Jul 16, 2009

இடைவெளி (நாவலிலிருந்து ஒரு பகுதி) - சம்பத்

அத்தியாயம் _ 4

தான் ரொம்பவும் பெரிய மனிதனாகி விட்டோம் என்று நினைத்துக் கொண்டார் தினகரன். இப்படித் தோன்றும் போது, இவான்ஸ் மனக்கண் முன் தோற்றம் கொண்டு `உன்னுடைய சாதனை என்ன? அல்லது நீ சாதிக்கப்போவது என்ன?’ என்பான் சிரித்துக்கொண்டே.

clip_image002யாருடைய அங்கீகரிப்பை நான் நாட வேண்டும்? அவர்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? வாழ்ந்து கொண்டே, அவர்களிலும் யாராவது என்னைப் போன்று சாவோடு சம்பாஷணை செய்து கொண்டிருப்பார்களா? பெரியப்பாவைப் பார்க்கப் போகும்போது, சாரதி வாயிலாக சாவுதான் பேசியது என்பதற்கு என்ன நிரூபணம்? புஹாரியில், சர்வர் வாயிலாக அது பேசியது என்பதற்கும் என்ன நிரூபணம்? இந்தப் பிரச்சினை மூன்று மாதமாக, உன்னைப் பாகுபோல் உருக்கிக் கொண்டிருக்கிறது. என்ன பிரயோஜனம்? வாழ்க்கையில் நீ கண்டதென்ன? சாதாரணமாகவும் இல்லை. பெரிய பெரிய விஷயங்களைப் பற்றியும் ஒன்றும் அறிந்துகொள்ளவும் இல்லை. சுத்த ரெண்டாங்கெட்டான்தான் என்று நினைக்கிறேன்.

இந்த மாதிரியான எண்ணச் சூழலுடன் `பீச்’ சாலையில் நடந்துகொண்டே இருப்பார்! தேடல்தான் முக்கியம்! எப்போதும் பெரிசு பெரிசாக எண்ணத்தை ஓட்டு. உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை பிரபஞ்ச ரீதியில் அதிகப்படி! அப்படித்தானே சார்த்தர்கூடச் சொல்கிறான். அதை ஏன் சாதாரணமாக வாழ்ந்து சின்னாபின்னமாக்க வேண்டும்? `இது நல்ல கேலிக்கூத்து!’ என்று மனத்தில் ஏதோ இசை பாட ஆரம்பித்தது. பார்க்கப்போனால் இப்போதுதான் நீ சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறாய். `அஹ்’ தினகரன்! எதைப் பற்றியும் கவலைப்படாதே. ஒளியை உமிழ்ந்த நட்சத்திரம் அமிழ்ந்தே போய்விட்டது. ஒளி மட்டும் இன்னமும் இருக்கு! அதோ நாயோடு ஒருத்தனும் ஒருத்தியும் போகிறார்களே! அவர்கள் மேலெழுந்த வாரியாக ஏதாவது பேசிக்கொண்டே போகட்டும். `ஆனால், அடிமனத்தில் என்னென்ன அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றனவோ? எதையென்று உலகத்திற்குப் புரியவைக்கிறது? எவ்வளவு அது புரிந்துகொள்ளப் போகிறது? எல்லாமே புரிந்தால்தானா? முடியுமா? தேடல்தான் முக்கியம்.

ஆனால், பெருத்த சங்கடமெல்லாம் ஆட்கள் கிடைக்காமல் போய்விடுவதில்தான்! இவ்வளவு எண்ண ஓட்டங்களையும் தனியாகச் சுமக்க வேண்டியிருக்கிறது. அதுதான் இந்த மாதிரியான விஷயங்களின் சாபக்கேடு. எப்போதும் தனியாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது. பத்மாவிடம் ஒரு எக்கச்சக்க ஈடுபாடு இருந்தது. ஆனால், கல்பனா வந்ததும் அதுவும் என்னவெல்லாமோ ஆகிவிட்டது. எங்கோ அவர்கள் வாழ்க்கையும் கீறல் விழுந்த கிராமபோன் ஆகிவிட்டது. குழந்தைகள்! ஆமாம், நிச்சயமாக! ஆனால், அதுகளுக்கும் ரொம்பவும் உபயோகமாக இருக்க முடிவதில்லை. என்ன பண்ணிக் கொண்டிருக்கிறார்களோ? கல்பனா! அமெரிக்கா போனாள். திரும்பி வந்தாளோ? என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாளோ? கடிதம் போடலாம் என்றால் முகவரி தெரியாது. அவளுக்கென்ன! கெட்டிக்காரி! பிழைத்துக் கொண்டு விடுவாள். இவரைத்தான் அவள் `உனக்கு உன்னையே காப்பாற்றிக்கொள்ளத் தெரியாது. ஏதாவது விபத்தில் போய் நீயே விழுவாய்’ என்பாள். அது எவ்வளவு நிஜம். பத்மாவுக்குக் கூட, வீட்டுக்காரர் மற்றவர்களைப் போல் சாதாரணமாக இல்லையே என்று கழுத்துமுட்டும் குறை! ஆனால், தினகரன், முகவரி தெரிந்தால்கூட அவளுக்குக் கடிதம் மட்டும் போடாதே. அவள் கடிதங்களை அடிவயிற்றிலிருந்து வெறுத்தாள். உன் மூளைக்குச் சின்னச் சின்ன விஷயங்கள்கூட எட்டுவதில்லை. சின்ன விஷயங்களில் உன்னால் கவனம் செலுத்த முடியாமல்தான் நீ கல்பனாவிடமும் தோற்றாய், பத்மாவிடமும் கால் பங்கிற்குத் தோற்றிருக்கிறாய்! அது என்ன கால் பங்கு என்று கேட்டுக்கொண்டே தனக்குத்தானே சிரித்துக் கொண்டார். இருந்தும் கல்பனாவைப் பார்க்க வேண்டும் என்று மனது ஏங்குகிறது. விளையாட்டாக அதெல்லாம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. இந்த ஐந்து வருடங்களில் அவளை நினைக்காத நாள் உண்டா? மோஹினி என்பது நிஜம்தானோ? கல்பனாவைவிட அழகிகள் உலகில் இல்லையா என்ன? அவளுக்கு அப்போதே இருபத்தி ஏழு வயதுன்னா நடந்து கொண்டிருந்தது? வாஸ்தவம். அவளைவிடப் பெரிய அழகிகள்_அதுதான் முக்கியமென்றால் இந்த அடையாறிலேயே ஒரு பத்துப் பனிரெண்டு தேறுவார்கள். இருந்தும் எங்கோ, அமெரிக்கா போய்விட்ட அவளை மனம் ஏன் பின்னுகிறது? ஒரு நாள், இந்தப் பெசன்ட் நகர் கடற்கரையில், தனிமையில், அவள் அங்கு சர்வகலா சாலையில் படித்து முடித்து, ஒரு அடுக்கு மாடிக் கட்டிட அறையில் தன்னைப் போர்த்திக் கொண்டு பாடங்களைப் புரட்டுவதாக ஒரு காட்சி. இது எப்படி சாத்தியமாகிறது? அவர்களிடையே ஏற்பட்ட முறிவுக்குப் பிறகுதானே அவருக்கு இந்த மாதிரியான ஒரு சாவுப் பிரச்சினை கிடைத்தது? அப்படியிருக்க அவளைப் பார்த்துத்தான் என்ன ஆக வேண்டும்? மேலும் கல்பனா என்பவளைவிட அவளுடைய எண்ணமல்லவா இப்போது இனிக்கிறது. அந்தப் பெயரே ஏற்படுத்தும் ஒருவித மாயாஜாலமா இது?’

இருந்தும் ஆஹ்! இந்த முறிபட்ட ஒற்றையடிப் பாதைப் பிரயாணம்தான் எவ்வளவு சுலபமானதாக எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது. அப்பழுக்கற்ற ஆன்மாவின் ஒருதலைப்பட்சமான காதல் பிரயாணத்தில்தான் இன்பம் இருக்கிறது. அவள் அடிக்கடி பாடும் பாட்டை இங்கு எப்போதாவது கேட்பதில் உள்ள ஆனந்தம், இப்போது அவள் நேரில் பாடினால்கூட ஏற்படுமா என்பது சந்தேகம்தான்!

`எனதன்பே!’ என்றார் தினகரன். `நீ என்னைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. எங்கோ என்னிடம் வந்தால் தனிமைபூர்வமான இன்பம் திகட்டக் கிடைத்து அதில் செத்து விடுவோமோ என்று நீ பயந்திருக்கிறாய்! ஆனால் எனதன்பே! நீ அறிந்தோ அறியாமலோ சாவை ஒருமுறை முழு உணர்வோடு எட்டிப்பிடித்த பின்தான் வாழவே தகுதி உடையவளாகிறாய்? நான் சொல்வது தப்பா? மேலும், கடைசியில் ஒரு நிர்ணயிக்கப்பட்ட துக்கத்துடன் தானே நாம் இருவருமே பிரிந்தோம். உன் மனத்தைத் தொட்டுப் பார்! உன்னுடைய நாற்காலியில் கிடந்த சோக உரு இப்போதும் என் கண் முன்னால் நீந்துகிறது. நாம் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் குதறிக்கொண்டது ; எங்குமே பிடிபடாமல் ஏங்கி ஏங்கிப் பிரிந்ததில் அந்தப் பெரிய வார்த்தையின்_காதலின்_முழு அர்த்தத்தை உணரத் தான் செய்தோம். என் வரையில், நாம் இருவருமே விடலைத்தனமாக நடந்து கொள்ளவில்லை என்பதில் தான் நம்முடைய சோகம் முழுமையடைகிறது. நீயாவது பெண்! நடைமுறையில் எல்லாவற்றையுமே மறந்து விடுவாய். ஏதோ ஒரு மாலை, அல்லது காலை, நீ எப்போதும் முணுமுணுத்துக் கொண்டிருந்த ஓரிரு விளம்பர வரிகளின் சங்கீதத்தை, நான் கேலி செய்தது ரேடியோவில் மீண்டும் ஒலிக்கக் கேட்க, நான் உன்னைத் தொற்றலாம். அல்லது உன் வீட்டு மாடியில் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக் கொண்டே நின்றதில் நம்மிடையே ஏற்பட்ட முழுமையை நீ மீண்டும் பெறும்போது நான் உன்னைத் தொற்றலாம். ஆனால் என்றுமே நாம் இருவரும் சந்தோஷமாக இருந்திருக்க முடியாது என்றுதானே அப்போதும் நாம் திட்டவட்டமாக நம்பினோம்?’

இந்நிலையில் கல்பனாதான் சாவு உருக்கொண்டு தன்னைத் தொடர்கிறாளோ என்று பட்டது. இருக்காது! மேலும் அவள் ஒரு நாளும் தன்னை அந்நிலைக்குத் துரத்த வேண்டும் என்று நினைக்க மாட்டாள்.

எதிரே வெகு தூரத்தில் நிலைத்து, கட்டுமரங்கள் பாய் விரித்துச் சென்று கொண்டிருந்தன. வண்ணத்திப் பூச்சி போல் அவைகள் கண்களுக்குப் பார்க்க ரொம்ப வேடிக்கையாக இருந்தது. சில இடங்களில் கடல் நீர், அரக்கு வர்ணத்தில் காட்சி அளித்தது. சில இடங்களில் வெளிர் நீலமாக ஆரம்பித்துப் போகப் போக முழு நீலமாக ஆழ ஆரம்பித்துக் கனத்திருந்தது. இப்படியே கடலோடு பம்பாய், பினாங், ஹாங்காங் என்று போனால் தேவலை போலிருந்தது. பகற்கனவு என்று அதை ஏன் சொல்ல வேண்டும்? பூமியில் விளைவது எல்லாமே மனிதனுக்குச் சொந்தம், எல்லாமே எல்லோருக்கும் சொந்தம் என்ற காலம் வாராதா என்று ஏங்கினார். ஆனால் அதெல்லாம் எங்கே முடியப் போகிறது? அப்படின்னா அது பகற்கனவுதான்!

கனவோ நனவோ பயணம் மனத்தைச் செம்மையடையச் செய்கிறது என்று நம்பினார் தினகரன். ஆட்டமும் அலைச்சலும் மிகக் கண்ட, ஓய்ந்துபோன ஆன்மாவுக்குப் பயணம் அரிய சஞ்சீவி ஆகும் என்று அவர் நினைத்தார். இந்த எண்ண ஓட்டங்களை எல்லாம் தவிர்த்து, சாதாரணமாக அச்சுப்பிச்சென்று இப்போது நடந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமா போல் கதைகள் எழுதி ஊட்டியிலோ கொடைக்கானலிலோ தங்க ஏற்பாடு செய்து கொண்டால் என்ன என்று தோன்றியது. இதுதான் சத்தியமாக பகற்கனவு. ஏனென்றால், விஷயம் இவ்வளவுதான்_அந்த மாதிரியான அச்சுப்பிச்சுகளை உன்னால் இயற்ற முடியாது. வேண்டுமானால் ஒன்று செய்யலாம்! நம்முடையது இல்லை என்று சொல்லிக் கொண்டு, மாதம் ஐம்பது ரூபாய் வங்கியில் போட்டு, வருடத்திற்கு ஒரு தடவை எங்கேயாவது போய்விட்டு வரலாம். இது சாத்தியம்! ஆனால் அதெல்லாம் எங்கே முடியப் போகிறது. எவ்வளவு வந்தாலும் இப்போதே போதுவதில்லை.

பேசாமல் இரண்டு வேளை நன்றாகச் சாப்பிட்டு, கிருஷ்ணா, ராமான்னு வேலையைப் பார்ப்பதுதான் உத்தமம் என்று சொல்லிக்கொண்டார். பார்த்தசாரதி வாயிலாக சாவு பேசியது, சர்வர் வாயிலாக சாவு பேசியது என்று நினைக்கும் ஒவ்வொரு தரமும் பாதி உயிர்போய் திரும்பி வருகிறது.

அந்தப் பெரிய கடலும், அதில் மிளிர்ந்த வீரியமும் என்னமோ செய்ய பல்லவன் பஸ்ஸைப் பிடித்துக் கொண்டு மவுண்ட் ரோடு பக்கம் போனார். மதராஸின் கனாட் பிளேஸ் என்று நினைத்தார் ; சிரிப்பு வந்தது. இதுவும், இதனுடைய மூஞ்சிகளும்! எப்படி வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம். ஆனால் பிறந்தாலும் வளர்ந்த நிலையில் இங்கு இருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டார். தமிழனாக இருந்து கொண்டு தமிழர்களை ஏன் வெறுக்கிறோம் என்று புரியவில்லை. ஆனால் டில்லியைவிட அவரைப் பொருத்தவரையில், மதராஸில் தியேட்டர்கள் நன்றாகவே அமைந்திருந்தன. என்னதான் பிடிக்காவிட்டாலும் மனிதர்கள்தானே! அவர்களோடு, அவர்களில் ஒருவராக உட்கார்ந்து சாப்பிடுவது மனத்திற்குச் சற்று இதமாக இருந்தது. சிற்றுண்டி சற்று பலமாக அமைந்தது. ரொம்பவும் பெரிதுபடுத்தாத சப்தத்தைக் கொண்ட ‘ஜ்யூக் பாக்ஸி’ல் நாலணாக்களைப் போட ஆரம்பித்தார். ‘விழியே கதை எழுது’ என்ற பாட்டு நன்றாகவே இருந்ததாகப் பட்டது. அவருடைய அதிர்ஷ்டம்தானா? ஆஷாபோன்ஸ்லேயின் ‘ஆவோ ஹஜீர்’ பாட்டு இருந்தது. மற்ற பாட்டுக்களைக் கேட்காமலேயே வெளியே வந்தார். ஏதாவது புஸ்தகக் கடைக்குப் போகலாமா? ‘போர் _ படுபோர்’ என்று சொல்லிக்கொண்டார். ஏதாவது சினிமா போகலாமா? ‘போர்_படுபோர்.’

தாமஸ் ஹார்டியின் _ ‘இந்தப் பைத்தியக்காரக் கூட்டங்களை விட்டுத் தொலை தூரத்தில்’ சத்யத்தில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் அதை டில்லியிலேயே மூன்று தரம் பார்த்தாகி விட்டது. இனிமேல், ‘போர் _ படுபோர்.’

இதுதானா? இதுதானா? இங்கே ஒவ்வொரு ஆன்மாவிலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. எல்லோரும் இப்படித்தான் போரடிக்கக் கனாட் பிளேஸிலும் மவுண்ட் ரோடிலும் நிற்கிறார்களோ? ஹா! கவலை இல்லை. இத்தனை ஜனங்களையும் ‘போர்’ கூடத் தொற்ற அஞ்சும். . . அவ்வளவு ரசனையற்ற ஜனங்க ; சாவாடி செத்த ஜனங்க? எதையும் ஒப்புக்கொள்ற ஜனங்க, முதுகெலும்பு இல்லாத ஜனங்க . . .

‘நீ என்ன பெரிய புடுங்கியா? என்னமோ ஜெர்மனியிலே பிறந்தாப்பிலே இல்ல பேசறே!’

‘ஆச்சு! சாவு நம்ம பாஷையில பேச ஆரம்பித்துவிட்டது. டோய்! நிறையப் பேர்கள் மத்தியில் போய் நின்று கொண்டார். முன்னால் இருபது பின்னால் இருபது எனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, நடப்பவர்களின் மத்தியில் நடந்தார்.

அன்று இரவு ‘கோல்டன் டிரஷரி’ என்ற ஆங்கிலக் கவிதைத் தொகுப்பில் சாவைப்பற்றி என்னவெல்லாம் சொல்லியிருக்கக் கூடும் என்று புரட்டிக் கொண்டிருந்தார். திடீரென்று ஷெல்லியிலும், கீட்ஸிலும் ஆழ்ந்தார். ‘யுலிஸஸி’ல் முதல் இரண்டு மூன்று அத்தியாயங்கள் படிக்க வேண்டும் போலிருந்தது. ‘யுலிஸஸ்’ படித்துக் கொண்டிருக்கும்போது இன்னும் ஒரு எண்ணம் எங்கோ தோன்ற ஆரம்பிக்கவே தன்னைக் கெட்டித்துக்கொண்டார். ஆமாம். சாவு தன்னிச்சையில், தன்கதியில் யோசித்து இயங்குகிறது! இந்த எண்ணத்தோடு அதனுடைய அடிப்படைக் கோலங்களில் ஒரு விசேஷத் தன்மை இருக்கும் நினைப்பையும் பின்னிப் பார்த்தார். அவரையும் அறியாது அவருக்கு சதுரங்க வீரர் கபப்பிளாங்காவின் நினைவு வந்தது. யாருமே தன்னை ஜெயிக்க முடியாது என்கிற காலகட்ட நிலையில் அவருக்கு அந்த ஆட்டத்தின் மீதே பிடிப்புவிட ஆரம்பித்து விட்டதாம். கபப்பிளாங்காவின் இந்த அனுபவம் எல்லா நிலைகளுக்கும் பொருந்தும் என்று நினைத்தார். எதிராளி ரொம்பத் தோற்றுப் போனால் சொல்லிக் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது! ஆனால் சாவிடம் மட்டும் ஏன் இந்த வெறி போகவில்லை. இதுநாள்வரை தன்னுடையை தன்மையை உணர்த்திக் கொள்ளாமலே இருந்திருக்கிறது. குறைந்தபட்சம் அதற்கு ‘போர்’ அடிக்கவில்லை. எப்போதுமே ஜெயிப்பது என்பது விடலைத்தனமான காரியம் இல்லையா? அவர் எதிரே இருந்த நாற்காலியில் சாவு உட்கார்ந்திருந்தது.

‘இல்லை_எங்களிடம் கொடுக்கப்பட்ட விஷயங்களைக் காப்பாற்றவே நாங்கள் இருக்கிறோம். சாதாரணமாக, அன்போடு வாழ்ந்து, இருந்து, எங்களைத் துதிபாடி, போகவே நீங்கள் சமைக்கப்பட்டிருக்கிறீர்கள். அந்த விஷயத்தைத்தான் நீங்கள் எப்போதோ மறந்தாயிற்றே?’

‘இனிமேல் என்ன வழி?’

‘வழியா_எல்லாமே இனிமே மெதுவா நிர்மூலம்தான்!’

‘ஆனால் மனித குலத்தில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது . . .’

‘என்னவெல்லாமோ இன்னல்கள் விளைவித்தும் அதை நீ நம்பிய விதத்தில் எங்களுக்கெல்லாம் ஆச்சரியம்தான்!’

‘உனக்கு எல்லாமே தெரியுமா?’

‘எல்லாம்தான்!’

‘நான் என்னுடைய பதினோறாவது வயதுப் படலத்தைப் பற்றி அடிக்கடி நினைக்கிறேன். பஸ் ஸ்டாண்டுப் படலம் தான்!’

‘அதிலிருந்து நான் உன்னைக் கண்காணித்து வருகிறேன். சில சமயங்களில் ஓரிரு நாட்டங்கள் கொடுத்துத் திசை திருப்ப முயற்சி செய்து பார்த்தேன். உயிரை எடுத்துண்டாதானா? குழந்தாய்! அவ்வளவு சின்ன வயதிலே அவ்வளவு பெரிசா நினைக்கிறது தப்பு. உன் சாரத்தை எல்லாம் எப்போதோ நான் வாங்கிக்கொண்டு விட்டேன். இல்லாவிட்டால் பூமி தாங்காது!’

‘எப்பேர்ப்பட்ட அயோக்கியன் நீ.’

திட்டாதே! நான் நண்பனாக இருக்கவே விரும்புகிறேன். உன்னைப் பார்த்து நான் பயப்படாத நாள் இல்லே! ஆமாம் சொல்லேன், எப்படி இருக்கிறார்கள் உன் பொம்பளைகள்?’

‘நீ ஏன் என்னைக் கேலி பண்ணறே’?

‘எப்படியிருக்கா சொல்லேன்.’ஸ் ‘இப்ப கேட்டயானா_உனக்கு வெட்கமா இல்லை? மேலும் நீ ஏன் எல்லாத்தையும் இப்படிப் பிரிக்கிறே?’

‘ஏன் என்றால் நான் சாவு. தலைவணங்குடா முட்டாள்!

தினகரன் அதன் முன் மண்டியிட்டார்.

அது எழுந்து நின்று, ரொம்ப நேரம் இவரையே கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்தது.

‘பணிவு வேண்டும். அடக்கம் வேண்டும். எது கொடுத்தாலும் போதும் என்கிற மனப்பான்மை வேண்டும். வாழ்வு என்பது அவ்வளவு சுலபம் இல்லை’ என்றது.

அன்றிரவு தினகரனுக்கு மீண்டும் கனவு தொடர்ந்தது. முதலில் அவர் பெரிய பாலைவனத்தில் காலை பத்து மணி வாக்கில் எறியப்படுகிறார். எங்கும் அனல் பறக்கிறது. அவருடைய கைகளும் கால்களும் நன்றாகக் கட்டப்பட்டு, அங்கு இருக்கும் கம்பத்தில் கயிறுகள் சுற்றப்படுகின்றன. அவரால் எழுந்திருக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிகிறது. பதினொரு மணி வாக்கில் அவருக்குத் தண்ணீர்த் தாகம் ஏற்படுகிறது. அவர் அடிவயிற்றிலிருந்து கத்தினாலும், எள்ளளவுக்கேனும் ஏன் என்று கேட்க யாரும் இல்லை. அவருடைய தண்ணீர் என்ற குரலை ‘வெளிகள்’ கிரகித்துக்கொள்கின்றன. நெற்றிக்கு அருகில் பட்பட்டென்று சம்மட்டியால் ஓங்கி ஓங்கி அடிப்பது போன்ற பிரமை ; பக்கத்தில் நின்று கொண்டிருந்த சாவு ‘எல்லாம் இடைவெளிகளில் பாய்கிறது என்று சொல்லு. இடைவெளி கிரகித்துக் கொள்கிறது என்று சொல்லு’ என்கிறது.

‘எப்படி?’ என்று இவர் பேயாகக் கூச்சலிடுகிறார். அதைத் தொடர்ந்து அவருடைய உடம்பில் சிவப்பு கனிந்து விம்முகிறது. புழுகூட அப்படித் துள்ளாது ; அவர் துள்ளுகிறார்.

‘கருணைக்கு அழு’ என்கிறது சாவு.

‘நான் உன்னை மன்னிக்கமாட்டேன்’ என்கிறார் இவர்.

‘கருணைக்கு அழு_ஒரே ஒருதரம் நான் கேட்டதைச் சொல்லு. முயற்சி செய்’ என்கிறது ஒரு குரல்.

‘உன்னை நான் விடமாட்டேன்’ என்கிறார் இவர்.

‘உன்னால் ஒன்றும் முடியாது. நான் கேட்டதைச் சொல்லு,’

‘முடியாது’

‘யோசி’

‘முடியாது’

‘யோசி’

‘முடியாது’

‘யோசி’

‘முடியாது’

அங்கு அவர் எதிரில் என்னென்னவோ, பின்னத்திலேயும், முழு எண்களாலும் கணக்குகள் போடப்படுகின்றன. உருவமற்ற வெளியில் அவரைப்பற்றிப் பெரிதாக சர்ச்சை கிளம்புகிறது. அங்கு சர்ச்சை நடந்துகொண்டிருக்கும் போதே அவருடைய ரத்தத்தையும் சதையையும் மணல் உறிஞ்சிக்கொள்ள ஆரம்பிக்கிறது. அவர் அந்த ரத்தத்தை எங்கெல்லாமோ தொடர்ந்து போகிறார். இடம், காலம் ஒன்றுமே ஞாபகமற்றுப் போய், போய், போய் ஒரு துளி மண்ணாக ஆல்ப்ஸா? இமயமா? கிடந்து இறுகுகிறார்.

இன்னொரு துளியில் அவர் கீழே கீழே கீழே என இன்னமும் கீழே போய் ஒரு எண்ணெய் ஊற்றில் மிதக்கிறார். வெளியே வரும்போது லாவகமாகக் குழாயில் புகுந்து கொள்கிறார். பெரிய உருளையில் இன்னும் எதிலெல்லாமோ கடைசியில் அணுவாகவே ஒரு காருக்குள் புகுந்து காரணமே அற்று தன் இச்சையில் வெடித்துச் சிதறுகிறார். குரல்கள் எழும்பி ‘நீ சபிக்கப்பட்டவன்’ என்கிறது. காட்சி மாறுகிறது_பெரிய மலை ஒன்று தெரிகிறது. பஞ்சுபோல், பஞ்சு மிட்டாய்போல் அதன்மேல், ரொம்ப மேலே வெள்ளையாகவும் கீழ்ப்பாகங்களில் ஒருவித மஞ்சளாகவும் பனி வியாபித்திருக்கிறது. அதன் அடியில் ரொம்ப ரொம்ப தூரத்திற்கு, கண்ணுக்கு எட்டிய வரையில் பசும்புல் தெரிகிறது. ஒரே தூவான் போன்ற பனியினாலா? எதனால் அப்படியொரு குளிர்ச்சி அங்கு மண்டிக் கிடக்கிறது. எதனாலோ என்று சொல்லிச் சிரித்துக்கொள்கிறார் தினகரன். திபெத் குழந்தைகளா? கண்கள் இடுங்கி ரொம்பவும் வெள்ளைப் பற்களுடன் மூன்று குண்டு குண்டான குழந்தைகள் ஓடி வருகின்றன. என் குழந்தைகளா! என்கிறார் தினகரன். முதல் குழந்தை வலதுபுறம் இருப்பது நீல ஸ்வட்டரும், பின்னிய கம்பளி நிக்கரும் போட்டிருக்கிறது. அதிகமாக உபயோகித்த ஆனால் நன்கு பாலீஷ் பண்ணிய ஷு போட்டுக் கொண்டிருக்கிறது நடுவில் இருப்பது வெள்ளிக் கம்பளி ஸ்வட்டரும், கப்பி வர்ணத்தில் பின்னப்பட்ட கம்பளி நிக்கரும், அதே நிறத்தில் ஷுவும் போட்டுக் கொண்டிருக்கிறது. ஓரத்தில், இடது ஓரத்தில் வரும் குழந்தை நல்ல கோட்டும், நிக்கரும், கறுப்பு ஷுக்களும் போட்டுக் கொண்டிருக்கிறது. அவை தினகரனை நோக்கி ஓடி வருகின்றன. தினகரன் அந்த மலை அடிவாரத்தில் நின்று கொண்டிருக்கிறார். மூன்று குழந்தைகளும் ரொம்பவும் சந்தோஷமாக, உலகமெல்லாம் தம்முடையவை என்பது போல் வருகின்றன. அவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, இடது பக்கத்தில் ஒரு பெரிய செர்ரித் தோட்டம் முளைக்கிறது. அதற்கும் பின்னால், ஆனால் ஒரு பர்லாங்கு தூரத்தில் லூச்சித் தோட்டம் முளைக்கிறது. எல்லாமே மேகப்படலம் நீங்கி வந்த தங்க மாலைச் சூரியனில் அமிழ்கின்றன. நெருப்புக் குச்சி பற்ற வைத்ததுபோல் தொங்கும் அவ்வளவு பழங்களையும் தீ நாக்கு போலச் சிவந்த சூரியன் பற்றிக்கொண்டு ஓடுகிறான். தன் ரத்தமே செர்ரியாகப் போனதோ என்று தினகரன் பயந்தார். இதற்கெல்லாம் அப்பால் இரண்டு பர்லாங்கு தூரத்தில் ஒரே மல்பரி தெரிகின்றன. அதற்கும் அப்பால் யூகலிப்டஸ் மரங்கள். அங்கிருந்து காற்றுவாக்கில் எப்போதோ பறந்து வந்து விழுந்த அந்த இலைகளில், பச்சை இலைகளில் பாய் விரித்தாற் போன்று செர்ரிப்பழங்கள். குழந்தைகள் வேண்டும் என்கிற அளவுக்குச் செர்ரிப்பழங்களைத் தின்று இவரிடமும் கொண்டு வருகின்றன. ‘தாங்ஸ் தாங்ஸ்’ என்று அவ்வளவு பழங்களையும் பெற்றுக் கொள்கிறார். அதுகளைக் குஷிப்படுத்தும் விதத்தில் ‘ஆஹா எவ்வளவு நல்ல பழங்கள் ; தாங்ஸ், தாங்ஸ்’ என்கிறார். இடதுபக்கம் இருந்த குழந்தை கடைசியாக அவரிடம் வரும்போது அவர் துணுக்குறுகிறார். பிக்னிக் போன காரில் சிதறிய குழந்தை அல்லவா இது!

அது கொடுத்த பழங்களை இவர் பார்வையிடுகிறார்.

‘‘என்ன பாப்பா, பழமெல்லாம் ஒரேடியாய் சுருங்கியிருக்கு’’ என்கிறார் தினகரன். ‘‘சாவு மாமா கொடுக்கச் சொல்லுச்சு’’ என்கிறது குழந்தை.

* * * * *

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

Unknown on September 21, 2013 at 5:29 PM said...

S.RAMAKRISHNAN SIRANDA NOVELGAL LISTIL IDAMPERUM SAMPATHIN IDAIVELI OUT OF PRINTIL ULLATHU. 2014 BOOK FAIRKKU VELIIDUVOM ENDRU VIRUTCHAM VELIEEDU AZAGIYASINGAR SOLLI IRUKIRAR. SAAVU PATRI MIGAVUM YOSIKAVAIKUM NOVEL.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்