Nov 19, 2010

இழப்பு - ந. முத்துசாமி

ந. முத்துசாமி :நாடகத்திற்குப் போன எழுத்துக்காரர்.

மிகக் குறைந்த அளவே எழுதியிருக்கும் போதிலும் தமிழ் நவீன இலக்கியத்தில், குறிப்பாக சிறுகதையில் ந. முத்துசாமியின் இடம், மௌனியைப் போல், தவிர்க்க இயலாதது. ஒரு வகையில் ந. முத்துசாமியை மௌனியின் பள்ளியைச் சேர்ந்தவர் என்றும் சொல்லலாம். முத்துசாமியின் முதல் சிறுகதை சி.சு. செல்லப்பாவின் `எழுத்து' வில் வெளிவந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை கொண்ட `நீர்மை' சிறுகதைத் தொகுப்பை 1984ஆம் ஆண்டு க்ரியா பதிப்பகம் கொண்டு வந்தது. ஆmuthuswamyனால் அப்பொழுதே முத்துசாமியின் கவனம் நாடகங்கள் பக்கம் திரும்பியிருந்தது. நாடகத்தின் பக்கம் திரும்பியதும் முத்துசாமி சிறுகதை எழுதுவது குறைந்து கொண்டே வந்து பின்பு நின்றுவிட்டது. ஆனால் சிறுகதையைப் போலவே நாடகத்திலும் முத்துசாமியின் இ டம் ஸ்திரமானது. `நாற்காலிக்காரர்,' `அப்பாவும் பிள்ளையும்,' `சுவரொட்டிகள்' ஆகியவை முத்துசாமியின் முக்கியமான நாடகங்கள்.    ஆரம்பத்தில் `சிம்ஸன்' டிராக்டர் கம்பெனியில் சிறிதுகாலம் பணியாற்றிய பின், அமெரிக்காவின் `போர்ட் பவுன்டேசன்' உதவியுடன் `கூத்துப்பட்டறை' என்ற நவீன நாடகத்திற்கான அமைப்பை முத்துசாமி உருவாக்கினார். கூத்துப்பட்டறை இதுவரை தமிழ் நாடகங்களுடன் முக்கியமான மொழிபெயர்ப்பு நாடகங்களையும் அரங்கேற்றியிருக்கிறது. தமிழின் தொன்மைக் கலையான கூத்தை நாடகத்துடன் இணைத்தது மற்றும் பரவலாக அறியச் செய்ததில் முத்துசாமிக்கு பெரும் பங்குண்டு. முத்துசாமியின் பாவைக்கூத்தைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு ஒன்று அன்னம் வெளியீடாக வெளி வந்திருக்கிறது.

   ந. முத்துசாமி தஞ்சாவூருக்கு பக்கத்தில் புஞ்சை என்னும் கிராமத்தில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இங்கு தரப்பட்டிருக்கும் `இழப்பு' சிறுகதை பலமுறை பலராலும் சிறந்த சிறுகதையாக மீண்டும் மீண்டும் முன்னிறுத்தப்பட்டச் சிறுகதை.

தன் நண்பர்களைக் கொல்ல வேண்டுமென்று அவனுக்குத் தோன்றிவிட்டது. ஏன் அப்படித் தோன்றிற்று என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஒருநாள் மாலை பைகிராஃப்ட்ஸ் ரோட்டில் தன் நண்பர்களோடு போய்க்கொண்டிருந்தபோது திடீரென்று இப்படித் தோன்றிற்று. 13-ஆம் நம்பர் பஸ் தன்னைக் கடந்து போனபோது நண்பர்களை ஒவ்வொருவராக சக்கரத்தில் தள்ளிக் கொன்றுவிட வேண்டுமென்று தோன்றிற்று. புருவத்தை உயர்த்தி ஏன் என கேட்டுக்கொண்டான். நினைப்பை மனதில் அழுத்தி அழித்துவிட வேண்டுமென்று கண்ணை இறுக மூடிக்கொண்டான். சின்னப்பையனாகக் கிராமத்தில் கும்பியில் கால் வைத்து அழுத்தும் தோற்றமும், காற்று வெளிப்படும் சப்தமும், காற்றுக் கொப்புளங்ளும் தோன்றின. முழங்கால் வரையில் சகதி. அழுந்திய காலை எடுக்க, அடுத்த காலை வைத்து இழுக்க, வைத்த கால் அழுந்துகிறது. அழுந்திய கால் மேல் வருகிறது. உதவ வந்த கால் இன்னும் கீழே போகிறது. ஒன்றுக்கு ஒன்று உதவியாக மேலும் கீழுமாக மாறிமாறிப் போய்வருகின்றன. கொல்லை வைக்கோல் போருக்குப் பின்னால் பறைச்சி சாணி மிதிக்கும் தோற்றம் தெரிகிறது. அவள் காலை மாற்றி மாற்றிக் குதித்து வரட்டிக்குச் சாணி மிதிக்கிறாள். பாட்டி சொன்ன கதையில் பேய் மிதித்ததைப்போல் மிதிக்கிறாள். இவன் சகதியில் புதைந்த காலை இழுக்க விரைவாக முயல்கிறான். கால்கள் விசை பெறுகின்றன. நின்ற இடத்தில் கேலிக் கூத்தாக ஒரு மிஷினின் இரண்டு பிஸ்டன்களாகக் கால்கள் இயங்குவதாகத் தோன்றுகிறது. குத்திட இயங்கியவைக் கிடையில் இயங்கி ரயில் எஞ்சினின் சக்கரத்தை இயக்கும் பிஸ்டனாக தோற்றம் கிடைக்கிறது. சக்கரங்கள் `சிக்சிக்'கென்று நின்ற இடத்தில் வேகமாக இயங்கிவிட்டு உருளத் தொடங்குகின்றன. ஓடும் சக்கரத்தில் ஒரு நண்பன் விழுந்து இறக்கிறான். தலையும் முண்டமுமாக தண்டவாளத்திற்கு அந்தண்டையும் இந்தண்டையும் இரு துண்டுகளாக அவன் உடல் விழுந்து துடிக்கிறது. இவன் கடைவாய்ப் பற்களை அழுந்தக் கடித்துக்கொண்டான். பல் கடிபடுவதை கன்னத்தைத் தடவிப் பார்த்துக்கொண்டான். தோல் போர்த்தின எலும்புத் தாடையாக பார்ப்பவருக்குத் தோன்றுமென்று வெட்கப்பட்டான். ஒரு விநாடி கண் மூடலிலும் பல் கடித்தலிலும் நினைவு மறைந்ததை உணர்ந்தான். முன்பு சாணி மிதித்தலில் நினைவு மறைந்ததை உணர்ந்தான். ஆடும் அரிவாள்மனையில் ஒரு தென்னை மரத்திற்கு அடியில் அமர்ந்து வைக்கோல் கூளத்தைப் பிடிப்பிடியாக நறுக்கிச் சாணியில் போட்டு மிதிக்க அவை மறைவதுபோல் மறைந்தன என நினைத்துக்கொண்டான். சாணி மிதித்தல் எனவும்; கும்பி, பேய், குதித்தல், குத்திட்ட பிஸ்டன்கள், கிடைநிலை பிஸ்டன்கள், ரயில் சக்கரம், நண்பன் இறத்தல் எனவும் தொடர்ந்தன.

   மறைந்ததென்று எண்ணவும் மீண்டும் அந்த நினைப்பு பிடித்துக்கொண்டுவிடுவதைக் கண்டு கொண்டான். இப்படி ஒவ்வொரு விஷயமாக நினைப்பை விரட்டி வீடு போய்ச் சேருகிறவரையில் அதிகபட்சம் அந்த நினைப்பைக் குறைக்க விரும்பினான். உடனே பேய்க்கதை அதற்கு வசதியாக இருக்கும் என்று தோன்றிற்று. ஒரு கதையில், பேய் நடுஜாமத்தில் கிருஷ்ணசாமி அய்யரை மிளகாய்க் கொல்லைக்கு தண்ணீர் இறைக்கக் கூப்பிட்டது. ஏற்றம் பிடித்து இறைத்துக் கொண்டிருந்தவர் அண்ணாந்து மேலே பார்க்க நிலவில் ஏற்ற மரத்தில் ஓடிக்கொண்டிருந்தவனுக்குக் கால்கள் இல்லாததைக் கண்டு தன்னைப் பேய் ஏமாற்றிவிட்டதென உணர்ந்து அதைத் தான் ஏமாற்றிவிட எண்ணினார் கிருஷ்ணசாமி அய்யர். ``டேய் ரங்கசாமி, அடுத்த பாத்திக்கி மடையைக் கோலிட்டு வரேண்டா, கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கோ,'' என்றார். ``சரிடா கிச்சாமி'' என்றது பேய். கிருஷ்ணசாமி அய்யர் அதுதான் சமயமென்று மண்வெட்டியை எடுத்துக்கொண்டு கடைசிப் பாத்திக்குப் போனார். மடையைக் கோலினார். மண்வெட்டியைக் குத்திட நிறுத்தினார். தலை முண்டாசைக் கழற்றி மண்வெட்டிக் காம்பில் தலையைப் போல் நிறுத்தினார். குனிந்து மிளகாய்ப் புதர் மறைவில் ஒண்டிக் கொண்டே போய், தணிவாக இருந்த இடத்தில் வேலியைத் தாண்டி வரப்போடு ஓடி வீட்டுக்குப் போய் வாயிற்கதவைத் தடதடவென்று தட்டினார். மனைவி யாரென்று கேட்டுத் தெரிந்து கொண்டு திறக்க நேரமாயிற்று. இவருக்குக் கோபம் வந்துவிட்டது. ``நான்தான்'' என்று கோபத்தோடு கதவு உடைந்துவிடும் போலத் தட்டினார். அவள் கதவைத் திறந்தாள். இவனுக்கு அவர் மனைவி கதவைத் திறந்தாள் என்றவுடன் தான் அவர் முண்டக்கட்டையாக வரப்புகளைக் கடந்து ஓடினார் என்பது நினைவுக்கு வந்தது. கதையில் அவர் முண்டாசை மண்வெட்டிக் காம்பில் மாட்டிய உடனேயே இடுப்பு வேட்டியையும் அவிழ்த்துப் போட்டுவிட்டார். கோமணம் கட்டும் பழக்கம் அவருக்கு இல்லை போலிருக்கிறது எனச் சிரித்துக்கொண்டான். அவர் பெண்டாட்டி விழுந்து விழுந்து சிரித்தாளாம். மறுநாள் ஊரே சிரித்ததாம். இத்தனைக்கும் அவர் வேட்டி கட்டிக்கொண்டிருந்த கதையைத்தான் சொல்லியிருக்கிறார். அவர் மனைவிதான் முண்டக்கட்டைக் கதையைத்தான் சொல்லியிருக்கிறார். அவர் மனைவிதான் முண்டக்கட்டைக் கதையை ஊரில் பரப்பியது. அடுத்தாத்துக்காரி, பக்கத்தாத்துக்காரி என்று ஒவ்வொருவருக்காகக் கதையைச் சொல்லிவிட்டாள். அவர்கள் சிரித்துவிட்டு தங்கள் ஆத்துக்காரர்களுக்கும் சொல்லிச் சிரித்திருக்கிறார்கள். அவர்களோ உடனே கிருஷ்ணசாமி அய்யரின் வேட்டியை அவிழ்த்துப் பார்த்துக் கதையை ரசித்துச் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இவன் சிரித்தான். ``என்ன நீயா சிரிச்சுக்கறே'' என்றான் பக்கத்தில் வந்து கொண்டிருந்த நண்பன். ``ஒன்றுமில்லே'' என்று சொல்லிவிட்டான் இவன். கதையில் கிருஷ்ணசாமி அய்யர் கறுப்பு. நிலவில் ஓட அவர் கறுப்பாக ஓடுவது பேய்க்குத் தெரிந்திருக்கும் என்று அவர் ஓடினபோது நிலவை மேகம் மறைத்திருக்க வேண்டுமென்று திருத்திக் கொண்டான். பேய்களுக்குக் கால்கள் இல்லை. இன்னொரு கதையிலும் கால்கள் இல்லாததைக் கொண்டுதான் அதை பேய் எனத் தெரிந்து கொண்டாள் அலமேலு. இவளை நடுஜாமத்தில் சாணி தட்டக் கூப்பிட்டது பெண் பேய். விடியற்காலையென்று சாணி தட்டப் போனாள் அவள். பேய் சாணி மிதித்தது. இவள் தட்டத் தட்ட அது மிதித்துக்கொண்டேயிருந்தது. அது மிதிக்கும் வேகத்தில் இவளால் தட்டி முடிக்க முடியவில்லை. அலமேலுவுக்குச் சந்தேகம் வந்து நிமிர்ந்து பார்த்தாள். பேய். கால்கள் இல்லை. கால்கள் இல்லாமலே அந்தப் பேய் சாணி மிதித்திருக்கிறது. அலமேலுவுக்கு குலையை நடுக்கும் பயம். எப்படி தப்பித்துக் கொள்வது? அவள் எப்படி தப்பித்துக்கொண்டாள் என்ற கதையும் இவனுக்கு மறந்துவிட்டது. ``இதோ தண்ணி கொண்டு வந்துடறேன்'' என்று குடத்தைத் தூக்கிக் கொண்டு உள்ளே போய்க் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டிருப்பாள் என நினைத்துக்கொண்டான். `பேய் பேய்' என கத்த ஆரம்பித்திருப்பாள். அல்லது பயத்தில் கத்த முடியாமல் ஊமையாகியிருப்பாள். உடனே அவளுக்கு ஜுரம். இரண்டு நாள் கடுமையான ஜுரத்தில் கிடந்தாள். மூன்றாம் நாள் இறந்துவிட்டாள். இறப்பு இவன் நினைவுக்கு வந்துவிட்டது. ஒரு நண்பனை பேயின் கையில் பிடித்துக் கொடுக்கவேண்டுமென நினைத்துக் கொண்டான். தன்னையும் சேர்த்துக்கொண்டால் என எண்ணிச் சிரித்தான். ``என்ன நீயா சிரிச்சுக்கறே'' என்றான் பக்கத்தில் வந்துகொண்டிருந்த நண்பன். ``ஒன்றுமில்லே'' என்று சொல்லிவிட்டான் இவன். பிறகு, ``பேய்களைக்கொண்டே ஒரு நாட்டை முன்னேற்றிவிட முடியும்'' என்று சொன்னான். ``ஆமாம், பேய்கள்தான் நம் நாட்டை முன்னேற்றிக் கொண்டிருக்கின்றன.'' ஒரு நண்பன் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள். இவனுக்கு வெட்கமாகப் போயிற்று. திடீரென்று பேய்கள் சிரித்தார்கள். இவனுக்கு வெட்கமாகப் போயிற்று. திடீரென்று பேய்கள் உண்மையெனத் தோன்ற ஆரம்பித்தது. தன் பாட்டி பேய்களை நேரே பார்த்ததாகச் சொல்லி இருக்கிறாள். கதைகளானாலும் கிருஷ்ணசாமி அய்யரும் அலமேலுவும் புஞ்சையில் வாழ்ந்தவர்கள். இவனே ஒருமுறை பேயைப் பார்த்திருக்கிறான். சின்னப் பையனாக இருந்தபோது ஒரு பேய் புளியமரத்தடியில் வெளிக்குப் போய்க்கொண்டிருந்தபோது பார்த்திருக்கிறான். நண்பர்களோடு பார்த்தான். கல்லைவிட்டு எறிந்தார்கள். கல் உருவத்தை ஊடுருவிக்கொண்டு போயிற்று. அது பேய்தான் என்று பிறகு தீர்மானித்துக்கொண்டார்கள். கால்கள் இல்லாமல் அது எப்படி குந்திக்கொண்டு வெளிக்குப் போயிற்று என்பதை இப்பொழுது நினைத்துப் பார்க்க முடியவில்லை. பேய்க்கதைகளைத் தொடர்ந்துக் கொண்டு போவது இவனுக்குப் பிடிக்கவில்லை. அதைப்பற்றி இனிமேல் தன்னால் பேசாமல் இருக்கமுடியாது எனத் தோன்றிற்று. உண்மை, என்றும் சிரிப்புக் கிடமானதுதான் என நினைத்தான். பிறகு, கடைப் பெயர்ப்பலகைகளில் எரியும் நியான் எழுத்துகளைத் திரும்பிப் பார்த்தான். சிவப்புநிற எழுத்துகள் ரயிலில் அடிபட்டு இறந்தவனின் ரத்தத்தை நினைவுக்குக் கொண்டுவந்தன. தலையை உதறிக்கொண்டான். மீண்டும் பழைய நினைப்பு. இப்படி மறக்க, நினைக்க, மறக்க, நினைக்கவென்று நினைவு ஓடிக்கொண்டிருந்தது. மறக்க, நினைக்க, மறக்க, நினைக்க என்பதை தொட்டுவிட்டு என்று காட்சியாகக் கண்டான். உடனே தன் மனைவியின் ஊரான மாயூரத்தில் மாயூரநாதசாமி கோயிலில் சாமி புறப்பாட்டின்போது ``ஜிஞ்சா ஜிஞ்சா''வென்று தொட்டுவிட்டுத் தொட்டுவிட்டு, - வாயில் துணியைப் பிடித்துக்கொண்டு கன்னத்தை உப்பிக்கொண்டு ஊதும் ஒத்துக்காரனுக்குப் பின்னால் - பையன் ஜாலரா போடுகிற தோற்றம் வந்தது. ஒத்துக்காரனின் சோகமான தோற்றம் இவனுக்கு மரணத்தை நினைவூட்டியது. கல்யாணங்களில் ஒத்துக்காரனையே பார்த்துக்கொண்டிருக்கும் தன் பழக்கத்தையும் நினைத்துக்கொண்டான். அந்த மணமக்களுக்காகவே இந்த ஒத்துக்காரன் சோகமாக இருக்கிறான் என்று நினைத்துக்கொள்வான். தம்பதிகள் ஒருநாள் இறக்கப்போகிறார்கள் என்று, ஒருவர் முந்தி இறக்க, இன்னொருவருக்கு சோகம் வரப்போகிறதென்று, அவன் முந்திக்கொண்டு இறக்கப்போவதால் அவள் விதவையாகப் போகிறாள் என்று இவன் இப்பொழுதே நினைத்து சோகமாக இருக்கிறான் என்று நினைப்பான். கடைசியில் இறப்பைப்பற்றியே சிந்தித்துக்கொண்டு வீடு போய்ச் சேர்ந்தான். நண்பர்களை எங்கு என்ன சொல்லிப் பிரிந்து வந்தோம் என்பதே அவனுக்கு மறந்துவிட்டது.

   சாப்பிட்டுவிட்டு சாய்வு நாற்காலியில் வந்து சாய்கிறவரையில் நினைப்பு வேறுவிதமாக வேலை செய்தது. பரிமாறிய மனைவியையும் பக்கத்தில் உட்கார்ந்து சோற்றைப் பிசைந்து கொண்டிருந்த ஒரே குழந்தையையும் நண்பர்களின் பக்கம் பிடித்துத் தள்ளுவதாக நினைப்பு வந்தது. முழு உருவத்தில் அவர்கள் அருகில் இருந்தும் பிடித்துத் தள்ளும்போது வெறும் சாயலாக அவர்கள் தோன்றினார்கள். அந்த நிழலுக்கு மூக்கும் வழியும் கொடுத்து நிஜமாகக் கற்பிக்க வேண்டுமென்று முயன்றான். அது அவனால் முடியவில்லை. அதற்காகப் பலமுறை மீண்டும் மீண்டும் பழைய இடத்திலிருந்து அவர்களைத் தள்ளவேண்டியிருந்தது. குழந்தை அறியாத்தனமாகவும், மனைவி மிரண்டு கெஞ்சும் பாவனையிலும் அவனைப் பார்த்தார்கள். மீண்டும் மீண்டும் பிடித்துத் தள்ள, குழந்தை அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டது. பலமுறை இப்படித் தன்னைத் தள்ள அது விரும்பியதாகத் தோன்றிற்று. எனக்கு வேண்டாம் இந்தப் பூசணிக்காய் விளையாட்டாக அது ஆகிவிட்டது. தான் தள்ளப்பட வேண்டுமென்று ஒவ்வொரு முறையும் அது தோளைச் சாய்த்துக்கொண்டு இவன் பக்கம் வந்தது. அதையே இவன் தள்ளிக்கொண்டிருந்தான். சாப்பிட்டு முடிக்கிறவரையில் குழந்தையை மட்டுமே அழுகப் பூசணிக்காயாகத் தள்ளிக்கொண்டிருந்துவிட்டு எழுந்து வந்தான். எதிர்பாராத் தள்ளலிலும் விழாமல் தன்னைச் சமாளித்துக்கொண்ட சாய்ந்த தோற்றத்தோடே இவன் மனைவி நின்றுகொண்டிருந்தாள். மிரட்சியும் கெஞ்சும் பாவமும் நிலைத்துவிட்டிருந்தன.

   ஏன் இப்படித் திடீரென்று தோன்ற ஆரம்பித்தது என்று நினைத்துக்கொண்டே வந்து, சாய்வு நாற்காலியில் படுத்துக்கொண்டான்.

   ``அப்பா'' என்று குழந்தை இவனை நோக்கி ஓடிவந்தது. நாற்காலியில் இருந்து நிமிர்ந்து எட்டி குழந்தை தன்னிடம் வருவதைக் கையை நீட்டி முன் கையால் தடுத்தான். குழந்தையின் கால்கள் தரையில் பாவுகின்றனவா என்று பார்த்தான். தரையில் கால்கள் பதியப்பதிய நின்றது குழந்தை.

   ``குட்டிப் பேய்க்குக் கால்கள் தரையில் பாயும்'' என்று உரக்கவே சொன்னான்.

   ``பாவம் கொழந்தையைப் போய் ஏன் இப்படிப் பேய் இங்கறேள்'' என்றாள் மனைவி அடுப்பங்கரையில் இருந்த படியே ``நீ பெண் பேய்'' என்றான் இவன்.

   ``அப்போ, நீங்க ஆண்பேய்'' என்று சிரித்தாள் அவள். ``என் நண்பன் இன்று பேயாகிவிட்டான். ரயிலில் அறைபட்டுப் பேயாகத் திரிகிறான்'' என்று சொன்னான்.

   ``யார்? யார்? ரயில்லே அறைபட்டுச் செத்தது'' என்றாள் அவள்.

   இவன் பதில் சொல்லவில்லை. எழுந்துபோய் ஜன்னல் கதவுகளைச் சாத்திவிட்டு வந்து உட்கார்ந்தான். ஜன்னலைத் தாண்டி பேய் உள்ளே வராது என்பது அவனுக்குத் தெரியும்.

   ஜன்னலைத் தாண்டி அதன் தோற்றம் பார்வைக்கு வராது என்பது என்ன நிச்சயம்? பாட்டி அப்படிச் சொன்னதில்லை. ``குழந்தை எழுந்து நடக்க எத்தனை நாள் ஆகிறது. முதலில் கால்கள் தரையில் பாவாமல்தான் குழந்தை தள்ளாடுகிறது. பிறகுதான் தரையில் கால்கள் பாவும்படி நடக்கக் கற்றுக்கொள்கிறது. பேய்களுக்கு இது நேர்மாறுதல். குழந்தைப் பேய்கள் தரையில் கால்கள் பாவப்பாவ நடந்து தள்ளாடுகின்றன. பிறகுதான் கால்கள் பாவாமல் நடக்கப் பழகிக்கொள்கின்றன'' என்று சொன்னான். ``போதும் போதும் கொழந்தை பயந்துக்கப் போறது. விளையாட்டு ரொம்ப நன்னாருக்கு. கொழந்தையை யாரானும் பேய்ன்னு சொல்வாளோ?'' என்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு போக அவள் வந்தாள். ``ஜன்னலை ஏன் இப்படிச் சாத்தி வைச்சிருக்கேள்'' என்றாள். ``பேய்க்காக' என்றான். ``பேய்க்காகவா? என்ன பேசறேள்'' என்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு நின்றாள். ``பேயாலே உள்ளே வர முடியாவிட்டாலும் அதனால் ஜன்னலுக்குப் பின்னால் வந்து நிக்க முடியும்'' என்றான். ``என்ன குடிச்சுகிடிச்சுட்டு வந்தேளா?'' என்றாள். ``போடி, உன்னை அப்பவே பிடிச்சுத் தள்ளாமே விட்டது என் தப்பு'' என்றான். ``என்ன என்ன பேசறேள். மூளை கீளை பிரண்டு போச்சா என்னா?'' என்று அவள் மிரண்டு நின்றாள். அவன் கடகடவென்று சிரிக்க ஆரம்பித்துவிட்டான். ``நல்ல வேடிக்கை வேண்டிக்கெடக்கு, சாப்பிட்டாச்சு. பாயேப் போட்டுண்டு படுத்துத் தூங்குங்கோ'' என்று சொல்லிவிட்டு அவள் போய்விட்டாள். இவன் பாயை விரித்துப் படுத்தான். காலையில் எழுந்ததும் கொஞ்சம் தெளிவாக இருந்தது. இவனைத் தேடிக்கொண்டு நண்பர்களில் ஒருவன் வந்தான். வந்தவுடனேயே, ``எனக்குப் பாவம் புண்ணியத்தில் நம்பிக்கை போய்விட்டது'' என்றான் இவன். ``எனக்கும்தான்'' என்றான் நண்பன்.

   ``மனிதாபிமானத்தின் மேல்கூட'' என்றான் இவன்.

   நண்பன் பதில் சொல்லவில்லை. ``பாவ சிந்தனைகள் மனதில் புகாமல் தடுத்துக் கொண்டிருந்த கடவுள் என்ற வாயில்காப்போனை அண்டை வீடுகளுக்கு அனுப்பிவைத்து விட்டேன்.'' நண்பன் சிரித்துவிட்டு ``எதற்காக?'' என்று மீண்டும் சிரித்தான். ``எனக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை'' என்று சொன்னான்.

   ``உன்னைப் போன்றவர்கள் எப்படியெல்லாம் சட்டத்தை மீறுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக.'' நண்பன் வாய்விட்டுச் சிரித்தான்.

   ``கருணையில்லாமல் உன்னை என்னால் கொன்றுவிட முடியும்'' என்று சொன்னான் இவன்.

   ``அதற்காகப் பிறகு நீ வருந்துவாய்.''

   ``என்னால் துணிச்சலாகத் தற்கொலையும் செய்துகொள்ள முடியும்.''

   ``அதான் மனிதாபிமானமே இல்லாதவன் என்றாயே.''

   ``உன்னுடையதில் இருந்து என் மனிதாபிமானம் வேறுபட்டது.''

   ``சகமனிதனிடம் அன்பு காட்டுவது என் மனிதாபிமானம்.''

   ``உதவாக்கரை மனிதர்களை எனக்குப் பிடிப்பதில்லை.''

   ``இதேவிதமாக உன்னைப்பற்றியும் என்னால் நினைக்க முடியும்.''

   ``இப்பொழுது எனக்குப் பேயிடம் மட்டும்தான் நம்பிக்கை இருக்கிறது.''

   நண்பன் சிரித்தான்.

   ``நரசிம்மன் பேயாகச் சுற்றிக்கொண்டிருக்கிறான்.''

   ``அவன் இயல்பே அதுதானே. `லோலோ'வென்று நாயாகச் சுற்றிக்கொண்டிருப்பான்.''

   நண்பன் எழுந்து வீட்டுக்குக் கிளம்பினான். வழக்கமாக வாயில்வரையில் கொண்டுவிடப் போகிறவன், இன்று போகவில்லை. திறந்திருந்த ஜன்னல் கதவுகளைச் சாத்தினான். திடுதிடுவென்று ஓடி வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கும் நண்பனை பஸ் சக்கரத்தில் தள்ளிக் கொன்றுவிட வேண்டும் போலிருந்தது. சட்டையை மாட்டிக்கொண்டு வெளியில் புறப்பட்டான்.

   ``ஆபீஸுக்கு கிளம்பப் போறதில்லையா?'' என்றாள் மனைவி. ``இதோ வந்துடறேன்'' என்று கிளம்பிப் போனான். சற்று நேரத்திற்கெல்லாம் திரும்பிவிட்டான். ``பாலகிருஷ்ணன் பஸ் சக்கரத்தில் அறைபட்டுச் செத்துவிட்டான்'' என்று சொல்லிக்கொண்டே போய் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டான்.

   ``எப்படி, எப்படி? ஐயோ கடவுளே! நேத்திக்கி ஒன்னு இன்னிக்கு ஒன்னா? எப்படி எப்படி'' என்று இவன் அருகில் வந்து நின்றாள் அவள். அவன் பதில் சொல்லவில்லை. கண்ணை மூடிக்கொண்டு சாய்வு நாற்காலியில் படுத்துவிட்டான். அவளும் பதிலை எதிர்பார்க்காமல் திரும்பிவிட்டாள். நண்பர்களை இழந்த துயரத்தில் பதில் சொல்லும் நிலையில் அவன் இருக்கமாட்டான் என்று நினைத்துக் கொண்டு கேள்விகளால் அவனுக்குத் தொல்லை கொடுக்க விரும்பாமல் திரும்பிவிட்டாள். ஆபீஸுக்குக் கிளம்ப வேண்டிய நேரம் கடந்தும் அவன் நாற்காலியில் படுத்துக்கொண்டிருந்தான். இந்நிலையில் அவனால் ஆபீஸுக்கும் போக முடியாது என்றே அவள் நினைத்தாள். சற்று நேரத்திற்கெல்லாம் அவனை ``சாப்பிட வறேளா?'' என்று கூப்பிட்டுக்கொண்டு வந்தாள்.

   ``போடி பேயே'' என்றான் கண்ணை மூடிக்கொண்டே. அவள் உள்ளே போய்விட்டாள். பிறகு குழந்தை ``அப்பா'' என்று கூப்பிட்டுக்கொண்டு வந்தது. ``குட்டிப் பேயே போ'' என்றான். அவள் உள்ளிருந்தபடியே ``அப்பாவுக்கு மனசு சரியில்லேடி கண்ணு வந்துடு இப்படி'' என்றாள். சற்றுக் கழித்து அவனே சாப்பிடுவதற்குப் போனான். பேசாமல் சாப்பிட்டு விட்டு வந்து மீண்டும் நாற்காலியில் படுத்துக்கொண்டான். இதுவரையில் பஸ்ஸிலோ ரயிலிலோ அறைபட்டுச் செத்தவர்களை அவன் பார்த்ததில்லை. புஞ்சை கசாப்புக் கடையில் ஒரு சட்டிக்குமேல் கழுத்தை வைத்து ஆடு அறுப்பதைப் பார்த்திருக்கிறான். திருச்சம் பள்ளியில் இருந்து வந்து ஒரு சாயபு கசாப்புக்கடை வைத்திருந்தான். கறி விற்று முதல் ஆனதும் கடையைக் கட்டிக்கொண்டே திருச்சம்பள்ளி போய்விடுவான் அவன். வாரத்திற்கு மூன்று நாட்கள் கடை. உள்ளூர் கீழப்பாளையம் இடப்பிள்ளையின் ஆட்டுக்கிடையில் இருந்து அவனுக்கு ஆடுகள் போகும். நாளுக்கு ஒருவர் என்று முறை போட்டுத் தலையை வாங்கிக் கொண்டு போவார்கள். தலையை காதைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு போவார்கள். இமைக்காத விழிகளோடு ஆட்டுத்தலை பார்த்துக்கொண்டு போகும். ரயிலில் அடிபட்டுச் செத்தவனின் தலையையும் இப்படித்தான் தூக்கிக்கொண்டு போகவேண்டியிருக்கும். மனிதத் தலையை கேவலமாகக் காதைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு போக முடியாது. மயிரைப் பிடித்துத்தான் தூக்கிக்கொண்டு போகவேண்டியிருக்கும். அல்லது பனங்காயைப் போல, உள்ளங்கையிலும் ஏந்திக் கொண்டு போகலாம். சாணத்தை ஏந்திக்கொண்டு போவதைப்போல, மனிதத்தலையை ஏந்திக்கொண்டு போவதா என்று நினைக்கும் மனிதாபிமானி காளியைப்போல தலைமயிரைப் பிடித்துத்தான் தூக்கிக்கொண்டு போவான். சற்று நேரத்தில்தான் கடவுளாகிவிட்டதாகவும் அவன் நினைத்துக்கொண்டு போகலாம்.

   சாயபு மிருகாபிமானம் இல்லாதவன். பெரிய மண் அகலுக்கு மேல் உள்ள கழுத்தை சாவகாசமாக அறுப்பான் அவன். ஆட்டை விடியற்காலையில் கடைக்காலில் கட்டிவைத்து தின்னத் தழை போட்டு வைத்திருப்பான். கத்தியை, உதவிஆள் வருகிறவரையில் தீட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பான். ஆட்டின் கால்களை ஒருவன் பிடித்துக்கொள்ள வேண்டும். முழங்கால்களை முதுகுப்புறமாக ஆட்டு உடலில் மண்டியிட்டுக் காலைச் சேர்த்துப் பிடித்துக்கொள்ள வேண்டும். ஒருவன் வாயைக் கெட்டியாக அமுக்கிப் பிடித்துக்கொள்ள வேண்டும். இவன் கூர் பார்த்துவிட்டு கழுத்தில் கத்தியை வைப்பான் ரத்தத்திற்கு விலையுண்டு தரையில். சிந்தாமல் அதைச் சட்டியில் எந்த வேண்டும். சாவதானமாக அறுத்தால்தான் முடியும். ஆடு முணகும். கத்தி தொண்டைக்கு வந்ததும் முணகல் தொண்டையில் வழிந்துவிடும் போலிருக்கிறது. அதன் முணகல் அப்போது ரத்தத்தில் கலந்திருக்கும் என்று தோன்றிற்று. கசாப்புக்கடை பள்ளிக்கூடம் போகும் குறுக்குவழி; அங்கும் பேய் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டார்கள். பகலிலேயே அவன் அவ்வழியாகப் போய் இருந்ததால் பேயை அவனால் பார்க்க முடியவில்லை. எப்போதும் மனிதர்கள் அங்கு குந்தி பீடி குடித்துக் கொண்டிருந்ததை மட்டுமே அவனால் பார்க்க முடிந்தது. அவர்களுக்குக் கால்கள் இருந்தனவா என்ற சந்தேகம் இப்பொழுது திடீரென்று தோன்றிற்று. ஆட்டுக் கழுத்தில் உணவு போகும் வழியைப் பார்த்ததில்லை. நரசிம்மன் கழுத்தும் அப்படித்தான் இருந்திருக்கும். இனி தேவையில்லை என்பதால் அது அடைபட்டுப் போகிறது போலிருக்கிறது. தேவையில்லாதவைகளை ஒழித்துக்கட்ட வேண்டியதுதான். எழும்பூர் ரயில் நிலையத்தில் ஒருநாள் ஒருவன் பின்புறமாக ரயிலில் ஏறி, கிளம்பிய சக்கரத்தில் மாட்டிக்கொண்டான். ரயில் நின்றுவிட்டது. ஒருகால் கணுக்காலில் அரைபட்டது. அவனைத் தூக்கிக்கொண்டு வந்து பிளாட்பாரத்தில் போட்டார்கள்.

   இதுவரையில் கிட்டிப்புள்ளுக்குக் கிளைவெட்டுவதைப் போலத்தான் கால்கள் ரயிலில் துண்டிக்கப்படுகின்றன என்று நினைத்துக் கொண்டிருந்தான். அப்படியில்லை, இவன் கால் நசுங்கித்தான் இருந்தது. பாதம் முழுதாக இருந்தது. அப்படியொன்றும் அவன் துடித்துவிடவில்லை. அப்பா அப்பா என்றோ, அம்மா அம்மா என்றோ சொன்னான். நிமிர்ந்து காலைப் பார்த்துக்கொண்டான். காலைப் பார்க்கத்தான் அப்பாவையும் அம்மாவையும் கூப்பிட்டான் போலிருந்தது. கால் போச்சே கால் போச்சே என்றுதான் அழுதான். கால் போனதற்காக அழுதானே தவிர வலிக்காக அழுததாகத் தெரியவில்லை. ஒரு புழுவை ஈர்க்குச்சியால் தொட்டால் எவ்வளவு உயரம் துள்ளிக் குதிக்கிறது. அதைப்போல எவ்வளவு பெரியவன் மனிதன். இவன் எவ்வளவு துள்ளிக் குதித்திருக்கவேண்டும். சாதாரணமாகத்தான் படுத்திருந்தான். வலி தாங்கிக்கொள்ளக் கூடியதுதான் என்று தோன்றிற்று. வயிற்றுவலிக்காகப் புஞ்சையில் தூக்குப் போட்டுக்கொண்டவர்கள் எல்லோரும் வேறு காரணங்களுக்காகத்தான் தூக்கிட்டுக் கொண்டிருக்க வேண்டும். குறுக்குக் காவிரிச்சாலை மரங்கள் அத்தனையிலும் யாராவது ஒருவன் தொங்கி இருக்கிறான். தற்கொலை மிகச் சுலபமானது என்று தோன்றிற்று. மவுண்ட்ரோட்டில் ஒரு இரவு ஒருவன் டாக்ஸியில் மோதிக் கீழே விழுந்தான். தலையில் இருந்து சிறிதுதான் ரத்தம் கசிந்திருந்தது: உயிர் இருந்தது. நினைவு இல்லை. வலிக்காக முணகவில்லை. அவன் கழுத்தில் அந்த டாக்ஸி ஏறி அவன் செத்திருந்தால் அவனுக்குத் தெரிந்திருக்காவா போகிறது. அவ்வளவு எளிதானது தற்கொலை. யோசித்துப் பார்க்காது தாவத் தெரிந்திருக்க வேண்டும். அவ்வளவுதான். வெகு நாட்களுக்கு முன்பு பஸ்ஸில் தலை அறைபட்டு எல்லாப் பற்களும் தெரிய இளித்துக்கொண்டு சாலை ஓரத்தில் கிடந்த நாய் ஒன்று இப்பொழுது சிரித்தது. அதன் குடல் ஆசனவாய் வழியாய்ப் பிதுங்கிக் கயிறுபோல் அதைச் சுற்றிலும் கிடந்தது. வயிற்றில் இருக்க வேண்டிய குடல் வெளியில் இருந்ததற்காக அது சிரித்துக் கொண்டிருந்தது போலத் தோன்றிற்று. அன்று முழுவதும் அவன் மனைவியோடோ குழந்தையோடோ பேசவில்லை; தேவையானபோது சாப்பிட்டான். கொண்டுவந்த காப்பியைக் குடித்தான். மற்ற நேரத்தில் சாய்வு நாற்காலியிலேயே கண்ணை மூடிக்கொண்டு கிடந்தான். மறுநாள் காலையில் மனைவி தழையத் தழையப் புடவையைக் கட்டிக்கொண்டு பேயைப் போல காப்பியை எடுத்துக்கொண்டு வந்தபோது அவளைப் புடவையைத் தூக்கச் சொன்னான். ``சீச்சி அசிங்கம்'' என்று அவள் உள்ளே போய்விட்டாள். ``நீ பேய்'' என்று கத்தினான். குளிக்காமலேயே சாப்பிட்டுவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு ஆபீஸுக்குப் போனான். அவனுக்கு முன்னால் காரில் போனவர்களின் தலை பின் கண்ணாடி வழியாய்த் தெரிந்தது. தன்னைக் கடந்துபோன பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டிருந்தவர்களை மார்பு அளவுதான் பார்க்க முடிந்தது. டிரைவரின் தலையும், தோளும், கைகளும் மட்டுமே தெரிந்தன. குறுக்குக் கம்பியில் தொங்கியவர்களில் கையைப் பிடித்துக்கொண்டு தொங்கினார்கள் சிலர். அவர்கள் எல்லோருமே கால்கள் இல்லாத பேய்கள் என்று தோன்றிற்று. நடந்து போனவர்கள் அத்தனை பேரையும் பார்த்துக்கொண்டே போனான். எல்லோரும் செருப்புப் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பாதம் மண்ணில் படவில்லை; ஆகவே அவர்களும் பேய்களே என்று நினைத்துக்கொண்டே போனான். `ஷு' போட்டுக்கொண்டவர்கள் கணுக்கால் அளவு இல்லாத பேய்கள். சைக்கிளில் போனவர்கள் அந்தரத்தில் உட்காரும் நடுத்தரப் பேய்கள். செருப்பு இல்லாமல் ரிக்ஷா இழுத்துக்கொண்டுபோன ஒருவன் மட்டும் மனிதன் என்று ஒரு விநாடி தோன்றினான். பிறகு, அவன் மாட்டைப்போல வண்டி இழுத்ததால், மனிதனாக இருக்க முடியாது, இரண்டு கால்களில் நடக்கத் தெரிந்த மிருகமாக இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டே ஆபீஸ் போய்ச் சேர்ந்தான். ஆபீஸுக்குப் போகும்போது நேரமாகிவிட்டது. ``ஏன்?'' என்று கேட்டார்கள். ``வரும் வழியில் என் நண்பன் ராமநாதன் பஸ்ஸில் மாட்டி அரைபட்டுச் செத்துவிட்டான். அதைப் பார்த்துவிட்டு வருகிறேன். நாயின் குடல் வெளியில் கிடந்ததுபோல அவன் குடல் பிதுங்கிக் கிடந்தது. நாய் சிரித்ததுபோல அவன் இளித்துக்கொண்டு கிடந்தான். எழும்பூர் ரயிலில் மாட்டிக்கொண்டவனின் காலைப்போல் அவன் கழுத்து நசுங்கி இருந்தது'' என்று சொன்னான். ``ஐயோ பாவம். லேட்டானா பரவாயில்லை. சீட்டுக்குப் போ'' என்றார்கள் அனைவரும். ``நீங்கள் எல்லோரும் பேய்கள்'' என்று சைக்கிளில் ஏறிக்கொண்டு திரும்பி விட்டான். ``ஆபீஸுக்கு வரப்போறதில்லை என்று சொல்லத்தான் வந்திருக்கான் போலிருக்கிறது. நண்பன் இறந்ததில் கலங்கிப்போய் இருக்கிறான்'' என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள். இவன் வீட்டுக்குப் போனதும் ஆபீஸில் இருந்து திரும்பிவிட்டதைக் கண்டு மனைவி ``ஏன் ஆபீஸுக்குப் போகலியா?'' என்றாள். ``சென்னையில் அத்தனை பேரும் பேய்கள்'' என்று சொல்லிக் கொண்டே போய் சாய்வு நாற்காலியில் படுத்துக்கொண்டான். ``ஏன்? உங்களுக்கு உடம்பென்ன செய்யறது? உயிருக்கு உயிரா பழகினேள்தான். அதுக்காக செத்துட்டா நாமுமா கூட செத்துட முடியும்? மனசெ தேத்திக்கோங்கோ'' என்று கனிவோடு அவன் அருகில் வந்தாள். ``போடி பேயே'' என்றான். அவள் விலகிக்கொண்டாள். பயம் வந்துவிட்டது. ``ஒங்களுக்குப் பைத்தியம் புடுச்சிடுத்தா என்ன?'' என்றாள். ``புடவையைத் தூக்கு'' என்றான் இவன். ``சீச்சி... அசிங்கம் என்ன பேசறேள்'' என்று சிரித்து கொண்டே அவள் உள்ளே போய்விட்டாள் ``நான் தான் பூமியில் பாவும் மனிதன் என்றான் இவன் அவள் உள்ளே இருந்தபடியே ``படுத்துண்டு தூங்குங்கோ. மனசு தெளியும். நாளைக்கு ஆபீஸுக்குப் போயி ஒரு மாசம் லீவு போட்டுட்டு வாங்கோ. ஒரு மாசம் ஊருக்குப் போய் இருக்கலாம். எல்லாம் மறந்துடும்'' என்றாள். இவன் நாற்காலியிலேயே படுத்துக் கொண்டிருந்தான். குழந்தை படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தது. காலைப் புடவையால் போர்த்தியிருந்தாள் அவள். போய்ப் புடவையைத் தூக்கிப் பார்த்தான். கால்கள் இருந்தன. தூங்கும்போது கால்கள் இருந்தால் போதாது. நடக்கும்போதுதானே பாதம் பூமியில் பாவுகிறதா இல்லையா என்று பார்க்க வேண்டும் என்று மீண்டும் போய் நாற்காலியில் படுத்துக்கொண்டான். பிறகு ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகமாய்ப் போயிற்று. பயமாக இருந்தது. உலகத்தில் தான் மட்டும் தனியாக இருப்பது போலத் தோன்றிற்று. எங்கும் பேய்க் கூட்டம் உலவிக் கொண்டிருப்பதாகத் தோன்றிற்று: பேய்களுக்கு இடையில் தான் மட்டும் மனிதனாக இருப்பதாகத் தோன்றிற்று. பேய்கள் மனித உருக்கொண்டு தரையில் பாதம் படாமல் தோன்றினால் மனிதன் பேயாகப் பதுங்குவதே மேல் என நினைத்தான். சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியில் புறப்பட்டான். பைகிராஃப்ட்ஸ் ரோட்டில் பஸ்கள் வந்து போய்க்கொண்டிருந்தன. தூரத்தில் 13-ஆம் நம்பர் பஸ் வெகு வேகமாக ஒரு பேயால் ஓட்டிக்கொண்டு வரப்பட்டது. அருகில் வந்ததும் அதன்முன் பாய்ந்தான். அவன் மேல் ஏறி இறங்கி சற்றுத் தூரத்தில் போய் நின்றது பஸ்.

நன்றி: தீராநதி

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

யாத்ரா on November 19, 2010 at 8:43 PM said...

கோபிகிருஷ்ணன் அவர்களின் உள்ளேயிருந்து சில குரல்கள் படித்து திரும்பத்திரும்ப படித்து அப்படியான மனச்சிதைவுகளைக் குறித்து நிறைய யோசித்திருக்கிறேன், என்னை மிகவும் பாதித்த புத்தகம் அது.
முத்துசாமி அவர்களின் இந்தக்கதையை வாசித்த போதும் அதே பாதிப்பு, இக்கதைக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்கிறது மனம்
பகிர்வுக்கு மிக்க நன்றி

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்