Feb 7, 2011

அக்பர் சாஸ்திரி - தி. ஜானகிராமன்

மாயவரம் ஜங்ஷனில் இறங்கிச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பியபோது, வண்டியில் மூன்றாவது ஆத்மா ஒன்று என் தோல் பையையும் துணிப் பையையும் நடுவே நகர்த்தி என் இடத்தில் உட்கார்ந்து பூரி உருளைக்கிழங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தது. வெறுமனே சாப்பிடவில்லை. உருtjanakiramanளைக் கிழங்கு ஒட்டிக் கொண்டிருந்த விரல்களை ஆட்டி ஆட்டிப் பேசிக் கொண்டிருந்தது. குரலாவது குரல்! தொண்டைக்குள் வெண்கலப் பட்டம் தைத்த குரல், அதிகாரமும் வயசான பெருமையும் எக்களித்துக் கொண்டிருக்கிற குரல்.

''எக்ஸைஸ் இலாக்கான்னா என்ன டெஸிக்னேஷன்?' என்று எக்களிப்பும் அழுத்தமுமாக இந்தக்  குரல் போட்ட கேள்விக்கு, அடக்கமும் புன்சிரிப்புமாக என்னமோ மேலதிகாரிக்குப் பதில் சொல்லுகிறார்போல் ''சூப்ரிண்டு'' என்றார் மேலண்டைக் கோடியில் இருந்தவர். சீர்காழி ஸ்டேஷனில் ஏறி உட்கார்ந்திருந்த என்னை லட்சியமே செய்யாமல் ரயில்வே கைடுக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்த இந்த ஆசாமிக்குப் புது ஆசாமியைக் கண்டு என்ன மரியாதை! என்ன வினயம்!

எதிரே 'சூப்ரிண்டு' மனைவி காலை நீட்டிப் படுத்துக் தூங்கிக் கொண்டிருந்தவள் கண்ணைத் திறந்து ஒரு தடவை பார்த்துவிட்டு மறுபடியும் மூடிக்கொண்டாள். காலடியில் உட்கார்ந்திருந்த குழந்தைகள் இரண்டும் உருளைக்கிழங்கு சாப்பிடுகிறவரையும் அவருக்குப் பதில் சொல்லுகிற அப்பாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தன.

''எங்கிருந்து வறீர்?''

''மெட்ராஸிலேருந்து!''

''பகல் வண்டியிலே மெட்ராஸிலேயிருந்து யாராவது வருவாளோ?''

''இல்லை, நேத்து ராத்திரிப் புறப்பட்டேன். கடலூரிலே இறங்கி, என் மருமாளுக்கு உடம்பு சரியில்லேன்னா, பாத்துட்டு இன்னிக்கு மத்தியானம் கிளம்பினோம்.''

''எதுவரையில் பயணம்?''

''தஞ்சாவூருக்கு. தாயாருக்கு உடம்பு சரிப்படலே. பார்க்கப் போறோம்.''

''அப்படியா? ம்!'' என்று எழுந்து இலையை ஜன்னல் வழியாக வீசி எறிந்தார் வந்தவர். காற்று வாக்கில் இலை என் மேல் பறந்து விடப் போகிறது என்ற கதவோராமாக இருந்த நான் சற்று உள்ளே நகர்ந்து கொண்டேன். வண்டி அப்போது ஸ்டேஷனை விட்டுக் கிளம்பி லெவல்-கிராஸிங்கைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது.

அவர் கதவைத் திறந்து கொண்டு உள்ளே கையலம்பப் போனார். நடுவே நகர்த்தப்பட்டிருந்த தோல் பையையும் துணிப் பையையும் நகர்த்திக் கொண்டு காலியான என் சீட்டில் உட்கார்ந்து கொண்டேன். கையலம்பி விட்டு வாயைத் துடைத்துக் கொண்டவர் இடத்தை மீட்டுக்கொண்ட என்னை அலட்சியமாகப் பார்த்து விட்டு நடுவில் உட்கார்ந்து கொண்டார்.

ஆள் ஆறடி உயரத்துக்குக் குறைவில்லை. இரட்டை நாடியில்லை. ஆனால் ஒல்லியுமில்லை - சாட்டை மாதிரி முறுக்கு ஏறிய உடம்பு. நேரான உடம்பு. உட்கார்ந்திருந்த போது கூட வளையா நேர் முதுகு. கறுப்பில்லை. மாநிறமுமில்லை. அப்படி ஒரு கறுப்பு. சந்திர வளைய வழுக்கையில் ஓரம் கட்டியிருந்த தலைமயிர் முழுவதும் நரைத்திருந்தது. நீள மூக்கு, நீளக் கை, கால். குரலில் தெறித்த அதிகாரத்துக் கேற்ற உடம்புதான்.

உட்கார்ந்து கொண்டவர் ''நீ போடா கிறுக்கு, சின்னப் பையா!'' என்ற சொல்லாமல் இலேசாக எனக்கு முதுகைக் காட்டிக் கொண்டு திரும்பி உட்கார்ந்து விட்டார்.

''ம்... தாயாரைப் பார்க்கப் போறீராக்கும்? என்ன விசேஷம்?''

''போன மாசம் உடம்பாகக் கிடந்தா. அப்பப் போய்ப் பார்க்க முடியலே, எனக்கும் இப்பத்தான் லீவு கிடைச்சுது. நீங்க...?'' - அதே அடக்கம், புன்னகை.

''நானா? எனக்கு மதுரை. கோவிந்த சாஸ்திரின்னு பேரு. அட்வகேட்டாயிருக்கேன். ஒரு கேஸ் விஷயமா பட்டணம் போயிட்டுவரேன். மாயவரத்தில் எங்க சகோதிரியைக் கொடுத்திருக்கு. இறங்கிப் பார்த்துட்டு வரேன். முதல் கிளாஸ்லே டிக்கட் கிடைக்கல்லே. 'சகிண்ட்' கிளாஸ்தான் இருக்குன்னான். வாங்கிண்டுவந்து ஏறிட்டேன். ராத்திரி சாப்பிடறதில்லே. பலகாரம் பண்றேனே அண்ணான்னா தங்கை. அடி போடி பைத்தியம்னு வந்துட்டேன். பூரி இரண்டு வாங்கினேன். சாப்பிட்டேன். ஒண்டி ஆளுக்காக பலகாரம் பண்ணச் சொல்லவாவதுய்ய! இப்ப என்ன செத்தா போயிட்டேன்!'' என்று சொல்லிக் கொண்டே கோவிந்த சாஸ்திரி வண்டியைச் சுற்றி ஒரு நோட்டம் விட்டார். குழந்தைகளைப் பார்த்தார்.

''உம்ம குழந்தைகளா?''

''ஆமாம்?''

''என்ன வயசாகிறது?''

''அவன்தான் பெரியவன். பத்து ஆகிறது. இவ சின்னவ இப்ப ஏழு நடக்கிறது.''

''மலேரியா அடிச்சுக் கிடந்தா¡ப்ல இருக்க ரண்டும். எலே இங்கே வா... வாடா... பரவால்லே, வா... ஒண்ணும் பண்ணலே.''

பையன் வந்து நின்றான். குச்சி குச்சியாக இருந்த கையைப் பிடித்தார் கோவிந்த சாஸ்திரி. கை முழுவதையும் ஒருமுறை தடவினார்.

''நாக்கை நீட்டு, கண்ணைக் காட்டு.''

''அதெல்லாம் ஒன்றுமில்லை. சாப்பிடவே மாட்டான். சாப்பிட உட்கார்ந்தான்னா, பருப்பு நன்னாலே, நெய் நாத்தம் அடிக்கிறது - இப்படி ஏதாவது சொல்லி எழுந்திண்டு போயிடுவான்'' என்றார் கோடி ஆசாமி.

''சட்டையைத் தூக்கு.''

பையன் சட்டையைத் தூக்கி வயிற்றைக் காண்பித்தான். அதை ஒரு அழுத்து அழுத்தி ''ம்'' என்ற வண்ணம் அவனைப் பார்த்தார்.

''ஏண்டா! முழங்கால், முழங்கையெல்லாம் இப்படி எலும்பு முட்றது? கண்ணு சுண்ணாம்பா இருக்கு. நித்தம் ஒரு முட்டை கொடுமையா.''

''எல்லாம் பார்த்தாச்சு. எதையும் தொட மாட்டேங்கறான் சார்.''

''காட்லிவர் ஆயில்.''

''அதுவும் கொடுத்துப் பார்த்தாச்சு.''

''காட்லிவர் ஆயிலை 'மால்டா'க் கொடுக்கிறது, தித்திப்பாயிருக்கும்.''

பார்க்கணும்.''

கோவிந்த சாஸ்திரி இன்னும் கையை விடவில்லை பார்வையையும் எடுக்கவில்லை.

''இல்லாட்டா ஒண்ணு செய்யறீரா இவனுக்கு?''

''என்ன?''

''கொள்ளு தெரியுமா கொள்ளு''

''.....?''

''குதிரைக்கு வைப்பாளேய்யா அது.''

''ம் ம்.''

''அதைத் தினமும் இவ்வளவு எடுத்துத் தண்ணியை விட்டுக் கொதிக்க வைச்சு, அந்தத் தண்ணியைச் சாப்பிடச் சொல்லும். அப்புறம் அந்தச் சுண்டலையும் கொஞ்சம் உப்பைப் போட்டுச் சாப்பிடச் சொல்லும். பையன் அரபிக் குதிரை மாதிரி ஆறானா இல்லையா, பாரும். இப்ப நான் எங்க வீட்டுக்கு அழைச்சிண்டு போய் மூணு மாசம் கொடுத்தேன்னா, அப்புறம் உம்ம பையன் தான் இவன்னு நான் சத்தியம் பண்ணினாலொழிய உம்மாலே நம்ப முடியாது. என்ன! செய்யறீரா?'' அதட்டுபவர் போலக் கேட்டார் சாஸ்திரி.

''செய்யறேன்.''

''இதோ பாரும், நான் டாக்டர் இல்லே. அதுக்குப் படிச்சுக் கிடிச்சு பாஸ் பண்ணலே. ஆனா எங்க வீட்டிலேருந்து போற மருந்துகளும் அங்க வரவாளும் கணக்கு வழக்கு இல்லே. எல்லாம் கடசீலே பாட்டியம்மா வைத்தியம். கருவேப்பிலைக் குழம்பு வச்சுப் பத்து நாள் வட்டம் சாப்பிடுவேன். ஏழுநாள் வட்டம் வேப்பம் பூவைச் சாதத்து மேலே வச்சு ஆமணக்கெண்ணெயைக் காய்ச்சி அது மேலே ஊத்தச் சொல்லிப் பிசைஞ்சு சாப்பிடுவேன். நீர் நம்பமாட்டீர். இதுவரை டாக்டருக்குன்னு ஒரு தம்பிடி? பேசப்படாது. பெரியவா புண்ணியத்திலே பத்துக் காணி நிலம் இருக்கு. ஆனால் அதிலேருந்துஒரு நெல்லு வித்த காசு டாக்டருக்குப் போனதில்லை.''

''நல்ல புண்ணியம் பண்ணினவா நீங்க. ஹி ஹி ஹி.''

''புண்ணியமாவது, புடலங்காயாவது. எல்லாம் நம்ப மனோபலத்தைப் பொருத்திருக்குதய்யா.''

''என்னமோ சார்! நான் தலையெடுத்த நாளையிலேருந்து பாருங்கோ. டாக்டர் வராத நாள் கிடையாது. இதைப் பாருங்களேன். நீங்கள் தான் பார்க்கறேளே, எதிர்த்தாப்பல கிழிச்ச நார் மாதிரி படுத்துண்டு கிடக்கா, கடலூர்லே வண்டி ஏறினோம், படுத்துண்டா. இன்னும் ஏந்திருக்கலே. புருஷா முன்னாடி நிக்கமாட்டா அந்த நாள்ளே. அவளேதான் இப்படி ஆயிட்டா. என்னத்தைப் பண்றது?'' என்று மனைவியைப் பார்த்தார். 'சூப்ரிண்டு'.

சூப்ரிண்டு மனைவி இலேசாகப் பாதிக் கண்ணைத் திறந்து பார்த்தாள்.

''என்ன உடம்பு?''

அந்தக் காலத்திலே பம்பரமாக சுத்தி வந்து காரியம் பண்ணின்டிருந்தவ. திடீர்னு ஒரு நாளைக்கு வயத்தை வலிக்கிறதுன்னா. டாக்டர் வயத்திலே கட்டி, ஆபரேஷன் கேஸுன்னார். செஞ்சுது. அது தேவலையாச்சு. அப்புறம் பிரமை புடிச்சாப்பல எது கேட்டாலும் பதில் சொல்றதில்லே. அப்படி நாலு வருஷம் உட்கார்ந்திருந்தா. அதுக்கு வேற ஊசி, மாத்திரை கொஞ்சமில்லை. அது தேவதையாப் போயிடுத்து. இப்ப பத்து வருஷமா தினம் போது விடிஞ்சா தலைவலி, கால் துணியாப் போயிடறது. எழுந்து நடமாட முடியலே. காப்பி சமையல் முதல்கொண்டுகூட, நான் நிக்க வேண்டிருக்கு.''

சூப்ரிண்டு மனைவி கண்ணை மூடாமல் இதைக் கேட்டுக் கொண்டேயிருந்தாள்.

''வாரா வாரம் எண்ணெய் தேச்சுக்கணும்'' என்றார் கோவிந்த சாஸ்திரி.

''எண்ணெயா! ஒரு முட்டைத் தலையிலே வச்சாப் போரும், ''ஐயா கடப்பாறை போட்டு இடிக்கிறதே இடிக்கிறதே'ன்னு அலற ஆரம்பிச்சுடுவா. எண்ணெய்தான் சத்ரு அவளுக்கு.''

''என்னய்யா ஆச்சரியம்! எண்ணெய் ஒத்துக்காத ஒரு மனஷா உண்டோ? நல்லெண்ணெய் தலைவலிக்குப் பரம சஞ்சீவி ஆச்சேய்யா.''

''எண்ணெயைத் தவிர மீதி எது வேணும்னாலும் சொல்லுங்கோ. போடாத ஊசியில்லை. குடிக்காத மருந்து இல்லே. இந்தத் தலைவலி நின்னாப் போரும்'' என்று படுத்தவாறே வாயைத் திறந்தாள் சூப்ரிண்டின் மனைவி.

பேச ஆரம்பித்த பிறகுதான் தெரிந்தது வயதுக்கு மீறிய மூப்பு. முகத்தில் சோகை, வாயில் குழறல். அழகாக இருந்த அம்மாள் இப்போது விகாரமாக மாறிவிட்டிருந்தாள்.

''தலைவலியைத்தானே நிறுத்தணும்?'' என்று கேட்டு விட்டு வெளியே பார்த்தார் கோவிந்த சாஸ்திரி.

வண்டி குத்தாலத்தில் நின்றது. ஒரு அணாவுக்கு வேர்க்கடலையை வாங்கி மென்றவாறு யோசனையில் ஆழ்ந்திருந்தார் அவர். வண்டி புறப்பட்டதும் தம் பேச்சை ஆரம்பித்தார்.

''சொல்லட்டுமா?'' என்று அவர் ஆரம்பித்ததும், அவசரம் அவசரமாக புஷ்கோட் பையிலிருந்த ஒரு டயரியையும் பென்சிலையும் எடுத்து வைத்துக்கொண்டார். 'சூப்ரிண்டு'.

''எழுதிக்கிறீமா? சரி வேப்பம் பருப்பு, வெள்ளை மிளகு, கசகசா, சுக்கு...''

இன்னும் நாலைந்து சொன்னார் அவர். எனக்கு அது மறந்துவிட்டது.

''இதையெல்லாம் பால்லே போட்டு ஊறவச்சு நசுக்கி அம்மியிலே ஒட்டி உருண்டை உருண்டையாகப் பண்ணிக் காய வச்சுக்கிறது. அப்புறம் நித்தியம் காலமே ஒரு உருண்டையைப் பால்லே கலந்து தலையிலே தேச்சு ஸ்நானம் பண்ணச்சொல்லும், ஒரு மாசத்துக்கப்புறம் எனக்கு எழுதும்.''

அமிருதம் கிடைத்த மாதிரி சூப்ரிண்டு எழுதிக்கொண்டு நாலு தடவைகள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்து, டயரியைத் திருப்பித் திருப்பி வாசித்துப் பையில் போட்டுக் கொண்டார்.

''இதுதான் கல்கம். எல்லாக் 'கம்ப்ளெய்ண்டு'க்கும் சேத்திருக்கேன் அம்மா! உங்க தலைவலி இன்னியோட தீந்தது'' என்றார் சாஸ்திரி.

அந்த அம்மாள் எழுந்து உட்கார்ந்து, ''அதை இன்னொரு தடவை நன்னாக் கேட்டு வச்சக்குங்கோ'' என்றாள் தன் புருஷனைப் பார்த்து.

சாஸ்திரி இன்னும் பல ரகசியங்களையெல்லாம் சொன்னார். சொறி சிரங்கு, சீதபேதி, ஆஸ்துமா, பாலுண்ணி - இப்படிப் பல வியாதிகளுக்கு அவரிடம் சஞ்சீவிகள் இருந்தன. சூப்ரிண்டின் கண்கள் மேலே அகல இடமில்லை. அப்படி ஒரு வியப்பு. தன்வந்திரி, சித்தர்கள் - எல்லாரும் அவர்மேல் கருணைகொண்டு இரண்டாம் வகுப்பில் சக பிரயாணியாக வந்து காட்சி கொடுத்து வினை தீர்த்த பரவத்தை அவருடைய மரியாதையிலும் அடக்கத்திலும் காண முடிந்தது.

''இத்தனைக்கும் நான் டாக்டர் இல்லே'' என்றார் சாஸ்திரி மீண்டும். ''எனக்கு வயசு எத்தனை இருக்கும்? எங்கே? சொல்லும், பார்ப்போம்.''

வியப்பில் ஆழ்ந்து கிடந்த 'சூப்ரிண்டு' தயங்கிப் புன் சிரிப்புச் சிரித்தார்.

''சும்மாச் சொல்லும்?''

''ஐம்பது இருக்கும்.''

''ஐம்பதா? எனக்கு அறுபதாம் கலியாணம் ஆகியே எட்டு வருஷங்கள் ஆச்சய்யா.''

''அறுபத்தெட்டா? உங்களுக்கா!''

முதுகைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் நம்பத் தான் முடியவில்லை.

''பின்னே என் பெரிய பொண்ணுக்கே இப்ப வயசு நாப்பத்தஞ்சு. அவ பிள்ளை 'அக்கெளண்ட்ஸ்' ஆபீசரா முந்தா நாள்தான் வேலை ஒத்துண்டிருக்கான். என் பெரிய பையனுக்கு வயசு நாற்பது முடிங்சுடுத்து... நீர் மாத்திரம் இல்லை, பார்க்கறவா ஒவ்வொருத்தருமே இப்படித்தான் ஆச்சரியப் பட்டுண்டிருக்கான்னேன்.''

''ஏ, அப்பா!'' என்று அவரையே ஒரு நிமிஷம் பார்த்து 'சூப்ரிண்டு' புன்சிரிப்புப் பூத்துக்கொண்டிருந்தார். ''நீங்கள்ளாம் அந்தக் காலத்து மனுஷா.''

''யாரு? நன்னாச் சொன்னீரே, எந்தக் காலத்திலேயும் முடியும் யா!'' திடீரென்று கோவிந்த சாஸ்திரி ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். குரலும் தணிந்தது. ''ரகசியம் என்ன தெரியுமா? எட்டாவது குழந்தை பிறந்தது. என் சம்சாரத்தைப் பார்த்தேன். என்ன சரிதானேன்னேன். சரின்னூட்டா. அதிலேருந்து ஒதுங்கிப்பிட்டோம். அப்ப எனக்கு முப்பத்தெட்டு வயசுதான்.''

''அப்படியா!''

'அப்படியேதான். எங்க அப்பா அம்மா செஞ்ச தப்பையும் உணர்ந்துனுட்டேன். எனக்குப் பதினேழு வயசிலே கலியாணம் பண்ணி வச்சாளே... அதெச் சொல்றேன். என் பிள்ளைகளுக்கெல்லாம் முப்பது வயசிலேதான் கலியாணம் பண்றது. பெண்களுக்கு இருபத்திரண்டு வயசுக்கு அப்பறம்தான் கல்யாணம் பண்றதுன்னு தீர்மானம் பண்ணிண்டேன். அப்படியே நடத்திண்டும் வரேன். நீர் பார்க்கிறது எனக்குப் புரியறது. என்னடாது ஒரு பக்கம் சுக்குக் கஷாயம், கருவேப்பிலைக் குழம்புன்னு ரொம்பப் பாட்டியா இருக்கான், இன்னொரு பக்கம் பார்த்தா ரொம்ப ''அல்ட்ரா'' வா இருக்கானேன்னு நினைக்கிறீர். உண்டா, இல்லியா?''

''ஆமாம் ஆமாம். ஹி ஹி ஹி.''

''அதனாலேதானே என் சம்பந்தி என்னை அக்பர் சாஸ்திரி'ன்னு கூப்பிட ஆரம்பிச்சார்... ஏன்னேன். அக்பர் சக்கரவர்த்தி எப்படியிருந்தான்? உலகத்திலே இருக்கிற நல்லதெல்லாம் சேர்த்துக் தனக்குன்னு ஒரு வாழற முறையை ஏற்படுத்திண்டான். அந்த மாதிரி நீங்களும் இருக்கேள்ன்னார் அவர். பெண்களுக்குக் கலியாணம் பண்ணினேன். புள்ளைகளுக்கும் பண்ணினேன். முதல் காரியமா ஊர்வலத்தை நிறுத்தினேன். அந்தக் காலத்திலே பத்து வயசிலே கலியாணம் பண்ணினா, திருஷ்டி பட்டுடப் போறதேன்னு குழந்தைகளை வைச்சு ஊர்கோலம் எடுக்கறது. இப்பப் புள்ளைக்கு முப்பது வயசு, பெண்ணுக்கு இருபத்தஞ்சு. ஊர்வலமாவதுய்யா? இரண்டாம் பெண்ணுக்குக் கலியாணம் பண்றபோது ஒரு கிழவி வந்தா. 'என்னாங்காணும் ஊர்வலம் இல்லேன்னுட்டீராமே'ன்னா. 'ஊர்வலமா, உன்னை வாணா வச்சு நாலு தெருவிலேயும் சுத்தச் சொல்றேன்'னேன். அப்புறம் ஏன் பேசறா?...ஆ! நம்ம தாத்தாவும் அப்பாவும் பண்ணினாங்கறதுக்காக எல்லாத்தையும் செஞ்சுற முடியுமோ? காலே காலே நம்ம புத்தியை உபயோகிக்சு மாத்தாட்டா நாம் என்ன மனுஷாளா? மிருகங்களா? ஒரு உதாரணம் சொல்றேன். புருஷா சாப்பிட்ட அப்புறம்தான் பெண்டுகள் சாப்பிடறதுன்னு வச்சிண்டிருக்கோமே? அது எதிலேய்யா எழுதிருக்கு? உனக்குச் சமைச்சும் கொட்டிப்பிட்டு, மீதியிருக்கிற அடி வாண்டலெல்லாம் அவ தனியா சாப்பிடணுமோ? என்ன நியாயம்யா?

''எங்க வீட்டிலே என்ன பழக்கம் தெரியுமோ? நானும் சம்சாரமும் சேர்ந்துதான் சாப்பிடுவோம். வீட்டுக்கு யார் வந்தாலும் சரி... குழந்தை குஞ்சு பெண்டுகள் எல்லாரையும் சேர்த்து உட்கார்த்தி வைச்சித்தான் சாப்பிடுவேன். அவாளோட என் சம்சாரத்தையும் உட்கார வைச்சுப்பிடுவேன். கும்பகோணத்திலே மூணாவது சம்பந்தியிருக்கார். ஜவுளிக் கடை வச்சிருக்கார். சக்ரபாணி அய்யர்னு. அவர் நான் இப்படியேல்லாம் இருக்கறதைப் பார்த்துப்பிட்டு ஏதோ பரிகாசமா பேசினாராம். நான் சொல்லிப்பிட்டேன், 'சார்! இத பாருங்ககோ, நான் உங்க வீட்டுக்கு வந்தா இந்த மாதிரி சேத்து வச்சுத்தான் போடணும்; இல்லாட்டா வரவேயில்லேன்'னேன். அப்புறம் வழிக்கு வந்தார். இத்தனை வயசுக்கு மேலே இந்தக் கிழவனுக்குச் சபலத்தைப் பாரும்னு யாராவது சொல்லிண்டிருப்பன். சொல்லட்டுமே, இதுக்கெல்லாமோ பயந்து முடியும்? முப்பத்தெட்டு வயசிலேருந்து நான் எப்படியிருக்கேன்னு எனக்குன்னாய்யா தெரியும்! எல்லாரோடும் உட்கார்ந்து சேர்ந்து சாப்பிட்டு, ஒரு மணி நேரம் எல்லாரையும் பக்கத்திலே வச்சிண்டு கலகலன்னு பேசி சந்தோஷமா இருக்க முடியலேன்னா அவன் என்ன ஆள்? ஐயா! யார் என்ன சொன்னாலும் சரி, நான் அப்படித் தான் இருப்பேன். இருந்துண்டு வரேன். அதனாலேதான் அறுபத்தெட்டு வயசுன்னவுடனே நீர் பிரமிக்கிறீர். நான் மாத்திரம் இல்லே. என் சம்சாரம் குழந்தகளெல்லா இப்படித்தான் இருப்பா. டாக்டருக்குன்னு காலணா கொடுத்ததில்லையா! சத்தியம் வேணும்னாலும் பண்ணத் தயார். போதுமா?'' என்றார் சாஸ்திரி.

சத்தியமே பண்ண வேண்டாம். உங்களைப் பார்த்தாலே போதும் என்று நினைத்துக்கொண்டேன். என்னை இவர் லட்சியம் பண்ணாவிட்டால் என்ன? பேசாவிட்டால் என்ன? அக்கறையில்லை. இந்த வயசில் இவ்வளவு நேர் முதுகு - கணார் கணார் என்று இந்தக் குரல். டாக்டருக்கு ஒரு நெல்கூடக் கொடுக்காத பத்துக்காணி - ஏ அப்பா.

எதிரே சூம்பின கையும் காலுமாக இரண்டு குழந்தைகள். துணியாகக் கிடந்த 'சூப்பிரண்டு' மனைவியின் சோகை பாய்ந்த உடல், 'சூப்பிரண்டி'ன் முகத்தில் நிரந்தரமாகக் கோடிட்டுவிட்ட குடும்பக் கவலை. இத்தனைக்கும் நடுவில் அக்பர் சாஸ்திரி சித்த புருஷர்கள் அரைக்கைச் சட்டையும் வேஷ்டியும் அணிந்து வந்ததுபோல் உட்கார்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் வயிற்றுவலி - அதாவது நான். என்னை மூன்று வருஷங்களாக எனக்கும் அவளுக்கும் ராத்தூக்கம் வராமல் கண் பனிக்கப்பனிக்க இருமுகிற வாதையையும் சொல்லு சொல்லு என்றது. சொல்லுகிறேன் சொல்லுகிறேன் என்று அவற்றைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன். திடீர் என்று எப்படிச் சொல்கிறது? முன்னால் இரண்டு வார்த்தையாவது அவருடன் பேச வேண்டும். அதற்குச் சமயம் கிடைக்காமலா போகும்?...

''மதுரைக்கு எப்பவாவது வந்தீர்னா, வீட்டுக்கு வாரும். சந்தோஷமா எப்படியிருக்கிறது, திடகாத்திரமா எப்படி இருக்கிறதுன்னு புரியும். டாக்டரை எப்படி அண்ட விடாமல் வாழறதுன்னு தானே புரிஞ்சுக்குவிர். பயந்திண்டு வராம இருந்துடாதீர். அதுக்காக வந்தவர்களுக்குக் குளிக்க வெந்நீர் போடாமல் இருந்துட மாட்டோம். என்னோடத்தான் நீரும் எழந்திருக்கணும்னா காலமே நாலு மணிக்கே எழுப்பிட மாட்டேன். கவலைப்படாதீர் என்ன, வறீமா?''

''கட்டாயம் வரேன்.''

''உம்ம சம்சாரத்தையும் அழச்சிண்டு வரணும். என்ன வறீமா?''

எனக்கும் அக்பர் சாஸ்திரி வீட்டுக்குப் போகவேண்டும் போல் தானிருந்தது. கூப்பிட்டால்தானே? மனுஷன் தற்செயலாகக்கூடத் திரும்பமாட்டார் போலிருக்கிறது. ஓர இடத்தைக் கொடுக்கவில்லை என்று மனுஷனுக்கு வருத்தமோ?

திருவிடைமருதூர் ஸ்டேஷன் வந்தது. ''மகிழமாலை விற்குமே இங்கே?'' என்று எழுந்தார் அக்பர் சாஸ்திரி. எதிர் ஜன்னலண்டை எழுந்துபோனார். ''மகிழ...மகிழ...மகிழ'' என்று பாதி பாதியாகக் கூப்பிட்டார். பேசின பேச்சில் தொண்டை சோர்ந்துவிட்டது.

குழந்தைகளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்.

''சார்' என்று சொல்லாமல் என்னை ஜாடை காட்டி அழைத்தார். அவர் விழியைப் பார்த்து அருகே ஓடினேன். மார்பைத் தடவு என்று சைகை காட்டினார். சடசடவென்று புத்தானைக் கழற்றி மார்பைத் தடவினேன்.

''கும்பகோணத்திலே...'' அவரால் மேலே பேச முடியவில்லை.

''கும்பகோணத்தில் என்ன?''

''சக்ர...சக்ர...சக்ர...''

பேச முடியாமல் அப்படியே சாய்ந்துகொண்டார். பையனின் கை அவர் முதுகுக்கும் ஜன்னலுக்கும் இடையே அகப்பட்டுக்கொண்டது, இழுத்தக் கொண்டான்.

''என்ன சார், என்ன சார்'' என்று 'சூப்ரிண்டு' எழுந்து வந்தார்.

''சார், சார், கோவிந்த சாஸ்திரிகள்'' என்று உரக்கக் கூப்பிட்டார்.

அவர் மனைவி எழுந்து, ''என்ன?'' என்று கண்ணைத் திறந்து நிலைமையைப் புரிந்துகொண்டு எழுந்து உட்கார்ந்தாள். ''இந்தாண்டை வாடா கிச்சு, கெளரி!'' என்று குழந்தைகளைக் கூப்பிட்டாள்.

நான் மார்பைத் தடவிக் கொண்டிருந்தேன். ''என்ன சார், என்ன சார்?'' என்று பதறினார் 'சூப்ரிண்டு'.

மூக்கில் கை வைத்துப் பார்த்தேன்.

''என்ன சார்?''

''கும்பகோணத்திலே அவர் சம்பந்தி பேர் என்ன என்று சொன்னார்.''

''சக்ரபாணி அய்யர், ஜவுளிக்கடை வைச்சிருக்காராம்.''

''நீங்க இறங்கிப் போய் ஸ்டேஷன் மாஸ்டர் கிட்டச் சொல்லி அவரைக் கும்பகோணம் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி மெஸ்ஸேஜ்' கொடுக்கச் சொல்லணும்.''

''ஏன்! என்ன?''

''ஒன்றுமில்லை.''

''அப்படின்னா?''

அவர் மனைவி அருகில் வந்தாள். ''அட, ராமா!'' என்று சாஸ்திரியைப் பார்த்தாள்.

''என்ன?'' என்றார் 'சூப்ரிண்டு' மறுபடியும்.

டாக்டர் உதவியில்லாமலே அக்பர் சாஸ்திரி மனிதனின் செய்கிற கடைசி காரியத்தையும் செய்துவிட்டார் என்று அவருக்குப் புரிந்தபாடில்லை.

(அக்பர் சாஸ்திரி கதை தொகுப்பில் இருந்து)

(http://vidhoosh.blogspot.com/2010/11/blog-post_24.html)

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

7 கருத்துகள்:

கார்த்திக் பாலசுப்ரமணியன் on February 7, 2011 at 11:54 PM said...

பகிர்வுக்கு நன்றி ராம்.

இராஜராஜேஸ்வரி on February 8, 2011 at 12:31 PM said...

எதிர்பாராத முடிவு.

பொன் மாலை பொழுது on February 8, 2011 at 6:13 PM said...

பல வருடங்களுக்கு முன்னர் படித்திருந்தாலும் மீண்டும் படிக்க வைத்ததற்கு நன்றி

Brahmanyan on February 10, 2011 at 11:32 AM said...
This comment has been removed by the author.
Brahmanyan on February 10, 2011 at 11:38 AM said...

தி ஜானகிராமால்த்தான் இவ்வாறு எழுத முடியும் தமிழ் கதை உலகில் ஒரு புதிய எழுத்து திறனை கொண்டுவந்த மா மேதை அவர்
பிரஹ்மண்யன்

தமிழ்ச் செல்வன்ஜீ on September 20, 2011 at 9:42 PM said...

எல்லோருக்கும் ஏதாவதொரு ரயில் பயணத்தில் இப்படியொரு அனுபவம் நேர்ந்திருக்கலாம்...ஆனால் அதை ஞாபகப்படுத்தும் வகையில் எழுதுவதென்பது தி ஜா ரா வின் வெற்றி..

Job help India abroad on January 30, 2012 at 11:15 PM said...

ennavoru nadai

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்