Nov 30, 2010

ந.முத்துசாமி:நரையேறும் காலம்: எஸ்.ரா

‘நரையேறும் காலம்’- கதாவிலாசம்- எஸ்.ராமகிருஷ்ணன்


காலை நடைப்பயிற்சிக்குச் செல்லும்போது வழியில் தினமும் அவர்கள் மூவரையும் பார்ப்பேன். எழுபது வயதான ஒரு பெரியவர், நாற்பது வயதான குள்ளமான மனிதர், பதினாறு வயதுப் பையன். மூவரும் ஒரே விதமான ஷ¨, வெள்ளை நிற பேன்ட், டி&ஷர்ட் அணிந்திருப்பார்கள். அவர்களில் குள்ளமானவர் வழி முழுவதும் பேசிக்கொண்டே வருவார். பதினாறு வயது பையன் அவர்களோடு நடப்பதை விலக்கி தனியே ஓடத் துவங்கிவிடுவான். அப்போது நடுத்தர வயதுக்காரர் சப்தமாக ‘கோவிந்த் வெயிட்’ என்று உரத்த குரலில் கூப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன். அவன் அதைப் பற்றிய லட்சியமேயின்றி தனியே அதிகாலை வெளிச்சத்தில் ஓடுவான்.

வயதானவர் மிக மெதுவாகத்தான் நடப்பார். சாலைக்கடைகளில் தொங்கும் தினசரிகmuthuswamyளின் போஸ்டர்களை அருகில் சென்று வாசித்த பிறகே கடந்து வருவார். இது அந்த நடுத்தர வயதுக்காரருக்குப் பிடிக்கவே பிடிக்காது. சாலையைக் கடந்து வந்து அவரது கையைப் பிடித்து  இழுப்பார். ‘என்ன பழக்கம்ப்பா இது? அதான் வீட்ல ஹிண்டு வருதே. அதைப் படியேன்’ என்பார்.
பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு அவர்கள் சாலை முனை வரை நடந்து அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்திற்கு வந்து சேர்வார்கள். அங்கிருக்கும் பெஞ்சில் சில நிமிடங்கள் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்தும்போது பெரியவருக்கு அவர் ஒரு நாள் முழு வதும் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலை நடுத்தர வயது நபர் குழந்தைக்குச் சொல்வதுபோலச் சொல்வார்.

‘டிபன் சாப்பிட்டு பேங்க்குக்குப் போயி Ôசெக்Õகை கலெக்ஷனுக்கு போட்டிருப்பா. வரும்போது மாம்பலம் வரை போயி காபி பவுடர் அரைச்சு வாங்கிக்கோ, அப்படியே ஸ்டேஷன் கீழே வெந்தயக் கீரையிருக்கும்... பாத்து ஒரு கட்டு வாங்கிக்கோ... அங்கிருந்து வடபழனிக்குப் போயி, நம்ம முரளியோட பையன் ஸ்டேட்ஸ்ல இருந்து வந்திருக்கான். அவனைப் பார்த்து பேசி நம்ம கோவிந்தை அனுப்புறதுக்கு யோசனை கேளு. அவங்க வீட்ல ஏதாவது கொடுத்தா சாப்பிடாதே.

வீட்டுக்கு வந்ததும் கதவை பூட்டிக்கோ. வேலைக்காரக் குட்டி வந்தா அவளை ஒரு கண் பார்த்துக்கோ... வீடு பெருக்குறேன்னு எதையாவது வாயில எடுத்துப்போட்டுத் தின்னுகிட்டு இருப்பா... போன் வந்தா யாருனு கேட்டு நம்பரைக் குறிச்சு வெச்சிரு... பகல்ல வீட்ல ஏ.சி. போடாதே... சொன்னது எல்லாம் நினைவு இருக்கில்லையா? தலையைத் தலையை ஆட்டிக் கேட்டுட்டு பிறகு மறந்துட்டேன்னு சொல்லாதே... வீட்டுக்குப் போனதும் ஒரு பேப்பரில் எழுதி வெச்சுக்கோ, உன் செலவுக்குப் பத்து ரூபா இருக்கு. பஸ்ல போயிட்டு வந்திரு. இதையெல்லாம் செஞ்சு முடிச்சதும் போன் பண்ணு, வேறு ஏதாவது இருந்தா சொல்றேன்.’

மாநகராட்சி மைதானக் காவல்காரனின் குழந்தைகளுக்காக, வீழ்ந்து கிடக்கும் இலைகளில் ஒன்றை எடுத்து ஊதுகுழல்போல ஒன்றைச் செய்து தருவார் பெரியவர். குள்ளமானவர் உடற்பயிற்சி முடிந்ததும் அருகில் வந்து அப்பாவின் கையிலிருக் கும் இலைக்குழலை பிடுங்கிப் போட்டபடியே மைதானத்தைவிட்டு அழைத்துக்கொண்டு போவார்.

இருவரும் போன பிறகு பதினாறு வயது பையன் மட்டும் சாவகாசமாக வந்து சுவரில் ஏறி உட்கார்ந்துகொண்டு நிம்மதியாக ஒரு சிகரெட் பிடிப்பான். புகையை வானத்தை நோக்கி ஊதுவான். பிறகு ஒரு பபிள்கம்மை மென்று சுவைத்துவிட்டு ஒரு மரத்தில் ஓட்டவைத்துவிட்டுப் போவான்.
இந்த மூன்று நடையாளர்களை மாதக்கணக்கில் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். துணி துவைப்பதற்காக உவர் மண் எடுக்கச் செல்பவர்கள் கழுதைகளின் கால்கள் நடுங்க மணல் மூட்டைகளை ஏற்றிவருவதைப் போல இத்தனை வேலைகளைப் பெரியவரின் முதுகில் ஏற்றியபோதும் அவர் எப்படிச் சலனம் இல்லாமல் ஏற்றுக்கொள் கிறார். உண்மையில் யார் அப்பா, யார் பிள்ளை?

சில நாட்களுக்குப் பிறகு தற்செயலாக அந்த வயதானவர் மட்டும் தனியே நடந்து வருவதைப் பார்த்தேன். நான் அவரது பெஞ்சின் அருகில் சென்று அமர்ந்தேன். அவர் சிரித்தபடியே, ‘நீங்கள் எழுத்தாளர்தானே... பத்திரிகையில் உங்கள் போட்டோ பார்த்திருக்கிறேன்’ என்றார். அவரும் நானுமாக அருகம்புல் சாற்றைக் குடித்தோம். அவர் இளவெயிலைப் பார்த்தபடியே என் குழந்தைகளைப்பற்றி விசாரித்தார். நான் தயக்கத்துடன் கேட்டேன் Ôஇன்றைக்கு உங்கள் மகன் வரவில்லையா?’
அவர் சிரித்தபடியே சொன்னார்... Ôஊருக்குப் போயிருக்கிறான். அவனைக் கவனிச்சிருக்கீங்களா... எனக்கு ஒரே பையன். பேரு விஸ்வம். பெரிய வேலை, நல்ல சம்பளம். ஆனா, சதா வாய் ஓயாம எதையாவது உளறிக்கிட்டே இருப்பான். முட்டாள்... நான் கூட ரிட்டயர்ட் இன்ஜினீயர். வயசு எழுபதாகுது. மருமகள் பேங்க்ல வேலை பாக்குறா. உதவியா இருக்கட்டுமேனு மகன்கூட வந்து இருக்கேன். ஊர் அம்பாசமுத்திரம். பெரிய வீடு இருக்கு. பாத்துக்கிட யாரு மில்லை. பூட்டிட்டு வந்துட்டோம்.’

அன்றைக்குக் காவல்காரனின் குழந்தைகளைக் காணவில்லை. நான் அவரிடம் ஒரு இலையைக் கொடுத்து ஊதுகுழல் செய்துதரச் சொன்னேன். அவர் இலையை லாகவமாக மடித்துக் கொண்டே சொன்னார், Ôஅப்பாவும் பிள்ளையும் கொஞ்சிக்கிடறதும் ஒட்டிக்கிட்டு தூங்குறதும் பத்து வயசு வரைக்கும்தான். அப்புறம் வளர வளர இடைவெளி வந்துருது. உடைந்த கண்ணாடியில் முகம் பார்த்தா முகம் சிதறித்தான் தெரியும். அப்படித்தான் பையன் அப்பனைத் தப்பு சொல்றான். அப்பன் பையனைத் தப்பு சொல்றான். மரத்து நிழல் மாதிரி இருந்துட்டுப் போயிட்டா பிரச்னையில்லை. புரியலையா? மரத்து நிழலால மரத்துக்கு ஒரு லாபமும் கிடையாது. மத்தபடி வெயில்ல ஒதுங்குற யாரா இருந்தாலும் அது குளிர்ச்சியானது தான்.Õ

அவர் குழலை ஊதிப் பார்த்தார். நாதம் வந்தது. சிறுகுழந்தையைப்போல ஆகாசத்தை ஏறிட்டபடி ஊதினார். ஊதுகுழல் சப்தம் கேட்டு ஓடிவந்த ஒரு சிறுவன் ஆசையாகக் கையை நீட்ட, பெரியவர் அந்த சிறுவனுக்கு ஊதுகுழலைத் தந்துவிட்டு சொன்னார்... Ôரெண்டு நாள் முன்னாடி மாம்பலம் ஸ்டேஷன் படியில மயக்கமா வருதுனு உட்கார்ந்துட்டேன். கண்ணைக் கட்டிக்கிட்டு வந்தது. எனக்குனு யாருமே இல்லையேனு ஒரு நிமிஷம் கண்ல தண்ணி வந்திருச்சு... யாரோ ஒரு ஸ்கூல் பையன் ஓடிப்போய் ஜூஸ் வாங்கிட்டு வந்து கொடுத்தான். வீடு வரைக்கும் கூடவே வந்து விட்டுட்டுப் போனான். ஒருவேளை அப்பவே நான் போயிருந்தா... வாக்கிங் போறதுக்கு ஒரு ஆள் குறைஞ்சிருக்கும். என்னைத் திட்டுறதுக்குப் பதிலாக என் பையன் அவன் மகனைத் திட்ட ஆரம்பிச்சிருவான். இப்போ நான் ஒரு தடுப்புச் சுவர் மாதிரி இருக்கேன். இவ்வளவுதான் சார் வாழ்க்கை!Õ

எனக்கு காஃப்கா, தஸ்தாயெவ்ஸ்கி, புதுமைப்பித்தன் என பல எழுத்தாளர் களைப் பற்றிய நினைவுகள் வந்தன. இவர்கள் யாவரும் அப்பாவோடு பிணக்குக் கொண்டவர்கள். அப்பாவுக் கும் மகனுக்குமான பிணக்கு உலக மெங்கும் ஒன்றுபோலத்தான் இருக் கிறது. படிக்கவைப்பது, வேலை வாங்கித் தருவது, சாப்பாடு போடுவது மட்டும் ஒரு அப்பாவின் வேலையல்ல. அப்பா வாக இருப்பது ஒரு பொறுப்பு உணர்ச்சி. அது தன்னை விலக்கிய நிலை.

ந.முத்துசாமியின் கதை ஒன்று நினைவுக்கு வந்தது. இவரது கதைகளின் உலகம் புஞ்சை என்ற கிராமம் மீதான அவரது நினைவுகளும் சம்பவங்களுமே. கதைகளின் பின்புலத்தைத் துல்லியமாக விவரிப்பதன் வழியாக கதாமாந்தர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தனியான எழுத்து முறை இவருடையது. மிக அபூர்வமாகவே சிறுகதைகள் எழுதிவரும் ந.முத்துசாமியின் ‘அப்பாவின் பள்ளிக்கூடம்’ என்ற சிறுகதை தமிழில் வெளிவந்த சிறந்த கதைகளில் ஒன்று.
இந்தக் கதை பள்ளிக்கூடம் செல்லும் இரண்டு சிறுவர்களைப் பற்றியது. அவர்களது அப்பா ஒரு பள்ளி ஆசிரியர். அவர் சில நாட்களுக்கு முன் பாக மாரடைப்பால் வகுப்பறையிலே இறந்துபோகிறார். அந்த நிகழ்ச்சி சிறுவர்களின் மனதில் மிக ஆழமான துயரத்தை உருவாக்குகிறது.
ஒரு நாள் பள்ளி முடிந்து வீடு திரும்பிவரும்போது வழியெல்லாம் மூத்தவன் அழுதபடி வருகிறான். தம்பி காரணம் கேட்டும் சொல்லவேயில்லை. வீடு வந்ததும் அம்மாவிடம் கதறி அழுதபடி தன்னை வாத்தியார் அடித்து விட்டதாகச் சொல்கிறான். இதைக் கேட்டு தம்பியும் சேர்ந்து அழுகிறான்.

பிள்ளைகளின் மீது விழும் அடி அவர்கள் அப்பனை இழந்ததை உறுதிப் படுத்துவது போல இருப்பதாக அம்மாவிற் குத் தோன்றுகிறது. அவளும் தன் பிள்ளை களைக் கட்டிக்கொண்டு அழுகிறாள். இதைக் கண்ட பாட்டி, பிள்ளைகளைச் சமாதானம் செய்கிறாள். மறுநாள் ஆசிரியரைப் பார்க்க பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்கூடம் செல்கிறாள் பாட்டி. ஆசிரியரோ தான் அடிக்கவேயில்லை என்கிறார். மூத்தவனுக்கு அப்பா இறந்துபோன பிறகு அவரது முகம் சில நாளிலே மறந்து போய்விட்டிருக்கிறது. அப்பாவைப் பற்றி நினைத்தால் ஒரு ஆசிரியரின் உருவம்தான் நினைவுக்கு வருகிறது.

அவன் மனமயக்கத்தில் வகுப்பு ஆசிரியர் தன் அப்பாவைப் போலவே இருப்பதாக நினைக்கிறான். அன்றும் இது போன்ற மனபிரமை அதிகமாக, பயத்தில் வகுப்பை விட்டு வெளியேறி ஓட முயற்சிக் கும்போது தடுக்கி விழுகிறான். ஆசிரியர் அவனைக் காப்பாற்றப் போகும்போது அப்பாவின் ஆவி தன்னைப் பிடிக்க வந்து விட்டதாக நினைத்து கத்தி அழுகிறான். வீடு வரும் அவனை வேறு பள்ளியில் சேர்ப்பதாக பாட்டி சமாதானம் செய்கிறாள் என்பதோடு கதை முடிகிறது.
அப்பா எப்படி குழந்தைகள் மனதில் படிந்து போயிருக்கிறார். அல்லது அப்பாவை எப்படி நினைவுகொள்வது என்பதுதான் கதையின் மையம். பெரும்பான்மை வீடுகளில் அப்பாவின் உருவம் துர்கனவில் வரும் உருவம் போலவே குழந்தைகளுக்குள் படிந்து இருக்கின்றன. அப்பாவின் மீது கோபம் துளிர்க்காத இருபது வயது இளைஞனே உலகில் இல்லை. ஆனால், அந்தக் கோபம் அப்பாவின் மீதான கோபமில்லை. தனது அடையாளங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதன் விளைவாக உண்டான கோபம். தனது விருப்பங்களைப் பகிர்ந்துகொள்ள முடியாத கோபம். அடுத்தவர்கள் தன் குடும்பத்தை மதிக்க வேண்டும் என்பதற்காக அப்பா விதித்த கட்டுப்பாடுகளின் மீதான கோபம். இந்தக் கோபங்கள் சில நேரம் நீர்க்குமிழியைப் போலக் கரைந்து விடுகின்றன. சில நேரம் தீக்காயம் போல நாள்பட்டும் உலராமலே போய்விடுகின்றன.

பையனுக்கும் அப்பாவுக்குமான உறவு படகுக்கும் அதைச் செய்த மரத்தச்சனுக்கும் உள்ள உறவைப் போன்றது. படகு ஆற்றில் விடப்படுவதற்காகத்தான் உருவாக்கப் படுகிறது. தச்சன் அதைச் செய்யும்போது மிகக் கவனமாகச் செய்கிறான். ஆனாலும் அதை ஆற்றில் விடாமல் வீட்டிலே வைத்துக்கொண்டு இருக்க முடியாது. அதோடு ஆற்றின் சீற்றத்தைச் சந்திக்க படகிற்கு அவன் கற்றுத்தந்து விடவும் முடியாது. கூடவே இருக்கவும் முடியாது. ஆற்றின் விசையை எதிர்கொள்வது படகின் விதி.

தொலைவில் செல்லும் படகின் போக்கினைக் கரையிலிருந்து மௌன மாகப் பார்க்கும் தச்சனைப் போன்றது தான் அப்பாவின் நிலை. ஒரு நாள் நாமும் அந்த தச்சனில் ஒருவனாக இருப்போம் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

தமிழில் நவீன நாடகங்கள் உருவானதற்கு மிக முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் ந.முத்துசாமி. இதற்காக இவர் சங்கீத நாடக அகாதமியின் விருது பெற்றிருக்கிறார். 1936 &ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள புஞ்சை என்ற கிராமத்தில் பிறந்தவர். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களில் முத்துசாமி முக்கியமானவர். இவரது Ôகூத்துப்பட்டறைÕ என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாக இருந்துவருகிறது. ÔகசடதபறÕ, ÔநடைÕ போன்ற இலக்கிய இதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவரது Ôநீர்மைÕ என்ற சிறுகதைத் தொகுதி குறிப்பிடத்தக்கதாகும். Ôஅப்பாவும் பிள்ளையும்Õ, Ôநாற்காலிக்காரர்கள்Õ Ôகாலம் காலமாகÕ, Ôசுவரொட்டிகள்Õ, Ôபடுகளம்Õ போன்ற நாடகங்களை எழுதியிருக்கிறார். Ôஅன்று பூட்டியவண்டிÕ என்ற தெருக்கூத்துக் கலை பற்றிய இவரது கட்டுரைத் தொகுப்பு மிக முக்கியமானது. நவீனதமிழ் நாடகங்களை உலகமெங்கும் நடத்திக் காட்டிய பெருமை ந.முத்துசாமிக்கு உண்டு.

நன்றி: கதாவிலாசம்- விகடன் பிரசுரம்

Nov 29, 2010

ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன்

     "கமலம்! அந்தக் கூஜாவிலே தண்ணீர் எடுத்தா! வெற்றிலைச் செல்லம் எங்கே? வச்சது வச்ச இடத்தில் இருந்தால்தானே?" என்று முணுமுணுத்தார் முருகதாசர்.

     கையில் இருக்கும் கோரைப் பாயை விரிப்பதே ஒரு ஜாலவித்தை. நெடுநாள் உண்மையாக உழைத்தும் பென்ஷன் கொடுக்கப் படாததால் அது நடு மத்தியில் இரppண்டாகக் கிழிந்து ஒரு  கோடியில் மட்டிலும் ஒட்டிக் கொண்டிருந்தது. அதை விரிப்பது என்றால் முதலில் உதறித் தரையில் போட்டுவிட்டு, கிழிந்து கிடக்கும் இரண்டு துண்டுகளையும் சேர்த்துப் பொருத்த வைக்க வேண்டும். அதுதான் பூர்வாங்க வேலை. பின்பு, விடுதலை பெற முயற்சிக்கும் அதன் கோரைக் கீற்றுகள் முதுகில் குத்தாமல் இருக்க ஒரு துண்டையோ அல்லது மனைவியின் புடவையையோ அல்லது குழந்தையின் பாவாடையையோ எதையாவது எடுத்து மேலே விரிக்க வேண்டும்.

     முருகதாசரைப் பொறுத்தவரை (அது அவரது புனை பெயர்) அது இரண்டு பேர் செய்ய வேண்டிய காரியம்.

     மறுபடியும், "கமலா!" என்று கூப்பிட்டார்.

     சமையல் + உக்ராண + ஸ்நான அறை மூன்று நான்கு கட்டுகள் தாண்டி, துண்டாக, அலாதியாக இருப்பதால் இவருடைய பாய் விரிப்புக் கஷ்டங்கள் அந்த அம்மையாருக்கு எட்டவில்லை.

     சென்னையில் 'ஒட்டுக் குடித்தனம்' என்பது ஒரு ரசமான விஷயம். வீட்டுச் சொந்தக்காரன், குடியிருக்க வருகிறவர்கள் எல்லாரும் 'திருக்கழுக்குன்றத்துக் கழுகு' என்று நினைத்துக் கொள்ளுவானோ என்னமோ!

     'குடித்தனக்காரர் குடியிருக்க இரண்டு ரூம் காலி' என்று வெளியில் போட்டிருந்த போர்டை நம்பித்தான் முருகதாசர் வீடு வேட்டையின் போது அங்கே நுழைந்தார்.

     உள்ளே வீட்டின் பாக வசதிதான் விசித்திரமாக இருந்தது. முன்பக்கம், ஒற்றைச் சன்னல் படைத்த ஒரு சிற்றறை. அதற்கப்புறம் எங்கோ பல கட்டுகள் தாண்டி மற்றொரு அறை. அதுதான் சமையல் வகையராவுக்கு. முதல் அறை படிக்க, படுக்க, நாலு பேர் வந்தால் பேச இவை எல்லாவற்றிற்கும் பொது இடம். முதலில், முருகதாசர் பொருளாதாரச் சலுகையை உத்தேசித்தே அதில் குடியிருக்கலாம் என்று துணிந்தார். அதனால், தமக்கும் தம் சகதர்மிணிக்கும் இப்படி நிரந்தரமான 'பிளவு' இருக்கும் என்று சிறிதும் எட்டி யோசிக்கவில்லை; மேலும் அவர் யோசிக்கக் கூடியவரும் அல்லர்.

     பக்கத்தில் இருந்த அரிக்கன் விளக்கை எடுத்துக் கொண்டு அவர் சமையல் பகுதியை நோக்கிப் பிரயாணமானார்.

     இடைவழியில், குழாயடியில், உள்ள வழுக்குப் பிரதேசம். அடுத்த பகுதிக்காரர் விறகுக் கொட்டில் முதலிய விபத்துக்கள் உள்ள 'பிராட்வே' யை எல்லாம் பொருட்படுத்தாது, ஒருவாறு வந்து சேர்ந்தார். சமையல் அறை வாசலில் ஒரே புகைமயம் "கமலம்!" என்று கம்மிய குரலில் கூப்பிட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தார்.

     உள்ளே புகைத் திரைக்கு அப்பாலிருந்து, "வீடோ லட்சணமோ! விறகைத்தான் பார்த்துப் பாத்து வாங்கிக் கொண்டு வந்தியளே! ஒங்களுக்கிண்ணு தண்ணீலே முக்கிக் கொடுத்தானா? எரியவே மாட்டுதில்லை? இங்கே என்ன இப்பொ? விறகு வாங்கின சீரைப் பாத்து மகிழ வந்திட்டியளாக்கும்?" என்று வரவேற்புப் பத்திரம் வாசிக்கப் பட்டது.

     "தீப்பெட்டியை இப்படி எடு! அதுக்காகத்தான் வந்தேன்!" என்று நடைப் பக்கமாகப் பின் நோக்கி நடந்தார்.

     "இங்கே குச்சியுமில்லை, கிச்சியுமில்லை! அலமுவெ தீப்பெட்டி வாங்க அனுப்பிச்சேன். மண்ணெண்ணெய் விளக்கே நீங்கதான் துடைச்சிக் கொள்ளணும்!" என்றாள் கமலம்.

     "குழந்தையை அந்தியிலே வெளியிலே அனுப்பிச்சையே, நான் வந்த பிறகு வாங்கிக் கொள்ளப் படாதா?" என்று அதட்டினார் முருகதாசர்.

     "ஆமாம், சொல்ல மறந்தே போயிட்டுதே... செட்டியார் வந்து விட்டுப் போனார், நாளை விடியன்னை வருவாராம்!" என்றாள் கமலா.
     முருகதாசர் இந்தப் பாசுபதாஸ்திரத்தை எதிர்பார்க்கவில்லை.

     "வந்தா, வெறுங்கையை வீசிக்கிட்டுப் போக வேண்டியதுதான்! வாரத்துக்கு நேரம் காலம் இல்லை?" என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியேற முயற்சித்தார்.

     "அங்கே, எங்கே போயிட்டிஹ, ஒங்களைத்தானே! கொஞ்சம் நல்லெண்ணை வாங்கிட்டு வாருங்களேன்!"

     "எங்கிட்ட இப்பொ துட்டுமில்லே, காசுமிலே!" என்று திரும்பி நின்று பதிலளித்தார் முருகதாசர்.

     "அதுவும் அப்படியா! இன்னா இந்த மிளவொட்டியிலே(*மிளகுப் பெட்டி - ஐந்தரைப் பெட்டி) மூணு துட்டு (*ஓர் அணா; ஒரு துட்டு - நான்கு பாண்டி நாட்டு தம்பிடி) இருக்கு. அதெ எடுத்துகிட்டுப் போங்க!"

     "வந்ததுக்கு ஒரு வேலையா? அங்கே ஒரு பாடு எழுதித் தொலைக்கணும். இங்கே உனக்கு இப்பத்தான் எண்ணெ புண்ணாக்கு - பகலெல்லாம் என்ன செய்துகிட்டு இருந்தே? இருட்ன பொறவா என்னை வாங்குறது! எல்லாம் நாளைக்குப் பார்த்துக்கலாம்!"

     "சோம்பல் வந்தா சாத்திரமும் வரும். எல்லாம் வரும். ஏன் அண்ணைக்குப் போய் வாங்கிட்டு வரலியா? எல்லாம் உங்களுக்குத்தான். இப்பத்தான் அப்பளக்காரன் வந்து கொடுத்துட்டுப் போனான்; பிரியமா சாப்பிடுவேளென்னு சொன்னேன். பின்னே அந்தச் சின்னக் கொரங்கே என்ன இன்னும் காணலே! போனப்ப போனதுதான்; நீங்கதான் சித்த பாருங்களேன்!"

     இவ்வளவிற்கும் அவர் இருந்தால்தானே! விறகுப் பிரதேசத்தைத் தாண்டி வழுக்குப் பிரதேசத்தை எட்டிவிட்டார். புகையையும் பேச்சையும் தப்பி வந்தால் போதும் என்றாகி விட்டது. முருகதாசரின் ஆஸ்தான அறையின் ஒரு விசித்திரம் என்னவென்றால் சென்னையில் 'லைட்டிங் டைம்' அட்டவணையைக் கூட மதிக்காமல் அது இருண்டுவிடும்.

     இம்மாதிரி மண்ணெண்ணெய் நெருக்கடி ஏற்படாத காலங்களில் அந்த அறைக்குத்தான் முதலில் இராத்திரி. ஆனால் எண்ணெய் நெருக்கடிக் காலங்களில் சிவபெருமானின் ஒற்றைக் கண் போன்ற அந்த அறையின் சன்னல், எதிர்ப்பக்கம் நிற்கும் மின்சார விளக்குக் கம்பத்திலிருந்து கொஞ்சம் வெளிச்சத்தைப் பிச்சை வாங்கும். கார்ப்பொரேஷன் தயவு வரும் வரை, ஸ்ரீ முருகதாசர் வேறு வழியில்லாமல் தெரு நடையில் நின்று அலமுவின் வருகையை எதிர்நோக்கியிருக்க வேண்டியதாயிற்று.

     முருகதாசர் வானத்தை அளக்கும் கதைகளைக் கட்டுவதில் மிகவும் சமர்த்தர்; 'சாகாவரம் பெற்ற' கதைகளும் எழுதுவார். அந்தத் திறமையை உத்தேசித்து, ஒரு விளம்பரக் கம்பெனி மாதம் முப்பது ரூபாய்க்கு வானத்தையளக்கும் அவரது கற்பனைத் திறமையைக் குத்தகை எடுத்துக் கொண்டது. அதனால் அவர் வீர புருஷர்களையும், அழியாத சித்திரங்களையும் எழுத்தோவியமாகத் தீட்டுவதை விட்டு விட்டு, சோயாபீன் முதல் மெழுகுவர்த்தி வரையிலும் வெளிநாடுகளிலிருந்து வந்து குவியும் பண்டங்களின் காவியங்களை இயற்றிக் கொண்டிருக்கிறார். 'டபாஸா' வீரிய மாத்திரையின் மீது பாடிய பரணியும், தேயிலைப் பானத்தின் சுயசரிதையும், அந்தத் தமிழ் தெரியாத வெள்ளைக்காரனையும் இவர்மீது அனுதாபம் காட்டும்படி செய்துவிட்டன. அதற்காகத்தான் அந்த முப்பது ரூபாய்!

     வீட்டு எதிரில் நிற்கும் மின்சார விளக்கின் உதவியைக் கொண்டும் பிள்ளையவர்களால் அலமுவைக் கண்டுபிடிக்க இயலவில்லை. வெற்றிலை, வேலை, குழந்தை வராத காரணம். எல்லாம் அவரது மனத்தில் கவலையைக் கொண்டு கொட்டின. நடையிலிருந்து கீழே இறங்கிச் சந்தின் மூலை வரை சென்று பார்த்து வரலாமா என்று புறப்பட்டார்.
     பக்தி மார்க்கத்தில் ஏகாக்கிரக சிந்தையைப் பற்றிப் பிரமாதமாக வர்ணிக்கிறார்கள். மனம் ஒரே விஷயத்தில் லயித்துவிட்டால் போதுமாம். பிள்ளையவர்களைப் பொறுத்த வரை அவர் இந்தப் 'பணம்' என்ற மூன்றெழுத்து மந்திரத்தில் தீவிர சிந்தை செலுத்துபவர். பணத்தை வாரிச் சேர்த்துக் குபேரனாகி விட வேண்டும் என்ற எண்ணம் ஒன்றுமில்லை. கவலையில்லாமல் ஏதோ சாப்பிட்டோ ம் வேலை பார்த்தோம் வந்தோம் என்று இருக்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ வித்தைகளையெல்லாம் செய்துவிட்டார். அவருடைய குடும்பத்தின் வரவு செலவு திட்டத்தை மட்டிலும் அவரால் எப்பொழுதும் சமன் செய்ய முடியவில்லை. நிதி மந்திரியாக இருந்தால் பட்ஜெட்டில் துண்டுவிழுவதற்குப் பொருளாதாரக் காரணங்கள் காட்டிவிட்டு, உபமான்யங்களைத் தைரியமாகக் கேட்கலாம். கவலையில்லாமல், கொஞ்சமும் உடம்பில் பிடிக்காமல் கடன் கேட்டுப் புறப்படுவதற்கு முடியுமா? குடும்பச் செலவு என்றால், சர்க்கார் செலவாகுமா?

     கவலை இருக்கப்படாது என்ற உறுதியின் பேரில்தான் நம்பிக்கை என்ற இலட்சியத்தை மட்டும் திருப்தி செய்விக்க, 'சாகாவரம் பெற்ற' கதைகளை எழுதுவதைக் கொஞ்சம் கட்டி வைத்துவிட்டு, இந்த 'லிப்டன் தேயிலை', காப்பி கொக்கோ ஆகியவற்றின் மான்மியங்களை அவர் எழுத ஆரம்பித்தார். ஒரு பெரிய நாவல் மட்டிலும் எழுதிவிட்டால் அது ஒரு பொன் காய்க்கும் மரமாகிவிடும் என்று அவர் நெஞ்சழுத்தத்துடன் நினைத்த காலங்களும் உண்டு. இப்பொழுது அது ஒரு நெடுந்தூர இலட்சியமாகவே மாறிவிட்டது.

     முன்பாவது, அதாவது நம்பிக்கைக் காலத்தில், ஏதோ நினைத்ததைக் கிறுக்கி வைக்கக் காகிதப் பஞ்சமாவது இல்லாமல் இருந்தது. அப்பொழுது ஒரு பத்திரிக்கை ஆபீஸில் வேலை. ஆனால், இப்பொழுது காசு கொடுத்து வாங்காவிட்டால் முதுகில் தான் எழுதிக் கொள்ள வேண்டும். முருகதாசர் நல்ல புத்திசாலி. அதனால்தான் முதுகில் எழுதிக் கொள்ளவில்லை. யாராவது ஒரு நண்பரைக் கண்டுவிட்டால் போதும், தமது தூர இலட்சியத்தைப் பற்றி அவரிடம் ஐந்து நிமிஷமாவது பேசாமல் அவரை விடமாட்டார். நண்பர்கள் எஸ்.பி.ஸி.ஏ (ஜீவஹிம்சை நிவாரண சங்கம்) யின் அங்கத்தினர்களோ என்னவோ, அத்தனையும் சகித்துக் கொண்டிருப்பார்கள்.

     சந்தில் திரும்பிப் பார்த்தால் அலமுவின் ராஜ்யம் நடந்து கொண்டிருந்தது.

     "ஏட்டி என்ன! நீயோ, உன் லட்சணமோ?" என்று ஆரம்பித்தார் முருகதாசர்.

     ஒரு ரிக்ஷா வண்டி ஏர்க்கால் பக்கத்தில் வண்டிக்காரன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அலமு, ஒரு சுண்டெலி மாதிரி ஜம்மென்று மெத்தையில் உட்கார்ந்திருக்கிறாள். ரிக்ஷாக்காரனுடன் ஏதோ நீண்ட சம்பாஷணை நடந்து கொண்டிருந்தது போலும்!

     "ஏட்டி!" என்றார் முருகதாசர் மறுபடியும்.

     "இல்லையப்பா? நீ இனிமே என்னை அலமுன்னு கூப்பிடுவேன்னியே!" என்று சொல்லிக் கொண்டே வண்டியிலிருந்து இறங்கப் பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள்.

     "தீப்பெட்டி எங்கடீ?" என்றார் முருகதாசர்.

     "கடைக்காரன் குடுக்கமாட்டேங்கறான். அப்பா!"

     "குடுக்காதெ போனா நேரே வீட்டுக்கு வாரது! இங்கே என்ன இருப்பு?"

     "அப்படிக் கேளுங்க சாமி! நம்ம கொளந்தென்னு மெரட்டாமே சொல்லிப் பாத்தேனுங்க. வீட்டுக்கு வண்டியிலே கொண்டாந்து வுடணுமுண்ணு மொண்டி பண்ணுதுங்க. எனக்குக் காலுலே சுளுக்கு. அந்தச் சின்னாம்பயலே காணும்..." என்று நீட்டிக் கொண்டே போனான் ரிக்ஷாக்காரன்.
     "அப்பா, அவன் பங்கஜத்தே மாத்ரம் கூட்டிக்கிட்டே போரானே!" என்றாள் அலமு. பங்கஜம் எதிர்வீட்டு சப்ரிஜிஸ்திரார் குழந்தை. அது ரிக்ஷாவிலும் போகும், மோட்டாரிலும் போகும்! அந்த விஷயம் ரிக்ஷாவுக்குத்தான் புரியுமா, குழந்தைக்குத்தான் புரியுமா?

     "அலமு! ராத்திரிலே கொழந்தைகள் ரிக்ஷாவிலே போகப்படாதுடீ! எறங்கி வா!" என்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு வாடிக்கைக் கடைக்காரனிடம் சென்றார் முருகதாசர்.

     பிள்ளையவர்கள் கடையை எட்டு முன்பே கடைக்காரன், "சாமி! இந்த மாதிரியிருந்தா கட்டுமா? போன மாசத்திலே தீர்க்கலியே! நானும் சொல்லிச் சொல்லிப் பார்த்தாச்சு. பாக்கியை முடிச்சு, கணக்கெத் தீர்த்துடுங்க! எனக்குக் குடுத்துக் கட்டாது. நான் பொளைக்க வந்தவன்!" என்றான்.

     "நானும் பிழைக்க வந்தவன் தான். எல்லாரும் சாகவா வருகிறார்கள்! மின்னே பின்னேதான் இருக்கும். நான் என்ன கொடுக்க மாட்டேன் என்று சொல்லுகிறேனா?"

     "போங்க சாமி! அது ஒண்ணுதான் பாக்கி! ரூ.2.5.4 ஆச்சு. எப்ப வரும்?"

     "தீப்பெட்டியெக் குடு, சொல்றேன்!"

     "பெட்டிக்கென்ன பிரமாதம்! இந்தாருங்க, எப்ப வரும்?"

     "எப்பவா? சம்பளம் நாளைக்குப் போட்ருவாங்கன்னு நினைக்கிறேன்; நாளை இல்லாவிட்டால் திங்கள்கிழமை."

     "திங்கட்கிழமை நிச்சயந்தானே? நான் சீட்டுக் கட்டணும்!" என்றான்.

     "சரி, பார்க்கிறேன்!" என்று திரும்பினார் தாசர்.

     "பார்க்கிறேன்னு சொல்ல வேண்டாம். நிச்சயமாக வேண்டும்!"

     ஒரு கவலை தீர்ந்தது... அதாவது திங்கட்கிழமை வரை.

     பாதி வழியில் போகையில், "அப்பா!" என்றது குழந்தை.

     அவர் எதையோ நினைத்துக் கொண்டிருந்ததால், தன்னையறியாமல் கொஞ்சம் கடினமாக, "என்னடி!" என்றார்.

     "நீதான் கோவிச்சுக்கிறியே, அப்பா! நான் சொல்லமாட்டேன். போ!"

     "கோவம் என்னடி, கோவம்! சும்மா சொல்லு!"

     "அதோ பார். பல்லு மாமா!"

     முருகதாசரின் நண்பர் சுப்பிரமணிய பிள்ளைக்குக் கொஞ்சம் உயர்ந்த பற்கள். அவை வெளியே நீண்டு கொண்டு, தமது இருப்பை, அனாவசியமாக உலகத்திற்கு அறிவித்துக் கொண்டிருந்தன. அதனால் அலமு அவருக்கு இட்ட காரண இடுகுறிப் பெயர் அது.

     "எங்கடி!"

     "அதோ பார், வீட்டு நடேலே! என்னை எறக்கிவிடப்பா!" என்று அவரது கையிலிருந்து வழுக்கி விடுவித்துக் கொண்டு, வீட்டிற்கு ஓட ஆரம்பித்தது.

     "மெதுவா! மெதுவா!" என்றார் பிள்ளை; குழந்தையா கேட்கும்?

     "மாட்டேன்!" என்றது. அதற்கப்புறம் ஏக களேபரம். பாவாடை தடுக்கிற்றோ என்னமோ? அலமு வலுக்கட்டாயமாக அங்கப் பிரதக்ஷணம் செய்ய ஆரம்பித்தாள்.
     பிள்ளையவர்கள் ஓடிப் போய்க் குழந்தையை வாரி எடுத்தார். ஆனால் இவர் பதட்டத்திற்கு ஏற்ப அங்கு குழந்தைக்கு ஒன்றும் ஏற்படவில்லை.

     "தோளுக்கு மேலே தொண்ணூறு, தொடச்சுப் பார்த்தா ஒண்ணுமில்லே!" என்று பாடிக் கொண்டு குழந்தை எழுந்தது.

     "என்ன ஸார், குழந்தையை நீங்க இப்படி விடலாமா?" என்று சொல்லிக்கொண்டே சுப்பிரமணியம் அவர்கள் பக்கம் வந்தார்.

     "என்ன ஸார் செய்யட்டும்! என்ன சொன்னாலும் கேட்கிறதில்லை என்ற உறுதி மனசிலே ஏறிப்போயிருக்கு. வெளிலே புறப்பட்டாச்சா, அப்புறம் தேடிக்கொண்டு பின்னோட பத்துப் பேர். இவளைக் கடைக்கனுப்பிச்சுட்டா தாயார். இவ்வளவு நேரம் அந்த ரிக்ஷாக்காரனோடு தர்க்கம் - என்ன செய்கிறது! வாருங்கள் ஸார். உள்ளே! ஒன் மினிட்! விளக்கை ஏத்துகிறேன்."

     குழந்தை அலமு அதற்குள் வீட்டிற்குள், "பல்லு மாமா வந்துட்டார்!" என்று பொதுவாக உச்ச ஸ்தாயியில் விளம்பரம் செய்து கொண்டு ஓடிவிட்டாள்.

     "குழந்தை துருதுருவென்று வருகிறதே! பள்ளிக்கூடத்திற்காவது அனுப்பக் கூடாதா?" என்றார் நண்பர்.

     "ஆமாம் ஸார். தொந்திரவு சகிக்கலே. அங்கேதான் கொண்டு தள்ளணும். வயசு கொஞ்சம் ஆகட்டுமே என்று பார்க்கிறேன்" என்றார் முருகதாசர். விளக்குத் திரியை உயர்த்திக் கொண்டே.

     "நேத்து பீச்சுக்குப் போயிருந்தேன்! சுந்தரத்தைப் பார்த்தேன்..." என்று ஆரம்பித்தார் சுப்பிரமணிய பிள்ளை.

     "அந்த ராஸ்கல் வந்துட்டானா! என்றைக்கும் அவன் தொல்லைதான் பெரிய தொல்லையாக இருக்கிறது. இங்கே வந்தான்னா ஆபீஸுக்கு வந்து யாருக்காவது வத்தி வச்சுட்டுப் போயிடரது...மின்னே வந்தப்போ, என்ன எழவு சொன்னானோ, அந்த ஆர்ட்டிஸ்ட் 'பதி' இருந்தானே அவனுக்குச் சீட்டுக் கொடுக்க வழி பண்ணிட்டான்..." என்று படபடவென்று பேசிக்கொண்டே போனார் முருகதாசர்.

     "அப்படிப் பாத்தா உலகத்திலே யார்தான் ஸார் நல்லவன்! அவன் உங்களைப் பத்தி ரொம்ப பிரமாதமாக அல்லவா கண்ட இடத்திலெல்லாம் புகழ்ந்து கொண்டிருக்கிறான்?"

     "சவத்தெ தள்ளுங்க, ஸார்! பேன் பார்த்தாலும் பார்க்கும். காதை அறுத்தாலும் அறுக்கும். அவன் சங்காத்தமே நமக்கு வேண்டாம்... நீங்க என்ன சொல்ல வாயெடுத்தீர்கள்?"

     "அதுதான். உங்களெப் பத்திதான் ஒரு இங்கிலீஷ்காரனிடம் பிரமாதமாகப் பேசிக்கொண்டிருந்தான்..."

     "இவ்வளவுதானா! கதையை எழுதரேன் அல்லது கத்தரிக்காயை அறுக்கிறேன், இவனுக்கென்ன?..."

     அதே சமயத்தில் வெளியிலிருந்து "முருகதாஸ்! முருகதாஸ்!" என்று யாரோ கூப்பிட்டார்கள்.

     "அதுதான்! அவன் தான் வந்திருக்கிறான் போலிருக்கிறது! பயலுக்கு நூறு வயசு..."

     "'சைத்தான் நினைக்கு முன்னால் வந்து நிற்பான்' என்பதுதான்!" என்று முணுமுணுத்தார் முருகதாசர்.

     பிறகு அவர் எழுந்து நின்று வெளியில் தலையை நீட்டி, "யாரது?" என்றார்.

     "என்ன? நான் தான் சுந்தரம். இன்னும் என் குரல் தெரியவில்லையா?" என்று உரத்த குரலில் கடகடவென்று சிரித்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் வந்தவர். அவருடைய சிரிப்புக்கு இசைந்தபடி காலில் போட்டிருக்கும் ஜோடு தாளம் போட்டது.
     "என்ன சுந்தரமா? வா! வா! இப்பொத்தான் உன்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். நீயும் வந்தாய்! காப்பி போடச் சொல்லட்டுமா? அலமு! அலமு!" என்று உரக்கக் கூவினார் முருகதாசர்.

     எங்கிருந்தோ, "என்னப்பா!" என்று அலமுவின் குரல் வந்தது.

     "அம்மாவை மூணு கப் காப்பி போடச் சொல்லு. சீக்கிரம் ஆகணும்!"

     "நீ என்ன பத்திரிகையையே விட்டுவிட்டாயாமே! இப்பத்தான் கேள்விப்பட்டேன்."

     "வயிற்றுப் பிழைப்பிற்கு எதில் இருந்தால் என்ன? சீலைப்பேன் குத்துகிறதும் ஒரு 'பிஸினஸ்' ஆக இருந்து, அதில் ஒரு 'சான்ஸ்' கிடைத்தால் அதையும் விட்டா வைக்கிறது? நான் பத்திரிகையை விட்டுவிட்டா கதை எழுதாமல் இருந்துவிடுவேனோ? ஒரு பெரிய நாவலுக்கு 'பிளான்' போட்டிருக்கேன். தமிழன்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், எனக்குக் காகிதம் வாங்கவாவது காசு கிடைக்கும். அதில் 'சென்ட்ரல் ஐடியா' என்ன தெரியுமா?..."

     "நீங்க நேற்று பொருட்காட்சிக்குப் போனீர்களாமே!" என்று பேச்சை மாற்ற முயன்றார் சுப்பிரமணிய பிள்ளை. இந்த விஷயத்தைத் தொட்டுவிட்டால், முருகதாசர் கீறல் விழுந்த கிராமபோன் பிளேட் மாதிரி விடாமல் திருப்பித் திருப்பி அதையே கதைத்துக் கொண்டிருப்பார்!

     "அப்பா! காப்பியாயிட்டுது. நீதான் வந்து எடுத்துக்கிட்டுப் போகணும். சுடுது!" என்று சொல்லிக் கொண்டு, நிலைப்படி இரண்டு பக்கத்தையும் தொட்டவண்ணமாய் ஒற்றைக் காலை ஆட்டிக் கொண்டு நின்றாள் அலமு.

     "அம்மா எங்கே?"

     "அம்மா சாதத்தெ வடிச்சுக்கிட்டிருக்கா, அப்பா!"

     "சரி! இதோ வாரேன், போ!"

     "வாயேன்!"

     "வாரேன்னா, போடீ உள்ளே!"

     "காப்பி ஆறிப்போயிடும், அப்பா!"

     "இதோ ஒரு நிமிஷம்!" என்று சொல்லிக் கொண்டு உள்ளே சென்றார்.

     "மாமா! நீ என்ன கொண்டாந்தே!" என்று கேட்டுக் கொண்டு, சுப்பிரமணிய பிள்ளை மடியில் உட்கார்ந்து, கழுத்திலிருக்கும் நெக்டையைப் பிடித்து விளையாட ஆரம்பித்தாள் அலமு.

     "அதெப் பிடித்து இழுக்காதே! மாமாவுக்கு கழுத்து வலிக்கும்!" என்றார் சுந்தரம் பிள்ளை.

     "வலிக்காதே!" என்று மறுபடியும் ஆரம்பித்தாள்.

     முருகதாசரும் மேல் துண்டின் உதவியால் ஒரு செம்பை ஏந்திய வண்ணம் உள்ளே நுழைந்தார்.

     "என்னப்பா, மூணு டம்ளர் கொண்டாந்தே! எனக்கில்லையா?"

     "உனக்கென்னடி இங்கே! அம்மாகூடப் போய்ச் சாப்பிடு."

     "மாட்டேன்" என்று ஒரு டம்ளரை எடுத்து வைத்துக் கொண்டது குழந்தை.

     முருகதாசர் காப்பியை ஆற்றி, சுந்தரம் கையில் ஒரு டம்ளரைக் கொடுத்தார்.

     சுந்தரம் வாங்கி மடமடக்கென்று மருந்து குடிப்பது போல் குடித்து விட்டு, "காப்பி வெகு ஜோர்!" என்று சர்டிபிகேட் கொடுத்தார்.

     மற்றொரு டம்ளர் சுப்பிரமணிய பிள்ளையிடம் கொடுக்கப்பட்டது. "மாமா! எனக்கில்லையா?" என்று அவரிடம் சென்று ஒண்டினாள் அலமு.

     "வாடி, நாம ரெண்டு பேரும் சாப்பிடுவோம்!" என்றார் முருகதாசர்.
     "மாமாகூடத்தான்!" என்றது குழந்தை, சுப்பிரமணியபிள்ளை கையிலிருந்த டம்ளரில் அலமுவைக் குடிக்கச் செய்தார்.

     பாதியானதும், "போதும்!" என்றது குழந்தை.

     "இந்தாருங்க ஸார்!" என்று மற்ற டம்ளரையும் நீட்டினார் முருகதாசர்.

     "வேண்டாம்! வேண்டாம்! இதுவே போதும்!" என்றார் சுப்பிரமணிய பிள்ளை.

     "நான்சென்ஸ்!" என்று சொல்லிவிட்டு, குழந்தை எச்சிற்படுத்தியதைத் தாம் வாங்கிக் கொண்டார் தாசர்.

     "நேரமாகிறது, மவுண்டில் ஒரு நண்பரைப் பார்க்க வேண்டும்!" என்று எழுந்தார் சுந்தரம். "அதற்குள்ளாகவா! வெற்றிலை போட்டுக் கொண்டு போகலாம்!" என்றார் முருகதாசர்.

     "கையில் எடுத்துக் கொண்டேன். நேரமாகிறது! அப்புறம் பார்க்கிறேன்!" என்று சொல்லிக் கொண்டு வெளியேறினார் சுந்தரம்.

     கையில் இருந்த புகையிலையை வாயிற் ஒதுக்கிவிட்டு, சிறிது சிரமத்துடன் தமக்கு நேரமாவதைத் தெரிவித்துக் கொண்டார் சுப்பிரமணிய பிள்ளை.

     தொண்டையைச் சிறிது கனைத்துக் கொண்டு, "சுப்ரமண்யம், உங்களிடம் ஏதாவது சேஞ்ஜ் இருக்கிறதா? ஒரு மூன்று ரூபாய் வேண்டும்!" என்றார் முருகதாசர்.

     "ஏது அவசரம்!"

     "சம்பளம் போடலே: இங்கு கொஞ்சம் அவசியமாக வேண்டியிருக்கிறது...திங்கட்கிழமை கொடுத்துவிடுகிறேன்!"

     "அதற்கென்ன!" பர்ஸை எடுத்துப் பார்த்துவிட்டு "இப்போ என் கையில் இது தான் இருக்கிறது!" என்று ஓர் எட்டணாவைக் கொடுத்தார் சுப்பிரமணியம்.

     "இது போதாதே!" என்று சொல்லி, அதையும் வாங்கி வைத்துக் கொண்டார் முருகதாசர்.

     "அப்பொ..." என்று மீண்டும் ஏதோ ஆரம்பித்தார்.

     "பார்ப்போம்! எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது" என்று சுப்பிரமணியமும் விடை பெற்றுச் சென்றார்.

     முருகதாசர் தமது ஆஸ்தான அறையின் சிம்மாசனமான பழைய கோரைப் பாயில் உட்கார்ந்து கொண்டு, அந்த எட்டணாவைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டு, நீண்ட யோசனையில் ஆழ்ந்திருந்தார்.

     "அங்கெ என்ன செய்யறீங்க?" என்று மனைவியின் குரல்!

     "நீதான் இங்கே வாயேன்!"

     கமலம் உள்ளே வந்து, "அப்பாடா!" என்று உட்கார்ந்தாள். அவர் கையில் இருக்கும் சில்லறையைப் பார்த்துவிட்டு, "இதேது?" என்றாள்.

     "சுப்பிரமணியத்திடம் வாங்கினேன்!"

     "உங்களுக்கும்... வேலையில்லையா?" என்று முகத்தைச் சிணுங்கினாள் கமலம். பிறகு திடீரென்று எதையோ எண்ணிக் கொண்டு "ஆமாம், இப்பத்தான் நினைப்பு வந்தது. நாளைக்குக் காப்பிப் பொடியில்லை. அதெ வச்சு வாங்கி வாருங்களேன்!" என்றாள்.

     "அந்தக் கடைக்காரனுக்காக அல்லவா வாங்கினேன்! அதைக் கொடுத்துவிட்டால்?"

     "திங்கட்கிழமை கொடுப்பதாகத்தானே சொன்னீர்களாம்!"

     "அதற்கென்ன இப்பொழுது!"

     "போய்ச் சீக்கிரம் வாங்கி வாருங்கள்!"

     "திங்கட்கிழமைக்கு?"

     "திங்கட்கிழமை பார்த்துக் கொள்ளுகிறது!"

மணிக்கொடி, 15-01-1937

Nov 28, 2010

விக்ரமாதித்யனின் கவிதை என்னும் சமயம் - ஷங்கர்ராமசுப்ரமணியன்

விக்ரமாதித்யனுக்கு விளக்கு விருது வழங்கப்பட்டபோது படிக்கப்பட்ட கட்டுரை : ஷங்கர்ராமசுப்ரமணியன்

ஓம்

அது குறைந்திருக்கிறது

இது குறைந்திருக்கிறது

குறைவு குறைவினின்று எழுகிறது

குறைவினின்று குறைவு எடுத்து

குறைவே எஞ்சுகிறது

ஓம்

அசாந்தி அசாந்தி அசாந்தி

இந்த உலகில் பிறக்கும் மனிதஉயிர், மரணிக்கும் வரை தன்னை பின்னமாகவும் அபூர்ணமாகவும்  கருதிக்கொள்கிறது. இயற்கையிலிருந்தும் இறைமையிலிருந்தும் ஒரு மனிதன் அல்லது மனுஷி தன்னைப் பிரித்துணரும் நாளிலிருந்து nambi23அவனது அவளது தனிமையும் மீட்சிக்கான தேடுதலும்  ஆரம்பமாகிறது. அப்போதிருந்துதான் முழுமையை நோக்கிய பிரார்த்தனையும் ஏக்கமும் தன் குறையின்பால் புகார்களும் விசாரணைகளாகத் தொடங்கியிருக்க வேண்டும். 20 ஆம் நூற்றாண்டு தமிழ் நவீன கவிதைப்பரப்பில் இந்த மனத்தை வைத்துக்கொண்டு அலைக்கழியும் கவிதை உயிரியாக விக்ரமாதித்யன் என்னும் கவிதை ஆளுமையை நாம் வகுத்துக்கொள்ளலாம். 20 ஆம் நூற்றாண்டு என்னும் காலப்பின்னணியை 1947 இல் பிறந்த நம்பிராஜன் என்னும் உடல் இயங்கும் காலத்தை வைத்து மட்டுமே குறிப்பிடுகிறேன்.

விக்ரமாதித்யனின் கவிதைகளில் இயங்கும் உடலைப் பார்த்தால் அது சிலசமயங்களில் குரங்கின் கள்ளமின்மையைக் கொண்டிருக்கிறது. சிலவேளைகளில் மத்தியகால உடலின் வன்மையுடன் தோற்றம் தருகிறது. இதனால் விக்ரமாதித்யனின் அடியைத் தேடுவது மிகவும் சிரமம். இனக்குழு வாழ்வு மறைந்து முடியரசு ஸ்தாபிக்கப்படும் காலம் அதன் எல்லையாக இருக்கிறது.

ஒரு தோற்றத்தையோ காட்சியையோ படிமமாக்கி அதற்கு காலாதீத அர்த்தத்தையும்,உலகளாவிய பொதுமையையும் படைப்பில் ஏற்றும் நவீனத்துவ கவிதை நம்பிக்கையின் சிறுசாயல் கூட விக்ரமாதித்யனில் படியவேயில்லை. தோற்றத்தை விலக்கி மெய்மையைக் காண விரும்பும் அறிதலின் வேட்டை மூர்க்கமும் அவரிடம் இல்லை. நவீனத்துவக் கலைமனம் தன் அனுபவங்களாலும் தன்னைச்சுற்றிய பொருட்களாலும் ஆன உலகத்தைச் சிருஷ்டித்து ஒரு ஒழுங்குக்குக் கொண்டுவர முயல்கிறது.

விக்ரமாதித்யனின் கலை இதற்கு நேரெதிரானது. தோற்றம் அழகாவும் அனுகூலமாகவும் இருக்கும்போது உவகைபூத்து சன்னதமூர்க்கத்தில் ஆராதனை செய்கிறது. தோற்றம் பயங்கரமாகும்போது புரண்டழுது மண்டியிடுகிறது. இருளுக்குப் பிறகு மெல்லிய ஒளிவரும். மென்மையான வெளிச்சம் வெயிலாகி உடலைக் காயும். பின்பு வெயில் கனிந்து உடல்குளிரும். மீண்டும் இருள்வரும் என்ற இயல்பில் பற்றுறுதி கொண்ட லௌகீக உயிரின் விவேக ஞானம் அது. இதைத்தான் விக்ரமாதித்யன் மரபு, மரபு என உரக்கச் சொல்கிறார் என்று நான் கருதுகிறேன்.

ஒரு பின்மதியத்தில் விக்ரமாதித்யனும் நானும் நாகேஸ்ரர ராவ் பூங்காவில் அமர்ந்திருக்கிறோம். அந்தப் பூங்காவில் பவளப்பூச்சிகள் அதிகம். மாலை நடையாளர்கள் அப்போது பயிற்சியைத் தொடங்கியிருந்தனர். நாங்கள் உட்கார்ந்திருந்த பெஞ்சில் ஒரு பவளப்பூச்சி ஜோடி ஒன்றின் மேல் ஏறிப் புணர்ந்து நகர்ந்து கொண்டிருந்தது. நான் விக்ரமாதித்யனுடன் பேசிக்கொண்டே தன்னிச்சையாக அந்த ஜோடியைப் பிரித்துவிட்டேன். இரண்டும் பிரிந்து நின்று சில நொடிகள் சமைந்திருந்ததைப் பார்த்ததும் குற்ற உணர்ச்சி தொடங்கியது.

அண்ணாச்சியிடம் பூச்சிகளைப் பிரித்ததைப் பற்றி குற்றவுணர்ச்சியுடன் சொன்னேன்.அவர், 'கவலைப்படாதடா, திரும்ப சேர்ந்துரும்' என்றார். நான் காத்திருந்தேன். நான் பிரித்துவிட்ட பவளப்பூச்சிகள் மீண்டும் தமது காதலின் சவாரியைத் தொடங்கி நகர ஆரம்பித்திருந்தன. இதுதான் மரபின் விவேக ஞானம். நூலறிவு சாராத ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்கள் நடந்த பாதை அது.

கடவுள், பெண், வாழ்வு என்ற பிரமாண்டங்களின் முன்னிலையில் உயிர் நிகழ்த்தும் சூதாட்டத்திற்கான அழகிய சோளிகளைப்போல் விக்ரமாதித்யன் தன் கவிதைகளை மாற்றியுள்ளார். சோளிகள் குலுங்கி தரையில் பரவும் இசைக்கு ஒப்பான தனி இசைமையைத் தமது கவிதைகளுக்குள்ளும் உயிராய் புதுக்கி வைத்துள்ளார். மந்திர உச்சாடனங்கள், வார்த்தை விளையாட்டுகள், பழமொழிகள், வழக்காறுகள், உளறல்கள் என தமிழின் கலாசார ரேகைகள் இச்சோளிகளில் சேகரமாகியுள்ளன. இந்த விளையாட்டில் சிலசமயம் தர்மனாக தோற்கிறார். சகுனியாக ஜெயிக்கிறார்.

ஆக்கமும் அழிவுமான பேரியற்கை, கண்ணுக்குப் புலனாகாமல் தன்னை இயக்கும் சக்தியுடனான உறவையும் அனுசரணையையும் வேண்டி பரிமாற்றத்தைத் தொடங்கும்போதுதான் சமயமனம் பிறக்கிறது.

படைப்பு, வாழ்வு என்ற பிரிக்க முடியாத கணிதத்தில் இயங்கும் விக்ரமாதித்யனின் கவிதை உலகம் பிரத்யேக சமயமாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. அங்கு நிலவும் நம்பிக்கைகளும், சடங்குகளும், கடவுளரும், திருவிழாக்களும், அறங்களும் வேறு.நன்மை தீமை முயங்கி நெருப்பின் சூட்டில் இருக்கிறது அது. அவரது கவிதைகளுக்குள் உங்களுக்குத் தெரிந்த கடவுள்களும் இருப்பதால் அவற்றை ஒரு பெருஞ்சமயத்துக்குள் வகைப்படுத்திவிட முடியாது. மாமிசப்படையலோடு கற்களால் சிவனைப் பூஜிக்க வந்த வேடன் கண்ணப்பனின் சமயமும் நம்பிக்கையும்தான் விக்ரமாதித்யனுடையதும்.

விதியின் கையில் வசமாகச் சிக்கிக்கொண்ட தன்னிலை விக்ரமாதித்யன். முதலில் முரண்டி பின்பு அந்தத் தன்னிலை தன்னை விதியிடம் ஒப்புக்கொடுக்கிறது. அந்தத் தன்னிலை நன்மைக்கும் தீமைக்கும் எப்படி பொறுப்பாக முடியும். தன்னைக் கொண்டு செலுத்தும் நிகழ்ச்சிப்போக்கின் ரயிலில் பயணித்து அழுக்குகளோடும் பசியோடும் குற்றம் மற்றும் தீமையின் பனிக்காற்றில் உடல் நடுங்கிப் பயணிக்கிறது. ஒரு சின்னஞ்சிறிய நிகழ்வால் ஒரு இனக்கூட்டமே துயரத்தை அனுபவிக்கும் நிலவியல் நம்முடையது. நமது பெண்கள் துயரத்தின் எண்ணற்ற அலைகளால் மோதி மோதி கடவுளின் அரூபத்தை அடைவதுபோல விக்ரமாதித்யனும் தனது பாடுகள் கவிதைகள் வழியாக இறைமையை அடைய முயல்கிறார்.

விக்ரமாதித்யனின் கவிதைகளில் உள்ள நான் தத்தளிக்கிறது. விளிம்புக்குத் தள்ளப்படுகிறது. சிதைக்கப்படுகிறது. அவமதிக்கப்படுகிறது. நிராசைக்குள்ளாகிறது.

இயல்பு திரிய நிர்ப்பந்திக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகும் அது உயிரின் அழகுடன் மீண்டு நிற்கிறது. அவர் கவிதைகளில் மரணம் குறித்த பேச்சோ, அச்சமோ, போதமோ கிட்டத்தட்ட இல்லையென்றே சொல்லலாம். லோகாதாயமும் நம்பிக்கையும் தொழில்படும் உலகில் உயிர்த்துவமும் காதலும்தானே உற்பத்தி சக்திகளாக இருக்கமுடியும். மரணம் என்னும் தத்துவப்பிரச்னையைத் தீண்டாமல்தான் அது இயங்கவும் முடியும்.

35294_105589092828219_100001313875575_46987_1013598_nதமிழ் நவீன கவிதைப்பரப்புக்குள் நுழையும் வாசகனை வசீகரித்து நிலைக்கச் செய்யக்கூடியவை விக்ரமாதித்யனின் கவிதைகள். வெகுஜனப் பாடல் வரிகளைப் போல் இவரது கவிதை வரிகளை ஞாபகத்தில் வைத்து தங்கள் வாழ்வின் வேறுவேறு தருணங்களில் அசைபோடும் பொதுவாசகர்களின் எண்ணிக்கை தமிழ் கவிஞர்களிலேயே இவருக்குத்தான் அதிகம் என்பதை என்னால் நிச்சயம் சொல்ல முடியும். பாப்லோ நெரூதாவின் அய்லா நெக்ரா தீவின் குகைச்சுவரில் காதலர்கள், பாப்லோ, உங்கள் கவிதைகளால் நாங்கள் காதலிக்கிறோம் என்று எழுதியிருப்பதைப் படித்திருக்கிறேன்.

இப்படியாக விக்ரமாதித்யன் தமிழ்நினைவின் ஒரு அம்சமாக நிலைகொள்ளும் காலம் இது. விக்ரமாதித்யனின் வரிகளுடன் நான் எதிர்கொள்ளும் பெண்களை, காதலை,வலிகளைக் கடந்திருக்கிறேன்.

வெட்கமும் காமமும் பருவாய்ப் பூத்திருக்கும் பெண்ணை இன்னமும் கடந்து செல்லும்போது ‘பருவைத்த முகம் பார்க்க அழகாகத்தான் இருக்கிறது’ என்ற இவரது கவிதை மனதில் வந்து செல்லும்.

"போன வருஷச்சாரலுக்கு

குற்றாலம் போய்

கைப்பேனா மறந்து

கால்செருப்பு தொலைந்து

வரும்வழியில்

கண்டெடுத்த

கல்வெள்ளிக் கொலுசு ஒண்ணு

கற்பனையில் வரைந்த

பொற்பாத சித்திரத்தை

கலைக்க முடியலியே இன்னும்"

இக்கவிதையை நான் எனது பதினெட்டாம் வயதில் படித்தேன். இதில் இருக்கும் அந்தரங்க தொனியும் ஒன்றை இழந்து ஒன்றை மீட்கும் காதலின் துயரார்ந்த விதியும் படிக்கும்போது இன்றுவரை மாயம் குறையாமல் வசீகரித்துக்கொண்டே இருக்கிறது.எந்த மறைபொருளும் இல்லாமல் பாறை ஈரத்தில் கால் உணரும் சில்லிடலை இவர் இந்தக் கவிதையில் எப்படி கொண்டுவந்தார். இதுபோன்ற அனுபவங்கள்தான் விக்ரமாதித்யன் கவிதைகளின் பயன்பாடும் கூட.

கவிதை என்ற வடிவத்திலேயே தன் முழுவாழ்வையும் வெளிப்படுத்தும் மூர்க்கத்தில் கொள்ளும் தோல்விகளும் அப்பட்டமாகவே வாசகன் முன் இருக்கின்றன. விதியின் போக்கில் தன்னை ஒப்புக்கொடுத்த வாழ்க்கையில் இவர் பயணித்த உலகங்களும் அனுபவங்களும் மிக மிக உக்கிரமானவை. இல்லாமையும், கீழ்மையும் தோய்ந்த அவரது சுய அனுபவங்களை பஷீர் போல உயிர்த்துவத்துடன் எழுதத் தொடங்குவதற்கு இந்த விருது அவருக்கு தூண்டுதலை அளிக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

Nov 27, 2010

மிருகம் - வண்ணநிலவன்

நார்ப் பெட்டியில் கொஞ்சம் சுள்ளி விறகுகளைத் தவிர வேறே ஒன்றுமில்லை. ஆனாலும் கூட பெட்டி கனமாக இருந்தது. பெட்டியை இறக்கிக் கீழே வைத்துவிட்டு, ஓரமாக நின்றிருந்த குத்துக்கல்லின் மேல் உட்கார்ந்தார் சிவனு நாடார். அவர் உடம்பிலிருந்து அடித்த நாற்றம் அவருக்கே குமட்டியது. பீடி குடித்தே ஏழெட்டு நாளாகி விட்டது. இன்னமும் பீடி வாடை முகத்துக்குள் வீசியது. vnilavan4

வரிசையாக எல்லா வீட்டுப் புறவாசல்களும் சத்தமே இல்லாமல் கிடந்தன. நாலைந்து வீடுகள்   தள்ளி ஒரே ஒரு காக்கை மட்டும் ஒரு மண்சுவர் மீது உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. நேற்று காலையில் வண்டி மலைச்சி அம்மன் கோவில் பக்கம் போகும்போது ஒரு காக்கை தலைக்கு மேலே பறந்து போயிற்று. அதுக்கு முன்னால் காக்கையைப் பார்த்து இரண்டு மூன்று நாட்கள் இருக்கும். மண் சுவரில் உட்கார்ந்திருக்கிறது அதே காக்கை தானோ என்று நினைத்துக் கொண்டே எதிர்த்த வீட்டைப் பார்க்கத் திரும்பினார்.

ஒரு வெள்ளை நாய் அந்த வீட்டுப் புறவாசல் கதவு இடைவெளிக்குள் முகத்தைச் சொருகித் திறக்கப் பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தது. கதவு கொஞ்சங்கொஞ்சம் திறந்து திரும்பவும் மூடிக்கொண்டது. சிவனு நாடாருக்கு சந்தோஷமும் ஆச்சரியமும் தாங்க முடியவில்லை. வேகமாக எழுந்து வீட்டைப் பார்க்க நடந்தார். இவர் வருகிற சத்தம் கேட்டு நாய் இவரைப் பார்த்துவிட்டு திரும்பவும் கதவைத் திறக்கப் பிரயாசைப்பட்டது. குனிந்து கல்லைத் தேடினார். எங்கேயுமே கல்லைக் காணவில்லை. மழையில் கரைந்து போய் நின்றிருந்த மண் சுவரிலிருந்து துண்டுச் செங்கல், ஓட்டாஞ்சல்லி, ஜல்லிக் கற்களைப் பெயர்த்து எடுத்து நாயைப் பார்த்து எறிந்தார். நாய் தூர ஓடிப்போய் நின்றுகொண்டது. அது பக்கத்தில் வருவதற்குள் கதவைத் தள்ளித் திறந்துகொண்டு வீட்டுக்குள்ளே நுழைந்துவிட்டார். கதவைச் சாத்தினதும் நாய் ஓடிவந்து கதவுக்குப் பக்கத்தில் வந்து நின்றது கேட்டது. வீட்டுக்குள்ளே நுழைந்ததும் அவருக்கு ரொம்பவும் திருப்தியாக இருந்தது.

அந்த வீட்டுக்கு இதுக்கு முன்னால் எத்தனையோ தடவை வந்திருக்கிறார். அந்த வீட்டில் நடந்த கல்யாணத்துக்கெல்லாம் இவரே வேலை செய்திருக்கிறார். இரண்டே கட்டுள்ள வீடு அது. அந்த அடுப்படிக்கு அப்புறம் ஒரு பட்டக சாலை இருந்தது. பட்டக சாலைக்கு வெளியே அழி பாய்ச்சின ஒரு திண்ணை மட்டுமே உண்டு.

அடுப்படிக்குள் தெரிய அவருக்குக் கொஞ்சம் நேரமாயிற்று. இருட்டோடு அடுப்புச் சாம்பல் கலந்த வாடை வீசியது. கொஞ்ச நேரம் கழித்து பார்வை தெரிய ஆரம்பித்தது. அடுப்புக்கு மேலே இருந்த ஜன்னல் கதவுகளைத் திறந்து விட்டார். அடுப்பில் அள்ளாமல் போட்டிருந்த சாம்பலையும், புடை மேல் இருந்த சின்னதான சட்டியையும் தவிர வேறே அந்த அடுப்படியில் ஒன்றுமே இல்லை.

பட்டகசாலைக் கதவு சாத்தாமலே திறந்து கிடந்தது. கதவுக்குப் பின்னால் நின்றிருந்த நெல்குதிரின் வாய்க்குக் கீழே அதை அடைத்துச் சொருகியிருந்த துணி விழுந்து கிடந்தது. குனிந்து குதிருக்குள் பார்த்தார். லேசாகப் படிந்திருந்த புழுதிக்கு மேல் சில நெல்மணிகள் கிடந்தன. குதிருக்குப் பக்கத்தில் பூட்டிக்கிடந்த பெரிய மரப்பெட்டியைக் கஷ்டப்பட்டு அசைத்துப் பார்த்தார். சில பாத்திரங்கள் உருண்டன. முன் வாசல் நிலைக்கு மேலே ஒரே ஒரு போட்டோ படம் மட்டும் நூலாம்படையுடன் தொங்கிக்கொண்டிருந்தது. அந்தப் போட்டோவிலிருந்த ஒவ்வொரு ஆளாகக் கவனித்துப் பார்த்தார். எல்லோரும் அவருக்கு ரொம்பவும் தெரிந்தவர்கள். அதற்கப்புறம் அந்த அறையில் நிற்கவே அவருக்குச் சங்கடமாக இருந்தது.

வெளியே போகப் புறப்பட்ட போது நெல் குதிர் இருந்த எதிர்த்த பக்கத்துக் கதவுக்குப் பின்னால் ஒரு பழைய ஓவல் டின் டப்பா உட்கார்ந்திருந்தது. ஆசையோடு அதைப் பார்க்க நடந்தார். அருகே போனதும் அதிலிருந்து எறும்புகள் போய்க் கொண்டிருந்ததைப் பார்த்து சந்தோஷமாக இருந்தது. டப்பாவைத் தூக்கி மூடியைத் திறந்து பார்த்தார். அடியில் கொஞ்சம் கருப்புக்கட்டித் தூள் கிடந்தது. அந்தத் தூளை வைத்து இரண்டு வேளை காப்பி போடலாம். டப்பாவைத் தரையில் வைத்து கதவுக்கு முன்னால் உட்கார்ந்து தட்டினார். எறும்புகள் சிதறி ஓடின. அடுப்படிக் கதவு அவ்வப்போது கொஞ்சம் திறந்து மூடுவதும், திறந்த சமயங்களில் நாயின் கறுப்பு மூக்கு மட்டுமாகத் தெரிந்தது.

சிறிது நேரத்தில் எறும்பெல்லாம் போய் விட்டது. டப்பாவைத் தூக்கிக்கொண்டு அடுப்படிக் கதவருகே வந்து பதுங்கி நின்றார். இந்தத் தடவை நாய் முகத்தை கதவுக்குள்ளே நுழைத்த போது கதவோடு சாய்ந்து தன்னுடைய முழு பலத்தையும் கொண்டு அழுத்தினார். நாய் இதுவரை அவர் கேட்டிராதபடி புது மாதிரியான குரலில் ஊளையும், சத்தமும் கலந்து போட்டது. அந்தச் சத்ததைக் கேட்டு கதவின் இறுக்கத்தைத் தளர விட்டுவிடுவோமோ என்று அவருக்குப் பயமாக இருந்தது. ஏதோவொரு உலுக்கலுக்குப் பிறகு கதவு நன்றாகப் பொருந்தி நிலைச்சட்டத்துடன் மூடிக்கொண்டது. பயத்துடன் திரும்பி கதவைப் பார்த்து நின்றார். வெளியே அந்த வினோதமான சத்தமும், ஊளையும் கலந்து கேட்டுக்கொண்டே போய் சிறிது நேரத்தில் தேய்ந்து விட்டது. நாய் முகத்தைக் கொடுத்து கதவைத் தள்ளின இடத்தில் சில ரத்தத்துளிகள் சிதறிக் கிடந்தன. இன்னும் பயம் தீராமல் டப்பாவை இறுகப் பிடித்தபடியே உள்ளேயே கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்துவிட்டு வெளியே வந்தார்.

வெளியே கதவடியில், நாய் முகத்தை இழுக்கப் போராடிய போது ஏற்பட்ட நகப்பிராண்டல்கள் தரையிலும் அடிக்கதவிலும் தாறுமாறாகக் கிடந்தன. விட்டு விட்டு ரத்தத்துளிகள் சிந்திக் கொண்டே போயிருந்தது. அந்த ரத்தத்தின் நிறம் மனித ரத்தம் போல் இல்லை. இன்னும் கொஞ்சம் கொழுகொழுப்பாகவும் ஆரஞ்சு வர்ணத்திலும் இருந்தது. நிமிர்ந்து எதிரே பார்த்த போது, மண்சுவர் மீது, நாலைந்து வீடுகள் தள்ளி முதலில் பார்த்த காக்கை இந்த வீட்டில் வந்து உட்கார்ந்து இவரையே பார்த்துக் கொண்டிருந்தது. டப்பா வைத்திருந்த கையோடு வீசிக் ஆட்டி விரட்டினார். வாயிலிருந்து சத்தமே வரவில்லை. காக்கை அசையாமல் உட்கார்ந்திருந்தது. குனிந்து நாயை விரட்ட முதலில் எறிந்த செங்கல் துண்டை எடுத்து வீசினார். காக்கை வேறு எங்காவது பறந்து விடும் என்று எதிர்பார்த்தார். இரண்டு வீடுகள் தள்ளி இதே போல இருந்த மண் சுவரின் மேல் போய் உட்கார்ந்து கொண்டு இவரையே பார்த்துக்கொண்டிருந்தது.

நாய் ஒளிந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டு, ரொம்பவும் ஜாக்கிரதையாக, தன் கண்ணுக்கு எட்டின தூரம் வரை எல்லாப் பக்கங்களிலும் பார்த்துக் கொண்டே தன் வீட்டுக்குப் போனார். தெருவில் எல்லா வீடுகளும் பூட்டிக் கிடந்தது அந்தப் பகலிலும் பயத்தைக் கொடுத்தது. அந்த நாய் எங்கேயாவது ஒளிந்து கிடந்து தன்னைத் தாக்கும் என எண்ணினார். நாய் வந்தால் ஏதாவது ஒரு பக்கம் ஓடித் தப்பித்துக் கொள்ள முன்னெச்சரிக்கையாக நடுத்தெருவில் நடந்து போனார். வீட்டுக்குப் பக்கத்தில் வரும்போது நார்ப்பெட்டியின் ஞாபகம் வந்தது.

வீட்டுக்குள் நுழைந்து கதவை அவசரமாகச் சாத்தினதும் இவ்வளவு நாளும் உணர்ந்திராத நிம்மதியை உணர்ந்தார். தீப்பெட்டியில் மூன்று குச்சிகளே இருந்தன. ஒரே குச்சியில் நெருப்பு நிச்சயமாகப் பற்றிக்கொள்ளும் என்று திருப்தியாகும் வரை தீயைப் பற்ற வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

அன்று மாலையும் இரவிலும் அவர் வீட்டை விட்டு வெளியே போகவில்லை. காலையில் தூங்கி விழித்ததும் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். நாய் வாசலில் உட்கார்ந்திருந்தது

Nov 26, 2010

நைவேத்தியம்-நீல பத்மநாபன்

கை நீட்டினால் தொட்டுவிட முடியும் அளவுக்குப் பக்கத்தில் வந்துவிட்டதைப் போன்ற விரிந்த வானம்.

அதிகாலையில் குனிந்து நின்று தெரு மெழுகிவிட்டு நிமிர்ந்தபோது தலையில் இடித்த வானத்தை, எட்டாத உயரத்துக்குப் போய்த் தொலை என்று சபித்து விரட்டிய பொக்கை வாய்neelapadmanaban_2க் கிழவியின் கர்ண பரம்பரக் கதை ஞாபகம் வர, வானததை வெறித்தபடி கோயில் முன் அரசமர மேடையில் மல்லாந்து கிடந்தார் லக்ஷ்மிநாராயணன் போற்றி.

இந்த வானத்தில் ஏன் இன்று இப்படியொரு இருள். சூன்யம்......விக்கிரகமோ, விளக்கோ இல்லாத  கர்ப்ப கிரகம் போல்... ? பெயருக்குகூட ஒரு நட்சத்திரம் இல்லை. ரத்த சோகைப் பிடித்து முகம் வெளிறிப்போய் மேகங்களின் பின்னால் நின்று எட்டிப் பார்க்கும் சந்திரன்...

பக்கவாட்டில் வானளாவி நிற்கும் அரச மரம். அடிக்கடி கிளைகளைச் சிலிர்த்து அவரைத் தன்னுணர்வு வரச் செய்து கொண்டிருந்தது.

தூரத்தில் பாய்ந்து செல்லும் பதினோரு மணி ரயிலின் கூவல் தேய்ந்து மாய்ந்து கேட்டது.

அடைத்துக் கிடக்கும் கோயில் நடை.....வெளியில் அங்கங்கே தூண்களுடன் ஒதுங்கி நிற்கும் ஓரிரு பாவை விளக்குகளின் காலடியில் மட்டும் சிறைப்பட்டுக் கிடக்கும் வெளிச்சத் துண்டங்கள்...சுவர்களில் பூதாகாரமாய் எழும்பி ஆடிக் களிக்கும் நிழல்கள்... மற்றபடி இருள்...

அவர் பெருமூச்செறிந்தார்.

'ஹஉம்...இன்னும் எடுக்கவில்லையாம்......மதுரையிலிருந்து கோமதியின் அண்ணா ராமண்ணா வரணுமாம்...உம்...எப்போ அவர் வந்து, பிரேதத்தை எடுத்துக்கிட்டுப் போன பிறகு, நடையை திறந்து அம்மனுக்குப் புஷ்பாபிஷேகம் செய்யப் போகிறோமோ...இன்னிக்கு சிவராத்திரிதான்... ' தலைமாட்டில், கொட்டுக்காரர் அண்ணாவி கனத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.

போற்றி பதில் எதுவும் பேசவில்லை. மேலே அரசமர உச்சிக் கிளையில் ஒரு நிழலாட்டம்...வெளவாலோ, ஆந்தையோ, அல்லது வேறேதோ பறவை பறப்பது போல்...ஒரு வேளை இதுதான் மரணமெனும் பட்சியோ...

அவர் விழிக் கதவுகளை மூடிக் கொண்டார். உச்சிப் பொழுதில் ஏற்பட்ட வெட்டுக் காயத்திலிருந்து என்பதைப் போல், துடைக்கத் துடைக்க விடாமல் கசிந்து நினைவுகளின் குருதித் துளிகள்....

இன்று மாலையில் சாயராட்சை பூஜைக்காகக் கோயில் நடை திறக்க வரும்போதிலிருந்தே உள்ளுக்குள்ளே காரணம் தெரியாது இந்த சோக வெறுமை... நெஞ்சில் கார்மேகப் படலங்கள் புகைமூட்டமாய் உருண்டு திரண்டு கொண்டிருந்தன. ஒரு கணம் தயங்கி நின்றுவிட்டு கர்ப்பகிரக மணிக் கதவைத் தள்ளியபோது சின்னச் சின்ன மணிகளின் கலீர் என்ற நகையொலியில் கூட ஒரு பொருள் பொதிந்த வெறுமை...

கனத்த இருளில், கட்டுப்பட்டுக் கிடந்த வாயுவில், மோன தபஸில் நின்ற அம்பாள் விழி திறந்து 'இப்போதான் வர்றியா... ? ' என்று கேட்டு ஒரு புன்சிரிப்புப் பொழிவது போல்...நெடுஞ்சான்கிடையாய் கீழே விழுந்து நமஸ்கரிக்கையில் 'ஆமாம் தாயே...எனக்கு நீயில்லாமல் வேறு யார் இருக்கா ? ' என்றுவிட்டு எழுந்து சந்தியா பூஜைக்கான ஆயத்தங்களில் ஈடுபடலானார். காலையில் அம்மனுக்குச் சாத்தியிருந்த வாடிய புஷ்பங்களை அகற்றி விட்டு, அம்மனை நீராட்டி, திருவாபரணங்கள் பூட்டி, அலங்காரங்கள் செய்தார். இடுப்பில் பாய்ச்சியிருந்த தாரை ஒதுக்கி, உலர்ந்த குச்சிபோலாகிவிட்ட துடையில் திரித்த திரியை விளக்கில் போட்டு, எண்ணெய் டின்னை தலைகீழாய்க் கவிழ்த்து கடைசித்துளியையும் விளக்கில் விழச் செய்தார். விளக்கைக் கொளுத்தியபோது, எரிந்து கொண்டிருக்கும் அந்தத் திரிகூட தன்னைப் போலவே...

அம்மனின் விழிகளில் ஒரு பளபளப்பு...மனதுக்குள் மறுபடியும் அந்தக் கார் மேகங்கள் மழைக்காய்...

அறியாமல் தன் விழிகளும் பனிப்பது போல்...

அவர் விழிகள் கர்ப்பகிருக வாசல்படியில் தேடின. மனசுக்குள் முணுக்கென்று ஒரு உறுத்தல்... நான் இந்தக் கோயில் பூஜை கைங்கரியம் செய்யத் தொடங்கிய இந்த ஐம்பது ஆண்டுக் காலமாய் நாள் தவறாமல் சாயராட்சை பூஜைக்கு தெருவாசிகள் யார் மூலமாவது இதற்குள் இங்கே வந்து சேர்ந்துவிடும் கோமு. தன் கையால் கட்டும் துளஸி ஹாரத்தை இன்று ஏன் இன்னும் காணவில்லை என்று தன் மனம் அடித்துக் கொண்டது.

வெளியில் ஆவலுடன் தன் விழிகள் துழாவின. முதலில் அதை அம்மனுக்குத் தன் கையால் சார்த்தி விட்டுத்தான் மற்ற மலர்களின் பக்கம் திரும்பிப் பார்ப்பதே....

யாரோ ஓடிவரும் காலடியோசை.

கிட்டுதான்...கையில் வாழை இலைப் பொட்டலம் இல்லை. தனக்குத் திக்கென்றது.

'கோமுப் பாட்டி...கோமு பாட்டி... '

ஓடி வந்த வேகத்தில் அவனுக்கு மூச்சு இரைத்தது. அவனையே பார்த்துக்கொண்டு நிற்கத்தான் தன்னால் முடிந்தது. என்னா என்று கேட்கும் வலுவைக்கூட நாக்கு இழந்து விட்டதைப் போல்...

'கோமுப் பாட்டி செத்துப் போனாள்... '

தான் சிலையாகிவிட்டதைப் போல்...

பிறகு, கோயில் டிரஸ்டிமார்கள் வந்தபின் தான் தனக்கு தன்னுணர்வு வந்தது. ஒரு சுகக்கேடும் இல்லையாம்..சாயராட்சை பூஜைக்காக வழக்கம்போல் வீட்டு முற்றத்தில் துளஸி இலைகளைப் பறித்தெடுத்து வாழை நாரில் மாலைக் கட்டிக் கொண்டிருந்தாளாம், மாலையை வாங்கிக் கோவிலுக்குக் கொண்டுபோய் கொடுக்க அடுத்த்கத்துக் கிட்டு பார்க்கும்போது...

பேச்சு மூச்சில்லை...

முதுகில் எறும்போ என்னவோ ஊர்வது போலிருந்தது புதுநெல்லின் மணத்தைச் சுமந்தவாறு வீசிய வாடைக்காற்றில் இடுப்பில் தார் மட்டும் பாய்ச்ச்யிருந்த அவர் வெற்றுடம்பு வேறு வெடவெடவென்று நடுங்கியது. திக்பிரமையிலிருந்து விடுபட்டு, எழுந்து உட்கார்ந்தார். கீழே மணலில் விரித்திருந்த துண்டை உதறி உடம்பில் போர்த்திக் கொண்டார். மனசுக்குள்ளிலும் சொருசொருவென்று எத்தனையோ சிற்றெறும்புக்கள் ஊர்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றையும் இப்படி உதறி விலக்கிவிடவா முடிகிறது...

தலை சுற்றிக் கொண்டே வந்தது. விழிகளை மூடியபோது, அடைத்துக் கிடந்த கோயில் நடையின் மறுபக்கத்தில் வெறிச்சோடிப் போய்க் கிடக்கும் பிரகாரம்--சிற்றம்பலம்...மோன நிஷ்டையில் ஆழ்ந்து கிடக்கும் விக்கிரகங்கள்...

கோயில் குளத்தில் இந்த அகால வேளையில் பனிக்கட்டிக் குளிரில் யார்தான் குளிக்கிறார்களோ...டொப் டொப்பென்று துணி துவைக்கும் சத்தம்...தூரத்தில் எங்கோ ஒரு ராக்குயிலின் ஒற்றை நெடுங்குரல்...

கோமு...

மனசுக்குள் பிடிக்கு அடங்காமல் வழுக்கி வழுக்கி வழுதிப் போய்க் கொண்டிருக்கும் நினைவு சர்ப்பங்கள்...

இதே அரசமர மேடையில் உதட்டு நுனியில் வெற்றிலைச் சாறு வழிய மணிக்கணக்கில் சிரிக்கச் சிரிக்க பேசிக் கொண்டிருப்பார் கோமுவின் அப்பா நரசிம்மன் போற்றி...குறைந்தது பத்துப் பேர்களாவது அவர் வாயைப் பார்த்துக்கொண்டு கீழே உட்கார்ந்திருப்பார்கள். அப்போதுதான் ஒரு நாள்; அப்போ தனக்கு எட்டு வயசிருக்கும்...கோமுவுக்கும் ஐந்து வயசு, தன்னை ஒரு துடையிலும், மற்ற துடையில் கோமுவையும் உட்கார வைத்து, மேலும் கீழும் ஆட்டிக்கொண்டு, பக்கத்தில் நின்ற தன் அப்பாவுடைய--அப்போ அவர்தானே இந்தக் கோயில் அர்ச்சகர், 'விக்ஷ்ணூ...என்னிக்கு ஆனாலும் சரி...இவுங்க ரெண்டு பேரும்தான் புருஷனும் பெண்டாட்டியும் என்று சொல்லிவிட்டு ஓஹோன்னு சத்தம் போட்டுச் சிரித்தார். பக்கத்தில் கோமுவின் அம்மாவும் அண்ணா ராமண்ணாவும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

கோயில் நந்தவனத்தில் நிற்கும் பவழ மல்லியின் மணம் நளினமாய் ஓடி வந்தது.

'உம்.......புஷ்பாபிஷேகம் அதுவுமா இன்னிக்குப் பார்த்து இப்படி ஆயிட்டதே... ' என்று அண்ணாவி முணுமுணுப்பது கேட்கிறது.

இவர் பதிலேதும் பேசவில்லை.

அன்றும் இப்படித்தான். ஒரு புஷ்பாபிஷேகத்தின் போது...எத்தனை வருஷங்களுக்கு முன்... ? குறைந்தது ஐம்பது வருஷமிருக்காதா...சரியாக ஞாபகம் இல்லை...அப்போ தனக்கு பத்து வயசிருக்கலாம்...

கூடை கூடையாய் புஷ்பங்கள்...நந்தியாவட்டை, ஜவந்தி, அரளி, தாமரை எல்லாம் நடுக்கல் மண்டபத்தில் அம்பாரமாய்க் குவிந்து கிடக்கும் காட்சி...தேங்காய்ப் பழத்தட்டு, பால், எண்ணெய்கிண்ணங்களுடன் நிறைந்து வழியும் பக்தஜனங்கள்...மஞ்சள், சிவப்பு, பச்சை கோலப் பொடிகளால் களம் வரைந்து ஒவ்வொரு மூலையிலும் ஐந்து திரி போட்ட பதிமூன்று குத்துவிளக்குகள் ஜாஜ்வல்யமாய் எரிந்து கொண்டிருந்தன.

நெற்றியில் விபூதிப் பட்டை, குடுமியில் செவ்வரளிப் பூ, காதில் குத்துவிளக்குகளின் சுடர் பிரதிபலிக்கும் பத்துக் கல் கம்மல்--இந்தக் கோலத்தில் அப்பா ஒவ்வொரு புஷ்பமாய் எடுத்து அர்ச்சனை செய்து கொண்டிருந்தார். கூடமாட ஒத்தாசைக்கு நான் ' நாதஸ்வரமும் தவிலும் சேர்ந்து மங்கல இசை வெள்ளம்...கோமு அருகில் உட்கார்ந்திருக்க, நரசிம்மன் போற்றி தனக்கே உரித்தான விபுடமான குரலில் பஜனை பாடிக் கொண்டிருக்கிறார். அவர் முகத்தில்தான் என்ன பக்திப் பரவசம்...கம்பீரம்...நெற்றியில் நிறைந்த விபூதியில் மின்னும் குங்கும வட்டம்...அவர் பாடி நிறுத்தும் வரிகளை பக்த ஜனங்கள் சேர்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள்...எங்கெங்கும் பக்தி சைதன்யம் நிறைந்து நெகிழ்ந்து நிற்கும் அமர கணங்கள்.

திடாரென்று அவர் குரல் நின்றது. அவர் சொல்லி விட்ட கடைசி அடியை எல்லோரும் திரும்பத் திரும்ப உள்ளம் உருகப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர் விழிகள் விழித்தபடி...

முகத்தில் அதே கம்பீரம்...பக்திப் பரவசம்...

அப்பா இதைக் கவனித்தார். கோவில் டிரஸ்டி ஆறுமுகம் அப்பாவின் பக்கத்தில் கலவரப்பட்டுக் கொண்டு ஓடிவந்து நரசிம்மன் போற்றியைச் சுட்டிக் காட்டி என்னவோ சொல்ல முயன்றபோது, அப்பா முகத்தில் ஒரு கண்டிப்புடன் ஆள்காட்டி விரலை தன் உதட்டின் பக்கம் கொண்டு சென்று பேசாதிருக்க சைகை மூலம் சொல்லிவிட்டு, இன்னும் அக்ஷர சுத்தமாய் ஒருவித உணர்ச்சிப் பரவசத்தால் நடுங்கும் குரல் வன்மையுடன் ஸ்லோகங்களை உரக்கச் சொல்லி அர்ச்சனையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

கடைசியில் புஷ்பாபிஷேகம் முடிந்து கற்பூர ஆரத்தி நரசிம்மன் போற்றியின் முகத்தில் நேர் வந்தபோதுதான்...

எல்லோருக்கும் புரிந்தது...

'புண்யாத்மா...யாருக்குக் கிடைக்கும் இப்படிப்பட்ட சாவு... ? ' என்று மெய் சிலிர்த்துப் போய்ப் பேசிக் கொண்டார்கள் ஊர்க்காரர்கள்.

எல்லாம் நேற்று நடந்தது போலிருக்கிறது...நரசிம்மன் போற்றியின் சாவு அப்பாவைப் பெரிசாய்ப் பாதித்துவிட்டது...பிறகு அவரும் அதிக நாட்கள் இருக்கவில்லை.

இப்படித்தான் கோயில் நித்ய பூஜைப் பொறுப்பு மிக இளமையிலேயே தன்னை வந்து சேர்ந்தது.

பிராயம் ஆக ஆக, மனவெளியில் நரசிம்மன் போற்றி, அப்பா மறைந்த நினைவுகாட்சிகளில்கூட, கோமுவின் தெளிந்த நீரோடை போன்ற முகமும்...முற்றத்தில் செழித்து வளர்ந்து நிற்கும் துளஸிச் செடிகளின் இடையில் ஒரு புள்ளினமாய் அவளைக் காணும் போதெல்லாம், அன்றொரு நாள் அவள் அப்பா தன்னையும் அவளையும் மடியில் வைத்துக் கொண்டு சொன்ன சொற்களை நினைத்து ஒரு கனவு மிரட்சி...

என்றும் தன் கையாலேயே கட்டிய துளஸிஹாரத்துடன் கோமு சாயராட்சை தீபாராதனைக்கு ஆலயத்துக்கு வரத் தொடங்கினாள். கர்ப்பகிரக வாசல்படியில் அவள் கொண்டு வந்து வைக்கும் மாலையை அம்மனுக்குச் சார்த்தி ஆராதனை செய்வதற்கிடையில், சில வேளைகளில் கண்கள் மட்டும் சம்மதத்திற்குக் காத்திருக்காமல் மோதிக் கொள்வதுண்டு...அவ்வளவுதான்.

ஒருநாள் மாலை, மாலையுடன் அவள் கோயிலுக்கு வரவில்லை. பிறகுதான் தெரிந்தது, அவள் பெரியவள் ஆகிவிட்டாள் என்று.

அதோடு அந்த மெளன காட்சி நாடகத்திலும் திரை விழுந்துவிட்டது...மாசத்தில் நாலைந்து நாட்கள் தவிர, மற்ற நாட்களில் சந்தியா பூஜைக்கு, தெருச் சிறுவர் சிறுமியர்கள் யார் மூலமாவது அவள் துளஸி மாலை அம்மனுக்கு வந்து சேர்ந்துவிடும்.

அம்மனைச் சேவிப்பதில் நாட்கள் சென்று கொண்டே இருந்தன. இருந்தும் சில கணங்களில் அம்மனை வழிபட்டுக் கொண்டிருக்கையில், பிரக்ஞை வெளியில் ஒரு ஞானோபாசனையாய் அவள் முகம் நிழலாடும். ஊமை கண்ட கனவாய், முடவன் ஆசைப்பட்ட கொம்புத் தேனாய் மனம் ஒரு சோக வெறுமையில் நிழல் கோலங்களைப் போட்டுப் போட்டு அழித்துக் கொண்டே இருக்கும்...அன்று அவள் அப்பா தன் அப்பாவிடம் சொல்லும்போது, பக்கத்தில் கேட்டுக்கொண்டு நின்றிருந்த அவள் அம்மாவும் அண்ணாவும் இருக்கத்தானே செய்கிறார்கள்...தன் அப்பாவும் அவள் அப்பாவும் உயிருடன் இல்லாவிட்டாலும்... அவர்களுக்கு ஞாபகம் இல்லாமலா இருக்கும் என்று அடிமனசில் ஒரு நப்பாசை...

ஆனால்...

அவர்கள் அப்படி அதை ஞாபகம் இருப்பதாகக் காட்டிக்கொள்ளவில்லை. ஒருநாள் திடும்திப்பென்று கோமுவின் கல்யாணம்...மாப்பிள்ளை தெருக்கோடியில் சாப்பாடு கடை நடத்தும் ராமபத்ரன்.

அரசமர பீடத்தைச் சுற்றிய நாகபிரஷ்டைகள் தன்னையே உற்று நோக்குவது போல்...சரசரவென்று ஒரு சத்தம்...சாயந்திரம் யாரோ கொண்டுவந்து வைத்து விட்டுப் போயிருந்த பால் நிறைந்த பாத்திரம் இப்போ காலியாகத் தென்படுகிறது...

ஹூம்...அந்த ராமபத்ரனும் இப்படியொரு ராத்திரியில் இந்த நாகபிரஷ்டையின் முன் வந்து விழுந்துதானே தன் கடைசி மூச்சை விட்டான்...

கோமுவின் கல்யாணம் தன் வாழ்க்கையில் ஒரு பேரிடியாக விழுந்தது. ஆனால் அம்மனின் தலையில் எல்லா மனப்பாரத்தையும் போட்டுவிட்டு அடங்கிப் போய்விட்டோம். யார் யாரெல்லாமோ நிர்ப்பந்தித்தும்--அம்மாவுக்குத் தன் ஒரே பிள்ளை இப்படி ஒற்றை மரமாய் நிற்கிறானே என்று அவள் கடைசி மூச்சுவரைக்கும் ஒரே தாபம். நான் அசைந்து கொடுக்கவில்லை...இன்று வரை--இப்போ தனக்கு அறுபது வயசு, கல்யாணம் முதலிய லெளகீக பந்தங்களை அறவே ஒதுக்கி அம்மனைப் பணிவதிலேயே ஆயுளைக் கழித்துக் கொண்டிருக்கிறோம்...

கல்யாணம் கழிந்த புதிதில், ஒருமுறை கோமு அவள் புருஷன் ராமபத்திரனுடன் கோயிலுக்கு, வழக்கமான அவள் துளஸி மாலையுடன் வந்திருந்தாள். விம்மி வெதும்பிய இதயத்தை அடக்கி ஆண்டு, அம்பாளை நினைத்துக் கொண்டு மாலையைக் குனிந்து எடுத்துக் அம்மனுக்குச் சார்த்தும்போதும், பிரசாதத்தைக் கொடுக்கும் போதும், ராமபத்ரனின் விழிகள் தன்னைத் துகிலுரிக்கப் பார்ப்பதை உணர முடிகிறது...

அடுத்த நாள் பக்கத்து வீட்டுக்காரர்கள் சொல்லி தன் செவியிலும் விழுந்தது. ராத்திரி அவளை அவன் அடித்து நொறுக்கினான் என்று.

அதோடு அவள் கோயிலுக்கு வருவது அடியோடு நின்றுவிட்டது. ஆனால் தெருக்குழந்தைகள் மூலமாய், மாலையில் துளஸி மாலை கொடுத்து அனுப்புவது நிற்கவில்லை.

ஒரு நாள் ராத்திரி...

வழக்கம்போல், கோயில் நடையை அடைத்துவிட்டுப் படி இறங்கி, தான் இந்த அரச மரத்தின் கீழ் வந்ததும்---

அலறி அடித்துக் கொண்டு ஓடிவந்து இந்த நாக பிரதிஷ்டையின் முன் விழுந்த ராமபத்ரன்...திடுக்கிட்டு அவனைத் தூக்கி மடியில் கிடத்தி, விபூதியை மந்திரித்துப் போடுவதற்கிடையில், தெரு பூரா இங்கே கூடிவிட்டது...காலில் சர்ப்ப தர்சம்...அவன் தலை சரிந்துவிட்டது.

பக்கத்து அந்திச் சந்தையிலிருந்து காய்கறி வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்த அவன், கோயிலிலிருந்து கொஞ்சம் தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த வாய்க்காலில் இறங்கி, அதைத் தாண்டி, கரையிலிருந்த தாழம்பூ புதரின் அருகில் வந்ததும் இது சம்பவித்ததாகத் தெரியவந்தது.

பிறகும்....

கோமு கோயிலுக்கு வருவதில்லை...துளஸி ஹாரம் மட்டும் தவறாமல் வந்து கொண்டிருந்தது.

இனி... ?

தூரத்தில் கூ என்ற ரயிலின் ஓசை மெல்ல மெல்ல நெருங்கிக் கொண்டிருக்கிறது...

'ரெண்டு மணி ரயில் வருதே...ராமண்ணா இந்த ரயிலில் வருவானாக இருக்கும்...போய் பார்த்துவிட்டு வருகிறேன்... ' என்றுகூறி அண்ணாவி எழுந்து சோம்பல் முறித்துவிட்டுப் போகிறார்.

ஒரு மணி நேரம் கழித்துத் தெருவாசிகள் வந்து பார்க்கும்போது போற்றியின் உடம்பு விறைத்துப் போய்க் கிடந்தது.

*****

நன்றி: திண்ணை

Nov 25, 2010

அரைக் கணத்தின் புத்தகம் -சமயவேல்

அரைக் கணத்தின் புத்தகம்

ஏய், நில், நில்லு-
சொல்லி முடிப்பதற்குள்
மாடிப்படிகளில் என் குட்டி மகள் SAMAYAVEL
உருண்டுகொண்டிருக்கிறாள்
பார்த்துக்கொண்டு
அந்த அரைக் கணத்தின் துணுக்கில்
அவள் உருள்வதை நான் 
பார்த்துக்கொண்டு மட்டும்.
அவளது சொந்த கணம்
அவளை எறிந்துவிட
அவள் உருண்டுகொண்டிருக்கிறாள்.
என் சகலமும் உறிஞ்சப்பட்டு
ஒன்றுமற்ற உடலமாய் நான்
அந்த அரைக் கணத்தின் முன்
ஓடிக்கொண்டிருக்கிறேன்.
ஒரு வீறலுடன் அக்கணம் உடைய
நெற்றியில் அடியுடன்
அழும் மகளை அள்ளுகிறேன்
- கணங்களின் மீட்சி
என் பிரபஞ்சத்தை சேராத
அந்த அரைக் கணத்தை ஒரு
நோட்டுப் புத்தகத்தில் குறித்துவைத்தேன்.
ஒரு சொடுக்கில், இழுப்பில், புரட்டலில்
முழுச் சித்திரமே மாறிவிடும்
வினோதப் புத்தகம் அது.

எங்களூர்ப் பறவை

எங்களூரில் ஆகாய விமானம்
இப்படி இல்லை
மெல்லிய ரீங்காரம் காதுக்குள் ஊர்ந்தது
குதூகலத்துடன் வெளியே ஓடி வந்து
அண்ணாந்து ஆகாயம் துழாவி கண்டுபிடிப்போம்
மிதக்கும் மேகங்களுள் புகுந்து
வெளிவரும் பொழுது
களிப்பில் கூச்சலிட்டுக் கத்துவோம் நாங்கள்

ஆனால் இங்கே, அப்பா, காதைக் கிழித்து
பீதியூட்டிப் பறக்கும் திமிங்கலங்கள்
யுத்த விமானங்களின் அணிவகுப்பாம்
விதம் விதமாய்ப் பறந்தார்கள்
புகைக் காடாய் மாறி கலங்கியது வானம்
விமானியின்றி தானே பறந்து
அரை நொடியில் இலக்கு தொடும்
சோனிக் அட்டாக் ஏஏ01
கம்பீரமாய் எழும்புகிறது
புல் பூண்டற்று அழிந்து புகையும்
நகரின் கூவல் கேட்டு
சிதறுகின்றன என் உள்மன அறைகள்

எங்களூர் ஏரோப்ளேன் இப்படி இல்லை
அது ஒரு சிறு பறவை
வானில் மிதந்து நீலம் பருகும்
வெள்ளிமீன் பறவை.

விளிம்பின் பாடல்

மணல் குன்றுகளின் தீக் கானல்
நெடுஞ்சாலைகளில் மாய நடனம்
ஈரத் தீயில் எரிகின்றன எல்லாம்

சறுக்குப் பாறைகளின் பெரு மௌனங்களில்
உறைந்து மலைகளாகும் வெளியின் பாடல்
துருவ விளிம்புகளில் கீறி உடைகின்றன
பனிமலைக் கடல்கள்

நூற்றாண்டுகளின் நீண்ட கண்ணிகளில்
ஒரு தற்காலிக ஏற்பாடாய்
மின்னி மறையுதே உன் இப் பிறவி

நதிகள் தூங்கும் ஏரிகளில் படர்ந்த
ஓரிலைத் தாவரம் பெரும் விருட்சங்களாகி
காடாய் விரிய அடியில் நீந்திக் குளித்து
அலைந்து திரியுமே விநோத உயிர்கள்

பொங்கிய சமுத்திரத்தின் மரணத் தடங்கள்
அழித்து எழுதும் புதிய புவியியல்
கத்தும் குழந்தையின் அழுகையில்
உலர்ந்து உலருதே ஊடலும் கூடலும்

தெள்ளத் தெளிவாக முழு முற்றாக
எல்லாம் புரியும் நொடியில்
தலையை அடித்துப் பறக்கிறது கருங்காக்கை

கனிகள் குலுங்கும் பசுங்கொடிகள்
கால்களைப் பின்ன மீண்டும் துளிர்க்கும்
உயிரின் இலைகள்

ஆ, இருப்பதும் இறப்பதும் ஒன்றே அல்லவா?


அவளது மழை

பயனற்ற அவனுடன்
துவண்ட இரவு
தராத தூக்கம்
தினமும் தொலைந்தது

மார்பில் ததும்பும் தீயில்
எந்தப் பண்பாட்டையும்
எரிக்க முடியும்

அழுது விம்மி
கலங்கும் இதயம்
கேட்டு அலைகிறான்
தோழன்

சாட்டை சுழற்றும்
அவர்களின்
கள்ளப் பார்வைகள்
அறிவேன் நான்

பள்ளத் தாக்கில்
புதர்கள் அடியில்
அறியாப் பூக்கள்
பூத்துக் கிடக்கும்
இரகசிய வழிகளில்
நடந்து திரிவேன்

எனது இரவை
நானே புனைந்து
தோழன் கனவில்
நுழைந்து தூங்குவேன்

எனது முற்றத்திலும்
பெய்கிறதே மழை

எப்பொழுதும்

தாம் தீம்
தக்கத் திமிதீம்
ஒருவன்

தூம் தூம்
தும்கிட தும்கிட
தூம் தூம்
மிரு
தங்கம்

தீம் தீம்
திக்கிட திக்கிட
ஒருவன்
மிருதங்கம்

தும் தும்
துமுக் துமுக்
வாசித்துக்

கும் கும்
குமுகுமு குமுகுமு
கொண்டே

இதும் இதும்
இம்தம் இம்தம்
இருக்கிறான்

ஆச்சரியம்

அடிவானத்தின் உயிர்ப்பு மரிப்பதில்லை ஒருபோதும் அங்கே
அந்தப் பொன்நிற வட்டவில் மாய முகம்
கௌவி இழுக்கிறது முழுவதுமாக என்னை
என் விருப்பப்படி எந்த ஆனந்தத்தையும்
அங்கிருந்து அள்ளி எடுக்க முடியும்
நான் பனங்காய் வண்டி உருட்டி விளையாடிய காலம்
அங்கே தான் புதைந்திருக்கிறது ஒரு
கரிபடர்ந்த இருட்டு சமையலறையில் நான்
தழுவி முத்தமிட்ட வேணியின் கன்னம்
அங்கே தான் ஒளிந்திருக்கிறது
என் களி நடனமிடும் அகத்தி மரங்களை
அங்கு தான் நட்டு வைத்திருக்கிறேன்
மஞ்சள் பூக்களோடு பெரிய பெரிய இலைகளோடு
என் பூசணிக்கொடி அங்கே தான் படர்ந்திருக்கிறது
ஆச்சரியம் அது நமது
எல்லோரது அடிவானமுமாக இருப்பதுதான்.

நன்றி: உயிர்மை, காலச்சுவடு

Nov 24, 2010

இ.பா: நெடுவழிப் பயணம்-எஸ்.ரா

இந்திரா பார்த்தசாரதி
கதாவிலாசம்


ஊர் சுற்றிகளின் மீது எனக்கு எப்போதுமே தனி ப்ரியம் உண்டு. அதிலும், நெடுஞ்சாலை திறந்து கிடக்கிறது என்பதால், நோக்கமற்று எங்குவேண்டுமானாலும் சுற்றித் திரியும் மனிதர்கள் வரம் பெற்றவர்கள்!

ருஷ்யாவின் புகழ்பெற்ற தத்துவஞானியான குர்ஜீப், ஒரு ஊர்சுற்றி! அவரும் அவரது நண்பர்களும் i_paaமனம் போன போக்கில் சுற்றி அலைவார்கள். போகுமிடங்களில் என்ன கிடைக்கிறதோ, அவற்றை வாங்கி பிளாட்பாரத்தில் கடை போட்டு விற்று, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை ஈட்டிக்கொண்டு, அடுத்த ஊருக்குப் புறப்பட்டுச் செல்வார்கள்.

ஒரு முறை பாலைவனத்தைக் கடந்து போகும் நிலை உருவாகிறது. அவர்கள் ஒரு கிராமத்தில் தங்கி, அடுத்து எப்படிப் பயணம் மேற்கொள்வது என்று யோசனை செய்கிறார்கள். ‘பாலைப் புயல்  வருவதற்குள் கடந்து போகாவிட்டால், புயல் உங்களை அடித்துக்கொண்டு போய்விடும்’ என்கிறார் அங்கே இருக்கிற கிராமவாசி. ‘பாலைப் புயலில் என்ன நடக்கும்?’ என்று ஆர்வமாகக் கேட்கிறார் குர்ஜீப். ‘பாலைவனத்தில் புயல் அடிக்கத் துவங்கினால், இருபது அடி உயரம் வரை மணல் மேலே சுற்றிக்கொண்டு வரும். அதனால், நடந்து செல்பவர் களை மணல் மூடிவிடும்’ என்கிறார் கிராமவாசி. குர்ஜீப் உற்சாகமாகி, ‘அப்படியானால் நாம் பாலைவனப் புயல் துவங்கியதும், நம் பயணத்தைத் துவக்கலாம்’ என்று சொல்லிவிட்டு, அங்கேயே தங்கி, இருபது அடி உயரத்துக்கு ஏணி போல ஒன்றைச் செய்து, அதன்மீது ஏறி நின்றபடி பாலைவனத்தில் நடப்பதற்குத் தினமும் பழகுகிறார்கள்.
முடிவில், பாலைப் புயல் உருவாகிறது. அவர்கள் தங்கள் கால்களில் மர ஏணிகளைக் கட்டிக்கொண்டு பாலைவனத்தில் நடந்து போகிறார்கள். தங்கள் காலடியில் புயல் கடந்து
போவதைக் கண்டதாகவும், புயல் நாம் நினைப்பது போல அச்சம் தரக்கூடியது அல்ல, அது ஒரு மூர்க்கமான அழகுடையது என்று குறிப்பிடும் குர்ஜீப், ‘சாகசம்தான் பயணத்தின் உண்மையான சுவை!’ என்கிறார்.

பத்து வருடங்களுக்கு முன்பு, ஒரு முறை சென்னையில் இருந்து மதுரைக்குப் போவதற்காக, இது போன்றதொரு சாகசப் பயணத்தை மேற்கொள்ளத் தீர்மானித்தேன். அதைச் சாகசம் என்று நானாகச் சொல்லிக்கொள்வதற்குக் காரணம், டவுன் பஸ் டவுன் பஸ்ஸாக மாறி சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்வது என நான் முடிவெடுத்ததுதான்.

பொதுவாக, டவுன் பஸ்ஸில் ஒரு மணி நேரம் செல்வதற்குள், அது இருபது இடங்களில் நிற்கும். மூச்சு திணறக் கூட்டம் தொற்றிக் கொண்டுவிடும். அப்படி யான பஸ்ஸில் மதுரை வரை போவதென்றால், அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று அனுபவித்துப் பார்க்கத் தோன்றியது. மறுநாளே அதைச் செயல்படுத்த முடிவு செய்தேன்.

பயணம் கிளம்பும் முன் நானே சில கட்டுப்பாடுகளை உருவாக்கிக் கொண்டேன். டவுன் பஸ்ஸில் மட்டும்தான் போக வேண்டும். இரவில் டவுன் பஸ் ஓடவில்லை என்றால், எங்கே கடைசியாகச் செல் கிறோமோ, அந்த பஸ் ஸ்டாண்டில் இரவைக் கழிக்க வேண்டும். மறுநாள் காலை, முதல் டவுன் பஸ்ஸைப் பிடித்துப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன்.
பயணம் சைதாப்பேட்டையில் துவங்கியது. ஒரு டவுன் பஸ்ஸில் மாலை ஏழு மணிக்குப் புறப்பட்டேன். ஒரு மணி நேரத்தில் தாம்பரம் வந்து சேர்ந்தேன். அங்கிருந்து வண்டலூர் வரை ஒரு பஸ், அங்கிருந்து செங்கல்பட்டு வரை ஒரு பஸ் என செங்கல்பட்டு போய்ச் சேர்வதற்குள் இரவாகி விட்டிருந்தது.

அங்கேயே பஸ் ஸ்டாண்டில் தங்கிவிடுவது என்று முடிவு செய்தேன். இரண்டாவது காட்சி சினிமாவுக்குப் போய்விட்டு வந்து பஸ் ஸ்டாண்டில் பாதி இருண்டுகிடந்த கொடிக்கம்பத்தின் முன் வந்து சாய்ந்து உட்கார்ந்தேன்.

வானில் அன்று எக்கச்சக்க நட்சத்திரங்கள். இரவுப் பேருந்து கள் கடந்து சென்றுகொண்டே இருந்தன. பக்கத்துக் கிராமங் களுக்குச் செல்லும் மனிதர்கள் ஒன்றிரண்டு பேர் துண்டை விரித்து ஓரமாக படுத்து உறங்கினார்கள். ஒரு பிச்சைக்காரன் எதிரேயிருந்த அடி பைப் ஒன்றில் தண்ணீர் அடித்து குளித்துக்கொண்டு இருந்தான். காற்று ஏகாந்தமாக இருந்தது. எப்போது உறங்கினேன் என்று தெரியாது.

விடிகாலையின் குளிர் உடலை நடுக்கிய போது, பொழுது விடிந்து, பேருந்து நிலையத் தில் முதல் பஸ்ஸின் வெளிச்சம் தெரிந்தது. பாதித் தூக்கத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டேன். தூங்கிக்கொண்டே பஸ்ஸில் போய் இறங்கி, அங்கே அடுத்த பஸ்ஸைப் பிடித்து இன்னொரு ஊர் என கசகசப்பும் அசதியுமாக பயணம் நீண்டது. முதல் நாள் மாலை புறப்பட்ட ஏழு மணியையும் கடந்துவிட்டது. அப்போதும் நான் மதுரையை நெருங்கவில்லை. ஒன்பதரை மணிக்கு மேலூரைக் கடந்து, தொலைவில் மதுரையின் மெல்லிய வெளிச்சம் தெரியத் துவங்கியது.

மதுரைக்கு வந்து இறங்கியபோது மணி பத்தைக் கடந்துவிட்டிருந்தது. டவுன் பஸ் டிக்கெட்டுகள் யாவும் என் பையில் நிரம்பியிருந் தன. அப்படியே நண்பனின் அறைக்குச் சென்று கதவைத் தட்டியபோது, அவன் என்னை விநோதமாகப் பார்த்தபடி, ‘எங்கேயிருந்து வருகிறாய்?’ என்று கேட்டான். ‘சென்னையிலிருந்து’ என்று சொன்னதும் சிரிப்போடு, ‘எப்படி நடந்தே வந்தியா?’ என்று கேட்டான்.

இதுவும் நல்ல யோசனையாக இருக்கிறதே என்று தோன்றியது. நான் சிரித்துக்கொண்டே பையில்  இருந்த டவுன் பஸ் டிக்கெட்டுகளை எடுத்துக் காட்டினேன். அவனால் நம்ப முடியவில்லை. எதற்காக இந்த முட்டாள்தனம் என்பதுபோல என்னைப் பார்த்துத் திகைத்துப் போயிருந்தான். குளித்துவிட்டு மொட்டை மாடியில் படுத்துக்கொண்டபடி ஏகாந்தமான காற்றை அனுபவித்தபோது, பயணத்தின் உண்மையான ருசி புலப்பட்டது.

எத்தனை விதமான மனிதர்கள், எவ்வளவு பேருந்து நிறுத்தங்கள், எத்தனை கிராமங்களின் பெயர்கள்... உண்மையில் அதிவேகமாகக் கடந்துவிடும் பயணம் என்பது இத்தனையும் இழந்துவிடுவது என்பது அப்போதுதான் புரிந்தது. கூட இருந்த என் நண்பன் சொன்னான்... ‘இப்படித்தானே நமது முன்னோர்கள் ஒரு ஊரைவிட்டு மற்றொரு ஊர் போயிருப்பார்கள்! நீ இந்தக் காலத்து ஆள் இல்லைடா... பழைய ஆசாமி!’ இருவரும் சிரித்துக்கொண்டோம்.

காலம் எவ்வளவோ மாற்றங் களைக் கொண்டுவந்தபடி உள்ளது. அதில் மிக முக்கியமானது வாகனங்கள். சாலை வசதி! இந்தியா முழுவதும் சுற்றி அலைந்தபோதும் தமிழகத்தில் உள்ளது போல இத்தனை அழகான பஸ்களையோ, முறையான சாலைகளையோ வேறு எங்கும் கண்டதில்லை.

அதிலும் இங்குள்ள சொகுசுப் பேருந்துகளைக் காணும்போது அதன் மதிப்பு நமக்குத் தெரிவது இல்லை. மற்ற மாநிலங்களில் பயணம் செய்யும்போதுதான், நாம் எவ்வளவு பாக்கியசாலிகள் என்பது புரியும்.

வட மாநிலங்களில் உள்ள பேருந்துகளும், பேருந்து நிலையங் களும் நாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாதபடி இருக்கும். டெல்லியின் புகழ்பெற்ற பேருந்து நிலையம் செங்கல்பட்டு பேருந்து நிலையத்தின் அளவில்தான் இருக்கிறது. அதுவும் அங்கிருந்து கிளம்பும் நூற்றுக்கணக்கான அதிவேகப் புற நகர்ப் பேருந்துகளும் நமது லோக்கல் டவுன் பஸ்ஸைப் போன்றவை. அதன் சிவப்பு நிறமும், ஒருபோதும் மூட முடியாத கண்ணாடி ஜன்னல்களும் என்றும் மாறவே மாறாதவை.
மாநகர வாழ்க்கையில் ஒவ்வொரு வரும் சராசரியாக தினம் இரண்டு மணி நேரமாவது பயணம் செய்கிறார்கள். அதிலும் ரயிலும், பேருந்தும், ஆட்டோக்களும், கார்களும் பகலிரவு பேதமில்லாமல் சாலையைக் கடந்துகொண்டேதான் இருக்கின்றன.

சென்னையில் எவ்வளவு ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன என்று கற்பனை செய்து பார்க்கவே முடிய வில்லை. ஆனாலும், சென்னை ஆட்டோ டிரைவர்களிடம் பேரம் பேசி முடிப்பது பெரிய கலை. அதில் விற்பன்னர் ஆவது எவருக்கும் சாத்தியமானதும் இல்லை.

‘ஹெராக்களிட்ஸ்’ஸின் புகழ்பெற்ற வாசகமான ‘ஓடும் ஆற்றில் இரண்டு முறை ஒரே இடத்தில் இறங்க முடியாது!’ என்பது போல, சென்னையில் ஒரே இடத்துக்கு, ஒரே வாடகை s.ramakrishnanகொடுத்து இரண்டு முறை பயணம் செய்த சந்தர்ப்பம் இதுவரை வாய்க்கவே இல்லை.

மாநகர வாழ்வில் ஆட்டோக்களைப் பிடிக்கும் சாகசம் ஏற்படும் ஒவ்வொரு முறையும் மனதில் நினைவோடுவது இந்திரா பார்த்தசாரதியின் ‘தொலைவு’ என்ற கதை. இந்திரா பார்த்தசாரதி பல வருடங்கள் டெல்லியில் வாழ்ந்தவர். அவரது இக்கதை, டெல்லியில் ஒரு அப்பாவும் பெண்ணும், ஒரு ஆட்டோ பிடிப்பதற்காக எப்படி அலைகிறார்கள் என்பதைப் பற்றியதே!

ஜன்பத்  டெல்லியின் போக்குவரத்து மிகுந்த இடம். அங்கே வாசுவும் அவரது ஏழு வயது மகள் கமலியும் தங்கள் வீட்டுக் குச் செல்ல ஒரு ஆட்டோ பிடிப்பதற்காகக் காத்திருக்கிறார்கள். டவுன் பஸ் ஏறிப் போக முடியாது. அவ்வளவு கூட்டம். காலியாக ஏதாவது ஒரு ஆட்டோ வந்தால் அதில் ஏறிக்கொண்டுவிடலாம் என்று காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் நேரம் ஆட்டோ கிடைக்கவே இல்லை.

மெதுவாக சாலையில் நடந்தபடியே ஏதாவது ஆட்டோ வருகிறதா என்று பார்த்துக்கொண்டே போகிறார்கள். டாக்ஸியில் போகலாம். ஆனால், அதற்கு மாத வருமானம் இடம் தரவில்லை. தனது குடும்பச் சுமையை நினைத்தபடியே வாசு மெதுவாக நடக்கும்போது, அவன் நண்பன் மூர்த்தி காரில் வருகிறான். அவன், தான் லோதி காலனி வழியாகப் போவதாகச் சொல்லி ஏறிக்கொள்ளச் சொல்கிறான்.

வாசுவுக்கு அது பிடிக்கவில்லை. காரணம், பால்ய வயதில் உதவாக்கரையாக இருந்த அவன் டெல்லிக்கு வந்து பெரிய ஆளாக மாறியிருப்பது வாசுவுக் குச் சற்றே பொறாமையை உருவாக்குகிறது. அதோடு, முன்பு சில முறை அவன் தன் னைப் பயன்படுத்தி தன் காரியங்களைச் சாதித்துக்கொள்ள முயன்றது நினைவுக்கு வரவே, அவனோடு செல்ல மறுக்கிறான்.
கமலிக்கு இது ஆத்திரமாக இருக் கிறது. அவள் நடந்தே போய்விடலாம் என்று ஆவேசம் கொண்டவள்போல வீம்பாக நடக்கிறாள். முடிவாக, ஒரு ஆட்டோ நிற்பதைக் கண்டு அவர்கள் காத்திருக்கும்போது, வேறு ஒரு பெண் வந்து அதில் ஏறிக்கொண்டு போய் விடுகிறாள். ‘நம் ஊரில் இப்படி ஆட்டோவுக்குக் காத்துக் கிடக்கவா செய்தோம்! பேசாமல் நடந்தே போய்விடலாம்’ என்று முடிவு செய்தபடி, அவனும் கமலியைக் கூட்டிக்கொண்டு வீராப்பாக நடக்கத் துவங்குகிறான் என்பதோடு கதை முடிகிறது.

மாநகரின் என்றும் மாறாத காட்சிகளில் ஒன்று இக்கதையில் துல்லியமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

போதி மரத்தில் ஞானம் பெற்ற புத்தனேகூட எண்பது வயது வரை நடந்து சுற்றி இருக்கிறான். கிறிஸ்துவும்கூட தேசம் விட்டு தேசம் அலைந்து திரிந்திருக்கிறார். உலகுக்கு வழிகாட்ட வந்தவர்கள் ஓரிடத்தில் தங்கியிருப்பதில்லை. அல்லது, பயணம்தான் அவர்களை உலகுக்கு வெளிப்படுத்துகிறது.

சாலை நம் வாசலில் துவங்கி, முடிவற்று உலகமெங்கும் விரிந்தோடிக் கொண்டு இருக்கிறது. நமக்குத் தேவையானது எல்லாம் பயணம் போவதற்கான விருப்பமும் மனதும் மட்டும்தான்! கும்பகோணத்தில் 1930-ல் பிறந்த இந்திரா பார்த்தசாரதி தமிழின் தனிச்சிறப்பு மிக்க எழுத்தாளர். இவர் வைஷ்ண சித்தாந்தம் குறித்து ஆய்வு மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றவர். இவரது குருதிப்புனல் நாவலுக் காக 1978-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றவர். சிறந்த நாடகாசிரியர். நாடக உலகுக்கு இவர் ஆற்றிய சேவைக்காக சங்கீத நாடக அகாடமி விருது பெற்றவர். இப்படி இரண்டு முக்கிய தேசிய விருதுகள் பெற்ற ஒரே எழுத்தாளர் இவர் மட்டுமே! மழை, போர்வை போர்த்திய உடல்கள், நந்தன் கதை போன்றவை இவரது முக்கிய நாடகங்கள். பாண்டிச்சேரிப் பல்கலைக் கழகத்தின் நாடகத்துறை இயக்குநராக சில காலம் பணியாற்றியுள்ள இந்திரா பார்த்தசாரதி, தற்போது அமெரிக்காவாசி.

நன்றி: கதாவிலாசம், விகடன் பிரசுரம்

Nov 23, 2010

நினைவில் மினுமினுக்கும் பாதரசத் தூசிகள்-ஷங்கர்ராமசுப்ரமணியன்

நினைவில் மினுமினுக்கும் பாதரசத் தூசிகள்

கலாப்ரியாவின் நினைவின் தாழ்வாரங்கள் கட்டுரை நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை

'அந்த உலகம் மிகச் சமீபத்தில் தோன்றியது. அங்குள்ள பல பொருள்களுக்குப் பெயரில்லை. அவற்றைக் குறிப்பதற்கு சுட்டிக் காட்டுவதுதான் அவசியமாக இருந்தது.' இது மார்க்வெசின் 'நூற்றாண்டு காலத்தனிமை' நாவலின் தொடக்கத்தில் மக்காந்தோ ஊரைப் பற்றி வரும் சித்தரிப்பு. கவிஞர் கலாப்ரியாவின் பிராயகால நினைவுக் குறிப்புகளான 'நினைவின் தாழ்வாரங்கள்' நூலைப்kalapriya படித்து முடித்தபோது அதுகுறித்த பேச்சைத் தூண்டுவதற்கு இந்த விவரணை பொருத்தமாக இருக்கக்கூடும் என்று தோன்றியது.

காலமாற்றத்தில் நிலைவுடைமை சார்ந்த செல்வ வளமுள்ள ஒரு குடும்பத்தின் சிதைவுதான் 'நினைவின் தாழ்வாரங்கள்' நூலின் மையப் படிமம். படிப்படியாக சிதையும் குடும்பம் ஒன்றின் கடைசி குழந்தையாக, படிப்படியாக நேரும் இழப்புகளில் பங்கேற்பவராகவும் நுட்பமான பார்வையாளனாகவும் இந்த நினைவுக் குறிப்புகளை எழுதிச் செல்கிறார், கலாப்ரியா.

நிலங்கள் ஒவ்வொன்றாக விலையாகின்றன. குடும்பத்தின் அந்தஸ்துக்கு அடையாளமான நகைகள், பொருட்கள் விற்கப்படுகின்றன. தலைமுறை தலைமுறையாகப் புழங்கப்பட்டு குடும்ப நினைவின் ஒரு பகுதியாகவே மாறிவிட்ட, பழைய கைவினைத் திறனுக்கு சாட்சியாக இருந்த பாத்திரங்கள், ஓவியச் சட்டகங்கள் வெளியே போகின்றன. அக்காலத்தில் செல்வ வளமையின் அடையாளமாய் பாதுகாக்கப்படும் இரும்புப் பெட்டியும் விற்கப்பட்டு அது இருந்த இடமும் வெறுமையாகிறது. இது காலப்ரியாவின் அகத்தில் நடப்பது.

கலாப்ரியா, இச்சிதைவு குறித்து எழுதிச் செல்வது இறந்தகாலம் தொடர்பான ஏக்கத்தை உருவாக்கும் நோக்கத்தில் அல்ல பழம் பெருமைகளையும் மரபையும் கிண்டலுடன் சீண்டவும் செய்கிறார். வீட்டின் இரும்புப் பெட்டியில் இருந்த வெள்ளி நாணயம் ஒன்றை நண்பனுடன் சேர்ந்து விற்றுவிட்டு, புரோட்டா சாப்பிடுவதற்காக செல்லும்போது அவரால் இப்படிச் சொல்ல முடிகிறது. இதை நான் ஒரு கவிதையாக சில வார்த்தைகளை வெட்டி மடித்திருக்கிறேன். இக்காட்சியில் வரலாற்றின் இயங்கியல் போக்கு நிதர்சனமாகப் பதிவாகியுள்ளது.

நெல்லையப்பர் கோவிலின்
மேற்குகோபுர வாசல் அது
கழுவேற்றிமுடுக்கு என்று பெயர்
அங்கே எங்கு கழு இருந்தது
எனக்குத் தெரியாது

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள

ஆபிரகாம் ஓட்டலில்

ரெண்டு ரொட்டியும் 
சால்னாவும் 
90 பைசா.

தனது பழைய வீட்டின் இடிபாடுகளை உதிர்த்தபடி சமூக கலாசார மாற்றங்கள் சுழிக்கும் முச்சந்தி வெளி அவனை வசீகரிக்கிறது. அங்கே பழையவை, கனத்த நினைவுகளுடனும் துக்கத்துடனும் தன்னுடன் சேர்ந்திருக்கும் கதைகளை மிச்சம் வைத்துவிட்டு மறைந்து கொண்டிருக்கின்றன.
கலாப்ரியா என்ற கவிதை ஆளுமையின் நிகழ்வு, தமிழகத்தில் சமூக அரசியல் கலாசாரத் தளங்களில் ஏற்பட்ட குறிப்பிட்ட எழுச்சி மற்றும் பண்பு மாற்றங்களுடன் தொடர்புடையது. நிலவுடைமை சார்ந்த மதிப்பீடுகளும் உற்பத்தி உறவுகளும் பலவீனப்பட்டு, நவீன மயமாதலும் அதுசார்ந்த மதிப்பீடுகளும் எழுச்சிபெறும் காலம் கலாப்ரியாவினுடையது. சமத்துவத்தை வலியுறுத்தி பகுத்தறிவு இயக்கம் முன்னெடுத்த வெகுமக்கள் எழுச்சியும் அதுபெற்ற அரசியல் அதிகாரமும், சமூகப் பிரிவினைகளைத் தளர்த்தி நவீன கல்வியின் மூலம் கடைப்பட்டோரும் மேம்படும் வழிகள் திறக்கப்பட்ட சரித்திர நிகழ்வு அது. இக்காலகட்டத்தில் தான் பாகுபாடுகள் நிலவிய மரபான பொதுவெளிகள் உணவு விடுதிகள், திரையரங்குகள், பொருட்காட்சிகள், அரசியல் மேடைகள் ஆகியவை உருவாகின்றன. புதிய வண்ணங்களுடன் புதிய துக்கம் மற்றும் பிறழ்வுகளுடன் குறுக்குமறுக்கான உறவுச் சமன்பாடுகள், கொண்டாட்டங்கள், பிரத்யேகச் சடங்குகள் மற்றும் குழுக்குறிகள் தோற்றம் கொள்கின்றன. (அப்போது அறிமுகமான பொருட்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் திடத்தன்மை இருந்தது. விநோதத்தின் கண் சிமிட்டலுடன் அவை இருந்ததை உணரமுடிகிறது.) இந்நிகழ்வுகளில் சராசரி பங்கேற்பாளனாகவும் நுட்பமான பார்வையாளனாகவும் ஒரு சாதாரணனாக கலாப்ரியா கரைந்திருக்கிறார். அக்காலத்திய சினிமா, அரசியல், மாணவர் போராட்டம், தெரு அரட்டை தொடங்கி குடி, பெண்கள் உள்ளிட்ட சில்லறைச் சல்லித்தனங்கள் வரை தன் பிராயகால நினைவுகளாக எழுதிச்செல்லும் கலாப்ரியா, ஒரு காலகட்டத்து தமிழ் இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிப்பவராகிறார்.

ஒரு தேவாலயத்தில் பிரார்த்திக்கும் அனுபவத்தைப் போல், கூட்டு மன எழுச்சியையும் சந்தோஷத்தையும் அனுபவ பகிர்வையும் சாத்தியப்படுத்தி, பின்பு மொத்தமாக தமிழ் வாழ்வையே நிர்ணயிக்கும் மதமாகவே மாறிப்போன சினிமாவின் வெகுஜனக் கலாசார வரலாறை ஒருவர் இதில் வாசிக்க இயலும். இந்த கூட்டு மன எழுச்சியையும் ஞாபகங்களையும் பொருத்தமான பழைய பாடல் வரிகளினூடாக எழுப்ப முயல்கிறார், கலாப்ரியா. பொதுவாக கவனிக்கப்படாத சினிமா சுவரொட்டி வடிவமைப்பாளர்களின் பெயர்கள் முதல் ஒலிப்பதிவாளர்கள் வரை விஸ்தாரமாக இந்நூலில் சர்ச்சிக்கப்படுகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழ் நினைவு மீது சினிமாவைத் தவிர வேறு எதுவும் இத்தனை தாக்கத்தை செலுத்தியிருக்குமா என்பது கேள்விக்குரியது. இந்தப் பொதுநினைவின் சாராம்சமாக விளங்கும் கலாப்ரியாவின் இந்த நூல் தமிழ் வாசகர்களை மிகவும் வசீகரிக்கக்கூடியது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஒவ்வொரு ரயில் நிலையமாகச் சென்று தாரால் இந்திப் பெயர்களை அழித்தபடி மாணவர்கள் திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை நோக்கி செல்கிறார்கள். ஒவ்வொரு நிறுத்தத்திலும் மாணவர்கள் படிப்படியாக குறைந்து செங்கோட்டை வரும்போது கலாப்ரியாவும் அவரது நண்பர்கள் ஓரிருவர் மட்டுமே மிஞ்சுகிறார்கள். எங்கு போவது என்று இலக்கில்லாமல், நடக்கிறார்கள். தார்மீக உணர்வும் லட்சியங்களும் தோற்றுப்போய் இலக்குகளற்ற அவநம்பிக்கையின் பாதை அந்த இளைஞர்கள் முன்பு விரிவதை எந்த கூடுதல் அழுத்தமும் இல்லாமல் உணர்த்திச் செல்கிறார்.

பழைய மதிப்பீடுகளும் பழைய உணர்வுகளும் அங்கங்கு கண்ணாடித்தூசி போல் துக்கத்துடன் அனைத்தின் மீதும் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை உண்டு. நிலவுடைமை சார்ந்த குடும்பங்கள் சிதையும் போக்கிலேயே, பாரம்பரிய ஞானம் என்பது போஷிப்பவர்கள் இல்லாமல் விழிபிதுங்கி நிற்கிறது. அதையே வாழ்க்கை முறையாகவும் அடையாளமாகவும் கொண்ட தொழிலாளர்களும் கைவிடப்படுகின்றனர். கல்தச்சர்கள், கண்ணாடிக்கு ரசம் பூசுபவர்கள், கைமருத்துவம் பார்க்கும் குறவர்கள் தங்கள் சுயத்துவம் கூடிய படைப்பழகு துறந்து காலத்தின் பொது வெயிலில் ஆவியாகின்றனர். அவர்களுக்கேயுரிய புராணிகங்களை வரலாற்றைச் சுமப்பதுபோல் கவிஞன் இந்நூலில் சுமந்து திரிகிறான். ஆடியிலிருந்து சுரண்டி எடுக்கப்பட்ட பாதரசத் தூசிகளின் மினுமினுப்பு போல கலாப்ரியாவின் நினைவின் தாழ்வாரங்கள் நூலில் அவை சேகரமாகியிருப்பது அழகானது. ஏனெனில், துக்கம் அனைவருக்கும் பொதுவானது. சந்தோஷங்கள் தனிப்பட்டவை.

இதன் நடுவில் ஆலங்கட்டி மழை வீடுகளுக்கு இடையே பெய்கிறது. அபூர்வமாகப் பெய்யும் ஆலங்கட்டியைப் பகிர்வதில் ஸ்பரிசிக்கவே இயலாத ஆண் பெண் கைககள் தொட்டு உறவாடுகின்றன. ஆலங்கட்டியைப் போன்ற கணநேரக் காதல் புதியதா, பழையதா என்று தெரிவதற்குள் கரைந்துவிடுகிறது. மற்றாங்கே கவிதையில் முழுமையடையாத தாபமாக மழை தகரத்தில் உக்கிரமாகப் பெய்கிறது.

ஒரு புனைவில் கவிஞனின் கண்கள் எங்கு பதிந்திருக்கின்றன. அவை எதை அடிக்கோடிடுகின்றன என்பதைப் பார்ப்பது எனக்கு மிக சுவாரசியமான அனுபவமாக இருந்தது. நவீன கவிதையில் துல்லியமான நிலவியல் அடையாளத்துடன் சமகால வாழ்வின் உக்கிரமான சித்திரங்களாலான யதார்த்தத்தை தீவிர அங்கதத்துடன் முன்னுரைத்தவை கலாப்ரியாவின் கவிதைகள். புகைதையில் புதுமைப்பித்தனுக்கு சமமான சாதனை இது. மற்றவர்களும் மற்றவையின் இருப்பும் துள்ளத்துடிக்க இவர் கவிதைகளில் தான் முதலில் இடம்பிடித்தன. தன்கால வாழ்வுக்கு எதிர் வினையாற்றி, ரௌத்ரம் கொண்ட தமிழ் இளைஞன் ஒருவனின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முதல் வெளிப்பாடு அது.

மாறும் காலத்தின் கோலத்தில் சகலமும் எனக்கு ஊறுவிளைவிக்கலாம் என்று பசியற்ற காகங்களைத் தன் மூளையைக் கொத்த அனுமதித்தவர் கலாப்ரியா. பிறரின் துக்கம் தன் அனுபவத்தின் மீது ஏறி கலவரம் புரிய, புறக்கடைகளில் நரகலையும் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளையும் மிதித்தபடி சோரங்கள், இழப்புகள், அபத்தங்களை, மறைபகுதிகளை தரிசிக்க நேர்ந்த வலியிலிருந்து ரத்தத்தால் எழுதப்பட்டவை அவர் கவிதைகள்.

நினைவுதான் மரணத்தைவிட நம்மை வெகுவாகப் பீதியூட்டுவது, கலாப்ரியாவின் சசி குறித்த நினைவுதான் அவரது மொத்தப் படைப்புலகுக்கான முன்னிலை. சசி கிடைக்காத துக்கம், மரண பீதி போன்று அவரை வெளியே விரட்டி சகலவற்றின் மீதும் படிந்து, சகலரின் துக்கத்தையும் அவர் துக்கமாக மாற்றுகிறது. அது தோல் உரிந்த நிலை. கிட்டத்தட்ட பைத்தியத்திற்கு பக்கத்தில் உள்ள நிலை. கலாப்ரியா மிகுந்த உயிர்ப்புடன் படைப்பாக்கத்தில் ஈடுபட்டிருந்தபோது எழுதிய கவிதைகள் இப்போது வாசிக்கும் வாசகனைக்கூட நிலைகுலையச் செய்யும் வன்முறையும் தீவினையின் வேகமும் கொண்டவை.

திருநெல்வேலி என்னும் நிலவியலின் பின்புலத்தில் எழுதப்பட்டிருக்கும் 'நினைவின் தாழ்வாரங்கள்' நூலை வாசித்த அனுபவத்திலிருந்து, புதுமைப்பித்தனிலிருந்து விக்ரமாதித்யன் வரை இந்த நிலத்தின் படைப்புக் குழந்தைகளை பிணைக்கும் சரடு என்ன? இவர்களின் ஆதார மனவுலகம் எப்படி உருவாகிறது என்பதைப் பார்ப்பது முக்கியமானது.

திருநெல்வேலியின் மனநிலப் பரப்பு கோவிலுக்கும் ஆற்றுக்கும் இடையில் இருப்பது. சமயமும் தத்துவமும் சேர்ந்து வீடுகளுக்கு இடையே நெகிழாத சுவர்களை ஏற்படுத்தி, ஒருவரின் தனிமையைக் கூடத் தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. காமமும், தாபமும் புணராமல் வெயிலில் முறுகிக் கொண்டிருக்கும் இடம் அது. தன் அனுபவமே கற்பிதமோ என்ற மயக்கத்தில் ஆறு இருக்கிறது... இல்லை... தேர் இருக்கிறது... இல்லை... வாழ்வு இருக்கிறது... இல்லை என்ற கயிற்றரவு மனநிலையிலேயே நீடிக்கிறது. லோகாதாயமான கனவுகள் இல்லாத நிலையில், அந்த இடம் படைப்பு என்னும் கனவு வழியாகவே தன்னைத் தொடர்ந்து ஆற்றிக்கொள்ளவும் உரையாடவும் செய்கிறது.

சுதந்திரத்துக்குப் பிறகு தமிழகத்தில் புதிய தொழில்கள் மற்றும் பொருளா34838_105318686188593_100001313875575_44080_6688702_nதாரம் சார்ந்து அபிவிருத்தி அடைந்த பல நகரங்களுக்கு ஈடாக அது எந்த மாற்றங்களுக்கும் உட்படவில்லை. ஆங்கிலேயர் காலத்தில் இங்கு ஏற்படுத்தப்பட்ட கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மட்டுமே திருநெல்வேலியை நிகழ்காலத்துக்குள் வைத்திருக்கிறது. இங்கு கல்விபெற்ற இளைஞர்கள் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருக்கும் நிலையில், அது கோபுரத்தின் பழைய  நிழலுக்குள்ளேயே மறைய முயற்சித்துக் கொண்டிருக்கிறது. புதுமைப்பித்தன், வண்ணநிலவன், கலாப்ரியா, விக்ரமாதித்யன் படைப்புகளில் விசாரணையாகவும் காதலாகவும் அவலதரிசனமாகவும்  கழிவிரக்கமாகவும் வெளிப்படுவது திருநெல்வேலியிலிருந்து மீறத்துடிக்கும் எதிர்வினைதான்.

பண்டிகை காலங்களில் ஏகாந்தத்திற்காகவும் சில நேரம் துக்கத்துடனும் நான் தாமிரபரணி ஆற்றுக்குச் சென்றிருக்கிறேன். ஊரே பண்டிகையில் திளைத்துக் கொண்டிருக்க, நண்பகலில் குறுக்குத்துறை படித்துறையில் யாரோ ஒருவராவது தனிமையில் துணியை அடித்துத் துவைத்துக்கொண்டிருப்பார். வட்டப்பாறையில் துவைக்கும் சப்தம் கோவில் மண்டபத்தில் எதிரொலிக்கும். அங்கே யாராவது துவைத்துக்கொண்டிருந்தால் அது கிழக்கே இருக்கும் ரயில் பாலத்துக்கு எதிரொலிக்கக்கூடும். நட்டநடு வெயிலில் யாருமற்ற ஆற்றில் ஒருவர் துணி துவைக்கும் சப்தத்தில் விளக்க இயலாத தனிமை உள்ளது; அபத்தம் உள்ளது; தீவிரமான தனிமையை உணர நேரும் மரண பிரக்ஞை உள்ளது. இந்த சப்தத்தை பேராச்சி அம்மன் கோவில் படித்துறையில் அமர்ந்து புதுமைப்பித்தனும் ஒரு வேளை கேட்டிருக்கக்கூடும். அவரது 'செவ்வாய் தோஷம்' கதையில் ரத்தக்காட்டேரி அடித்து இறந்துபோன நபரின் சடலம் புதைக்கப்பட்டு ஒருவாரத்துக்குப் பிறகும் ரத்தம் உறையாமல் இருக்கிறது. படைப்பென்னும் ரத்தக் காட்டேரியால் தீண்டப்பட்டது இவர்கள் தான் போலும்.

Nov 22, 2010

மைதானத்து மரங்கள் - கந்தர்வன்

    இவன் வீட்டை விட்டுத் திரும்பி நடந்தால் நூறடி தூரத்திலிருக்கிறது அந்த மைதானம். ஊரின் ஒரு கோடிக்கு ஒதுங்கி விட்ட இவன் வீட்டுக்கு ஒரே மரியாதை, அது அந்த மைதானத்திலிருக்கிறது என்பதுதான். புதியவர்கள் யாரும் இவனிடத்தில் வீட்டு முகவரி கேட்கும்போது இவன் இந்த மைதானத்தை அடையாளங் காட்டித்தான் சொல்லிக் கொள்வான். உலகத்தின் பெரிய பெரிய வாழ்க்கையிலிருந்தும் பெரிய பெரிய சம்பவங்களிலிருந்தும் இவன் ஒதுங்கி, ஒடுங்கியிருப்பது போல இந்த வீடும் நிசப்தத்தைத் திண்ணையில் விரித்துக்கொண்டு ஒடுங்கி ஒதுங்கிப் போயிருந்தது. அந்தப் பெரிய மைதானத்துக்கருகில் உள்ள வீடு என்பதால்  மைதானத்தின் கம்பீரம் லேசாய் வீட்டில் படிந்து இவன் குரலில் சில சமயங்களில் வெளிப்படும்.

    அம்மா கூடப்போய் பெண்கள் துறையில் குளிக்க வெட்கப்பட்டு அவளோடு சண்டை போட்டு kandharvan4 இவன் தன்னோடு சேர்த்துக் குஞ்சு குளுவான்களோடு ஊருணிக்கு குளிக்கப் புறப்பட்ட காலத்திலிருந்து இந்த மைதானத்தோடு இவனுக்கு ரகசிய சம்பந்தம் உண்டு. அப்பா அம்மா கைகளை உதறிவிட்டு இவன் தானே நடக்கத் துவங்கி, கைகளை வீசி நடந்து வந்ததே அருகிலிருந்த இந்த மைதானத்திற்குத்தான். அப்போதிலிருந்து இந்த மைதானந்தான் இவனுக்கு ஆதரவு.

    மதுரை செல்லும் சாலையின் ஓரத்தில் இந்த மைதானம் பரந்து கிடந்தது. மைதானத்தின் சிறப்பு அதன் பரப்பளவினால் வந்ததல்ல. அதன் இவ்வளவு மகிமைக்கும் காரணம் அதன் கிழக்கு மேற்கு ஓரங்களில் ஆஜானுபாகுவாய்க் கிளைகள் விரித்து நிற்கும் அந்தப் பெரிய பெரிய மரங்கள்தான். அவைகளைச் சாதாரணமாய் மரங்கள் என்றழைப்பதே சிறுமைப்படுத்தியதாகிவிடும். நெடுநெடுவென்று வளர்ந்து வீடுகள்போல் தூர்கட்டி மைதானத்து ஓரங்களைக் கருகருவென்று இருள் போர்த்திக்கொண்டு பூவும் பிஞ்சும் காயும் பழங்களுமாய் நிற்கும் அந்தப் புளிய மரங்களை ‘விருட்சங்கள்’ என்றுதான் யதார்த்தமாக சொல்லவேண்டும்.

    ஊர் நடுவேயுள்ள உயர்நிலைப் பள்ளியின் சொந்த விளையாட்டு மைதானம் இது. அந்தப் பள்ளியின் முற்றத்திலேயே ஒரு சிறிய மைதானமும் உண்டு.  இடைஇடையே வரும் விளையாட்டுப் பீரியட்களில் மட்டுமே அந்தச் சிறிய மைதானத்தில் விளையாட்டு நடக்கும். ஒரு வகுப்பிற்கு மதிய இடவேளைக்கு முந்திய கடைசி பீரியட், விளையாட்டு பீரியடாக இருந்தாலோ அல்லது மாலையில் கடைசி பீரியடாக இருந்தாலோ பையன்கள் வரிசையாய் நடந்துவந்து இந்தப் பெரிய மைதானத்தில்தான் விளையாடவேண்டும். விளையாடி முடித்து உடற்பயிற்சிக் கல்வி ஆசிரியர் கழுத்தில் தொங்கும் பிகிலை ஊதி வீடுகளுக்கு விரட்டும்போது எல்லா மாணவர்களும் ஊருக்குள் இருக்கும் தங்கள் வீடுகளுக்கு அலுப்புடன் நடப்பார்கள். மதிய இடைவேளையாயிருந்தால் அவசரமாய் ஓடுவார்கள். இவனுக்கு அப்போதெல்லாம் ரொம்பப் பெருமையாயிருக்கும். இவன் வீடு இதோ நாலு பாகத்தில் இருக்கிறது.

    இவன் மட்டும் ஆற அமர ஒவ்வொரு மரமாய் ஓடி ஒடித் தொட்டுவிட்டு மைதானம் காலியானதும் ஒண்டியாய் நின்று இங்குள்ள எல்லாமே இவன் கவனிப்பில், மேற்பார்வையில் நடப்பதுபோல் காலி மைதானத்தை ஒருமுறை பார்த்துவிட்டு வீட்டிற்குப் போவான்.

    வெயில் தணிந்ததும் அப்போது புழக்கத்திலிருக்கும் கிட்டியோ பம்பரமோ கோலியோ எடுத்துக்கொண்டு மறுபடியும் மைதானத்திற்கு வருவான். ஆங்காங்கிருந்து ஒரு ஜமா சேர்ந்துவிடும். குழுக்களாகப் பிரிந்து விளையாட்டுத் துவங்கும். விளையாட்டின் போது எவ்வளவு கத்தினாலும் சத்தம் மைதானத்தை விட்டு வெளியே போகாது. மைதானமே சப்தங்களே விழுங்கிவிடும். இரண்டுபேர் மூன்று பேராக இளவட்டங்களும் வயசாளிகளும் வந்து மர நிழல்களில் உட்கார்ந்து ஊர்க்கதைகளைப் பேசுவார்கள். தனி ஆட்களாய் கண்ணிலுள்ள சோகத்தையெல்லாம் மைதானத்தில் பாய்ச்சிக்கொண்டு குத்துப்பார்வைகளோடு சிலர் உட்கார்ந்திருப்பார்கள்.

    சாலையைத் தாண்டிப் பச்சைக் காடாய்க் கிடக்கும் வயல் ஓரங்களில் மாடு மேய்க்க வரும் சிறிசுகள் முறைபோட்டுக்கொண்டு, சிலர் மாடுகளைப் பார்த்துக்கொண்டு மைதான மரப் பாதங்களில் வீடமைத்து ஆடுபுலி, தாயம் எல்லாம் ஆடுவார்கள். கந்தலும் பரட்டையுமாய் அவர்கள் ஒரு ஒதுங்கிப்போன மரத்தடியை எப்போதைக்குமாய் எடுத்துக்கொண்டார்கள். எவ்வளவோ காலம் ஆயிற்று அவர்கள் அந்த மரத்தடியை எடுத்துக்கொண்டு. காடு மாறிப் பொழப்பு மாறி எவ்வளவோ பேர் போய்விட்டார்கள். எண்ணிக்கையில் குறைவுபடாமல் புதிது புதிதாகவும் வருகிறார்கள். கந்தலும் பரட்டையும் மாறவில்லை. அவர்கள் பிடித்துக் கொண்டிருந்த மரத்தையும் மாற்றிக்கொள்ளவில்லை. விடிகாலைப் பொழுதில் கூட்டிப் பெருக்கி பளிச்சென்றிருக்கும்  வீட்டு முற்றம்போல்  எல்லாக் காலத்திலும் அந்த மரத்தடி மட்டும் சுத்தமாயிருக்கும். அடுத்தடுத்த மரத்தடிகளில் வெள்ளையுஞ் சுள்ளையுமாய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களிடம் அஞ்சிக்கொண்டே விளையாடும் அந்த மாடு மேய்ப்பிகள் சப்தக் குறைவோடுதான் சம்பாஷித்துக் கொள்வார்கள்.

    கொஞ்சகாலம் முன்பு வரை இளவட்டங்கள் கூட்டமாக வந்து கேந்திரமான மரத்தடிகளில் உட்காருவார்கள். கண்டகண்ட பெண்களைப் பற்றியெல்லாம் அவர்கள் கதையளந்து கொண்டிருப்பார்கள். அவர்களெல்லாம் கல்யாணம் முடிந்து மனைவிகளுக்குக் கட்டுப்பட்டு வீடுகளில் முடங்கியிருப்பார்கள் போலும்! அந்த முகங்களில் ஒன்றிரண்டைத் தவிர அநேகம் பேரை இப்போதெல்லாம் இந்த மரத்தடிகளில் காண முடிவதில்லை. இப்போது வரும் இளவட்டங்கள் வந்து உட்கார்ந்தவுடன் அமர்க்களமாய்ப் பேசத்துவங்கினாலும் நேரம் ஆக ஆக சோகங்களையே பரிமாறிக் கொள்கிறார்கள். தூரத்துப் பட்டணங்களும், கை நிறையச் சம்பளம் வரும் உத்தியோகங்களும் நாதஸ்வரம் முழங்கக் கல்யாண ஊர்வலங்களும் அவர்களின் ஏக்கம் போலும். அவர்கள் ஒவ்வொரு நாளும் விட்டுச் செல்லும் பெரு மூச்சுகள் மரத்தடிகளைத் தாண்டி மைதானமெங்கும் விரிந்து செல்லும்.

    இவன் சிறுபிள்ளையாயிருந்தபோது மைதானத்து மரத்தடிகளில் அதிகமாய் உட்கார்ந்ததே இல்லை. இவனைக் கவர்ச்சித்ததெல்லாம் சூரியனை நேராகப் பார்த்துக் கிடந்த அந்த மைதான வெளிதான். மரத்தடி என்பது உட்காருபவர்களுக்குண்டானது. இவனால் அந்த வயதில் வாலைச் சுருட்டிக்கொண்டு ஐந்து நிமிடங்கள் கூடத் தொடர்ந்து ஒரு இடத்தில் உட்கார முடியாது. மைதான வெளியிலென்றால் ஆடிக்கொண்டேயிருக்கலாம். ஓடிக்கொண்டேயிருக்கலாம்.
    ஒவ்வொரு சமயம் விளையாட்டு உச்சத்திலிருக்கையில் மரத்தடியிலிருந்து ‘அப்படிப் போடுரா சபாசு’ என்ற உற்சாகக் குரல்கள் சிறுவர்களை எட்டும். அந்த நாட்களில் அவர்களின் அடுத்தடுத்த ஏவல் குரல்களுக்காகவும் உற்சாக ஒலிகளுக்காகவும் ஆட்டம் தூள்படும். இறங்கு வெயில், மஞ்சள் வெயில், லேசிருட்டு என்ற பொழுது மாற்றங்கள் ஆட்ட மும்முரத்தில் புத்திக்கு உறைக்காது. இருட்டுக் கனமாகி கனமாகி அடித்த கிட்டிப்பிள்ளையைத் தேடமுடியாமற் போனாலும் உருண்ட கோலிகளைக் குனிந்து குனிந்து கண்களை இடுக்கி இடுக்கிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியாமற் போனாலும் ஆட்டத்தை மாற்றி வேறு விளையாட்டில் முனைவார்கள். கடைசியாய் ஓடி வருவது தெரியாமல் முட்டி மோதி எதிரே வருபவனை பெயர் மாற்றிக் கூப்பிட்டு எல்லோரும் அதற்காக ஓவென்று சிரித்து அந்தச் சிரிப்புகளிலும் அயர்ச்சி வந்து அப்புறந்தான் அந்த மைதான வெளியில் ஆட்டபாட்டங்கள் முடியும்.

******
    இவன் எட்டாம் வகுப்பு படிக்கையில்தான் முதன் முறையாக மைதான வெளியிலிருந்து ஒதுங்கி மரத்தடியில் உட்கார்ந்தான். அன்று அவன் காலையில் பள்ளிக்கூடம் போய் இறைவணக்கம் முடிந்து வரிசையில் வந்து வகுப்பில் உட்கார்ந்தான். ஆங்கிலம்தான் முதல் பீரியட். ஆங்கில ஆசிரியர்தான் வகுப்பாசிரியர். வெள்ளை பேண்ட்டும் வெள்ளை சட்டையும் வெள்ளை மனசுமாய் மிகுந்த கவர்ச்சியோடிருப்பார். வகுப்பிற்குள் நுழையும்போதே ஒரு காகிதத்தைக் கொண்டு வந்தார். அவர் முகத்தில் கவலை நிறைந்திருந்தது. நாற்காலியில் உட்காரு முன்பே அதைப் பார்த்துப் படிக்க ஆரம்பித்தார். “ இன்னும் ஸ்கூல் பீஸ் கட்டாதவர்கள் வகுப்பை விட்டு வெளியேற வேண்டும். பீஸ் கட்டி ரசீது வாங்கிக்கொண்டுதான் உள்ளே வரவேண்டும். இந்த வகுப்பில் இன்னும் பீஸ் கட்டாதவர்கள் ராகவன், முத்து...” அடுத்தடுத்த பெயர்கள் அவன் காதில் விழவில்லை. ‘முத்து... முத்து... முத்து...’ என்றுதான் எல்லாமே இவன் காதில் விழுந்தன.

அம்மாதான் வீட்டிலிருப்பாள். அப்பா வேலைக்குப் போயிருப்பார். ஆதீன ஆபிஸ் நாற்காலியைத் தேய்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். பத்து நாளாய்ப் பன்னிப் பன்னிச் சொல்லியும் ‘இந்தா தாரேன், அந்தா தாரேன்’ என்று சொல்லிக்கொண்டே தினமும் ஓடிவிடுகிறார். அம்மாவோடு சண்டை போட்டுப் புண்ணியமில்லை. அஞ்சறைப் பெட்டியைத் தடவிப் பார்த்துவிட்டு மஞ்சள் சீரகம் இல்லையென்றாலும், சீசாவைப் பார்த்துவிட்டு எண்ணெய் இல்லையென்றாலும், தம்பி தங்கைகள் நேரங்கெட்ட நேரத்தில் ‘பசிக்கிறது’ என்றாலும் “என்னைக் கொண்டுக்கிட்டு சீக்கிரம் போயிரு ஈஸ்வரா” என்றுதான் குரலெடுப்பாள். அவளிடம் இப்போதுபோய் பீஸ் கட்டப் பணம் கேட்டால் அவள் மறுபடி ஒருமுறை “என்னைக் கொண்டுக்கிட்டு சீக்கிரம் போயிரு ஈஸ்வரா” என்று குரலெடுப்பதைத் தவிர பீஸ் கட்டச்சொல்லிக் கொடுக்க அவளிடம் எதுவும் இருக்காது. அலுவலகத்திற்குப்போய் அப்பாவைக் கேட்கலாமென்றால் எரிந்து விழுவதைத் தவிர அவரும் உடனடியாக எதையும் ஏற்பாடு செய்துவிட மாட்டார்.

    அவன் அன்றுதான் மைதான வெளியை மறந்துவிட்டு மரத்தடியில் உட்கார்ந்து மைதானத்தை வெறித்து நோக்கினான். ஆங்காங்கு சில மரத்தடிகளில் அந்த வெயில் நேரத்தில் ஒன்றிரண்டுபேர் உட்கார்ந்திருந்தார்கள். வேளை கெட்ட வேளைகளில் இப்படி வந்து உட்காருபவர்கள் உளைச்சல் தாளாமல்தான் வருகிறார்கள் என்பது அவனுக்கு அருவலாய்ப்பட்டது. வகுப்பில்பட்ட அவமானம் இவன் உடலை நடுக்கியது. இவனால் செய்யக்கூடியது அப்போதைக்கு வேறெதுவுமிருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. வகுப்பை விட்டு வெளியே வருகையில் மாணவர்கள் இரக்கத்தோடு பார்த்த பார்வைகள் இன்னும் இவன் உடல் முழுதும் ஈக்களாய், எறும்புகளாய் மொய்த்துக் கிடந்தன. உக்கிப்போய் உட்கார்ந்திருந்தான்.

    சாலைகளும் மைதான வெளியும் ஊர் முழுவதும் வெயிலின் உக்கிரத்தில் கொப்பளித்துக் கொண்டிருக்கையில் உடல் நடுங்கி இவன் உட்கார்ந்த இந்த மரத்தடி மட்டும் இளங்காற்றுச் சிலுசிலுப்பும் இதமான நிழலுமாய் குளுகுளுவென்றிருந்தது. நெடுநேரம் அப்படியே சிலையாயிருந்தான். இந்தச் சிலுசிலுப்பும் குளுமையும் இவனின் மனப்பாரத்தை லேசு லேசாய் கரைத்துவிட்டன. இவன் மரத்தடியிலிருந்து எழுந்தபோது குழப்பமும் நடுக்கமும் குறைந்திருந்தன.

    இதன்பின் மைதான வெளியில் இவன் குறைவாகவே விளையாடினான். ஒவ்வொன்றாய் இவனைத் தாக்கிய ஒவ்வொரு அடிக்கும் மரத்தடியே இவனுக்கு மருத்துவமனையானது. படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் சில வருஷங்கள் எல்லாப் பொழுதுகளிலும் இவன் இந்த மரத்தடிகலிலேயே ரணங்களோடு கிடந்து எழுந்தான். இவன் தகப்பனார் காலமானதும் பண்டார சந்நிதிகளின் காலில் விழுந்து ஆதினத்திலேயே ஆகக் குறைந்த சம்பளத்தில் நாற்காலி தேய்க்கும் வேலையை வாங்கினான்.

    கல்யாணமாகிப் பிள்ளைகள் வந்து கூடவே தம்பி தங்கைகள் என்று இவன் சுமை அதிகரித்து ஒரு பழைய செல்லரித்துப்போன கப்பலாய் மாறிப்போனான். மனைவி, பிள்ளைகள், தம்பி, தங்கைகள் எல்லோருடைய தேவைகளுக்காகவும் நடக்கும் போராட்டங்கள் இவனை எதிரியாக்கியே நடந்தன. அப்போதும் இவன் அந்தச் சிலுசிலுவென்றும் குளுகுளுவென்றுமிருந்த மரத்தடிகளிலேயே மருந்து வாங்கித் தேய்த்துவிட்டான்.

    இந்தத் தேவைகளுக்காகவும் வேறு எதற்காகவுமோ ஊரில் எப்போதும் ஊர்வலங்கள் கூட்டங்களெல்லாம் நடக்கின்றன. அடிதடி ரகளையெல்லாம் நடக்கின்றன. இவனுக்கு அதிலெல்லாம் நாட்டமில்லை. சின்னசின்ன இலைகள் கூடி இவனுக்காகவே அமைத்தது போன்ற அந்த மரப்பந்தலின் கீழ் இவன் தன் அவலங்களையும் துக்கங்களையும் மறைத்துக் கொண்டான். அக்கம் பக்கத்தில் சொல்வார்கள், “ முத்துக்கு இந்த மைதானத்திலே பாதியாவது பள்ளிக்கூடக்காரக குடுத்திரணும். அனுபவ பாத்தியதைனு வந்தா பள்ளிக்கூடப் புள்ளைகளை விட இவந்தான் ரொம்ப இதை அனுபவிச்சுட்டான்.”

    இவன் மனைவி மட்டும் உக்கிரமான சண்டைகளுக்குப் பின் ஒவ்வொரு சமயம் இப்படிச்சொல்வாள், “ஆச்சு, எல்லாஞ் சொல்லி நானும் நாக்கைப் புடுங்கிக்கிட்டு சாகுறாப்பலே கேட்டுப்பிட்டேன். என்னடா இப்படி ஒரு பொம்பளை கேட்டுப்புட்டாளேனு ரோசம் வந்து நாலு பேருகிட்டப்போயிப் பாத்தடிச்சு செய்வோம்னு நல்ல ஆம்பிளையினா தோணனும். இங்க அதெல்லாம் தோணாது. சண்டை ஆச்சுன்னா சாமியார் மாதிரி மரத்தடிக்கு ஓடிற்றது. இருட்டினதும் சம்சாரின்னு ஞாபகம் வந்து இந்தக் கூட்டுக்குள்ள வந்து மொடங்கிக்கிறது. இப்படி வெவஸ்தை கெட்டுப் போயித் திரியுறதுக்குப் பதிலா அந்த மரத்துங்கள்ள ஒண்ணுல தூக்குப்போட்டுத் தொங்கலாம்”. இப்படிக் கேட்டவுடன் இவனுக்குக் கை பரபரவென்று வரும். முகமும் கண்களும் நடுங்கிச் சிவந்து அவளை இழுத்து நாலு சாத்து சாத்திவிட்டு மரத்தடிக்குப் போய் வருவான்.

    அன்று இவன் அலுவலகத்திலிருந்து சீக்கிரமாகவே வந்துவிட்டான். கடைசிப் பையன் அழுதுகொண்டிருந்தான். அவனைச் சமாதானப்படுத்திக் கையில் பிடித்துக் கொண்டு பொழுது இருட்டும் வேளையில் அவன் மைதானத்திற்குள் நுழைந்தபோது கண்ட நிகழ்ச்சியில் அதிர்ந்துபோய் அப்படியே நின்றுவிட்டான். மைதானமெங்கும் நின்ற பதினைந்து இருபது மரங்களில் ஏழெட்டு வெட்டப்பட்டு சாலைவரை புரண்டு கிடந்தன. கர்ப்ப ஸ்தீரிகள் சாய்ந்து மல்லாக்க விழுந்து கிடப்பதுபோல் அவை கிடந்து இவனைப் பரிதவிக்க வைத்தன. கோடாரிகளோடும் ரம்பங்களோடும் ஏராளமான ஆட்கள் விழுந்துகிடந்த மரங்களைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். லாரிகளில் செங்கற்கள் வந்து மைதானத்தின் பல இடங்களில் இறக்கிக்கொண்டிருந்தனர்.

    இவனைப் போலவே அங்கே தினமும் வரும் பலரும் கவலை படிந்த கண்களோடு இவனுக்கு முன்னமேயே அங்கு வந்து நின்று மேலும் கவலையாகி நிற்பதைப் பார்த்தான். மாடு மேய்க்கும் சிறுசுகள் கந்தல்களோடும் பரட்டையோடும் கன்னங்களில் கையை வைத்து வேதனையோடு வேடிக்கை பார்த்தன. மெதுவாய்ப் போய் ஒருவரிடம் இவன் கேட்டான். “என்ன ஆச்சு? ஏன் இப்படித் திடீர்னு எல்லாத்தையும் வெட்டுறாக?” கொப்பும் கொலையுமாய்க் கிடந்த அந்தப் பச்சைப் பூதங்களைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி அவர் சொன்னார் “கனா மூனா இந்த இடத்தைப் பள்ளிக்கூடத்துக்காரக கிட்டேயிருந்து வாங்கிப்பிட்டாக. இதுக்குப் பதிலா பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்துலெ உள்ள அவரு காலி இடத்தைக் கொடுத்திட்டாராம். இதிலே சினிமாக் கொட்டகை கட்டப்போறாக. கதவு நெலைக்கெல்லாம் இந்த மரங்கதான்.”

    மைதானம் அலங்கோலமாகிவிட்டது. வெட்டுப்பட்ட மரங்களிலிருந்து வந்த பச்சைக் கவிச்சியும் மரவாசனையும் காற்று முழுதும் வியாபித்துக்கிடந்தது. இன்னும் வெட்டப்படாத மரங்களைச் சுற்றித் தூரைத் தோண்டுவதும் வெட்டுப்பட்ட மரங்களை ரம்பங்களால் அறுப்பதுவும் மும்முரமாய் நடந்துகொண்டிருந்தன. இரண்டு மூன்று பெட்ரோமாக்ஸ் விளக்குகள் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. பகிரங்கமாய் அங்குக் கொலைகள் நடந்து கொண்டிருப்பதாகவே இவனுக்குப்பட்டது. பாதம் முதல் தலை வரை உலுக்கியது. இவன் கவலைகளை இனி யார் வாங்குவார்கள்? மரங்கள் மழையை வருவிக்கும் என்று இவனுக்குத் தெரியும். இந்த மரக்கொலைகள் இவன் கண்களிலும் அப்படியே மழையை வரவைத்துவிட்டன. எல்லா அடிகளையும் வாங்கிகொண்டு இவன் உன்மத்தன்போல் இந்த மரத்தடிகளில் உட்கார்ந்திருந்தானே தவிர ஒரு நாளும் கண்ணீர் விட்டு அழுததில்லை. அன்றைக்கு முதன்முறையாகப் பொருமிப் பொருமி அழுதான். கைப்பிடியில் சிக்கி நின்ற குழந்தை ஒன்றும்புரியாமல் தகப்பனின் கேவலைக் கண்டு அதுவும் ஓவென்று மைதானமெங்கும் கேட்கும்படி அழுதது.

    இருட்டி வெகு நேரங்கழித்து வீட்டிற்கு வந்தான். உள்ளே நுழைந்ததும் மனைவி சொன்னாள், “இனி மேலாச்சும் ஊருலெ ஒவ்வொருத்தரும், நம்மளைப்போல எப்படிக் கஷ்டப்படுறாகன்னு நடந்து திரிஞ்சு பாருங்க”. 

    மறுநாள் பொழுது சாய்ந்த வேளையில் இவன் மைதான ஓரச்சாலை வழியாக ஊருக்குள் தன்னையொத்த ஜனங்களைத் தேடிப்பார்க்க முதன் முறையாய்க் கையை வீசி நடந்துகொண்டிருந்தான். மைதானத்தை ஒட்டிய ஓரங்களில் கண்டும் முண்டுமாய்த் துண்டுபட்ட மரங்கள் உயிரற்றுக்கிடந்தன. இவன் உயிரோடு அவைகளைத் தாண்டி தாண்டி நடந்தான்.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்