Jul 19, 2009

க.நா.சு. படைப்புகளின் அடிப்படைத் தத்துவம்-நகுலன்

நகுலன்
நன்றி : க.நா.சு. இலக்கியத்தடம்; காவ்யா வெளியீடு.


காலஞ்சென்ற க.நா.சு.வுடன் இன்னும் இருக்கின்ற எனக்குப் பல ஆண்டுகள் பழக்கம் உண்டு. அது இன்னும் தொடர்கிறது. அவரது படைப்புகளில் அநேகமாக எல்லாவற்றையும் நான் படித்திருக்கிறேன். அவற்றில் பல இப்போது என்னிடமில்லை. எனவே அவரும், அவர் எழுத்துக்களும் என்னிடம் விட்டுச் சென்ற நினைவுகளின் அடிப்படையிலேயே இக்கட்டுரை அமைகிறது.
க.நா.சு.இரங்கல் கூட்டத்தில் திரு அய்யப்பப் பணிக்கர் சொன்னார்: `க.நா.சு. தான் பேசுவதைவிடப் பிறர் பேசுவதைக் கவனிப்பதில் அதிகமாகக் கவனம் செலுத்துவார்’’ இது உண்மை தான். சிகரெட், மதுபோன்ற லாகிரிப் பொருள்களை அவர் அவ்வளவாக உபயோகித்ததில்லை. காப்பியிலும், உணவு வகைகளிலும் அவருக்கு ருசியுண்டு. பாண்டிச்சேரியில் இருந்தபோது ஜி.ஷி.ணிறீவீஷீt_இன் திஷீuக்ஷீ ஹீuணீக்ஷீtமீக்ஷீs_ஐ மொழிபெயர்க்க வேண்டும் என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. மேற்படி இரங்கல் கூட்டத்தில் கேரளப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் மோகன் தம்பி கூறியதுபோல அவர் எழுத்தில் ``இந்த மண்ணின் சாயல்’’ அதிகம் உண்டு. நெருங்கிய நண்பர்களிடம் கூட தன் சொந்தப் பிரச்சினைகளைப் பற்றி அவர் அதிகம் பேசுவதில்லை. ஒரு தரமான நூலை ஒரு முறைக்கு இருமுறையாகப் படிக்க வேண்டும். குறிப்பாக ஹென்றி ஜேம்ஸ் போன்றோரின் நூல்களைப் பலமுறை படிக்க வேண்டும் என்று சொல்வார். ``ஒரு கருத்திலிருந்து தொடங்கி எழுதப்படும் நாவல்களில் இலக்கியத் தன்மை குறைந்து காணப்படும். அனுபவத்திலிருந்து தொடங்கப்படும் எழுத்துக்களே தரமானவை’’ என்றும் சொல்வார். ஆழமும் நுணுக்கமும் வந்து சேர்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஓர் உள் உலகமுண்டு. அது புற உலகமாகப் பரிணாமம் கொள்கையில் ஒரு கலைப் படைப்பு உருவாகிறது. இலக்கியத்திற்குப் பல்வேறு அறிவியல் துறைகளுடன் தொடர்பு உண்டு. ஆனால் அதை இவற்றில் ஒன்றுடனும் ஏகோபிக்க முடியாது. ஒரு கவிதையில் சில வரிகள் நம் பிரக்ஞையில் சுற்றி வருகின்றன. அதைப்போல் ஒரு நாவலில் சில காட்சிகள் நம் பிரக்ஞைத் தளத்தில் சுற்றி வருகின்றன. சமகால உணர்வு என்பது கூட உடனடி ஏற்படக் கூடியதன்று. தெளிவாகவும், நுணுக்கமாகவும் எளிய முறையிலும் எழுதப்பட்டிருக்கும் அவர் நாவல்கள் வித்தியாசமான சிந்தனைகளை எழுப்பப் கூடியவை. `பொய்த்தேவு’ நாவலில் மேட்டுத் தெருவில் ஜனித்த சோமு பணக்காரனாகிக் கடைசியாகச் சோமுப் பண்டாரமாக மாறுவதும், பணக்காரக் குடும்பத்தில் பிறந்து இறுதியில் சாம்பமூர்த்திராயர் ஜீவன் முக்தராவதும் எவ்வாறு சூழ்நிலை, பாரம்பரியம் இவைகளைத் தாண்டித்தான் விஷயங்களை உருவாகின்றன என்பதைக் காட்டுகிறது. ``ஏழு பேரில்’’ ஒரு முற்போக்கு இளைஞன் தன் சீர்த்திருத்த வேகத்தைத் தாண்டி ஒரு சம்பிரதாய மண வாழ்க்கையில் ஈடுபடுகிறான். நடுவில் அவன் விலைமாதுடன் ஒரு நாள் செலவழித்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு இடத்திலாவது சமூக விமர்சனம் என்பது செயற்கையாக நிகழவில்லை. ``ஒரு நாளி’’ல் ஒரு கிழவர் தான்படும் பல சோதனைகளையும் தாங்கிக் கொள்வது அவருக்கு விதியின் மீதுள்ள நம்பிக்கையில் தான் என்று கூறப்படுகிறது_விதி என்பது மனிதனையும் தாண்டிய ஒருசக்தி மனிதனூடே செயல்படுகிறது என்பதேயாம். க.நா.சு. நாவல்களில் தனிமனிதன் தனிமனிதனாகவே செயல்பட முடியாது. அவனுக்குப் பல உறவுகள்_தன்னுடன்_குடும்பத்துடன்_சமூகத்துடன் _ உண்டு என்பதையே வற்புறுத்துகிறது. க.நா.சு.வின் படைப்புகளில் அருவமாக ஒரு அடிப்படைத் தத்துவம் அவைகளுக்கு ஒரு பலத்தைக் கொடுக்கின்றன. இதை நாம் அவர் சிறுகதைகளான `சாவித்திரி’ `மகாத்தியாகம்’ என்பவற்றிலும் காணலாம். இந்த அடிப்படைத்தத்துவம் நமது மரபு வழி வந்த தொடர்ந்து இயங்கும் சரடு என்றே சொல்லத் தோன்றுகிறது.

இலக்கிய விமர்சனம் ரஸனை அடிப்படையில் எழ வேண்டும் என்பது க.நா.சு.வின் நம்பிக்கை. இந்த ரஸனை என்பது நல்ல படைப்புகளை முகர்ந்தறியும் ஒரு விமர்சனப்பாங்கு என்றே கொள்ள வேண்டும். முறையான கல்வி முறையை அவர் எதிர்க்கிறார் என்பதை அவர் கல்வி போதிக்கும் முறையைப் பற்றிச் செய்யும் விமர்சனம் என்றே கருத வேண்டும். அவரது பட்டியல்கள் மிகவும் விவாதத்துக்குள்ளாகியிருக்கின்றன. ஆனால் சில பெயர்களை எப்போதும் பட்டியலில் காணலாம். புதுமைப்பித்தனால் போற்றப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவர் மௌனி ``எந்த இடத்தில் புதுமைப்பித்தனும் மௌனியும் சந்திக்கிறார்கள்?’’ என்ற க.நா.சு.வின் கேள்விக்கு விடை காண்பது கடினம். `மோகமுள்’ நாவலில் பாபு_யமுனா கூடலுக்குப் பிறகு யமுனா பாபுவைப் பார்த்து ``இந்த விஷயத்திற்கா இவ்வளவு தவிப்பு?’’ என்று கேட்பதுதான் நாவலின் உச்ச கட்டம் என்பது அவர் அபிப்ராயம். எலியட்டை விட பவுண்டின் கவிதைகளையே அவரால் அதிகம் ரசிக்க முடிகிறது. திருக்குறளின் மீது அவருக்குப் பிடிப்பு ஏற்பட நீண்ட காலம் பிடித்தது என்பதையும் குறிப்பிட வேண்டும். பல மொழி பெயர்ப்புகளைச் செய்தது கூட எழுதும் பழக்கத்தைத் தொடர்வதற்காகவே என்று நினைக்கிறேன். அவர் கடைசியாக எழுதிய ``கலை நுட்பங்களை’’ப் படிக்கையில் சில கட்டுரைகளில் ஒரு வித விரக்தி தொனிப்பதைக் காணலாம். தரமான நூல்கள் பரவலாக அறியப்பட வேண்டும் என்பதே அவர் விமர்சனம் எழுதியதன் நோக்கம்.

``மயன் கவிதைகளுக்கு’’ அவர் எழுதிய முன்னுரைகள் அவரது கவிதை பற்றி அடிப்படைக் கருத்துக்களைத் தெரிவிக்கின்றன. எல்லாக் கலைப்படைப்புகளையும் போல கவிதையின் ஆதார சக்தியும் அனுபவம் தான். சிந்தனை கவிதை உருவாக மாறுவது கடினம். ஆனால் அத்தகையவை உண்டு, இங்கு செயல்படுவது உணர்வு. இதற்குச் சிறந்த உதாரணம் குறள். க.நா.சு_வின் கவிதைகளில் அப்பட்டமாகவும், உருத்தெரியாத வகையிலும் கிண்டல் செயல்படுகிறது. இரண்டாவதற்குச் சிறந்த உதாரணம் ``எனக்கு ஒரு கை’’ இதைப்போலவே ``கீதோபதேசத்’’ தில் ருத்திரனைப்பற்றிய குறிப்பு நுணுக்கமானது. கூஃபி(நிஷீஷீயீஹ்) என்று ஒரு கவிதை. (கூஃபி என்பதற்கு அசடு என்று பொருள் கொள்ளலாம்) இரு நாய்கள். கூஃபி மி. கூஃபி மிமி. : முதல் நாய் எஜமானனையே தழுவி வாழ்ந்து உயிர் விடுகிறது. இரண்டாவது அவனைச் சட்டை செய்வதே இல்லை. இதைப் பல நிலைகளில் வைத்துப் பார்க்கலாம். ஒரு அயனான எழுத்தாளன் தானும் ஒரு மனிதன் என்பதால் நடைமுறையில் காணப்படும் பல வரையறைகளையும் புறந்தள்ளியே வாழ்கிறான். அவன் சிறந்த படைப்புகளைப் படைத்து விட்டால்_இவையொன்றும் அப்படிக் கவனிக்கப்பட வேண்டியதில்லை. கலைஞன் சமூகத்தைப் பற்றிய வரை அந்நியனாகவே இருந்து கொண்டிருக்கிறான். கூஃபி ஒரு எழுத்தாளனது மனநிலையைத் திறம்பட எடுத்துக் காட்டுகிறது. க.நா.சு. கடைசிக்காலத்தில் எழுதிய ``பாதை_நீ’’ என்பது ஒரு சுயதரிசனத்துடன் மரபு வழி வந்த ஒரு நடைமுறைத் தத்துவத்தை ஒரு பூரணத்துடன் விளக்குகிறது.

முறையாகப் படிக்காதவர்கள் என்று மட்டம் தட்டப்பட்ட எழுத்தாளர்களும் தங்கள் வழியில் படிக்கத்தான் செய்கிறார்கள். படிக்கப் படிக்க ஒவ்வொரு படைப்புக் கலைஞனும் தன்னுடைய அனுபவ உலகை எவ்வளவு கலை உலகமாக மாற்றுகிறான் என்பதைத் தன் உள் உணர்வினால் உணர்ந்து கொள்ளலாம். பிளேட்டோ சொன்னார்: ``ஒரு நூலைப்படிக்கையில் நம்மிடம் இருப்பதைத்தான் நாம் வாங்கிக் கொள்கிறோம்’’.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்