Aug 13, 2009

மௌனி- ஒரு புதிய அலை-எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன்  கதாவிலாசம்

குளத்தில் எறிந்த கல், தண்ணீரின் மீது தவளை நீந்துவதுபோல சிற்றலையை உருவாக்கிவிட்டு அடியாழத்தில் சென்று நிசப்தமாக மூழ்கிக் கிடக்கத் துவங்கிவிடுகிறது. நல்ல கதைகளும், குளத்தில் எறிந்த கல் போலத்தான் போலும்! அது உருவாக்கும் சிற்றலையின் மடிப்புகள் விசித்திரமாக இருக்கின்றன. ஒரு கல் உருவாக்கும் அலையைப் போன்று இன்னொரு கல் உருவாக்குவதில்லை. ஒவ்வொரு கல்லும் ஒரு புதிய அலை வடிவை உருவாக்குகின்றன. அது தண்ணீரின் மீது கல் நடனமிடும் அரிய தருணம்.
கல்லூரி நாட்களில் வகுப்பறையைவிடவும் நூலகத்தில் அதிக நேரம் செலவிட்டிருக்கிறேன். யாருமற்ற நூலகத்தின் தூசியடைந்த புத்தக அடுக்குகளில் ஏதோ புதைபொருட்களைக் கண்டெடுப்பதைப்போல பால்சாக்கையும் ஜி.நாகராஜனையும் செகாவையும் கு.ப.ராவையும் தேடிப் படித்துக் கொண்டிருந்தேன். அந்த நாட்களில் எனக்கு விருப்பமாக இருந்த எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி மட்டுமே. ஒருவேளை, அவர் ஊர் ஊராகச் சுற்றியலைந்தவர் என்பதுகூட அவரை
நான் விரும்புவதற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும்.
தமிழ் எழுத்தாளர்களை வாசிக்கும்போது என்னை அறியாமலே ஓர் அலட்சியம் இருக்கும். என்ன பெரிதாக எழுதிவிடப் போகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு தான் வாசிக்கத் துவங்குவேன். அந்த நினைப்பை முதலில் சிதறடித்தவர் புதுமைப்பித்தன்.
புதுமைப்பித்தனின் ‘மகாமசானம்' என்ற கதையைப் படித்தபோது, அதில் வரும் குழந்தையும் பாவா பூச்சாண்டியும் குகை ஓவியங்களைக் கண்டுபிடித்துப் பார்த்ததுபோல நம்ப முடியாத ஆச்சரியமாக இருந்தன. அவரது கத்திவீச்சு போன்ற உரைநடை, மனதில் அது வரையிருந்த அனுமானங்களைச் சிதறடித்து, தமிழ்க் கதைகள் உலகத் தரமானவை என்பதை நிரூபிப்பதற்குச் சாட்சியாக இருந்தன. புதுமைப்பித்தன் ஒரு கட்டுரையில் சிறுகதையின் திருமூலர் என்று மௌனி யைக் குறிப்பிட்டிருந்தார். அதனால் தானோ என்னவோ, மௌனியைப் படிப்பதற்குச் சற்றே தயக்கமாக இருந்தது. காரணம், அந்த நாளில் கடவுள் மறுப்பில் தீவிரமாக இருந்தேன். திருமூலர், திருஞானசம்பந்தர் மீதெல்லாம் காரணமற்ற கோபமிருந்தது. நிச்சயம் புதுமைப்பித்தனைவிடவும் பெரிய ஆள் தமிழில் இருக்க முடியாது என்று மௌனியைப் படிக்காமலே இருந்தேன்.
என் நண்பன் மௌனியின் தீவிர ரசிகனாயிருந்தான். அவன் ‘மௌனி யைத் தவிர தமிழில் சிறந்த எழுத்தாளர் வேறு யாருமே இல்லை' என்று சண்டையிடுவான். அவனை மறுக்க வேண்டும் என்பதற்காகவே மௌனியைப் படிக்கத் துவங்கினேன்.
‘அழியாச்சுடர்' என்ற கதையை வாசிக்க ஆரம்பித்தபோது, மனதில் எதிர்ப்பு உணர்ச்சி கொப்பளிக்கத் துவங்கியது. யாரோ ஒருவன் ஜன்னலில் அமர்ந்தபடி நாளெல்லாம் மரத்தைப் பார்த்துக்கொண்டேயிருக்கிறான். பிறகு, தான் எப்போதோ பார்த்த பெண்ணைப் பற்றிப் பேசுகிறான். கோயில், பிராகாரம், சாயைகள், யாழி என்று எழுதுகிறாரே, அதைவிடவும் கதாபாத்திரங்களுக்குப் பெயர் வைக்கக்கூட முடியாமல் எதற்கு எழுதுகிறார் என்று ஆத்திரமாக வந்தது. ஆனாலும், பதினைந்து கதைகளை ஒரே இரவில் வாசித்துவிட்டு, மறுநாளே புத்தகத்தைத் தந்துவிட்டேன்.
நண்பன் அதை எதிர்பார்த்திருக்கக் கூடும். சிரித்துக்கொண்டே, ‘மௌனியை உனக்கு ஒரு நாள் பிடிக்கும் பாரேன்' என்றான். நான் நம்பவில்லை. காலம், நாம் விரும்புவதை நாமே புறக்கணிக்கும்படியாகவும், வெறுப்பதை நாமே நெருங்கிச்சென்று நேசிக்கவும் வைக்கும் விசித்திர விளையாட்டை நிகழ்த்துவதை அன்று தெரிந்திருக்கவில்லை.
மௌனியைப் புரிந்துகொள்வதற்கு ஒரு சிறு சம்பவம் காரணமாக இருந்தது. அதன் பிறகு, மௌனியை மிக நெருக்க மானவராக உணரத் துவங்கி இன்று வரை தமிழின் தனித்துவமான எழுத்தாளர் மௌனி என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
அந்த நிகழ்வு நடந்தபோது எனக்கு இருபத்திரண்டு வயது. கல்லூரி நண்பன் ஒருவனைக் காண்பதற்காக ராஜபாளை யம் வந்திருந்தேன். இருவருமாக நடந்தே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக் குச் செல்வது என்று புறப்பட்டோம். காரணம், மார்கழி மாதத்தின் விடிகாலை யில் நிறைய இளம்பெண்கள் நடந்தே ஸ்ரீவில்லிபுத்தூர் வரை செல்வார்கள். பதினோரு கிலோமீட்டர் தூரம் என்பது பெரிதாகத் தெரியவில்லை. அத்துடன், அந்த வயதில் இளம்பெண் களின் நிழல்களைக்கூட வியப்பாகப் பார்க்கும் ஆசை இருந்தது.
விடிகாலை நான்கு மணிக்கு நாங்கள் நடக்கத் துவங்கியபோது இருள் கலைந்திருக்கவில்லை. ஊரெங்கும் புகையைப் போல வெம்பா படர்ந்திருந்தது. மெல்லிய பனியின் காரணமாக உதடு தானே நடுங்கத் துவங்கியது. நண்பனும் நானும் வடக்கு நோக்கி நடக்கத் துவங்கினோம்.
மரங்கள், வீடுகள், தெருக்கள் யாவும் பனியில் மூழ்கி நிசப்தித்திருந்தன. சாலை ஈரமேறியிருந்தது. பஞ்சுப் பேட்டையைக் கடந்தபோது, மெல்லிய முணுமுணுப்புக் குரல் கேட்டது. யாரோ பாடுகிறார்கள். ‘கீசுகீ சென்றேங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சு அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே, காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஒசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?' திருப்பாவையைப் பாடியபடி யாரோ இருளில் கடந்து செல்வது தெரிகிறது. முகம் தெரிய வில்லை. ஆனால், பாடல் வரிகள் மனதின் அடியாழத்திலிருந்து ஒரு சுகந்தத்தை உருவாக்குகின்றன.
நாவில் ஆண்டாளின் பாடல் பாலின் ருசியைப் போலத் தித்திக்கிறது. அந்தக் குரல் இரண்டு பெண்களுடையது. திரிக்கப்பட்ட பஞ்சைப்போல பிரிக்க முடியாதபடி ஒன்று சேர்ந்த குரல்களாக இருந்தன. அவர்களின் முகத்தைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அவசரமாக அருகில் நடந்தோம். அவர்கள் சீரான வேகத்தில் நடந்து கொண்டிருந்தார்கள். அருகில் வருபவர் களைக் கவனிக்கவே இல்லை.
கலையாத இருளும் பனியும் நிசப்தமும் பாதையை மயக்கம்கொள்ளச் செய்திருந்தன. சாலையில் அவர்களின் பாடல் தொலைதூரம்வரைதனியேநீந்திச் சென்றுகொண்டிருந்தது. இருளின்மீது ஆத்திரமாக வந்தது. ‘அருகில் நடந்து செல்லும் இளம் பெண்ணின் முகத்தைக் காணவிடாமல் இன்னமும்ஏன் காத்திருக்கிறாய்? கலைந்து போய்விடேன்' என்று மனம் இருளைச் சாடியது. மிக நெருங்கி, அந்தப் பெண்களை விரல் தொடும் தூரத்தில் நாங்கள் நடந்துகொண்டிருந்தோம்.
அந்தப் பெண் பாடிய பாடலில் வந்த ஆனைச்சாத்தன் எனும் வயலில் தென்படும் கீச்சாங்குருவிகளில் ஒன்றாவது நேரில் எதிர்ப்படக்கூடாதா, அதைப் பார்ப்பதற்காக அவள் தன் முகத்தைத் திருப்பமாட்டாளா என்று ஆதங்கமாக இருந்தது. நதியில் ஓடம் செல்வதுபோல பாடல் வரிகள் மாறிக் கொண்டேயிருந்தன. இரண்டு நிழல் களைப்போல, அவர்கள் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள்.
முன்னறியாத சுகந்தம் அவள் கூந்தலிலிருந்து, தரையிறங்கி வழிந்து கொண்டிருந்தது. அவள் இந்த உலகத் தையே தன் நறுமணத்தால் மூழ்கடித்து விடப் போகிறவளைப்போலச் சென்று கொண்டிருந்தாள். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகே வந்துவிட்டோம்.
‘அம்பரமே, தண்ணீரே, சோறே, அறஞ்செய்யும் எம்பெருமான் நந்த கோபாலா' என அவள் கண்ணனைப் பாடிக்கொண்டிருந்தாள். ஓடி விளையாடும் குழந்தையைத் துரத்திப் பிடிக்கும் தாய் போல, அத்தனை நெருக்கமான பாவனை.
விடிகாலையின் வெளிச்சம் உலகின் காட்சிகளைப் புலப்படுத்தத் துவங்கிய போது, நாங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரின் மடவார் வளாகத்தின் அருகே வந்திருந் தோம். வெளிச்சம் உலகின் கருணை போல வழிந்தோடி, அவர்களின் சௌந்தர்யத்தை வெளிப்படுத்தியது. எத்தனை அழகு... எத்தனை சாந்தம்... சகோதரிகளைப்போலத் தெரிந்த இருவரும் தாயும் மகளும் என்பது அவர்களின் வயதில் தெரிந்தது. இருவரும் ஈரக்கூந்தலில் கனகாம்பரப் பூவைச் சூடியிருந்தார்கள். நெற்றியில் சந்தனக் கீற்று. அரக்கு சிவப்பில் மகள் தாவணி அணிந்திருந்தாள். தாயின் புடவை வெளிர் ஊதா நிறத்தில் பூக்கள் நிறைந்திருந்தது. இருவரது கண்களும் வெண்சோழியை நினைவுபடுத்தின.
விடிகாலை வெளிச்சத்தில் கோயிலின் கோபுரம், பறவை தன் சிறகை விரிப்பதுபோல மெல்ல மேலே எழுந்துகொண்டிருந்தது. சிறுவர்கள் விளையாட்டு முடிந்து, விட்டுச்சென்ற செப்புச் சாமான்களைப்போல நகரின் வீடுகளும் தெருக்களும் சிதறிக் கிடந்தன.
புழுதி படிந்த சாலையில் நின்றபடி இருவரும் கோபுரத்தைப் பார்த்துக் கை கூப்பினார்கள். பிறகு, பெருமூச்சிட்டபடி அதே இடத்தில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து கோபுரத்தை வணங்கினார்கள். எழுந்தபோது அவர்கள் இருவரின் கண்களும் கலங்கியிருந்தன. அழுகிறார்களா? எதற்காக? என்ன மனக்குறை? தங்கள் அழுகையை பூமியைத் தவிர யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் சர்வாங்கமாக விழுந்து வணங்கினார்களா? என்ன துக்கமது? அவர்கள் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளவே இல்லை.
எதற்காக இவர்களைப் பின்தொடர் கிறேன்? வெறும் இனக்கவர்ச்சி மட்டும் தானா? காரணம் புரியவில்லை. ஆனால், சுண்ணாம்புக்கல்லை தண்ணீரில் போட்டதும் கொதிக்கத் துவங்குவதுபோல, மனதில் ஏதேதோ கற்பனைகள் கொதிக்கத் துவங்குகின்றன.
நாங்கள் குற்ற உணர்ச்சியோடு அந்தப் பெண்களைப் பார்த்தபடி இருந்தோம். தரையிலிருந்து எழுந்து கொண்ட பிறகு, முதன்முறையாக அந்த இளம்பெண் எங்களைப் பார்த்துச் சிரித்தாள். அதைச் சிரிப்பு என்று சொல்ல முடியாது. குடத்துத் தண்ணீர் சத்தமின்றித் ததும்புவதுபோல ஒரு புன்னகை அவள் உதட்டில் இருந்து ததும்பிச் சிந்தியது.
‘சிற்றஞ்சிறுகாலை வந்துன்னை சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும்' எனத் திரும்பவும் திருப்பாவை வரிகள் நீண்டன. அவர்கள் மிக வேகமாக தேரடி வீதியைக் கடந்து கோயிலின் உள்ளே போய் விட்டார்கள்.
நாங்கள் கோயிலுக்குள் போனபோது, நூற்றுக் கணக்கில் பெண்கள் ஈரக்கூந்தலும் அவசர நடையுமாகப் பிராகார வெளியில் கடந்து சென்று கொண்டிருந் தார்கள். கோயில் பூக்கடையருகே நண்பன் தன் அண்ணியைக்கண்டு விட்டதால் அவர்களோடு நின்று பேசிக்கொண்டிருந்தான். இதற்கிடையில், நிமிஷத்தில் அந்த இளம்பெண் எனது பார்வையிலிருந்து நழுவி மறைந்திருந்தாள்.
பிராகாரத் தூண்களில் எரிந்து கொண்டிருந்த சுடர்கள் என்னைப் பரிகசிப்பதுபோல தலையாட்டிக் கொண்டிருந்தன. கோயில் முழுவதும் தேடிச் சலித்தும் அவளைக் கண்டறிய முடியவில்லை. முள் முறிந்து காலில் தங்கிவிட்டது போலொரு வலி. ஆத்திர மாக வந்தது. உறவும் பிரிவும் நிமிஷத்தில் நடந்தேறி முடிந்துவிட்டதா?
பிரகாசமான சூரிய வெளிச்சம் தெருவில் ஏறியிருந்த போதும் பிராகாரத்தினுள் இருளின் நடமாட்டம் ஒடுங்கவேயில்லை. மனம் வெளவாலைப்போலத் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தது.
முரசின் சத்தமும் துளசி வாசமும் நிலையில்லாமல் அசைந்து கொண்டிருக்கும் தீபங்களையும் தாண்டி கோயில் முழுவதும் சுற்றியலைந்தேன். அவள் யாழி மண்டபம் கடந்து வெளிவாசல் நோக்கிப் போய்க்கொண்டிருந்தாள். அருகே போவதற்குள் வெளியேறியிருந்த அவள், தன் கையிலிருந்த சில்லறை நாணயங்களை வயதான பிச்சைக்காரர் ஒருவருக்குக் குனிந்து போட்டுவிட்டு நிமிர்ந்தபோது, கூடையிலிருந்து ஒரு துளசிக் காம்பு தவறி மண்ணில் விழுந்தது. அவள் பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் துவங்கியிருந்தாள்.
அவசரமாகப் புழுதியில் கிடந்த அந்தத் துளசியை எடுத்து நாக்கிலிட்டு மென்றேன். சாற்றை விழுங்க முடியவில்லை. திடீரென மனதின் அடியாழத் திலிருந்து மௌனியின் சிரிப்புச் சத்தம் கேட்டது. இந்தச் சம்பவங்கள், நிகழ்வுகள் போலத்தானே மௌனியின் ‘அழியாச் சுடர்' கதையிலும் வருகின்றன. அந்த வரிகள் மனதில் நீந்தத் துவங்கின.
'அவள் பிராகாரத்தைச் சுற்றிவந்து கொண்டிருந்தாள். 'பின்தொடர்' என மனத்தில் மறுக்க முடியாது தோன்றியது. உலகின் நிசப்தத்தைக் குலைக்க அவளுடைய சலங்கைகள் அணிந்த அடிச்சுவடு இன்றி முடியாது போலும். கால் சலங்கை கணீர் என்று ஒலிக்க நடந்து சென்றாள். தூணில் ஒன்றி நின்ற யாளியும் மிக மருண்டு பயந்து கோபித்து முகம் சுளித்தது. பின்கால் களில் எழுந்து நின்று பயமூட்டியது.'
உடனடியாக மௌனியைத் திரும்ப வாசிக்க வேண்டும் என்று தோன்றியது. அவசரமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெனிங்டன் நூலகத்துக்குச் சென்றேன். விடிகாலையில் யார் நூலகத்தைத் திறந்து வைத்திருக்கப் போகிறார்கள்! நூலகம் திறக்கும் வரை காத்திருந்தேன். மௌனியைத் தேடி எடுத்து வாசித்தபோது கண்முன்னே ‘அழியாச் சுடர்' கதை உருப்பெற்று நடந்தேறியது போலிருந்தது. கதையின் நுட்பமும், மொழியும், பெயரில்லாத அந்தக் கதாபாத்திரமும் வாசிக்க வாசிக்க... நெருக்கமாகத் துவங்கியது. அதன் பிறகு மௌனி... மௌனி... என அரற்றத் துவங்கினேன்.
பின்னொரு நாள் திருவெண்காட்டில் உள்ள குளமொன்றில் கோபுர நிழல் அசைந்துகொண்டிருப்பதைக் கண்டபோது, மௌனியின் ‘அழியாச்சுடர்' கதையில் வரும் ஒரு வாசகம் மனதில் அலையாடியது.
எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?
உடலில் ஓடும் ரத்தத்தில் வெள்ளை, சிவப்பு அணுக்களைப்போல கதைகளும் ஏதேதோ நிறங்களில் அணுக்களாக மாறி ஓடிக்கொண்டிருக்கின்றன. நாம் அறியாமல், நம் உடலில் ஓடும் அரூப நதியல்லவா குருதி!
தமிழின் தனித்துவமான எழுத்தாளரான மௌனி, சிதம்பரத்தைச் சேர்ந்தவர். இயற்பெயர் மணி. 'மணிக்கொடி' இதழில் எழுதத் துவங்கி, 'கசடதபற' இதழ் வரை கதைகள் எழுதியவர். கணிதத்தில் பட்டம் பெற்றிருந்த அவருக்கு இசையி லும் தத்துவத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு.
இவரது சிறுகதைகள் 'மௌனி கதைகள்' என்ற பெயரில் வெளியாகியுள்ளன. கதாபாத்திரங்களின் அன்றாட உலகை விவரிப்பதைவிடவும் அவர்களது மனவுலகின் அரிய தருணங்களை வெளிப்படுத்துவதே இவரது பலம்,. இவர் இருபத்துநான்கு கதைகள் மட்டுமே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்