நாஞ்சில் நாடன்
மூன்று நாட்களாக விடாத அடைமழை. வானம் வெளிவாங்காமல் மூடாக்குடன் இருந்தது. நடுப்பகலில் இரவு ஏழு மணி ஆனது போல இருள் மயக்கம். வீடுகள், கோயில்கள், மண்டபங்கள் யாவும் கழுவிவிட்டது போல் ஈரத் துலக்கம். மழைத் தண்ணீர் புழுதி அரித்து ஓடி, தெரு மணல் மினுங்கக்கிடந்தது. தெருவில் பள்ளம் நோக்கி ஓடும் தண்ணீர் இரண்டு கை அள்ளிக் குடிக்கலாம் போலத் தெளிந்து ஓடியது. பெருமழையின் காரணமாக இரண்டு நாட்கள் உள்ளூர்ப் பள்ளி விடுமுறை. பகலில் வழக்கமாக காய்கறி, கீரை, கோலப்பொடி மாவு விற்கும் கூவியர் நடமாட்டம் இல்லை.
பகலிலேயே ஆள் நடமாட்டம் இல்லாதபோது ஒன்பது மணி தாண்டிய இரவில் யார் நடமாடுவர்? கழுதைகள்கூட மரத்து அடிவாரங்களில் ஒதுங்கி, நின்றவாக்கில் தூங்கின. மாட்டுத் தொழுவங்களில் எருமை மாடுகளின் வாலடி. மழை நின்று பெய்தது. மழைக்கும் அதன் அடர்வு பொறுத்துப் பெயர்கள் உண்டு. தூற்றல், தூறல், தூவானம், சரமழை, அடைமழை, பெருமழை. சிறு தூறலை, நெசவாளர் நூறாம் நம்பர் மழை என்பார்கள். நூலின் சன்ன ரகம் போல என்ற பொருளில், சீராக ஓசையுடன் பெய்துகொண்டே இருந்தது. மழைக்கு மணம் மாத்திரமல்ல, ஒலியும் உண்டு.
மழை கிழக்கில் இருந்து அடித்தது சாய்வாக. நல்லவேளையாகக் காற்று அலைக்கழிக்கவில்லை. சுவரோரம் எத்தனை ஒட்டிப் படுத்தாலும் லேசாகக் கச்சான் தெறித்தது. விரித்திருந்த கோணிச் சாக்கில் காலடியில் ஈரம் நயத்திருந்தது. எப்போதும் கீழே விரிக்க இரண்டு கோணிச் சாக்குகள். தலைக்கு மாற்றுடை திணிக்கப்பட்ட துணிப்பை. போர்த்திக் கொள்ள பன்னப் பழசான முரட்டு சமுக்காளம். தலைமாட்டில் சாப்பாட்டுத் தட்டு, டம்ளர், தண்ணீர்ச் செம்பு.
கிழக்குப் பார்த்த வாசல்கொண்ட சைவ மடத்தின் வடக்குப் படிப்புரை அது. இருவசமும் சாய்வாகத் திண்டுகள். அப்பர் மடம் என்பார்கள் கிராமத்து மக்கள். மானிப்பாரின்றிக்கிடந்த மடம். உள் முற்றத்தில் எருக்கு, மஞ்சணத்தி, ஊமத்தை காடடைய வளர்ந்துகிடந்தன. திருவிழாக் காலங்களில் மடத்தைத் திறந்து, மராமத்துப் பார்த்து, சுத்தம் செய்து, அப்பர் சிலைக்கு சூடம், சாம்பிராணி காட்டுவார்கள். வெற்றிலை, பாக்கு, மூன்று பாளையங்கோட்டன் பழம்வைத்துக் கும்பிட்டுப் போவார்கள்.
மற்ற நாட்களில் வவ்வால், பெருச்சாளி வாழும். பூனை குட்டி போட்டுப் பெருகும். பாம்பினங்கள் உண்டு. மடத்தின் பின்புறத் தோப்புக்கு வேலியும் காவலும் கிடையாது. வாசல் பக்கம் ஆடுகள் வெயிலுக்கு ஒதுங்கிப் புழுக்கை போடும். நாய்கள் படுப்பதுண்டு. சுற்றுச் சுவரோரம் நின்ற வேப்ப மரம் ஏறி உள்ளே குதித்துச் சிறுவர் ஒளிந்து விளையாடுவது உண்டு. திருநாவுக்கரசரே ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கியவர்தான்.
பேச்சியம்மை ஒருமுறை சொன்னாள், ”வெளி வாசல் சாவி கொடுத்தா, அடித்து வாரி, குப்பை செத்தை மாற்றி, செடி கொடிகள் வெட்டித் துப்புரவாக்கித் தினமும் வாசல் தெளித்துக் கோலம் போட்டுவைக்கிறேன்” என. பெரிய தம்புரான் உத்தரவு வேண்டும் எனச் சொல்லிவிட்டனர் என்றாலும், வாசல் கூட்டித் தெளிக்க பேச்சியம்மை மறப்பதுஇல்லை.
வாசல் தெளிக்க, கோலம் போட, சாயரட்சைக்கு மாடக்குழியில் விளக்கேற்றிவைக்க, வெள்ளி… செவ்வாய்களில் பசுஞ்சாணம் இட்டு மெழுக, அவளுக்கும் வீடு ஒன்று இருந்தது முன்பு. பெருமாள் கோயில் தெருவில் வீடும், நடுப்பத்தில் 18 மரக்கால் விதைப்பாடும், வீட்டின் பின்புறம் கிடந்த காலி மனையில் நான்கு தென்னம்பிள்ளைகளும்.
மதுசூதனன் என்று திருத்தமாகவும் மசூனன் என வழக்கிலும் விளிபட்ட மகனுக்கு மூன்று வயது இருக்கையில், பேச்சியம்மையின் கணவன் காணாமல் போனான். ஓடிப் போனானா, எவரும் கடத்திப் போயினரா, உளனா, இலனா என எவரும் கண்டு சொன்னதும் இல்லை, கூட்டிக் கொண்டுவிடவும் இல்லை. உடல் கிட்டாதவரை மரணம் யாண்டு ஊர்ஜிதமாகும்? இன்றும் பேச்சியம்மைக்கு மஞ்சள் கயிற்றில் ஊசலாடும் தாலியும், நெற்றியில் மஞ்சள், குங்குமமும் மவுசாக இருந்தன.
ஒற்றைத் தனி மனுஷி. காரும் பாசனமும் பயிரிட்டு வெள்ளப் பெருக்கும் வறட்சியும் எதிர்கொண்டு, நோயும், எலி வெட்டும், களையும், காற்றடியும் தாங்கி, 18 மரக்கால் விதைப்பாட்டில் நடுக்கடலில் துடுப்பின்றி, பாய்மரமும் இன்றிப் படகோட்டிப் போனாள்.
உள்ளூரில் சின்னப் பள்ளிக்கூடம், செலவு இல்லை. பக்கத்து ஊரில் பெரிய பள்ளிக்கூடம், இழுக் கக்கூடிய பாரம். மதுசூதனன் நன்கு படிக்கிற பையன். தகப்பன் இல்லாவிட்டால் என்ன?, பருவகாலம் தரும் வருமானம் சோற்றுப்பாட்டுக்குத்தான் போதும் என்றால் என்ன?, அரசு ஆணைகளின் அனுகூலங்கள் அற்றவன் என்றால் என்ன?, பேச்சியம்மை மனதிடம் உற்றவள். சலிப்புற்ற நாட்களில் புலம்புவாள்… ‘சீமான் வீட்ல பொறந்திருக்க வேண்டிய பய, என் வயித்துல பொறந்து சீரழியான்.’
கணவன் கானகத்தே காரிருளில் கைவிட்டுப் போனாலும், வைராக்கியம் என்பதோர் எஃகு ஆயுதம். எனில் இருமுனையும் கூர்கொண்டது. பேச்சியம்மை நாள், கிழமை எதுவும் கொண்டாடுவதில்லை. அசைவம் உண்டு பழகியவள் எனினும் ‘அப்பிடி என்ன நாக்குக்கு நறுவிசு வேண்டிக்கெடக்கு?’ எனத் துறந்தவள். துறந்தது மாத்திரம் அல்ல, சின்னப் பயலுக்கு என இரக்கப்பட்டு அண்டை அசல், மதனி சம்பந்தி எதைக் கொண்டுவந்தாலும் மூர்க்கமாக மறுப்பவள். சொந்தக்காரர்கள் சொல்வார்கள், ”பூணூல் போட்டு, பெருமாள் திருமண்ணும் தரித்தால் மதுசூதனன் பாப்பாரப் பிள்ளை போலிருப்பான்” என்று.
கூடப் பிறப்புக்களுக்கும் சொந்தக்காரர்களுக்கும் சம்மதம் இல்லை, மதுசூதனன் மதிப்பெண்களில் முன்னுரிமை பெற்றுப் பொறியியல் படிக்கப் போனது.
வெளியூர்க் கல்வி, விடுதித் தங்கல், கல்லூரிக் கட்டணம், உபகரணங்கள், உடை என முதல் வருடச் செலவுக்கு இரண்டு கொத்துச் சங்கிலி, உள்கழுத்து அட்டியல், தாலிக் கொடி போயின. இரண்டாம் ஆண்டில் கையில்கிடந்த காப்புகள், காதில் கம்மல்கள், ஆசையாய்ச் செல்ல மகனுக்கு செய்து போட்டு அழகு பார்த்த கழுத்துச் செயின், பொன்னரைஞாண், சாப்பிடும் வெள்ளித் தட்டு, பன்னீர்ச் செம்பு, சந்தனக் கும்பா, கொலுசு, தண்டை, சிவப்புக்கல் கடுக்கன், யானை முடிக் காப்பு போயின. மூன்றாம் ஆண்டு வயல் ஒத்தி, நான்காம் ஆண்டு விலை ஆதாரம்.
இன்று விற்றால், நாளை வாங்க மாட்டானா? பொன்னும், முத்தும், பவளமும், மணியுமாய் அடித்து உருட்டிப் போட மாட்டானா? தினமும் கொடுப்பைக் கீரையும், அகத்திக் கீரையும், முருங்கைக் கீரையும், பப்பாளிக் காயும், வாழைத்தண்டும் சாசுவதமா? 100-ம் நம்பர் நூல் புடவை இடுப்பில் நிற்காதா? மருமகளும் பேரக் குட்டிகளும் வீடு நிறைய விளையாட மாட்டார்களா? குலுக்கையில் நெல்லும், பானைகளில் உளுந்தும், பயறும், கருப்பட்டியும் நிறைந்து வழியாதா?
பம்பாய் கம்பெனி ஒன்றில் பணி ஏற்றான் மதுசூதனன். மழை பொழிந்து, நுங்கும் நுரையுமாகச் செங்காவிக் கொப்பளித்துக் குமிழியிட்டுப் பாய்ந்த ஆற்று வெள்ளம் மழை வெறித்ததும் தெளிந்து வருவதைப் போல, பேச்சியம்மை தெளிந்தாள். வீடு சற்று வெளிச்சமானது. ஆதரவான தோழிகளிடம் வாங்கிய வட்டிக் கடன்கள் தூர்ந்தன.
பேச்சியம்மைக்குச் சில கனவுகள் இருந்தன. ஓடிப் போன கணவன் திரும்பி வந்து புதுக் குடித்தனம் நடத்துவான் என்பது அவற்றில் ஒன்றல்ல. முக லட்சணமுள்ள, நாலைந்து பெற்றுப் போடுகிற இடுப்புத் திறனுள்ள மருமகள் வாய்க்க வேண்டும். பேர் துலங்க, பெருமாள் கோயிலுக்குக் கணிசமாகக் காரியமாய் ஏதும் திருப்பணி செய்ய வேண்டும்.
மேலும், ஓர் ஆண்டில் மதுசூதனன் அமெரிக்க நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து கலிஃபோர்னியா போனான். பேச்சியம்மை பெருமையாகக் கலிபோனி என்றாள். வெளிநாடு புறப்படும்போது கடைசியாக அவனைப் பார்த்தது.
முதல் ஆறு ஆண்டுகள் விடுப்பு இல்லை, வேலை நெருக்கடி எனக் கடிதங்கள் வந்தன. காத்திருந்து காய்ப்பேறிப்போன மனம். மாதாமாதம் பெரிய தெருவில் இருந்த வங்கிக்குப் பணம் வந்தது. தொடர்ந்து ஒரு கடிதமும். ஏர்-மெயில் வாங்கி 10-வது படிக்கும் பாண்டுரங்கனின் ஒழிந்த நேரம் யாசித்து, பதில் எழுதிப் போடுவாள். மறு மாதக் கடிதத்துக்கான காத்திருப்பன்றி வேறு தொழில் இல்லை. மகன் அனுப்பும் பணம்… வெள்ளம்.
தீவிரமாகப் பெண் தேடலானாள் பேச்சியம்மை. எதுவானாலும் மதுசூதனன் நாட்டுக்கு வர வேண்டும். பெண் பார்த்துச் சம்மதிக்க வேண்டும். நாள் குறிக்க வேண்டும். கல்யாணம் நடத்த வேண்டும். தென்னை மரங்களில் பழுத்த மட்டைகள் கழன்றன, குருத்து ஓலைகள் விரிந்தன. பேசிவைத்த பெண் பிள்ளை களுக்குத் திருமணம் ஆகிக் குழந்தைகள் பிறந்தன. பணம் வந்தது. கடிதம் வந்தது. மாதம் தவறாமல், தேதி தவறாது என்று என்று என ஓங்கிற்று பித்தம் முற்றிய தாய் மனது.
‘நீ எழுது மக்கா பாண்டு… பிள்ளையார் சுழி போட்டுக்கோ. என் அன்புச் செல்லத்துக்கு. அம்மா சொகமாட்டு இருக்கேன். நீ சொகமாட்டு இருக்கியா? அனுப்புன பணம், காயிதம் எல்லாம் தவறாம வருது. பணத்தை வெச்சுக்கிட்டு நான் என்ன செய்யட்டும்? இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள லீவு எடுத்துக்கிட்டு நீ வரணும். உம் மொகத்தைப் பாத்து இன்னா அன்னான்னு 10 வருஷம் ஓடிப்போச்சு. மொகமே மறந்திரும் போலிருக்கு. அம்மையை இனி நீ உசிரோடு பாக்கணும்னா, உடனே வந்து ஒரு கலியாணத்தை முடிச்சுக்கிட்டுப் போ… உடம்பைப் பாத்துக்கோ.’
10-வது படிக்கும்போது எழுத ஆரம்பித்த பாண்டுரங்கனுக்கே கல்யாணம் ஆகிக் குழந்தை கள் உள்ளன. தழுதழுத்த தாய்ப் புலம்பல் அவனைச் சங்கடப்படுத்தியது. களை இழந்த முகமும், கன்னத்து ஒடுங்கலும், குரலின் தளர்ச்சியுமாக, மேலும் கழிந்தன சில மாதங்கள்.
ஒரு நாள் காலை பத்தரை மணிவாக்கில் மேலத் தெரு சங்கரமூர்த்தி வீடு வரைக்கும் போனாள் பேச்சியம்மை. அவன் மதுசூதனன் வகுப்புத் தோழன், நெருங்கிய சேக்காளி.
”வாருங்க சித்தி! என்னத்துக்கு இந்த வெயில்லே! கூப்பிட்டு அனுப்பி இருந்தா நானே வருவன்லா?”
”ஆமா, நீ ரெண்டாக்கினே! ஆறு மாசமா நானும் சொல்லிவிடுறேன், நீயும் வந்துக்கிட்டே இருக்க. ஒரு காரியம் சொல்லத்தான் வந்தேன். உன் கூட்டாளிக்கு ஒரு காயிதம் போட்டிரு… இனி எனக்குப் பணம் அனுப்பாண்டாம். அவனையும் இங்க வராண்டாம்னு சொல்லிப் போடு!” சொல்லும்போது பேச்சியம்மையின் குரல் கம்மி, உடைந்து, கரகரத்து, கண்கள் சிந்தி…
”பொறுங்க சித்தி… நான் கண்டிசனா எழுதுறேன்…’
”ஆமாமா… ரெண்டு பேரும் கூட்டுக் களவாணிய… மாப்பிளை போனான், 28 வருசம் ஆச்சு. இருக்கானா, செத்தானாத் தெரியாது. மகன் போனான், இப்பம் 10 வருசமாச்சு. இப்பம் பிள்ளை எனக்கு இருந்தும் செத்தவன்தான்.”- கண்டாங்கியில் கண்களைத் துடைத்து மூக்கையும் சிந்தி நடந்த பேச்சியம்மை நேராக வங்கிக்குப் போனாள். பார்த்துப் பழகிய முகம். மேலாளர் அவளைக் காக்கவைப்பதில்லை.
”வாங்கம்மா! பணம் எடுக்கணுமா?”
”இல்ல தம்பி! எனக்கொரு காரியம் செய்து தரணும்!”
”என்ன? ஏதாம் லோன் வேணுமா?”
”அது ஒண்ணுதான் கொறச்ச எனக்கு… மாசாமாசம் என் மகன் அனுப்பப்பட்ட பணம் இனி எனக்கு வேண்டாம். இனிமேல் வந்தா, அதைத் திருப்பி அனுப்பணும்.”
”எதுக்கும்மா? உங்களுக்குச் செலவு இல்லேன்னா, அதுபாட்லே ஒரு ஓரமாகக் கெடக்கட்டும். எஃடிக்கு மாத்திவிட்டிர்றேன்… வட்டியாவது வரும்.”
”வட்டியை வாங்கி நான் என்ன செய்யட்டு? எங்கின ஒப்புப் போடணும்னு சொல்லு. எனக்கு அந்தப் பணம் வேண்டாம்.”
”யோசிச்சுச் செய்யலாம்… சொந்தக்காரங்க யாரையாம் கூட்டீட்டு வாங்க. அவாளை யும் கலந்துக்கிடுவோம்.”
”எனக்கு ஒருத்தன்ட்டயும் கேக்காண்டாம். எனக்கு அவன் பணம் வேண்டாம். உங்களால முடியாதுன்னா சொல்லீடுங்க.”
”என்ன செய்வீங்கம்மா? மேலே போய் புகார் கொடுப்பீங்களா?”
”அதெல்லாம் போ மாட்டேன். நாளைக்கு நீ பேங்கு தொறக்க வரச்சிலே, எம் பொணம் வாசல்லே கெடக்கும். செத்துப்போனவ கணக்கிலே பணம் வரவுவைக்க முடியாதுல்லா?”
கிளை மேலாளர் சற்று ஆடிப்போய்விட்டார். எவ்வளவு பெரிய சட்ட நுணுக்கச் சிக்கல்கள்? கிளை விடுமுறைவிட வேண்டியது வருமோ? முன்னுதாரணங்கள் உண்டா? உதவியாளரைக் கூப்பிட்டு, விண்ணப்பம் அடிக்கச் சொல்லி, பேச்சியம்மை கையப்பம் வாங்கி… ”இனி உங்க கணக்குக்கு வரப்பட்ட பணம் ரிடர்ன் ஆயிரும்மா… நிம்மதியாப் போங்க.”
தொடர்ந்து கடிதங்கள் வந்தன சில காலம். படித்தும் பாராமல் கிழித்துப்போட்டாள். பாண்டுரங்கனுக்கும் வேலை இல்லாமல் ஆகியது. சங்கரமூர்த்தி வலிய வந்து செய்ய முயன்ற உதவிகளை பேச்சியம்மை காட்டமாக மறுத்தாள். காலம் ஒவ்வொன்றாக விற்றுத் தின்றது.
எவர் எது கொடுத்தாலும் வாங்குவதில்லை. எவர் வீட்டுச் சேவகத்துக்கும் போவதில்லை. நல்லது கெட்டது இல்லை. முடிகிறபோது கோயிலைப் பெருக்குவாள். நந்தவனத்துக்குத் தண்ணீர் சுமப்பாள். மந்திரம் போல் அவள் உதடுகள் சில சமயம் முணுமுணுக்கும் ‘தந்தை போயினன், தாதன் போயினன், தனயனும் போயினன்’. பூப்பறித்துக் கொடுப்பாள். மடப்பள்ளிப் பாத்திரங்கள் தேய்த்துக் கொடுப்பாள். எண்ணெய்ப் பிசுக்கேறிய பிராகாரச் சிலைகளைத் துடைப்பாள். விளக்குகளுக்குத் திரி திரித்துப் போடுவாள். எண்ணெய் ஊற்றுவாள்.
ஆண்டாள், வட பத்ர சாயிக்கு சூடிக் கொடுத்த சுடர்க் கொடி ஆம் எனில், பேச்சியம்மை மதுசூதனப் பெருமாளுக்குப் பெருக்கியும் கூட்டியும் விளக்கியும் துடைத்தும் கொடுத்த கிழக் கொடி.
பெருமாள் கோயில் பட்டத்திரி ஒரு நாள் கேட்டார். ”எல்லாம் வித்துத் தீந்த பிறகு என்ன செய்வே பேச்சியம்மா?”
”மத்தியானம் நைவேத்தியம் ஆனதும் நீரு ஒரு கை ததியோன்னமோ, புளியோதரையோ தாரேருல்லா, அது போதும். இந்த உசிரை வெச்சுக்கிட்டு யாருக்கு என்ன பிரயோசனம்?”
வீட்டின் மேல் கடன் வாங்கி, தின்று முடிந்தது. முன் சொன்ன ஆஸ்திகளுடன் பேச்சியம்மை அப்பர் மடத்துப் படிப்புரைக்குக் குடி பெயர்ந்தாள். யாரும் எதுவும் கேட்கத் துணியவில்லை.
அதிகாலையில் துவைத்துக் குளித்துக் கோயிலுக்குப் போனால், உச்சைக்காலம் கழிந்து நடையடைக்கும் வரை அவளுக்கு வேலைகள் இருந்தன. நான்கு மணிக்கு நடை திறந்தால், இரவு எட்டு மணி வரைக்கும். வேலை இல்லாப் பொழுதுகளில் சக்கரத்தாழ்வான் சந்நிதித் தூணோரம் சாய்ந்திருப்பாள். ஊர்க் கதை பேசுவது இல்லை, கேட்பதும் இல்லை காண். காப்பி, தேநீர் குடிப்பதில்லை. கிணற்றுத் தண்ணீருக்குப் பஞ்சமும் இல்லை. இரண்டு வேளைகள் பெருமாள் படி அளந்தார்.
பட்டர் ஒரு நாள் யாரிடமோ சொல்லியவாறிருந்தார்… ”இத்தனைக்கும் அந்தப் பய வந்து எட்டிப்பாக்கல. புருசன் ஓடிப் போயி, பச்சப்புள்ளைய வெச்சுக்கிட்டு என்ன பாடுபட்டிருப்பா? 21 வயசுப் பொம்மனாட்டிய ஊரு சின்னப் பாடாபடுத்தி இருக்கும்? எல்லாம் பெருமாள் பாத்துக்கிட்டிருக்கார்.”
ஆம். பெருமாள் பார்த்துக்கொண்டு இருந்தார், ஸ்தூலமாயும் சூட்சுமமாயும்.
”நாளை செத்துப்போனா, பேச்சியம்மைக்கு யார் கொள்ளி போடுவா?”
கேட்டுக்கொண்டே வந்த பேச்சியம்மை சொன்னாள்… ”பெருமாள் போடுவார்… அவர் சார்பா நீரு போடும்.”
கச்சான் சற்று வலுத்து அடித்தது. அடைமழையுடன் காற்று கலகலத்துப் பேசியது.
நனைந்துவிடாமல், சுவரும் திண்டும் கூடும் இடத்தில் குறுகி உட்கார்ந்து, வலுக்கும் மழையை ஊடுருவிப் பார்த்தவாறு இருந்தாள் பேச்சியம்மை!
******
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
0 கருத்துகள்:
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.