தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம், திருபத்தூர் வட்டம், சிங்கம்புணரி என்னும் கிராமத்தில் நாடார் பேட்டையில் 1920_ஆம் ஆண்டு ஆகஸ்டு 12_ஆம் தேதி ப. சிங்காரம் பிறந்தார். தந்தை மூக்க நாடார் என்ற கு. பழநிவேல் நாடார் ; தாயார் பெயர் உண்ணாமலை அம்மாள். இவர்களுக்கு சிங்காரம் மூன்றாவது மகன். அப்போது, சிங்காரத்தின் தந்தை, அண்ணன்கள் ப. சுப்பிரமணியம், ப. பாஸ்கரன் மற்றும் அவரது தாத்தா ப. குமாரசாமி நாடார் ஆகியோர் சேர்ந்து சிங்கம்புணரியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர்.
சிங்காரம், சிங்கம்புணரி தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வியும், பின்னர் மதுரை செயிண்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பும் பயின்றார். 1938_ஆம் ஆண்டு செ.கா. சின்னமுத்துப்பிள்ளை என்கிற சிங்கம்புணரிக்காரர் இந்தோனேஷியாவில் மைடான் என்ற இடத்தில் நடத்தி வந்த வட்டிக் கடையில் வேலை செய்வதற்காக கப்பலில் சென்றார். 1940_ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். பின்னர் மீண்டும் இந்தோனேஷியா சென்று அங்கு மராமத்துத் துறை அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். இச்சமயத்தில் தென்கிழக்காசிய யுத்தம் மூண்டது. யுத்தம் முடிந்ததும் இந்தோனேஷிய இராணுவ அரசின் அனுமதி பெற்று, பினாங்குக்குக் கப்பலில் சரக்குகள் அனுப்பும் வர்த்தகத்தைச் சில தமிழர்களுடன் சேர்ந்து செய்தார்.
யுத்த காலத்தில் இந்தோனேஷியாவை ஜப்பான் துருப்புகள் கைப்பற்றியபோது அங்கிருந்த நூலகம் சூறையாடப்பட்டு, புத்தகங்கள் தெருவில் வாரிக் கொட்டப்பட்டிருக்கின்றன. இச்சந்தர்பத்தில் நூலகத்தில் பணியாற்றிய நண்பர் ஒருவர் மூலம் சிங்காரத்துக்கு பல ஆங்கில நூல்கள் கிடைத்தன. அப்போது, குறிப்பாக ஆங்கில நாவல் வாசிப்பு சிங்காரத்துக்கு ஏற்பட்டது. அவரை வெகுவாகக் கவர்ந்த எழுத்தாளர் ஹெமிங்வே.
இந்தானேஷியாவில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டார். தலைப்பிரசவத்தின் போது அவரது மனைவியும் பிறந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டனர்.
1946_ஆம் ஆண்டு மீண்டும் இந்தியா திரும்பிய சிங்காரம் பின்னர் மீண்டும் இந்தோனேஷியா செல்ல திட்டமிட்டார். ஆனால் கடைசிவரை அங்கு செல்லாமல் மதுரையிலேயே தங்கிவிட்டார். 1947_ஆம் ஆண்டு ‘தினத்தந்தி’ பத்திரிகையின் மதுரைச் செய்திப் பிரிவில் சேர்ந்தார். சொந்த ஊருக்கும், நெருங்கிய உறவினர்கள் வீட்டுக்கும், விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் செல்வதை தவிர்த்து மதுரை ஒய்.எம்.சி.ஏ.வில் தனியாக தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் தங்கியிருந்தார். 1987_ஆம் ஆண்டு ‘தினத்தந்தி’யிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். 1997_ஆம் ஆண்டு ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகம் அவரை நிர்பந்தப்படுத்தி வெளியேற்றியது. பிறகு மதுரை, விளக்குத்தூண் அருகிலுள்ள நாடார் மேன்சனில் வாடகை அறையெடுத்து தங்கியிருந்தார். கடைசி காலத்தில் அவரது வாழ்நாள் சேமிப்பான ரூபாய் ஏழு லட்சத்தை, மதுரை நாடார் மகாஜன சங்கம் ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்கு வழங்கும் உதவித்தொகைத் திட்டத்திற்காக வழங்கினார். அப்போது தனது பெயரில் அறக்கட்டளை, புகைப்படம் திறப்பு போன்றன வேண்டாம் என்று கண்டிப்புடன் கேட்டுக் கொண்டாராம்.
நாடார் மேன்சனில் வாழ்ந்த கடைசி மூன்று மாதங்களிலும்கூட, எல்லோருடனும் சுமுகமாகப் பழகியபோதும், யாருக்கும் தொல்லை தரக்கூடாது என்று ஒதுங்கியே இருந்தார். சொந்த வாழ்க்கை பற்றியோ அந்தரங்க விஷயங்களையோ எப்போதும் அவர் யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. இப்படி அவராக விரும்பி, தனியாக ஒதுங்கி வாழ்ந்ததற்கு, 25_வது வயதில் அவரது இளம் மனைவியும் குழந்தையும் இறந்துவிட்டது, வாழ்க்கைப் பற்றிய அவநம்பிக்கை-யையும் இறுக்கத்தையும் அவரிடம் ஏற்படுத்திவிட்டது-தான் காரணம் என்று கூறப்படுகிறது.
எழுத்துலகத்திலிருந்தும் குறிப்பாக நூல்களை பதிப்பிப்பதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாகத் தொடர்ந்து எழுதாமல் ஒதுங்கிக் கொண்டார். 1950_ஆம் ஆண்டு ‘கடலுக்கு அப்பால்’ நாவலை எழுதினார். புலம் பெயர்ந்து அந்நியச் சூழலில் வாழும் தமிழர்கள் வாழ்வை களனாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் நாவல் இது. இதைப் பிரசுரம் செய்ய மதுரைக்கும் சென்னைக்குமாக பல தடவைகள் அலைந்தார். பின்னர் ஆனந்தவிகடன் நாவல் போட்டிக்கு அனுப்பினார், திரும்பி வந்தது. ஒன்பது வருடங்களுக்கு பிறகு 1959_ஆம் ஆண்டு கலைமகள் நாவல் போட்டியில் ‘கடலுக்கு அப்பால்’ முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. 1962_ஆம் ஆண்டு ‘புயலிலே ஒரு தோணி’ நாவலை எழுதினார். அது பத்து ஆண்டுகளாக பல பிரசுரகர்த்தர்களின் கைமாறி, கடைசியில் மலர் மன்னன் (‘1/4’ இதழை நடத்தியவர்) எடுத்துக்கொண்ட முயற்சியின் விளைவாக 1972_ஆம் ஆண்டு கலைஞன் பதிப்பகத்தால் பெரியதாகயிருக்கிறது என்கிற காரணம் சொல்லி எடிட் செய்யப்பட்டு, வெளியானது. ‘‘அதிகாரம், செல்வாக்கு, நட்பு, அரசியல் போன்ற பல குறிக்கீடுகளால் படைப்பு தீர்மானிக்கப்-படும் தமிழ்ச் சூழலில், எழுத்தாளனுடைய வேலை எழுதுவது மட்டுமே என்று ஒதுங்கியிருந்த சிங்காரம் பல காலமாகச் சற்றும் பொருட்படுத்தப்படாமல் அசட்டையாக ஒதுக்கப்பட்டிருந்தது ஆச்சர்யமில்லை’’ என்கிறார் விமர்சகரான சி. மோகன். ‘புதுயுகம் பிறக்கிறது’ பத்திரிகையில் வெளியான நாவல் பற்றிய கட்டுரையில் தொடங்கி தமிழ்ச் சூழலில் ப. சிங்காரத்தின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் சி. மோகன் மட்டும்தான். சிங்காரத்தின் மறைவுக்குப் பின்னர் 1999_ஆம் ஆண்டு தமிழினி பதிப்பகம் ‘புயலிலே ஒரு தோணி’, ‘கடலுக்கு அப்பால்’ இரண்டு நாவல்களையும், எடிட் செய்யப்படாத மூலப் பிரதியை தேடியெடுத்துப் பதிப்பித்தது.
ப. சிங்காரம், வாழ்வின் கடைசி 2 ஆண்டுகளாக இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 1997_ஆம் ஆண்டு டிசம்பர் 30_ஆம் நாள் விடாத வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மதுரை, கென்னட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றே மருத்துவமனையிலிருந்து ஸ்கேன் எடுப்பதற்காக வெளியே சென்ற வழியில் ஆம்புலன்ஸிலேயே அவர் உயிர் பிரிந்தது. மதுரைக்கு அருகில் தத்தநேரி சுடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவர், கடைசியாக தனது இறப்புச் செய்தியை யாருக்கும் தெரிவிக்கவேண்டாம்
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
0 கருத்துகள்:
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.