Dec 17, 2010

தி.ஜா : கரும்பலகை காட்சிகள் : எஸ்.ரா.

கதாவிலாசம் : எஸ்.ராமகிருஷ்ணன்

 

சாகித்ய அகாதமி பரிசு பெற்ற தி.ஜானகிராமன் சொற்களை இசையாக்கிய t_janakiraman_2அபூர்வ எழுத்தாளர். தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்து தேவங்குடியில் 1921-ல் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர், பின்பு அகில இந்திய  வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். தமிழின் சிறந்த பத்து நாவல்களை எவர் தேர்வு செய்தாலும் இவரது ‘மோகமுள்’ளைத் தவிர்க்க முடியாது. சிவப்பு ரிக்ஷா, சக்தி வைத்தியம் போன்ற சிறுகதை தொகுதிகளும், அம்மா வந்தாள், மரப்பசு, நளபாகம், மலர்மஞ்சம் எனச் சிறந்த நாவல்களையும் நாலுவேலி நிலம், வடிவேல் வாத்தியார் போன்ற நாடகங்களையும் எழுதியிருக்கிறார். 1982-ம் ஆண்டு தி.ஜானகிராமன் மரணமடைந்தார். இவரது மொத்தச் சிறுகதைகள் இரண்டு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன

ஒரு மழை நாளின் காலையில் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் அந்தச் சிற்பத்தைக் கண்டேன். நுரைத்து ஓடும் காவேரியும் தண்ணீரைத் தொட்டு விடுவதுபோலத் தலைகுனிந்துநிற்கும் கரையோர மரங்களும் கொண்ட அழகான கல்லூரி அது. அரசுக் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவரும் மரியாதைக்குரிய நண்பருமான முனைவர் மணி அவர்கள் எனக்கு அந்தச் சிற்பத்தை அறிமுகம் செய்து வைத்தார். பார்க்கப் பார்க்க வியப்பாக இருந்தது.

அரசியல் தலைவர்களுக்கும் ஒளவைக்கும் கண்ணதாசனுக்கும் சிலை இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், ஒரு தமிழ் ஆசிரியருக்கு நினைவுச் சிற்பம் செதுக்கப்பட்டிருப்பதை முதன்முதலாக அங்குதான் பார்த்தேன். சிலை வைத்துக் கொண்டாடுமளவுக்குத் தகுதியும் திறமையும் பேரும் பெற்ற அந்தத் தமிழாசிரியர் வித்வான் தியாகராச செட்டியார் அவர்கள். கும்பகோணம் கல்லூரியில் தமிழ் வித்வானாகப் பணியாற்றியவர்.

அந்தச் சிற்பத்தில் ஒரு பழங்கால மேஜை, நாற்காலியில் தலைப்பாகை அணிந்து, ஒரு கையில் ஓலை விசிறியுடன் அமர்ந்திருக்கிறார் தியாகராச செட்டியார். இந்தச் சிற்பத்தைச் செய்தவர் யார் என்றோ, அது எந்த ஆண்டு செய்யப்பட்டதென்றோ குறிப்புகள் அறிய முடியவில்லை. ஆனால், அவர் பாடம் நடத்திய வகுப்பறையின் வெளியில் உள்ள மரத்தூணில் இந்தச் சிற்பம் இருப்பதுதான் இதன் தனிச்சிறப்பு. ஈரம் படிந்த கருப்பூர் சாலையில் நடந்தபடி வித்வான் தியாகராச செட்டியாரைப் பற்றிப் பேசியபடியே வந்தார் முனைவர் மணி.

வெள்ளைக்காரர்கள் காலத்தில் புதிய கலெக்டராக வந்த ஓர் ஆங்கில அதிகாரிக்குத் தமிழின் மீது விருப்பம் உண்டானது. தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்துச் சில மாதங்களில் இலக்கியங்களையும் வாசிக்கத் துவங்கினார். ஆனால், பழந்தமிழ் இலக்கியங்களைப் புரிந்துகொள்வதில் ஏற்படும் சந்தேகங்களைப் போக்கிக்கொள்ள அடிக்கடி அவர் வித்வான் தியாகராச செட்டியாரை வரவழைத்துப் பாடம் கேட்பது வழக்கம்.

ஒரு நாள் திருக்குறளை கலெக்டர் வாசித்துக்கொண்டிருந்தபோது‘தக்கார் தகவு இலர்’ என்ற 114-வது குறள் தவறாக எழுதப்பட்டிருப்பதாக அவருக்குத் தோன்றியது. உடனே அவர் திருக்குறளில் ஒரு திருத்தம் செய்து, அதை தியாகராச செட்டியாரிடம் காட்டி ஒப்புதல் வாங்கவேண்டும் என்று அவர் வீட்டைத் தேடி வந்தார்.

காலைநேரத்தில் வீட்டில் உள்ள கீரைப் பாத்திகளைக் கொத்திவேலை செய்துகொண்டு இருந்தார் தியாகராச செட்டியார். கலெக்டர்வீடு தேடி வந்ததும் பதற்றத்துடன் தியாகராச செட்டியாரின் மனைவி அவரை இருக்கையில் அமரச் செய்துவிட்டு கணவரை அழைத்தார். அவரோ தோட்ட வேலை செய்தபடியே, என்ன விஷயமாக வந்திருக்கிறார் என்று கேட்டுவரச் சொன்னார்.
அதற்குள், கலெக்டரே வீட்டின் பின்பக்கம் வந்து நின்றவராக திருக்குறளில் தான் ஒரு தவறு கண்டுபிடித்துள்ளதாகவும், அதைத் திருத்தி எழுதி வந்திருப்பதாகவும் வாசித்துக் காட்டினார். தியாகராச செட்டியாருக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. கையிலிருந்த மண் வெட்டியை ஆவேசமாக உயர்த்தியபடி "யார் எழுதிய பாடலை யார் திருத்துவது... தமிழ் ஒண்ணும் நாதியத்த பிள்ளையில்லை, போற வர்றவன் எல்லாம் தலையில அடிச்சிட்டுப் போறதுக்கு! தமிழ்ல ஒரு எழுத்தை மாத்துறதுக்கு எந்த வெள்ளைக்காரன் முயற்சி பண்ணினாலும் பாத்துட்டு சும்மா இருக்கமாட்டேன்... வெளியே போங்க!" என்று உரத்த குரலில் சப்தமிட்டார். பயந்துபோன கலெக்டர் வெளியேறிப் போய்விட்டார்.

அன்றைய காலகட்டத்தில் கலெக்டரை எதிர்த்துக்கொண்டால், உத்தியோகம் போய்விடும். தீவாந்திர தண்டனைகூடக் கிடைக்கக்கூடும். ஆனால், தமிழ்மொழியைப் பழிப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பதைவிடவும் தீவாந்திரம் ஒன்றும் கொடியதல்ல என்று நினைத்தவர் தியாகராச செட்டியார். இத்தனை சத்ய ஆவேசத்தோடு காப்பாற்றப்பட்ட தமிழ், இன்று நூற்றுக்கணக்கான பள்ளிகளில் ஒரு பாடமாகக் கற்றுக்கொடுப்பதற்குக்கூட இடமற்றுப்போன நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

கற்றுக்கொடுத்தல் என்பது ஒரு வேலையல்ல, அது ஒரு சேவை. ஒரு கருணை. ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம்கூட அவர்களின் கல்விக்கான விலையல்ல. அவர்களின் சேவைக்கு அளிக்கப்படும் மரியாதை. ஆசிரியர்களைத் தரக் குறைவாகவோ, கேலி செய்யும் விதமாகவோ சினிமாவில் சித்திரிப்பது கொரியாவில் முற்றிலும்தடை செய்யப்பட்டிருக்கிறது.

கல்வி வணிகமயமாகிவிட்ட சூழலில் ஆசிரியர் பணி ஓர் ஒப்பந்தக் கூலி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஆனாலும், சம்பளம் குறைவு என்பதற்காக எந்த ஆசிரியரும் கற்றுக்கொடுப்பதில் வஞ்சகம் செய்வதில்லை. தவறான பாடங்களை வகுப்பெடுப்பதில்லை. ஏதோவொரு அறமும், நியாய உணர்வும் தொடர்ந்து ஆசிரியர்களிடம் இருந்துகொண்டுதானிருக்கிறது.

வித்வான் தியாகராச செட்டியாரின் சிற்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அடிமனதில் உறைந்திருந்த தி.ஜானகிராமனின் ‘முள்கிரீடம்’ கதை சலனமுறத் துவங்கியது. தமிழ் இலக்கியத்தின் அரிய சாதனையாளராக அறியப்படும் தி.ஜானகிராமனும் இதே கும்பகோணம் அரசு கல்லூரியின் மாணவர்தான். அவரது ‘மோகமுள்’ நாவலின்கதா நாயகன்பாபுகூட இந்தக் கல்லூரியில் தான் பயில்கிறான்.

ஜானகிராமனின் கதைகள் நீரோட்டத்தில் தங்கிவிட்ட கூழாங்கற்களைப் போன்றவை. தண்ணீரின் ரகசியங்கள்தான் கூழாங்கற்களாக உருவெடுக்கின்றனவா, அல்லது தண்ணீர் உருவாக்கிய சிற்பத்தின் பெயர்தான் கூழாங்கல்லா? தெரியவில்லை. ஆனால், கூழாங்கற்கள் இயற்கையின் கைகள் உருவாக்கியவை. ஈரம் துளிர்ப்பவை. ஜானகிராமனின் கதைகளும் அப்படித்தான்.
‘மோகமுள்’, ‘அம்மா வந்தாள்’, ‘நளபாகம்’ எழுதிய கைகள் எப்படியிருக்கும்! நல்ல இசைக் கலைஞராக உருவாக வேண்டிய தி.ஜா. தவறி எழுத்தாளராகிவிட்டாரா? அல்லது இசைக்கலைஞர்கள் வயலின், வீணை, மிருதங்கம் எனத் தமக்குப் பிடித்தமான ஒரு வாத்தியக் கருவியின் வழியே தம் கலைத்திறனை வெளிப்படுத்திக்கொள்வதுபோல, சொற்களைத் தனது வாத்தியக் கருவியாக்கிக் கொண்ட அபூர்வ கலைஞரா?

புகைப்படத்தில் காணப்படும் ஜானகிராமனுக்கும், அவரது கதைகளின் வழியாக அறிமுகமாகும் ஜானகிராமனுக்கும் எத்தனையோ வேறுபாடு இருக்கிறது. புகைப்படத்தில் ஜானகிராமனைக் காண்பது, வரைபடத்தில் கடலைப் பார்ப்பது போன்றது. கடலின் ஆழமும் பிரமாண்டமும் அறியாத ரகசியங்களும் பயமும் விம்முதலும் சூரியனை விழுங்கிக்கொண்டுவிடும் பசியும் ஒரு வரைபடத்தில் தென்படுவதில்லை. ஜானகிராமன் எழுத்துக்கும் இத்தனை குணங்கள் இருக்கின்றன.
தும்பைப் பூவில் உள்ள தேனைக் குடித்துப் பார்த்திருக்கிறீர்களா?புல்லில் ஒட்டும் பனித்துளி அளவு தானிருக்கும். ஆனால், அதன் ருசி அலாதியானது. இக்கதையை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் அதை நான் அனுபவித்திருக்கிறேன். 

முள்முடி’ , இதுவும் ஒரு ஆசிரியரைப் பற்றிய கதையே! அனுகூலசாமி ஒரு பள்ளி ஆசிரியர். முப்பத்தாறு வருடங்கள்ஒரு பள்ளியில் வேலை செய்துவிட்டு ஓய்வுபெறுகிறார். பிரிவு உபசார விழாவில் நாகஸ்வரம் இசைத்து மாணவர்கள் அவரை அழைத்துவந்து மாலை மரியாதை செய்கிறார்கள். அனுகூலசாமி தான் பணியாற்றிய இத்தனை வருடங்களில் எந்த ஒரு மாணவனையும் அடித்ததே இல்லை. ஏன், அதிர்ந்து ஒரு வார்த்தை சொன்னதுகூட கிடையாது. அதுதான் அவர் பெற்ற கௌரவம்!

IMG_0850_thumb[3] ஓய்வுபெற்ற மனிதராக வீடு திரும்புகிறார். அவரது மனைவி ஆச்சரியத்துடன் கேட்கிறார், "மாணவர்களிடம் உங்களுக்கு ஒருமுறைகூட கோபமே வந்ததில்லையா?’ அவர் புன்சிரிப்புடன், "உலகத்திலே இருக்கிறது கொஞ்சகாலம். மழைக்கு வந்து ஈசல் மடியறாப்பில அந்தப் பொழுதை அடிச்சுக்கிட்டு, கோவிச்சுக்கிட்டுப் போக்கணுமா?" என்கிறார். அவரது மனைவியோ "ராட்சசன் மாதிரி கோவிச்சுக்க வேண்டாம். ஆம்பிளையா இருக்கிறதுக்காகவாவது ஒரு தடவை கோபம் வரவேண்டாமா?" என்கிறார். அவர் பதில் பேசாமல் எப்படியோ கௌரவமாக, எந்தப் பழியுமின்றி ஒய்வுபெற்றுவிட்ட சந்தோஷத்துடன் சிரித்துக்கொள்கிறார்.

அப்போது, அவரது வகுப்பில் படித்த ஆறுமுகமும் அவனோடு இன்னொரு சிறுவனும் அவனது தாயும் தயங்கித் தயங்கி வீட்டினுள் வருவது தெரிகிறது. ஆறுமுகத்தோடு வரும் சிறுவன் பெயர் சின்னையா என்று நினைவுக்கு வருகிறது. ஆறுமுகம் தயக்கத்துடன் ‘இவங்க சின்னையாவோட அம்மா சார்’ என்று அறிமுகப்படுத்துகிறான். சின்னையா கலக்கத்துடன் தலை கவிழ்ந்தபடி உதடு நடுங்க அம்மா அருகில் நின்றுகொண்டிருக்கிறான். எதற்கு வந்திருக்கிறார்கள் என்று புரியாமல் அனுகூலசாமி யோசிக்கும்போது ஆறுமுகம் சொல்லத் துவங்குகிறான்...

"சார், போன வருசம் இவன் நம்ம வகுப்பிலே இருந்து ஒரு இங்கிலீஷ் புத்தகத்தைத் திருடிக்கொண்டுபோய் வேற பேர் ஒட்டிக் கடையில பாதி விலைக்கு வித்துட்டான். நான்தான் அதைக் கண்டுபிடிச்சு உங்ககிட்ட கூட்டிட்டு வந்தேன். நீங்க அதுக்குத் தண்டனையா இனிமே அவன்கூட யாரும் பேசக்கூடாதுனு சொன்னீங்க!" என்கிறான்.

அனுகூலசாமிக்கு நடந்தவை லேசாக நினைவுக்கு வருகிறது. ஆறுமுகம் தொடர்ந்து சொல்கிறான்... "அன்னிலேர்ந்து நாங்க இவனை ஒதுக்கிட்டோம் சார்! யாரும் பேசவே மாட்டோம். இப்போகூட உங்க பிரிவு உபசார விழாவுக்கு பசங்ககிட்ட ஆளுக்கு ஒரு ரூபாய் வசூல் பண்ணினோம். இவன் காசு கொடுக்க வந்தான். வாங்க மாட்டோம்னு சொல்லிட்டோம். அதுபோல அவனை பார்ட்டிக்கும் வரக்கூடாதுனு சொல்லிட் டோம்" என்கிறான்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த சின்னையா தன்னை அறியாமல் விசும்பி அழத் துவங்குகிறான். அவனைச் சமாதானம் செய்தபடியே சின்னையாவின் தாய் கலங்கிய குரலில் சொல்கிறாள்... "நல்ல பையன் சார். அன்னிக்கு ஏதோ புத்திபிசகா செஞ்சிட்டான்.இந்த ஒரு வருசமா பிள்ளை சொரத்தாவே இல்லை. வீட்டுல தங்கச்சிகிட்டேகூட முகம் கொடுத்துப் பேசுறதில்லை சார். இன்னிக்குத்தான் விசயத்தைச் சொல்லி அழுதான். நீங்கதான் மன்னிப்புக் கொடுத்து மத்த பையன்களை இவனோட பேசச் சொல்லணும். அப்படியே இதையும் ஏத்துக்கணும்"" என்கிறாள்.

சின்னையா தன் வேர்த்து வடிந்த கையில் சுருட்டி வைத்திருந்த ஒரு ரூபாயை அவரிடம் நீட்டுகிறான். அனுகூல சாமிக்கு அதுவரை இருந்த மனமகிழ்ச்சி சிதறிப்போய் கையும் களவுமாகப் பிடிபட்டது போலிருக்கிறது. அவர் தண்டனையை ஏற்றுக்கொள்வது போலக் குனிந்து வாங்கிக்கொள்கிறார். பின்பு குரல் தழுதழுக்கச் சொல்கிறார்...

"இந்தப் பயக இப்படிச் செய்வாங்கனு தெரியாதும்மா!"

சின்னையாவின் முகத்தில் முதல்முறையாக லேசாகச் சிரிப்பு வருகிறது. அவரும் சிரிக்கிறார். ஆனால், சுவரில் மாட்டப்பட்டிருந்த இயேசுநாதரின் முள்கிரீடம் இடம் மாறி, தனது தலையில் பொருத்தப்பட்டதுபோல வலியை உணர்கிறார் அனுகூலசாமி.

ஜானகிராமனின் இக்கதையில் வரும் அனுகூலசாமியைவிடவும் சின்னையா எனக்கு மிக நெருக்கமாக இருக்கிறான். உலகிலேயே மிகக்கடுமையான தண்டனை புறக்கணிப்புதான். அதிலும் பேசாமல் ஒதுக்கிவிடுவது தண்டனையின் உச்சபட்ச நிலை! சொற்களுக்கு வாசனை இல்லாமல் இருக்கலாம். எடையில்லாமல் இருக்கலாம் ஆனால், அதற்குக் கத்தியைவிடவும் கூரான உடல் இருக்கிறது. அது அம்பைவிட ஆழமாகத் துளைக்கக்கூடியது. நாவினால் சுட்ட வடு இல்லாத மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன?

********

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

2 கருத்துகள்:

பொன் மாலை பொழுது on December 17, 2010 at 8:21 AM said...

// புகைப்படத்தில் காணப்படும் ஜானகிராமனுக்கும், அவரது கதைகளின் வழியாக அறிமுகமாகும் ஜானகிராமனுக்கும் எத்தனையோ வேறுபாடு இருக்கிறது. புகைப்படத்தில் ஜானகிராமனைக் காண்பது, வரைபடத்தில் கடலைப் பார்ப்பது போன்றது //

இதுபோல பல தடவைகள் நானும் யோசித்ததுண்டு அவருடைய எழுத்துக்களை படித்து முடித்தபின்.

கார்த்திக் பாலசுப்ரமணியன் on December 17, 2010 at 10:55 AM said...

நல்ல பகிர்வு. முள்முடி கதை தமிழ் துணைப்பாடத்தில் படித்தது. அனைத்து தமிழாசிரியர்களும் அடிப்பதில்லை போலும்.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்