Jul 19, 2009

பிச்சமூர்த்தியின் படைப்புலகம்-சுந்தர ராமசாமி

 

(1991ஆம் ஆண்டு வானதி பதிப்பகம் வெளியிட்ட ‘ந. பிச்சமூர்த்தியின் கலை _ மரபும் மனித நேயமும்’ புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கட்டுரை.)

பிச்சமூர்த்தியின் படைப்புலகத்தின் பொதுக் குணங்களைப் பற்றி முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவருடைய இயல்புகள் பற்றி நாம் தெரிந்து வைத்துக் கொள்வது அவருடைய படைப்புகளை உணர நமக்கு உதவியாக இருக்கும். அவர் வெளிப் படையானவர் என்பதாலும், சிக்கலற்றவர் என்பதாலும் அவருடைய ஆளுமையைப் புரிந்து கொள்வது சுலபம். மேலும் மிக ஆத்மார்த்தமான கலைஞரான இவருக்கும் இவரது படைப்புகளுக்கும் இடையே இடைவெளி இல்லை. தன்னிடம் இல்லாத ஒரு குணத்தை வெளிப்படுத்தி அதற்குரிய மதிப்பை பிறரிடமிருந்து பெற முயலும் கெட்டிக்காரத்தனம் இவரது படைப் புகளில் ஒரு வரியில் கூட இல்லை. சரியோ தவறோ, உயர்வோ தாழ்வோ, தன்னம்பிக்கை-களை, தன் பார்வை களை தன் ஆசாபாசங்களை முழுமையாகத் தன் படைப்புகள் மூலம் வெளிப்படுத்திக் கொண்டவர் அவர்.

  பிச்சமூர்த்தி தென்னிந்தியாவில் கலைகளின் உன்னத வெளிப்பாடுகள் கொண்ட மண்ணில் பிறந்தவர். அவரு டைய தகப்பனார் ஹரிகதை, நாடகம், ஆயுர்வேதம், சாகித்யம், தாந்திரீகம் ஆகிய துறைகளில் வல்லவராக இருந்தார் என்பது தெரிகிறது. கலை, கல்வி, சமயம், தொண்டு ஆகியவற்றின் பாதிப்பிலிருந்து கிடைக்கும் ஒரு உன்னத மனநிலைக்கும் கலாச்சாரத்-திற்கும் பிச்சமூர்த்தி வாரிசாக வந்திருக்கிறார். வாழ்க்கையின் மேலான குறிக்கோளில் கவனம் கொண்ட குடும்பத்தின் வாரிசு. லோகாயுதப் போட்டி-யில் முண்டி அடிப்பதில் இருந்து முற்றாக விலகி, அறிவு, கலை, பண்பாடு ஆகியவற்றின் மேன்மைகளைத் தேர்வு செய்த குடும்பத்தின் வாரிசு. ஒரு படைப்பாளியாகவும் இந்தக் குடும்பத்தின் வாரிசாகவும் பிச்சமூர்த்தி இருக்கிறார் என்பதை, அவருடைய ஆக்கங்கள் அனைத்துமே உறுதிப்படுத்துகின்றன.

  பிச்சமூர்த்தியின் படைப்புலகம் பொதுவாகப் பண்பட்டவர்களின் செல்வாக்கு மிகுந்தது. தார்மீக நெறிகளில் அக்கறை; ஒழுக்கங்களைப் பேணுவதில் கவலை; தன்னைச் சுற்றி வாழ்ந்திருப்பவர்கள் மீதும், ஜீவராசிகள் மீதும், இயற்கை மீதும் நேசம்; மரபு வகுத்திருக்கும் நெறிகளைப் பேண முடியாமல் போகும் போது ஆழ்ந்த மன நெருக்கடி; பிறருடைய துன்பங்கண்டு நெகிழும் மன இயல்பு ஆகிய குணங்கள் கொண்ட கதை மாந்தர்கள்தான் படைப்பாளியின் பார்-வைக்கு உவப்பானவர்கள். பொதுவாக இவர்களுடைய உன்னதங்களை நிலை நாட்டவே எதிர்மறை கொண்ட வேறு கதாபாத்திரங்கள் இவர்களைச் சுற்றிச் சூழ்ந்து வருகிறார்கள். படைப்பில் பிச்சமூர்த்தியின் பக்கம் மிகத் தெளிவானது. அதில் ஒளிவு, மறைவு எதுவும் இல்லை. தர்மத்தையோ, ஒழுக்க நெறிகளையோ அழுத்துவது அல்லது அழுத்தும்போது உளவியலை மறந்து போவது கலை வெற்றிக்கு இட்டுச் செல்லாமல் இருக்கலாம். ஆனால், தர்மத்தையும் ஒழுக்கத்தையும் அழுத்துவது-தான் படைப்பாளியின் கடன் என்று அவர் நினைக்கிறார். பிச்சமூர்த்தி கூறுகிறார்: “புலன் இன்பம் அல்லது கிளர்ச்சி என்ற குறுகிய எல்லைக்குள்ளேயே பெரும்பான்மையான கதைகள் சுழல்கின்றன. நல்லது பொல்லாதது என்ற பாகுபாட்டை சில கதைகள் பொய்யாக்கி விடுகின்றன. பிரத்ஷயமான அறிவியலுக்-கும் சமூக இயலுக்கும் மெய்யுணர்வுக்கும் முரண்பட்ட சிருஷ்டிகளால் கலை உலகில் சாதிக்கக்கூடியது என்ன என்பதை சிருஷ்டி கர்த்தர்கள் சிந்தனை செய்து பார்க்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் இலக்கிய தர்மத்தை மறக்கலாகாது.” (‘எழுத்துப் பேட்டி’, ‘_எழுத்து’ செப்டம்பர் 1960)

  மனிதனுக்கும் அவன் மேற்கொள்ளும் வேலைக்கு-மான உறவும் மனிதனுக்கும் அவன் ஈட்ட வேண்டிய பணத்திற்குமான உறவும் பிச்சமூர்த்திக்கு மிகுந்த மனநெருடல்களைத் தந்து கொண்டிருக்கின்றன. அவர் பார்வையில் வேலை என்பது பணி. மனிதன் அவனுடைய ருசிகள் சார்ந்தும், ஆளுமை சார்ந்தும், தேர்வு கொள்ளும் பணி. பணியின் செம்மையும், அதில் உறைந்து கிடப்பதில் கூடும் ஒற்றைச் சிந்தனையும் காலத்தின் முட்களை விலக்கித் தள்ளிவிடுபவை. பணி மூலம்தான் மனிதனின் வாழ்க்கை அர்த்தம் கொள்கிறது. அந்தப் பணியின் செம்மையில் உன்னதத்தை நிறுவுவது அவனுக்குப் பரவசத்தைத் தரக்கூடியது. பணியில் விளையும் ஆக்கம் அவன் ஆத்மாவின் பிரதிபலிப்பு. ஏதும் எதிர்பார்ப்பின்றி பணியில் கிடைக்கும் ஆனந்தமே அதன் கூலி என்ற மனநிலையில் நின்று, சலிக்கும் பொறிகளைப் பணிகளில் கட்டி, காலத்தைத் தாண்டிச் செல்லும் கலையை வெல்ல வேண்டியவன் மனிதன் என்பது அவர் நம்பிக்கை. லௌகீகத்தின் இழுபறியோ முற்றிலும் மாறுபட்ட திசையைச் சார்ந்தது.

  மேன்மையை, முன்னும் கலைஞனுக்கு கனவு காணும் உரிமை உண்டு. செம்மையை வற்புறுத்தும் நியதி அவன் படைப்புத் தொழிலின் ஜீவனான பகுதியைச் சேர்ந்தது. பிழைப்பின் தளத்தில் மனிதன் கூலிக்கு தன்னை விற்றுக்கொண்டிருக்கிறான். வேலையை அவன் தேர்வு செய்வதற்குப் பதில் வேலை அவனைத் தேர்வு செய்திருக்கிறது. நேரங்கள் அவனை இழுத்து மடக்கிக்கொண்டிருக்கின்றன. வேலையில் அவன் முகத்திற்கோ, மனதிற்கோ, ஆத்மாவுக்கோ இடம் இல்லை. வேலையின் விளைவோ, நற்பலன்களோ அவன் கைவசம் வருவதுமில்லை. ஆகப் பணிக்கும் பிழைப்புக்குமான இடைவெளியில் பிச்சமூர்த்தியின் துக்கம் தேங்குகிறது. பணத்தை ஈட்ட அலைபாய்பவர்-கள் மீது அவருக்கு மரியாதை இல்லை. ‘இல்லாதவனும் பணத்தைத் தேடுகிறான். இருப்பவனும் எதற்குத் தேடுகிறான்?’ என்று குழந்தைத்தனமான விவேகத்துடன் அவர் ஒரு கதையில் கேட்கிறார். இம் மனோபாவம் கேள்வி ரூபமாக இங்கு வெளிப்பட்டிருக்கிறது என்றாலும் இம் மனோபாவத்தின் ரீங்காரம் படைப்பின் பல பகுதிகளிலும் உள் நின்று கேட்கிறது. பிழைப்பின் நுகத்தடியில் கழுத்தைக் கொடுத்து சுதந்திரத்தை இழக்காத பக்கிரிகள், சாமியார்கள், நாடோடிகள், ஊச் சுற்றிகள், பைத்தியங்கள், குழந்தைகள், பிச்சைக்காரர்கள் போன்றவர்கள் கதை மாந்தர்களாக வரும்போது பொருளாதார நிலையில் இவர்கள் கொண்டிருக்கும் தாழ்வு எங்கும் சுட்டப்படுவதில்லை. மாறாக அவர்களுடைய வாழ்க்கையை அவர்களே தீர்மானிக்கும் சுதந்திரம் அவர்கள் கொண்டிருப்பதும், பொறுப்பின் சுமை அவர்களிடம் இல்லாததும் பிச்சமூர்த்திக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. மேலும் குடும்பத்தின் நான்கு சுவர்களுக்குள் அல்லது அலுவலகத்தின் நான்கு சுவர்களுக்குள் சுழலும் வாழ்க்கையைவிட புற உலகம் மேலானது. இயற்கையின் உன்னத அழகுகளும், காற்றும் ஒளியும் கொண்டது. இவ்வாறு புற உலகங்களில் வாழ்பவர்கள் இடைத்தரகர்கள் இல்லாமல் இயற்கையிலிருந்து தங்களுடைய தேவைகளைப் பெற்றுக்கொள்வது பிச்சமூர்த்திக்கு மிகவும் உவப்பான விஷயம் ஆகும். நவீனப் பணச் சந்தை அதன் கரங்களை நீளமாகவும் ஆழமாகவும் விரித்துவிட்டது. இதில் சந்தேகமில்லை. சர்வ வியாபகமான அதன் இருப்பு வாழ்க்கையை நெருக்குகிறது. அதன் வல்லமையைக் கேள்வி கேட்கும் பிரக்ஞை எதுவுமின்றி அதன் ஒரு பகுதியாகவே நாம் மாறிவிட்டோம். ஆனால், பிச்சமூர்த்தி இந்த ஸ்திதியை சுலபமாக ஏÊற்றுக்கொண்டு விடவில்லை. பொருள்கள் இயற்கையில் விளையும்-போது அந்த விளைபொருள்கள் மீது மனிதன் நேரடியான உறவு கொள்ள முடியாமல் இடைத்தரகர்கள் புகுந்த அவலத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே அவர் கதையில் ஒரு பண்டாரம் கஞ்சி காய்ச்ச மரத்திலிருந்து காய்ந்த சுள்ளியை ஒடிக்கும்போது அங்கு நிகழ்வது வெறும் காட்சி அல்ல. ஒரு வாழ்க்கை சார்ந்த ஆமோதிப்பில் பிச்சமூர்த்தி கொள்ளும் மனநிறைவு ஆகும்.

  ஆத்மீக வாழ்க்கைக்கான சிபாரிசு அவர் உலகத்தில் வலுவாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பிச்சமூர்த்தியின் ஆத்மீகம் என்ன என்பதை திட்ட-வட்டமாக நாம் வரையறுத்துக் கொள்ள வேண்டும். அது கடவுளைத் தேடும் விஷயம் அல்ல. கடவுள் நம்பிக்கை, மனித வாழ்வுக்கு ஜீவாதாரமானது என்ற முடிவு அவருக்கு இருக்கலாம். வாழ்க்கையின் நெருக்கடிகளில் நம்பிக்கையைத் தக்க வைத்துக்கொள்ள அது தேவை என்ற முடிவும் அவருக்கு இருந்திருக்கலாம். உணர்ச்சிகளில் அலைபடும்போது சமன்நிலை காத்துக்கொள்ள தனக்கு அப்பாற்பட்ட சக்தியின் மீது கொள்ளும் நம்பிக்கை அவசியமானது என்று அவர் கருதியிருக்கலாம். ஆனால், இவற்றை வற்புறுத்தும் மனோபாவம் அவர் படைப்பில் இல்லை. வாழ்க்கை மீது நம்பிக்கை, சக மனிதன் மீது நேசம், இயற்கையின் மீது ஜீவ உறவு, மதிப்பீடுகள் சார்ந்து வாழ்வதில் உறுதி இவைதாம் பிச்சமூர்த்திக்கு முக்கியமானவை. இக்குணங்கள் கொண்டவன் அவரைப் பொறுத்த-வரையில் ஒரு ஆத்மீகவாதி. நாஸ்திகன் என்று அவன் தன்னைக் கூறிக்கொள்ளும் நேரத்திலும் பிச்சமூர்த்திக்கு அவன் ஆஸ்திகன்தான்.

  வேதாந்தி என்று பலராலும் அவர் சொல்லப்-பட்டிருக்கிறார். தன்னை வேதாந்தி என்று கூறிக்-கொள்ளும் க.நா.சு. அவரையும் வேதாந்தி என்று சேர்த்துக்கொண்டிருக்கிறார். பாரதியை வேதாந்தி என்று சொன்னவர்களும் அவரை வேதாந்தி என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். ‘வேதாந்தம்’ என்பது தேய்ந்துபோன கழிசடை வார்த்தைகளில் ஒன்று. வேதாந்தியாகத் தன்னைக் கற்பனைச் செய்து கொண்டிருப்பவர்களின் பட்டியலில் இந்திய ஜனாதிபதியில் இருந்து முடிச்சுமாறி வரையிலும் இருக்கிறார்கள். இதுபோன்ற ஒற்றை வார்த்தைகள் எந்தப் படைப்பாளியின் குணங்களையும் விவரிக்கத் தகுதியானவை அல்ல. புதுமைப்பித்தனும், க.நா.சு.வும் படைப்பாளிகளான அவநம்பிக்கைவாதிகள் என்றால் பிச்சமூர்த்தி ஒரு நம்பிக்கைவாதி. பாரதியைப் போல் ஒரு நம்பிக்கைவாதி. அழகிரிசாமியைப் போலவும் ஜெயகாந்தனைப் போலவும் நம்பிக்கைவாதி. புலன்களைச் சுட்டுக்கரித்துக்கொள்வதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. புற உலகம் மாயை என்றோ, பொய் என்றோ அவருக்கு எண்ணம் இல்லை. ஆசைகளுக்கு முடிவு இல்லை என்று அவர் நினைக்கிறார். மதிப்பீடுகளை விட்டு ஆசைகளின் பாதைகளில் மனிதன் நடந்து சென்றால் அவன் அழிந்து போய்விடுவான் என்று அவர் கவலைப்படுகிறார்.

  இயற்கைதான் அவருடைய வேதம். அதைவிடவும் மேலாக நிற்கும் புத்தகம் எதுவும் அவருக்கு இல்லை. நெருக்கடிகளின் போது கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தது அவருக்கு நினைவுக்கு வராமல் போகலாம். ஆனால், எறும்புப் புற்று ஒன்றை கூர்ந்து பார்த்ததின் மூலம் அவர் கற்றுக்கொண்ட பேருண்மை அவருக்கு ஒருபோதும் நினைவுக்கு வராமல் போகாது. இந்த நெருக்கடியைக் கலையாக அவர் அலசும்போது கிருஷ்ண பரமாத்மாவை விட எறும்புகள் அவருக்கு முக்கியமானவை. இது அவருடைய வாழ்க்கைப் பார்வையின் மிக முக்கியமான அம்சமாகும். அவரு-டைய படைப்புலகத்தில் மனிதர்களைப் போல செடிகொடிகளும் முக்கியமானவை. காற்றும், ஒளியும், எறும்பும், புழுக்களும் முக்கியமானவை. ஜடங்கள் முக்கியமானவை. மனிதன் தன்னை ஒரு மாணவனாக நினைத்துக்கொண்டு இயற்கையின் சகல முகங்களி-லிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும். அவனுடைய உள்ளுணர்வும் இயற்கை மீது அவன் கொண்டிருக்கும் ஜீவ உணர்வும் இயற்கையை ஆசானாக அவன் ஏÊற்றுக்கொண்டிருக்கும் மாணவத்தன்மையும் அவனை வழி நடத்திச் செல்லும் என்று அவர் நம்புகிறார்.

  விஞ்ஞானிகள், பண்டிதர்கள், புலவர்கள், அறிவுஜீவிகள் போன்ற மூளைப் பிரகிருதிகள் மீது அவர் உள்ளூர அவநம்பிக்கை கொண்டவர். அவர்கள் இட்டு நிரப்பும் அறிவின் தொட்டியை நம்பி சாதாரண மனிதன் ஒரு அடி கூட முன்வைக்க முடியாது என்பது அவர் எண்ணம். வாழ்க்கை சார்ந்து உள்ளாழங்கள் கொள்ளாமல் தனியாக வீங்கும் அறிவு ஒழுக்க சிந்தனையைத் துறந்துவிடுகிறது என்றும் ஜீவ தயை சார்ந்த பார்வை அதற்கு இல்லை என்றும் அவர் நம்புகிறார்.

  பிச்சமூர்த்தியின் மரபு சார்ந்த குறியீடுகளை மதத்தின் மீது அவர் கொண்டிருக்கும் நம்பிக்கையின் வெளிப்-பாடாக நாம் தவறாக எடுத்துக்கொண்டுவிடக்கூடும். அதே மாதிரி படைப்பில் யாப்பை மீறி வந்தமையை மரபைத் தாண்டியப் பாய்ச்சலாகவும் நாம் தவறாக எடுத்துக்கொண்டுவிடக்கூடும். படைப்பாளியின் இளம் பருவமே அவன் படைப்பின் அநேக குணங்களைத் தீர்மானிக்கிறது என்ற உளவியல் சார்ந்த முடிவு ஆழ்ந்த உண்மைகளைக் கொண்டது. இளம் பருவத்தில் மனம் சேர்த்துக்கொண்ட குறியீடுகளின் மீதே படைப்பாளிக்கு நெருக்கமான உறவு இருக்கிறது. நம் வாழ்க்கையோ மதத்தின் முழுப் பிணைப்புக் கொண்டது. ஆக தன் வாழ்க்கைப் பின்னணியில் தன் மரபு தந்த குறியீடுகளை பிச்சமூர்த்தி சுதந்திரமாகப் பயன்படுத்துகிறார். இந்தக் குறியீடுகளுடன் இணைத்து இயற்கையின் மீது அவருக்கு இருக்கும் ஆழ்ந்த ஈடுபாடுகள் மூலம் சேர்த்துக்கொண்ட குறியீடுகளையும் இடைகலந்து தந்துகொண்டு போகிறார். மரபு சார்ந்த குறியீடுகள் மரபின் முடிவுகளை அழுத்த அல்ல; தன் வாழ்க்கைப் பார்வையை அழுத்தவே அவருக்கு உபயோகப் படுகின்றன. ஆனால், குறியீடுகளில் ஏறியிருக்கும் மரபின் களிம்பு கட்டியானது. இந்தப் பழைய காளைகளைப் பிச்சமூர்த்தியின் பார்வை என்ற புதிய வண்டியில் அவர் கட்டினாலும் அவரைப் புதிய பாதைகளுக்கும் பழைய பாதைகளுக்கும் மாறி மாறி இழுக்கக்கூடியவை அவை. அதனால், பிச்சமூர்த்திக்கு படைப்பாளியாக ஏற்பட்ட வியர்த்தம் கணிசமானது.

  வாழ்க்கையை மனித குலத்தின் விரிந்த தளத்தில் வைத்து யோசிப்பவர் பிச்சமூர்த்தி. நாம் வாழ்க்கையோடு ஒட்டிக்கொண்டிருக்கும் புள்ளியில் விஞ்ஞானத்தின் சாதகமான அம்சங்கள் எண்ணற்ற வகைகளில் விரிந்து வாழ்க்கையின் கடினத்தைச் சுலபமாக்கியுள்ளது. ஆனால், தன்னை இதப்படுத் தியுள்ள விஞ்ஞானத்தைப் பற்றி பிச்சமூர்த்தி நினைவு கொள்வதில்லை. மனித-குலத்தை அச்சுறுத்தும் விஞ்ஞா னத்தின் எதிர்மறையை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ மனிதன் சங்கடப்-படுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத இயல்பு கொண்ட அவர், மனித குலத்தையே அழிக்க நினைக்கும் தீய சக்திகள் மீது கடுமைக் கொண்டது இயற்கைதான். ஆனால், விஞ்ஞானத்தின் இந்த எதிர்மறைக் குணங்களைதான் பெற்றிருக்கும் வாழ்க்கை அனுபவங்-கள் சார்ந்து விவரிக்கும் வாய்ப்பு அவருக்கு இல்லை. போரின் தீமையைத் திரைப்படத்தில் மட்டுமே பார்த்திருக்கும் தமிழர்களிடம் அதை அனுபவமாகத் தர வாய்ப்பில்லாதபோது கருத்து நிலைச் சர்ச்சைக்கு உட்படுத்துகிறார் பிச்சமூர்த்தி. ஆக்கத்தின் போதாமை-களை நினைத்து பின் தங்காமல், நம்பிக்கைகள் சார்ந்து ஆக்கங்களில் ஈடுபடுவதுதான் இவருடைய இயல்பு. கூடி வருவது கலையாக இருக்கலாம்; கலையாகப் பரிணமிக்காமலும் இருக்கலாம். ஆனால், சொல்லப்பட வேண்டியவை பதிவு பெற்றாகவேண்டும். பகிர்ந்து கொண்டாக வேண்டும்.

  கலையின் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஒரு இலக்கியவாதி அல்ல அவர். கலை என்பது ஒரு விசேஷ ஆற்றலும் அல்ல அவருக்கு. திறமையின் வித்தகமும் அல்ல. தன்னைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு. மொழி வழி சார்ந்த வாய்ப்பு. உணர்ச்சியில் நிற்கும் பாங்கும், அழகியலும், அனுபவப் பரிமாற்றத்திற்கு விழையும் மனமும் அவரைப் படைப்பாளியாக்கி இருக்கின்றன.

  கலைஞன் யார் என்பதற்கு பிச்சமூர்த்தியின் பதில் முக்கியமானது. ‘‘மேலும் கலைஞன் என்றொரு தனி சிருஷ்டி இல்லை. அவனும் மனிதன்தான். மனிதன்தான் இவ்வித சிருஷ்டிகளைச் செய்தான். வேறெந்தப் பிராணியும் செய்யாத இச்செயலை மனிதன் மனிதனுக்காகத்தான் செய்கிறான். ஏனெனில் வேறெந்தப் பிராணிக்கும் அனுபவிக்கத் தெரியாது. மனிதனுக்குள்ளே கலைஞனும், கலைஞனுக்குள்ளே மனிதனும் இருப்பதால்தான் கலைப் படைப்புகளை உருவாக்கமுடிகிறது’’ என்கிறார் பிச்சமூர்த்தி. (‘எதற்காக எழுதுகிறேன்?’ ‘எழுத்து’ மே, 1962)

  பிச்சமூர்த்தி யார்?

  பிச்சமூர்த்தி ஒரு மனிதர். அவருடைய பார்வைப்-படி... ஆகவே அவர் ஒரு கலைஞர்.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்