Apr 27, 2013

வேனல்தெரு-எஸ்.ராமகிருஷ்ணன்

பதினாலாம் நூற்றாண்டு யுத்தத்தில் தப்பிய குதிரை போல வேனல் தெரு வசீகரமாக வாலை ஆட்டி அழைத்துக்கொண்டிருந்தது. நீண்ட உருவங்களாகவும் தோற்றம் கலைவுற்றவர்களாகவும் குடிகாரர்கள் நடந்து கொண்டிருந்தனர். வேனல் தெருவின் இரு பக்கமும் நீண்ட வரிசையாக மதுக்கடைகளே நிறைந்திருந்தன. கண்ணாடிக் குடுவைகளில் தேங்கிய மது தன் நீள் தொடு கொம்புகளால் பார்ப்பவரின் கண்களைச் சுருட்டி அடைத்துக் கொண்டிருந்தது. நகரின் தொல் பழமையான இந்தத் தெருவின் இமைகள் இரவு பகல் பேதமின்றி சிமிட்டிக்கொண்டிருந்தன. வயதை மறந்த குடிகாரர்கள் தங்களை மீறி ஸ்நேகித்துக் கொண்டும், பரஸ்பரம் அன்பில் கட்டுப்பட்டவர்களாய் நேசம் மட்டுமே வழியும் மதுக் குடுவையுடன் விடாது பேசியபடியிருக்க, எரிந்து கொண்டிருக்கும் ஒன்றிரண்டு குண்டு பல்புகளுக்கு ஊடே பெண்களும் கூடி கபடின்றி சிரித்தபடி முக்காடு விலக்கிக் குடித்துப் போகின்றனர். போதை ததும்பியவென் கனவிலோ உருக்கொண்டது போல வியாபித்திருக்கிறது வேனல் தெரு. மனிதர்கள் மதுவுடன் தங்கள் Rkஆகிருதிகளைக் கரைத்துவிட்டு திரவம் போலாகி மதுப்புட்டியினுள் சேகரமாகிவிட முயன்று கொண்டிருந்தனர்.

நீண்ட தாடியும் கருத்த ரம் புட்டியுமாக நிற்கிறாரே… அதோ கட்டத்தின் கடைசியில் – அவரிடம் கேளுங்கள். தனது விநோத கனவுகளில் நூறு நடிகைகளைக் காதலித்துத் தோற்ற கதை அவரிடம் ஒரு சுருள் பூச்சியாய் ஆயிரம் கால்கொண்டு ஊர்ந்துகொண்டிருக்கிறது. என்றோ இறந்துபோய்விட்ட எல்.பி.வனமோகினிக்காகத்தான் அவர் இப்போது மது அருந்திக் கொண்டிருக்கிறார். இருபது வயதிற்குள் எண்ணற்ற நடிகர்களால் காதலிக்கப்பட்டு, எவரையும் வெறுக்கத் தெரியாமல் சுயமரணம் செய்து கொண்ட அந்த நடிகையின் சுருள் கூந்தல் இழையொன்று மதுவின் வழியே தன்மீது படர்வதாகவே அவர் நினைத்துக்கொள்கிறார். எல்.பி. வனமோகினியை அவர் நேரில் கண்டவரில்லை.

யாரோ தந்த சினிமா புகைப்படத்தாளில் சுழித்த உதடுடன் இருந்த அவள், நரி ஒன்றைத் தன்னோடு அணைத்துக் கொண்டிருந்தாள். நரியே அவளைக் காதலிக்கச் செய்தது. இந்த நூற்றாண்டின் இரண்டாம் பத்தில் இறந்து போனாள் வனமோகினி. என்றாலும் என்ன? அவளை உயிருடன் எழும்பும் மதுப்புட்டிகள் அவரிடம் இருந்தனவே. அவரின் மனதில் அன்பின் சிறு துவாரங்களின் வழியே தீர்க்க முடியாத துக்கம் சுரந்துகொண்டிருக்கிறது. அன்பே துக்கத்தின் துளிதானோ? உலகில் வனமோகினியின் காலம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இருக்கும்? அவரிடமிருந்து தேவைப்படுமாயின் மதுவை நீங்களும் பெற்றுக் கொள்ளலாம். இன்று அவரிடமிருந்த மதுப்புட்டியைப் பிடுங்கிக்கொண்டு அவரை மிதித்துத் தள்ளியபடி நகர்கிறானே அந்த இளைஞன், அவன் பெயர் என்னவாகயிருக்கும்?

வேனல் தெருவிற்குள் வருபவர்கள் எவராகயிருப்பினும் பெயர் ஒன்றுதானே? இளைஞன் தன்னிடமிருந்த சில்லறைகளைத் தெருவெங்கும் வீசி இறைக்கிறான். எவனோ ஒரு கடைக்காரன் தன்னிடம் சில்லறையில்லை என எந்த ஊரிலோ மறுதலித்ததின் பதிலாக இங்கே சில்லறைகள் வீசுகிறான். புpன்பு மெதுவாகத் தன்னிடமிருந்த நூறு ரூபாய் தாளை சுருட்டி அதன் முனையில் நெருப்பிட்டுப் புகைக்கிறான். அவனைப் பார்த்து யாரோ சிரிக்கிறார்கள். ஏழாம் நம்பர் கடை மூலையில் இருக்கும் இருவர்தானே சிரித்தது. அவர்களில் ஒருவனுக்கு, பணத்தைப் புகைப்பவனிடமிருந்து ஒரேயொரு தம் அடிக்க ஆசை எழ, கால் பின்னிய நிலையில் எழுந்து வந்து அவனிடம் தம் கேட்கிறான். வந்தவன் உதட்டிலும் பணத்தின் நீல நிறம் ஒட்டிக்கொள்கிறது. இருவரும் புகைக்கிறார்கள். அவர்களுக்குள் ஏற்பட்ட புதிய நட்பிற்காக இருவரும் ஒரே மதுக்கோப்பையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். கோப்பை காலியானதும் இருவருக்குள் விரோதம் துவங்குகிறது. தனது பணத்தைப் பிடுங்கி சுருட்டிப் புகைத்துவிட்டான் என வந்தவனுக்கு எதிராகக் கூச்சலிடுகிறான் இளைஞன்.

ஏழாம் கடையில் இருந்தவனோ தன்னுடன் இருந்த நண்பன் எவன் என அறியாது மற்றொருவன் தோளில் சாய்ந்துகொண்டு உறவை விளித்து மாப்ளே… மாப்ளே.. என செல்லமிடுகிறான். இத்தனை குடிகாரர்களுக்கும் நடுவில் சிதறிய நாணயங்களைக் குனிந்து அவசரமும் ஒடுக்கமுமாக பொறுக்கிக் கொண்டிருக்கிறாளே அந்த செங்கிழவி, அவளை விடவும் திருடக்கூடியவர் இந்த வேனல் தெருவில் எவரும் கிடையாது. நாணயங்களைக் குனிந்து சேகரித்தபடியே அவள் கால் செருப்புகளைத் திருடி ஒளிக்கின்றாள் பாருங்கள். அவள் உடைந்த குப்பிகளுக்குள் நாணயங்களைப் போட்டுக் குலுக்குகிறாள். அவைதான் எத்தனை இனிமையாகச் சப்தமிடுகின்றன. நாணயங்கள் நிரம்பிய மதுப்புட்டியுடன் வேனல் தெருவில் இருந்த இருள் சந்தில் போகிறாள். அங்கும் சிலர் குடித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அவர்கள் நிலத்தோடு உரையாடிக்கொண்டிருப்பது போல முணுமுணுக்கின்றனர்.

விலை மலிந்த சாராய வீதி அந்த இருள் சந்து. தகரக் குவளைகளில் மஞ்சள் சாராயம் மினுக்கிறது. செங்கிழவி தன் மதுப்புட்டியை ஒரு தகரக் குவளையில் கொட்டுகிறாள். மிச்சமான சாராயத்தில் ஊறுகின்றன நாணயங்கள். தங்கத்தைப் போன்ற வசீகரமான அத்திரவத்தை அவள் உதடு தீண்ட விரிகின்றது. ஒரு வான்கோழியைப் போல சப்தமிட்டபடி அவள் குடித்துவிட்டுத் தகரக் குவளையைத் தருகிறாள். அவளுடைய வயது மெல்லக் கரைந்து மீண்டும் பால்யம் கண்டவள் போல தனது மார்புகளை சாராயக்காரனிடம் காட்டி இச்சை மொழியில் பேசுகிறாள். அவனோ கிழட்டு நாயே என ஏசியபடி மீண்டும் தகரக் குவளையில் சாராயம் தருகிறான். இனி இரவு முழுவதற்கும் வேறு கிடைக்காது என்பது தெரியும். நீண்ட கயிற்றால் காலி மதுப்புட்டியை இடுப்பில் சுற்றி நாணயம் தேடி அலையத் துவங்குவாள். வேனல் தெருவிற்கு எல்லா இரவும் மது வாங்க வரும் பக்கீர் வந்திருக்கக்கூடும்.

அவரது மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் ஓசையைக் கேட்டதும் கிழவி ஓடுகிறாள். பக்கீர் என்றைக்கும் போலவே இரண்டாம் கடை முன் நிற்கிறார். அவருக்கு உரியதைப் பெற்றுக்கொள்கிறார். இளம் பெண்ணைப் போல அவரை உரசிச் சிரிக்கிறாள் செங்கிழவி. அவர் வண்டியில் அமர்ந்தபடி எல்லா நாளையும் போலவே தனது இடது காலால் அவளை உதைத்துத் தள்ளிவிட்டு ஐந்து ரூபாயை எறிந்து புறப்படுகிறார். அதை எடுக்க மனம் அற்றவளாக அவரின் மனைவிகளைப் பற்றியவசைகளைப் பெருக்கியபடி நிற்கிறாள். அந்தப் பணம் இரவெல்லாம் எவராலும் எடுக்கபடாமல் அந்த இடத்தில் கிடக்கும். விடிந்த பின்பு அதை அவளே எடுத்துக்கொள்ளக் கூடும். ஆயினும் இரவில் அவள் அதன்மீது மூத்திரம் பெய்வதையோ, காறி உமிழ்வதையோ எவர் தடுக்க முடியும்? வழியற்ற ஒருவன் அப்பணத்தை எடுத்த நாள் ஒன்றில் கிழவி அவன் உடைகளை அவிழ்த்துவிட்டு ஆடையற்ற அவன் உறுப்பில் புட்டியால் அடித்திருக்கிறாள் என்கிறார்கள். எனினும் புறக்கணிக்கப்பட்ட பணம் வெறும் காகிதமாகஇருளில்வீழ்ந்துகிடக்கும்.

வேனல் தெருவிற்குப் புதிதாக வந்த அந்தப் பையனைப் பாருங்கள். இப்போதே மீசை அரும்பத் துவங்கியிருந்த அவன், எதிர் வீட்டில் குடியிருந்து வேறு ஊருக்கு மாற்றலாகிப் போன மாணவிக்காகவும் தன் முதல் காதலுக்காகவும் மதுப்புட்டியைத் திறக்கிறான். அவனிடம் சொல்லவொண்ணாத காதல் இருக்கிறது. தோற்றுப்போன தன் முதல் காதல் பற்றி யாரிடமும் பேச முடியாத தவிப்பில் அவன் கடைசியில் தன்னிடமே பேச முயலுகிறான். தன்னிடம் பேசுவதைவிடவும் வேறு எவர் கிடைக்கக்கூடும் நல்துணை. அவனுக்கு குடிக்கத் தெரியாமல் இருக்கக்கூடும். ஒருவேளை மது அவனை வீட்டிற்குத் திரும்பவிடாமல் ஏதோ ஒரு தெரு இருளில் விழச் செய்யக்கூடும். ஆனாலும் அவனுடன் பேசுவதற்குக் கற்றுத் தரக்கூடும். அவன் கறுப்புத் திரவம் ஒன்றை வாங்கியிருக்கிறான்.

அத்திரவம் அவன் உடலில் கண்ணாடி இதழ் போல நீர்தட்டானின் சிறகை விடவும் மெல்லியதாக இரு சிறகுகளைக் கிளைவிடச் செய்யும். இதை நினைத்தபடியே குடிக்கிறான். பனை விசிறியைப் போல வடிவம் கொண்ட அந்தச் சிறகு அருகில் குடித்துக் கொண்டிருப்பவன் கண்ணுக்;குக்கூடத் தெரிகிறது. அவனுள் மிதந்து கொண்டிருந்த திரவம், மாற்றலாகிப் போன பெண்ணின் சுவடுகளைப் பற்றிச் சென்று, தெரியாத ஊரில் உறங்கும் அவள் வெண்பாதங்களை முத்துகின்றன. அவன் இப்போது அந்தப் பெண்ணையே குடித்துக் கொண்டிருக்கிறான். புட்டியில் ஒரு துளி திரவமும் இல்லாமல் தீர்த்துவிட்டான். நீர்மை படர்ந்த கண்களுடன் தன் முதல் காதலைப்பற்றித் தன்னிடமே பேசிக்கொள்கிறான். விசும்பலும் ஏக்கமும் ஊர்கின்றன உடலெங்கும். சக குடிகாரன் ஒருவன் அவனை நோக்கித் தன் கைகளை விரிக்கிறான். கரங்களின் ஊடே நுழைந்த மாணவனை முத்தமிடுகின்றன பெரு உதடுகள். மாறி மாறி முத்தமிட்டுக்கொள்கிறார்கள்.

பின் இருவரும் தோளில் கைபோட்டபடி அடுத்த மதுக்கடைக்குப் போகிறார்கள். அவர்களை இடித்துக்கெர்ணடு போகும் நபர் பையனின் நல்லாசிரியராக இருக்கிறார். எனினும் என்ன? இரவின் ரகசிய படிக்கட்டுகளின் வழியே உலவும் குடிகாரர் அவரும்தானே. காலி மதுப்புட்டிகளில் விரல் நுழைத்து துழாவும் குருடன் செபாஸ்டியன் புட்டிகளில் மிஞ்சிய மதுவைத் துளிதுளியாக தன் சிரட்டையில் சேகரிக்கிறான் பாருங்கள். எவனோ குடித்து மீதம் வைத்துப்போன பாதி புட்டி ஒன்றால் சிரட்டையே நிரம்பி விடுகிறது. இனி அவனை விடவும் யோகமும் சந்தோஷமும் கொள்ளக்கூடிய மனிதன் எவனிருக்கிறான். வேனல் தெரு இடிந்த மூத்திரப் பிறையின் படிக்கட்டில் அமர்ந்தபடி அவன் இரவு உணவையும் சிரட்டை மதுவையும் ருசித்துக் குடிக்கிறான். பகல் முழுவதும் கூவிப் பெற்ற நாணயங்களையும் மனிதர்களையும் மறந்துவிட்டு, தான் கண் பார்த்து அறியாத வேனல் தெருவின் வாசனையை முகர்ந்தபடி களிப்புறுகிறான். சந்தோஷம் ஒரு சல்லாத்துணி போல உடல்மீது படர்கிறது.

தன்னிடமிருந்த பீடியைப் புகைக்கத் துவங்கியதும் உலகம் ஏன் இத்தனை சந்தோஷமாகவும், இடைவிடாத களிப்பையும் கொண்டிருக்கிறது என எண்ணிக்கொண்டான். ஸ்திரீகளையும் வீட்டையும் மறந்த வேனல் தெரு மதுக்குடியர்களுக்குள் மட்டும் எப்படி வற்றாமல் களிப்பு பீறிடுகிறதோ என புரியவேயில்லை. கசப்பு முளைத்த நாவுடன் அவர்கள் உலகின் மொத்தக் களிப்பையும் திருடி வந்துவிட்டார்களாயென்ன. வேடிக்கையும் உல்லாசமும் நிரம்பிய அத்தெருவிற்குள் குற்றம் என எதைச் சொல்லிக்கொள்ளக் கூடும். திறந்த இரவினுள் குற்றங்கள் நிழலைப்போலசப்தமிடாதபடியேஉலவுகின்றன.

பண்டிகை நாள் தவிர வேறு காலங்களில் ஒப்பனையற்றுப் போன ஸ்திரீபார்ட்காரன் ஒருவன் மட்டும் குடியில் குரல் உயர்த்திப் பாடாமல் இருந்திருந்தால் உல்லாசத்தில் இந்த லயம் இருந்திருக்கக் கூடுமா? அவனுக்குப் பெண்களைவிடவும் அடர்ந்த கூந்தல். ஸ்திரீ முகம் கொண்ட அவன் வேனல் தெருவிற்குக் குடிப்பதற்கு ஒருபோதும் தனியே வருவதேயில்லை. ஒரு ஆட்டுக் குட்டியை மார்போடு அணைத்து எடுத்துக்கொண்டு வருவான். கற்பனையான உபவனத்தில் தோழியோடு அலையும் ராணியைப் போல நடக்கிறான்.

அவனுடைய தோளில் சரசரக்கும் தலைமயிர் குடிப்பவர்களுக்குள் சரசத்தின் மூச்சைக் கிளப்பிச் செல்கிறது. வேஷமிடாத போதும் அவனால் ஸ்திரீபார்டினின்னு தப்பிக்க முடியவில்லையே. பொய் மார்பகமும், உயர் கொண்டையும் அணியவில்லையே தவிர, அவன் முகத்தில் மஞ்சள் திட்டுகளும், கைகளில் வளையும் சப்தமிட வருகிறான். அவனுடைய ஆட்டுக்குட்டி துள்ளி குடிகாரர்களின் ஊடே அலைகிறது. ஆட்டின் கழுத்தில் புரளும் ஒற்றை மணி சப்தம் கேட்ட குடிகாரன் எவனோ தங்களுக்குக் குடிப்பதற்காக வாங்கிய புட்டியுடன் இருளில் மறைகிறான். ஆட்டின் கண்களில் பழகிய போதையின் சுகிப்பு தெரிகிறது. அவனும் ஆடுமாகக் குடிக்கிறார்கள். இருவரும் இரவெல்லாம் குடிக்கக்கூடும். குடித்த ஆடுகள் எப்போதும் இயல்பிலேயே புணர்ச்சிக்கு ஏங்குகின்றன. அவை மனித பேதமறியாது கால் தூக்கி நிற்கின்றன. நள்ளிரவு வரை அவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆடு வேனல் தெருவின்று கிளம்பி அவர்கள் மஞ்சள் அழியும் உலர்ந்த வீதிகளில் காகிதத்தை மென்றபடி அலையத் துவங்குகிறது. மூடிய வீடுகளுக்கு வெளியே முரட்டுக் குடிகாரனைப் போல ஆடு மணியசைத்துச் சுழல்கிறது. தடுக்க யார் இருக்கிறார்கள். உல்லாசம் தெருவில் தனியே நடனமிடுகிறது என்பதைத்தவிர.

வேனல் தெரு மதுக்கடைகள் மூடப்படுவதேயில்லை. கடைகளுக்குக் குடிக்க வருபவர்கள் மட்டுமல்ல, கடையில் இருக்கும் விற்பனை செய்யும் நபர்கள் கூட ஒரே முகச் சாயலில் தானிருக்கிறார்கள். அவர்களுள் நான்காம் கடை சிப்பந்தியின் கண்கள், புட்டிகளை வாங்கும் எல்லா மனித முகத்தையும் துளையிட்டு அறிந்துவிடுகின்றன. மதுக்கடைச் சிப்பந்திகள் சில்லறை தராமல் ஏமாற்றும்போதோ, கள் மதுவை விற்கும்போதோ கூட குடியர்கள் ஏன் எதிர்;ப்பதில்லை. வேனல்தெரு இரவு எப்போதும் அரை மயக்கநிலையே இருக்கிறது. பொருள் வழி அலையும் வியாபாரிகளும் பயணிகளும் இதனுள் நுழையாமல் செல்ல முடிவதேயில்லை. தனது குறிப்பேட்டில் யாரோ பயணியின் கைகள் தெருவின் ஞாபகத்தினை எழத் தாக்குகின்றன. பின் அவனும் களைத்துவிடுகிறான். நேற்றாக இருக்கலாம்.

குடிக்க வந்த இருவர், நெடும் காலத்தின் பின் சந்திப்பு கொண்டு நினைவைப் பரிமாறியபடி குடித்தனர். அவர்கள் பர்மாவிலிருந்து நடந்து வந்தவர்கள் எனத் தெரிகிறது. மதுப்புட்டிகள் காலியாகியபடி இருந்தன. பின் இருவரில் மூத்தவன் மதுப்புட்டியை உயர்த்தி அதனுள் பர்மா மூழ்கியிருப்பதாகக் கூறுகிறான். திரவம் மெல்ல படிய பர்மா நகரம் கண்ணாடி மீறி விரிகிறது. இருவரும் யுத்தத்திற்கு முந்திய மரவீடுகளின் சாலையில் நடக்கின்றனர். ஜப்பானிய விமானங்களின் குண்டு நகர் மீது சிதறுகிறது. தெருக்களுக்குள் ஓடுகிறார்கள். துப்பாக்கி ரவை எட்டாத வெளியில் பயணித்து நடந்தபோது ஒருவன் மற்றவனை நோக்கி துப்பாக்கி நீட்ட, தோட்டா பீறிட்டு முதுகில் பாய்கிறது. விழித்துக் கொண்டவனைப் போல குடிப்பவன் கண்ணாடி புட்டியைத் தூக்கி உடைக்கிறான். பர்மா சிதறுகிறது. சுட்டுக்கொண்டது யார் யாரை என்ற புதிர் விலகாமல் சொந்த துயரத்திற்காக மீண்டுமொரு மதுப்புட்டி வாங்க நடக்கின்றனர்.

இரவு நீள நீள மயங்கிச் சரிந்த சாயைகளின் நடமாட்டம் ஓய்ந்த பின்பும் வேனல் தெரு விழித்தபடிதானிக்கிறது. என்றோ இந்த நகரையாண்ட வெள்ளைப் பிரபுவின் குள்ளமான சிலையைப் பாருங்கள். அதன் கண்கள்கூட இந்தத் தெருவைப் பார்த்தபடிதானிருக்கின்றன. பிறந்த தேசம் விட்டு கனவுக் கப்பலில் மிதந்தபடி அந்தத் துரை இந்நகரை நன்றாக அறிந்திருந்தான். அந்தச் சிலையின் கீழே உளறுகிறானே ஒருவன் அவன் எதைத்தான் பேசுகிறான் – காதில் விழுகிறதா? என்றோ மழை வெறித்த நாள் ஒன்றில் சிவப்புக் குடையுடன் வந்த இரண்டு சட்டைக்காரப் பெண்கள் கண்ணீர் மல்க, அந்தச் சிலையின் முன்பாக மௌனித்து விட்டு ரோஜா மலர்களை அங்குவிட்டுச் சென்றனரே அன்றும் அவன் அங்கு குடித்துக்கொண்டிருந்தான்.

ரோஜா மலர்கள் வேனல் தெரு மதுக்குடியர்களைப் பேச்சற்றுப் போகச் செய்தது. மதுக் கடைக்காரர்களுக்கு அந்த ரோஜாக்களைப் போல குற்ற உணர்வை ஏற்படுத்தும் அந்தப் பொருளும் இதுவரை உலகில் இருந்ததாக நினைவில்லை. இருபத்தி எட்டு மதுக்கடை சிப்பந்திகளும் ரோஜாக்களை எவராவது எடுத்துப் போய்விட வேண்டும் என ஆசைப்பட்டார்களே அன்றி எவனும் கீழ் இறங்கி அந்த ரோஜாக்களை எடுத்து எறிய இயலவில்லை. பதினாலாம் கடைச் சிப்பந்தி ஒருவன் தன் ஆறு வயது மகள் ஞாபகம் பெரு மைல்களுக்கு அப்பால் உள்ள கிராமத்து வீட்டின் கதவுகளைத் தட்டி முகம் பார்க்க ஆசையுற்றுப் புலம்பினான்.

அவனாலும் இந்த ரோஜாக்களை எடுத்து விடமுடியவில்லைதானே. மூன்று நாட்கள் வரை அதே இடத்தில் காய்ந்து சருகாகிய நிலையில் ரோஜாக்கள் இருந்தன. பின் காற்று அதைத் தன்னோடு கூட்டிப் போனது. காற்றில் மறைந்து விட்ட ரோஜா ஏற்படுத்திய வெறுமை கடைச் சிப்பந்தி ஒருவனுக்குத் தாளாமல், அவன் வீதியின்று அழித்து ஓடி, நகரையே விட்டுப் புலம்பி ஓடுகிறானே அது எதற்காம்? விசித்திரம்தான் மனிதர்களாக உருக்கொண்டு இங்கு வருகின்றதாயென்ன?

மழிக்கப்படாத மயிர் படர்ந்த முகத்துடன் ஒருவன் எல்லா மதுக்கடைகளிலும் இரஞ்சும் குரலில் பணத்தை வைத்துக்கொண்டு கேட்டும், எவரும் இல்லையெனத் தலையாட்டுகிறார்களே தெரிகிறதா? அவனுக்கான மதுப்புட்டிகள் உலகில் இல்லாமல் தீர்ந்து விட்டனவா? அவன் குடிப்பதற்காக எதையும் கேட்பதாகத் தெரியவில்லை. அருகில் வந்து அவன் குரலைக் கேளுங்கள். வேறு எதோ ஒரு பொருளிற்காக மன்றாடுகிறான். படர்ந்த மீசையில் கண்ணீர் துளிர்த்து நிற்க அவன் வேதனையுடன் எதைத்தான் கேட்கிறான்? நேற்றுதானோ இல்லை ஒரு வருடத்தின் முன்பாகவோ எதோ ஒரு மதுக்கடையில் அவன் இறந்துபோன மனைவியின் மணநாள் பட்டுப் புடவையொன்றை விற்றுக் குடித்து போயிருக்கிறான். இன்று புடவையின் ஞாபகம் பீறிட, தேடி மீட்டுக் கொள்ள அலைகிறான். அந்தப் புடவையின் ஒரு முனை தீயில் எரிந்து போயிருக்கும் என்பதும் அதைச் செய்தவன் அவன் என்பதையும் யார் அறிவர்? எல்லா மதுக்கடைக்காரர்களும் அவனையறிவர். புடவை என்றில்லை. கடிகாரங்கள், நிலைக்கண்ணாடி என எத்தனையோ விற்றுக் குடித்துப் போயிருக்கிறான்.

அந்தப் புடவையை அடைந்தவன் எக்கடையின் சிப்பந்தி எனத்தான் தெரியவில்i. அவனது பரிதாபம் தாங்காது சக குடிகாரன் ஒருவன் விடாது பேசுகிறான். ஒரு சிப்பந்தி அவனைக் கூப்பிட்டு குடிகாரர்கள் விற்றுப்போன பொருட்களின் சேகர அறையைத் திறந்து காட்டுவதாகக் கூறுகிறான். அந்த அறையினுள் புடவைகள், மரக்கண்ணாடிகள், கடிகாரங்கள், மணல்குடுவைகள், பழம் துப்பாக்கி, இசைத்தட்டுகள், புகை பிடிக்கும் குழல், கோப்பைகள், தைல ஓவியம் எனக் குவிந்து கிடக்கின்றன. தன் மனைவியின் புடவையைத் தேடிச் சலிக்கிறான். என்றோ அடமானத்தில் வைக்கப்பட்டுப் போன சித்திரக்காரனின் இதயம் ஒன்று மிக மெதுவாகத் துடித்துக்கொண்டிருந்தது அறையில். அந்த அறையை விட்டு அகலாது ஆறு நாட்கள் புடவையைத் தேடிக் கொண்டிருந்தான். பின்னொரு நாள் வெளிறிய முகத்துடன் மனைவியின் புடவையை நெருப்பிட்டு எரித்து சாம்பலாக்கிக் குடித்தவன் நானே எனக்கூறி தெருக் கடந்து சென்றான். கடைச் சிப்பந்திகள் அறிந்திருக்கிறார்கள் – குடிகாரர்கள் எதையும் நினைவில் வைத்துக்கொள்வதேயில்லை என்பதை.

வேனல் தெரு என்பதே ஒரு கண்ணாடி கூண்டுதான் போலும். இங்கே வருபவர்கள் மதுவால் மட்டும் போதையாடுகிறார்கள் என எவராலும் தீர்க்கமாகச் சொல்ல முடியாது. விசித்திரம் ஒரு மோதிரமென இவர்கள் விரல் சுற்றிக்கொள்ள, உறக்கமற்று எதைத்தான் அழிந்துவிடக் குடிக்கிறார்கள். வாகனங்கள் ஊர்ந்து அலையும் நகர வீதியில் கூக்குரலிட்டு வெறியுடன் ஒருவன் நீட்டுகிற கத்தியின் பரப்பில் வேனல் தெரு உருக்கொண்டு விடுவதைப் பல கண்களும் அறிந்தே கடக்கின்றன. என்றாலும் நண்பர்களே, மதுக்கடைகள் மூடப்படுவதேயில்லை. மீன்கறிகளையும் மிஞ்சிய மதுவையும் குடித்துப் பெருத்த எலிகளின் கூட்டமொன்று தெருவை கருமி பூமியினுள் இழுத்துச் சென்றுவிட முயல்கின்றன. தன் தலைமயிர் நிலத்தில் வேர்விட நூற்றாண்டுகளாக ஒருவன் இத்தெரு நடுவில் வீழ்ந்து உறங்கிக் கொண்டேயிருக்கிறான். அந்த மனிதன் விடுபட்டுப் போன சீன யாத்ரீகர்களில் ஒருவன் எனச் சொன்னால் நம்புவீர்களா நீங்கள்?

காலச்சுவடு-இதழ்19,1997

Apr 25, 2013

எம். எ. எம். நுஃமான்-க்கு விளக்கு விருது

இலக்கிய விமரிசகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர்,பேராசிரியர் எம். எ. எம். நுஃமான் அவர்கள்
2011 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருதுக்குரியவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
திறனாய்வு, மொழியியற்சிந்தனை, கவிதை, மொழிபெயர்ப்பு, கல்வித்துறை சார்ந்த கருத்தியல் உருவாக்கம் போன்ற பலதிறப்பட்ட பங்களிப்பைத் தமிழுக்குச் செய்திருப்பதைக் கருத்தில் கொண்டு பேராசிரியர் ராமசாமி, கவி சிபிச்செல்வன், எழுத்தாளர் சபாநாயகம் ஆகியோர் கொண்ட நடுவர்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் நுஃமான் அவர்களை நடுவர்குழு தெரிவு செய்தது.m_a_nuhman

பேராசிரியர் நுஃமான் முப்பது நூல்களுக்கு ஆசிரியர். மொழியும் இலக்கியமும் (2006), மொழியியலும் இலக்கியத் திறனாய்வும் (2001), மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் (1987), திறனாய்வுக் கட்டுரைகள் (1986), பாரதியின் மொழிச்சிந்தனைகள் (1999), இருபதாம் நூற்றாண்டு ஈழத் தமிழ் இலக்கியம், (1979), அடிப்படைத் தமிழ் இலக்கணம் (2007) ஆகிய பேராசிரியர் நுஃமானின் முக்கியமான விமரிசன நூல்கள். மழைநாட்கள் வரும் (1983), அழியா நிழல்கள் (1982), தாத்தாமாரும் பேரர்களும் நெடுங்கவிதைகள் (1977), பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் (1984) ஆகிய கவிதை  நூல்கள் மிகப் பரவலாக அறியப்பட்டவை.

பாலஸ்தீனக்கவிதைகள், முப்பது கவிஞர்களின் 109 கவிதைகள் (2008), மொகமூத் தர்விஸ் கவிதைகள் (2008), பாலஸ்தீனக்கவிதைகள், 15 கவிஞர்களின் 71 கவிதைகள் (2000), காற்றில் மிதக்கும் சொற்கள் ( மலாய் மொழி கவிதைகள்), இரவின் குரல் (இந்தோனேசிய மொழி கவிதைகள்) ஆகியன குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புக் கவிதைகள், தொகுப்பு நூல்கள் பலவற்றையும் மொழிபெயர்ப்புக் கட்டுரை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
இலங்கைப் பெரேதனியப் பல்கைலக் கழகத்தில் தமிழ்ப்பேராசிரியாகப் பணியாற்றும் நுஃமான் அவர்கள் அண்ணாமலைப்பல்கைலக் கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.
தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்திலும் மலாய்ப் பல்கலைக் கழகத்திலும் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இலங்கையிலுள்ள பன்னாட்டு இனவியல் ஆய்வு மையத்தின் இயக்குனர்களில் ஒருவராகவும் பணியாற்றி வருகிறார்.
பரிசளிப்பு விழாத் தேதியும் பிற விவரங்களும் விளக்கின் இந்தியத் தொடர்பாளரான வெளி ரங்கராஜன் அவர்களால் விரைவில் வெளியிடப்படும்.

நா. கோபால்சாமி
விளக்கு அமைப்பாளர்
2013-01-17

விருது விழா:

பேராசிரியர் நுஹ்மானுக்கு விளக்கு விருதும் பாராட்டும்

இடம்: பவள விழா கலையரங்கம் சென்னை பல்கலைக்கழகம்

நாள் : ஏப்ரல் 26, 2013 வெள்ளிக்கிழமை  நேரம்: 4.00 PM

தலைமை:பா.ரா.சுப்பிரமணியம்,இயக்குனர் மொழி அறக்கட்டளை
பங்கு பெறுவோர்:
பேரா.அ.ராமசாமி
கவிஞர் சிபிச்செல்வன்
கவிஞர் ராணிதிலக்
ஒருங்கிணைப்பு:வெளி ரங்கராஜன்

நன்றி: திண்ணை, வெளி ரங்கராஜன்

Apr 17, 2013

நாதவனத்தை நிர்மாணிக்கும் அபியின் படிமங்கள் - ரவிசுப்ரமணியன்

பாரதியும் பாரதிக்குப்பின் பிச்சமூர்த்தியும் தொடங்கிவைத்த புதுவித எழுத்து முறைமைகள்தான், அறுபதுகளில் கவிதை இயக்கம் வேர்பிடித்து வளர அடி மண்ணாய் இருந்ததெனச் சொல்லலாம்.
அந்த வளத்தில் விளையத் துவங்கியவை இன்றும் சங்கிலித்தொடராய் மகசூல்கள் தந்தவண்ணம் இருக்கின்றன. அப்போது ஏராளமான கவிகள் வந்தனர். பல குழுவினராய் பிரிந்து இயங்கி, கவிதைத் துறைக்கு வளம் சேர்த்தனர். ஒரு கோணத்தில் பாரதியிலிருந்தே தமிழின் அரூபக் கவிதைகளும் தொடங்கிவிட்டன என்றாலும், அவருக்குப் பின், அதில் குறிப்பிடும்படி இயங்கியவர், தருமுசிவராம் என்கிற பிரமிள். அதன் பின், முப்பதாண்டுகளுக்கும் மேலாக அரூபக்கவிதைகளில் மட்டுமே மனஓர்மை கொண்டு இயங்கி, தன்னையே அந்த அரூப கவிமொழிக்கு ஒப்புக் கொடுத்து விட்டவர்ravisub88 அபி.

ஒரு வகைப்பாட்டிற்காக பிரமிளை இங்கு சேர்த்தாலும் அவரது இயங்கு தளங்களின் திசைகளும், அவர் ஏற்படுத்திய சாதக பாதக விளைவுகளும் முற்றிலும் வேறானவை. அபிக்கோ கவிதை மட்டுமே களம். தன் கவிதைக்கு ஆதர்சமும் வாரிசுமில்லாத அபூர்வ கவி அபி. இரைச்சல்களுக்கே ஆட்பட்ட நமக்கு, அவரது மௌனத்தை உணர்வது கடினம்தான். அவர் நுட்பமான வாசகனுக்கு பிடிபடலாம். பிடிபட்டது போல போக்கு காட்டி, ஓடலாம். அல்லது பிடிபட்டுவிடாமலேயே கூடப் போகலாம்.

அபியின் கவிதைச் சாதனைகளில் முதன்மையானது, மொழியிலிருந்து அதன் அர்த்தத்தை வெளியேற்றிவிட்டு, புதிய கவிதை மொழியை கவிதைக்குள் உருவாக்கியிருப்பதுதான். அகச் சலனங்களை நோக்கியே இயங்கும் இவரது கவிதைகள், அரூப நிலைகளிலேயே மையங்கொண்டு திளைக்கின்றன. தமிழ்ப் புதுக்கவிதை இயக்கத்தில், யாரோடும் ஒப்பிட முடியாத, யாரின் சாயலுமற்ற தனிப்பாதையைத் தனக்கென வகுத்துக் கொண்டவர் அபி. அதுவே பொது புத்திக்கு அவர் உறைக்காமல் போனதற்கும் காரணமாக அமைந்து விட்டது.

அரைநூற்றாண்டைக் கடந்த தமிழின் நவீனக் கவிதை வரலாற்றில், சட்டெனக் கண்ணுக்குப் புலனாகாத அபியின் இருப்பு, தேடலும் கரிசனமும் நிறைந்த நுட்பமான வாசிப்பில், பிடிபட சாத்தியமாகிற ஒன்றுதான். நவீன மரபில் இந்த அளவுக்கு அதீத மௌனத்தைத் தன் படைப்புகளின் ஆழத்தில் வண்டலாகப் படியவிட்டுப் பரிசோதித்தவர், இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

வாதப்பிரதிவாதங்கள், பிரகடனங்கள், வெற்று கோஷங்கள், மேடைக்குயுத்திகள், உரத்துப் பேசும் தன்மை, ஆதாயத் தேடல்கள், மறைமுக நிரல்கள் முதுகு சொரிதல்கள், நிரூபித்து அடையத்துடிக்கும் எத்தனங்கள் - என கவிதை உலகில் நிலவும் கசடுகள் எதுவும் இவரது கவிதைகளை மட்டுமல்ல இவரையும் கூடச் சீண்டவில்லை.

ஒரு ராகம் எப்படி நமக்கு சட்டென அடையாளப்படுகிறது? அதன் பிரதான ஜீவஸ்வரங்கள் வழியேதான். அந்த ஜீவஸ்வரங்களை, உரிய முறையில் பிடித்து, துவக்கத்திலேயே உணர வைப்பவர்கள் உண்டு. மேலும் கீழுமாக ஏற்றியும் இறக்கியும் அசைத்தும் பாடும்போது, புரிய வைப்பவர்கள் உண்டு, அதன் சாயல் புலப்பட்டும் இன்னொரு ராகத்தின் மயக்கம் தோன்ற வைப்பவர்களும் உண்டு. ஜீவஸ்வரங்களை ஸ்வராந்திர அடுக்குகளுக்குள் மறைத்து விளையாடுபவர்களும் உண்டு. அந்த வித்வத்துவ விளையாட்டில் மேல்தளத்தில் ஒலிக்கிற சாதாரண காந்தாரத்தைக் கூர்ந்து கேட்டால், அது அந்தர காந்தாரமாக இருக்கலாம். அசட்டு கவனத்தில் கேட்கப்படும் கைசிகி நிஷாதத்தை ஆழ்ந்து கவனித்தால், காகிலி நிஷாதமாக இருக்கும். சில சமயம் புரிந்தது போல இருக்கும், புரியாது. பிறகு, ராகத் தேடலை மறந்து, ப்ருகாக்களின் உதிர்வில் மலைப்போம். கமகங்களில் கிறங்கித் திளைப்போம். ஒரு கட்டத்தில் ராகமும் அழகான ஒலியும் கூட மறைந்து, உணர்வில் ததும்பும் அலையாக அது மாறி, ஏதோ இனம் புரியாத சிலிர்ப்பை நம்முள் நிகழ்த்தும். அந்த அனுபவத்தை ஒத்ததுதான் அபியின் கவிதைகள்.

செவிக்குப் புலனாகி மனசை வந்தடையும் சங்கீதம்போலவே, கண்களின் வழியே கருத்துக்கு புலனாகி மனசை வந்தடையும் அபியின் கவிதைச் சொற்களும், அதன் அர்த்தத்தில் அங்கு இருப்பதில்லை. நாமறிந்த மொழியின் சொற்களை கொண்டே அவர் எழுதியிருந்தாலும் மொழிக்குள் மொழியை உருவாக்கும் ரசவாதத்தால், புதிய புதிய அனுபவங்களை உணர வைக்கிறார்.
அபியின் ‘ராகம்’ - என்ற ஒரு கவிதை இப்படி முடிகிறது.

”கவிதையின் மூச்சு ஒன்று
கவிதையை மறுத்துக்
கடல்வெளி முழுவதையும்
கரைக்கத் தொடங்கிற்று”

இங்கு கவிதை, மூச்சு, கடல் என்னும் படிமங்கள் வந்த வேகத்தில்
பின் வாங்கிக் கொள்கின்றன. தன்னை மறுத்த தான் ஆகி, ஒரு ராகம்
கொள்ளும் பெருவியாபகம் போல் அனுபவம் உண்டாகிறது.
மேல்தளத்தில் ஒரு பொருளைத்தந்த ஒன்று, அடியாழத்தில் வேறொன்றாக உருமாறி, படிப்பவரின் அறிவுக்கும் அனுபவத்திற்குமேற்ப விதவிதமான பொருள்களைத் தந்து வினோதம் நிகழ்த்துகிறது. ஒரு வகையில் செப்பிடு வித்தை போல, படித்த சொல்லின் பொருள் ஒன்று, கணத்தில் மாயமாகி
அதே சொல்லில் வேறொன்று, ஒன்றும் தெரியாதது போல் அமர்ந்திருக்கிறது.

பொறுமையையும், நிதானத்தையும், கவனக்குவிப்பையும், புதியதை விழையும் வேட்கையையும் கோருபவை அவரது கவிதைகள். அதை முழுமையாகக் கண்டடைய, அதன் மேல்மூட்டங்களையெல்லாம் விலக்கி விட்டு,
குறியீடுகள், சமிக்ஞைகள், சன்ன ஒலிகள், சோபையான வெளிச்சக்கீற்றுகள் போன்றவற்றின் சொற்ப வழிகாட்டலில்தான் நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவு நடந்த பிறகு, நாம் வருமென்று நினைத்த ஊர் வரலாம். அல்லது வேறு புதிய ஊரை அறியலாம். எதுவுமே இல்லையெனில், கடந்துவந்த தூரம் என்னும் ஒரு காலமற்ற அனுபவம் நம்மை நிறைக்கலாம்.

‘நிசப்தமும் மௌனமும்’ - என்று ஒரு கவிதை.

“நெடுங்கால நிசப்தம்
படீரென வெடித்துச் சிதறியது.

கிளைகளில் உறங்கிய
புழுத்தின்னிப் பறவைகள்

அலறியடித்து
அகாதவெளிகளில்
பறந்தோடின

தத்தம் வறட்டு வார்த்தைகளை
அலகுகளால் கிழித்துக் கொண்டே.”

ஒரு எளிய பார்வையில், திடீரென நேர்ந்த ஒரு வெடிப்பில், சட்டென ஒரு பறவைக் கூட்டம் பறக்குமொரு காட்சி மனசில் விரிகிறது.

நிதானமாக யோசித்தால், ஒவ்வொரு சொல்லும் நிறுக்கப்பட்டு, அதன் கனமறிந்து பயன்படுத்தப் பட்டிருப்பதை உணர முடிகிறது. இது இவரது எல்லாக் கவிதைகளுக்கும் பொருந்தும் ஒரு அம்சமாகவே இருக்கிறது.

’நெடுங்கால நிசப்தம்’ - என்பது என்ன? யாருடைய நிசப்தம் அது? அல்லது எந்த சமூகத்தின் நிசப்தம்? இல்லை, பிரபஞ்சத்தின் நிசப்தமா? எது அது?

படீரென வெடித்துச் சிதறியது என்றால் ஏன் அப்படி நிகழ்ந்தது?
யாரால் அல்லது எதனால் நிகழ்ந்தது இப்படி?

அடுத்து ’கிளைகளில் உறங்கிய’ - என்கிறார். கிளைகளில் உறங்கியது எத்தகைய பறவை. அது என்ன உறக்கமா? உதாசீனமா?

’புழுத்தின்னிப் பறவைகள்’ - என்று ஒரு சொல்லைப் போடுகிறார். நல்ல பழங்கள் இருந்தும் சாப்பிடவில்லையோ? அல்லது புழுவையே தின்று வாழ சபிக்கப்பட்டவையா அவைகள்?

அதன்பின், சாதாரணமாய்ப் பறக்கவில்லை. அலறியடித்துக் கொண்டு பறந்தோடுகிறது என்கிறார். அலறிக்கொண்டு மட்டுமில்லை. தத்தம் வறட்டு வார்த்தைகளை வேறு, அலகுகளால் கிழித்துக் கொண்டு. மொத்தத்தில் பறவை என்கிற படிமம், பறவை உருவை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டு வேறு ஏதோவாக மாறி ஒரு பயங்கரம் தொனிக்கிறது.

இந்தச் சிறிய கவிதை வரிகள் எழுப்பும் கேள்விகள்தான் எத்தனை!

abi_photobw01ஒரு தட்டையான நேர்கோட்டுப் பார்வையில் இது தரும் பொருள்களை யோசித்தால், பல மடிப்புகள் விரிகிறது. ஒரு கூட்டத்தின் திடீர் எழுச்சி போலப் படுகிறது. ஒரு குடும்பத்தலைவனின் பொறுமை இழந்த நடவடிக்கையாகப் பார்க்க முடிகிறது. ஒன்றின் தன்னிழப்பில் இன்னொன்று புதிதாய்ப் பிறப்பது போல இருக்கிறது. செப்டம்பர் பதினொன்று போலவும் தோன்றுகிறது. ஒரே ஒரு சிறு காட்சிப் படிமம்தான். அது எத்தனை விதவிதமான அர்த்த அடுக்குகளை பார்வைக்கும் அனுபவத்துக்கும் தக்க விரித்து, முடியாமல் சென்றவாறே இருக்கிறது! அபியின் இந்தக் கவிதையின் தலைப்பு ’நிசப்தமும் மெளனமும்’. அவர் கவிதையில் தொடங்குவது நிசப்தத்தின் வெடிப்பு. அப்படியானால் மெளனம் நிசப்தம் அல்ல. அந்த மெளனத்தின் தரிசனத்தைத்தான் கவிதையின் பிற்பகுதி ஏங்கி நோக்குகிறது.

எஸ்ரா பவுண்ட் படிமத்தைப் பற்றிச் சொன்னதை இங்கு பொருத்திப் பார்க்க இடமிருக்கிறது.

“ஒரு படிமம் என்பது வெறும் கருத்தாக்கமல்ல;
அது ஒரு சுடரும் கண்ணி; கணு;
அல்லதுகொத்து. அது ஒரு சுழல்.
அதிலிருந்து கருத்தாக்கங்கள் பீறிட்டுக் கொண்டேயிருக்கின்றன.”

வாழ்வின் அபத்தம், நிலையின்மை, சலனம், நிச்சலனம், தெளிவு, தெளிவின்மை, கணநேரப்பிரக்ஞை, காலம், இடம், வெளி, தத்துவத் தேடல், புதிர் - என நுட்பமான இழைகளூடே இயங்கும் இவரது கவிதைகளை எடுத்து விளக்க - கவிதைகளில் இவர் சொல்ல முயன்றதைத் தேடித் தவிப்பதைவிட, மறுபடி மறுபடி பயின்று விடைதெரியா உணர்வொன்றை உணரமுயற்சிப்பதே உத்தமம் என்று பல சமயம் எனக்குள் தோன்ற வைத்திருக்கின்றன இவரது கவிதைகள்.

அபியின் இசை ஈடுபாடு அவரது கவிதைகளிலும் அங்கங்கு விரவிக் கிடக்கிறது.

“உலாவ அழைத்துப் போகும்
ஸ்வரங்களிடம்
வார்த்தைகளை கேட்டுக்கொண்டு என்ன செய்கிறாய்” - என்றும்,

“எப்போதும் நீ கேட்பது நாதமல்ல
நாதத்தில் படியும் உன் நிழல்” – என்றும் ஒரு கவிதையில்
சொல்லும் அபி,

“ஊசி முனைப்புள்ளியில் இறங்கி
நீடிப்பில் நிலைத்தது கமகம்” - என்று கமகத்தை இன்னொரு கவிதையில் காட்சிப் படுத்துகிறார்.

“பகல் வெளியில்
எங்கோ பறந்து போயிருந்த உறக்கம்
இதோ
படபடத்து விழிக்கூட்டுத் திரும்புகிறது”

- என்று ஆரம்பிக்கும் ஒரு கவிதைக்குத் தலைப்பாக, தாலாட்டுக்குப் பயன்படும் நீலாம்பரி ராகத்தின் பெயரைச் சூட்டுகிறார். அவரது தேர்ந்த சங்கீத ரசனையின் படிவங்கள் கவிதையில் படிந்த சில இடங்கள் இவை.

தன்னோடு பேசுவதும் தன்னை முன்னிருத்திப் பலப்பல உருவெடுத்து விவாதிப்பதும் பகடி செய்வதும் அமைதி கொள்வதும் நிச்சலனத்தில் சலனங்களை எழுப்புவதும் உள்ளுக்குள் கொதிப்பைத் தகிக்கவிட்டுப் பார்வைக்கு அமைதியான ஒரு தோற்றத்தை நிறுத்தி வைப்பதும் புதுவிதப் புதிர்ப்பிராந்தியத்தை இயல்பாக சிருஷ்டிப்பதும் வாசகனின் அனுபவ வழியில் கவிதைகளைக் கண்டுணரச் சில சாவிகளை மறைத்து வைப்பதும் ஒவ்வொரு சொல்லையும் தூக்கி எடுத்து, அதன் ஜிகினாத் துகள்களை உதறி, அர்த்தப் பிசுக்குகளை கழுவித் துடைத்து சுத்தமாக உருமாற்றிப் புழங்க விடுவதும் மொழியின் லயத்தையே ஆதார ஸ்ருதியாகக் கொண்டு பித்தான மனோநிலையில் வார்த்தைகளற்ற ராகத்தை ஆலாபிப்பதுமென - அபியின் கவிதைவெளி பிரத்தியேகமானது. எளிய சொற்களில் தமது தர்க்கத்தை தாமே உருவாக்கி வளர்ந்து செல்வதை ’ஏற்பாடு’, ’மாற்றல்’, ’இருத்தல்’ - போன்ற கவிதைகளில் நாம் காணலாம்.

‘நான்’ - ‘நீ’ என்று தன்னையே இருகூறாகப் பிரித்து, சில கவிதைகளில் உரையாடல் நிகழ்த்துகிறார். எதிரெதிர் துருவமாக இயங்கும் மன அமைப்புகொண்ட ‘நான்’ - ‘நீ’-யை அவற்றில் பேசவிட்டு, மனிதனின் ஸ்பிளிட் பர்சனாலிட்டியை வெளிக் கொண்டு வருகிறார். அல்லது அந்த உளவியல் உண்மையை ஒரு பாவனையாகக் காட்டி விட்டு உளவியல் தாண்டிய வேறொரு தரிசன உலகத்திற்குள் நுழையப்பார்க்கிறார்.

தன் இருத்தலையே விதவிதமாகப் பார்க்கும் அபியின் கவிதைகள், தமிழுக்குப் புதியவை. ழான் - பால் - சார்தர் “Being and Nothingness”-ல் எழுதியுள்ள கட்டுரைகள் போல, என் பார்வையில் என் இருத்தல், என் பார்வையில் நான் இல்லாது இருத்தல். உங்கள் பார்வையில் என் இருத்தல், உங்கள் பார்வையில் என் இல்லாதிருத்தல். காணாமல் போனபிறகு இருத்தல். காணாமல் போனபிறகு இல்லாதிருத்தல் என்று மனித இருத்தலின் பல்வேறு கோணங்களை படம் பிடிக்கிறது அபியின் சில கவிதைகள்.

நாற்பதாண்டு காலக் கவிதை வாழ்வில் மூன்று கவிதைத் தொகுதிகள், பின் இதை எல்லாம் சேர்த்த, அத்துடன் ”மாலை” என்னும் புதிய தொகுப்பு உள்ளடங்கிய ஒரு முழுத்தொகுதி. எழுதியவை குறைவெனினும் தமிழ்க் கவிதைப் பரப்பில் இல்லாத தளங்களைத் தனது உக்கிரமான பரிசோதனைகளின் மூலம் தந்து தமிழுக்கு வளம் சேர்த்த அபி.
அய்யந்திரிபறக் கற்பித்த தமிழாசிரியர். நண்பர்களுக்கு வயதுகளின் பேதம் துறந்த தோழன். சபைகளை விலக்கிவிட்டுச் சதா சாயைகளோடு பேசித் திரியும் பித்தன். மாலை, துண்டு, புகழ்மொழிகளின் லேசான தூவானத்திற்கே ஒடி ஒதுங்கி ஓரமாய் நின்று சிரிக்கும் துறவி.

தேர்ந்த கலைஞனுக்கேயுரிய அலைக்கழிப்பும் பரிதவிப்பும் சமன்குலைவுகளும் மனோஅவஸ்தைகளும் லௌகீக உபாதைகளும் இவருக்கு உண்டெனினும், அதையெல்லாம் மீறிப் பிறந்த ஒரு அபூர்வ ராகம் அபி.

புழக்கத்தில் இல்லாத ராகத்தை நாம் இழந்து விடுகிறோம். அதனால் ராகத்துக்கு நேர்வது எதுவுமில்லை. எல்லா வித்வான்களாலும் பாடப்படுவதில்லையெனினும் புதிர்ப்பிராந்திய எல்லைகளில் சுவாதீனமாய் வளர்ந்து வளர்ந்து, தன்னந்தனியே ஒரு நாதவனத்தை நிர்மாணம் செய்து கொள்ளும் வல்லமை சில அபூர்வ ராகங்களுக்கு உண்டு.

இன்னொரு கோணத்தில் சொன்னால், பல வீடுகளில் தலைச்சன்கள் தன்னையே கரைத்துக் கொண்டு இயங்கி, பிறரது உயர்வின் பெருமிதங்களில் சாந்திகொண்டு துலங்குகின்றன. அபியும் ஒரு தலைச்சன்தான். அவர் அரூபக் கவிமொழியின் தலைச்சன்.

‘மாலை’ - என்று அந்திப் பொழுதைக் குறிக்கும் கவிதை வரிசை, இவரது கவிதைச் சித்து விளையாட்டின் உச்சபட்ச விஸ்தீரணங்களை காட்டக்கூடியதெனச் சொல்லலாம்.

மாலையைத் தனக்கான தனிப் பொழுதாகவே அடையாளம் காண்கிறார் அபி. பிரம்மாண்டமும் வியப்பும் காத்திருத்தலும், மௌடீகமும் துலங்கும் மாலை அது. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் யாருக்காக இப்படிக் காத்துக் கிடக்கிறது என்கிற கேள்வி கவியும் மாலை, அவர் காட்டும் மாலை. நாம் கண்டிராத மாலை. இந்த மாலை, ஒரு புதுவித முல்லைத்திணை. சங்கத் தமிழ்ப் பாடல்களில் தலைவி தலைவனுக்காகவோ தலைவன் தலைவிக்காகவோ காத்திருப்பார்கள். இங்கே கவிதைசொல்லியோ, தன் வரவுக்காகத் தானே காத்திருக்கிறான். எவ்வளவு வித்தியாசமான காத்திருப்பு இது!

தன் சோகத்துக்கும் தத்துவத் தேடலுக்கும் மௌனத்துக்கும் தோதாக மாலையை உருமாற்றி விடுகிறார் அபி. சில கவிதைகளில். பால்யத்தில் உறைந்த மாலையின் நினைவுகளில், நிகழின் சலனங்களைப் படிய விடுகிறார். உயிரற்ற மாலை அபியின் தீண்டலில் இயக்கம் கொள்கிறது.

“புரண்டு படுக்க இடமின்றி
ஒற்றையடிப் பாதை சலிக்கிறது” - என்கிறார் ஒரு மாலைக் கவிதையில்.

“சவுக்குத் தோப்புகள் வேறு கவனமின்றி
வழிதெரியாத கூச்சல்களை
நிர்வாகம் செய்து கொண்டிருந்தன” - என்கிறார்
இன்னொரு மாலைக் கவிதையில்.

மாலை விளையாட்டு முடிந்து அம்மாவிடம்கதை கேட்கும் குழந்தைகளுக்கு

“ஏதேதோ அடுக்குகளில் இருந்து
ஏதேதோ அரூபங்கள்
பறந்து படிந்து மறையும்.
காலத்துள் நிகழ்ந்திராத காலம்
தகதகத்து
பிள்ளைகளின் கண்களில் இறங்கும்”

வெளியில் தெரியாத, இயற்கையின் உள்ளியக்கங்களை இவர் படிமப்படுத்தும் போது, மானிடமும் இயற்கையும் ஒன்று கலந்த பரவச பிம்பங்கள் எழுகின்றன.

மாலைக் கவிதைகளிலும் காலமும் வெளியும் ஒளியும் மௌனமும் விளையாடுகின்றன. அவை இருப்பது போலவும் இல்லாதது போலவும் கண்ணாமூச்சி ஆடுகின்றன.

ஜாக்ஸன் போலக்கின் ‘ப்ளூபோல்’ வரிசை ஓவியங்கள், பார்வைக்கு முள்படல்கள் ஒன்றன்மேல் ஒன்று அடுக்கப்பட்டிருப்பது போலத் தோற்றமளிக்கும். நிதானமான கவனிப்பில், ஒவ்வொரு படலுக்கிடையேயான தூரமும் இருப்பும் வெளியும் வெளிச்சமும் புலனாகும். அதுபோலவே, காலம், வெளி ஆகியவை இக்கவிதைகளில் இருப்பது போலவும் இல்லாதது போலவுமான மாய நிகழ்வினை நிகழ்த்திக் கொண்டே, சொல்லியும் சொல்லாமலும் ஏதேதோ சொல்கின்றன.

இவைகளை எல்லாம் எப்படி நாம் உள்வாங்குவது? காலமென்றும் வெளியென்றும், அண்டமென்றும், சூன்யமென்றும், புதிரென்றும் மௌனமென்றும் விரியும் இவரது கவிதை உலகை எப்படி நாம் புரிந்துகொள்வது? எவ்விதம்தான் அணுகுவது?

இதுவரை நாம் கவிதையென்று படித்தவைகளையும் கவிதை குறித்த
நம் முன் அனுமானங்களையும், கருத்தாக்கச் சுமைகளையும் துறந்துவிட்டு கவிதையின் முன், நாம் ஒரு வகை அகநிர்வாணியாகப் போக வேண்டியிருக்கிறது. மதர்ப்புகளையெல்லாம் மறந்து விட்டு இப்படி ரசிக்கத் துவங்கும் போது, குழந்தையாக ஆகிவிடுகின்றன அபியின் கவிதைகள்.
அது ”குறுகுறு நடந்து சிறு கை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்...” (புறம்–188) மயக்கும் குழந்தை.

****

தீராநதி நன்றி: ரவிசுப்ரமணியன்

Apr 15, 2013

‘இலக்கிய விசாரம்’ முன்னுரை - க.நா.சு

லக்கிய விசாரம் என்பது சற்றுக் கனமான விஷயம்தான். அதைச் சுவைபடச் செய்ய வேண்டிய அவசியம் ஆரம்பத்தில் இன்றுள்ள நிலையில் உண்டு. கதைகள், நாவல்கள், நாடகங்கள் என்று எழுதும் ஆசிரியன் வாசகனை நினைத்துக்கொண்டு எழுதக்கூடாது. என்கிற கட்சியைச் சேர்ந்தவன் நான். எழுதி முடித்த பிறகு வாசகன் வரலாமே தவிர, அதற்கு முன் இலக்கியாசிரியன் முன் அவன் வரக்கூடாது; வந்தால் அவன் எழுத்துத் தரம் குறைகிறது. ஆனால் இலக்கிய விசாரம் செய்யும்போது மட்டும் எந்த இலக்கியாசிரியனும் வாசகனை மனத்தில் வைத்துக் கொண்டுதான் செய்தாக வேண்டும். இப்படிச் செய்கிற இலக்கிய விசாரத்தை ஒரு லக்ஷிய விசாரகனுக்கும் வாசகனுக்கும் நடக்கிற சம்பாஷணை உருவத்திலே செய்தால் நன்றாக வருமே என்று எனக்குப் பல kanasu98நாட்களாகவே ஒரு நினைப்பு.

ஜியார்ஜ் மூர் என்கிற ஆங்கில இலக்கியாசிரியர் Conversations in Ebury Street என்று லேசாக ஆங்கிலச் சம்பாஷணைகள் மூலம் இலக்கிய விசாரம் செய்து பார்த்திருக்கிறார். அதைப் படிக்கும்போது, அதேமாதிரி நானும் செய்து பார்க்கலாமே என்று எனக்குத் தோன்றியதுண்டு. நண்பர் புதுமைப்பித்தன் பதிப்பித்த ‘தினமணி ஆண்டு மலரி’லே இலக்கியச் சோலை என்று ஒரு சம்பாஷணை எழுதினேன். அது திருப்திகரமாகவே அமைந்தது. ஒரே நோக்கை மட்டும் எடுத்துச் சொல்லாமல், எதிர்க் கட்சியையையும் கூடியமட்டும் எடுத்துச் சொல்லிவிட முடிகிறது எனபது இந்த சம்பாஷணை உருவத்தில் ஒரு வசதி. அதேபோலப் பல வருஷங்களுக்குப் பிறகு பாரதியாரைப்பற்றி என்று பி.ஸ்ரீ.ஆசாரியா அப்போது நடத்திக் கொண்டிருந்த ‘லோகோபகாரி’ யில் ஒரு சம்பாஷணை எழுதினேன். அதுவும் எனக்குத் திருப்திகரமாகவே வந்தது.

இந்த இலக்கிய விசாரம் என்கிற விஷயத்தைச் சம்பாஷணை உருவத்தில் நான் 1945, 1946ல் திட்டமிட்டேன். உலக இலக்கியம் பூராவும் சுற்றி வரவும், கனமான விஷயங்களை லேசாகச் சொல்லவும், அவசியமானபோது பேச்சு விஷயத்துக்குத் திருப்பம் தரவும் சம்பாஷணை உருவம் மிகவும் லாயக்கானது என்பது இதை எழுதிய பிறகு எனக்கே முன்னைவிட அதிகத் தீர்மானமாயிற்று. இந்த உருவத்திலே தொடர்ந்து இலக்கிய விசாரத்தைச் செய்து வர நான் உத்தேசித்திருக்கிறேன்.

எந்த மொழியிலுமே இலக்கிய விசாரத்தின் ஆரம்ப காலத்திலே சில சிரமங்கள் உண்டு. சில வார்த்தைகளை நாம் எந்த அர்த்தத்தில் உபயோகிக்கிறோம் என்பது வாசகனுக்குத் தெளிவாகாத விஷயமாக இருக்கிறது. பழக்கத்தால் தான் அதை அவன் அறிந்து கொள்ள முடியும். வேதாந்தம், சைவ சித்தாந்தம் போன்ற துறைகளில் உள்ளதுபோல இலக்கிய விசார உலகமும் சங்கேத வார்த்தைகள் நிரம்பியது. நம்மிடையே தமிழ் இலக்கிய விசாரம் செய்ய ஆரம்ப்பிப்பவர்கள் மேலை நாடுகளில், முக்கியமாக ஆங்கிலம் வழங்கும் பிரதேசத்தில், உபயோகமாகும்Stream of Conciousness சங்கேத வார்த்தைகளை அப்படியே மொழிபெயர்த்து உபயோகித்து விடுகிறார்கள். ஆங்கில, பிறமொழி சங்கேத வார்த்தைகள் எதுவும் வராமல் விமர்சனம் செய்ய வேண்டும் – தமிழுக்கு என்று தனியாக இலக்கிய விசார சங்கேதங்கள் ஏற்படும் வரையில் என்பது என் அபிப்பிராயம். இல்லாவிட்டால் தமிழ் இலக்கிய விசாரம் ஆங்கில, ஐரோப்பிய இலக்கிய விசாரத்தின் நிழலாகவே இருக்கும்; தனி உருவம் பெறாது.

இந்த வழக்குக்குப் பண்டிதர்கள்தான் முதல் பலியாகிறார்கள் – ஒரு பண்டிதர் lyric என்கிற ஆங்கில சங்கேத பதத்திற்குத் தமிழ் அர்த்தம் தருவதற்காகப் படாதபாடு படுகிறார். வேறு ஒருவர் நனவோடை இலக்கியம் என்று Stream of Conciousness என்கிற ஒரு இலக்கிய நாவல் உக்தியை ஒரு இலக்கியமாகவே நினைத்துக் கட்டுரை எழுதுகிறார். இதிலேC onciousness என்பதே ஒரு தனிச் சாஸ்திரத்தின் தனிச் சங்கேதம். இலக்கியத்துக்கு வரும்போது அது எப்படி எப்படியோ மாறுகிறது. நமது பேராசிரியர் எழுதுவதற்கும், Stream of Conciousness என்று மேலைநாட்டார் சொல்வதற்கும் ஸ்நானப் பிராப்தி கூடக் கிடையாது என்பது வெளிப்படை விஷயம் தெரிந்தவர்களுக்கு.

இப்படியெல்லாம் இலக்கிய விசாரத்தை வளரவிடக்கூடாது. தமிழில் சிறுகதையும், நாவலும் இன்று தமிழ் உருவம் பெற வேண்டும் என்கிற ஆசை உள்ளவன் நான். இலக்கிய விமர்சனமும் தமிழ் உருவம் பெற வேண்டும் என்கிற ஆசை நிறவேற இலக்கிய விசாரம் என்கிற இச்சிறு நூல் நான் கட்டுகிற முதல் படி.

திருவல்லிக்கேணி    க. நா. சுப்ரமண்யம்.       10-8-58

நன்றி:  நினைவுத்தடங்கள் -  வே.சபாநாயகம்

Apr 11, 2013

என்னைக் கவர்ந்த என் படைப்பு – சுந்தர ராமசாமி

தில்லி, ஆல் இண்டியா ரேடியோ, அயல் நாட்டு ஒலிபரப்பில் ஒலிபரப்பப்பட்டது. 15.6.95

என்னைக் கவர்ந்த என் படைப்பு என்று நான் எழுதியுள்ளவற்றில் எதைச் சொல்வேன் ? ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னால் என் மற்ற படைப்புக்களுக்கும் எனக்குமான உறவு என்ன ? அவை என்னைக் கவராத படைப்புக்களா ?

நான் நாற்பத்தைந்து வருடங்களாகத் தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறேன். கவிதைகளும், sura15சிறுகதைகளும் நாவல்களும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். கட்டுரைகளில் அதிகமும் இலக்கிய விமர்சனத் துறையைச் சார்ந்தவை. பிற மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பும் சிறிது செய்திருக்கிறேன். நீண்ட கால எழுத்துப் பணி என்று பார்க்கும் போது படைப்பின் அளவு மிகக் குறைவாகவே இருக்கிறது. இரண்டு நாவல்களும் சுமார் ஐம்பது சிறுகதைகளும் ஐம்பது கட்டுரைகளும் நூறு கவிதைகளும் எழுதியிருக்கிறேன். குறைவாக எழுதியிருக்கும் நிலையிலும் எனக்கு மன நிறைவைத் தரும் சில விஷயங்களும் உள்ளன. என் எழுத்தின் உருவம் எதுவாக இருந்தாலும் சரி, எழுதும் காலத்தில் எனக்கிருந்த ஆற்றலையும் அறிவையும் மனத்தையும் முழுமையாகச் செலுத்தியே எழுதியிருக்கிறேன். அத்துடன் ஒவ்வொரு படைப்பையும் செம்மை செய்யவும் செப்பனிடவும் என்னால் இயன்ற அளவு முயன்றிருக்கிறேன். அவசரமாகவோ கவனக்குறைவாகவோ எதையும் எழுதிய நினைவு இல்லை. இந்தப் பின்னணியில் எனக்கும் என் படைப்புக்களுக்குமான உறவு சற்று நெருக்கமானது. இந்த நெருக்கமான உறவு கொண்டுள்ள படைப்புக்களிலிருந்து ஒன்றை மட்டும் குறிப்பிட்டு அது என்னைக் கவர்ந்துள்ளதாகக் கூறுவதற்கு சிறிது மனத்தடை இருக்கிறது.

எனக்கு தரப்பட்டுள்ள தலைப்பை ‘என்னை அதிகம் கவர்ந்த என் படைப்பு எது’ என்ற கேள்வியாக இப்போது மாற்றிக் கொள்கிறேன். ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ என்ற தலைப்புக் கொண்ட என் இரண்டாவது நாவல்தான் என் மனதில் சற்றுச் சிறப்பான இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.

புதுமை மீது எனக்குத் தீராத கவர்ச்சி உண்டு. புதுமை என்று மொழி சார்ந்து நிற்கும் வடிவத்தை மட்டுமே நான் குறிப்பிடவில்லை. புதுமை என்பது முக்கியமாக எனக்கு விஷயம் சார்ந்த விமர்சனம் ஆகும். அது வாழ்க்கை சார்ந்த புதிய பார்வையும் ஆகும். இன்றைய வாழ்க்கை சார்ந்த தாழ்வுகளை விவாதித்து குறைகளை இனம் கண்டு அவற்றை நீக்கும் வழிவகையாகும். இந்த வேட்கை சார்ந்ததுதான் என்னுடைய புதுமை. புதிய படைப்பு இன்று வரையிலும் படைப்பாளிகள் போயிராத வாழ்க்கையின் புதிய பிராந்தியத்திற்குள் போயிருக்க வேண்டும். புதிய அனுபவங்களைக் கொண்டு வந்து வாழ்க்கை சார்ந்த பார்வைகளை விரிவு படுத்தியிருக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தி நம் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்தியிருக்கவேண்டும். பழைய மொழியை வைத்து இந்த லட்சியங்களை நிறைவேற்ற முடியாது. வாழ்க்கையின் விமர்சனம் தரும் புதிய மொழிதான் புதிய அனுபவங்களையும் சிந்தனைகளையும் படைத்துக் காட்டும். மொழி கூடி வந்த வகையிலும் விமர்சனம் கூர்மை கொண்ட விதத்திலும் வாழ்க்கை சார்ந்த என் கவலைகள் வெளுப்பட்ட முறையிலும் ‘ஜே.ஜே : சில குறிப்புக்கள்’ மீது எனக்குத் தனியான மதிப்பு இருக்கிறது.

உலகச் சிந்தனையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நம் நிலை இன்று பல விதங்களிலும் தாழ்ந்து கிடக்கிறது. இந்திய மொழிகளில் கூட நவீன கலைகளும் நவீனச் சிந்தனைகளும் நம்மைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கின்றன. நமக்குப் பண்டை இலக்கியச் செல்வம் நிறைய இருக்கிறது. அதன் இருப்பை உணர்ந்து நாம் பெருமிதம் கொள்வது மிகவும் இயற்கையான காரியம். ஆனால் இன்றைய வாழ்வை எதிர் கொள்ள இன்றைய காலத்திற்கு உரித்தான அறிவியல் பார்வையும் நவீனச் சிந்தனைகளும் நவீனப் படைப்புகளும் நமக்குத் தேவை. சென்ற கால இலக்கியச் சாதனைகளான சங்ககாலக் கவிதைகள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம் போன்றவற்றிற்கு நிகரான சிகரச் சாதனைகளை நாம் இன்றும் உருவாக்கினால்தான் இந்தியாவிலுள்ள பிற மாநிலத்தினர் நம்மை மதிப்பார்கள். உலகம் நம்மை மதிக்கும். இன்றைய நம் தமிழ் வாழ்வை மறு பரிசீலனை செய்யும் ஆக்கங்கள் நம்மிடம் இல்லையென்றால் நேற்று இருந்தவற்றைப் பற்றி மட்டுமே பேசுவது பழம் பெருமை பேசுவதாகிவிடும்.

இன்றையத் தமிழ் வாழ்வின் நிலை எவ்வாறு உள்ளது ? தமிழன் இன்றைய காலத்திற்குரிய பார்வையைக் கொண்டிருக்கிறானா ? அரசியல் சார்ந்தும் கலைகள் சார்ந்தும் அவனுடைய விழிப்பு நிலை எவ்வாறு இருக்கிறது ? நேற்றைய இலக்கியச் செல்வங்களையும் வரலாற்றையும் இன்றைய வாழ்க்கையைச் செம்மை செய்யும் லட்சியத்தை முன் வைத்து அவனால் மறு பரிசீலனை செய்ய முடிகிறதா ? தமிழனுடைய ஈடுபாடுகள், பழக்க வழக்கங்கள் எந்த நிலையில் இருக்கின்றன ? தமிழன் விரும்பிப் பார்க்கும் திரைப்படங்களின் தரம் என்ன ? அவன் படிக்கும் பத்திரிகைகளும் jjsilaஅவன் பேசும் அரசியலும் நாள் முழுக்க அவன் பார்த்துக் கொண்டிருக்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளும் எந்த அழகில் இருந்து கொண்டிருக்கின்றன ? அவன் விரும்பிப் படிக்கும் புத்தகங்களின் உள்ளடக்கம் என்ன ? மக்களுக்குத் தொண்டாற்றும் நிறுவனங்களையும் அமைப்புக்களையும் கல்வித் துறைகளையும் அவன் வாழ்வுக்குகந்த அரசையும் அவனால் உருவாக்க முடிந்திருக்கிறதா ? இன்றையத் தமிழ் சமுதாயத்தில் தத்துவப் பிரச்சனைகள் எவை ? நெருக்கடிகள் எவை ? உலகத் தளத்திலிருந்தும் இந்தியத் தளத்திலிருந்தும் தமிழ்ச் சமுதாயம் தன் வளர்ச்சியை முன் வைத்து எவற்றைப் பெற்றுக் கொண்டிருக்கிறது ? இந்திய கலாச்சாரத்திற்கும் உலகக் கலாச்சாரத்திற்கும் தமிழ்ச் சமுதாயம் எதைக் கொடுத்து பெருமை தேடித் தந்திருக்கிறது ?

நான் எழுத ஆரம்பித்த 1950ஆம் ஆண்டிலிருந்து ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ எழுதி முடித்த 1980 ஆம்ஆண்டு வரையிலும் எனக்கு முக்கியமாக இருந்த கேள்விகள் இவைதாம். இந்தக் கேள்விகளை தமிழ் அறிஞர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் எழுத்தாளர்களும் உரக்கக் கேட்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அதாவது இந்தக் கேள்விகள் சார்ந்த விவாதங்கள் தமிழ் சமூகத்தில் நடைபெற வேண்டும் என்று விரும்பினேன். ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ என்ற நாவலின் படைப்பாக்கத்திற்குப் பின்னால் நின்ற குறிக்கோள் இதுதான்.

‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ தொடராக வெளுயிடப்பட்டதல்ல. அது புத்தக உருவத்திலேயே வாசகர்களைச் சந்தித்தது. இப்படிப் பார்க்கும்போது அதைக் கணிசமான வாசகர்கள் படித்தார்கள் என்றே சொல்வேன்.

ஆனால் துரதிருஷ்டவசமாக தமிழகத்தில் இன்று தீவிரமான வாசகர்கள் எண்ணிக்கையில் குறைவாகவே இருக்கிறார்கள். அந்தத் தீவிரமான வாசகர்களிலும் எழுத்தாளர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கையைக் கழித்துவிட்டால் வாசகர்களாக இருப்பவர்கள் மிகக் குறைவு. தமிழகத்தில் ஒரு தீவிர எழுத்தாளன் வாசகனுக்காக எழுதிக் கொண்டிருக்கிறானா அல்லது சக எழுத்தாளனுக்காக எழுதிக் கொண்டிருக்கிறானா என்று கேட்கும் நிலையில்தான் சூழல் இருந்து கொண்டிருக்கிறது. இதனால் எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் உறவு நிலை ஒரு படைப்பைச் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ பாதித்துவிடுகிறது. படைப்பைச் சார்ந்த வாசக மதிப்பீடு ஒரு பாதிப்புச் சக்தியாக பெரும்பாலும் உருவாகி வருவதில்லை.

தமிழகத்தில் ஒவ்வொரு துறையும் அந்தந்தத் துறைகளில் நுட்பமான தேர்ச்சி பெறாதவர்கள் கைகளிலேயே இருந்து கொண்டிருக்கிறது. துறை சார்ந்த தேர்ச்சிகள் பெற்று அரிய காரியங்களைச் சாதிப்பதைப் பார்க்கிலும் குறுகிய நோக்கங்களை முன் வைத்து மேலோட்டமான காரியங்களைச் செய்து புகழும் பணமும் தேடிக் கொள்வதே ஒரு வாழ்க்கை முறையாக இன்று உருவாகிவிட்டது. தமிழ் வாழ்வின் கலை விமர்சனங்களாக தமிழ்த் திரைப்படங்கள் இல்லை. அவை வெறும் கேளிக்கைகளாகவே இருக்கின்றன. அதிக விற்பனை கொண்ட பத்திரிகைகள் தமிழ் வாசகனுக்கு எதுவும் கற்றுத் தருவதில்லை. நுனிப்புல் மேய்பவர்களாக அவர்களை மாற்றிக் கொண்டிருக்கிறது. சகல வணிகக் கலைகளின் நோக்கமும் வாசகர்களை அல்லது பார்வையாளர்களின் பாலுணர்ச்சிகளை வெளுப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ சுரண்டுவதாகவே இருக்கிறது. மக்கள் விரும்பிப் பார்க்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் அவர்களுடைய சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் மழுங்கடிக்கக் கூடியதாக இருக்கின்றன. உழைப்பு, சாதனை, தொண்டு, உண்மை, மனித நேயம் போன்ற அரிய சொற்களுக்கு இன்று தமிழ் வாழ்வில் இடமில்லை. சீரழிந்த அரசியலைப் பந்தாடத் தெரிந்தவர்கள் சகல வெற்றிகளையும் இன்று தம் காலடிகளில் போட்டு மிதித்துவிட முடியும்.

தமிழ் வாழ்வில் இன்றைய சீரழிந்த நிலையை ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ ஒரு விவாதப் பொருளாக்குகிறது. விருப்பு வெறுப்பற்ற தீவிரமான வாசகர்கள்தான் ‘ஜே.ஜே : சில குறிப்புக’ளை ஒரு விவாதப் பொருளாக மாற்ற முடியும். சீரழிந்த தமிழ் வாழ்வு பல துறைகளையும் சீரழித்து நிற்பதுபோல் தமிழில் தீவிர வாசகர்களையும் முடிந்த வரையிலும் சீரழித்திருக்கிறது. இந்தச் சூழலில் அப் படைப்பை உருவாக்கிய நோக்கம் போதிய அளவு நிறைவேறவில்லை. காலத்தின் மாற்றத்தில் புதிய வாசகர்கள் உருவாகி வருகிறார்கள். அவர்களுடைய வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது என் ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’.

நன்றி: திண்ணை

Apr 10, 2013

கவிஞர் அபி - நேர்காணல்

சமரசம் - ஜனவரி 2000 இதழிலிருந்து

'அபி ' என்கிற கவிஞரின் இயற்பெயர் ஹபீபுல்லா. சொந்த ஊர் போடிநாயக்கனூர். மதுரை மேலூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருக்கிறார். (வரும் மே மாதம் 2000- இல் ஓய்வு பெறுகிறார்). லா.ச.ராவின் நாவல் உத்திகளை ஆய்வு செய்து, 'டாக்டர் பட்டம் பெற்றார். இருபத்தைந்து ஆண்டுகளாக எழுதிவரும் அபியின் கவிதைகள் மூண்று தொகுதிகளாய் வெளிவந்துள்ளன.

1. மெளனத்தின் நாவுகள். (1974)
2. அந்தர நடை (1978)
3. என்ற ஒன்று (1987)

இலக்கியச் சிற்றிதழான 'படிகள் ', அந்தர நடை பற்றி 'ஆன்மீகத்தடத்திலிருந்து ஒரு புதிய குரல் ' எனக் குறிப்பிட்டது.

சொல், பொருள் விவாதம், விளக்கம், கால-இட-வெளி- இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட இறைவனை, ஒரு சூஃபியின் மனக்கண்ணுடன் தனது கவிதைகளில் தேடியவாறே இருக்கிறார் அபி. உள்மன வாழ்வை, பல உட்பரிமாணங்களுடன் ஆழமான தளத்தில் தீண்டுபவை அபியின் கவிதைகள். மிகக் குறைவான சொற்களில், பல சமயங்abi_photobw01களில் சொற்கள் துறந்து, லேசாய் கோடி-காட்டுவதுடன் நின்று விடுகின்றன இவரின் கவிதைகள். வாசகன்தான் கவிதையின் முழு உலகையும் தன்னுள் எழுப்பி கொள்ள வேண்டும். எந்த ஒரு ஆழமான படைப்பும் ஒரு தீவிர வாசகனிடம் வேண்டி நிற்கும் குறைந்தபட்சத் தகுதிதான் இது. ஒரு கவிதை (அசல் கவிதை), அது கவிதை ஆக, கவிஞன் மேற்கொண்ட மன ஓர்மை, உழைப்பு, கற்பனைவீச்சு, பாய்ச்சல், அறிவு நுட்பம், உணர்வாழம், காட்சியாய் காணல்- இவற்றை வாசகனிடம் வேண்டி நிற்கிறது. அபியின் கவிதைகள், இதற்கு விதிவிலக்கல்ல. எனவே, 'நீ எழுதுவது எனக்குப் புரியவில்லை. யாருக்கு நீ எழுதுகிறாய் ? ' என வெடுக்கெனத் தீர்ப்பை வீசி எறிந்துவிடும் நமது வழக்கமான மனப்பான்மையை உதறிவிட்டு, நிதானமாய், அமைதியாய் அபியின் கவிதைகளை அணுக வேண்டியது அவசியமாகிறது. பட்டிமன்றங்களில் சொல் ஜால வித்தைகளையோ, இசை இரைச்சல்களில் நசுங்கித் திணறும் சினிமாப்பாடல்களில் சொல் உருட்டல்களையோ அபியின் கவிதைகளில் காணமுடியாது. தேடினால் வாசகன் ஏமாந்து போவான். மேடைகளில், பத்திரிக்கைகளில், டிவி-யில் வாய்ப்புக் கிடைக்காதா கிடைக்காதாவென தேடி அலைந்து, வாய்ப்புகளை உருவாக்கி, 'என்னைப் பார்... என் கவிதை பார் ' என மார்க்கட் பண்ணும் கவிஞர்கள் மத்தியில், ' எழுதுவதுடன் என்வேலை முடிந்துவிட்டது. இனி கவிதைகள் பேசிக் கொள்ளட்டும் ' என விட்டேற்றியாக இருக்கிறார் அபி. இது துறவு மனமா ? அல்லது ஓர் கலைஞனின் சிருஷ்டி கர்வமா ? '

சமரசத்திற்காக அபியைச் சந்தித்தபோது....

எழுதுவதற்கெனக் குறித்த நேரம் வைத்துள்ளீர்களா ? அல்லது தோன்றும் போது குறித்து வைத்துக் கொள்வீர்களா ?

தோன்றும் போது குறித்து வைத்துக் கொள்வதில்லை. மனதில் நிற்காதவைகளை விட்டுவிடுவது எனக்குப் பழக்கம். இரவு-சப்தமின்மை மிக மங்கலான வெளிச்சம். அறைத்தனிமை எழுத எனக்கு உகந்த சூழல். கவிதையை முழுதாக எழுதிவிடுவதும் உண்டு. அரை குறையாக நின்று பின் எப்போதோ நிரப்புவதும் உண்டு நள்ளிரவு விழிப்பு நேரங்கள் தூண்டுதலானவை. தலையணைக் கருகில் இருக்கும் டைரியில் பென்சிலால் இருளிலேயே எழுதி வைப்பதும் உண்டு.

'அபி ' என்பது தங்களின் புனைப் பெயரா ? இதனைத் தேர்ந்தெடுத்தமைக்கு ஏதேனும் சிறப்பான காரணம் உண்டா ?

இது புனைபெயரில்லை. அர்த்தம் 'பொதிந்த ' புனைப்பெயர்களில் எனக்கு ஆர்வமில்லை பள்ளி, கல்லூரி நாட்களில் என் நண்பர்கள் அபிபுல்லா என்ற பெயரை 'அபி ' என்று சுருக்கி அழைத்தார்கள். கவிதை வெளிவந்த போது அதிகம் யோசிக்காமல் அந்தப் பெயரையே இருக்கவிட்டு விட்டேன்.

தங்களின் முதல் கவிதையை எப்போது எழுதினீர்கள் ? அது எதுபற்றிப் பேசிற்று ?

'க்விதை ' என என் ஆமோதிப்பைப் பெற்றவைகளுக்குள் 'மெளனத்தின் நாவுகள் ' தொகுப்பில் உள்ள 'இன்னொரு நான் ' என்பதுதான் என் முதல் கவிதை. ஆண்டு 1967 என்று நினைக்கிறேன். என்னுள் நெரிந்து குவிந்துகொண்டேயிருக்கும் என் சாயைகளில், அப்போதைய பக்குவத்தில் எனக்குப் பிடிபட்ட ஒரு சாயையைச் சொல்வது அந்த கவிதை.

சாயை ?

கணந்தோறும் இடந்தோறும் வாழ்வு அனுபவத் தொடுதல் ஒவ்வொன்றிலும் உருவாகி, உருமாறி ஒன்றுடன் ஒன்று பின்னி நமக்குள் நிறைந்து கிடக்கும் நம் பிம்பங்களைச் சாயைகள் என்கிறேன். தோற்றங்களிலிருந்து உண்மையை நோக்கிச் செல்லும் பாதையில் இவை இயங்கிக் கொண்டிருக்கும், நம் கட்டுப்பாட்டில் இல்லா இவைகளைப் பிரித்து விலக்கி பார்த்து சிலவற்றை 'உண்மை ' எனக்கொண்டு நிறைவு காண்பதும், 'இல்லை ' என ஏமாற்றம் கொள்வதும் அவரவர் தாகத்தின் தன்மையைப் பொறுத்தது. இவை அத்தனையையும் வெளியேற்றிவிட்டு, 'நான் ' என்பது ஒரு பாவனை எனக்கண்டு, அதனையும் தாண்டி. 'நான் என்பது ஒன்றுமில்லை ' என்ற 'பனா ' நிலைக்கும் போகலாம். ஆனால் என் கவிதை எட்ட முடிந்த எல்லையில் சாயைகளை இனம்பிரித்தும் ப்ரிக்காமலும் தொட்டுத் தடவி பேசி ஊடுருவி உணர்ந்தது எனக்கு அனுபவம். இவைகளைத் தாண்டிப் போகிற சிறுசிறு விடுவிப்புகளில் நான் உணர்ந்த மெளனம் என் கவிதைகளில் படிந்திருக்கிறது.

அப்படியானால், இப்போதைய உங்களின் abstract கவிதைதளத்திற்கு உங்களைக் கொண்டு வந்து சேர்த்தவை உங்கள் ஆரம்பகாலக் கவிதைகள்தான் என்று கொள்ளலாமா ? பரிணாம வளர்ச்சியாக, உங்கள் கவிதைகளுக்கிடையே ஒரு தொடர் கோட்டினை இழுக்க முடியுமா ? அல்லது ஒரு திடார் அகநிகழ்வு இந்தத் தளத்திற்கு உங்களைத் தள்ளிற்றா ?

ஒரு வாசகப் பார்வையில், என் மூண்று கவிதைத் தொகுப்புகளிடையே தொடர்பு எதுவும் இல்லை என்று தோன்றக்கூடும். வெளியீட்டு பாங்கில் இருக்கும் வளர்ச்சி முக்கியமான ஒரு காரணம். ஆரம்பகாலக் கவிதைகளில் பேச்சும் பேசும்விதமும் என்று இரண்டு கூறுகள் தெளிவாக இருந்திருப்பதைப் பார்க்கிறேன். அடுத்து வந்த கவிதைகள் பேச்சும் பேசும் விதமும் வேறுபடுத்திக் காணமுடியாத ஒன்றிப்பில் பிறந்திருக்கின்றன. அதன் பின்னர், என் கவிதைகள் முடிந்தவரை, பேசாமலும் தங்களின் 'விதம் ' இன்னதென்று அறியாமலும் பிறந்திருக்கின்றன. இரண்டாவது காரணம், விஷயத்தைப் பார்க்கும் பார்வையில் வளர்ச்சி வாழ்வு அனுபவம் உருக்கி உருக்கி விஷயங்களை வேறு வேறு மாதிரியாக காட்டுகிறது. பக்குவ முதிர்ச்சி இந்தத் தோற்றங்களை ஏற்றும் மறுத்தும் புதுவிதமான பார்வைகளைப் படரவிடுகிறது இந்த நிலையில் இவையெல்லாம் பழையதின் வெளிச்சமான தொடர்ச்சியா என்று கேட்டால் 'ஆம் ' என்றும் 'இல்லை ' என்றும் சொல்லலாம். தொடர்கோடு இழுக்க முடியாது, நீந்துகிறவன் தலைவிட்டு விட்டுத்தெரிவது போன்ற ஒரு விதத் தொடர்ச்சி இருக்கும் என்று நினைக்கிறேன். என் கவிதைகள் என்னை ஊடுருவும் கூர்மையிலும், ஊடுருவலால் நான் அவற்றினுள் சிதறிக்கொள்ளும் வெடிப்பிலும் இலக்கணச் சுத்தமாக இல்லாத ஒரு பரிணாமம் இருக்கும் என்று தோன்றுகிறது.

'திடார் அகநிகழ்வு ' பற்றிக் கேட்டார்கள். திடார் 'நிகழ்வு ' என ஒன்றும் இருக்கமுடியாது. நிகழ்வுகள், உணர்வுகள், விஷயங்கள் எல்லாம் பிரபஞ்ச இயக்கத்தில் என்றென்றுமாய் இருந்து கொண்டிருக்கின்றன. நாற்புறமும் இருந்து நம்மை ஊடுருவிக் கொண்டிருக்கின்றன. நமக்கு உறைக்கும் போதுதான் அவை உருவாயின என்று சொல்லமுடியாது கவித்துவ உணர்வு தவ இறுகலில் இருந்திருக்கும், எடிசன் கண்டு பிடிக்குமுன் பிரபஞ்சத்தில் இருந்த மின்சாரம் போல. Unexpected, Unpredicted, Unpredeterminable என்று நவீனப் படைப்பு பற்றிச் சொல்லப்படுவதை என்மனம் ஏற்க மறுக்கிறது. இல்லாதிருந்து, இருப்பதானது என்பதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. இல்லாதிருந்ததும் இருந்ததும் ஒன்றே என்று என் கவிதைகள் எனக்கு உணர்த்துகின்றன

இன்னுமொன்று இன்றைய என் கவிதைகளுக்கு என் முந்தைய கவிதைகளைவிடவும் அதிகம் பொறுப்பாளிகளாக இருப்பவை என் இளவயது பிம்பங்கள். என்னுடன் எப்போதும் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் என் சிற்றிளம் பருவத்துக்குள் நான் நுழையும்போது- அறிவினிடம் ஒன்றிப் போகும்போது - அனுபவங்களிலிருந்து விடுபட்டு அவை அருகிக் கிடந்த, பெயரிடப்படாத வெற்றிடத்தில் நழுவிக் கொள்ளும்போது - தன்மைகளின் பிடிப்பிலிருந்து தன்மையற்ற ஆதியை நோக்கிப் போகும்போது என் கவிதைகள் அருவம் கொள்கின்றன.

சிற்றிளம் பருவம் இன்றுவரை உங்களை வளர்த்துக் கொள்டிருப்பதாக்ச் சொல்கிறீர்கள். தங்களின் இளமைக்காலம் பற்றி- பெற்றோர் பற்றிச் சொல்லுங்கள். பெற்றோரின் கண்டிப்புகள்/ நெருக்குதல்களால் இளவயதில் மகிழ்ச்சியை இழந்துபோனவர்களாக நிறையப் படைப்பாளிகள் இருக்கிறார்கள். பின்னால் இவர்களின் படைப்புகள் ஆழமானவையாக, அகவுலகு சார்ந்தவையாக அமைந்திருக்கின்றன. இளவயதில் மகிழ்ச்சியை இழந்து போவது, ஆழமான படைப்புகளுக்கு அடிப்படை என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. தங்களின் இளமைப் பருவம் எவ்விதம் இருந்தது...

என் இளமைப் பருவம் குடும்பத்தின் இயலாமைகளைப் புரிந்து கொண்டு நிராசைகளை விழுங்கி வைத்திருந்தது. குறைந்த வருமானம், எட்டுக் குழந்தைகள். கண்ணியம் குலையாமல் குடும்பம் நடத்திய என் பெற்றோரின் உளைச்சல்களை-சிம்னி விளக்கு வெளிச்சத்தில் இரவு முழுவதும் தொழுது கொண்டிருந்த என் தாயின் பெருமூச்சுகளை கனம் உணரத்தெரியாமல் பார்த்திருக்கிறேன். பற்று, பாசம், அன்பு, அணைப்பு- இந்த மாதிரியான வார்த்தைகளும் இவற்றின் விளம்பரச் சார்பான விளக்கங்களும் அவர்களிடம் இருக்கக் கண்டதில்லை. ஆனால் அவர்களது 'துவா ' எங்களுக்காகவே இருந்தது. நாங்கள் வாழ்ந்த பகுதியின் சுற்றுச் சூழல் - அதன் முரட்டுப் பழக்க வழக்கங்கள் காரணமாக நான் வெளியே பிள்ளைகளுடன் விளையாட அனுமதிக்கப்படவில்லை. அப்போதே அது சரிதான் என உணர்ந்திருந்தேன். தனிமைக்குழந்தையாக எனக்குள் திரும்பியிருந்தேன். நான் introvert ஆனதற்கு என் இயற்கையுடன் பெற்றோரின் கண்டிப்பும் காரணம்.

உங்களுக்குள் திரும்பியிருந்த அனுபவம் எப்படி ? அது அந்தச் சிறுபருவ அனுபவம் சார்ந்ததாகத்தானே இருக்க முடியும் ?

ஆம். அந்த 'அறியாப்பருவம் ' சார்ந்ததுதான். அறியாப்பருவத்தில்தான் சிந்திப்பது என்ற 'செயல் ' இல்லாமல், உணரமுடியும்; உள்ளே உருவற்று வரையறைகளற்று நிகழும் அரையிருள் நடமாட்டங்களைப் புரியாத வண்ணம் பார்த்துக் கொண்டிருக்க முடியும்.

அதுமாதிரியான 'அறியா ' நிலையில் வெளிப்புறம் என்ற ஒன்று இருக்க முடியாது. சரிதானா ?

சரி. குழந்தை, தனக்கு வெளியேயிருப்பது தானல்லாதது என உணராது. அந்த நிலை சிற்றிளம் பருவத்தில் தொடரும்போது சில விசித்திரங்கள் நிகழ்கின்றன. புறவுலகம் புறப்பொருள்கள் பற்றிய அறிவு வளர்ந்து கொண்டிருக்கும் போதே சில உணர்வு நிலைகளில் உள்-வெளி பேதங்கள் மறந்து போய்விடும். அது மாதிரியான நேரங்களில் நான் வீட்டு வாசலில் இருந்துக் கொண்டு, மணிக்கணக்காகப் பார்த்துக் கொண்டிருந்த மலைகளுடன் ஒருவித உறவு கொண்டிருக்கிறேன். ஊரைச் சுற்றியிருந்த காடுகளும் மலைகளும் ஓடைகளும் கடுங்குளிரும் நிசப்த நள்ளிரவு நட்சத்திரங்களும் எனக்கே உரியவை போல நெருக்கம் கொண்டிருந்தேன் அவை எனக்கு உள்ளேதான் இருந்தன. அவையும் சேர்ந்த 'நான் ' அப்போது எனக்கு இருந்தது.

கவிதைப் பயணத்தில் உங்களைப் பாதித்த கவிஞர்கள் (தமிழில்) யார் ? ஆதர்சம் (inspiration) என்று சொல்லுமளவு யாரேனும் ? Any Foreign Poets ?

என் படிப்பு மிகவும் குறைவு; அதில் எனக்கு மிகுந்த வருத்தமும் கூச்சமும் உண்டு. என் ஆரம்பப் பொழுதில் என்னைப் பாதித்தவர்கள் கவிஞர் வரிசையில் இல்லாத லா.ச.ரா-வும் மெளனியும்; தா.சு-ரும் ஜிப்ரானும் பாதித்திருந்தார்கள். பிறகு இந்தப் பாதிப்புகள் விடுபட்டுப் போய் விட்டன. பின் ஐரோப்பியக் கவிஞர்களின் மீது ஈடுபாடு, வாஸ்கோ போபா, பால்செலான், நெருடா போன்றவர்கள் கவர்ந்தார்கள். நான் ரொம்பவும் விரும்புகிறவர்களுடன் சில அம்சங்களில் ரொம்பவும் வேறுபடுகிறேன். எனக்கு ஆதர்சம் என்று தனித்த ஒருவரைச் சொல்ல முடியவில்லை.

சமகாலக் கவிஞர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள் ?

பலர். பிரமிள், ஞானக்கூத்தன், ஆத்மாநாம், கலாப்ரியா, அப்துல் ரகுமான், சுகுமாரன், தேவதேவன்....

'கவிதைக்கான கருவை முன் கூட்டியே திட்டமிடுவதில்லை; கவிதை தானாகவே உருவாகிறது அல்லது நேர்கிறது ' இதற்கு அர்த்தம் என்ன ? கவிதை ஆக்கத்தில் பிர்க்ஞை பூர்வமான உழைப்பு தேவையில்லை என்பதா ?

திட்டமிடுதல் என்பது ஒரு வரைபடம் போல நாற்புறஎல்லை, ஒவ்வொன்றின் அளவுகள், முன்பின்கள் எனறு அர்த்தமானால்- எந்தப் படைப்புக்குமே 'திட்டமிடல் ' என்பது இருக்க முடியாது. ஒரு லேசான உசும்பலோடு கவிதை தொடங்க-அந்த உசும்பலே 'திட்டம் ' என்றால் போகிறபோக்கில் கவிதை அந்த அற்ப வரையறையைக் கலைத்துவிட்டுப் போய்விடுகிறதே ' விஷயத்திற்கு முதன்மை கொடுத்து இதை இந்த விளைவை நோக்கிக் கொண்டு போக வேண்டும் என்று 'திட்டமிட்டு ' எழுதுபவர்கள்கூட, தொடக்கம், வளர்ச்சி, முடிவு என்பவைகளைத் திட்டமிட மாட்டார்கள். விஷயத்தை ஞாபகம் கொண்டிருந்த கவிஞனைத் தன்வழியே இட்டுச் செல்லும் கவிதை சில சந்தர்ப்பங்களில் 'திட்டம் ' தங்களிடமே நின்றுவிட்டதையும் கவிதை தங்களைத் தாண்டிப் போய்விட்டதையும் அவர்கள் (உணர்ந்திருந்தால்) சொல்லக்கூடும்.

குறிப்பாகச் சொல்லுங்கள். கவிதை எழுதுவதற்கு முன்னால் மனசில் விஷயமே இருக்காதா ?

இருக்கலாம், இல்லாமலும் போகலாம். முன்பே நான் சொல்லியிருக்கிறேன். மனசைத் தீவிரமாகப் பாதித்து நிறைந்திருக்கும் ஒரு விஷயம், தனக்குச் சாதகம் தரும் உணர்ச்சியைக் கிளர்வித்துக் கவிதையாக வெளிவரலாம். அப்போது அது விஷயமல்ல; கவிதை விஷயத்தின் ஒருமை, முழுமை எனும் வடிவத் தெளிவுகள் கவிதையின் அந்தகாரத்தில் காணாமல் போய்விடலாம். இன்னொன்று: எந்த விஷயமும் மனசில் இல்லாமல், அடிப்படைக் கவித்துவ உணர்ச்சியின் வேகச் சுழற்சியில், அந்த வேளையில் ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றிக் கொண்டு கவிதை வெளிவந்து விடலாம். முயற்சி, திட்டம், தீர்மானம் இல்லாமலும், அப்படி இருந்தால் அவைகளைத் தப்பியும் பிறந்துவிடும் ஒன்றை 'நேர்வது ' என்னாமல் எப்படிச் சொல்வது ? மற்றபடி கவிதையின் எழுத்து வடிவாக்கத்தில் பிரக்ஞை மட்டத்தில் கவிஞனின் அடித்தல் திருத்தல் கூட்டல் குறைத்தல் நிகழ்கின்றன. இவை கவிஞனின் 'உழைப்பு ' அல்ல. பிறந்த கன்றை ரொம்பநேரம் நக்கிக்கொண்டிருக்கும் பசு அவன்.

அடிப்படையானது 'கவித்துவ உணர்ச்சி ' என்று சொன்னீர்கள். சரி. கவிதை ஆக்கத்தில் எது உங்களை உடனடியாகப் 'பக் 'கெனப் பற்றிக் கொள்கிறது ? சப்தம், சொல், காட்சி, sensation, feeling, கனவு, fantasy இவைகளில் எது ?

நிச்சயமாக சொல்லும் சப்தமும் அல்ல. fantasy, கனவு, உணர்வு என்றெல்லாம் பிரித்துணர முடியாதபடி, உருத்தெளிவற்ற காட்சிகளாக நிகழ்ந்து கொண்டேயிருப்பது, ஏதோ ஒரு கணத்தில் 'நானா 'க இருப்பவனை 'நான 'ற்று ஆக்கிவிடுகிறது. பிறகு இது கவிதையாக வெளிவரும் வாய்ப்பு நேர்கிறது. சங்கீதத்தில்கூட, நான் அனுபவிக்கும் நாதம் சப்தம் அல்ல; கேட்டுக் கொண்டிருக்கும்போதே சங்கீதம் நம்மை இழுத்துக் கொண்டு மெளனத்தினுள் நுழைந்து விடுகிறது. படைப்பு அனுபவமும் அதுதான்.

உங்களின் சங்கீத ஈடுபாடு- உங்கள் கவிதைகளில் சங்கீதத்தை நோக்கிய குறிப்புகள் உள்ளன. சங்கீதப் பயிற்சி பெற்றீர்களா ?

இல்லை. ஓரளவு கேள்வி ஞானம்தான். ஞானம் என்று கூடச் சொல்ல மாட்டேன். அது எனக்குத் தரும் அனுபவம்-அது என்னுள் எழுப்பும் அருவங்கள், அகாலம், அகாதம்- என் மெளனத்தில் அதன் இடையறாத இருப்பு-இவை நான் உணர்வன. என் சொற்களில் என்னையறியாமல் அது கமழ்கிறது. கவிதைகளில் அங்கங்கே தெரியும் சங்கீதம் தொடர்பான குறிப்புகள் சாதாரணமானவையே ஆனால் என் உணர்வுப் போக்கையும், மொழியையும் சங்கீதம் நிர்வாகம் செய்து வருகிறது என்பதுதான் முக்கியம்.

இன்றைய கவிதையில் படிமத்தின் செல்வாக்கு பற்றி - உவமை உருவகம் இவையெல்லாம் உபயோகமற்ற கடந்தகாலச் சரக்குகளாய்விட்டனவா ? இவற்றின் இடத்தைப் படிமம் பிடித்துக் கொண்டதா ? வலிந்து திணிக்கப்பட்டு, துருத்தியவாறு கவிதையின் இணக்கத்தை / Unity ஐ குலைத்து விடாதா ? படிமம், உவமை, உருவகம் இவற்றை வாசகர்களுக்காக உதாரணத்துடன் சொல்லுங்கள்.

அன்றாடப் பேச்சிலேயே ஏராளமாய்ப் படிமங்கள் புழங்குகின்றன. எல்லை மீறிப் போகிறான்; கண்டு கொள்ளாதே; விட்டுப் பிடிக்கலாம்; எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது இப்படிப் போகும் பேச்சில் எல்லை, காணுதல், பிடித்தல், கை-எல்லாம் படிமங்கள்தாமே ' மொழியே படிம வசப்பட்டிருப்பதுதான். கவிதைப் படிமம் என்பது (poetic image) பொருள், எண்ணம், கருத்து, உணர்வு என்பவைகளைப் புலன்வழிக் காட்சிகளாகவோ, நுண்காட்சிகளாகவோ, புலனுக்கு அப்பாற்பட்ட அனுபவங்களாகவோ மாற்றி வழங்குவது. நான் முன்பு சொல்லியிருப்பது போல, 'இரண்டு பொருள்களை அடுத்தடுத்து நிறுத்தி ஒப்புமை காட்டுகிறவை உவமையும் உருவகமும். ஆனால் ஒன்று மற்றொன்றினுள் தடந்தெரியாது கலந்து மறைந்ததன் பின், ஒன்றன் செழிப்பு இன்னொன்றின் வடிவத்திற்குள் தொனித்துத் தோண்றுவது படிமம் அலைந்து திரிவதில்லை. யோசனைக்கும் தீவிர சிந்தனைக்கும் அறிவுக்கும் இட்டுச் செல்லாமல் அனுபவத்தின் நுழைவாசலில் சுருக்கமாக இயங்குகிறது. அடுத்த நிமிஷத்தில் அந்த இயக்கம் மறைந்து படிமமே அனுபவமாகிறது '.

'செம்புலப் பெயல்நீர்போல அன்புடை நெஞ்சம்தான் கலந்தனவே '

'உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு ' - இவை உவமைகள்.

சின்னஞ்சிறு கிளியே- கண்ணம்மா செல்வக் களஞ்சியமே ' - உருவகம்.

கவிதைப் படிமம் உவம-உருவகச் சார்பானதாகவும் இருக்கலாம்; அவைகளுக்குத் தொடர்பில்லாமலும் இருக்கலாம்.

'வயிறு வெடிக்கச் சிரிக்கும் பூசணிகள், நடுத்தெருவில் ' இது ஓரளவு உவமைச் சார்புள்ள படிமம். இன்றைய கவிதையில் உவமை- உருவகச் சார்பில்லாமல் பல்வேறு விசிறல்களாய் வரும் படிமங்களே அதிகம். பழங்கவிதையிலும் இவை உண்டு. 'கானம் காரெனக் கூறினும் '- காடு இது கார்காலம் என்று பொய் சொல்கிறது என்கிறாள் குறுந்தொகைத் தலைவி.

பல்வேறு விசிறல்களாய்ப் படிமங்கள்- உதாரணம் சொல்லுங்கள்...

'பாம்புப் பிடாரன் சுருள் சுருளாக வாசிக்கிறான் ' - பாரதியின் படிமம், இசையை கண்களில் கொண்டு வந்து நிரப்புகிறது. ' தந்தையைப் பிரிந்து/ கூர்ந்து கூர்ந்து போய் / ஊசி முனைப் புள்ளியில் கிறங்கி / நீடிப்பில் நிலைத்தது கமகம் ' இது கமகத்தின் இயக்கத்தைக் காட்சிப் படுத்துகிறது. 'அவள் செளந்தர்யம் எதில் அடங்கிக் கேட்காது முணுமுணுக்கிறது என்பது தெரியவில்லை ' மெளனி கண்ணுக்குரியதைக் காதால் கேட்கச் செய்கிறார் புலன்கள் மாறிப் போவதால் விஷயம் தரும் அனுபவம் புதிய பரிமாணம் ஒன்றைக் கொள்கிறது. 'சங்கு- அடிபருத்து அவசர்மாய் நுனிகுறுகி ' சங்கின் அவசரத்தை ஆர்வத்தை லா.ச.ரா.- கவனித்திருப்பதைப் படிமம் காட்டுகிறது. 'கூழாங்கற்களின் மெளனம்- கானகத்தின் பாடலை உற்றுக் கேட்பது ' - இதுவும் அப்படிப்பட்ட படிமம். கவிஞனுடைய உலகில் அஃறிணை என்பது இல்லை.

'மூலைகள் வெடித்துப் பெருகி இன்னும் இன்னும் மூலைகள் '

'ஒருகை மீது இப்போது மழைவீழ்கிறது, மற்றதிலிருந்து புல் வளர்கிறது '

'ஒரு நாள் கூந்தல் இழைகளிடை காற்று பிணங்கள் இழுத்துக் கொண்டோடியது '

இந்த சர்ரியலிசப் படிமங்கள் தம் இருப்பிடங்களில் 'விநோதம் ' என்று தோன்றாமலே வித்தியாசமான உணர்வுகளை எழுப்பக் கூடியவை 'கண்ணாடியில் பிம்பம் விழும் த்வனிகூட எனக்குக் கேட்கிறது ' இன்னவகை என்று தீர்மானிக்க முடியாத நுட்பம் - தர்க்கத்தில் அடங்காத உள்தர்க்கம் இந்தப் படிமத்தில் செயல்படுகிறது. 'ஐந்து பொறிகளும் என்மீது கிறுக்கிக் கொண்டே இருக்கின்றன '

'என் பிடறியில் குடியிருக்கும் இருள் கலைந்து புறப்பட்டு நிசப்தத்தில் வானை நிரப்புகிறது ' - இப்படி நல்ல கவிதைப் படிமங்கள் ஏராளமாகச் சொல்லிப் போகலாம். மொத்தத்தில் இன்றைய படிமங்கள் அரூப நிலைகளை நோக்கியவை; மெளனத்தைத் தொடமுயல்பவை. இந்தவிதமான நுண்மையைக் உவமை உருவகம் கொண்டு சாதிக்க முடியாது. அவை செல்வாக்கு இழந்ததற்கு இது ஒரு காரணம், அவை தவறாகப் பயன்படுத்தப்பட்டது; அலங்கரிக்க, சாமர்த்தியம் காட்ட, விளக்கம் சொல்ல எனக் கவிதைக்குப் புறம்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் பட்டது. மற்றபடி இன்றும் இனியும் நல்ல உவமைகளுக்கு மதிப்பு இல்லாமல் போய்விடாது.

துருத்திக் கொண்டு நிற்கும் படிமங்கள் பற்றி ? மிகைபற்றி ? தேவையின்மை பற்றி ?

மிகையாகப் படிம அடுக்குகளைக் கையாள்வது இப்போது குறைந்திருக்கிறது. 'பூமித்தோலில் அழகுத் தேமல், பரிதிபுணர்ந்து படரும் விந்து ' என்பது போன்ற படிமம் அடுக்குகள் இப்போதைய கவிதைகளில் இல்லை. ஆயினும் நல்ல படிமங்களைக் காண்பதும் அரிதாகி வருகிறது. கவிதையில் 'படிமத்தை அமைப்பது ' என்பது தவறானது. படிமமே கவிதையாக உருவாக விட்டு விடுவது என்பது சரி. இப்படி வரும்போதுதான் விஷயம் படிமத்தினுள் கரைந்து, படிமத்தின் புத்துணர்ச்சி காரணமாக இதுவரை வெளித்தெரியாதிருந்த தன் உள்ளுருவைக் காட்டும் இங்கே படிமம் துருத்தி நிற்காது.

படிமம் விஷயத்தின் உள்ளுருவைக் காட்டும் என்கிறீர்கள், உங்கள் கவிதைகள் பேசாமலும், பேசும் விதம் இன்னதென்று அறியாமலும் பிறந்திருப்பதாகச் சொல்கிறீர்கள். தன்மைகளின் பிடிப்பிலிருந்து விலகும் போது அவை abstract ஆகின்றன என்கிறீர்கள். இவைகளை உங்கள் கவிதை ஒன்றின் பிறப்பைக்கொண்டு விளக்குங்கள்.

'நான் இல்லாமல் என் வாழ்க்கை ' என்ற கவிதை (அருகில் வெளியாகியுள்ளது பார்க்கவும்) எதையும் பிரித்துப் பார்த்தல், எதிலிருந்து விலகி தனித்தல், இருப்பதிலிருந்து விலகி இல்லாதிருத்தல் - இவை என் நிரந்தர உளச்சல்கள். எதிலிருந்து விலகி இல்லாதிருப்பது ? இருத்தலிருந்து. இருத்தல் எது ? இந்த வாழ்க்கை. இந்த மாதிரியான நினைவுப் போக்கில் ஒருநாள், நான் விலகி நின்றால் என் வாழ்க்கை என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்தது. எழுந்த கணத்தில் என் முன் என் வாழ்க்கை அனைத்துப் பரிமாணங்களிலிருந்தும் விடுபட்டு வரம்பற்ற சுதந்திரத்தோடு, பேரானந்தத்தோடு இயங்குவதைப் பார்த்தேன். அதற்கு வடிவம் இல்லை; தன்மை இல்லை; தன்னை உணரும் / தன் ஆனந்தம் இன்னதென உணரும் அவசியமும் இல்லை.

இந்த கவிதை உங்களிடம் எதையும் சொல்லவில்லை; நான் அதற்கு எந்தக் கருத்தையும் தயாரித்துக் கொடுக்கவில்லை; அது ஒரு உயிர் பொருளாக உங்கள் முன் நிற்கிறது. இந்தக் கவிதையில் தனித்துவிடப்பட்ட வாழ்க்கையின் இயக்கங்கள் காட்டப்படுகின்றன. அருத்திரளுதல், நீல வியாபகம் கொள்ளுதல், சூன்யத்தை அளைதல், நிழல் வீழ்த்தாமல் நடமாடுதல், தன்மைகளின் எதிர்ப்பை அலட்சியம் செய்து பறந்து திரிதல்-இந்த இயக்கங்கள் இன்னதென்று தெளிவுபடாத, நிழல்தனமான, ஒரு படிமத்தை மனத்திரையில் உருவாக்கிக் காட்டுகின்றன. இந்த படிமம் விஷயத்திலிருந்து வேறுபட்டதன்று; விஷயமேதான் படிமம் உணர்த்துகிறது. இனிமேலும் சொல்வது கவிதை அனுபவத்தைப் பாதிக்கும். நீங்களே படித்து பாருங்கள்.

பிரார்த்தனை, வணக்கம், வேண்டுதல், சடங்குகள் போன்ற வெளியரங்கமான இறைவழிபாட்டைத் தாண்டி, இறைவனை சூன்யமாக, மகத்துவமாக, மெளன வெளியாக, எல்லையின்மையாக, தங்களின் கவிதைகள் தீண்டுகின்றன. ஆன்மீகத்தில் இது உயர்ந்த படித்தரம். ஞானிகளும், சித்தர்களும், சித்தீக்குகளும் தேடிய, தாண்ட உன்னிய படித்தரம். தங்களுக்கு இவர்களுடன், இவர்களின் தத்துவத்தில் ஆர்வமுண்டா ?

நிறைய உண்டு. எந்த அளவு உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன் என்று உணரத் தெரியவில்லை. என் சிறு வயதில் என் தந்தை குணங்குடியார் பாடல்களை இனிமையான குரலில் ராகத்துடன் பாடியதைக் கேட்டு அப்போதே அவைகளைப் படித்திருக்கிறேன். இன்னதென்று தெரியாமலே இளம் மனது ஈடுபாடு கொண்டது. வளர்ந்தபின் சித்தர்கள், அத்வைதிகள், சூபிஞானிகளின் தத்துவங்கள் எனனை ஈர்த்தன. என் கவிதைகள் அவைகளை அப்படியே பிரதிபலிப்பதில்லை; கண்டு கொண்டதையல்ல, காண தவிப்பதை, காண தவறுவதை என் கவிதைகள் உணர்த்துகின்றன எனக்கு தெரிந்தோ தெரியாமலோ கூட அவை சில எல்லைகளைத் தாண்டி எங்கெங்கோ போய்வருகின்றன. என்னுள்ளிருக்கும் படைப்பாளி எனக்குக் கட்டுபடாதவன்; என்னை மீறியவன்; கணத்துக்குக் கணம் தன்னை மீறிக்கொண்டிருப்பவன். அதே நேரம் வெளியரங்க வழிமுறைகளையன்றி வேறறியாத என்னுடன் அவன் முரண்பட்டுக் கொள்வதும் இல்லை. ஆயிரம் பாக்குகளிடையே எனது ஈமான்- அதை உறுதிப் படுத்த என் கவிதைகள் துணை நிற்கின்றன. அவற்றின் கைபிடித்துக் கொண்டு எங்கே போனாலும், அனுபவத்தின் விளிம்புகளைத் தாண்டிய விரிவில் சில கணங்களேனும் சஞ்சரிக்க வாய்த்தாலும் என் கவிதைகள் திருப்தியில்லாமல் இருக்கின்றன எனப்பார்க்கிறேன். நிறைவின்மை என் கவிதைகளின் குணம்; என் குணமும் கூட. இந்த நிலையில்தான் என் தத்துவம் என்னை கனத்த மெளனத்துள் இறுக விடுகிறது; ஒன்றும் புரியாதிருக்கிற மெளனம்.

லா.ச.ரா. நாவல்களை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளீர்கள். அவரின் எழுத்துக்களில் தங்களின் ஈடுபாட்டினைப் பற்றிச் சொல்லுங்கள்...

லா.ச.ரா. தம் எழுத்தைத் தவம் என்பவர். தவத்தின் லட்சியம் தவம் அல்ல. மொழியைத் தாண்டின உன்னதத்தை அவர் எழுத்து லட்சியமாகக் கொள்வது. வாழும் யதார்த மனிதனைக் கண்ணெதிரே நிறுத்துவதைவிட, சாகாத மானிட உணர்வுகளை உருவகமாக்கி உலவ விடுவதே அவர் நோக்கம். புறக்காட்சிகளின் வழியாக ஆழ்ந்த அகக்காட்சிகளுக்கு வாசகனை இட்டுச் செல்கிறவர். எழுத்தை மனோதத்துவப் பாதையில் ரொம்பதூரம் கொண்டு சென்று ஆழ்ந்த உள்ளுணர்வு, தரிசன நிலைகளில் திளைக்கச் செய்தவர். நனவோடையில் இந்தியத் தத்துவத்தை அற்புதமாக இணைத்தவர். நம் காலத் தமிழ்நடைக்கும் எழுத்து முறைக்கும் உள்ளடக்கப் புதுமைக்கும் பாரதி, புதுமைப்பித்தன் போல லா.ச.ரா.வும் ஒரு முக்கியப் பொறுப்பாளி. இன்று எழுதும் பலருடைய மொழியில் லா.ச.ரா. தமிழ் ஊடுருவல் செய்திருக்கிறது என்பது உண்மை. முறையான தமிழ் இலக்கியப் பயிற்சியுடன் கல்லூரியிலிருந்து வெளிவந்த நேரத்தில், அது வரை நான் அறியாதிருந்த புதிய தமிழை எனக்கு அறிமுகம் செய்வித்தவர் லா.ச.ரா.தான்.

'பாரதிக்குப் பின் பிரமிள் ' என்கிற குரல் கேட்கத் துவங்கி விட்டதே... தங்களின் அபிப்பிராயம் என்ன ?

பிரமிளின் கவித்துவ சாதனையை மறுக்கவோ புறக்கணிக்கவோ முடியாது. ஆனால் ஒரு உண்மையைக் கவனிக்க வேண்டும். பாரதிக்கு முன்பு / பாரதி காலத்தில் இல்லாத அளவு வசன் இலக்கிய எழுச்சி பாரதிக்குப்பின் வந்து விட்டது. தமிழ் இலக்கியத்திற்கு புதிய பரிமாணங்களை வசன இலக்கியம் தந்திருக்கிறது. உலக இலக்கியத் தரத்தை நம் வசனத்தில் காணமுடிகிறது. பாரதிக்குப் பின் என்ற கணக்கீட்டிற்குத் தனியொருவரை நிறுத்த முடியாது. பாரதிதாசன் என்ற கவிஞரையும் புதுமைப்பித்தன், லா.ச.ரா. மெளனி, ஜெயகாந்தன் போன்ற வசன படைப்பாளிகளையும் கணக்கிலெடுத்துக் கொள்ளும்போது இந்த வரிசையில் தவறாமல் இடம் பெறும் தகுதி பிரமிளுக்கு உண்டு.

கண்ணதாசனைப் பற்றி எழுதுகையில் 'தமிழ் அவரிடம் தங்கி இளைப்பாறிற்று ' என்கிறார் ஜெயகாந்தன். தங்களின் கணிப்பு என்ன ? கண்ணதாசன் என்றாலே புருவச் சுளிப்புடன் ஒதுக்கித் தள்ளிவிடுகிற மனோபாவம் சரிதானா ?

கண்ணதாசன் potential அளவுக்கு அவர் எழுத்து இல்லை என்பதுதான் என் அபிப்பிராயம். தன் எழுத்துக்கு மேற்பட்ட ஆற்றல், தகுதி அவருக்கு இருந்தது என்பதை உணர அவர் எழுத்து ஆதாரம். முயற்சியில்லாத அநாயாச வெளியீடு அவரிடம் இருந்தது. திரைப்பட பாடல்களில் அப்படங்களின் தரத்துக்கு பொருந்தாத உயர் தரத்தில் அற்புத வரிகள், த்வனிகள், மின்வெட்டுகள் அமைந்து கிடக்கின்றன. ஆனால் அவரால் முடியாதது selection செயல்திறன். எழுத்து அவரது ஆதிக்கத்துக்கு பணிந்துவிட்டது; அவர் சூழலின் ஆதிக்கத்துக்கு பணிந்துவிட்டார். நாவல், கதை என்று அவர் எழுதியவற்றில் தரம் சொல்லும்படியாக இல்லை. எப்படியிருப்பினும் கண்ணதாசன் என்றவுடன் புருவச் சுழிப்பு ஏன் என்று எனக்குப் புரியவில்லை. விமர்சனம் நல்லதைக் கண்டுபிடிக்கத் தெரியாததா ? சிறுபத்திக்கைப் புழக்கத்தில் விமர்சனம், ஒழித்துக்கட்டல், இருட்டடிப்பு செய்தல், குழுமனோபாவம், சுயபிரமைகள், கொள்கைகோட்பாடு சார்ந்த பிடிவாதங்கள் நிரம்பியதாகியிருப்பதை அறிவீர்கள்.

மரபு கவிதையின் சகாப்தம் முடிந்துவிட்டது எனக் கருதுகிறீர்களா ?

இந்த பிரிவினையை (மரபு-புதியது) நான் ஒப்புக் கொள்வதில்லை. பழங்கவிதையை மரபுக் கவிதை என்ற பெயரில் அடையாளம் காட்டுபவர்கள்தான் பிடிவாதமாக இந்தப் பிரிவினையை வற்புறுத்துகிறார்கள். கவிதை என்றும் ஒன்றே. இன்றைய கவிதை உலகக்கவிதைத் தாக்கங்களுடன், புதிய அறிவுத்துறைகள்-தத்துவத் துறைகளுடன், அழகுணர்ச்சியின் புதிய விளக்கங்களுடன், வாழ்வின் புதிய பார்வைகளுடன் தன் பெரும் செல்வத்தை நம் மர்பில் கலந்து விட்டிருக்கிறது. கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்த்தபின் தமிழ்க்கவிதை என்ற பெயர் மாறி, தமிழில் கவிதை என்ற பெயர் உருவாகும். உலகில் தமிழ், ஆங்கிலம், ஜெர்மனி, பிரெஞ்சு, ரஷ்யன், சீனம் என்ற மொழிகளின் பட்டியலில் கவிதை என்பதும் ஒருமொழியாக இடம் பெற்றுக் கொள்ளும்.

அதனால் பழங்கவிதைப் பாணியை மட்டும், அதன் பழைய உள்ளடக்கத்துடன் மரபுக் கவிதை என்று தவறாக நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் சொல்கிறேன், 'உங்கள் மரபுக் கவிதையின் சகாப்தம் முடிந்துதான் போய்விட்டது '.

தங்களின் தாய்மொழி எது ? உர்து ? இந்த கேள்வியை deliberate ஆகத்தான் கேட்கிறேன். ஏனெனில் ஒரு முஸ்லிமின் இறைநம்பிக்கை உலகு முழுவதும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அவன் காலாகாலமாக தான் வாழும் மண், அதன் மனிதர்கள், அதன் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், பேசும் மொழி இவை சார்ந்த ஆதாரமான கூறுகளிலேயே வேர் கொள்கிறான். ஒரு தமிழ் பேசும் முஸ்லிமுக்கும், ஒரு சவூதி அரேபிய முஸ்லிமுக்கும் கடலளவு வேற்றுமைகள் இருக்கின்றன. இந்த வேற்றுமைகளைத் தக்க வைத்துக் கொள்வது மிக முக்கியமானதென நினைக்கிறேன். முஸ்லிம்களை ஒரு Homo genius Community யாகக் கண்டு அவனை முஸ்லிம் என்ற ஒரே ஒரு அடையாளத்தில் மட்டுமே அடைத்து விடுவது சரியல்ல என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?

என் தாய்மொழி தமிழ். உர்துவாக இருந்தால் கூட நான் தமிழனாகத் தானே இருப்பேன் ' நீங்கள் சொல்லும் ஆதாரக் கூறுகள் இயல்பானவை; அவரவர் தளத்தில் அவரவரைப் பிணைத்து வைத்திருப்பவை. மொழியும் இனமும் கலாச்சாரமும் மன உள்ளமைப்பை உருவாக்கி நிரவியிருப்பவை. எனினும் எனக்கு ஒரு எண்ணம். மனிதன் என்று பார்க்கும் போது அவன் சக மனிதனுடன் கொள்ளும் உறவில் உருவாகிறான்/ உருமாகிறான். ஆனால் ஒரு முஸ்லிம் என்று பார்க்கும்போது தனக்கும் தன்னைப் படைத்தவனுக்கும் இடையேயுள்ள நிரந்தர உறவில் அடையாளம் கொள்பவன். ஒரு முஸ்லிமுக்கும் மற்றொரு முஸ்லிமுக்கும் இடையே கலாச்சார வேற்றுமை கடலளவு இருந்தாலும் (ஒரு கலாச்சாரத்துக்குள்ளேயே பிணக்குகள் ஏராளம் ') வானளவு ஒற்றுமை-தம் இறைவனுடன் உலகமுழுதும் ஒரு மொழியில் நேரடிப் பேச்சுக்குரியவர்கள் என்ற ஒற்றுமை-இருக்கிறதல்லவா ' இந்த ஆன்மிகத் தளத்தை அடிப்படையாகக் கொண்டால் முதலில் முஸ்லிம்களுக்கிடையேயாவது ஒற்றுமை வரக்கூடுமே ' அப்படி ஆன்ம ஒருமையை உணரும் பட்சத்தில் வேற்று மதத்தவர்களுடன் இணக்கம் காண்பதிலும் சிரமம் இராது என்று நம்புகிறேன். வேற்றுமையில் ஒற்றுமை என்பது எங்கும் எப்போதும் பொருந்தும் வாழ்வியல் வாசகம்.

நான் இல்லாமல் என் வாழ்க்கை

நான் இல்லாமலே
என் வாழ்க்கை
எதேச்சையில்
அருத்திரண்டது

வடிவ விளிம்புகளைக்
கற்பிக்க
நான் இல்லாததால்
நீல வியாபகம் கொண்டது

எதை துறந்தோம் என்று
அறிய வேண்டாத
நிம்மதியில் திளைத்தது

உணர்வுகளின்
பொது ரீங்காரம் மட்டும்
தொடர
நிழல் வீழ்த்தாமல்
நடமாடியது

கூரைகளுக்கு மேலே
தன்மைகளின் எதிர்ப்பை
அலட்சியம் செய்து
அசைவு தெரியாமல்
பறந்து திரிந்தது

பூமியை துளைத்து
மறுபுறம் வெளிவந்தது

பிம்பங்களின் துரத்தலுக்கு
அகப்படாமல்
நுட்பம் எதுவுமற்ற
சூன்யத்தை அளைந்தது

மரணப் பாறையிலிருந்து
குதித்து விளையாடியது

காலத்தின் சர்வாதிகாரம்
புகைந்து அடங்குவதை
வேடிக்கை பார்த்தது

தத்துவச் சுமை கரைந்து
தொலைதூரத்து வாசனையாய்
மிஞ்சிற்று

எனது குறியீடுகளின்
குறுக்கீடு
இல்லாது போகவே
தன்னைத் தனக்குக்
காட்டிக் கொண்டிருப்பதையும்
கைவிட்டது 

******

நன்றி: Thinnai 2000 June 11, ஆப்தீன் பக்கங்கள்

Apr 8, 2013

அமெரிக்கக்காரி - அ.முத்துலிங்கம்

ஒரு நாள் அவளுக்கொரு காதலன் இருந்தான்; அடுத்த நாள் இல்லை. அவன் வேறு ஒரு பெண்ணை தேடிப்போய்விட்டான். இது அவளுடைய மூன்றாவது காதலன். இந்தக் காதலர்களை எப்படி இழுத்து தன்னிடம் வைத்திருப்பது என்று அவளுக்கு தெரியவில்லை. அவர்கள் தேடும் ஏதோ ஒன்று அவளிடம் இல்லை. அல்லது இருந்தும் அவள் கொடுக்கத் தவறிவிட்டாள் என்பது தெரிந்தது.

பார்ப்பதற்கு அவள் அழகாகவே இருந்தாள். விசேஷமான அலங்காரங்A.Muthulingamகளோ, முக ஒப்பனைகளோ அவள் செய்வதில்லை. செய்வதற்கு நேரமும் இருக்காது. மற்ற மாணவிகளைப் போலத்தான் அவளும் உடுத்துகிறாள்; நடக்கிறாள். ஆனால் அவர்களைப்போல பேசுகிறாள் என்று சொல்லமுடியாது. இலங்கை, யாழ்ப்பாணத்திலிருந்து அமெரிக்க பல்கலைக் கழக உதவிப் பணம்  பெற்று நேராகப் படிக்க வந்தவள். ஆகவே, அவளுடைய உச்சரிப்பில் மூக்கால் உண்டாக்கும் ஒலிகள் குறைவாகவே இருக்கும். அமெரிக்க மாணவர்களுக்கு புரியாத பல புதிய வார்த்தைகளும் இருந்தன. அவள் sweet என்பாள் அவர்கள் candy என்பார்கள்; அவள் lift என்பாள் அவர்கள் elevator என்பார்கள்; அவள் torch என்பாள் அவர்கள் flashlight என்பார்கள். அதுவெல்லாம் ஆரம்பத்திலேதான், ஆனால் வெகுவிரைவிலேயே அவள் தன்னை திருத்திக் கொண்டாள். அவளுடைய நுட்பமான அறிவை அவள் வேதியியல், கணிதம், இயற்பியல் போன்ற பாடங்களுக்கு மட்டும் பயன்படுத்துவதில்லை.

கறுப்பு எறும்புகள் நிரையாக வருவதுபோல பையன்கள் அவளை நோக்கி வந்தார்கள். அவளுடைய கரிய கூந்தலும், கறுத்து சுழலும் விழிகளும் அவர்களை இழுத்தன. ஆனால் வந்த வேகத்திலேயே அவர்கள் திரும்பினார்கள், அல்லது அவளை விட்டுவிட்டு வேறு பெண்களிடம் ஓடினார்கள். முதலில் வந்தவன் கேட்ட முதல் கேள்வியை நினைத்து அவள் இன்றைக்கும் ஆச்சரியப்படுவாள். 'யாரோ தேசியகீதம் இசைப்பதுபோல நீ எதற்காக எப்போதும் தலைகுனிந்து நிற்கிறாய்?' அவள் எப்படி பதில் சொல்வாள்? 17 வருடங்கள் அவள் அப்படித்தான் நிலத்தைப் பார்த்தபடி பள்ளிக்கூடத்துக்கு போனாள், வந்தாள். அதை திடீரென்று அவளால் மாற்ற முடியவில்லை. ஆனால் கேள்வி கேட்டவனை அவளுக்கு பிடித்துக்கொண்டது. அவளுடைய வகுப்பில் அவனும் சில பாடங்களை எடுத்தான். நடக்கும்போது அவனுக்கு அவளுடன் ஒட்டிக்கொண்டு நடந்துதான் பழக்கம்.

அன்று நடந்த கூடைப்பந்து போட்டியை பார்க்க அவளை அழைத்தான். அவளுக்கு அந்த விளையாட்டைப் பற்றிய ஞானம் இல்லை, கூடைக்குள் பந்தைப் போடவேண்டும் என்பது மட்டுமே தெரியும். தொடை தெரியும் கட்டையான பாவாடைகளும், நீளமான சிவப்பு காலுறைகளும் அணிந்த பெண்கள் உற்சாகமாக துள்ளி குதித்து ஆரவாரித்தார்கள்; சிலவேளைகளில் பந்தை கூடையில் போடாதபோதும்கூட கைதட்டினார்கள். இவளும் தட்டினாள். திரும்பும் வழியில் அவன் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தான். ஒரு துளி அவள் உதட்டிலே சிந்தியபோது அதை ஒரு விரலால் துடைத்துவிட்டான். மூன்றாவது நாள் அவளுடன் சேர்ந்து படிக்கவேண்டும் என்று அழைத்தான். அவனுடைய அறிவுக்கூர்மை அவளை திகைப்படைய வைத்தது. அவளைப்போல அவன் ஒன்றுமே மனப்பாடம் செய்யவில்லை. தர்க்கமுறையில் சிந்தித்து மிகச் சிக்கலான வேதியியல் சாமாந்திரங்களை உடனுக்குடன் எழுதினான். மூன்றாவது நாள் அவன் அறை நண்பன் இல்லையென்றும் அவளை அந்த இரவு தன் அறையில் வந்து தங்கும்படியும் கேட்டான். அவள் மறுத்த பிறகு அவனைக் காணவில்லை.

இரண்டாவதாக அவளைத் தேடி வந்தவன் துணிச்சல்காரன்; குறும்புகள் கூடியவன். அவளுக்கு பென்ஸீன் அணு அமைப்பு தெரியும், அவனுக்கு தெரியாது. அப்படித்தான் அவர்கள் நட்பு உண்டானது. ஒருநாள் அவள் படித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று உண்டாகி அவள் முன்னால் நின்றான். அவனுடைய நிழல் அவள்மேல் பட்டு அவள் நிமிர்ந்து பார்த்தபோது அவள் உட்கார்ந்திருந்த சுழல் கதிரையை சுழலவிட்டான். அது மூன்றுதரம் சுற்றிவிட்டு அவன் முன்னால் வந்து நின்றது. 'பார், எனக்கு பிரைஸ் விழுந்திருக்கிறது. நீ என்னுடன் கோப்பி குடிக்க வரவேண்டும்' என்றான். அவளுக்கு சிரிப்பு வந்தது, சம்மதித்தாள். கோப்பி குடிக்கும்போது 'நீ உங்கள் நாட்டு இளவரசியா?' என்றான். 'இல்லை. அங்கேயிருந்து துரத்தப்பட்டவள். இனிமேல்தான் நான் ஒரு நாட்டை தேடவேண்டும்' என்றாள். 'நீ அரசகுமாரி மாதிரி அழகாக இருக்கிறாய்' என்று சொன்னான் அந்த அவசரக்காரன். அன்றிரவே அவள் அறையில் தங்கமுடியுமா என்று கேட்டான். அதற்கு பிறகு அவனும் மறைந்துபோனான்.

இவர்கள் அவளிடம் எதையோ தேடினார்கள். அவள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இன்னும் இலங்கைக்காரியாகவே இருந்தாள். அவள் அமெரிக்காவுக்கு வரமுன்னரே அவளுடைய கிராமத்தில் அவர்கள் அவளை 'அமெரிக்கக்காரி' என்று அழைத்தது இங்கே யாருக்கும் தெரியாது. அவளுடைய பெயரே அவளுக்கு மறந்துவிட்டது. வீட்டிலும், பள்ளிக்கூடத்திலும், வீதியிலும் அவளை 'அமெரிக்கக்காரி' என்றே அழைத்தார்கள். அவளுடைய இரு அண்ணன்மார்களிலும் பார்க்க அவள் புத்திசாலி என்று அம்மா சொல்வாள். அவளுக்கு நாலு வயது நடக்கும்போதே ஆங்கிலம் வாசிக்கக் கற்றுக்கொண்டாள். அவளுடைய அண்ணன்மார் கொண்டுவரும் அமெரிக்க கொமிக் புத்தகங்கள் அனைத்தையும் படித்துவிட்டு அந்தக் கதைகளை தன் வகுப்பு தோழிகளுக்கு சொல்வாள். ஆர்க்கி, சுப்பர்மான் பாத்திரங்களாக மாறி தான் அமெரிக்காவில் வாழ்வதாகவே அவள் கற்பனை செய்வாள்.

சின்ன வயதிலேயே தாயாரிடம் கேட்பாள், 'நான் அமெரிக்கக்காரியா?' தாய் சொல்வார், 'இல்லை, நீ இலங்கைக்காரி.' 'அப்ப நான் எப்படி அமெரிக்கக்காரியாக முடியும்?' 'அது முடியாது.' 'நான் அமெரிக்காவுக்கு போனால் ஆகமுடியுமா?' 'இல்லை, அப்பவும் நீ இலங்கைக்காரிதான்.' 'நான் ஒரு அமெரிக்கனை மணமுடித்தால் என்னவாகும்?' 'நீ அமெரிக்கனை மணமுடித்த இலங்கைக்காரியாவாய். நீ என்ன செய்தாலும் அமெரிக்கக்காரியாக முடியாது.' அப்போது அவளுக்கு வயது பத்து. அவளுக்கு பெரிய ஏமாற்றமாகப் போய்விடும்.

மூன்றாவதாக அவளைக் காதலித்தவன் கொஞ்சம் வசதி படைத்தவன். அவள் அப்போது இரண்டாவது வருட மாணவி. ஒரு வகுப்பு முடிந்து வெளியே வந்தபோது அவன் வந்து தானாகவே தன்னை அறிமுகம் செய்துகொண்டான். உடனேயே பல பெண்களின் கண்கள் அவளை பொறாமையோடு பார்த்தன. அவன் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னான். அவனுடைய பெற்றோர் போர்ட்லண்டில் வசித்தனர். அவனிடம் கார் இருந்தபடியால் ஒவ்வொரு வார முடிவிலும் அவர்களிடம் அவன் போய்வருவான்.

அவன் காரில் இருந்து இறங்குவது விசித்திரமாக இருக்கும். காரை நிறுத்திவிட்டு இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் தரையில் ஊன்றி எழுந்து நடந்துவருவான். நேற்று வகுப்பில் என்ன பாடம் நடந்தது, இன்று என்ன நடக்கிறது, நாளை என்ன நடக்கும் என்ற கவலையே அவனிடம் கிடையாது. பல்கலைக்கழகம் ஒரு விளையாட்டு மைதானம் என்பது அவன் எண்ணம். அவள் பின்னாலேயே அவன் திரிந்தான். ஒருநாள் அவளை கண்ணை மூடச்சொன்னான். அவன் ஏதாவது பரிசுப் பொருள் தரும்போது அப்படித்தான் செய்வான். அவள் மூடினாள். வாயை திற என்றான். ஏதோ சொக்லட்டோ இனிப்போ தரப்போகிறான் என்று நினைத்து வாயை திறந்தாள். அவளுடைய அம்மா மருந்து தரும்போதும் அப்படித்தான் திறப்பாள். அவன் குனிந்து அப்படியே திறந்த வாயில் முத்தம் கொடுத்துவிட்டான். அவளுக்கு அது பிடிக்கவில்லை. 'இது என்ன பெரிய விசயம். நான் உன் கையிலே முத்தம் கொடுத்திருக்கிறேன். உன் நெற்றியிலே முத்தம் தந்திருக்கிறேன். நெற்றியில் இருந்து இரண்டு அங்குலம் கீழே உன் வாய் இருக்கிறது. இது இரண்டு அங்குலத் தவறுதான்' என்றான்.

நன்றிகூறல் நாள் விருந்துக்கு தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தான். கடந்த வருடம் அவள் தன் சிநேகிதி வீட்டுக்கு போயிருந்தாள். நன்றிகூறல் நாளன்று விடுதியில் ஒருவருமே இருக்கமாட்டார்கள் என்பதால் அவள் சம்மதித்து, இரண்டு மணிநேரம் அவனுடன் காரில் பிரயாணம் செய்தாள். இதுதான் அமெரிக்காவில் அவளுடைய ஆக நீண்ட கார் பயணம்.

அவனுடைய பெற்றோர்கள் கண்ணியமானவர்கள். தகப்பன் நடுவயதாகத் தோன்றினாலும் தாயார் வயதுகூடித் தெரிந்தாள். மீன் வெட்டும் பலகைபோல அவள் முகத்தில் தாறுமாறாகக் கோடுகள். மகனின் சிநேகிதி இலங்கைக்காரி என்பதை எப்படியோ தெரிந்து வைத்துக்கொண்டு சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியான இலங்கை செய்தி துணுக்குளை அவளுக்காக வெட்டி வைத்து அவளிடம் தந்தது அவள் மனதை தொட்டது. விருந்து மேசையிலே இலங்கைப் போரை பற்றியே பேச்சு நடந்தது. இந்திய ராணுவம் இலங்கையை ஆக்கிரமித்து இரண்டு வருடங்கள் அப்போது ஓடியிருந்தன. அவள் தன்னுடைய அம்மா மூன்று இடங்கள் மாறிவிட்டதால் அடிக்கடி கடிதம் எழுதும் விலாசத்தை தான் மாற்றவேண்டியிருக்கிறது என்று கூறினாள். தன்னுடைய அண்ணன்மார் இருவரும் ஒருவருடம் முன்பாக போரில் இறந்துபோனதை அவள் சொல்லவில்லை.

இரவானதும் சோபாவை இழுத்து கட்டிலாக்கி அதில் அவளை படுக்கச் சொல்லிவிட்டு அவன் மேலே போனான். அவள் அயர்ந்து தூங்கினாள். நடுச்சாமம் போல ஒரு மிருதுவான கை அவள் வாயை மெல்ல மூடியது. பார்த்தால் இவன் நிற்கிறான். அவளுக்கு பயம் பிடித்தது. உடல் வெடவெடவென்று நடுங்கி இரவு உள்ளாடை வேர்வையில் நனைந்துவிட்டது. அவனை துரத்திவிட்டாலும் மீதி இரவு அவள் தூங்கவில்லை. மறுநாள் அவனுடன் காரில் பிரயாணம் செய்தபோது இரண்டு மணி நேரத்தில் அவள் அவனுடன் இரண்டு வசனம் மட்டுமே பேசினாள்.

அவளுடைய பல்கலைக்கழக வாழ்வில் பெரும் மாற்றம் மூன்றாவது வருட முடிவில்தான் நிகழ்ந்தது. பல்கலாச்சார கலை நிகழ்வில் அவள் கலந்து கொள்ளாமல் இரண்டு வருடங்கள் கடத்திவிட்டாள். இம்முறை தப்ப முடியவில்லை. இலங்கையிலிருந்து வந்து படிக்கும் மாணவி அவள் ஒருத்திதான். 'பாரம்பரிய நடனம்' என்று தன் பெயரைக் கொடுத்தாள். அவளிடம் ஒரு சேலை இல்லை, நல்ல நடன ஆடைகூடக் கிடையாது. ஒரு பஞ்சாபிப் பெண்ணின் உடையை கடன் வாங்கி இயன்றளவு ஒப்பனை செய்து தயாரானாள். அவள் பள்ளிக்கூடத்தில் ஆடிய 'என்ன தவம் செய்தனை' பாடலுக்கு அபிநயம் பிடிப்பது என்று தீர்மானித்தாள். பாடலை முதலில் பாடி நாடாவில் பதிவு செய்து வைத்துக்கொண்டாள். மேடையிலே நின்றதும் திரை இரண்டு பாதியாக பிளந்து நகர்ந்தது. மெல்லிய நடுக்கம் பிடித்தாலும் துணிச்சலுடன் பாடலை விளக்கி இரண்டு வரிகள் பேசிவிட்டு ஆடினாள். மாணவர்கள் எதிர்பாராத விதத்தில் கைதட்டி வரவேற்றார்கள்.

அவளுடைய நாட்டியத்துக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் ஒரு வியட்நாமிய மாணவன் கம்பி வாத்தியத்தை இசைத்தபடி பாடினான். இவள் ஒப்பனையை கலைத்துவிட்டு வெளியே வந்தபோது அந்த வியட்நாமிய மாணவன் இவளுடைய நடனத்தை வெகுவாகப் பாராட்டினான். இவளும் பேச்சுக்கு அவனுடைய வாத்தியம் அபூர்வமானதாக இருந்தது என்றாள். அவன் 16 கம்பிகள் கொண்ட அந்த பெண்கள் வாத்தியத்தை தன்னுடைய இறந்துபோன வியட்நாமிய அம்மாவிடம் கற்றுக்கொண்டதாகக் கூறினான். எப்போதாவது அவள் ஞாபகமாக தான் அதை வாசிப்பதாகச் சொன்னான். ஆயிரம் கண்ணாடிகள் வைத்து இழைத்த நீண்ட உடை தரித்து, தலையிலே வட்டமான தொப்பி அணிந்த அவனை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. பேசும்போது அவளுடைய ஆயிரம் பிம்பங்கள் அவனில் தெரிந்தன. இறுதி ஆண்டில் ஆங்கில இலக்கியம் படிக்கும் அவனுடைய பெயர் லான்ஹங் என்றான்.

அடுத்தநாள் காலை லான்ஹங் 27,000 மாணவர்கள் படிக்கும் அந்த பல்கலைக் கழகத்தில் அவளை எப்படியோ தேடிக் கண்டுபிடித்துவிட்டான். 'உங்கள் பெயரை நீங்கள் நேற்று சொல்லவே இல்லை?' என்றான். அவள் மதி என்றாள். அவளுடைய குடும்பப் பெயர் என்னவென்று கேட்டான். இந்த மூன்று வருடங்களில் ஒருவர்கூட அவளிடம் குடும்பப் பெயர் கேட்டதில்லை. அவளுக்கு சிரிப்பு வந்தது. 'என்னுடைய குடும்பப் பெயர் மிகவும் நீண்டது. அதை நீ மனனம் செய்வதற்கு அரை நாள் எடுக்கும்' என்றாள். 'அப்படியா, மதி என்றால் உங்கள் மொழியில் என்ன பொருள்?' அவள் 'புத்தி' 'சந்திரன்' என இரண்டு பொருள் இருப்பதாகச் சொன்னாள். 'வியட்நாமியருக்கு சந்திரன் பவித்திரமானது. அவர்கள் விழாக்களில் சந்திரனுக்கு முக்கிய பங்கு உண்டு' என்றவன் தொடர்ந்து 'நேற்று உங்கள் நடனம் மிக அழகாக இருந்தது. வியட்நாமிய நடன அசைவுகளுடன் ஒத்துப்போனது' என்றான். 'அப்படியா? நன்றி' என்றாள். 'தவழ்வதுபோல அபிநயம் பிடித்தீர்களே, அது என்ன?' இவன் பேசும் சந்தர்ப்பத்தை நீட்டுவதற்காக கேட்கிறானா அல்லது உண்மையான கேள்வியா என்பதில் அவளுக்கு சந்தேகம் இருந்தது.

'கண்ணனை உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாயே' என்ற வரிகளை விளக்கிக் கூறினாள். அவன் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவன். இவள் அர்த்தம் சொன்னதும் அப்படியா என்று கேட்டுவிட்டு 'அந்த தாய் உண்மையில் அமெரிக்காவில் பிறக்காததால் அதிர்ஷ்டம் செய்தவள்தான். மூன்று வயது பாலகனை உரலில் கட்டி வைத்தால் அந்த தாயை சிசுவதை சட்டத்தின் கீழ் அமெரிக்காவில் கைதுசெய்து சிறையில் அடைத்து விடுவார்கள்' என்று சொல்லிவிட்டு பெரிய பற்களைக் காட்டி சிரித்தான். அவளும் நிறுத்தாமல் சிரித்தாள். அவள் கண்களை அவன் அதிசயமாக முதன்முறை பார்ப்பதுபோல பார்த்தான். அவள் வாய் சிரிக்க ஆரம்பிக்க முன்னரே அவள் கண் இமைகள் சிரித்ததை அன்று முழுவதும் அவனால் மறக்க முடியாமல் இருந்தது.

இப்படி அவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொண்டார்கள். மூன்றாவது, நாலாவது சந்திப்புக்கு பின்னரும் அவன் அவளுடைய அறையில் வந்து இரவு தங்கவேண்டும் என்று கேட்காதது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளுக்கு அது பிடித்துக்கொண்டது. அவனுடன் இருக்கும்போது அவள் இயல்பாக உணர்ந்தது ஏனென்று தெரியவில்லை. அவனுடன் சேர்ந்து வெளியே நடக்கும்போதோ, உட்காரும்போதோ, பேசும்போதோ முயற்சி எடுக்கத் தேவையில்லை. அவனை மகிழ்ச்சிப் படுத்த அவள் வேறு எதுவித முயற்சியும் செய்யத் தேவையில்லை. ஏனோ அவள் இருதயம் அவன் அண்மையில் வித்தியாசமாகத் துடித்தது.

ஒவ்வொரு மாதமும் அவள் தாயாருக்கு கடிதம் எழுதுவாள். தாயார் இருக்கும் இடத்தில் டெலிபோன் வசதி கிடையாது என்றபடியால் அவள் இரண்டு மூன்று மாதத்திற்கு ஒரு தடவை வெளிக்கிட்டு பட்டணத்துக்கு போய் அங்கிருந்து அழைத்து மூன்று நிமிடம் மகளுடன் பேசுவாள். சரியாக மாலை ஆறு மணிக்கு அந்த அழைப்பு வரும். தாயார் எழுதும் நீல நிற வான்கடிதங்களும் தவறாமல் வந்தன. ஒரு கடிதத்திலாவது அவள் தன் கஷ்டங்களை சொன்னதில்லை. அந்த மாதம் ராணுவம் கொக்கட்டி சோலையில் நிறையப் பேரைக் கொன்று குவித்திருந்தது. அவள் அதுபற்றி மூச்சுவிடவில்லை. மாதக்கடைசியில் தன் பதில் கடிதத்தை எழுதி மதி இப்படி முடித்திருந்தாள். 'அம்மா நான் உன் மகளாய்ப் பிறந்து உனக்கு ஒன்றுமே செய்யவில்லை. உனக்கு பிடித்த ஒன்றைக்கூட வாங்கித் தரவில்லை. நேற்று குளிருக்கு ஒரு சப்பாத்து வாங்கினேன். அதன் விலை நாப்பது டொலர். அந்தக் காசை உனக்கு அனுப்பினால் அது உனக்கு மூன்று மாத குடும்பச் செலவுக்கு போதுமானதாக இருக்கும். நான் அங்கேதான் அமெரிக்கக்காரி, இங்கே வெறும் இலங்கைக்காரிதான். எனக்கு விநோதமான பெயர் கொண்ட நண்பன் ஒருவன் கிடைத்திருக்கிறான். லான்ஹங். டெலிபோன் புத்தகத்தில் அவன் பெயர் ஒன்றேயொன்றுதான் உண்டு. மிக நல்லவன். நான் உன்னை திரும்பவும் பார்க்கவேண்டும். அதற்கிடையில் செத்துப்போகாதே.'

லான்ஹங் அடிக்கடி சொல்லும் வார்த்தை 'என்னை ஆச்சரியப் படுத்து.' இரவு நேரத்தில் இருவரும் உணவருந்த சேர்ந்து போவார்கள். இவள் என்ன ஓடர் கொடுக்கலாம் என்று கேட்பாள். அவன் 'என்னை ஆச்சரியப்படுத்து' என்பான். சினிமாவுக்கு போவார்கள். 'என்ன படம் பார்க்கலாம்?' என்பாள் இவள். அவன் 'என்னை ஆச்சரியப்படுத்து' என்பான்.

ஒருமுறை லான்ஹங் அவளைத் தேடி வந்தபோது அவள் பார்க்காததுபோல கம்புயூட்டரில் தட்டச்சு செய்துகொண்டிருந்தாள். அவன் அவள் தட்டச்சு செய்வதையே வெகு நேரம் உற்றுப் பார்த்தான். அவளுடைய விரல்கள் மெலிந்த சிறிய விரல்கள். அவை வேகவேகமாக விசைப்பலகையில் விளையாடுவதை பார்த்தான். அவளுடைய விரல் ஒரு விசையை தொடும்போது அந்த விசையில் மீதி இடம் நிறைய இருப்பதாகச் சொன்னான். அப்படிச் சொல்லியபடி ஒரு விரலை எடுத்து கையில் வைத்து தடவினான். இவளுக்கு என்ன தோன்றியதோ எழுந்து நின்று பற்கள் நிறைந்த அவன் வாயில் முத்தமிட்டாள்.

மழை பெய்து ஓய்ந்த மாலை நேரம் ஒரு பேர்ச் மரத்து நிழலில் அமர்ந்து அவள் தாயாரை நினைத்துக்கொண்டாள். தாயார் காலையில் பள்ளிக்கூடத்துக்கு படிப்பிக்கச் செல்லும்போது சேலையை வரிந்து உடுத்தி, கொண்டைபோட்டு, அதற்குமேல் மயிர் வலை மாட்டி, குடையை எடுத்துக்கொண்டு போகும் காட்சி மனதில் வந்தது. இப்போது அங்கேயும் மழை பெய்திருக்குமா என்று எண்ணிக் கொண்டிருந்த சமயம் லான்ஹங் ஈரமான மண்ணில் சப்பாத்து உறிஞ்சி சப்தமெழுப்ப நடந்துவந்தான். குட்டையில் தேங்கிய தண்ணீரை கண்டதும் ஒரு பழங்காலத்து போர்வீரன் போல துள்ளிப்பாய்ந்து அவள் முன் வந்து குதித்தான். 'இந்தச் சின்னக் குட்டைக்கு இவ்வளவு பெரிய பாய்ச்சலா?' என்றாள் மதி. அவள், உடலை ஒட்டிப்பிடிக்கும் கண்ணாடித்தன்மையான ஆடையில் வசீகரமாக காட்சியளித்தாள். அவன் அவளை குனிந்து ஸ்பரிசித்துவிட்டு 'இன்றைக்கு உன் சருமம் இறகு போன்ற உன் ஆடையிலும் பார்க்க மிருதுவாக இருக்கிறது' என்றான். 'அது இருக்கட்டும். என்னால் இன்று உன்னை ஆச்சரியப்படுத்த முடியாது. ஒரு மாற்றத்துக்கு நீ என்னை ஆச்சரியப்படுத்து' என்றாள்.

'இன்று ஆங்கில இலக்கியத்தில் என்ன படித்தேன் தெரியுமா?'
'எனக்கு தெரியாது, நீ சொல்' என்றாள் அவள். 'ரஸ்ய எழுத்தாளர் ரோல்ஸ்ரோயுக்கு பதின்மூன்று பிள்ளைகள். அது உனக்கு தெரியுமா?'
'இல்லை. இப்பொழுதுதான் தெரியும். மேலே சொல்.'
'பதின்மூன்றாவது பிள்ளை ஒரு பையன். அந்தச் சிறுவன் இறந்தபோது ரோல்ஸ்ரோய் என்ன செய்தார் தெரியுமா? சைக்கிள் விடப் பழகிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு வயது அறுபது.'
'இதை ஏன் எனக்கு சொல்கிறாய்?'
'நீ ஆச்சரியப்படுத்து என்று சொன்னாயே, அதுதான்.'
அவள் மெதுவாக முறுவலிக்க ஆயத்தமானாள்.
'பார், பார் உன் இமைகள் சிரிக்கத் தொடங்குகின்றன.'

அவள் முனைவர் படிப்பை தொடங்கியபோது அவன் பட்டப் படிப்பை முடித்துவிட்டு ஆசிரிய வேலையை ஏற்றுக்கொண்டான். அவன் ஓர் அறை கொண்ட சின்ன வீட்டை வாடகைக்கு பிடித்தபோது அதிலே இருவரும் சேர்ந்து வாழ்வதென்று தீர்மானித்தார்கள். அவள் தன்னிடம் இருந்த கட்டிலையும் மேசையையும் மற்றும் உடமைகளையும் எடுத்துக்கொண்டு அவனுடைய வீட்டுக்கு மாறினாள். அவளுடைய கட்டிலை அவனுடைய கட்டிலுக்கு பக்கத்தில் போட்டபோது அது உயரம் குறைவாக இருந்தது. 'ஆணின் இடம் எப்பவும் உயர்ந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்' என்றான் அவன். முதலில் பதிவுத் திருமணம் செய்து, அதற்குப் பிறகு அவளுடைய அம்மா அனுப்பிய தாலியை சங்கிலியில் கோத்து அவளுடைய கழுத்தில் அவன் கட்டினான். 'வியட்நாமிய சடங்கு இல்லையா?' என்றாள் அவள். முழுச்சந்திரன் வெளிப்பட்ட ஓர் இரவில் சந்திரனில் தோன்றிய கிழவனை சாட்சியாக வைத்துக்கொண்டு அவன் இஞ்சியை உப்பிலே தோய்த்து கடித்து சாப்பிட்டான். மீதியை அவள் கடித்து சாப்பிட்டாள். அத்துடன் அவர்களுடைய திருமண வாழ்க்கை சந்திரக் கிழவனின் ஆசியுடன் சிறப்பாகத் தொடங்கியது.

மணமுடித்த நாளிலிருந்து அவள் தலையணை பாவிப்பதில்லை, சற்று உயரத்தில் படுத்திருக்கும் அவனுடைய ஒரு புஜத்தில் தலையை வைத்து படுக்க பழகிக்கொண்டாள். லான்ஹங் ஆசிரியத் தொழிலுடன் வீட்டு வேலைகளையும் கவனித்தான். அவன் ஓர் அருமையான கணவன். ஆனால் வீட்டைச் சுத்தமாக வைக்கத்தான் அவனால் எப்படி முயன்றும் முடியவில்லை. இப்படியும் ஒரு பெண் படிப்பாளா என்று ஆச்சரியப்படுவான். அவளுடைய ஆராய்ச்சி நூல்களும், நோட்டுப் புத்தகங்களும், குறிப்பெழுதும் காகிதங்களும் படுக்கையில் கிடக்கும், சமையலறையில் கிடக்கும், பாத்ரூமில் கிடக்கும், படிப்பு மேசையில் கிடக்கும். எப்படித்தான் இவளால் படிக்கமுடிகிறதென்று ஓயாமல் வியப்பான். இரண்டு மணி நேரமாக வீட்டை துப்புரவு செய்து, சாமான்களை ஒழுங்குபடுத்தி அவன் நிமிர்ந்த இரண்டு நிமிடத்திற்கிடையில் அவள் வீட்டை மறுபடியும் நிறைத்துவிடுவாள்.

முனைவர் படிப்புக்கு அவள் நீண்ட நேரம் பரிசோதனைக்கூடத்தில் கழிக்கவேண்டியிருந்தது. சிலநாட்களில் இருபது மணிநேரம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தாள். ஆனாலும் தாயாருக்கு மாதம் தவறாமல் கடிதம் எழுதுவாள். 'அம்மா உனக்கு ஒரு விசயம் தெரியுமா? நான் உன் வயிற்றில் கருவாக உதித்தபோது என் வயிற்றில் ஏற்கனவே கருக்கள் இருந்தன. அப்படி எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அது உனக்குள்ளே இருந்து வந்ததுதான்.'

ஒரு சனிக்கிழமை மதியம் பரிசோதனைக்கூடத்துக்கு அவள் போகவில்லை. அவள் ஆராய்ச்சியை முடித்து ஆய்வுக்கட்டுரையை பூர்த்திசெய்யும் தறுவாயில் இருந்தாள். படுக்கையறைக்கு வந்த லான்ஹங் அப்படியே அசைவற்று நின்றான். படுக்கையில் நாலு பக்கமும் நூல்கள் இறைந்து கிடந்தன. காலை உணவு எச்சில் பிளேட் அகற்றப்படவில்லை. பாதி குடித்த கோப்பி குவளையை மடியில் வைத்துக்கொண்டு அவள் குறிப்பேட்டில் குனிந்து எழுதிக்கொண்டிருந்தாள். லான்ஹங் புத்தகங்களை தள்ளி படுக்கையில் இடம் உண்டாக்கி அதிலே அமர்ந்து அவள் கைகளைப் பிடித்தான். 'இந்த உலகத்தில் ஆகச்சிறந்த மாணவி நீதான். அதில் சந்தேகமில்லை. எங்களுக்கு மணமாகி நாலு வருடங்களாகியும் பிள்ளை இல்லை. அதையும் நீ யோசிக்கவேண்டும். நாங்கள் ஒரு மருத்துவரை பார்க்கலாம்' என்றான். அவள் அவன் முகத்தை ஏறிட்டு பார்த்தாள். இதற்குமுன் அவள் பார்த்திராத அவனுடைய இரண்டு கன்ன எலும்புகளும் இப்பொழுது துல்லியமாகத் தள்ளிக்கொண்டு தெரிந்தன.

மருத்துவர் இருவரையும் நீண்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார். அவர் கண்டடைந்த முடிவை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. 'என்னை ஆச்சரியப்படுத்து, என்னை ஆச்சரியப்படுத்து' என்று அடிக்கடி கூறும் அவள் கணவன் உச்சமான ஆச்சரியத்தை பரிசோதனை முடிவுகள் வெளியான அன்று அடைந்தான். மருத்துவர் பரிசோதனை முடிவுகளை எடுத்துவர உள்ளேபோனார். அவருடைய சப்பாத்து ஓசை குறையக் குறைய இவர்களுடைய இருதயம் அடிக்கும் ஒலி கூடிக்கொண்டுபோனது. குழந்தை உண்டாக வேண்டுமென்றால் ஓர் ஆணுக்கு மில்லிலிட்டர் ஒன்றுக்கு இரண்டு கோடி உயிரணுக்கள் உற்பத்தியாக்கும் தகுதி இருக்கவேண்டும். அவனுக்கு அதில் பாதிகூட இல்லை. அவளுக்கு அவன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லை என்று மருத்துவர் கூறிவிட்டார்.

அவ்வளவு நாளும் ஒரு குழந்தை இருந்தால் நல்லாயிருக்கும் என்று நினைத்திருந்த இருவருக்கும் எப்படியும் ஒரு குழந்தையை பெற்றெடுக்கவேண்டும் என்ற வெறி உண்டானது. மதியின் தயாருடைய கடிதங்கள் 'நீ கர்ப்பமாகிவிட்டாயா' என்று கேட்டு வரத் தொடங்கியிருந்தன. வழக்கம்போல அவனுக்கு வலது பக்கத்தில் படுத்திருந்த அவளிடம், 'ஏ, இலங்கைக்காரி, நீ ஏன் என்னை மணமுடித்தாய்?' என்றான். 'பணக்காரி, பணக்காரனை முடிப்பாள். ஏழை ஏழையை முடிப்பாள். படித்தவள் படித்தவனை முடிப்பாள். ஒன்றுமில்லாதவள் ஒன்றுமில்லாதவனை முடிப்பாள்.' அவள் வாய் சிரித்தாலும் முகத்தில் துக்கம் தாளமுடியாமல் இருந்தது. 'இங்கே என்னைப் பார். அஞ்சல் நிலையத்து சங்கிலியில் பேனாவை கட்டிவைப்பதுபோல நான் உன்னை கட்டி வைக்கவில்லை. நான் வேண்டுமானால் விலகிக்கொள்கிறேன். நீ யாரையாவது மணமுடித்து பிள்ளை பெற்றுக்கொள்' என்றான். அவள் ஒன்றுமே பேசாமல் அவனுடைய கட்டிலில் துள்ளி ஏறி அவனுடைய புஜத்தை இழுத்துவைத்து அதன்மேல் இன்னும்கூட தலையை அழுத்தி படுத்துக்கொண்டாள்.

அன்று காலையிலிருந்து தொலைக்காட்சியின் எந்த சானலைத் திருப்பினாலும் அதில் கிளிண்டன் - மோனிகா விவகாரமே விவாதிக்கப்பட்டது. ரேடியோவிலும் அதையே சொன்னார்கள். பத்திரிகைகளும் பக்கம் பக்கமாகப் புலம்பின. ஒன்றிலுமே அவளுக்கு மனது லயிக்கவில்லை. மாலையானதும் அவள் தன்னறையில் உட்கார்ந்து யன்னல் வழியாக ரோட்டைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆய்வுக்கட்டுரையை மூன்றுநாள் முன்னர் சமர்ப்பித்துவிட்டதால், கொடிக்கயிற்றில் மறந்துபோய் விட்ட கடைசி உடுப்புபோல அவள் மனம் ஆடிக்கொண்டிருந்தது. ஒரு பொலீஸ் கார் சைரன் சத்தம்போட வேகமாக கடந்து சென்றது. ஒரு நாளில் அவ்வளவு நேரத்தையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று அவளுக்கு தெரியவில்லை. திடீரென்று ரோட்டிலே காலடி ஓசைகள் கேட்கத்தொடங்கின. பாஸ்கட்போல் போட்டி முடிந்து மாணவர்களும், மாணவிகளும் கூட்டம் கூட்டமாக நகர்ந்தனர். ஒரு பெண்ணை ஒருவன் தோளின்மேல் தூக்கிவைத்து நடந்தான். எல்லோருமே மகிழ்ச்சியாக காணப்பட்டார்கள். அதிலே யார் தோற்றவர், யார் வென்றவர் என்பதை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. உள்ளே சமையலறையில் லான்ஹங் பாத்திரங்கள் சத்தம் எழுப்ப அவளுக்காக வியட்நாமிய சூப் தயாரித்துக்கொண்டிருந்தான். அதன் மணம் சமையலறையைக் கடந்து, இருக்கும் அறையைக் கடந்து அவளிடம் வந்தது. நீண்ட ஆடையின் நுனியில் சூப் கோப்பையை வைத்து தூக்கிக்கொண்டு லான்ஹங் வந்தபோது அவள் நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கிவிட்டாள்.

அடுத்த நாள் காலை இருவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். அவர்கள் வீடு வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த அத்தனை பணத்தையும் கொடுத்து IVF கருத் தரிக்கும் முறையை பரிசோதிப்பது என தீர்மானித்தார்கள். அவனுடைய பள்ளிக்கூடத்தில் படிப்பித்த ஓர் ஆப்பிரிக்க ஆசிரியர் தன்னுடைய உயிரணுக்களை தானம் செய்ய முன்வந்தார். மருத்துவர்கள் பல பரிசோதனைகளை மேற்கொண்டார்கள். நிறைய சட்டதிட்டங்கள் இருந்ததால் மூவரும் பலவிதமான பாரங்களில் கையொப்பமிட வேண்டியிருந்தது. ஆறு மாதகாலமாக அவளை தயார் செய்தார்கள். 28 ஹோர்மோன் ஊசிகள் நாளுக்கு ஒன்று என்ற முறையில் செலுத்தி, அவளுடைய மாத விலக்கு முடிந்த மூன்றாம் நாள் பரிசோதனைக் கூடத்தில் உருவாக்கிய கருவை அவள் உள்ளே செலுத்தினார்கள். பத்து நாள் கழித்து மருத்துவ மனையில் போய் சோதித்துப் பார்த்தபோது அவள் கர்ப்பமாகியிருப்பது உறுதியானது. அன்றே தாயாருக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டாள். 'நான் கர்ப்பமாயிருக்கிறேன். உனக்கு ஒரு பேரனோ பேத்தியோ பிறந்த செய்தி விரைவில் வரும். காத்திரு.'

அவளுக்கு பல சந்தேகங்கள் இருந்தன. மருத்துவ பரிசோதனைகள் நடத்திய பெண்ணிடம் தன் பிரச்சினைகளை சொன்னாள். ஒருநாள் கேட்டாள், 'ஓர் இலங்கைப் பெண்ணுக்கும், வியட்நாமிய ஆணுக்குமிடையில் ஆப்பிரிக்க கொடையில் கிடைத்த உயிரணுக்களால் உண்டாகிய சிசு என்னவாக பிறக்கும்?' அதற்கு அந்தப் பெண் ஒரு வினாடிகூட தாமதிக்காமல் 'அமெரிக்கனாக இருக்கும்' என்றாள். சரியாக 280 நாட்களில் அவளுக்கு அழகான குழந்தை பிறந்தது. சுகமான மகப்பேறு. அவள் தன்னுடன் கொண்டுவந்திருந்த கைப்பையில் தயாராக வைத்திருந்த பேப்பரையும் பேனாவையும் எடுத்து தாயாருக்கு ஒரு கடிதம் எழுதினாள். 'எனக்கு ஒரு அமெரிக்க பிள்ளை பிறந்திருக்கு.' ஒரேயொரு வசனம்தான். அந்தக் கடிதத்தை உடனேயே அனுப்பிவிடும்படி கணவனிடம் கொடுத்தாள். வடகிழக்கு மூலையில் தபால்தலை ஒட்டிய அந்தக் கடிதம், வீதி பெயரில்லாத, வீட்டு நம்பர் இல்லாத அவளுடைய தாயாரிடம் எப்படியோ போய்ச் சேரும். அவள் தாயார் அந்தக் கடிதத்தை அமெரிக்க தபால்தலை தெரியக்கூடியதாக மற்றவர்கள் காணத் தூக்கிப் பிடித்துக்கொண்டு அன்று முழுக்க கிராமத்தில் அலைவாள்.

இருபது நாள் கழித்து மாலை சரியாக ஆறு மணிக்கு அவள் தாயாரிடமிருந்து ஒரு தொலைபேசி வந்தது. அது அவள் எதிர்பார்த்ததுதான். அந்த டெலிபோன் செய்வதற்காக அவளுடைய அம்மா அதிகாலை ஐந்து மணிக்கு எழும்பியிருப்பாள். ஆறுமணிக்கு முதல் பஸ்சை பிடித்து பட்டணத்துக்கு போய் டெலிபோன் நிலையத்துக்கு முன் காத்திருந்து, கதவு திறந்தபோது முதல் ஆளாக உள்ளே நுழைந்திருப்பாள். அங்கே அப்போது காலை ஏழு மணியாக இருக்கும்.

இருபது நாள் வயதான குழந்தை அவள் மடியிலே கிடந்தது. அம்மாவின் குரல் கேட்டது. 'மகளே, என்ன குழந்தை, நீ அதை எழுதவில்லையே?'
'பொம்பிளைப் பிள்ளை, அம்மா, பொம்பிளைப் பிள்ளை.'
'அம்மா, அவள் அழுகிறாள், சத்தம் கேட்குதா?' குழந்தையை தூக்கி டெலிபோனுக்கு கிட்டப் பிடித்தாள். 'மகளே, குழந்தைக்கு என்ன பேர் வைத்தாய்?' அவளுக்கு அம்மாவின் குரல் கேட்கவில்லை, அவளுடைய சுவாசப்பை சத்தம்தான் கேட்டது.
'அம்மா, அவள் முழுக்க முழுக்க அமெரிக்கக்காரி. நீ அவளை பார்க்கவேணும். அதற்கிடையில் செத்துப்போகாதே.'

இருவரும் ஒரே சமயத்தில் பேசினார்கள். அவர்கள் குரல்கள் அட்லாண்டிக் சமுத்திரத்தின் மேல் முட்டி மோதிக்கொண்டன. அவள் மடியிலே கிடந்த குழந்தையின் முகம் அவள் அம்மாவுடையதைப் போலவே இருந்தது. சின்னத் தலையில் முடி சுருண்டு சுருண்டு கிடந்தது. பெரிதாக வளர்ந்ததும் அவள் அம்மாவைப்போல கொண்டையை சுருட்டி வலைபோட்டு மூடுவாள். தன் நண்பிகளுடன் கட்டை பாவாடை அணிந்து கூடைப்பந்து விளையாட்டு பார்க்கப் போவாள். சரியான தருணத்தில் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரிப்பாள்.

'என் அறையில் வந்து தூங்கு' என்று ஆண் நண்பர்கள் யாராவது அழைத்தால் ஏதாவது சாட்டுச் சொல்லி தப்பியோட முயலமாட்டாள். பல்கலைக்கழக கலாச்சார ஒன்று கூடலில் 'என்ன தவம் செய்தனை' பாடலுக்கு அபிநயம் பிடிப்பாள் அல்லது பதினாறு கம்பி இசைவாத்தியத்தை மீட்டுவாள். ஒவ்வொரு நன்றிகூறல் நாளிலும் புதுப்புது ஆண் நண்பர்களைக் கூட்டி வந்து பெற்றோருக்கு அறிமுகம் செய்துவைப்பாள். அவர்களின் உயிரணு எண்ணிக்கை மில்லி லிட்டருக்கு இரண்டு கோடி குறையாமல் இருக்கவேண்டுமென்பதை முன்கூட்டியே பார்த்துக்கொள்வாள்.

*********

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்