
சிறுகதை என்கிற நவீன இலக்கியத் துறையில் தற்காலத் தமிழ் இலக்கியாசிரியர்கள் ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள்; கணிசமான அளவில் இத்துறையில் ஒரு வளம் காணக்கிடக்கிறது என்று சாதாரணமாக எல்லோருமே ஒப்புக்கொள்ளுகிறோம். ஆனால் இந்த வளத்தைச் சீர்தூக்கிப் பார்ப்பதிலே, எது வளம், எது வளமின்மை, என்று பார்ப்பதிலே, நமக்குள்ளே பலதரப்பட்ட அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. சிறுகதை என்பது முதலில் கதையாகத்தான் இருக்கவேண்டும் என்கிற ஒரு அடிப்படையை...