Feb 7, 2010

தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்

எம்.வி. வெங்கட்ராம்

கலியாண விஷயத்தில் என் மகனுடைய பிடிவாதமான போக்கு எனக்குப் பிடிபடவில்லை. நான் சொல்லி அவன் மீறின விஷயம் கிடையாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, அவன் மீறும்படியான விஷயம் எதுவும் நான் அவனுக்குச் சொன்னதில்லை என்பதும்.
FatherandSon2
என் மகனைப் பற்றி நானே புகழ்ந்து பேசினால், 'கலியாணம் ஆகாத பையன்; குறைத்துப் பேசினால் மார்க்கெட் ஆகுமா, என்று பெண்ணைப் பெற்றவர்கள் நினைக்கலாம். 'காக்காயின் பொன் குஞ்சு' என்று பரிகாசம் செய்கிறவர்களும் இருப்பார்கள். என் மகனை நான் இகழ்ந்தால் 'பிள்ளையைப் பெறத் தெரிந்ததே தவிர, வளர்க்க தெரியவில்லையே, ஐயா' என்று என்னையே சாடுவார்கள். ஆகையால், பொதுவாக, அவனைப் பற்றி என் அபிப்பிராயத்தைச் சொல்லிவிடுகிறேன்.

அவன் பெயர் சந்திரன்; என்னுடைய மூத்த மகன். வயது இருபத்திரெண்டு முடிந்துவிட்டது. சட்டப் பரீட்சையில் தேறி, பிராக்டீஸ் செய்யாமல் வீட்டோடு இருக்கிறான். என்னோடு வியாபாரத்தையும் நில புலங்களையும் கவனிக்கிறான். சட்டக் கல்லூரியில் சேரும்வரை வக்கீல் ஆக வேண்டும் என்று ஒரே ஆத்திரமும் ஆவலுமாக இருந்தான். கல்லூரியில் சேர்ந்ததும் அவனுக்குக் கதை எழுதும் பைத்தியம் பிடித்தது. படித்தபடியே கதைகளும் கட்டுரைகளும் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பத் தொடங்கினான். (சில பல என்று கூடச் சொல்லலாம்) பத்திரிகைகளில் அவை வெளியாயின. வக்கீல் பட்டம் பெற்று வெளியே வந்ததும் அவனுக்கும் வக்கீல் தொழில் பிடிக்க வில்லை. பத்திரிகை நடத்துகிறேன் என்று என்னிடம் அனுமதி கேட்டான். அனுமதி கேட்பதென்ன, 'ஆரம்பிக்கட்டுமா?' என்று கேட்டான், ஆரம்பித்து விட்டான். அதுவும் ஒரு தொழில்தானே என்று நானும் பேசாமல் இருந்தேன்.

அவன் செய்யும் எந்தக் காரியத்திலும் நான் குறுக்கிடுவதில்லை. அவன் மேல் எனக்கு அத்தனை நம்பிக்கை. தவறு செய்யமாட்டான் என்று பத்திரிகை நடத்தப் பணம் கொடுத்தேன். 'ராகம்' என்ற அந்தப் பத்திரிகை அழகாகத்தான் இருந்தது. மற்ற பத்திரிகைகள் எல்லாம் அதை மரியாதையுடன் வரவேற்றன. அவை மலை உயரத்துக்கு என் மகனைப் போற்றிப் பாராட்டி வாழ்த்தியதைக் காண எனக்கு மிகவும் பெருமையாகத்தான் இருந்தது.

ஆறு மாதங்கள் கழித்துக் கணக்குப் பார்த்தேன், ஆறுமாத இலக்கியத்தின் விலை ஐயாயிரம் ரூபாய் என்று கணக்கு காட்டியது. எனக்குப் 'பக்' கென்றது.

அவனைக் கூப்பிட்டு, ''சந்திரா, பத்திரிகை நன்றாக நடக்கிறதா?'' என்று கேட்டேன்.

mv. venkatraman ''இதோ பாருங்கள் அப்பா'' என்று அன்று தபாலில் வந்த இருபது, முப்பது கடிதங்களை என்னிடம் நீட்டினான் அவன்.

''அது சரி, கணக்குப் பார்த்தாயா?''

''அப்பா, பத்திரிகை ஒரு லட்சியம்; தொழில் அல்ல'' என்றான் அவன் உணர்ச்சியோடு.

''லட்சியம் அல்ல என்று நான் சொன்னேனா? அதற்காகச் சொல்ல வரவில்லை. என் தகப்பனார் எனக்காக விட்டுப் போன சொத்து பல பூஜ்யங் களுக்கு இருக்கும். நேர் வழியிலோ குறுக்கு வழியிலோ கொஞ்சம் சம்பாதித்துச் சேர்த்து வைத்திருக்கிறேன்.

கூடவே, புத்திர சம்பத்துக்கும் குறைவில்லை. உன் லட்சியத்தை மட்டும் கவனித்தால் மற்ற சத்புத்திரர் களின் லட்சியம் என்ன ஆகும்?''

''பத்திரிகையை நிறுத்திவிடு என்கிறீர்கள்; அது தானே? 'ராகத்'துக்கு மங்களம் பாடிவிட்டேன்; சரிதானே?''

''நீ கதை கட்டுரை எழுதிப் பத்திரிகைகளுக்கு எல்லாம் அனுப்பு. மார்க்கெட்டில் பெயர் உண்டாகிவிடும். பிறகு பத்திரிகை ஆரம்பம் செய், தொழில் எப்படி நடக்கிறது பார்,'' என்றேன் ஆறுதலுக்கு.

''இலக்கியம் வேறே, தொழில் வேறே; இலக்கியம் தொழில் ஆக முடியாது; சரி, இதெல்லாம் உங்களுக்கு தெரியாது, 'ராகம்' முடிந்துவிட்டது.''

சொன்னபடியே செய்துவிட்டான் அவன். அவனுக்கு வருத்தமாக இருந்ததா என்பது கூட எனக்குத் தெரியவில்லை. என்னோடு வியாபாரத்தை கவனித்துக் கொண்டே பத்திரிகைகளுக்கு விஷயதானம் செய்து, பத்து இருபது என்று சம்பாதிக்கத் தொடங்கினான்.

மொத்தத்தில், என் அபிப்பிராயத்தில், என் பையன் நல்லவன். என் சொல்லைத் தட்டமாட்டான் என்பதில் மட்டும் நான் இப்படிச் சொல்லவில்லை. பள்ளியிலும் கல்லூரிகளிலும் ஏராளமாக மார்க்குகள் வாங்கித் தேறியதோடு, வருஷம் தவறாமல் நன்னடத்தைப் பரிசும் அவனுக்குத்தான் கிடைக்கும். சிகரெட், பொடி, புகையிலை வகையறா தெரியாது. சீட்டாட்டத்தில் ஜாதிப் பிரிவினை கூடத் தெரியாது. பெண்களுடன் சங்கோசம் இல்லாமல் பழகுவான். நானும் பயப்படாமல் பழகவிட்டேன் என்பதைச் சொல்லிக் கொள்வதில் தப்பு ஒன்றும் இல்லையே? ஆனால் அவன் வேலியைத் தாண்டியது கிடையாது. அப்படிப் போனதாக அபவாதம் கூட இல்லை. படித்த பையனின் லட்சணம் ஒன்றும் அவனிடம் காணோமே என்று நான் கூட ஆச்சரியப்படுவது உண்டு. நான் கண்டிக்கும்படியாக அவன் ஒன்றும் செய்யவில்லையே என்று எனக்கு அவன்மேல் குறை; எனக்கு கண்டிக்கத் தெரியவில்லை என்று என்மேல் அவனுக்கு குறை! அவனும் நானும் பழகுவதைப் பார்த்தால், அப்பனும் பிள்ளையுமாகத் தோன்றாது. இரண்டு நண்பர் களாகத்தான் தோன்றும்.

இப்பேர்பட்ட பிள்ளை, கல்யாண விஷயத்தில் மட்டும் என்னிடம் மனம் விட்டுப் பேசாமல் மர்மமாக இருப்பதன் காரணம் எனக்கு பிடிபடவில்லை. அவன் பையன்; நாற்பது வயதில் கூட மணம் செய்து கொள்ளலாம். ஆனால் மகாலட்சுமி பெண்; அவனைக் கலியாணம் செய்து கொள்வதற்காகக் காத்திருக்கிறவள். அவளை ஊறுகாய் போட முடியுமா?

மகனுக்கு என்னதான் சுதந்திரம் கொடுத்தாலும் தகப்பனின் உரிமையை மறந்துவிட முடிகிறதா? நாள் ஆக ஆக எனக்கும் பொறுமை போய்விட்டது. அவனைக் கண்டித்துக் கேட்டு விடுவது என்று முடிவு செய்து, அதற்கு ஒரு நாளும் குறித்துக் கேட்டேன்.

அன்று விடுமுறை நாள். காலையில் எனக்கு முன்னால் அவன் எங்கோ போய்விட்டான். மத்தியானம் சாப்பிட வரட்டும் என்று கோபமாக இருந்தேன்; ஆனால், இரவு ஏழு மணிக்கு, அதாவது நான் கோபித்துக் கொள்வதற்கு தயாராக இல்லாத ஒரு நேரத்தில் அவன் வந்து சேர்ந்தான்.

கோபம், என் இயற்கைக்குப் பொருந்தாத ஓர் உணர்ச்சி. கோபம் வந்தால் முகம் கடுமையாக இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். முகத்தை 'உர்' ரென்று வைத்துக் கொண்டிருந்த சமயத்தில் எல்லாம் அவன் வரவில்லை. அவன் வந்தபோது நான் குருமூர்த்தியோடு சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தேன். அவன் என் கடைசிப் பையன். வயது மூன்று இன்னும் பூர்த்தி ஆகவில்லை.

இருபதில் ஒரு பையன், மூன்றில் ஒரு பையன்; இதில் என்ன வெட்கம்? இரண்டிற்கும் இடையில் எத்தனை என்பதை என் வாயால் சொல்ல மாட்டேன். குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தில் எனக்கு நம்பிக்கை கொஞ்சம் உண்டு. நானும் அவளும் கட்டுப் பாடாகத்தான் இருந்தோம். நாங்கள் மனிதர்கள் தானே? கட்டுப்பாடு செய்துகொண்ட ஒரே காரணத்தால் அதை மீறிவிட்டோம். பிறகு டாக்டரைப் பார்த்து அவள் நாலைந்து இஞ்செக்ஷன்கள் செய்து கொண்டோள்; ஏதோ மாத்திரைகள் கூட அவள் சாப்பிட்டதாக ஞாபகம். கட்டுப்பாடு, டாக்டர், இஞ்செக்ஷன், மாத்திரை எல்லாவற்றையும் ஏமாற்றிவிட்டுப் பிறந்த குழந்தை குருமூர்த்தி.

'சுத்த பிண்டம்; கல்லைப் போட்டாலும் கலைக்க முடியாது, ஸார்' என்று பிறகு சொன்னார் ஜோஷியர். சுத்த பிண்டம் என்பதாலோ என்னவோ வீட்டில் உள்ள எல்லோரையும் குழந்தைகள் ஆக்கிவிட்டு, குருமூர்த்தி பெரியவன் ஆகிவிட்டான்.

சந்திரன் இரவு வீடு திரும்பிய சமயம் குருமூர்த்தி பென்சிலும் நோட்டுமாக எழுதிக் கொண்டிருந்தான்; நான் செலவுகளைச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

''என்னடா எழுதினே?''

''மஞ்சள் ஓரணா,'' என்றான் குருமூர்த்தி.

''எழுது, சந்தனம் ஓரணா''

''ஆயிட்டுது,''

''பழம் ரெண்டனா''

''எழுதிட்டேன்''

''எல்லாம் என்ன ஆச்சு?''

''ரெண்டனா''

முட்டை முட்டையாகக் கிறுக்கி, அவன் கணக்கு எழுதுவதைப் பார்த்து சந்திரன் சிரித்தபோதுதான் அவன் வந்ததை நான் கவனித்தேன். உடனே, கோபம் வந்தது. குருமூர்த்தியை அப்படியே விட்டு விட்டு எழுந்து நாற்காலியில் உட்கார்ந்தேன்.

''ஆசிரியர் வந்தாயிற்றா? காலையிலிருந்து எங்கே மறைந்துவிட்டீர்கள்?'' என்றேன், என் குரலில் கொஞ்சம் கடுமை இருந்ததை நானே கண்டேன்.

அவன் அதை லட்சியம் செய்ததாகத் தெரிய வில்லை.

''ஏன் அப்பா, ஏதாவது அவசர ஜோலி இருந்ததா? மகாலட்சுமி வீட்டுக்குப் போனேன். ரகுராமன் வந்தார். மகாலட்சுமி அங்கேயே சாப்பிடச் சொல்லிவிட்டாள். பேசிக் கொண்டே இருந்தோம். நேரம் போனதே தெரியவில்லை.''

மகாலட்சுமியின் பெயரைக் கேட்டதும் நான் வரவழைத்த கோபம் எங்கோ போய்விட்டது.

''உனக்கு என்ன வயது தெரியுமா?''

''இருபத்திரண்டு'' என்றான் அவன் சிரித்தபடி.

''இவ்வளவு வயசாகியும் இந்த குருமூர்த்திக்கு இருக்கிற தெளிவு கூட உன்னிடம் காணோமே? வீட்டுக்கு வந்ததும் செலவுக் கணக்கு கேட்கிறான். நீ''

''நான்தான் பத்திரிகையை எப்போதோ நிறுத்தி விட்டேனே''

''அதை நான் சொல்லவில்லை. எந்த விஷயத்திலும் ஒரு தெளிவு வேண்டும் என்கிறேன். வயது வந்த ஒரு பையனும் ஒரு பெண்ணும் நாள் முழுவதும் கதை பேசி அரட்டை அடித்துக் கொண்டிருப்பதை யாராவது கண்டால் என்ன நினைப்பார்கள்?''

''பிறத்தியார் ஒன்று சொல்வார்கள் என்பதற்காக நமக்குப் பிடித்ததைச் செய்யாமல் இருக்க முடியுமா அப்பா?''

''அப்படியானால் மகாலட்சுமி உன் மனசுக்குப் பிடிக்கிறாள் என்று சொல்லு''

''பிடிக்காமல் என்ன அப்பா?''

''அப்படியானால் முகூர்த்தத்துக்கு நாள் பார்க்க லாமா?''

''யாருக்கு?''

''என்னடா அது? மகாலட்சுமிக்குத்தான்''

''மகாலட்சுமிக்கா? என்னிடம் கூட சொல்லாமல் வரன் பார்த்துவிட்டீர்களா?''

''என்ன அது, என்ன அது, வரன் பார்த்து விட்டீர்களாவா! என்னடா, புதுசாய் பேசுகிறாய்? உனக்காகவே பிறந்து வளருகிறாள், வேறு வரன் எதுக்காகத் தேடுவது?''

''வேண்டாம்''

''அதுதானே பார்த்தேன்; வருகிற பங்குனியில் நாள் பார்த்துவிடட்டுமா?''

''வேண்டாம் என்றேனே அப்பா?''

''எப்போது வேண்டாம் என்றாய்? நாள் பார்க்காமல் சீர்திருத்த மணம் செய்து கொள்ளப் போகிறாயா? இதற்காகத்தான் ஆகட்டும், ஆகட்டும் என்றாயா? எனக்கு என்னடா இதில்? மகாலட்சுமியும் சரி என்றால் எனக்கு சம்மதம். இதைச் சொல்லவா இவ்வளவு தயங்கினாய்?''

''அது இல்லை அப்பா, மகாலட்சுமியை வேண்டாம் என்றேன்.''

''ஆரம்பித்து விட்டாயே! என்ன விளையாட்டு இது? இரண்டு பேரும் சேர்ந்து கும்மாளம் அடிக்கிறீர்கள். கலியாணப் பேச்சில் மகாலட்சுமியைப் பற்றி விளையாடாதே, சொல்லிவிட்டேன்.''

''நிஜமாகத்தான் சொல்லுகிறேன்''

''ஏன், கறுப்பாயிருக்கிறாள் என்பதாலா?''

''அதுக்காக இல்லை''

''ஒண்ணரைக் கண் என்றா?''

''வந்து அப்பா''

''சதா நாட்டியம் ஆடுகிறாளே, அதனாலா?''

''நான் சொல்ல வந்தது''
''அவள் ஆண்பிள்ளைக் குரலில் பேசுகிறாள் என்று தானே சொல்லப் போகிறாய்?''

''நீங்கள் இப்படிப் பேசிக் கொண்டே போனால் நான் எப்போது பேசுவது?''

''மனசுக்குப் பிடிக்கிறது என்று கலியாணம் வேண்டாம் என்றால் என்னடா அர்த்தம்? போடா, போடா, கலியாணம் என்றால் இவ்வளவு வெட்கமா? போ, போ நாள் வைத்து விட்டுச் சொல்லி விடுகிறேன்.''

''இரண்டு நாள் தவணை கொடுங்கள் அப்பா. முடிவாகச் சொல்லிவிடுகிறேன்''

''நல்ல பிள்ளை! உனக்கு இவ்வளவு தூரம் இடம் கொடுத்துப் பழகியது பிசகு என்று கூட தோன்றுகிறது.''

''அப்பா, பிறகு உங்களுக்குத் தெரியும்''

''எனக்கு ஒன்றும் தெரியாது. உனக்கு எல்லாம் தெரியும். அப்படித்தானே? வக்கீலுக்குப் படித்து, பத்திரிகை நடத்திவிட்டால்''

''அப்பா, ஒரு நியூஸ். நாளைக்கு ரகுராமனும் மகாலட்சுமியும் இங்கே சாப்பிட வருகிறார்கள். நீங்களும் நானும் கடைக்குப் போக வேண்டாம்.''

''யார் இந்த ரகுராமன்?''

''அவர் ஒரு கவி; ரொம்ப நல்லவர்''

''கதாசிரியனாலேயே வீடு இவ்வளவு அமளிப் படுகிறது; கவி நல்லவராம். என்ன வயசு அவருக்கு? மகாலட்சுமியோடு அவருக்கு என்ன வேலை?''

''அவருக்கா? ஐம்பது, ஐம்பத்திரண்டு இருக்கும்''

''சரி, இரண்டு நாளில் உன் சம்மதத்தைச் சொல்லிவிட வேண்டும்''

அவன் அங்கே இருந்தால்தானே நான் பேச முடியும்?

எனக்கு என்னவோ வருத்தமாகத்தான் இருந்தது. மகாலட்சுமியை மணப்பதற்கு, தவணை சொல்லும் பையனைப் பற்றி என்ன சொல்லுவது?

மகாலட்சுமியை நான் சாதாரணப் பெண் என்று சொல்ல மாட்டேன். நல்ல சிவப்பு; களையான முகம்; எஸ்.எஸ்.எல்.ஸி. வரை படிப்பு; சிறந்த சங்கீத ஞானம்; பாடுவதற்கு இனிமையான குரல்; நாட்டியமாடத் தெரியாது; தமிழிலும் ஸமஸ்கிருதத்திலும் நல்ல பண்டித்தியம்; பெட்டி போல் அடக்கமான பெண், வீட்டு வேலைகளிலும் கெட்டிக்காரி; பெண்ணா அவள்? வரதட்சிணை நான் எதிர்பார்க்கவில்லை. மகாலட்சுமி என் வீட்டுக்கு வந்தாலே போதும் என்பது என் ஆசை.

இந்த ஆசைக்கு மற்றோர் அடிப்படையான காரணமும் உண்டு. நானும் அவள் தகப்பனாரும் அடி வயது முதல் சினேகிதர்கள். எங்கள் இருவருடைய குடும்பங்களும் மிகவும் நெருங்கிப் பழகி வந்தன. தெய்வத்தின் தயவில், இரண்டு குடும்பங்களுக்கும் 'இல்லை' என்று ஏங்கும்படியான நிலைமை இல்லை. இந்த அமைதியில் இரண்டு வருஷங்களுக்கு முன்னால் மகாலட்சுமியின் தந்தை திடீரென்று மாரடைப்பு என்று வியாஜம்-தலை¨யைக் கீழே போட்டுவிட்டார். உயிர் பிரியும் தறுவாயில்-தம் குடும்பத்தை சம்ரட்சிக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிட்டார். அவருடைய மனைவி உள்பட அந்தக் குடும்பம் பூராவுமே என்னைக் கலந்து கொள்ளாமல் ஒன்றும் செய்வதில்லை. மகாலட்சுமி நான் சொல்வதற்கு மாறாக ஒரு வார்த்தை பேச மாட்டாள்.

அவள் தகப்பனார் உயிரோடு இருந்தபோதே இரு குடும்பங்களுக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் ஏற்பட வேண்டும் என்கிற ஆவல் அவருக்கும் எனக்கும் இருந்தது. அதற்கு ஏற்பச் சந்திரனும் மகாலட்சுமியும் ஒற்றுமையாகப் பழகுவதைக் கண்டபோது நாங்கள் அவர்களை எதிர்காலத் தம்பதிகள் ஆக்கத் திட்டமிட்டோம். 'இவனுக்கு அவள்; இவளுக்கு அவன்' என்று முடிச்சு போட்டிருந்தோம்.

இப்போது, இந்நிலையில் சந்திரன் அவளை மணப்பதற்கு சால்ஜாப்பு சொல்லி வந்ததோடு, தவணையும் கேட்பதன் மர்மம் எனக்கு புரியவில்லை.

'சிறிது காலம் போனால் சரியாகிவிடுவான். இருவரும் ஒற்றுமையாகத்தானே இருக்கிறார்கள்? எதற்காகவோ தயங்குகிறான், பின்னால் ஒப்புக் கொண்டுவிடுவான்' என்று சமாதானம் செய்து கொண்டு படுத்தேன்.

காலையில் மகாலட்சுமியின் முகத்தில் கண் விழித்தேன்.

''வா அம்மா'' என்று வெளியில் வந்தபோது சந்திரனோடு ஓர் இளையவன் பேசிக் கொண்டிருப்பதை கண்டேன்.

''அப்பா, நான் சொன்னேனே; இவர்தான் ரகுராமன்...''

''இவரா? ஐம்பது வயது என்றாயே, இருபது இருபத்திரண்டுதான் இருக்கும்போல்...''

''வேடிக்கையாகச் சொன்னேன்!''

ரகுராமன் கவியாகத் தோன்றவில்லை. மிகவும் அடக்கமாக இருந்தான்; அழகாய் பேசினான்.

அன்று, நாள் போன போக்கே எனக்குப் புரியவில்லை. அந்த மூன்று யுவர்களுடைய பேச்சு அவ்வளவு சுவாரசியமாக இருந்தது. கம்பர், இளங்கோ, வால்மீகி, காளிதாசன் முதலிய கவிகள் எல்லோரும் அவர்களுடைய பேச்சில் தாராளமாய்க் கலந்து கொண்டார்கள். மூவருடைய பேச்சிலும், என்னைக் கவர்ந்தது மகாலட்சுமியின் பேச்சுதான். அவளை மருமகளாக அடைந்ததும், தொழிலைச் சந்திரனிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டில் இருந்து கொண்டே அவளிடம் எவ்வளவோ விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். வயதுக்கு மீறித்தான் அவளுக்கு ஞானம் இருந்தது.

மாலையில் முதலில் மகாலட்சுமி விடை பெற்றுக் கொண்டாள். பிறகு ரகுராமன் கிளம்பினான். இருவரும் போனபின் சந்திரன் என்னைச் சூழ்ந்து கொண்டான்.

''அப்பா, ரகுராமன் எப்படி?'' என்றான்.

''எப்படி என்றால்?''

''அவனைப்பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?''

''ஏதாவது சிபாரிசுக் கடிதம் வேண்டுமோ?''

''காலேஜ் லெக்சரர் வேலை போதும் அவனுக்கு. ரகு நல்ல பையனா, கெட்ட பையனா?''

''என்ன கேள்வி இது? உன்னைவிட நல்ல பையன் தான்'' என்றேன், அவனுக்கு உறுத்தட்டும் என்பதற்காக.

''அப்படிச் சொல்லுங்க அப்பா!'' என்று அவன் சந்தோஷமாய்க் குதித்தான்.

''இது என்ன அற்ப சந்தோஷம்?''

''ரகுராமனுக்குக் கலியாணம் ஆகவில்லை. வயது என் வயதுதான். சுமாராக சொத்து சுதந்திரம் இருக்கிறது. பெரிய குடும்பம் இல்லை; காலேஜில் லெக்சரர். ஒரு சின்ன கெட்ட பழக்கம் கூட இல்லை. எல்லா விவரங்களையும் தீர்க்கமாக விசாரித்து விட்டேன்.''

''நம்மிடம் அவனுக்குக் கொடுக்கிற வயசில் பெண் இல்லையே'' என்றேன் சிரித்துக்கொண்டே.

''இருக்கிறதே!''

''பத்மாவுக்குப் பத்து வயதுதானேடா? அழகுதான் போ! சின்னக்குழந்தையை...''

''பத்மா இல்லை அப்பா, மகாலட்சுமியைச் சொன்னேன்!''

''நான் அப்போதுதான் முதன் முறையாக அதிர்ச்சி எனப்படும் உணர்ச்சிக்கு வசப்பட்டேன். சில நிமிஷங்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

''என்னடா சொல்லுகிறாய்''

''அப்பா, ஆத்திரப்படக்கூடாது.''

''எனக்கு ஆத்திரப்படத் தெரியவில்லை என்று தானே நீ என்னை இப்படி ஹிம்சிக்கிறாய்? மகாலட்சுமியை நான் மருமகளாக அடைய.''

''கொஞ்சம் பொறுங்கள். உங்கள் வார்த்தையை நான் எப்போதாவது தட்டியது உண்டா? நான் சொல்வதில் தப்பு இருந்தால் சொல்லுங்கள், ஒப்புக் கொள்கிறேன்.''

''என்னடா சொல்லப் போகிறாய்? இப்படி எல்லாம் பழகிவிட்டு, இது என்ன முடிவடா திடீரென்று?

''அப்பா மகாலட்சுமி நீங்கள் சொல்வதுபோல், மகாலட்சுமி மட்டும் அல்ல, ஸரஸ்வதியும்கூட வயது வந்த பிறகும் நான் அவளுடன் இவ்வளவு அதிகமாய்ப் பழகினேன் என்றால்... அதற்குக் காரணத்தைச் சொல்லவே எனக்கு வெட்கமாயிருக்கிறது.''

அவன் முகம் சுண்டுவதைக் கவனித்தேன். அதை ஒருபோதும் என்னால் சகிக்க முடியாது. என்னுடைய வருத்தத்தை மறைத்துக்கொண்டு அவனுக்கு ஆறுதலாகப் பேசினேன்.

''சும்மாச் சொல்லு; என்னிடம் சொல்லுவதற்குமா வெட்கம்?''

மகாலட்சுமி படித்தவள் என்று மட்டும் நீங்கள் நினைக்கிறீர்கள். எனக்கு அவள் அப்படித் தோன்றவில்லை. எனக்கு அவள் ஒரு பிறவி மேதையாகத் தோன்றுகிறாள். இல்லாவிட்டால், இந்த வயதில் அவளுக்கு இவ்வளவு ஞானம் இருக்க நியாயம் இல்லை. நான் சட்டம் படித்தேன்; பத்திரிகை நடத்தினேன். ரொம்பத் தெரிந்தவன் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அவளுக்குத் தமிழிலும் ஸமஸ்கிருதத்திலும் உள்ள புலமையைக் கண்டு... எனக்கு மலைப்புத் தட்டுகிறது. அப்பா, சொல்ல வெட்கமாக இருக்கிறது; சொல்லா விட்டால் உங்களுக்கு வருத்தமாயிருக்கும்; அதனால் சொல்லுகிறேன். நான் அவளை அடிக்கடி பார்க்கப்போவது அவளிடம் ஏதாவது கற்கலாம் என்றுதான். அவளுக்கு முன்னால் நான் சின்னக் குழந்தையாக, மாணவனாக மாறிவிடுகிறேன்; அவளை நான் மனைவியாக நினைப்பது எப்படி? அந்த நினைப்பே எனக்கு கூச்சம் உண்டாக்குகிறது. என்னை விட ரொம்ப ரொம்ப வயது முதிர்ந்த ஒருத்தியைக் கலியாணம் செய்து கொள்வதுபோல் என்று தோன்றுகிறது! அப்படிச் செய்யலாமா அப்பா? அவளுக்கு எற்ற புருஷன் ரகுராமன். அவளுடைய அறிவுக்கு ஈடு கொடுக்க அவனால்தான் முடியும்... எனக்கு ஏன் நீங்கள் ஸமஸ்கிருதம் சொல்லித் தரவில்லை?''

''தமிழையாவது நீ ஒழுங்காய்ப் படித்திருக்கலாமே?''

''சரி, அப்பா; ரகுவைப்பற்றி யோசித்து முடிவு சொல்லுங்கள்.''

சொல்லிவிட்டு எங்கோ வெளியில் போனான் அவன். இந்தப் பிள்ளையைப்பற்றி நான் என்ன சொல்வது? அழகு இல்லை, படிப்பு இல்லை. ஆரோக்கியம் இல்லை, வரதட்சிணை இல்லை என்பதுபோன்ற காரணம் காட்டிப் பெண்ணை நிராகரிப்பது உலகு வழக்கு. தனக்குக் கல்வி குறைவு என்று சொல்லிப் பெண் வேண்டாம் என்று சொல்கிறான் என் பிள்ளை. 'என்னைவிட ரொம்ப ரொம்ப வயது முதிர்ந்த ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதுபோல், என்று அவன் சொன்ன பிறகு அவளையே மணம் புரியும்படி அவனை நான் எப்படிக் கட்டாயப்படுத்த முடியும்?

இரவு சுமார் பத்து மணிக்கு அவன் மறுபடியும் என்னிடம் வந்தான்.

''என்மேல் கோபமா அப்பா?''

''உன்மேல் எனக்கு எப்போது கோபம் வந்தது? நீ சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை. நீ சொல்வது போலவே செய்யலாம். மகாலட்சுமியின் அபிப்பிராயம் தெரியாமல் என்ன செய்வது?''

''அவளையும் ஜாடையாகக் கேட்டேன். நீங்கள் பார்த்து முடிவு செய்தால் சரி என்கிறாள்.''

''அட பாவி! அவள் சம்மதமும் வாங்கிவிட்டாயா?''

சிறிது நேரம் அவன் மெளனமாக உட்கார்ந்திருந்தான்.

''உனக்குக் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லப்போகிறாயா, அடுத்தபடி?'' என்றேன் அவன் தயங்குவதைக் கண்டு.

''என்னைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டது இவ்வளவுதானா? அப்படியெல்லாம் நான் சொல் வேனா அப்பா? உங்கள் இஷ்டத்துக்கு நீங்கள் பார்த்து ஒரு பெண் முடிவு செய்யுங்கள்.''

''அப்புறம் ஆடுபோல் ஒரு பெண் வாங்கி மாடு போல் ஒரு பையனை விற்றார் எங்கள் அப்பா என்று கதை எழுதுவதற்கா?''

''கலியாண விஷயம் எனக்கு என்ன தெரியும்? உங்கள் திருப்திக்குச் செய்யும் முடிவு என் நன்மைக்குத் தான் இருக்கும் என்று எனக்குத் தெரியும்.''

குடும்பத்துக்கு ஏற்றவள் என்று எனக்குத் தோன்றிய ஒரு பெண்ணை நான் அவனுக்காகத் தேர்ந் தெடுத்தேன். பெண்ணின் பெயர் ஸரஸா; மகாலட்சுமி போல் அழகோ, கல்வியோ, ஞானமோ இல்லா விட்டாலும வீட்டுக்கு ஒளியாக விளங்குவாள் என்று எனக்குத் தோன்றியது. நான் எவ்வளவோ வற்புறுத்தியும் சந்திரன் நான் தேர்ந்தெடுத்த பெண்ணை பார்ப்பதற்குக்கூட வரவில்லை.

இருஜோடி விவாகங்கள் விமரிசையாக நடந்தன. இருஜோடித் தம்பதிகளும் சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள்.

*****

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்