Jul 16, 2009

ந. பிச்சமூர்த்தியின் படைப்புப் பயணம்-ஜெயமோகன்

ஜெயமோகன்

[22_08_2001 மாலை சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் நடந்த ந. பிச்சமூர்த்தி நினைவுக் கூட்டத்தில் ஆற்றிய உரை]

சிறந்த எழுத்தாளர்கள் இருவகை. மானுடத்தின் அடிப்படை, நன்மையே என்ற நம்பிக்கை உடையவர்கள் முதல் வகையினர். மானுடத்தின் தீமையினால் இவர்கள் சீண்டப்படுகிறார்கள், சமநிலைகுலைகிறார்கள். நன்மை மீதான தங்கள் நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ள போராடுகிறார்கள். அதன் போக்கில் ஒரு விடையை, நிலைபாட்டை அடைகிறார்கள். அல்லது நம்பிக்கை இழந்து வெறுமையில் முட்டி நின்றுவிடுகிறார்கள்.

இரண்டாம் வகையினர் மானுடத்தின் அடிப்படை இயல்பு, தீமையே என்ற நம்பிக்கை உடையவர்கள். மானுடத்தின் விரிவில் இருந்து நன்மையைத் தேடித் திரட்டி எடுக்க, நம்பிக்கையை நிறுவிக் கொள்ள தங்கள் முழு படைப்பு சக்தியாலும் தீவிரமாக இவர்கள் போராடுகிறார்கள். இப்போக்கும் தரிசனங்களையும் தத்துவ நிலைபாடுகளையும் உருவாக்குகிறது, சிலசமயம் வெறுமையையும்.

உலகத்துப் படைப்பாளிகள் அனைவரையும் இந்தக் கோணத்தைப் பயன்படுத்தி இரண்டாகப் பிரித்து விடலாம். இது ஒரு பகுப்பாய்வு அல்லது விமரிசனமுறை என்பதைப் பார்க்கிலும் ஒருவகை ரசனை முறை என்று கூறுவதே சரியானது. இதன்மூலம் உருவாகும் ஒரே பயன், நாம் படைப்பாளிகளைக் கூர்ந்து கவனிக்கிறோம் என்பதே. உண்மையில் இச்சட்டத்தைப் பயன்படுத்தி படைப்பாளிகளை ஆராயப் புகுந்தோமெனில் முக்கியப் படைப்பாளிகள் எப்படி சட்டகத்திற்கு வெளியே வழிந்து பரவி செல்கிறார்கள் என்பதையே காண நேரும். ஏனெனில் அது, படைப்பின் அடிப்படை இயல்பு. படைப்பியக்கத்தைச் சட்டகங்களுள் ஒடுக்கி நிறுத்த முடியாது. அதேசமயம் சட்டகப்படுத்தாமல் சட்டகங்களுக்கு வெளியே பரவும் படைப்பின் உயிரியக்கத்தைக் கண்டறியவும் இயலாது. படைப்பாளியை ஒட்டுமொத்தமாக வகுத்துக் கொள்ள முயல்வது அவனுடைய நுட்பங்களுக்குள் நுழைய மிகச்சிறந்த வழிமுறையாகும் என்பது என் அனுபவம்.

மீண்டும் வருகிறேன். தல்ஸ்த்தோய் மானுட நன்மையில் ஆழமான நம்பிக்கை உடையவர் என்றால் தஸ்தோயெவ்ஸ்கி மானுடத்தின் தீமையை நம்புகிறவர். இருவரும் தேடுவது மனிதனுள் உறையும் `கிறிஸ்து’வையே. என் இயல்பின்படி எனக்கு முதல்வகை படைப்பாளிகள் மீதுதான் எப்போதுமே ஆழமான ஈடுபாடு உள்ளது. ஹெர்மன் ஹெஸி, தாமஸ் மன், நிதாஸ் கசன் சாகிஸ், ஐசக் பாஷவிஸ் சிங்கர்.... இரண்டாம் வகைப் படைப்பாளிகளில் இருளின் வழியாக ஒளிநோக்கி முகம் திருப்ப முடிந்த தஸ்தயேவ்ஸ்கி எனக்கு முக்கியமானவர்; இருண்ட கோட்டையில் சுற்றிவரும் காஃப்காவும் காம்யூவும் எனக்கு முக்கியமானவர்கள் அல்ல; ஹெமிங்வேயை ஒரு இலக்கியக்கர்த்தாவாகவே என் மனம் ஏற்கவில்லை.

தமிழுக்கு வருவோம். `இருள் என்பது குறைந்த ஒளி’ என்று கூறியவன் முதல் இனத்தவன். `பற்றுகோடாக எதுவுமே இல்லையே’ என்று பரிதவித்தவன் இரண்டாம் வகை. பாரதியையும் புதுமைப்பித்தனையும் இப்படி இரண்டு வகைமாதிரிகளாகக் கொள்ளும் போக்கு தமிழில் ஏற்கெனவே வேரோடியுள்ளது. குறிப்பாக, சுந்தர ராமசாமி அவருடைய பிச்சமூர்த்தியின் கலை _ மரபும் மனித நேயமும் என்ற நூலில் இதை விரிவான ஒரு அட்டவணைக்குப் பயன்படுத்துகிறார். மணிக்கொடியுகப் படைப்பாளி-களில் புதுமைப்பித்தனைத் தவிர பிறர் அனைவரையும் பாரதிக்குப் பின்னால் நிற்க வைத்து புதுமைப்பித்தனை நேர் எதிர்வரிசையில் சமமாக அமரச் செய்கிறார்.

ந. பிச்சமூர்த்தியை அனைத்து வகையிலும் பாரதியின் பின்னால், மிக நெருக்கமாக நிறுத்தமுடியும். அவரைப் புரிந்து கொள்ள பாரதியில் இருந்து அவர் வேறுபடும் இடங்களையும், புதுமைப்பித்தனில் இருந்து அவர் முரண்படும் இடங்களையும் அடையாளம் செய்து கொண்டால் போதும். பிச்சமூர்த்தி குறித்த விவாதங்-களின் உடன் வினாவாக நம்முள் இலக்கியத்-தின் உள்ளே எப்போதும் இருந்தபடி இருக்கும் இந்தப் பிரச்சினையும் _ மானுடனின் அடிப்படையான நல்லியல்பு குறித்த நம்பிக்கை குறித்தது _ எழுந்த-படியேதான் இருக்கும்.

ந. பிச்சமூர்த்தியின் கவிதைகளில் தெரியும் நம்பிக்கை அம்சம் எத்தகையது? ஒளியின் அழைப்பு என்ற ந. பிச்சமூர்த்தியின் கவிதையை ஒரு முதற்கட்ட உதாரணமாகக் காட்ட விரும்புகிறேன். பொதுவாக எந்த ஒரு படைப்பாளியைப் பற்றிப் பேசும்போதும் அவனுடைய மிகச்சிறந்த படைப்பு ஒன்றே எடுத்துக் கொண்டு அவனுடைய மொத்தப் படைப்பியக்கத்திற்கும் அதைப் படிமமாக ஆக்குவது ஒரு நல்ல உத்தியாகும். ஏனெனில் மிகச்சிறந்த படைப்புகளில் படைப்பாளியின் பலங்களும் பலவீனங்களும் எல்லாமே நுட்பமாக பிரதிபலிக்கும். ஒளியின் அழைப்பு அத்தகைய ஒரு கவிதை. `மணிக்கொடி’ இதழில் [1934 அக்டோபர் 28] வெளிவந்தது இக்கவிதை. `பிட்சு’ என்ற பெயரில் இக்கவிதையை அதில் ந. பிச்சமூர்த்தி எழுதியிருக்கிறார். அதே இதழிலேயே `உதர நிமித்தம்’ என்ற கதையையும், ந. பிச்சமூர்த்தி சொந்தப் பேரில் எழுதியுள்ளார்.

இதோ விரிந்து வளரும் மரம்
பட்டப்பகலில் இரவைக் காட்டும் அதன் நிழல்
மரத்தடியில் ஒரு கழுகு...
ரத்தம் செத்த சோனிக் கழுகு...

பெரிய மரத்தின் பசிக்கு ஆளாகி, சுரண்டப்பட்டு, ரத்தம் செத்த சோனிக் கழுகு. சோனியாகக் காரணம் வாழ்க்கைப் போர்தான். அதற்காக அது விதியென்று-பேசி வீணில் இருக்கவில்லை. தியாகம் என்று நியாயம் கற்பிக்கவுமில்லை.

பிறவி இருளை துளைத்து
சூழ்வின் நிழலை வெறுத்து முகமுயர்த்தி
எப்படி விண்ணினின்று வழியும் ஒளியமுதைத் தேடிப்போகிறது.
ரவியின் கோடானுகோடி விரல்களின் அழைப்புக்கிணங்கி
எப்படி உடலை நெளித்து நீட்டி வளைந்து வளருகிறது!
என்று சித்திரப்படுத்தும் ந. பி.
முண்டி மோதும் துணிவே இன்பம்
உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி

என்று கண்டடைகிறார்.

ஜீவா விழியை உயர்த்து
சூழ்வின் இருள் என்ன செய்யும்?
அமுதத்தை நம்பு ஒளியை நாடு
கழுகு பெற்ற வெற்றி நமக்குக் கூடும்

எனத் தன்னிடமே கூறிக் கொள்கிறார். இது அவரது ஆரம்பகாலக் கவிதை, அனேகமாக அவர் எழுதிய மூன்றாவது கவிதை இது.

அந்த மணிக்கொடி இதழின் மற்ற தலைப்புகள் இக்கவிதையுடன் எப்படித் தொடர்பு கொண்டுள்ளன? `தனுவுண்டு சத்யாக்ரகம் அதன் பேர்!’ என்று அதை கூறுகிறது ஒரு கட்டுரை. `பழையன கழிதலும் புதியன புகுதலும் _ இளமையின் எழுச்சியும் கிளர்ச்சியும்’ இன்னொரு கட்டுரை. `ஆசியாவை விழுங்கினதும் ஐரோப்பா மழுங்கினதும்’ நேருவின் கட்டுரை. `காங்கிரஸ் பிறந்த கதையும் வளர்ந்த கதையும். அன்று சிரித்தார்கள் இன்று எதிர்க்கிறார்கள்’ என்று இன்னொரு கட்டுரை.

ஒரு பெரிய போராட்ட உற்சாகத்தின் காலகட்டம் என்ற பிரமையைத் தருகிறது மணிக்கொடியின் இவ்விதழ். இது ஒரு பக்கம் தான். மறுபக்கம் ஒன்றுண்டு, ஒத்துழையாமை இயக்கத்தின் துவளல் காரணமாக காந்தியடிகள் காங்கிரஸ் பேரியக்கத்திலிருந்து விலகி நின்ற காலம். பாபு ராஜேந்திர பிரசாத் காங்கிரஸ் தலைவர். சூழலில் ஒரு சோர்வு படர்ந்திருந்தது என்று பிற சமகாலக் குறிப்புகளிலிருந்து ஊகிக்கலாம். மணிக்கொடியின் இவ்விதழில் `எங்கிருந்தாலும் ஓடிவருவேன் _ தேசத்துக்கு காந்தியடிகள் நிபந்தனை’ என்ற கட்டுரை ஒன்றும் பிரசுரமாகியுள்ளது. இக்கட்டுரையின் உள்தொனி தெளிவானது, காந்தியடிகள் விலகியிருக்கிறார் என்ற உண்மை. அவர் வருவார் என்ற எதிர்பார்ப்பை விதைக்க முயல்கிறது இக்கட்டுரை. ஆகவே, `சூழ்வின் இருள்’ தான் உண்மை. மணிக்கொடியின் பிற கட்டுரைகளில் உள்ள தீவிரமான உற்சாகம் ஒரு சுயபாவனை. அது அப்போது தேவைப்படுகிறது போலும்.

ந. பிச்சமூர்த்தி `ஜீவா விழியை உயர்த்து’ என்று மீண்டும் மீண்டும் தன்னை நோக்கி, தன் சூழலை நோக்கி கூவியிருக்க வேண்டும். அக்கவிதை ஒளியைக் குறித்ததா இல்லை இருளைக் குறித்ததா என்று சொல்லுவது சிரமம். அமுதம் பொழியும் வானம் ஒவ்வொருவரின் தலைக்கு மேலேயும் எழுந்து பரந்துள்ளது குறித்து அவருக்கு ஐயமில்லை. அதை நோக்கி எழுவதே உயிரின் தர்மம் என்ற நம்பிக்கையே அவரது சாரம். ஒரு உயிரின் இயல்பான வேட்கை வானமுதம் மட்டுமே என்ற தரிசனம்தான் அவரை எழுதச் செய்கிறது. ஆயினும் சூழலின் இருள், சுரண்டும் வாழ்க்கைப் போட்டி, இருத்தலின் கசப்பான விதிமுறைகள் அவருக்குச் சவாலாக அமைகின்றன.

அவரது கதை `உதர நிமித்தம்’ இதற்கு எடுத்துக்காட்டு `வயிற்றுக்காக’ என்று பொருள்படும் அத்தலைப்பே கூறிவிடுகிறது. மனித நிலைமை குறித்த ஒரு தரிசனம், கூடவே மனித வாழ்வின் தவிர்க்க முடியாத போலி வேடங்கள் ஆகியவை குறித்த பிரக்ஞை இரண்டுக்கும் இடையேயான கூர்மையான முரண்பாட்டைச் சொல்லும் இக்கதை அவர் இருந்த `சூழலின் இருள் மங்கலை’ சுட்டிக் காட்டுவது (இலக்கிய படைப்பு என்ற முறையில் மிக சாதாரணமானது இது என்பதையும் கூறிவிடுகிறேன்) பாரதியில் இருந்து பற்ற வைத்துக் கொண்ட `ஒளிப்பிரக்ஞை’ ஒரு பக்கம், உதர நிமித்தம் அல்லாடும் அன்றாட வாழ்க்கை மறுபக்கம். இலட்சியவாதியின் தத்தளிப்பு இங்கு தொடங்குகிறது. பிச்சமூர்த்தியின் படைப்புலகு இங்குதான் தொடங்குகிறது. இப்பாதை-யினூடாகவே நகர்கிறது.

இதே இதழ் மணிக்கொடியில் புதுமைப்பித்தன் சொ. விருத்தாசலம் என்ற பெயரில் `கவிஞனின் மோகனக் கனவு’ என்று கவிதை குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இவ்விஷயத்துடன் தொடர்புபடுத்தி யோசிக்க வேண்டிய விஷயம் இது. கவிதை யதார்த்தத்தின் குரலாகவும், யதார்த்தங்களை உண்டு பண்ணுவதாகவும் புரிந்து கொள்ளப்பட்டுள்ள இன்று இது மிகப் பழைய ஒரு வாதம் ஆயினும் அன்று ஏறத்தாழ அத்தனைக் கவிஞர்களையும் ஆண்ட பிரக்ஞை இது. ந. பிச்சமூர்த்தி கூறும் அமுதத்தை உதிர்க்கும் அந்த வானம் கவிஞனின் மோகனக் கனவு மட்டும் தானா?

ந. பிச்சமூர்த்தியின் இன்னொரு முக்கிய கவிதையான `கிளிக்குஞ்சு’ அவரது போராட்டத்தை மேலும் தெளிவாகச் சுட்டுவது.

கூட்டிலிருக்கும் கிளிக்குஞ்சே
கண்மூடி ஏங்காதே
உன் பஞ்சரம் சிறையல்ல

என்ற முதல் வரியே கூண்டுக்கும் வானுக்குமான போராட்டத்தை, தீராத ஏக்கமாகத் தொடரும் ஒளிவேட்கையை சுட்டிவிடுகிறது.

மனமே காய்கனிகளின் ரசமே தெவிட்டா அமுதம்
மலர்களின் மணமே தெய்வ வாசனை
ஸ்பரிசமே தெய்வத் தீண்டல்
பார்வையே ஒளியின் அலை

என்று புலன்களையே விடுதலையின் கால்வாயாக, பிரபஞ்சத்தையே ஈசானாகக் கண்டு அக்கவிதை முடிவடைகிறது.

ந. பிச்சமூர்த்தி கலையின் எதிர்மறை அம்சம் என்ன? அவரை ஓர் இலக்கியப் படைப்பாளியாக எப்படி மதிப்பிடலாம்?

நான், ஒரு வாசகனாகவும் விமரிசகனாகவும், எழுத்தாளனாகவும் ந. பிச்சமூர்த்தி குறித்து மிதமான மரியாதையையே கொண்டிருக்கிறேன். ஒரு வாசகனாக அவரது பல படைப்புகள் என்னைக் கவரவில்லை. ஒளியின் அழைப்பு, கிளிக்குஞ்சு, சாகுருவி, ஆத்தூரான் மூட்டை போன்ற சில கவிதைகள் ஞானப்பால், மாங்காய்த்தலை முதலிய சில கதைகள் எனக்குப் பிடித்தவை. ஒரு பெரும் இலக்கியப் படைப்பாளியாக என் மனதில் அவரை நிறுவ இவை போதுமானவை அல்ல என்றுதான் படுகிறது. ஒரு விமரிசகனாக நான் ந. பிச்சமூர்த்தியை தமிழ் இலக்கிய மரபின் முக்கியமான முன்னோடியாகக் கருதுகிறேன். நவீனத் தமிழ்ச்சிறுகதை, புதுக்கவிதை ஆகியவற்றுக்கான அழகியல் அடிப்படை-களை உருவாக்கியதில் அவரது பங்கு முக்கியமானது. ஒரு இலக்கியவாதியாக தன்னை அவர் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என்று எதிர்மறையாகவும் மதிப்பிடுவேன். அதாவது இலக்கியவாதி தன் தேடலை முழுக்கவும் இலக்கியத்தினூடாகவே நிகழ்த்த வேண்டும். அவனது பாதை, அவனது ஊடகம், அவனது ஆயுதம் அதுவேயாகும். அவனது ஆன்மிகமும், அரசியலும் கூட அதனூடாக அவன் கண்டடைய வேண்டியவை மட்டுமே. பிரம்மம் அவன்முன் இலக்கிய வடிவமாகவே எழுந்தருளல் வேண்டும். ந. பிச்சமூர்த்தியின் தேடல்கள் (ஆன்மிகத்திலும், தத்துவத்திலும்) இலக்கியத்தினூடாக நிகழவில்லை என்பதை அவர் படைப்புகள் காட்டு-கின்றன என்று எனக்குப் படுகிறது. அவரது ஆளுமை-யில் பலபகுதிகள் கவிதைகளினூடாக அவ்வப்போது தெரிகின்றன. அவருக்கு அத்வைத ஈடுபாடு இருந்திருக்-கிறது. பக்தி இலக்கியத்தின் மீது பிடிப்பு இருந்திருக்-கிறது. நாமறியாது, ஒளிவிழாத பகுதியில் அவரது தேடல் நடந்து கொண்டிருந்திருக்-கிறது. அங்கு கண்டதை இங்கு கூறவே அவர் முயல்கிறார். ஆகவே, அவரது தேடல் வடிவம் சார்ந்ததே. பாரதியின் வசன கவிதையில் தொடங்கி நவீனத்துவக் கவிதையின் விளிம்பு வரை அவரது பயணம் நகர்ந்து வந்தது இந்த வடிவத் தேடலின் விளைவாகவேயாகும். மணிக்கொடி-யில் 1934இல் வெளியான `பிரிவில் தோன்றும் பேரின்பம் என்ற முதல் கவிதையை `பாரதியின் வசன கவிதையின் பலவீனமான பிரதி’ என்று கூறிவிடலாம். சாகுருவி ஒரு நவீனயுகக் கவிதை. தமிழ்க் கவிதையில் உருவான முதல் நவீனத்துவப் பிரதியும்கூட. இப்பயணமே ந. பிச்சமூர்த்தியை தமிழுக்கு முக்கியமானவராக ஆக்குகிறது. மூன்றாம் தலைமுறையின் ஒரு எழுத்தாளனாக என்னை ந. பிச்சமூர்த்தி பாதிக்கவே இல்லை. கண்டடைந்தபின் கூறுவதற்காக மேடையமர்ந்-தவர் அவர். எனக்கு அமர்தலில் நம்பிக்கை இல்லை. ஓயாத தத்தளிப்புடன் முட்டிமோதி அலைந்து ரயில்நிலையத்தில் செத்தவன்தான் எனக்கு முன்னோடி.

ஒரு படைப்பிலக்கியவாதியாக ந. பிச்சமூர்த்தியை பலவீனப்படுத்திய அம்சம் என்ன?

இது ஒரு விரிவான நூலுக்கான தலைப்பு. இவ்வாறு கூறுகிறேன். இலட்சியவாதக் கனவை முன்வைத்த ந. பிச்சமூர்த்தி அதற்கு எதிரான `சூழலின் இருளை’ மிக எளிமையாக உருவகப்படுத்திக் கொண்டார். அவரது படைப்புலகில் உள்ள மானுடத் தீமை மிகமிகப் பலவீனமானது. அதை வென்று `வானின் ஒளியமுதுக்கு’ சிரம் நீட்ட ஓரிருமுறை உடல் நெளிந்தாலே போதுமானது.

ந. பிச்சமூர்த்தி தன் காலகட்டத்து இருளை நோக்கி அரைக்கண் பார்வையையே திருப்பினர். அவர் கதைகளில் தீவிரமான, அத்தனை சுலபமாக இலட்சியவாதத்தால் பதில் கூறிவிட முடியாத பிரச்சினைகள் இல்லை. எம். வேதசகாய குமாரை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன். `கோபாலய்யங்காரின் மனைவி’ என்ற புதுமைப்பித்தனின் கதையே உண்மையில் தமிழ்ச்சூழலால் பாரதியின் இலட்சியவாத `ஒளி வேட்கை’க்கு எதிராக விடப்பட்ட முதல் அறைகூவல். அது உருவாக்கும் `அப்பட்டமான’ யதார்த்தப் பிரக்ஞையை பாரதி வாரிசுகளின் இலட்சியவாதம் எதிர் கொண்டிருக்குமானால் அவர்கள் பெரும்படைப்புகளை உருவாக்கும் பெரும் நெருக்கடிக்-குள் சென்று விழுந்திருப்பார்கள். அப்படி நிகழவில்லை. ந. பிச்சமூர்த்தி எழுதிய அதே மணிக்கொடி இதழில்தான் `கோபாலய்யங்காரின் மனைவி’யும் வெளிவந்தது என்பது ஒரு முக்கியமான விஷயம். ஆனால், அதை ந. பிச்சமூர்த்தி எதிர்கொள்ளவில்லை.

சாதியால் பிளவுண்டு, மானுடச் சிறுமைகளால் சிதைந்து, கோழைத்தனத்துள் ஊறிக் கிடந்த ஒரு சூழலில் நின்று கொண்டு ஒரு கவிஞன் `ஜீவா விழியை உயர்த்து’ என்று சொல்லலாமா என்ன?

தஸ்தயேவ்ஸ்கி விழியை உயர்த்துமிடம், `போரும் அமைதியும்’ என்ற மாபெரும் நாவலிலேயே ஒரே ஒரு இடம்தான். ஆன்ட்ரூ இளவரசன் நெப்போலி-யனுடனான போரில் புண்பட்டு விழுந்து கிடக்கும் மரணத்தின் விளிம்புத் தருணம். மற்ற தருணங்களில் எல்லாம் மானுடத்தின் மகத்தான நாவலாசிரியனின் பார்வை மண்மீதுதான். மனிதர்கள் மீதும் இயற்கை மீதும் தான். அதுவே மகத்தான கலையை உருவாக்-கியது. ந. பிச்சமூர்த்தி மூன்றாவது கவிதையிலேயே விழிகளை உயரத் தூக்கிவிட்டார்.

ஆகவே, ந. பிச்சமூர்த்தியின் படைப்புலகில் இலக்கியத்தின் ஆதாரமான போராட்டம், முரண்பாடுகளில் மோதிச் சிதறி முன்னகரும் கலைப்பயணம் நிகழவில்லை. பிட்சு முதலிலேயே சின் முத்திரையுடன் அமர்ந்து விட்டார். அமர்ந்தபின் அவர் கூறியவை முக்கியமான உண்மைகள் அல்லவா என்று கேட்கலாம். இலக்கியம் கூறுவதற்காக உள்ள ஊடகமல்ல. தேடலுக்கான ஊடகம் அது. இலக்கியம் காட்டும் உண்மை அதன் புனைவின் ஒரு பகுதி மட்டுமே. இலக்கியத்திற்கு வெளியே அதற்கு மதிப்பில்லை. அப்படைப்பை படிக்கும் வாசகன் தன் தேடலினூடாகத் தன் உண்மையைக் கண்டடைய அது வழிவகுக்கிறது. அவ்வுண்மையே _ அதற்கு அப்படைப்புடன் எவ்விதமான நேரடித் தொடர்பும் இல்லாவிட்டாலும் கூட, அந்த படைப்பு உருவாக்கும் உண்மை ஆகும். எனக்கு தஸ்தயேவ்ஸ்கி மிக முக்கியமானவர். ஆனால், அவர் `கூறும்’ உண்மைகள் ஏதும் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர் நூல்களினூடாக நான் அடைந்தவையே எனக்கு முக்கியம். அவர் தன் நூல்களின் பரப்பில் உணர்ச்சிகளையும் யதார்த்தங்களையும் மோதவிட்டு உருவாக்கும் மாபெரும் மானுட நாடகம்தான் எனக்கு முக்கியம். அங்குதான் அவர் தன் தேடலையும் நிகழ்த்துகிறார். அதை எழுதாது முடிவுகளை மட்டுமே அவர் எழுதியிருப்பாரெனில் அவர் எனக்கு ஒரு படைப்பாளியே அல்ல. ந. பிச்சமூர்த்தி பெரும்பாலும் முடிவுகளையே எழுதினார். மோதலும் பயணமும் அவரது கவிதைகளில், அதிகமும் வடிவரீதியான தேடலில், மட்டுமே நிகழ்ந்தன.

கவிதையின் [கலைகளின்] சித்தாந்தம் குறித்து எழுதுகையில் ந. பிச்சமூர்த்தி எழுதுகிறார். ``அழகுத் தெய்வமும் அன்புத் தெய்வமும் அகத்துள் அடிவைத்துச் செல்லும் கால் கலையுணர்ச்சி பொங்குகிறது’’. [காவியத்தின் மூன்று கிளைகள். கலை விளக்கம் மணிக்கொடி 1935 ஜனவரி] கலைகளை வாழ்க்கைக்கு மறுமொழியாகவோ, வாழ்வின் விடுதலையாகவோ, வாழ்வு மீதான நேசமாகவோ காணலாம் என்கிறார் ந. பிச்சமூர்த்தி. இக்கட்டுரையில் ருஷ்ய தேச இலக்கியம் குறித்து அவர் அறிந்திருப்பதற்கான தடயங்கள் உள்ளன. இரண்டாம் வகை எழுத்துக்கான உதாரணமாக அவற்றை அவர் சுட்டவும் செய்கிறார்.

ஆனால், இந்த அழகுதெய்வமும் அன்புத் தெய்வமும் தங்கள் நிழலுடன் மட்டுமே அகத்துள் அடியெடுத்து வைக்க முடியும் என்கிறது இந்திய செவ்வியல் மரபு, சீதேவியின் நிழல் மூதேவியேதான். அவளது பின்பக்கமே மூதேவி என்று இன்னொரு ஐதீகம். இன்னொரு ஐதீகப்படி அவள் சீதேவியின் அக்கா. அவர்கள் பிரிக்க முடியாதவர்கள். அவர்களின் தீராத மோதலில் கலையைக் கண்டது செவ்வியல். நமது சிற்ப மரபில் இதற்கு எண்ணற்ற உதாரணங்களை காணலாம்.

அப்படியானல் ந. பிச்சமூர்த்தியை நமது மரபின் செவ்வியல் பண்புகளின் வழிவந்தவர் என்று கூறிவிட முடியாது என்பது தெளிவாகிறது. அது உருவகிக்கும் முழுமையும் சமநிலையும் அவரது கலைப்பிரக்ஞைக்குள் இல்லை. அவர் கற்பனாவாதிதான் (ரொமான்டிக்) அவரது கற்பனாவாதமே மரபில் இருந்து `உகந்த’ `இனிய’ விஷயங்களைப் பொறுக்கச் செய்தது. சூழலில் இருந்து `எளிய’ விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளச் செய்தது.

பாரதியும் கற்பனாவாதியே. அவரது கற்பனாவாதம் புதிய யுகம் சார்ந்தது. புதுமைக்கான கொப்பளிப்பு. பிச்சமூர்த்தியின் கற்பனாவாதம், பின்நோக்கி நிற்பது, இறந்தகாலம் நோக்கி ஏங்குவது இதுவே இவர்கள் இருவரிடையே உள்ள வித்தியாசம் என்று கூறலாம். ந. பிச்சமூர்த்தியை பாரதியுடன் ஒப்பிட்டு அவரது `பழைமை’யை உணர்வது மிக எளிய ஒரு விஷயம். அவரைப் புதுமைப்பித்தனிடம் ஒப்பிட்டு அவரது `பழைமை’யை வேறு விதமாக உணர்வது சற்று சிரமம். காரணம் ந. பிச்சமூர்த்தியின் மனிதாபிமானம் _ பாவனையற்ற இயல்பான சகஜமான மானுட நேயம் _ இருபதாம் நூற்றாண்டுப் பிரக்ஞையில் வேரூன்றியது. அது அவரை காத்துநிற்கும். ஆனால், ந. பிச்சமூர்த்தி-யின் படைப்புலகில் `நாசகார கும்பல்’ `துன்ப கேணி’ `கோபாலய்யங்காரின் மனைவி’ போன்ற அழுத்தமான சமூக யதார்த்த சித்திரிப்புகள் இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். அதே போல `சிற்பியின் நரகம்’ `கபாடபுரம்’ போன்ற தத்துவார்த்த யதார்த்தம் உடைய கதைகளையும் அவர் எழுதவில்லை. யதார்த்தம் என்ற அம்சமே அவர் உலகில் பெரிதும் மௌனமாக்கப்பட்டுள்ளது. அங்கு இலக்கியவாதத்தின் கொடி பறக்கிறது. அதன் பொருட்டு அவர் தன் ஒரு விழியை மூடிக் கொள்கிறார் எனலாம். ந. பிச்சமூர்த்தியை ஆன்மிக கற்பனைவாதி (ஷிஜீக்ஷீவீtuணீறீ க்ஷீஷீனீணீஸீtவீநீ) எனலாம் என்று நான் எண்ணிக் கொள்கிறேன்.

மணிக்கொடி 1935 ஜனவரி 20 இதழில் பிச்சமூர்த்தி எழுதினார் (பிரார்த்தனை என்ற கவிதை)

வானகம் செல்லும் வண்ணம்
கூரையில் புறாவைப்போல்
கானக மன நெருக்கில்
உழலாமல் விண் எய்ததாலே...
பித்தனென பேரைப் பெற்றேன்
பித்தனாயிருக்க அருள்வாய்
பித்தரே பித்தர் குருவே.

மிக ஆரம்பகால கவிதையிலேயே இவ்வாறு கானக மனநெருக்கை விட்டு விலகி, விண் எய்த முயலும் பாவனை அவரிடம் கூடிவிட்டிருந்தது

துரதிர்ஷ்டவசமாகக் கலைகளும் இலக்கியம் கானக மனநெருக்கில் மட்டுமே விளைபவை. விண்ணில் அவை மலர்வதில்லை. மண்ணில் தெரியும் வானமே கலை. ஆம், வானமானாலும் அது மண்ணில் தெரிந்தாக வேண்டும்.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்