Feb 16, 2010

தொட்டில் வாசனை-எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் - கதாவிலாசம்

வண்ணநிலவன்

ஊரிலிருந்து சென்னைக்கு கைக்குழந்தையோடு இடம் மாறி வந்த நாளில், என் மனைவி சிறிய பொட்டலம் ஒன்றை முடிந்து கையோடு எடுத்து வந்திருந்தாள். அந்தப் பொட்டலம் நீண்ட நாட்களாக குழந்தையின் தொட்டில் கம்பில் கட்டித் தொங்கவிடப்பட்டு இருந்தது.

vannanilavanஒவ்வொரு முறை அதைக் காணும்போதும், என்ன இருக்கிறது அதில் என்று கேட்க வேண்டும் என்று தோன்றும். குழந்தையின் கண் திருஷ்டிக்காக எதையாவது கட்டி வைத்திருப்பார்கள் என்று கேட்காமலே விட்டுவிடுவேன். பையன் தொட்டிலில் உறங்கும் வயதைக் கடந்து வந்துவிட்ட பிறகு, இனி தொட்டிலின் தேவை முடிந்துவிட்டது என்பதுபோல அவிழ்த்துக்கொண்டு இருந்தார்கள். அந்தப் பொட்டலம் சுருங்கிச் சின்னதாகிக் கீழே விழுந்தது.

என்னதான் இருக்கிறது அந்தப் பொட்டலத்தில் என்று எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். உள்ளே பிடி மண் இருந்தது. என் முகத்தைப் பார்த்தபடியே மனைவி சொன்னாள்…
Ô‘பிறந்த இடத்தின் மண் இல்லாவிட்டால் குழந்தை நிம்மதியாகத் தூங்காது. அதற்காக ஊரிலிருந்து வரும்போது ஒரு பிடி மண்ணைக் கொண்டுவந்து கட்டினேன்!ÕÕ
வியப்பாக இருந்தது. பிறந்த மண்ணின் வாசனையும் நெருக்கமும் இல்லாவிட்டால் குழந்தைகளுக்கு நல்ல தூக்கம் வராது என்பது எத்தனை ஆழ்ந்த நம்பிக்கை! அப்படியென்றால், பையன் தன் உறக்கத்திலும் கனவிலும் என் ஊரைத்தான் நுகர்ந்துகொண்டு இருந்திருக்கிறானா? ஊரின் வாசம்தான் உறக்கத்தை வரவழைக்கக் கூடியதா? இப்படிப் பிறந்ததிலிருந்து மண் வாசனையை நுகர்ந்துகொண்டு இருந்த நாம், வளர்ந்த பிறகு அதை எப்படி மறந்துவிடுகிறோம்? மண்ணோடு மனிதனுக்கு உள்ள உறவு விசித்திரமானதுதான், இல்லையா?

ஊரைப் பிரிந்து வருவது எளிதானதில்லை. புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளரான டால்ஸ்டாய், தனது கிராமத்திலிருந்து நகரத்துக்கு இடம் பெயர்ந்தது பற்றி அவரது வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் குறிப்பிடும்போது, ‘ஒரு நூறு வருடப் பழைமையான ஓக் மரம் தன் வேரைத் துண்டித்துக்கொண்டு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நகர்ந்து சென்றது போலிருந்தது அந்த நிகழ்ச்சி’ என்று எழுதுகிறார். ஊரின் அழகு அதன் விஸ்தாரணத்திலோ, வளத்திலோ இல்லை. மாறாக, அதோடு நாம் கொள்ளும் உறவில்தான் இருக்கிறது. ஒவ்வொரு ஊரும் ஒரு கண்ணுக்குத் தெரியாத பதிவேட்டைக் கொண்டு இருக்கிறது. அதில் எண்ணிக்கையற்ற நிகழ்ச்சிகள் பதிவாகின்றன. பிறந்தவர் எத்தனை, செத்தவர் எத்தனை, வாழ்ந்து உயர்ந்தவர் யார், வாழ்ந்து கெட்டவர் யார்… இப்படி எத்தனை ஆயிரம் கணக்குகள்! ஊரின் விசித்திரம் அதன் வெளிப்படுத்தப்பட முடியாத மௌனம்தான். கரும்புகை சுழல்வது போல நிசப்தம் ஒவ்வொரு ஊரையும் சுற்றிப் படர்ந்திருக்கிறது.

மண் திமிறுகிறது என்று விவசாயிகள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். உண்மைதான். நிலம் சதா புரண்டுகொண்டேதான் இருக்கிறது. மண் நம் காலடியில் கிடக்கிறது என்பதற்காக, அற்பமானது என்பதுபோலப் புரிந்துகொண்டு இருக்கிறோம். உண்மையில் மண் ஒரு விசை. மண் ஒரு உயிர்ப் போராட்டம். மண்ணின் குணம் மிக விநோதமானது!

ஒரு கொய்யாப்பழத்தைத் தின்னும்போது, அதன் ருசியாக இருப்பது அந்த மண்வாகுதான். கிராமத்துப் பெண்கள் கத்திரிக்காயை எந்த ஊர்க் காய் என்று கேட்டுதான் வாங்குவார்கள். மண்வாகு காய்கறிகளுக்கு காரலையோ, கசப்பையோ கொண்டு வருகின்றன. இளநீரின் ருசி அது விளையும் மண்ணைத் தான் சார்ந்திருக்கிறது! கொய்யாப்பழமாக, இளநீராக, அரிசியாக, கீரைகளாக மண் தன் ருசியை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இன்றுவரை மண்ணை நாம் புரிந்துகொள்ளவே இல்லை.

மண்ணின் கருணைதான் மனிதர்களை வாழ வைக்கிறது. காய்கறிகளுக்கே இப்படி ருசியும், சத்தும் மண் தருகிறதென்றால், இந்தக் காய்கறிகளையும், கீரைகளையும், பழங்களையும் உண்டு வாழ்ந்து அந்த மண்ணில் புரண்டு திரியும் மனிதனை எத்தனை உரமேற்றியிருக்கும்!

ஊர் ஒவ்வொருவர் உடல் மீதும் கண்ணுக்குத் தெரியாத சில முத்திரைகளைக் குத்தி அனுப்பிவிடுகிறது. அந்த மண் கவிச்சிதான் நம் பேச்சில், சாப் பாட்டில், பழக்கவழக்கத்தில், உடை களில், உறவில் வெளிப்படுகிறது.

பழைய டெல்லியில் சுற்றித் திரிந்துகொண்டு இருந்தபோது, ஓட்டல் நடத்தும் ஒரு தமிழ்க் குடும்பம் பரிச்சயமானது. அவர்களிடம் பேச்சுவாக்கில் டெல்லி பிடித்திருக்கிறதா என்று கேட்டேன். அவர்கள் பிழைப்பதற்கு மிக உதவியாக இருக்கிறது என்றார்கள். ஊருக்கு வரும் யோசனை இருக்கிறதா என்று கேட்டதும் ஓட்டல் நடத்தும் நபரின் மனைவி, ‘அங்கே என்ன இருக்கு, வருவதற்கு? எங்களுக்கு எல்லாமே இனி இந்த ஊர்தான்’ என்றாள். நான் வேண்டுமென்றே ‘இந்த ஊரில் உங்களை வெளியாள் என்றுதானே சொல்கிறார்கள்?’ என்று கேட்டேன். அந்தப் பெண், குரல் உடைந்து போனவளாக, ‘எங்களோட ஒரு வயசுக் குழந்தை குளிர்காய்ச்சல் வந்து செத்துப் போய் இந்த ஊர்லதான் புதைச் சிருக்கோம். டெல்லி மண்ணுல என் பிள்ளையோட எலும்பும் கலந்திருக்கு. எங்களை வெளியாள்னு சொல்றதுக்கு யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது சார்! நாங்க இந்த ஊர்தான்!’ என்றாள்.
அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது. பிறப்பு மட்டுமல்ல, சாவும்தானே ஊரோடு உள்ள பந்தம்!

ஊரைப் பிரிந்து செல் வதைப் பற்றிய கதைகளில் மிக அபூர்வமானதும் உயர் வானதும் வண்ணநிலவன் எழுதிய ‘எஸ்தர்’ சிறுகதை. வண்ணநிலவனின் நுட்பமான விவரிப்பும் மொழியும், துக்கத்தை வெளிப்படுத்தும் பாங்கும் இக்கதையை என்றும் உயிர் வாழும் சாஸ்வதமான கதையாக மாற்றியிருக்கின்றன. எஸ்தரை எத்தனை முறை வாசித்திருப்பேன் என்று கணக்கிட்டுச் சொல்லவே முடியாது. வண்ணநிலவன் கதைகள் தமிழ்ச் சிறுகதைகளை இன்னொரு பரிமாணத்துக்கு உயர்த்தியவை. அவர் எதையும் உரத்துச் சொல்பவரில்லை. ஆனால், அவரது கதைகள் ஏற்படுத் தும் வலியும் துக்கமும் ஒரு வடுவைப் போல நீண்ட நாட்கள் நம்மோடு கூடவே இருக்கக் கூடியவை.

வண்ணநிலவனின் கதாபாத்திரங்கள் பெரும் பாலும் பெண்கள். அவர்கள் சூழலால் அலைக்கழிக்கப் படுபவர்கள். ஆனாலும், தங்களின் தைரியத்தாலும், எளிய அன்பினாலும்தான் உலகம் இயங்குகிறது என்னும் உண்மையை வெளிப்படுத்துபவர்கள்.

‘எஸ்தர்’, மழையற்றுப் போய் பஞ்சம் பீடித்த ஒரு ஊரின் கதையைச் சொல்கிறது. ‘முடிவாக பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாகியது’ என்று தொடங்கும் இக்கதை… ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின் வாழ்க்கைப் பாடுகளை விவரிக்கிறது.

மரியதாஸ் என்பவரின் பிள்ளைகள் அகஸ்டினும் டேவிட்டும். இருவரது மனைவியர் பெயரும் அமலம். ஆகவே, ஒருத்தி யைப் பெரிய அமலம் என்றும், மற்றவளை சின்ன அமலம் என்றும் அழைக்கிறார்கள். அவர்களுடன், வயதான பாட்டி ஒருத்தி கூரையைப் பார்த்தபடி தனது அந்திம நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறாள்.

இந்த வீட்டை நிர்வகிப்பது எஸ்தர் சித்தி. புருஷனோடு வாழப் பிடிக்காமல் பல வருட காலத்துக்கு முன்பு, அந்த வீட்டுக்கு வந்து தங்கிவிட்டவள். வீட்டின் சகலபாடுகளையும் கவனித்துக் கொண்டு, வீட்டை தன் கைக்கூட்டுக்குள் பொத்தி காப்பாற்றி வருகிறாள். வீடே சித்திக்காக இயங்கியது. வேலைக்காரர்கள்கூட சித்திக்காகத்தான் வேலை செய்தார்கள். எஸ்தர் சித்தி மிக அன்பானவள். யாரையும் ஒரு சொல் திட்டாதவள்.

வீட்டு வேலைகளை அவளைப்போல் அக்கறையாக யாரும் செய்ய முடியாது.
பஞ்சகாலத்தில், வீட்டில் உணவு தட்டுப்பாடாகியது. மனிதர்களை விடவும், ஆடு மாடுகளின் தீவனத்துக்காக அதிகம் அலைந்து திரிய வேண்டி இருந்தது. வீட்டில் ஒரேயரு தீப்பெட்டிதான் இருந்தது. ஆகையால் தீக்குச்சிகளைக்கூட எஸ்தர் சித்தி பாதுகாத்து வைத் திருக்கிறாள். பீடி புகைக்கும் டேவிட், ஒரு தீக்குச்சியை ரகசியமாக எடுத்து உரசும்போது, அதன் சத்தம் கேட்டு வந்து பார்க்கும் சித்தியின் கண்களில் படிந்துள்ள வேதனை, டேவிட்டை மிகவும் துக்கப்படுத்துகிறது. பஞ்சம், வீட்டு மனிதர் களின் சுபாவத்தை முற்றிலும் ஒடுக்கிவிடுகிறது. யாவரும் மனக்கலக்கம் கொண்டவர்களாக நடந்துகொள்கிறார்கள்.

பஞ்சம் பீடித்த ஊரில் ஆட்கள் காலி செய்து போய்விடவே, தெருsraaவில் ஆள்நடமாட்டம் குறைந்து போய், ஊரெங்கும் அழிவற்ற இருட்டு பெருகியது. பேச்சரவம் ஓய்ந்து போய், ஊறிய இருட்டு ஊரெங்கும் பயத்தைப் பெருக்கியது. அதோடு இருட்டு சதா எதையோ முணுமுணுத்துக்கொண்டு இருப்பது போலிருந்தது.
எஸ்தர் சித்தி இருட்டின் குரலைக் கேட்டுக் கொண்டு இருந்தாள். ‘நீயும் உனக்குப் பிரியமானவர் களும் இங்கிருந்து போவதைத் தவிர, வேறு வழி என்ன? மழை  பெய்வதற்காகக் காத்திருந்து மடிவீர்களா?’ என்று இருட்டு, எஸ்தர் சித்தியிடம் கேட்டது. வீட்டில் நிலைகுத்திப்போன கண்களுடன் பாட்டி கூரையைப் பார்த்தபடி இருந்தாள். அப்படி என்னதான் பார்க்கிறாள் என்று எஸ்தருக்குப் புரியவே இல்லை. ஊரைவிட்டுச் செல்லும்போது பாட்டியை என்ன செய்வது என்று அவளுக்கு யோசனையாகவே இருந்தது.

மதுரைக்குச் சென்று கொத்து வேலை செய்தாவது பிழைத்துக்கொள்ளலாம் என்று அந்தக் குடும்பம் முடிவு செய்கிறது. அன்றிரவு சித்தி எழுந்து பாட்டியின் அருகில் போய்ப் படுத்துக்கொள்கிறாள். மறுநாள் காலை பாட்டி இறந்துபோயிருப்பது தெரிய வருகிறது. மலிவு விலையில் வாங்கிய ஒரு சவப்பெட்டி யில் வைத்து பாட்டியைக் கல்லறைத் தோட்டத்தில் புதைத்துவிட்டு, ஊரைவிட்டு விலகிப் போகிறார்கள். அதன்பிறகு, நெடு நாட்களுக்கு எஸ்தர் சித்திக்கு மட்டும் கூரை பார்த்தபடியிருந்த பாட்டியின் ஈரமான கண்கள் நினைவுக்கு வந்தபடி இருந்தன என்பதோடு கதை முடிகிறது.

எஸ்தர் சித்தி பாட்டியைக் கருணைக் கொலை செய்து விட்டாளா… இல்லையா என்று தெரியாதபடி கதை ஓர் இடைவெளியை விட்டுச் செல்கிறது. ஊரின் மீதுள்ள வேர் பிடிப்பும், மழையற்றுப் போன பஞ்ச காலமும் மனிதர்களை வாட்டி எடுக்கும் சோகமும் கதையெங்கும் நீக்கமற நிரம்பியிருக்கிறது. வண்ணநிலவன் அடங்கிய குரலில், கவித்துவமும் நுட்பமான சித்திரிப் போடும் இக்கதையை எழுதியிருக்கிறார்.
தினமும் ஆயிரம் பறவைகள் பறந்தபோதும், வானில் எந்தப் பறவையின் சுவடும் இருப்பதே இல்லை. மண் அப்படி இல்லை. அதில், நம் வாழ்வின் சுவடுகள் பதிந்து கிடக்கின்றன. மண்ணின் பாடல் முடிவற்ற ஒரு சங்கீதமாக எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அதை நின்று கேட்டுப் போவதற்கோ, புரிந்து கொள்வதற்கோ நாம் தயாராகவும் இல்லை… விரும்பவும் இல்லை!

வண்ணநிலவன் என்று அழைக்கப்படும் உ.நா.ராமச்சந்திரன் தமிழ் இலக்கியத்தின் அரிய சாதனையாளர்களில் ஒருவர். திருநெல்வேலியைச் சேர்ந்தவர்.

1948&ல் பிறந்த வண்ண நிலவன், துக்ளக் பத்திரிகை யில் சில காலம் பணியாற்றி உள்ளார். இவரது Ôகடல்புரத்தில்Õ நாவல் இலக்கிய சிந்தனை பரிசு பெற்றுள்ளது. எஸ்தர், பாம்பும் பிடாரனும், தேடித் தேடி, உள்ளும் புறமும், தாமிரபரணிக் கதைகள் போன்றவை இவரது முக்கிய சிறுகதைத் தொகுதிகள்.

சிறந்த நாவலுக்காக தமிழக அரசின் பரிசை வென்றது இவரது ”கம்பா நதி” நாவல். இவரது ”ரெயினீஸ் ஐயர் தெரு” தமிழ் நாவல்களில் மிகவும் தனித்துவமானது. திரைப்படத் துறையில் கொண்ட ஈடுபாடு காரணமாக, ”அவள் அப்படித்தான்” படத்தின் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார் வண்ணநிலவன்.

*****

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்