Jul 19, 2009

ஜி. நாகராஜன்-நடைவழிக் குறிப்புகள்-சி. மோகன்

சி. மோகன்

நவீன தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லைகளை அபாரமாக விஸ்தரித்தவர் ஜி. நாகராஜன். அது வரையான தமிழ்எழுத்து அறிந்திராத பிரதேசம் அவருடைய உலகம். வேசிகளும், பொறுக்கிகளும், உதிரிகளும் தங்கள் வாழ்வுக்கும் இருப்புக்குமான சகல நியாயங்களோடும் கெளரவத்தோடும் வாழும் உலகமது. ஜெயகாந்தனின் படைப்புலகில் இவர்கள் இடம் பெறுகிற போதிலும் அவருடைய மொண்ணையான மதிப்பீடுகளினால் அந்த உலகம் சிதைவுறுவதைப் போலல்லாமல் இயல்பான மலர்ச்சியைக் கொண்டிருக்கும் உலகம் ஜி. நாகராஜனுடையது. அவருடைய இரு நாவல்களுக்கும் தொடக்கமாக முன்வைத்திருக்கும் சிறு குறிப்புகள் அவருடைய படைப்புலகின் தன்மையையும் தனித்துவத்தையும் அறிய உதவும்.

'நாளை மற்றுமொரு நாளே'யில் இடம் பெற்றிருக்கும் தொடக்கக் குறிப்பு:

''இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை.

நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக் கூடிய சின்னத்தனங்கள்.

நிர்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல்.

விரும்பியிருந்தால் பெற்றிருக்கக் கூடிய நோய்கள்.

பட்டுக் கொண்டிருந்தால் அடைந்திருக்கக் கூடிய அவமானம்.

இவையே அவன் வாழ்க்கை.

அவனது அடுத்த நாளைப் பற்றி

நாம் தெரிந்து கொள்ள வேண்டாம்.

ஏனெனில் அவனுக்கும் நம்மில் பலருக்குப் போலவே

நாளை மற்றுமொரு நாளே!''

1929ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி, தாயாரின் ஊரான மதுரையில் 7ஆவது குழந்தையாகப் பிறந்தார். தந்தை கணேச அய்யர், வக்கீல். சிறு வயதில் தாயை இழந்த நாகராஜன் ஆரம்ப வருடங்களில் மதுரையில் தாய் வழிப்பாட்டி வீட்டிலும் பின்னர் திருமங்கலத்தில் தாய்மாமன் வீட்டிலும் வளர்ந்தார். இடையில் தந்தையார் அவரைத் தம்மிடம் அழைத்துக் கொண்டு பாடங்களைத் தாமே சொல்லிக் கொடுத்தார். 8,9 ஆம் வகுப்புகளை திருமங்கலம் நாடார் உயர்நிலைப் பள்ளியில் மீண்டும் மாமா வீட்டில் தங்கிப் படித்தார். மறுபடியும் பழனி சென்று 10,11 ஆம் வகுப்புகளை எம்.ஹெச். பள்ளியில் படித்தார். படிப்பில் படு சூட்டிகையான இவர் வகுப்பில் எப்போதும் முதல் மாணவனாகவே இருந்திருக்கிறார். கல்லூரிப் படிப்பை மதுரையில் மதுரைக் கல்லூரியில் மேற்கொண்டார். அப்போது கணிதத்தில் 100 சதவீத மதிப்பெண் பெற்று சி.வி. ராமனிடமிருந்து தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார்.

பட்டப் படிப்பு முடிந்ததும் காரைக்குடி கல்லூரியில் ஒரு வருடம் வேலை பார்த்தார். பின் சென்னையில் ஏ.ஜி. அலுவலகத்தில் ஓராண்டு பணி புரிந்தார். கல்விப் பணியில் அவருக்கிருந்த இயல்பான நாட்டம் காரணமாக, அவ்வேலையை உதறிவிட்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். இக்காலத்தில்தான் கம்யூனிச இயக்கத்தில் தன்னைத் தீவிரமாக இவர் வெளிப்படுத்திக் கொண்டதை அடுத்து கல்லூரி நிர்வாகம் இவரை வேலையிலிருந்து நீக்கியது.

இதன்பிறகு, திருநெல்வேலி வந்து பேராசிரியர் நா. வானமாமலை நடத்திய தனிப்பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார். கட்சிப் பண்களிலும் தீவிர முனைப்பு காட்டினார். இக்காலத்தில்தான் படைப்பாக்கத்திலும் தீவிரமாக ஈடுபட்டார். நெல்லையில் நான்கு ஆண்டுகள் அவர் பணி தொடர்ந்தது. போதையும் விலைமாதர் நட்பும் அவரிடம் உறவு கொள்ளத் தொடங்கியதும் இக்காலத்தில்தான். அவருடைய நடத்தைகள் கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தியபோது அவர் கட்சி அமைப்பிலிருந்து தாமாகவே ஒதுங்கிக்கொண்டு மதுரை வந்து சேர்ந்தார்.

கம்யூனிச கட்சி ஈடுபாடுகள் கொண்டவரும் நண்பருமான பேராசிரியர் சங்கர நாராணனன் மதுரையில் நடத்தி வந்த 'மாணவர் தனிப் பயிற்சி கல்லூரி' (எஸ்.டி.சி) ஆசிரியரானார். இக்காலத்தில சிறந்த ஆசிரியராக அவர் மதிப்பு உயர்ந்திருந்தது. இச்சமயத்தில்தான் உடன் பணியாற்றிய நண்பரொருவரின் ஏற்பாட்டின்படி ஆனந்தி என்ற பெண்ணை 1959ல் மணம் புரிந்தார். மணமான நான்காவது மாதம் ஆனந்தி இறந்து போனார். 1962 ஆம் ஆண்டு நாகலட்சுமி என்ற பள்ளி ஆசிரியையை மணமுடித்தார். இத்திருமண உறவில் கண்ணன், ஆனந்தி என்ற 2 குழந்தைகள் அவருக்கு இருக்கிறார்கள். இத்திருமணம் முடிந்த சில மாதங்களில் ராணுவத்தில் சேர்ந்தார். இவருடைய கம்யூனிச கட்சி உறவு வெளிப்படவே ராணுவத்திலிருந்து திரும்பினார்.

மதுரை வந்து கல்லூரியில் வகுப்பெடுக்கத் தொடங்கினார். அவருடைய பிரபல்யம் சொந்தமாக தனிப்பயிற்சி கல்லூரி ஒன்றைத் தொடங்க வைத்தது. அது வெற்றி பெறவில்லை. மீண்டும் எஸ்.டி.சி., வி.டி.சி., போன்ற தனிப்பயிற்சிக் கல்லூரிகளில் வகுப்பெடுத்தார். எந்த ஒன்றிலும் நின்று நிலைக்க முடியாமல் மாறி மாறி முயற்சிகள் மேற்கொண்டார். 70களின் ஆரம்பம் வரை இது தொடர்ந்தது. சென்னையில் யுனெஸ்கோ திட்டத்தின் கீழ் சில மாதங்களும், மதுரை காந்தி மியூசியத்தில் சில மாதங்களும் பணிபுரிந்தார்.

70களின் ஆரம்ப வருடங்களுக்குப் பிறகு, இவர் எந்த வேலையும் பார்க்கவில்லை. நாடோடி வாழ்க்கை தேர்வாகவோ, நிர்பந்தமாகவோ, சுபாவமாகவோ, ஆழ்மன விழைவாகவோ இவரை வந்தடைந்தது.

1981ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி மதுரை அரசு பொது மருத்துவமனையில் மரணமடைந்தார்.

தீவிரமான செயல்பாடுகள் கொண்டிருந்த காலத்தில் 'பித்தன் பட்டறை' என்ற பெயரில் பதிப்பகமொன்றை தொடங்கி தன்னுடைய புத்தகங்களை வெளியிட்டார். 'நாளை மற்றுமொரு நாளே', 'குறத்தி முடுக்கு' என்று இரு நாவல்களையும், 'கண்டதும் கேட்டதும்' சிறுகதைத் தொகுதியும் இவ்வகையில் வெளிவந்தவை. கடைசி ஏழெட்டு ஆண்டு கால நாடோடி வாழ்க்கையில் ஒரே ஒரு சிறுகதை மட்டுமே எழுதியிருக்கிறார்.

1969ல் என் 17ஆவது வயதில் ஜி. நாகராஜனிடம் நான் மாணவனாக இருந்தேன். பி.யூ.சி.யில் மூன்றாம் பாடத்தில் தவறி, மதுரையில் பிரசித்தி பெற்ற மாணவர் தனிப் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்தபோது கணிதப் பாடமெடுத்த ஆசிரியர் நாகராஜன். அப்போது ஒரு லட்சிய மனிதனாக என் மனதில் அவர் இடம்பிடித்திருந்தார். கம்பீரமும் பொலிவும் கூட முயங்கிய வசீகரத் தோற்றம். உடல் பயிற்சிகளினால் தின்மும் பெற்ற உடல்வாகு. தன்னம்பிக்கை மிளிரும் முகம். ஒவ்வொரு அசைவிலும் அணுகுமுறையிலும் பாந்தமாக வெளிப்படும் லயம். அவரைப்போல் ஆக வேண்டும் என்றுஎன் லட்சிய மனிதனாக அவரை ஸ்வீகரித்திருந்தேன். நாலு முழ அகலக் கரை வேட்டியிலும் வெள்ளை ஜிப்பாவிலும் படு சுத்தமாக எப்போதும் தோற்றமளிப்பார். நடக்கும்போது வலது கை நடு விரலுக்கும் சுட்டு விரலுக்குமிடையே சதா கனலும் சார்மினார் சிகரெட். இடது கை நடுவிரலும் சுட்டு விரலும் சிறு கத்திரி போல் அமைந்திருக்க, அவற்றின் இடுக்கில் வேட்டியின் பின்புற நடுமுனையை உயர்த்திப் பிடித்தபடி நடக்கும் லாவகத்தை அதிசயித்துப் பார்த்தபடி இருந்திருக்கிறேன். பின்னாளில் நான் வேட்டி கட்டத் தொடங்கியபோது அதே பாணியில் நடந்து பெருமிதம் கொண்டிருந்தேன்.

அதன் பிறகு 5 ஆண்டுகள் கழித்து - 1975 வாக்கில் - அவரைப் பார்த்தபோது தோற்றம் குலைந்து, நலம் குன்றியவரைப் போலிருந்தார். இப்போது நானும் கொஞ்சம் எழுதத் தொடங்கிவிட்டிருந்தேன். சிறு பத்திரிகைகளோடும், பிடித்த எழுத்தாளர்களோடும் நட்பு ஏற்படத் தொடங்கியிருந்தது. தருமு சிவராமுவோடு எனக்கு ஏற்பட்டிருந்த கடிதத் தொடர்பின் தொடர்ச்சியாக அவர் மதுரை வந்திருந்த சமயமது. நண்பர் குமாரசாமியின் பெரிய நாயகி அச்சக மாடி அறையில் சிவராமு தங்கியிருந்த நாட்களில் ஒருமுறை நாகராஜன் அங்கு வந்தார். என் லட்சிய ஆண்மகன் பிம்பமாக இருந்த அவரை சில ஆண்டு இடைவெளிக்குப் பின் பார்த்தபோதிருந்த தோற்றம் வேதனையானது. உடல் தளர்ந்து-விட்டிருந்தது. தயக்கம் சூடியிருந்தது முகம். அசைவிலும் அணுகுமுறையிலும் நிச்சயமற்ற தன்மை படர்ந்திருந்தது. அவருடைய அபாரமான நினைவாற்றல் மட்டும் எப்போதுமே கடைசி நாள் வரை பிரமிப்பூட்டுவதாகத்தான் இருந்திருக்கிறது. அந்த சந்திப்பில் 'நீ என் மாணவன் தானே' என்று கேட்டதிலிருந்து எண்ணற்ற உதாரணங்கள்.

இதற்குப் பின்னர் ஓரிரு தற்செயலான சந்திப்புகள் நிகழ்ந்த போதிலும், அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பின்னர், 1980ல்தான் அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்தது. அவருடைய மரண நாள் வரை இது நீடித்தது. ஒரு வங்கிக்கிளை நண்பர்களைப் பார்க்க அவர் அவ்வப்போது வந்து கொண்டிருந்த சமயமது. நானும் அங்கு அடிக்கடி போய்க்கொண்டிருந்தேன். இச்சமயத்தில் அவர் உடல் ஒடுங்கிப் போய்விட்டிருந்தது. மருத்துவமனையில் சேர்ந்து கொள்கிறீர்களா? என்று நண்பர்கள் வற்புறுத்திய போதெல்லாம் பிடிவாதமாக மறுத்துவிட்டார். அவர்மீது மதிப்பு கொண்டிருந்த 'வெற்றி தனிப்பயிற்சி கல்லூரி' முதல்வர் அவர் தங்க கல்லூரி விடுதியில் சிறு அறை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இச்சமயத்தில் ஒருநாள் வங்கிக்கு வந்த நாகராஜன் தன்னை மருத்துவமனையில் சேர்க்கும்படி நண்பர் சிவராமகிருஷ்ணனிடமும் என்னிடமும் கூறினார். சிவராமகிருஷ்ணன் தனக்குத் தெரிந்த மருத்துவர் மூலம் அரசு பொது மருத்துவமனையில் அவரைச் சேர்க்க ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினார். மறுநாள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துப் போகவிருப்பதைத் தெரிவிப்பதற்காக அதற்கு முதல் நாள் இரவு வி.சி.டி.யில் அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று நானும் சிவராமகிருஷ்ணனும் வெகுநேரம் அவரிடம் பேசிக் கொண்டிருந்தோம்.

மறுநாள் காலை, 1981 பிப்ரவரி 18ஆம் தேதி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, எல்லாப் பரிசோதனைகளும் முடிந்து வார்டில் சேர்த்துவிட்டு மதியம் 2 மணி போல் பிரிந்தபோது, கஞ்சா ஏதும் மருத்துவமனையில் உபயோகிக்க வேண்டாம். வெளியில் அனுப்பும்படி ஆகிவிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டேன். தன்னிடம் சிறு பொட்டலம் இருப்பதாகவும், கழிவறையில் வைத்து ரகசியமாக உபயோகித்துக் கொள்வதாகவும் கூறினார். 'சாயந்திரம் வரும்போது போட்டுக் கொண்டு வந்து தருகிறேன் இரவில் கழிவறையில் உபயோகித்துக் கொள்ளுங்கள்' என்றதும் என்னிடம் அதைக் கொடுத்து விட்டார்.

மீண்டும் சாயந்திரம் 5 மணி போல் சிவராமகிருஷ்ணனும் நானும் அவரைப் போய்ப் பார்த்தோம். அன்று அவர் பேசிய பேச்சுக்களை இன்னொரு சந்தர்ப்பத்தில் பதிவு செய்யக் கூடுமென நம்புகிறேன். நான் சிகரெட்டில் கஞ்சாவைப் போட்டுக்கொண்டு போயிருக்கவில்லை. 'போடத் தெரியவில்லை. இரவில் கழிவறை போய் போட்டுக் கொள்ளுங்கள்' என்று கொடுத்தேன். பேசிக் கொண்டிருந்தபோது கழிவறை போக வேண்டுமென்றார். எழுந்து நடக்க வெகுவாக சிரமப்பட்டார். சிவராமகிருஷ்ணனும் நானும் கைத்தாங்கலாக அழைத்துப் போனோம். அவரால் உட்காரக்கூட முடியவில்லை. தாள முடியாத அவஸ்தை. கழிவிரக்க வசப்பட்டவராக, 'கடவுளே, உன்னிடம் என்னைச் சீக்கிரம் அழைத்துக்கொள்' என்று வாய் விட்டு கதறி அழுதார். அன்று இரவு அவரைத் தொடர்ந்து பராமரிப்பது குறித்து பல வழிமுறைகளை யோசித்தோம்.

மறுநாள் காலை ஃப்ளாஸ்க்கில் காபியோடு போனபோது, அவர் உறங்கிக் கொண்டிருப்பதாக நினைத்தோம். ஆனார் அவர் இறந்துவிட்டிருந்தார். உபயோகிக்கப்படாமலேயே அந்தப் பொட்டலம் ஜிப்பாவில் இருந்தது. என் குற்ற உணர்வுகளில் ஒன்றாக பயன்படுத்தப்படாத அந்தப் பொட்டலம் நிலைத்துவிட்டிருந்தது.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்