Feb 28, 2010

வயது - அம்பை

அம்பை

இருட்ட ஆரம்பித்து விட்டது. பர்மிங்கம் சப்தங்கள் மங்க ஆரம்பித்து விட்டன. அந்த மாலைப்பொழுது கனத்துக் கிடந்தது. அதன் பளுவைத் தாங்க முடியும் என்று தோன்றவில்லை. பர்மிங்கமின் குளிரில் அவளும், அவளைத் தன்னுடன் சில நாட்கள் தங்க அழைத்திருந்த லாஜ்வந்தியும் சுடச்சுடப் பேசியிருந்தனர் காலையில். விவாதத்தின் முடிவில், ''தீவாவளிக்கு விளக்கு ஏற்றியும், கோலம் போட்டும் இந்தியக் கலாச்சாரத்தை இங்குள்ள இந்தியர்களுக்கு நினைவுப்படுத்த நீ நினைக்கிறாய். ஆனால் இந்த கிரியைகள் தான் கலாச்சாரமா என்று கேள்விகள் கேட்டுத் தாண்டி வந்தாயின்று நாங்கள்'' என்றாள் பாகீரதி.

''இந்தியாவையே பார்க்காத, இந்தியர்கள் என்று அழைக்கப்படும் எங்களுக்கு வேறு எந்த வேர்கள் இருக்க முடியும் இங்கே?''

''கலாச்சார வேர்கள் தீபாவளியிலும், ஹோலியிலும் இல்லை லாஜு''.

''அந்த உபதேசத் தொனியில் பேசாதே. நீ கடை வைத்தால் உன் கடைக் கண்ணாடியைambai5 உன் முன்னோர்கள் இந்தியர் என்பதால் உடைக்கப் போவதில்லை. உன் தபால் பெட்டியில் யாரும் மலத்தைக் கொட்டப் போவதில்லை. ஒரு வெள்ளையனைக் காதலித்து விட்டால் குற்ற மனப்பான்மையுடன் நீ ஆடிப் போக வேண்டாம். இது அத்தனையும் நாங்கள் தாங்க வேண்டியிருக்கிறது. குன்றுபதேசம் செய்யாதே. பெரிய ஏசு கிறிஸ்து மாதிரி.....''

''கலாச்சாரத்தைச் சில விஷயங்களில் இறுக்கப் பார்க்கிறாய் நீ. அதை வளரவிடாமல் கட்டிப் போடுகிறாய்''.

''என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? இந்தியாவுக்கு வா என்கிறாயா? பஸ் ஸ்டாப்பிலும், ரேஷன் கடையிலும் வரிசையில் நின்று சாகு என்கிறாயா?'' என்று வீறிட்டு லாஜ்வந்தி டீக்கோப்பையை அவள்மேல் எறிந்திருந்தாள் காலையில்.

அதன்பின் அந்த விபத்து. லாஜுதான் காரை ஓட்டினாள். முன்னிரவு. பாகீரதிக்கான பயணச்சீட்டுப் பற்றி விசாரிக்கப் போய்க் கொண்டிருந்தனர். அவர்கள் முன்னால் ஒரு கார் வழுக்கிக் கொண்டு போய்க்கொண்டிருந்தது. சடேரென்று மின்னல் அடித்தாற்போல் ஒரு பையன் பாய்ந்தான். முன்னால் போன கார் குலுங்கி வீறிட்டு நின்றது. ஒரு வயதான வெள்ளையர் வெளியே விரைந்து வந்தார்.

இந்தியப் பையன்.

முகத்தில் சாம்பல் பூக்க ஆரம்பித்து விட்டது. ''மா....மா....'' என்று முனகினான்.

''திடீரென்று கடந்தான் தெருவை. என்னால் நிறுத்த முடியவில்லை. நான் என்ன செய்வது? ப்ளீஸ், நான் என்ன செய்வது?'' என்று அரற்றினார் வெள்யைர்.

லாஜு, பையனின் நெற்றியைத் தடவினாள். அவன் தாத்தா பாட்டி பிறந்து வளர்ந்த கிராமம், சோள ரொட்டி சுடச்சுட, வெண்ணெய் உருக நெய் மணக்கும் கடுகுக் கீரை மசியல்..... காற்றில் ஆடும் நெற்பயிர், பஞ்சாபி ட்டப்பா பாட்டின் ஒரு வரி .....இல்லை, ஒரு வண்ண துப்பட்டா, அவன் அப்பாவின் அவிழ்ந்த முடி, அவருடைய பருத்த தொந்தியில் முறுக்கிப் படுத்திருந்த கனத்த நாடா முடிச்சு..... என்ன அவன் மனதில்?

''மா ... மேரி.... மா...''

ஆம்புலன்ஸ் வந்து அவனை ஏறூறும் போது அவன் உடல் கடைசியாக முறுக்கிக் கொண்டு துள்ளியது.

யாரையோ வைதவாறே தன் 'ஸ்டீயரிங் வீலில்' அடித்தாள் லாஜு.

அந்த விபத்து அவர்கள் கழித்திருந்த அந்த நாளின் தன்மையை ஒத்ததாகவே இருந்தது. சாம்பல், சாவு, அறுபடல், தனிமை இவற்றுக்கெல்லாம் குழைத்துப் பூசியதாய்.

அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. எதிர்கொள்ள ஒரு கனத்த மாலை இப்போது. இவன் ஒரு புத்தகத்துடன், லாஜு தன் தட்டச்சு இயந்திரத்தின் எதிரே வேலை செய்தவாறு.

லாஜு திரும்பி, ''பியர் குடிக்கலாமா?'' என்றாள்.

''இந்த குளிரில் பியர் யாரால் சாப்பிட முடியும்? ரம் இல்லையானால் வோட்கா''.

எழுந்து, ''எனக்கு பியர்தான் பிடிக்கும். நான் ஒரு பைன்ட் பியர் வாங்கி வரப்போகிறேன்' என்று விசுக்கென்று கதவை நோக்கிப் போனாள், பிடி வைத்த ஒரு பாத்திரத்தைக் கையில பிடித்தபடி. ''இந்தியக் கலாசாரத்தின் முக்கியமான அம்சம் விருந்தோம்ல் தான். இது தெரியாமல் என்ன இந்தியக் கலாச்சாரத்தைப் பரப்புகிறாய்? என்று கத்தினாள் பாகீரதி அவள் முதுகைப் பார்த்து.

லாஜு கதவைப் படீரென்று உதைத்தாள்.

மீண்டும் கதவு திறந்தபோது பாகீரதி தலை நிமிரவில்லை. லாஜு தனியாக இல்லை என்ற உணர்வு ஏற்பட்டது. தலை நிமிர்ந்தாள். லாஜு அருகே சற்றுப் பருத்த, நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி நின்று கொண்டு புன்னகை செய்ய ஆரம்பித்திருந்தாள். உருண்டை முகம், சுருளே இல்லாத முடி. உலர்ந்தாற்போல் உதடுகள், கூரிய செதுக்கி வைத்த மூக்கு. கறுப்புக் கண்கள். அவள் ஒரு தன்மையைத் தாங்கி வந்தாற்போல் வெளியே பனி பெய்ய ஆரமபித்தது. ஜன்னலூடே பனிப் பஞ்சு மழை.

''இவள் காப்ரியேலா. இந்தியர்களை ரொம்பப் பிடிக்கும். உன்னைப் பார்க்க அழைத்து வந்தேன்'' என்றால் லாஜு.

காப்ரியேலா கதவருகே இருந்த மின்விளக்கு வெளிச்சத்தை விட்டு முன்னால் வந்து நாற்காலியில் அமர்ந்து புன்னகைத்தாள். தன் கையை நீட்டினாள். அதைப் பற்றிக் கொண்டு,

''ஹலோ, நான் பாகீரதி'' என்றாள்.

அந்தக் கண்கள். தாமரை பூத்த தடாகமடீ... என்று கட்டைக் குரலில் குழைந்த பாடல் மூளையில் ஒலித்துப் பரவியது. தாமரையின் தண்டைப் பற்றிக் கொண்டுவிட்டால் கீழே கீழே கீழே ஆழங்காணா இடத்துக்குக் கொண்டு போகும் உணர்வு.

பியர் பாத்திரத்தை மேஜையில் வைத்த பின்னர் காப்ரியேலாவின் மேல்கோட்டைக் கழற்றி வாங்கி மாட்டிவிட்டு, ''நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருங்கள். நான் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும்'' என்று தன் மேஜையை அடுத்த அறைக்குத் தள்ள ஆரம்பித்தாள் லாஜு. அறையை எட்டும் முன் பாகீரதியைப் பார்த்து, காப்ரியேலாவுக்கு புரியக்கூடாது என்பதற்காக ஹிந்தியில், ''விருந்தோம்பல் இந்தியப் பண்பாடு தான். ஆனால் எல்லா இந்தியர்களும் அதற்கு லாயக்கில்லை'' என்றாள்.

''சர்தான் போடீ''

''தமிழில் கெட்ட வார்த்தை கிடையாது என்று சொன்னாயோ?''.

''நீ நினைக்கும் கெட்ட வார்த்தை இல்லை இது''.

லாஜு மேஜையை உந்தினாள்.

காப்ரியேலா இருவரையும் பார்த்தவாறிருந்தாள்.

பாகீரதி புன்னகைத்தாள் அவளைப் பார்த்து, ''அபிப்ராய பேதம்'' என்றாள். காப்ரியேலா கம்பளத்தில் அமர்ந்தாள். ''இந்தியர்கள் மாதிரி'' என்றவாறே. பாகீரதியும் கீழே உட்கார்ந்து கொண்டாள்.

அருகே குளிர்காய மின் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது.

தன் பையைத் திறந்து ஒரு வைன் புட்டியை எடுத்தாள். ''வைன் பிடிக்குமா?'' வெள்ளை வைன்.

''ரொம்ப....'' பாகீரதி மதுவை ஊற்றக் கோப்பைகளைக் கொண்டு வந்தாள்.

காப்ரியலோ ஊற்றினாள். இருவரும் கோப்பைகளை உயர்த்தினர். ''இந்த மாலைக்கு'' என்றாள் காப்ரியேலா.

கொஞ்சம் கழித்து, ''சில மாலைப் பொழுதுகள் ரொம்ப நீண்டு போகின்றன'' என்றாள் காப்ரியேலா. நெருப்பைப் பார்த்தாள். ''என் அம்மா பியானோ வாசிப்பாள். மாலையில், சில சமயம் என் அப்பா சீட்டி அடித்துப் பாடுவார் கூட....''

''லத்தீன் அமெரிக்காவின் எந்தப் பகுதி?''

''சிலே.''

சூடான இறகுடன் வைன் நரம்புகளை உரச ஆரம்பித்தது இதமாக. ''அவரவர் நாட்டை விட்டு வெளியே இருப்பவர்களுக்கு ஞாபகசக்தி தான் இதம். எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது என்று நான் நினைக்காத விஷயங்களெல்லாம் சில சமயம் நினைவுக்கு வருகின்றன. என் அம்மாவுக்கு முனை கூம்பிய நகங்கள். பியானோவில் வைத்த அவள் விரல்களை மட்டும் திடீரென்று ஒருநாள் நினைத்துக் கொண்டேன். என் அப்பாவின் சாக்லேம் றி ஷ¥வின் முடிச்சுப் போடும் இடத்தருகே ஒரு மடங்கல் விழும்....''

''அங்கே போவதுதானே நீ காப்ரியேலா?''

அவள் வைன் கோப்பையை வைத்து விட்டுத் தன் கைப்பையைத் திறந்தாள். தன் பாஸ்போர்ட்டை எடுத்துப் பாகீரதியிடம் வந்தாள். அது ஒரு ஐநா பாஸ்போர்ட். அவள் பிறந்த வருடத்தைப் பார்த்தாள். 1956 அவள் வயது இருபத்தைந்து தான். அவளைப் பார்த்தவுடன் சிரித்தாள். ''ஆமாம். அது சரியான வருடம் தான்'' என்றாள்.

''நான் ஒரு அரசியல் அகதி'' என்று விளக்கினாள்.

பாஸ்போர்ட்டில், அவள் எல்லா இடங்களுக்கும் போகலாம். சிலேயைத் தவிர என்றிருந்தது.

காப்ரியேலா தன் கோப்பையை நிரப்பிக் கொண்டாள்.

அவர்கள் கைதானது இரவு நேரத்தில். எட்டுப் பேர்கள். பதினெட்டு பத்தொன்பது வயதுக்காரர்கள். அர்ஜன்டீனாவுக்கு அவர்கள் தப்பி வந்து ஒரு மாதமாகி விட்டிருந்தது. சிலேயில் ஒரு மத்தியானம் அந்த எச்சரிக்கை அவர்களில் ஒருவர் காதில் கிசுகிசுக்கப்பட்டது. ''தப்பி ஓடுங்கள்'' கிட்டத்தட்ட ஐம்பது மாணவர்களைக் கைது செய்தாகிவிட்டது என்ற வதந்தி பரபரவென்று பரவியது. லூயிஸ¤ம் காடலீனாவும் டீ குடித்துக் கொண்டிருந்த அவளை எழுப்பிக் கொண்டு போனார்கள்.

பெளலா, யார்கே, யோஸே, தெரீஸா, ஆல்வாரெஸ் எல்லோரும் சற்று வெளுத்த முகங்களோடு பல்கலைக் கழகத் தெருமுனையில் நின்று கொண்டிருந்தார்கள். யோஸேயின் கண்கள் சிவந்திருந்தன. உதடுகள் துடித்தன. அழுதுவிடுவான் போலிருந்தது.

''நான் வெறும் துண்டுப் பிரசுரங்கள் தானே வினியோகித்தேன்?'' என்றான். அவன் குரல் நடுங்கியது. ''போலீஸிடம் உள்ள பட்டியலில் நம் பெயர்கள் கட்டாயம் இருக்கும். போன மாதம் போராட்டம் நடந்த போது முன் வரிசையில் நாம் எல்லோரும் இருக்கவில்லையா?'' வா, சீக்கிரம்,'' என்று சிடுசிடுத்தான் யார்கே.

அவள் பெளலாவைப் பார்த்தாள். ஒரு சின்னத்தோள் பை நிரப்பப்பட்டு அவள் தோளில் தொங்கியது. அவள் வீட்டுக்குப் போய் ஒரு சின்னப் பையில் வேண்டியதை நிரப்பிக் கொண்டு கிளம்ப மொத்தம் பதினைந்து நிமிடங்கள் தான் எடுத்துக் கொள்ள முடியும் என்றார்கள். பயத்தில் விக்கித்துப் போயிருந்த அம்மாவின் சில்லிட்டுப் போன கன்னங்களில் அசரமாக முத்தமிட்டு அவள் கிளம்பிய போது அந்த மாதத்தின் ரத்தப்பெருக்கு இறங்கத் தொடங்கியது. மீண்டும் உள்ளே ஓடி அதற்கான சாமான்களைச் சேகரித்தாள்.

அடுத்த தெருமுனையில் மற்றவர்கள் பொறுமை இழந்திருந்தனர்.
அவள் அதிக நேரம் எடுத்துக் கொண்டது பற்றி விவாதித்தவாறே வேகவேகமாகப் பல தெருக்களில் பிரிந்து போயும், சேர்ந்தும் நடந்தபோது, சிலேயில் கடைசித் தடவையாக நடத்துகிறோம் என்று அவள் நினைக்கவில்லை. எல்லாத் தீர்மானங்களும் எடுத்த வேகம், அமமாவின் சில்லென்ற கன்னம், நடந்து, ஓடி, பஸ்ஸில், ரயிலில் தாவி ஏறி, தூங்கி, இறங்கி, சிலேயின் எல்லையைக் கடக்க வேண்டிய அவசரம் - இவற்றிடையே அதிகமாகச் சிந்திக்க முடியவில்லை. நான்காம் நாள் கலை அவர்கள் அர்ஜன்டீனாவை அடைந்தனர். கடைசியாக தரிசு நிலம் ஒன்றின் மூலையில் சிதிலமாகக் கிடந்த வீட்டில் குடியேறினர். தற்காலிகமாக, சிலே போலீஸாரின் நீள்கரங்கள் அவர்களை எட்டும்வரை. வேறு வேறு பிரிவுகளில் படித்த அவர்கள் இப்போது நெருக்கமானார்கள். மற்றவர்களைப் பற்றி நினைக்க, பேச, மெளனிக்கக் கற்றுக் கொண்டார்கள். யோஸேயின் சின்னத் தங்கைக்குப் பிடித்த சிகப்பில் மஞ்சள் மலர் பதித்த தலைக்குல்லாய் முதல் காடலீனாவின் நண்பன் தந்த சுவையற்ற முதல் முத்தம் வரை அந்தரங்கங்கள் பொதவாகிப் போயின. அவர்கள் வினியோகித்த துண்டுப் பிரசுரங்களின் விவரங்கள், அர்ஜன்டீனாவின் பத்திரிகைகள் எழுதியவை, எழுதாமல் விட்டவை இவற்றிலிருந்து கிரகித்த சேதிகள் பற்றிய அபிப்பிராயங்கள் என்று நிறையப் பேசிக் கொண்டனர்.

கைதான அன்று அவர்கள் மாணவர் தலைவன் அன்டோனியோ பற்றிப் பேசியிருந்தனர். அவர் பொறியியல் பிரிவின் கடைசி ஆண்டுப் படிப்பில் இருந்தான். யார்கேயைத் தவிர அவனை யாரும் பார்த்ததில்லை. அவன் எழுத்துக்களைப் படித்திருந்தனர். யார்கே அவனை ஒரு முறை பார்த்திருந்தான். ஒரு கூட்டத்துக்குப் பின் பலர் அன்டோனியோவின் பின்னால் அவன் அறைக்குப் போனபோது யார்கேயும் போனான். அன்டோனியோ மிக மிருதுவான குரலில் பேசினான்.

''அன்டோனியோ, உன் படிப்பு முடிந்ததும் உனக்குக் கட்டாயம் அமெரிக்காவில் வேலை கிடைக்கும். ஏன் நீ இதை எல்லாம் செய்கிறாய்'' என்றான் ஒரு மாணவன்.

''எனக்கு பயமில்லாமல் வாழ வேண்டும். ஒரு சாதாரண பிரஜைக்கு உரிய கெளரதையுடன் இருக்கும் அடிப்படை உரிமை எனக்குத் தேவை. அதனால் தான்'' என்று பதிலளித்தான் அன்டோனியோ.

''எனக்கு ரொம்ப பயமா இருக்கிறது. அன்டோனியோ'' என்றான் இன்னொருவன் வெளிப்படையாக.

அன்டோனியோ சிரித்தான். ''நண்பனே, நான் பெரிய வீரன் இல்லை. ஒரு கூட்டத்தில் அந்தப் போலீஸ் அதிகாரி சாதாரண உடையில் வந்திருந்தார். ஒரு கணம் நான் அந்த உயிரற்ற, உணர்ச்சிகள் மழுங்கிய கண்களைச் சந்தித்தேன். நிஜமாகச் சொல்கிறேன். என் முதுகுத் தண்டு ஜில்லிட்டுப் போயிற்று. ஒரு அறையில் இவர் என் எதிரில் இருந்தால் என்ன ஆகும் என்று நினைத்தபோது வியர்வை பொங்க ஆரம்பித்தது. தலையில் பாரம் அழுத்தியது. எனக்குப் பயம் இல்லை என்று நினைக்காதே. நானும் பயப்படுகிறேன். அடிப்பட்டால், குண்டு துளைத்தால், சித்திரவதை செய்யப்பட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்து காதலிக்கப் பயப்படுகிறேன். அவளை ஆபத்தில் தள்ளக் கூடாதே என்று பயப்பட வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம்''.

பேசியவாறே யதேச்¨யாகத் திரும்பியபோது யார்கேயின் மேல் பார்வை பட்டது. பிறகு அவன் கண் பார்வை வேறுபக்கம் திரும்பி விட்டது.

அந்த ஒரு முறை தான் யார்கே அன்டோனியோவைச் சந்தித்தது. அவன் பிடிபட்டுவிட்டான் என்ற சங்கதி அவர்களை எட்டியிருந்தது.

அந்த இரவு அதைப் பற்றித்தான் பேசினார்கள். பேசியவாறே தெரீஸா சுவரில் சாய்ந்து உறங்கி விட்டாள். எங்கு வேண்டுமானாலும் சுருண்டு படுத்து, உடனே உறங்கி விடுவாள் அவள்.

'ஒருவேளை நாம் பிடிபட்டால் நம்மை அடித்து வதைப்பார்களா யார்கே?'' என்றான் யோஸே மெல்ல.

யோஸேக்கு நிறையச் சிரிக்கப் பிடிக்கும். அடக்கமாட்டாமல் பொங்கிப் பொங்கிச் சிரிப்பான். அந்த மாதம் எல்லோர் கூந்தலையும் அவன்தான் வெட்டியிருந்தான். அவன் வீட்டுப் புல்தரையை வெட்டுவதுபோல் வெட்டித் தள்ளியிருந்தான். பதிலுக்குக் காடஸீனா அவனை மொட்டையாக்கியிருந்தாள். இப்போது அவன் கேள்வி கேட்ட போது மொட்டைத் தலையுடன் குழந்தை போலிருந்தான். அவன் புறங்கழுத்து ரோஜா வண்ணத்தில் சிறு பையனுடையது போல இருந்தது. யார்கே அவன் தலையைத் தடவினான் செல்லமாக.

அந்த இரவுதான் அவர்கள் பிடிபட்டார்கள். அவர்கள் உரக்கக் கத்தி எதிர்த்தும் அவர்கள் பிரிக்கப்பட்டனர். தெரீஸாவின் அந்த அகன்ற, பயந்த தூக்கம் கலந்த கண்கள்; பெளலாவின் வெளுத்த முகம்; ஒருகணம் நடுங்கிய யோஸோவின் உடல்; இழுக்கப்படும் ஓசை, கத்தல்கள் இவை எல்லாம் அவர்கள் கடைசியாகப் பகிர்ந்து கொண்ட கணங்களின் துளிகள்.

அப்புறம் அந்தச் சிறு சதுர அறை. அதில் நூறு பெண்கள், விபசாரிகள், கொலைகாரிகள், திருடிகள், அரசியல் கைதிகள், உட்காரக்கூட இடம் இல்லை. நின்றவாறே உறக்கம், வீக்கம் ஏறிய கால்கள். போலீசார் பலாத்காரம் செய்த விபசாரியின் ஐந்த மாதக் கரு அந்த நெருக்கத்தில்தான் வெளிப்பட்டது சிதைந்து. வலியில் அவள் ஒருமுறை வீறிட்டாள். பின்பு அவள் இரத்தம் காப்ரியேலாவின் மேலும், அடுத்திருந்தவர்கள் மேலும பீறிட்டுப் பீச்சியடித்தது. அந்தப் பாதி உருவான கருவை காப்ரியேலா இன்னும் மறக்கவில்லை. அது கொழுகொழுவென்று இருந்தது. மாவு மாதிரி. தட்டையான வழுக்கல் தலையில் துருத்திய மூடின கண்கள். கோணலாய் நீண்ட கை போன்ற ஒன்று. அதன் பெண்குறி ஒரு சிறு கீறல்.

அந்தக் கேள்வி நேரங்கள்.

ஒரு கருணையான இன்ஸ்பெக்டர். ஒரு கொடுமைக்கார இன்ஸ்பெக்டர்.

மாறிக் மாறிக் கேள்விகள்.

அன்டோனியோவை உனக்குத் தெரியுமா?

நான் அவனைப் பார்த்ததில்லை.

அவன் உன் நண்பனா?

இல்லை.

நீ அவனுடன் படுத்திருக்கிறாயா?

.........................

அவள் அவனைப் பார்த்தே இல்லையே இன்ஸ்பெக்டர், இது என்ன கேள்வி?

நீ நல்ல பெண். நல்ல பையனைக் கல்யாணம் செய்து கொண்டு இருக்க வேண்டியவள். என் தங்கையின் சாயல் உனக்கு. உண்மையைச் சொன்னால் உன்னை அனுப்பி விடுவோம்.

முகத்தில் சுளீரென்று மின்விளக்கின் வெளிச்சம்.

மீண்டும் கேள்விகள். அன்டோனியோ எங்கே? அன்டோனியோ பிடிட்டான் தெரியுமா? அவன் சிறையில் இறந்து விட்டான். அவளுக்குச் சேதி வந்ததா? எப்படி? இப்போது அவர்கள் தலைவன் யார்?

வெந்நீரிலும் குளிர்ந்த நீரிலும் மாறிமாறித் தலையை முக்கி எடுத்தல். கேள்விகள். யார் நல்ல, இன்ஸ்பெக்டர், யார் கொடுமைக்காரன் என்ற குழப்பம்.

இரண்டு ஆண்டுகள். அதன்பின், மனித உரிமைக்காகப் போராடும் ஒரு அகில உலக ஸ்தாபன முயற்சியால் விடுதலை.

சிறையின் வெளியே அவள் வந்தபோது அப்பாவும், அம்மாவும் நின்று கொண்டிருந்தனர். மிலிடரி மேஜராக இருந்து ஓய்வுபெற்ற, தடித்த மீசை அப்பா குரலெடுத்து அழுததை வாழ்க்கையில் முதல் முறையாகப் பார்த்தாள்.

விவரங்கள் : தெரீஸா ஆரம்ப போலீஸ் பலாத்காரத்திலிருந்து மீளவில்லை. யோஸேக்குப் பயத்தில் மார்வலி ஏற்பட்டு மரணம். காடலீனாவும், பெளலாவும் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று கூறப்பட்டது. லூயிஸ் விடுதலை ஆகிவிட்டான். ஆனால் மனநோய் விடுதியில் இருக்கிறான். யார்கேயின் சடலம் கண்கள் தோண்டப்பட்டு, கை கால்கள் வெட்டப்பட்டு ஒரு சாக்கடையில் கிடைத்தது.

நொடியில் உறங்கிப் போகும் தெரீஸா, லூயிஸின் தோளில் நினைத்த போதொல்லாம் தலைசாய்த்துக் கொஞ்சும் காடலீனா, பாப்பா என்று வேடிக்கையாக அழைக்கப்பட்ட சிரிக்கும் யோஸே, அவர்கள் வயதே ஆன, ஆனால் அப்பா போல் நடந்து கொண்ட யார்கே, எந்த இக்கட்டான நிலைமையிலும் சாப்பிட ஏதாவது எற்பாடு செய்துவிடும் ஆல்வாரெஸ் - அவர்கள் எல்லோருக்குமாக அவள் அழுதாள். லூயிஸைப் பார்க்க அவள் அனுமதிக்கப்படவில்லை. அம்மாவிடம் அவனைப் பார்க்கப் போகும்படிச் சொன்னாள். சிவப்பு ரோஜாக்கள் எடுத்துப் போகச் சொன்னாள். அவனுக்கும், காடலீனாவுக்கும் பிடித்தவை.

பிறகு இங்கு அனுப்பப்பட்டாள். மொழி புரியாத உலகுக்கு.

காப்ரியேலா ஏறிட்டுப் பார்த்தாள். ''சிறைக்குப் போகும் முன் நான் துப்பாக்கியைத் தொட்டதில்லை. அப்பா தனது துப்பாக்கியைச் சுத்தப்படுத்தும் போது பார்த்தது தான். யாரையும் என்னால் கொல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை. சிறைக்கு வெளியே வந்தபின் நான் அடிக்கடி நினைத்தேன், அந்த இரு இன்ஸ்பெக்டர்களையும் சுட வேண்டுமென்று. அவர்கள் நெஞ்சில் குண்டு துளைக்க, அல்லது தலை வெடித்துப் போகச் சுட வேண்டும் என்று கறுவினேன்''.

கண்ணாடி ஜன்ன்ல்களைப் பனி மூட ஆரம்பித்துவிட்து. லாஜு கம்பளத்தில் வந்து அமர்ந்திருந்தாள். எவ்வளவு நாழிகையாக என்று தெரியவில்லை.

காப்ரியேலா சிரித்தவாறே சொன்னாள். ''என் அப்பா அமமாவைப் பார்க்க ரொம்பத் துடிக்கிறது. என் அம்மா தன் முன் தலை நரைத்து விட்டது என்று எழுதினாள் ஒரு கடிதத்தில். நான் உடனே கடைக்கு ஓடி விலை உயர்ந்த தலைச்சாயம் வாங்கி அனுப்பினேன். அவளை நான் எப்போதாவது பார்த்தால் முன்போலவே பார்க்க விரும்புகிறேன். மாறுதலே இல்லாமல், வயதாகாமல்''.

சட்டென்று அவளுடைய தேன் நிற முடியைப் பார்த்தாள் பாகீரதி. கற்றை கற்றையாக நரை. வெளியே காத்து நின்ற அவளுடைய அம்மாவானாள் பாகீரதி. தேன் அருவியில் கூந்தலுடன் பியானோ அருகே செழுமைக் கன்னங்களோடு நின்ற பதினெட்டு வயதுப் பெண்ணைச் சிறைக்கு அனுப்பிய அம்மா, அவள் சிறையின் கதவில் கண் பதித்து நின்றபோது சிறையிலிருந்து முதல் அடி வெளியே வைத்த இருபதே வயதில் வயதான, உடல் கனத்துச் சிதைந்த ஒரு பெண். தேன் நிறக் கூந்தலெங்கும் வெள்ளை வரிகள்.

பாகீரதி அவள் கூந்தலைப் பார்த்தாள். அவள் பார்ப்பதை உணர்ந்தது போல் தன் கூந்தலில் விரல்களை விட்டு அளைந்தாள் காப்ரியேலா. புன்னகைத்தாள்.

(அம்பையின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை' என்ற சிறுகதை தொகுதியிலிருந்து......)

**********

விலாங்கு - நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன்

கள்ளிவெட்டிப் போட்டு ஒரு மணி நேரமாவது இருக்கும். துண்டு துண்டாக, இரண்டங்குல கனத்தில் திருகுக் கள்ளிகள் குட்டையாகத் தேங்கிக் கிடந்த தண்ணீரில் மிதந்தன. சில துண்டுகள் வெட்டுப்பட்ட வெள்ளை சோற்றுப் பாகத்தைக் காட்டிக் கொண்டு, சில ஜோடி ஜோடியான முள்முனை வரிசைகளை மாட்டுக் கொம்புகள் போல் நீட்டிக் கொண்டு கால்மாடு தலைமாடாக வசமில்லாமல் கிடந்து உறங்கும் பிள்ளைகள் போல் குட்டைத் தண்ணீர் முழுக்க மிதந்தன.

நல்ல நடுமத்தியானம். புன்னை மரக்கிளை களின் ஊடாக நங்கூரம் பாய்ச்சிய சூரியக் கற்றைகள் தண்ணீரைச் சூடாக்கிக் கொண்டிருந்தன. கள்ளிப்பால் பரவலாக தண்ணீர் முழுக்கப் பரந்து தண்ணீருக்கு ஒரு வெளுப்பு நிறத்தைக் கொடுத்தது. கள்ளிப் பாலின் வாடையும் வெக்கையும் சுற்றுப் புறத்தில் காரமாக வீசியது.
nanjil-nadan
வெளியே எங்கும் நல்ல வெயில் காய்ந்தது. வற்றல், வடகம் உணக்குவதற்கு ஏற்ற வெயில். ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லை. நிலம் மழைக்காகக் காய்ந்து கிடப்பதால்  வரப்போரப் புல்லை, அவிழ்த்து விடப்பட்ட பசுமாடுகள் கரப்பிக் கொண்டிருந்தன... காளையும் பசுவும், கன்றுமாக... தூரத்துக் கடுக்கா மர மூட்டின் கீழே சகதிபட்டுக்கிடந்த கால்வாயில் இரண்டு எருமைகள் வசமாய்ப் புரண்டு கொடுத்தன. கொம்பில் முன் உச்சி மண்டையில் தொழி அப்புவதை அலங்காரம் நடப்பது போல் கருதிக் கொண்டு சுகம் பெற்றன.

ஒன்றரை மணிக்கூருக்கு ஒரு பஸ் வீதம் வந்து போகும் கீல் ரோடு அது. ரோட்டின் தாழ பதினைந்தடி அகலமுள்ள வாய்க்கால், வாய்க்கால் தண்ணீர் ரோட்டின் அடியோடு பாய்ந்து போவதற்கு, குறுக்காகச் சிறிய பாலம். ஓராள் தலைதட்டாமல் நடந்து போகும் உயரமும் ஐந்தடி அகலமும் கொண்ட சுரங்க வழி போல, சுரங்கத்தில் ஓடிய தண்ணீர் வெளிச்சத்தில் வந்து விழும் இடத்தில் மண் பறிந்து பறிந்து சிறிய குட்டைபோல் பள்ளம் விழுந்திருந்தது. பள்ளத்தில் கரடு முரடான கருங்கல் துண்டுகள், கால்வாய்ப் பாலத்தின் இரண்டு விலாப் பக்கமும் செங்கல் மதில் சிறகுகள் சாய்வாக, எந்த ஆண்டில் கட்டப்பட்ட பாலமோ? செங்கல் வரிசைகளின் ஊடே எத்தனையோ இடுக்குகள்! புடைகள்!
கால்வாயின் இருபுறமும் புன்னைமரம் சரிவாக வளர்ந்து செழித்திருந்தது. குழியின் ஆழமும், கல்இடுக்குகளும் புடைகளும், ஓரங்களில் வளர்ந்திருந்த சேம்பிலைப் புதர்களுமாய் விலங்குகளுக்கும் மற்ற சில்லறை மீன்களுக்கும் நல்ல உறைவிடம் அமைத்துத் தந்தது.
நல்லமழை பெய்யும் மாதங்களானால், 'திமுதிமு' வென கால்வாயில் வெள்ளம் புரண்டு மறியும். கல்லில் மோதும், வெள்ளத்தின் வேகத்தில் பிரிந்த நீர்துளிகள் ரோட்டில் இருந்து குனிந்து பார்ப்பவரின் முகத்தில் 'சில்' லென்று தெறிக்கும்.

ஆனால் இது மழையற்ற மாதம். அக்கினி நட்சத்திரம் தீட்டிக்கொண்டிருந்தது. பெரிய குளத்தில் இன்னும் கால்குளம் வெள்ளம் கிடந்ததால் கால்வாயில் எப்போதும் ஒரு கசிவு உண்டு. நீர் கலங்கிக் கிடந்தாலும், ஆடுமாடுகள் இறங்கி மேய்ந்து தொழி பறிந்து நாற்றம் எடுத்தாலும் மீன்களின் துள்ளாட்டத் துக்குக் குறைவில்லை. பாலம் முடியும் இடத்தில் இருந்து இருபது முப்பது அடிநீளத்துக்கு இருகரையும் சேம்பு, கோரை, நீர் முள்ளி என ஏகமாய் சப்பும் சவறும் வளர்ந்து கிடந்தது.

பாலத்தின் முன்புறம், கால்வாயின் குறுக்கே முன்னணை கட்டி கசியும் தண்ணீரைத் தேக்கி இருந்தனர் பிலிப்பும் தவசியும். நல்ல திடமான அணை. ஒரு பொட்டுத் தண்ணீரும் கீழே கசியாது. இறை வட்டி கொண்டு வத்து பாலத்துக்குக் கீழிருக்கும் குண்டில் தேக்கிக் கிடந்த தண்ணீரை இறைத்து வெளி யேற்றினர். சுமாராக ஒரு பின்னணையும் போட்டாயிற்று.
தூரத்து வேலிகளில் இருந்து, தொண்டு விழாமல், பாலுள்ள இளம் திருகுக் கள்ளிகளாக வெட்டி கவையால் தூக்கி, கம்பில் வைத்து இருகரையும் தோள் போட்டு தூக்கிக் கொண்டு வந்தார்கள் பிலிப்பும் தவசியும். இடுப்பு வேட்டியில் கொளுவிப் போட்டிருந்த வெட்டுக் கத்தியால் கள்ளிக் கவிர்களைச் சீவிச்சீவி குட்டைத் தண்ணீரில் எறிந்தனர்.

திரட்டு வரப்பின் மேல், புன்னைமர நிழலில் அமர்ந்து உள்ளங் கையில் ஒட்டிக் கறுத்து பிசின்போல் ஆகி இருந்த கள்ளிப்பாலை நகத்தால் சுரண்டி எடுத்தான் தவசி. முந்தியில் இருந்த பீடிக்கட்டையும் தீப்பெட்டியையும் எடுத்து பீடியைப் பற்ற வைத்து ஒரு இழுப்பு புகையும் விட்டபின் ஒரு பீடியையும் தீப்பெட்டியையும் தவசியிடம் எறிந்தான் பிலிப்பு.
பின்னணையை ஒட்டி இறைவட்டி, மண்வெட்டி, வெட்டுக்கத்தி, கவைக்கம்பு எல்லாம் சிதறிக் கிடந்தன.

அந்தப் பக்கமாய் பாலத்தின் மேல் வழி நடந்தவர்கள் இரண்டு நிமிடம் நிழலில் நின்று வேடிக்கை பார்த்துவிட்டுப் போயினர். சிலர், ''என்னலே? விலாங்க புடிக்கேளா?" என்று ஒரு கேள்வியை கேட்டுவிட்டுப் போயினர். இரண்டு மாடு மேய்ச்சிப் பையன்கள் கையில் இருக்கும் கம்பை பாலத்துச் சுவரில் தட்டியபடியே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். கோடை விடுமுறை ஆனபடியால் பள்ளியில் படிக்கும் இரண்டு சிறுவர்கள் தவசியிடம் இருந்து சற்றுத் தள்ளி குத்த வைத்து உட்கார்ந்து ஆர்வமாய் குட்டைத் தண்ணீரையே கவனித்துக் கொண்டிருந்தனர்.

வெயில் ஏறி தண்ணீர் சுட ஆரம்பித்தது. அசையாது நிற்கும் தண்ணீரில் திட்டாக விழுந்த கற்றைகள் கள்ளிப்பாலின் போதையோடு தகிப்பையும் மீன்களுக்கு ஏற்றிக் கொண்டிருந்தது.
மணி இரண்டுக்கும் மேலிருக்கும். பால் படர்ந்திருந்த தண்ணீர்ப் பரப்பில் சிறுசிறு அசைவுகள், குமிழ்கள் தோன்ற ஆரம்பித்தன. கள்ளிப்பால் கலந்த தண்ணீர் குடித்த போதையில், கிறக்கத்தில் சின்னச் சின்ன மீன்கள் வெளியேறத் துவங்கின. வாயை தண்ணீரின் மேல் மட்டத்துக்கு உயர்த்திப் பிடித்து, மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டு, திக்கும், திசையும் இழந்து, கண் பஞ்சடைந்து...

பின்னணையின் கீழே, பிடிக்கும் மீன் களைப் போட்டு வைப்பதற்காக, மண் வெட்டியால் சிறிய குண்டு தோண்டினான் தவசி. தண்ணீர் சிறிது ஊறியது. பிடித்த மீன்கள் செத்துவிடாமல் இருக்க இந்த ஏற்பாடு. வெட்டுக்கத்தியால் இரண்டு புன்னைமரச் சல்லிக்கிளைகளை வெட்டி குண்டின் பக்கத்தில் வைத்தான். பிடிக்கப் பட்ட மீன்கள் துள்ளி விழுந்து வெளியேறாமல் இருக்கவும், அவற்றை வெயில் கண்டமானம் தாக்காமல் இருக்கவும் இது உதவும்.
தண்ணீர்ப் பாம்பு ஒன்று துள்ளி விழுந்து ஓடியது. ''பே'' என்று விளையாட்டாகக் கூச்சலிட்டுச் சாடினான் தவசி. வேடிக்கை பார்த்திருந்தவர்கள் சிரித்தனர்.
கள்ளிப்பால் போதையில் மீன்கள் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்தன. தண்ணீர் அதிகம் அலுங்காமல் உடைந்த பானையின் வயிற்றுப் பாகத்தால் தேக்கத்துக்கு பின்புறம் காட்டி கால்களை அகற்றி நின்று குனிந்து பின்னணைக்கு வெளியே தண்ணீரை இறைத்துத் தள்ளினான் பிலிப்பு.

தண்ணீர் வற்ற வற்ற சிறுசிறு மீன்களின் அனக்கங்கள் தெரிந்தன. பெரிய மண்டையும் சூம்பிய உடலுமாக அசிங்கமாய் இளித்துக் கொண்டு வந்தது ஒரு உளுவை.
''கண்டார... நீயா முதமுதல்லவாறே...'' என்று ஏசிக்கொண்டு அதை அப்பிப்பிடித்து குழிக்குள் எறிந்தான் பிலிப்பு. வெளியே இறைத்த தண்ணீரோட சில மீன்கள் விழுந்து மணலில் துடித்தன.

இறவையை நிறுத்திக்கொண்டு மீன்களை அரிக்க ஆரம்பித்தனர். துள்ளத் துடிக்க உளுவை, கயிலி, சிலேபியாக் கெண்டை, ஆராங்கு, சள்ளை, அயிரை, கிளாத்தி...
''தேவ்டியாவுள்ளா..'' என்று காட்டமாய் வைது கொண்டு கிளாத்தி ஒன்றின் சங்கை நெருக்கிப் பிடித்து மீசைபோல் நீட்டி நின்ற முள்ளை முறித்து குழிக்குள் எறிந்தான். இந்த ஆற்று மீன் குளத்து மீன்களிலேயே கிளாத்தி ஒன்றுதான் சண்டாள மூதி, தண்ணீரில் ஆயும் போதே மின்னல்போல் துடித்துக் கொண்டு நிற்கும். அப்பிப் பிடிக்க முயன்றால் முள்ளால் கணிசமாக ஒரு போடு. போதும் மூன்று நாளைக்கு.

சிறுசிறு மீன்கள் எல்லாம் குழியினுள் நிறைந்தன. ஆனால் பிலிப்பும் தவசியும் பதினோரு மணியில் இருந்து மெனக்கெடுவது இவற்றுக்காக அல்ல.

பத்தரை மணிக்கு பாலக்கலுங்கில் உட்கார்ந்து தவசி பல்லைக் கிளைத்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த பிலிப்புதான் கேட்டான்.

''என்ன மாப்பிளே? சோலி ஒண்ணும் இல்லையா? சொகமா பல்லு குத்தலு ஆகு...''
'ஒண்ணுங் கோளு இல்லடே...''

''பாக்கியம் பிள்ளைக்கு ஒரு பின்னைமரம் தறிக்கணுமாம். போவமா?''

''அந்த நசுநாறிக்கு சோலிசெய்யதைவிட எங்கிணயாம் தேனை வாங்கீட்டு போலாம்..''

''ஏம்லே? பணம் தரமாட்டாரா?''

''பண்ணிக்குப் பொறந்த பய, மனுசனா அவன்? மூணு ரூவா பேசிக்கிட்டு ரெண்டரைதான் தருவான். மத்தியானம் தாற கஞ்சியை மாடுகூட குடிக்காது... நொளு நொளுண்ணு மொரைச்சுகிட்டு நிக்கும்... கேட்டா நக்கித் தாயளிக்கு வாற கோவத்தைப் பாக்கணுமே...''

''சரி பின்ன விடு. இங்கிண பாலத்துக்குக் கீள கள்ளி வெட்டிப் போட்டா என்னா? மொறட்டு விலாங்கு ஒண்ணு கெடக்கு பாத்துக்கோ... அண்ணைக்கு எனக்க தூண்டி முள்ள அத்துக்கிட்டுப் போயிட்டு...''

''அண்ணைக்கு யாரோ அணை போட்டிருந் தாளே?''

''அதா? மேல தெவக்கம் ஒண்ணு ஒடச்சு வந்து எல்லாம் போச்சி..''

''அப்பம் வெட்டுக்குத்தி, மம்பெட்டி, கவக்கம்பு, எறவட்டி எல்லாம் வேணும்லா?''

''நீ அவுரு முடுக்கு வேலப்பன் கிட்டே போயி மம்பெட்டியும் வெட்டுக்குத்தியும் வாங்கீட்டு வா.. நம்ம ஆவரான் சித்தப்பா கிட்டே எறவட்டி கெடக்காண்ணு பாக்கியேன்...''

மற்ற மீன்களோடு சுண்டுவிரல் கனமும் இளஞ்சிவப்பு நிறமும் உள்ள சில விலாங்குக் குட்டிகளும் நீந்தின.

கரையிலிருந்த பையன்களில் ஒருவன், ''அண்ணா ஓடுகு...'' அண்ணா ஓடுகு... என்று விரல் தூண்டிக் காட்டினான். தவசியும் பிலிப்பும் விலாங்குக் குட்டிகளை கருணையோடு விட்டனர். பருவட்டாகப் பார்த்து மற்ற மீன்களைப் பிடித்த பிறகு, வெள்ளத்தை வேகமாக இறைத்து வெளியேற்றினான் தவசி. கையில் சிறு கம்பினால் சேம்பிலை, நீர் முள்ளிப் புதர்களைக் கலைத்தான் பிலிப்பு.

முழுநீளமும் முழங்கைக் கனமும் கொண்ட விலாங்கு ஒன்று தள்ளாட்டம் போட்டு வெளியே வந்தது. கையால் கோரிக் கரையில் எறிந்தான் பிலிப்பு. மணலில் விலாங்கு புரளும் போது மேலும் மணல் புரட்டி தோல் மீதுள்ள வழுவழுப்பைப் போக்கி பழைய பானை ஒன்றில் போட்டு மூடி வைத்தான் தவசி. பிலிப்பு வேறொரு விலாங்கோடு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தான். கையில் அகப்படாமல் வளைந்தும் வழுக்கியும் ஓடியது அது. பிலிப்புக்கு - இந்த வேடிக்கை பார்க்கும் கூட்டத்தின் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தும் விலாங்கின் மீது கேபாம் வந்தது. கேவலமான கெட்டவார்த்தை சொல்லி ஏசிவிட்டு வெட்டுக்குத்தியை கையில் எடுத்தான். வாக்கான இடத்தில் நின்று கொண்டு தண்ணீருக்குள் வெட்டுக்குத்தியை சாய்வாகப் பாய்ச்சிக் கோரி விலாங்கைக் கரையில் எறிந்தான். முழங்கால் பருமனும் இரண்டு முழம் நீளமும் இருக்கும். நல்ல ஏந்தின வெட்டு. சப்பையான வாலை மண்ணில் போட்டு அடித்துக் கொண்டி ருந்தது விலாங்கு. ஒருவேளை பிலிப்பின் தூண்டில் முள்ளைக் கவ்வித் துண்டித்த விலாங்கு இதுவாகக்கூட இருக்கும்.
அன்று நல்ல கணிசமான வேட்டை. இறைவட்டி நிறைய உளுவை, கிளாத்தி, ஆராங்கு, கயலி, சிலேபியாக் கெண்டை... வாட்டமான பத்துப் பன்னிரண்டு விலாங்குகள். வெட்டுப்பட்ட பெரிய விலாங்கு ஒன்றே இரண்டு ரூபாய்க்குப் போகும்.

சாமான்களை எல்லாம் ஒதுக்கிக் கரையேற்றி, மேலணையும் கிழணையும் உடைத்துவிட்டு கை கால்களில் இருந்த தொழியைக் கழுவினர் இருவரும். கழுவிய கையை முகர்ந்து பார்த்து பிலிப்பு முகத்தைச் சுளித்தான்.

சுருட்டி வைத்திருந்த வேட்டியை எடுத்து அன்டர்வேருக்கு மேல் கட்டிக்கொண்டு பீடி பற்ற வைக்கும் போது ஊர்காவல் தேவர் வந்து எட்டிப்பார்த்தார்.

''என்னலே? எல்லாம் உங்க மனம் போலத்தான்... எவன் வேலியையாம் வெட்டிப் பிரிச்சுக் கள்ளி வெட்டி மீது புடிக்கது...''

''இல்லே பாண்டியரே...''

''என்ன இல்லே... சொள்ளமுத்துப் பிள்ளை நாக்கைப் புடுங்குக மாதிரி கேப்பாரே... அம்மா ஆத்தாண்ணு... நீயா வந்து பதிலு சொல்லுவே...?''

''தொண்டு விளாமத்தன் அஞ்சாறு கள்ளி வெட்டினோம் பாத்துக்கிரும்...''

''அஞ்சாறு வெட்டினேயாக்கும்... இனி அவருக்க எளவிலே நிண்ணு முடியாதே... சரி... சரி... ரெண்டு விலாங்கு எடு இப்படி...''

''விலாங்கு மூணோ நாலோதான் கெடச்சு பாண்டியரே... இனி எறவட்டிக்காரனுக்கு குடுக்கணும். மம்பெட்டிக் காரனுக்கு குடுக்கணும்... அஞ்சாறு கயிலி சேம்பிலைலே பொதிஞ்சு தாறேன்...''

''கயிலி ஒங்க அம்மைக்கு கறி வச்சுக் குடு... தாயோளி எனக்கு முன்னால கோமண மில்லாம அலஞ்ச பய எங்கிட்டேயே வேலை வைக்கான்... மீசை வச்சிட்டாலே பெரிய ஆளாயிருவியாலே?''

பாலத்திலிருந்து இறங்கி வந்த ஊர்க்காவல் தேவர், இருந்ததில் பெரியதான இரண்டு விலாங்குகளைத் தேடி எடுத்து வாலைப் பிடித்துத் தூக்கிக் கொண்டு போனார்.

*******

Feb 27, 2010

தலித் இலக்கியம் பற்றி... - சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி

தலித் இலக்கியம் பற்றி எனக்குத் தெளிவில்லை. தமிழில் மாதிரி படைப்புகள் - முக்கியமாக ஒரு நாவல் - தென்படவில்லை.படைப்பு மொழி சார்ந்து நிற்கிறது; மொழி தாண்டிப் பேசுகிறது. ஆக, தலித் இலக்கியம் பற்றி அனுபவம் பெற, உணர்வுகள் பெற எனக்கு வாய்ப்பு அதிகம் இல்லை. ஆங்கிலம் வழி சிறிய அளவில் தலித் ஆக்கங்கள் என்று கருதப்படுபவை படிக்கக் கிடைத்திருக்கின்றன. அவற்றில் தார்மீகக் கோபம் வலுவாகவும் கதை வலு பலவீனமாகவும் இருந்தன. படைப்பு பட்டென்று பல விஷயங்களைத் தெளிவுபடுத்தக் கூடியது. முழு வாழ்க்கையில் அரசியலுக்கு அகப்படுபவற்றை மட்டுமே பார்ப்பவர்கள், இப்போது படைப்புகள் அற்ற நிலையில், படைப்புகளுக்குரிய விதிகளைப் பொருட்படுத்தாது தலித் இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டு போகலாம். தலித் கலைஞன் இந்த வாய் வீச்சுக்களை அப்படியே ஏற்றுக் கொள்பவனாக இருக்க மாட்டான்.

sura 17ஆழமான அனுபவங்கள் ஆழமான படைப்புகளுக்கு வழிகோலும் உத்தரவாதமில்லை.  ஆனால் படைப்புக்குள் ஆழங்கள் இருக்குமென்றால் அவற்றின் பின் ஆழமான அனுபவங்களும் இருந்தாக வேண்டும். இந்த அனுபவ ஆழம் இல்லையென்றால் கற்பனை பயன் இல்லை. அனுபவ ஆழம் இருக்கும்போது சாராம்சத்தை கண்டடைய உபயோகப்படும் கற்பனை, அனுபவ ஆழம் இல்லாத நிலையில் மேலோட்டமான பரப்பில் பரந்து தத்தளிக்கிறது.

மேல்தட்டு வாழ்க்கையைப் பற்றி பல்வேறுபட்ட பிரிவுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். தன் பின்னணியைச் சார்ந்து இயங்குவது படைப்பாளிக்கு இயற்கையாக இருப்பது போலவே தன் பின்னணியைத் தாண்டும் சாவாலை மேற்கொள்வதும் படைப்பாளிக்குரிய இயற்கையில் ஒன்றாகவே இருக்கிறது. படைப்பாளி தன் ஜாதியையும் தன் மதத்தையும் தன் வளர்ப்புப் பின்னணிகளையும் தன் தேசத்தையும் மொழியையும் தாண்டிச் சென்று வெற்றி பெற்றிருக்கிறான், தன்னுடைய அனுபவத்தைப் பிறருடைய அனுபவமாக மாற்றும் ஆற்றலையே வெற்றி என்கிறேன். இலக்கிய வரலாறு இந்தத் தடையங்களைத் தந்த பின்பும் இன்றைய மேல்தட்டுப் படைப்பாளிகளால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை முன்வைத்துப் படைக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.

இந்த சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் உறுதிப்பட்டுக் கிடக்கின்றன. சமத்துவம் அற்ற நிலையில் வாழ்க்கையில் பிணைந்து கிடக்கும் விதி ஒன்றே இங்கு சமத்துவமாக இருக்கிறது. மேல்தட்டு மக்கள் தங்களுக்குள் கொண்டிருக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கும் அடித்தட்டு மக்களின் ஏற்றத்தாழ்வுகளுக்கும் இடையே மிகப்பெரிய கருஞ்சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. ஜாதியின் இருள் இது. இந்த இருளின் இரு பக்கங்களிலும் முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கை கிளர்ந்தெழுந்திருக்கிறது. ஒரு பக்கம் உழைத்து நாகரிகத்தை உருவாக்கியவர்கள். மறுபக்கம் அவர்கள் உருவாக்கிய நாகரிகத்தின் மேல் தங்கள் வாழ்க்கையைக் கட்டி எழுப்பி, அவர்களுடைய உழைப்பைச் சுரண்டி தங்கள் ஆளுமைகளை வளர்த்துக் கொண்டவர்கள். அப்படி அவர்கள் வளர்த்துக் கொண்ட ஆளுமைகள் உழைப்பாளிகளின் நாகரிகத்தை அவமதிப்பது என்பது எண்ணெயைச் சுடர் இழிவுபடுத்துவது போல் ஆகும். சுடரின் பிரகாசம் எண்ணெயின் சக்தியே அன்றி வேறு அல்ல. ஜாதியின் பிளவைத் தாண்டி மேல்தட்டுப் படைப்பாளியால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இதுகாறும் அவர்களைப் புறக்கணித்துச் சுரண்டியதுபோல இனி அவர்களைப் பொருட்படுத்திப் பேசிச் சுரண்ட சிலர் முன்வரலாம். பேச்சின் தளங்களில் இருந்து பெரிய படைப்புகள் உருவாவதில்லை.

தலித் மக்கள் தங்கள் மொழியில் தங்களை முன்வைக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்று வரையிலும் மேல்தட்டு அறிஞர்கள் சொல்லியிருப்பவையே அவர்களைப் பற்றி அறிய நமக்கு அடிப்படையாக இருந்திருக்கிறது. தலித் மக்கள் தங்களைப் பற்றிச் சொல்லிக்கொள்ள முற்படும்போது இந்த அடிப்படைகள் தகர்ந்து போகலாம். மேல்தட்டுக் கற்பனைகளின் அபத்தங்கள் இனி வெளிப்படலாம். ஒடுக்கப்பட்ட மக்கள் வித்தியாசமான மக்கள் மட்டுமல்ல, முற்றிலும் வேறுபட்டவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுடைய நீதிகள், ஒழுக்கங்கள், மதிப்பீடுகள் நாகரிகங்கள் மேல்தட்டினர் பிடித்து வைத்திருப்பதை ஆமோதிப்பவையாக இருக்கவேண்டும் என்பதில்லை. தாங்கள் அனுசரித்து வரும் நாகரிகத்தை ஒடுக்கப்பட்டவர்களும் அனுசரிக்கும் சமூகத்தை உருவாக்குவதே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்று கற்பனை செய்து கொள்ள மேலதட்டு சிந்தனையாளர்களுக்கு இனி உரிமை இல்லை.

சமூகப் பாகுபாடுகளைப் புரிந்துகொள்ளப் பிரிவுகள் உபயோகப்படுகின்றன. ஜாதி மதம் கலாச்சாரம் சார்ந்த பிரிவுகளைப் படைப்பு பிரதிபலிக்கிறது. வேற்றுமைகளை முன் நிறுத்துகிறது. தாழ்வின் கொடுமைகளைப் பதிவு செய்கிறது. மிகப் பெரிய வெப்பங்கள் தலித் இலக்கியத்தின் உள்ளுரையாக அமையலாம். அது மிகவும் இயற்கையான காரியம். ஆனால் தலித் கலைஞன் தன் கலையை படைத்தாக வேண்டும். தன்னிடமே பேசிக் கொள்வதைத் தாண்டி, தன் அயலானிடம் பேசிக் கொள்வதைத் தாண்டி, மனித குலத்துடன் அவன் பேசியாக வேண்டும். அபோது மட்டுமே அவன் கலைஞன். தன் துக்கம், தன் ஜாதியின் துக்கங்கள், தன் மதத்தினரின் துக்கங்கள், தன் இழிவுகளின் அவலங்கள் இவை எந்தப் பின்னணியில் இருந்து கிளம்பினாலும் சரி, என்ன என்ன கோலங்கள் கொண்டாலும் சரி, மனித துக்கம் என்ற பெரிய தடாகத்தில் அவை வந்து கலந்தாக வேண்டும். வேற்றுமைகளின் அவலத்திலிருந்து ஒற்றுமைகளின் அழகுகளுக்கு அவை வந்தாக வேண்டும். இவை படைப்பின் நியதிகள், தன் வாழ்க்கையைச் சார்ந்து அவன் படைக்காமல், தன் வாழ்க்கையை வைத்து அவன் ஜோடனை செய்தால் காலத்தின் முன் அந்த னோடனைகள் உதிரும்.

வாழ்க்கையைப் பற்றி அறிய முழு வாழ்க்கையை உள்ளடக்கும் படைப்புகள் தேவை. இதுகாறும் நாம் அறிந்திருக்கும் வாழ்க்கை பெரிதும் மேல்தட்டு வாழ்க்கையே. விடுபட்டுப் போன மிகப்பெரிய பகுதி ஒன்று அதன் சுவடுகளைப் படைப்பில் பதிக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அப்படைப்புகள் முன் வைக்கும் பார்வை வாழ்க்கையைப் பற்றிய நம்முடைய பார்வையை விரிவு படுத்தி நம் அடிப்படைகளையே மறு பரிசீலனை செய்ய நம்மை வற்புறுத்தலாம்.

தலித் மக்களிடையே எழுத்துக் கலைஞர்கள் தோன்றி அவர்கள் கலை வெற்றியை சாத்தியமாக்கும் போது, தலித் கலை என்ற அடை மொழிகள் உதிர்ந்து, அவர்கள் உருவாக்கும் படைப்புகள் பேரிலக்கியங்களுடன் இணைந்து காலத்தை தாண்ட முன்னும். காலத்துடன் இணைய வலுவற்றவை தலித் வாழ்க்கையை அரசியல் நோக்கில் எந்திர ரீதியாகப் பிரதிபலித்து, பிரச்சாரத் தளத்தில் மூழ்கி, மேடைப் பேச்சுகளில் அடிபட்டுக் காலத்தின் முன் உதிரும். சாராம்சத்தைக் கண்டடைவதுதான் கலை என்ற நியதியிலிருந்து படைப்பாளி ஒருபோதும் தாண்டிப் போக முடியாது.

சிலேட், 1992

*********

தெரியாமலே - கந்தர்வன்

கந்தர்வன்

இந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த அன்று திருதிருவென்று சுற்றுமுற்றும் கவனித்ததில் பலதும் கண்ணில் பட்டன. அதில் முக்கியமானது எல்லோரும் சில குறிப்பிட்ட நேரங்களில் தேநீர் அருந்தப் போய் வந்தார்கள் என்பது. அடுத்த சில தினங்களில் அவர்கள் யாரும் தனியாய்ப் போகவில்லையென்றும் குழுக்களாய்ப் போய் வருவதையும் பார்த்தேன். என் பக்கத்து சீட் சாமிநாதன் இடம்பெற்ற குழுதான் இந்தக் குழுக்களிலேயே பெரியது என்று அவனோடு சிநேகமாகி அந்தக் குழுவோடு கேன்டானில் நின்றபோது தெரிந்தது.

தேநீர் அருந்தியதும் குழுக்கள் உடன் நாடு திரும்பியதில்லை. கேன்டானுக்கு எதிரே kantharvan உள்ள மைதான வெளியில் மூன்று நான்கு மரங்கள் பெரிது பெரிதாய் நிற்கின்றன. ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டு வந்து பரப்பப்பட்ட மர இனம் என்று அவைகளின் உயரத்தை அண்ணாந்து பார்த்து ஒருவர் சொன்னார். அந்த மரத்தடிக்குப் போய் நின்று முதல் நாள் மாலை தாங்கள் பிரிந்த பின்பிருந்து அந்த நிமிடம் வரை அவரவர் வீடுகளிலும் வெளியிலும் நடந்தவைகளை செய்திகளாகவும் அதிசயங்களாகவும் கதைகள் போலவும் பேசுவார்கள். எதையும் வெகு சுவையாகச் சொல்பவர்கள் என்று எங்கள் குழுவில் இரண்டு மூன்று பேர் உண்டு. பெரும்பாலும் அவர்களே கூட்டத்தை ஆக்ரமித்துக் கொள்வார்கள். கேட்கவும் பார்க்கவும் ஆசையாயிருக்கும்.

விதிக்குப் புறம்பாக வந்த பில்லை எப்படிக் கண்டுபிடித்துத் திருப்பி அனுப்பினார் என்று சொல்லி யாராவது ஒருவர் தனது அறிவு மற்றும் சூட்டிகைகளை விளக்கிப் பேசுவதுதான் வழக்கமான மாநாட்டுத் துவக்கமாக இருக்கும். அதன் பின் அதிகாரி பற்றி அவர் குடும்பம் பற்றி பத்திரிக்கைகளில் வந்த செய்திகள் பற்றி கண்ட காட்சிகள் பற்றி என்று மாநாட்டில் பேசுவதற்கென்றே தயாரித்து வந்த உரைகள் போல வரிசைக் கிரமமாகவோ முண்டியடித்துக் கொண்டோ பலரிடமிருந்து வெளிவரும். பெரும்பாலும் இந்த மரத்தடி மாநாடு வட்டவடிவிலும் நின்றபடியேயும் நிகழும்.

மூன்றாம் நாளே கவனித்தேன். எங்கள் வட்டம் தாண்டி ஒரு கிராமத்துக்காரர் மஞ்சள் பை ஒன்றைக் கையில் தொங்க விட்டபடி நாங்கள் பேசுவதைக் கூர்மையாகக் கேட்டபடிநின்றார். முகத்தில் கவலை அதிகமாயிருந்தும், நாங்கள் பேசிவிட்டு உரக்கச் சிரிக்கும் நேரங்களில் அவர் உதட்டிலும் பொசுங்கலாய் ஒரு புன்னகை வந்து போனது. ரகசியமான சங்கதிகளை நாங்கள் மெது குரலில் பேசுகையில் அவர் எங்கள் வட்டத்தை நோக்கி இரண்டு எட்டு எடுத்து வைத்துக் காதோரம் கை வைத்துக் கேட்டு விட முயற்சிப்பார்.

நாங்கள் நாடு திரும்பிய ஒரு நாள் முற்பகலில் திரும்பிப் பார்த்தேன். அவர் பக்கத்திலிருந்த கோர்ட் கட்டிடம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். அப்போது அவர் தாட்டியாயிருந்தார். பிற்பகலில் எங்கள் கூட்டம் ஆரம்பிக்கும் நிமிடத்தில் எங்கள் பேச்சைக் கேட்க வாயைத் திறந்தபடி மேற்கிலிருந்து வேகம் வேகமாய் வந்துநின்று கொண்டார்.

நாங்கள் முடித்துத் திரும்பிய ஒவ்வொரு வேளையிலும் எங்களை விட்டுப் பிரிந்து அவர் ஒருசமயம் கலெக்டர் அலுவலகப் பக்கமாய்ப் போய்க் கொண்டிருப்பார்; ஒரு நேரம் வக்கில் ஒருவரின் பின்னாடி பரிதாபமாய் நடந்து கொண்டிருப்பார். எனது ஊகம் என்னவெனில் கர்ணன் உடம்பின் கவச குண்டலம் போல் அவர் கையில் தொங்கிய மஞ்சள் பைக்குள் ஏதோ முக்கிய ஆவணங்கள் அல்லது விண்ணப்பங்களின் நகல்கள் ரசிதுகளென்று நிறைத்து வைத்திருந்தார் என்பதே ஆகும்.

எங்கள் குழு கூடும் மரத்தடி விரிந்த நிழல் கொண்டது. மஞ்சள் பூ மரம் அது. அதன் கிளைகள் அருகில் உள்ள வக்கீல்கள் கூடத்தின் மேற்கூரையில் பாதியை மூடியிருக்கும். இந்தப் பக்கம் கேன்டானின் தென்னங் கீற்றுகளின் மேல் அசையும் கோடையில் வெல்வெட் விரிந்து கிடப்பது போல் தரையெங்கும் பூக்கள் உதிர்ந்திருக்கும். வதங்கிய பூக்களிலிருந்து வாசம்வரும். பேசிக் கொண்டிருக்க ரம்மியமாயிருக்கும்.

அடிக்கடி பேச்சுகளில் ஊடாடுவது, காலம் முன்பு போய் மெதுவாய் நகர்வதில்லை என்பதும் வெகு வேகமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது என்பதுதான். நேற்றுதான் திங்கட்கிழமை வந்தது போலிருக்கிறது. அதற்குள் வெள்ளிக்கிழமை வந்துவிட்டது என்று அநேகமான வெள்ளி மாலைகளில் பேசுவதுண்டு. பேச்சில் அடிக்கடி வரும் இன்னொன்று காலம் மாறிக்கொண்டிருக்கிறது.

'பெரிய சங்கதிகளை விடு. டிபன் பாக்ஸைச் சொல்லு. அதுகளை வரிசையா மேலெ மேலெ அடுக்கி மாலை மாதிரி ஒண்ணை மேலெ வைச்சு இதுலெ மாட்டி அதுலெ மாட்டிக் கடைசியா ஒரு கெட்டியான ஸ்பூன் ஒண்ணை மூணு துவாரத்திலெயும் சட்டுனு எவனாவது நொழைச்சிருப்பானோ; அதுதான் நொழைஞ்சிருமா ? ஸ்பூன் இல்லாம டிபன் பாக்ஸ் வரும்னு நெனைச்சிருப்பமா முந்தியெல்லாம்.

'எங்க தெருவுலெ புதுசா ஒரு கேபிள்காரன் வந்திருக்கான். அம்பது சானல் தரப் போறானாம். நெனச்சிருப்பமா பத்து வருசத்துக்கு முன்னெ ? '

'பஸ் ஸ்டாண்டுக்கு அப்பாலெ காலெஜ் வரை ஜனநடமாட்டமே இருந்ததில்லெ முன்னெயெல்லாம். இப்ப வீடுகளும் கடைகளும் பஸ்ஸ்உம் காரும் ஸ்கூட்டருமா ஜெக ஜோதியாயிருச்சு. '

'விடு கம்ப்யூட்டர் சங்கதியை ஆரம்பிச்சா கதை பத்து நாளைக்கு நீளும். நம்ம ஆபிஸ்லெ பத்து கம்ப்யூட்டர்கள் பிரிண்ட்டர், ஏர் கண்டிஷனர் எல்லாம் அடுத்த வருசம் வந்து எறங்கப் போகுது. அம்பது நூறு வருசமா தலையைப் போட்டு பிறாண்டி மாசாமாசம் கணக்கு அனுப்புற வேலையெல்லாம் இனி இல்லை. மிஷினலெருந்து வந்து கையிலெ விழுந்திரும் கோடி ரூபாய் கணக்கு.

பேசிவிட்டு நாடு திரும்பும்போது பார்த்தேன். மஞ்சள் பைக்காரர் வெகு சுவாரஸ்யமாய் இவைகளைக் கேட்டுக் கொண்டிருந்தவர் காக்கித் துணி மூடிய ஜீப்பில்லாமல் நவீனமான மாருதி ஜீப்பில் வந்து கொண்டிருந்த தாசில்தாரை நோக்கி ஓடினார். தாசில்தார் ஜீப்பிலிருந்து இறங்கும்போது அவர் தலைக்கு மேல் கைகளை உயர்த்திக் கும்பிட்டுக் கொண்டிருந்ததைக் கவனிக்க நேரமில்லாமல் விறுவிறுவென்று கலெக்டர் ஆபீஸின் படிகளில் ஏறினார். டவாலி முன்னால் ஓடிக் கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்குப்பின் மஞ்சள் பைக்காரர் கோர்ட் பக்கம் பார்த்து நடந்து கொண்டிருந்தார்.

ஒருநாள் எங்கள் மரத்தடியிலிருந்து சற்று தூரத்தில் செங்கல்லும் மணலும் லாரிகளில் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. நவீன வசதிகளுடன் பலமாடிக் கட்டிடம் ஒன்று கட்டப் போவதாகச் சொன்னார்கள். பல துறை அரசு அலுவலகங்களும் இயங்கி வரும் இந்த வளாகத்திற்குள் இன்னும் நிறைய அலுவலகங்கள் வந்து சேரப்போவது குறித்து மகிழ்ந்தும் வியந்தும் நாங்கள் மரத்தடியில் பேசிக் கொண்டிருந்த பலநாட்களில் மஞ்சள் பைக்காரரும் நின்று கேட்டுக் கொண்டிருந்தார்.

எங்கள் அலுவலக வளாகம் நூறு ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. மொத்தக் கட்டிடங்களும் நாலு அல்லது ஐந்து ஏக்கர்களுக்குள் என்றால் மீதி தொண்ணூற்றைந்து ஏக்கர்களில் செடிகளும் புதர்களும் காட்டுக் கொடிகளும் பேர் தெரியா மரங்களும் தான். வெள்ளைக்காரன் காலத்திற்கு முந்தைய அரசர் அல்லது சிற்றரசர் கால வளாகம் இது. திசைக் கொன்றாய் எட்டு பிரம்மாண்ட வாசல்கள். தர்பாராகவோ அந்தப் புரங்களாகவோ இருந்ததையெல்லாம் கலெக்டர் அமரும் அறையாகவோ விவசாயத்துறைக் கிடங்குகளாகவோ மாறியிருந்தன.

வளாகத்தின் வடகிழக்கில் இரண்டாள் உயரத்திற்குக் கரையான் புற்றும் சுற்றிலும் இடுப்பளவிற்குக் குத்துச் செடிகளும் அடர்ந்து கிடந்தன. தெற்கே காம்பவுண்டுச் சுவருக்கு மேலும் அடியிலும் மயில் கூட்டம் திரியும் வடதிசையில் சூரிய வெளிச்சம் படாது அடர்ந்த மரங்களிலிருந்து பறவைகளின் சப்தம் காதைப் பிளக்கும் ஆடைக்கும் கோடைக்கும் புல் மண்டிக் கிடக்கும் இந்தப் பிரதேசமெங்கும். கட்டிட வாசல்களின் நிழல்களில் புல் பத்தை பத்தையாய்க் கிடக்கும். அதனால் இந்த வளாகத்தில் கால் நடைகளின் புழக்கம் அதிகம். வளாகத்தைச் சுற்றி வீடுள்ளவர்கள் இங்குள்ள புள் படுகைகளை நம்பி மாடு ஆடு வளர்த்து வருகிறார்கள்.

இந்தக் கால்நடைகள் பெரும்பாலும் அலுவலக வாசல்களிலும் கேன்டான் ஓரங்களிலும் மனிதர்கள் நடமாடும் பகுதியாகப் பார்த்துத்தான் மேய்ந்து கொண்டும் உலாவிக் கொண்டும் திரியும். வெளி மாநிலக்கார ஒரு ஐ.ஏ.எஸ் இங்கு கலெக்டராக வந்தவர் பி.ஏ.வைக் கூப்பிட்டுக் கோபமாய் இரண்டு தகவல்களைச் சொன்னாராம். முதலாவது இந்த வளாகத்தினுள் அலையும் மனிதர்களை விடவும் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகம். இரண்டாவது அவர் காருக்குக்கூட இடம் தராமல் அந்த ஒல்லித் தார் ரோடின் குறுக்கே வரிசையாய்ப் படுத்துக்கொண்டு ஆரன் ஒலிகளுக்கு மதிப்புத் தராமல் அசை போட்டபடி படுத்துக் கிடந்தன என்றாராம். அந்தக் கோபத்தோடு பல உத்தரவுகளையும் போட்டார்.

அந்த உத்தரவுகளின் படி ஆடு மாடு எதுவும் வளாகத்திற்குள் வரமுடியாதவாறு வாசல்களில் இரும்புக் குழாய்கள் பதிக்க வேண்டும். மீறி நுழையும் கால் நடைகளைப் பவுண்டில் அடைக்க வேண்டும். கால்நடை சொந்தக் காரர்கள் அபராதம் செலுத்திய பின்னர் தான் விடுவிக்க வேண்டும்.

மேற்கண்ட உத்தரவுகள் போர்க்கால வேகத்தில் அமுல் படுத்தப்பட்டன. சரியாக ஒரு மாதங்கழித்து மாடுகளும் ஆடுகளும் உள்ளே ராஜநடை போட்டன. வாசலில் பதித்த கம்பிகளின் மேல் நடக்கப் பயின்று விட்டனவாம்.

ஒரு கோர்ட்டிலிருந்து இன்னொரு கோர்ட்டிற்கு நடந்து செல்லும் நீதிபதிகளுக்கு பத்தடி முன்னால் ஆள்களை விலகச் சொல்லி அதட்டிக்கொண்டு ஓடும் டவாலிகளுக்கு இந்த ஆடுகளும் மாடுகளும் பெரும் இடையூறாயிருந்தன. அதிகாரிகள் காரிலிருந்து இறங்கி சட்டென்று அலுவலகப் படிகளில் ஏற முடியாதவாறு இவை பலநேரம் வழி மறித்தன.

எங்களது ஒரு மரத்தடிக் கூட்டத்தின் போது சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வரப் போகும் மாதங்களில் நாங்கள் நடத்தவிருந்த வேலை நிறுத்தம் பற்றி உரக்க விவாதித்துக் கொண்டிருந்தபோது மஞ்சள் பைக்காரர் வெகு அக்கறையோடு எங்களைப் பார்த்துக்கொண்டு நின்றார். அந்த மாதத்தில் ஒரு திங்கட்கிழமையன்று கலெக்டர் அலுவலக வாசலில் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட வரிசையில் அவர் நிற்பதைப் பார்த்தேன். அன்று நாங்கள் மரத்தடிக்கு வரும் நேரத்தில் அவரும் திரும்பிவிட்டார். முகத்தில் எவ்வித உணர்ச்சியுமில்லை. வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டம் என்று மறுபடி மறுபடி மூர்க்கமாய்ப் பேசியவைகளைக் கேட்டுக்கொண்டிருந்து விட்டுப் போனார்.

அலுவலகங்களையெல்லாம் மூடிவிட்டு நாங்களும் பள்ளிகளையெல்லாம் மூடிவிட்டு ஆசிரியர்களும் கலந்து நின்று வளாக முகப்பில் ஆர்ப்பரித்ததை தினமும் நின்று பார்த்துச் சென்றார். அப்போது மஞ்சள் பையில் ஒரு காது அறுந்து இன்னொரு காதோடு முடிந்திருந்தார். சட்டை வேட்டி நைந்து போயிருந்தது. பலநாள் போராடிவிட்டு உச்சகட்டமாய் சென்னை முற்றுகைக்காகக் கிளம்பும் கூட்டம் வெகு உக்கிரமாய் நடந்து கொண்டிருந்தபோது அவர் தலைப்பாக்கட்டி தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்.

போராட்டம் முடிந்து நாங்கள் அலுவலகங்களைத் திறந்து உள்ளே போய் உட்கார்ந்துவிட்டு உற்சாகமாய் மரத்தடிக்கு வந்த போது அவர் எங்கிருந்தோ வந்துவிட்டார். இத்தனை நாட்களாய் அவர் இந்த மஞ்சள் பையோடு எங்கே இருந்திருப்பாரென்று எங்களில் யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. மாறாக அங்கு கூடுகிற எல்லோருக்கும் அவர்மேல் ஒருவித வெறுப்பு வந்திருந்தது.

அவர் எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறார். எங்களுக்கென்று எந்த அந்தரங்கமும் இல்லாமல் ஆக்கி விடுகிறார். எங்கள் ஆசைகள், தவறுகள், தேவைகள், குளறுபடிகள் எல்லாமே அவருக்குத் தெரிந்து விடுகின்றன. அவரோடு சண்டை உருவாக்கி அவரை எங்கள் கூட்டங்களின் போது வந்து நிற்பதைத் தடுக்கவும் எங்களால் முடியவில்லை. எவ்வித சண்டைக்கும் கோபத்திற்கும் இயலாத தேகமும் முகமும் அவருக்கு.

பல அலுவலகங்களின் வாயில்களில் தலையில் சிவப்பு விளக்கோடு கார்களும் ஏராளமான ஜீப்களும் தடபுடலாய்த் தெரியும். முந்தைய வாரத்திலோ மாதத்திலோ நடந்த வேலைகள் பற்றி அடிக்கடி ரெவ்யூ மீட்டிங்குகள் நடக்கும். சிமிண்டுக் கலர் சபாரி அணிந்து கனத்துப் போன அதிகாரிகள் உடம்புகளைத் தூக்கிக்கொண்டு வேகம் வேகமாய்ப் படி ஏறுவார்கள். இந்த ஜீப்புகளுக்கு நடுவில் மஞ்சள் பைக்காரர் அலுவலக முகப்புகளை வெறித்து பார்ப்பதை சில தடவைகள் அந்தப்பக்கமாய்ப் போகும் போது வரும்போது பார்த்திருக்கிறேன்.

வரவர அவர் வெகுவாய் மெலிந்து கொண்டு வந்தார். தலைத் துண்டை எடுத்துஅடிக்கடி முகத்தைத் துடைத்தார். மரத்தடிக் கூட்டத்திற்கு வருவது மட்டும் நிற்கவில்லை.

ஒருநாள் மரத்தடியில் நின்று கொண்டிருக்கையில் ஒரு ஆடு சுவரருகில் அடுக்கியிருந்த செங்கல் குவியலில் ஏறியது; அப்படியே சுவர்மேல் நடந்தது. அடுத்த வக்கீல்கள் கூடத்து ஓட்டு மேல் நின்று அங்குப் பரவிக்கிடந்த மரக்கிளைகளில் புத்தம் புதிதாய்ப் பூத்திருந்த மஞ்சள் பூக்கள் ஒவ்வொன்றாய் தின்று கொண்டிருந்தது. 'இதுக அக்ரமம் தாங்கலைப்பா. இங்க பாரு ஆட்டுக்கு ரெக்கை முளைச்சு மேலே போய் ஓட்டிலே நிக்கிறதெ ' என்றார் ஒருவர்.

ஒரு சினை ஆடு மேலே நின்ற ஆட்டை ஆர்வமாய்ப் பார்த்தபடி ஓரத்தில் வளர்ந்து கிடந்த புல் கத்தையைக் கடித்துக்கொண்டு நின்றது.

மாநாடு முடிந்து கூட்டமாய் வரும்போது கீழே நின்ற சினை ஆடு எங்கள் முன்பாக திணறியபடி நடந்தது. சுற்றிச் சுற்றி வந்தது. எங்கள் கூட்டம் அதை நெருங்குமுன் ஆட்டின் பின்புறத்தில் பச்சைக் குட்டியின் தலை தெரிந்தது. பேண்ட்டும் சட்டையும் கடிகாரமுமாய் நின்ற எங்கள் கூட்டத்திற்கு என்ன உதவி செய்ய வேண்டுமென்று தெரியவில்லை.

வேறு திசையில் ஒரு வக்கீல் பின்னால் பேசியபடி போய்க் கொண்டிருந்த மஞ்சள் பைக்காரர் ஆடு நின்ற நிலையைப் பார்த்து விட்டு ஓடி வந்தார். தலைப்பாவை இறுக்கக் கட்டிக் கொண்டார். குட்டி வெளியில் வர உதவினார். குட்டியின் மேலிருந்த திரவத்தை வழித்துவிட்டு குட்டியின் நான்கு கால்களிலுமிருந்த குளம்பைக் கிள்ளி எறிந்து தரையில் விட்டார்.

குட்டி ஆடியது. விழுந்து எழுந்தது. எழுவது விழுவதுமாயிருந்தது. ஆடு குட்டியை நக்கிக் குடுத்தது. மஞ்சள் பைக்காரர் ஆட்டின் கனத்த மடியில் குட்டியை விட்டார். சிறிது நேரமானதும் குட்டியைத் தூக்கிகொண்டார். ஆடு நடந்த திசையில் குட்டியைக் கையிலேந்திக் கொண்டு நடந்தார். யார் வீட்டு ஆடோ வீடு வரை கொண்டு போய் விட்டு வருவாரென்று பேசிக் கொண்டோம். மஞ்சள் பை முழங்கையில் ஒற்றைக் காதோடு ஆடிக்கொண்டே போனது.

எங்கள் கூட்டத்தில் பதினோரு ஆண்டுகளுக்குப் பின் ஒருவர் யாருக்கும் கேட்டுவிடாத மெல்லிய குரலில் முதன்முதலாய் வாய் திறந்து சொன்னார். 'ஆட்டுக்கு என்ன செய்யணும்னு இந்தாளுக்குத் தெரியுது. இந்தாளுக்கு என்ன வேணும்னு யாருக்குமே தெரியலை. '

***************

Feb 26, 2010

கலையின் பிறப்பு - க. நா. சு.

ka-na-su

க. நா. சு.

கவிதை

எனக்கும்
கவிதை பிடிக்காது, மனிதன் எத்தனையோ
எட்டுக்கள் எடுத்துவைத்துவிட்டான்; இவற்றில்
எத்தனை எட்டுக்கள் கவிதையால்
சாத்தியமாயின

என்று யார்
தீர்மானித்துச் சொல்ல இயலும்? பின்
எதற்காகத்தான் கவிதை தோன்றுகிறது?
மொழியின் மழலை அழகுதான்.
ஆனால் அது போதவே

போதாது.
போதுமானால் கவிதையைத் தவிர வேறு
இலக்கியம் தோன்றியிராதே. போதாது
என்றுதான், ஒன்றன்பின் ஒன்றாக
இத்தனை இலக்கியத்

துறைகள்
தோன்றின - நாடகமும் நாவலும் நீள்
கதையும் கட்டுரையும் இல்லாவிட்டால்
தோன்றியிராது; ஆனால் அவையும்தான்
திருப்தி தருவதில்லையே!

அதனால்
தான் நானும் கவிதை எழுதுகிறேன்.
மனிதனுக்குக் கலை எதுவும் திருப்திதராது
மேலே, மேலே என்கிற ஏக்கத்தைத்தான்
தரும். கலையின்

பிறப்பு
இந்த அடிப்படையில் ஏற்படுவது. கடவுளே
இன்னமும் உயிர்வைத்துக்கொண்டிருப்பது
இந்த அடிப்படையில்தான் சாத்தியம்
என்று சொல்லலாம்.

“எளிய பதங்கள், எளிய சந்தம்” என்றும் “தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவு தர மொழிந்திடுதல்” என்றும் சுமார் ஐம்பது வருஷங்களுக்கு முன் சுப்பிரமணிய பாரதியார் புதுக்கவிதைக்குரிய லக்ஷணங்களை எடுத்துச் சொன்னார். எளிமை, தெளிவு என்கிற இரண்டு லக்ஷணங்களையும் பின்பற்றிப் பின்னர் கவிகள் சிலர் எழுதினார்கள். செய்யுள் சிறப்பாக அமைந்த இவற்றிலும் கூடப் புதுக்கவிதை பிறந்துவிடவில்லை. “பாரதிக்குப் பின் இவர்தான் மேலான கவி, உயர்ந்த கவி” என்று அழுத்தமாகச் சுட்டிக்காட்டும்படியாக ஒரு கவியும் தோன்றிவிடவில்லை. தமிழ்க் கவிதை ஊற்றே வறண்டு போய்விட்டதோ என்று சொல்லும்படியாக இருந்தது. சிறந்தது என்பதெல்லாம் பழசை அப்படியே நகல் எடுப்பதாக, பாரதியாரின் அடியையொற்றியே வந்ததாக இருந்தது. இன்றைய சமூக, ஆன்மீகச் சூழ்நிலையைச் சித்தரிக்க முயன்ற கவிகளும்கூட இன்றைக்கென்று உண்மையாகி, நாளைக்கும் நிலைக்கக்கூடிய கவிகளைச் செய்து தரவில்லை. தோன்றிய கவிதைகளில் பெரும்பாலானவை ஊமையாகவும் குருடாகவும் நொண்டி முடமாகவும் இருந்தது என்று சொல்வது மிகையேயாகாது.

பாரதியாருடைய கவிதையிலே தெளிவு, எளிமை இரண்டுக்கும் மேலாக ஒரு வேகம் இருந்தது. இந்த வேகம் எப்படி வந்தது என்று ஆராய்ந்து பார்க்கும்போது தான் உயர் கவிதை எப்படித் தோன்றுகிறது என்பது தெரியவரும். உள்ளத்தில் உள்ள உண்மை ஒளி, வாக்கினிலும் வந்ததனால் ஏற்பட்டதொரு வேகம் இது. எப்படி வந்தது என்பதுதான் கலை ரகசியம். எப்படியோ வந்தது - பாரதியார் உயர்ந்த கவியானார். இப்படித் தோன்றிய வேதத்தால்தான் கம்பனும் இளங்கோவடிகளும் காரைக்காலம்மையாரும் ஆண்டாளும் மாணிக்க வாசகரும் பட்டினத்தடிகளும் ஜெயங்கொண்டாரும் கோபால கிருஷ்ணபாரதியாரும் தாயுமானவரும் அவரவர் அளவில் உயர்கவிகள் ஆகிறார்கள். இந்தக் கவிதை உண்மையை அலசிப் பிய்த்து எடுத்துப் பார்க்க முடியாது - ஆனால் சூக்ஷமமாக இது இருப்பது என்பது நிதரிசனமாகவே தெரிகிறது. உயர் கவிதையின் உயிர்இது.

இந்தக் கவிதை உண்மைக்கு, இன்றைய வாரிசாக, புதுக்கவியும் புதுக்கவிதையும் தோன்ற வேண்டும். பாரதியார் காலத்தில் பொது வாழ்க்கை சிக்கலானதாகி விட்டது என்று சொன்னால் சுலபமாக ஏற்றுக்கொண்டு விடலாம்போலத் தோன்றும். பாரதியார் மக்களிடையே பொதுவாகவும் தனித்தனியாகவும் கண்ட குறைகளுக்கு எல்லாம் சுதந்திரமின்மையே காரணம் என்று நம்பினார். சுதந்திரம் வந்துவிட்டால் அக்குறைகள் தானாகவே நீங்கிவிடும் என்றும் நம்பினார். சுதந்திரம் வந்துவிட்டது, ஆனால் தனிமனிதர்களின் குறைகள் பன்மடங்காக அதிகரித்துவிட்டதுபோல் இருக்கிறது. பொதுவாழ்வு, சமுதாயம் பற்றியோ கேட்கவே வேண்டாம். பொருளாதார, சமூக, அரசியல் துறைகளில் மட்டுமல்ல; நல்லது தீயது அடிப்படையிலும் ஆன்மீகப் பாமார்த்திகத் துறைகளிலும் போலிகளும் மோசடிகளும் மலிந்துவிட்டன. குறைகள் நிறைந்து நிற்கின்றன.

கவிதை மனிதனின் குறைகளைப் பற்றி மட்டும்தான் சொல்ல வேண்டுமா என்று கேட்கலாம். குறையைச் சொல்வதும் நிறையைச் சொல்வதும் ஒன்றுதான். ஒன்றைச் சொல்லி ஒன்றைவிட முடியாது. இலக்கியத் துறைகள் எல்லாமே சமுதாயம், தனிமனிதன் என்கிற இரண்டு பிரிவிலும் குறைகளையும் நிறைகளையும் சொல்லியும் சொல்லாமலும் அறிவுறுத்துகின்றன என்பது தப்ப முடியாத நியதி.

இந்தக் காலத்துக்கான கவிதை உண்மையை இந்தக் காலத்துக்கேற்ற சிக்கலான வார்த்தைச் சேர்க்கைகளில், நிரந்தரமாக்குவதற்கு, அழியாத இலக்கிய உண்மையாக்குவதற்கு, புதுக்கவிதை தேவை. அப்போதுதான் சங்க காலத்தின் சிறந்த கவிதைச் சிருஷ்டிகளையும், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற நூல்களின் தனித்தன்மையை நாமும் இன்று எட்ட முடியும். (இலக்கியரீதியாகத்தான் சொல்லுகிறேன்) இன்றும் ஒரு புதுச் சிலப்பதிகாரமும் ஒரு கம்ப ராமாயணமும் தோன்ற முடியும். (அது கவிதை ரூபத்தில் இருக்கக் கூடாது என்று விதி ஒன்றும் கிடையாது. நச்சுப்போன, நைந்து நொந்த செய்யுள் உருவத்தில் புதுக்கவிதை இருக்க முடியாது என்பது தெளிவு. இது சாத்தியமாவதற்கு நம்மிடையே புதுக்கவிதைக்கானதோர் இலக்கணம் வேண்டும்.)

இலக்கியத்தில் இது கவிதை யுகம் அல்ல - கவிதை யுகம் கடந்துவிட்டது - என்றுதான் பெருவாரியான மொழிகளில் கருதப்படுகிறது. காவியங்களும் சிறுகவிதைகளும் ஒரு காலத்தில் சாதித்து வந்த கலைச் சாதனையைச் சிறுகதைகளும் நாவல்களும் வசனத்தில் சாதித்துவிட முடியும் என்று சென்ற நூறு ஆண்டுகளில் உலகமெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. எனினும் கவிதை அநாவசியம் என்றோ, இனி அதற்கு ஒரு காலம் தோன்றாது என்றோ யாரும் கருதுவதில்லை. மீண்டும் இலக்கியத்தில் கவிதை யுகம் தோன்றலாம். இதற்கு அரணாக ஜெர்மன் மொழியில் ரில்கேயின் கவிதைகளும் ப்ரெஞ்சு மொழியில் பாதலெர், ரிம்போ, மல்லார்மே, வாலேரி இவர்களின் கவிதைகளும் ஆங்கில மொழியில் யேட்ஸ், எலியட், டைலன் தாமஸ், எஸ்ரா பவுண்டு இவர்களின் கவிதைகளும் சுட்டிக்காட்ட உபயோகிக்கப்படும்.

தமிழைப் பற்றியவரையில், தமிழ்க் கவிதை செத்துவிட்டது என்று நிச்சயமாகவே சொல்லிவிடலாம். செய்யுளியற்றுபவர்களின் எண்ணிக்கை நம்மிடம் இன்று அதிகம் என்றாலும், செய்யுள் எல்லாம் கவிதையாகி விடாது என்பதில் என்ன சந்தேகம்? யாப்பு, இலக்கணம், அணி என்றும் அசைக்க முடியாத சட்டங்கள் இட்டு, எதுகை, மோனை, சீர், தளை என்றெல்லாம் நைந்துபோன செய்யுள் வார்த்தைகளுக்கு மீண்டும் மீண்டும் உயிர் தந்து, நைந்துபோன சிந்தனைகளை எடுத்து எடுத்து அளித்து வந்த தமிழ்க் கவிதைக்குக் கோபாலகிருஷ்ண பாரதியாரும் சுப்பிரமணிய பாரதியாரும் ஓரளவுக்குப் புத்துயிர் தந்தார்கள். கவிதையொடு இசை என்னும் உயிர் சேர்த்துக் கவிதை செய்தார்கள் அவர்கள். பக்தி விசேஷம், இசை முதலியவற்றினால் முந்திய பாரதியாரும் சமூக வெறி சுதந்திர வேகத்தினால் பிந்திய பாரதியாரும் தமிழ்க் கவிதைக்குப் புதுமை தர முயன்றார்கள். இருவருக்கும் இசை நயமும் ஓரளவுக்குத் தனிக் கவிதை நயத்தைத் தீர்த்துக்கட்ட உதவியது என்றும் அதே மூச்சில் சொல்லலாம். தமிழோடு இசை பாடுகிற மரபு இருக்கலாம். ஆனால் சங்க நூல் சிலப்பதிகார (இசையற்ற அகவல், சொல்லளவு) மரபு ஒன்றும் தமிழுக்கு உண்டு என்று ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்! தமிழில் புதுக்கவிதை இலக்கணமாக இடைக்கால இலக்கண அணி மரபுகள் ஒழிந்து மிகப் பழைய மரபுகளைத் தேட வேண்டும் என்பது ஒரு விதத்தில் தெளிவாகிறது என்றே சொல்லலாம்.

தமிழை விட்டுவிட்டு, வேறு மொழியில் புதுக்கவிதை செய்தவர்களின் நிலைமையைச் சற்று நோக்கினால், விஷயம் புரியும். பல ஐரோப்பிய மொழிகளில் கவிதையைச் சாகவிட்டுவிடுவதில்லை என்று பல புதுக்கவிகள் பிடிவாத மாகவே புதுக்கவிதை செய்துவருகிறார்கள். இந்தப் புதுக்கவிதையிலே புதுசாக இன்றைய வாழ்க்கைச் சிக்கலும் பூரணமாகப் பிரதிபலிக்கும் ஒரு வார்த்தைச் சிக்கலும் இன்றைய புதுமைகளை எல்லாம் தொட்டு நடக்கும் ஒரு நேர் நடையும் அகவல் சந்தம் என்று நாம் சொல்லக்கூடிய ஒரு பேச்சுநடை அடிப்படைச் செய்யுள் வேகமும் எல்லாவற்றிற்கும் மேலாக இடைக்காலப் பழமைக்கு மேலாக, பண்டைக்கால, ஆதிகாலப் பழமையைப் போற்றும் ஒரு திறனும் காணக் கிடக்கின்றன.

உதாரணமாகப் பார்த்தால் - டி.எஸ். எலியட் என்பவர் புதுக்கவிதை ஆங்கிலத்தில் எழுதுகிறார் என்றால், அவர் இன்றைக்குரிய ஒரு கோணத்தில், ஒரு கோணத்தில் நின்று இன்றைய வசன - கவிதை நடையை மேற்கொண்டு, அதற்கிலக்கணமாக நானூறு வருஷங்களுக்கு முன் எழுதிய ஆங்கில ஆதிகால நாடகாசிரியர்களின் அகவல் பாணியை மேற்கொண்டு பேச்சுச் சந்தத்துக்கிசைய கவிதை செய்கிறார். இடைக்கால மரபுகளைப் புறக்கணித்துவிடுகிறார். ஆனால் பழைய இலக்கண மரபை அவர் அப்படியே கொள்வதும் இல்லை. இன்றையப் பேச்சு வேகத்துக்கேற்ப சொல் என்று மக்களின் வாயில் வழங்குவதின் அடிப்படையில் கவிதை செய்கிறார். அதேபோல எஸ்ரா பவுண்டு என்கிற ஆங்கிலக் கவிஞர் ப்ரோவான்ஸ் கீதங்களையும் சீனத்துக் கவிகளையும் ஜப்பானிய ஹெய்க்குகளையும் தன் மரபாக்கிக்கொண்டு புதுக்கவிதை செய்கிறார். அவருடைய கவிதைப் பாணி இன்று ஆங்கிலத்தில் கவிதை எழுதுகிற எல்லோரையும் பாதித்திருக்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே கவிதை செய்த வால்ட் விட்மன் வசனத்தையே கவிதையாக்கி, வசனத்தையே வரிவரியாக வெட்டிக்காட்டி, விஷய அமைதி தந்து கவியாக வெற்றிபெற்றார். இன்றைய மொழிகள் பலவற்றிலுள்ள புதுக்கவிதைக்குப் பொதலெர், ரிம்போ, மல்லார்மே முதலிய பிரெஞ்சுக் கவிகளையும் வால்ட் விட்மனையும்தான் ஆதாரமாகச் சொல்லுவார்கள். இவர்களையெல்லாம் பற்றி நான் இங்கு குறிப்பிடுகிறேனே தவிர, விவாதிக்கவில்லை. ஏனென்றால் தமிழில் புதுக்கவிதை என்கிற விஷயத்துக்கு இவர்கள் புறம்பானவர்கள். ஆனால் இவர்கள் செய்திருப்பது என்னவென்றால், அன்று ஆட்சி செலுத்திய மரபைத் தகர்த்தெறிந்துவிட்டு ஒரு மிகப் பழைய கவிதை மரபை ஆதாரமாகவைத்து, இன்றைய பேச்சு வள அடிப்படையிலே புதுக்கவிதை செய்ய முயன்றிருக்கிறார்கள். அவரவர்கள் மொழியிலே அவர்களுடைய புதுக்கவிதை முயற்சிகள் வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலே இப்போது புதுக்கவிதை திடமான ஒரு இலக்கியக் குழந்தையாகக் காட்சி தருகிறது.

தமிழில் புதுக்கவிதையின் அவசியத்தைப் பற்றிய வரையில் எனக்குச் சந்தேகமில்லை. மரபுக் கவிதை செத்துவிட்டது. (அல்லது செத்துக்கொண்டிருக்கிறது. இன்று கவிகள் எழுத வருகிறவர்கள் சொல்லடுக்குப் பாடை கட்டிக்கொண்டிருக்கிறார்கள்) புதுக்கவிதை தோன்றியே தீரும். ஆனால் அது எந்த உருவம் எடுக்கும் என்று இப்போது யாரும் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் பலரும் பலவிதமான முயற்சிகள் செய்து பார்த்து வெற்றி தோல்விகள் ஓரளவுக்காவது நிர்ணயமான பின்தான் புதுக்கவிதை உருவாகி இலக்கியப் பூரணத்வம் பெற்று விமரிசனத்தைத் தாங்கள் கூறிய விஷயமாக முடியும். தேவையை உணர்ந்து பலரும் சமீபகாலத்தில் இந்தப் புதுக்கவிதைச் சோதனையைச் செய்து பார்த்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவும் வேண்டும். அகவலுக்கே ஒரு புதுவேகம் தந்து இசைக்கவி சுப்பிரமணிய பாரதியார், வசன கவிதை என்று பெயரைக் காட்டிக் குற்றம் சாட்டி ஒதுக்கிவிடச் சிலர் முயலுகிற முயற்சிகளை மேற்கொண்டு செய்து பார்த்தார் பாரதியார். கவிதை மரபை ஒடித்து வெளியேற வேண்டிய அவசியத்தை அவரும் உணர்ந்திருந்தார் என்பதற்கு அவருடைய வசன கவிதைகளே போதுமான சான்று. பாரதியாரைப் பின்பற்றி இரண்டொருவர் -முக்கியமாகக் காலஞ்சென்ற கு. ப. ராஜகோபாலன் - வசனகவிதை செய்து பார்த்தார்கள். புதுமைப்பித்தன் தன் கிண்டலுக்கும் கேலிக்கும் வாகனமாக, சித்தர் பாடல்களில் ஆதாரம் தேடிய ஒரு செய்யுள் உருவத்தைக் கையாண்டு பார்த்தார். எழுதியுள்ள அளவில் அவர் வெற்றிகண்டார் என்றே சொல்ல வேண்டும். மாகாவியம் என்றே அவருடைய கவிதை முயற்சி பாரதியாருக்குப் பிந்திய கவிதை முயற்சிகளிலே சிறந்தது என்பது என் அபிப்ராயம். ரகுநாதன் புதுமைப்பித்தனின் முயற்சியைப் பின்பற்றி சிறிதளவு வெற்றிபெற்றிருக்கிறார். நாட்டுப்புறத்தான் மெட்டிலே நாகரிகக் கவிதை செய்யப் பார்த்த, இன்றையப் புகழேந்தி கொத்தமங்கலம் சுப்பு. இவருடைய கவிதை முயற்சிகளும் ஓரளவுக்கு வெற்றிபெற்றன. இன்னும் சிலரும் புதுக்கவிதை முயற்சிகள் செய்திருக்க லாம். அவை என் கண்ணில் பட்டதில்லை என்பது அவர்கள் குற்றமாகாது. என் படிப்புக்கெட்டிய வரையில் இவைதான் புதுக்கவிதை நோக்கி இன்றுவரை செய்யப்பட்டிருக்கும் புது முயற்சிகள்.

நான் தமிழில் எழுத ஆரம்பிக்கத் தொடங்கிய நாட்களிலேயே, அதாவது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழில் புதுக்கவிதை பற்றிய சோதனைகளில் ஈடுபட்டு செய்து பார்க்க முற்பட்டதுண்டு. புதுமைப்பித்தன் நடத்திய மலர்களில் ஒன்றிரண்டில் என் கவிதைச் சோதனைகள் வெளியாகியும் இருக்கின்றன. ‘சூறாவளி’யிலும் ஏதோ கொஞ்சம் செய்து பார்த்தேன். ஆனால் தொடர்ந்து முறையாகச் செய்து பார்க்கவும் செய்து முடித்ததை வெளியிடவும் சமீபக்காலத்தில் ‘சரஸ்வதி’ மூலம்தான் முடிந்தது. ‘மயன்’ என்கிற புனைபெயரில் என் புதுக்கவிதை முயற்சிகள் சிலவற்றை வெளியிட்டு வந்திருக்கிறேன். இந்தக் கவிதை முயற்சிக்கு இலக்கணத்தை முன்கூட்டியே தீர்மானித்துவைத்துக்கொண்டு அவ்விலக்கணத்துக்கு ஒப்ப நான் கவிதை எழுதவில்லை. என் புதுக்கவிதைக்கு ஒரு இலக்கணம் உண்டானால் இலக்கணம் இருக்கத்தான் வேண்டும். ஏனென்றால் அதை இலக்கியமாக உணர்ந்தே நான் எழுத முற்படுகிறேன் - அதைப் பின்னர் நிர்ணயித்துக்கொள்ளலாம். இப்போது கவிதையில் நான் செய்ய முயற்சித்ததெல்லாம் விஷயத்தையும் வார்த்தைகளையும் உள்ளத்து உண்மையிலே குழைத்து, காதும் நாக்கும் சொல்லுகிற கட்டுபாடுகளுக்கும் கண் தருகிற கட்டுபாடுகளுக்கும், உட்பட்டு எழுதுவது என்கிற காரியம்தான் இன்றைய உண்மையை நிரந்தரமாக்குகிற காரியம்தான் என் முயற்சி. இன்றைய என் அனுபவத்தை வார்த்தைகளால், பேச்சு வழக்கு வார்த்தைகளால் பேசும் சத்தத்தில் இலக்கியமாக்க, கவிதையாக்க முயலுகிறேன். பயன் கழுதையா குதிரையா வசனமா கவிதையா இலக்கியமா பிதற்றலா என்று சிலர் கேலிசெய்பவர் இருக்கலாம். சோதனை என்று சொல்லும்போது இதற்கெல்லாம் பயப்பட்டுக் கட்டாது. இலக்கியச் சோதனைகள் பலவும் ஆரம்பத்தில் கேலிக்கிடமாகவேதான் காட்சியளித்தன. புதுக்கவிதை தோன்றுகிறதா என்பதுதான் தீர்மானமாக வேண்டிய விஷயம். தோன்றாவிட்டால் முயற்சியையே மறந்துவிடலாம். தோன்றிவிட்டால் நல்லதுதான். புதுத்தமிழ் இலக்கியம் மேலும் வளம்பெறும்.

என் புதுக்கவிதை முயற்சிகள் கவிதையாகவும் இலக்கணமாகவும் உருவெடுக்க, வாசகர்கள் ரசிகர்கள் உள்ளத்தில் எதிரொலித்துப் பலன் தரப் பல காலமாகலாம் என்பதையும் அறிந்தேதான் நான் இந்தக் கவிதைச் சோதனையைச் செய்து பார்க்கிறேன். நம்முடைய இன்றைய தினசரி வாழ்விலே இடம்பெறுகிற விஷயங்கள் எல்லாமே உவமைகள், உருவகங்கள், ஏக்கங்கள், ஆசைகள், வார்த்தைகள், மௌனம் எல்லாமே என் கவிதைக்கு விஷயம். வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாக இருப்பது போலவே என் கவிதையும் சிக்கலும் சிடுக்கும் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. தெளிவு தொனிக்க வேண்டும். ஆனால் சிக்கல் விடுவிக்கக் கூடாததாகவும் இருக்க வேண்டும். கவிதை நயம் எது என்று எடுத்துச் சொல்லக் கூடாததாக இருக்க வேண்டும். புரியவில்லைபோல இருக்க வேண்டும். அதே சமயம் பூராவும் புரியாமலும் இருந்துவிடக் கூடாது. திரும்பத் திரும்பப் படித்துப் பார்க்க ஒரு தரம் படிப்பவருக்கும் ஒரு வேகம் ஒரு எதிரொலிக்கும் தன்மை, விடாப்பிடியாக உள்ளத்தைப் பிடித்துக்கொள்ளும் ஒரு குணம் இருக்க வேண்டும். இந்தப் புதுக்கவிதையிலே என்றுதான் எண்ணுகிறேன். இலக்கணம் என்று எதையும் சொல்லிக் கட்டுப்படுத்தப்படக் கூடாதது கவிதை - அது தூர விலகிப் போய்விட வேண்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம். இலக்கண அமைதிகள் பற்றி சிருஷ்டி சமயத்திலே இலக்கணத்துக்கோ அதன் இடர்ப்பாடுகளுக்கோ இடமே கிடையாது.

பொதுவாக ஒரு நான்கு விஷயங்கள் சொல்லலாம் - புதுக்கவிதைக்கும் பழங்கவிதைக்கும் பொதுவான விஷயங்கள் இவை. வார்த்தைச் சேர்க்கைகள் காதில் ஒருதரம் ஒலித்து, உள்ளத்தில் மீண்டும் எதிரொலி எழுப்புகிறதா என்பது முதல் கேள்வி. இரண்டாவதாக -எந்தக் காலத்திலுமே வாழ்க்கை எந்தக் காலத்து மனிதனுக்கும் சிக்கலானதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அந்தந்தக் காலத்துக் கவிதை - நல்ல கவிதை -அந்தக் காலத்துச் சிக்கலை அப்படியே தருகிறது நமக்கு. அப்படி இன்றையப் புதுக்கவிதை இன்றைய வாழ்க்கைச் சிக்கல் தொனிக்க அமைந்திருக்கிறதா என்பது இரண்டாவது கேள்வி. இன்றைய வாழ்க்கைச் சிக்கலையும் புதிரையும் போலவே முதலில் புரியாததுபோல இருந்து படிக்கப் படிக்கப் புரியத் தொடங்குகிறதா என்பது மூன்றாவது கேள்வி. கடைசியாகக் கேட்டுக்கொள்ள வேண்டிய நான்காவது கேள்வி இது. நள்ளிரவில் விழித்துக்கொள்ளும்போது, இந்தக் கவிதையில் ஒரு அடியாவது திடுதிப்பென்று காரணகாரியமேயில்லாமல் மனசில் தானே தோன்றிப் புது அர்த்தம் தருகிற மாதிரி இருக்கிறதா?

எந்தக் கவிதையைப் படித்துவிட்டு இந்த நான்கு கேள்விகளுக்கும் ஆம், ஆம், ஆம், ஆம் என்று பதிலளிக்க முடிகிறதோ, அந்தக் கவிதை நல்ல கவிதை - உயர்கவிதை என்று நாம் முடிவுகட்டிவிடலாம். சிலப்பதிகாரத்தில் இந்த அடிக்கு இன்னார் இன்ன உரை எழுதினார் என்பதோ கம்பராமாயணத்தில் எந்தப் பாடபேதம் சரியானது என்பதோ குறளில் இந்த வார்த்தைக்கு அன்று அந்த அர்த்தம், இன்று வேறு அர்த்தம் என்ன என்பதோ புலமைக்குச் சான்றாகலாம். கவிதையை ரசித்ததற்குச் சான்றாகாது. கவிதைக்கு உரை அவசியமே இல்லை; எந்தக் கவிதையையுமே அர்த்தப்படுத்திக்கொண்டாக வேண்டும் என்பதில்லை. அனுபவித்தால் போதுமானது. ஆம், ஆம், ஆம், ஆம் என்று மேலே குறிப்பிட்ட நான்கு கேள்விகளுக்கும் பதில் கூறிக் கொள்வதுதான் நல்ல கவிதை. ரசிகன் தன் கவிதை அனுபவத்துக்கு ஆதாரமாகக்கொள்ள வேண்டிய காரியம்.

‘புதுக்கவிதை’ மட்டும்தான் புதுக்கவிதை என்பதில்லை. பழங்கவிதையும் இன்று நான் வாசித்து அனுபவிக்கும்போது புதுக்கவிதைதான். கவிதைக்கு, எல்லா நல்ல கவிதைக்குமே தன்னையே புதுப்பித்துக் கொள்ளும் சக்தி உண்டு என்பது எல்லா மொழி இலக்கியங்களிலுமே நிதரிசனமாகக் காணக்கிடக்கிற உண்மை. சிலப்பதிகாரம் அதன் காலத்தில் மட்டுமல்ல; இன்றும் புதுக்கவிதை தான். அத்தோடு ஒப்பிடக்கூடிய கவிதை இன்று தோன்ற வேண்டுமானால் புதுக்கவிதை முயற்சிகள் மிகமிக அவசியம். அவை வரவேற்றுப் பாராட்டப்பட வேண்டும்.

இலக்கியச் சோதனைகளில் எப்போதுமே வெற்றி தோல்விகள் பூரணமானவை. என் புதுக்கவிதை முயற்சி வெற்றிபெறும் என்றே நான் எண்ணிச் செய்கிறேன். சோதனைகளின் தன்மையே இதுதானே! செய்து, செய்து பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.

(சரஸ்வதி ஆண்டுமலர் 1959இல் வெளிவந்த கட்டுரை)

ஆனந்த விகடனில் “அழியாச் சுடர்கள்”

 

vikatan

படம் உதவி : தமிழ் மகன் S.Senthilathiban

Feb 25, 2010

அக்ரகாரத்தில் பூனை – திலீப் குமார்

திலீப் குமார்

”இந்த கிழட்டுமுண்டைக்கு ஒரு சாவு வர மாட்டேன் என்கிறது. இதோடு இது ஏழாவது தடவை!” பப்லிப் பாட்டி அசூயையுடன், தாழ்ந்த குரலில் குஜராத்தியில் கறுவினாள்.

சமையற்கட்டிலிருந்து வெளியே வந்த மதூரி பாய் பார்த்ததும் புரிந்துகொண்டாள். “குடித்துவிட்டுப் போய்விட்டதா, மறுபடியும்!” “பீடை, ஒரு நிமிஷம் இந்த வீட்டில் இப்படி அப்படி நகர முடிகிறதா”… என்ற பப்லிப் பாட்டி சட்டென்று, “அது சரி மகாராணி, திறந்த வீட்டில் பூனை நுழைந்ததுகூடத் தெரியாமல் அப்படி என்ன செய்துகொண்டிருந்தீர்களோ!” என்று தன் மருமகளைப் பார்த்து இலக்கணச் சுத்தமாக வக்கணை செய்தாள்.

TuxedoCat06-09Reducedகிழவிக்கு இதற்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று மதூரிக்குத் தெரியும். ‘நான் பூஜை முடிப்பதற்குள் கடலை மாவு பிசைந்து முருங்கைக்காய் கறியைச் செய்து முடித்துவிடு’ என்று அவள்தான் சற்றுமுன் கூறியிருந்தாள். கடலை மாவு ‘கமகம’ என்று வறுபட்ட வாசனையைக் கிழவி மோப்பம் பிடிக்காமலா இருந்திருப்பாள். சமையலறைக் கதவருகே, தன் முக்காட்டை நழுவவிடாமல் இரு விரல்களாள் பிடித்தபடி, வழக்கமான கோணத்தில் வழக்கம்போல் அமைதியாக நின்றாள் மதூரி.

“சரி, சரி என்ன பார்க்கிறாய், போ, இன்னொரு கிண்ணம் பால் எடுத்துக்கொண்டு வா!… இன்று நட்டூ வந்ததும் இந்தப் பூனைச் சனியனுக்கு ஏதாவது வழிசெய்ய வேண்டும்” என்றாள் பப்லிப் பாட்டி.

பப்லிப் பாட்டி வீட்டில் சலசலப்புக் கேட்டதும், அந்த முதல் மாடி முற்றத்தில் ஜட்டி அலசிக்கொண்டிருந்த கோபால் பாயும், பாத்திரம் விளக்கிக்கொண்டிருந்த சாரதா பெஹ்னும் வந்து எட்டிப்பார்த்தார்கள். “கெட்டிக்காரப் பூனைதான்! நான் பார்க்கப்பார்க்க நொடியில் மாயமாக மறைந்துவிட்டதே” என்று தாடையில் கைவைத்து நாசூக்காய் அங்கலாய்த்தாள் சாரதா பெஹ்ன். பப்லிப் பாட்டி பதில் சொல்லாமல் பூஜை அலமாரிப் பக்கம் திரும்பினாள்.

தங்கசாலைத் தெருவில் ஏகாம்பரேஸ்வர் கோயிலுக்குப் பின்புறம் தெப்பக்குளத்தைச் சுற்றி ஏகாம்பரேஸ்வர் அக்ரஹாரம் ‘ப’ வடிவில் இருந்தது. பொதுவாக ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில் பூனைகளே நுழைவதில்லை. கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளில் அக்ரஹாரத்தில் ஒரு பூனைகூட நுழைந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அக்ரஹாரவாசிகளும் பூனைகளை அவ்வப்போது தங்கசாலைத் தெருவிலோ கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலோ அல்லது  கொண்டித்தோப்பிலோதான் பார்க்க நேரிட்டது. ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில் பூனைகள் நுழையாததற்குச் சூழலியல் காரணங்கள் என்பதைவிடவும் தத்துவார்த்தக் காரணங்கள்தான் ஏதாவது இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அக்ரஹாரவாசிகளில் பெரும்பாலோர் புஷ்டி மார்க்கி வைஷ்ணவர்கள். தென்கலை வைஷ்ணவர்களுக்குப் பூனைகளின்மீது இருக்கக்கூடிய அபிமானம் புஷ்டி மார்க்கிகளிடம் இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. ‘பாலகிருஷ்ண’ பிரதானமான புஷ்டி பார்க்கத்திலும் பஷு பட்சிகளிடம் அன்பு என்ற உப கோட்பாடு இருப்பது வாஸ்தவம்தான். ஆனாலும், பாலித்தின் பைகளையும், சினிமாப் போஸ்டர்களையும் தின்று, கண்ட இடத்தில் சாணி போடும் மாடுகளுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். கிருஷ்ண பரமாத்மனே ஒரு மாட்டுக்காரந்தானே! பூனைகளின் உள்ளுணர்வு இந்தப் பேருண்மையைச் செம்மையாக விளக்கிக்கொண்டிருந்தது போலும் — அஃதாவது சென்ற ஏப்ரல் மாதம்வரை.

மே மாதம், மேற்கூறிய கிழட்டுப் பெட்டைப் பூனை எதேச்சையாக அக்ரஹாரத்தில் நுழைந்ததை யாரும் எதேச்சையாகக்கூடக் கவனிக்கவில்லை. அக்ரஹாரத்தின் 24 மத்தியவர்க்கக் குஜராத்திக் குடும்பங்கள் வாழும் 25-ஆம் எண் கட்டடத்தில், முதல் மாடியில் 9ஆம் எண் வீட்டின் முன்னறையில் பப்லிப் பாட்டி பூஜைக்குப் பால் எடுத்துவைத்துவிட்டு பாலகிருஷ்ணனுக்காக பீடா தயாரிக்க வெற்றிலையைக் கழுவ உட்கட்டுக்குச் சென்ற ஓரிரு நிமிடங்களில் துல்லியமாகப் பிரசன்னமாகி, தயக்கமின்றி உள்ளே புகுந்து ஒரு முழுக் கிண்ணப்பாலை நக்கித்தீர்த்துவிட்டு எதுவுமே நடக்காததுபோல் அது திரும்பிக்கொண்டிருந்தபோதுதான் முதல்முறையாகக் கண்ணில் பட்டது.

பூனையைப் பார்த்ததும் பப்லிப் பாட்டிக்கு முதலில் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. “அரே… அரே… பிலாடி., பிலாடி. மதூ பிலாடி… மதூ பிலாடி.”(பிலாடி - பூனை மதூ - மதூரி) என்று சத்தமாக குஜராத்தியில் உளறினாள். சத்தம் கேட்ட பூனை திரும்பிப் பார்த்துச் சலனமின்றி ஓரிரு கணங்கள் நடுக்கூடத்தில் நின்று, பாட்டியைக் கண்ணுக்கு கண் பார்த்தது. பிறகு அலட்சியமாக நடந்து சென்றது. கதவருகே இருந்த மடிக்கோலைப் பாட்டி சட்டென்று எடுத்துப் பூனையை நோக்கித் தாறுமாறாக எறிந்தாள். பூனை லாவகமாக நகர்ந்து மறைந்தது.

குழாயடியிலிருந்து ஈரக்கையுடன் ஓடிவந்த மதூரிக்குத் தன் மாமியாரின் கலவரமடைந்த முகத்தைப் பார்த்ததும் முதலில் சிரிப்புதான் வந்தது. ஆனால் சிரிக்கவில்லை அவள். பப்லிப் பாட்டி உதட்டை மடித்து ஆதங்கத்துடன் நின்று கொண்டிருந்தாள். “போனால் போகிறது விடுங்கள் பா, வாயில்லா ஜீவன்” என்ற மதூரியை, “ச்சீ வாயை மூடு, மலட்டுக் கழுதை” என்று வன்மத்துடன் இரைந்தாள். சிறுமைப்பட்டு நின்றாள் மதூரி.

பப்லிப் பாட்டிக்கு பாரியான சரீரம். நரைதிட்டான சிறு கொண்டை. நீண்ட பெரிய மூக்கு. மெலிதான எஃகு பிரேம் போட்ட மூக்குக்கண்ணாடி. கழுத்தில் துளசிமாலை.

செக்கச்செவேலென்று பழம்போல் இருப்பாள்.

அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து குளித்து, வெள்ளைப் புடவை அணிந்து, பாழும் நெற்றியோடு, ஐந்து கட்டடம் தள்ளியிருந்த ஹவேலிக்குச் (புஷ்டி மார்க்கிகளின் கோயில்) சென்றால் 10 மணிக்குத்தான் திரும்பிவருவாள். வந்தபின், தன் குடும்ப விக்ரஹங்களுக்கு விஸ்தாரமாகப் பூஜை செய்யத் துவங்குவாள். சமையலைறைக் கதவருகே இருக்கும் கண்ணாடிச்

சட்டமிட்ட ஒரு தேக்கு அலமாரிமுன் உட்கார்ந்துகொள்வாள். அலமாரியைத் திறந்தால் சின்னச்சின்ன விக்ரஹங்கள் ஜரிகைத் துணி அணிவிக்கப்பட்டுக் குட்டிக்குட்டி மெத்தைகள்மேல் உட்கார்ந்திருக்கும். பாட்டி எல்லாவற்றையும் dilipkumarமுறையாக வெளியே எடுப்பாள். ஜரிகை உடைகளைக் கழற்றிவிட்டு, விக்ரஹங்களுக்கு ஸ்நானம் செய்விப்பாள். வெல்வெட் துணியால் அவற்றைத் துடைத்து, பிறகு பெரிய பிஸ்கட் டப்பாவிலிந்து புதிய வஸ்திரங்களை எடுத்து நிதானமாக அணிவிப்பாள். பிரதான விக்ரஹமான பாலகிருஷ்ணனுக்குக் கட்டைவிரல் சுற்றளவில் ஒரு ஜரிகைத் தொப்பியும் இருக்கும். குங்குமப்பொட்டு வைத்து முடித்தபின் மீண்டும் அவற்றைக்  குட்டிக்குட்டி மெத்தைகள் மேல் உட்காரவைப்பாள். பிறகு, அலமாரிக்குமுன் ஒரு பலகைமேல், ஒரு பெரிய தாம்பாளத்தில் அன்றைய உணவு வகைகள் எல்லாவற்றையு, சிறுசிறு கிண்ணங்களில் வட்டமாக அடுக்கிவைப்பாள். ஒரு கிண்ணத்தில் சின்னச்சின்ன பீடாக்கள்கூட இருக்கும். சற்றுக் கழித்து தீபாராதனை காட்டி, மணி அடித்து, ஜெய ஜெகதீஸ்வர ஹரே மெட்டில் ஒரு பஜனை பாடி அலமாரியை மூடிவிடுவாள். அதற்குப் பிறகுதான் பச்சைத் தண்ணீர்கூடக் குடிப்பாள்.

பப்லிப் பாட்டியை முன்னிட்டு ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்திற்க்கு அபார பிரக்யாதி ஏற்பட்டிருந்தது. ஆன்மீக விஷயங்களில் கரைகண்டவள் என்று பெயரெடுத்திருக்கிறாள். அதிலும் குறிப்பாகப் புஷ்டி மார்க்க நியம நிஷ்டைகளில் அவள் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது. என்ன பிரச்சினைக்கு என்ன விரதம், என்ன பூஜைக்கு என்ன பலன், சிரார்த்தத்திர்ற்கு, திருமணத்துக்கு, வளைகாப்புக்கு, நவராத்திரிக்கு, நலங்குக்கு என்று எல்லா வைபவ விதிமுறைகளும், பரிகார உப விதிமுறைகளும் அவளுக்கு அத்துபடி. பாகவதத்தை தலைகீழாக ஒப்பிப்பாள். தத்துவ விசாரத்தில்கூட அதன் நுட்பமான எல்லைகள்வரை சென்று வாதிடுவாள். (சில வாரங்களுக்கு முன்பு, புஷ்டி பார்க்கம் குறித்து முனைவர் பட்ட ஆய்வுசெய்துகொண்டிருந்த ஒரு மாணவி பரோடாவிலிருந்து வந்து இவளுடன் பேசிக் தெளிந்துவிட்டுப் போனாள்.) ஒரு விசேஷத்திற்கு அவள் வந்திருக்கிறாள் என்றால் அங்கு மந்திரம் சொல்ல வந்திருக்கும் பிராமணர்கள்கூட உஷாராக இருப்பார்கள்.

பப்லிப் பாட்டி இவ்வளவு அருமை பெருமைகளுடன் திகழ்ந்து கொண்டிருந்தாலும் அவளது மாட்டுபெண்ணான மதூரி அவற்றைப் பிடிவாதமாக ஏற்க மறுத்தாள். மதூரியைப் பொறுத்தவரை “கிழவி லேசுபட்டவள் இல்லை” என்ற எண்ணமே இருந்தது.

என்றாலும், தன் மாமியாரின் பூஜைக்கு இப்படி அடிக்கடி பங்கம் ஏற்படுவது குறித்து அவளுக்கும் வருத்தம்தான். சென்ற ஆறு முறையும் இப்படித்தான் நிகழ்ந்தது. விளக்குத் திரி எடுக்க, பருப்பு சாதம் பிசைய, பழங்கள் நறுக்க, தீப்பெட்டி எடுக்க என்று பப்லிப் பாட்டி உட்கட்டுக்குள் மறைந்த ஓரிடு நிமிடங்களில் சொல்லிவைத்தாற்போல் வந்து கண் இமைக்கும் நேரத்தில் காரியத்தை முடித்துவிட்டுப் போய்விடும் அந்தக் கில்லாடிப் பூனை.

அன்று மாலை, பப்லிப் பாட்டியின் மகன் நட்டூ(என்கிற நட்வர்லால்) அலுவலகம் முடிந்து வீடு திரும்பியதும் அவனிடம் பாட்டி பூனையைப்பற்றிப் புகார்செய்தாள்.

“நட்டூ, நீ என்ன செய்வாயோ ஏது செய்வாயோ எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கிழட்டுப் பீடையை எப்படியாவது ஒழித்துக்கட்டிவிடு.”

நட்டூ பார்ப்பதற்க்குத்தான் போலீஸ்காரன் போல் வாட்டசாட்டமாக இருப்பானே ஒழிய சரியான அசமாந்தம். சத்தம்போட்டு பேசக்கூடப் பயப்படுவான். செம்புதாள் தெருவில் ஒரு மார்வாடி வியாபாரிக்கு 2-ஆம் நம்பர் கணக்கு எழுதுகிறான். நட்டூ 1-ஆம் நம்பரில் ஆயிரமும் 2ம் நம்பரில் ஆயிரமும் சம்பளம் வாங்குகிறான். வம்புதும்பு, பீடி சிகரெட், சினிமா-டிராமா எதுவும் கிடையாது. அவன் உண்டு. அவன் வேலையுண்டு. அலுவலகம் விட்டு வீடு திரும்பியதும் உடைமாற்றி, டீ சாப்பிட்டுவிட்டு ஹவேலிக்குப் போய்விடுவான். இரவு எட்டு மணிக்கு மேல்தான் திரும்புவான். சனிக்கிழமை மட்டும் இரவு பத்து மணிக்கு பஜனைக்குப் போவான். குஜராத்தி வருஷப்பிறப்பு அன்று மதூரியை சினிமாவுக்கோ பீச்சுக்கோ அழைத்துச்செல்வான்.

“என்ன பா சொல்கிறாய்! பூனையைக் கொல்வது பாவமில்மையா?” என்று பதறினான் நட்டூ.

”அட உப்பில்லாதவனே, பூனையைக் கொல்லவா சொன்னேன். அந்தக் கழுதையை எங்காவது விரட்டிவிட்டு வா என்கிறேன். பூனையைக் கொல்வது பாவம் என்று எனக்குத் தெரியாதா…. பேசிகிறான் பார்.”

”எங்கேயென்று போய் விரட்டுவது, பா. விரட்டுவதற்கு முதலில் அது கண்ணில் பட்டால்தானே. எல்லாம் உன் அஜாக்கிரதையினால்தான். பூஜை பண்ணுகிறேன் என்று, ஊருக்கு முன்னால் பால் கிண்ணத்தை எடுத்து வந்து நடுக்கூடத்தில் வைத்துவிட வேண்டியது. அப்புறம், ஹாய் ஹாய் என்று அலற வேண்டியது.” (ஹாய்=அய்யோ)

“போதும் போதும்”, ரொம்ப சமர்த்தாகாதே. பூஜை எப்படிப் பண்ணுவது என்று இனி நான் உன்னிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறது.”

“சரி சரி, விடு. சூரியிடம் சொல்கிறேன். அவந்தான் இந்த மாதிரி வேலைக்கு லாய்க்கு.”

“உன் மூளை பிசகித்தான்விட்டது! போயும் போயும் அந்த துஷ்டப் பயலா. அந்த அக்கிரமி பூனையை நிஜமாகவே கொன்றாலும் கொன்ருபோட்டுவிடுவான். ஜாக்கிரதை.”

“நீ அதைப்பற்றிக் கவலைப்படாதே. எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றான் நட்டூ தீர்மானமாக.

சூரி - பப்லிப் பாட்டியின் தம்பி ரஞ்சித்சிங்கின் மூத்த மகன் சுரேந்திரன். வேலைவெட்டி இல்லாதவன். ‘பளிச்’சென்று உடைகள் அணிந்து நண்பர்கள் புடைசூழ, கல்கத்தா பீடாவை ஓயாமல் குதப்பிக்கொண்டு உற்சாகமாகத் திரிந்துகொண்டிருப்பான். குஜராத்தி மற்றும் தமிழ் மொழிகளின் எல்லாம் கெட்டவார்த்தைகளையும் சரளமாகப் பயன்படுத்துவான். கடவுளையும் பணக்காரர்களையும் அவனுக்குப் பிடிக்காது. ஆனால் அன்புக்குக் கட்டுப்பட்டவன். அக்ரஹாரத்தில் எல்லாத் தப்பு-தண்டாவுக்கும் அவன்தான் கட்டைப் பஞ்சாயத்து. ‘நீதிக்குப் பின்தான் சாதி’ என்ற அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பு, அக்ரஹாரத்திற்க்குப் பூ விற்க வந்த பெண்ணிடம் வம்புசெய்த ஒரு குஜராத்தி நடுவயதுக்காரர்களின் சைக்கிளைச் சேறும் பாசியும் படிந்த கோயில் தெப்பக்குளத்திற்குள் தூக்கிக் கடாசிவிட்டான்.

சமையலறையில் சப்பாத்திக்கு மாவு பிசைந்துகொண்டிருந்த மதூரிக்குத் தாயும் மகனும் பேசிக்கொண்டது காதில் விழுந்தது. அவள் அந்த வெள்ளைப் பூனையை நினைத்துக்கொண்டாள்.

அந்த வயதான பூனை முகம் தளர்ந்து, தோல் சுருங்கி, ரோமம் உதிர்ந்து சாகக் காத்திருக்கும் பாவனையில் பரிதவித்துக் காணப்படும். அது உற்றுப்பார்த்தபோது திடீரென்று ஏதாவது பேசத்துவங்கிவிடும் என்றுகூடத் தோன்றும் அவளுக்கு. பப்லிப் பாட்டி வீட்டில் இல்லாத சமயங்களில் அது முன்கதவருகே வந்து களைத்துப்போன குரலில் ‘மியாவ்’ என்று வாயைப் பிளந்து காட்டும். தவறாமல் ஒவ்வொரு முறையும் அதற்குப் பால் கொடுத்திருக்கிறாள் மதூரி. ஒரு வகையில் தனக்கும் அந்த பூனைக்கும் அதிக வித்தியாசமில்லை என்று நினைத்தாள். அந்தப் பூனைபோலவே தானும் பதுங்கிப் பதுங்கி வாழ்வதாகப் பட்டது. அந்தப் பூனைக்குக் குட்டிகள் இருக்குமா? நிச்சயம், அதன் பருவத்தில் அது ஓரிரு குட்டிகளையாவது ஈன்றிருக்கும்.

அல்லது ஒருவேளை அதுவும் தன்னைப்போல் மலடுதானா. அதன் நிராதரவான சின்ன வாழ்க்கையின் சின்ன சாகஸங்களைப்போல்தான் தன் வாழ்க்கையிலும் என்று நினைத்தாள் மதூரி.

பூனைக்கு ஒரு கிண்ணம் பால் என்பது தனக்கு ஒரு புடவை அல்லது கடற்கரையில் ஒரு மாலை அல்லது ஒரு இந்திப் படம். அந்த பூனையைப் போலவே தானும் ஒரு நாள் முதிர்ந்து சிதைந்துவிடுவோம் என்று தோன்றியது. அந்த பூனையைப்போலவே தன்னையும் ஒரு நாள் தனிமை வாட்டும். அன்புக்கான சந்தர்ப்பம் வயோதிகத்தில் நிச்சயம் இருக்காது.

செலுத்துவதற்காக மண்டியா கிடக்கிறது அன்பு. அப்படியானால் யாருடைய இதயத்தில். பப்லிப் பாட்டியின் இதயத்திலா. தன் கணவன் நட்டூவின் இதயத்திலா. எங்கே… எங்கே பதுங்கிக் கிடக்கிறது அன்பு என்ற அபத்தம். அந்த கிழட்டுப் பூனையின் பழுப்பு நிறக் கண்களிலா?

பிசைந்த சப்பாத்தி மாவைத் திரட்டித் தட்டில் ஓங்கி அறைந்தாள் மதூரி.

நட்டூவுக்குப் பூனை விஷயம் பெரியதாகப் படவில்லை. அவன் அதை உடனே மறந்துவிட்டான். ஹவேலியிலிருந்து திரும்பும்போது சூரியைப் பார்த்ததும்தான் ஞாபகம் வந்தது.

”மனே கயி தீத்துந்தே நட்டூ பாய்! சம்ஜோ தமாரு காம் தய் க்யூந்.”(என்னிடம் சொல்லிவிட்டீர்கள் அல்லவா, நட்டூ அண்ணா. உங்கள் காரியம் ஆகிவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள்.) சூரி உற்சாகமாகக் கூறினான். “நீங்கள் சொன்னால் அந்தப் பூனையை அக்ரஹாரத்தைவிட்டு என்ன, அமெரிக்காவிற்கேகூட ‘பாக்’ செய்யமாட்டேனா என்ன?”

நட்டூ கலவரத்துடன், “அதெல்லாம் வேண்டாம். 25-ஆம் நம்பர் பக்கம் வராமல் செய்துவிடு. அது போதும்” என்றான்.

“டன், நட்டு அண்ணா டன்” என்று ஆங்கிலத்தில் உறுதி அளித்தான் சூரி.

மறுநாள் காலை பாட்டியின் மாப்பிள்ளை ஹன்ஸ்ராஜ் வேலை விஷயமாகக் கொச்சியிலிருந்து வந்து இறங்கினார். அவர் எப்போதும் இப்படித்தான். சொல்லாமல்கொள்ளாமல் திடுதிப்பென்றுதான் வருவார்.

பப்லிப் பாட்டி தன் மாப்பிள்ளையை ரொம்பவும் உயர்வாகத்தான் மதித்தாள். அவரிடம் அவளுக்குப் பிடிக்காத விஷயம் அவர் பொடிப் போடுவார் என்பதுதான். ஹன்ஸ்ராஜூக்கு முப்பத்தெட்டு வயதுதான். பாகவதர் கிராப்போடு முகத்தை மறைக்கும் அடர்ந்த தாடி மீசையுடன் பேண்ட் போட்ட சாமியார்போல் இருந்தார். கல்யாணத்திற்குப் பிறகுதான் இப்படி ஆகிவிட்டார் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள்.

பப்லிப் பாட்டியின் மகள் நிம்மு, கல்யாணத்திற்கு முன் சாதாரணமாக இருந்தவள், கல்யாணம் ஆனவுடன் திடீரென்று உடல் பருக்க அரம்பித்துவிட்டாள். முதலில் ஏதோ கல்யாணமான சந்தோஷத்தில் தான் உடல் பருக்கிறது என்று நினைத்தார்கள். பிறகு, கொஞ்சம்கொஞ்சமாக அவ்ள் ரொம்பவும் குண்டாகிப்போனபோதுதான் அது எதோ வியாதி என்று தெரிந்தது.

ஹன்ஸ்ராஜுக்குப் பூர்வீகச் சொத்தும் இருந்ததோடு அவரும் நிறையச் சம்பாதித்தார். தன் மனைவிக்காகப் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தார். பயன் இல்லை. நிம்மு முப்பது வயதில் அசாத்திய குண்டாகிவிட்டாள். ஜாக்கட் தைக்க 2 1/4 மீட்டர் துணி தேவைப்பட்டது. ஆட்டோவில் அவள் ஒருத்திதான் உட்கார முடியும். பத்து அடி நடப்பதற்குள் மூச்சுவாங்கும்.

வீட்டில் கூட அவள் உட்கார்ந்தோ தவழ்ந்தோதான் காரியங்களைச் செய்வாள். அவளது  உடல்வாகிற்கு அனுகூலமான வகையில் சமையல்கட்டையே மாற்று அமைத்திருந்தார்.

ஹன்ஸ்ராஜ். நிம்மு தன் பருமனைபற்றி அதிகம் கவலைப்படமாட்டாள். சிரிக்கச் சிரிக்க எல்லோரிடமும் அன்பு பாராட்டுவாள். அவளுடன் பத்து நிமிடம் பழக நேர்பவர்கள்கூட நெகிழ்ந்து துடித்துவிடுவார்கள். விருந்தினர்கள் வரும்போது, சமையலைறைக்குள் ஒரு சிறு குழந்தையைப்போல் தவழ்ந்து தவழ்ந்து காரியங்கள் செய்து உபசரிப்பாள். அதிகம்போனால் அவள் இன்னும் பத்து ஆண்டுகள்தான் உயிர்வாழ்வாள் என்று டாக்டர்கள் கூறிவிட்டார்கள். “நான் செத்தால் என்னைத் தூக்குவதற்குப் பதினாறு பேர் வரவேண்டும் என்று சொல்லி ‘கெக்கெ கெக்கெ’ என்று சத்தமாக சிரிப்பாள் நிம்மு. ஹன்ஸ்ராஜூக்கு தன் நிம்முமீது உயிர்.

ஹன்ஸ்ராஜ் தங்கியிருந்த ஒரு வாரமும் பூனை பப்லிப் பாட்டி வீட்டுப்பக்கம் வரவில்லை. மாப்பிள்ளைக்கு உபசரணை செய்யும் மும்மரத்தில் பாட்டிகூட அதை மறந்துவிட்டிருந்தாள்.

ஹன்ஸ்ராஜ் ஊருக்குக் கிளம்பும்போது நிம்முக்குப் பிடித்த பட்சணங்களை ஒரு பெரிய டப்பாவில் போட்டுக் கொடுத்தாள்.

“இந்தக் தீபாவளியிலிக்காவது நிம்முவை அழைத்துவர முடியுமா என்று பாருங்கள்,” என்றாள்.

“அவள் நிலைமைதான் உங்களுக்குத் தெரியுமே. அவள் வருவதென்றால் வேன் வைத்துத்தான் அழைத்துவர வேண்டும். அதற்கு நீங்களே பேசாமல் கொச்சிக்கு வந்து ஒரு வாரம் தங்கிவிட்டுப் போங்களேன். உங்களுக்கும் மாறுதலாக இருக்கும்.”

”என்ன மாறுதல் போங்கள். நீங்கள் சொன்னால் ஆகிவிட்டதா? நான் கிளம்பிவிட்டால் வீட்டை யார் பார்த்துக்கொள்வார்கள்? இவளுக்கு துப்பிக் கிடையாது. கவர்னர் பட்வாரிக்குக் கூட நேரம் கிடைத்துவிடும். எனக்கு எங்கே?” என்று மருகினாள் பாட்டி.

வாசல் பக்கம் நட்டூவைப் பார்த்ததும், “சரி நீங்கள் கிளம்புங்கள். நட்டூ ரிக்‌ஷாக்கூடக் கூட்டிவந்துவிட்டான்.”

வாசல்வரை வந்து வழியனுப்பிய பாட்டி, தன் மகளை நினைத்து, அந்த அழுகையை அடக்கிக்கொண்டாள். “போய்வருகிறேன் சகோதரி” என்று மதூரியைப் பார்த்துச் சொல்லிவிட்டுக்

கிளம்பினார் ஹன்ஸ்ராஜ்.

பத்து நாட்கள் கழித்து தீடீரென்று ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 25-ஆம் எண் கட்டடத்திற்குச் சூரி வந்தான் அந்த கிழட்டுப் பூனையுடன். பப்லிப் பாட்டு வீட்டுக் கதவருகே வந்ததும் குழந்தைகளும் பெரியவர்களும் அவனைச் சூழ்ந்துகொண்டார்கள். சூரியின் மடக்கிய இடது கைக்குள், அவன் மார்பில் தலைசாய்ந்து ஒரு குழந்தையைப்போல் ஒடுங்கிக்கொண்டிருந்தது பூனை.

”என்ன ஜாலம்டா இது! திருட்டுச் சனியன் உன்னிடம் இப்படிக் குழைகிறதே” என்று வியந்தாள் பப்லிப் பாட்டி.

“அதுதான் சூரி! தெரிந்துகொள்ளுங்கள். இந்தப் பத்து நாட்களில் ஐந்து லிட்டர் பாலையும் எட்டு டபுள் ஆம்லெட்டுகளையும் விழுங்கியிருக்கிறது இது. பூனையை வசியம்செய்வது என்றால் சும்மாவா! கொண்டுபோய் விடுவதற்குமுன் உங்களிடம் காண்பித்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன். சொல்லுங்கள் அத்தை, எங்கே கொண்டுபோய் விடட்டும்…. திருவொற்றியூரிலா திருவான்மியூரிலா?”

சூரி தன் வலது கையால் அதன் முதுகைத் தடவிக் கொடுக்கக் கொடுக்க, பூனை புதுப்பெண்போல் கூச்சத்துடன் நெளிந்து நெளிந்து காட்டியது.

பூனையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த பப்லிப் பாட்டி, ஏதோ தீர்மானித்தவள்போல், “டேய் சூரி, போய்விடாதே, இதோ வருகிறேன்” என்று உள்ளே சென்றாள். தன் மாப்பிள்ளை மறந்துவிட்டுச் சென்ற பொடி டப்பியைத் தேடினாள்.

அவசரமாகத் திரும்பி வாசலுக்கு வந்தாள். ரகசிய பாவத்துடன் கையசைத்துச் சூரியை அருகே வரச்சொன்னாள். பின் தாழ்ந்த குரலில் பூனையைத் தன்னருகே கொண்டுவரும்படி சொன்னாள். சூரி பூனையின் வயிற்றைப் பிடித்தபடி அதை பாட்டிக்குமுன் நீட்டினான். பாட்டி, சட்டென்று இடுப்பில் வைத்திருந்த மூடிய கையைப் பூனையின் முகத்தருகே கொண்டுவந்து, அதேநொடியில் உள்ளங்கையைத் திறந்து அதிலிருந்த மூக்குப்பொடி முழுவதையும் பூனையின் மூக்கில் வைத்து அழுத்தித் தேய்த்துவிட்டாள்.

மறுகணம், மின்சாரம் தாக்கியதுபோல் பூனை சூரியின் கைகளிலிருந்து எகிறி மல்லாக்கக் கீழே விழுந்தது. அதற்குப் பொறி கலங்கியிருக்க வேண்டும். பூனை எழுந்து நிற்க முனைந்ததும் மறுபடியும் எம்பித் தாறுமாறாக விழுந்தது. முற்றத்தின் குழாயடி, சாக்கடை, கழிவறைக் கதவு என்று மாறி மாறி மோதி விழுந்தது. அது எழுப்பிய வினோதமான குரல் பயங்கரமாக இருந்தது. ஒவ்வொரு முறையுமது சமாளித்து எழுந்து நடக்க யத்தனித்தபோது கால்கள் குழைந்து விழுந்தன. தன் சிறிய தலையை இப்படியும் அப்படியுமாகத் திருப்பிப் பரிதாபமாகத் தும்மித்தும்மி விழிந்தது.

பப்லிப் பாட்டி கையை உதறினாள். பூனைக்குப்போக, எஞ்சியிருந்த மூக்குப்பொடி காற்றில் பறக்க, குழுமி இருந்தவர்கள் பலரும், சூரி உட்படத் தும்ம ஆரம்பித்தார்கள். தள்ளி நின்றுகொண்டிருந்த சில ஆண்களும் சிறுவர்களும் பூனை தும்மி விழுவதைப் பார்த்துக் குலுங்கிக்குலுங்கிச் சிரித்தார்கள். பூனை அந்த முதல் மாடி விளிம்பின் ஒற்றைக்கல் சுவரில் ஏறி, மீண்டும் தும்மி, சத்தத்துடன் கீழ்த்தளத்தில் விழுந்தது. பிறகு மெல்ல எழுந்து கட்டடத்தை விட்டு ஓடியது.

சிரிந்துக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து மிக மிக ஆபாசமான ஒரு வசையைக் கத்திவிட்டுச் சூரி பூனையைத் தொடர்ந்து கீழே ஓடினான்.

திடீரென்று அங்கு ஒரு நிசப்தம் படர்ந்தது. ஒவ்வொருவராக எல்லோரும் கலைய ஆரம்பித்தார்கள். பாட்டி, வீட்டின் உட்புறம் திரும்பியதும், நடுக்கூடத்தில் மதூரி நின்றுக்கொண்டிருந்தாள். பாட்டி சட்டென்று தலைகுனிந்து முன்னே நகர்ந்து அவளைக் கடந்தாள்.

அன்று மாலை பாட்டியைப் பார்க்க யாரோ வந்தார்கள். பப்லிப் பாட்டி ஆரம்பித்தாள் : “புஷ்டி மார்க்கம் என்ன சொல்கிறதென்றால்……..”

********

இந்தச் சிறுகதை ‘க்ரியா பதிப்பகம்’ வெளியீடாக வந்த ‘கடவு’ என்ற திலீப்குமாரின் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றது. இந்தச் சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு The Leeds University Journal-இல் 2005-ஆம் ஆண்டு வெளிவந்தது.

முதல் பிடில் - ந.பிச்சமூர்த்தி

ந.பிச்சமூர்த்தி

     நடு நிசி, ஒரு சின்னக்குரல் - குழந்தை கத்துவது போல, ஒரு நீண்ட எதிர் குரல் - சமாதானம் சொல்லுவது போல, சின்னக் குரல் பழுத்து வேதனை அடைந்தது. எதிர் குரல் ஏங்கிக் கனிந்து ஓலமாயிற்று. தெருவாசிகளின் தூக்கம் கலைந்தது. ஒவ்வொருவராக எழுந்து மாடியிலிருந்து இருளில் கூர்ந்து பார்த்தனர். முதலில் ஒருவர் கண்ணிலும் ஒன்றும் படவில்லை. அதனால் திகிலை விளைவிக்கும் அந்த ஓலம் மட்டும் நிதானமாய் போகப் போக உயர்ந்து கொண்டு போயிற்று. கடைசியில் அந்த குற்றவாளிகள் தட்டப்பட்டார்கள். இரு காதலர்கள்! ஒரு வீட்டின் கூரையின்மேல் உட்கார்ந்து காதலியைக் கூவி அழைத்துக் கொண்டிருந்தது ஆண் பூனை. நாலு அடி தூரத்தில் ஒரு ஜன்னலின் உட்புறத்திலிருந்து பெண் பூனை ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தது. அந்தக் காதலர்களுக்கு இனிப்பான அந்த சல்லாபம், தெருவாசிகளுக்கு கர்ண கொடூரமாய் இருந்தது.

   pichamoorthy  "சூ... சூ" என்று ஒருவர் மாத்தி ஒருவராக கத்தினார்கள். காதலுக்கு கண் மட்டுமல்ல, காது கூட கிடையாது போல் இருக்கிறது. பூனைகள் இருந்த இடத்தை விட்டு நகரவுமில்லை, காதல் தீ மூளப் பாடுவதை நிறுத்தவுமில்லை.

     நிமிஷத்திற்கு நிமிஷம் பாட்டு ஓங்கி, இரவின் நிசப்தத்தில் பயங்கரத்தின் பிரத்யக்ஷ  உருவாயிற்று. வந்த ஆத்திரத்தில் தெருவாசி ஒருவர், எதையோ எடுத்து பூனையைப் பார்த்து விட்டெறிந்தார். அதற்குப் பிறகு எழுந்த குரல் ஒரு நீண்ட ஓலம் மாதிரியிருந்தது. அவ்வளவு தான், அப்புறம் ஆண்பூனையின் குரல் கேட்கவில்லை. மீளவும் நடுநிசியின் மோனம்... மறுநாள் காலை மாடியில் ஒரு ஆண் பூனை செத்துக் கிடந்தது. வீட்டுக்காரர் அதை தூக்கிக் கொல்லை மைதானத்தில் எறியச் சொன்னார்.
     பூனையின் சவம் மெத்தென்ற பொருள்மீது வந்து விழுந்தது.

     "என்ன மேலே வந்து விழுகிறாய்" என்றது அந்த மெத்தென்ற பொருள்.

     "கோபித்துக் கொள்ளாதே நான் வேண்டுமென்று செய்யவில்லை. பிசகு அந்த வீட்டு மனுஷன் மேலே" என்று சமாதானம் சொல்லிவிட்டு, பூனையின் உடல், மேலே கேட்டது. "அது போகட்டும், என்னைப் போல நீயும் ஏதாவது செய்துவிட்டு இந்த மாதிரி தண்டனை அடைந்திருக்கிறாயா என்ன - மைதானத்திலே ஈ மொய்த்துக் கிடக்கிறாயே?"

     அங்கே கிடந்தது செத்துப்போன பந்தயக் குதிரை ஒன்று.

     "என் எஜமான் ஒரு இந்தியன், பந்தயப் பித்து. எனக்கு முந்தி எத்தனையோ குதிரையை வாங்கி வளர்த்து, பந்தயம் ஓட்டியிருக்கிறான். ஆனால் அவனைப் பிடித்த துரதிருஷ்டம் ஒரு தடவை கூட ஜயிக்கவில்லை. ஜயம் தான் கிட்டவில்லையே, இந்த விஷயத்தை அடியோடு மறந்துவிடக் கூடாதா? அதுதான் இல்லை. கடைசித் தடவை என்று சபதம் கூறிக் கொண்டு தன் சொத்து முழுவதையும் விற்று என்னை வாங்கினான். எனக்காக அவ்வளவு கஷ்ட நஷ்டப்பட்ட மனிதனுக்கு நான் துரோகம் செய்யவில்லை. பந்தயத்தில் முதலாவதாகவே வந்து கொண்டிருந்தேன். ஜனங்களுடைய உற்சாகத்தையும் என் எஜமானருடைய கர்வத்தையும் வர்ணிக்கத்தரமல்ல. பந்தயம் முடியும் இடம் வந்தது. என்ன காரணத்தாலோ என் கால் தடுமாறி, கீழே விழுந்துவிட்டேன். முன்னங்கால் இரண்டும் என்னாயிற்றோ. எழுந்திருக்க முடியவில்லை. நான் கீழே விழுந்ததும் இரண்டாவதாக வந்து கொண்டிருந்த இரும்பு வர்ணக் குதிரை ஜயித்து வெற்றி மாலை சூடிற்று. என் எஜமானன் பந்தய வெறியன் அல்லவா? என் மீது பிறந்த வெறுப்பில் கைத்துப்பாக்கியால் அந்த இடத்திலேயே சுட்டுப் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் போய்விட்டான். அதுமுதல் அவனுக்குப் பித்துபிடித்து விட்டதாம். இந்த மைதானத்தில் என்னைத் தூக்கி எறிந்துவிட்டார்கள். ஒரு வாரமாக இங்கே கிடக்கிறேன் கேட்பாரற்று. இப்பொழுது நீ வந்து சேர்ந்திருக்கிறாய் தோழனாக" என்று சொல்லி நிறுத்திற்று குதிரையின் சவம்.

"அப்பொழுது சரிதான். என்னைக் கொன்றவன் மீது பழிவாங்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். நீ சொல்வதைப் பார்த்தால் மனித ஜாதியையே பழிவாங்க வேண்டுமென்று தோன்றுகிறது - எப்படிப் பழிவாங்குவோம் சொல்லு" என்றது பூனை.

     "நான் பழிவாங்க யோசிக்க வேண்டாம். தானாக நடக்கும் பார்! மனிதன் மண் மீது இருக்குமட்டும் நம்மை மறக்க முடியாமல் ஆகிவிடும் பாரேன்."

     "எனக்கென்னவோ இதில் நம்பிக்கை இல்லை. வசவுக்கு வசவு, பிறாண்டலுக்கு பிறாண்டல், கொலைக்கு கொலை இது தான் நான் அறிந்த சட்டம்."

     "பின்னொரு சட்டமும் உண்டு. மரத்தை வெட்டுகிறார்களே, அதற்காக, கோடாலிக்காரனுக்கு நிழல் தர மாட்டேன் என்கிறதா?"

     "இதெல்லாம் மனிதன் சொல்லுகிற கட்டுக்கதை. எனக்குப் புரியாது. என் கருத்தை அப்பொழுதே சொல்லிவிட்டேன். பிறகு உன்னிஷ்டம். ஆனால் ஒன்று. நான் மாத்திரம் தனித்து நின்றால் என்ன செய்யமுடியும்? நீ சொல்கிறபடி கேட்கிறேன்."

     "வா வழிக்கு. நாம் இருவரும் மனம் ஒத்து சும்மா கிடந்தால் அதுவே பழி வாங்குவதற்கு மேல் பலனளிக்கும் பாரேன்..."

     இரண்டு மூன்று நாளைக்குப் பிறகு அந்த மைதானத்தின் வழியாக வந்தான் ஒரு பித்துக்குளி இந்தியன். வாய் ஓயாமல் குதிரைகளைப் பற்றி பாடிக்கொண்டிருந்தான். மைதானத்து ஓடத்தில் ஒரு பெரிய மரம் வளர்ந்திருந்தது. அதன் அடிபாகத்தில் போய் நின்று கொண்டு, குதிரைகளைப் பற்றி ஒரு ஆவர்த்தம் வைதுவிட்டு, ஒரு பத்து கஜம் விழுந்தடித்து ஓடினான்.

     குதிரையின் சிதைந்த உடல் கண்ணில் தட்டுப்பட்டது. அதன் அடர்ந்த வெள்ளைவால் மயிர் அவன் கவனத்தை இழுத்தது. ஒரு பிடிமயிரை உருவி எடுத்துக்கொண்டு ஓடினான் பூனையண்டை. கம்பிகள் போல் இறைந்து கிடந்த நரம்புகள் தடுக்கிவிட்டன. அவற்றில் நாலைந்தைப் பொறுக்கி எடுத்துக் கொண்டான். நடு வழியிலே, பொன்வர்ணத்தில் ஒரு பிரம்பு கிடைத்தது. அதை எடுத்து குதிரை வால் மயிரால் நடுவில் கட்டினான். நான்கு கஜத்திற்கப்பால் ஒரு காய்ந்த மரமொன்றிருந்தது. அதனடிப்பாகத்தில் ஒரு பொந்து. அங்கு போய் உட்கார்ந்தான். கை விஷமம் செய்ய ஆரம்பித்தது. கையிலிருந்த நரம்பை எடுத்து பொந்தின் வாயில் நெடுக்காகக் கட்டினான். வில்லை எடுத்துக் குறுக்காக இரண்டு தரம் இழுத்தான். சுத்தமான ஸ்வரங்கள் எழுந்தன. அனாயாசமாக பிறந்தது ஒரு புதிய சங்கீத வாத்யம். அது தான் முதல் பிடில்!

*****************

Feb 24, 2010

கவிதை - புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன்

கவிதை, கவிதை என்று சொல்லுகிறார்களே அதைப் பற்றி எழுத வேண்டும் என்று எனக்கு வெகு நாளாக ஆசை. இன்றைக்குத்தான் முடிந்தது.

'பேனா எங்கேயடா ? அடே ராசா நீ யெடுத்தையா ? குரங்குகளா ஒன்றை மேஜை மேல் வைக்க விடாதீர்கள். அது பேனாவாகவா இருக்கிறது ? இருந்தாலும், இந்தக் குழந்தைகள் இருக்கிறதே, சனியன்கள். மழலையாம், குழலாம், யாழாம்! அதைவிட ஒரு ஓட்டை கிராமபோனை வைத்துக்கொண்டு காதைத் துளைத்துக் கொள்ளலாம் '.

pu.pi குழந்தைகளால் என்ன பிரயோஜனம் ? சுத்தத் தமிழ் பேசத் தெரியுமா ? அவைகளுக்குத்தான் என்ன ஒரு கூட்டத்திலே பழகத் தெரியுமா ? இன்னும் அழாமல் இருக்கத் தெரியுமா ?

எங்கள் வீட்டு ராஜாவைப் பற்றிச் சொல்லவா ? சோற்றுக்குத் தாளம் போட்டாலும், வீட்டுக்கொரு ராஜாவிற்குக் குறைவில்லை. அதில் மட்டும், பாரதி சொன்னதிற்கு ஒரு படி மேலாகவே யிருக்கிறோம். எல்லாரும் இன்னாட்டு மன்னர்களின் தகப்பன்மார்!

எங்கள் வீட்டு ராஜா இருக்கிறானே அவன் பேச்செல்லாம் பாட்டு; பாட்டெல்லாம் அழுகை. அதுதான் கிடக்கிறது. அவனிடத்தில் என்ன அதிசயம் இருக்கிறது ? அவனுக்கு இருக்கும் அசட்டுத்தனத்திற்கு என்ன சொல்லுகிறது ? என்னுடைய கைத்தடியை எடுத்துக் கொண்டான், அதுதான் அவனுக்குக் குதிரையாம்! குதிரைக்கும் தடிக்கம்பிற்கும் வித்தியாசம் தெரியாத அசட்டைப் பார்த்து யாரால் உத்ஸாகப்பட முடியும் ? அதற்கும் ஒரு பிரகிருதி இருக்கிறது. அதுதான் அவன் தாயார். குதிரை மட்டுமா ? காராக மாறுகிறது, மோட்டார் சைக்கிள், இரட்டை மாட்டு வண்டி, இன்னும் என்ன வேண்டும் ?

அதுதான் கிடக்கிறது தமிழைத் தமிழாகப் பேசத் தெரிகிறதா ? இலக்கணம் தெரியுமா ? தொல்காப்பியம் படித்திருக்கிறதா ? இந்தக் குழந்தைகளினால் என்ன பிரயோஜனம் ? உங்களுக்குத் தெரியுமா அவைகளினால் என்ன பிரயோஜனம் ?

... ஓஹோ ? கவிதையா ? இன்னொரு தடவை பார்த்துக் கொள்ளலாம்.

(நன்றி : புதுமைப்பித்தன் கட்டுரைகள் - மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - பிப்ரவரி, 1954)

***

Feb 23, 2010

சுந்தர ராமசாமி - நேர்காணல்


   sura 18

நீங்கள் எழுத்தாளனாய் வாழ்வைத் தொடங்கி, இத்தனை காலம் எழுத்து வாழ்வில் பயணம் செய்து நிறைய அனுபவங்களைப் பெற்ற பின்பும் இன்று உங்கள் எழுத்து வாழ்வை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் எழுதத் தொடங்கிய பின் ஐம்பது வருடங்கள் ஓடிவிட்டன. கனவுபோல் நழுவி விட்டிருக்கிறது காலம். எப்போதும் என் எழுத்து வாழ்க்கை சீராகவோ ஒழுங்காகவோ இருந்தது என்று சொல்ல முடியாது. நிறைய மேடு பள்ளங்கள். தத்தளிப்புகள். அவதூறுகளை மௌனத்தைக் கடைப்பிடித்து எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். அவமானம். இவையெல்லாம் இருந்திருக்கின்றன. சூழல் கழுத்தை நெரித்தபோது ஒருசில வருடங்கள் எழுதாமலும் இருந்திருக்கிறேன். எழுத்தை விட்டு விடுவோமா என்றும் யோசித்திருக்கிறேன். பிழைப்புக்கான வேலை நிர்ப்பந்தங்கள் எழுத்துக்கான நேரத்தை ஒழித்துக் கட்டிவிட்ட காலமும் உண்டு. எழுத்தைக் குறைந்த பட்ச வாசகர்களிடம்கூடக் கொண்டு போக முடியாத திணறல் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. என் எழுத்துகள் பலவும் ஐநூறு அல்லது ஆயிரம் பிரதிகள் அச்சேற்றப்படும் சிற்றிதழ்களில்தான் வெளிவந்தன.

இப்போது நிலைமையில் சில மாற்றங்கள். முழு நேரமும் எழுத்து அல்லது வாசிப்புத்தான். வேறு பொறுப்புகள் இல்லை. மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் முன்னைவிடவும் எவ்வளவோ மேல். வயது ஆக ஆக ஆரோக்கியம் கூடிக்கொண்டே போகிறது. ஆகச் சிறிய வயதில்தான் ஆக மோசமான நோயாளியாக இருந்தேன்.
எதிர்மறையான விமர்சனங்களையும் அவற்றின் சூட்சுமம் பார்த்துத் தரம் பிரிக்கக் கற்றுக் கொண்டு விட்டேன். எழுத்தாளர்களின் தலைநகரமான சென்னையிலிருந்து வெகு தொலைவில் ஒரு வித்தியாசமான பின்னணியில் வாழ்ந்து வருவதால் இலக்கிய அரசியலின் சூட்சுமங்களை வெகுவாகப் பிந்தித்தான் புரிந்துகொண்டேன். ஒவ்வொன்றையும் அதனதன் இடத்தில் வைத்துப் பார்க்க இப்போது கற்றுக்கொண்டு விட்டேன். மிகுந்த நம்பிக்கையுடன், நிறையச் செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறேன். ஆசைகள் நிறைவேற சூழலின் ஒத்துழைப்பும் வேண்டும்.

  நீங்கள் எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்த தமிழ்ச் சூழலுக்கும் பின்வந்த காலங்களில், தமிழ்ச் சூழல் அதை எதிர்கொண்ட சவால்களையும் முகம் கொடுத்து முன் சென்றிருக்கிறது என்று நம்புகிறீர்களா?

மாற்றங்கள் சிறுகச் சிறுக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. பெரிய பாய்ச்சல் என்று சொல்ல முடியாது. தமிழ் இனி 2000 இலக்கிய அரங்கில்கூட நீங்கள் கவனித்திருக்கலாம். யுவன் சந்திரசேகர் என்ற கவிஞர் கவிதை பற்றிய அவரது ‘விசேஷத் தத்துவத்தைப்’ பேசும்போதுகூட இருநூறு, முன்னூறு பேர் அதைக் கேட்கிறார்கள். என் சிறுவயதில் ம. பொ. சி., ஜீவா, அண்ணா போன்றவர்கள் இலக்கியத்தை அரசியலுடன் கலந்து பேசும்போதுதான் இவ்வளவு கூட்டத்தைப் பார்த்திருக்கிறேன். ஆழமான, கடினமான இலக்கியக் கட்டுரைகளின் ஜெராக்ஸ் பிரதிகளைப் பெறத்தான் ஒரே கூட்டம். எதற்கெடுத்தாலும் புரியவில்லை என்ற பேச்சு குறைந்து கடினமான விஷயங்களையும் அதிக உழைப்பைச் செலுத்திப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் தலைதூக்கி இருக்கிறது. 

நவீனத்துவத்திற்குப் பிந்திய இலக்கியப் போக்குகளைப் பற்றிய பேச்சு - அமைப்பியல், பின்னமைப்பியல், பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம் போன்றவை - இந்திய மொழிகளிலேயே தமிழில் அதிகமாக இருக்கலாம். அல்லது அதிகமாக இருக்கும் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கலாம்.

‘பிச்சமூர்த்தியின் கலை - மரபும் மனித நேயமும்’ என்ற படைப்பு, படைப்பாளியின் ஆளுமை பற்றிய மிகவும் குறிப்பிடத்தக்க ஆய்வு ஒன்றைத் தந்தவர் நீங்கள். இப்போது புதுமைப்பித்தனின் சிறுகதைகளைத் தொகுத்து மிகவும் கனதியான தொகுப்பொன்றை வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள். தமிழ்ச் சூழலில் இவ்விரு ஆளுமைகளின் தேர்வுக்கான காரணம் என்ன?

sura22புதுமைப்பித்தனின் படைப்புகளைச் சிறப்பாகப் பதிப்பித்திருப்பவர் ஆ. இரா. வேங்கடாசலபதி. நான் அதற்கு முன்னுரை மட்டுமே எழுதியிருக்கிறேன். 
புதுமைப்பித்தன் சிறுவயதிலேயே என்னை ஆட்கொண்டவர். இதைப் பற்றிப் பல பேட்டிகளிலும் கட்டுரைகளிலும் குறிப்பிட்டிருக்கிறேன். அவரது கதையான மகாமசானத்தைப் படித்தபோது அது தந்த எதார்த்த உணர்வு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் என்னைப் பாதித்தது. மிகுந்த கிளர்ச்சி அடைந்தேன். எதார்த்தத்திற்கும் மொழிக்குமான உறவில் கூடிவந்த அழகியல் தந்த கிளர்ச்சி அது. ரொமான்டிசிஸத்துக்கு எதிரான ஒரு மனோபாவம் சிறுவயதிலிருந்து தொடர்ந்து எனக்கு இருந்து வருகிறது.

தமிழ்ச் சூழலின் வகைமாதிரிகளைப் புதுமைப்பித்தன்போல் பதிவு செய்தவர் எவரும் இல்லை. இந்த வகைமாதிரிகளின் வீச்சும் விரிவும் எனக்கு மிக முக்கியமானவை. மேலேயிருந்து கீழே இருப்பவர்கள் வரையிலும் மேன்மைகளிலிருந்து தாழ்வுகள் வரையிலும் இலக்கியப் படைப்புக்கு உகந்த விஷயம் என்பதை அவர்தான் நிரூபித்தார். பகுதிகள் என்றில்லாமல் மொத்த வாழ்க்கையையும் முக்கியத்துவப்படுத்தினார். அவர் படைப்புகளில், ‘வாழ்க்கையை நேரடியாகப் பார்’ என்ற செய்தி இருக்கிறது. இந்தச் செய்தியும் எனக்கு முக்கியமானது. தமிழ்ச் சமூகத்தின் தாழ்வு கனவும் கற்பனையும் சார்ந்த பார்வை. நீண்ட கவிதை மரபின் பின்விளைவு இது. சமயம், புராணம் ஆகியவையும் இவற்றில் கலந்து கிடக்கின்றன. தமிழர்களின் ரொமான்டிக் மனோபாவத்தைத்தான் சகல வணிகச் சக்திகளும் - இதழ்கள், திரைப்படங்கள், அரசியல்வாதிகள், சமயத் தலைவர்கள், தொலைக்காட்சி - சுரண்டிக்கொண்டிருக்கின்றன. மொழி உருவாக்கும் ரொமான்டிசிஸம்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. புதுமைப்பித்தனின் பார்வை இன்றையத் தேவை என்று நான் நம்புகிறேன்.

எழுத்தாளர்கள் தங்கள் அறச் சாரங்களை இழந்துகொண்டிருக்கிறார்கள். குறுக்கு வழியில் வெற்றி என்பதுதான் இன்றைய ஸ்லோகம். புகழ் ஒளியில் சதா இருந்துகொண்டிருக்க வேண்டும். பரிசுகள் வந்து சேருபவை அல்ல; வாங்கப்படுபவை.  அரசியல் சமரசங்களின் மூலம்தான் எழுத்தாளன் நிகழ்கால வெற்றிகளைப் பெற முடியும். இவ்வகையான சிந்தனைகள் தலைவிரித்தாடுகின்றன. இவற்றிற்கு நேர் எதிரான மன நிலையில் வாழ்ந்தவர் ந. பிச்சமூர்த்தி. அவரிடமிருந்த கல்ச்சர் ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு இன்று அவசரத் தேவையாக இருக்கிறது. தாழ்ந்து போவது அல்ல; தன்மானத்தை விட்டுக் கொடுக்காத பிடிவாதம்தான் எழுத்தாளனுக்குத் தேவை. போராட்டம்தான் அவன் வழியே தவிர சமரசம் அல்ல. கனமான புத்தகங்களைத் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தவர் பிச்சமூர்த்தி. ஆனால் அவர் தன் வாசிப்பை விளம்பரப்படுத்திக் கொள்ளவேயில்லை. தான் எழுதியுள்ள படைப்புகளை முன்னிலைப்படுத்த தானே உழைப்பது எழுத்தாளனுக்கு அவமானம் என்று அவர் நம்பினார். நாளிதழ்களில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது உடன் பணிபுரிபவர்களுக்குக்கூட அவர் ஒரு கவிஞர் என்பது தெரியாது.

இன்றையச் சூழலைக் கணக்கிலெடுத்துப் பார்க்கும்போது பிச்சமூர்த்தியைப் போன்ற ஒரு கலைஞர் வெகு சமீபத்தில் தமிழகத்தில் வாழ்ந்திருந்தார் என்பதை நம்பவே கஷ்டமாக இருக்கிறது. அவருடன் உறவு கொண்ருந்தவர்கள் எல்லோரும் மிகவும் சாதாரணமானவர்கள். பண்டாரங்கள், பைராகிகள், கைரேகை பார்ப்பவர்கள், ஜோசியர்கள், அரைகுறை வைத்தியர்கள், பிச்சையெடுப்பதற்காகத் துறவறம் பூண்டவர்கள், கோயில், குளம், மண்டபங்களில் உட்கார்ந்து தங்கள் வாழ்நாளைக் கழித்தவர்கள், சிறு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள்.

மரபுக் கவிதைக்கும் புதுக்கவிதைக்குமான பாலத்தை நிர்மாணித்தவர் அவர்தான். அலட்டிக்கொள்ளாமல் அதை லெகுவாகச் செய்தார். இன்று எனக்கு அவர் கவிதைகளில் பெரிய ஈடுபாடு இல்லை. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அவர் ஆற்றிய பங்கு முக்கியமானது. சிறுகதை ஆசிரியர்களில் இன்றும் அவருக்கு மிக முக்கியமான இடம் உண்டு.

உங்கள் படைப்பு வாழ்வில் நீங்கள் கவிதை, சிறுகதை, நாவல், உரைநடை, மொழிபெயர்ப்பு போன்றவைகளில் காலூன்றி நின்றிருக்கிறீர்கள். இவற்றில் உங்கள் சிந்தனையை மிகத் தெளிவாக வெளிப்படுத்த ஏற்ற உலகமாக எதை அதிகமாகக் கருதுகிறீர்கள்?

முதலில் சிறுகதைகளை எழுதத் தொடங்கினேன். அப்போது வேறு இலக்கிய உருவம் எதுவும் சாத்தியம் என்ற நம்பிக்கை இருக்கவில்லை. அப்பா என்னை உதவாக்கரை என்று நினைத்தார். sura 12அதை நியாயமான மதிப்பீடு என்றுதான் சொல்வேன். இலக்கியத்தில் ஒன்றைச் சாதித்து, வெளி உலகத்தில் என்னை ஏற்றுக்கொள்ளும்படி செய்து, அப்பாவைத் தோற்கடிக்க வேண்டும் என்று ந¤னைத்துத்தான் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். இடதுசாரி இயக்கத் தொடர்பும் அவர்களுடைய தத்துவங்களில் நான் கொண்டிருந்த நம்பிக்கையும் படைப்புக்கு ஒரு சமூக நியாயத்தை உருவாக்கித் தந்திருந்தன.

அதன் பின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ நாவலை எழுதினேன். க. நா. சு. வின் தூண்டுதலால்தான் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதத் தொடங்கினேன். இலக்கிய உருவங்கள் சார்ந்த நம்பிக்கைகள் எனக்கு முக்கியமானவை. ஒரு உருவத்தை மற்றொரு உருவத்துடன் பொறுப்பின்றிக் குழப்பியடிப் பதில் விருப்பமில்லை. ஒவ்வொரு உருவத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அழுத்தம் இருக்கிறது. ஒரு முன்னுரிமை இருக்கிறது.  ஆனால் எந்த உருவத்தில் அதிக நம்பிக்கை என்று கேட்டால் என் குறிக்கோள் சார்ந்து எல்லா உருவங்களிலும் என்றுதான் சொல்வேன். தெரிந்தோ தெரியாமலோ நோக்கம் அல்லது விஷயம்தான் உருவத்தைத் தேர்ந்தெடுக்கிறது. இருப்பினும் வாழ்வின் புதிர்களை ஆராய நாவல் தரும் வசதியைப் பிற உருவங்கள் தராததால் நாவல்மீது தனியான மரியாதை வைத்திருக்கிறேன்.

தமிழில் நீண்டகாலமாக ஒரு எதார்த்தவாதப் பண்பு இருந்து வந்திருக்கிறது. ஆனால் இப்போது இந்த எதார்த்தவாதப் பண்பு தொடர்பான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தமிழில் ஒரு எழுத்தாளன் தான் நினைத்ததை முற்று முழுதாக எழுதவுமில்லை, சொல்லவுமில்லை என்கிறார்கள். இந்த எதார்த்தவாதம் என்பது ஒரு தேர்வுக்கு உட்பட்ட அல்லது சமூக மனோபாவத்தை ஏற்று சுத்திகரிக்கப்பட்ட இலக்கிய முயற்சிகள்தானா?

படைப்பில் புறத்தைப் பற்றிய பேச்சு எல்லாம் அகத்தை ஊடுருவத்தான். தோற்றம் சாரத்துக்கு இட்டுச் செல்ல வேண்டும். எதார்த்தவாதம் என்பது ஒரு தளத்தின் பொதுப்பெயரே தவிர ஒரு படைப்பின் குணத்தைத் தீர்மான¤க்கக்கூடியது அல்ல. ஒரு எதார்த்தத்தளத்தைச் சேர்ந்த ஒரு எழுத்து நம்மை ஆட்கொள்ளும்போது அதே தளத்தைச் சேர்ந்த மற்றொன்று மிகுந்த சலிப்பைத் தருகிறது. ஊடுருவல்தான் முக்கியம். எதார்த்தத்தளம் சார்ந்த ஊடுருவல் தமிழ் வாழ்வின் ஸ்திதிக்கு இன்று பொருந்தி வருகிறது. அதன்மீதான என் விருப்பம் தமிழ் வாழ்வைக் கடுமையாகப் பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் சார்ந்தது.

தமிழில் எதார்த்தவாதிகள் எவரும் அதையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கவும் இல்லை. ‘ஆறில் ஒரு பங்கு’, ‘சின்னச் சங்கரன்’ போன்ற கதைகளை எழுதிய பாரதிதான் ‘ஞானரத’த்தையும் எழுதியிருக்கிறான். ‘பொன்னகரம்’, ‘கவந்தனும் காமனும்’ போன்ற கதைகளை எழுதிய புதுமைப்பித்தன் தான் ‘ஞானக்குகை’, ‘பிரம்மராக்ஷஸ்’ போன்றவற்றையும் படைத்திருக்கிறான். கு. ப. ரா., ந. பிச்சமூர்த்தி போன்றவர்களும் எதார்த்தவாதத்தைத் தாண்டிப் பல கதைகளை எழுதியிருக்கிறார்கள். மௌனி எதார்த்தவாதத்துக்குள் நுழையவே இல்லை. எதார்த்தம் தாண்டிய படைப்பு நம்பிக்கைகளைப் புதிய கண்டுபிடிப்புகள்போல் இப்போது சிலர் பேசுவது உண்மை அல்ல.

என் ‘பல்லக்குத் தூக்கிகள்’ தொகுப்புகூட எதார்த்தவாதக் கதைகளைச் சேர்ந்தது அல்ல. இப்போதைய என் கதைத் தொகுப்பின் தலைப்பான ‘காகங்கள்’ கதையையும் ஒரு எதார்த்தவாதக் கதை என்று சொல்ல முடியாது. இவையெல்லாம் மேல்நாட்டுத் தத்துவங்களைப் படித்துவிட்டுப் போலி செய்தவையும் அல்ல. இந்திய மரபில் இல்லாத மாந்த்ரீக எதார்த்தம் வேறு எந்தத் தேசத்திலும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

எதார்த்தவாதத்தின் பாதிப்பைப் பெற்ற ஒரு மூளையால்தான் அமைப்பியல்வாதம், பின்னமைப்பியல் வாதம், பின்நவீனத்துவம் போன்ற தத்துவங்களைச் சரிவரப் புரிந்துகொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். எதார்த்தவாதம் வழியாகத்தான் நீங்கள் அவற்றைத் தாண்டிச் செல்லும் தத்துவங்களுக்கும் போக வேண்டும். நம் வாழ்வின் ஸ்திதியைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத, மிகச் சிக்கலான தத்துவங்களைப் பேசுவதன் மூலம் பேசுபவர்களுக்கு உபயோகப்படும் அதிகார மையங்களை உருவாக்கலாம். தமிழ் வாழ்க்கையில் எந்தப் பாதிப்பையும் நிகழ்த்த முடியாது. தமிழ்ச் சூழலில் அரசியல் சார்ந்த இன்டெலச்சுவல் வர்க்கத்தின் அதிகபட்ச எல்லை பாரதிதாசன். புதுமைப் பித்தன் இன்றும் அவர்களுக்கு ஒரு புதிர். இவையெல்லாம் தமிழ் எதார்த்தங்கள். புதிய சிந்தனை களின் அறிமுகங்களை நான் வரவேற்கிறேன். அந்தச் சிந்தனைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவற்றின் பாதிப்பையும் பெற வேண்டும். அந்தச் சிந்தனைகளுக்கு முற்பட்டவை யெல்லாம் காலாவதியாகிவிட்டன என்ற பாவனை உண்மையில்லை. ஆசிரியர் ‘இறந்துவிட்டார்’ என்று கூறுகிறவர்கள் ஆசிரியருக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் விமர்சனங்களைத்தான் இப்போதும் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். படைப்பாளி அதீத முக்கியத்துவம் பெற்று வருகிறான் என்றுகூடச் சொல்லலாம். எல்லாப் பிரதியும் ஒன்று என்று சொன்னவர்கள் பாரதியைப் பற்றியும் புதுமைப்பித்தனைப் பற்றியும் இன்றையப் படைப்பாளிகளில் பொருட்படுத்தத் தகுந்தவர்களைப் பற்றியுமே பேசுகிறார்கள். 

தமிழ் நாவல் வெளிப்பாட்டு முறையில் உங்கள் ‘ஜே. ஜே : சில குறிப்புகள்’ ஒரு முக்கியமான திருப்பம். இது இயல்பாக நடந்ததா அல்லது முற்கற்பிதத்துடனான எழுத்துச் செயல்பாடா?

பெருமளவு இயல்பாக நடந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அதை எழுதி முடித்த நிலையில் தமிழ் நாவல் மரபில் அது வித்தியாசமானது என்ற உணர்வு மட்டும்தான் எனக்கு இருந்தது. நண்பர்களும் முன் பின் தெரியாத வாசகர்களும் சாதகமான அபிப்பிராயங்களைக் கூறத் தொடங்கிய போது நான் எதிர்பாராத காரியம் நடந்திருப்பதாக உணர்ந்தேன். விமர்சகர்கள் அதைக் கடுமையாகக் கண்டிக்க ஆரம்பித்தார்கள். வாசகர்களின் வரவேற்பு வழக்கத்திற்கு மாறாக இருந்தது. அபிப்பிராயங்களை விமர்சனம் சிறிய அளவில்கூடப் பிரதிபலிக்கவில்லை என்பது என் அனுபவம்.

மொழியையோ சிந்தனையையோ தமிழில் யாரும் இப்படி கைகொண்டு வெளிப்படுத்தவில்லை. நாம் இதனைத் தமிழில் செய்வோம் என்றாவது நினைக்கவில்லையா அல்லது தமிழ் நாவல் வெளிப்பாட்டு முறையில் இது ஒரு புதுக் காலடி என்றாவது எண்ணவில்லையா?

பிறர் செய்து வைத்திருக்கும் காரியங்களையோ நான் செய்து முடித்துவிட்ட காரியங்களையோ திரும்பச் செய்யக்கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக இருந்திருக்கிறேன். படைப்பு என்பது புதிது. இதற்கு முன் இல்லாதது. கோடிக்கணக்கான குழந்தைகள் பிறந்திருக்கின்றன. ஆனால் இப்போது பிறந்திருக்கும் குழந்தை இதற்கு முன் பிறந்ததே இல்லை. இயற்கையிலேயே படைப்பு இப்படி. நிகழ்த்தியதை மீண்டும் நிகழ்த்திக் காட்டுவது பழக்கம் அல்லது சகஜம்.

‘ஒரு புளியமரத்தின் கதை’ வெளிவந்தபோது குடும்பங்களுக்கு வெளியே sura 11உருவாக்கப்பட்ட நாவல் என்று எதுவும் இருக்கவில்லை. மனிதனுக்கும் கருத்துகளுக்குமான உறவு வலுமையானது. உணர்ச்சித் தளங்களில் வேர் விட்டு நிற்பது. அதனால்தான் கருத்துகள் சார்ந்த முறிவு மனிதனை மிக மோசமாகப் பாதிக்கிறது. ‘ஜே. ஜே : சில குறிப்புகள்’ மனிதனுக்கும் கருத்துகளுக்குமான உறவைப்  பற்றிச் சொல்கிறது. ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவல் குடும்பத்துக்கும் மனிதனுக்குமான உறவைச் சொல்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். குடும்பம் ஒரு நிறைவான அமைப்பு தானா? அதன் தோற்றத்திற்கும் உள்ளார்ந்த செயல்பாடுகளுக்கும் இசைவு உண்டா? குறையுணர்ச்சியுடன்தான் மனிதன் குடும்பத்துக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கிறானா? இதுபோன்ற பல கேள்விகள் இருக்கின்றன. உள்ளூர இருந்த ஆவேசம்தான் புதிய படைப்புகளைப் பார்க்கத் தூண்டிக்கொண்டே போயிருக்கிறது. பெரிய திட்டங்கள் என்று இல்லை. புதுமைக்காகப் புதுமை என்பதும் இல்லை. சிறிய அளவிலான யோசனைகள்தான்.

படைப்புத் தொடர்பான தீவிர ஆவேசம் தெரிகிறதே உங்களிடம். . .
அந்த ஆவேசம் எப்போதும் இருந்து இப்போதும் இருப்பதுதான். ஒரு மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் என்ற ஆசையிலிருந்து பிரிக்க முடியாத ஆவேசம் அது. உலக இலக்கியப் படத்தில் சிறிய நாடுகள், சிறிய மொழிகள்கூட அவற்றுக்குரிய இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. தமிழ் மரபும் செழுமையும் கொண்ட மொழி. இங்கும் பெரிய காரியங்கள் நடக்க வேண்டும். அதற்கான சூழல் உருவாக வேண்டும். எழுத்தாளன் சமூக மதிப்பைப் பெற வேண்டும். எழுதுவது மட்டுமே படைப்பு என்று நான் நினைக்கவில்லை. படைப்புக்கு வெளியே சக மனிதனிடம் நாம் வெளிப்படுத்தும் சிந்தனைகள், வாசிப்பில் நாம் கொண்டிருக்கும் ஆர்வம், சுயப்பரிசோதனை, சொல்லையும் செயலையும் இயன்ற அளவு இணைப்பதற்கான முயற்சி, ஜீவராசிகள் அனைத்தின்மீதும் கொள்ளும் பரிவு எல்லாமே படைப்பு மனத்திலிருந்து தோன்றுபவைதான்.

உங்கள் எழுத்தை வாசிக்கும்போது முரண்பாடுகள்மீதான உணர்வுகளையே காண முடிகிறது. தனிமனிதர்கள்மீதான முரண்பாடு, தத்துவங்கள்மீதான முரண்பாடு. உங்களுக்குத் தனி மனிதன், சமூகம், சமூக நிறுவனங்கள், தத்துவங்கள் எதுவுமே திருப்தியைத் தரவில்லையா?

சமூக வாழ்க்கையில் எனக்குத் திருப்தி இல்லை. தத்துவங்கள் சார்ந்தும் சமூக ஒழுக்கங்கள் சார்ந்தும் மனிதன் போடுகிற வேஷம் மிகப் பெரிய சீரழிவை உருவாக்குகிறது. உயர்வானவையும் மனித ஸ்பரிசம் படும்போது கீழிறக்கம் கொள்கின்றன. பதவியைப் பிடிக்கத் தத்துவங்களைப் பயன்படுத்தும்போது உபயோக மதிப்பு உள்ளார்ந்த சாரத்தை அரித்து விடுகிறது. பார்வையற்றோர் பள்ளிக்கு வெளிநாட்டிலிருந்து வரும் உணவை ஆசிரியர்கள் திட்டமிட்டுத் திருடுகிறார்கள். மனிதன் மேலானவன் என்பதை ஒரு ஸ்லோகமாக்க நான் விரும்பவில்லை. மனிதநேயம் படைப்பாளி நம்பித் தீர வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அல்ல.

படைப்பாளியிடம் அனுபவம் சார்ந்த பார்வைதான் வலிமையாக இருக்க வேண்டும். சகல பாதிப்புகளும் அந்த அனுபவத்துக்குள் இருக்கின்றன. மனித ஸ்திதியை அது எவ்வளவு கேவலமாக இருக்கும் நிலையிலும் புரிதல் சார்ந்து மேலெடுத்துச் சென்றுவிட முடியும். பிரக்ஞைபூர்வமான வேஷதாரிகளைத் திருத்துவது மிகக் கடினம். வேஷதாரி களால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சமூகம் தமிழ்ச் சமூகம்.  கபடமற்ற ஜனங்களின் சரிவு அல்ல பிரச்சினை. திட்டமிட்டு ஏமாற்றும் சக்திகளின் கூட்டு ஒப்பந்தம்தான் பெரிய பிரச்சினை.

நீங்கள் உணர்ச்சிபூர்வமாக இருந்தாலும் உங்கள் மொழி ஆளுகையில் அறிவின் மொழியினூடாக உங்கள் சிந்தனை வெளிப்படுவது எப்படி சாத்தியமாகிறது?

தமிழ்ச் சூழலில் உணர்ச்சியின் பீறிடல்களைச் சிறுவயதிலிருந்தே கவனித்துக் கொண்டிருக்கிறேன். புகழும் பணமும் பதவியும் தேடித் தர ஏற்ற விற்பனைப் பண்டமாகவே உணர்ச்சியின் பீறிடல் தமிழ்ச் சமூகத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசியல் மேடைக் கத்தல்கள், தமிழ்த் திரைப்படங்களில் கண்ணீரின் பிரவாகம், வணிக எழுத்தாளர்களின் நெகிழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் எதிராக நான் என் உணர்ச்சியைச் செம்மை செய்துகொள்ள விரும்பினேன். வாசகர்களைச் சிந்திக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் சுயமான விமர்சனம் உருவாகும். இந்த விழிப்புநிலையிலிருந்துதான் ஜனநாயகத்தை வலிமைப்படுத்தும் செயல்பாடுகள் தோன்றுகின்றன. அறிவு சார்ந்த மொழி உருவாகும்போது இன்னும் ஆரோக்கியமான விவாதங்களை நடத்த முடியும். இப்படியெல்லாம் யோசிக்கிறேன்.

மதங்களில், தத்துவங்களில் நம்பிக்கை இழந்துவிட்டோம் என்பது உங்கள் குரலாக உள்ளது. மனிதர்கள் பற்றிப் பிடிப்பதற்கு ஏதாவது ஒரு ஆதாரம் தேவையில்லையா? உங்கள் அனுபவம் சார்ந்து இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மனிதர்களின் சமய நம்பிக்கைகளுக்கு எதிராக நான் எதுவும் சொல்ல விரும்புவதில்லை. அவன் விரும்பும் சமயத்தில் அல்லது தத்துவத்தில் அல்லது சிந்தனைகளில் நம்பிக்கை கொள்ளட்டும். எவற்றினூடாகவும் மனித வாழ்க்கை சார்ந்த விமர்சனமும் கனவும் ஒருவனுக்கு இருக்குமென்றால் அவனுடன் விவாதம் செய்ய எனக்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால் எந்தத் துறையைச் சேர்ந்த போலிகளுடனும் நான் விவாதத்தில் ஈடுபட முடியாது. அது என்னையே அழித்துக் கொள்வதாகும். முற்போக்கு, பிற்போக்கு சார்ந்த பழைய இலக்கணங்கள் எல்லாம் சுக்கு நூறாகத் தெறித்துவிட்டன. சங்கராச்சாரி ஜாதி புத்தி கொண்ட பிற்போக்குவாதி என்பது என் எண்ணம்.  ஜெயலலிதா பக்தி கொண்ட வீரமணி எந்த விதத்தில் முற்போக்குவாதி? பொதுவுடைமைவாதிகள் - இவர்களில் பலர் முக்கியமான தமிழ் எழுத்தாளர்கள் - கால் நூற்றாண்டேனும் சகல மனித ஒடுக்கல்களையும் அறிந்த நிலையில் சோவியத் சர்வாதிகாரத்துக்குத் துணை போனவர்கள். தங்கள் கடந்த கால வாழ்க்கையைப் பற்றிய விளக்கம் எதுவும் அளிக்காமலே அவ்வாழ்க்கை புதைந்துபோய்விட்ட திருப்தியில் இப்போதும் ஜனநாயகம் பற்றியும் சமூக முன்னேற்றம் பறஞறியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு தனிமனிதன் எந்த அளவுக்குச் சமூக மனிதனாகவும் இருக்கிறான் என்பது எனக்கு முக்கியம். எந்த அளவுக்கு வெளிப்படையாகவும் பகிர்ந்துகொள்கிறவனாகவும் இருக்கிறான்? சமூகப் பிரக்ஞையுடன் செயல்படுகிறானா அல்லது ஏமாற்றுவதற்காகச் செயல்படுகிறானா? படைப்பாளியின் எழுத்து எந்தவிதமான வாழ்க்கையைச் சென்றடைய அவன் கனவு காண்கிறான் என்பதைக் காட்டுகிறது. மனித சாரத்தைப் பேண முற்படுகிறவர்களுடன் நான் மானசீக உறவு வைத்துக்கொண்டிருக்கிறேன். என் ஊரையும் உலகத்தையும் தழுவிய உறவு இது.

நீங்கள் முதல் எழுதத் தொடங்கிய நாவல் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’. 38, 40களில் அக்கதை நடக்கிறது. ஆனால் இடையில் உங்களுடைய இரு நாவல்கள் வெளிவந்தன. மூன்றாவது நாவலாகத்தான் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ வெளிவந்தது. தமிழ்ச் சூழலில் ஏன் அந்த நாவல் அதிகக் கவனம் பெறாது போய்விட்டது. இதுவே உங்கள் முதல் வெளிவந்த நாவலாக இருந்தால் நீங்கள் தமிழில் அதிகக் கவனத்துக்குரிய படைப்பாளியாக ஏற்கப்பட்டிருப்பீர்களா?

நான் 1978, 79 காலங்களில்தான் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலை எழுதத் தொடங்கி னேன். (இப்போது வெளிவந்திருப்பது அதிலிருந்து வெகுவாக விலகிவந்த ஒரு எழுத்துருவம்.) ஆகவே இது என் முதல் நாவல் அல்ல. முதல் நாவலாக வந்திருந்தால் அதிகக் கவனம் பெற்றிருக்கும், மூன்றாவது நாவலாக வந்ததால்தான்sundararamaswamy கவனம் பெறாது போய்விட்டது என்பது உண்மை என்றால் அது கவனம் பெறாமல் போனது நல்லதுதான். ஏனென்றால் அதன் உயிர்ப்பு சார்ந்து அது வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் எனக்கு இருக்கிறதே தவிர அதன் வரிசை சார்ந்து அது வாழ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. 

என் மூன்று நாவல்களில் மிக முக்கியமான நாவலாக நான் கருதுவது ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’தான். அதுதான் வாழ்க்கையை அதன் முழுமையான தளத்திற்கு விரித்துப் பார்க்க முயல்கிறது. அது காட்சியளிக்கும் வகையிலேயே எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டால் அது எனக்கு ஒரு இழப்புத்தான். அந்த நாவலில் வரிகளுக்குப் பின்னால் இருக்கும் வரிகள் மிக முக்கியமானவை என்று நம்புகிறேன். அவற்றைத் தொகுத்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு தொகுத்துப் பார்க்க சிரத்தையான, ஆழமான வாசிப்புத் தேவை. அதை ஊடுருவி வாசித்த பின்பும்  ஏற்கவில்லையென்றால் அதை நான் மதிக்கிறேன். இதற்கு மேல் செய்ய எதுவும் இல்லை. மோஸ்தர் சார்ந்த புறக்கோலங்கள் இல்லை என்ற காரணத்திற்காக அது உதாசீனப்படுத்தப்பட்டால் வாசகனுக்கு அது ஒரு இழப்பு என்றே சொல்வேன்.

உங்கள் எழுத்துக்களின் பின்னால் ஒரு தொனி இருக்கிறது. இப்போது இருப்பவன் புரிந்துகொள்ளா விட்டாலும் எதிர்காலத்தில் என்னைப் புரிந்துகொள்ளும் ஒரு வாசகன் வருவான். அவனுக்காகவே நான் எழுதுகிறேன் என்கிறீர்கள். அப்படியான வாசகன் வந்துவிட்டானா?

திட்டவட்டமாக அப்படி சொல்ல முடியாது. வாழும் காலத்தில் அங்கீகாரம் பெற முடியாத எழுத்தாளன் தன் உயிர்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள எவ்வளவோ வாக்கியங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. அதில் ஒன்றுதான் ‘இன்று இல்லையென்றாலும் நாளை ஒளி வரும்’ என்பது.  சமூக ஸ்திதி¬யும் எழுத்தாளனின் ஆதங்கத்தையும்தான் இவ்வரிகள் வெளிப்படுத்துகின்றன. பலருக்கு ஒளி வராமல் போயிருக்கிறது. புல் முளைத்து மண்டியிருக்கிறது. எதிர்மறையான சூழலில் நம்பிக்கை கொண்டு செயல்பட பல மந்திரங்கள் தேவையாக இருக்கின்றன. போன நூற்றாண்டு முழுக்கப் பல படைப்பாளிகள் வெவ்வேறு வகைகளில் இந்த மந்திரங்களை உருவாக்கியிருக்கிறார்கள். சிலருக்குக் காலம் துணை நின்றும் இருக்கிறது.

உங்கள் ‘காற்றில் கலந்த பேரோசை’யில் ஜீவாவைப் பற்றி எழுதியுள்ளீர்கள். பெரியார் உங்களைப் பாதிக்கவில்லையா? இத்தேர்வுக்கு அரசியலும் ஒரு காரணமாக இருக்குமோ?

ஜீவா எங்கள் ஊரைச் சேர்ந்தவர். பத்து வயது வாக்கில் நான் அவரைப் பார்த்தாயிற்று. பின்பு அவரது மறைவு வரையிலும் அந்தத் தொடர்பு நீடித்தது. எங்கள் ஊருக்குப் பெரியார் வந்துபோகக் கூடியவர் என்றாலும் என் குடும்பப் பின்னணியில் அவர் பெயர் அடிபடவே இல்லை. சிறுவயதில் நான் மலையாள எழுத்தாளர்களைத்தான் அதிகம் படித்தேன். எம். கோவிந்தன், சி. ஜே. தாமஸ், தகழி, பஷீர் போன்றவர்களை. எங்கள் பகுதி தமிழகத்துடன் இணைந்த பின்புதான் எனக்குப் பெரியார்மீது கவனம் வந்தது. அவருடைய உண்மை உணர்ச்சியை நான் ஏற்றுக்கொண்டேன். அந்த உண்மைகளை அவர் முன்வைக்கும் முறைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதில் ஈரமோ, அழகியலோ, அரவணைப்போ இல்லை.

பெரியாரை நீங்கள் நிராகரிப்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட மொழி சம்பந்தமாக மட்டும்தானா?

பெரியாரை நான் நிராகரிக்கவில்லை. அவருடைய கருத்துகளில் பெரும்பான்மையானவை நான் ஏற்றுக்கொள்ளக்கூடியவைதான். சொல்முறை பற்றிச் சொன்னேன். மொழிக்கும் கருத்துக்குமான உறவு எனக்கு மிக முக்கியம். அவரது இயக்கத்தில் அவர் ஒருவர்தான் சொல்லோடு செயலை இணைத்திருந்தவர். பின்னால் வந்தவர்கள் எவரையுமே அப்படி சொல்ல முடியாது. அரசியல் தளத்தில் ஆகப் பெரிய அநாகரீகங்களை உருவாக்கியவர்கள் அவர்கள். அந்த இயக்கத்தின் இன்றையச் சரிவு கொடுமையானது.

நீங்கள் மார்க்ஸிய சித்தாந்தத்தில் ஈடுபாடு உள்ளவராக இருந்திருக்கிறீர்கள். பின்னால் ஒரு இடைவெளி ஏற்படுகிறது. இவ் இடைவெளி மார்க்ஸியத்தின் போதாமை காரணமாக ஏற்பட்டதா அல்லது மார்க்ஸிய நிறுவனங்களின் பலவீனங்களின் அடிப்படையில் ஏற்பட்டதா?

மார்க்ஸியம் ஒரு தத்துவம்தான். சமய நெறி அல்ல. தத்துவங்கள் காலத்தின் போக்குக்கு ஏற்ப மறுபரிசீலனை செய்ய இடம் தருபவை. அந்த வாசலை இங்கு சாத்திவிட்டார்கள். குறுகிய நோக்கங்களுக்காக தத்துவங்கள் பயன்படுத்தப்படும்போது அவை இறுகி அதன் சாராம்சத்தை இழந்து அடையாளங்களாக மாறிவிடுகின்றன. அடையாளங்கள் சார்ந்து நம்பிக்கை மதிப்பிடப்படுகிறது. இந்த விஷயங்களைத்தான் நான் ‘ஜே. ஜே : சில குற¤ப்புக’ளில் சொல்ல முயல்கிறேன். தத்துவத்துடன் நான் நேரடியாக மோதவில்லை. மிகப் பெரிய நாகரீகத்தை உருவாக்க முற்படுகிறவர்கள் கருத்துச் சுதந்திரம், ஜனநாயகப் பண்பு ஆகியவற்றில்கூட நம்பிக்கையற்ற அதிகாரிகளாக மாறுவதுதான் என் பிரச்சினை. எல்லா அரசியல் கட்சிகளிலும், சமய அமைப்புகளிலும் இந்த நிலை இருக்கிறது.

சுந்தர ராமசாமி என்ற படைப்பாளியை, ஆளுமையை உருவாக்குவதில் மலையாளச் சூழலுக்கு எந்தவிதமான பங்களிப்பு உள்ளது?

பெரிய அளவில் பங்களிப்பு இருக்கிறது என்று சொல்ல முடியாது. இடதுசாரிச் சிந்தனைகளில் கவனம்கொள்ள என்னைத் தூண்டியவை மலையாள எழுத்துகள்தான். மார்க்ஸிய பார்வை கொண்ட சிறுகதைகளை நான் ஆரம்பகாலத்தில் எழுதத் தூண்டுதல் பெற்றதும் மலையாளப் படைப்பிலக்கியத்தின் பாதிப்பாக இருக்கலாம். 
ஈழத்து தமிழ்ச் சூழலில் மேற்கு நாடுகளுக்கான தமிழ் புலம் பெயர்வு அதிகமாக நடந்திருக்கிறது. அங்கு போய் தமிழில் எழுதுகிறார்கள். தமிழில் புலம் பெயர் sura2 இலக்கியம் என்ற ஒரு அம்சம் ஏற்பட்டுள்ளது. இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?
என்னை மிகவும் பாதித்த விஷயம் இது. இருபத்தைந்து வருடங்களாகவே எனக்கு ஈழத்து எழுத்தாளர்கள் பலர் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். அங்கு நிகழ்ந்த எல்லாப் பிரச்சினைகளையும் இவர்களைப் பற்றிய என் ஞாபகங்கள் வழியாகத்தான் பார்க்கிறேன். புலம் பெயர்ந்த தமிழர்களையும் அவர்கள் வசிக்கும் இடங்களையும் ஓரளவுக்குப் பார்க்க முடிந்தது. கசப்பான பல உண்மைகள் இருக்கின்றன. அவர்களுடைய வாழ்க்கை அங்கு நீடிக்கும் என்றால் அவர்கள் குடும்பங்களிலிருந்து தமிழ் வெளியே போய்ச் சூழலில் இருக்கும் மொழி உள்ளே வந்து விடும். குழந்தைகளால் தமிழைக் காப்பாற்ற முடியாது. இது வரலாற்றின் கட்டாயம். இந்தத் தலைமுறையில் ஏதேனும் தமிழ் எழுத்துகள் வந்தால்தான் உண்டு. படைப்பு உருவாவதற்கு மொழியறிவு மட்டும் போதாது. மொழி சார்ந்த வாழ்க்கையும் வேண்டும்.

பின் நவீனத்துவக் கோட்பாட்டைத் தமிழ்ச் சூழலுடன் எப்படி பொருத்திப் பார்க்கிறீர்கள்?

பின் நவீனத்துவக் கோட்பாடும் தமிழ்ச் சூழலும் இன்றுவரையிலும் பொருந்தாமல்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். படைப்புகள் வழியாக அதன் பாதிப்பு குறிப்பிடும்படி நிகழ்ந்ததாகவும் தெரியவில்லை. சகல முனைகளிலும் சுதந்திரத்தின் எல்லைகளை விரிக்க வேண்டும் என்றாலும் கூட நடைமுறையில் பாலியல் விவரணைகளில் மட்டும்தான் விரிக்கப்படுகிறது. இது அதிர்ச்சி மதிப்புக்குத் தரும் முகஞகியத்துவம் தவிர வேறு அல்ல. பின் நவீனத்துவக் கோட்பாட்டைத் தமிழ்ச் சூழலுடன் இணைத்துக் காட்டும் படைப்புச் சிந்தனை தோன்றும் என்றால் அந்தச் சிந்தனை  இன்னும் அதிகக் கௌரவத்தைப் பெறும். படைப்பிலக்கியத்தையும் பாதிக்கும். 

தமிழ் சிற்றிதழ் வரவில் காலச்சுவடு மிக முக்கியமானது. அச்சிற்றிதழ் வருகைக்கான குறிக்கோள்கள் எட்டப்பட்டு விட்டனவா? இப்போது எங்கே நிற்கிறது?

இப்போது காலச்சுவடை உருவாக்குவதில் எனக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை. கண்ணனும் மனுஷ்ய புத்திரனும் அவர்களது நண்பர்களின் உதவியுடன் செய்து வரும் காரியம். நான் நடத்தி வந்த காலச்சுவடின் எல்லைகள் இப்போது பெரிய அளவுக்கு விரிந்திருக்கின்றன. குறிக்கோளைச் சென்றடைந்துவிட்டோம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தமிழ் வாசகர்களிடையே மிகப் பெரிய விழிப்புநிலையையும் சுதந்திர உணர்வையும் உருவாக்க வேண்டும். வாழ்க்கையை மதிப்பிடவும் மறுபரிசீலனை செய்யவும் புதியவற்றை ஏற்கவும் பழையவற்றைக் கழிக்கவும் அவர்களால் சாத்தியப்பட வேண்டும்.

தமிழ் இனி 2000 சந்திப்பில் எதைச் சாதிக்க வேண்டுமென விரும்பினீர்கள்?

தமிழ் இனியை உருவாக்கியவர்களின் நோக்கம் எல்லோரும் கூடி கடந்து வந்த பாதையைப் பற்றியும் இனி நடக்க வேண்டிய பாதையைப் பற்றியும் ஆழமாகச் சிந்திப்பது என்பதுதான். அதன் நோக்கம் ஓரளவு நிறைவேறிற்று என்று ந¤னைக்கிறேன். இதன் மூலம் பல நல்ல விளைவுகள் கூடி வரவேண்டும்.

அண்மைக்காலமாக ஈழத்துடன் உங்களுக்கான தொடர்பு அதிகரித்திருக்கிறது. இன்றைய ஈழத்துத்  தமிழ் இலக்கியம் தொடர்பாக உங்கள் மனநிலை என்ன?

ஈழத்து இலக்கியம் பற்றிச் சொல்வதென்றால் கவிதைப் படைப்புகளிலும் விமர்சனச் சிந்தனைகளிலும் அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டியிருக்கிறது. சமீப காலங்களில் ஈழத் தமிழர்களுக்கு நிகழ்ந்த வாழ்க்கை நெருக்கடிகள் மிகப் பெரிய நாவலுக்கான களத்தை விரிப்பவை. அவ்வகையான முயற்சிகள் தோன்றாமல் இருப்பது புரிந்து கொள்ள முடியாத கேள்வியாகவே இருக்கிறது. தங்களைப் பற்றித் தாங்களே உருவாக்கிக்கொள்ளும் மிகையான அபிப்பிராயங்களையும் பிறர் உருவாக்கும் மிகையான அபிப்பிராயங்களையும் மறுபரிசீலனை செய்ய அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

எதிர்காலத்தில் படைப்புகளைத் தரும் உத்தேசங்களில் உங்களை ஈடுபடுத்தியிருக்கிறீர்களா?

நிச்சயமாக. ஒருசிலவேனும் கூடி வரும் என்று நம்புகிறேன்.  

மூன்றாவது மனிதன் இதழ் 10 ஜனவரி - மார்ச் 2001

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்