Nov 17, 2010

கடிதம்: கு.அழகிரிசாமி கி.ராஜ நாராயணனுக்கு எழுதியது.

கு.அழகிரிசாமியும், கி. ராஜநாராயணனும் பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள். குழந்தைப் பருவத்திலிருந்து ஒரு தெருவின் புழுதியில் ஒன்றாய்க் கட்டிப் புரண்டு விளையாடியவர்கள். பின்னால் அழகிரிசாமி வேலை கிடைத்து வெளியூர் போனபோது குறைந்தது நாள் ஒன்றுக்கு ஒரு கடிதமாவது எழுதுவது என்கிற பழக்கம் அவர்களைத் தொற்றிக்கொண்டது. ‘‘தூங்கி எழுந்ததும் காலைக் கடன்களை முடித்து, குளித்துவிட்டு பூஜைக்கு உட்காருவது போல், கடிதம் எழுத உட்காரும் பழக்கம் எங்களிடமிருந்தது’’ என்கிறார் ராஜநாராயணன். இவற்றில் கு. அழகிரிசாமியின் கடிதங்கள் தொகுக்கப்பட்டு 1987ஆம் ஆண்டு ‘அன்னம்’ வெளியீடாக வெளிவந்தது. அவற்றில் பல கிட்டத்தட்ட ஒரு காதலிக்கு எழுதப்பட்டதுபோல் இருக்கின்றன. கு. அழகிரிசாமிக்கும், கி. ராஜநாராயணனுக்கும் இசை மீதிருந்த கிறுக்கு ஊரறிந்த விஷயம். இளம்பிராயத்தில், ஒரு குருவிடம் முறையாக இசை கற்பது, சாகித்யங்கள், நாட்டிய பதங்கள் பண்ணுவது பின்னாளில் இசை அறிந்த பெண்ணையே மணம் முடிப்பது என்று மனக்கோட்டை கட்டியிருந்தார்கள் அவர்கள். பின்வரும் கடிதம் அதற்கு சிறந்த சாட்சி :
சென்னை
21_5_45
என் அன்புமிக்க ஆருயிர் நண்பன் ராஜநாராயணனுக்கு,
உன் 19_ம் தேதி கடிதம் கிடைத்தது.
நீ சங்கீதத்தை முறைப்படி படித்துவரும் விபரம் அறிந்தேன். அந்தத் தெய்வீகமான கலையில் ஒவ்வொருவனும் நல்ல பயிற்சி பெற்றிருக்கவேண்டும். தமிழனுக்குக் கிடைத்த ஒரு தனிச்செல்வம் கர்நாடக சங்கீதம். இதற்கு இணை உலகில் வேறு எந்த சங்கீதமும் இருக்குமா என்று abp.sized தெரியவில்லை. இந்தத் தனிப்பெரும் செல்வத்தை சம்பாதிக்காமல் இருந்தால் அது ..... அந்த துர்ப்பாக்கியத்தை என்னவென்று சொல்லுவது?
கோடை விடுமுறை கழிந்ததும் நானும் இங்கே இசையை முறைப்படி படிக்கத் தீர்மானித்திருக்கிறேன். நல்ல வசதி இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இரவும் பகலும் மனம் இசைப்பித்தில் ஊறிப் போயிருக்கிறது.
எந்தக் கலையை எடுத்துக் கொண்டாலும் உலகில் எல்லோரும் (பாஷை, தேசம் முதலிய வேறுபாடுகளால் பாதிக்கப் பெறாதபடி) ரசிக்கக் கூடியதாக இருக்கிறது. இத்தாலி தேசத்தான் ஒருவன் தீட்டிய சித்திரத்தைத் தமிழன் ரசிக்க முடியும். தமிழன் எழுதிய ஒரு காவியத்தை மொழிபெயர்த்தால் கூடிய மட்டும் அதை ஒரு ஆங்கிலேயன் அனுபவித்து விடுவான். இப்படி எந்தக் கலையை எடுத்துக் கொண்டாலும் அது உலகத்தாரின் ரசனைக்குப் பொதுவாகத்தான் இருக்கிறது. ஆனால், சங்கீதம் அப்படி இல்லை. நம்முடைய அருமையான தோடி, ஆனந்த பைரவி போன்ற ராகங்கள் அந்நிய நாட்டானுக்குப் பிடிப்பதில்லை. அந்நிய நாட்டான் இசை நம் காதில் விழுவதைவிட ரயில் எஞ்ஜின் சத்தம் நமக்கு சற்று எரிச்சல் கொடாமல் இருக்கும். சங்கீதம் தேசம்வாரியாக வேறுபட்ட அமைப்புகளில் அமைந்த ஒரு விசித்திரமான கலை. ஆனால் நம் விளாத்திகுளம் சுவாமியவர்கள் ஆங்கிலப் பண்களை நம் கர்நாடக ராகங்கள் சிலவற்றில் பொருத்திப் பாடினார்கள். சங்கீதத்தில் ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் உறவு தேடிக் கொடுத்த பெருமை நம் சுவாமியவர்களையே சேரும். அன்று முதல் ; இங்கு உயர்ந்த ஆங்கிலச் சங்கீதம் நிரம்பிய பல படங்களைப் பார்த்தேன். நம் உள்ளத்தை அமுக்கிப் பிடித்துக் கொண்டுதான் ரசிக்க வேண்டும். அவர்கள் ஆலாபனம் செய்யும் போது அதி துரிதமாக ரவைகள் புரளுகின்றன. அது ஒன்றேதான் அதிலுள்ள சிறப்பு.
இந்துஸ்தானி சங்கீதத்தில் குரலினிமையை நெளித்து நெளித்துக் காட்டுகிறார்கள். தேன்பாகுபோல் சாரீரம் இருந்தாலும் இசையைக் கேட்க முடிவதில்லை. ஆனால், நம் கர்நாடகராகம் ஒன்றை முரட்டுத் தொண்டையில் ஒருவன் பாடினாலும் அதில் என்ன ‘‘ஜீவு’’ இருக்கிறது, தெரியுமா?
‘‘ஆ’’... என்ற ஒரு ஓசையில் எத்தனையோ கோடிக் கணக்கான ஒலி அணுக்கள் இருக்கின்றன. மனிதனுடைய குரல் பேதங்களில் லக்ஷம் விதமான அணுக்களும் இருக்கின்றன. ஒலியின் ஏற்றமும் இறக்கமும் இஷ்டப்படியெல்லாம்தான் சஞ்சரிக்கின்றன. ஆனால், மனிதனுடைய குரலையே ஏழு பிரிவுகளுக்குள்ளே அடக்கி வைத்த நம் முன்னோர்களின் பெருமைதான் என்ன! ஏழே ஏழு ஸ்வரங்கள். ஒரு எழுத்தை மாற்றி மற்றொரு எழுத்தைப் போட்டு ஏதோ ஒரு வரிசைக் கிரமமான அமைப்பை உண்டாக்கி விட்டால் அதில் ஒரு தெய்வநாதம் கிளம்பி விடுகிறது. அந்த நாத இழையின் நெளிவு ராகமாக உருப்பெற்று மணிக் கணக்காக சஞ்சரிக்கிறது. அதற்கு ஆதியும் அந்தமுமே இல்லை. இவ்வளவுதான் என்று வரையறுக்க முடியாத ஒரு உருவில் ரீங்காரம் செய்கிறது ராகம். ஆனால், காலத்தின் எல்லைக்கோட்டுக்குள் அடங்கின மனிதன் எல்லையற்ற அகண்டத்தில் ஒரு பரிபூரணத்துவத்தைக் கண்டது போல ஒரு ராகத்தை முடிக்கிறான். இப்படி எத்தனை ஆயிரம் ராகங்கள்! சாதாரணமாக கூவும் ஒரு குரலை இத்தனை பகுதிகளில் ஒழுங்கு படுத்திய தமிழனுடைய இசை ஞானத்தை இனி உலகம் என்றாவது மறக்குமா?
கவிக்கு சிறப்புக் கொடுப்பதும் இசைதான். இசையில்லாத சொற்கள் மனித உணர்ச்சியைப் புலப்படுத்தாது. இசை சேரும்போதுதான் உணர்ச்சி வெளிப்படுகிறது. வசனத்தினால் ஒரு விஷயத்தைத் தெரிவிக்கலாம். ஆனால், அந்த விஷயத்தை மனசுக்குள்ளிருந்து தள்ளும் உணர்ச்சியை வசனத்தில் எப்படி எழுதுவது? அங்கே இசைதான் வந்து உதவ வேண்டியிருக்கிறது. அடுத்தவன் உணர்ச்சியை நம்மனசில் குடியேற்றுவது இசைதான். இசையில்லாத சொற்களல்ல ; அவை வெறும் எழுத்துக்கள்.
சீன தேசத்தில் கிறிஸ்து பிறக்க 500 வருஷத்துக்கு முன்னால் கன்பூஷியஸ் என்ற அறிஞர் இருந்தார். அவர் சொல்லுவதாவது :
‘‘நாம் வாயால் தெரிவிக்கும் விஷயத்தை நம் எழுத்துக்கள் பரிபூரணமாகத் தெரிவிக்காது. நாம் நினைக்கக் கூடிய விஷயங்களைப் பரிபூரணமாக நம் பேச்சிலே தெரிவித்து விட முடியாது’’.
இது எவ்வளவு உண்மையான விஷயம்!....
rajanarayanan_200 நம் ராகம் ஒன்றை எடுத்துக் கொள்ளுவோம். சில ஸ்வரங்கள் வரிசைக்கிரமமாக அமைந்துவிட்டன. அவற்றின் ஐக்கியத்தில், அவை ஒன்றோடொன்று கட்டித் தழுவியாடும் ‘‘அலகிலா விளையாட்’’டில் நெஞ்சை உருக்கும் தீங்கானம் பிறக்கிறது. அந்த இசையைக் கேட்டு இது நல்ல ஒலியா அழகான ஒலியா என்று தீர்மானிப்பது நம் மாமிச அவயவங்களல்ல. நமக்குள் ஒரு நல்ல ரசிகன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அவன் இசையின் ஸ்பரிசத்தில் தன்னை மறந்து கண்களை பரவசத்தில் மூடி அனுபவிக்கிறான். அவன் அருவருத்து விட்டால் அது கெட்ட இசை என்று முத்திரை வைத்துவிடலாம். நல்ல இசையில் அவன் பாம்பாகக் கட்டுண்டு சுருளுவான். இங்கே ஒரு அறிஞர் சொல்லுவதை நீ கவனிக்க வேண்டும் :
‘‘கெட்ட இசை மனிதனைத் தாக்கினால் அவனுள் ஒரு கெட்ட உணர்ச்சி பிறந்து அந்த இசையோடு சேர்ந்து கொள்ளுகிறது. கெட்ட உணர்ச்சி கிளம்பியதும் அந்த இசையை மோசமானது என்று நீக்கி விடலாம். இனியதாகிய ஒரு உயர்ந்த இசையைக் கேட்டால் ஒரு உயர்ந்த பண்பு உதயமாகி அது தன் குணங்களை மனிதன் கண்முன் பரப்புகிறது. உயர்ந்த இசை அப்பேற்பட்டது.’’
இப்படிப்பட்ட இசைக்கு உள்ள சக்தியை வரையறுக்க முடியாது. எல்லா நாட்டினரும் இதை ஒப்புக்கொள்ளுகின்றனர். இங்கேயும் கூட சில அந்நிய நாட்டறிஞர்களின் அபிப்பிராயங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். (உனக்கு அலுப்பாக இருக்குமோ என்னவோ!)
இன்பானுபவத்துக்கு கன்பூஷியஸ், கலைகளை நாடினாராம். அதிலும் இசையைப் பற்றி அவர் சொல்லுவதைப் பார் :
‘‘மனித சமுதாயத்துக்குப் பொருந்திய நற்குணங்களில்லாத மனிதனுக்குத்தான் சங்கீதம் பயன்படாமல் போகும்.’’
ஷேக்ஸ்பியரோ, ‘‘சங்கீதத்துக்கு உருகாதவன் சண்டாளன்’’ என்கிறார்.
சீனாவில் 2400 வருஷத்துக்குமுன் ‘‘லி_கி’’ என்ற ஒரு புத்தகம் இயற்றப்பட்டது. அதில் கீழ்வருமாறு காணப்படுகிறது :
‘‘ரிஷிகள் இசையில் இன்பத்தை அனுபவித்தார்கள். மனிதர்களை நல்வழிப்படுத்த அதுபயன்படும் என்று கண்டார்கள். மனிதனை இசை ஆட்கொண்டு, அவன் பழக்க வழக்கங்களை மாற்றி விடுவதால் பழையகாலத்து அரசர்கள் சங்கீதத்தின் மூலமாக பல சாஸ்திரங்களைப் போதிக்கச் செய்தார்கள்’’
இந்தியர்களாகிய நாமோ சங்கீதம், ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஒட்டச் செய்யும் சக்தி வாய்ந்தது என்று நம்புகிறோம்.
அதோடு வேத காலத்திலிருந்த ஒரு இந்தியதத்துவ ஞானி ‘‘எவனொருவன் வீணை வாசித்துக்கொண்டு இனிமையாகப் பாடுவானோ அவன் விடுதலைப் பாதையில் இலேசாக அடி எடுத்து வைத்து விடுகிறான்’’ என்கிறார். பார்க்கப்போனால் இந்தியர்கள் தான் இசையை தெய்வமாகப் போற்றியிருக்கிறார்கள்.
இவ்வளவு சீர்பெற்றுப் பெருகி நிறைந்த இசை வெள்ளத்தில் ஒரு துளியாவது நாம் அருந்த வேண்டாமா? இந்த அமுத ஓடை ஓடும்போது பார்த்துக் கொண்டே இருந்தால் நம் கலைப்பசி தீருமா? ஒவ்வொருவருமே அந்த அமுதவெள்ளத்தில் திளைத்து விட வேண்டும்.
எப்படியோ இசைக்கலையில் மனம் பற்றிப் படிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள். சந்தர்ப்பவசமாக முயற்சியில் இறங்கினோம் ; அதை வெற்றிகரமாக முடிப்பதில் தானே பெருமை!
அங்கே பக்கத்தில் இசையில் வரம்பற்ற மேதாவிலாசம் படைத்த பலர் இருக்கிறார்கள். விளாத்திகுளம் சுவாமியவர்களின் இசையைப்போல நம் எதிர்காலத்தில் கேட்கப்போகிறோமா? இது நல்ல சந்தர்ப்பம். விடாமுயற்சிதான் துணை செய்யும்.
இந்தக் கடிதத்தில் நான் எழுத நினைத்த விஷயங்கள் வேறு. ஆனால் சங்கீதம் வந்து இடத்தை அடைத்துக் கொண்டபின், அவற்றை எங்கே எழுதுவது? பின்னால் பார்க்கலாம். கடிதம் நீண்டதற்கு மன்னிக்கவும்.
உன்
கு. அழகிரிசாமி
flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

4 கருத்துகள்:

Unknown on November 17, 2010 at 6:45 PM said...

அற்புதம் மிக அறிய தகவல்கள்,இது தான் என் முதல் இனி அடிக்கடி வருகின்றேன்

Guru.Radhakrishnan on November 20, 2011 at 5:55 PM said...

Thirumigu Ki.Raa. amarar Ku.A.'s friendship was wellknown in the field of tamil sirukathaiulagam by all creaters whose age above seventy. The letters written berween them was already compiled and published.Those who are interested should have purchased such publications.

Nethra20 on June 15, 2014 at 6:06 PM said...

நட்பை ரசிப்பதா அது முன் வைக்கும் இன்னிசையை ரசிப்பதா !

saru.manivillan on March 27, 2017 at 4:58 PM said...

22 வயதில் இசையை பத்தி இவ்வளோ அழகா எழுதி இருப்பது ஆச்சரியமாய் இருக்கிறது . உண்மையிலே அவர்கள் இருவரும் பிறவி மேதைகள்தான் .

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்