Dec 9, 2010

அந்நியர்கள் - ஆர். சூடாமணி

"வா... வா..." என்பதற்கு மேல் ஏதும் சொல்ல முடியவில்லை, மகிழ்ச்சி வாயை அடைத்து மூச்சுத் திணற வைத்தது. பார்வையும் புன்சிரிப்புமே பேசின.

"ஹலோ ஸவி, என்ன ப்ளெசண்ட் ஸர்ப்ரைஸ்; நீ ஸ்டேஷனுக்கு வருவேன்னு நான் எதிர்பார்க்கலே" r-sudamani என்று முகமலர்ச்சியுடன் கூறியவாறு ஸௌம்யா அவளிடம் விரைந்து வந்தாள்.

"எவ்வளவு வருஷம் ஆச்சிடி நாம சந்திச்சு! என்னை நீ ஸ்டேஷனில் எதிர்பார்க்கலேன்னா உன்னை மன்னிக்க முடியாது" என்றாள் ஸவிதா.

ஸௌம்யா சிரித்தாள். "அப்பாடா! நீ இப்படிப் பேசினால்தான் எனக்கு வீட்டுக்கு வந்தமாதிரி இருக்கு."

இரண்டு நிமிஷங்கள் வரையில் மௌனமுகங்களாய்ச் சகோதரிகள் எதிரெதிரே நின்றார்கள்; பேச்சுக்கு அவசியமற்றா அர்த்தமயமான, இதயமயமான நிமிஷங்கள். சாமான்களுடன் சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து வெளிவந்து டாக்சியில் ஏறிக் கஸ்தூரிபா நகர் வந்து சேரும் வரை பரஸ்பரம், "எப்படியிருக்கே? உங்காத்துக்காரர், குழந்தைகளெல்லாம் சௌக்கியமா?" என்பதற்குமேல் உரையாடவே இல்லை. டாக்ஸியில் அவ்வளவு இடம் இருந்தபோது தம்மையறியாமல் நெருக்கமாய் ஒட்டி உட்கார்ந்த செயல் ஒன்றே எல்லாமாய்ப் பொலிந்தது.

ஸவிதாவின் கணவர் மைத்துனியை வரவேற்றுக் குசலம் விசாரித்த பின், "நீ வரது நிச்சயமானதிலேருந்து உன் அக்காவுக்குத் தரையிலே கால் நிக்கலே!" என்று சிரித்தார்.

ஸௌம்யாவின் பார்வை சகோதரியிடம் சென்றது. மீண்டும் மௌனத்தில் ஒரு பாலம், புன்னகையில் மின்னும் ஆந்தரிகம்.

"இத்தனை வருஷம் ஆனாப்பலேயே தோணலே. ஸவி தலை கொஞ்சம் நரைக்க ஆரம்பிச்சிருக்கு. வேறெதும் வித்தியாசமில்லே" என்றாள்.

நரை! ஸவிதா லேசாய்ச் சிரித்துக் கொண்டாள். 'காலம் செய்யக்கூடியதெல்லாம் அவ்வளவுதான். பாவம் வருஷங்கள்!' என்று சொல்வதுபோல் இருந்தது. அந்தச் சிரிப்பு. பிரிந்திருந்த காலமெல்லாம் இந்தச் சந்திப்பில் ரத்தாகிவிட்டது. பரஸ்பரம் பாசமுள்ளவர்கள் எத்தனை ஆண்டுகளுக்குப் பின் ஒன்று சேர்ந்தாலும் எவ்வளவு எளிதாய்த் தொடர்ச்சியை மேற்கொண்டுவிட முடிகிறது! ஸௌம்யா சொன்னதுபோல், இத்தனை வருஷங்கள் ஆனதாகவே தெரியவில்லை. மனத்தளவில் அவர்களுள் வித்தியாசம் ஏது? எனவே பதினோரு ஆண்டுகளின் இடைவெளி கணப்போதில் தூர்ந்து விட்டது. பிரிவே இல்லாமல் எப்போதும் இப்படியே தாங்கள் இருவரும் ஒன்றாய் வாழ்ந்து கொண்டிருந்தது போலவே தோன்றியது.

விதவைத் தாய் இறந்தபோதுதான் அவர்கள் கடைசியாகச் சந்தித்தார்கள். அந்தச் சூழ்நிலையே வேறு. வெவ்வேறு இடங்களிலிருந்து பறந்து வந்து ஒன்று சேர்ந்ததெல்லாம் ஒரு துக்கத்தில் பங்கு கொள்ள. அப்போது நிலவிய நெருக்கமும் ஒருமையும் அந்தத் துக்கத்தின் அம்சங்கள். பேச்செல்லாம் அம்மாவும் அவள் இறுதியின் விவரங்களுந்தான். காரியங்கள் முடிந்தபின் அவரவர்களின் இடத்துக்குத் திரும்பி விட்டார்கள்.

அதன்பின் இப்போதுதான் உண்மையான நெருக்கம். சிறிது காலமாக ஒருவித ரத்தச் சோகையால் பலவீனமுற்றிருந்த சௌம்யாவை அவள் கணவர், ஸவிதா குடும்பத்தினரின் அழைப்பின்பேரில், தாமும் குழந்தைகளும் வீட்டைக் கவனித்துக் கொள்வதாய்ச் சொல்லிவிட்டு ஒரு மாறுதலுக்காக அவளுடைய அக்காவிடம் பம்பாயிலிருந்து அனுப்பிவைத்தார்.

இப்போது சென்ற காலத்தைச் சகோதரியர் இருவருமாய் மீண்டும் பிடித்துக்கொண்டு வந்துவிட்டாற்போல் இருந்தது. முதல்நாளின் மௌனத்துக்குப் பிறகு ஆந்தரிகமும் தோழைமையும் பேச்சில் உடைப்பெடுத்துக் கொண்டன. "அக்காவுக்கும் தங்கைக்கும் பேசி மாளாது போலிருக்கே!" என்று ஸவிதாவின் கணவர் பரிகசிப்பார். அவள் மக்கள் கிண்டலாய்ச் சிரிப்பார்கள். அது ஒன்றுமே ஸவிதாவுக்கு உரைக்கவில்லை. பேச்சு என்றால் அதில் தொடர்ச்சி கிடையாது. அல்லது, அத்தொடர்ச்சி தனி வகைப்பட்டது ஒருநாள் பேசியிருந்த விஷயத்தைப் பற்றி அடுத்த நாளோ மூன்றாம் நாளோ வேறொரு சந்தர்ப்பத்தினிடையே திடீரென்று, "அதுக்காகத்தான் நான் சொல்றேன்..." என்று தொடரும்போது இழைகள் இயல்பாய்க் கலந்துகொள்ளும். அவர்களுக்குத் தொடர்ச்சி விளங்கிவிடும். மேலே தெரியும் சிறு பகுதியைவிடப் பன்மடங்கு பெரிய அளவு நீரின் கீழே மறைந்திருக்கும் பனிப்பாறையைப் போல் இருந்தது உடன்பிறப்பின் பந்தம்; வெளியே தலை நீட்டும் சிறு தெறிப்புகளுக்கு ஆதாரமாய் அடியில் பிரம்மாண்டமான புரிந்து கொள்ளல்.

மற்றவர்களுக்கு உறைப்புச் சமையலைப் பரிமாறிவிட்டுத் தானும் தங்கையும் மட்டும் காரமில்லாத சாம்பாரை உட்கொள்ளும்போது அந்த ஒத்த ருசி இன்னும் ஆழ்ந்த ஒற்றுமைகளின் சிறு அடையாளமாய்த் தோன்றியது. அவ்விருவருக்கும் காபியில் ஒரே அளவு இனிப்பு வேண்டும். இருவருக்கும் அகலக் கரை போட்ட புடைவைதான் பிடிக்கும். மாலை உலாவலைவிட விடியற்காலையில் நடந்துவிட்டு வருவதில்தான் இருவருக்கும் அதிக இஷ்டம். உறக்கத்தினிடை இரவு இரண்டு மணிக்குச் சிறிது நேரம் கண்விழித்து நீர் அருந்திவிட்டு, மறுபடி தூங்கப் போகும் வழக்கம் இருவருக்கும் பொது. இப்படி எத்தனையோ! ஒரே வேரில் பிறந்த சின்னச் சின்ன இணக்கங்கள். ஒவ்வொன்றுமே ஒவ்வோர் இனிமை. ஸவிதா நாற்பது வயதாகப் போகிறது. ஸௌம்யா அவளைவிட மூன்றரை வயது இளையவள். ஆனால் அந்த இனிமைக்குச் சிரஞ்சீவி யௌவனம். ஏனென்றால் அவர்கள் இருவரும் ஒன்று.

வைத்தியமும் நடந்தது, ஒரு கடமையைப் போல.

ஸவிதா சகோதரியை உற்றுப் பார்த்தாள். "உனக்கு ரத்தம் கொஞ்சம் ஊறியிருக்குன்னு நினைக்கிறேன். முகம் அத்தனை வெளிறினாப்பல இல்லே."

"உன் கைபாகந்தான்! இல்லேன்னா பம்பாயில் பார்க்காத வைத்தியமா?" என்று ஸௌம்யா சிரித்தாள்.

தயிரில் ஊறவைத்துச் சர்க்கரை சேர்த்த வற்றலை ஸ்பூனால் எடுத்துச் சாப்பிட்டவாறு இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த டிபன் அவர்கள் பிறந்தகத்தில் பழக்கம்.

"இங்கே யாருக்கும் இது பிடிக்கிறதில்லே. இப்போதுதான் எனக்கு ஜோடியாய்ச் சாப்பிட நீ வந்திருக்கே" என்று கூறி மகிழ்ச்சியுடன் தயாரித்திருந்தாள் ஸவிதா.

மாலை நாலரை மணி இருக்கும். ஸவிதாவின் மூத்த மகன் பத்தொன்பது வயதான ராஜூ, எம்.எஸ்.ஸி. முதல் ஆண்டு மாணவன், கல்லூரியிலிருந்து திரும்பி வந்தான்.

"அம்மா, நாளைக்கு எங்க காலேஜில் எம்.எஸ்.ஸி. முடிச்சுட்டுப்போற ஸ்டூடண்ட்ஸுக்கெல்லாம் 'ப்ரேக் - அப்' பார்ட்டி நடக்கிறது.நான் நாளைக்குச் சாயங்காலம் வீட்டுக்கு வரமாட்டேன். ராத்திரி தங்கிட்டு அடுத்த நாள்தான் வருவேன்" என்றான்.

"சரி" என்றாள் ஸவிதா. ஸௌம்யா அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

"நீ முதல் வருஷ ஸ்டூடண்ட்தானே ராஜூ? ஓவர்நைட் இருந்துதான் ஆகணுமா?"

"ஆகணும்னு ஒண்ணுமில்லே சித்தி. ஆனா எனக்கு ஆசையாயிருக்கு. என் ஃப்ரெண்ட்ஸ் ரொம்பப் பேர் இருக்கப் போறா."

அவன் அங்கிருந்து சென்றபின் ஸௌம்யா, "இதையெல்லாம் அத்திம்பேர் அனுமதிக்கிறாரா ஸவி?" என்றாள்.

"ஆமாம்."

"நீயும் வேணாம்னு சொல்றதில்லையா?"

"எதுக்குச் சொல்லணும்?"

"இப்படியெல்லாம் வீட்டை விட்டு வெளியே தங்க ஆரம்பிச்சுதான் இந்தநாள் பசங்க எல்லா வழக்கங்களையும் கத்துக்கறா. இல்லையா? சுருட்டு, கஞ்சா, குடி அப்புறம் கோ-எட் வேற.. நான் இப்ப ராஜூவை ஏதும் பர்சனலாய்ச் சொல்லலே."

"புரிகிறது ஸௌமி. ஆனா காலம் மாறரதை நாம் தடுத்து நிறுத்திட முடியுமா?"

"குழந்தைகளை நாம் தடுத்துக் காப்பத்தலாமே?"

"உலகம்னா இப்படியெல்லாம் இருக்குன்னு தெரிஞ்சுண்டுதான் இந்த நாள் பசங்க வாழ்ந்தாகணும். அதுக்குமேல ஒழுங்காகவோ ஒழுக்கங்கெட்டோ நடந்துக்கறது அவா கையில இருக்கு."

"பெரியவாளுடைய கன்ட்ரோலே அவசியம் இல்லைங்கறயா?"

"கன்ட்ரோல் பண்ணினா இன்னும் பிச்சுண்டு கிளம்பும், அவ்வளவுதான்."

"குழந்தைகளுக்கு உதவி தேவை. அப்பா அம்மா வேற எதுக்குத்தான் இருக்கா?"

"தங்களுடைய அன்பு என்னிக்கும் அவாளுக்காகத் திறந்தே இருக்கும்னு குழந்தைகளுக்குக் காட்டத்தான். வேறு எப்படி உதவ முடியும்?"

சிறிது நேரம் இருவரும் பேசவில்லை. ஒரே சீராய்ப் போய்க் கொண்டிருந்த ஒன்றில் சிறு இடலுணர்வா? ஸௌம்யா தன் டிபன் தட்டை மேஜைமேல் வைத்தாள். வற்றல் இன்னும் மீதம் இருந்தது. ஸவிதா கண நேரம் அமைதி இழந்தாள். பிறகு கையை நீட்டித் தங்கையின் கையை மெல்லப் பற்றி அமுக்கினாள்.

"இதைப் பற்றிக் கவலைப்படாதே ஸௌமி. அடிபட்டுக்காமல் யாரும் வளர முடியாது. குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வைச்சுக்க முடியுமா? முதல்லே, அவ அதை ஏத்துப்பாளா? சொல்லு. போகட்டும், புதுசா ஒரு ஹிந்திப்படம் வந்திருக்கே, போகலாமா? நீ அதை ஏற்கனவே பம்பாயில் பார்த்துட்டியா?"

"இன்னும் பார்க்கலே, போகலாம்."

புதிய திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்த அன்று சகோதரிகள் வெகுநேரம் அதைப் பற்றி விவாதித்தார்கள்> ஸௌம்யாவுக்குப் படம் பிடிக்கவில்லை. "இப்படிப் பச்சையாய் எடுத்தால்தான் நல்ல படம்னு அர்த்தமா? இப்போதெல்லாம் சினிமா, இலக்கியம் எல்லாத்திலேயும் இந்தப் பச்சைத்தனம் ரொம்ப அதிகமாகி அசிங்கமாயிண்டு வரது. உனக்கு அப்படித் தோணலே?" என்றாள்.

"நாம அசிங்கத்தை விட்டுட்டு அதிலெல்லாம் இருக்கக்கூடிய கதை, கலை முதலான நல்ல அம்சங்களை மட்டும் எடுத்துண்டு ரசிப்போம்."

"முதல்லே விஷத்தைக் கொட்டுவானேன்? அப்புறம் அதில் நல்லது எங்கேன்னு தேடிண்டிருப்பானேன்? தும்பை விட்டுட்டு வாலைப் பிடிக்கிற சமாசாரந்தான்."

அன்று இரவு ஸௌம்யா தன் பெட்டியிலிருந்து இரண்டு ஆங்கில சஞ்சிகைகளை எடுத்துக் குறிப்பிட்ட பக்கங்களில் திருப்பிச் சகோதரியிடம் கொடுத்தாள்.

ஸவிதாவின் கண்கள் விரிந்தன. "அட, உன் பேர் போட்டிருக்கே! கதையா? நீ கதை கூட எழுதறியா! எப்பலேருந்து? எனக்குச் சொல்லவே இல்லையே?"

"வெக்கமாயிருந்தது. மெள்ளச் சொல்லிட்டுக் காட்டலாம்ன்னுதான் எடுத்துண்டு வந்தேன். இப்போ ஒரு வருஷமாய்த்தான். எப்பவானும், சும்மா ஆசைக்கு படிச்சுப் பாரேன்."

படித்ததும் ஸவிதாவுக்கு உற்சாகம் தாங்கவில்லை.

"ரொம்ப அருமையாய் எழுதியிருக்கே ஸௌமி! நீ காலேஜில் இங்கிலீஷ்லே மெடலிஸ்ட்னு ஒவ்வொரு வரியும் சொல்றது. அற்புதமான நடை."

"நடை கிடக்கட்டும். விஷயம் எப்படி?"

ஸவிதா ஒரு கணம் தயங்கினாள். பிறகு, "நல்ல கதைதான், ஆனா... நவீன ஃபேரி டேல்ஸ் மாதிரி இருக்கு" என்றாள்.

"நம்மைச் சுத்தி எங்கே பார்த்தாலும் ஆபாசமும் பயங்கரமும் இருக்கறதனால எழுத்திலேயாவது நல்லதையும் தூய்மையையும் காட்டணுங்கிறது என் லட்சியம்."

இருவரும் மௌனமானார்கள். அந்த மௌனம் ஸவிதாவின் நெஞ்சில் உறுத்தியது. மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு வழக்கம்போல் தங்கையுடன் அடையாறு பாலம் வரை நடந்து உலாவிவிட்டு வந்த பிறகுதான் அந்த உறுத்தல் மறைந்தது.  அப்பாடா! எல்லாம் முன்புபோல ஆகிவிட்டது.

ஒன்பது மணிக்கு நூலகத்திலிருந்து சேவகன் புதிய வாராந்தரப் புத்தகங்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் பழையவற்றை வாங்கிக்கொண்டு போனான். ஸௌம்யா புதிய புத்தகங்களை எடுத்துப் பார்த்தாள். இரண்டில் மெலிதாயிருந்ததன் தலைப்பையும் ஆசிரியர் பெயரையும் கண்டதும், "ஓ இந்தப் புஸ்தகமா? நான் படிச்சிருக்கேன். ஸவி, நீ இதை அவசியம் படி. உனக்கு ரொம்பப் பிடிக்கும்" என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

ஸவிதா அப்புத்தகத்தைப் படித்து முடித்தபின் வெகுநேரம் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். எவ்விதமான இலக்கியத் தரமோ மானிட ரீதியான வெளிச்சமோ இல்லாத வெறும் மஞ்சள் குப்பை அந்த நூல். இதையா அவளுக்குப் பிடிக்கும் என்றாள் ஸௌம்யா? அவள் சொன்னதிலிருந்தெல்லாம் ஸௌம்யா புரிந்து கொண்டது அவ்வளவுதானா?

"ஈராஸ் தியேட்டரில் வர ஒவ்வொரு தமிழ்ப்படத்துக்கும் அவளை அழைச்சுண்டு போயிடறியே. ஸௌமி மேலே உனக்கு என்ன கோபம்?" என்றார் அவள் கணவர்.

"பம்பாயில் அவளுக்கு அடிக்கடி பார்க்க முடியாதது தமிழ்ச் சினிமா தானே? அவள் இஷ்டப்பட்டுத்தான் நாங்க போறோம். இல்லையா ஸௌமி?"

"ஓரா" என்றாள் ஸௌம்யா. மற்றவர்கள் அர்த்தம் புரியாமல் விழித்தபோது ஸவிதாவுக்கு மட்டும் மகிழ்ச்சியாக இருந்தது. சிறுமிப் பருவத்தில் அவ்விருவரும் பெரியவர்களுக்குப் புரியாமல் தமக்குள் பேசிக்கொள்ள ஒரு ரகசிய மொழியை உருவாக்கியிருந்தார்கள். அவர்களாக ஏற்படுத்தும் பதங்களுக்கும் ஒலிச்சேர்க்கைகளுக்கும் தனித்தனியே அர்த்தம் கொடுத்த அந்த பிரத்தியேக அகராதியில் 'ஓரா' என்றால் ஆமாம் என்று பொருள். திடீரென அந்தரங்க மொழியை ஸௌம்யா பயன்படுத்தியபோது தம் ஒருமை மீண்டும் வலியுறுத்தப்படுவதுபோல் ஸவிதாவுக்குத் தோன்றியது. சகோதரிகள் புன்சிரிப்போடு ஒருவரையொருவர் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினார்கள்.

"சாயங்காலம் லேடீஸ் கிளப்புக்குப் போகணும். ஞாபகமிருக்கா?" என்றாள் ஸவிதா.

அவள் அங்கம் வகித்த மாதர் சங்கத்துக்கு அதுவரை சிலமுறைகள் சகோதரியை அழைத்துப் போயிருந்தாள். இன்று மற்ற உறுப்பினர்களிடம் தன் தங்கை கதை எழுதுவாள் என்று சொல்லிக்கொண்டபோது கண்களிலும் முகத்திலும் பெருமை ததும்பியது.

மன்றத் தலைவி ஸவிதாவிடம் அருகாமையில் உறைந்த ஓர் ஏழைப் பையனைப் பற்றி அன்று கூறினாள். கால் விளங்காத அவனைக் குடும்பத்தார் கைவிட்டார்களாம். பையன் படிக்க வேன்டும். அதைவிட முக்கியமாய்ச் சாப்பிட்டாக வேண்டும். அருகிலிருந்த ஒரு பள்ளிக்கூடக் காம்பவுண்டுக்குள் நாலைந்து நாட்களாகப் படுத்துக்கொண்டு அங்கிருந்து நகரமாட்டேனென்று அடம்பிடிக்கிறான். அவனது உடனடி விமோசனத்துக்காக மன்றத்தலைவி நிதி திரட்டிக் கொண்டிருந்தாள். "உங்களாலானதைக் கொடுங்க" என்று அவள் கேட்டபோது ஸவிதா பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்தாள். "நீங்க...?" என்று அப்பெண்மணி ஸௌம்யாவைப் பார்த்துக் குரலை நீட்டினாள். கணநேரம் தாமதித்த ஸௌம்யா ஒருதரம் சகோதரியை ஏறிட்டு விட்டுத் தன் பங்காக ஐந்து ரூபாயைக் கொடுத்தாள்.

வீடு திரும்பும் வழியில் ஸவிதா, "பாவம், இல்லே அந்தப் பையன்?" என்றபோது ஸௌம்யா உடனே பதில் சொல்லவில்லை.

"என்ன ஸௌமி பேசாமலிருக்கே?"

"என்ன பேசறது? பாவம். எனக்கு மட்டும் வருத்தமாயில்லேன்னு நினைக்கிறியா? ஆனா.."

"ஆனா...?"

"இதெல்லாம் பெரிய பெரிய நிறுவன அடிப்படையில் சமாளிக்க வேண்டிய பிரச்சினை. தனி மனுஷா உதவியில் என்ன ஆகும்? நம்ம நாட்டில் வறுமை ஒரு அடியில்லாத பள்ளம். அதில் எத்தனை போட்டாலும் நிரம்பாது. அதனால், போட்டு என்ன பிரயோசனம்?"

"அடியில்லாத பள்ளந்தான். போட்டு நிரம்பாதுதான். அதனால் போட்டவரைக்கும் பிரயோசனம்."

சட்டென்று பேச்சு தொய்ந்தது. இருவரும் மௌனமாகவே வீடு வந்து சேர்ந்தனர். இப்போதெல்லாம் மௌனம் பேச்சின் மகுடமாக இல்லை.

ஹாலுக்கும் அவர்கள் நுழைந்தபோது அங்கு ஒரே கூச்சலாக இருந்தது. ஸவிதாவின் பதினான்கு வயதான மகளின் கையிலிருந்து அப்போதுதான் வந்திருந்த பத்திரிக்கையைப் பிடுங்குவதற்காக அவளைவிட இரண்டு வயது இளையவனான தம்பி ஓடித் துரத்திக் கொண்டிருந்தான்.

"குட்றீ அதை எங்கிட்ட!"

"போடா தடியா, நான் பாத்துட்டுதான்."

"அமிதாப்பச்சனை ஒடனே பாக்காட்டால் தலை வெடிச்சுடுமோ?"

இருவரும் கத்திக்கொண்டே விடாமல் ஓடினார்கள். சோபாவுக்குப் பின்னிருந்து வேகமாய் மூலை திரும்பிப் பாய்ந்தபோது பையன் சுவர் அலமாரியில் மோதிக் கொண்டான். அதன்  கண்ணாடிக் கதவு உடைந்து உள்ளே வைக்கப்பட்டிருந்த ஓர் உயரமான 'கட்கிளாஸ்' ஜாடி பக்கவாட்டில் சரிந்தது. அது கீழேவிழுமுன் ஸவிதா ஓடிப்போய் அதைப் பிடித்துக் கொண்டாள். அவள் முகம் சிவந்திருந்தது. "கடங்காரா, அதென்ன கண்மூடித்தனமாய் ஓட்டம்? இப்போ இது உடைஞ்சிருந்தா என்ன ஆயிருக்கும்?" என்று மகனைப் பார்த்து மூச்சிரைக்கக் கோபமாய்க் கத்தினாள்.

பையன் தலை கவிழ்ந்தது. "ஸாரிம்மா!" வேகம் அடங்கி அவனும் அவன் அக்காவும் அறையை விட்டு வெளியேறினார்கள்.

ஸவிதாவின் படபடப்பு அடங்கச் சிறிது நேரம் ஆயிற்று. ஸௌம்யா அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"பாரேன் ஸௌமி, நம் அப்பா அம்மா கொடுத்ததுன்னு  நான் இதை ஒரு பொக்கிஷம் மாதிரி காப்பாத்தி வச்சுண்டிருக்கேன். அது தெரிஞ்சும் இந்தக் குழந்தைகளுக்கு எத்தனை அஜாக்கிரதை?"

ஸௌம்யா ஏதும் சொல்லவில்லை.

"இது உடைஞ்சிருந்தால் எனக்கு உயிரே போனாப்பல இருந்திருக்கும். இதன் ஜோடியை உனக்குக் கொடுத்தாளே, நீயும் பத்திரமாய்த்தான் வச்சிருப்பே, இல்லையா,"

"பத்திரமாய்த்தான் இருக்கு."

"இதே மாதிரி ஹால்லேதான் பார்வையாய் வச்சிருக்கியா நீயும்,"

"வச்சிருந்தேன்."

"அப்படின்னா?"

"மேல் ஃப்ளாட் பொண்ணு அதைப் பார்த்து ரொம்ப அழகாயிருக்குன்னு பாராட்டினாள். அதனாலே அவள் கல்யாணத்துக்குப் பரிசாய்க் கொடுத்துட்டேன்."

ஸவிதா அதிர்ந்து நின்றாள்.

"என்ன! கொடுத்துட்டயா? அதை விட்டுப் பிரிய உனக்கு எப்படி மனசு வந்தது?"

"ஏன் வரக்கூடாது?"

"அப்பா அம்மா நினைவாய்..."

"அப்பா அம்மாவை நினைவு வச்சுக்க நினைவுச் சின்னங்கள் வேணுமா என்ன?"

மீண்டும் கத்தி முனையில் விநாடி இடறியது. சகோதரிகள் ஒருவரையொருவர் தீவிரமாய் வெறித்தார்கள். பார்வையில் குழப்பம்.

"நான்போய் நமக்குக் காபி கலக்கிறேன் ஸவி. ஜாடியை ஜாக்கிரதையாய் வச்சுட்டு வா."

ஒரே அளவு இனிப்புச் சேர்த்த காபியை அவள் எடுத்துவர, இருவரும் பருகினார்கள். நழுவிப்போகும் ஒன்றை இழுத்துப் பிடித்துக்கொள்ளும் செயலாய் அது இருந்தது.

அதற்குள்ளாகவா இரு மாதங்கள் முடியப்போகின்றன? அந்த ஏக்கம் இருவர் பார்வையிலும் தெரிந்தது. அடிக்கடி ஒருத்தி தோழமையை மற்றவள் நாடிவந்து உட்கார்ந்துகொள்வதிலும் 'இது அவளுக்குப் பிடிக்கும்' என்று பார்த்துப் பார்த்துச் செய்வதிலும், 'அடுத்த சந்திப்பு எப்போதோ?' என்ற தாபம் தொனித்தது. எனினும் அத்தனை ஆந்தரிகத்திலும் இப்போதெல்லாம் பேச்சில் ஒரு கவன உணர்வு. சிரித்துக்கொண்டே அரட்டையடிக்கும்போது, பழைய நினைவுகளையோ இத்தனை வருஷக் கதைகளையோ பகிர்ந்து மகிழும்போது, சட்டென்று எழும்பிவிடக்கூடிய சுருதி பேதத்தைத் தவிர்க்க முனைந்து கொண்டே இருக்கும் ஒரு ஜாக்கிரதை. விளிம்புக்கு இப்பாலேயே இருக்க வேண்டுகிற கவலையில் நிழலாடும் ஒரு தயக்கம்.

அண்மையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தின் பிரதியைத் தபால் மூலம் பார்த்துவிட்டு ஸௌம்யாவின் கணவர், "அடையாளம் தெரியாமல் குண்டாகிவிட்டாயே! 'நான்தான் ஸௌம்யா' என்று நெற்றியில் அச்சடித்துக் கொண்டுவா" என்று எழுதியிருந்தார். அவரும் குழந்தைகளும் எழுதும் கடிதங்கள் மேற்போக்கில் உல்லாசமாயும் இயல்பாகவும் தொனித்த போதிலும் அவளுடைய இல்லாமையை மிகவும் உணர்கிறார்களென்ற ஜாடை புரிந்தது. விரைவில் கிளம்பிவிட வேண்டியதுதான்.

தாம் இனி இப்படி வருஷக்கணக்காகப் பிரிந்திராமல் ஆண்டுக்கொரு தடவை ஒருவரையொருவர் முறை வைத்துப் போய்ப் பார்க்க வேண்டுமென்று சகோதரிகள் தீர்மானித்துக் கொண்டார்கள்.

"நியூ இயர் ரெஸொல்யூஷன் மாதிரி ஆயிடக்கூடாது இது!" என்று ஸௌம்யா கூறிச் சிரித்தபோதே அவள் கண்கள் பனித்தன. ஸவிதாவின் மோவாய் நடுங்கியது. எதுவும் சொல்லாமல் ஓர் அட்டைப்பெட்டியை எடுத்து வந்து நீட்டினாள். அதனுள் ஓர் அடையாறு கைத்தறி நூல் சேலை. சிவப்பு உடல், மஞ்சளில் அகலமான கோபுரக்கரை.

"எதுக்கு இதெல்லாம் ஸவி?"

"பேசப்படாது. வைச்சுக்கோ."

"உன் இஷ்டம். எனக்கு மட்டுந்தானா?"

"இதோ எனக்கும்."

மயில் கழுத்து நிறம். ஆனால் அதே அகலக்கரை.

மீண்டும் புன்னகைகள் பேசின.

நாட்களின் தேய்வில் கடைசியாக இன்னொரு நாள். ஸௌம்யா ஊருக்குப் புறப்படும் நாள். ரெயிலுக்குக் கிளம்பும் நேரம். சாமான்கள் கட்டி வைக்கப்பட்டுத் தயாராயிருந்தன.

"கிளம்பிட்டாயா ஸௌமி?" ஸவிதாவின் குரல் கம்மியது.

"நீயும் ஸ்டேஷனுக்கு வரயோன்னோ ஸவி?"

ஆவலுக்கு ஆவல் பதிலளித்தது. "கட்டாயம்."

"எப்போ எந்த ஊருக்குக் கிளம்பறதுக்கு முந்தியும் சுவாமிக்கு நமஸ்காரம் பண்றது என் வழக்கம்."

ஸவிதா மௌனமாய் இருந்தாள். ஸௌம்யாவின் கண்களில் கலக்கம் தெரிந்தது.

"ஆனா இங்கே பூனை அறையே இல்லையே?" என்றாள் தொடர்ந்து.

"இல்லாட்டா என்ன? மனசிலேயே வேண்டிக்கோயேன். நம்பிக்கை இருந்தால் அது போதாதா?"

"நம்பிக்கை இருந்தால்னா? உன் நம்பிக்கை அந்த மாதிரின்னு சொல்றயா?" திடீரென்று ஸௌம்யாவின் முகம் மாறியது. "அல்லது உனக்கு நம்பிக்கையே இல்லைன்னு அர்த்தமா?"

"நான்... நான் அதைப்பத்தி ஏதும் யோசிச்சுப் பார்த்தது கிடையாது" ஸவிதாவுக்கு சங்கடம் மேலோங்கியது. "இப்போ எதுக்கு விவாதம் ஸௌமி, ஊருக்குக் கிளம்பற சமயத்திலே?"

"என்ன ஸவி இது! இவ்வளவு பெரிய விஷயத்தைப் பத்தி உனக்கு ஏதும் தீர்மானமான அபிப்ராயம் இல்லையா?"

"இதை ஒரு பெரிய விஷயம்னு நான் நினைக்கலே."

ஸௌம்யாவின் கண்கள் அதிர்ச்சியில் பிதுங்கின. அவர்களுடைய சிறுமிப் பருவத்தின் சூழ்நிலை எத்தனை பக்திமயமானது! அம்மா அன்றாடம் பூஜை செய்வாள். சாயங்காலமானால், 'போய்ச்  சுவாமி அறையிலும் துளசி மாடத்திலும் விளக்கு ஏத்துங்கோடி' என்று பணிப்பாள். அவர்களை வெள்ளிக்கிழமை தவறாமல் கோயிலுக்கு அழைத்துப் போவாள். தோத்திரங்களெல்லாம் சொல்லிக் கொடுப்பாள். 'வாழ்க்கையில் எந்தக் கஷ்டத்திலும் துணை இருக்கிறது ஆண்டவன் பெயர் ஒண்ணுதான்' என்று போதிப்பாள். தான் அந்த வழியிலேயே நடந்து வந்திருக்க, இவளுக்கு மட்டும் என்ன ஆயிற்று?

"தெய்வ நம்பிக்கையை இழக்கற மாதிரி உனக்கு அப்படி என்ன அனுபவம் ஏற்பட்டது ஸவி?"

"அந்த நம்பிக்கை இழந்துட்டேனா இல்லையான்னு எனக்கே நிச்சயமாய்த் தெரியாது. ஆனா, அனுபவம்னு நமக்கே ஏற்பட்டால்தானா? கண்ணும் காதும் மனசும் திறந்துதானே இருக்கு? போகட்டும், உலகத்தின் பிரச்சினைகளையெல்லாம் பார்க்கறபோது இந்த விஷயம் ஒரு தலைபோகிற பிரச்சினையாய் எனக்குத் தோணலேன்னு வச்சுக்கோயேன்."

"எத்தனை அலட்சியமாய்ச் சொல்லிட்டே? ஆனா நான், தெய்வத்தை நம்பலேன்னா என்னால் உயிரோடயே இருக்க முடியாது."

பார்வைகள் எதிரெதிராய் நின்றன. அவற்றில் பதைப்பு, மருள். ஸௌம்யாவின் அதிர்ச்சி இன்னும் மாறவில்லை. தமக்கையைப் பார்த்த அவள் பார்வை 'இவள் யார்?' என்று வியந்தது. பிறகு கண்கள் விலகின.

ஸவிதா தவிப்பும் வேதனையுமாய் நின்றாள். என்ன சொல்வதென்று தெரியவில்லை. எதைச் சொன்னாலும் அர்த்தம் இருக்கும் போலவும் தோன்றவில்லை. ஒன்றாய்ப் பிறந்து வளர்ந்தவர்கள்தான். ஒரே மரபினாலும் ஒரே வகையான பராமரிப்பாலும் உருவானவைதான் அவர்களுடைய எண்ணங்களும், கண்ணோட்டங்களும், மதிப்புகளும்! ஆனால் வளர வளர அவற்றில் எவ்வளவு மாறுபாடு? ஒவ்வொரு மனித உயிரும் ஓர் அலாதியா? அதன் தனிப்பட்ட தன்மையை ஒட்டித்தான் வாழ்க்கை எழுப்பும் எதிரொலிகள் அமைகின்றனவா? ஒருவரையொருவர் தெரியும் புரியும் என்று சொல்வதெல்லாம் எத்தனை அறிவீனம்? எவ்வளவு நெருங்கிய உறவாயிருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருத்தரையும் ஒரு புதிய இருப்பாகத்தான் கண்டு அறிமுகம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. காலம் கொண்டுவரும் மாற்றம் வெறும் நரை மட்டுமல்ல...

அன்பு... அது அடியிழை, உள்ளுயிர்ப்பு. அது இருப்பதாலேயே, வேறுபாடுகளினால் அழிவு நேர்ந்துவிடாதிருக்கத் தான் அது இருக்கிறது.

மன்னிக்கவும். ஹெரால்ட்ராபின்ஸ்! வாழ்நாள் முழுவதும் அந்நியர்களைத்தான் அன்பு செய்து கொண்டிருக்கிறோம்.

"நாழியாறதே! பேசிண்டேயிருந்தால் ஸ்டேஷனுக்குக் கிளம்ப வேணாமா? வாசலில் டாக்ஸி ரெடி" என்றவாறு அங்கு வந்த அவள் கணவர் அவர்களைப் பார்த்து, "உங்க பேச்சுக்கு ஒரு 'தொடரும்' போட்டுட்டு வாங்கோ. அடுத்த சந்திப்பில் மறுபடியும் எடுத்துக்கலாம்" என்றார் சிரித்துக்கொண்டே.

"இதோ வரோம். வா ஸௌமி!" ஸவிதா தங்கையின் கையைப் பற்றிக் கொண்டாள். சகோதரிகள் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். கைப்பிணைப்பு விலகவில்லை. ஆனால் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை.

******

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

3 கருத்துகள்:

Thangamani on December 14, 2010 at 4:51 PM said...

//அன்பு... அது அடியிழை, உள்ளுயிர்ப்பு. அது இருப்பதாலேயே, வேறுபாடுகளினால் அழிவு நேர்ந்துவிடாதிருக்கத் தான் அது இருக்கிறது//.

சகோதரிகளின் வாழ்வியல் மூலமாகச் சொல்லும்
அழகான கதை! மன உணர்வுகளின் புரிதலில்
காணும் வித்தியாசமான அனுபவம்!
சூடாமணியின் அணுகுமுறை அருமை!

அன்புடன்,
தங்கமணி.

த. முத்துகிருஷ்ணன் on July 3, 2012 at 4:15 PM said...

என்னதான் ஒரே சூழ்நிலை வளர்ப்பு முறை, நெருக்கம் என்றால் ரசனையும் விருப்பு வெறுப்புகளும் காலத்தால் வேறுபடவே செய்கிறது.. மன உணர்வுகளின் நெருக்கத்தையும் வித்தியாசத்தையும் மிக அருமையாக வெளிப்படுத்தி உள்ளார். மிக மூத்த எழுத்தாளர் என்றாலும் எழுத்து நடை இப்போதும் சுவாரஸ்யம் அளிக்க கூடியதாகவே இருக்கிறது. இந்த கதையை நான் நேசனல் புக் டிரஸ்ட் வெளியீடான நவீத தமிழ் சிறுகதைகள் என்னும் தொகுப்பில் நான் எட்டாவது படிக்கும்போது படித்து இருக்கிறேன். இன்னமும் நினைவில் அழியாத இந்த கதையை மீண்டும் அழியாச்சுடர்கள் வாயிலாக வாசிக்க தந்தமைக்கு நன்றி..

S Kesavaraj on November 23, 2019 at 9:35 PM said...

இதை படிக்கும் போது நானும் என் சகோதரியும் பேசுவது போல், இது எங்கள் கதையை போல் தோன்றியது. நுட்பமான மன உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கும்
ஆர் சூடாமணி எனக்கு பிடித்த எழுத்தாளர்.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்