Aug 13, 2009

கந்தர்வன் - கல் தடம்-எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன்


கோயில், வழிபாட்டுக்கு உரிய இடம் மட்டுமல்ல; அதன் ஊடாக இசையும் கலையும் சிறுவணிகமும், மருத்துவ மும் ஒன்றோடு ஒன்றாகக் கலந்திருக் கின்றன. கோயில் ஒரு கூட்டு வெளி. அது யாருமற்றவர்களுக்கான போக்கிட மாகவும், காலத்தின் மாபெரும் சாட்சியாக வும், கோடிக்கோடி மனிதர்களின் ஆசைகளும் கனவுகளும் சமர்ப்பிக்கப் படும் இடமாகவும் இருக்கிறது.
ஆனால், பிரார்த்தனை என்பது வெறும் சடங்காகிவிட்ட சூழலில், தெய்வத்தைத் தவிர மற்ற யாவும் கவனிப்பாரற்றுப் போகத் துவங்கி விட்டிருக்கின்றன. ஓதுவார்களின் தேவாரப் பாடலும், நாகஸ்வர இசையும், படபடக்கும் புறாக் கூட்டமும், தண்ணீர் நிரம்பிய தெப்பத்தின் மீது கோபுர நிழல் ஊர்ந்துகொண்டு இருப்பதும், பண்டாரங்களின் ஞானப் பாடலும், எண்ணெய் விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் தெரியும் மயக்கமான தோற்றங்களும், பிராகாரத்தை நிறைக்கும் மணியோசையும், சந்தன மணமும், கால் தூக்கி நிற்கும் யாளிகளும், உற்சவமும், உலாவும், தேரும், திருவிழாவும் கோயிலின் புராதன நினைவுகள் போலவே புதையுண்டு கிடக்கின்றன.
இன்று கோயில் ஒரு வணிக நிறுவனம். வாசலில் செருப்பை அவிழ்த்துப் போடுவதில் துவங்கி, ஒவ்வொரு பத்தடிக்கும் ஏதோ காரணம் சொல்லிப் பணம் கறக்கும் வித்தைக் கூடம். அதே கற்தூண்களும், சிற்பங் களும் இருக்கின்றன. ஆனால், அதன் மீது எரியும் டியூப் லைட்டிலிருந்து மின்சார மணி வரை உபயதாரர்களின் பெயர்கள், அவர்களின் முழு முகவரியோடு செல்போன் நம்பர் வரை பொறிக்கப்பட்டு மின்னுகின்றன. (நூற்றாண்டைக் கடந்தும் அழகு குறையாத யாளியைச் செய்த சிற்பியின் பெயரோ இன்று வரை யாருக்குமே தெரியாது!).
தரிசனத்துக்கும் முதல், இரண்டாம் வகுப்புக் கட்டணங்கள். சிபாரிசுக் கடிதங்கள், கையூட்டு, பல் இளிப்பு, என நடைமுறைத் தந்திரங்களின் கூடாரமாகிவிட்டது கோயில். அமைதி யையும் சாந்தத்தையும் இன்று கோயிலில் காண்பது அபூர்வமாகி விட்டது.
கோயிலுக்குச் செல்பவர்களில் ஒரு சதவீதம் பேர்கூட அங்குள்ள சிற்பங்களையோ, ஓவியங்களையோ, பிராகாரச் சுவர் முழுவதும் கல் வரிகளாக நீளும் கல்வெட்டுகளையோ நின்று பார்ப்பதை நான் கண்டதே இல்லை. பொதுச் சுவர்களில் சிவப்பு நிறங்களில் ஒட்டப்படும் விரை வீக்க விளம்பரங்களைக்கூட நின்று படிப்பதற்கு ஆள் இருக்கிறார்கள். ஆனால், மாறாத அழகும் புன்னகையும் கொண்ட சிற்பங்களை நேர்கொள்வதற்கு எவருமே இல்லை.
பல கோயில்களில், அங்கு பணிபுரிவர்களுக்கே எது என்ன சிற்பம் என்று பெயர்கூடத் தெரிவதில்லை. நான் கோயிலுக்குச் செல்ல நேர்ந்த சமயங்களில், வெகு அரிதாகவே சன்னதிக்குச் செல்வேன். மற்றபடி, எனக்குக் கோயில் ஒரு சிற்பக் கூடம். காலத்தின் கருவறை. வழிபாடுள்ள கோயில்களிலாவது யாராவது ஆட்கள் தென்படுகிறார்கள். கைவிடப்பட்டு தூர்ந்த நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான கோயில்களில் சிற்பங்கள் மூளியாக்கப்பட்டு, கை கால் இழந்த நிலையில் சிதறிக் கிடக்கின்றன. புளியமரத்தடியில் தேவகணங்களும், துவாரபாலகர்களும் உருச்சிதைந்து போய், கேட்பாரற்றுக் கிடக்கிறார்கள்.
சமீபத்தில், திருவிடைமருதூரில் உள்ள பாவை விளக்கைக் காண்பதற்காகச் சென்றிருந்தேன். சன்னதிக்கு அருகில் உள்ள மண்டபத்தில் நின்றிருக்கிறது அந்த விளக்கு. ஐந்தரை அடி உயர வெண்கல விளக்கு. தொலைவிலிருந்து பார்க்கும்போது யாரோ ஒரு பெண், நூற்றாண்டுகளாக கையில் விளக்குடன் நின்றுகொண்டு இருப்பது போல இருக்கிறது. அவளின் முக வசீகரமும், நகக்கண்கள்கூட துல்லியமாக வார்க்கப்பட்டிருந்த அழகுமாக, பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் போன்ற ஈர்ப்பைத் தருகிற விளக்கு.
சரபோஜி மன்னர்களின் காலத்தில் வாழ்ந்த பெண் அவள். தனக்கு விருப்பமானகணவன் வேண்டும் என்பதற்காக வேண்டுதல் செய்து அதை நிறைவேற்றும் படியாக தன்னைப் போலவே வெண்கலத்தில் விளக்கு செய்து வைத்திருக்கிறாள். அந்த பெண்ணின் கண்கள் காதல் ஏறி கவிழ்ந்திருக்கின்றன. உதட்டில் சந்தோஷம் கரை தட்டி நிற்கிறது. அவள் காலடியில் உள்ள கல்வெட்டில் அவளது பிரார்த்தனையின் நோக்கம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதை வார்த்து எடுத்தவன் எத்தனை பெரிய கலைஞனாக இருந்திருப்பான்! எப்படி அவளது ஆடை மடிப்புகளைக்கூட இத்தனை சுத்தமாகச் செய்ய முடிந்திருக்கிறது அவனால்! அதுவும், அவளது கையில் உள்ள விளக்கு எரியும்போது முகத்தில் ஒளிர்ந்து படரும் சுடரொளியில் முகம் வெட்கத்தில் சுருங்கி விரிவது போலவே இருக்கிறது. இத்தனை வசீகரமும் கவனிக்கப்படாமல் ஒதுங்கியே இருக்கிறது. அவசரமும் பரபரப்பும் மிக்கவர்களாக கையில் காசை இறுக்கிப் பிடித்தபடியே சன்னதியை நோக்கி ஓடும் மனிதர்களின் கண்களில் அந்தப் பாவைவிளக்கு படுவதே இல்லை. ரயில் நிலையங்களிலும் ரேஷன் கடைகளிலும் காண முடிந்த பரபரப்பு கோயிலுக்குள்ளும் தொற்றிக்கொண்டு விட்டது.
இதன் இன் னொருபுறம், கிராமப்புற கோயில்களில் பெரும்பான்மை, சாதியைக் கட்டிக் காக்கும் காப்பரண் களாக ஆகி இருக்கின்றன. கிராமக் கோயில் எதிலும், எவரும் விருப்பம்போல நுழைந்துவிட முடியாது. ஒவ்வொரு தெய்வமும் ஒரு சாதிக்கு மட்டுமே உரியது! மற்ற எந்த சாதிக்காரனும் அந்தக் கோயிலின் வாசற்படியைக்கூட மிதித்துவிட முடியாது. ஆலயப் பிரவேசம் நடந்து ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்ட போதும், இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முடியாத கோயில்கள் பல ஊர்களிலும் இருக்கத்தான் செய்கின்றன.
ஆறு வருடங்களுக்கு முன், நானே ஒரு சம்பவத்தை நேரில் கண்டிருக்கிறேன். சிவகாசி அருகில் உள்ள சிற்றூர் ஒன்றில் உள்ள காளியம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்பது தெரிந்து, அரசு அவர்கள் ஆலயப் பிரவேசம் செய்ய ஏற்பாடு செய்திருந்தது.
குறிப்பிட்ட நாளில், தாசில்தாரில் துவங்கி அத்தனை அரசு அதிகாரிகளும் அந்தக் கிராமத்தில் குவிந்தார்கள். ஆனால், எந்த மக்கள் ஆலயத்துக்குள் பிரவேசிக்க வேண்டுமோ, அவர்களில் ஒருவர்கூடத் தன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அரசு அதிகாரியே ஒரு தட்டில் பழம், தேங்காய் வாங்கி எடுத்துக்கொண்டு, அவர்களில் சிலருக்குத் தைரியம் சொல்லி அழைத்து வந்திருந்தார். ஆண்களும் பெண்களுமாக நாற்பது பேர் வந்தனர். கோயிலுக்குள் நுழைவதற்காக அவர்கள் வந்து நின்றபோது, அந்த முகங்களில் பயமும் நடுக்கமும் ஒளிந்திருப்பதைக் காண முடிந்தது. வயதான பெண் ஒருத்தியின் கைகள் நடுங்கின. கோயிலுக்குள் அவர்களை அனுமதித்தது தங்களுக்கு உடன்பாடில்லை என்பதுபோல, மற்றொரு மேல்சாதியினர் கோயிலை விட்டு விலகியே நின்றிருந்தார்கள்.அதுவரை இருந்த பூசாரி, அன்று தான் பூஜை வைக்க முடியாது என்று விலகிக்கொண்டார். தாசில்தாரே துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு பூஜை வைத்தார்.
பூஜை முடிந்தது. பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த நாடகம் முழுவதும் ஒரு நாள்தான்! மீண்டும், அந்தக் கோயில் எந்தச் சாதிக்குச் சொந்தமாக இருந்ததோ, அவர்கள் வசமே திரும்பிப் போய்விட்டது. அன்று கோயிலில் சாமி கும்பிட வந்தவர்கள், அதன் பிந்திய நாட்களில், வேறு வேறு காரணங்களுக்காக உதைபட்டார்கள்.
வழிபாட்டை விடவும் முக்கியமானது சக மனிதனை மதிப்பதும், அவனைப் புரிந்துகொள்வதுமே ஆகும். நம்மைச் சுற்றிய மனிதர்களின் மீது தீராத துவேஷமும், பகையும், பொறாமையுமாக வாழ்கிற நாம், கோயிலில் மட்டும் எப்படிப் பரிசுத்தவாதிகளாக நடந்துகொள்ள முடியும்?
மனம் காழ்ப்பு உணர்ச்சியின் ஊற்றாக மாறிக்கொண்டு இருக்கும்போது, கருணையையும், அன்பையும் எப்படிக் கோயிலில் காண முடியும்? எளிய மனிதர்களின் விட்டுக்கொடுத்தல் எத்தகையது என்பதை நாம் உணரவே இல்லை. அடுத்தவனின் உரிமையை அபகரித்துக் கொள்வதற்குத்தான் நமது அறிவும் பலமும் அதிகம் பயன்பட்டிருக்கிறது.
கந்தர்வனின், ‘சாசனம்’ என்ற கதை எளிய மனிதர்களின் விட்டுக் கொடுத்தலையும் ஆவேசத்தையும் நுட்பமாகப் பதிவு செய்துள்ளது. கந்தர்வன் ஒரு கவிஞர். முற்போக்குச் சிந்தனையாளர். ‘விதவிதமாக மீசை வைத்தோம்... ஆனால், வீரத்தை எங்கோ தொலைத்துவிட்டோம்’ என்று பாடும் கவியுள்ளம் கொண்டவர். சிறந்த சிறுகதைப் படைப்பாளி.
‘சாசனம்’ கதை, ஒரு புளிய மரத்தைப் பற்றியது. அந்த மரம் குறவர்கள் குடிசைகளுக்கு மத்தியில் உள்ளது. பிரமாண்டமான அந்த மரத்தடியில் பன்றிகள் அடைந்து கிடக்கின்றன. கதைசொல்லி அதைத் தனது அப்பாவின் புளியமரம் என்று அறிமுகப்படுத்துகிறார்.
அருகில் உள்ள ஊர்களில் அப்பாவுக்கு நிறைய நிலங்கள் உண்டு. யாவையும் குத்தகைக்காரர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். வீட்டுத் திண்ணையில் இருந்தபடியே அப்பா அவர்களுக்கு உத்தரவு கொடுத்துக் கொண்டு இருப்பார். அந்த நிலம் யாவும் தாத்தாவுக்கு, மகாராஜா தானமாகத் தந்தவை. அதற்கு சாசனமும் இருக்கின்றன.
அப்பாவுக்கு ரொம்பவும் பிடித்த மானது அந்த கொறட்டுப் புளி தான் (குற வீட்டுப் புளி என்பதைச் சொல்லக் கூச்சப்பட்டு, கொறட்டு புளியாக்கி இருந்தார் அப்பா). ஒவ்வொரு முறை புளியம்பழங்களை உலுக்கும்போதும், அந்தப் பகுதியில் உள்ள கிழவி ஒருத்தி யும் அவளது மகளும் மரத்தடியில் வந்து நிற்பார்கள். அந்த கிழவியின் மகள் தாத்தாவின் சாடையிலே இருப்பாள். அப்பா பேசும்போது அவர்கள் வாஞ்சையாகக் கேட்பார்கள். பழம் உலுக்கி முடிந்ததும் அப்பா தன் காலால் கொஞ்சம் பழங்களை ஒதுக்கி, அந்தக் கிழவியை எடுத்துக்கொள்ளச் சொல்வார். அவள் மறுப்பேதும் இன்றி அள்ளிக்கொள்வாள். உண்மையில், அந்தப் புளியமரம் தனக்குச் சொந்தமானதுதானா என்று அப்பாவுக்கே சந்தேக மாகத்தான் இருந்தது. அதைச் சொந்தம் கொண்டாட அவரிடம் எந்தச் சாசனமும் இல்லை. ஆனா லும், அதை அனுபவித்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால், அடுத்த வருஷம் அவர் புளியம்பழம் உலுக்க ஆளைக் கூட்டிக்கொண்டு போனபோது, அந்தக் கிழவி மரம் தனக்குத்தான் சொந்தம் என்றும், அதை உலுக்கும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு என்றும் அறிவிக்கிறாள்.
அப்பா கால மாற்றத்தை உணர்ந்துகொண்டு அதிர்ச்சியடைந் தவராக, வெளியேறி வீடு திரும்பி வருகிறார். ஆனால், அந்த மரம் தன்னுடையதுதானா என்று பரிசோதிக்க, அவர் சாசனம் எதையும் எடுத்துப் பார்க்கவில்லை என்பதோடு கதை முடிகிறது.
மறைமுகமாக இக்கதை விளக்குவதெல்லாம், அந்தக் கிழவி அவரது தாத்தாவின் மனைவிகளில் ஒருத்தி. அவளுக்கு உரிமையான மரத்தை இத்தனை வருடமாக அவள் அனுமதியோடு அப்பா அனுபவித்துக் கொண்டு இருந்தார். ஆனால், அதற்கான நன்றியோ, கருணையோ அவரிடம் இல்லை. முடிவாக, புளியமரத்துக்கு உரிமையானவள் குரல் தரும்போது, வழியின்றி வெறும் ஆளாகத் திரும்பிவிடுவதன் மூலம் அவர் உண்மையை ஒப்புக் கொள்வதை அறிய முடிகிறது.
பிறப்பில் உருவான பேதங்களைக் களைவதற்காகத்தான் கோயில்களும், பள்ளிக்கூடமும், அற நிலையங்களும் உருவாக்கப்பட்டன. இன்று அவையே சாதியையும், துவேஷத்தையும, வன்முறை யும் வளர்ப்பவை ஆகிவிட்டன.
சாலையோரத்தில் உள்ள நடுகல்லை ஒரு பௌத்தத் துறவி வணங்கிக்கொண்டு இருக்கிறார். அதைக் கண்ட மற்றொரு துறவி, ‘இதென்ன முட்டாள்தனம்?’ எனக் கேட்க, ‘கோயிலின் உள்ளே நீ வணங்கும் புத்தனும்கூட இதைப் போன்றதொரு கல்தானே?’ என்று சிரிக்கிறார் என்கிறது ஜென் கதை.
நிஜம்தானே! நாம் கடைப்பிடிக்க வேண்டிய சுய ஒழுக்கத்தையும், அன்பையும் தூர விலக்கிவிட்டு, அபிஷேகமும், ஆராதனைகளும் செய்வதால் மட்டும் மனம் மலர்ச்சியுற்றுவிடும் என்று நம்பினால், அதன் பெயர் முட்டாள்தனம்தான் இல்லையா?
தொழிற்சங்கவாதியாகவும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பை வகித்த கலைஞராகவும் தீவிர பங்களிப்பு செய்த கந்தர்வன், வாழ்வின் அரிய தருணங்களைக் கதைகளாக்கியவர். புதுக்கோட்டையைச் சேர்ந்த கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம். Ôகண்ணதாசன்Õ இதழில் எழுதத் துவங்கிய இவர் Ôசெம்மலர்Õ, Ôசுபமங்களாÕ, ÔதாமரைÕ போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தார். கவியரங்க மேடைகளில் இவர் வாசித்த கவிதைகள் இன்றும் திரும்பத் திரும்ப பாடப்பட்டு வருகின்றன. Ôமீசைகள்Õ என்ற இவரது கவிதைத் தொகுப்பும் Ôபூவுக்கு கீழேÕ, Ôசாசனம்Õ போன்ற சிறுகதைத் தொகுப்புகளும் மிக முக்கியமானவை. அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று சென்னையில் உள்ள அவரது மகளின் வீட்டில் வசித்தபடி இலக்கியப் பணியை மேற்கொண்டிருந்த கந்தர்வன் உடல்நலக் குறைவின் காரணமாக ஓராண்டுக்கு முன் மரணமடைந்தார்.

லா.ச.ராமாமிருதம் தனிமையின் நிறம்-எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ். ராமகிருஷ்ணன்

குற்றாலத்தின் தேனருவிக்குப் போகின்ற வழியில் உள்ள ஒரு பாறை இடுக்கில் படுத்துக்கிடந்த வயதானவர் ஒருவரைக் கண்டேன். அழுக்கேறிய உடையும், பிசுக்குப் பிடித்த தலையும், பிரகாசிக்கும் கண்களும் கொண்டவராக இருந்தார். யாருமற்ற மலையின் மீது அவர் எப்படி வாழ்கிறார் என்று ஆச்சர்யமாக இருந்தது. அவர் அருகில் உட்கார்ந்துகொண்டு, ‘‘எப்படித் தனியாக வாழ்கிறீர்கள்? நீங்கள் சாமியாரா?’’ என்று கேட்டேன்.
அவர் சிரித்தபடி, ‘‘நான் சாமி இல்லை. சாதாரண ஆசாமி. இங்கே இருப்பது பிடித்திருக்கிறது. தங்கிவிட்டேன். நான் தனியாக வாழவில்லை. இத்தனை மரங்கள், பறவைகள், அணில்கள், எறும்புகள் என ஒரு பெரிய உலகமே என்னைச் சுற்றி இருக்கிறதே!’’ என்றார். தவறு என்னுடையது என்பது போலத் தலைகுனிந்தேன். அவர் சிரித்தபடியே தொடர்ந்து சொன்னார்...
ÔÔசூரியனையும் சந்திரனையும் போல் தனிமையானவர்கள் உலகில் வேறு யாருமே கிடையாது. மனிதனுடைய பெரிய பிரச்னை அடுத்த மனிதன் தான். கூடவே இருந்தாலும் பிடிக்காது. இல்லாவிட்டாலும் பயம்!ÕÕ
அருவியை விடவும், என்னைச் சுத்த மாக்கின இந்தச் சொற்கள். வாழ்வின் நுட்பங்களை ஞான உபதேசங்களாக வாசிப்பதைவிடவும் வாழ்ந்து கண்டவனின் நாக்கிலிருந்து கிடைக்கும் போதுதான் நெருக்கமாக இருக்கிறது.
தனியாக இருப்பது பயமானது என்ற எண்ணம் குழந்தையிலிருந்தே நம்முள் ஊறத் துவங்கிவிடுகிறது. உண்மையில் தனிமை பயமானதா? நிச்சயமாக இல்லை. தனிமை ஒரு சுகந்தம். அதை நுகர்வதற்குத் தேவை மனது மட்டுமே!
சில நாட்களுக்கு முன், கடற்கரையில் இரவில் அமர்ந்திருந்தேன். குழந்தை விளையாடிப் போட்ட பலூன் ஒன்றை கடல் அலை இழுத்துக்கொண்டு இருந்தது. பலூன் உள்ளே போவதும் கரையேறுவது மாக ஒரு நாடகம் நடந்துகொண்டே இருந்தது. ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு பெரிய கடலால் இந்தச் சிறிய பலூனை ஒன்றுமே செய்ய முடியவில்லை. எவ்வளவு பெரிய அலைகளின் கைகளால் நீட்டிப் பிடித்தாலும், பலூன் தண்ணீரில் மிதந்துகொண்டுதான் இருக் கிறது. ஆனால், அலைகள் சலிப்புற்று நிறுத்துவதேயில்லை.
நம் தனிமையும் இந்த பலூன் போல அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும், தன்னியல்பு மாறாமல் இருந்துகொண்டே இருக்கிறது. வீட்டில் யாருமற்றுப் போன நேரங்களில்தான் நாம் தனிமையாக இருப்பதாக உணர் கிறோம். அது நிஜமானது இல்லை. ஒவ்வொரு நிமிஷமுமே நாம் தனிமை யானவர்கள்தான்!
நாம் பார்க்கும் காட்சியை, நாம் பார்த்த விதத்தில் இன்னொருவர் பார்ப்பதில்லையே! சாப்பிடும்போது, தண்ணீர் குடிக்கும்போது, படிக்கும் போது, உறங்கும்போது என எப்போ துமே தனிமையாகத்தான் இருக்கிறோம். ஆனால், அதை அறிந்துகொள்வதில்லை. இயற்கையின் முன் மட்டும்தான் தனிமையின் வாசனையை நம்மால் நுகர முடிகிறது. பிரமாண்டமான மலையின் உச்சி யில் நின்றபடி சூரிய அஸ்தமன காட்சியை ஒருமுறை கண்டேன். பறவை சிறகடித்துக்கொண்டு இருப்பது போல, மேற்கு வானில் சூரியன் அசைந்து அசைந்து உள்ளே ஒடுங்குவதைக் கண் டேன். பார்த்துக்கொண்டு இருந்த போதே, வெளிச்சம் மறைந்து இருட்டு கசிந்து வரத் துவங்கி, கண்முன் இருந்த பள்ளத்தாக்கும், மரங்களும் காணாமல் போகத் துவங்கின. அதுவரை இல்லா மல், இருட்டின் நெருக்கத்தில்தான் நான் தனியாக இருக்கிறேன் என்ற பயம் எழும்பத் தொடங்கியது. ஆச்சர்யமாக இருந்தது. நம் தனிமையை மறைக்கும் கைகள் சூரியனுடையவைதானா?
தனிமையாக இருப்பது என்றவுடனே மற்றவர்களை விட்டு விலகிப் போய்விடுவது என்று நம் மனதில் தோன்றுகிறது. இரண்டும் ஒன்றல்ல. தனியாக இருப்பது என்பது மாறாத ஒரு நிலை. எத்தனை ஆயிரம் நிறைந்த கூட்டத்திலும்கூட நாம் தனியாள்தானே! கடலில் நீந்துகிறோம் என்றால், கடல் முழுவதுமா நீந்துகிறோம்? ஆறடிக்குள்தானே? அப்படி, வாழ்விலும் பகுதி அனுபவத்தை முழு அனுபவமாக மாற்றிக்கொண்டு விடுகிறோம்.
பௌத்த ஸ்தல மான சாஞ்சியில் ஒரு பிக்குவைச் சந்தித்தேன். அவர் நேபாளத் திலிருந்து நடந்தே வந்திருக்கிறார். அவரது பையில் பௌத்த சாரங்கள் அடங்கிய புத்தகம் இருந்தது. அந்தப் புத்தகத்தில் உலர்ந்து போன அரச மர இலை ஒன்றை வைத்திருந்தார். ‘எதற் காக அந்த இலை?’ என்று கேட்டேன்.
அவர் அமைதியான குரலில், ‘ஒரே மரத்தில் ஆயிரக்கணக்கான இலைகள் இருக்கின்றன. ஒவ்வொரு இலையும் ஒரு வடிவத்தில் இருக்கிறது. ஒரு நேரம் அசைகிறது... ஒரு நேரம் அசைய மறுக்கிறது. ஒரு இலை காற்றில் எந்தப் பக்கம் அசையும் என்று யாருக்காவது தெரியுமா? அல்லது, எப்போது உதிரும் என்றாவது தெரியுமா? இலை மரத்திலிருந்தபோதும் அது தனியானது தான். மரத்திலிருந்து உதிர்ந்த பிறகும் அது தனியானதுதான். உலகில் நாமும் அப்படித்தானே வாழ்கிறோம்! அதை நினைவுபடுத்திக்கொள்ளத்தான் இந்த இலை’ என்றார். மரத்தடியிலிருந்து பிறக்கும் ஞானம் என்பது இதுதானோ என்று தோன்றியது.
ஒரு வெளிநாட்டுக்காரன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக அந்த பிக்குவை அருகில் அழைத்தான். அவர் எழுந்து ஒரு எட்டு நடந்துவிட்டு, மண்டியிட்டு தலையால் பூமியை வணங்கினார். திரும் பவும் மறு எட்டு வைத்துவிட்டு, அதே போல் தலையால் பூமியை வணங்கினார். எதற்காக அப்படி நடந்துகொள்கிறார் என்று எவருக்கும் புரியவேயில்லை.
அவர் சிரித்தபடியே, ‘பூமி எத்தனை பெரிதானது! மனித கால்களால் அதை முழுவதும் சுற்றி நடந்து, கடந்து விட முடியுமா என்ன? அதை விடவும் பேருண்மை என்ன இருக்கிறது? அதை புரிந்துகொண்டதால்தான் இப்படிச் செய்கிறேன்’ என்றார்.
‘இப்படி நடந்தேதான் நேபாளத் திலிருந்து வந்தீர்களா?’ என்று வெள்ளைக் காரன் கேட்க, ‘இதில் ஆச்சர்யப் படுவதற்கு என்ன இருக்கிறது? பத்து வயதிலிருந்து நான் இப்படித்தான் எங்கு போனாலும் நடந்தே போகிறேன். தற்போது எனக்கு வயது எழுபதாகிறது’ என்றார் பிக்கு.
பிக்கு என்னைக் கடந்து போய்விட்ட பிறகும், அவரது புத்தகத்தில் மறைந்திருந்த இலை மனதில் படபடத் துக்கொண்டே இருந்தது. ஒரு இலை காற்றில் எந்த பக்கம் அசையும், எப்போதும் உதிரும் என்பது ஏன் இன்று வரை ஆச்சர்யமாக இல்லை? தனிமையை இதைவிட வும் எளிமையாக விளக்க முடியுமா, என்ன?
புறநானூற்றுப் பாடல் ஒன்றில், இறந்து போன தன் தலைவனைப் பிரிந்த துக்கத்தில் தலைவி, ‘தேர்ச் சக்கரத்தில் ஒட் டிய பல்லியைப் போல அவரோடு வாழ்ந்து வந்தேன்’ என்கிறாள். எத்தனை நிஜமான வார்த்தை! தேர்ச் சக்கரத்தில் ஒட்டிக் கொண்ட பல்லி, தன் இருப்பிடத்தை விட்டு நகர்வதே இல்லை. ஆனாலும், தேரோடு எத்தனையோ தூரம் பயணம் செய்திருக் கிறது. எத்தனையோ மேடு பள்ளங்களைக் கடந்து போயிருக் கிறது. பெண்ணின் தீராத் தனிமையை விளக்கும் கவித்துவ வரிகள் இவை.
தனிமை உக்கிரம் கொள்ளும்போது அதை நாம் எதிர்கொள்ள முடியாமல் எதற்குள்ளாவாவது மூழ்கிக்கொண்டு விடுகிறோம். பெரும்பான்மை குடும்பங் களில் பெண்கள் இருப்பு இப்படித்தான் இருக்கிறது. அவர்கள் தங்களுக்குத் துணை வேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்துகொண்டு ஒருவரோடு வாழத் துவங்கி, அந்தத் துணை ஏற்படுத்தும் வலியையும் நெருக்கடியையும் தாங்கிக் கொள்ள முடியாமலும், அதை விட்டு விலகி தனது வாழ்வை எதிர்கொள்ள முடியாமலும் அல்லாடுகிறார்கள்.
ஏதோ சில அரிய நிமிஷங்கள்தான் அவர்களை, தான் யாருடைய மனை வியோ, சகோதரியோ, தாயோ இல்லை; தான் ஒரு தனியாள் என்று உணர்த்து கின்றன. அந்த நிமிஷம் கூடப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே புகையென மறைந்துவிடுகிறது.
வாழ்வு அனுபவங்களை உன்னத தரிசனங்கள் போல, கவிதையின்மொழியில் கதைகள் ஆக்கியவர் லா.ச.ராமாமிருதம். அவரது கதைகள் இசை யைப் போல நிசப்தமும், தேர்ந்த சொற்களின் லயமும் கொண்டவை. சொல்லின் ருசியைப் புரிய வைக்கும் நுட்பம் கொண்டது அவரது எழுத்து. லா.ச.ரா&வின் ‘கிரஹணம்’ என்ற கதை, ஒரு பெண் தன் தனிமையை உணரும் அபூர்வ கணத்தைப் பதிவு செய்துள்ளது.
கதை, சூரிய கிரஹணத்தன்று கடலில் குளிப்பதற் காகச் செல்லும் கணவன்&மனைவி இருவரைப் பற்றியது. மனைவி கடலில் குளிக்கப் பயந்து போய் வரமாட்டேன் என்கிறாள். கணவன் கட்டாயப்படுத்தி அழைத்துப் போகிறான். பயந்து பயந்து தண்ணீரில் இறங்குகிறாள். ஒரு அலை அவள் மேல் விழுந்து கணவன் கையிலிருந்து அவளைப் பிடுங்கிக் கடலினுள் கொண்டு போகிறது.
மூச்சடைக்கிறது. ஒரு நூலளவு மூச்சு கிடைத்தால்கூடப் போதும் என்று போராடுகிறாள். அலை புரட்டிப் போடுகிறது. மூச்சுக் காற்று கிடைக்கிறது. தன்னை யாரோ காப்பாற்றியிருப்பது புரிகிறது. அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு யாரோ ஒருவன் சிரித்தபடி நிற்கிறான். யார் அவன், எப்படி இவ் வளவு உரிமையாக கையைப் பிடித்துக் கொண்டு இருக்கிறான் என்று யோசிப்ப தற்குள் இன்னொரு அலை வந்து அவளை உள்ளே இழுத்துப் போகிறது.
அவள் தண்ணீருள் திணரும் நிமிஷத்துக்குள், தான் ஒரு பெண்ணாகப் பிறந் ததுதான் இத்தனைத் துயரத்துக்குக் காரணம் என்று அவளுக்குப் புரி கிறது. தனது ஆசைகளை, தாபங்களை மறைத்துக்கொண்டு எத்தனை காலம் வாழ்ந்து வந்திருக்கிறோம், தனது சுயம் வாசிக்கப்படா மல் வீணயின் தந்தியில் புதைந்துள்ள இசை யைப் போல தனக்குள் ளாகவே புதைந்து போய்க் கிடப்பது புரிகிறது.
அதே ஆள் திரும்பவும் அவளைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றுகிறான். அவளது கணவன் சிறு தொந்தி தெறிக்க, பதறி ஒடி வருகிறார். காப்பாற்றியவன் சிரித்தபடியே, ‘இந்த அம்மா சாக இருந் தாங்க. நல்ல வேளை, நான் பார்த்துக் காப்பாற்றினேன்’ என் கிறான். அதுவரை நடந் தது அவளுக்குள் புதைந்து போய், அவள் பயம் கரைந்து வெறிச் சிரிப்பாகிறது. சிரிப்பு காரணமற்ற அழுகை யாக மாறி, ‘என்னை வீட்டுக்கு அழைச்சிட் டுப் போயிடுங்கோ!’ என்று கத்துகிறாள் என்ப தாக கதை முடிகிறது.
கிரஹணம் பிடித்தது போல வாழ்வில் இப்படிச் சில சம்பவங் கள் கடக்கின்றன. ஆனால், இந்த நிமிஷங் கள்தான் வாழ்வின் உண்மையான அர்த்தத் தைப் புரிய வைக் கின்றன.
சில வேளைகளில் தோன்றுகிறது... பிரமாண்டமான கடல் கூட தனிமையாகத் தானே இருக்கிறது! அதுவும் தனது தனி மையை மறைத்துக் கெள்வதற்குத்தான் இப்படி அலைகளை வீசி ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு இருக் கிறதோ?
‘அலைகளைச் சொல்லிக் குற்றமில்லை, கடலில் இருக்கும் வரை’ என்கிற நகுலனின் கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன!
சாகித்ய அகாடமி பரிசு பெற்ற லா.ச.ராமாமிருதம் தனித்துவமான கதை சொல்லும் முறையும், கவித்துவமான நடையும் கொண்ட அரிய எழுத்தாளர். அவரது கதைகள் இயல்பான அன்றாட வாழ்வின் சித்திரங்களாகும். ஆனால், அதன் அடிநாதமாக மெய்தேடல் ஒன்று இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு சிற்பியைப் போல சொற்களைச் செதுக்கி உருவாக்கும் கவித்துவ சிற்பங்கள் என இவர் கதைகளைச் சொல்லலாம். அபிதா, பச்சைக்கனவு, பாற்கடல், சிந்தா நதி, த்வனி, புத்ரா போன்றவை இவரது முக்கிய நூல்கள். இவரது கதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி உள்ளிட்ட பல முக்கிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. தமிழ் உரைநடையில் லா.ச.ரா. நடை என தனித்துவமானதொரு எழுத்து முறையை உருவாக்கிய பெருமை இவருக்குண்டு. வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற லா.ச.ராமாமிருதம் தற்போது சென்னை, அம்பத்தூரில் வசித்து வருகிறார்.

கு.ப.ராஜகோபாலன் நினைவு முகம்-எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன்


திருப்பதி செல்லும் ரயிலில் அந்தத் தம்பதியைப் பார்த்தேன். இருவருக்கும் அறுபதைக் கடந்த வயது. தாத்தா ஜன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்தார். அன்றைக்கு ரயிலில் கூட்டம் இல்லை. அவர் படிப்பதற்காக வாங்கி வைத்திருந்த ஆங்கில பேப்பர், பிளாஸ்டிக் கூடையில் செருகப்பட்டிருந்தது.
ரயில் வேகமாகக் கடந்து செல்லும்போது, அவர் தொலைவில் உள்ள வயலில் வந்திறங்கும் கொக்குகளைக் காட்ட, ஒரு குழந்தையின் வியப்பில் வெளியே எட்டிப் பார்த்தார் அந்தப் பாட்டி. பயணம் முழுவதும் அவர்கள் தணிவான குரலில் எதையோ பேசிச் சிரித்துக்கொண்டே வந்தார்கள். இடையிடையில் தாத்தா சாக்லெட் சாப்பிடுவதும், பாட்டி அதில் பாதியைப் பிடுங்கி வைத்துக்கொள்வதுமாக ஒரு விளையாட்டு நடந்துகொண்டு இருந்தது. பிறகு, தாத்தாவின் தோளில் சாய்ந்து படுத்துக்கொண்டார் பாட்டி. அவரது நரையோடிய கேசம் காற்றில் பறந்து தாத்தாவின் முகத்தில் படர்ந்தது.
ஓடும் ரயிலில், தாத்தா டம்ளரில் தண்ணீர் ஊற்றி குடிக்க முற்பட்டபோது, தண்ணீர் சிதறி எதிரில் இருந்த எங்கள் மீதும் தெறித்தது. ‘‘இன்னும் சின்னப் பிள்ளையாட்டம் இருக்கீங்களே... கல்யாணமாகி நாப்பது வருசமாச்சு. உங்களை மாத்தவே முடியலை’’ என்று பாட்டி சொல்ல, ‘‘நாப்பது எங்கடி ஆச்சு? நாப்பத்தஞ்சு முடிஞ்சிருச்சு’’ என்றார் தாத்தா சிரிப்புடன். ‘‘அதெல்லாம் கரெக்டா கணக்கு வெச்சிருங்க’’ என்றபடி ஈரத்தைத் துடைத்தார் பாட்டி.
நாற்பத்தைந்து வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தும், களிப்பும் கேளிக்கையுமாக வாழ்வை அப்படியே பாதுகாக்கும் அந்த ரகசியம் என்னவென்று கேட்கலாம் போலத் தோன்றியது. அவர்களோ தீராத மையலில் புதையுண்டவர்களைப் போல் இருந்தார்கள். வாழ்வில் சுவை துவங்கும்போது தித்திப்பாக இருக்கலாம், ஆனால், அதன் கடைசி விளிம்பில்கூட இத்தனை இனிப்பு இருக்க முடிவது ஆச்சர்யம் தந்தது.
என்னுடன் வந்திருந்த நண்பன், தன் மனைவியிடம் அவர்களைக் காட்டி, ஏதோ சொன்னான். அவன் மனைவி, ‘‘அதான் நரையேறிப் போச்சுல்ல... இன்னும் என்ன கொஞ்சல் வேண்டியிருக்கு?’’ என்றாள். ‘‘நீ எல்லாம் நினைச்சாலும், இந்த வயசுல இப்படி இருக்க முடியாதுடி!’’ என்றான் நண்பன். ‘‘ம்ம்ம்... இந்த மூணு வருஷமே போதும் போதும்னு இருக்கு. வயசானா நான் உங்களை விட்டுட்டுப் பையன்கூட அமெரிக்கா போயிருவேன்’’ என்றாள். அருகில் இருந்த அவர் களின் இரண்டு வயதுப் பையன் எதுவும் புரியாமல், சிப்பர் டம்ளரில் பால் குடித்துக் கொண்டு வந்தான். வாழ்தலின் சுவை நாளுக்கு நாள் திரிந்து கொண்டே இருக்கக் கூடியதுதானோ?
திருப்பதியில் நண்பனின் குழந்தைக்கு மொட்டை போடு வதற்காக டிக்கெட் வாங்கிக் காத்திருக் கும்போது, திரும்பவும் அந்த வயதான தம்பதி யைப் பார்த்தேன் அந்தப் பாட்டி கையில் டிக்கெட் டுடன் நிற்க, தாத்தா அவருடைய கையைப் பிடித்தபடி எதையோ சொல்லிச் சிரித்தார். பாட்டியும் சிரித்தபடியே நாவிதர்கள் அமர்ந்திருந்த இடத்தின் அருகே வந்து தன் கையில் இருந்த சீட்டைத் தந்து, தன் தலையை மொட்டையடிக்கும்படி சொன்னார்.
சவரக்கத்தியை நன்றாகத் தீட்டி, பாட்டியின் தலையில் தண்ணீர் தெளித்து மழிக்கத் துவங்கியதும், அருகில் உட்கார்ந்திருந்த தாத்தாவின் கண்கள் தானே கசியத் துவங்கின. பாட்டியின் தலைமுடி கற்றை கற்றை யாக தாத்தாவின் கைகளில் வந்து விழுந்தன. அவர் அழுகையை அடக்க முடியாதவரைப் போல வெளியே எழுந்து போய், ஒரு மரத்தடியில் குழந்தை யைப் போல நின்று விசும்பினார்.
குளித்துவிட்டு, மொட்டையடிக் கப்பட்ட தலையும் ஈரப்புடவையுமாக வந்தார் பாட்டி. வயதானவரின் முகத்தில் இருந்த துயரக் களையைக் கண்டது போல, பாட்டி ஆறுதல் சொல்லும் தொனியில், ‘‘சாமி காரியம். இதுக்குப் போயி கண்ணைக் கசக்கிட்டு இருக்கீங்க. தொடச்சுக்கோங்க’’ என்றார். மொட்டையடிக்கப்பட்ட பிறகு பாட்டி, ஒரு துறவி போலிருந்தார்.
அன்று மாலையில் நல்ல மழை பெய்தது. காற்றோடு கூடிய திடீர் மழை. தரிசனத்தை முடித்துவிட்டு வந்தபோது மழை பிடித்துக்கொண்டது. நாங்கள் நனைந்தபடியே ஓடி வெளிப் பிராகாரத்தில் உள்ள மண்டபத்தில் ஒதுங்கினோம். அங்கே அந்தப் பாட்டியும் தாத்தாவும் ஜமுக்காளத்தை விரித்து உட்கார்ந்திருந்தனர். ஒரு துண்டைக் கொடுத்து எங்களைத் தலை துவட்டிக்கொள்ளச் சொன்னார் பாட்டி. பிறகு, முறுக்கும் லட்டும் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்.
மழை விடும் வரை அருகிலே இருந்தோம். நண்பனின் மனைவி, ‘‘வேண்டுதலுக்காக மொட்டை போட்டீங் களா?’’ என்று கேட்டார். ‘‘சொன்னா சிரிப்பீங்க. அது ஒரு கதை’’ என்று தாத்தாவைக் காட்டியபடி சொல்லத் துவங்கினார் பாட்டி. ‘‘இவர் என் அத்தை பையன். நாங்க அப்போ திருக்கடையூர்ல இருந்தோம். அத்தை வீட்ல ரொம்ப வறுமை. அதனால இவர் எங்க வீட்லதான் தங்கிப் படிச்சார். அப்போ எனக்கும் இவர் மேல ரொம்ப ஈடுபாடு இருந்தது. இது என் வீட்ல யாருக்கும் பிடிக்கலை.
அப்பா எனக்கு திருநாகேஸ்வரத்துல இருந்து ஒரு மாப்பிள்ளை பாத்து நாள் குறிச்சிட்டாரு. கல்யாணத்துல எனக்கு இஷ்டம் இல்லை. என்ன செய்றதுனும் தெரியலை. முகூர்த்தத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி ஒரு யோசனை வந்தது. யாருக்கும் தெரியாம ஒரு நாவிதர்கிட்டே போயி, என் தலையை மொட்டை போட்டுட்டு வந்துட்டேன். அப்போ எனக்கு கருகருனு அவ்வளவு கேசம்.
மொட்டைத் தலையா வந்து நின்ன என்னைப் பாத்து வீடே பயந்து போயிருச்சு. ஒரே ரகளை. அப்பா வுக்கு அப்படி ஒரு கோபம். விஷயம் மாப்பிள்ளை வீடு வரைக்கும் போயி, கல்யாணம் நின்னு போச்சு. அப்புறம் வேற வழியில்லாம இவருக்கே என்னைக் கட்டி வெச்சிட்டாங்க. பிரச்னையில்லாம கல்யாண மாகி குழந்தை பிறந்தா இங்கே வந்து மொட்டை போடுறேன்னு அப்போ மனசில வேண்டிட்டு இருந்தேன். இவருக்கு வடக்கே வேலை கிடைச்சது. பாட்னாவில் வேலை, நாற்பது வருஷம் அங்கேயே இருந்தாச்சு. குழந்தைகள் இல்லை. ஆனா, வேண்டுதல் அப்படியே இருக்கேன்னுதான் வந்து மொட்டை போட்டுட்டேன். இத்தனை வருஷமா இவர் என் தலையை மொட்டை அடிக்க விடவே இல்லை. வயசாறது இல்லையா... இனி எவ்வளவு காலம் இருக்கப் போறோம்னுதான் புறப்பட்டு வந்தோம்’’ என்றார் பாட்டி. தாத்தாவின் முகம், மேலும் வேதனையில் ஆழ்ந்ததைக் கவனிக்க முடிந்தது.
பேச்சற்றவர்களாக நாங்கள் மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம். திடீரென தாத்தா தன் மௌனத்தைக் கலைத்தவரைப் போல, ‘‘அப்படி என்கிட்டே என்ன பிடிச்சிருக்கு?’’ என்று கேட்டார். ‘‘ஆங்... அதையெல்லாம் எனக்குச் சொல்லத் தெரியாது. சொன்னாலும் உங்களுக்குப் புரியாது’’ என்றார் பாட்டி.
மழை நின்ற பிறகு நாங்கள் இறங்கி நடக்கத் துவங்கினோம். அந்தப் பாட்டி சொன்னது மறுக்க முடியாத உண்மை. ஒரு ஆணிடம் என்ன பிடித்திருக் கிறது என்று எந்தப் பெண்ணாலும் முழுமையாகச் சொல்லிவிட முடியாது. அதோடு வாழ்வைக் கொண்டு செலுத்துவது, ஒருவரைப் பற்றி மற்றவர் கொண்டிருக்கும் கற்பனையும் ரகசிய எண்ணங்களும்தானே என்றும் தோன்றியது. என்றோ மனதில் ஒரு விதையைப் போலத் துவங்கிய ஆசையை இன்று விருட்சமான பிறகும் பாட்டி வளர்த்துக்கொண்டே இருக்கிறார். வாழ்வின் நிஜமான சுவை இதுதான் போலும். வீடு திரும்பும் வரை அவர்கள் நினைவில் வந்து கொண்டே இருந்தார்கள்.
பெண்ணின் வாழ்வு திருமணத்தால் மட்டுமே அளவிடப்படுகிறது. திருமணத் துக்காக பாதியில் படிப்பை, வேலையை, எழுத்தை, இசையை விட்ட ஆயிரமாயிரம் பெண்கள் இருக்கிறார்கள். மருந்துக்குக் கூட ஒரு ஆண் இப்படி நடந்து கொண்டது கிடையாது. திருமண வாழ்வு இனித்தாலும் கசந்தாலும் அதுதான் அவளது தலைவிதி. அதற்கு மாற்றும் கிடையாது.
கணவனை இழந்த ஒரு பெண்ணின் மன உலகை மிக நேர்மையாகவும் நுட்பமாகவும் பதிவு செய்த கதை கு.ப.ராஜகோபாலனின் ‘திரை’. பெண்களின் வெளிப்படுத் தப்படாத ஆசைகளையும் கனவுகளையும் தனது படைப்பு களின் மூலம் கவனப் படுத்தியவர் கு.ப.ரா. அவரது கதைகள் மன உலகின் விசித் திரங்களைச் சித்திரிப்பவை.
பால்ய வயதில் திருமண மாகும் கால கட்டம் அது. ஆகவே, உரிய காலம் வரை மனைவி அவளது பெற்றோர் வீட்டில்தான் இருப்பாள். அப்படி பெற்றோர் வீட்டில் இருக்கும் தன் மனைவி ராஜத்தைக் காண்பதற்காக அவள் கணவன் வந்து சேர் கிறான். கடந்த சில மாதங் களாக தனது பெற்றோருக்குத் தெரியாமல் ராஜம் உருகி உருகி கணவனுக்குப் பல கடிதங்கள் எழுதி இருக் கிறாள். அந்தக் கடிதங்கள் தந்த மனமயக்கத்தில் விரகதாபம் ஏற்பட்டு வந்து சேர்கிறான் ராஜத்தின் கணவன். ஆனால், வீட்டுக்கு வந்த நாள் முதல் அவனை ராஜம் கவனிக்கவே இல்லை. எதற்காக இப்படி நடந்துகொள்கிறாள் என்று அவனுக்கும் புரியவில்லை.
அந்த வீட்டில் ராஜத்தின் அக்கா சரஸ்வதி விதவையாகி யார் கண்ணிலும் படாமல் தனியே இருக்கிறாள். ஒரு நாள் வீட்டில் உள்ளவர்கள் திருவிழா பார்க்கப் போய்விடுகிறார்கள். சரஸ்வதி மட்டும் தனியே உட்கார்ந்து வீணை வாசித்துக்கொண்டு இருக்கிறாள். அவள் பாடும் பாடலைக் கேட்டதும், இதுவரை தனக்குக் கடிதங்கள் எழுதியதுகூட இவளாக இருக்குமோ என்று ராஜத்தின் கணவனுக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது. அவன் சரஸ்வதியிடம் போய், ‘‘நீதானே எனக்குக் கடிதங்கள் எழுதினாய்?’’ என்று கேட்கிறான். அவள் உண்மை வெளியாகி விட்ட பதற்றத்தில், ‘‘அது என் தங்கையின் நல்வாழ்வுக்காக எழுதினேன்’’ என்று சமாளிக்கிறாள். ‘‘இல்லை, உன் மனதில் உள்ள ஆசைகள், கனவுகளைத்தான் கடிதமாக வெளிப்படுத்தி இருக்கிறாய். அதை இப்போதுதான் நான் புரிந்து கொண்டேன்’’ என்று அவன் அவள் மீது மோகம்கொள்ளும்போது, சரஸ்வதி, அவன் ராஜத்துக்கு மட்டுமே உரியவன் என்றும், இப்படிக் கடிதம் எழுதுவதன் மூலம் மட்டுமே தன்னை சாந்தப் படுத்திக்கொள்ள முடிவதாகவும், விதவைக்கு வேறு வழி இல்லை என்றும் சொல்லி, அவன் மனதை மாற்றுகிறாள். அப்போது வீட்டில் உள்ளவர்கள் வந்துவிடுகிறார்கள். சரஸ்வதி தன் அறைக்குப் போய் விடுகிறாள். அவர்கள் இருவருக் குள்ளும் முன்போல கண்ணுக்குப் புலப்படாத திரை விழுந்துவிடுகிறது என்று முடிகிறது கதை. காலம் ஒரு திரையை விலக்கும் போது இன்னொரு திரையை உண்டாக்கிவிடுகிறது போலும்! இன்று விதவையைத் திருமணம் செய்து கொள்வது எளிதாகி, அந்தத் திரை விலக்கப்பட்டுவிட்டது. ஆனால் காதல் திருமணமோ, வீட்டார் பார்த்து வைக்கும் திருமணமோ எதுவாயினும் திருமணத்தின் மூலம் உருவான அன்பும் காதலும் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே இலவம் பஞ்சு காற்றில் பறப்பது போலப் பறந்துபோய்விடுவது மட்டும் ஏன் என்று புரியவில்லை. திருமணம் இன்றும் விலக்கப்பட முடியாத நூறு திரைகள் கொண்டதாகவே இருக்கிறது.
பரமபதத்தில் பாம்பு எது... ஏணி எது என்று பார்த்தவுடனே தெரிந்துவிடுகிறது. வாழ்வில் பாம்பையும் ஏணியையும் பிரித்தறிவது அத்தனை எளிதானதில்லையோ!
மணிக்கொடி காலச் சிறுகதை ஆசிரியர்களில் முக்கியமானவர் கு.ப.ரா. 1902&ல் கும்பகோணத்தில் பிறந்த இவர், முழு நேர எழுத்தாளராக வேண்டி, சென்னைக்கு இடம் மாறி கஷ்ட ஜீவனத்தை மேற்கொண்டவர். தமிழ்ச் சிறுகதையின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட முக்கியமானவர்களில் கு.ப.ராவும் ஒருவர். விடியுமா, கனகாம்பரம், நூருன்னிசா போன்ற இவரது கதைகள் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி இருக் கின்றன. 42 வருடங்களே வாழ்ந்த கு.ப.ரா. மிகக் குறைவான சிறுகதைகளே எழுதியிருக்கிறார். ‘ஆண் & பெண் உறவை நுட்ப மான பரிசோதனைக்கு உட்படுத்துகின்றன இவரது கதைகள்’ என்கிறார் க.நா.சு. இவரது எழுத்தின் பாதிப்பு தி.ஜானகிராமன், கரிச்சான்குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் எனப் பலரிடம் காணப்படுகிறது.

மௌனி- ஒரு புதிய அலை-எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன்  கதாவிலாசம்

குளத்தில் எறிந்த கல், தண்ணீரின் மீது தவளை நீந்துவதுபோல சிற்றலையை உருவாக்கிவிட்டு அடியாழத்தில் சென்று நிசப்தமாக மூழ்கிக் கிடக்கத் துவங்கிவிடுகிறது. நல்ல கதைகளும், குளத்தில் எறிந்த கல் போலத்தான் போலும்! அது உருவாக்கும் சிற்றலையின் மடிப்புகள் விசித்திரமாக இருக்கின்றன. ஒரு கல் உருவாக்கும் அலையைப் போன்று இன்னொரு கல் உருவாக்குவதில்லை. ஒவ்வொரு கல்லும் ஒரு புதிய அலை வடிவை உருவாக்குகின்றன. அது தண்ணீரின் மீது கல் நடனமிடும் அரிய தருணம்.
கல்லூரி நாட்களில் வகுப்பறையைவிடவும் நூலகத்தில் அதிக நேரம் செலவிட்டிருக்கிறேன். யாருமற்ற நூலகத்தின் தூசியடைந்த புத்தக அடுக்குகளில் ஏதோ புதைபொருட்களைக் கண்டெடுப்பதைப்போல பால்சாக்கையும் ஜி.நாகராஜனையும் செகாவையும் கு.ப.ராவையும் தேடிப் படித்துக் கொண்டிருந்தேன். அந்த நாட்களில் எனக்கு விருப்பமாக இருந்த எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி மட்டுமே. ஒருவேளை, அவர் ஊர் ஊராகச் சுற்றியலைந்தவர் என்பதுகூட அவரை
நான் விரும்புவதற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும்.
தமிழ் எழுத்தாளர்களை வாசிக்கும்போது என்னை அறியாமலே ஓர் அலட்சியம் இருக்கும். என்ன பெரிதாக எழுதிவிடப் போகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு தான் வாசிக்கத் துவங்குவேன். அந்த நினைப்பை முதலில் சிதறடித்தவர் புதுமைப்பித்தன்.
புதுமைப்பித்தனின் ‘மகாமசானம்' என்ற கதையைப் படித்தபோது, அதில் வரும் குழந்தையும் பாவா பூச்சாண்டியும் குகை ஓவியங்களைக் கண்டுபிடித்துப் பார்த்ததுபோல நம்ப முடியாத ஆச்சரியமாக இருந்தன. அவரது கத்திவீச்சு போன்ற உரைநடை, மனதில் அது வரையிருந்த அனுமானங்களைச் சிதறடித்து, தமிழ்க் கதைகள் உலகத் தரமானவை என்பதை நிரூபிப்பதற்குச் சாட்சியாக இருந்தன. புதுமைப்பித்தன் ஒரு கட்டுரையில் சிறுகதையின் திருமூலர் என்று மௌனி யைக் குறிப்பிட்டிருந்தார். அதனால் தானோ என்னவோ, மௌனியைப் படிப்பதற்குச் சற்றே தயக்கமாக இருந்தது. காரணம், அந்த நாளில் கடவுள் மறுப்பில் தீவிரமாக இருந்தேன். திருமூலர், திருஞானசம்பந்தர் மீதெல்லாம் காரணமற்ற கோபமிருந்தது. நிச்சயம் புதுமைப்பித்தனைவிடவும் பெரிய ஆள் தமிழில் இருக்க முடியாது என்று மௌனியைப் படிக்காமலே இருந்தேன்.
என் நண்பன் மௌனியின் தீவிர ரசிகனாயிருந்தான். அவன் ‘மௌனி யைத் தவிர தமிழில் சிறந்த எழுத்தாளர் வேறு யாருமே இல்லை' என்று சண்டையிடுவான். அவனை மறுக்க வேண்டும் என்பதற்காகவே மௌனியைப் படிக்கத் துவங்கினேன்.
‘அழியாச்சுடர்' என்ற கதையை வாசிக்க ஆரம்பித்தபோது, மனதில் எதிர்ப்பு உணர்ச்சி கொப்பளிக்கத் துவங்கியது. யாரோ ஒருவன் ஜன்னலில் அமர்ந்தபடி நாளெல்லாம் மரத்தைப் பார்த்துக்கொண்டேயிருக்கிறான். பிறகு, தான் எப்போதோ பார்த்த பெண்ணைப் பற்றிப் பேசுகிறான். கோயில், பிராகாரம், சாயைகள், யாழி என்று எழுதுகிறாரே, அதைவிடவும் கதாபாத்திரங்களுக்குப் பெயர் வைக்கக்கூட முடியாமல் எதற்கு எழுதுகிறார் என்று ஆத்திரமாக வந்தது. ஆனாலும், பதினைந்து கதைகளை ஒரே இரவில் வாசித்துவிட்டு, மறுநாளே புத்தகத்தைத் தந்துவிட்டேன்.
நண்பன் அதை எதிர்பார்த்திருக்கக் கூடும். சிரித்துக்கொண்டே, ‘மௌனியை உனக்கு ஒரு நாள் பிடிக்கும் பாரேன்' என்றான். நான் நம்பவில்லை. காலம், நாம் விரும்புவதை நாமே புறக்கணிக்கும்படியாகவும், வெறுப்பதை நாமே நெருங்கிச்சென்று நேசிக்கவும் வைக்கும் விசித்திர விளையாட்டை நிகழ்த்துவதை அன்று தெரிந்திருக்கவில்லை.
மௌனியைப் புரிந்துகொள்வதற்கு ஒரு சிறு சம்பவம் காரணமாக இருந்தது. அதன் பிறகு, மௌனியை மிக நெருக்க மானவராக உணரத் துவங்கி இன்று வரை தமிழின் தனித்துவமான எழுத்தாளர் மௌனி என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
அந்த நிகழ்வு நடந்தபோது எனக்கு இருபத்திரண்டு வயது. கல்லூரி நண்பன் ஒருவனைக் காண்பதற்காக ராஜபாளை யம் வந்திருந்தேன். இருவருமாக நடந்தே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக் குச் செல்வது என்று புறப்பட்டோம். காரணம், மார்கழி மாதத்தின் விடிகாலை யில் நிறைய இளம்பெண்கள் நடந்தே ஸ்ரீவில்லிபுத்தூர் வரை செல்வார்கள். பதினோரு கிலோமீட்டர் தூரம் என்பது பெரிதாகத் தெரியவில்லை. அத்துடன், அந்த வயதில் இளம்பெண் களின் நிழல்களைக்கூட வியப்பாகப் பார்க்கும் ஆசை இருந்தது.
விடிகாலை நான்கு மணிக்கு நாங்கள் நடக்கத் துவங்கியபோது இருள் கலைந்திருக்கவில்லை. ஊரெங்கும் புகையைப் போல வெம்பா படர்ந்திருந்தது. மெல்லிய பனியின் காரணமாக உதடு தானே நடுங்கத் துவங்கியது. நண்பனும் நானும் வடக்கு நோக்கி நடக்கத் துவங்கினோம்.
மரங்கள், வீடுகள், தெருக்கள் யாவும் பனியில் மூழ்கி நிசப்தித்திருந்தன. சாலை ஈரமேறியிருந்தது. பஞ்சுப் பேட்டையைக் கடந்தபோது, மெல்லிய முணுமுணுப்புக் குரல் கேட்டது. யாரோ பாடுகிறார்கள். ‘கீசுகீ சென்றேங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சு அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே, காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஒசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?' திருப்பாவையைப் பாடியபடி யாரோ இருளில் கடந்து செல்வது தெரிகிறது. முகம் தெரிய வில்லை. ஆனால், பாடல் வரிகள் மனதின் அடியாழத்திலிருந்து ஒரு சுகந்தத்தை உருவாக்குகின்றன.
நாவில் ஆண்டாளின் பாடல் பாலின் ருசியைப் போலத் தித்திக்கிறது. அந்தக் குரல் இரண்டு பெண்களுடையது. திரிக்கப்பட்ட பஞ்சைப்போல பிரிக்க முடியாதபடி ஒன்று சேர்ந்த குரல்களாக இருந்தன. அவர்களின் முகத்தைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அவசரமாக அருகில் நடந்தோம். அவர்கள் சீரான வேகத்தில் நடந்து கொண்டிருந்தார்கள். அருகில் வருபவர் களைக் கவனிக்கவே இல்லை.
கலையாத இருளும் பனியும் நிசப்தமும் பாதையை மயக்கம்கொள்ளச் செய்திருந்தன. சாலையில் அவர்களின் பாடல் தொலைதூரம்வரைதனியேநீந்திச் சென்றுகொண்டிருந்தது. இருளின்மீது ஆத்திரமாக வந்தது. ‘அருகில் நடந்து செல்லும் இளம் பெண்ணின் முகத்தைக் காணவிடாமல் இன்னமும்ஏன் காத்திருக்கிறாய்? கலைந்து போய்விடேன்' என்று மனம் இருளைச் சாடியது. மிக நெருங்கி, அந்தப் பெண்களை விரல் தொடும் தூரத்தில் நாங்கள் நடந்துகொண்டிருந்தோம்.
அந்தப் பெண் பாடிய பாடலில் வந்த ஆனைச்சாத்தன் எனும் வயலில் தென்படும் கீச்சாங்குருவிகளில் ஒன்றாவது நேரில் எதிர்ப்படக்கூடாதா, அதைப் பார்ப்பதற்காக அவள் தன் முகத்தைத் திருப்பமாட்டாளா என்று ஆதங்கமாக இருந்தது. நதியில் ஓடம் செல்வதுபோல பாடல் வரிகள் மாறிக் கொண்டேயிருந்தன. இரண்டு நிழல் களைப்போல, அவர்கள் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள்.
முன்னறியாத சுகந்தம் அவள் கூந்தலிலிருந்து, தரையிறங்கி வழிந்து கொண்டிருந்தது. அவள் இந்த உலகத் தையே தன் நறுமணத்தால் மூழ்கடித்து விடப் போகிறவளைப்போலச் சென்று கொண்டிருந்தாள். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகே வந்துவிட்டோம்.
‘அம்பரமே, தண்ணீரே, சோறே, அறஞ்செய்யும் எம்பெருமான் நந்த கோபாலா' என அவள் கண்ணனைப் பாடிக்கொண்டிருந்தாள். ஓடி விளையாடும் குழந்தையைத் துரத்திப் பிடிக்கும் தாய் போல, அத்தனை நெருக்கமான பாவனை.
விடிகாலையின் வெளிச்சம் உலகின் காட்சிகளைப் புலப்படுத்தத் துவங்கிய போது, நாங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரின் மடவார் வளாகத்தின் அருகே வந்திருந் தோம். வெளிச்சம் உலகின் கருணை போல வழிந்தோடி, அவர்களின் சௌந்தர்யத்தை வெளிப்படுத்தியது. எத்தனை அழகு... எத்தனை சாந்தம்... சகோதரிகளைப்போலத் தெரிந்த இருவரும் தாயும் மகளும் என்பது அவர்களின் வயதில் தெரிந்தது. இருவரும் ஈரக்கூந்தலில் கனகாம்பரப் பூவைச் சூடியிருந்தார்கள். நெற்றியில் சந்தனக் கீற்று. அரக்கு சிவப்பில் மகள் தாவணி அணிந்திருந்தாள். தாயின் புடவை வெளிர் ஊதா நிறத்தில் பூக்கள் நிறைந்திருந்தது. இருவரது கண்களும் வெண்சோழியை நினைவுபடுத்தின.
விடிகாலை வெளிச்சத்தில் கோயிலின் கோபுரம், பறவை தன் சிறகை விரிப்பதுபோல மெல்ல மேலே எழுந்துகொண்டிருந்தது. சிறுவர்கள் விளையாட்டு முடிந்து, விட்டுச்சென்ற செப்புச் சாமான்களைப்போல நகரின் வீடுகளும் தெருக்களும் சிதறிக் கிடந்தன.
புழுதி படிந்த சாலையில் நின்றபடி இருவரும் கோபுரத்தைப் பார்த்துக் கை கூப்பினார்கள். பிறகு, பெருமூச்சிட்டபடி அதே இடத்தில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து கோபுரத்தை வணங்கினார்கள். எழுந்தபோது அவர்கள் இருவரின் கண்களும் கலங்கியிருந்தன. அழுகிறார்களா? எதற்காக? என்ன மனக்குறை? தங்கள் அழுகையை பூமியைத் தவிர யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் சர்வாங்கமாக விழுந்து வணங்கினார்களா? என்ன துக்கமது? அவர்கள் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளவே இல்லை.
எதற்காக இவர்களைப் பின்தொடர் கிறேன்? வெறும் இனக்கவர்ச்சி மட்டும் தானா? காரணம் புரியவில்லை. ஆனால், சுண்ணாம்புக்கல்லை தண்ணீரில் போட்டதும் கொதிக்கத் துவங்குவதுபோல, மனதில் ஏதேதோ கற்பனைகள் கொதிக்கத் துவங்குகின்றன.
நாங்கள் குற்ற உணர்ச்சியோடு அந்தப் பெண்களைப் பார்த்தபடி இருந்தோம். தரையிலிருந்து எழுந்து கொண்ட பிறகு, முதன்முறையாக அந்த இளம்பெண் எங்களைப் பார்த்துச் சிரித்தாள். அதைச் சிரிப்பு என்று சொல்ல முடியாது. குடத்துத் தண்ணீர் சத்தமின்றித் ததும்புவதுபோல ஒரு புன்னகை அவள் உதட்டில் இருந்து ததும்பிச் சிந்தியது.
‘சிற்றஞ்சிறுகாலை வந்துன்னை சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும்' எனத் திரும்பவும் திருப்பாவை வரிகள் நீண்டன. அவர்கள் மிக வேகமாக தேரடி வீதியைக் கடந்து கோயிலின் உள்ளே போய் விட்டார்கள்.
நாங்கள் கோயிலுக்குள் போனபோது, நூற்றுக் கணக்கில் பெண்கள் ஈரக்கூந்தலும் அவசர நடையுமாகப் பிராகார வெளியில் கடந்து சென்று கொண்டிருந் தார்கள். கோயில் பூக்கடையருகே நண்பன் தன் அண்ணியைக்கண்டு விட்டதால் அவர்களோடு நின்று பேசிக்கொண்டிருந்தான். இதற்கிடையில், நிமிஷத்தில் அந்த இளம்பெண் எனது பார்வையிலிருந்து நழுவி மறைந்திருந்தாள்.
பிராகாரத் தூண்களில் எரிந்து கொண்டிருந்த சுடர்கள் என்னைப் பரிகசிப்பதுபோல தலையாட்டிக் கொண்டிருந்தன. கோயில் முழுவதும் தேடிச் சலித்தும் அவளைக் கண்டறிய முடியவில்லை. முள் முறிந்து காலில் தங்கிவிட்டது போலொரு வலி. ஆத்திர மாக வந்தது. உறவும் பிரிவும் நிமிஷத்தில் நடந்தேறி முடிந்துவிட்டதா?
பிரகாசமான சூரிய வெளிச்சம் தெருவில் ஏறியிருந்த போதும் பிராகாரத்தினுள் இருளின் நடமாட்டம் ஒடுங்கவேயில்லை. மனம் வெளவாலைப்போலத் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தது.
முரசின் சத்தமும் துளசி வாசமும் நிலையில்லாமல் அசைந்து கொண்டிருக்கும் தீபங்களையும் தாண்டி கோயில் முழுவதும் சுற்றியலைந்தேன். அவள் யாழி மண்டபம் கடந்து வெளிவாசல் நோக்கிப் போய்க்கொண்டிருந்தாள். அருகே போவதற்குள் வெளியேறியிருந்த அவள், தன் கையிலிருந்த சில்லறை நாணயங்களை வயதான பிச்சைக்காரர் ஒருவருக்குக் குனிந்து போட்டுவிட்டு நிமிர்ந்தபோது, கூடையிலிருந்து ஒரு துளசிக் காம்பு தவறி மண்ணில் விழுந்தது. அவள் பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் துவங்கியிருந்தாள்.
அவசரமாகப் புழுதியில் கிடந்த அந்தத் துளசியை எடுத்து நாக்கிலிட்டு மென்றேன். சாற்றை விழுங்க முடியவில்லை. திடீரென மனதின் அடியாழத் திலிருந்து மௌனியின் சிரிப்புச் சத்தம் கேட்டது. இந்தச் சம்பவங்கள், நிகழ்வுகள் போலத்தானே மௌனியின் ‘அழியாச் சுடர்' கதையிலும் வருகின்றன. அந்த வரிகள் மனதில் நீந்தத் துவங்கின.
'அவள் பிராகாரத்தைச் சுற்றிவந்து கொண்டிருந்தாள். 'பின்தொடர்' என மனத்தில் மறுக்க முடியாது தோன்றியது. உலகின் நிசப்தத்தைக் குலைக்க அவளுடைய சலங்கைகள் அணிந்த அடிச்சுவடு இன்றி முடியாது போலும். கால் சலங்கை கணீர் என்று ஒலிக்க நடந்து சென்றாள். தூணில் ஒன்றி நின்ற யாளியும் மிக மருண்டு பயந்து கோபித்து முகம் சுளித்தது. பின்கால் களில் எழுந்து நின்று பயமூட்டியது.'
உடனடியாக மௌனியைத் திரும்ப வாசிக்க வேண்டும் என்று தோன்றியது. அவசரமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெனிங்டன் நூலகத்துக்குச் சென்றேன். விடிகாலையில் யார் நூலகத்தைத் திறந்து வைத்திருக்கப் போகிறார்கள்! நூலகம் திறக்கும் வரை காத்திருந்தேன். மௌனியைத் தேடி எடுத்து வாசித்தபோது கண்முன்னே ‘அழியாச் சுடர்' கதை உருப்பெற்று நடந்தேறியது போலிருந்தது. கதையின் நுட்பமும், மொழியும், பெயரில்லாத அந்தக் கதாபாத்திரமும் வாசிக்க வாசிக்க... நெருக்கமாகத் துவங்கியது. அதன் பிறகு மௌனி... மௌனி... என அரற்றத் துவங்கினேன்.
பின்னொரு நாள் திருவெண்காட்டில் உள்ள குளமொன்றில் கோபுர நிழல் அசைந்துகொண்டிருப்பதைக் கண்டபோது, மௌனியின் ‘அழியாச்சுடர்' கதையில் வரும் ஒரு வாசகம் மனதில் அலையாடியது.
எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?
உடலில் ஓடும் ரத்தத்தில் வெள்ளை, சிவப்பு அணுக்களைப்போல கதைகளும் ஏதேதோ நிறங்களில் அணுக்களாக மாறி ஓடிக்கொண்டிருக்கின்றன. நாம் அறியாமல், நம் உடலில் ஓடும் அரூப நதியல்லவா குருதி!
தமிழின் தனித்துவமான எழுத்தாளரான மௌனி, சிதம்பரத்தைச் சேர்ந்தவர். இயற்பெயர் மணி. 'மணிக்கொடி' இதழில் எழுதத் துவங்கி, 'கசடதபற' இதழ் வரை கதைகள் எழுதியவர். கணிதத்தில் பட்டம் பெற்றிருந்த அவருக்கு இசையி லும் தத்துவத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு.
இவரது சிறுகதைகள் 'மௌனி கதைகள்' என்ற பெயரில் வெளியாகியுள்ளன. கதாபாத்திரங்களின் அன்றாட உலகை விவரிப்பதைவிடவும் அவர்களது மனவுலகின் அரிய தருணங்களை வெளிப்படுத்துவதே இவரது பலம்,. இவர் இருபத்துநான்கு கதைகள் மட்டுமே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெளனியின் படைப்புக்களின் இலக்கிய இடம்-ஜெயமோகன்

ஜெயமோகன்

மெளனியும் தமிழிலக்கியs சூழலும்

மெளனியின் சிறுகதைகளின் தொகுப்பில் அவரைப்பற்றி புதுமைப்பித்தன் சொன்ன வரிகள் எடுத்து தரப்பட்டுள்ளன. ' தமிழ் மரபுக்கும் போக்குக்கும் புதிதாகவும் சிறப்பாகவும் வழிவகுத்த்வர் ஒருவரை சொல்லவேண்டுமென்றால் மெளனி என்ற புனைபேரில் எழுதிவருபவரை சொல்லவேண்டும். அவரை தமிழ் சிறுகதையின் திருமூலர் என்று சொல்லவேண்டும். கற்பனையின் எல்லைக்கோட்டில் நின்று வார்த்தைக்குள் அடைபடமறுக்கும் கருத்துக்களை மடக்கிக் கொண்டுவரக்கூடியவர் அவர் ஒருவரே ' இக்குறிப்பில் மெளனி , சிறுகதையின் திருமூலர், கற்பனையின் எல்லைகோடு ஆகிய சொற்கள் அடிக்கோடிடப்பட்டுள்ளன. மெளனியைப்பற்றி கடந்த ஐம்பது வருடங்களில் உருவாகியுள்ள எல்லா சாதக மதிப்பீடுகளுக்கும் அடிப்படையாக அமைந்தவை இந்த வரிகளே.

மறுபக்கமாக இரு தரப்புகள் உள்ளன. ஆரம்பகால மார்க்ஸிய விமரிசனத்தின் யந்திரவாதக் குரலை ஒலித்த கைலாசபதி மெளனியை மேட்டிமைவாதம் ,இருண்மைவாதம் ,குறுங்குழுவாதம் ஆகியவற்றின் அடையாளமாக கண்டார். தி க சிவசங்கரன் அக்குரலை எதிரொலித்தார். கு அழகிரிசாமி மெளனி மொழியை வைத்துப் பம்மாத்து செய்பவர் அவரது எழுத்து உள்ளீடற்றது என்று சொன்னார்.

மெளனி பற்றிய மதிப்பீடுகள் இவ்விரு எல்லைகளில்தான் பொதுவாக உள்ளன. இவை ஒன்றால் ஒன்று தூண்டப்படுபவை என்பதே உண்மை. மெளனி பற்றி ஒப்புநோக்க அதிகமான விமரிசனங்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன.முதற்கட்ட விமரிசகர்களில் சி சு செல்லப்பா அதிகமாக எழுதியுள்ளார். செல்லப்பாவின் ஆய்வு முறை அவரே சொன்னதுபோல அலசல் விமரிசனம். அலசல் என்பது அவரை பொறுத்தவரை மேற்கத்திய அழகியல் கொள்கைகளை ஒட்டி வடிவங்களையும் மொழியையும் ஆராய்வதே . அவ்வகையில் மெளனி பற்றிய அவரது ஆய்வுகளின் முக்கியத்துவத்தை மறுக்க முடியாது. ஆனால் ஏன் மெளனி முக்கியமானவர் என்ற கேள்விக்கான பதிலாக செல்லப்பாவிடம் புதுமைப்பித்தன் சொல்லிய வரிகளின் எதிரொலிகளையே காணமுடியும். மெளனி முன்வைத்த வாழ்க்கைநோக்கு காந்தியவாதியான செல்லப்பாவுக்கு சற்றும் ஏற்புடையதாக இருக்க முடியாது. மெளனியின் கதாபாத்திரங்கள் உள்முகமாக திருப்பபட்ட போக வேட்கை கொண்டவை. உலகியலே அவற்றின் வலிமை. செல்லப்பா இலட்சியவாதி. மெளனி உணர்ச்சிகளின் சலனநிலைகளை மட்டுமே ஆராய்ந்தவர் செல்லப்பா தருக்கம் மிகுந்தவர், அறிவார்ந்தவர் .செல்லப்பா மெளனியில் எதைக் கண்டார் என்பது புதிரே. மெளனியின் சாரம் கண்டவர் ,அதை அங்கீகரித்தவர் எப்படி பி எஸ் ராமையாவை மாபெரும் படைப்பாளியாக காணமுடிந்தது ?

மெளனியை தொடர்ந்து குறிப்பிட்டு அவரது இலக்கிய இடத்தை உருவாக்கியவர் க நா சுப்ரமணியம். ஆனால் அவர் வழக்கம்போல மெளனியைப்பற்றிய ஆய்வு எதும் மேற்கொள்ளவில்லை. மெளனியைப்பற்றிய இன்றைய பிரமிப்பை உருவாக்கியவர் பிரமிள். மெளனி கதைகளுக்கு அவர் எழுதிய புகழ்பெற்ற முன்னுரை புதுமைப்பித்தனுக்குப் பிறகு மெளனிக்கு அளிக்கப்பட்ட மிகச்சிறந்த புகழாரம். ஆனால் பிரமிளின் விமரிசனம் மெளனியின் இருண்மைத்தன்மையை மீபொருண்மை [மெட்ட ஃபிசிக்ஸ்] நோக்கில் மேலும் அடர்த்தியாக்கவே உதவியது. மெளனி கதைகளைப்பற்றிய பல அழகிய ,அதேசமயம் தெளிவற்ற சொல்லாட்சிகளை பிரமிள் உருவாக்கி அவற்றை மெளனியைச்சுற்றி தேவதைச்சிறகுகளுடன் பறக்கவிட்டார். இக்கட்டுரை அவரது பிற்கால மனமாற்றங்களுகேற்ப திருத்தப்பட்டு 'தமிழின் நவீனத்துவம் ' என்ற விமரிசனத்தொகையில் சேர்க்கப்பட்டது .மெளனி குறித்த சுந்தர ராமசாமியின் மதிப்பீடு பல இடங்களிலாக சிதறிக்கிடக்கிறது. ஆனால் அது அதுவரையிலான மதிப்பீடுகளின் எளிய எதிரொலியே. சுந்தர ராமசாமியை கவர்ந்தது மெளனியின் வடிவம்தான். அதாவது வடிவமாக மாறாத சொற்தீற்றல்களினாலானதும் வாசகனை மிகவும் கற்பனைக்குத்தள்ளுவதுமான வடிவம் . அதை ஒட்டியே அவர் மெளனி குறித்த புகழ்மொழிகளை சொல்லியிருக்கிறார். மெளனியை பற்றிய வெங்கட் சாமிநாதனின் விமரிசனம் நமது பக்தி இலக்கியங்களின் உணர்ச்சியை வெளிப்படுத்துவது . பிற்காலத்தில் எம்.டி.முத்துக்குமாரசாமி அமைப்பியல் நோக்கில் மெளனியைப்பற்றி கடுமையான விமரிசனத்தை முன்வைத்தார். மெளனியின் மொழி அகவயமானது எனவே மானுட அறத்தை கையாள திறனற்ற மொண்ணை மொழி என்பது அவரது முக்கியமான குற்றச்சாட்டு

முதன்மையான முன்னோடிப்பர்வை

மெளனி மீதான முதல் முக்கிய விமரிசனம் இலக்கிய சிந்தனை அமைப்புக்காக திலீப் குமாரால் எழுதப்பட்டு அன்னம் விடுதூது இதழில் அச்சான கட்டுரைதான், அது பிறகு நீர்க்கப்பட்டு 'மெளனியுடன் கொஞ்ச தூரம் ' என்றபேரில் நூலாக வானதி வெளியீட்டாக வந்தது. நமது விமரிசன மரபில் மிக மிக முக்கியமான கட்டுரைகளில் ஒன்றாக இக்கட்டுரையை நான் காண்கிறேன். இக்கட்டுரையின் பல பகுதிகளை என்னால் மனப்பாடமாகவே சொல்லமுடிவதை இப்போது இதை எழுதும்போது சற்று ஆச்சரியத்துடன் உணர்கிறேன். இலக்கிய விமரிசனக்கட்டுரைகள் சலிப்பூட்டும் என்ற பொது நம்பிக்கைகயி மீறி இக்கட்டுரை அடர்த்தியான ஆனால் மிக ஆர்வமூட்டும் நடையில் எழுதப்பட்டுள்ளது.மெளனியை மிதமிஞ்சி பாராட்டுபவர்களையும் அவரை முற்றாக நிராகரிப்பவர்களையும் நிராகரிக்கும் திலீப் குமார் ' என்னைப்பொறுத்தவரை ஒர் தேர்ந்த வாசகன் இலக்கியத்தை அணுகும்போது பரபரப்புக்கோ புல்லரிப்புக்கோ ஆளாகமாட்டன் என்றே நம்புகிறேன். மாறாக இலக்கியத்தின் வரையறைகளையும் வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான இடைவெளியையும் உணர்ந்தவனாகவே அவன் இருப்பான். ' என்று மிக சிறப்பாக வகுத்துக்கூறி தன் ஆய்வைத் துவங்குகிறார்.

பல்வேறு வடிவங்களில் எழுதிய ,பல்வேறு சூழல்களை சித்தரித்த, பல்வேறு தத்துவ நோக்கை வெளிப்படுத்திய படைப்பாளிகளை ஒரேசமயம் நம்மால் பொதுவாக ஏற்கவும் ரசிக்கவும் முடிவது ஏன் என்று வினவும் திலீப் குமார் '... இவர்களுடைய இலக்கியசெயல்பாடுகளுக்கு பின்னிருந்து இயக்கிய் ஓர் அற இயல்புதான் அது ' என்று அதை அடையாளம் காண்கிறார். அதேசமயம் அந்த அற இயல்பு ' ...அதன்னளவில் தன்மையற்றது ' என்று சொல்லி அது அவ்வெழுத்தாளன் செயல்பட்டகாலம் அவனது நோக்கு அவனது படைப்பியல்பு ஆகியவற்றுக்கு ஏற்ப அவனுள் முளைப்பது என்றும் சொல்கிறார். இப்பார்வையினால்தான் ஒரு மார்க்ஸிய எழுத்தாளனும் மார்க்ஸிய எதிர்ப்பு எழுத்தாளனும் தன்னை ஒரேசமயம் வசீகரிப்பதை புரிந்துகொள்ளமுடியும் என்கிறார். இக்கோணம்குறித்த விமரிசனம் ஒருபக்கம் இருக்கலாம். ஆனால் இலக்கிய விமரிசனத்துக்கு இப்படி தெளிவான ஓர் சுய அடிப்படையை வகுத்துக் கொண்டு எழுதமுற்பட்ட விமரிசகர்கள் நம்மிடையே குறைவுதான்.

மெளனி குறித்த சில மதிப்பீடுகளை திலீப் குமார் நிராகரித்துவிடுகிறார். அ. மெளனி முன்னோடியே இல்லாதபடைப்பாளி என்ற பிரபலக் கூற்றை மறுத்து பொதுவாக படைப்பிலக்கியவாதிகள் எவருக்குமே முழுமையான முன்னோடி இருப்பதில்லை, முன்னோடிகளே இல்லாமலும் இருப்பதில்லை என்கிறார். ஆ. மெளனி இந்திய மாயாவாதத்தாலோ அல்லது அதேபோன்ற ஏதேனும் மேற்கத்திய தத்துவத் தரப்பாலோ ஆட்கொள்ளப்பட்டவரல்ல என்று சொல்லி மெளனி தன் கதைகளின் வழியாக கொள்ளும் தத்துவ விசாரம் திட்டமற்றது என்று சொல்லலாம் என்று வகுக்கிறார். இ] மெளனி ஒரு சனாதனி என்ற கூற்றை மறுத்து மெளனி எப்போதுமே தன்னை தன்னுள் மட்டுமே காணமுயன்ற மனிதர் என்று வகுக்கிறார். ஈ] மெளனியின் கதைகள் சிதைந்த அல்லது புகைமூட்டமான வடிவம் கொண்டவை என்பதை மறுத்து அவை மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட வடிவம் கொண்டவை என்கிறார்.

மெளனியின் இயல்புகளாக திலீப் குமார் கூறுவனவும் முக்கியமான கருத்துக்களே. அ.] மெளனிக்கு பின்னோடிகள் இல்லை. அவரது கலை குறுகிய வட்டத்தில் நிகழ்ந்து தன்னை முழ்மை செய்துகொண்ட ஒன்று ஆ ]மெளனியின் கதைகளில் முக்கிய அனுபவங்களாக நாம் காண்பவை வாழ்க்கையின் நிச்சயமின்மை , உறவில் உள்ள நிலையின்மை மற்றும் மரணம் உருவாக்கும் பொருளின்மை இ] மெளனியின் கதைகள் குறுகலான தீவிரமாக கருக்களை கொண்டிருப்பதனால் அவை எளிதாகவே வடிவம் சார்ந்த ஒழுங்கை கொண்டுவிடுகின்றன. ஈ]மெளனியின் பாத்திரப்படைப்பு எப்போதுமே புறவயமான அடையாளங்களற்ற ஒருவகை பிரக்ஞை நிலைகளாகவே உள்ளது உ]மெளனியின் மொழிநடை அவற்றின் ஒலிநயம் மற்றும் பூடகத்தன்மை காரணமாக வாசகனை கவர்வது ஊ] மெளனியின் மீது காஃப்காவின் செல்வாக்கு கணிசமானது. மெளனி காஃப்காவை தனக்காகவே எழுதிய எழுத்தாளர் என உணர்ந்தார்.

மெளனியின் புறவுலகம்

தமிழில் நான் தனிப்பட்ட இலக்கிய வாதிகளைப்பற்றி விமரிசனங்கள் எழுத தொடங்கியபோது எவரைப்பற்றியும் இப்படி எனக்கு முன்னோடியாக அமையக்கூடிய கட்டுரை ஒன்று எழுதப்பட்டிருப்பதைக் காணவில்லை . ஆகவே என் விமரிசனத்தை திலீப்குமாரிலிருந்து மேலதிக வினாக்களை எழுப்பியபடித்தான் துவங்க முடியும்.

முதலில் மெளனியின் புறவுலகம் குறித்த கேள்வியை முதலில் விவாதிக்கவேண்டும். மெளனியின் உலகில் புறவுலகம் என்ற ஒன்று இல்லை என்பது பொதுவாக சொல்லப்படும் குற்றச்சாட்டு. இதை ஓர் அங்கீகாரமாக ஏற்று ' புறவுலகமே இல்லாத ' கதைகளை எழுதமுற்படும் சிலர் தொடர்ந்து வந்தனர். இலக்கியப்படைப்புக்கும் புறவுலகுக்கும் இடையேயான உறவு என்ன ? நமது ஆசைகளும் ,கனவுகளும் , மனப்பதிவுகளும் கொண்டு உருவானது அகவுலகம். இவ்வக உலகுக்கு வெளியே இதன் விதிகளுக்கு கட்டுப்படாமல் தன்னுடைய சொந்த விதிகளின்படி இயங்கும் பொருண்மை உலகமே புற உலகம். இவை இரண்டுமே ஒருவகையில் தத்துவார்த்தமான உருவகங்களே. புறவுலகை அறியும் மூளை பொருண்மையுலகின் கூறுதான். பொருண்மையுலகின் அத்தனை சிறப்பியல்புகளுமே மூளையின் நரம்புகளின் இயல்புக்கு ஏற்ப அறியப்படுபவையே. நம் மரபின் ஆரம்பகாலம் முதல் இவ்விரு உலகங்களின் பரஸ்பர பாதிப்பு, பரஸ்பர பிரதிபலிப்பு குறித்த விவாதங்கள் நடைபெற்றுள்ளன. மேற்கே கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் என்ற பேரில் நடைபெற்ற விவாதமும் இத்தகையதே. அவற்றை இங்கே நினைவுகூர்ந்துகொள்ளலாம். அகவுலகம் என்பது புறவுலகின் பிரதிபலிப்பே என்பதும் புறவுலகம் அகவுலகின் மீது தான் பிம்பம்கொள்கிறது என்பதும் படைப்புலகிலும் செல்லுபடியாகும் விதிதான்.

இப்படிச் சொல்லலாம். பூமணி போன்ற இயல்புவாதப் படைப்பாளியின் படைப்புலகில் புறவுலகம் மட்டுமே உள்ளது . அதே நிலப்பகுதியை எழுதும் கோணங்கியின் உலகில் உள்ளது அகவுலகம் மட்டுமே . ஆனால் பூமணியின் உலகம் அவரது கதாபாத்திரங்களின் அகவுலகால் காணப்படுவது, அவரது படைப்புமனதால் சித்தரிக்கபடுவது . கோணங்கியின் அகவுலகம் முழுக்க அவரது புறவுலகிலிருந்து கொள்ளப்பட்ட பிம்பங்கள்தான். வரண்ட கரிசல்நிலம், பனைமரங்கள், மொட்டைமரங்கள் ஆகியவற்றாலானது அந்த அகம் .[ அவரது படைப்பூக்கம் கொண்ட ஆரம்ப கால கதைகளை வைத்து. காதில் விழுந்ததையெல்லாம் சொற்குவியலாக மாற்றும் இக்கால படைப்புகளை நான் பொருட்படுத்தவில்லை.] இரு தளங்களும் ஒரு போதும் ஒன்றையொன்று உதறாதவை .நித்ய சைதன்ய யதியின் சொற்களில் கடும்பசியுடன் ஒன்றை ஒன்று உண்ண ஆரம்பித்த இரு அமீபாக்கள் அவை.

மெளனியின் சித்தரிப்பு முறை அகவுலகை முன்னிறுத்தியது என்று சொல்வதே பொருத்தமானது. அவரது எழுத்தின் தேவை அப்படிப்பட்டது. அகவுலகை எழுதவே முடியாது, ஆகவே அது படைப்பாளியின் வேலை அல்ல என்று நம்பிய ஜி நாகராஜனின் தேவைக்கு நேர் மாறானது அது. அகவுலகு சார்ந்த எழுத்து என்பதனால் மெளனிக்கு சிறப்போ இழிவோ வருவதில்லை . புறவுலகு முன்வைக்கப்படும் ஜி நாகராஜன் போன்றவர்களின் படைப்புகள் படிக்கப்படும்போது அதற்கு அடிப்படையாக அமைந்த அகவுலகம் வாசகனால் கற்பனை செய்யப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது. அதேபோல மெளனி கதைகளின் புறவுலகம் கற்பனை மூலம் விரித்தெடுக்கப்படலாம். அது நம் சூழலில் போதிய அளவில் செய்யப்படவில்லை என்பதே மெளனி படைப்புகள்மீது தேங்கியுள்ள புகைமூட்டத்துக்கு முக்கியமான காரணம்.

மெளனியின் கதாபாத்திரங்களை அடையாளம் காணும் முயற்சி செய்யப்பட்டுள்ளது . பிற்கால ஆய்வுகளில் பிரமிள் மெளனி தன் கதாபாத்திரங்களை தன் சாயலிலோ தன் தோற்றம் மற்றும் இயல்பு என்று அவர் நம்பிய சாயலிலொ உருவாக்கியிருக்கிறார் என்று ஆராய்ந்து சொல்லியுள்ளார் . அது உண்மைதான். மெளனி போன்ற அகவய எழுத்தாளர் தன்னைத்தவிர வேறு எவரையுமே கவனித்திருக்க வாய்ப்பில்லை . லா.ச.ரா போன்ற அகவயநோக்குள்ள எழுத்தாளர்களிடமும் இதைக் காணலாம். மெளனியின் பெண் கதாபாத்திரங்களும் 'பெண் ' என்ற உருவகங்களாகவே தெரிகிறார்கள். குணச்சித்திர அம்சமே அவர்களிடம் இல்லை . அவை ஆண்கதாபாத்திரங்களின் மனதில் உருவாகும் பெண் முகங்கள் மட்டுமே. இன்னும் சொல்லப்போனால் முதிரா இளமைக்காலத்து ஆண்மனதில் உருவாகும் பெண்களைப்போன்றவர்கள் அவர்கள். அழகாலும் , காதலாலும் தவிர வேறு எதனாலும் அடையாளப்படுத்தப்படாதவர்கள் .

மெளனி எழுதும் சூழல் ஒரு கோவில் நகரம் [சிதம்பரம்] ஒரு பெரு நகரம் [சென்னை] ஆகிய இரண்டும்தான். இந்த இடங்களிலிருந்து மன அவசம் காரணமாக சென்று மீளக்கூடிய, அல்லது கற்பனை செய்யக்கூடிய சில இயற்கைக் காட்சிகளின் இடங்கள். மெளனியின் கதாபாத்திரங்கள் கல்வி கற்க நகருக்கு சென்று மீள்கிறவர்கள் . தங்களை சிறு கோவில்நகரில் இயல்பாக உணர்பவர்கள் . மெளனியின் கதைகளின் இடம் பலசமயம் இருண்ட கோவில். அனேகமாக முகப்பு. அவருக்கு அந்தி மீது மோகம் அதிகம் உள்ளது. இவை மெளனியின் புகழ்பெற்ற கதைகளில் உள்ள சூழல்கள். அவரது சில புறவயமான கதைகளில் உள்ள சூழல்கள் திடமானவை. உதாரணமாக சாவில் பிறந்த சிருஷ்டி மற்றும் குடும்பத்தேர் . இங்கே சம்பிரதாயமான ஒரு பிராமணக் குடும்பச்சூழல் தெளிவாகிறது. மேலும் அதன் மீது மெளனிக்கு இருந்த பற்றும்.

இத்தகவல்களிலிருந்து மெளனியின் புறவுலகை ஓரளவு ஊகிக்க முடியும் . ஒரு நடுத்தர கோவில் நகரில் பிறந்து வளர்ந்து ,சம்பிரதாயமான குடும்ப சூழலில் முற்றும் பொருந்தி, அதன் பாதுகாப்பபையும் நிலைத்த தன்மையையும் ஏற்றுக் கொண்டு வாழும் ஒருவன் கல்வியின் நிமித்தம் பெருநகரம் ஒன்றுக்கு செல்கிறான். கல்வி மூலம் வேறு உலகங்களில்ன் மன ஓட்டங்களை அடையாளம் காண்கிறான். அவற்றில் ஈடுபட விரும்பினாலும் அது அவனுக்கு முடியவில்லை. மீண்டுவந்து அவ்வுலகை தன் அந்தரங்கமான பகற்கனவாக வைத்திருக்கிறான். அப்பகற்கனவுகளில் அவன் வாழும் நிஜ உலகமும் அவன் கற்ற கற்பனை உலகும் முயங்கும் போது ஓரு தனி உலகம் உருவாகிறது. அதுதான் மெளனியின் படைப்புகள் காட்டும் உலகம். மெளனி கதைகளை குறுக்கி விடுவதற்காக இதை சொல்லவில்லை . அவரது புறவுலகை சுருக்கமாக இப்படி வகுத்தபிறகு மேலே செல்வது வசதியானது .

இதன் நீட்சியாக மெளனியின் கதாநாயகனின் பிரச்சினையை பொதுமைப்படுத்திப் பார்க்கலாம். நமது சூழலில் நடுத்தரவற்கத்தை சேர்ந்த , கிராமம் அல்லது சிறு நகரை சேர்ந்த இளைஞர்களுக்கு கல்வி மூலம் புது உலகம் திறந்து கிடைக்கும்போது ஏற்படும் கலாச்சார அதிர்ச்சிகளில் ஆண்பெண் உறவு சார்ந்த திகைப்பு முக்கியமானது. [ அடுத்தபடியாக நிலப்பிரபுத்துவமரபு சார்ந்த ஏற்றத்தாழ்வுகளும் ஆசாரங்களும் முதலாளித்துவ கல்விச்சூழலில் கொள்ளும் மாற்றங்களை எதிர்கொள்வது . ஊரில் பண்ணையாரின் மகனான குட்டிப் பண்ணையாரை கல்லூரியில் டேய் போட்டுக் கூப்பிடும் நிலை] இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் உடனே நினைவு கூரலாம். நமது வாழ்வில் பருவம் வந்த ஒரு ஆண் பெண்ணுடன் பேசுவதே கற்பனையில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் ஓர் அனுபவம். கணவன் மனைவி கூட ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள நள்ளிரவை மட்டும் தெரிவு செய்த ஒரு காலமும் இருந்தது, மெளனி அக்காலகட்டத்தை சேர்ந்தவர்.

நவீனக் கல்விக்குள் செல்லும்போது முதலில் ஏற்படும் பதற்றமும் பரவசமும் நிரம்பிய அனுபவம் பெண்களுடன் பழக நேர்வது. என் கல்லூரி முதல் வருடம் என்னிடம் முதலில் பேசிய பத்மா என்ற மூத்த வகுப்பு தோழியின் முகம் , அன்று அவள் அணிந்திருந்த உடை நகை அனைத்துமே எனக்குள் அழியா ஓவியமாக உள்ளன. அது எனக்கு முதல் காம அனுபவத்தை விட உக்கிரமானது. ஒருவேளை இந்த வாழ்க்கைச்சந்தர்ப்பம் என் தலைமுறையுடன் வழக்கொழிந்து போயிருக்கலாம். இரண்டாவது அனுபவம் கல்லூரியில் அக்காலத்தில் ஆங்கிலக் கல்வியின் ஒருபகுதியாக கற்பிக்கப்பட்ட ஆங்கில கற்பனாவாதக் கவிதைகள். காதலை வாழ்க்கையை விட மகத்தானதாக ,மரணத்துக்கு சமானமான பிரம்மாண்டம் கொண்டதாக, சித்தரித்துக் காட்டிய அக்கவிஞர்கள் என் இளம் மனதில் உருவாக்கிய புயல் மிகப் பெரியது. நடுத்தரக் குடும்பப் பழக்கம் காரணமாக என்னால் பெண்களுடன் பழக முடிந்ததில்லை. அப்போது தொடைகள் வெடவெடப்பதும் சிறுநீர் வந்து முட்டுவதும் மூளை ஸ்தம்பித்து போய்விடுவதும்தான் வழக்கம். நாகர்கோவில் கிறித்தவப் பெண்களுக்கு அப்பிரச்சினை இல்லை. சர்ச்சில் பலவகையான மனிதர்கள சந்தித்து பேசும் பழக்கம் அவர்களுக்கு இருந்தது. அவர்களை தொலைவில் நின்று பார்த்து பகற்கனவுகளை நெய்வதே எனக்குச் சாத்தியமானது . ஆங்கில கற்பனவாதக் கவிஞர்களின் உத்வேகம் மிக்க கற்பனைகள் அவற்றுடன் கலக்கையில் மனம் கொள்ளாத ஒரு தனி உலகம் உருவாயிற்று. அதற்குச் சமானமான உலகமே மெளனி எழுதுவது.

மெளனியின் கதாபாத்திரங்களில் பலவற்றுக்கு கலாசாலை மிக முக்கியமான இடம். அவற்றில் பயின்ற நாட்கள் வாழ்வின் திருப்புமுனைகள். காதலும் கலசாலையும் பல இடங்களில் கலந்தே வருகின்றன. கலாசாலையையும் காதலையும் நடுவயதில் நினைவுகூரும் கதாநாயகர்களினாலானது அவரது உலகம். காதலுக்காக ஏங்கிய காதலிக்க முடியாத மன அமைப்பை வளர்ப்பிலிருந்து பெற்றுக்கொண்ட அதனாலேயே காதலை கல்விமூலம் பிரம்மாண்டமாக வளர்த்து பகற்கனவுகளை நிரப்பிக் கொண்டவர்கள் அவர்கள். மெளனி உருவாக்கும் அகஉலகத்தின் புறம் இதுதான் என்றால் அது மிகையல்ல. இப்புறவுலகின் நேரடி வெளிப்பாடுதான் அவரது படைப்புலகம் என்றும் சொல்லவரவில்லை . ஆனால் இவ்விளைநிலத்திலேயே அவரது மனப்பிம்பங்கள் முளைக்கின்றன என்று மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்

பகற்கனவுகளின் வெளி

குடும்பத்தேரிலிருந்து இறங்க முடியாத , விரும்பாத , மெளனியின் தயக்கத்தின் விளைவாக அவரிடமிருந்து விலகிப்போனவற்றைப் பற்றிய மனக்கோலங்கள்தான் அவரது கதைகள். மெளனியின் படைப்புலகின் இந்த பகற்கனவுத்தன்மையை எப்படி அவரது முந்தைய வாசகர்கள், விமரிசகர்கள் பொருட்படுத்தாமல் விட்டார்கள் என்பது இன்றும் எனக்கு ஆச்சரியமாக உள்ளது . அவரது கதைகளின் தலைப்புகளே பகற்கனவுத்தன்மை கொண்டவை. பிரபஞ்ச கானம், அழியாச்சுடர், நினைவுச்சுழல், பிரக்ஞை வெளியில், மனக்கோட்டை... மெளனியின் கதைக்கருக்களில் மிகப்பெரும்பாலானவை பகற்கனவின் சில பக்கங்கள் என்று சொல்லத்தக்கவை. உதாரணமாக மனைவி நோயுறும்போது சிகிழ்ச்சைக்கு வரும் டாக்டர் மீது கணவன் காதல் கொள்கிறான். மனைவி இறந்து விடுகிறாள். நீண்ட காலம் கழிந்து அவனை சந்திக்கும் டாக்டர் அவனில் மனைவியின் நினைவுகள் நிரம்பியிருப்பதைக் கண்டு அதனாலேயே அவனை மணக்கிறாள். [ சிகிழ்ச்சை] தனியாக இருக்கும் ஒருவன் பக்கத்து வீட்டான் மனைவி தன்னை தேடி வருவாள் என கற்பனை செய்து வந்ததாகவே எண்ணி பரவசமும் பயமும் அடைகிறான் [மனக்கோலம்] இக்கதைகளின் பொதுவான பாணி மெளனியின் எல்லா கதைகளுக்கும் உள்ளது. இக்கதைகளின் நீட்சிகள் என்று சொல்லத்தக்க கதைகள் முறையே பிரக்ஞை வெளியில் மற்றும் சாவில் பிறந்த சிருஷ்டி.பகற்கனவுகளை சொல்லத்தான் மெளனியின் மொழிநடை பெரிதும் பிரயத்தனப்படுகிறது. பகற்கனவுகளின் ஒன்றோடொன்று ஏறிமுயங்கிச்செல்லும் பிம்பங்கள் மற்றும் முரண்பாடுகளினூடாகச் செல்லும் சலனகதி ஆகியவற்றை அவரது பலவீனமான மொழிப்பயிற்சி எதிர்கொள்ளமுடியாமல் போகும்போது உருவாகும் சிக்கலும் தயக்கங்களும் மீறல்களும்தான் அதன் தெளிவற்ற தன்மையை உருவாக்குகின்றன. அவை பகற்கனவுகளை ஊகிக்கச் செய்து வாசகக் கற்பனையைத் தூண்டுவதனால் அந்த பலவீனமான மொழியே கிளர்ச்சியடையவைக்கப் போதுமானதாக உள்ளது. அதாவது மெளனியை வழிபடும் வாசகன் இப்பகற்கனவுலகை மட்டுமே முக்கியமாக கண்டு பிற இலக்கியக் கூறுகளை எல்லா துறக்கச் சித்தமானவன்.

மெளனியின் பெண்கதாபாத்திரங்கள் பூஞ்சையான ஆண்மகனின் பகற்கனவில் உள்ள பெண்கள். ' பயங்கர வசீகரம் ' என மெளனி அவர்களைப்பற்றி சொல்லும்போது அடிக்கடி குறிப்பிடுகிறார். அவரது பெண்களுக்கு மண்ணில் கால்கள் பதிவதேயில்லை. ஒரு உக்கிர்மான பாடலை பாடி அப்படியே செத்துவிடுபவர்கள் [பிரபஞ்ச கானம்] ஆண்மகனின் துக்கத்தை விரும்பிச் சுமப்பவர்கள் [சிகிழ்ச்சை, பிரக்ஞை வெளியில்] பதிமூன்று வயதில் ஒருவனுக்கு காட்சியளித்த அதே 'பயங்கர வசீகரத்துடன் ' ஒன்பதாண்டுகள் கழித்தும் தோற்றம் கொள்பவர்கள் [அழியாச்சுடர்] ஏன் என்ற வினாவாக மட்டுமே முகத்தோற்றம் கொண்டு புகைச்சித்திரம் போல கலைந்து மறையக் கூடியவர்கள் [ ஏன்] மெளனியின் விபச்சாரிகள் அல்லது தாசிகள் பற்றிய சித்திரத்தில் அவரது ஆண்சார்ந்த பகற்கனவுதன்மையை வெளிப்படையாகக் காணலாம். அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் மீது மர்மம் நிரம்பிய காதலால் நிரம்பியிருக்கிறார்கள் [உறவு பந்தம் பாசம்] வாடிக்கையாளர்களிடம் உறவுகொண்டு அவர்களுடைய நுண்மையன சஞ்சலங்களை மிகுந்த ஆதுரத்துடன் உள்வாங்கி நெகிழ்பவர்கள்[ குடைநிழல்]

மெளனியின் ஆண்கதாபாத்திரங்கள் இப்பெண்கதாபாத்திரங்களை தங்கள் பகற்கனவுகளில் கண்டு உக்கிரமான பிரக்ைஞைத் ததும்பலை அடைகிறார்கள். பகற்கனவுகளுக்கு ஓர் அடிப்படைக் குணம் உண்டு , அவை அவற்றின் நாயகர்களின் வீங்கிய தன்னகங்காரத்தின் வெளிப்பாடுகளாக இருக்கும். தன்னகங்காரம் தன்னளவில் இயங்க முடியாது, ஏனெனில் எந்த சலனத்துக்கும் ஒரு முரணியயக்கமே அடிப்படை. ஆகவே அந்த தன்னகங்காரத்துக்கு எதிரான கோடாக தன்னிரக்கம் உருவாகிறது. இவை இரண்டும் ஒன்றின் வாலை ஒன்று விழுங்கும் பாம்புகள் போல ஒரு முடிவற்ற சுழற்சியில் இயங்குகின்றன. எல்லா பகற்கனவுகளின் உலகிலும் இந்த இயங்கியலே செயல்படுமென நான் எண்ணுகிறேன். மெளனியின் கதாநாயகர்களின் எண்ண அலைகள் இந்த இரு புள்ளிகளிடையே ஊசலாடிக் கொண்டிருப்பதைக் காணலாம். மெளனியின் ஆண் கதாபாத்திரங்களைப்பற்றி பேசும்போது பிரமிள் அவர்கள் எப்போதுமே சிவந்த நிறமும் தீர்க்கமான மூக்கும் ஒளிவீசும் கண்களும் கொண்ட அழகர்களாகவே வருகிறார்கள் என்கிறார். இதைப்பற்றி குறிப்பிடும் பிரமிள் இதற்குக் காரணம் மெளனியின் சாதிசார்ந்த பார்வையே என்று முடிவுக்கு வருகிறார். ஆனால் எல்லா பகல் கனவுகளிலும் கனவு காண்பவன் அழகனாகவே வரமுடியும். மேலும் அவனை பெண்கள் நேசிக்காமல் இருக்க முடியாது. அவனை அவர்கள் எல்லையற்ற துன்பத்துக்கும் ஆளாக்குவார்கள், ஏனெனில் அத்துன்பம் இன்பத்தின் பிறிதொரு வடிவம்.

மெளனி கதைகளின் பிராதனமான குணம் தன்னிரக்கம் என்பதை இந்தக் கோணத்தில்தான் புரிந்துகொள்ளமுடியும். தன்னிரக்கம் முற்றிய நிலையில் அர்த்தமற்ற அரற்றலாக மனம் விரிந்து பரவி செல்வதை சொல்லும் இடத்திலேயே மெளனியின் கலை அதன் உச்சத்தைக் கொள்கிறது. தன்னிரக்கத்தை உருவக்கிக் கொள்ள, வளர்த்தெடுக்க அவசியமான சந்தர்ப்பங்களை அவர் கதைகள் உருவாக்கிக் கொள்கின்றன. மரணம், காணாமல் போதல், நீண்டபிரிவுக்கு பின்னான சந்திப்பு, எப்போதைக்குமான விடைபெறல் என. சிந்தித்துப் பார்த்தால் மெளனி கதைகளின் உலகம் நமது முதிரா மனங்களை கொள்ளைகொள்ளுவதற்கெனவே உருவாக்கப்பட்ட எழுத்துக்களின் அதே உலகம்தான். ஆனால் அப்படைப்புகள் ஜோடனைகள் , மெளனியோ அவற்றை தன் இதய ரத்தத்தால் தான் எழுதுகிறார். அக்கதைகளில் உள்ள தந்திரங்கள் இவர் உலகில் இல்லை, மாறாக பகற்கனவுகளுக்குரிய மென்மையும் தூய்மையும் கொண்ட பாவனைகள்தான் உள்ளன. அவற்றை தன் வெளிப்பாட்டு முறைமூலம் செறிவு படுத்துகிறார் என்பதே மெளனியின் சாதனை.

மெளனியின் கதைகளைப் பற்றி பேசுகையில் என் நண்பர் மலையாள கவிஞர் பி.ராமன் சொன்ன உவமைதான் நினைவுக்கு வருகிறது. அடியில் தெளிந்தும் மேலே கலங்கியும் இருக்கும் தடாகம் . ஆகவே இக்கட்டுரை அடியிலிருந்து மேலே எழுவதாக அமைக்கப்பட்டுள்ளது. மெளனியின் சிறிய புறவுலகிலிலிருந்து விதையிலிருந்து முளைபோல அவரது பகற்கனவின் உலகம் எழுகிறது. அவரது இலக்கிய, தத்துவ வாசிப்பு மற்றும் இசைஞானத்துடன் தொடர்பு கொண்டு வளர்கிறது.

கற்பனாவாதத்தின் பின் தூறல்

மெளனி கதைகளின் பாழ்பட்ட வசீகரம் பற்றி விதந்தோதியவர்களில் எவருமே பிரிட்டிஷ் கற்பனாவாத கவிஞர்களுடன் அவருக்கு இருந்த உறவை ஏன் கவனிக்கவில்லை என்ற ஆச்சரியம் என்னை மீட்டுகிறது. மெளனியின் உலகுக்கு முதல் முன்னோடித்தளம் அதுதான். இலக்கிய விமரிசன ரீதியாக மெளனி கதைகளில் வரும் அந்தக் காதலை நாம் மேற்கத்தியக் கலைச்சொல்லான ' பிளாட்டானிக் லவ் '[Platonic Love] என்ற சொல்லால்தான் விவரிக்க முடியும். அச்சொல்லிலிருந்து நீண்டு அவர்கள் எளிதில் பிரிட்டிஷ் கற்பனாவத்க் கவியுலகை அடைய முடியும். ஏன் அடையவில்லை ?

நமது அகதுறை மரபு மிகப்பெரியது, ஒப்பிடும்போது மேற்கத்திய காதல்கவியுலகு சிறிதுதான். ஆனால் மெளனியை அது எவ்வகையிலும் பாதித்திருப்பதாக தெரியவில்லை. நமது அகமரபின் சிறப்பியல்புகள் என்ன ? இங்கே ஆண் பெண் இருவருமே சமானமான காம வேகத்துடன் உள்ளனர். இரண்டு அது மனமும் உடலும் ஒரேசமயம் பங்கெடுக்கும் ஒரு நிகழ்வு. ஆகவே நமது அகப்பாடல்களில் திரிபுநிலைக் காதல்கள் மிகக் குறைவு. கைக்கிளை பெருந்திணை என்ற இரு புறத்திணைகளுக்குள் அவை ஒதுக்கி நிறுத்தப்பட்டன. நமது அகத்துறைப்பாடல்களில் மனமும் இயற்கையும் ஒன்றையொன்று சரிசமமாக பொருள்படுத்துகின்றன., மனதின் உணர்வுகள் இயற்கையின் தோற்றங்களாகின்றன, ஆகவே மனம் இயற்கையின் படிமங்களினாலானதாக உள்ளது. அதாவது ஆணும் பெண்ணும், மனமும் உடலும், அகமும் புறமும் சரிசமானமாக இடம் பெறும் ஓர் உலகம் அது. அதன் இயல்பு சமநிலைதான் .அதனாலேயே அதில் எதுவுமே கட்டற்று பாய்வதில்லை .நமது அகமரபை செவ்வியல்தன்மை கொண்டது என்று வகுத்துக் கூறலாம். அதை தொடர்ந்து வந்த காப்பியங்களிலும் இதே செவ்வியல் தன்மை நீட்சி பெறுகிறது. நமது பக்தி இலக்கியங்களில்தான் அந்தச் செவ்வியல் சமநிலை இல்லாமலாகிறது. உணர்ச்சிகளின் பீரிடல் நிகழ்கிறது. அப்போதுகூட அவை கற்பனாவாதத்தின் கட்டற்ற தன்மையை கொள்ளவில்லை. அவற்றின் அடித்தளமாக சங்கச்செவ்வியலின் கடிவாளம் இருந்தபடியேதான் உள்ளது.

மெளனியின் காதலில் உடல் இல்லை. புறம் இல்லை, அகவுலகம் மட்டுமே தெரிகிறது. ஆணின் காமம் மட்டும்தான் அது . ஆகவே அது ஒரு திரிபு நிலைக் காதல் மட்டுமே. அந்த உத்வேகமே அதன் இயல்பு மீறிய நிலையிலிருந்து உருவானது தான். இந்த தீவிரத்தினை நாம் பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிதைகளில்தான் அதிகமும் காண முடிகிறது . பிளாட்டானிக் காதல் என்பதை இப்படி வரையறை செய்யலாம். பிளேட்டோ தன் உரையாடல்களில் [சிம்போசியம்] சொன்னதன்படி ஒவ்வொன்றுக்கும் அதன் உச்ச இலட்சிய வடிவம் ஒன்று உள்ளது. ஒவ்வொரு பொருளும் கருத்தும் அந்த உச்ச வடிவின் முழுமையற்ற பிரதிகளே. அப்படியானால் ஒரு தனிநபரின் அழகிலிருந்து தொடங்கும் காதலானது உண்மையில் பொதுவாக மனித அழகு நோக்கி விரிகிறது. பிரபஞ்சம் முழுக்க நிரம்பியுள்ள அழகு என்ற கருதுகோளை நோக்கி பரவுகிறது. அந்த கருத்தின் உச்ச எல்லை நோக்கியே அது சென்று முழுமை கொள்கிறது. உடலழகு, மன அழகு, ஆன்மீக அழகு, மீட்பு என ஒரு உருவகத்தை பிளேட்டோ உருவாக்குகிறார் என கூறலாம்.. இந்த கோணத்தில் ஆண் பெண் உறவினை பார்ப்பதே பிளாட்டானிக் காதல். அது போக நுகர்வு , பிள்ளைப்பேறு போன்ற இலக்குகள் அற்றது. அதாவது அது 'மிருக ' அம்சம் அற்ற காதல். எனவே உடலில் இருந்து விடுபட்டது. அகம் சார்ந்தது மீட்பை நோக்கமாக கொண்டது. பைரன், டென்னிசன், ஷெல்லி போன்ற கவிஞர்களின் உலகம் இத்தகைய காதலை முக்கிய பாடுபொருள்களில் ஒன்றாக கொண்டது. இது அவர்களுடைய கவித்துவ நோக்குக்கு -- கவிதை என்பது வலிமையான உணர்வுகளின் பொங்குதல் என்ற கோணத்துக்கு -- முற்றிலும் ஒத்துப் போகிறது. சென்ற தலைமுறையில் இவை நம் கல்லூரிகளில் அதிகமாக கற்பிக்கப்பட்டன என எண்ணுகிறேன், அதிகமாக படிக்காத என் அப்பாகூட இவர்களை அறிந்திருந்தார் . இவர்கள் அக்கால இளம் மனங்களில் வலுவான பாதிப்பை உருவாக்கியிருக்க வேண்டும். மெளனியிலும்.

மெளனியின் கதைகள் கவிதைக்குரிய மொழிவழி தருக்கத்தையே கொண்டிருக்கின்றன. கதைகளுக்குரிய நிகழ்ச்சித் தருக்கத்தையல்ல. மெளனி கதைகளின் சிறபியல்பு அவற்றின் பாவியல்பு [Lyrical Nature] என்று சொல்லலாம் . அவரது மொழிநடையை ஆராயுமிடத்து இது விரிவாக பேசப்படும். இது பிரிட்டிஷ் கவிதையின் பாதிப்புள்ள நடைதான். குறிப்பாக 'எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் ? ' 'காலத்தை கனிந்த காதலுடன் கட்டித்தழுவினாலும் நழுவிசென்றபடியேதான் இருக்கும் ' 'ஆழித்தண்ணீரில் எல்லை பிரித்து கோடிட்டதுதான நம் வாழ்க்கை ? ' போன்ற அவரது புகழ்பெற்ற வரிகளுக்கு ஊற்றுமுகம் அதுதான். இவற்றுக்கு சமானமான பல வரிகளை நாம் ஜான் டன் போன்ற ,மீமெய்மை கவிஞர்களின் படைப்புகளிலும் டென்னிசன் பிரவுனிங் போன்ற கற்பனாவாதக் கவிஞர்களின் கவிதைகளிலும் காணமுடியும்.*1 இவ்வரிகள் அவற்றின் புனைவுத்தன்மையாலோ, தத்துவ விவேகத்தாலோ அடையாளப்படுத்தப்பட்டவை அல்ல. அவற்றில் உணர்ச்சிப்பாடல்தன்மையினால்தான் முக்கியமாகின்றன. மெளனி கதைகள் இன்று முக்கியப்படுத்தப்படுவதன் காரணமும் அவற்றின் மொழியில் ஊடாடும் அந்த உணர்ச்சிகர அரற்றல் தன்மையினால்தான். உதிரி வரிகளாகவும் பிம்பங்களாகவுமே மெளனி நம் நினைவில் நிற்கின்றார்.

மெளனி கதைகளில் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் 'பாழ்பட்ட வசீகரம் ' . 'பயங்கர அழகு ' போன்ற வருணனைகளுக்குரிய படைப்புலகம் உண்மையில் ராபர்ட் பிரெளனிங்கின் கவியுலகம்தான். பிரெளனிங்கைபேசாமல் மெளனியைப்பற்றி பேசவே முடியாதென்றே எனக்குபடுகிறது.

ராபர்ட் பிரெளனிங் விக்டோரிய யுக கவிஞர்களில் முக்கியமானவர். நாடகீயத்தன்னுரை என்ற வடிவில் உச்சங்களை சாத்தியமாக்கியவை அவரது கவிதைகள்.கதாபாத்திரங்கள் நேரடியாக தன் மன ஓட்டங்களை சொல்வதோ நினைப்பதோ ,அவர் கவிதைகளில் மிகுந்த உணர்ச்சிப்பாங்குடன் வெளிப்படுகிறது. அறிவார்ந்த தன்மைக்கு எதிரான உணர்ச்சிகரத்தை ஆழ்மனதின் நேரடி வல்லமையை நம்பிய கவிஞர் பிரெளனிங். இந்த தேட்டத்தை மனிதனின் ஆதி மூர்க்கம் வரை கொண்டு சென்றவர். ஒருவகையில் பிற்கால மீ -மெய்மை [சர்- ரியலிச ] ஆக்கங்களின் முன்னோடியும் அவரே. பிரெளனிங் அவரது காலகட்டத்தின் கவிஞர்களான ஷெல்லி , கீட்ஸ், டென்னிசன் ஆகியோரிடம் ஒன்றுபடுவது அவரது கவிமொழியின் கட்டற்ற உணர்ச்சிகரத்தால்தான். ராபர்ட் பிரெளனிங்எழுதியவை கவிதைக் கதைகள்[dramatic lyric] என்றால் மெளனி எழுதியவை கதைக்கவிதைகள். ராபர்ட் பிரெளனிங் தன் பல கவிதைகளில் பெண்மையின் புதிரையும் மரணத்தின் பயங்கரத்தையும் காதலின் நிச்சயமின்மையுடன் இணைத்து புகைமூட்டமான ஒரு புனைவுலகை படைக்கிறார். ராபர்ட் பிரெளனிங் கதைக் கவிதைகளின் பெரும்பாலான இயல்புகள் மெளனி கதைகளில் உள்ளன, ஆனால் பிரவினிங் கவிதை உருவாக்கும் ஒரு பிரமிப்பை மெளனி உருவாக்கவில்லை என்பது என் அனுபவம்.

பிரவுனிங்கின் கவிதைகள் மெளனி எழுதிய சூழலில் பெரிதும் கவனிக்கப்பட்டு பேசப்பட்டுள்ளன என்பது தெரிகிறது. புதுமைப்பித்தன் பிரவுனிங்கின் கவிதைகளை தழுவி மூன்று கதைகளை எழுதியுள்ளார். பிரவுனிங்கின் என் கடைசி சீமாட்டி [My Last Dutches] என்ற கவிதை தமிழில் மொழிபெயர்க்கட்டிருப்பதாக எம் .வேதசகாயகுமார் குறிப்பிட்டுள்ளார் . தன் கடைசி சீமாட்டியின் சுவர் ஓவியத்தைக் காட்டி ஒரு நிலப்பிரபு [ Duke of Ferrara] அனேகமாக அவரது அடுத்த மனைவியை சேர்ந்த ஒருவரிடம் அல்லது அந்த ஓவியத்தை வாங்க வந்த ஒருவனிடம் சொல்வதுபோன்ற உணர்ச்சிப்பாங்கில் அமைந்த பிரவுனிங்கின் கவிதை மெளனி கதைகளுக்குரிய அதே உலகில் உள்ளது. சீமாட்டியின் முகத்தில் தெரியும் இனம் புரியாத மலர்ச்சியும் துக்கமும் அவள் இறந்த பிறகும் பிரபுவை தொடர்கின்றன. அவள் உயிர் வாழ்ந்தபோது சீமாட்ட்க்குரிய கம்பீரத்துடன் நடக்கவில்லை , தன்னை விட கீழானவர்களுடன் பழகினார் என்கிறார் பிரபு. அந்த ஓவியத்தை வரைந்த ஓவியனுடன் சீமாட்டிக்குள்ள உறவா அம்மலர்ச்சிக்கு காரணம் என ஐயம் கொள்கிறார். அவளை கொலைசெய்யும்படி உத்தரவிடுகிறார் என்பது கதை. ஆனால் கவிதையின் உணர்ச்சிகர தன்னுரையின் தயக்கமும் உத்வேகமும் மாறி மாறி வரும் சொற்பரப்பில் இது தெளிவாக இல்லை. ' அந்த தீவிரப் பார்வையின் ஆழமும் உணர்ச்சிவேகமும் ' *2 என்ற வரியில்தான் கவிதையின் ஜீவன் உள்ளது. இறந்து பல்லாண்டுகளாகியும் பிரபுவை அந்த ஓவியம் பார்த்துக் கொண்டிருக்கிறது எனும்போது அது எங்கே வரையப்பட்ட ஓவியம் என்ற வினா எழுகிறது. மெளனியின் கதைகளில் இதற்கு சமானமான பல வரிகளைக் காணலாம். 'பயங்கர வசீகரம் தோன்ற இருந்த ' ' கண்களைப்பற்றி மெளனி அடிக்கடி சொல்கிறார்.

பிரவுனிங்கின் கவிதைகளின் புலன்மயக்கதன்மையை மெளனியிலும் காணமுடிகிறது. பல கவிதைகளில் பிரவுனிங் கவிதையின் நிகழ்வுகள் நடப்பது கதாபாத்திரங்களின் நனவிலா பிரமையிலா என்ற ஐயத்தை வாசகனுக்கு ஏற்படுத்துகிறார். ஆரம்பத்திலேயே கவிதையை புலன்மயக்கத்தன்மையுடன் உண்மையிலேயா நடந்ததா என அறியாமல் தொடங்கி தடுமாறி நகரும் உணர்ச்சிகர வரிகள்மூலம் முற்றிலும் இருண்மையான உலகில் சென்று சேர்வது அவரது பாணி. பிரவுனிங்கின் பிரபல கவிதையாகிய ஃபோர்பிரியாவின் காதலன் [ Porphyria 's Lover ] மர்மம் மிக்க ஒரு கதை. தன் காதலியை காதலினாலேயே ஓர் அணைப்பின் உச்சநிலையில் அவள் கூந்தலினால் மும்முறை கழுத்தை சுற்றி நெரித்துக் கொல்கிறான் காதலன். ஏன் என்று கவிதை குறிப்பிடவில்லை. காமமும் , உடைமையுணர்வும், காதலின் பூரணம் பற்றிய ஒரு கனவும் அதற்குக் காரணமாகின்றன. 'அவள் கண்களைப்பார்த்தேன். உவகையும் பெருமிதமும். இறுதியில் அறிந்தேன் ஃபோர்பிரியா என்னை காதலித்தாள். வியப்பு என் இதயத்தை விம்மச் செய்தது என்ன செய்வதென நான் உழன்ற போது அது வளர்ந்தது. அக்கணம் அவள் என்னவள். என்னவள். அழகி, முற்றிலும் தூயவள். அப்போது செய்வதற்கு ஒன்றைக் கண்டுகொண்டேன். அவளது நீண்ட பொன்னிறக் கூந்தலை ஒரு சரடாக்கி அவள் மெல்லிய கழுத்தில் மும்முறை சுற்றி இறுக்கினேன். எந்த வலியுமில்லை. எனக்குத்தெரியும் அவள் வலியையே அறியவில்லை! ' *3 என அவன் சொல்லுகிறான்

மரணமும் காதலும் சந்திக்கும் புள்ளிீயையும் , மனமும் ஆழ்மனமும் முயங்கும் பிரமைநிலையையும் பொதுவாக நாம் பிரிட்டாஷ் கற்பனாவாதக் கவிஞர்களிடமெல்லாம் காணமுடிகிறது. பிரவுனிங்கில் மேலும் மூர்க்கமாக. இதை புரிந்துகொள்ள பிளாட்டானியக் காதலின் இயல்பை கூர்ந்து கவனிக்கவேண்டியுள்ளது .அது 'சதையை ' தவிர்த்துவிடுகிறது. அழகனுபவமாகவும் ஆழமான அகநிகழ்வாகவும் காதலை வகுக்கிறது.பிரவுனிங்கே வகுத்ததுபோல அழகனுபவத்தில் துவங்கி கடவுள் வகுத்த அனைத்தையும் நோக்கி செல்லும் உன்மத்த நிலையை அது தொட முயல்கிறது.* 4 ஆகவே காதலுக்குரிய பற்பல வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள் ,அச்சந்தர்ப்பங்கள் வழியாக உருவாகும் முரண்கள் அதற்கு இல்லாமல் போகின்றன. அது உச்ச அனுபவமாக கற்பனை மூலம் பெரிது படுத்தப்படும்போது மானுடத்தின் மற்ற அடிப்படைநிலைகளான இயற்கையின் சிறு பகுதியாக உணர்தல், மரணம் மற்றும் வாழ்வின் நிலையின்மை ஆகியவற்றுடன் மட்டுமே அதை தொடர்புகொள்ள செய்யமுடிகிறது. அதாவது காதல் ஓர் பருண்மை அனுபவமாக அன்றி , ஓர் கருத்துநிலை அனுபவமாக மாற்றப்படும்போது மானுட மனதின் மற்ற அடிப்படை கருத்துநிலைகளுடன் மட்டுமே அது உறவாட முடிகிறது. இயற்கை, மரணம் அல்லது பிரிவு ஆகியவற்றால் செறிவுபடுத்தப்பட்ட காதலனுபவங்கள் பிளாட்டானியக் காதல் கவிதைகள்.

இன்று வரை நமது காதல் கவிதைகளில் பிளாட்டானிய காதலே செல்வாக்கு செலுத்திவருகிறதென்பதை இன்றைய புதுக் கவிதையை படித்தால் உணர முடியும். நமது அகத்துறையின் பாதிப்பு ஏனோ நவீன காதல் கவிதைகளில் மிக மிகக் குறைவு. அதற்கான காரணங்கள் விரிவாக ஆராயத்தக்கன. ஆனால் முக்கியமான காரணம் என எனக்கு படுவது உடல் கிடைப்பதற்கரியதாக இருக்கும் சமூகச் சூழ்நிலைதான் என. உதாரணமாக இப்போது காதல் பற்றி எழுதப்படுகிறது, களவு பற்றியும் பரத்தமை பற்றியும் கவிதைகள் எழுதப்படுவதே இல்லை .கிடைக்காத பெண்ணுடல் , நிறைவேறாத அகவயக் காமம் பகற்கனவுகளில் பெருகி பேருருவம் கொள்வதையே நாம் நமது காதல்கவிதைகளில் காண்கிறோம். உயர்ந்த ரக உதாரணமாக பிரமிள் மற்றும் யூமா வாசுகியின் கவிதைகளைச் சொல்லலாம் . 'அமுதபருவம் வலம்புரியாய் அணைந்தது ஒரு சங்கு ' , 'இரவுகளின் நிழற்படம் ' ஆகிய கவிதைத் தொகுப்புகள் முன்வைக்கும் பல கவிதைகள் பிளாட்டானிய காதலின் அதே மனநிலையை , இலக்கணத்தை கொண்டிருப்பதைக் காணலாம். மெளனி இந்த படைப்புக் கூறின் முதற்கட்ட உதாரணம். அவரது பாவியல்பு ஒரு துவக்கப்புள்ளி .

ஆனால் பிளாட்டானிய இலட்சியக் காதலானது 'அழகனுபவத்தினூடாக மீட்பு ' என்ற கனவை உள்ளடக்கியது . மெளனியின் கதைகளில் 'பிரபஞ்ச கானம் ' மட்டுமே அந்த இயல்பை துல்லியமாகச் சொல்கிற கதை. மற்ற கதைகளில் மீட்புக்கு பதிலாக சரிவுதான் அடையாளப்படுத்தப்படுகிறது. வெறுமை. மெளனியின் சொற்களில் 'பாழ் ' . இந்த புள்ளி மெளனியின் நவீனத்துவ சார்பிலிருந்து பெறப்பட்டது.

உணர்ச்சிகர நவீனத்துவம்

மெளனியை காஃப்காவுடன் ஒப்பிட்டவர் பிரபல செக் இலக்கிய விமரிசகரான கமில் சுவலபிள். அது வரை அக்கோணமே நமது விமரிசகர்களால் பார்க்கப்படவில்லை . இது நமது விமரிசனத்தின் பலவீனத்தையே காட்டுகிறது. மெளனி காஃப்காவை மிக ஈடுபட்டு படித்தார் என்று சொல்லும் திலீப் குமார் ஆனால் மெளனியை காஃப்காவுடன் அழகியல் ரீதியாக ஒப்பிட இயலாது என்கிறார். காஃப்கா உணர்ச்சியற்ற பாவனை கொண்ட மொழிநடை, தகலவல்சார்ந்த படிமத்தன்மை, நவீன மனிதனின் வேர்களற்ற தன்மையை நோக்கி குவியும் குரூரமான சுயவதைப் பார்வை கொண்டவர் - மெளனி அப்படியல்ல என்கிறார். அது உண்மை. மெளனியின் அழகியல் நான் ஏற்கனவே சொன்னதுபோல பிரிட்டாஷ் கற்பனாவாதக் கவிஞர்களில் இருந்து பெறப்பட்டது . வாழ்க்கைப்பார்வையில்தான் காஃப்கா அல்லது [நவீனத்துவம்] அவரிடம் நேரடியான பாதிப்பை செலுத்தியது. கற்பனாவாத்தின் நன்னம்பிக்கை அம்சம் அவரில் இல்லாமலாயிற்று. கற்பனாவாத காலகட்ட கவிஞர்களிலேயே இருண்மை கொண்ட கவிஞரான பிரவுனிங்கின் உலகிலிருந்து அவர் மேலும் இருண்ட நவீனத்துவ உலகுக்கு வந்து சேர்ந்தார். பகற்கனவு , பிளாட்டானிய காதல் ஆகியவற்றுக்கு பிறகு மெளனி கதைகளின் மூன்றாவது ரசாயனம் இதுவே.

மெளனி கதைகளின் நவீனத்துவச் சாயலை மறைப்பது நவீனத்துவத்தின் அழகியலுடன் இணையாத அவரது மனநெகிழ்ச்சி கூடிய நடையே. அதை விலக்கிவிட்டு அவரது பார்வையின் அடிப்படைகளை கவனித்தால் அது அவரது சமகால நவீனத்துவ -- அல்லது இருத்தலிய -- கருத்துக்களே என்பதை எளிீதில் காணலாம். 'தனிமனிதன் -- காலம் -- உறவுகளின் நிலையின்மை -- மரணம் ' என்ற நவீனத்துவ தத்துவ வாய்ப்பாடுக்குள் கச்சிதமாக அடங்குபவை அவரது கதைகள். மெளனி கதைக்ளின் கதாபாத்திரங்கள் பேசும் பேச்சுக்கள் பெரும்பாலும் இருத்தலிய குட்டிச் சொற்பொழிவுகளே. உதாரணமாக 'உறவு பந்தம் பாசம் ' கதையில் வரும் தாசி கதாபாத்திரத்தின் நீண்ட தன்னுரை. மானுட இருத்தலின் பொருளின்மை, தேடல் பற்றிய உரை அது ' கல்யாண்மான ஒருவள் மறதியில் தன் கணவனை எங்கே விட்டுவிட்டு எங்கும் தேடுவதான பாவனையை ' தன் மனது அடிக்கடி கொள்வதாக அவள் சொல்லும் இடம் , கிட்டத்தட்ட அதற்கு சமானமான வரிகளை நாம் காம்யூவில், பெக்கட்டில் பலமுறை காணமுடியும்.

'மனக்கோட்டை ' , 'அத்துவான வெளி ' என்ற இரு கதைகளும் இலக்கணச் சுத்தமான இருத்தலிய தத்துவத்தை பிரதிபலிக்கும் கதைகள். மரணமடைந்த தன் நண்பன் மற்றும் நண்பனின் தங்கையைப்பற்றிய நினவுகளை சுமந்தபடி ஒரு கோட்டையில் உலவுபவனின் நினைவலைகள் தான் இக்கதை. மரணத்தை ஏற்க எளிய மானுட மனம் கொள்ளும் தயக்கங்கள், அதை தர்க்கத்தால் அள்ல முயலும் வீண்முயற்சிகள் ஆகியவற்றை மனக்கோட்டை விவரிக்கிறது. தனிமையில் மரணத்தின் நினைவுகளுடன் வாழும் ஒருவனை பிரமைபோன்று வரும் ஒரு நண்பன் வெளியே அழைத்துச்செல்கிறான் . விரிந்தவெளியில் நிற்கும் ஒரு மரம் பற்றிய படிமத்துடன் அவனது அந்த உலாவல் விவரிக்கப்படுகிறது 'அத்துவான வெளி ' கதையில். இவ்விரு கதைகளுமே மரணத்தின் முன் வைத்து மானுட இருப்பை ஆராயும் இருத்தலிய சிறுகதைகளே. இருத்தலியம் உருவாக்கும் அந்த 'கைவிடப்பட்ட மனிதனின் ' சித்திரத்தையே இக்கதைகள் உருவாக்குகின்றன.

இருத்தலியக் கூறு இல்லாத கதைகள் மெளனி எழுதிய 'இந்நேரம்.. இந்நேரம் ', 'குடும்பத்தேர் ' 'சாவில் பிறந்த சிருஷ்டி ' போன்ற கதைகள்தான். இக்கதைகளில் தெரியும் மெளனி இருத்தலியம் சொல்லும் வாழ்க்கைசார்ந்த தத்துவ முடிவுகளை ஏற்காமல்சம்பிரதாய வாழ்வுக்குள் தன்னுடைய புகலிடத்தை தேடுபவராக இருக்கிறார், வாழ்க்கையைப்பற்றிய சம்பிராதயமான பார்வை கொண்டவராகவும் இருக்கிறார். ஆக மெளனி இருத்தலியத்தை பிரக்ஞைபூர்வமாக ஏற்றுக் கொண்டவரல்ல. அவரது மனஎழுச்சியின் தருணங்களில் மட்டுமே படைப்புமனம் இருத்தலியத்தை சென்றடைகிறது என்று படுகிறது. அம்மன எழுச்சி எப்போதுமே சென்றுமறைந்த இளமை, காதல், நகரம் சார்ந்த ஏக்கம்தான். அது பகற்கனவுகளுக்கு , கற்பனாவாத கவியுலகின் மீட்டலுக்கு இட்டுச்சென்று இறுதியில் இருத்தலியத்தின் அந்த பழகிப்போன 'பாழில் ' கொண்டு சென்று நிறுத்திவிடுகிறது.

தமிழில் நவீனத்துவ எழுத்து அறிமுகமாவதற்கு முன்னரே மெளனி எழுதிவிட்டார் என்பது ஒரு முக்கியமான விஷயம். அவரது முன்னோடித்தன்மைக்கு இதுவே காரணம் . மலையாளத்தில் மெளனி 1980களில் அறிமுகமானபோது அவர் இருத்தலிய எழுத்தாளரான கெ.பி . நிர்மல்குமாருடன் ஒப்பிடப்பட்டார் . அது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஆனால் பிறகு அதே கோணத்துடன் நிர்மல்குமாரை படித்த போது ஆச்சரியமளிக்கும் அளவுக்கு ஒற்றுமை தெரிய வந்தது . நிர்மல்குமாரின் மொழி மெளனி அளவுக்கு நெகிழ்ச்சி உடையது அல்ல. புறக்காட்சி சித்தரிப்புகள் கறாரான பொருண்மை கொண்டவை. இவ்வித்தியாசத்தை தவிர்த்தால் கதை, கூறு முறை எல்லாமே அதேதான். மரணத்தின், நிலையாமையின் நிழலில் நிற்கும் கதாபாத்திரங்கள் ததும்பும் மனஓட்டங்களுடன் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் உலவுவார்கள். அந்த நிலம் சார்ந்த படிமங்கள் அவர்களில் உருவாகும். இதுதான் அவர் கதைகளின் வாய்ப்பாடு. மெளனிக்கும் அதுவே சூத்திரம்.

தனி நபரின் அகவுலகை முக்கியப்படுத்தியமையால் நவீனத்துவம் எப்போதுமே பகற்கனவுகளின் உலகை அதிகமாக முன்வைத்தது என நாம் அறிவோம். பகற்கனவின் அந்தரங்க பயங்களையும் எழுச்சிகளையும் படிமங்களாக ஆக்கியதனாலேயே காஃப்காவின் ஆக்கங்கள் அழுத்தம் பெற்றன. பகற்கனவின் அந்தரங்க மனப்புயலை மொழியிில் பற்ற செய்த முயற்சியே நனவோடை உத்தியாக மலர்ந்தது. மெளனியின் பகற்கனவின் உலகம் கற்பனாவாத பாவியல்பை கொண்டிருப்பதனால் மற்ற நவீனத்துவ ஆக்கங்களிலிருந்து சிறிது மாறுபடுகிறது . கற்பனாவாதம் சார்ந்த உணர்ச்சி உத்வேகம் காரணமாக மெளனி நவீனத்துவம் தேடிய செவ்வியல் சார்ந்த சமநிலையை இழக்கிறார். ஆனாலும் அவை நவீனத்துவ ஆக்கங்கள்தான்.

மெளனி கதைகளின் வடிவம்

மெளனியின் கதைகளின் வடிவ அமைதி பற்றி விவாதிப்பது சிரமமான ஒன்று . திலீப் குமார் அவரது கதைகளை வடிவம் சார்ந்து வகைப்படுத்துகிறார். ஆனால் மெளனி சொல்லவந்த மையக்கருவை அதிக விலகல் இல்லாமல் சொல்லிவிட்டால் அது வெற்றிபெற்ற வடிவ ஒழுங்கு கொண்ட கதை என்றும் ,அப்படி இல்லாமல் அது அலைபாய்ந்து திசை தவறினால் பலவீனமான கதை என்றும் முடிவுக்கு வருகிறார். மெளனியின் கதைகள் 'கதைகள் ' அல்ல. ஆகவே கதை என்ற வடிவத்தின் பொது இலக்கணங்களை அவற்றில் தேடுவது அர்த்தமில்லாதது. கதை என்பது கரு, அக்கரு வெளிப்படும் களம், அக்களத்தில் வாழும் கதாபாத்திரங்கள், அவர்களினூடாக நிகழும் சம்பவங்கள், அவர்களுடைய மன உணர்வுகள் ஆகியவற்றுக்கிடையேயான ஒத்திசைவால் தான் எப்போதுமே அளக்கப்படுகிறது. இதன் சாத்தியக்கூறுகள் எல்லையற்றவை.

மெளனியின் கதைகள் வெளிப்படும் களம் எப்போதுமே அரைகுறையானதாக, தெளிவற்றதாக உள்ளது .அதன் பொருத்தப்பாடு குறித்து பேச இடமளிக்கும் கதைகள் அவர் லெளகீகமான கருக்களைக் கொண்டு எழுதிய 'குடும்பத்தேர் ' , 'சாவில் பிறந்த சிருஷ்டி ' போன்ற கதைகள் மட்டுமே. மற்ற கதைகளில் கதை வெளிப்படுத்தும் பிரக்ஞை நிலையில் படிமங்களாகத் தெரியும் களத்தையே நாம் காணநேர்கிறது. உதாரணமாக 'அத்துவான வெளி ' என்ற கதை. வீட்டுக்கு முன்னால் ஒரு மாபெரும் மரம் நிற்கிறது. ஒருவன் அதைப்பார்த்து காலவெளி குறித்த ஒரு பிரமிப்பை மனதில் ஓடவிடுகிறான். ஒரு கதையின் இலக்கணப்படி அந்த மரம் அங்கு நிற்க கதையிலும் கதைநிகழும் நிலப்பரப்பிலும் இடமிருக்க வேண்டும். மெளனி கதையில் மரம் படிமம் ஆவதற்கென்றே அங்கே நின்று கொண்டிருக்கிறது. 'மனக்கோட்டை ' கதையின் நிலக்காட்சியை கதைக்குள் கொண்டு வருவதில் உள்ள அபத்தத்தை நல்ல கதாசிரியன் செய்யமாட்டான். தன் நண்பன் சங்கரன் இறந்த சேதியை அறிந்து துக்கத்துடன் வீடு திரும்பும் சேகரன் வழியில் 'அகஸ்மத்தாக ' ஒரு பாழடைந்த கோட்டையின் நுழைகிறான். அங்கிருந்து சேகரனின் வீட்டுக்கு செல்கிறான்! இங்கு அக்கோட்டையும் என்னை படிமமாக்க மாட்டாயா என்று வந்து நிற்கிறது. குடும்பத்தேர் போன்ற கதைகளில் மெளனி தானறிந்த பிராமண குடும்பச்சூழலை சாதாரணமாகவே சொல்கிறார். இந்நேரம் இந்நேரம் என்ற கதையை பண்ணையாரின் கோணத்தில் சொல்ல ஆரம்பிக்க வேண்டிய அவசியமென்ன ? பண்ணையாரின் குணச்சித்திரம் ஏன் வருகிறது ? பயிற்சியற்ற கதைசொல்லியின் தடுமாற்றம்தான் அது.

மெளனியின் கதாபாத்திரங்கள் எதுவுமே மனிதர்கள் அல்ல . அவை 'மாதிரிகள் ' [டைப்கள்] மட்டுமே. ஆகவே அவற்றின் குணச்சித்திரத்தை அளப்பதும் மதிப்பிடுவதும் சிரமமானது. அவற்றினூடாக மெளனி காட்டும் பெண் பிம்பம் இத்த்கையது என்பது போன்ற பொது வரையறைகளை மட்டுமே உருவாக்க முடியும். திலீப் குமார் கூட தன் கட்டுரைகளில் மெளனியின் பெண்கள் மெளனியின் கதாபாத்திரங்கள் என பொதுவாகவே பேசமுற்படுகிறார். ஒரு கதாபாத்திரத்தைக்கூட தனியாக எடுத்து அதன் குணச்சித்திரம், அதன் மன அமைப்பு மற்றும் வாழ்க்கைச்சூழல் ஆகியவற்றைப்பற்றி பேச முற்படவில்லை. கடந்த அரை நூற்றாண்டில் இங்கே நிகழ்ந்த எந்த இலக்கிய விவாதத்திலும் மெளனியின் ஒரு கதாபாத்திரமாவது மேற்கோள் காட்டப்பட்டு நான் காணநேரவில்லை . மெளனியின் மையக் கதாபாத்திரங்கள் மெளனியின் விருப்பக் கற்பனையில் அல்லது பகற்கனவில் உதித்தவை மட்டுமே. அவரது கோணத்தில் உருவாகும் பெண்ணே அவரது பெண்கதாபாத்திரங்கள் .

மாதிரிகள் என்று பார்த்தால் கூட அவை இரண்டு வகைப்பட்டவை. ஒன்று இளமைக்காதலி, இறந்துவிட்டவள் , அல்லது பிரிந்து விட்டவள். இரண்டு 'நல்ல ' விபச்சாரி. உதிரியாக மனைவிகள் சிலர். உதாரணம் சிகிழ்ச்சை , சாவில் பிறந்த சிருஷ்டி போன்ற கதைகள். அவர்கள் வெறும் முகங்கள் மட்டுமே. புகைமூட்டத்தை தவிர்த்துப் பார்த்தால் அந்த இரு பெண் கதாபாத்திரங்களும் இந்திய நவீன இலக்கியத்தின் ஆரம்ப கட்டத்தில் உருவான வகைமாதிரிகள் என்பதைக் காணலாம். சரத் சந்திரரின் கதைகள் மூலம் நமக்கு மிக மிக அறிமுகமான கதாபாத்திரங்கள். உதாரணமாக 'தேவதாஸ் ' கதையில் இரு முகங்களுமே உள்ளன. இந்த கதாபாத்திரங்களின் வேர்களை நாம் வங்க எழுத்திலேதான் காணவேண்டும். ஏற்கனவே சொன்ன அதே காரணங்கள்தான், நவீனகல்வி இந்திய இளைஞர் மனதில் உருவாக்கிய கற்பனாவாத நோக்கும், தாழ்வ்ணார்வும், சோர்வும் தான் இதன் ஊற்றுக்கண். வங்கத்தின் கலாச்சார எழுச்சியின் விளைவாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான புத்துணர்வு கொண்ட இளைஞர்கள் மீது கற்பனாவாதம் செலுத்திய பாதிப்பின் விளைவாக வங்கம் முழுக்க 'தெய்வீக காதலின் ' அலை எழுந்ததை காணலாம். திருமணம் மூலம் உருவாகும் பெண் உறவின் சம்பிரதாயத்தன்மை மீதான சலிப்பு -- பெரும்பாலும் இது பொருந்தாத பாலியமணம் --- ஒரு கற்பனை காதலிக்கான ஏக்கம், அவள் அடையவே முடியாதவள் என்ற துக்கம், அதன் விளைவாக 'புரிந்துகொள்ளக் கூடிய ' ஒருத்திக்கான பகற்கனவு . அவள் அழகி, படித்தவள், தடையில்லாமல் அணுகக் கூடியவள், துயரம் நிரம்பியவள்.ஆகவே தாசி. மெளனி கதைகள் வங்கமொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டால் அவை அங்கே சரத் சந்திரர் கதைகளுடன் ஒப்பிடப்படும். மெளனியில் உள்ளது அதே மனநிலை, அதே கதாபாத்திரங்கள்தான்.

மெளனியின் தாசியை மேலும் பகுப்பாய்வு செய்ய முடியும். நம் நாட்டில் நவீன இலக்கியம் தொடங்கிய காலகட்ட படைப்புகளில் எல்லாமே தாசி மிக முக்கிய கதாபாத்திரமாக வருகிறாள். இது ஏன் என யோசித்தால் நமது சமூக வாழ்வின் பல தளங்கள் தெரியவரும். பெண்கல்வி முற்றாக தடுக்கப்பட்ட ஒரு சமூக அமைப்பே நமக்கிருந்தது. தத்துவமும் காவியமும் கலைகளும் பெண்களுக்கு தொடர்பே இல்லாத துறைகளாக இருந்தன. அதேசமயம் தாசிகள் கல்வியும் கலைப்பயிற்சியும் கொண்டவர்களாக இருந்தனர். ஆகவே அறிஞர்களும் கலைஞர்களும் தாசிகள் மீது பெரும் நாட்டம் கொண்டிருந்தனர். மறுபாலினருடன் நட்பு ,காதல், அறிவார்ந்த உரையாடல் எல்லாமே தாசிகளுடன் மட்டுமே சாத்தியம். ஆகவேதான் கம்பனும் காளிதாசனும் தாசிகளின் உலகில் வாழ நேர்ந்தது. இந்த நிலையே பதினெட்டாம் நூற்றாண்டிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவரையிலும் நீடித்தது. கல்வி மூலம் அறிவார்ந்த தேடல் கொண்டு உருவாகி வந்தவர்களான, பிளாட்டானிக் காதலை கற்று கற்பனாவாதம் நிரம்பிய பெண்ணுறவுக்காக ஏங்கிய , இளைஞர் சமூகம் தாசிகளை நோக்கி சென்றது இயல்பே. தாசிகளை நோக்கி செல்வதை அவர்களுடைய இலட்சியவாத ஒழுக்கவியல் தடைசெய்தபோது பகற்கனவுகளை விரித்து பல தளங்களில் தாசிகளை மறு ஆக்கம் செய்து கொண்டார்கள். விதிவசத்தால் தாசிவாழ்வுக்கு வந்த துயரம் நிரம்பிய தாசி, தாசி வாழ்வில் இருந்தாலும் அதில் 'ஆன்மா ' ஒட்டாத தாசி , தாசிவாழ்வுக்கு அப்பால் மறுதளத்தில் மகத்தான ஒரு வாழ்க்கைநோக்கு கொண்டிருக்கும் தாசி என பல முகங்களை நாம் ஆரம்பகால வங்க இலக்கியத்திலும் அதன் பாதிப்பில் எழுதப்பட்ட பிற இந்திய நாவல்களிலும் காணலாம்.

மெளனி முன்வைக்கும் தாசி சித்திரம் மேற்குறிப்பிட்ட வகையானதே என உணரமுடியும். மெளனியின் தாசி ஒருவிதமான மர்மமான கவற்சி கொண்டவள். அவரது அத்தனை தத்துவார்த்த பிரசங்கங்களையும் தானும் முன்வைப்பவள். கனவுப்பெண் போல . உதாரணங்கள் பல. நினைவுச்சுவடில் வரும் தாசி சொல்கிறாள். தன்னிடம் உறவுகொண்டு பலகாலம் கழித்து காணநேர்ந்த ஒருவனிடம், அவனது குழந்தைதான் தன் பெண் என விளக்கும்வரி இது. ' ' ...... மறைந்த காரணத்தை நான் காரியத்தில் எப்போதும் பார்க்க முடியவில்லை. இரண்டுமே ஒன்றாக என் கண்முன் தோன்றும்போதுதானா இந்த உள்ளக்கிளர்ச்சி ? ' அவள் இப்படி முடிக்கிறாள் ' இப்போது என்னுடைய எண்ணங்கள் எவ்வளவு இனிமையாக மனதை துன்புறுத்துகின்றன! என் இன்பக்கண்ணீருடன் என் வாழ்க்கை இனி கரைந்தாலும் பாதகமில்லை ' உறவு பந்தம் பாசம் கதையின் கெளரி என்ற தாசியும் இதே குணச்சித்திரம்தான். ' ஐயா நான் ஒரு பெண். அதுவும் ஒரு தாஸிப்பெண். ....நாங்கள் தாசிகள் ஒருவிதத்தில் கல்யாணமானவர்கள் மனைவிகள் எனவும் கொள்ள முடியும். கல்யாணமான ஒருவள் மறதியில் தன் கணவனை எங்கோ விட்டுவிட்டு எங்கும் தேடுவதான பாவனையை என் மனது அடிக்கடி கொள்கிறது ஐயா..ஆண்களால் கல்யாணமின்றி வாழமுடியும். பெண்களால் முடிகிறதில்லை. இந்து தர்மம் அப்படித்தானே ? ' குடை நிழல் கதையின் ஜோன்ஸ் முற்றிலும் தத்துவமாகவே பேசுகிறவள் .

இந்தப்பெண்களை நாம் தமிழக தாசிகளின் சமூகப்பின்புலத்தில் பொருத்திப்பார்ப்பதை கற்பனையே செய்யமுடியவில்லை. முதல் விஷயம் கெளரி போன்றபெயர்கள் பொதுவாக தாசிகளுக்கு உரியவையல்ல. சதிர் , இசை , கோவில் சேவை போன்ற சில தனி செயல்தளங்களும் அதுசார்ந்த மனநிலைகளும் மொழியும் அவர்களுக்கு இருந்தன. அவற்றை நாம் கொத்தமங்கலம் சுப்புவின் 'தில்லானா மோகனாம்பாள் ' நாவலில் காணமுடிகிறது. அவர்களை நம்பி ஒரு சூழலே இயங்கிய நிலையில் அவர்களுக்கு ஒருவகை வணிக கடமையாகவே தாசித்தொழில் இருந்திருக்கும். உலகமெங்கும் தாசிகளுக்கு அவர்கள் வாடிக்கையாளர்களுடன் உள்ள உறவு வணிக அடிப்படைகொண்ட உறவே ஒழிய உணர்வு ரீதியான உறவல்ல. மெளனியின் தாசிகள் அவரது விருப்பக் கற்பனையில் முளைத்து எழுந்தவை மட்டுமே.

மெளனி கதைகளில் வரும் நிகழ்ச்சிகள் எப்போதுமே செயற்கையானவை, பகற்கனவின் செய்ற்கைத்தன்மை அது. மெளனிகதைகளின் நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் கோர்வையான போக்கோ , நம்பும்படியான தர்க்கமோ இருப்பதில்லை. பதினைந்துவருடங்களுக்கு முன்னால் பிரிந்துவிட்டவர்கள் மீண்டும் சந்தித்து உடனே ததுவார்த்தமாக் பேச ஆர்ம்பிக்கிறார்கள். ஒரு பெண் பாடியே உயிர்துறக்கிறாள். ஒருவன் ஒருத்தியை பார்க்கும்போது அவள்முகத்தில் ஏன் என்ற வினா இருக்கிறது.அதனுடனே அவள் இறந்தும் போகிறாள். இந்த செயற்கைத்தனமான நிகழ்ச்சிப்போக்குக்கு மெளனி கனவின் சாயலை, ஒருவகை மூட்டத்தை வெற்றிகரமாக உருவாக்குவதனாலாயே அவை வாசகனில் ஆழமான திருப்தியை உருவாக்காமல் இலக்கியத்தன்மை கொள்கின்றன.

ஆக, மெளனியின் கதைகளில் எஞ்சியுள்ளது மனஉணர்வுகள் மட்டுமே . அவை கதாபாத்திரங்களின் உணர்வுகளாக வெளிப்பட்டாலும் உண்மையில் மெளனியின் எல்லா கதாபாத்திரங்களும் பேசுவது மெளனியின் குரலைத்தான். உறவு பந்தம் பாசம் கதையில் கெளரி, குடைநிழல் கதையில் ஜோன்ஸ், அழியாச்சுடர் கதையில் கதைசொல்பவன் எல்லாருமே ஒரே உணர்வுநிலையைத்தான் வெளிப்படுத்துகிறார்கள் .இன்னும் சொல்லப்போனால் மெளனிகதைகளின் கதைசொல்லும் குரல், உரையாடல் பகுதிகள், தன்னுரைகள், மன ஓட்டங்கள் எல்லாமே ஒரேபோல மனஓட்டத்தின் சாயலுடன் உள்ளன! அவை வெளிப்படுத்தும் உணர்வு ஒன்றுதான் , இனம்புரியாத ஒரு பிரமிப்பு நிலையை அல்லது துக்கத்தை வகுத்துச் சொல்லமுடியாது தவிப்பது மட்டும்தான் . மீண்டும் மீண்டும் இதை அவர் கதைகளில் காணலாம். உதிரிச்சொற்கள், உடைந்த சொற்றொடர்கள், தத்துவார்த்தமான சில வரிகள் மற்றும் படிமங்கள் மூலம் மெளனி அந்த மன எழுச்சியை சொல்ல முனைகிறார். அந்த தவிப்பின் சில தருணங்களை அவரால் நமக்கு தந்துவிடமுடிகிறது என்பதனாலேயே அவரது ஆக்கங்கள் முக்கியத்துவம் கொள்கின்றன. மெளனியின் கதைகளில் உள்ள ஒட்டு மொத்த முயற்சியே இதுதான் என்று சொல்லலாம்.

இந்த இயல்பு கவிதைக்குரியதென்பதை விளக்கவேண்டியதில்லை. மெளனியின் கதைகளை ஒருவகை உரைநடை கதைக் கவிதைகளாகக் கண்டு ஆராய்வது பொருத்தமானது. அவ்வகையில் ஏற்கனவே சொன்னதுபோல அவற்றின் முன் தொடர்ச்சி பிரிட்டிஷ் கவிதையில் உருவான நாடகீய சித்தரிப்புதான். இலக்கிய வடிவங்களில் கவிதைக்கு மட்டுமே புறச்சூழல், நிகழ்ச்சிீ ஒழுங்கு ஆகியவற்றையெல்லாம் முற்றாக உதாசீனம் செய்து அக உத்வேகத்தை மட்டுமே நம்பி இயங்கும் சுதந்திரம் உண்டு. பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிஞர்களில் சிலர் தங்கள் கவிதையில் அப்படி இயங்கியவர்கள்தான்.ஆனால் நாடகீய பாவியல்பைக் கையாண்ட பிரவுனிங் போன்றவர்கள் புறவுலகை உதாசீனம் செய்யவில்லை. அவர்கள் கவிதைகளுக்கு அவை முன்வைக்கும் கவித்துவ உத்வேகத்தை தவிர்த்தாலும் புறத்தகவல்களின் மதிப்பு உண்டு. மெளனி அவர்களுடைய உத்வேகத்தையே பின்பற்ற விழைகிறார். ஆனால் என்ன பிரச்சினை என்றால் கவித்துவ உத்வேகத்தை மட்டும் நம்பி இயங்கும் அளவுக்கு அவரது மொழி முதிர்ச்சி உள்ளதல்ல. அவரது மொழியின் பலவீனமே அவரது கதைகளில் பலவகையான மூட்டங்களை உருவாக்கியதென்றால் அது மிகையல்ல.ஆக மெளனி கதைகளை வடிவ ரீதியாக இப்படியே மதிப்பிடவேண்டும். அவை கற்பனாவாதத்தின் புத்தெழுச்சியை தளர்வான பயிற்சியற்ற உரைநடையில் சாதிக்கமுயன்றதன் விளைவுகள்தான்.

மெளனியின் மொழிநடை

தன்னுடைய மன உத்வேகத்தை சொல்வதற்கு தமிழ் மொழி போதுமானதாக இல்லை என்று மெளனி குறைப்பட்டுக் கொண்டார் என்று சொல்வார்கள். பலர் இதை பதிவும் செய்துள்ளார்கள் . படைப்பாளிகளுக்கு உளறுவதற்கான உரிமம் உண்டு என்பது உண்மையே. பல அற்புதமான உளறல்களை நவீன இலக்கியப்பரப்பு பதிவு செய்துமுள்ளது. ஆனால் நவீனத்தமிழிலக்கியத்தின் முக்கால் நூற்றாண்டு வரலாற்றில் மெளனியின் இந்தக் கூற்றே உச்ச கட்ட பேத்தல் என்று சொல்லமுடியும். மொழியின் சொற்களோ , சொல்லமைப்போ தொடர்புறுத்துதலுக்கு ஒருபோதும் தடையாக இருப்பதில்லை என்பதற்கு வளர்ச்சியும் விரிவும் இல்லாத சிறு மொழிகளில் வந்துள்ள மாபெரும் படைப்புகளே சான்று. தமிழோ ஆயிரமாண்டுகால இலக்கிய மரபும் விரிந்த வரலாற்று பின்புலமும் மிக நெகிழ்வான இலக்கண அமைப்பும் ஒலிநயமும் கொண்ட மொழி. அதன் சொற்களஞ்சியம் மகத்தானது. தமிழை அறிந்த ஒரு வாசகன் உடனடியாக கேட்க துணியும் கேள்வி ஆழ்வார்கள் பாடாத எந்த அகநெகிழ்வை மெளனி சொல்லிவிட்டார் என்பதுதான். உடையவர் பாடிய மொழியில் உணர்வுகளைச் சொல்லும் திறன் இல்லை என்று சொல்வதை எப்படி எடுத்துக் கொள்வது நாம் ?

ஐநூறு வருடமானாலும் தமிழ் தான் உருவாக்கிய அக உணர்வுகளின் நுட்பங்களை புரிந்துகொள்ளாது என்று மெளனி சொன்னார் என்பதுண்டு. தமிழ் இலக்கியத்தின் பெரும்பகுதி அகத்துறையே. என் வாசிப்பில் அகச்சித்தரிப்பில் உலக இலக்கியத்தின் மிகச்சிறந்த உதாரணங்கள் தமிழிலேயே உள்ளன. அகவுலகை சித்தரித்த தமிழ் கலைஞர்கள் நூறு பேரின் பெயரை பட்டியலிட்டால் மெளனியை இலக்கிய நுண்ணுணர்வுள்ள எவருமே சேர்க்க துணியமாட்டார்கள் . மெளனியின் பிரச்சினை என்ன ? புதுமைப்பித்தன் தவிர்த்த மற்ற தமிழ் நவீனத்துவ படைப்பாளிகளைப்போலவே மெளனியும் தமிழ் இலக்கிய மரபில் அறிமுகம் உள்ளவரல்ல. அவருக்கு உண்மையிலேயா தமிழ் வந்து சேர்ந்திருக்கும் இடம், அதன் விரிவும் மகத்துவமும் தெரியாது. கல்லூரிக் கல்வி மூலம் தான் கற்ற மேலை கற்பனாவாதத்தை தன்னுடைய அக்ரகாரப் புழங்குமொழியில் சொல்ல முயன்றார் அவர். பிரவுனிங்கும் , கூல்ரிட்ஜும் ஷேக்ஸ்பியரால் பண்படுத்தப்பட்ட மில்டனால் அகலப்படுத்தப்பட்ட் மொழியில் எழுதினார்கள். கிரேக்கச் செவ்வியல் மரபின் பெரும் படிமச்செல்வத்தை, சொல்வளத்தை சுவீகரித்துக் கொண்டு எழுதினார்கள். மெளனியின் படைப்புமொழி அவருக்கும் இருந்த எந்தமரபிலிருந்தும் வேர்நீர் பெறாத இலைவெளுத்த செடி.

மெளனி தமிழைக் கற்கவில்லை என்பதுடன் அவருக்கு பெரும் மதிப்பிருந்த சம்ஸ்கிருதத்தைக்கூட பிழையறக் கற்கவில்லை என்பதற்கு அவரது சொல்லாட்சிகளே சான்று. அவருக்கு இந்திய தத்துவ மரபில் ஆழமான பயிற்சி இருந்தது என்று சொல்லப்படுகிறது . எனக்கு புரியாதது இது , மணிக்கொடி எழுத்தாளர்கள் பலரைப்பற்றியும் இத்தகைய பூதாகர படிமங்கள் உள்ளன. பிச்சமூர்த்தி, குபரா பற்றியெல்லாம் இப்படி சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் எழுத்திலே அந்த ஞானத்தின் சாயல்கள் இல்லையே என்ற வினா என் மனதில் எப்போதுமே எழுவது. குறிப்பாக இந்திய தத்துவமரபின் மீதான பயிற்சியின் சாயலை இவர்கள் எழுத்தில் , அம்மரபை ஓரளவு அறிந்தவன் என்ற முறையில் , என்னால் காணமுடியவில்லை. புதுமைப்பித்தனின் ஆக்கங்களில் அவரது சைவ சித்தாந்த பயிற்சியும் தமிழிலக்கிய பயிற்சியும் வெளிப்படுவதை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

மரபில் உள்ள பயிற்சி மூலம் ஒருவரின் படைப்புமொழி பலமடங்கு பெருகிவிடுகிறது. தத்துவம் தருக்கத்தையும், மீமெய்யியல் படிமங்களையும் கொடுக்கிறது. கம்பன் தொடங்கி ப. சிங்காரம் வரை படைப்பாளிகளுக்கு மரபு எப்படி மொழியை அளிக்கிறது என்பதை நாம் கண்கூடாகக் காணலாம். மிகச்சிறந்த அகமனச் சித்தரிப்புகளை எடுத்து கூர்ந்து பார்த்தால் ஒன்று தெரியும், அவை தத்துவார்த்தமான தர்க்கத்தை நுட்பமாக பயன்படுத்தி மேலே மேலே சென்றபடியே இருக்கும் ; ஒரு கட்டத்தில் தருக்கத்தை உதறி கவித்துவப்படிமத்தை கைகொண்டு உச்சத்தை அடையும். தத்துவார்த்தமான பயிற்சி இல்லாத பெரும்படைப்பாளிகள் உலக இலக்கியத்தில் மிக குறைவே. அதைவிட முக்கியமானது மரபின் அடிப்படை படிமங்கள் . ஒரு படைப்பாளி உருவாக்கும் படிமங்கள் அவன் மரபில் இருந்து பெற்று ஆழ்மனதில் ஊறியுள்ள ஆழ்படிமங்களின் மறு ஆக்கங்களே என சி.ஜி.யுங்கின் கருத்துக்களை ஒட்டி நம்மால் கூற முடியும். மீமெய்யியல் மரபில் உள்ள பயிற்சி அந்த ஆழ்படிமங்களை ஆராய, தியானித்து பெருக்கிக்கொள்ள உதவுகிறது. மெளனி கதைகளில் அந்த ஆழ்படிமங்கள் எவ்வகையிலும் செல்வாக்கு செலுத்தவில்லை. அவர் படைப்புகளில் அவை தற்செயலாக மட்டுமே உருவாகின்றன, அவரது வளர்ப்பு காரணமாக .

மெளனி கதைகளின் மையப் பிரச்சினை நம் மரபில் மிக விரிவாக பேசப்பட்டு விட்ட ஒன்று . தூலத்துக்கும் சூக்குமத்துக்கும் இடையேயான உறவு. அல்லது மாயைக்கும் அதன் சாரத்துக்கும் இடையேயான உறவு. ஒவ்வொரு சிந்தனை ஓட்டமும் ஒவ்வொரு கோணத்தில் அதைப்பற்றி விவாதித்துள்ளன. அதன் எந்த கீற்றையும் நாம் மெளனி கதைகளில் காணமுடியவில்லை. எப்படி அக உணர்வுகளைபேசமுயன்ற அவர் கதைகள் தமிழில் உள்ள மாபெரும் அகமரபை இல்லையென்றே பாவிக்கின்றனவோ அப்படியே இந்த மகத்தான தத்துவ விவாத மரபையும் அவை இல்லையென்றே பாவிக்கின்றன. அதேபோல மெளனியின் உலகை பெரிதும் உலுக்கும் சாத்தியம் கொண்ட நம் மரபின் மாபெரும் படிமங்களில் அவர் மனம் படியவேயில்லை . சிறந்த உதாரணம், சிதம்பர ரகசியம். திரையிடப்பட்ட வெட்டவெளி. மறைக்கப்பட்டிருக்கும் வெறுமை, பாழ்! மெளனியின் கதையுலகின் மையம் பலநூறு மடங்கு உக்கிரத்துடன் வெளிப்படும் ஆழ்படிமம் அது.வாழ்நாளெல்லாம் சிதம்பரத்திலேயே வாழ்ந்த மெளனிக்கு , அவர் மனம் அதில் படிந்திருக்குமென்றால் , அந்த படிமம் எப்படியெப்படி பொருள்பட்டிருக்கக் கூடும்! மரபின் மீதான ஆர்வமின்மையினால்தான் மெளனியின் மொழி வறுமை கொண்டது.

மெளனிக்கு தமிழ் மரபு மீது மிக உதாசீனமான பார்வை இருந்தது, தமிழ் மறுமலர்ச்சியையும் தமிழிசை இயக்கத்தையுமெல்லாம் மிக எதிர்மறையாகவே அவரால் காணமுடிந்தது என்பதெல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆகவே தமிழின் மாபெரும் அகமரபை அவர் கற்கவில்லை. மதரீதியாக நமது பக்திமரபை அவர் கற்றதற்கும் சான்று இல்லை. ஆகவே நம் அகமரபின் தொடர்ச்சியாக அவர் படைப்புகள் அமையவாய்ப்பின்றி போயிற்று. உள்ளத்தை சொல்ல நம் மரபு மிக மிக கவித்துவமான ஒரு முறையை கண்டடைந்துள்ளது. அகத்தை புறத்தே ஏற்றி கூறுவது. இயற்கையை மனதின் பருவடிவமாக காண்பது .சங்க புலத்தில் காதல்கொண்டு பூக்கும், காத்திருந்து வாடும், பிரிவில் கருகும் இயற்கையை நாம் காண்கிறோம். இவ்வாறு இயற்கைமீது உணர்வுகள் எற்றப்பட்டமையால் உணர்வுகள் நேரடியாக வெளிப்படவேண்டிய தேவை இல்லாமலாயிற்று. ஆகவே உக்கிரமும் உத்வேகமும் நேரடியாக கவிதையில் பதிவாகவில்லை. இயற்கையின் முகமாக வெளிப்பட்டு வாசகனின் கற்பனையில் அவைநிகழ விடப்பட்டன. சங்க கவிதை வெளிப்படுத்தும் அகநுட்பத்தின் விளிம்பைக்கூட மெளனியின் கதைகள் தொட முடியவில்லை என்பதே என் கணிப்பு . பக்தி மரபில் சங்க கவிதையின் அக இலக்கணம் உள்ளுறையாக பேணப்பட்டது. உத்வேகமும் உக்கிரமும் நேரடியாக மொழியில் வெளிப்பட்டன. அதன் விளைவாக மொழி இசைத்தன்மை கொண்டது. தமிழ் பாவியல்பு அதன் உச்சத்தை தொட்டது நம்மாழ்வார், ஆண்டாள் கவிதைகளில்தான்.அந்த மரபின் தொடர்ச்சியாக மெளனியின் பாவியல்பு வெளிப்பட்டிருந்தது என்றால் அது இசையழகு கொண்ட மொழியை அடைந்திருக்கும். அதுவும் நிகழவில்லை. மெளனி மொழிவறுமைகொண்டதற்கு மேலும் முக்கியமான காரணம் இது.

மெளனியின் மாபெரும் வறுமை அவருக்கு இயற்கையைக் காணும் கண் இல்லை என்ற துரதிருஷ்டத்திலிருந்தே உருவாயிற்று. கற்பனாவாதத்தின் அழுத்தமான பாதிப்பு கொண்ட இந்த படைப்பாளி இயற்கைமீது பரவசமான உறவு கொண்டிருக்கவேண்டும். ஆனால் அவரது கதைகளில் இயற்கையின் சித்திரங்கள் மிக மிகக் குறைவே. ஒன்று அவரது கதாபாத்திரங்கள் இயற்கையைக் காணாமல் தங்கள் அக அரற்றலிலெயே மூழ்கி இருப்பவர்கள். அபூர்வமாகவே அவரது கதைகளில் புற உலகம் வருகிறது. அப்புற உலகம் கூட அதிகமும் தெரு, கோயில் ,வீடு இப்படித்தான். மழை வெயில் காற்று ஒளி என இயற்கையின் முகங்கள் சித்தரிக்கப்படுவது குறைவே.ஐரு விதிவிலக்குகள் மனக்கோட்டை, அதில் ஒரு கோட்டை சொல்லப்படுகிறது; பிறகு அத்துவான வெளி அதில் ஒரு மரம். அவை இரண்டும்கூட வெறும் படிமங்களாக மட்டுமே சொல்லப்படுகின்றன.அவற்றின் மீது கதாபாத்திரங்களின் மனதின் சொற்கள் சென்று படிகின்றன. தன் பிரபலமான 'இயற்கை ' என்ற கட்டுரையில் ரால்ப் வால்டோ எமர்சன் 'இயற்கையே நமக்கு மொழியை தருகிறது ' என்று சொல்கிறார். மொழியை செறிவுறச்செய்வது இயற்கையின் கூறுகள் மொழியில் படிந்து உருவாகும் படிமங்களே. மெளனிக்கு இயற்கை மீதுபற்றும் பரவசமும் இருந்திருக்குமென்றால் அவரது மொழியில் அவரது மனம் எல்லையற்ற படிம உலகமாக விரிந்து பரவியிருக்கும்

ஆக தமிழ் தனக்கு போதவில்லை என்று சொல்லும்போது மெளனி உத்தேசிப்பதென்ன ? அவருக்கு அன்று வரையிலான மரபு போதவில்லை, அவர் முன் வெளித்த இயற்கை போதவில்லை என்றுதான். சன்னல் வழியாக பார்த்து எனக்கு கையளவு வானம் தான் இருக்கிறது ,போதவில்லை என்று சொல்கிறார். இந்த வறுமை மெளனியின் மொழியை ஒத்து வாத்தியத்தில் சுவரம் இசைக்க முயன்ற நாதசுவர வித்வானைப்போல கிரீச்சிட வைக்கிறது. படிமங்கள் இல்லாமல் , பாவியல்பின் இசைத்தன்மையும் இல்லாமல் மெளனி அகத்தை பேச முற்படுகிறார். அப்போது முறிந்து திருகும் சொற்றொடர்களே அதிகமும் உற்பத்தியாகின்றன ' ஆயிரம் வினோத யோசனைகள் அவள் மனதில் புதைந்து மறைந்து மாறுபட்டும் அவளுக்கு வாழ்க்கையில் அலுப்புகொடுக்கத்தான் ஒன்றாகத் தோன்றின. .. ' [குடை நிழல்] நாம் மெளனிகதைகள் முழுக்க சாதாரணமாக காணலாம். மன இயக்கத்தின் அர்த்தம் மீறிய பாய்ச்சல்போக்கை சொற்றொடரால் பிடிக்கமுயலும் முயற்சிகள் இவை. அந்த அளவில் இந்த உடைவுகள் சிதைவுகள் நியாயப்படுத்தக் கூடியவையே. அதேசமயம் சாதாரணமாக கதைசொல்லும்போதும் மெளனி சொல்லாட்சிகளில் திணறுவதைக் காணலாம் ' தொடருபவனை சரிக்கட்ட கோவில் தரிசனம் செய்துவிட்டு அவரையும் இருந்தால் பார்த்து அழைத்துவருவதாகவும் இவன் சுகமாக இங்கு இருப்பதில் தான் திரும்புகாலில் அவனைச்சேருவதாகவும் சொல்லநினைத்தவனை தடுத்து 'என்ன ஒற்றுமை போங்கோ ஸார் மனது. நானே சொல்லவிருந்ததை நீங்கள் செய்துகாட்ட.. ' எனச் சொன்னான், தனக்கு புரிந்ததை இல்லை மன ஒற்றுமை அது இது என்பதிலும் இரு உடல் ஒரு எண்ணமோ அல்லது ஒரு உடல் இரு எண்ணமோ ஆக ஒன்றிலும் நம்பிக்கை இல்லை என்பதை-- காதலைப்பற்றி தன் எண்ணமும் அநுபவமும் நினைவுக்கு வர இவன் உடம்பு கூசிக் குறுகியது, வருத்தமாகவும் இருந்தது . ' [அத்துவான வெளி]

இதைமீறி மெளனி பயணிப்பது அவரது மன அரற்றல் தற்செயலாக சென்று ஓர் அந்தரங்கப்படிமத்தில் முட்டும் போது மட்டும்தான். அப்போது அவரது மொழி தன் பலவீனமான இயல்பிலெயே கவித்துவத்தை அடைந்து விடுகிறது . 'ஆழித்தண்ணீரில் எல்லை பிரித்து கோடிட்டதுதான நம் வாழ்க்கை ? ' போன்ற உதிரியான வரிகள் மொத்த உரைநடையிலிருந்து தெறிக்கும் இடங்கள் மெளனியின் உரை நடையில் சாத்தியாமாகியிருக்கின்றன. அபூர்வமாக ஒரு உரைநடைப்பகுதியே செறிவான கவித்துவத்துடன் அவருக்கு வாய்த்துவிடும். உதாரணமாக இவ்வரிகள். 'சிற்சில சமயம் இயற்கையின் விநோதமான அழகுத்தோற்றங்கள் மனதிற்குசெல்லும் நேர்பாட்டையை கொள்ளும்போது தன்னை மறந்து அவன் மனம் ஆனந்தம் அடைவதுண்டு. மற்றும் சிற்சில சமயம் தன்னால் கவலைகளை தாங்க முடியாது என்று எண்ணும்போது தன்னை விட காற்று அழுத்தமாக தாங்கும் என்று எண்ணி தன் கவலைகளைக் காற்றில் விடுவான்.ஆனால் சூல்கொண்ட மேகம் மழையை உதிர்ப்பதேபோன்று அவை காற்றில் மிதந்து பிரிந்து உலகையே கவலைமயமாக்கிவிடும் ... '[பிரபஞ்சகானம்] இதில்கூட தன்கவலைகளை என மீண்டும் சொல்லியிருக்கவேண்டியதில்லை என்பதை நாம் கவனிக்கலாம்.

சிதறித்தெறிக்கும் சொற்றொடர்கள்மூலம் மன உணர்வுகளை சொல்வதென்பது இலக்கியவாதிமுன் எப்போதும் உள்ள சவால்தான். சிதறுண்ட மொழி எப்போதுமே எரிச்சலையே கிளப்புகிறது. அச்சிதறலின் நம்பகத்தன்மை மூலம் அதை மனக்கிளர்ச்சி கொள்ளச் செய்வதாக ஆக்குவது தான் அக்கலை. மெளனியின் கதைகளில் சில இடங்கள் அதை வெற்றிகரமாகச் சாதித்துள்ளன. 'அவள் தியனத்தின் மகிமை என்னைப் பைத்தியமாக்கி விட்டது. வெறித்து வெறுமே நிற்கச்செய்தது. ஒரு இன்ப மயக்கம், ஒரு பரவசம். திரும்பிய அவள் என்னைப் பார்த்ததும் கண்டுகொண்டுவிட்டாள்.எதிரில் நின்ற தூணை உன்னிப்பாய்சவள் சிறிதுநேரம் பார்த்தாள். என் வாக்கின் அழியாத சாட்சியாக அமைந்து நின்ற அந்த யாளி எழுந்து நின்று கூத்தாடியதைத்தான் நான் பார்த்தேன் ' [அழியாச்சுடர்] .ஆனால் இம்மனநிலையை இதைவிட உக்கிர்மான உடைந்த சொற்றொடர்களில் நாடகீயப் பாக்களில் பிரிட்டிஷ் கவிஞர்கள் சாதாரணமாக சாத்தியமாக்கியிருக்கிறார்கள். *3 தமிழில் ப சிங்காரம் அவரது புயலிலே ஒரு தோணியின் சில இடங்களில் மெளனியின் எக்கதையையும்விட சிறந்த மனஓட்டச் சித்தரிப்பை அளித்துள்ளார்.

பலசமயம் மெளனி தன்னால் சொல்ல முடியாதவற்ைறை சொல்ல முழங்கும் சொற்களை கொட்டிவைக்கிறார் ' எவ்வளவு அபத்தமாகபடுகிறது எல்லாம். ஒரு அல்ப சித்தி கண்டு தாங்க முடியாது மேலே போக வழிகாணாது தவித்துக் கொந்தளிக்கும் மனோவியக்திகளின் இவ்வகை வெளிவிளக்க ஆர்ப்பாட்டம் ஊர்கூட்டும் தமுக்கடி தமாஷா போன்று எவ்வளவு அபத்தமாக படுகிறது!எல்லாவித பிரம்மாண்டத்தோற்றமும் ஒரு அல்ப சித்தியின் அல்ப பவிஷாசையின் வெளிவிளக்கமாகத்தானே தோற்றம் கொள்ளுகிறது ? இரவின் அந்தகார இருளைக்காண ஒரு சிறு ஒளிப்பொறி போன்றாக முடியுமா இப்பகல் தீவட்டிகளின் ஒளிகாட்ட முயலுதல்கள் ? எல்லாம் மாறி மறைய பாழடையத்தானே தோற்றம் கொள்கிறது. ' [மனக்கோட்டை] இவற்றில் மனோவியக்தி போன்ற சொல்லாட்சிக்கு சம்ஸ்கிருதம் அர்த்தம்கொடுக்காது. பவிஷாசை என்பது என்ன மொழி என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இச்சொற்றொடரை இவ்வாறு மாற்றித்தான் நல்ல வாசகன் வாசிப்பான். ' எவ்வளவு அபத்தமாகப் படுகிறது எல்லாம். ஒரு சிறு தோற்றம் கண்டே கொந்தளிக்கும் எளிய மனங்களின் இந்த ஆர்ப்பாட்டம் ! எல்லாவிதப் பிரம்மாண்டத்தோற்றமும் ஒரு எளிய ஆணவத்தின் வெளிவிளக்கமாகத்தானே தோற்றம் கொள்ளுகிறது ? இரவின் பேரிருளைக் காட்டும் சிறு ஒளிப்பொறிக்கு நிகராகுமா பகல்தீவட்டியின் யத்தனங்கள் ? அனைத்துமே உருமாறி வெறுமையில் முடிபவைதானே ? ' .

மெளனியின் சாதனை

இந்த நீண்ட கட்டுரை பெரும்பாலும் மெளனியை எதிர்மறையாக விளக்கியபடியே வந்திருப்பதாக படலாம். மெளனி என்ற எழுத்தாளர்மீது ஏற்றப்பட்டுள்ள தேவையற்ற அணிகலன்களை கழற்றி அவரை வாசிக்கும் முயற்சியே அப்படியொரு தோரணையை அவசியமாக்கியது. மெளனி நுண்ணிய மன ஓட்டங்களை எழுத முனைந்தவர். இலட்சியவாத நோக்கும் சீர்திருத்த வேகமும் ஓங்கி நின்ற அக்காலகட்டத்தில் அதற்கு இய்ல்பான நல்ல வாசிப்பு கிடைப்பது சிரமமானதுதான்.ஆகவே விமரிசகர்கள் அவர்மீது கவன ஈர்ப்பு செய்ததில் தவறில்லை. மேலும் அக்கால இலக்கியநோக்கில் உபதேசம், உரையாடல் தொனியே மிகுந்திருந்தது. சொல்லப்படாத எதையும் வாசிக்கும்படி வாசகன் தயார் நிலையில் இல்லை.ஆகவே மெளனி கதைகளின் உள்ளமைதி குறித்து விமரிசகர்கள் பேசியதும் இயல்பேயாகும். அம்முயற்சி கடுமையாக நிராகரிக்கப்பட்டபோது விமரிசகன் மேலும் அழுத்திச் சொல்ல வேண்டியிருந்தது.

மெளனியை முன்வைத்த க. நா. சுப்ரமணியம் 'ஒதுங்கி நின்று ஒரு குறிப்பிட்ட கோணத்தில் நோக்கிய பூராவையும் கனமான விஷயத்தை ஏற்க மறுக்கிற மெலிந்த வார்த்தைகளில் சொல்லி விடுகிற காரியத்தை மெளனி சாதித்திருக்கிறார் . இந்த அளவுக்கு இந்த சாதனையைசெய்து வெற்றி பெற்றவர்கள் என்று இன்றைய தமிழ் சிறுகதையில் வேறு ஒருவரையும் சொல்லமுடியாது .அவர் நடையும் நோக்கும் பூரணமானவை. இந்த அம்சம் சிறந்தது தனிப்பட்டது என்று பிரித்தெடுக்க முடியாது .. ' [க. நா. சுப்ரமணியம் 1959ல் எழுதிய கட்டுரை] என்று சொல்லியது மிகவும் மிகையான கூற்று. புதுமைப்பித்தனின் செல்லம்மாள், கபாடபுரம் போன்ற கதைகள் அளவுக்கு முழுமை கொண்ட சிறுகதைகள் எதுவுமே மெளனியின் உலகத்தில் இல்லை. க. நா. சுப்ரமணியம் சொல்லும் சிறப்புகள் இரண்டுமே ஏற்க முடியாதவை, மெளனி தன் எல்லையை மீறியே கனமான சொற்களை , சிக்கலான சொற்றொடர்களை கையாண்டிருக்கிறார். அவரிடம் எளிமை மிக குறைவே. இரண்டு அவரது எந்த ஆக்கமும் முழுமையானதுமல்ல .

முன்னோடியின் இக்கூற்று மீண்டும் மீண்டும் தமிழில் வழிமொழியப்பட்டுள்ளதே ஒழிய மாறி மாறி வந்த இலக்கிய அலைகளால் மறுபரிசீலனை செய்யப்படவில்லை. மெளனி கதைகள் மீது தன் மீமெய்யியல் அலைபாய்தல்களையெல்லாம் சுமத்திய பிரமிள் மெளனியை சுற்றி மீண்டும் ஒரு சொல்வேலி அமைத்தார். அடிப்படை மார்க்ஸிய விமரிசனம் மெளனியில் அவர்களுடைய வழக்கமான உபகரணங்களைப் போட்டுப்பார்த்து வரது சமூகப்பொறுப்பு என்ன, அவரது கருத்தியலடிப்படை என்ன என்பது போன்ற வினாக்களை எழுப்பி அவரை முற்றாக நிராகரித்து அமைதி கொண்டது.உண்மையில் தமிழில் நவீனத்துவ உச்சம் கொண்ட எழுபதுகளில், நவ மார்க்ஸிய ஆய்வுகள் உருவான எண்பதுகளில், நவீனத்துவம் மறுக்கப்பட்ட தொண்ணூறுகளில் மெளனி மறுபரிசீலனைக்குள்ளாகியிருக்க வேண்டும். மெளனி குறித்து தொடர்ந்து பேச்சு இருக்கிறது ஆனால் ஆழமான ஆய்வுகள் உருவாகவில்லை . டாக்டர் ஜி ஆர் பாலகிருஷ்ணன் ஃப்ராய்டிய அடிபப்டையில் 'சாவில் பிறந்த சிருஷ்டியை ' பற்றி நிகழ்த்தியயாஅய்வும், மொழியியல் அடிப்படையில் டாக்டர் எம் டி முத்துக்குமாரசாமி நிகழ்த்திய ஆய்வும் குறிப்பிடத்தக்கவை. மெளனியின் நடை புறவுலகின் திடத்தன்மையை திட்டமிட்டு நிராகரிக்கிறது என்பதநை மட்டுமே எம் டி முத்துக்குமாரசாமியால் கண்டு சொல்ல முடிந்தது. ஆக நாம் மெளனியை அவரைச்சுற்றியுள்ள பிரமிப்பை தாண்டித்தான் அணுக வேண்டியுள்ளது.

இதுவரை சொன்னவற்றை இப்படி தொகுத்துக் கொள்ளலாம். 1] மெளனியின் துவக்கம் நடுத்தர வற்கம் நவீனக் கல்விமூலம் புதுவகை ஆண்பெண் உறவை கண்டபோது ஏற்பட்ட தயக்கம், அதன் விளைவான ஏக்கம் ஆகியவற்றிலிருந்துதான் 2] மெளனி உருவாக்கியது பகற்கனவின் உலகம் 3] மெளனி மீதான நேரடி பாதிப்பு பிளாட்டானிய காதலையும் அதன் மர்மமான ஆழத்தையும் முன்வைத்த பிரிட்டிஷ் கற்பனாவதக் கவிமரபு 4] மெளனி கதைகள் அவரது விருப்பக் கற்பனையின் இயல்பைக் கொண்டிருப்பவையாதலால் கதாபாத்திரங்கள் சூழல் எதுவுமே புறவயத்தன்மை கொண்டவையாக இல்லை.காவற்றில் கதையின் இலக்கணம் செயல்படவில்லை 5] அவற்றில் அழகியல்வடிவம் கவிதையை சார்ந்தது, திறனற்ற தளர்வான மொழியில் முன்வைக்கப்பட்ட உரைநடை கவிதைகள் என அவற்றை சொல்லலாம் 6] மெளனியின் மொழி மரபின் வேர்ப்பற்றோ இயற்கைமீதான அவதானிப்பின் ஒளியேற்போ இல்லாமல் வெளிறியது. 7] மெளனியின் மொழி அந்தரங்க படிமத்தைக் கண்டடையும்போது மட்டும் கவித்துவ உச்சம் நோக்கி நகர்கிறது.

இவற்றின் அடிப்படையில் மெளனியின் இடமென்ன என்று பார்க்கலாம். முக்கியமான விஷயம் மெளனி நம் உரைநடை இலக்கிய மரபில் ஒரு முன்னோடி என்பதே . நமது நீண்ட மரபு செய்யுளால் ஆனது. இங்கே உரைநடை இலக்கியம் உருவானபோது செய்யுளின் பிடியிலிருந்து விலகுவது எளிய செயலாக இல்லை. நவீனகாலத்தில் வாழ்ந்த திரு.வி.கல்யணசுந்தரனார் , மறைமலை அடிகள், மிகச்சமீபகாலத்திய ரா.பி.சேதுப்பிள்ளை ஏன் சமகாலத்தவர்களான பெருஞ்சித்திரனார் போன்றவர்கள் எல்லாம் செய்யுளின் நெடி அடிக்கும் உரைநடைகளையே கையண்டிருக்கின்றனர். உரைநடையின் சாத்தியங்கள் தமிழில் பரிசீலிக்க்கப் படாத காலகட்டத்தில் எழுதியதன் மூலம் மெளனி ஒரு வழிகாட்டியின் இடத்தை கொண்டிருக்கிறார். உரைநடையின் முரணியக்கம் இரு போக்குகளினாலானது அதுவரையிலான மரபின் போக்கு ஒன்று. கல்வியின் வழியாக கிடைப்பது இது. புறவயமானது .இன்னொன்று ஒரு தனி மனிதனின் அகையக்கத்தின் மொழிப்பதிவினாலானது. முற்றிலும் அகவயமானது .எல்லா உரைநடையிலும் இவ்விரு போக்குகளும் ஒரு விகிதத்தில் முயங்கியிருக்கும். திரு.வி .கல்யாணசுந்தரனாரின் உரைநடையில் புறவய அம்சம், கல்வி உருவாக்கும் உரைநடை மேலோங்கி அவரது அகவய உரைநடை மிகவும் பலவீனப்பட்டுள்ளது . அக்காலகட்ட தமிழ் நடையில் கணிசமானவை அப்படிப்பட்டவையே. அவற்றுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட உரைநடை மெளனியின் உரைநடை. அது பெரிதும் அகவயமானது. மன ஓட்டத்தையே நடையாக பின்தொடர முயல்வது.

என் பார்வையில் நல்ல உரைநடை என்பது கல்வி மூலம் மரபின் எல்லா சாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு தனிப்பட்ட மன ஓட்டத்தின் சுதந்திரத்தையும் தனி அடையாளத்தையும் அடையக் கூடிய ஒன்றாகும். தமிழிலக்கியத்தில் புதுமைப்பித்தன், ப.சிங்காரம்,அசோகமித்திரன், சுந்தர ராமசாமி ,தி.ஜானகிராமன், சுஜாதா ஆகியோரின் நடைகள் சிறந்தவை என்று சொல்லமுடியும். மெளனியின் உரைநடை சிறந்தது அல்ல. காரணம் அதில் கல்வி மூலம் பெறும் மரபின் சிறப்புகள் இல்லை. அது முழுமுற்றாக அகவய நடை. ஆனால் அன்றைய புறவய நடைகளுக்கு சவாலாக அமைந்து உரைநடையின் அகவய இயக்கத்தை அழுத்திக்காட்டி ஒரு முன்னகர்வை அது உருவாக்கியது .ஆகவே தான் அதற்கு தமிழிலக்கியத்தில் மிக முக்கியமான இடம் உள்ளது. மெளனிக்கு பிற்ப்[ஆடு தமிழில் அகவய நடையை முயன்ற எல்லாரிலுமெ சிறிதளவாவது மெளனியின் நடையின் சாயல் உள்ளது . [ஒரு கட்டத்தின் 'இவனுக்கு அது அப்படியோ இல்லை இப்படியோ என்று தோன்றுவதாகப்பட்டு அப்படி நினைக்கத்தலைப்பட்டான்... ' என்றெல்லாம் அதீதமாக எழுத ஆரம்பித்து கொன்று போட்டார்கள் மன்னன்கள்] மெளனியின் முக்கியமான சாதனை இதுவேயாகும்.

மெளனி புத்திசாலி. அவர் குறைவாக எழுத முடிவுசெய்ததுதான் அவரது படைப்புத்திறனின் சான்று. ஏறத்தாழ முப்பது வருட இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் எழுதிய கதைகளில் கூட மணிக்கொடி கால கட்ட மனநிலையும் நடையும் அப்படியே நீடிப்பதை திலீப்குமார் அவதானிக்கிறார். மெளனியில் வளர்ச்சியை எதிர்பார்க்கக முடியாது, ஏனெனில் அவரது படைப்புலகமே ஒரு சிறு புள்ளியில்தான் இயங்குகிறது . மெளனி இரண்டு கதைகளையே மீண்டும் மீண்டும் எழுதினார். ஒரு பெண்ணை சிறுவயதில் கண்டு பின் மீண்டும் சந்திப்பது [பிரக்ஞை வெளியில்,நினைவுச்சுவடு,சிகிழ்ச்சை,அழியாச்சுடர்,ஏன் ?] அல்லது விபச்சாரியுடனான ஆழமான உரையாடல்[ குடை நிழல்.உறவு பந்தம் பாசம்] இவ்விரு அம்சங்களும் கலந்த கதைகள் உள்ளன. மாறி மாறி வரும் வாழ்க்கையின் விதவிதமான வ்ண்ணங்கள் இல்லத நிலையில் மெளனி இவ்வளவுதான் எழுதியிருக்க முடியும். இந்த சிறிய உலகில் ஒப்பீட்டளவில் அவர் அடைந்த கவித்துவ வெற்றிகள் அதிகமாக உள்ளன என்பது அவரது இலக்கிய சாதனையே. பிரக்ஞை வெளியில் ,அழியாச்சுடர், பிரபஞ்ச கானம், அத்துவான வெளி,மனக்கோட்டை ஆகிய கதைகளில் பொதுவாக கவித்துவம் மிக்க வரிகளினாலான உரைநடைப் பகுதிகள் பிடிமீறி செல்லும் மன எழுச்சியை எம்பி தொட்ட மொழியின் பதிவுகள் என காணக் கிடைக்கின்றன. நவீனத் தமிழிலக்கியத்தில் இதற்கிணையான மன எழுச்சியின் கணங்களை மிக குறைவாகவே நம்மால் காணமுடிகிறது.

மனிதனை மீறிய பெரும் வல்லமைகளின் முன் சொல்லிழந்து நிற்கும் கணங்களை மெளனியின் கதைகள் பல தருணங்களில் தீவிரமாக அடையாளப் படுத்துகின்றன. உச்ச கட்ட வெப்பம் ஒன்று கடந்து சென்ற பாதையில் உள்ள பொருட்கள் நெளிந்துருகி இருப்பதைக் கொண்டு அதை அனுமானிப்பதுபோல மெளனியின் சிதைந்த மொழிமூலம் அக்கணங்களை அறிவதே அவரது படைப்புலகின் மூலம் நாம் அடையும் முக்கியமான அனுபவமாகும். தமிழிலக்கியத்தின் அந்தக் காலகட்டம் நவீனக் கவிதைக்கு முந்தையது என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். நுண்ணிய மனநிலைகளை நோக்கி இலக்கியத்தை கொண்டு செல்லும் முயற்சிகள் அன்றைய உரைநடையில் மிகக் குறைவே. உரைநடை உலகாயத வாழ்வின் தளங்களை சொல்வதற்குரிய நேரடியான ஊடகம் என்ற புரிதலேபொதுவாக இருந்தது. புதுமைப்பித்தன் கூட தன் பெரும்பாலான கதைகளில் அந்த நம்பிக்கையையே கொண்டிருந்தார் . சொல்லப்பட்டாத விஷயங்கள் இடைவெளிகளில் செறிந்த கூறுமுறை என்பதற்கான உதாரணங்களை மெளனியின் காலகடத்தில் நம்மால் காணமுடிவதில்லை .அந்தச் சூழலில் மெளனியின் படைப்புகள் குறிப்பால் உணர்த்தப்படும் நுண்ணுணர்வுகளின் தொகையாக அமைந்தது தமிழின் முக்கியமான சாதனையே ஆகும். கவிதையும் கதையும் சந்திக்கும் ஒரு புள்ளியை மற்ற இந்திய மொழிகளுடன் ஒப்பிடும்போது மிக முன்னதாகவே மெளனி தமிழில் தொட்டுக்காட்டிவிட்டார். தமிழ் சிறுகதையில் கவித்துவக் கூறுகள்மேலோங்கி இந்திய சிறுகதைகள் அது ஒரு தனித்தன்மை கொள்ள மெளனி ஒரு முக்கியமான காரணம் .

மெளனி கதைகளில் உருவாகும் கற்பனாவாதம் சார்ந்த மனக்கிளர்ச்சியை நமது நவீனத்துவ இலக்கிய அலை சீக்கிரமே இழந்து விட்டது. அதன் சவால்கள் அடக்கம், அமைதி , உட்குறிப்புத்தன்மை ஆகியவற்ரைநோக்கி நகர்ந்துவிட்டன. அதாவது பாவியல்புக்கு[ லிறிசிசம்] நமது சிறுகதையில் இடமேஇல்லை என்ற நிலை சீக்கிரமே உருவாகி விட்டது . நவீனக் கவிதையில் மட்டும் அது சற்றே எஞ்சியிருந்தது. நவீனக் கவிதையும் சிறுகதையும் நவீனத்துவத்தின் இலக்கண வரம்புகளையும் மன இயல்புகளையும் மீறி செல்ல முயலும் இன்று நாம் மெளனியின் உத்வேகத்தைப் பின் தொடரும் மொழியை மீண்டும் முயன்று பார்க்க வாய்ப்புள்ளது. அடுத்த கட்ட எழுத்துக்களில் அப்படி உத்வேகத்தை தொட முயலும் பல்வேறுபட்ட மொழிச்சாத்தியங்களை நாம் காணமுடிகிறது.

மெளனியை நாம் இன்று அவரது சில கதைகளில் உள்ள உத்வேகத்துக்காகவே இலக்கிய முன்னோடி என்று சொல்கிறோம். மெளனியின் சாதனை அந்த உத்வேகம் நிரம்பிய சொற்பரப்புகள்தான். அவை நமக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் மொழிநிகழ்வுகள். அவற்றை நம் உரைநடை இலக்கியத்தின் முன்னோடி முயற்சிகள் என்ற முறையில் அங்கீகரிப்பதும் , அவற்றின் சாரமான மனவேகத்துடன் நம்மை அடையாளம் கண்டு கொள்வ்தும், அவற்றை உள்வாங்கிக் கொள்வதும் இன்றியமையாதனவே. அவரை எழுத்தாளர்களின் எழுத்தாளர்[ சி சு செல்லப்பா] , சிறுகதைத் திருமூலர் [புதுமைப்பித்தன்] போன்ற அடையாளங்களிலிருந்து விடுவித்துத்தான் நாம் வாசிக்கவேண்டும். முன்னோடிகளின் பலங்களை மட்டுமல்ல பலவீனக்களை அறிவதும் இலக்கிய வளர்ச்சிக்கு இன்றியமையாததே.

[தமிழினி வெளியீடாக வரவிருக்கும் ' நிழல் சென்ற பாதை:தமிழ் நவீனத்துவத்தின் தடங்கள் ' என்ற கட்டுரை தொகுப்பில் இடம் பெறும் கட்டுரை . ]

==

*1 What so false as truth is,

False to thee ?

Where the serpent 's tooth is

Shun the tree [A Woman 's Last Word]

*1

The depth and passion of its earnest glance [My Last Dutches]

*3

'Be sure I looked up her eyes

--Happy and proud; at last I knew

Porphyria worshipped me; surprise

--Made my heart swell, and still it grew

--While I debated what to do.

That moment she was mine, mine, fair,

--Perfectly pure and good; I found

A thing to do, and all her hair

--In one long yellow string I wound

--Three times her little throat around,

And strangled her. No pain felt she;

--I am quite sure she felt no pain. '

( 'Porphyria 's Lover ' )

*4

If you get simple beauty and nought else

You get about the best thing God invents

*5

Who 'd stoop to blame

This sort of trifling ? Even had you skill

In speech -- which I have not -- to make your will

Quite clear to such an one, and say, 'Just this

Or that in you disgusts me; here you miss,

Or there exceed the mark ' -- and if she let

Herself be lessoned so, nor plainly set

Her wits to yours, forsooth, and made excuse

-- E 'en then would be some stooping; and I choose

Never to stoop. Oh sir, she smiled, no doubt,

Whene 'er I passed her; but who passed without

Much the same smile ? This grew; I gave commands;

Then all smiles stopped together. There she stands

As if alive... [ My Last Duchess ]

[Robert Browning . Dramatic Lyrics]

***

jeyamohanb@rediffmail.com

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்