Jan 23, 2010

ஊமைத் துயரம் - நீல பத்மநாபன்

நீல பத்மநாபன்

ஆபீஸிலிருந்து நடக்க நடக்க வீட்டின் தொலைவு கூடிக் கொண்டே போவதுபோல் நாராயணனுக்குத் தோன்றியது. அன்று காலையில் நடந்த நிகழ்ச்சியின் கனம் ஒரு பெரும் சுமையாய் அவனை அழுத்திக் கொண்டிருந்தது.

விடைபெற்றுக் கொண்டிருந்த நித்திரை தேவியை வலுக்கட்டாயமாய் பிடித்திழுத்து வைத்துக் கொண்டு அவன் சரசமாடிக் கொண்டிருந்த காலை நேரம்...

expressionism-3

அழைப்பு மணி வீறிட்டது.

வெளிக்கதவு திறக்கும் சப்தம். ஒரு நிமிட நேர நிசப்தம். பிறகு தன் அருகில் வரும் காலடியோசை கோமதியின் குரல்... யாரோ உங்களைத் தேடி வந்திருக்காங்க...

'யாராம் ? ' அவனுக்கு எரிச்சலாக வந்தது. 'சரியாக தெரியல்லே. அண்ணைக்கு ஒரு நாள் காலம்பற வந்த நம்ம ஊமையன் செத்துப் போணாண்ணு சொல்லி ரூபா வாங்கிகிட்டுப் போனவண்ணு தோணுது '.

திடாரென்று நித்திரை தேவி போன இடம் தெரியவில்லை, அவன் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான். அந்தக் காலைக் குளிரிலும் அவன் உடம்பு உஷ்ணம் அடைந்தது.

'யாரு... அந்த ஊமையனின் மருமகன் பொன்னையனா... ? '

'அப்படிண்ணு தான் தோணுது... '

அவனைக் கண்டு சூடா நாலுவார்த்தைக் கேட்க வேண்டுமென்று நாராயணனுக்கு சகிக்க முடியாத ஆத்திரம் இருந்தது என்னவோ வாஸ்தவம்தான். ஆனால் அந்த வாய்ப்பு இப்படி தன்னைத் தேடி தன் வீட்டுக்கே வந்து சேருமென்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

தூக்கம் எழுந்ததும் நிலைக் கண்ணாடியில் போய் விழிக்கும் நித்ய பழக்கத்தைக்கூட மறந்து அவன் விரைந்து நடந்து வெளியில் வந்து முற்றத்தில் நிற்கும் பொன்னைய்யன் முகத்தில்தான் விழித்தான்.

இரண்டு மாதம் முந்தி தன்னைப் பார்க்க வந்த அதே பாவம். நரைத்த தலைமயிர், தாடி, மீசை, கன்னங்கரிய மெலிந்த குட்டையான உருவம் ஒரு அசட்டுச் சிரிப்பு.

தொண்டை முழுதும் திறந்து காரசாரமாக கேட்க வேண்டியிருந்ததையெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு இன்றைய அவன் நல்வருகையின் உத்தேசத்தை அறியும் பொருட்டு, உம் என்ன ? என்று வினவினான் அவன்.

'இல்லே என் மாமனார் க்ளோஸ்... '

நாராயணனுக்கு குபீரென்று ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.

உன் மாமனார் பாவி எத்தனை தடவைதான் உனக்கு வேண்டி சாவணும் ? ரெண்டு மாச முந்தி நீயல்லவா எங்கிட்டேவந்து அவன் செத்துப் போனாண்ணு சொல்லி பத்து ரூபா வாங்கிகிட்டுப் போனே, அண்ணைக்கு சாயந்திரம் குத்துக்கல்லுப்போல் ஆரியசாலை ஜங்கஷனில் கடை நடையில் அவன் உட்கார்ந்திருப்பதை நான் கண்ணாலே பார்த்தேன்.

- அந்த கட்டத்தைச் சொல்லச் சொல்ல அவன் கோபத்தின் கொதிநிலை டிகிரி மேலே மேலே ஏறிக் கொண்டே சென்றது; மேற்படி சாவு சம்பவம் நடந்ததாக இவன் சொல்லி அறிந்த அன்று முழுதும் இன்று போல்தான் காரியாலயம் செல்லும்போதும், அங்கே வேலையில் ஈடுபட்டிருந்த போதும், பிறகு மாலையில் வீடு திரும்பும் போதும் எல்லாம் முழுக்க முழுக்க ஊமையனைப் பற்றிய பழைய நினைவுகள்தான். வழியில் டாக்கடைச் சந்தில் வைத்து பொன்னைய்யன் மிகவும் அலங்காரமாய் ஆர்பாட்டமாய் பேசிக்கொண்டு நிற்பதைக் கண்ட போதே இவனுக்குச் சிறிது சந்தேகம் தட்டியது. பிறகு வீட்டுக்குப் போய் உடைமாற்றிவிட்டு மாலையில் நடக்க இறங்கிய போது ஆரியசாலை முனையில் அடைத்துக்கிடந்த ஒரு கடை நடையில் மிகவும் விச்ராந்தியாக தன் இரண்டு யானைக் கால்களையும் நீட்டி அதைச் செல்லமாக தடவுவதிலும் அங்கங்கே பூத்துக் காய்ந்திருந்த கொப்புளங்களிலிருந்து தோலை நேர்த்தியாக உரித்து எடுப்பதிலும் பரமானந்தமாய் லயித்து உட்கார்ந்திருந்த ஊமையனைக் கண்டதும், செத்துப் போனதாக சொல்லப்பட்ட மனுஷன் உயிரோடு சுகமாய் இருக்கிறானே என்று அவனுக்குத்துளி கூட மகிழ்ச்சியோ ஆசுவாசமோ ஏற்படவில்லை மாறாகத்தான் ஏமாற்றப்பட்டோம் என்று அவனுக்கு வந்த ஆத்திரமும் அவமானமும் கொஞ்ச நஞ்சமல்ல. பிறகு அடுத்த தெருவில் தன் அம்மாவும் சகோதரர்களும் வசிக்கும் குடும்ப வீட்டுக்குப் போனபோது, நடந்ததை அவனிடமிருந்து கேள்விபட்ட அம்மா சொன்னாள்:

'உனக்குத் தெரியாதடா பொன்னைய்யன் மகா குடிகாரன்; ஊமையன் செத்துப்போனதாகச் சொல்லி அவன் இழவுச் செலவுக்குண்ணு எல்லோர்கிட்டேயும் ரூபாய் வாங்கி சாராயம் குடிப்பதுதான் அவன் வேலை, இனி வந்தால் ஒன்னும் கொடுக்காதே '.

அதைக் கேட்டு அவன் ஏமாற்றப்பட்டது இன்னும் ஊர்ஜிதமான போது அவனுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. இருந்தும் அதுக்கென்ன ' என்னைக்கு ஆனாலும் ஊமையன் இழவுச் செலவுக்குண்ணு ஏதாவது கொடுக்கணுமுண்ணு இருந்தேன். அதை இப்போ கொடுத்தாச்சு. இனி நிஜமாக அவன் சாவும்போது கொடுக்கப் போவதில்லை என்று சொல்லிச் சமாளித்தான். ஆனால் அதை அம்மா ஒப்புக்கொள்ளவில்லை. 'அது எப்படிடா ' அவன் மகள் மாப்பிள்ளை இப்படி ஏமாற்றினதுக்கு பாவம் ஊமையன் என்ன செய்வான் ' '

'ஊமையன் நிஜமாக மண்டையைப் போடும்போதும் அவன் இழவுச் செலவை ஊமையன் கையிலா கொடுக்கப் போறோம். அப்போதும் இந்தப் பொன்னைய்யன் தான் வந்து வாங்கிகிட்டு போகப் போறான் ' அதை இப்பவே கொடுத்தாச்சு அவ்வளவுதான் ' அவனுக்கு ஏனோ இப்படிச் சொல்லும் போதுதான் உட்பட்ட எல்லோர் மீதும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

அன்றிலிருந்தே மனதில் கருவிக்கொண்டிருந்தான். என்றைக்காவது எதுக்காவது வேறொண்ணுக்கும் இல்லாவிட்டாலும் ஊமையன் நிஜமாக சாவும் போதாவது பொன்னைய்யன் தன்னிடம் வராமலா இருக்கப் போகிறான்.

அப்போ காரசாரமாக நாலு வார்த்தை கேட்கணும் '... அப்படி இதோ அந்த தருணம் வாய்த்து விட்டிருக்கிறது.

பொன்னைய்யனின் முகம் சிறுத்துவிட்டது. இல்லே இப்போ நிஜமாகவே ஆள் க்ளோஸ். ஊர்க்காரங்க எல்லோரும் வந்துட்டாங்க , ஆஸ்பத்திரிலிருந்து என் வீட்டில் கொண்டு வந்து கிடத்தியிருக்கிறேன் வேறொண்ணுமில்லே. அதைத்தான் தெரிவிச்சுகிட்டுப் போக வந்தேன் என்று கூறிவிட்டுத் திரும்பிப் போக அவசரப்பட்டான் அவன்.

இப்போது நாரயணனின் நெஞ்சம் தளர்ந்தது பாவம்... ஊமையன் ' இருந்தும் குரலில் இருந்த இறுக்கத்தைச் சற்றும் தளர்த்தாமல் 'எப்போ எடுப்பாங்க ? ' என்று கேட்டான்.

'அதிக நேரமாகாது; ஊர்க்காரங்க வரத் தொடங்கியாச்சு. இதை தெரிவிச்சுகிட்டுப் போகத்தான் வந்தேன் நான் வரேன் ' என்று கூறிவிட்டு அவன் அவசரம் அவசரமாக வெளியேறி தெருவில் இறங்கி நடந்து மறைந்தான்.

பிறகு யந்திரரீதியில் பல் தேய்க்கும்போதும் குளிக்கும்போதும், காப்பி சாப்பிடும்போதும், காரியாலயம் செல்லும்போதும் எல்லாம் நாராயணனின் நெஞ்சில் ஒரு குற்றவாளி உணர்ச்சியின் கனம் அழுத்திக் கொண்டிருந்தது.

என்ன ஆனாலும் பொன்னைய்யனிடம் அப்படி முகத்தில் அறைந்தது போல் இந்தக் கட்டத்தில் சூடாகப் பேசியிருக்கக் கூடாது. ஏதாவது கொடுத்திருக்கலாம். வீதியில் ஜனக் கூட்டத்தின் இடையில் நடந்து கொண்டிருந்த அவன் மனம் இப்போதும் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தது.

பாவம்...ஊமையன்

செவியும் கேட்காது. பேச்சும் வராது. காலமாகிப் போன தன் அப்பாவைவிட ஒரு பதினஞ்சு வயது கூடுதல் இருக்கும். இப்போ ஒரு எழுபத்தஞ்சு வயசிருக்கலாம்.

ஆமாம்... அவனுக்கும் தன் குடும்பத்துக்கும் என்ன சொந்தம் ? நாராயணன் அறிந்தவகையில் சுய ஜாதி என்பதைத் தவிர வேறு எந்த சொந்தமோ பந்தமோ இல்லை. ஆனால் தனக்கு அறிவு வந்த காலம் முதல் இரண்டு ஆண்டுகளுக்குமுன் தன் அப்பா காலமாவது வரையிலும் காலைப் பொழுது முழுதும் இந்நகரின் கடைத் தெருவில் எல்லாம் சுமை தூக்கும் ஊமையன், ராத்திரி பனிரெண்டு மணி வாக்கில் தங்கள் வீட்டு வெளித் திண்ணையில் வந்துதான் படுப்பான். பத்து ஆண்டுகளுக்கு முன் பாட்டி neelapadm இறப்பது வரையில், வந்ததும் அன்றைய விசேஷங்களை பே....பே... என்ற ஒரே வார்த்தைப் பிரயோகத்தாலும் முகபாவத்தாலும் கை சைகையாலும் அரைமணி நேரமாவது பாட்டியிடம் பேசித் தீர்க்காமல் ஊமையன் தூங்குவது இல்லை. வீட்டில் அனைவரும் சற்று நேரத்திற்கு அவனைப்போலவே செவியும் நாக்கும் இயங்காத ஊமையர்களாக மாறி, அவனிடம் சம்பாஷனை செய்யாமல் தூங்கப் போவது இல்லை. அந்த அளவுக்குக் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக இருந்தான் ஊமையன். அவனிடம் எல்லோருக்கும் ஒரு தனி வாஞ்சை. அவனிடம் பேசுவதில் பாட்டிக்கும் அப்பாவுக்கும் இருந்த ஒரு பிரத்யேக தேர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டில் சிறுவர் சிறுமிகள் உட்பட எல்லோரும் கைவரப் பெற்றிருந்தார்கள்.

அவன் நெஞ்சு மீண்டும் அதே கேள்வியைக் கேட்டது. அண்ணைக்கு ஊமையன் நிஜமாகவே செத்துப் போயிருப்பானா ? இன்னும் சற்று நேரத்தில் வழியில் ஆரிய சாலை ஜங்ஷன் எதிர்ப்படும். அங்கே அன்று போல் கடை நடையில் உயிரோடு உட்கார்ந்திருக்கும் ஊமையனைக் காண நேர்ந்து விடுமோ... ?

-இப்படி நினைக்கும் அளவுக்குத் தன் மனம் கொடுமையானதாக ஏன் மாறுகிறது என்று அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. அவன் சாகாமலிருப்பதில் தனக்கு ஏன் இந்த ஏமாற்றம் ? அவன் பாட்டுக்கல்லவா உயிருடன் இருக்கிறான் ' அதனால் தனக்கு என்ன நஷ்டம் ?

இப்போது மறுபடியும் அவனுக்குப் பொன்னைய்யன் மீது கோபம் கோபமாக வந்தது. படுபாவி ஊமையனின் மகளைக் கட்டியிருக்கான். இருந்தும் இப்படியா தன் மாமனார் சீவனை சாக்கு சொல்லி பணம் பறிப்பான்... ' அவனால் தானே தன் மனமும் இப்போ இப்படியெல்லாம் விசித்திரமாக இயங்குகிறது.

சின்ன வயது நாட்களில் பாட்டியிடமிருந்தும் அப்பா அம்மாவிடமிருந்தும் ஊமையனைப் பற்றிக் கேட்டறிந்த தகவல்கள் தனக்கு ஞாபகம் இருக்கிறது.

ஊமையனின் சொந்த ஊர் இங்கிருந்து நாற்பது மைல் தொலைவிலிருக்கும் பத்மநாபுரம், அவன் அப்பாவுக்கும் அவனைப் போலதான் செவி கேட்காது; பேச்சும் வராது. அம்மாவுக்கும் இரண்டு கண்ணும் தெரியாது.

குழந்தைகளுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. பத்து பிள்ளை பெற்றதில் மூத்தவன் இவன் மட்டும்தான் தேக ஆரோக்கியமாக இருந்தான். மற்றவங்களுக்குப் பலவித ஊனங்கள், ஊர்க்காரங்க மனமிரங்கி ஏதாவது கொடுத்தால் உண்டு, மற்ற நேரங்களில் முழுப் பட்டினி. அப்படிக் கிடந்துத் தவிக்கும் போதுதான் ஒருநாள் மகாராஜா, காலத்தில் ராஜதானியாக இருந்த அந்த பத்மநாபபுரம் அரண்மனைக்குத் தன் பரிவாரங்களுடன் எழுந்தருளும் போது இவன் அப்பா தன் பெண்டாட்டி பிள்ளைகளுடன் திடாரென்று காவலை மீறி, ரதத்தின் முன்வந்து பே...பே... என்று கத்தியவாறு விழுந்தாராம். ஊர் பிரதானியைக் கூப்பிட்டு மகாராஜா விஷயம் என்னவென்று விசாரித்தபோது அந்த ஊனகுடும்பத்தின் பரிதாபங்கள் அவருக்குத் தெரியவந்தது. அதன்பின் இவன் அப்பா அம்மா உயிருடன் இருக்கும் காலம் வரையிலும் நீலகண்ட ஸ்வாமி கோயிலில் இருந்து நாலு கட்டி சாதம் உச்சக்கால தீபாராதனை கழிந்ததும் இலவசமாகாவர்களுக்கு வழங்க வேண்டுமென்று ராஜா உத்தரவு பிறப்பித்தார். பிறகு இவன் பெற்றோர்கள் காலம் வரை சாப்பாட்டுக் கவலை இல்லாதிருந்தது ' இருந்தும் இவனைத் தவிர போதிய ஆரோக்கியமில்லாத மற்ற இவன் தம்பி தங்கைகள் பிஞ்சும் காயுமாக இருக்கும் போதே அற்பாயிசில் இறந்து போனார்கள்.

ஊமையனின் அப்பாவும் அம்மாவும் காலமானபிறகு மறுபடியும் இவனுக்கு வயிற்றுப்பாடு பிரச்னையாகி விட்டது. நல்ல கட்டுமஸ்தான உடம்பு வாய்த்திருந்த இவன், பக்கத்து தக்கலை பஸ் நிலையத்தில் மூட்டை சுமக்கும் வேலையில் ஈடுபட்டான். கிடைக்கும் பணத்தை மிகவும் சிக்கனமாகச் செலவு பண்ணுகையில் கொஞ்சம் காசுகூட சேர்த்து வைத்தானாம். ஊர்க்காரங்க பத்மநாபபுரத்திலிருந்தே ஒரு ஏழைப் பெண்ணை இவனுக்கு மணம் முடித்து வைத்தார்கள். பணத்தால்தான் ஏழையே தவிர மற்றபடி ஆரோக்கியத்திலும் அங்க அமைப்பிலும் அவளுக்கு எந்த குறையும் இல்லை. பிறகென்ன ஆண்டுக்கு ஒரு பிரசவம் நிகழத் தொடங்கிவிட்டது. எல்லாம் பெண் குழந்தைகள். குழந்தைகள் எல்லோருக்கும் நன்றாகச் செவி கேட்டது. ம்மா...ப்பா..... என்று சரளமாக வாய் பேசியது....

பெண்டாட்டி குழந்தை குட்டிகள் என்றெல்லாம் வந்தபோது அவன் கையிலிருந்த பணம் முழுவதும் செலவாகிவிட்டது. அந்தச் சின்ன ஊரில் சுமை தூக்கிக் கிடைக்கும் வரும்படியில் குடும்பம் நடத்துவது மிகவும் கஷ்டமாகிவிட்டது.

பிறகுதான் நவராத்திரி தோறும் பத்மநாபபுரத்திலிருந்து இங்கே நகரத்தில் ஒன்பதுநாள் திருவிழாவுக்குக் கொண்டுவரும் சரஸ்வதி அம்மனின் பல்லக்கைச் சுமந்து கொண்டு ஊமையன் இங்கே நகரில் பிரவேசித்தான். இங்கே பெரிய கடைவீதியிலும் பஸ் நிலையத்திலும் மூட்டைத் தூக்குவதில் அதிக வரும்படி கிடைப்பதுக்குள்ள சாத்தியக்கூறுகள் இருப்பதைக் கண்டு, நவராத்திரி கழிந்து அம்மனை பத்மநாபபுரத்துக்குப் பல்லக்கில் சுமந்து கொண்டுபோய் சேர்த்த பிறகு மறுபடியும் இங்கே கால் நடையாகத்தான் வந்து சேர்ந்துவிட்டான் அவன்.

என்றும் ராத்திரி பதினோரு மணி அளவில் படுக்க வரும்போது வெளித் திண்ணையில் வைத்து, அன்றைய உணவுச் செலவு கழித்து மீதியிருப்பை மறுபடியும் மறுபடியும் எண்ணுவதும் துணிப்பையில் போட்டு கட்டிப் பத்திரமாய் தன் மடியில் யாருக்கும் தெரியாமல் அவன் சொருகுவதும் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.

அடிக்கடி ஊரிலிருந்து பெண்டாட்டி வந்து சத்தம் போடுவாள் பாவி மனுஷா... அங்கே நான் எட்டுப்பிள்ளைகளை வச்சுகிட்டு எப்படி பிழைப்பேண்ணு இருக்கேன்...... செலவுக்கு ரூவாதா ... ' அப்படி இப்படாண்ணு சொல்லும் போது அவன் கையும் முகமும் எல்லாம் அதற்கேற்றாற்போல் அபிநயிக்கும். அவன் தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டி கையை விரிப்பான். அவள் விடமாட்டாள். மடியில் கைவைப்பாள். பே.... பே என்று வீடு கிடுங்க கோபத்தில் அலறுவான். பிறகு பாட்டியும் அப்பாவும் அவர்கள் சண்டையில் புகுந்து பெண்டாட்டிக்காரிக்கு ஏதாவது கொடுக்க அவனை நிர்பந்திப்பார்கள் மனசில்லா மனசோடு வெளியே போய் அங்குமிங்கும் பார்த்து யாரும் காணாமல் மடியிலிருந்து கொஞ்ச ரூபாய் எடுத்துக் கொண்டு வந்து, அதை ஒண்ணுக்கு நாலு தடவை துப்பல் தொட்டு எண்ணிவிட்டு பே... பே என்று புலம்பியவாறு அவள் கையில் கொடுப்பதை நாராயணன் பார்த்திருக்கிறான். பிறகு கொஞ்சம் நாட்களுக்கு உபத்திரவம் இல்லை. இவன் மறுபடியும் வாய்க்கும் வயிற்றுக்கும் கொடுக்காமல் ஒரு நல்ல வேட்டி வாங்காமல் கந்தலைக் கட்டிக் கொண்டு பணம் சேர்ப்பான்.... மீண்டும் ஒருநாள் பெண்டாட்டி வந்து நிற்பாள். பிறகு பழைய கதைதான் : இப்படியே அவன் வாழ்ந்து கொண்டிருந்தான்.

ஒரு மகளை இந்த டாக்கடை பொன்னைய்யனுக்கு கல்யாணம் செய்து கொடுக்கப்பட்டது. இனியொரு மகளை ரெண்டாந்தாரமாக ஒருவன் கட்டினான். அவன் இப்போ இறந்து போனான்.

ஊமையனின் பெண்டாட்டியும் வாய்க்கில்லாமல் வயிற்றுக்கில்லாமல் நெல்லுகுத்துவது மாவிடிப்பது இப்படி கடுமையான வேலைகளுக்கெல்லாம் போய் ஒரு சீக்காளி ஆகி, ஒருநாள் சிவனேண்னு கண்ணை மூடிவிட்டாள். செய்தி அறிந்த அப்பா அவனிடம் விஷயத்தை அறிவித்தபோது அவன் ஆகாயத்தை தலை உயர்த்திப் பார்த்துவிட்டு கையை விரித்து இரு தடவை ஆட்டினான் அப்படியென்றால் கடவுள் செயல் என்றும் ஆகலாம் கடவுளிடம் போய் சேர்ந்துவிட்டாள் என்றும் கூறலாம். பிறகு அப்பா கோபமாய் சொன்னதால் பெண்டாட்டியின் கடைசி கர்மத்தில் பங்கெடுக்க பத்மநாபுரத்துக்குப் போனான். ஆனால் மறுபடியும் இங்கேயே வந்து விட்டான்.

'நாளுக்கு ரெண்டு ரூபா வச்சு தா... காலம்பர காப்பி மத்தியானமும் ராத்திரியும் சாப்பாடு நான் போடுறேன் ' என்று இங்கேயே உள்ளூரிலேயே குடியிருக்கும் மகள் வந்து கூப்பிட்டபோது, அவன் மகள் வீட்டுக்குப் போக மறுத்துவிட்டான் மகள் போனபிறகு பாட்டி கேட்டாள். எல்லாம் சைகை மொழியில் தான். 'ஏன் இப்படி கண்ட கண்ட ஓட்டலில் எல்லாம் சாப்பிட்டுகிட்டு இங்கே வந்து பழிக்கிடைக்கிறே ? உன் மகள் வீட்டுக்குப் போயேன். உள்ளதை அவகிட்டே கொடுத்துவிட்டு அங்கேயே சாப்பிட்டுகிட்டு படுத்துக்கோயேன். '

அதுக்கு ஊமையனின் பதில் சைகையில்தான். ரெண்டு நாளைக்குச் சோறு போடுவாள். பிறகு காசை வாங்கிவிட்டுத் திட்டுவாள் கஞ்சிகூட விடமாட்டாள்.

ஆனால் பாட்டி விடமாட்டாள் ' நீ என்ன கருங்கல்லா, எண்னைக்கும் இப்படியே சம்பாதிச்சுகிட்டு இருக்க ' ஏதாவது சுகக்கேடு வந்து படுத்துட்டா பிறகு உனக்கு யாரு கஞ்சி காய்ச்சித் தருவா ? '

இதுக்கு அவன் கைகளை மேலே வானத்தில் உயர்த்திக் காட்டிவிட்டு தலையாட்டிக் கொள்வான். அதன் அர்த்தம் எல்லாவற்றிற்கும் கடவுள் இருக்கிறார்; அவர் பார்த்துக் கொள்வார்.

எது எப்படியோ, கடைசியில் இப்போது பாட்டி இல்லை; போய் சேர்ந்து விட்டாள். அவள் சொன்னது சரியாகிவிட்டது. ஊமையனின் ரெண்டு கால்களும் வீங்கி வெடித்துச் சீழ் வடியத் தொடங்கிவிட்டது. முன்னால் போல் சுமை தூக்கவும் முடியவில்லை. இரண்டு வருஷங்களுக்கு முன் அப்பா காலமாவது வரையிலும் தங்கள் வீட்டு அதே வெளித் திண்ணையில் தான் ராத்திரி வந்து படுப்பான். ராத்திரி திடாரென்று தூக்கத்தில் தனக்குத் தானே ஊ...ஊ என்று ஊளையிடுவான். ஒரு பிரத்யேக தொனியில் அடித் தொண்டையில் கத்துவான். இதையெல்லாம் கேட்டு வீட்டில் குழந்தைகள் பயந்து வீறிட்டு அழத் தொடங்கின. வெளித்திண்ணை முழுதும் இவன் காலில் இருந்து வடியும் சீழால் அசுத்தமாகி, எப்போதும் ஒருவித வாடை வேறு.... ராத்திரி நேரம் கெட்ட நேரத்தில் இவனுக்கு ஏதாவது வந்துவிட்டால் என்ன செய்வது. மேலும் அவன் மகள், மருமகன் எல்லோரும் இதே ஊரில் அடுத்த தெருவில் குடியிருக்கிறாங்க, அவர்களுக்கு இல்லாத அக்கரையா ? ஆனாலும் இங்கே வந்து இனி படுக்கக் கூடாது என்று ஊமையனிடம் சொல்ல நாராயணனுக்குக் கஷ்டமாக இருந்தது. எனவே தன் இளைய தம்பி வழியாக விவரம் அவனுக்குத் தெரிவிக்கப்பட்டது. 'நீ இனி உன் மகள் வீட்டில் போய் படு. '

இதைக் கேட்டு ஊமையன் விழிகள் நனைந்தன. பாட்டி அப்பா இவர்கள் போட்டோக்களைச் சுட்டிக் காட்டி வானத்தைப் பார்த்துவிட்டு பே... பே... என்று அவன் சொன்னதை கேட்க வீட்டில் எல்லோருக்கும் மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது...

அப்படி அவனை விலக்கிய பிறகும் ஒருமாத காலம்கூட அங்கேயே வந்து படுத்துக் கொண்டிருந்தான். இப்போ வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, அண்டை வீட்டுக்காரர்களுக்கும் பெரிய தொந்தரவாகி விட்டது. எல்லோரும் அவர்களையே குற்றம் சொன்னார்கள். பிறகு ஊமையன் ராத்திரி வரும் முந்தியே வெளிகேட்டை அடைத்துத் தாள் போடப்பட்டது, ரொம்ப நேரம் பே... பே... என்று பரிதாபமாகச் சத்தம் போட்டவாறு அவன் கதவைத் தட்டும்போது வீட்டில் எல்லோரும் பல்லைக் கடித்துக் கொண்டு பேசாமல் இருந்தார்கள். பிறகு பே... பே... என்று என்னமோ புலம்பியவாறு அவன் போய்விட்டான்.

இதன் பிறகு ராத்திரி படுக்க அவன் வருவதில்லை, ஆனால் பண்டிகை நாட்களிலும் வீட்டில் ஏதாவது விசேஷங்கள் நடக்கும் போதும் வந்து சாப்பாட்டிலும் பலகாரத்திலும் அவன் பங்கை உரிமையுடன் பெற்றுக்கொண்டு போவான். சிலபோது காப்பிக் குடிக்கவென்று சில்லறை கேட்டு வாங்கி போவான். நாராயணனின் கல்யாணத்திற்குப் பிறகு, வீட்டின் இட வசதியின்மை காரணமாக இரண்டு தெரு தள்ளியிருக்கும் வீட்டுக்கு அவனும் மனைவியும் தனிக்குடித்தனம் போன பிறகு அங்கும் அடிக்கடி சென்று ஏதாவது வாங்கிச் செல்வான்.

ஆரியசாலை ஜங்ஷன் வந்து கொண்டிருந்தது. நாராயணனின் நடை இப்போது இன்னும் மெதுவானது. ஊமையனைப் பொறுத்த வரையில் அவன் வாழ்க்கை நாடகத்தின் கடைசி காட்சிதான் இப்போ நடந்து கொண்டிருக்கிறது. எனவே அவன் சாவு இப்போ அப்படியொன்றும் அதிசயமானதல்ல. ஆனால் பொன்னைய்யன் எத்தனையோ பேரிடம் எத்தனையோ முறை அவனை அவன் அறியாமல் கொன்று விட்டிருக்கிறான் என்பதை நினைக்கையில்தான் அவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

வழக்கமாய் ஊமையன் உட்கார்ந்திருக்கும் அந்த அடைத்துக் கிடக்கும் கடையின் நடையில் அவன் கண்கள் இப்போ மெல்ல மெல்ல அஞ்சி அஞ்சிச் சென்றன.

அவன் மனம் துணுக்குற்றது. அந்த இடம் சூன்யமாக இருந்தது.

அப்படியென்றால்...

இன்று காலையில் பொன்னையன் சொன்னது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். நிஜமாகவே புலி வந்துவிட்டதா ?

பாவம், அவன் இறுதிச் சடங்குக்குச் செலவுக்கு ஏதாவது கொடுத்திருக்கலாம் என்று மனம் கஷ்டப்பட்டதே. ஆனாலும் இன்றுதான் ஏமாற்றப்படவில்லை என்று வக்கிரமான ஒரு ஆசுவாசம் நெஞ்சில் நிறைய அவன் நடந்து வீட்டின் வெளிகேட்டைத் திறந்து கொண்டு முற்றத்தில் கால்வைத்தபோது, முற்றத்திலிருந்து வீட்டுக்கு ஏறும் நடைப்படியில் உட்கார்ந்திருந்த ஊமையன் நாராயணனைப் பார்த்து பே... பே... என்று பேசிச் சிரித்து அமர்களமாய் வரவேற்றான்.

*****

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்