Jul 16, 2009

அத்துவான வெளி-மெளனி

மௌனி

தன் வீட்டிலே சும்மாத் தலையோடு வாசல் நடந்துகொண்டு சுகமாக வாழலாம் என எண்ணியவனுக்கு எதிரே வாசலில் பெரிய மரமொன்று பார்வைகொள்ள நிற்கிறது. வாயிற்பக்கம் எப்போதாவது வந்து நின்று போவோர் வருவோர்களைச் சும்மா நின்று கவனிப்புக் கொள்வதில், இந்த மரத்தையும் பார்வையில் பட்டுப்போகுமளவிற்கு வெறித்து நோக்குவது உண்டு. எந்த யுகத்திலிருந்து இது இப்படிக்கு இங்கே ஸ்தலவிருக்ஷமென நிற்கிறது என்பது புரியவில்லை.

modern-art-41108-24x48-w

ஆனந்தமாக அது ஆகாயத்திற்கும் பூமிக்குமாக வளர்ந்து எட்டுத் திக்கையும் நோக்கிப் படர்ந்ததென இருப்பது எதற்காகவென்றும் தெரியவில்லை. தன் வீடு ஒரு திக்கை நோக்கி நிற்பது சரியெனப் புரிந்தாலும் இந்த மரம் எந்தப் பக்கம் பார்த்து நிற்பது என்ற சம்சயம் யோஜனையினால் விடுபட முடியாது இவன் திகைப்பது உண்டு. அந்தமரம் ஒருபோதும் நிசப்தம் கொள்ளாது. எந்நேரமும் பக்ஷிஜாலங்களின் கூக்குரலைக் கொடுத்துக்கொண்டிருப்பது வினோதமாகப்படும். சிற்சில சமயம் ஊரை நாசம்செய்ய வானரங்களும் குடும்ப சகிதம் அதில் குடியேறி, வால்பிடிப்பில் தலைகீழாகத் தொங்கி கிரீச்சிட்டு கத்தி ஆடி அட்டகாசம் செய்யும். அது எச்சாதி மரமென்பதும் தெரியாது. காலையில் மரத்தடியில், மலர்கள் பாய் விரித்தாற்போல் வீதியில் சிதறிக் கிடந்து காட்சியளிக்கும்போது, வாசனை நெடியெனக் காற்றடித்த வாக்கில் உலகில் பரவிக்கொண்டிருக்கும். கும்பல் கும்பலாகப் பிள்ளைகள் அதைப் பொறுக்க வருவதையும் இவன் கவனிப்பது உண்டு.

பின்னிருந்து ‘என்ன சார் ஸௌக்கியமா? பார்த்து ரொம்ப நாளாச்சு’ என்ற குரல் கேட்டதென திரும்பினான். அந்த அந்திவேளையில், தன் நிழல்கூட இவனுக்குத் தெரிய நியாயமில்லை - கண்டு கூப்பிட்டதென நினைக்க. எனினும் சுற்றிச்சுற்றி யாரென இவன் காண அவனும் சுற்றியதுபோன்று ஒருவர் முகம் ஒருவர் பார்க்க இவன் எதிரில் வந்தவன், ‘என்ன ஸார், உங்களைப் பார்ப்போமென்று வந்தால் இப்படி ஊரையெல்லாம் சுற்றுகிறீர்களே’ என்று சிரித்துச் சொல்லிக்கொண்டே ஒருவன் இவன் எதிரில் நிற்பதை உணர்ந்தான். எதிரில் கண்டதும் இவன் மேலே கடந்து போகலானான். அவன் இவனுக்கு மரியாதையாக ஒதுங்கிப் போகிற வழி விட்டு இவனைத் தொடரலானான். அவனை யாரெனப் புரியாததிலும், இப்போது பார்த்ததில் எப்போதோ பார்த்து மறந்ததென எண்னமும் இவனுக்குத் தோன்ற இருந்தது. மேலும் தனக்கு யாரையும் தெரிந்தும் தெரியாததுபோலவும் இருக்க முடியும் என்ற எண்ணமும் இவனுக்குத் தோன்ற இருந்தது. மேலும் தனக்கு யாரையும் தெரிந்தும் தெரியாததுபோலவும் இருக்க முடியும் என்ற எண்ணமும் கொள்ள யோஜனையில் அவன் புரியாவிட்டாலும் சிறிது அவனோடு பேசுவதில் கண்டுகொள்ளமுடியுமெனவும், அவசியமானால் தெரியவில்லை என நம்பவைத்துத்தான் தன் வழியே போகவும் முடியுமென நினைத்து இவனும் ‘ஆமாம் ஸார் . ! ரொம்ப நாளாச்சுப் பார்த்து…’ என்றான்.

‘தெரியாதவர்களும் தெரிந்தவர்களென ஏமாற்றுவது உண்டு ஸார்…நான் அப்படிஇல்லை. நிச்சயமாக உங்களுக்குத் தெரியும்…எனக்குத் தெரியாதவர்களே ஊர் உலகில் இல்லை ஸார்’ என்றது ஒரு விபரீத நியாயமாகப் பட்டது.

‘ஆமாம் ஸார் அப்படி நினைப்பது தவறு’ என்றான் இவன்.

‘இப்போது நீங்களா பேசுகிறீர்கள்-நான்தானே-உங்களைப் பிடித்து நான் பேசாதுபோனால் நீங்கள் தெரிந்தும் தெரியாதது மாதிரித்தானே போவீர்கள்…’ என்று உடம்பை நெளித்துக்கொண்டு கெஞ்சும் பாவனையில் பேசிவந்தது இவனுக்குப் பார்க்க பரிதாபமாக இருந்தது. நிச்சயமாக அவனைத் தெரிய ஞாபகம் கொள்ள நினைத்தான். அவன் அசடுமாதிரி அடிக்கடி சிரித்தது மேலும் இவனுக்கு யோஜனைகள் கொடுத்தன, அவனை யாரெனத் தெரிந்துகொள்ள முடியாதபோது, அவன் சிரிப்பிலிருந்தாவது ஞாபகம் வருகிறதா எனக் கவனித்தவனுக்கு, தன்னுடைய சிநேகிதன் ஒருவன் ஞாபகம் வந்தது. அதுவும் தவறென உணர, அந்நண்பன் எப்போதோ செத்து சுடுகாடடைந்ததும்கூட ஞாபகம் இருந்தது. அவனே இல்லாது அவன் சிரிப்புமட்டும் உலகில் இருந்தால், அவனென இவனை இப்போது எப்படிக் கொள்ள முடியும் என்பதும் புரியவில்லை.

‘ஆமாம்-’ என்றான் இவன். ‘நாலுபேரைத் தெரிந்து பிடித்துவிட்டால் எப்படி ஸார் உங்களைப்போல மறக்க முடிகிறதா…’ என்றான் அவன்.

‘இப்போதெல்லாம் நான் வெளிக் கிளம்புவதில்லை… அதனால்தான்…’ என்று தன் குற்றமுணர்ந்த பேச்சென இவன் பேசினான்.

‘நானும் அப்படித்தான் நினைத்தேன். இந்த ஊர் உலகைச் சுற்றும் நம் கண்ணில் ஸார் படவில்லையே என்று…’ என்றான் அவன்.

பேசிப் பிடித்தது உதறமுடியாது பேசப்பேச பீடிக்கிறதே என இவன் எண்ணலானான். சிறிது பேச்சை நிறுத்தி மௌனமானான்.

உங்களைப் பார்க்க நேர்ந்தது ஏதோ யதேச்சையாக நேர்ந்தது என்று நீங்கள் நினைக்கலாம். உங்களைப் பார்க்கமுடியும் என்ற நம்பிக்கையில் நான் உங்களைப் பிடித்தது எதேச்சையில் இல்லை ஸார். மனுஷாலை நான் சினேகம் கொண்டாடாமல் என்னால் இருக்க முடியாது, உங்களைப்போல என்ன இப்படிப் பேசாது நீங்கள்…’ என்றான் அவன்.

‘ஒரு சிநேகிதர் வீட்டிற்கு…’ என்று ஒரு அறைகுறை முணுமுணுப்பெனக் காற்றிலும் கரையும் போக்கிற்குச் சொல்ல விருந்ததையும் அவன் கேட்டு, ‘என்ன ஸார் உங்கள் சிநேகிதர் என் சிநேகிதர் அல்லவா, போவோம்…’ என்று சொல்லிக்கொண்டே தொடரலானான். பத்து தப்படிக்குள் இவ்வளவு கூச்சலும் முணுமுணுப்புமென்றால் குரைகாலமும் தன்னால் எப்படி வாழ்க்கையைச் சகித்துக்கொள்ள முடியுமென்பதில் மனது விடுபடமுடியாத ஒரு பயம் குடிகொள்ள இருந்தது. எதிரே தோன்ற முடியாவிட்டாலும் அடிமடியில் புகுந்து பேசுவது போன்றிருந்தது பேச்சுக்கள். நினைக்க நினைக்க மனது பீதி அடைந்தது. அவனை மறந்துவிட முடியுமென்பதற்கில்லை. மறக்க வேண்டியதை அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்க வேண்டியிருப்பதால் மறப்பதை ஞாபகமெனத்தானே கொள்ள முடிகிறது. அவனைப்பற்றி யோஜிப்பதில் யாரெனத் தெரியவில்லை எனக் கொள்ளுவது தனது முக்கிய காரியமென எல்லாவற்றையும் யோஜிக்கலானான். தெரியவில்லையெனக் கொள்வதிலும், தனக்குத் தெரியாத ஒரு பெரிய மனிதனாக அவன் ஏன் இருக்கமுடியாது. இந்த ஜன்மத்தில் இருக்காமலிருந்தாலும் போன அல்லது எந்தப் பிறவியிலாவது இருக்கலாம். தனக்கு முன்காலத்தில் அநேக பிரமுகர்களின் சம்பந்தம் உண்டு என்பதை எண்ணும்போதும் தெரியாத மறதி எனக்கொண்டு தவறெனவும் கொள்ளமுடியாது, சிரிக்கவும் சிரித்துக்கொண்டிருந்தான். இவனை அவசியம் யாரெனக் கண்டுகொள்ளவேண்டியிருப்பது யோஜனைகளின் அவசியத்தையும், சிக்கல்களையும் தோற்றுவித்தன. அவனை விட்டகல ஒரு யோஜனையும் புரியவில்லை. எதிரே ஒரு கோவில் தெரிய இருந்தது. ஒருவகைக்கு ஆறுதலாகவும் போக்கிடமெனவும் தோன்ற அதையே ஆதாரமென நினைத்து நடந்ததில், அதுவும் எதிரே சமீபமாக வந்து நின்றது.

ஊர்த் தெருவில் நின்ற ஒவ்வொரு வீடாக இவனுக்குக் காட்டி, வசிக்கும் அந்த அந்த மனிதர்களை, தனக்குத் தெரியாதவர்கலை, காணப்போவதாகச் சொல்லி, அவனிடமிருந்து தப்பிக்க வழியாக இவனுக்குச் சொல்லி, அவனிடமிருந்து தப்பிக்க வழியாக இவனுக்குச் சொல்ல முடியவில்லை. ஒருக்கால் மறந்து அவனுக்கு அவன் வீட்டையே காட்ட, அது அவன் வீடாக இருந்து அவன் சிரித்தால் தான் வெட்கமடைய முடியாதா என்ற எண்ணத்திலும் யோஜனையைக் கைவிட இருக்கிரது. நிச்சயமாக அவனைத் தெரிந்து அந்த வீட்டுக்காரன் இல்லை என்பதை தீர்மானித்தால் அல்லது எந்த வீட்டுக்காரனாகவும் இவனெனக் கொள்ளமுடிகிறது. இப்படிக்கான விஷயங்களினின்று விடுபடக் கோவில் மகத்துவம் அதிகமாகிக்கொண்டிருந்தது.

கோவில் சென்று சுற்றுவதில் அவனுக்கு வீடு திரும்ப ஆவல்கொண்டு தன்னைவிட்டுச் செல்லலாம் என்ற உத்தேசத்தை வெகு ஜாக்கிரதையாக அவனுக்குப் புரியாது காட்ட எண்ணி ‘பார்க்க வேண்டியவர் ஒருக்கால் கோவிலில் இருக்கலாம்…அங்கேயே பார்க்க முடியலாம்…’ என முணுமுணுத்துக் கொண்டே கோவிலையடைந்தான். அசட்டு மனிதனென அவமதிப்புக் கொள்ளமுடியவில்லை. அப்படி அவன் நினைவில் தானும் கலந்து தெரிவதால் தனக்கும் அவமானம் தோன்ற இருக்கும். கோவிலில் அவனை அலைக்கடிக்கும் அளவிற்குத் தாமதம் செய்ய உத்தேசித்து, யதோக்தமான தரிசன உத்தேசத்துடன், அர்ச்சனைக்கான பழம் தேங்காய் பாக்கு முதலியன வாங்கிப்போனான் இவன். ஒன்றை மறக்க அதை ஞாபகத்தில் கவனமாக வைத்துக்கொண்டு இருக்கவேண்டியிருப்பதில், எப்படி மறக்க முடிகிறது. இந்த வகையில் சாமியென்ன பூதம் என்ன எல்லாம் ஒரே விதத்தில்தான் சஞ்சலம் கொடுக்க இருக்கின்றன மனிதர்களுக்கு.

தொடருபவனைச் சரிக்கட்ட, கோவில் தரிசனம் செய்துவிட்டு அவரையும் இருந்தால் பார்த்து அழைத்துவருவதாகவும் இவன் சுகமாக இங்கு இருப்பதில் தான் திரும்புகாலில் அவனைச் சேருவதாகவும் சொல்ல நினைத்தவனைத் தடுத்து ‘என்ன ஒற்றுமை போங்கோ ஸார் மனது. நானே சொல்ல விருந்ததை நீங்கள் செய்து காட்ட’ எனச் சொன்னான், தனக்குப் புரிந்ததை. இல்லை, மன ஒற்றுமை அது இது என்பதிலும், இரு உடல் ஒரு எண்ணமோஒ அல்லது ஒரு உடல் இரு எண்ணமோ ஆக ஒன்றிலும் நம்பிக்கை இல்லை என்பதை-காதலைப்பற்றித் தன் எண்ணமும் அநுபவமும் நினைவுக்குவர இவன் உடம்பு கூசிக்குறுகியது வருத்தமாகவும் இருந்தது. கையில் இருந்த சாமான்களை அவன் பிடுங்கியதுகூட இவனுக்குத் தெரியவில்லை. ‘நான் இருக்கும்போது உங்களுக்கு இந்தச் சிரமம் வேண்டாம் ஸார்’ என்று கூவிக்கொண்டே சோழனைப் பிடித்தவனையும் மிஞ்சித் தொடரலானான். தன்னையும் தூக்கிக்கொண்டு அவன் தொலைந்தால், அவனோடு போவதில் தன் பொறுப்பு என்ற தொல்லையின்றியாவது வாழலாமெனவும் நடக்குமெனத் தோன்றவில்லை. இப்படி ஏதாவது எதேச்சையில் புண்ணியம் வருமென்றாலும் அதைத் தூக்கிக்கொண்டு போகத்தன் தொடருகிறான் போலும்.

இரவு அந்நேரம் கோவிலில் கூட்டமே இல்லை. அர்ச்சகரும், கவனிப்பை யார் மேல் கொள்வது என்று புரியாமல் பார்த்து விழித்துக் கொண்டிருந்தார். அவனோ மேல் துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு கைகட்டி கண்மூடி நின்று கொண்டு, தேவாரம் திருவாசகப் பதிகங்களை இரைந்து அழுது கொண்டிருந்தான். அப்படி கேட்கவே அவனுக்கு நாராசமாக ஒலித்தது. அவனைப் பார்ப்பதும்கூட. ஒன்றிற்கும் ஒன்றும் செய்யமுடியாது. அர்ச்சனை முடியும். எங்கேயாவது ஓடி மறைய முடியாதா என்று எண்ணி நின்றான். அர்ச்சனை முடிந்தது. பிரசாதங்களையும் அவனே ஏற்றுக்கொண்டு திரும்புகாலில், யார் யாரைப் பீடிக்க இந்த உலகம் இப்படிச் சீரழிந்து கொண்டிருக்கிறது என்ற புனருத்தாரண விசனத்தில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்தான். வெளியே வந்ததும் யார் யாரைத் தொடருகிறது என்பது இல்லாமல் போய்க்கொண்டிருந்தனர். எதிரில் மரம் கண்முன் நிற்க இவன் எங்கேயோ அந்தரத்தில் பறந்து அதன் மேல் உட்காரவோ ஆடவோ முடியாது சுற்றுவது போல இருந்தது மனதிற்கு குஷி கொடுக்க இருந்தது. தனக்கு மட்டும் அவன் தெரிகிறான் என்றும் அவன் தன்னை கண்டுகொள்லமுடியாது எங்கேயாவது சுற்றிக்கொண்டிருக்கும் அவனைத் தான் தெரிந்து கொண்டு ‘என்ன ஸார் ஸௌக்கியமா?’ என்று திடுக்கிடக் கூப்பிடவேண்டுமெனத் தோன்ற தன்க்குத்தானே இவன் சிரித்துக்கொண்டான்.

அவனோடு சுற்றி நான்கு வீதிப் பிரதக்ஷினமும் முடிந்துவிட்டது. மற்றொரு சந்தையும் அவன் கடந்துவிட்டான். அவன் பேசாது மௌனமாகப் போவதும் மனதிற்குப் பிடிக்கவில்லை. தான் இப்படி அவனுக்குத் தோன்றா வகையில் அந்தர்த்தியானமாகியதை அவன் தெரிந்துகொண்டே பேசாது இருந்தால் தன் மதிப்பு எவ்வளவு குறைபடுகிறது என்று எண்ணியவனுக்கு இப்படியே எவ்வளவு காலம் வாழமுடியுமென்பது புரியவில்லை. வெட்கப்படும் வகைக்கு அவனோடு சல்லாபம் கொள்ளவும் தன்னைத் தயாராக்கிக்கொண்டான்.

இரவு நிசி நேரம் தாண்டிவிட்டது. சினிமாப் பார்த்தவர்களும் திருப்தியுடன் வீடடைந்துவிட்டனர். இவனுக்கு வீடடைய வழியில்லை. அவன் வீடு இவனுக்குத் தெரியாது. அவன் வீட்டை நோக்கிப் போகிறான் என எண்ணவும் அவனைக் கண்காணித்து அவனுடன் சுற்றுவதிலேயே திருஷ்டியாக இருந்தான். சும்மா எங்கே எங்கேயோ கண் காணாது படுத்துத் தூங்கியிருந்த நாய்களெல்லாம் தங்கள் இருப்பு மகத்துவத்தைப் பிரபலப்படுத்தக் குரைக்கவும் ஊளையுடவும் ஆரம்பித்தன. நாய்களுக்கும் தெரிவது தனக்குப் புரியவில்லையே என்ற விசனத்தில்கூட சில சமயம் இவன் ஆழ வேண்டியிருந்தது.

முன்பு அவனைப் பார்த்தவுடன் தெரியவில்லை என்பது தெரிந்தவுடன் ‘யார் நீ-’ எனத் தைரியத்தில் அதட்டியோ அல்லது நைஸாகக் குழைந்தோ கேட்டிருக்கலாம். அவனும் என்ன பதில் சொல்லுவது எனப் புரியாது தத்தளிப்பதைத் தெரிந்து கொண்டிருக்கலாம். அதையெல்லாம் இவ்வளவு காலம் கடந்து நினைப்பதில் என்ன பயன் என்றும் இப்படி எப்படிச் சும்மா ஊர் உலகைச் சுற்றுவதில் சுகமடைய முடிகிறது என்றும் எண்ணலானான். ஒருவர் ஒருவர் நிழலென மாறி மாறி பற்றிப் போய்க் கொண்டிருந்தனர்.

தன் நிழலென அவனைப் பார்த்தபோது, மனதில் திடீரென ஒரு யோஜனை தோன்றியது. தான் நினைக்கும்போது நினைத்த காரியம் கைகூடி விளையுமானால், எவ்வளவு சுலபமாக அவனை ஏமாற்றித் தான் விடுபட்டு, வாழமுடியும். இறகு முளைக்கத் தான் பக்ஷிஜாலங்களுடன் கூடி அந்த மரத்தில் கத்திக்கொண்டு இருக்கலாம் என நினைத்துத் துள்ளி நடக்கலானான். என்ன வேடிக்கையென அவன் கூவக் கேட்டுக் கொஞ்சம் நிதானமடைந்தான். அவனாகவே தானும் ஆகிக்கொண்டிருப்பதில்தான் அவன் நிழல் தொடருவதினின்றும் விடுபடமுடியும் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது…

எட்டிய வெளியில் ஒரு விளக்கொளி தெரிந்தது. உலகமே எரியத் தோன்றுவதும் எட்டி இப்படிச் சிறு விளக்கெனத் தோற்றம் கொடுத்து இருக்கலாம். ஒரு லக்ஷியக் குறிப்பாகக் கண்டதில் எப்படிப் போகிறோம் என்ற உணர்வே இவனிடமிருந்து அகன்றுவிட்டது. அதையே குறியெனக்கொண்டு ஒரு பைத்தியக்கார நிதானத்தில் போய்க்கொண்டிருந்தான். நெருங்க நெருங்க அது ஒரு மயானம் என்பதும் பிரேதம் எரியும் ஒளிதான் வீசியது எனவும் புரியலாயிற்று. தன் முன் தான், தன் நண்பன் சென்று கொண்டிருப்பதைப் பார்த்துத் திரும்ப வழியும் இருளில் மறைந்துவிட்டது என்பதையும் திரும்பாமலே இவனுக்குத் தெரிய இருந்தது. பொறுப்பற்றுத் தத்தம் தவறுகளுக்குத் தாம் என்பதின்றித் தோன்ற மயானமும் ஒளிக்கொள்ள வெகு பிரகாசமாகக் கண்கூச நன்கு அழகாகப் பிரேதம் எரிந்துகொண்டிருந்தது இவனுக்கு ஒரு வகையில் திருப்தி அளித்துத் தோன்றியது. மேலும் பூரண திருப்திக்கு, என்று தானும் அதாகி மேலும் ஒளி கொடுக்க எரிய வேண்டுமெனவும், அல்லது தான் தவிர எல்லாம் ஒளி கொடுக்க வேண்டுமெனவும், அல்லது தான் தவிர எல்லாம் ஒளி கொடுக்க எரியவேண்டுமென்ற இருவகை யோஜனையில் ஒருமை காண நின்றுவிட்டான். உயிர் நினைவும் மயான நினைவும் ஒன்றுகூடிப் பயம் காணச் சிறிது நேரம் ஆகியது. பக்கத்தில் துணையிருப்பதை எண்ணி அவனை வெகு பிரியமாகப் பார்த்தான். அவன் அங்கு இருப்பதையோ இல்லாததையோகூட கவனிக்கவில்லை.

ஒரே இருள் அத்துவான வெளி. எங்கிருந்தும் பலப்பல பக்ஷிக் குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. வானரங்களும் மேலும் பூனைகளும் ஏன் நாய் நரியும்கூட ஆகாயத்திலிருந்தௌ பூமியைநோக்கிச் சப்தித்ததும் கேட்டது…..ஒரு பெரிய மரம் எங்கிருந்து பிரும்மாண்டமாக இந்த சப்தத்தில் இங்கு எதிரே வளர்ந்து நிற்க நேர்ந்தது என்பது தெரியவில்லை. அடிமரம் பார்வைகொள்ளும் போதே பெரிதாகிக் கொண்டிருந்தது. நடுவில் யானையெனப் பெரிய பொந்து ஒன்று தெரிந்தது. ஒரு பெரிய யானை மீது ஏறிக்கொண்டு தலையிலும் பெரிய ஒரு முண்டாக கட்டிக்கொண்டு தட்டுப்படாமல் அந்தத் துவாரத்தில் வழியாகப் பாதாளம்வரையில் ஊர்வலம் செல்லலாமெனத் தோன்றியது. கிளைகள், இலைகள் ஒன்றுமில்லையென, ஒரு கரிய கவிந்த வானம் மேகமெனத் தலையில் பரந்து தெரிய, மொத்தமாக ஒரு பெரிய குடை விரித்ததெனத் தோன்ற இருந்தது. வேறு ஒரு விதமாகவும் அது மரமில்லை என அங்கே அப்படி நின்றிருக்கமுட்யாது என்றும் தோன்றவிருப்பதே அது மரமெனத் தோன்றப்போதுமான அத்தாக்ஷியாக இருந்து நிச்சயமாக மரமெனவே இருந்தது. முதலில் எல்லாம் வேடிக்கையாகத்தான் இருக்கமுடியும். மயானம், பிணம் எரிதல், எதிரே ஒரு பெரிய மரம், எல்லாம் தெரிய ஒரு அத்துவானவெளி……ஆனால் யோஜிக்க யோஜிக்கவோ……அல்லது பார்க்கப் பார்க்கவோ இதற்கென அதுவும் அதற்கென இதுவுமாக ஒன்றை ஒன்று நிழலெனக் காட்டிக் கொடுக்க இருந்தது. எல்லாம் வேடிக்கை எனவும் ஒன்றிலும் ஒன்றுமில்லை எனவும் இந்த மயானப் பிரேத ஒளியில் தோன்றவும் தோன்றலாயின. மயான ஒளி இருந்தும் அதைப் பொருட்படுத்தாது பயத்தில் கண்கள் தாமாகவே தீக்ஷண்யம் அடைந்தன. பயமடைந்து கால்கள் பூமியில் புதைவு கொண்டன. தலைதெரிய தான் மறைந்தே எல்லாவற்றையும் பார்ப்ப தான உணர்வு கொண்டான்……கொழுந்துவிட்டெரியும் ஜ்வாலையைச் சுற்றி சிறு சிறு கருப்புத்திட்டுகளெனத் தோன்றியவை கூத்தாடிச் சுற்றி சுற்றி கும்மாளம் போட்டுக் குதிப்பதைப் பார்த்தான். இவைகள் சில்லறைப் பிசாசுகள் என்பது நிச்சயமாகியது. அவைகளின் தலை மேலே கருமையாகப் பறவைக் கூட்டங்கள், கரையாமலும் காகமெனத் தோன்றச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. பக்கத்தில் நின்ர அப்பெரிய மரமும் கரைந்து கத்திக்கொண்டு ஆடியது. இந்தக் குட்டிப் பிசாசுகள் எல்லாமுமே தலைகளில் பூச்சூட்டிக் கொண்டிருந்தது தோன்ற நக்ஷத்திரமென மினுக்கும் ஒளிப் பூச்சிச் சுட்டுகளை ஒன்று சேர்த்துக் குல்லாயாகத் தரித்திருந்தன. இவைகளின் ஆட்டத்தைவிட ஒளி கொடுக்க எரியும் பிரேதமும் சேர்ந்து ஆடியதுபோல அவைகளின் நிழலாட்டம் வெகு விநோதமாகத் தெரிந்தது. களைத்ததெனச் சில அடிக்கடி சோர்வு கொண்டு திடீரென கீழே விழுந்து கொண்டு பன்றிகல்லென மேயவும் ஆரம்பித்தன. கண்ட கண்ட நிழல்களைத் தின்று திருப்தியில் உறுவிச் சிரித்தது பயங்கரம் கொடுத்தது. துணையென இப்போது அவனை வேண்டிப் பக்கத்தில் இருப்பதை நினைத்துக்கொண்டு எதிரே பார்த்தான். அவைகளுக்குத் தலைமை தாங்கி அவனும் வெகு குஷியில் குதித்துக் களைக்கும்போது தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு தாளம் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் நாதியற்ற பயத்தை இவன் மனது கடுமையாகக் கொள்ள ஆரம்பித்தது. நிழலைப் பறிகொடுத்து நின்ற பிசாசுகள் திடீரென எகிறிக்குதித்து மரத்தின் மேல் போய் மறைந்தன. மறுபடியும் தொடர, நிழலை அடையவேண்டி இரவிலும் நிழல் கொடுக்க நின்றிருக்கும் மரத்திடை மறைந்தது போலும். மரம் சலசலத்து இலைகளும் இரைந்துபேசியது போலும். மொக்குகள் உதிரக் கீழே விழுமுன் பூவாக மாறிக்கொண்டிருப்பதையும் இவன் கவனித்தான். இந்த மரத்திலிருந்து எப்படி விதவிதமானத் தனித்த சப்தங்கள் வரவிருக்கின்றன என்பதைக் கவனிக்கும்போது அநேக பூனைகளும் குரங்குகளும் மற்றவைகளும் வாலைக் கிளைகளில் சிக்கவைத்துக்கொண்டு தலைகீழாகத் தொங்கி ஆடிக்கொண்டு தவிப்பதைப் பார்க்கமுடிந்தது. வால் விடுபட்டோ அல்லது இழக்கப்பட்டோ மரத்தை விட்டோட பயம் கொண்டு வெகு வேகமாக ஆடியவைகல் ஒன்றை ஒன்று சில சில சமயம் இடித்துக் கட்டிக் கொண்டு சல்லாபித்து சண்டையிட்டு அழுவதும்கூட தெரியக்கேட்டது வாலிழந்து விடுபட்டவைகள் கீழே விழுந்து குட்டிப் பிசாசுகளான மீண்டும் நிழலோடு குதித்து ஆடலாயின.

தன் நண்பனுக்குக் களைப்பு. தூங்குமளவிற்கு உண்டாகிவிட்டது. திடீரென மறைந்தவனை இவன் பக்கத்தில் கண்டான். கீழேயும் விழுந்து புரண்டான். சிறிது ஏமாந்து பார்த்துக்கொண்டிருந்ததில் தன்நிழலை அவன் தின்றுவிட்டது நினைவுவரவே……பீதி. மனதிற்கு ஒரே பீதி. பைத்தியமெனச் சிரிப்பு தன் முகத்தில் கண்டதும் மேலும் பீதி அடைந்தான். உடல் கொண்டிருப்பதும் ஒரு அநாதி வழக்க தோஷத்தின் வாழ்க்கை எனவும் மிக அலுப்புக்கொண்டு விழித்தான்.

காலையில் வீட்டு வாசலில் மரம் நின்றிருந்தது-ஆகாயத்திற்கும் பூமிக்குமாக எட்டு திக்கும் பரவி-எந்நேரமும் சப்தம் கொண்டு வாவென்றழைக்கும் தோற்றத்துடன்-சிறுவர்கள் மலர்களைப் பொறுக்கிக்கொண்டிருந்தனர். வீட்டுக்காரர் இன்னும் எழுந்து வீட்டு வாயிலில் நின்று தங்களைப் பார்க்கவில்லை என்பது தெரிந்து மேலே பார்க்காது மேலும் மலர்களை பொறுக்கிச் சென்றனர் சிறுவர்கள்.

தற்காப்பு மணி: மௌனியின் கதைகளுக்கு இப்போது எவரிடம் காப்புரிமை இருக்கிறதென்று தெரியாது; விற்பனையின் மூலம் மௌனி பெறுவதைவிட இதுபோன்றவற்றின்மூலம் மேலும் சில வாசகர்களைப் பெறக்கூடுமென்ற நம்பிக்கையில் இதை இடுகிறேன்; ஆட்சேபங்களிருப்பின் பின்னூட்டமிடவும், கதையை நீக்கிவிடுகிறேன். இங்கே வந்தபோது கொண்டுவந்த வெகு சில புத்தகங்களுள் ஒன்று.

நன்றி: மௌனி கதைகள், பீக்காக் பதிப்பகம்.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்