Jul 16, 2009

“இடைவெளி” சம்பத்

சம்பத் நாராயணன் என்கிற எஸ். சம்பத், 1941_ம் ஆண்டு அக்டோபர் 13_ம் தேதி பிறந்தார். அப்போது சம்பத்தின் தந்தை சேஷாத்திரி ஐயங்கார் டில்லியில் ரயில்வே போர்ட் sambathஅதிகாரியாக பணியாற்றினார். எனவே சம்பத்தின் இள மைப்பருவம் முழுவதும் டில்லியிலேயே கழிந்தது. பொருளாதாரத்தில் எம்.ஏ.பி.எட். பட்டம் பெற்ற சம்பத் டில்லியிலேயே தனியார் நிறுவனங்களிலும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் தொடர்ந்து பணியாற்றினார். தன் உறவுப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட சம்பத்துக்கு மூன்று குழந்தைகள், சேஷாத்திரி ஐயங்கார் பதவி ஓய்வு பெற்று சென்னை திரும்பியபோது, சம்பத்தும் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னை திரும்பினார். பிறகு, சில ஆண்டுகள் வேலை ஏதும் பார்க்காமல் இருந்தார். பின்பு மிஸீபீவீணீஸீ விணீக்ஷீளீமீt ஸிமீsமீணீக்ஷீநீலீ ஙிuக்ஷீமீணீuவில் உதவியாளராக சேர்ந்தார். விரைவில் அதிலிருந்து விலகினார். அப்புறம் விவீஸீமீக்ஷீஸ்ணீ ஜிutஷீக்ஷீவீணீறீ சிஷீறீறீமீரீமீ_ல் பகுதிநேர விரிவுரையாளராக சேர்ந்தார். விரைவில் அதிலிருந்தும் விலகினார். பிறகு, சென்னை பெரியமேடு தோல் பதனிடும் மண்டியில் கணக்கு எழுதுபவராக பணியாற்றினார். கடைசியாக, சில ஆண்டுகள் வேலை ஏதும் பார்க்காமல் ருந்தார்.

சம்பத் எழுத்தாளரானது ஏதோ, தமிழில் வழக்கமாக எழுத்தாளர்களுக்கு நேர்வதுபோல், சந்தர்ப்பவசமாக நிகழ்ந்த ஒன்றல்ல. பெரிய எழுத்தாளராகவேண்டும் என்னும் கனவு அவருக்கு இருந்தது. குறிப்பாக தஸ்தாவெஸ்கி போல் தான் ஒரு மிகப்பெரிய எழுத்தாளராக வேண்டும் என்று அவர் கனவு கண்டார். ஆனால், படைப்புகளாக அவர் இந்த சமூகத்திற்கு விட்டுச் சென்றிருப்பவை வெகு சிலவே. 1968, 1971_ம் ஆண்டுகளில் கணையாழியில் முறையே `முடிவுகள்’, சாமியார் ஜூவுக்குப் போகிறார்’ என்னும் இரண்டு குறுநாவல்கள் பிரசுரமாகியிருக்கின்றன. 1970 ஜனவரி கணையாழி இதழில் தனி என்னும் சிறுகதையும், 1983 நவம்பர் கணையாழி இதழில் `வீடியோ விளையாட்டுப் போட்டி’ என்னும் சிறுகதையும் வெளிவந்தன. `இடைவெளி’, `கோடுகள்’ என்னும் இரண்டு சிறுகதைகள் முறையே 1975 ஜனவரி, மே மாத பிரக்ஞை இதழ்களில் வெளிவந்தன. 1985_ம் ஆண்டு மார்ச் மாத கணையாழியில் சம்பத்தின் குறுநாவல் `பணம் பத்தும் செய்யும்’ தி. ஜானகிராமன் நினைவார்த்த இலக்கியத் திட்டத்தில் தேர்வு பெற்றது. இந்நாவல் சம்பத்தும் ஐராவதமும் இணைந்து எழுதியது. மேலும் சம்பத்தும் ஐராவதமும் இணைந்து நிறைய எழுத திட்டமிட்டிருந்தனர். சம்பத் கதைகளுக்கான திட்டங்களை உருவாக்கவேண்டும், ஐராவதம் அதை எழுதவேண்டும் என திட்டமிட்டுக்கொண்டனர். அதன்படியே நிறைய எழுதவும் செய்தனர். ஆனந்த விகடன், கல்கி போன்ற பிரபல பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்ட அவற்றில் எதுவும் பிரசுரமாகவும் இல்லை. பிரதிகளும் கிடைக்காமல் போய்விட்டது. சம்பத் புதுக்கவிதைகளும் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய ஐந்து கவிதைகள் `ழ’ கவிதை மாத ஏட்டில் வெளியாகியுள்ளன. 1976_ம் ஆண்டு அக்டோபர் மாத பிரக்ஞை இதழில் `மூளை சம்பந்தமான விஷயங்கள்’ என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றும் எழுதியுள்ளார்.

சம்பத்தின் எழுத்துகளில் புத்தக வடிவம் பெற்றது `இடைவெளி’ நாவல் மட்டுமே. இடைவெளி முதலில் கவிஞர் உமாபதி நடத்திய `நெறிகள்’ என்னும் பத்திரிகையில் வெளிவந்தது. 1984 ஆகஸ்டில் க்ரியா பதிப்பகம் `இடைவெளி’_ஐ பதிப்பித்தது. இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் முன்னுரையில் ``தன் பாலிய வயதிலிருந்தே, சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே மரணத்தைப் பற்றிய பயமும் சிந்தனையும் தன்னில் இருந்ததாக’’ சொல்கிறார் சம்பத்.

சம்பத்துடன் கடைசி காலங்களில் மிக நெருங்கி பழகிய ஐராவதம் சொல்கிறார். அவரது சிந்தனையை மிகவும் உலுக்கிய விஷயங்கள் மூன்று. முதலாவது பணம், பணம் சார்ந்த வெற்றி; இரண்டாவது செக்ஸ்; மூன்றாவது சாவு.’’

சம்பத் தன் 42ஆவது வயதில், சற்றும் எதிர்பாராத வகையில் மூளை ரத்த நாளச் சேதத்துக்கு ஆளாகி 26.07.1984 அன்று காலமானார்.

===========================================

இடைவெளி’ எஸ்.சம்பத்

சி. மோகன்

(நடை வழிக்குறிப்புகள் என்னும் நூலிலிருந்து)

நவீன தமிழ்ப் படைப்பிலக்கிய மேதையான புதுமைப்பித்தனின் மறைவுக்குப் பின் சுழன்று விட்ட 50 ஆண்டுகளில், புனைவும் மேதைமையும் முயங்கிய படைப்பாளிகளுள் எஸ்.சம்பத் மிக முக்கியமானவர். அதிர்வலைகள் எழுப்பும் ஆழமான குரல் இவர்களுடையது. மரணம், இருவரையுமே நடுத்தர வயதில் சுருட்டிக் கொண்டுவிட்டது பெரும் அவலம்.

புதுமைப்பித்தன் இன்று ஒரு பெயராக நிலைத்துவிட்டார். இதில் நாம் ஆறுதல் கொள்வதற்கான எந்த வித முகாந்திரங்களும் சூழலில் இல்லை. ஏனெனில் புதுமைப்பித்தன் என்ற பெயரில் பொதிந்திருக்கும் இலக்கிய தார்மீகங்கள் இன்னமும் ஸ்தாபிதம் ஆகவில்லை. அங்கீகாரம் பெறவில்லை.

சம்பத் எதிர்கொண்ட நெருக்கடிகளையும் அவர் மரணம் கூடப் பல நாட்களுக்கு அறியப்படாத செய்தியாகப் புதைந்து விட்டிருந்ததையும், தன் வாழ்நாளில் அவருடைய ஒரு புத்தகம்கூட வெளிவராமல் போனதையும் வேறு எப்படித்தான் புரிந்துக்கொள்வது? இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பண்பட்ட எந்தவொரு மொழிச் சூழலிலும் இத்தகைய அவல அனுபவங்கள் ஒரு படைப்பாளிக்கு நேருமா என்பது சந்தேகமே.

தொழில் நிர்வாகத்தில் உயர்கல்வி கற்று டில்லியில் நல்ல பதவியிலிருந்த சம்பத், படைப்பாளியிடம் அவனுடைய முழு நேரத்தையும் கேட்டு நிற்கும் எழுத்தின் குரலுக்குக் கட்டுப்பட்டு பதவியை உதறிவிட்டு சென்னை வந்தார். அதனைத் தொடர்ந்து, இத்தகைய முடிவு தமிழ்ச் சூழலில் நிர்பந்திக்கும் மோசமான நெருக்கடிகளையும் அவஸ்தைகளையும் குடும்ப - சமூக - எழுத்துலகப் பின்புலங்களில் அனுபவித்தார்.

இதுவரை வெளிவந்திருக்கும் சம்பத்தின் ஒரே புத்தகம் 'இடைவெளி' நாவல் மட்டுமே. 'தெறிகள்' என்ற காலாண்டிதழின் முதல் இதழில் இப்படைப்பு வெளியானது. வெளிவந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 'க்ரியா' அதைப் புத்தகமாக வெளியிட்டது. புத்தகத்தின் அச்சான சில பக்கங்களைக் கூட சம்பத் பார்த்துவிட்டிருந்தார். புத்தகம் பைண்டிங்கில் சில நாள் முடங்கிக் கிடந்தபோதுதான், சம்பத்தின் மரணச்செய்தி, இறந்து சில நாட்களுக்குப் பிறகு, வெளிப்பட்டது.

சாவு என்னும் அடிப்படைப் பிரச்சினையில் உழன்று அருமையான சில சிறுகதைகளையும் (சாமியார் ஜுவுக்குப் போகிறார், கோடுகள், இடைவெளி) படைத்த சம்பத்துக்கு திடீரென ஏற்பட்ட மூளை ரத்த நாளச் சேதம், இடைவெளியென இருப்பதாலேயே எவராலும் வெல்லப்பட முடியாத சாவு, அவரை அபகரிக்கக் காரணமாகிவிட்டது.

தமிழின் முதல் முழு முற்றான கருத்துலக நாவல் இடைவெளி தான். கருத்துலகில் சுயமான, தீவிரமான புனைவுப் பயணம் மேற்கொண்ட படைப்பாளி சம்பத். அதற்கு முன்பாக, கருத்துலக அம்சங்களை எழுத்துக்கு கொண்டு வந்தவர் ஜெயகாந்தன். கருத்துலகம் சமூகத்துக்கு அளித்த சாரங்களின் சில அம்சங்களை தன் புனைவுலகிற்கு ஸ்வீகரித்துக் கொண்டவர் ஜெயகாந்தன். புனைவுலகினூடாகக் கருத்துலகோடு மோதுவதால் நிகழும் புதிய சிந்தனைத் தெறிப்புகள் அவரிடமில்லை. வாழ்வின் அடிப்படைப் பிரச்சினைகளில் சதா உழன்ற சம்பத்திடம் புனைவுலகமும் கருத்துலகமும் கூடி முயங்குகின்றன. 'இடைவெளி'க்குப் பின் வெளிவந்து பரபரப்பாகப் பேசப்பட்ட 'ஜே.ஜே.சில குறிப்புகள்' அறிவுத் தளத்தில் இயங்கிய முதல் நாவல் என்ற அங்கீகாரமும் பெற்றுவிட்டது. புனைவுலகும் கருத்துலகும் இப்படைப்பில் பரஸ்பரம் கூடி முயங்கவில்லை. பெரும்பாலும் சிந்தனைத் தெறிப்புகளின் நேர்த்தியான வடிவத் தொகுப்பாகவே 'ஜே.ஜே. சில குறிப்புகள்' அமைந்து விட்டிருக்கிறது. இந்நாவலில் சம்பத் என்ற பாத்திரம்தான் புனைவுலகிலிருந்து உயிர் பெற்று கருத்துலகின் முன் தன்னை நிறுத்திக் கொள்கிறது. அறிவுத் தளத்தின் வெளிவட்ட சஞ்சாரமே சுந்தர ராமசாமிக்குக் கிட்டியிருக்கிறது. உள்நோக்கிய, அடியறியா ஆழமறியா புனைவுப் பயணமில்லை. ஒரு அடிப்படைக் கேள்வி சார்ந்து முழு முற்றான பயணம் கொள்ள சம்பத்துக்கு முடிந்திருக்கிறது.

தமிழில் நவீன செவ்வியல் படைப்பு என்பதற்கான ஒரே சிறந்த படைப்பாக நாம் கொண்டிருப்பது இடைவெளி தான். பரந்த, பிரும்மாண்டமான தளமில்லை என்றாலும் சிறிய, ஆழமான, நுட்பமான நவீன படைப்பு, படைப்புலகம் இட்டுச் செல்லும் அறியப்படாத பிராந்தியங்களுக்கு முற்றாகத் தன்னை ஒப்புக் கொடுத்து அச்சமற்ற, சமாளிப்புகளற்ற பயணத்தை மேற்கொண்ட நவீன படைப்பாளி சம்பத்.

உலக நாவல் பரப்பில் நம் பங்களிப்பாக ஒரு நாவல் முன்வைக்கப்பட்டு ஏற்கப்படுமெனில் அது 'இடைவெளி' மட்டுமாகவே இருக்க முடியும். இது, சாவு என்பது என்ன என்ற அடிப்படைக் கேள்வியில் அலைக்கழிக்கப்படும் தினகரன் என்ற பாத்திரம் அதற்கான விடை தேடிச் செல்லும் நாவல். சம்பத்தின் சுயசரிதை அம்சங்கள் இப்படைப்பில் விரவிக் கிடக்கின்றன.

'இடைவெளி' நாவலின் புத்தகத் தயாரிப்பின்போதுதான் சம்பத்தோடு எனக்கு நெருக்கமும் பழக்கமும் ஏற்பட்டது. நான் 'க்ரியா'வில் பணிபுரிந்த சமயமது. புத்தகம் அச்சாவதற்கு முன் பிரதியைச் செம்மைப்படுத்தும் முகாந்திரமாகத்தான் சம்பத்தோடு பழக்கம். அச்சேறுவதற்கு முன்பு பிரதிகளைச் செம்மைப்படுத்துவதை 'க்ரியா' ஒரு பொறுப்பாக உணர்ந்திருந்தது. 'எடிட்டிங்' என்பது தணிக்கை என்ற அர்த்தத்திலேயே அறியப்பட்டிருக்கும் தமிழ்ச்சூழலில் தன்னை ஊனப்படுத்தும் காரியமாகவே இச்செயலைப் படைப்பாளி கருதுகிறான்.

உண்மையில் திருத்தம் செய்வதென்பது - செம்மைப்படுத்துவதென்பது - பக்க நிர்ணயங்களுக்காகவோ, ஒழுக்கம், அரசியல் போன்ற வரையறைகளுக்காகவோ பிரதியை வெட்டிச் சிதைப்பதல்ல. மாறாக, பிரதிக்கும், வாசிப்புக்குமான உறவில் படைப்பாளி அறியாது பிரதியில் நேர்ந்துவிட்ட சிடுக்குகளை விடுவிப்பதும், படைப்புலகின் இசைமைக்கும் அனுசரணையானதுமான ஒரு செயல்பாடுதான் எடிட்டிங்.

மேலைநாடுகளில் எடிட்டிங் என்பது பதிப்புத் துறையில் முக்கியமான தொழில்சார் அம்சமாக இருக்கிறது. படைப்பாளிகள் சிலர் தங்களுக்கென்று பிரத்யேகமான எடிட்டர்களைக் கொண்டிருக்கிறார்கள். எடிட்டரின் கால அவகாசத்துக்காகப் படைப்புகள் காத்திருக்கின்றன. இங்கு 'எடிட்டிங்' என்பது குறுக்கீடாகவும் தணிக்கையாகவுமே அறியப்பட்டும் உணரப்பட்டுமிருக்கிறது.

ஆரம்பத்தில் சம்பத்துக்கும் என்னோடு அமர தயக்கமிருந்தது. தேவையற்ற ஆசாமி என்ற எண்ணமிருந்தது. முதல் அமர்வுக்குப் பின்னர் அப்பணியில் சம்பத் வெகு உற்சாகமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 'சாவு' கனவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பகுதியின்போது, "இதை நீயே பார்த்துக்கொள். இதை எழுதும்போது சாவு என்னைப் படுத்திய பாடு போதுமப்பா. காய்ச்சலில் விழுந்து தப்பித்திருக்கிறேன். இன்னொரு தடவை அதன் பிடியில் சிக்கிக் கொண்டால் அவ்வளவுதான். எனக்கு பயமாயிருக்கு" என்று எழுந்து உள்ளறைக்குள் போய்விட்டார். அந்த அளவு உக்கிரமான உணர்ச்சிகளில் உழலும் மனிதர் 'சாவு' என்பது இடைவெளி என்று தினகரனுக்கு வசப்படும்போது, கையைத் தரையில் குத்தி, "எவன் இதச் சொல்லியிருக்கான். இதுக்கே நோபல் பரிசு தரணும் என்றார்.

தன் படைப்பூக்கம் மீதும் மேதமையின் மீதும் அபார நம்பிக்கை கொண்டிருந்தவர் சம்பத். 'பணத்தின் மதிப்பு' என்பதை மையமாகக் கொண்டு ஆயிரம் பக்கங்களுக்கும் மேலான பெரிய படைப்பொன்றை எழுதும் உத்தேசமிருந்தது அவருக்கு. இடையில் எழுதிய சில படைப்புகளை ஏதோ ஒரு மன அவசத்தில் எரித்துவிட்டிருக்கிறார். படைப்பாளியின் அருமை உணராத துர்பாக்கிய சூழலில் நாம் நிறையவே இழந்துவிட்டிருக்கிறோம்.

சம்பத் இறந்து பத்து ஆண்டுகளாகிவிட்டன. வாழ்நாளில் புத்தக வடிவில் தன் எழுத்துகளை அவர் பாத்திருக்கவில்லை. அவருடைய பல சிறுகதைகளும் குறுநாவல்களும் இன்னமும் புத்தக வடிவம் பெறவில்லை. ஆர்வமும் அக்கறையுமுள்ள பதிப்பகத்தார் பிரயாசை எடுத்து வெளியிட்டால் காலத்துக்குச் செய்த பெரும் கடமையாக அது இருக்கும்.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்