும் அந்த மல்லாட்டத்திற்கெல்லாம் குறைச்சல் இல்லை; ஆனால் இப்பொழுது மின்சார விளக்கும் விசிறியும் உடன் விழித்திருக்கும். அவரது சம்பளமும் ஆமை வேகத்தில் 'ஓடி' மாதத்துக்கு ரூ.20 என்ற எல்லையை எட்டிவிட்டது. பற்று வரவு கணக்கு நிபுணர் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் திறமையெல்லாம் அந்த ஸ்டோ ர் கடையுடன் தான். வீட்டு வரவு செலவு கணக்கு மட்டும் அவருடைய இந்திர ஜால வித்தைகளுக்கெல்லாம் மீறி, உலகளந்த பெருமாளாக, சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாகப் பரந்து கிடக்கிறது; பரந்து கொண்டு வருகிறது.
காலை ஐந்து மணிக்கு ஈர ஆற்று மணல் ஒட்டிய அவர் பாதங்கள், வெகு வேகமாக ஆற்றில் இறங்கும் சந்திலிருந்து ராஜபாட்டையில் திரும்பி, மறுபடியும் ஒற்றைத் தெரு என்ற சந்தில் நுழைவதைக் காணலாம்.
மழையானாலும் பனியானாலும் ஈர வேஷ்டியைச் சற்று உயர்த்திய கைகளால் பின்புறம் பறக்கவிட்டுக் கொண்டு, உலர்ந்தும் உலராத நெற்றியில் சுப்பிரமணிய சுவாமி கோவில் விபூதி, குங்குமம், சந்தனம் விகசிக்க அவர் செல்லும் காட்சியைச் சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாகக் கண்டவர்களுக்கு அவர் பக்தியைப் பற்றி அவ்வளவாகக் கவலை ஏற்படாவிட்டாலும், நன்றாக முடுக்கிவிடப்பட்ட பழுது படாத யந்திரம் ஒன்று நினைவிற்கு வரும்.
ஆறு மணியாகிவிட்டால் நேற்றுத் துவைத்து உலர்த்திய வேஷ்டியும் துண்டுமாக, ஈரத் தலையைச் சிக்கெடுத்த வண்ணம் ஸ்டோ ர் கடையை நோக்கி நடப்பார். மறுபடியும் அவர் இரவு பத்து அல்லது பன்னிரண்டு மணிக்கு கடையைப் பூட்டிக் கொண்டு திரும்புவதைப் பார்க்கலாம்.
'மீனாட்சி', கணக்குப்பிள்ளை அந்தஸ்தை எட்டுவதற்கு முன்பே நாலைந்து குழந்தை - மீனாட்சிகள் தெருவில் புழுதி ரக ஆராய்ச்சியில் ஈடுபடுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.
பிள்ளையவர்கள் பொறுமைசாலி - ஆதிசேஷன் ஒரு பூமியின் பாரத்தைத்தான் தாங்குகிறானாம் - ஆனால் பொறுப்பு, ஏமாற்று, சுயமரியாதை, நம்பிக்கை என்ற நியதியற்றுச் சுழலும் ஒரு பெரிய கிரக மண்டலத்தையே தூக்கிச் சுமக்கிறார் அவர். ஏறு நெற்றி, வழுக்கைத் தலை, கூன் முதுகு, பெட்டியடியில் உட்கார்ந்து உட்கார்ந்து குடமான வயிறு - இவைதான் இச்சுமைதாங்கி உத்தியோகத்தால் ஏற்பட்ட பலன்கள்.
பிள்ளையவர்கள் மிகவும் சாது; அதாவது படாடோ பம், மிடுக்கு, செல்வம், அகம்பாவம் முதலியவற்றின் உதைகளையும் குத்துகளையும் ஏற்று ஏற்று மனமும் செயலும் எதிர்க்கும் சக்தியையும் தன்னம்பிக்கையையும் அறவே இழந்துவிட்டன. தாம் கீழ்ப்பட்டவர், விநயமாக இருக்க வேண்டும், தம்மைப் பாதுகாத்துக் கொள்ள உண்மை, நாணயம் முதலிய பழக்கங்களைக் கைக்கொள்ள வேண்டும் என்று உறுதிப்பட்டவர். ஆனால் அவர் உள்ளத்தில், அந்தப் பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்கும் உள்ளத்தில், அல்லாவுத்தீன் ஜீனியைப் போல் ஆசை பூதாகாரமாய் விரிந்து, அவரது சித்தப் பிரபஞ்சத்தையே கவித்து ஆக்கிரமித்துக் கொண்டது. தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகச் செயல் திறமையிழந்தவன் செய்வது போல் ஆசைப் பேய்க்குப் பூசையும் பலியும் கொடுத்து மகா யக்ஞம் செய்ய எந்தப் பக்தனாலும் முடியாது.
இந்த மனம் இருக்கிறதே, அப்பா! ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கும் அது உண்டு. நீறு பூத்த நெருப்பை வேதாந்திகள் பெரிய விஷயங்களுக்கு உபமானம் சொல்லுவார்கள். ஆசையைப் பொறுத்தவரை அந்த உபமானத்தால் பிள்ளை பெரிய மனுஷர்தான். 'மீனாச்சியா! அந்த அப்பாவிப் பயல்!' என்று பலர் துச்சமாகக் கருதுவார்கள். முகத்திற்கெதிரேயும் சொல்லுவார்கள். அப்படிப்பட்ட 'அப்பாவி'ப் பிராணியின் மனத்தில் புகைந்து கவிகிறது ஆசை. வீட்டில் குழந்தைக்குப் பால் தட்டாமலிருக்க - ஏன், பால் விற்று நாலு காசும் சம்பாதிக்க - மாடும் கன்றும் வாங்க வேண்டும்! தெற்குத் தெரு மாவன்னாவுக்கு 'மேடோ வர்' செய்த நிலத்தைத் திருப்ப வேண்டும். இது மட்டுமா? கால் மேல் கால் போட்டு, 'ஏ மீனாட்சி!' என்று தாம் அழைக்கப்படுவது போல், தம் இஷ்டப்படி ஆட ஒரு மீனாட்சியும் ஸ்டோ ர் கடையும் கைக்குள் வரவேண்டும். ஒரு முறை கொழும்புக்குப் போய்விட்டுத் தங்க அரைஞாண், கடிகாரச் சங்கிலி, வாட்ட சாட்டமான உடம்பு, கையில் நல்ல ரொக்கம், கொழும்புப் பிள்ளை என்ற பட்டம் முதலிய சகல வைபவங்களுடனும் திரும்ப வேண்டும். தெருவில் எதிரே வருகிறவர் எல்லாரும் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு, பல்லை இளித்த வண்ணம் 'அண்ணாச்சி சௌக்கியமா?' என்று கேட்க வேண்டும்! ஊரில் நடைபெறும் கலியாணமும் சம்பவிக்கும் இழவும் இவர் வருகையை எதிர்பார்த்துத்தான் தம் பாதையில் செல்லவேண்டும்...!
இன்னும் எத்தனையோ எண்ணங்கள்! தினசரி பணப்புழக்கம் எல்லாம் அவர் கையில் தான். கடைசியாய், தனியாகக் கடையைப் பூட்டிச் சாவியை எடுத்துக் கொண்டு போகிறவரும் அவர்தான். அதே சமயத்தில்தான் கடைக்குக் கூப்பிடுகிற தூரத்தில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் ஐந்து நிமிஷம் நின்றுவிட்டுத் தூத்துக்குடி ஷட்டில் வண்டி புறப்படுகிறது. டிக்கட் வாங்கிக் கொண்டு ராத்திரியோடு ராத்திரியாகக் கம்பி நீட்டிவிடலாம். டிக்கட்டுக்கு மட்டிலும் பணம் எடுக்கத் தினசரி கடையில் பணம் புரளும். ஆனால், அந்தப் போலீஸ்காரப் பயல் இருக்கிறானே! நினைக்கும்பொழுதே பிள்ளையவர்களுக்கு அவன் கை தோளில் விழுவது போலப் பயம் தட்டிவிடும். திடுக்கிட்டுத் திரும்பிக் கூடப் பார்த்துவிடுவார்.
சிலர் நேரத்தைத் தெரிந்து கொள்ளக் கைக்கடிகாரம் கட்டிக் கொள்ளுவார்கள். வேறு சிலர் நிழலின் குறியை உபயோகப்படுத்திக் கொள்ளுவார்கள். கடிகாரத்தின் மெயின் ஸ்பிரிங் ஒடிவதற்கு ஹேது உண்டு. சூரியனை மேகம் மறைத்தால் நிழலின் குறியெல்லாம் அந்தரடித்துக்கொண்டு போக வேண்டியதுதான். அதனால்தானோ என்னவோ, சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாகக் கொக்கிரகுளத்திலுள்ள பலருக்கும் ஸ்ரீமான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சாவி கொடுக்காத கடிகாரமாய், மேகத்தால் மறையாத சூரியனாய், என்றும் பழுதுபடாத நித்திய வஸ்துவாய் இருந்து வருகிறார்.
பிள்ளைக்கு எதிலும் நிதானம். இயற்கையின் நியதியைப் போல் இருக்கும் அவர் நடவடிக்கையெல்லாம் - நேற்று இருந்த மாதிரித்தான் இன்றும், நாளையும், இனியும். ஒன்றுமட்டும் சொல்லுகிறேன். கொக்கிரகுளத்தில் உள்ள மிகவும் முதிர்ந்த கிழவருக்கும், அவர் தம் சன்னக் கம்பிக் கறுப்புக் கரை நாட்டு வேஷ்டியுடன் தான் காட்சியளித்து வருகிறார். இந்த ஒழுங்கிலிருந்து அவர் விலகியதும் கிடையாது; விலக முயன்றதும் விரும்பியதும் கிடையாது.
ஸ்ரீ பிள்ளையவர்களின் முகம் தேஜஸ் கீஜஸ் என்ற தொந்தரவெல்லாம் பெறாவிட்டாலும் அவர் ஒரு சித்தாந்தி. பற்றுவரவு கணக்கு அவருக்கு வாழ்க்கையின் இரகசியங்களை எடுத்துக் காண்பித்து, புகையூடு தெரியும் விளக்கைப் போன்ற ஒரு மங்கிய சித்தாந்தத்தை உபதேசித்தது.
2
மூலைத் தெரு லாந்தல் கம்பங்கூடச் சோர்ந்துவிட்டது. கொக்கிரகுளத்திலுள்ள லாந்தல் கம்பங்களுக்கு இரவு பத்து மணிக்குள்ளாகவே சர்வ சாதாரணமாக ஏற்படும் வியாதி இது.
மூலைத் தெருவில் மற்ற இடங்களெல்லாம் ஒடுங்கிவிட்டன. ஸ்டோ ரில் பெட்டியடி மேல் ஒற்றை மின்சார விளக்குப் பிரகாசிக்கிறது. பிள்ளையவர்கள் ஓலைப் பாயில் உட்கார்ந்துகொண்டு மேஜையின் மேலுள்ள சிட்டைப் புத்தகத்தில் ஏதோ பதிந்து கொண்டு இருக்கிறார்.
"சுப்புப் பிள்ளையா? நாலு, நாலரை, நாலரையே மாகாணி, நாலரையே மாகாணியும் ஒரு சல்லியும், நாலரையே மாகாணி ஒரு சல்லி, ஒரு துட்டு, நாலு, ஒம்பது, அஞ்சு சல்லி!... சவத்துப் பயலுக்கு குடுத்துக் குடுத்துக் கட்டுமா? நாளைக்கு வரட்டும் சொல்லறேன். கோவாலய்யனா? சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது! என்ன செய்யறது? பிள்ளையவாள் பாடு அவன் பாடு..." ஏடுகளைப் புரட்டுகிறார். நெற்றியில் வழியும் வேர்வையைத் துடைத்து விட்டு ராமையாப் பிள்ளை பேரேட்டைத் திருப்பிக் கூட்ட ஆரம்பித்தார். "வீசம், அரைக்கால், அரையேரைக்கால்..."
"என்ன அண்ணாச்சி, இன்னங் கடையடைக்கலே? என்னத்தெ விளுந்து விளுந்து பாக்கிய?" என்று கொண்டே வந்தார் மாவடியாபிள்ளை. "வாரும், இரியும்!" என்று சொல்லி, மறுபடியும் கணக்கில் ஈடுபட்டார் பிள்ளை.
"என்னய்யா, வண்டி போயிருக்குமே! இன்னமா? உமக்கென்ன பயித்தியம்?"
"தம்பி, நீங்க ஒரு மூணு வீசம் அரை வீசம் கொடுக்கணுமில்லெ; நாளாயிட்டுதே! கொஞ்சம் பாருங்க, கடைலே பெரண்டாத்தானே முடியும்?"
"அதுக்கென்னயா வார வியாழக்கிழமை பாக்கிறேன். நீங்க வீசம்படி "பின்னைக்கி எண்ணை குடுங்க; எல்லாத்தையும் சேர்த்துக் குடுத்திடுவேன்!"
(*பின்னைக்கி எண்ணை - புன்னைக்காய் எண்ணெய்)
"பாத்துச் செய்யுங்க!" என்று சொல்லிக்கொண்டே மேல் துண்டை எடுத்து ஒரு தோளில் போட்டுக் கொண்டு எழுந்தார். கொட்டாவி வந்துவிட்டது. வாய்ப் பக்கம் விரலால் சுடக்கு விட்டுக்கொண்டே 'மகாதேவ, மகாதேவ' என்று முணுமுணுத்தவண்ணம் நெடுங்காலக்களிம்பால் பச்சை ஏறிப்போன புன்னைக்காய் எண்ணெயிருக்கும் செப்புப் பாத்திரத்தண்டை சென்றார். குனியுமுன் தலையை விரித்து உதறி, இடது கையால் அள்ளிச் சொருகிக்கொண்டு, கட்டை விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் பிடித்து வீசம் படியில் எண்ணெயை எடுத்துக் கொண்டு திரும்பினார்.
"தம்பி!" என்று கொண்டே நீட்டினார்.
மாவடியா பிள்ளை கையில் இருந்த சிறு பித்தளை டம்ளரில் வாங்கிக் கொண்டார்.
பிள்ளையவர்கள் மறுபடியும் ஒழுங்காக மேல்துண்டை மடித்துப் பெட்டியடியில் போட்டுக் கொண்டு, 'மகாதேவா!' என்று வாய்விட்டு ஓலமிட்டவண்ணம் ஒற்றைக் கையைப் பெட்டியின் மேல் ஊன்றிய படி மெதுவாகச் சம்மணமிட்டு உட்கார்ந்தார்.
மாவடியா பிள்ளை புறப்படுவதாகத் தோன்றவில்லை.
"என்ன அண்ணாச்சி, இன்னந் தேரமாகலியா!" (*தேரம் - நேரம்) என்று, பெட்டியடிப் பக்கத்தில் இருந்த தட்டில் உள்ள பொரி கடலையை எடுத்துக் கொறிக்க ஆரம்பித்தார்.
"இன்னம் ரெண்டு மூணு புள்ளியைப் பாத்துவிட்டுத்தான் கடையெடுக்கணும். எனக்குச் செல்லும். (*செல்லும் - நேரம் போகும்) வார வைகாசிலே ராதா வரத்துப் பிள்ளை என்னமோ காசுக் கடை வைக்ராஹளாமே; ஒங்கிளுக்கென்னய்யா!"... என்று சிரித்தார் பிள்ளை.
"அவாளுக்கென்ன! காசுக் கடையும் வைப்பாஹ, கும்பினிக்கடையும் வைப்பாஹ. கையிலே பசை இருந்தா யார்தான் என்னதான் செய்யமாட்டாஹ? வார வைகாசிலையா? யார் சொன்னா?" என்று வாயில் உப்புக் கடலை ஒன்றை எடுத்துப் போட்டபடியே கேட்டார்.
"என்னய்யா, ஒரேயடியா கையை விரிக்கிய? ஒங்களுக்குத் தெரியாமலா பிள்ளைவாள் வீட்லெ ஒண்ணு நடக்கும்? யாருகிட்டெ ஒங்க மூட்டையெ அவுக்கிய?" என்று கையில் எடுத்த பென்ஸில் முனை மழுங்கியிருந்தால் நகத்தால் கட்டையை உரித்துக் கொண்டே சொன்னார்.
மாவடியா பிள்ளை அப்படி இலகுவில் 'மூட்டையை அவிழ்த்து' விடுபவரல்லர். "ஊர்க் கதை எல்லாம் நமக்கெதுக்கு? நான் வாரேன். நேரமாகுது!" என்று எண்ணெயை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார்.
"தம்பி! விசாளக்கெளமையை மறக்காமே!" என்றார் பிள்ளை.
"மறப்பனா!" என்று கொண்டே இருட்டில் மறைந்தார் மாவடியா பிள்ளை.
பிள்ளையவர்களுக்கு அப்புறம் கணக்கில் மனம் லயிக்கவில்லை. ராதாபுரத்துப் பிள்ளை ஆரம்பிக்கப்போகும் காசுக் கடையிலும், அதில் மாவடியா பிள்ளைக்குக் கிடைக்கக்கூடிய ஸ்தானத்தையும் பற்றி விஸ்தாரமாக நினைக்க ஆரம்பித்துவிட்டார்.
'மாவடியா பிள்ளைக்கென்ன! கையிலே பணம் புரண்ட வண்ணந்தான். இப்பவே ஒரேயடியாக முழுங்கரானெ. ஆளைக் கையிலே பிடிக்க முடியுமா?...'
அவர் மனம் காசுக் கடைப் பெட்டியடியில் உட்கார்ந்திருக்கும் கற்பனை - மாவடியா பிள்ளையைக் கண்டு பொறாமைப்பட்டது. 'என்னதான் இருந்தாலும் நாணயமா ஒரு இடத்தில் இருக்கிறவன் என்று பேர் வாங்கப் போறானா! நாற்பத்தைந்து வருஷங்கள் ஒரே இடத்தில் இருந்து பேர் வாங்கினால் அல்லவா தெரியும்?...' உடனே மனம் நாற்பத்தைந்து வருஷங்களையும் தாவி, ஏதோ அந்தக் காலத்தில் பள்ளிக்கூடத்திற்குப் போக மறுத்ததினால் ஏற்பட்ட இந்த மாறுதலை நினைத்தது. அந்தக் காலத்தில் அது பிரமாதமாகப் படவில்லை. அப்புறம் பிள்ளையும் குட்டியும் வந்து, அது இது என்று ஆக ஆகச் சந்தர்ப்பம் தவறாக மாறிப் பெரிய தவறாக உருவெடுத்தது. வக்கீல் பிள்ளையும் உடன்படித்தவர்தான். இப்பொழுது அவரை 'ஏலே ஆறுமுகம்!' என்று கூப்பிட முடியுமா?
பிள்ளையவர்களுக்கு மனம் கணக்கில் லயிக்கவில்லை. பெட்டியில் மூடிவைத்தார். 'தூத்துக்குடி வண்டி இன்னும் புறப்படவில்லையே!' என்ற எண்ணம் திடீரென்று உதித்தது. 'சவத்தைக் கட்டி எத்தனை நாள் தான் மாரடிப்பது!' என்று முணுமுணுத்தார். நெற்றியில் குபீர் என்று வியர்வை யெழும்பியது. பெட்டிச் சொருகை அனாவசிய பலத்தை உபயோகித்து வெளியே இழுத்தார். உள்ளேயிருந்த சில்லறையும் ரூபாயும் குலுங்கிச் சிதறின. செம்பு, நிக்கல், வெள்ளி என்று பாராமல் மடமடவென்று எண்ணினார். நாற்பதும் சில்லறையும் இருந்தது. அவசர அவசரமாக எடுத்து மடியில் கொட்டிக் கொண்டு, விளக்கை அணைத்து, மடக்குக் கதவுகளைப் பூட்டினார்.
சாவிக் கொத்து கையில் இருக்கிற உணர்வு கூட இல்லாமல் வேகமாக ஸ்டேஷனை நோக்கி நடந்தார். நாற்பத்தைந்து வருஷமாக உழைத்துப் போட்டும் என்ன பலன்? நாக்குக்கு ருசியாக சாப்பிட முடிந்ததா? என்ன பண்ணிவிடுவான்? கொஞ்ச தூரம் சென்ற பிறகுதான் செருப்பைக் கூடக் கடையிலேயே வைத்துவிட்டு வந்து விட்டார் என்ற உணர்வு தட்டியது.
நல்ல காலமாக எதிரில் யாரையும் காணோம். 'பார்த்தால்தான் என்ன? கடையைப் பூட்டின பிறகு நேரே வீட்டிற்குத்தான் போக வேண்டுமா? நம்ம நினைப்பு அவனுக்கெப்படி தெரியும்?'
ஸ்டேஷனுக்கு வந்தாய்விட்டது. பெட்ரோமாக்ஸ் விளக்கடியில் தூங்கும் சில்லறைச் சிப்பந்திகள், பக்கத்து வெற்றிலை பாக்குக் கடையில் வாயடி யடிக்கும் போர்ட்டர்கள்! வெளி கேட்டில் அவ்வளவு கூட்டம் இல்லை. ரயிலுக்குக் கூட்டம் இருக்காததும் நல்லதுதான் என்று நினைத்து உள்ளுக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டார் பிள்ளை.
டிக்கட் கவுண்டரில் பத்தேகாலணாவை வைத்துவிட்டு, "தூத்துக்குடி!" என்றார் பிள்ளை. அதற்குள் நா வரண்டுவிட்டது.
"எங்கே?" என்றார் டிக்கட் குமாஸ்தா.
பிள்ளை திடுக்கிட்டார். "தூத்துக்குடி!" என்றார் மறுபடியும்.
"வாயில் என்ன கொழுக்கட்டையா? தெளிவாகத்தான் சொல்லேன்?" என்று கொண்டே ஒரு டிக்கட்டைப் 'பஞ்ச்' செய்து கொடுத்தார் குமாஸ்தா.
அப்பாடா!
பிள்ளையவர்கள் நிம்மதியடைந்தவர் போல் மூச்சை உள்ளுக்கு வாங்கி மெல்ல விட்டுக்கொண்டு பிளாட்பாரத்தில் நுழைந்தார். வண்டி வந்து நின்று கொண்டிருக்கிறது. புறப்பட இன்னும் பத்து நிமிஷம். ஒரு சோடா விற்பவனும், ஆமவடை - முறுக்கு - போளி - ஐயரும் குரல் வரிசையைப் பிளாட்பாரத்தின் மேலும் கீழுமாகக் காண்பித்து நடந்தனர். லக்கேஜ் தபால் வண்டிப் பக்கத்தில்தான் ஸ்டேஷன் மாஸ்டரும், ஸ்டேஷன் சிப்பந்திகளும்! தொடரின் பின்புறத்தில், ஒருவரும் இல்லாத தனி வண்டியில் ஏறி, கூட்ஸ் ஷெட் பக்கம் பார்த்த ஜன்னல் அண்டையில் உட்கார்ந்தார். ஜன்னல் பக்கம் இருந்த நிம்மதி இவரது மனத்தைத் துருதுரு என்று வாட்டியது. எழுந்து பிளாட்பாரத்தின் பக்கத்திலிருக்கும் ஜன்னல் பக்கம் வந்து உட்கார்ந்து கொண்டு, வண்டி எப்பொழுது புறப்படும் என்பதை ஆவலாக அறிய எஞ்சின் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
"பிள்ளைவாள்! ஏது இந்த ராத்திரியில்!" என்றது கம்பீரமான ஒரு குரல். வேறு ஒருவரும் இல்லை, ரயில்வே போலீஸைச் சேர்ந்த அவரது நண்பர் கலியாணசுந்தரம் பிள்ளை. திடுக்கிட்டுத் திரும்பினார்.
போலீஸ்காரன்! பிள்ளையவர்கள் நண்பரைப் பார்க்கவில்லை; காக்கி உடையைத்தான் பார்த்தார்!
தன்னையறியாமல் அவரது வாய், "தூத்துக்குடி வரை!" என்றது.
"என்ன அவசரம்! நான் உங்களை மணியாச்சியில் பார்க்கிறேன்!" என்று சொல்லி, அளவெடுத்து வைக்கும் பெருமிதமான நடையுடன் லக்கேஜ் வான் பக்கம் நிற்கும் ஸ்டேஷன் மாஸ்டரை நாடினார் கலியாணசுந்தரம் பிள்ளை.
மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு நுனிநாக்கு முதல் அடித்தொண்டை வரை ஒரே வறட்சி; கண்கள் சுழன்றன.
"கலர்! சோடா!" என்று நீட்டினான் ஸோடாக்காரன்.
"ஏ, ஸோடா! கலர் ஒன்று உடை!" என்றார் பிள்ளை.
'டஸ்!' என்ற சப்தம்; 'ஸார்' என்று நீட்டினான் சோடாக்காரன். வாங்கிக் குடித்தார். 'பூப்!' என்று ஏப்பமிட்டுக்கொண்டே ஓரணாவை அவன் கையில் கொடுத்துவிட்டுப் பலகையில் சாய்ந்து கண்ணை மூடினார் பிள்ளை. 'கலியாணி பார்த்துவிட்டானே! நாளைக்கு நம் குட்டு வெளிப்பட்டுப் போகுமே!'
துறைமுகத்தில் கலியாணசுந்தரம் பிள்ளை தமக்காகக் காத்துக் கொண்டிருப்பதை மனக் கண்ணால் பார்த்தார்.
ரயில் விஸில் கிரீச்சிட்டது. பிள்ளையவர்கள் அவசர அவசரமாகக் கதவுப் பக்கம் வந்து இறங்கினார்.
பிளாட்பாரத்தில் கால் வைத்ததுதான் தாமதம். வண்டி நகர ஆரம்பித்தது.
"என்ன பிள்ளைவாள் இறங்கிட்டிய!" என்ற வேகம் அதிகரித்து ஓடும் ரயில் சாளரத்திலிருந்து ஒரு குரல். கலியாணசுந்தரம் பிள்ளை தான்.
"அவாள் வரலை!" என்று கத்தினார் பிள்ளை.
மெதுவாக, நிதானமாக ஸ்டேஷனைவிட்டு வெளியேறி ஸ்டோ ர் பக்கமாக நடந்தார் பிள்ளை. வழியில் சிறிது தூரம் செல்லுகையில் தான் பாஸ் இல்லாமல் எப்படிக் கப்பலில் செல்வது என்ற ஞாபகம் வந்தது பிள்ளைக்கு. 'புத்தியைச் செருப்பால்தான் அடிக்கணும்!' என்று சொல்லிக் கொண்டார் பிள்ளை. அவருக்குத் தமது ஆபத்தான நிலைமை அப்பொழுதுதான் தெளிவாயிற்று. உடல் நடுங்கியது.
'யார் செய்த புண்ணியமோ!' என்று மடியில் இருந்த விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டு, 'மகாதேவா!' என்றார் வாய்விட்டு.
ஸ்டோ ருக்கு வந்துவிட்டார். சாவதானமாகக் கதவைத் திறந்து, விளக்கை ஏற்றினார். மடியில் இருந்த சில்லறையைப் பெட்டிக்குள் வைத்துவிட்டு, சிட்டையை எடுத்து, 'மீனாட்சி பற்று பதினொன்றே காலணா' என்று எழுதினார்.
மறுபடியும் விளக்கு அணைந்தது. காலில் செருப்பை மாட்டிக் கொள்ளும் சப்தம்; பூட்டு கிளிக் என்றது.
முதலாளி வீட்டை நோக்கி சருக்சருக்கென்ற செருப்புச் சப்தம்.
பிள்ளை வழியில் துண்டை உதறிப் போட்டுக் கொண்டார். தலையை உதறிச் சொருகிக் கொண்டார்.
முதலாளி காற்றுக்காக வெளியே விசிப்பலகையில் தூங்குகிறார்.
"ஐயா! ஐயா!" என்றார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.
"என்ன வே, இவ்வளவு நேரம்!" என்று புரண்டுகொண்டே கொட்டாவிவிட்டார் முதலாளி ஐயா.
"இல்லே, சோலி இருந்தது. எம் பத்துலே இண்ணக்கி பதினொண்ணே காலணா எழுதியிருக்கேன்!" என்றார் பிள்ளை. அப்பொழுதும் அந்த நாவறட்சி போகவில்லை.
"சரி! விடியனெ வரப்போ மூக்கனெ வண்டியைப் போட்டுக் கிட்டு வரச்சொல்லும். சந்தைக்குப் போக வேண்டாம்!" என்றார். சொல்லிவிட்டு, கொடுங்கையைத் தலைக்கு வைத்துக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டார்.
மீனாட்சிசுந்தரம் பிள்ளை முதலாளி ஐயாவைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டே நின்றார். அப்புறம் மெதுவாகத் திரும்பி நடந்தார்.

மணிக்கொடி, 25-04-1937

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்