Jul 19, 2009

ஜி. நாகராஜனின் படைப்புலகம்-மனுஷ்யபுத்திரன்

மனுஷ்யபுத்திரன்

(1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

தமிழின் நவீன இலக்கிய வெளியில் மத்தியதர வாழ்வின் ஆசாபாசங்களும் பெருமூச்சுகளும் மதிப்பீடுகளும் நம்மை மிகவும் ஆயாசமடைய வைத்துள்ளன. இந்த நூற்றாண்டின் தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தமிழ் வாழ்க்கையின் பரப்பு சின்னஞ்சிறியது; சில உயர் இடைநிலை சாதிகளின் _ வர்க்கங்களின் அனுபவத்திலிருந்தும், கண்ணோட்டத்திலிருந்தும் உருவாக்கப்பட்டது. மத்தியதர வாழ்வின் அறவியல் அழகியல் பிரச்சனைகள் தமிழ் இலக்கியத்தின் பிரச்சனைகளாக இருந்து வந்துள்ளன. வரலாற்றின் ஏற்றத்தாழ்வுகள் வழியே கலை இலக்கியத்தை அவற்றின் நவீன வடிவங்களிலும் ஊடகங்களிலும் கையாளும் வாய்ப்பைப் பெற்றவர்கள் தம்முடைய வாழ்வின் நியதிகளையும் தர்மங்களையும் ஒட்டு மொத்த வாழ்விற்கான நியதிகளாக சித்தரித்தனர். இந்த நியதிகளுக்கு வெளியே இருந்த சமூக அடுக்குகளில் வாழ்வு எண்ணற்ற முரண்களோடு தனக்கான மொழியையும் குரலையும் தேடி காலத்தின் மௌனங்களுக்குள் விம்மிக் கொண்டிருந்தது.

இந்த நூற்றாண்டில் நமது அரசியல் பண்பாட்டு நீரோட்டத்தை ஒழுங்குபடுத்திய இரண்டு சக்திகள் காந்தீயமும் மார்க்ஸீயமும் ஆகும். மதங்கள், சாதிகள், வர்க்கங்கள், சமூக உறவுகள், மதீப்பீடுகள், ஒழுங்குகள் தர்க்கங்கள் என சகல பண்பாட்டுக் கூறுகளுக்கும் மறுவிளக்கங்கள் அளித்து ஒரு பொதுவான வாழ்க்கைக் கண்ணோட்டத்தை உருவாக்க முயன்றன. இந்த இரண்டு தத்துவங்களும் சமூகத்தை, வாழ்க்கையை, மனித உறவுகளை அவர்களது உடலை அவர்களது ஹிருதயத்தைப் பற்றித் திட்டவட்டமான முடிவுகளையும் இலட்சியங்களையும் கொண்டிருந்தன. அவை அதிகாரத்திற்கான வேட்கையோடு இணைந்திருந்ததால் புரிந்து கொள்வதைவிட மாற்றியமைப்பதில் தீவிரங்காட்டின. மனித இயல்புகள் அவற்றின் மேல் செலுத்தப்படும் வரையறைகள் பற்றி காந்தீயமும் மார்க்ஸீயமும் கொண்டிருந்த தவறான கற்பிதங்களால் அவை நம் கண்ணெதிரேயே சிதறிவிட்டன.

பெரும்பாலான தமிழ்ப்படைப்பாளிகள் காந்தீயத்தாலும் மார்க்ஸீயத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள். அவற்றின் நம்பிக்கைகளையும் வரையறைகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்றுக் கொண்டவர்கள். இதன் மூலம் உருவான இலக்கியவாதக் கண்ணோட்டத்துடன் வாழ்வின் முரண்களை எதிர்கொண்டனர். இந்த இலட்சியவாதக் கண்ணோட்டம் கூர்மையாக அம்முரண்களை வெளிப்படுத்துவதற்குப் பதில் மழுங்கடித்தது. அசௌகரியமான உண்மைகளை மூடிமறைத்தது. பொய்யான சமாதானங்களை வழங்கியது. இந்தப் பின்னணியைச் சேர்ந்த படைப்பாளிகள் தம்முடைய சாதீய வர்க்க இருப்பிற்கு வெளியே இருந்த விவசாயிகள், தொழிலாளர்கள், இழிந்த சாதிகள், வேசிகள், பொறுக்கிகள் பற்றி எழுதவே செய்தனர். ஆனால் நமது காலத்தில் மிகவும் அருவருக்கத்தக்க ஓன்றாகிவிட்ட மனிதநேயம் அல்லது சமூக அக்கறை என்ற மேலிருந்த குற்றவுணர்வுப் பார்வையிலிருந்து கடைப்பட்டோர் பற்றிய சித்திரங்கள் உருவாக்கப்பட்டதை இன்றைய நவீன ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த பொதுக்கருத்தியலுக்குள் அவர்களுக்கான அசலான இருப்பை இழந்திருந்த கடைப்பட்டோர் தமக்கான வாழ்வியலையும் அறவியலையும் வெளிப்படுத்தும்போது அவை அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன, ஜி. நாகராஜனின் படைப்புலகம் ஒரு மத்தியதர வாசகனுக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சி இத்தகையதுதான். அவனது எல்லா அடிப்படை தார்மீக நியதிகளையும் அது நிராகரித்து விடுகிறது.

ஜி. நாகராஜனின் உலகம் முழுக்க முழுக்க பாலுணர்ச்சியும் குற்றமும் சம்பந்தப்பட்டது. ஆனால் அது பாலுணர்வு மற்றும் குற்றம் சார்ந்த நடவடிக்கைகளை விவரிக்கும் ஒரு புனைவு அளிக்கக்கூடிய எந்தக் கிளுகிளுப்பையும் சுவாரசியத்தையும் தருவதில்லை. பாலுணர்ச்சியிலும் குற்றத்திலும் படிந்திருக்கும் கனவையும் சாகசத்தையும் நாகராஜன் இரக்கமில்லாமல் அழித்து விடுகிறார். சில சமயம் குரூரமான, சிலசமயம் வேடிக்கையான சில சமயம் அர்த்தமற்ற, சிலசமயம் நெகிழ்ச்சி மிகுந்த ரூபங்களைக் கொல்லும் பாலுணர்ச்சியும் குற்றமும் வாழ்வின் விசித்திரங்களை கண்டடைவதற்கான ஒரு பாதையே தவிர அவையே இலக்குகள் அல்ல பாலுணர்ச்சியும் வன்முறையும் முழுமையாக கட்டவிழும் நாகராஜனின் படைப்புக்களனில் மனிதன் அடையக்கூடிய அவமானங்கள் இம்சைகள், நம்பிக்கைக்கும் மீட்சிக்குமான தத்தளிப்புகள் மீட்சியற்றுப் போகையில் வாழ்வதற்கான சமாதானங்கள் என எண்ணற்ற தளங்கள் விரிகின்றன. நாகராஜனுக்கு மனிதனைப் பற்றியோ வாழ்க்கையைப் பற்றியோ கற்பிதங்கள் இல்லாததால் நிகழ்வுகளை அதன் ரத்தமும் தசையுமான வடிவில் மீட்டெடுக்கிறார். நடைமுறைத் தேவைகளும் வாழ்வதற்கான போராட்டமும் மனிதனின் இரகசிய ஆசைகளுமே வாழ்வின் திசைவழியை; தீர்மானிக்கின்றன; இலட்சியங்களும் மதிப்பீடுகளும் அல்ல என்பதை நாகராஜனின் குரூரமான யதார்தத் தளம் வெளிப்படுத்துகிறது.

ஜி. நாகராஜனையும் அவரது படைப்புகளையும் எப்படி வகைப்படுத்துவது? குறத்தி முடுக்கில் இவ்வாறு எழுதுகிறார்: `தங்களது கொள்கையாலும் நடத்தையாலும் சமூதாயத்திலிருந்து தங்களைத் தாங்களே பகீஷ்கரித்துக் கொண்டவர்களில் நானும் ஒருவன்’. இந்த சுயபகிஷ்காரத்தால் சமூகத்தின் ஒழுங்குகளை ஏற்றுக்கொண்டவர்களும் அந்த ஒழுங்குகள் குலைந்து விடாமல் அவற்றை இரகசியமாக மீறுகிறவர்களும் அடைகிற அடிப்படை பாதுகாப்பை இழந்தவர்கள் ஜி. நாகராஜனும் அவரது கதாபாத்திரங்களும். பொதுப் பண்பாட்டினால் குற்ற உலகினர் எனக் கருதப்படும் நாகராஜனின் பாத்திரங்கள் எளிமையும் பரிதவிப்பும் கனவுகளும் கழிவிரக்கமும் குற்ற உணர்ச்சியும் கொண்டவர்கள். `நாளை மற்றொரு நாளே’ யில் மிரட்டிப் பணம் பறிக்கும் கந்தன்தான் தன் குழந்தை இறந்து போனதற்கு அதன் பலூனை சிகரெட்டால் சுட்டு உடைத்ததுதான் காரணம் என நினைத்து மருகுகிறான்; மீனா புணர்ச்சி இன்பத்தின் முடிவில் காணாமல் போன மகளை நினைத்து அழுகிறாள். கந்தன் மீனாவை தன் வாழ்வின் நிச்சயமின்மை காரணமாக ஒரு நல்ல இடத்தில் சேர்ப்பித்துவிட வேண்டுமென்று நினைக்கிறான். ஒரு தந்தை அல்லது தாய், ஒரு சகோதரன் அல்லது பாதுகாவலன் வகிக்கக்கூடிய இடத்தை ஒரு விபச்சாரியின் காதலன் எவ்வாறு மேற்கொள்கிறான், அவர்களுக்கிடையிலான உறவின் இழைகளை எவை தீர்மானிக்கின்றன என்பதை பொதுவான மதிப்பீடுகளின் வழியே அறிய முடியாது. மனிதர்கள் தமக்கிடையே சுயமாக ஏற்படுத்திக் கொள்கிற உறவுகளின் அழங்காண முடியாத பந்தங்களிலிருந்து இத்தகைய தார்மீகப் பொறுப்புகள் எழுகின்றன. குறத்தி முடுக்கில் தங்கம் அவளை நேசிக்கிறவனுக்குப் பதில் அவளைக் கூட்டிக் கொடுத்த கணவனைத் தேடிப் போகிறாள். திருமணம் என்ற உறவிற்கான எல்லா நியமங்களும் அழிந்துவிட்ட ஒரு சூழலுக்குள் வந்த பிறகும் அவளது திருமண உறவிற்கும் பாலியல் தொழில் சார்ந்த பிற உறவுகளுக்கும் நடுவே ஒரு தீர்க்கமான இடைவெளி இருக்கிறது. (இந்த இடைவெளி தங்கத்திற்கும் அவளது உடலுக்குமான இடைவெளியா அல்லது பொதுப் பண்பாட்டிற்கும் அதிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்குமான இடைவெளியா அல்லது அறுபடாத உறவா எனும் கேள்விகள் எழுகின்றன.) `துக்க விசாரணை’ எனும் கதையில் ஒருவன் ரோகிணி என்ற விபச்சாரியின் மரணத்திற்குத் துக்கம் கேட்கப் போகிறான். பால்வினை நோயைக் கொடுத்ததற்காக ஒரு வாடிக்கையாளனிடம் செருப்படி வாங்கியதன் அவமானத்தால் ரோகிணி ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள் என்பதை அறிகிறான். ரோகிணியின் சாயல் கொண்ட துக்கம் விசாரித்தவளிடமே உறவு கொள்கிறான். இதுபோன்ற எளிதில் புரிந்து கொள்ள முடியாத விளக்கமளிக்க இயலாத ஏராளமான சம்பவங்கள் ஜி.நாகராஜனின் படைப்புகள் முழுவதும் நிறைந்திருக்கின்றன. ஜி. நாகராஜனின் மனிதர்கள் பாதுகாப்பின்மைக்குள் ஒரு பாதுகாப்பையும் உறவின்மைக்குள் ஒரு உறவையும் அவமானத்திற்குள் ஒரு தன்மானத்தையும் நெறியின்மைக்குள் ஒரு நெறியையும் உருவாக்கிக் கொள்ள எப்போதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜி. நாகராஜனின் படைப்புகள் மையமான பாத்திரங்களைக் கொண்டவையல்ல. ஒரு சூழலின் குறுக்கும் நெடுக்கமான எண்ணற்ற கோடுகளால் அவரது பாத்திரங்கள் அமைந்துள்ளன. அவை விசேஷமான இயல்புகள் மேல் கட்டப்படுவதில்லை. கந்தன், மீனா, தங்கம் போன்ற பாத்திரங்கள் கூட அவை தம் சூழலோடு கொள்ளும் உறவின் கூர்மை காரணமாக அழுத்தம் பெறுகின்றனவேயன்றி அவற்றின் தனித்துவங்களால் அல்ல. ‘நாளை மற்றொரு நாளே’, ‘குறத்தி முடுக்கு’ அவரது சிறுகதைகள் எல்லாவற்றிலும் அநேக பாத்திரங்கள் ஒரு மின்னலைப் போல கடந்து சென்று கொண்டேயிருக்கின்றன. அதே சமயம் அவை எதுவும் மங்கலானவை அல்ல. நாகராஜன் எதையும் விவரிப்பதோ அழுத்தம் கொடுப்பதோ இல்லை. அவரது பார்வையில் எதுவும் அவ்வளவு முக்கியமானதும் அல்ல. வாழ்வும் எழுத்தும் என்ற கதையில் கேட் அடைக்கப்பட்டுள்ள ரயில்வே கிராஸிங்கில் காத்துக் கிடக்கும் நாகராஜனின் சித்திரம் இது.

நாகராஜனைப் பொறுத்தவரை அடைக்கப்பட்டுள்ள கேட்டுகள் முன் திறப்பிற்காக பொறுமையிழந்து காத்திருப்பதுதான் வாழ்க்கை. திறப்பிற்கான அந்த முட்டி மோதல்களுக்கு மேல் அதற்கு எந்த அர்த்தமோ அழகோ இல்லை.

வாழ்வதற்கான போராட்டத்தில் சிதிலமடைந்துபோன அரசியல், அறிவியல், ஒழுக்கவியல் கற்பிதங்களை எதிர்கொண்ட நாகராஜனின் மொழி மனவறட்சியின் கூர்மையான அங்கத்துடன் உருவெடுக்கிறது. அரசியல் இயக்கங்கள் மனித நடத்தைகள் ஆசைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் இடையிலான நாடகங்கள் மேல் நாகராஜனின் எள்ளல் தீவிரமாக வெளிப்படுகிறது. புதுமைப் பித்தனுக்குப் பிறகு இவ்வளவு விமர்சன பூர்வமான மூர்க்கம் கொண்ட எள்ளலை நாகராஜனிடம் காணமுடிகிறது.

ஜி. நாகராஜனின் கதைகளில் காணப்படும் யதார்த்தவாத சித்திரிப்பு ஒரு தோற்றம் மட்டுமே. ஒரு அப்பாவி வாசகனை எளிதில் ஏமாற்றிவிடக்கூடிய தோற்றம் இது. பௌதீக உலகிற்கும் அக உலகிற்கும் இடையே அவரது மொழி மாறி மாறி இயங்கிக் கொண்டிருக்கிறது. இறந்தகாலமும் நிகழ்காலமும் நிஜமும் கனவும் பல இடங்களில் ஒன்றொடொன்று குழம்பி விழுகின்றன. வரிசைக்கிரமமாக அடுக்கப்பட்ட சம்பவங்களால் ஆனதல்ல நாகராஜனின் படைப்பு மொழி. உதாரணமாக டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் எனும் சிறுகதை அதன் உத்தியாலும் மொழியாலும் தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் மிக அபூர்வமான ஒரு படைப்பாக இருக்கிறது. ஜி. நாகராஜனின் படைப்புகளில் மிகச் சிறப்பான இயல்பு, அவர் உரையாடல்களை அமைக்கும் விதம். இரண்டு மனிதர்கள் கதையை நகர்த்துவதற்காக ஒரு செய்தியை பரிமாறிக்கொள்வது என்ற நோக்கில் அந்த உரையாடல்கள் அமைந்திருப்பதில்லை. அந்தக் கதைகளுக்கு வெளியேயும் ஒரு வாழ்க்கை முறையின் குரலாக அவை அமைந்திருக்கின்றன. இந்த உரையாடல்களில் மனிதர்களுக்கிடையேயான பேரங்களும் ஏமாற்றுகளும் பாசாங்குகளும் அவலத்தின் முடிவற்ற வெறுமையும் மிகச் சூட்சுமான குறியீடுகளுடன் அமைந்துள்ளன. அபாயமும், நிச்சயமின்மையும் சூழ்ச்சியும் நிறைந்த ஒரு விளையாட்டுக்களனில் சாதுர்யத்துடன் காய்களை நகர்த்துகிற விதமாக இந்த உரையாடல்கள் நிகழ்கின்றன. இந்தப் பேச்சுகளுக்கு விரிந்து கிடக்கும் இடைவெளிகளும் மௌனங்களும் நாகராஜன் தேர்ந்தெடுக்கிற இயல்பான துல்லியமான சொற்களின் மூலம் நம் மனங்களை அதிர்வடையச் செய்கின்றன.

ஜி. நாகராஜனின் படைப்புகள் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் அவரை ஆழமாக அறியவும் மதிப்பீடு செய்யவும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ள நாகராஜனின் தீவிர வாசகன் என்ற வகையில் இரண்டு கேள்விகள் என்னை அலைக்கழிக்கின்றன.

1. ஜி. நாகராஜனின் பிம்பத்திற்கும் அவரது வாசகனுக்குமான உறவு.

2. படைப்புச் சுதந்தரம் பற்றிய பிரச்சனைகள்.

ஜி. நாகராஜன் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்க்கைமுறை தொடர்ந்து விவாதத்திற்குள்ளாயிருக்கிறது. அதை ஒழுங்கீனத்தின் அராஜகத்தின் சீரழிவின் வெளிப்பாடாகப் பார்த்தவர்கள் இருந்திருக்கிறார்கள். தனி மனிதன் மேல் சமூகமும் பண்பாடும் சுமத்துகிற ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு கலகமாக விடுதலைக்கான யத்தனிப்பாகப் பார்த்தவர்கள் இருந்திருக்கிறார்கள். இந்த இரண்டு பார்வைகளுமே நமது ஒழுக்கவியல் எனும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தாம். ஆனால், நாகராஜன் மனிதர்கள் மேல் இத்தகைய விமர்சனத்தையோ புனைவையோ சுமத்துவதில்லை. அவரைப் பொறுத்தவரை அவர் வாழ்ந்த அவர் எழுதிய சூழல் ஒரு வாழ்க்கை முறை. மற்ற வாழ்க்கை முறைகளைப் போலவே அங்கும் சில சந்தோஷங்களும் துயரங்களும் உள்ளன. அதற்கென சில நியாயங்களும் அநியாயங்களும் இருக்கின்றன. அதனளவில் அது நல்லதோ கெட்டதோ அல்ல. எதற்கும் அது மாற்றோ, முன்னுதாரணமோ இல்லை. அங்கு விடுதலையும் ஒடுக்குமுறையும் வேறு அர்த்தங்களில் நிலவிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒரு இளம் படைப்பாளியைப் பற்றி எனக்குக் கடிதம் எழுதிய நண்பர் ஒருவர் அவர் ஜி. நாகராஜனைப் போல வாழ்ந்தார் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த இளைஞரின் வாழ்விற்குப் மரணத்திற்கும் அளிக்கப்பட்டிருந்த இந்த நற்சான்றிதழில் ஒட்டியிருந்த பெருமிதம் சங்கடம் தருவதாக இருந்தது. பாதுகாப்பிற்கும் உத்திரவாதத்திற்குமான சமூகத்தின் எல்லா வழிமுறைகளையும் தந்திரங்களையும் பின் பற்றுகிறவர்கள். அந்தப் பாதுகாப்புகள் இல்லாமல் போனவர்களை ஒன்று இலட்சிய புருஷர்களாக்குகிறார்கள் அல்லது தமது அழுகிப் போன நெறிமுறைகளின் பேரால் சீரழிந்தவர்களாக சித்தரிக்கின்றார்கள். இவையெல்லாம் மத்தியதர வர்க்கத்தினது இயலாமையின் வெளிப்பாடுகள். ஜி. நாகராஜனின் வாழ்வுப் படைப்பும் இந்த இயலாமைக்கு அப்பால் இருக்கின்றன. நாகராஜனின் படைப்புகளை அவரைப் பற்றிய பிம்பங்களிலிருந்து மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது.

இரண்டாவதாக ஜி. நாகராஜனின் படைப்புகளை அணுகக்கூடிய எந்த ஒரு வாசகனுக்கும் முதலில் தோன்றக்கூடிய மனப்பதிவு அவர் ஒரு துணிச்சலானக் கலைஞன் என்பதே. இந்த துணிச்சலுக்கு நாகராஜன் கொடுக்க வேண்டியிருந்த விலை சமூகத்திலிருந்து கொள்கையாலும் நடத்தையாலும் சுயபகீஷ்காரம் செய்து கொண்டதுதான். இருந்தும் குறத்திமுடுக்கின் முன்னுரையாக எழுதிய குறிப்பில் இவ்வாறு சொல்கிறார்.

தலைப்பு : என் வருத்தம். படைப்பாளிக்கு ஏன் சொல்லமுடியாத குறை எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது? சொல்வதையே தொழிலாகக் கொண்டவனுக்கு சொல்ல முடியாததன் துக்கம் இயற்கையானதுதான். அவனைப் பொறுத்தவரை படைப்புச் சுதந்தரம் என்ற கோஷமே அர்த்தமற்றது படைப்பியக்கத்தின் உள்ளார்ந்த செயல்பாட்டை உணரும் கலைஞன் படைப்புச் சுதந்தரம் என்ற கோஷத்தை முழங்க கூசிப் போவான். ஏனெனில் அவனது வெளிப்பாடு அவனது படைப்புத்திறனால் ; அவனது படைப்புத்திறன் அவனது மொழியால் ; அவனது மொழி அவனது மன இயக்கத்தால் ; அவனது மன இயக்கம் அவனது அனுபவங்களால் ; அவனது அனுபவம் அவனது சூழலால்; அவனது சூழல் அவனது சமுத்திரத்தால் கட்டுண்டு கிடக்கிறது.

படைப்பியக்கத்தில் இந்தக் கட்டுப்பாடுகள் ஒரு நேர் வரிசையில் நிகழாமல் இருக்கலாம். நான் சொல்ல விழும்புவது என்னவென்றால் படைப்பியக்கம் சுதந்தரம் பற்றிய பிரக்ஞையை அல்ல சுதந்தரமின்மை பற்றிய பிரக்ஞையே கொண்டு வருகிறது என்பதுதான். படைப்பாளியின் உள்ளார்ந்த வெளி எப்போதும் அவனுக்கு நெருக்கடி ஏற்படுத்துகிறது என்றால் அவனது புறவெளி வேறு வகையான நிர்ப்பந்தங்களை உண்டாக்குகிறது. கலையையோ இலக்கியத்தையோ அதற்குரிய தர்க்க நியாயங்களுடன் உணர்ந்து கொள்ளப் பக்குவப் பெறாத இந்தப் புறவெளி படைப்பாளியின் குரல் வளையில் நேரடியாக கத்தியை வைக்கிறது. உதாரணமாக வேசிகளைப் பற்றி கதை எழுதுகிற ஒருவனிடம், வேசிகளிடம் போய் விட்டு வந்த ஒருவனிடம் என்ன மொழியில் உரையாட முடியுமோ அதே மொழியில்தான் நமது சூழல் பேசுகிறது. அத்தகைய கதை ஓன்றை எழுதிய என் நண்பன் ஒருவனிடம் தமிழின் மிக முக்கியமான படைப்பாளி ஒருவர் `பி.மி.க்ஷி. பரிசோதனை செய்து கொண்டீர்களா’ என்று கேட்டார். ஒருவன் தன்னுடைய மனஇயக்கம் மற்றும் அனுபவங்களுக்கும் அவனது படைப்புகளுக்குமாக இடைவெளியை எந்த அளவிற்கு குறைக்கிறானோ அல்லது வரையறுக்கப்பட்ட அனுபவ எல்லைகளை எந்த அளவு மீறிச்செல்கிறானோ அந்த அளவு அவனது இருத்தல் அபாயங்களுக்குள்ளாகிறது. தமிழ் இலக்கியவாதிகள் பலர் இந்த அபாயத்தை எதிர்கொள்ள முடியாமல் தம் ஆமையோடுகளுக்குள் வசித்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் இந்தப் புறநெருக்கடியினை எதிர்கொள்ள திறன் மிகுந்த கலைஞன் தன் அனுபவங்களை வெவ்வேறு தளமாற்றங்களுக்குக் கொண்டு செல்கிறான். புதிய படைப்பு மொழியையும் வடிவத்தையும் உருவாக்குகிறான்.

வாழ்வின் அறியப்படாத பிரதேசங்களை நோக்கி பயணம் செய்ய விரும்பும் ஒரு இளம் படைப்பாளிக்கு ஜி. நாகராஜனின் படைப்புகள் அளிக்கும் திறப்பும் உத்வேகவும் அளப்பரியவை. வாழ்வை நிழலும் புகையுமில்லாமல் எதிர்கொள்வதற்கு ஜி. நாகராஜனின் எழுத்துக்கள் வெளிச்சம் தருகின்றன. வெளிப்பாட்டிற்கான அகவெளியையும் புறவெளியையும் எப்படி விஸ்தரிப்பது என்ற பிரச்சனையை எதிர்கொள்ளும் விதத்தில் எனக்குப் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்