Jul 16, 2009

வரலாற்று அபத்தத்தின் தரிசனம்-ஜெயமோகன்

(ப. சிங்காரம் படைப்புலகம் குறித்து....)
ஜெயமோகன்

ஓர் இலக்கியப் படைப்பின் சிறப்பம்சம் எதுவோ அதுவே அதன் வாசிப்புக்குத் தடையாகவும் ஆகும் என்று படுகிறது. ஏனெனில், அது நமது பழகிப்போன வாசிப்பைத் தடைசெய்து புதிய மனநிலையை, புதிய வாசிப்பு முறையைக் கோருகிறது. ஓர் அசலான கலைப்படைப்புக்கு எப்போதும் நூதனத்தன்மை _ இதற்கு முன்பு இதுபோல ஒன்று இல்லை என்ற உணர்வு இருக்கிறது என்பதை இதனுடன் சேர்த்து யோசிக்கலாம். சிங்காரத்தின் படைப்புகளில் நமக்குத் தடையாக அமையும் அம்சங்களையே அவற்றின் சிறப்புகளாகக் கொண்டு யோசிப்பது உதவிகரமானது.

`புயலிலே ஒரு தோணி’ நாவலின் முதல் சிறப்பம்சம் அதன் கட்டுமானம்தான். வழக்கமாக ஒரு பிரச்சினைக் களத்தைப் பங்கிடும் கதாபாத்திரங்களை உருவாக்கி அவர்களின் மோதல்களினூடாக அப்பிரச்சினையின் பல்வேறு தளங்களைத் தெளிவு படுத்தியபடி முன்னகர்ந்து முடிவுக்கு வருவதுதான் நாவல்களின் பாணியாக உள்ளது. பிரச்சினைக்களத்தின் பொருத்தம், நம்பகத்தன்மை, தீவிரம் ஆகியவை நாவலின் அடிப்படை வலிமையாக அமைகின்றன. அவற்றில் இயங்கும் கதாபாத்திரங்கள் அப்பிரச்சினைக் களத்தின் எல்லா சாத்தியங்களையும் பரிசீலிக்கும் அளவுக்கு உள்விரிவு கொண்ட ஆளுமைகளாக அமைவதும், கதாபாத்திரங்களின் இயல்புகள் ஒன்றுக்கு ஒன்று சமநிலைப்படுத்தப்பட்டிருப்பதும், கதாபாத்திரங்கள் பிரச்சினையின் வளர்ச்சிக்கு ஏற்ப மாறுதல் கொள்வதும் நாவலை மதிப்பிடும் அளவுகோல்களாகின்றன. ஆனால், இந்த அம்சங்களேதும் இந்நாவலில் இல்லை. இது முன்வைத்துப் பேசும் பிரச்சினை ஏதுமில்லை. ஒரு மனிதனின் வாழ்வு தவிர நாவலில் முழுக்கத் தொடர்ந்துவரும் பொது அம்சம் ஏதும் இல்லை. இந்த மையக் கதாபாத்திரமன்றி வேறு எந்தக் கதாபாத்திரமும் தொடர்ச்சியும், பரிணாமகதியும் கொண்டிருக்கவில்லை. வரலாற்றின் ஓர் அலை, அதில் ஏறி ஒரு கணம் உச்சியில் ஆரோகணித்து மறையும் ஒரு முகம் _ அவ்வளவுதான் இந்நாவல். அந்த மையக் கதாபாத்திரம்கூட படிப்படியான வளர்ச்சிச் சித்திரமாக முன்வைக்கப்படவில்லை. பாண்டியனின் முகம் ஓர் ஓவியம்போலவே நமக்குத் தெரிகிறது. ஆனால், வரலாற்றின் ஒரு பெரும் அலை பொங்கி சுழித்துக் கரைமோதி நுரைத்து வழிந்து இல்லாமலாகும் சித்திரத்தை இந்நாவல் அளித்துவிடுகிறது. தமிழின் பிற நாவல்கள் எதிலும் இதற்கிணையான வரலாற்று தரிசனத்தை நாம் அடைய முடியாது. அந்த தரிசனத்தை அளிக்கும் பொருட்டு உருவம் கொண்டதே இதன் வடிவம்.

`புயலிலே ஒரு தோணி’ என்ற தலைப்பு இவ்வகையில் பலவிதமான அர்த்த தளங்கள் கொண்டது. வரலாற்றின் அந்த அலை ஒரு புயலின் தூலம். அதில் பாண்டியன் ஒரு தோணி, ஒரு தனிமனிதன் (அல்லது தனிமனிதனின் இலட்சிய சுயபிம்பம்) வரலாற்றை எதிர்கொள்ளும் விதத்தைக் குறிப்புணர்த்துகிறது. அல்லது வரலாற்றில் அவனுடைய இடம் என்ன என்பதைச் சுட்ட முயல்கிறது. இதனுடன் இந்நாவலில் குறிப்பிடுமளவு பக்கங்களை எடுத்துக்கொண்டுள்ள புயல் காட்சியை இணைத்துப் படிக்கலாம். கவித்துவத்தினூடாகவும் உயர்தர அங்கதத்தினூடாகவும் நம்முடன் தொடர்பு கொள்ளும் இந்நாவலில் கவித்துவச் சித்திரிப்புக்கு மிகச் சிறந்த உதாரணமாக அமையும் பக்கங்கள் இவை. தங்கவட்டமதி பரிந்து கிளம்ப வெள்ளி மலர்கள் பூக்க விரியும் வானத்துக்குக் கீழே இனிய பயணம். வந்துமோதும் அலைகள் என எண்ணங்கள். நாகை, மாமல்லை, கொற்கை, புகார் என்று விரியும் இறந்தகால நினைவுகள். மதுரையும் சின்னமங்கலமும் படங்கள் படங்களாக நுரைத்தோடும் நினைவுப் பிரவாகம். ஆவன்னாவின் நீண்ட பிரலாபம். அதிலிருந்து சுருள் விரியும் பலவிதமான செட்டியார்களினாலான ஒரு வணிக உலகம். பிறகு புயல். ஒவ்வொன்றும் ஒழுங்கும் அடுக்கும் குலைந்து மோதிச் சிதற கூடவே மனமும் சிதறி சொற்சுழலாக மாறுகிறது. பிறகு புயல் ஓயும் அமைதி. கடற்கூத்து எவ்வளவு நேரம் நீடித்தது என்று கணக்கிட முடியவில்லை. தொடங்கியபோதோ முடிந்தபோதோ எவரும் கடிகாரத்தைப் பார்க்கவில்லை. பார்த்தபோது எல்லாக் கடிகாரங்களும் நின்று போயிருந்தன... `இந்நாவலுள் வீசி ஒடுங்கும் வரலாற்றுப் புயல் அது. கடிகாரங்கள் நின்றுவிடுகின்றன. ஊடாக நுட்பமான ஒரு வரி நம்மைத் தொட்டு உசுப்பும். `கருநீலக் கடலுக்கடியில் ஏதோ புரள்வது போலிருந்தது. ஏதோ பெரிய மீன் அல்லது வேறுவகை நீர்வாசியாக இருக்கலாம்....’ கடல் அலைகளாக நினைவுகள் ஓயாது மோதும் அந்த முடிவற்ற பரப்பின் ஆழத்தில் புரள்வது என்ன? சிறுகதையின் கவித்துவத்திற்கும் நாவலின் கவித்துவத்திற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. சிறுகதை வரிகளுக்கிடையேயான மௌனத்தின் குறிப்பமைதி மூலம் தன் கவித்துவத்தை நிகழ்த்துகிறது. நாவல் சித்திரிப்புகளின் உட்குறிப்புகள் ஒன்றையொன்று நிரப்பிக் கொள்வதனூடாகத் தன் கவித்துவத்தை அடைகிறது. நாவல் கவித்துவத்தை அடையாளம் காட்ட தமிழிலிருந்து முன்வைக்கச் சாத்தியமான மிகச் சிறந்த தருணங்களில் ஒன்று இந்தப் புயல்.

சித்திரிப்பின் தொடர்ச்சியை இந்நாவல் ஓர் உத்தியாகவே உதறி விட்டிருக்கிறது. மிதக்கும் நீர்பிம்பங்கள்போல முகங்கள் முன்வந்து மோதி மறைகின்றன. ஆவன்னா, நாவன்னா, டாலர் ராஜாமணி அய்யர், விடாக்கண்டன் செட்டி, மொக்தார், பலவேசமுத்து, ரத்தக்கண் அருஞ்சுனை நாடார், சாத்தையா என்று பற்பல கதாபாத்திரங்கள் ஒரு கணமே மின்னி மறைகிறார்கள். பலருக்குத் தனித்துவம்கொண்ட ஓர் முக அடையாளம் தரப்பட்டிருக்கிறது. (பொதுநிறம், முகத்தில் அறிவுக்களை _ மாணிக்கம்) சிலர் நினைவில் அதிர்ந்தடங்கும் குரல் மட்டுமாக வருகிறார்கள். (`மீராசா! அட பலே! அங்கெ பார்ரா, சோவன்னா மானா போற போக்கை. கிஜுகிஜு கிஜுகிஜுனு போட் மெயிலாட்டம் பரிஞ்சு போறாக.’) சிலருக்கு ஒரு சம்பவப் பின்புலம். இந்தத் துளி அடையாளமே இவர்களை நினைவின் பரப்பில் நிறுத்துகிறது. மாணிக்கம், கே.கே. ரேசன் முதலில் கதாபாத்திரங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்பட்டு சற்று விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இக் கதாபாத்திரங்களை நினைவில் தொகுத்து அடுக்கி, இவர்களுக்கிடையேயான உறவின் கோடுகளை ஊடுபாவுகளாகக் கொண்டு ஒரு கதையைக் கற்பிதம் செய்ய முனைவோமெனில் மூளை சலித்துப் பின்திரும்ப நேரும். அதே சமயம் இவற்றை வெறும் முகங்களின் பரபரப்பாக, வரலாற்று அலையின் துளிகளாகப் பார்த்தோமெனில் மிக நுட்பமான காலதரிசனம் ஒன்று நமக்குக் கிடைக்கிறது... வரலாறென்பதும் காலம் என்பதும் உண்மையில் மனித முகங்களினாலான ஞாபகப் பிரவாகமன்றி வேறல்ல. இந்நாவலில் போரும் அழிவுகளும், வரலாற்றின் எல்லா நிகழ்வுகளும் இவ்வாறு மனிதமுகங்களின் நதியோட்டமாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. பலநூறு முகங்களில் நேதாஜியும் உண்டு, டாலர் ராஜாமணி அய்யரும் உண்டு. எதுவும் முக்கியமல்ல; எதுவும் முக்கியமற்றதும் அல்ல. கதாபாத்திரங்கள் இல்லாத முகப்பரப்பு என்பதே இந்நாவலின் குறை. முகங்களினாலான வரலாற்றுப் பரப்பு என்பதே இந்நாவலின் சிறப்பம்சம்.

பெரிய நாவல்களைச் சாத்தியமாக்குவதில் மொழிநடைக்குப் பெரும்பங்கு உண்டு. பெரும்பாலான நாவல் பேரிலக்கியங்கள் எல்லாவிதமான அலைகளையும் கொந்தளிப்புகளையும் தன்னுள் நிகழ்த்தக்கூடிய வலுவான தனித்துவ நடையால் ஆக்கப்பட்டுள்ளன. இந்நடையின் ஓட்டம் நாவலில் `தரை மட்டத்தில்’ உள்ள பகுதிகளை உச்சங்களுடன் பிணைத்து ஒரு முழுமையையும் சமநிலையையும் உருவாக்குகிறது. அந்நாவலுக்குரிய விசேஷமான உணர்வுநிலையை நாவல் முழுக்கப் பரவி நிற்கச் செய்வதாகவும் அந்நடை உள்ளது. ஆனால், புயலிலே ஒரு தோணியில் அப்படி நாவலை ஆக்கக்கூடிய பொதுவான தனிநடை ஒன்று இல்லை. இதன் குறைபாடுகள் இந்நாவலுக்கு உள்ளன. வாசிப்பில் நாவலனுபவம் அறுபட்டு மீளும் உணர்வு குறைந்தபட்சம் மூன்று முறையாவது நிகழ்வதற்குக் காரணங்களுள் இதுவும் ஒன்று. அதே சமயம் ஒருமையற்றிருப்பதன் மூலம் உருவாகும் சாத்தியங்களை இந்நாவல் சிறப்பாகப் பயன்படுத்தியிருப்பதாகவும் படுகிறது. நாவல் எப்படி ஒருமையுள்ள நடையால், தொகுப்புத் தன்மையை திறம்பட சாதிக்கிறதோ அதேபோல தொகுக்கப்படும் அம்சங்களின் மொழிச் சிறப்பம்சங்களைத் தன் பொதுநடை மூலம் மழுங்கடித்துவிடும் அபாயத்தையும் எதிர்கொண்டபடி உள்ளது. `புயலிலே ஒரு தோணி’ தான் ஒருவேளை தமிழ் நாவல்களிலேயே மாறுபட்ட மொழிச் சாத்தியங்களினூடாகப் பயணம் செய்வதில் முதலிடம் பெறும் நாவல். ஆனால், இந்நாவலை நினைவு கூர்கையிலேயே மனம் ஒரு குறிப்பிட்ட மொழிநடையின் தாளத்தை அடையாளம் காண்பதில்லை. தனித்தனியான மொழித் துணுக்குகளாகவே நினைவுகூர்கிறது. இதை இந்நாவலின் தனித்தன்மை என்றும் பலவீனம் என்றும் கூறலாம்.

`புயலிலே ஒரு தோணி’யின் ஆரம்பக் காட்சிகளில் சாகசக் கதைகளுக்குப் பொருத்தமான துல்லியமான தகவல்களினாலான சித்திரிப்புகளும் தத்திச் செல்லும் கூறுமொழியும் காணப்படுகிறது. அப்பகுதியில் உரையாடல்களில் ஹெமிங்வேயின் உரையாடல்களை நினைவுறுத்தும் கனகச்சிதம். சில சமயம் மொழியைக் கவிதைக்கருகே கொண்டுவரும் தீவிர கணங்கள், பிறகு நாவலின் பொதுவான நடைநிறம் மாறுபடுகிறது. அங்கத அடிநாதம் நீங்காது கார்வை கூட்டும் குணச்சித்திரச் சித்திரிப்புகள் நாவலை புதிய புதிய இடங்களுக்குக் கொண்டு செல்கின்றன. ஒன்று கதாபாத்திரங்களைக் காட்டும் ஆசிரியரின் அங்கத நடை, அடுத்தது செட்டியார்களுக்குரிய விசேஷமான தமிழின் ஏற்ற இறக்கங்களைக்கூட வித்தாரமாகப் பதிவுசெய்யும் விதம். இந்த மொழியாட்டத்தின் மிகச் சிறந்த உதாரணம் வட்டிக் கணக்கும் வேசையரும் மாறிமாறி வந்துபோகும் செட்டிப்பிள்ளைகளின் கணக்கு ஒப்புவிக்கும் உரையாடல். பிறகு கவித்துவச் சாத்தியங்களைக்கொண்ட மீள்நினைவுச் சித்திரிப்புகளுக்கு நகர்கிறது நடை. கடல் அலைகளின் அடிகளையும் பாண்டியனின் நினைவலைகளின் மோதல்களையும் இணைத்திருக்கும் விதம் பலவிதமான கற்பனைச் சாத்தியங்களைத் திறந்துவிடுகிறது. பிறகு மீண்டும் சாகச நாவல்களுக்குரிய துல்லியமான தாவல்நடை. நடுநடுவே மரபிலக்கியங்களினூடாகக் கடந்து செல்லும் எள்ளல் நிரம்பிய விவாதங்கள். ஆக, இந்நாவல் ஒரு மொழி நிகழ்வு என்பதற்கு மேலாக ஒரு மொழிப் பிராந்தியமாக உள்ளது.

சிங்காரம் இந்நாவலில் மொழியின் சகஜத்தன்மையால் சாத்தியப்படும் சகஜ நகர்வை உதாசீனம் செய்கிறார். மொழியின் அதிகபட்சத் திறன் கோரப்படும் இடத்தில் மட்டும் அச்சவாலை நேரடியாக எதிர்கொள்கிறார். தருக்கமனம் அல்லது புறப்பிரக்ஞை சிதறும் தருணங்களில் அகமனம் உடைப்பெடுத்துப் பீறிடும்போது அதைப் பிரதிபலிக்க மொழி கொள்ளும் பாய்ச்சலையும் பறத்தலையும் சிதறலையும் திரிபுகளையும் சொல்லுவதே உரைநடையாளனுக்கு எப்போதும் பெரும் சவால் என்பதை ஒரு நாவலாசிரியனாக நான் உறுதியாகக் கூறமுடியும். அதை எந்த அளவு வெற்றிகரமாக நிகழ்த்துகிறான் என்பதே ஒரு படைப்பாளியின் நடையை அளக்கும் அளவுகோல். இந்நாவலில் அதற்கு மிகச் சிறப்பான மூன்று உதாரணங்களைக் கூற முடியும். ஒன்று போதையில் பாண்டியன் மனம் தடுமாறி வரலாற்று மாந்தரும் சமகால மனிதர்களும் இறந்தகாலமும் நிகழ்காலமும் எல்லையழிந்து கலந்த தெரு வழியாகச் சஞ்சரிக்கும் இடம். பட்டினத்தாரும், சீத்தலைச் சாத்தனாரும் பினாங்குச் செட்டியாரும் ஒன்றாக முயங்கிப் பிரிந்து நெளியும் அந்த மொழிப்பிராந்தியம் மரபிலக்கியப் பயிற்சியின் பின்புலத்துடன் வாசிக்கும் வாசகனுக்கு பற்பல சாத்தியங்களைத் திறந்தபடியே இருக்கும் ஓர் அற்புத அனுபவமாகும். இரண்டாவது சந்தர்ப்பம் புயல் அடிக்கும் கணங்களில் பாண்டியன் மனம் கொள்ளும் பதற்றத்தினூடாக சொற்கள் சிதறி அர்த்தமிழந்தும் அர்த்த ஆழம் அதிகரித்தும் கொந்தளிக்கும் விதம். மூன்றாவது சுடப்பட்டு இறப்பதற்கு முந்தைய சில கணங்களில் முழு வாழ்வும் பாண்டியனூடாகப் படங்களாகவும் சொற்களாகவும் பீறிட்டோடி மறையும் காட்சி.

மொழியின் அதிகபட்ச சாத்தியங்கள் பயன்படுத்தப்பட்ட புனைவுச் சந்தர்ப்பங்கள் தமிழில் புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ரா. சுந்தர ராமசாமி ஆகியோரின் படைப்புலகிலேயே இதுவரை அடையாளப்படுத்தப் பட்டுள்ளன. அவற்றுக்கு இணையாகவோ, வேறு ஒரு தளத்தில் ஒருபடி மேலாகவோ, இந்நாவலில் சிங்காரத்தின் மொழி மேலெழும் தருணங்களைக் குறிப்பிடலாம். மொழி சட்டென்று தன்னைக் குலைத்துக் கொண்டு சூழலின் தேவைக்கேற்ப புதுவடிவுகொண்டு அபூர்வமான வெளிப்பாட்டை சாதிக்கும் தருணங்களை இந்நாவலின் நடையில் தொடர்ந்து பார்த்தபடியே போகலாம். இந்நாவலின் முக்கியமான கவர்ச்சி இதுவேயாகும்.
* * * * *
சாகஸ நாவல்களின் பொது இலக்கணத்தில் இருந்து `புயலிலே ஒரு தோணி’ ஒரு முக்கியமான இயல்பு மூலம் வேறுபடுகிறது. சாகஸ நாவல்கள் பொதுவாக மதிப்பீடுகளில் நேர்நிலையம்சம் கொண்டவையாக இருக்கும். அவற்றின் சாகஸ நாயகன் பொதுவாக அனைவருக்கும் சம்மதமான விழுமியங்களையும் நெறிகளையும் கொண்டவனாக இருப்பான். பெரிய இலட்சியக் கனவுகள் சாகசங்களின் தவிர்க்க முடியாத மறுபக்கம்; உளவியல் ரீதியாகக்கூட. காரணம் இரண்டுமே மானுட எல்லை மீறலின் விளைவுகள். ஆனால், புயலிலே ஒரு தோணி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மரபு எதிர்ப்புத் தன்மையுடனும் நிறுவன எதிர்ப்புத் தன்மையுடனும் இருக்கிறது. நாவலின் ஒவ்வொரு பகுதியுடனும் விடுபடாது இணைந்திருக்கும் பொது அம்சம் என்னவெனில் அங்கதமும் எள்ளலும் நிரம்பிய ஆசிரியனின் மரபு எதிர்ப்புப் பார்வையைத்தான் குறிப்பிட வேண்டும். தீவிரம் மிக்க போர்ச் சித்திரிப்புகளில்கூட கசப்பு நிரம்பிய அங்கதம் ஊடுருவியிருக்கிறது. மெடான் நகரத்தில் ஜப்பானிய ராணுவம் புகுந்து, ஆனால் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முந்தைய அராஜக நிலையைச் சித்திரிக்கும் ஆசிரியரின் நடையை கவனித்தால் இதை உணரலாம். தார்மீகமான சீற்றத்திற்குப் பதிலாக கசப்பின் விஷமே அவ்வரிகளில் நுரைக்கிறது. இந்த அங்கதம் சட்டென்று உக்கிரமடைந்து, வெட்டி மேஜைமீது வைக்கப்பட்ட மனிதத் தலைகளை மயிர் சீவிவிடும் சிப்பாயைக் காட்டும்போது காறி உமிழும் தீவிரக் கணமாக மாறிவிடுகிறது.

இந்த அங்கதப் பின்புலத்தில் ஒரு சாகச நாயகனைப் பொருத்தும்போது அவன் டான்குவிசாட்போல ஆகிவிடும் வாய்ப்புதான் அதிகம். ஆனால், சிங்காரத்தின் பாண்டியன் நுட்பமான ஒரு குணச்சித்திர விசேஷம் மூலம் பிற சாகச நாயகர்களிடமிருந்து மாறுபடுகிறான். அவனுக்கு எந்த இலட்சியங்களிலும் மிதமிஞ்சிய விசுவாசம் இல்லை. எதன் பொருட்டும் உயிர்துறக்கச் சித்தமானவனாக இல்லை அவன். நேதாஜி மீதும் இந்திய விடுதலைமீதும் அவனுக்கு ஈடுபாடு உண்டு. பக்தியோ வெறியோ இல்லை. பொதுவாக நெறிகள், விழுமியங்கள்மீது எள்ளல் நிரம்பிய பார்வையே பாண்டியனிடம் உள்ளது. அவனுடன் ஹெமிங்வேயின் `மணி முழங்குவது யாருக்காக?’’ என்ற நாவலின் கதாநாயகனை முதல்கட்ட ஞாபகமாக நாம் இணைத்துப் பார்க்க முடியும். எதற்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடுகிறானோ அதனுடன் ஆழ்ந்த மனவிலக்கம் உடைய தீரநாயகன். ஆனால், பாண்டியனுக்கு இருத்தல் சார்ந்த தேடல்களோ சஞ்சலங்களோ ஒன்றும் இல்லை. வெறுமே சாகசத்தின் சுவாரஸியத்தின் பொருட்டுத்தான் அவன் சாகஸத்தில் ஈடுபட்டான் என்று படுகிறது. சாகசம் அவன் இயல்பு என்பதனால், அதில்தான் அவனுக்கு உண்மையான மகிழ்ச்சி உள்ளது என்பதனால் இந்திய தேசிய ராணுவத்தின் சரிவிற்குப் பிறகு பாண்டியன்தான் வந்து குடியேறிய தேசத்தின், உணர்வுரீதியாக தனக்குப் பெரிய ஈடுபாடு ஏதுமில்லாத ஒரு தேசத்தின் விடுதலைப் போரில் ஈடுபட்டு உயிர்துறக்கிறான். ஹெமிங்வேயின் நாயகன் ஸ்பானிஷ் உள்நாட்டுப் போரில் ஈடுபடுவதுபோல. ஆனால், பிந்தையதற்கு அன்று உலகளாவிய ஒரு புரட்சி முகம் இருந்தது. பாண்டியன் இந்தோனேசிய விடுதலைப் போரையும் பகடி செய்யத் தயங்கவில்லை. பல பக்கங்களில் பாண்டியனூடாக வெளிப்படும் அங்கதக்குரல் ஆசிரியர் குரலாகவே இருக்கிறது.

மொத்தமானதொரு பார்வையில் மானுடக் கலாச்சாரம் மீதான தீவிரமான அவநம்பிக்கையைப் பதிவு செய்கிற, ஞானத்தின் கசப்பு நிரம்பிய சிரிப்பை நிரப்பி வைத்திருக்கிற ஓர் இலக்கியப் படைப்பாக புயலிலே ஒரு தோணி காட்சியளிக்கிறது. அதிகாரப் போட்டியில் தன்னைத்தானே அழித்துக் கொண்டிருந்த மானுடத்தைப் போரினூடாகக் கண்டடைந்த நுட்பமான படைப்பு மனம் கொண்ட ஆழமான தரிசனம் அது. இந்நாவலின் சாரமே அந்த தரிசனம்தான். ஒரு பக்கம் செவ்விலக்கியங்களினூடாகவும் மறுபக்கம் சமகால அரசியல் நிகழ்வுகளினூடாகவும் அந்தப் பார்வை நகர்ந்து அபத்தத்தின் உச்சநிலையைத் தன் பக்கங்களில் சாத்தியமாக்குகிறது. இந்த அபத்த தரிசனத்தாலேயே இது தமிழின் மிக முதன்மையான படைப்புகளில் ஒன்றாக மாறுகிறது. சென்றகால இலக்கிய மதிப்பீடுகளில் இவ்வம்சம் ஒரு வேளை குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கலாம். ஆனால், உலகளாவிய இலக்கியப் பரப்பில் இந்த அம்சம் இலக்கியத்தின் மைய தரிசனமாக ஆகிவிட்டிருக்கிறது என்று படுகிறது.

மூன்று தருணங்களை எடுத்துக்காட்டி இந்நாவலில் இயங்கும் இந்தப் பார்வையை விளக்கலாம். ஒன்று விபச்சார விடுதியில் நடக்கும் அந்தத் தமிழ்ப் பண்பாட்டாய்வு. ஒரு பக்கம் தண்டமிழாசான் சாத்தன் மணிமேகலையின் பிறப்பு ரகசியத்தை ஆய்வு செய்ய, மலேயாத் திருவள்ளுவர் சுப்பிரமணியனாரும் டத்தோ கிராமட் சாலையில் வீடு கொண்டு ஆன்றோர் விதித்த கற்புநெறி தவறாதொழுகி கலியுக கண்ணகி என்ற பட்டத்தோடு வாழும் வள்ளியம்மையாரும் அறநெறி வழுவாது ஒன்பதாம் இலக்க அறைக்குள் மருவ, யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல் நிறைந்த தங்கக் கிண்ணங்களுடன் நடக்கும் தமிழாய்வின் சூட்சுமங்கள் மீண்டும் மீண்டும் வாசித்து விரிவுபடுத்திக்கொள்ள வேண்டியவை. இதன் மறுபக்கமாக சமகால உலக ஆதிக்க அரசியல்மீது கடும் கசப்பின் விஷத்தை உமிழும் கெ.கெ.ரேசன் தீர்க்கதரிசியின் மதுக்கடை சுவிசேஷம், ஏதென் தோட்டத்து ஆதாமியா முதல்வனின் கொடிவழி வந்த களவழி நாட்டு கலம்செய் கோவாம் கார்மேக தீர்க்கதரிசியின் புதல்வன் கதிரேசன், தீர்க்கதரிசியின் சொற்களினூடாக ஆங்கில ஆதிக்கத்தின் நிறமும் மதமும் மனோபாவமும் எள்ளி நகையாடப்படும் சந்தர்ப்பம் தமிழைப் பொறுத்தவரை மிகச் சிறந்த அங்கதப் புனைவுத் தருணம் என்று தயங்காமல் கூறலாம்.

இவ்விரு கோடுகளினூடாக நகர்ந்து வரும் ஆசிரியரின் வாழ்க்கைப் பார்வை ஆக்ரமிக்கப்பட்ட மண்ணில் நின்று குடித்து நிலைகெட்டு ``மைநேம் இஸ் கார்ட்டர் ஹிஹிஹி சி,ஏ,ஆர்,டி,இ,ஆர், கார்ட்டர். ஹிஹிஹி’’ என்று இளிக்கும் அமெரிக்கச் சிப்பாயில் உச்சம் கொள்கிறது. இந்நாவலின் அபத்த தரிசனத்தின் ஆகச் சிறந்த தருணமும் இதுதான். இன்று இந்நிமிடம்வரை உலகின் பல்வேறு நிலங்களில் பல்வேறு மொழிகளில் அந்த இளிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறது. (தற்செயலாக அமைந்ததென்றாலும் அந்த இளிப்பு அமெரிக்க இளிப்பாக இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.) அது பிரிட்டிஷ் இளிப்பு. அதற்கு முன்பு தைமூர்கள் ஜெங்கிஸ்கான்கள் அலக்ஸாண்டர்கள்..... அந்த இளிப்பைத் தொடர்ந்து பாண்டியனின் ஞாபகத்தில் விரியும் சின்னமங்கலத்தினூடாகப் பரவிப் பாய்ந்து செல்லும் ஆக்ரமிப்புகளின் நீண்டவரிசையைப் படிக்கும்போது ஏற்படும் வரலாற்றுச் சித்திரம் மிக அசாதாரணமானது. அச்சித்திரத்தில் இந்நாவலில் நிகழும் வரலாற்றின் ஒரு அலையை நாம் பொருத்தலாம். அதில் பாண்டியன் என்ற தனிமனிதனைப் பொருத்தலாம். அப்போது பாண்டியன் உதட்டில் எப்போதுமிருக்கும் அங்கதச் சிரிப்பு நமது உதட்டிலும் விரியக்கூடும்.
* * * * *
இந்நாவலில் உள்ள ஒரு சிறப்பம்சம் இன்றைய தமிழ்ச் சூழலுக்கு அன்னியமானது. தமிழ்ச் சிற்றிதழ்சார் இலக்கியச் சூழலுக்கு மரபிலக்கியங்களுடன் பழக்கம் மிகமிகக் குறைவு. மரபிலக்கியப் பயிற்சி உடையவர்கள் மரபு மனம் கொண்டவர்கள். முதல்சாரார் இந்நாவலில் மரபிலக்கியங்கள் நுட்பமாகப் பகடி செய்யப்பட்டிருப்பதன் சுவையை உணரவே முடியாது போகும். இரண்டாம் சாரார் ரசிக்க முடியாது போகும். இந்நாவல் புறக்கணிக்கப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மழலைத் திருமொழியில் சில மலாயும் சில தமிழும் குழறித் தருகுணநாடியர் குறுகிக் கடைதிறமின் என்று நேரடியாக (கலிங்கத்துப் பரணியை) பகடிசெய்யும் இடங்கள் இதில் நிறையவே உள்ளன. தாயுமானவர் பட்டினத்தார் வரிகள். ஆனால், பாண்டியனின் போதை நினைப்பினூடாகச் சித்தர் பாடல்களின் `ஊத்தைக்குழியில்’ தொடங்கி குறளின் `மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பத்தினூடாக’ பட்டினத்தாரின் மரண தரிசனத்தில் முடியும் ஒன்றரைப் பக்கத்தில் உள்ள மரபிலக்கிய உட்குறிப்புகளை படித்து ஒப்பிட்டு விரித்தெடுக்க புலமையும் கற்பனையும் நகைச்சுவையுணர்வும் ஒரே சமயம் கைகொடுக்க வேண்டும்.
* * * * *
`புயலிலே ஒரு தோணிக்கு’ மாறாக ஒருமையும் கூர்மையும் கொண்ட, எள்ளல் அம்சம் குறைவான, குறுநாவல் `கடலுக்கு அப்பால்’. போர் முடிந்து இந்திய தேசிய ராணுவம் சிதைந்து உணர்ச்சி உத்வேகங்கள் வடியும் தேய்பிறைக் காலகட்டத்தைக் காட்டும் படைப்பு இது. இதை புயலிலே ஒரு தோணியின் இரண்டாம் பகுதி என்றோ, சமன்பகுதி என்றோ கூறிவிடலாம். அபூர்வமான தனியாளுமைகளாக வெளிப்பட்ட மாணிக்கம், கெ.கெ.ரேசன் முதலிய கதாபாத்திரங்கள் அவ்வரலாற்றுச் சந்தர்ப்பம் முடிவடைந்ததும் பொருளிழந்து லௌகீகக் கடலில் மூழ்கி கரைந்து மறைவதின் சித்திரத்தை இந்தக் குறுநாவல் அளிக்கிறது. இம்மிகூட கற்பனாவாத, சாகஸப் பண்பு இல்லாத அப்பட்டமான யதார்த்தத்தில் இது காலூன்றி நிற்கிறது. இது புயலுக்குப் பிந்தைய அமைதி.

இக்குறுநாவலின் முக்கிய அம்சங்கள் மூன்று. ஒன்று இதன் மையக் கதாபாத்திரமான செல்லையா. அவன் பாண்டியனின் நீட்சி; மற்றொரு சாத்தியம். போர் முடிந்த சகஜநிலையில் வீரமும் சாகசமும் அர்த்தமிழந்து போய் உலகியலுக்கு உதவாதவையாக மாறிவிடும்போது எந்த அர்த்தமும் உபயோகமும் இல்லாத பழம்பொருள்போல வீணாக, துருத்தியபடி நிற்கிறான் அவன். லௌகீக வாழ்வில், வட்டித் தொழிலுக்குள், நுழைய அவன் முயல்வதன் பரிதாபச் சித்திரம் இதில் உள்ளது. எலிவளையில் புலி நுழைய முயல்வதுபோல. போரை வென்றவனை அமைதி தோற்கடிக்கிறது, பரிபூரணமாக.

வானாயீனா இன்னொரு முக்கியமான கதாபாத்திரம். நாணலின் வலிமை அவருடையது. வெள்ளம் வடிந்ததும் நாணல் நிமிர்ந்து வேரோட ஆரம்பிக்கிறது. இந்தத் தோற்கடிக்க முடியாத தன்மையை செல்லையாவும் எதிர்கொள்ள முடியவில்லை. தனக்கென ஒரு வாழ்க்கை நோக்கும் அதற்கான பழக்க வழக்கங்களும் அவற்றைப் பின்பற்றத் தேவையான மன உறுதியும் உடையவர் அவர். அவருடைய நியாயங்கள் அவரளவிற்கு தருக்க பூர்வமானவை.

மூன்றாவது மையம் மரகதம். அவளால் ஒருபோதும் எல்லையை மீற முடியாது. ஆனால், தன்னால் சற்றும் நேசிக்கப்படாத நாகலிங்கத்திற்கு மனைவியாக முடியும். அதற்குக் கற்பு தடையாக இராது. எது சம்பிரதாயமோ அதுவே நீதி என்று நம்புகிற அழுத்தமான `உள்வீட்டு’ப் பார்வை அவளுடையது. திருமணமான ஓரிரு நாட்களில் அவள் செல்லையாவை மறந்து நாகலிங்கத்தின் `வீட்டுக்காரியாக’ சந்தோஷமாக இருப்பாள். செல்லையாவைத் தனியாகச் சந்திக்கும் உணர்ச்சிகரமான தருணத்தில்கூட தொடாதீங்க, தொடாதீங்க என்றுதான் அவள் புலம்புகிறாள்.

இம்மூன்று மையங்களுக்கும் இடையேயான மறுசாத்தியங்கள் இல்லாத இடைவெளியே இந்நாவலின் கரு. அந்த எல்லையை எவரும் கடக்க முடியாது. `புயலிலே ஒரு தோணி’ மானுட மீறலின் கதை. `கடலுக்கு அப்பால்’ மானுடனின் மீற முடியாமைகளின் கதை. `எல்லாம் யோசிக்கும் வேளையில் உண்பதும் உறங்குவதுமாக முடியும்’ என்ற தாயுமானவரின் வரி இந்த நாவலின் உச்சகட்டக் குரலாக ஒலிக்கிறது. இலட்சியக் கனவுகள், ஆசைகள், சாகசங்கள், மீறல்கள், வரலாற்றின் அலைக் கொந்தளிப்புகள், அதிகாரங்கள், வெற்றி தோல்விகள், இழப்புகள் _ எல்லாம் இறுதியில் அவ்வரியில் முடிகின்றன. இந்த எதிர்மறை தரிசனம் இந்நாவல்களின் முடிவில் ஏன் ஒரு நிறைவுணர்வை, முழுமையுணர்வைத் தரவேண்டும். முதிர்ந்த அங்கதம் கனிந்த வெறுமையில் முடிவதில் ஒருவிதமான உன்னதம் கைகூடுவது எப்படி?
* * * * *
இவ்விரு நாவல்களின் கலைரீதியான எல்லைகள், பலவீனங்கள் என்ன? மனித வாழ்வு தவிர்க்க முடியாமைகளினால் ஆன பெரும் நாடகம். சாத்தியங்களின் எல்லையின்மைக்கும், மானுட வாழ்வின் இன்றியமையாமைக்கும் இடையேயான உச்சகட்ட மோதலையே பேரிலக்கியங்கள் காட்டுகின்றன. ஆனால், `புயலிலே ஒரு தோணி’ இவ்வுள் மோதல்களை கணக்கில் கொள்ளவேயில்லை. ஒன்றொடொன்று உறவற்ற, மிதக்கும் தனிப்புள்ளிகளாக ஒவ்வொன்றையும் கண்டு நகர்ந்து முடிகிறது அது. அதாவது அது வாழ்வை விலகிநின்று வேடிக்கை பார்க்கிறது. வாழ்வின் நாடகத்தினூடாக, இன்றியமையாத சாரமாகத் திரண்டு வரும் அங்கதமல்ல அதில் உள்ளது. மாறாக ஆசிரியரின் பார்வை அந்நிகழ்வுகள்மீது படியவைக்கும் அங்கதமாகும். அதே சமயம் இன்றியமையாமைகளின் தீவிர மோதலின் கணம் `கடலுக்கு அப்பாலி’ல் உள்ளது. ஆனால், அது அந்த இரும்புவிதியை அடையாளம் காட்டுவதன் வழியாகவே நின்றுவிடுகிறது. `புயலிலே ஒரு தோணியை’ கிரேக்க இன்பியல் நாடகங்களின் அங்கதத்துடன் ஒப்பிடுவதனூடாகவே அதன் அழகியல் குறைகளை அறியமுடியும். அந்நாடகங்களில் அங்கதம் (அல்லது அங்கத அவலம்) ஒரு பார்வையாக அல்ல, மாறாக அவை சித்திரிக்கும் வாழ்வின் தவிர்க்க முடியாத இயங்குவிதியாகத் திரண்டு வருகிறது. அதாவது அவற்றில் சிரிப்பது ஆசிரியன் அல்ல, விதி.
* * * * *
தமிழ் என்றென்றும் பெருமையுடன் எண்ணிக் கொள்ள வேண்டிய மீண்டும் மீண்டும் மீண்டும் வாசித்துப் படைத்தெடுக்க வேண்டிய முக்கியமான சில சிறந்த படைப்புகளில் இந்நாவல்களும் உண்டு.
(தமிழினி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் `புயலிலே ஒரு தோணி’ புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் பின்னுரையின் சுருக்கம்)

புயலிலே ஒரு தோணி (இரண்டு நாவல்கள்)
ப. சிங்காரம்
பக். 416; ரூ. 180; தமிழினி,
342 டி.டி.கே. சாலை, ராயப்பேட்டை,
சென்னை_14;  email : tamilini@intamm.com

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்