வண்ணதாசன்
ஒரு தெருவும் அதன் மனிதர்களும் அப்படியே காலங்காலமாக அச்சடித்தது மாதிரி தவறாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பது முட்டாள் தனம் தான். ஆனால் மனம் இதுபோன்ற சமயங்களில் முட்டாள் தனமாக இருப்பதற்கே சம்மதமாக இருக்கிறது.
தெரு என்று இருந்தால் வாடகைக்கு இருப்பவர்கள் மாறுவார்கள் புது ஆட்கள் வருவார்கள். சில வீடுகள் கிரையம் ஆகிக்கூட வேறு ஆட்கள் வாங்கி இடித்துக் கட்டியிருப்பார்கள். ஏறு நடையாக மிகப்பெரிய வேப்ப மரத்துடன், இரண்டு பக்கமும் பறக்கிறதுப் போலப் பொம்மைகள் வைத்த 'கிருஷ்ணன் வச்ச வீடு ' இப்போது முற்றிலும் இடிக்கப்பட்டு மிக நவீனமான முகப்புடன் வந்து எங்கள் தெருவின் மிக அழகான ஞாபகங்களில் ஒன்றை அழித்துவிட்டது.
வீட்டுக்கு வீடு ஆற்றுத்தண்ணீர்க் குழாய் பதிப்பதற்காக, 'ப.ரா--ப.ரா ' என்று மரியாதையாக அழைக்கப்பட்ட ப.ராமசாமி ஐயர் எங்கள் வார்ட் கவுன்சிலராக வந்ததும் போடப்பட்ட நேர்த்தியான ரோடுகள் எட்டடிக்கு ஒரு தடவை பெயர்க்கப்பட்டுவிட்டன. ஐந்து வருஷத்துக்கு முன் உத்யோக உயர்வில் நான் இந்த ஊரை விட்டுப் போகும்போதுகூட இல்லாத ஆட்டோ ரிக்ஷா, இந்தத் தெருவுக்குள் வந்து வீட்டின் முன் நின்றபோது, டிரைவர் மிகச் சிரமத்துடன் கோபம் அடக்கி நாகரீகமாக நடக்கவேண்டிய அளவுக்கு மிக மோசமாகியிருந்தது தெரு.
அதெல்லாம் சரி. ஆனால் மனிதர்களுக்கு என்ன வந்தது ? எங்கள் குடும்பம் போல இன்னும் நாலைந்து குடும்பமாவது தெரு நெடுகிலும் ஒரு அறுபது எழுபது வருஷமாக ஓடின வேரைப் பெயர்க்கமுடியாமல் இங்கே தானே இருக்கிறார்கள். அவர்களாவது 'என்னப்பா எப்போ வந்தே ? ' என்று கேட்கலாம் அல்லவா ? கேட்கிறது இருக்கட்டும். பழகின பையனை ரொம்ப காலத்துக்குப் பிறகு பார்க்கிற சந்தோஷத்தையாவது முகத்தில் காட்ட வேண்டாமா ?
வீரபத்ரவிலாஸ் பாத்திரக்கடை நொடித்துப் போனதுக்கும், என்னுடன் ஸ்கூலில் கூடப்படித்த அந்த வீட்டு A.கணேசன் என்னைப் பார்க்காமல் போவதற்கும் என்ன சம்பந்தம். அவன் எஸ் எஸ் எல் சி படித்து முடிந்ததும் கல்யாணம் ஆகிவிட்டது. திருவனந்தபுரத்திலிருந்து பெரிய பெரிய கார்களில் பெண் வீட்டுக்காரர்கள் வந்திருந்தார்கள். சாயங்காலம் நலுங்குக்கு--கனகராயன் முடுக்குத்தெரு முத்துலட்சுமிதான் அப்போது பிரபலம்-- 'தாயே யசோதா உன்னை ' பாடினபோது நான் கூடப் பக்கத்திலிருந்து அவனையே பார்த்துச் சிரித்துக்கொண்டேயிருந்தேன். அவன் இன்று லாட்டரிச்சீட்டுகளைக் க்ளிப்பில் மாட்டிக்கொண்டு, பஸ் ஸ்டாண்டில் ஒரு தற்காலிக மர மேஜைக்குப் பின் நிற்பது துன்பமானதுதான். ஆனால் இந்தத் துன்பத்தையும் சுய இரக்கத்தையும் மீறியதல்லவா அன்பும் சிநேகிதமும்.
பானா தானா ராவுத்தர் கடையிலும், அவர் போய்ச் சேர்ந்தபிறகு அவர் பையன்கள் ஆரம்பித்து வியாபாரம் தெரியாமல் நிறுத்திவிட்ட ராயல் ஸ்டோரிலும் முதலாளிக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்து கவனித்துக் கொண்ட, பெண் விஷயங்களில் மிகவும் பெயர் பெற்ற வெங்குப் பிள்ளைக்கும் எனக்கும் என்ன விரோதம் ? அவர் கூட நின்று பேசாமல், நடந்த வாக்கிலேயே, 'என்ன, வடக்கேதானே வேலை ' என்று கேட்டுவிட்டுப் போகிறார். அதுகூட ஒரு போக்கு. வயதானதால் இருக்கலாம்.
எப்போது பார்த்தாலும் 'செளக்கியமா பேரப் பிள்ளை ? ' என்று கையைப் பிடித்து, மேலுதட்டிலும் புருவத்தினும் பூனை மயிர் இடுங்க, என்னவென்று சொல்ல முடியாத அன்புடன் தடவிக் கொடுக்கிற தபேலா பட்டு ராஜனின் அம்மாவுக்குக் கண்மங்கிப் போனபிறகு, அவளை இன்னும் உப்புப்புளி வாங்கிக் கொண்டு வரக் கடைக்கு அனுப்புகிற பட்டுராஜன் எத்தனை மியூஸிக் பார்ட்டிக்குப் போய் வாசித்தும் பிரயோஜனம் என்ன ? பிறத்தியார் மேல் செலுத்துகிற அன்பு, சங்கீதம் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே ஜாதிதான் என்று பிடிபடாவிட்டால் அப்புறம் என்ன தபலா ?
ஒருத்தருக்கொருத்தர் முகம் கொடுக்காமல் உலகம் இப்படி அன்பற்றுப் போய்க்கொண்டிருந்தால் என்னவாகும் ? துட்டு இருப்பவர், இல்லாதவர் எல்லோர்க்கும் வந்துசேர்கிற இந்த இம்சைக்கு வாழ்க்கை என்ன நிவர்த்தி செய்யப் போகிறது.
தெருமட்டும்தானா ? இந்த வீடு என்னவாழ்கிறது ? இந்தக் குடும்பம்கூட முன்னே மாதிரியா இருக்கிறது. தெருவிலிருந்து வீட்டுக்குப்போகிற முடுக்கு முன்பு இப்படியா இருட்டிக்கிடக்கும் ? வாசல் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு, தெருவில் நடையேறுகிறவர் ஜாடை டக்கென்று முன்னால் தெரியும்படி இரண்டு விளக்குகள் எரிந்துகொண்டிருந்த இடத்தில் இன்றைக்கு ஒன்றும் கிடையாது.
ஒரு பிள்ளையார் சதுர்த்தி, கோயில் கொடை என்றால் தனியாக ஒரு ஒயர் இழுத்து, ஒரு நூறுவாட்ஸ் பல்பை வாசலில் தொங்கப்போட, சப்பரம் என்றாலும் சரி, கும்பக்குடம் சிலம்பாட்டம் என்றாலும் சரி, கரெக்டா வாசலில் ஒரு பத்துநிமிஷமாவது நின்றுவிட்டுத்தான் புறப்படும்.இப்போது ஒரு மீட்டருக்கு நாலு தனித்தனி மீட்டர் வந்திருக்கிறதே தவிர வெளிச்சம் எங்கேயோ ஓடிப்போய்விட்டது. பொது லைட்டுக்கு யார் பணம் கட்டுவது என்று சண்டையெல்லாம் வந்து, பேசாமல் விளக்கையே அணைத்துவிட்டார்கள். 'நடந்து வரும்போது நட்டு வாக்காளி பிடுங்கினாலும் தெரியாது. கழுத்தில காதில கிடக்கிறதை எவனும் அத்துக்கிட்டுப் போனாலும் தெரியாது. விளக்கு வைக்கிற நேரத்தில் இப்படி வீடும் வாசலும் இருள் அடிச்சுக் கிடந்தா, லெச்சுமி தட்டுத் தடுமாறிட்டு, அடுத்த வீட்டுக்குப் போயிருவா ' என்றெல்லாம் வருத்தப்பட்ட ஆச்சியின் சொல் அவள் இருக்கும்போதே அம்பலத்துக்கு வரவில்லை.
கால் தடுக்காமல் இருக்க, அடையாளத்துக்கு இடது சுவரில் ஒருகையால் தடவிக்கொண்டே வந்தேன். இந்தச் சுவர் எவ்வளவு அற்புதமாக இருக்கும். காரை பூசாமல் ஒரு முப்பது அடி உயரத்திற்குக் கோட்டை மாதிரி உயர்ந்திருக்கிற இந்தச் சுவரின் சிறு சிறு துளைகளில், சிலந்திக்கூடுகள் சாம்பல் நிறத்தில் படலமாக உட்குழிந்து பூத்திருக்க, அதிலிருக்கிற பூச்சிகளைச் சிட்டுக்குருவிகள் பறந்தவாக்கிலே பிடிக்கும். இதே நூலாம்படைகளில் சிக்கிய வாரியல் புல்லின் பூவினது சிலிர்த்த கொண்டை கீழே விழாத ஒருதொங்கலில், புரண்டு புரண்டு வெயிலில் அபாராமாய் மினுங்கிய என் சின்னவயது ஞாபகங்களைப் போல, எங்களுடைய மகளோ மகனோ இதுவரை ஏதாவது சேமித்திருப்பார்களா என்று தெரியவில்லை. எப்போதும் ஜீப்பை ஓட்டி, மோட்டார் சைக்கிள்களில் மலைகளைத் தாண்டி, கோபாவேசமாகத் துப்பாக்கி சுட்டுத் திரிகிற கற்பனையில் சதா ஆழ்கிற என் பையனிடமிருந்து, நாளை அன்பும் பரிவும் கசிந்து பெருகும் என்று துளியும் நம்ப முடியவில்லை.
பொதுத்திண்ணைக்கு அருகில் வரும்போது நாலு வீடுகளில் எங்கள் வீட்டில் மட்டும் வெளிச்சம் இருந்ததை அறியச் சற்று நிம்மதியாக இருந்தது. இதைவிடப் பெரிய விஷயம் எங்கள் வீட்டுத் தார்சாவில் இருந்து, விசாலமாகக் கிடக்கிறவாசலில் காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு 'கோபாலசாமி கோயில் தெருவில வீடு வாங்கி நாங்க வரதுக்கு முந்திப் பத்துவருஷம் இந்தத் தெருவுக்கு நேரே பின்னால இருக்கிற தெருவிலதான் இருந்தோம். படிச்சதெல்லாம் குட்டை வாத்தியார் பள்ளிக்கூடத்தலே தான் ' என்று யாரோ ஒருத்தர் இன்னொருத்தரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
வாசல் முழுவதும் இருட்டாக இருக்க, எங்கள் வீட்டின் வெளிச்சம் பின் பக்கத்திலிருந்து வரைந்து காட்டும்படியாக அவர்களிருக்க, அவர்கள் இன்னார் என்று தெரிந்து கொள்ளமுடியவில்லை. நடுவயது தாண்டியும் உரத்தும் அன்னியோன்னியமாகவும் இருந்த அந்தக் குரலையும் எனக்கு இனங்கண்டுகொள்ள முடியவில்லை. நாக்குத் தடித்த மாதிரியும் பக்கவாதத்தில் வாய் கோணிப் பேசுகிற மாதிரியும் ஏதோ ஓர் வித்தியாசத்துடன் இருந்த குரலில் சந்தோஷமூட்டும் படியும் ஏதோ கலந்திருந்தது.
'இந்தா ' மகனே வந்துட்டானே ' ' நான் நெருங்கியதும் சட்டென்று அந்த இரண்டு பேரில் ஒருத்தர் எழுந்திருந்து சற்று எம்பித் தூணைப் பிடித்துக் கொண்டு நின்று என் பெயரைச் சொல்லி,
'இதான் அல்போன்ஸ்உ, மச்சினியோட ரெண்டாவது பையன், மச்சினியோட அப்பா பேருதான் '
'யாரு மீசைக்கார ஆயான் பேரா ? '
தாத்தாவை ஞாபகம் வைத்துப் பேசுகிற அந்த மனிதரைக் கும்பிட்டுக் கொண்டு, ஆனால் இரண்டு பேரையுமே அடையாளம் தெரியாமல்,
'வாங்க. என்ன இப்படியே உட்கார்ந்துட்டாங்க. உள்ளே போய் உட்காரலாம் ' என்று அழைக்கையில் '
'இங்கேயே வசதியாத்தான் இருக்கு, காத்தாட. இப்படியே இருக்கலாம் ' என்று அந்த ரெண்டாவது மனிதர் சொல்ல தூணைப் பிடித்துக் கொண்டு நின்ற மனிதர் தன் முகம் தெரியும்படியாகச் சிரித்துக் கொண்டே என்னிடம்,
'என்ன, இனம் தெரியலையா இன்னாருண்ணு ' என்று கேட்டார். முறுக்கி விடப்படுவதால் ஒருபக்கம் திருகி நின்ற மீசை குழிவிழுந்திருந்த கன்னத்தை வருட, குங்குமப்பொட்டும் சிரிப்புமாய்க் கலங்கிச் சிவந்த கண்களுடன் பக்கத்தில் வந்து என் கைகளை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டார்.
'சன்ன வருஷமா ஆயிருக்கு. நீயோ புள்ளையும் குட்டியுமா ஆயிட்டே. எப்பமோ நீ சின்னப் பிள்ளையா இருக்கும் போது, கோயில்ல முழுக்காப்புக்கு வந்திருக்கும் போது பார்த்ததுதானே '
மறுபடியும் மீசை திருகிக் கன்னத்தில் ஒதுங்கிக் கொண்டது. நரைத்து மேலேற்றிச் சீவப்பட்ட முடியால் அகலமாகத் தெரிந்த நெற்றியில் குங்குமம் ஜொலித்தது. எனக்கு பளிச்சென்று ஒரு விநாடியில் நான் பேசிக் கொண்டிருப்பது வைத்தியலிங்கச் சித்தப்பாவுடன் என்று ஞாபகம் வந்துவிட்டது.
வைத்தியலிங்கச் சித்தப்பா கல்யாணம் புதுமாதிரியாக நடந்ததால் நன்றாக ஞாபகம் இருக்கிறது. வழக்கம் போலக் கொட்டு அடித்து தாலி எல்லாம் கட்டாமல் கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு நிறையப்பேர் பேச, சித்தப்பாவும் மைக் முன்னால் ரொம்ப நேரம் பேசிய அந்தக் கல்யாண வீட்டு லேசில் மறந்து போகாது. ஆனால் அந்தக் கல்யாணப் புகைப்படத்தில் வைத்திச் சித்தப்பா ஒரு அழகன் போல இருப்பார். 'செக்கச் செவேல்னு இருக்கிற ' அழகைப்பார்த்து மயங்கிப் பொண்ணைக் குடுத்திட்டேனே. குடிச்சு எல்லாத்தையும் கட்ட மண்ணாக்கிட்டு சண்டாளன் இப்படிப் பொண்ணையும் புள்ளையையும் தெருவில் நிறுத்திட்டானே பாவி ' என்று சின்னத்தாத்தா தலையில் அடித்துக் கொண்டு அம்மாவிடம் அழுததெல்லாம் சமீபத்தில் தான்.
வைத்தியலிங்கச் சித்தப்பாவின் அந்த அழகான ஜாடை எல்லாமே குடிக்கிற ஒரே காரணத்தால் மாறிப் போகும் என்று நம்ப முடியவில்லை. முகம்தான் மாறினது போல இருக்கிறதே தவிர சிரிப்பு அதேதான்.
'உள்ளே வாங்க சித்தப்பா வாங்க ஸார் உள்ளே ' என்று மறுபடியும் அழைத்தேன். அம்மா இதைச் சொல்லும்போது கதவுப்பக்கம் வந்து நின்று ஒருமாதிரியாகச் சிரித்துவிட்டுப் போனாள்.
'இருக்கட்டும் மகனும் விபரம் தெரிஞ்ச ஆள்தானே, உன்கிட்டே சொல்லுகிறதுக்கு என்ன ? பக்கத்திலே நிண்ணு பேசும்போதே வாசம் தெரிஞ்சிருக்கும். ரெண்டு பேரும் லேசா டிரிங்க்ஸ் அடிச்சிருக்கோம். ஜாஸ்தியில்லை. கொஞ்சம்தான். எவ்வளவு சாப்பிட்டாலும் நிதானமாகத்தான் இருப்பேன். இருந்தாலும் உள்ளே மச்சினி முன்னாலே போகவேண்டாம் '
நான் மிகவும் ஆதரவாகச் சித்தப்பாவைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
'ஏ 'இங்கே வாடே. நீ என்ன ஒளிஞ்சுக்கிட்டு நிற்கே. அப்பனும் மகனும் ஒண்ணா நிண்ணு பேசுதோம் வித்தியாசம் ஒண்ணுமில்லை. உனக்கென்ன. இங்கே வா சொன்னால் கேளு என் மகனும் உன்னைத் தெரிஞ்சுக்கிடணும் இல்லையா ? '
வைத்திச் சித்தப்பா அவரைக் கையைப்பிடித்து இழுக்க இழுக்க அவர் மிகுந்த கூச்சத்துடன் அங்கேயே நின்றார். வைத்தியலிங்கச் சித்தப்பா, 'என்ன அல்போன்ஸ்உ, கிறுக்குப்பண்ணுதே ' என்று என்னை அவரிடம் கூட்டிப் போனார்.
மிகவும் விசாலமான நெற்றியும் முன் வழுக்கையும் வெற்றிலைக் காவியேறின பற்களுமாகக் கிட்டத்தட்ட ரிடையர் ஆகப்போகிற ஹைஸ்கூல் வாத்தியார் மாதிரி இருந்த அவரை நோக்கி--
'பாத்தியா, இதுதான் என் பிரண்ட் அல்போன்ஸ். நானும் அவனும் முப்பது வருஷமா சிநேகிதம். பாளையங்கோட்டையில ரெண்டு பேரையும் தனித்தனியாய் பார்க்க முடியாது. அவன் சென்ட்ரல் எக்சைஸ்லே சேர்ந்தான் நான் ஹைவேஸ்லே சேர்ந்தேன். டிபார்ட்மெண்ட்லேருந்து திடார்னு அவன் மேலே ஏதோ ஆக்ஷன் எடுத்து சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்க. ரிட் போட்டிருக்கான் ரொம்ப வருத்தப்பட்டுக்கிட்டு இருந்தான். சரி வாண்ணு நான் தான் சொன்னேன். கொஞ்சம் போலதான் சாப்பிட்டோம் '
'நீ சும்மாஇருப்பா ' என்று அவர் வெட்கப்பட்டுக் கூசிக்கொண்டே தடுக்க வைத்தியலிங்கச் சித்தப்பா, என் இடது புஜம் வழியாகக் கையைப் போட்டு, வலது தோள்ப் பட்டையை இறுக்கிக் குலுக்கித் தன்பக்கம் நெருக்கிக்கொண்டு--
'அல்போன்ஸ்உ இது என் மச்சினி மகன். மொத்தம் மூணு பேரு. இவன் நடுவுள்ளவன். மச்சினிக்கு மூணு பையன்களும் மூணு முத்து. படிப்புக்குப் படிப்பு. குணத்துக்குக் குணம் '
சித்தப்பா ஒருவித நெகிழ்ச்சியில் பேசிக்கொண்டே போனார். அல்போன்ஸ் என்கிற சித்தப்பாவின் சிநேகிதர் வெறுமனே சித்தப்பாவின் சொல்லுக்குத் தலையை அசைத்துக் கொண்டுதான் வந்தார். ஆனால் 'நீ சொல்வது எல்லாம் சரிதான். அதுதான் தெரிகிறதே. அப்படியே ஒப்புக் கொள்கிறேன் ' என்றெல்லாம் விதம் விதமாக நான் உணரும்படி தன் பார்வையை ஒருவிதப் பிரியம் நிறைந்த மினுமினுப்புடன் என் மீதும் சித்தப்பா மீதும் பதித்துக் கொண்டிருந்தார்.
'கேட்டியா அல்போன்ஸ்உ, மச்சினி மச்சினிண்ணு சொல்லுதேனே இவங்க அம்மை, அவளைச் சின்ன வயசிலேயே தெரியும். மச்சினி அப்போ ரொம்பச் சின்னப் பிள்ளை. மிஞ்சிப்போனால் ஆறு ஏழு வயசு இருக்கும். பாப்பாத்தி வீட்டுப் பிள்ளை மாதிரி இருப்பா. நாங்க அப்போ அரசடிப் பாலத்தெருவில் ஒரு வீட்டிலே இருந்தோம். தோட்டம் பூராவும் பூசணியும் பீர்க்குமாய் படர்ந்து கிடக்கும். மார்கழி மாதம் தினசரிக் காலைல ஒரு முக்காட்டைப் போட்டுக்கிட்டு பூ வாங்குகிறதுக்கு இவங்க அம்மை வருவா. முக்காடு நிறம் கூட ஞாபகம் இருக்கு. திக்கு ஊதாக்கலர். செவப்பா ஒருபிள்ளை தினசரி பூ வாங்க தினசரி நம்ம வீட்டுக்கு வருதே, யாரும்மா 'ண்ணு எங்கம்மைகிட்டே கேட்பேன். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. ஒரு நா(ள்) நான் பல்லைத் தேச்சுக்கிட்டுப் புறவாசல்ல நிற்கேன். மச்சினி வழக்கம் போலப் பூ வாங்கதுக்கு வாரா, எங்க அம்மை, 'ஏட்டி ' வைத்தி உன்னை யாரு யாருண்ணு கேட்டுக்கிட்டு இருக்கான். உன்னைக் கட்டிக்கிடப் போறவண்ணு சொல்லிட்டுப் போ ' என்று சொல்லவும் வெட்கப்பட்டுக்கிட்டே ஒரே ஓட்டமா ஓடியே போயிட்டா. அது அப்படியே இன்னைக்கு நடந்தது மாதிரிக் கண்ணுக்குள்ளேயே நிக்கி '.
வைத்தியலிங்கச் சித்தப்பா இன்னும் அந்த மார்கழி மாதத்துக் காலையிலேயே நிற்பது போல இருந்தது. அவருடைய நண்பரைப்போல என்னையும் கூட ஒரு அன்பான சிநேகிதனாக ஏற்று, இந்த இருட்டுக்கு மத்தியில் எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்ளச் சித்தமானது போலத் தோன்றிற்று.
தெரு, அதன் மனிதர்கள் மாறிக்கொண்டே போகிற நெருக்கடியிலும், வைத்தியலிங்கச் சித்தப்பா போல ஒரு மனிதர் எதிர்ப்பட்டுக் கொண்டிருக்கும்படி வாழ்க்கை இன்னும் இருப்பது அந்த நேரத்தில் பெரிய ஆறுதலாக இருந்தது எனக்கு.
****
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
0 கருத்துகள்:
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.