விக்ரமாதித்யன் (விளக்கு விருது விழாவிற்காக தயாரிக்கப்பட்டு படிக்கப்படாத கட்டுரை) இலக்கில்லாத பயணம்
ஒரு மரத்தை ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக பார்க்கிறோம். அதன் உச்சியில் நின்றுபார்ப்பவருக்கு அதன் விஸ்தீரணமும் உயரமும் பெருங்கிளைகளும் பூக்களும், கனிகளும் வியப்பாக இருக்கும். அதன் நிழலிருந்து பார்ப்பவருக்கு வேறாகவும், அதன் கனியை ருசித்தவருக்கு வேறாகவும் மரம் தோற்றமளிக்கும். விக்ரமாதித்யன் என்ற பெருமரத்தின் நிழலை அனுபவித்திருக்கிறேன். பூவை ரசித்திருக்கிறேன். கனியை ருசித்திருக்கிறேன் கோபத்தில் கிளைகளை வெட்டி ஏறிந்து காயப்படுத்தி இருக்கிறேன்
ஆனாலும் அந்த பெருமரத்தை பற்றிப்படர்ந்து வாழும் கொடியாகவே என்னை உணர்கிறேன். அந்தப் பெருமரத்தைப் பற்றிப் படர்ந்து வியந்து தழுவியிருக்கிறேன். அவ்வப்போது பெருங்காற்றில் புயலில் விழுந்து விடாமல் காத்தும், பூக்கள் உதிர்ந்து விடாமல் கனிகள் களவாடப்படாமலும் காத்துமிருக்கிறேன். அதனாலேயே பெருமரத்தை விலகிநின்று பார்க்க முடியாமலும் போயிருக்கிறேன்.
கவிஞனின் கவிதைகள் குறித்து பலரும் பேசினாலும் கவிஞனின் வாழ்வியலின் பின்ணணியை வெகு நெருக்கமாக தெரிந்தவன் என்ற முறையில் உங்களோடு சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.
சென்னைக்கு 1979ல் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் கொடுத்த அறிமுக கடித்தோடு வந்து சேர்ந்த இடம் உலகின் முதன் முதலாக சமஸ்கிருதத்தில் படமெடுத்த ஜி.வி. ஐயரின் இல்லம். அவரது வீட்டின் அவுட்ஹவுசில் கல்லூரி தோழர் தேவதாசோடு வாசம்.
வந்து சேர்ந்த அன்றே, பூமணி மூலம் சோவியத் கலாசார அரங்கில் போயிருந்தபோது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நூற்றாண்டு விழாவில் வண்ண நிலவனோடு சேர்த்து , நீங்கதானே நம்பியண்ணாச்சி என்று கேட்டு அறிமுகமானேன்.
விக்ரமாதித்யன் குறித்த முன் படிவத்தை கௌரிஷங்கரும், தா. மணியும் ஏற்படுத்தியிருந்தனர். இன்னும் சரியாகச் சொல்லப் போனால் நெல்லையில் அவர் தொடர முடியாது விட்டுவிட்ட மார்க் கெட்டிங் ரிசர்ச் பணியை தொடர்ந்தபடி நான் சென்னை வந்தேன்.
சில மாதங்களில் பாரதி நூற்றாண்டு விழாவையொட்டி நவகவிஞர்கள் வரிசையில் விக்ரமாதித்யன் கவிதை தொகுப்பும் வெளியிட கேட்கப்பட்டது.
தி.நகரில் இருந்த சாரித்தெரு கார்க்கி நூலக மொட்டை மாடியில் சிகரெட் பிடித்தபடி சமயவேல் தான் ஆகாசம் நீலநிறம் என்ற தலைப்பு தான் சரியாக இருக்கும் என்று பரிந்துரைத்தார். அப்போது நானும் உடனிருந்தேன்.
நானும் அவருமாக பலபத்திரிகைகளில் ப்ரிலேன்சராக பணிபுரிந்தோம். பல்வேறு நபர்களை பிரமுகர்களை குறிப்பாக தேவநேய பாவணர், பெருஞ்சித்திரனார், மே.வி. வேணு கோபால பிள்ளை, அப்பாதுரையார் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றோம்.
திடீரென ஒருமுறை மூத்த பத்திரிகையாளர் மறைந்த பத்திரிகையாளர் கார்க்கியை அவரது இல்லத்தில் சந்தித்தோம். அவர் தான் தராசு என்ற பத்திரிகைக்கு கொண்டுவருவது குறித்து பரிந்துரைத்தார்.
அவர்கள் நடத்திய திரைச்சுவைக்கு விக்ரமாதித்யனின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியான கவிதை நூலை மூர்மார்க்கெட்டில் விலைக்கு போட்டு ரூபாய் 75 பெற்று இளையராஜா சிறப்பிதழ் சிறப்பாகச் செய்து கொடுத்தோம். அதில் எங்களுக்கு கிடைத்தது வெறும் 275 கூட இருக்காது. ஆனால் நாங்கள் சந்தித்த சினிமாக்காரர்களிடம் ஆளுக்கு நூறு வாங்கியிருந்தால் கூட எங்களுக்கு ஆயிரம் கூடக் கிடைத்திருக்கும். அந்த சிறப்பிதழை அந்த இசையரசர் வலது கையால் வாங்கி இடது புறம் இருந்த தனது உதவியாளரிடம் புரட்டிக்கூட பார்க்காமல் கொடுத்துவிட்டார் என்பது தான் பெருத்த சோகம். 2 ரூபாயோடு நண்பர் ஒருவரை உதவி கேட்கப் போய் அண்ணாநகரில் அவர் இல்லாததால் நடந்தே தி.நகருக்கு திரும்பினோம்.
ஒரு புது வருடப்பிறப்பன்று ருத்ரய்யாவின் அலுவலகத்திலிருந்து தி.நகருக்கு மழையில் நனைந்தபடி நடந்தே திரும்பியிருக்கிறோம்.
இன்னொரு முறை வண்ணதாசன் சகோதரர் வீட்டிலிருந்து குரோம்பேட்டை அஸ்தினாபுரம் என்று நினைவு திரும்ப நடத்தே வந்திருக்கிறோம்.
இந்த நேரங்களில் காசு இல்லை என்றது ஒருபுறம்மொன்றலும் இந்த நேரங்களில் அதிகமாகப் பேசியது, இலக்கியம் குறித்து தான். நல்ல நூல்களை படிப்பதை வேள்வி போல எனக்குள் ஏற்படுத்தியவர், விக்ரமாதித்யன்.
நேஷனல் புக்ட்ரஸ்ட் புத்தகங்களை (நீலகண்ட பறவையைத் தேடி, அக்னிநதி, சோரட் உனது பெருகும் வெள்ளம், சுந்தரனும் சுந்தரிமார்களும் பாத்துமாவின் ஆட்டுக்குட்டி, காலம், சமகால மலையாள சிறுகதைகள் ஒரு லட்சிய இந்து ஹோட்டல், ஒரு கங்கை பருந்தின் சிறகுகள், கவிஞன்) இப்படி தேடித்தேடி படித்தோம். பலமாநில சூழலையும் அதிலிருந்து உள்வாங்கினோம். கூடுதலாக இந்தியாவில் ஒடும் எல்லா நதியிலும் ஆதிசங்கரா படப்பிடிப்புக்கு சென்ற போது குளித்த அனுபவம் எனக்குண்டு.
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது கவிதைகள் இடம் பெற்ற புத்தகத்தை பழைய புத்தக கடையில் போட்டு பணம் பெற்று செய்திசேகரிக்க செலவழித்திருக்கிறோம். பால குமாரனிடம் அவர் டிக்டேச் செய்ய நான் எழுத தினமும் அப்போதே 35 ரூபாய் கொடுப்பார். அதை வாங்கிவந்து இருவரும் சாப்பிட்டிருக்கிறோம். இரண்டு டீயும் இரண்டு சிகரெட்டும் கடன் வாங்கி சிகரெட் அட்டையில் எழுதப்பட்ட ஐடியாக்கள் தான் பின்னால் தராசு பார்மெட்டாக மாறியது.
வாழ்வதற்கான போராட்டத்திலும் வாழ்வை கவிதையாக்குவதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டவர் விக்ரமாதித்யன்! அவர் குடித்த ஒரு சொட்டு மதுபானம் கூட அவருக்கு கவிதை தராமல் வீணாகியதில்லை என்பதை சாட்சியாக இருந்து பார்த்திருக்கிறேன்.
பத்திரிகை அலுவலகங்களின் விவாதங்களில் என்னை முன் நிறுத்துவதை விக்ரமாதித்யன் தொடர்ந்து செய்து வந்தார். இப்படித் தான் நான் நக்கீரன் ஆசிரியர் ஆனதும் கூட. (பத்திரிகையே வேண்டாம் என்று அன்று நான் முடிவெடுத்திருந்த போது நானே ஆசிரியர் ஆனது வேறொரு தனியான கதை).
நாங்கள் பணியாற்றிய பத்திரிகை நிறுவனங்களில் என்னை முன்னிலைப்படுத்துவதை அவர் ஒரு கடமையாகவே எடுத்துக் கொண்டு செய்தார். இதனால் பலர் விமர்சனத்திற்கும் ஆளானார்.
பத்திரிகைகளுக்காக நாங்கள் இருவருமே ரீரைட் செய்ததை அல்லது ரிப்பேர் செய்ததை வைத்து இருவரையும் இறந்த பின் கொளுத்தலாம். அந்த அளவுக்கு எழுதிவிட்டோம் வாழ்க்கையை கவிதையாக்குவதற்காக வாழ்க்கையை தொலைத்துவிட்டு கவிஞனாக நிற்கிறார்! கவிதைகள் அவரது வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறது.
எனக்குத் தெரிந்து யாரையும் அவர் எதிரியாக கருதியது கூடக் கிடையாது.
கசப்புஇனிப்பு கருப்புவெருப்பென்ற எந்த விதமான தீர்க்கமான முடிவும் எது குறித்தும் அவருக்கு கிடையாது.
எல்லாமே கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். சமூகம் அப்படித்தானே இருக்கிறது என்ற மனோபாவமுடையவர்.
என்னளவில் சிறுசிறு பொருளியல் சார்ந்த இலக்குகளை நிர்ணயித்து வெற்றிகண்டு, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று கண்டு கொண்டேயிருக்கிறேன். இலக்குகளோடு பயணித்தாலும் இறுதியில் கிடைப்பது வெறுமையே! இலக்கின்றி பயணித்தாலும் இறுதியில் கிடைப்பது வெறுமையே. பயணம் மட்டுமே பயணிக்கு சந்தோஷம், சாகசம், துக்கம் பதிவேடு. இத்தனைகால இருவரது பயண முடிவும் தலைகீழ் விகிதங்கள் ஆனாலும் இருவருக்குமான விடை பூஜ்யம் தான்!
வண்ண நிலவன் வீட்டிற்கு இருவரும் பல இரவு குடித்து விட்டுச் சென்று சாப்பிட்டுவிட்டு, காசு வாங்கி வந்ததுண்டு. சில நேரம் கவிஞர் நா. காமராசன் வீட்டிற்கும் அவர் அழைத்துச் செல்வதுண்டு.
அப்படி குடித்த நேரங்களில் அவர் சொல்லச் சொல்ல நான் எழுதிய கவிதைகள் பல உண்டு. அப்படி அவர் சொல்லும் போதே சில திராவிடத்தனமான வரிகளை வேண்டாமென்று விலக்கிவிடுவேன். இப்படி பல வரிகளை நீக்கி நீக்கியே அவரது கவிதைகளை எடிட் செய்யும் நுட்பம் பெற்றேன். இப்படித்தான் அவரது பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளை எடிட் செய்தேன். சில நேரங்களில் விமலாதித்த மாமல்லன் உடனிருந்திருந்தான்.
அவரது ஒட்டு மொத்த தொகுப்பை எடிட் செய்ய கிட்டத்தட்ட 3 மாதம் எடுத்துக் கொண்டேன்.
அப்போது நான் எழுதிய பேசாமல் ஒரு நாளும் என்ற தொகுப்பு அச்சு அசலான விக்ரமாதித்யன் பிராண்டாக இருந்தது அதனாலேயே இரண்டு குறு நாவல்கள் எழுதும் பணியில் என்னைத் திணித்துக் கொண்டு முழுமூச்சாக அவரது நடையிலிருந்து விலகினேன்.
இருவரும் பத்திரிகையாளர்களாக பயணத்தாலும் அவர் திடீர் திடீரென அதிலிருந்து விலகி விட்டு விடுதலையாகிவிடுவார். அவர் தொடர்ந்தாற் போல ஒராண்டுக்கு மேல் எந்த நிறுவனத்திலும் பணியாற்றியதாக எனது நினைவில் இல்லை.
இருவரும் போதையில் சண்டையிட்டு கட்டிப்புரண்டாலும் மறுநாள் காலையிலேயே இருவரும் ராசியாகிவிடுவது, பல நண்பர்களிடையே இன்றும் வியப்பாகப் பேசப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள இலக்கிய நண்பர்கள் அவரைப் பார்க்கும் போது என்னை விசாரிப்பதும் என்னைப் பார்த்தால் அவரை விசாரிப்பதும் இன்று வரை தொடர்கிறது.
தஞ்சைக்கு நண்பர் உமாசந்திரன் திருமணத்திற்கு நான் சென்றேன். நக்கீரனில் ஆசிரியராக இருந்த நேரம் அந்த வாரம் உதயம் பத்திரிகையில் ல.சா.ரா. அவரது அம்மா பற்றி எழுதியிருந்தார். மது குடிக்கும் போது நான் அதைப்பற்றி விக்ரமாதித்யனோடு பேசினேன் பாருங்கள்! அவங்கம்மாவ பசு மாதிரி எழுதியிருக்கார். எங்கம்மா வோடதான் நான் குடிக்கவே பழகினேன் என்று சொன்னேன் தம்பி இதைத்தான் நீங்க எழுதனும் கவிதையா நல்லா வரும் என்று பேசியபடி அவரும் என்னோடு உடுத்திய உடையோடு ரயிலேறிவிட்டார். அப்போது தம்பி நக்கீரன் காமராஜீம் உடனிருந்தார்.
டாய்லட் அருகே அமர்ந்து குடித்துக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தோம். இப்படித்தான் எனது முதல் தொகுதி வரக் காரணமானது. அது தான் சந்நதம்! அவர் சொன்னது போலவே இன்றும் பலரும் எனது அம்மா கவிதையைக் குறிப்பிட்டே என்னிடம் பேசுகிறார்கள்.
எனது கவிதைகளால் அல்லாமல் விக்ரமாதித்யன் அவரது கவிதை நூல்கள், கட்டுரைகளில் அடிக்கடி என் பெயரை குறிப்பிட்டதால் இலக்கிய வட்டாரத்தில் எனக்கு பெரும் பரிச்சயம் ஏற்பட்டது.
விக்ரமாதித்யன் எதுவும் பெரிதாக நடந்துவிடாது என்று இலக்கற்று பயணித்து சில நல்ல கவிதைகளை சேகரித்து தந்திருப்பவர்.
இருவருக்கும் பயணம் மட்டுமே பொது.
அவருக்கு இலக்கில்லாமல்
எனக்கு சிறுசிறு இலக்குகளோடு பயணத்தில் முடிவில் இருவரும் கண்டடைந்தது என்னவோ வெறுமை தான். பயணம் மட்டுமே பயணிக்கு சந்தோஷம், சாகசம், துக்கம் பதிவேடு. இத்தனை கால இருவரது பயண முடிவும் தலைகீழ் விகிதங்கள் ஆனாலும் இருவருக்குமான விடை பூஜ்யம் தான்!
*******
நன்றி: சாமக்கொடை
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
5 கருத்துகள்:
thanks-durai
அண்னாச்சி காலம் இப்படி கம்யூட்டர் வழியாக பேச் வைத்துவிட்டது .. என்ன இழவு செய்ய .. உங்கள் இருவரையும் செம போதையில் ட்ரெயினில் பழவந்தாங்களில் இருக்கும் என் அறைக்கு நான் இழுத்துசென்ற பாடிருக்கெ அப்பாப்ப .. அண்ணாச்சியை கூட கட்டுபிடுத்தி விடலாம் ஆனால் உங்களை கட்டுபடுத்தான் ஆயிரம்கைகள் வேணும் .. ஆனாலும் இனிய நினைவுகள்
காதல் தோல்வி கூட சுகம் என்று எதோ ஒரு கவிஞன் கூறியது போல் கவிஞனின் இலக்கில்லாத பயணம் கூட சுகம் தான் என்று வாழ்ந்து பார்த்தால் தான் புரியும் என்பதை உங்களுடய இலக்கில்லாத பயணம் சுட்டிக்காட்டுகிறது. படைப்பு அருமை
நன்றிகளுடன் : மூர்த்தி
I really enjoyed reading the following sentences in this article.
* என்னளவில் சிறுசிறு பொருளியல் சார்ந்த இலக்குகளை நிர்ணயித்து வெற்றிகண்டு, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று கண்டு கொண்டேயிருக்கிறேன். இலக்குகளோடு பயணித்தாலும் இறுதியில் கிடைப்பது வெறுமையே!
* விக்ரமாதித்யன் எதுவும் பெரிதாக நடந்துவிடாது என்று இலக்கற்று பயணித்து சில நல்ல கவிதைகளை சேகரித்து தந்திருப்பவர்.
இருவருக்கும் பயணம் மட்டுமே பொது. அவருக்கு இலக்கில்லாமல் எனக்கு சிறுசிறு இலக்குகளோடு பயணத்தில் முடிவில் இருவரும் கண்டடைந்தது என்னவோ வெறுமை தான். பயணம் மட்டுமே பயணிக்கு சந்தோஷம், சாகசம், துக்கம் பதிவேடு. இத்தனை கால இருவரது பயண முடிவும் தலைகீழ் விகிதங்கள் ஆனாலும் இருவருக்குமான விடை பூஜ்யம் தான்!
I really enjoyed reading the following sentences in this article.
* என்னளவில் சிறுசிறு பொருளியல் சார்ந்த இலக்குகளை நிர்ணயித்து வெற்றிகண்டு, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று கண்டு கொண்டேயிருக்கிறேன். இலக்குகளோடு பயணித்தாலும் இறுதியில் கிடைப்பது வெறுமையே!
* விக்ரமாதித்யன் எதுவும் பெரிதாக நடந்துவிடாது என்று இலக்கற்று பயணித்து சில நல்ல கவிதைகளை சேகரித்து தந்திருப்பவர்.
இருவருக்கும் பயணம் மட்டுமே பொது. அவருக்கு இலக்கில்லாமல் எனக்கு சிறுசிறு இலக்குகளோடு பயணத்தில் முடிவில் இருவரும் கண்டடைந்தது என்னவோ வெறுமை தான். பயணம் மட்டுமே பயணிக்கு சந்தோஷம், சாகசம், துக்கம் பதிவேடு. இத்தனை கால இருவரது பயண முடிவும் தலைகீழ் விகிதங்கள் ஆனாலும் இருவருக்குமான விடை பூஜ்யம் தான்!
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.