Jul 19, 2009

ஜி. நாகராஜனின் படைப்புலகம்-சி. மோகன்

சி. மோகன்    (ஜி. நாகராஜன் படைப்புகள் _ புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் முன்னுறையின் சுருக்கம்.)


நவீன தமிழ்ப் புனைகதை இலக்கியப் பரப்பில் ஜி. நாகராஜனின் எழுத்து தனிப் பிராந்தியம். தன் கால வாழ்வோடு கொண்ட தீர்க்கமான, இயல்புணர்வோடு திளைத்த உறவில் அவருடைய படைப்பு மனம் உருவாக்கிய பிராந்தியம். மனிதனின் இயல்புணர்வு களைக் கொண்டாடிய மனத்திலிருந்து விரிந்த பிராந்தியம். சமூகக் கட்டுப்பாடுகளும் அழுத்தங்களும் அதன் சம்பிரதாய ஒழுக்க நியதிகளும் பாலியல் கட்டுப்பாடுகளும் வாழ்வின் சிறகுகளைக் கத்தரித்து யந்திரரீதியான இயக்கத்தைக் கட்டமைத்திருக்கும் நிலையில் படைப்பு மனத்தின் அடிப்படையான சுதந்திர வேட்கையிலிருந்து உருவாகியிருக்கும் கலைப் பிராந்தியம். சமூகத்தின் நெறிப்படுத்திய இலக்குகளைப் பூர்த்தி செய்வதல்ல படைப்பாளியின் பணி. மாறாக, வாழ்வின் இயல்பான பூரண மலர்ச்சிக்கான கனவை வசப்படுத்துபவன் அவன். நிலவும் மதிப்பீடுகளை உதாசீனப்படுத்துவதிலிருந்தும் நிர்மூலமாக்குவதிலிருந்துமே வாழ்வின் இயல்பான மலர்ச்சிக்கான ஆக்கப் பாதை விரிகிறது. வாழ்வின் மீதான சகல பூச்சுகளையும் வழித்துத் துடைத்து வாழ்வை நிர்வாணமாக நிறுத்தி அதன் இயல்பான அழகுகளிலிருந்து தனதான தார்மீக நெறிகளைப் படைப்பிக்கும் மனமே கலை மனம். பூச்சுகளில் சவ விகாரங்களையும் நிர்வாணத்தில் உயிர்ப்பின் அழகுகளையும் கண்ட படைப்பு மனம் ஜி. நாகராஜனுடையது.

சமூகம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த தீர்மானங்களும் கட்டுப்பாடுகளும் அழுத்தங்களும் தனிமனித வாழ்வின் எழுச்சியையும் வீர்யத்தையும் காயடிக்கும் வன்முறையாகிவிட்ட நிலையில் தனிமனிதனின் முழுமையான பூரணத்துவ வாழ்வைக் கோஷிக்கும் குரல் நீட்ஷேயிடமிருந்து எழுந்தது. பாலியல் கட்டுப்பாடுகள் மனித மனத்தில் அரும்பும் மொக்குகளைக் கருக்கும் நிலையில் ஏற்படும் விபரீதங்களை ஃப்ராய்டின் குரல் மொழிந்தது. இலட்சியவாதத்தின் பெயரால் தன்னியல்பான, படைப்புரீதியான தனிமனித வாழ்வின் குரல்வளை திருகப்பட்டிருப்பது அறியப்பட்டது. தனிமனிதனின் மெய்யான உணர்வுகளை வசப்படுத்து வதன்மூலம் வாழ்வின் உண்மையை அகப்படுத்தும் முனைப்போடு மேலை கலை, இலக்கியப் படைப்பாளிகள் விந்தையான கனவுப் பிரதேசத்துக்குள் பிரவேசிக்கத் தலைப்பட்டனர். காரண _ காரிய ரீதியான தர்க்கங்களின் தளைகளிலிருந்து விடுபட்ட சுதந்திரமான கனவுலகு குறித்தும், மாயப்புதிர் அனுபவ உலகம் குறித்துமான வேட்கை படைப்பு மனங்களிடம் உருப்பெற்றது. தமிழில் இலட்சியவாதத்துக்கு எதிரானதும், தனிமனித இயல்புணர்ச்சிகள் சுயமாக வெளிப்படுவதன்மூலம் வாழ்வின் அழகு பூரணமாக விரிவதைக் கொண்டாடுவதுமான முதல் தீர்க்கமான குரல் ஜி. நாகராஜனுடையது. இதில் சிறப்பு என்னவென்றால், கனவுலகின் சுதந்திரத்தில் மலரும் தனிமனித இயல்புணர்வுகளை அகப்படுத்துவதன் மூலமே மெய்மையை அறிய முடியுமென்று உணர்ந்து மேலைக் கலைஞர்கள் பிரயாசைப்பட்டபோது, ஜி. நாகராஜன் வாழ்வின் விளிம்பு நிலையில் மனிதர்களிடம் சுபாவமாக இயல்புணர்வுகள் மொக்கவிழ்வதைக் கண்டதும் அவ்வுலகைப் படைப்பித்ததும்தான். விலைப் பெண்கள், `அத்தான்’கள், உதிரிகள் இவருடைய படைப்புலகை வடிவமைத்தனர்.

`நாளை மற்றுமொரு நாளே’ நாவல் ஜி. நாகராஜனுடைய பிரதானமான படைப்பு. திருவாளத்தான் வேலைகள் செய்து வாழும். கந்தனின் ஒரு நாளைய வாழ்க்கையை அகப்படுத்தும் நாவல். கார்கோட்டை நகரில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அது. தன் குடிசையில் காலைக் கனவிலிருந்து விழித்தெழும் கந்தன், மறுநாள் காலை லாக்கப்பில் மீண்டுமொரு அதிகாலைக் கனவிலிருந்து விழுத்தெழுவது வரையான ஒரு நாளின் நிகழ் சம்பவங்களும், நினைவிலிருந்து கிளர்ந்தெழும் கடந்த காலச் சம்பவங்களும், கிளைக் கதைகளுமாக நெய்யப்பட்டு கந்தனின் 12 ஆண்டு கால வாழ்க்கையை வடிவமைத்திருக்கும் நாவல்.

காலையில் எழுந்தவுடன் உடல் தெம்படைவதற்கும் இயங்குவதற்கும் கந்தனுக்குச் சாராயம் தேவைப்படுகிறது. அந்த ஒரு நாளில் அவன் பலமுறை அங்கங்கே தெம்பேற்றிக் கொள்கிறான். எழுந்தவுடன் குடிசையில் உருட்டிப் புரட்டி சாராயம், பின் விறகுக் கடைக்குப் போய் ஜிஞ்சர், சலூன் சென்று சவரம், வீட்டுக்குத் திரும்பி மீனாவுடன் காலைப் புணர்ச்சி, பின் குளித்துவிட்டு சலவை செய்த எட்டு முழ வேட்டியும் சில்க் சட்டையும் அணிந்துகொண்டு உறையோடு கூடிய ஸ்பிரிங் கத்தியை இடுப்பில் சொருகிக்கொண்டு கந்தன் குடிசையை விட்டுக் கிளம்பும்போது மணி கிட்டத்தட்ட ஒன்பதரை.

பின்னர் வெளியே அந்த நாளில் அவன் மேற்கொள்ளும் காரியங்களில் வெளிப்படுபவை அவனுடைய வாழ்க்கை முறையும், எதிர்ப்படும் நிலைமைகளைச் சாதுர்யமாகக் கைக்கொள்ளும் திறனும். ``நீங்க வாழ்க்கைலே எதைச் சாதிக்கணும்னு திட்டம் போட்டிருக்கீங்க?’’ என்று கேட்கும் முத்துச்சாமியிடம், ``எந்தத் திட்டம் போட்டு சொர்ணத்தம்மா வயத்துல வந்து பொறந்தேன்’’ என்று சிரித்தபடிக் கூறும் கந்தன், ``எல்லார் பிழைப்பும் அப்படியோ இப்படியோ பிடுங்கித் தின்னறதுதான்’’ என்று கருதும் கந்தன், தூங்கிக்கொண்டிருந்த தன்மீது பானையை வீசியெறிந்து உடைத்து நொறுக்கிவிட்டு சிறு வயதிலேயே வீட்டைவிட்டு ஓடிப் போய்விட்ட மகன் சந்திரனைப் பற்றி நினைக்கும்போது, ``அவன் சுயநலத்தில்தான் எத்தனை அழகு? சுயநலத்தை மறைக்க முயன்றால்தான் அது அசட்டுத்தனமாகவோ விகார மாகவோ தோன்றுகிறது’’ என்று சிலாகித்துக்கொள்ளும் கந்தன், தன் கனவொன்றில் சந்திரனைத் தற்செயலாகத் தெருவில் பார்க்கும்போதுகூட அவனிடம் பேசவோ, வீட்டுக்கு அழைத்து வரவோ எண்ணம் கொள்ளாத கந்தன் அந்த நாளில் தன் யோசனையாகவும் அதை நிறைவேற்றவுமான ஒரு காரியம் மேற்கொள்கிறான். அது படைப்பையும் கந்தனையும் விகாசம் பெற வைக்கிறது.

12 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நல்ல ஏற்பாடாக இருக்குமென்று எண்ணி விலைப் பெண்ணாக வாழ்ந்த மீனாவைத் தற்செயலாகக் கோவிலில் சந்தித்த மாத்திரத்திலேயே மணக்க எண்ணி மணந்து கொண்டு பின்னர் தன் திருவாளத்தான்தனங்களோடும், மீனாவை விலைப் பெண்ணாகத் தொழில் புரிய வைத்தும், இவ்வளவு கால வாழ்க்கையை வாழ்ந்த கந்தன் அன்று காலை தன் உடல்நலம் மோசமாகிக்கொண்டு வருவதை உணர்ந்து மீனா குறித்து, ``இதுக்கு ஏதாவது ஏற்பாடு செய்யறதுதான் நல்லது’’ என்று யோசனை கொள்கிறான். அன்று மாலையே அவன் தரகர் அந்தோணியை அவர் வீடு சென்று சந்திக்கிறான். அவர்களுக்கிடையே நடக்கும் உடையாடலின் ஒரு பகுதி:

``. . . சரி இப்ப என்ன விஷயம்?’’ என்றார் அந்தோணி.

``அதான் சொன்னேனே, மீனா விஷயமா.’’

``மீனாவுக்கு இப்ப என்ன?’’

``நல்லாத்தான் இருக்கு. எனக்குத்தான் ஒடம்புக்கு முன்னே மாதிரி இல்லே. மீனாவை ஒரு நல்ல இடமாப் பாத்து ஒரு ஏற்பாடைப் பண்ணிட்டா எனக்குக் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்’’ என்றான் கந்தன்.

``போடா, பைத்தியக்காரா, மீனா தங்கமான பொண்ணு: அது இல்லாட்டி நீ இன்னும் குட்டிச் சுவராப் போவே.’’

``நான் எப்படியும் போறேன். அது எங்காச்சிம் நல்லா இருந்தாப் போதும்.’’

கந்தன் தான் வாழும் வாழ்விலிருந்து தனக்கான தார்மீக நியதி கொண்டிருக்கிறான். சம்பிரதாய ஒழுக்க நெறிகள் அண்டாமல் தன் போக்கில் ஒரு வாழ்வை அமைத்துக்கொண்டு வாழும் கந்தனுக்கு அவன் இச்சமூகத்தில் வாழ்வதனாலேயே தன் வாழ்முறை குறித்த மனச் சங்கடங்களுக்கு ஆளாவதும் நிகழவே செய்கிறது. அநேகமாக சம்பிரதாய ஒழுக்க நியதிகளைச் சார்ந்தியங்கும் பிற மனிதர்களோடு வாழ வேண்டியிருக்கும்வரை இந்நியதிகளின் பிடியிலிருந்து முழு முற்றாக விடுதலை பெறுவதென்பது சாத்தியமுமில்லை. அதில் ஒருவன் எவ்வளவு தூரம் வெற்றியடைந்திருக்கிறான் என்பது முக்கியமான விஷயமுமில்லை. அவற்றிலிருந்து விடுபட்ட வாழ்வை மேற்கொண்டிருப்பதும் அவ்வாழ்வினூடாகத் தன்னிலிருந்து தனதான தார்மீக நியதிகளை உருவாக்கும் முனைப்பும்தான் முக்கியமான விஷயம். கந்தனுக்கு அது கூடிவந்திருக்கிறது. ஜி. நாகராஜனின் படைப்பு மனம் மேலானதாகவும், இவ்வாழ்வோடு அது கொண்டிருக்கும் உறவு அக்கறையும் உண்மையும் தீர்க்கமும் அர்த்தமும் கூடியதாகவும் செழித்திருப்பதை உணர்த்தும் அம்சமிது.

இந்த அம்சம் அவருடைய முதல் படைப்பான குறத்தி முடுக்கு குறுநாவலிலும் வலுவாக வெளிப்பட்டிருக்கிறது. ஆனால், அதன் மையப் பாத்திரமான ஆண் மத்தியதர வர்க்க வாழ்நிலை கொண்டது என்பதாலேயே அப்பாத்திரம் எதிர்கொள்ளும் மன நெருக்கடிகளும் சிடுக்குகளும் அதிகம். ஒழுக்க நியதிகளை உதறி தன் இயல்பூக்கம் சார்ந்து தன் வாழ்வைக் கொண்டாடுகிறபோதிலும் அப்பாத்திரம் விலைப்பெண்ணான தங்கத்திடம் கொள்ளும் உறவு வலுப்பெறும்போது தன் வார்ப்புசார்ந்த உடமைப்படுத்திக் கொள்ளும் மனநிலைக்கும், உலைச்சல்களுக்கும் ஆளாகிறது. அவள் வாழ்நிலையைச் சீண்டிக் குதறும் கோபமும் பதற்றமும் அவனிடம் சீற்றம் கொள்கின்றன. அச்சீற்றங்களிலிருந்து மீண்டு சகஜம் கொள்ளவும் அவனுக்கு முடிகிறது. அதே சமயம் தங்கத்துக்குப் பொறுப்பேற்று நீதிமன்றத்தில் சாட்சி சொல்வதிலும் அவளை மணம் புரிந்துகொள்ள இயல்பாக விழைவதிலும் அவனுடைய மேலான தார்மீகங்கள் வெளிப்படுகின்றன. படைப்பாளிக்கும் காலத்துக்குமான உறவில் ஜி. நாகராஜன் பதித்திருக்கும் பிரத்தியேக அடையாளமிது. இது கருத்தின்மீது கொண்ட கரிசனத்திலிருந்து உருவாகாமல் புனைவின் இயல்பான மலர்ச்சியில் அது தானதாகக் கொண்டிருக்கும் மகரந்தமாக உள்ளுறைந்திருக்கிறது.

குறத்தி முடுக்கு தெளிவாக வரையறுக்கப்பட்ட இரு தளங்களில் ஒன்று மாற்றி ஒன்றாக நகர்கிறது. ஒன்று மைய ஆண் பாத்திரம் தங்கத்திடம் கொள்ளும் முதல் தொடர்பிலிருந்து விரிந்து செழிக்கும் உறவு சார்ந்தது. மற்றொன்று, குறத்தி முடுக்கில் தொழில் புரியும் பெண்களின் நிலை பற்றிய ஒரு வரைமுகம். இப்பகுதி மெல்லிய ஆனால் அதிர்வூட்டும் கோட்டுச் சித்திரங் களாக உருப்பெற்றிருக்கிறது. இது, படைப்புக்கு வலுவூட்டும் வண்ணச் சாயைகளோ, அடர்த்தியோ பெறாததால் இப்படைப்பு எழுச்சி பெறவில்லை.

இப்படைப்பில் தங்கம் அபூர்வமான பெண். கதையின் நிகழ்காலத்தில், காலத்தால் கனிந்து, தான் ஈடுபடும் எந்த ஒன்றிலும் முழுமையான அர்ப்பண உணர்வோடு தன்னை ஒப்படைக்கிறாள். மறுபுறம் குறத்தி முடுக்கில் வாழும் பெண்களின் நிலை பரிதாபமாய் இருக்கிறது. ஒருத்திக்கு மனநிலை பிறழ்கிறது. இன்னொருத்தி ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளப் பிரயாசைப்பட்டு அதன் காரணமாக வேதனை கொள்கிறாள். வேறொருத்திக்கு வாய்த்ததோ அவள் காதலைச் சுரண்டும் எத்தனாக ஒரு காதலன். மற்றொருத்தி தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். இவர்கள் மீது மெல்லிய பச்சாதாப உணர்வு படரும் விதத்திலான வெளிப்பாடு இப்படைப்பின் பலவீனம். மத்தியதர வர்க்கப் பார்வையின் லேசான நிழல் படிந்திருப்பதால் ஏற்பட்டிருக்கும் பலவீனம்.

ஜி. நாகராஜனின் சிறுகதைகள் இருவேறு கால கட்டத்தைச் சேர்ந்தவை. 1. அவருடைய ஆரம்ப காலச் சிறுகதைகள். இவை கண்டதும் கேட்டதும் தொகுப்பு வரையானவை. 2. அவருடைய படைப்பூக்கம் செழிப்படைந்திருந்த 72_74 வரையான மூன்று ஆண்டுகளில் எழுதிய கதைகள். பொதுவாக, ஜி. நாகராஜன் தன் சிறுகதைகளில் பல்வேறு வாழ்நிலைக் களன்களைக் கையாண்டிருக்கிறார். தமிழ்ச் சிறுகதையின் வளமான மரபில் ஜி. நாகராஜனின் வருகை துணிச்சலான எழுத்து என்பதிலேயே முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் துணிச்சல், மனிதன் குறித்தும் சமூகம் குறித்துமான அவருடைய அவதானங்களிலிருந்தும், பார்வையிலிருந்தும் வெளிப்பட்டிருப்பது. அதிர்ச்சிக் காகவோ, கிளர்ச்சிக்காகவோ, பரபரப்புக்காகவோ எழுத்தில் காட்டிய துணிச்சல் இல்லை இது. வாழ்வையும், எழுத்தையும் வெகு சுபாவமாக, மனத் தடைகளோ, இறுக்கங்களோ, ஒழுக்க நியதிகள் சார்ந்த பதற்றங்களோ இன்றி அணுகியிருப்பதில் விளைந்திருக்கும் துணிச்சல்.

கிழவனின் வருகையிலிருந்து தொடங்கும் இரண்டாம் கட்டச் சிறு கதைகளில் நுட்பமான படைப்பு மொழியும், செய்நேர்த்தியும், பன்முகத் தன்மையும், நவீன வெளியீட்டுக் கூறுகளும் கொண்ட சிறுகதைகளாக கிழவனின் வருகை, மனிதன், இலட்சியம், எட்டு முழ வேட்டியும் டெர்லின் சட்டையும் அணிந்த மனிதர் ஆகிய நான்கும் குறிப்பிடப்பட வேண்டியவை. கிழவனின் வருகை குறியீட்டுத் தன்மையில் தளமாற்றம் கொள்ளும் கதை. கிழவனைக் காந்தி எனக்கொண்டதொரு வாசிப்புக்கு இடமளிப்பது. அரசியல் _ சமூக _ கலாச்சார நிலைமைகளில் நேர்ந்துள்ள அவலத்தைப் படைப்பு மொழியில் இக்கதை விரித்திருக்கிறது. ஒரு மனிதனின் வாழ்நிலை தலைகீழ் மாற்றத்துக்கு ஆளாவதை அபத்தப் பாங்கிலும் குறியீட்டுத் தன்மையோடும் அகப்படுத்தி யிருக்கும் மற்றொரு நவீனச் சிறுகதை மனிதன். படைப்பாளியின் சுய வாழ்க்கை அம்சங்கள் சார்ந்த வாசிப்புக்கும் இடமளிக்கக்கூடிய சிறுகதை. இலட்சியம் மதுரையில் அரங்கேறிய உலகத் தமிழ் மாநாட்டுத் திருவிழா பற்றிய பின்புலம் கொண்டது என்று கருத இடமளிப்பது. இத்தகைய அரசியல் கலாச்சாரக் கூத்து எதற்குமே பொருத்தப்பாடு உடையதாகக் தள மாற்றம் பெறுவதாகவும் குறியீட்டுப் பொதுமை பெற்றிருப்பது. இவருடைய சிறந்த கதைகளில் ஒன்றாக எட்டு முழ வேட்டியும் டெர்லின் சட்டையும் அணிந்த மனிதர் மாயப் புதிர்த் தன்மையில் விகாசம் பெற்றிருப்பது. குறத்தி முடுக்கு குறு நாவலில் தேவயானை என்ற பெண் பற்றிய கோட்டுச் சித்திரமாக இடம் பெற்றிருக்கும் பகுதியை மீள் படைப்பாக்கம் செய்து இக்கதையைப் படைத்திருக்கிறார். பத்தாண்டு கால இடைவெளியில் அவருடைய படைப்பு மனம் பிரக்ஞை வெளியில் விகாசம் பெற்றிருப்பதை அறிய முடிகிறது.

ஜி. நாகராஜனின் எழுத்துக்கள் அவை எழுதப்பட்ட காலத்தை விடவும் கால் நூற்றாண்டு கடந்த நிலையில் மேலும் துலக்கம் பெற்று முக்கியமானவையாகவும், அவசியமானவையாகவும் ஒளிரத் தொடங்கியிருக் கின்றன. காலத்தின் பார்வை மேலும் நீடித்து இன்னும் நெருக்கமாக அவற்றின் மீது படியுமென்பதில் சந்தேகமில்லை. அப்போது கலை குறித்த வாழ்வு குறித்த நம் பார்வையில் தீட்சண்யம் கூடியிருக்கும். நம் வாழ்வும் புதிதாக மலர எத்தனிக்கும்.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்