Feb 18, 2010

ஆத்மாநாமின் ஆத்ம தரிசனம்

பாரதிராமன்

ஒரு கவிஞனின் படைப்புகள் எல்லாம் அவனுடைய சுயத்தின் வெளிப்பாடுகளே.தன்னைத்தானே தரிசித்துக்கொள்ளும் அவன் பிறருக்கும் தன்னை தரிசனப்படுத்துகிறான்.எனினும் பார்க்கும் அனைவருக்கும் இத்தோற்றங்கள் ஒரேமாதிரி அமைவதில்லை, அக்கவிஞனுக்கு உள்பட

' கொள்கைகளைப் பற்றிய அதிகப்படிப்பு இவருக்கு இல்லாததால் வாழ்வில் சொந்த athmanam அனுபவங்களிலிருந்துமட்டுமே கவிதை எழுதுகிறார். ஒவ்வொரு கவிதையும் புதிதாகப் பிறக்கும் பச்சைக் குழந்தையைப்போல. அதனால் கவிதைகளைக் குத்திக் கிளறிப் பார்க்காமல் ஆர்வத்தோடு நாசூக்காக ஏன் எப்படி எவ்வாறு என்று கேள்விகளுடன் அணுகிவந்தால் அதன் முழு வர்ணங்களும் தெரிய வரும் ' என்று தன்னைப்பற்றியும் தன் படைப்பைப்பற்றியும் கூறும் ஆத்மாநாம் ' கவிதை எழுதப்பட்ட பின்பு கவிஞனுக்கே புரியாமல்கூட போகலாம். ஆனால் கூர்ந்து வாசிக்கும் ஒரு வாசகன் கவிதையை அணுகிவிட முடியும் ' என்ற கருத்தையும் கொண்டிருந்தார்.

அவருக்கு முழு மனித வாழ்க்கை அமையவில்லைதான் என்றாலும் முழு மனித வாழ்க்கை அனுபவங்கள் வாய்த்திருந்தன.அவற்றின்மீதான வெளிச்சங்கள் அவரது கவிதைகளில் வீசப்பெறுகின்றன. யாவரும் கண்டுகொள்வதற்காக மட்டுமல்ல, மீண்டும் மீண்டும் மறு பரிசீலனை செய்வதற்காகவும்கூட.

' நான் எதனையுமே மறுபரிசீலனைக்கே விட்டு விடுகிறேன்

நான் படித்த புத்தகங்கள் என்னைக் கேலி செய்கின்றன

நீ பழைய மனிதன்தான் என்கிறது ஒரு புத்தகம்

புதிய மனிதன்தான் என்கிறது இன்னொரு புத்தகம்

நான் மனிதன்தானா என்று சோதித்துக்கொள்ளும் நிர்ப்பந்தங்கள் '

( மறு பரிசீலனை )

இந்த நிர்ப்பந்தங்களிலிருந்து விடுபட்டவர்களாக அவரது கவிதைகளை பரிசீலனையோ மறு பரிசீலனையோ செய்வது நல்லது. அதாவது பழைய மனிதனாகவோ அல்லது புதிய மனிதனாகவோ இருந்துகொண்டோ அல்லது இல்லாமலிருந்துகொண்டோ அணுகுவது ஒரு நூதன அனுபவமாக அமையும்.

கையில் பேனா இருக்கிறது, பேனாவில் மசி இருக்கிறது, காகிதம் இருக்கிறது, என்ன செய்யலாம் ?

' ஒரு ஓவியம் வரையக்கூடும்

ஒரு கட்டிட வரைபடத்தையும்

ஒரு சாலை விவரக் குறிப்பையும்

ஒரு பெண்ணுக்குக் காதல் கடிதத்தையும்

ஒரு அலுவலகத்தின் ஆணைகளையும் '

பதிவு செய்யலாம். ஆனால் 'இவை யாவும் இப்பொழுதைக்கு இல்லை '

ஏதோ ஓர் அமைப்பு குறுக்கிடுகிறது. வீடுகளிலும் பொட்டல்காடுகளிலும் வயல்வரப்புகளிலும் வாழ்கின்ற எலும்புகளுக்குக்கூட ' அரசர்களும் மந்திரிகளும் போர்வீரர்களும் என்றொரு அமைப்பு ' இருக்கிறதே!

( என்றொரு அமைப்பு )

இந்த அமைப்பை எதிர்த்து செயல்பட முடியாதா ? அவரது இன்னொரு கவிதை பதிலளிக்கிறது.

' எதிர்த்துவரும்

அலைகளுடன் நான் பேசுவதில்லை

எனக்குத் தெரியும் அதன் குணம்

பேசாமல்

வழிவிட்டு ஒதுங்கிவிடுவேன்

மற்றொரு நாள்

அமைதியாய் இருக்கையில்

பலங்கொண்டமட்டும்

வீசியெறிவேன் கற்பாறைகளை

அவை மிதந்து செல்லும்

எனக்குப் படகாக '

( காரணம் )

ஆனால் பாறைகளை வீசியெறியும் சுதந்திரம் மனிதனுக்கு உள்ளதா, தேவையா என்று எழக்கூடிய கேள்விக்கும் பதிலிருக்கிறது அவரது 'சுதந்திரம் ' கவிதையில்.

' எனது சுதந்திரம்

அரசாலோ தனிநபராலோ

பறிக்கப்படு மெனில்

அது என் சுதந்திரம் இல்லை

அவர்களின் சுதந்திரம் தான்

----------- -------- -------

உன் வேலை

உன் உணவு

உன் வேலைக்குப்போய்வர சுதந்திரம்

இவற்றுக்குமேல்

வேறென்ன வேண்டும்

சாப்பிடு தூங்கு மலங்கழி

வேலைக்குப் போ

உன் மீது ஆசை இருந்தால்

குறுக்கிடாதே '

வாழ்க்கை முழுதும் அவர் அனுபவிக்க நேர்ந்த சுதந்திரக் கட்டுப்பாடுகளின் எதிரொலியாக எள்ளலும் விரக்தியும் கலந்து ஒலிக்கின்றன இவ்வரிகள்.

இப்படி எத்தனை நாள்தான் வாழ்வது ?

' இருபத்தி இரண்டு ஆண்டுகள்

படிப்பு வேலை தொழில்

எல்லாம் பார்த்தாகிவிட்டது

சந்தித்த முகங்கள்

மறக்கத் துவங்கியாயிற்று

----- ----- ----- ------

விஞ்ஞானத்தில்

மெய்ஞ்ஞானத்தில்

ஏராளமான சாதனைகள் ---

அணுப்போருக்குப் பின்

புதிய சமுதாயம்தான்

------ ------ -----

இருந்தும்

இன்னும் ஒரு முறைகூட

அண்டை வீட்டானுடன் பேசியதில்லை.

( நான் )

இப்படித்தான் இன்றும் வெட்கம் கெட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம்.

பின் எப்படித்தான் வாழ்வதாம் ?

வழி சொல்கிறார் ' முத்தம் ' கவிதை மூலம் ஆத்மாநாம்.

' முத்தம் கொடுங்கள்

பரபரத்து

நீங்கள்

முன்னேறிக்கொண்டிருக்கையில்

உங்கள் நண்பி வந்தால்

எந்தத் தயக்கமும் இன்றி

இறுகக் கட்டித் தழுவி

இதமாக

தொடர்ந்து

நீண்டதாக

முத்தம் கொடுங்கள்

மற்றவர்களும்

அவரவர்

நண்பிகளுக்கு முத்தம் கொடுக்கட்டும்

விடுதலையின் சின்னம் முத்தம்

----- ----- ------

முத்தம் ஒன்றுதான் ஒரே வழி

----- ----- ------

முத்தம்

முத்தத்தோடு முத்தம்

என்று

முத்த சகாப்தத்தைத்

துவங்குங்கள் '

என்று இருபத்தியோறாம் நூற்றாண்டுக்குக் கட்டியம் கூறுகிறார் கவி.

வாழ்க்கையைப் பற்றி அவருக்கு பலவித உணர்வுகள் இருந்தன.

கோபம் இருந்தது-( நான்தான் வீரகேஸரி ) ' அசையும் பகுதிகள் மீதெல்லாம்/

இரட்டைக்குழல் துப்பாக்கிகொண்டு/ சுட்டுக்கொண்டேயிருக்கிறேன் '

( ஏதாவது செய் ) 'ஆத்திரப்படு கோபப்படு/ --- தின்று கொழிப்பவரை/ ஏதாவது செய் ஏதாவது செய் '

அமைதியின்மை தெரிந்தது - ( தும்பி ) 'எனது அமைதியைப்/ பறக்க விட்டேன்/ எங்கும் தாங்கவொண்ணா விபரீதம்

ஒரு புரியாமை இருந்தது- ( களைதல் ) 'வெற்றிடத்து/ சூனிய வெளி இருந்தது/ சூனிய வெளியைக் களைந்தேன்/ ஒன்றுமே இல்லை.

அலட்சியம் இருந்தது- ( பதில் ) ' கமா மற்றும் முற்றுப்புள்ளி வைத்து ' ஏதாவது சொல்லியாகவேண்டும்/ நமக்கேன் வம்பு

ஏக்கம் இருந்தது- (சூழல்) ' நாம் ஏன் ஏரிகளாய் இருக்கக் கூடாது/சலனமற்று வான் நோக்கி பாறைகளுடன் பேசிக்கொண்டு '

அத்வைதப் பார்வை இருந்தது- ( நான்தான் நான் ) 'மண்ணும் மலையும் புழுவும் பூச்சியும்/ நான்தான் நான்தான் நான்தான் ' ( அமைதிப் படுகையில் ) ' நான் ஒரு நட்சத்திரம் ' -( ஒன்றும் இல்லை ) ' ஒன்றுமில்லையில் இவ்வளவா/ பின் அந்த ஒன்றில்/ நம்மையும் மீறிய ஒன்று '

சுய கெளரவம் இழையோடிற்று- ( காளை நான் ) ' கயிற்றை இழுப்பவர்களை நினைத்ததும்/ அடிவயிற்றிலிருந்து/ பெரும்பீதி தோன்றிற்று/ ஆயினும் எனக்கு நிம்மதி/ எனக்கு மூளை இருக்கிறது/ மனம் அமைதியாய் இருக்கிறது '

கேலிப் பார்வைகள் இருந்தன- ( இதோ ஒரு கவிதை ) ' சுத்தமாய் நின்று எதிர் சுவற்றில்/ மூத்திரம் இருங்கள்/ இப்போது போதுமிது ' ( சுற்றி ) ' எந்த மரத்தைச் சுற்ற/ பிறந்த பிள்ளை இவன்/ ஏதாவது தறுதலை மரமாக இருக்குமோ ? ' -(நன்றி நவிலல் ) ' உங்களுக்கு நன்றி/ இத்துட்னாவது விட்டதற்கு '- ( ஐயோ ) ' அற்புத உலகம்/ அற்புத மாக்கள் '

விரக்தியும் எட்டிப்பார்த்தது- ( போய்யா போ ) ' இப்படியே சொல்லிக்கொண்டுபோனால்/ யார் நல்லவன்/ யார் கெட்டவன்/ அவ்வளவுதானே/ கெட்டவன் நல்லவன்/ நல்லவன் கெட்டவன் '- ( விடுதலை ) ' உள்மனப்போருக்குப் பின்/ முயற்சியை விடுத்து/சும்மா இருக்க முடிவெடுக்கிறேன் '

இவற்றுக்கெல்லாம் மேலாக வாழ்க்கையின் மீது நம்பிக்கையும் இருந்தது அவருக்கு.- ( நாளை நமதே ) 'இருப்பை உணராது / இறப்புக்காகத் தவம் புரிகின்றனர்/ என் ஸக மனிதர்கள்/ இந்த துக்கத்திலும்/ என் நம்பிக்கை/ நாளை நமதே ' - ( காலம் கடந்த ) ' என் காலடியில்/ கொஞ்சும் நாய்க்குட்டிக்காக/ இன்னும் எனது நம்பிக்கை/ நசித்துப் போகவில்லை/ இன்னமும் கொஞ்சம்/ அன்பு மீதமிருக்கிறது '

மனநலக் கோளாறுகள் அவரை அடிக்கடி வாட்டி வந்தன. தற்கொலை முயற்சிகளுக்கும் தூண்டும் அளவுக்குப் போயின.என்றாலும் கனவுகள் காண்பதையும் கவிதைிகள் எழுதுவதையும் அவர் மூச்சாக இருந்தது.

( கனவு ) ' என்னுடய கனவுகளை/உடனே அங்கீகரித்துவிடுங்கள்/ வாழ்ந்துவிட்டுப் போனேன் / என்ற நிம்மதியாவது இருக்கும் '

( ஏரி ) ' ஏனோ நான் மட்டும்/ கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன் '

சோகம்தான் கவிஞனை தோற்றுவிக்கிறது என்பது பொதுவாக நிலவும் கருத்து. ஆத்மாநாம் தன் சோகங்களையும் மீறிய படைப்பாளியாயகத் திகழ்கிறார்.வெற்றுக் காகிதத்தில் ஒன்று,நூறு, ஆயிரம்--பத்து கோடி, நூறு கோடி மேலும் மேலுமென்று கோடுகளை அதன் எல்லா இயல்புகளிலும் போடுகிறார்.அவை இல்லாமல் போய்விடுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டாலும் வெள்ளைத் தாளிலும் நமக்குத் தெரியாமலும் சில கோடுகள் குறுக்கிலும் நெடுக்கிலும் இருக்கும் என்ற உண்மை அவருக்கு தைரியமூட்டுகிறது.

அந்த தைரியம்தான் அவரைப் பாடவைக்கிறது இவ்வாறு:

' சாதித்திருக்கிறாயா நீ

என்ளூது ஒரு கேள்வி

என்னிடம் இப்பொழுது

பதில் இல்லை

என் உடல் மரித்தபின்

எழும் கல்தூண்

முன் கேள் '

கேட்கும் எண்ணம் நமக்கு இல்லை, தேவையில்லை என்பதால்.

***

ஜூலை 6 ஆத்மாநாமின் மறைவு தினம். அவரது நினைவாக

bharathiraman@vsnl.com

***

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

இன்றைய கவிதை on February 19, 2010 at 6:56 AM said...

மிக அருமை

நன்றி
ஜேகே

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்