Nov 12, 2010

விரித்த கூந்தல்-சுரேஷ்குமார இந்திரஜித்

இவ்வளவு பெண்கள் விரிந்த கூந்தலுடன் இருப்பது அவனுக்குத் திகிலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. பெண்கள் விரிந்த கூந்தலுடன் உட்கார்ந்திருந்தார்கள். நின்று கொண்டிருந்தார்கள். நடந்து கொண்டிருந்தார்கள். பலர் நனைந்த ஆடைகளுடன் இருந்தார்கள். அருவி, பிரம்மாண்டமான தோற்றத்துடன் இருந்தது. சுமார் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்கள் நீர்வீழ்ச்சியில், பாறையுடன் தேனடை போல அப்பியிருந்தனர். மிகவும் குறுகிய ஒரு நீர்வீழ்ச்சியில் (SURESHKUMARA INDRAJITHஒரு நபர் மட்டுமே நிற்கலாம்) வரிசையாய்ப் பெண்கள் நின்று தலையையும், உடலையும் நனைத்து வெளியேறிக் கொண்டிருந்தனர். நிற்கும் ஒவ்வொரு பெண்ணின் தலையிலும் நீர் விழுந்து முகத்திலும் உடலிலும்  வழித்து ஓடிக் கொண்டிருந்தது. விழும் நீரினூடே தெரியும் முகங்கள் தூய்மையடைந்து மின்னிக் கொண்டிருந்தன. அவனின் கண்ணெதிரே பிருஷ்டம் வரை மறைந்த நீண்டு விரிந்த கூந்தலுடன் ஒரு பெண் சென்று கொண்டிருந்தாள். இந்த இடத்திற்கு வந்ததிலிருந்து விரிந்த கூந்தல் ஏற்படுத்தும் தொந்தரவுகளை, அவன் தன் நண்பரிடம் அவருக்கு விளங்கியும், விளங்காத வகையிலும் கூறிக்கொண்டு தானிருக்கிறான்.

விரித்த கூந்தலுடன் நான்கு பெண்கள் தங்கள் ஆடவர்களுடன் அவனைக் கடந்து சென்றனர். சாலையோரத்தில் குஷ்டரோகி ஒருவன், காசு விழுந்த தகர டப்பாவை ஆட்டி ஓசையை ஏற்படுத்திக் கொண்டிருந்தான். பாறையில் அமர்ந்திருந்த ஒரு குரங்கு எதையோ நக்கிக் கொண்டிருந்தது. அவன், தன் நண்பரிடம் விரித்த கூந்தல் ஒரு குறியீடு போலத் தன்னைத் துரத்திக் கொண்டிருப்பதாகக் கூறினான். ''எல்லாம் நீங்கள் பாவித்துக் கொள்வதுதான்'' என்று நண்பர் கூறினார். ''விரிந்த கூந்தல் கோபத்தையும், பிடிவாதத்தையும் காட்டுகிறது'' என்றான் அவன். இருவரும் நடந்து ஒரு அடர்த்தியான மரநிழலின் கீழ் இருந்த பாறையில் அமர்ந்தனர்.

நண்பர், அவனிடம் அவளை தற்போது அடிக்கடி சந்தித்ததுண்டா என்று கேட்டார். சந்தர்ப்பம் கிடைப்பதில்லை என்றும் அபூர்வமாக சந்தர்ப்பம் கிடைப்பதாகவும் அவன் பதில் கூறினான். அவளின் மண வாழ்க்கையைப் பற்றி உங்களுக்குத் தெரியாது, அது மிகவும் கடினமானது, இந்தப் பாறையைப் போல் தன்னுடைய பிடிவாதத்தால் அவள் தன் மண வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொண்டாள். ''அவளின் பிடிவாதம் அவளின் கணவனைச் சில எல்லைகளுக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. பிடிவாதம் எற்படுத்தும் சினம் அவளிடமிருந்து பல வகைகளில் வெளிப்பட்டு அவரின் பிடிவாதம் மேலும் உறுதியாகிறது என்றே தோன்றுகிறது'' என்றான். தொடர்ந்து இருவரும் மெளனமாய் அமர்ந்திருந்தனர்.

அவளின் கைவிரல்களும், கால்களும், கழுத்தும், முகத்தின் பக்கவாட்டுத் தோற்றமும் மிகவும் அழகானவை. அவள் மெலிந்திருந்ததைக் கண்டு, அதை அவன் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினான். அந்தச் சந்தர்ப்பத்தின் தொடர்ச்சியான ஒரு நிகழ்வில்தான் அவள் முதன்முதலாக மணவாழ்க்கை பற்றி அறிவதாக கூறியிருந்தாள். அன்று இரவில், இன்றுதான் தனக்கு முதன்முதலாக மணமானதாகக் கூறினாள். அவளுக்கும் அவளின் கணவனுக்கும் இடையே உள்ள தாம்பத்ய உறவு அவளின் பிடிவாதத்தினால் இவ்விதமாகவே இருந்தது.

நண்பர் 'விரித்த கூந்தல் உங்களைத் துரத்துவதாக நினைப்பது ஏன்?'' என்று கேட்டார். அவன் ஒன்றும் கூறவில்லை. நண்பருக்கு அவ்வப்போது அவன் கூறும் விஷயங்களிலிருந்து ஏதோ ஒரு வகையில் கோர்வைப்படுத்த முடிந்தாலும் பல விஷயங்கள் புரிபடாமல் யூக வெளியில் தன்னை வந்து அழைத்துச் செல்வதாக தோன்றியது.

மலைமேல் இருக்கும் ஒரு அருவியைக் காண எண்ணி இருவரும் எழுந்து நடந்தனர். சிகரெட் பற்ற வைத்துக் கொண்டனர். சாலைக்குச் சென்று அங்கிருந்து பிரியும் மலைப் பாதையில் செல்ல வேண்டும். ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது பாழடைந்த ஒரு தேரின் அருகே தரையில் அலங்கோலமான ஆடைகளுடன் இளவயதுப்பெண் அமர்ந்திருந்தாள். தலையில் கலர் காகிதங்களை பூப் போலச் சொருகியிருந்தாள். அவனுக்கு தன் மனதில் அவள் உருவம் ஓர் இடம்பிடிக்க முயல்வதாகத் தோன்றியது. இவன் உதற, உதற அவள் உருவம் தடுமாற்றமின்றி சகஜமாக நுழைவதாகத் தோன்றியது. நண்பர் அந்தப் பெண்ணை கவனித்திருந்தாரா என்பதும், அவனுக்குத் தெரியவில்லை. அவரிடம் விசாரித்தால் அப்போதுதான் அவர் கவனத்துக்கே வருவதாக இருக்குமோ என்று தோன்றியதால் அவன் மெளனமாகவே நடந்து வந்தான்.
மலைப் பாதையின் இருபுறமும் உயரமான மரங்கள் வினோதமான வடிவங்களில் இருந்தன. சம தளமற்ற பிரதேசங்களில் இஷ்டத்திற்கு அழகாக வளர்ந்திருந்தன.மரங்களினூடே ஒரு பெண் மறைந்திருந்து தோன்றினால் நன்றாக இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. மற்ற ஆண்களின் வாழ்க்கையும் இவ்விதமாகவே இருக்குமோ என்ற சம்சமயமும் அவனுக்குத் தோன்றியது. பின்னோக்கிப் பார்க்கையில் இரண்டு பெண்கள் வலை விரித்துத் தான் சிக்கிக் கொண்டதை நினைவு கூர்ந்தான். அவள்கூட ஒரு தடவை ''நீங்கள் என்னிடம் சிக்கிவிட்டீர்கள்'' என்ற தன்னிச்சையாக கூறியிருந்தாள். ஆனால் தற்போதுள்ள மனோரீதியான உறவு இதையெல்லாம் பொருட்படுத்த இயலாத வகையில் மிகவும் சீரியசாக வளர்ந்துவிட்டது. பால்ய காலத்தின் தன் மனம் தன்னிச்சையாக நாடிய ஒரு பெண்ணுக்கும், தனக்கும் ஸ்தூலமாய் உறவு ஏதும் நிகழவில்லை என்பதை அவன் இப்போது நினைத்துக் கொண்டான். அப்பெண்ணிடம் தன் மனம் கொண்டிருந்த உறவு களங்கமற்றது என்று தோன்றிய அதே நேரத்தில், தான் அப்போது ஒரு அப்பாவி என்றும் தோன்றியது. மரங்களினூடே அப்பெண்ணின் முகம் தெரியுமானால் சந்தோஷமாக இருக்குமென்று அவன் நினைத்துக் கொண்டான். இந்த எண்ணம் தோன்றியவுடன் தேர் அருகில் பார்த்த பெண்ணின் முகம் மரங்களினூடே தோன்றி மறைந்தது.

எதிரே வந்த ஒரு குடும்பத்தினர் அவர்களைக் கடக்க சென்றபோது 'டி.வி. மகாபாரதம்' என்ற வார்த்தைகள் அவன் காதில் விழுந்தன. ''இது டி.வியில் மகாபாரதம் திரையிடும் நேரமா?'' என்று நண்பரிடம் கேடடான். நண்பர் வாட்சைப் பார்த்துவிட்டு ''ஆமாம்'' என்றார். அதைத் தொடர்ந்து சிந்தனையில் திடீரென்று அவனுக்கு ஒன்று தோன்றியது. அது அவனுக்குப் புதிதாகவும் இந்த இடத்தில் வந்ததிலிருந்து இதுவரை தோன்றாத விஷயமாகவும் தோன்றியது. எப்படி தனக்குத் தோன்றாமல் போனது என்று ஆச்சரியம் அடைந்தான். விரித்த கூந்தல் தொந்தரவு தருவதற்கான காரணம் விளங்கிவிட்டது போலவும் தோன்றியது. திரெளபதியின் விரித்த கூந்தல் நினைவுக்கு வந்ததே, அவன் தெளிவுக்கு காரணம். ஓர் ஆஸ்திரேலியருக்கோ, ஓர் அமெரிக்கருக்கோ விரிந்த கூந்தல் இவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தாது என்று அவனுக்குத் தோன்றியது. இந்திய மரபின் பின்னணியில் தன்னையறியாது நம் மனதில் விரிந்த கூந்தல் தொந்தரவு ஏற்படுத்தியது போலும் என்று அவன் நினத்துக் கொண்டான்.

தற்போது தன் மனம் லேசாகிவிட்டது போல் அவனுக்குத் தோன்றியது. உற்சாகத்துடன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு நடந்தான். அவனும் நண்பரும் ஏதேதோ அளவளாவிக் கொண்டு அருவியை அடைந்தனர். சுற்றிலும் உயரமான மரங்கள் அமைந்திருந்த ஒரு பெரிய பாறையின் தலையிலிருந்து நீர் விழுந்து பாறைகளினூடே ஓடையாக ஓடிக் கொண்டிருந்தது. ஆண்களும் பெண்களுமாக மூன்று நான்கு குடும்பத்தினர் குளித்துக் கொண்டிருந்தார்கள். பெண்களின் விரிந்த கூந்தலை சாதாரணமாகப் பார்த்துக் கொண்ருந்தான். நண்பர் குளித்து முடித்து ஆடையணிந்த சற்று நேரத்தில் பசி எடுக்கவே இருவரும் கீழே இறங்க ஆரம்பித்தனர்.

வழியில் சென்று கொண்டிருந்த இரண்டு விரிந்த கூந்தலை இருவரும் கடந்து சென்றனர். மலைப் பாதை முடிந்து சாலையை அடைந்தனர். சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, தேருக்கு எதிர்ப்புறம் உள்ள திருமண மண்டபத்திலிருந்து நாதஸ்வர இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அவன் தேர்ப் பக்கம் பார்வையைச் செலுத்தினான். தேரின் அருகில் ஏற்கனவே இருந்த இடத்தில் அந்தப் பெண்ணைக் காணோம். நன்றாகப் பார்த்த போது பெரிய சக்கரங்களுக்கு இடையே தேரின் அடியில் அந்தப் பெண் காய்ந்த மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு, ஒரு காலை மடித்து, மறுகாலை குத்துக் காலிட்டு மணமகள் போல் அமர்ந்திருந்ததைக் கண்டான். சாலையில் தென்பட்ட பெண்களின் விரிந்த கூந்தல் அவனுக்கு இப்போது பயத்தை ஏற்படுத்தியது.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

2 கருத்துகள்:

Jegadeesh Kumar on August 7, 2011 at 10:23 AM said...

அருமையான கதை. அற்புதமான விவரிப்பு. பகிர்வுக்கு நன்றி.

Unknown on June 27, 2022 at 7:07 PM said...

சுரேஷ்குமார இந்திரஜித் எனக்கு விருப்பமான சிறுகதைகள்.அவரது சிறுகதைகளின் மொத்தத்தொகுப்பு வெளிவந்துள்ளதா என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.அவ்வாறு எனில் விபரங்கள் தேவை.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்