Aug 31, 2010

பச்சைக் கனவு - லா.ச.ராமாமிர்தம்

முதுகு பச்சையாய்க் கன்றிப் போகக் காயும் வெய்யிலில் முற்றத்தில் உட்கார்ந்துகொண்டு நேற்றிரவு கண்ட கனவை மறுபடியும் நினைவில் எழுப்ப முயன்றான். கனவற்ற தூக்கமே என்றுமில்லை. எனினும் விடிந்ததும் அக்கனவுகள் மறந்துவிடும். ஆயினும் நேற்றிரவு கண்ட கனவு அப்படியல்ல. பச்சைக் கனவு.
LAASARAA உடல் மேல் உரோமம் அடர்ந்தது போன்று, பசும் புற்றரை போர்த்து நின்ற நான்கு மண் குன்றுகள். அவை நடுவில் தாமரை இலைகளும் கொடிகளும் நெருங்கிப் படர்ந்த ஒரு குளம், சில்லிட்ட தண்ணீரில் காலை நனைத்துக் கொண்டு அண்ணாந்து படுத்திருந்தான். கைக்கெட்டிய தூரத்தில் பச்சைக் கத்தாழையும் அதன் பக்கத்தில் சப்பாத்திப் புதரும், மேல், ஒரு பச்சை வண்டு ரீங்காரித்துக் கொண்டே வந்து மோதிற்று... “ராமா ராமா ராமா, இன்னிக்கென்ன உங்களுக்கு? இப்போத்தான் கூடத்தில் உட்கார வைத்துவிட்டுப் போனேன். மறுபடியும் வெய்யிலிலே குந்திக் கொண்டிருக்கிறீர்களே! உங்களுக்கென்ன நிலாக்காயறதா?”
”நிலா” என்றதும் மற்றும் ஒரு நினைவு எழுந்தது. நடு நிலவில் வாசலில் கயிற்றுக் கட்டிலில் காத்துக்கொண்டு படுத்திருக்கையில், காத்திருந்த கைப்பிடி அவன் கைமேல் விழுவதும், தெருவின் திருப்பத்தில் நான்கு மண் குன்றுகளின் நடுவில் தேங்கிய குளத்திற்கு அழைத்துச் சென்ற எத்தனையோ முறைகளும், பாதத்தினடியில் தெருவின் பொடி மண் பதிவதும், பச்சையாடை காற்றில் ‘படபட’ என்று அடித்துக்கொண்டு அவன்மேல் மோதுவதும் இப்பொழுது போலிருந்தது.
“நிலவு பச்சைதானே?”
“பச்சையா? யார் சொன்னா வெண்ணிலாயில்லையோ?”
“முழு வெள்ளையா?”
“சுண்ணாம்பு வெள்ளையென்று சொல்ல முடியுமா? ஒரு தினுசான வெண்பச்சை...”
“ஆ, அப்படிச் சொல்லு...”
அது வேண்டுமானால் வெண்பச்சையாகயிருக்கட்டும். ஆனால் அவன் அதை முழுப் பச்சையாய்ப் பாவிக்கச் சற்று இடங்கொடுத்தாலும் போதும்.
கசக்கிப் பிழிந்த இலைச்சாறு போல், நிலவு குன்றுகளின் மீதும், புற்றரை மீதும், தாமரை வாவியின் மேலும் பச்சையோடு பச்சையாய் வழிவதாக நினைத்துக்கொள்வதில் ஒரு திருப்தி, அந்த நினைவில் சற்று நேரம் திளைத்துக் கொண்டிருந்துவிட்டு,
“வெய்யில் எப்படி இருக்கிறது?” என்று கேட்டான்.
“ஐயையோ, இன்னிக்கு ஏன் ஒரு தினுசாயிருக்கேள்? வெய்யில் வெளுப்பாய்த்தானிருக்கும். உள்ளே வாங்க...”
”முழு வெளுப்பா?”
“முழு வெளுப்பு....”
ஆம், அவனுக்கு நினைவு தெரிந்தவரைகூட வெய்யில் வெளுப்புத்தான். அத்துடன் தகிப்பும்கூட. வெய்யிலும் பச்சையாயிருந்தால்!
சற்று நேரம் பொறுத்து அவன் எண்ணத்தை எதிரொலிப்பது போன்று, அவன் மனைவி கண்ணைப் பலமாய்ச் சிமிட்டிக் கொண்டு,
“வெய்யில் பச்சையாயிருக்கும் வேளைகூட உண்டு....” என்றாள்.
அவனுக்கு உள்ளூர அவாத் துடித்தது. வெய்யில் பச்சையாயிருப்பதில் தன் தலையையே நம்பியிருப்பது போல்.
அவன் மனைவி கண்ணைச் சிமிட்டும் சிமிட்டலில், ரப்பைகள் எகிறிவிடும்போல் துடித்தன.
“பச்சையான பச்சை! இலைப்பச்சை! நேற்று சாயங்காலந்தான் உங்கள் மச்சினன், பதினாலு ரூபாய் போட்டு வாங்கி வந்தான்; இதைப் போட்டுண்டு பாருங்கள்,”
“என்ன இது?”
“போட்டுக்கொள்ளுங்களேன் சொல்றேன் - வெய்யிலுக்கு குளுகுளுவென்று பச்சைக் கண்ணாடி. எல்லாம் பச்சையாய்த் தெரியறதோ?”
அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. எப்பொழுதும் போல் அந்தகாரமாய்த்தானிருந்தது.
“அட! உங்களுக்கு ஜோராயிருக்கே!”
“என்ன?”
”மூக்குக் கண்ணாடி போட்டுக் கொண்டால் உங்களைக் குருடு என்று யார் சொல்லுவா?”
அவ்வார்த்தை சுருக்கென்று தைத்தது. உள்லதைச் சொன்னாலும், எவ்வளவு தூரம் தன்னைக் கேலி பண்ணுகிறாள் என்று புரியவில்லை. கண்ணாடியைக் கழற்றி வீசியெறிந்தான். அது கட்டாந்தரையில் பட்டுத் தெறித்து உடையும் சத்தம் இனிமையாய் ஒலித்தது.
“ஐயோ பதினாலு ரூபாய்! என்னத்தைச் சொல்லி விட்டேன் இவ்வளவு ஆத்திரம் பொங்க! இந்த வயசிலே உங்களுக்கு இத்தனை ஆங்காரம் வேண்டாம்!”
எந்த வயதிலே? வயதுண்டோ தனக்கு? அவள் நெறித்த சொடுக்குகள் விரல்களினின்று சொடசொடவென்று உதிர்ந்தன. “தன்னாலே ஒண்ணும் ஆகாவிட்டாலும் கோபம் மாத்திரம் மூக்கைப் பொத்துக்கொண்டு வருகிறது! காலையிலே கண்ணைத் திறந்தால் ராத்திரி கண் மூடறவரை, சகலத்துக்கும் கை பிடித்தே கொண்டு போய் விட வேண்டியிருக்கிறது. இத்தனை சிசுருஷையின் நடுவில் இத்தனையும் போறாது போல் வேளையில் பாதி நேரம் ஊமை, வாயைத் திறந்தால் நிலா பச்சையாயிருக்கா? வெயில் பச்சையாயிருக்கான்னு தத்துப்பித்தென்று கைக்குழந்தை மாதிரி கேள்வி...”
அவள் பழிப்பதெல்லாம் அவன் காதில் விழுந்ததா என்று சந்தேகம். அவன் நினைவு சட்டென்று இன்னொரு எண்ணத்தைத் தொட்டு அதில் முனைந்துவிட்டது.
ஊமையென்றதும் நினைவு, நேற்றிரவு கண்ட கனவில் ஊசிபோல் மறுபடியும் ஏறியது. மேற்கூறியவாறு, அவனாய்க் கற்பித்துக் கொண்ட பட்டை வீறும் பச்சை வெய்யிலில் பசும்புற்றரையில் நீட்டிய கால் தாமரைக் குளத்தில் சில் தண்ணீரில் நனைய அண்ணாந்து படுத்திருந்தான். அவன் பக்கத்தில் அவன் உறுப்பு உறுப்பாய்த் தொட்டு உள்ளந்திரிபு அற உணர்ந்தோர் உருவம் படுத்திருந்தது. கட்டவிழ்ந்து சரிந்த பசுங் கூந்தலிலிருந்து முகத்தில் அலைமோதும் பிரி இது.
அவனையே அள்ளி உண்ணும், பசுமை நிறைந்து, தாமரைக் குளம் போன்ற கண்கள் இவை.
நீங்காத மௌனம் நிறைந்து அம்மௌனத்திலேயே முழுகிப்போன வாய் இது.
அகன்ற மனதில் கிளர்ந்த ஆசை, வெளியும் வர இயலாது, உள்ளும் அடங்க இயலாது, முண்டிய மார்பு இது. பச்சை மேலாக்கினடியில் பட்டுப்போன்ற வயிறு இது.
அவர்களிருவரின் ஆயுளின் இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மூச்சில் அளந்துவிட முயலுவது போன்ற ஆலிங்கனத்தின் அவஸ்தை இது...
“பச்சைக்குழந்தை? பச்சைக்குழந்தை!!...”
அவன் மனைவி அவன் கையைக் கரகரவென்று பிடித்திழுத்து, கூடத்தின் ஊஞ்சலில் உட்கார வைத்துவிட்டு உள்ளே சென்றாள். அப்படியே அவள் மெதுவாய் படுக்கையாய்ச் சாய்த்து, அவனை உட்கார வைத்து அதிர்ச்சியில் ஆடும் ஊஞ்சலுடன் மனதையும் அசையவிட்டுக்கொண்டு, பச்சையைப் பற்றி எடுத்த எண்ணத்தைத் தொடர முயன்றான்.
அவன் கண்ணிருக்கையில் கடைசியாய்க் கண்ட நிறம் பச்சை. அக்காரணம் பற்றிய அந்த வர்ணம் அவனுக்குப் பிடித்த வர்ணமாய், மனதைக் கெட்டியாய்ப் பற்றிக் கொண்டு விட்டது. அக்குன்றுகளிடையில் குளக்கரையில் அவன் பச்சையைப் பெற்ற பார்வையிழந்ததை நினைத்தான். அப்பொழுது என்ன வயதிருக்கும்? பத்திருக்குமா? அவ்வளவுதான்.
மல்லாந்து படுத்தவண்ணம் சூரியனைச் சற்றுநேரம் நோக்கிக் கொண்டிருந்துவிட்டு பிறகு சுற்றும் முற்றும் இருப்பதைப் பச்சையாய்க் காணக் காண அவனுக்கு வியப்பாயிருக்கும். சூரிய ஜோதியில் கண்ணைத் திறந்து காண்பித்துவிட்டு புத்தகத்தை எடுத்துப் பிரித்தால் எழுத்துக்கள் பச்சைப் பச்சையாய் குதிக்கும். பொடிமணல் பச்சைப் பளீரடிக்கும். அது அப்பொழுது அவனுக்கு ஆனந்தமாயிருந்தது. யாருமறியா ஒரு புது விளையாட்டைத் தான் கண்டுபிடித்ததாய் நினைத்துக்கொண்டு விட்டான். அதைத் தானே தன்னந்தனியாய் அனுபவித்தான். அப்பொழுதுதான் ஒரு மாதத்திற்கு முன் தாயை இழந்த துக்கத்தைச் சற்றேனும் மறக்க இவ்விளையாட்டு அவனுக்கு ஆறுதலாயிருந்தது. ஆயினும் அவன் கண்டு பிடித்த மூன்றாம் நாளே, மாவிளையாட்டு தானே முடிவடைந்தது. சூர்ய கோளம் தாம்பாளம் போல் சுழன்று கொண்டே விட்டு விட்டு மின்னுவதை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்கையில், கண் திடீரென்று இருண்டு பார்வை இழந்தது. சப்பாத்தியிலும் கத்தாழையிலும் விழுந்து எழுந்து தட்டுத்தடுமாறி உடலெல்லாம் முள்ளாய் அழுது கொண்டே வீடு வந்து சேர்ந்தது. இன்னமும் நினைவிருக்கிறது.
தலைவாழை இலையில் விளக்கெண்ணெயைத் தடவி அவனை அதில் வளர விட்டிருக்கையில், அப்பா மண்டையிலடித்துக் கொண்டே கூடத்தில் முன்னும்பின்னுமாக உலாவுவது ஞாபகமிருக்கிறது, “மார்க்கடம் - மார்க்கடம்! உன்னைப் பெற்றாளே உன் தாயும்!”
என்னென்ன வைத்தியமோ பண்ணியும் பார்வை மீளவில்லை. ஏற்கனவே கண்ணில் கோளாறு இருந்திருக்கிறது. இனியொன்றும் இயலாது என்று பட்டணத்து வைத்தியனும் கைவிட்டுவிட்டான். செயலற்ற விழிகளைவெடுத்தவண்ணம் அவன் கூடத்துத் தூணில் சாய்ந்து கொண்டிருக்கையில், அப்பா மண்டையில் மறுபடியும் திரும்பத் திரும்ப அடித்துக் கொண்டார்.
“நன்னா வந்து சேர்ந்ததையா நமக்கென்று; என்ன பண்ணினாய்?” “சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தேன்!” நாக்கைப் பழிக்கிறார் - “வரா ஆத்திரத்தில் உன்னை அப்படியே தூக்கிச் சுவரில் அறைந்துவிடலாம் போலிருக்கிறது. உனக்கென்று எல்லாம் தேடி வருகிறதே! சூரியனைப் பார்க்கிற விளையாட்டு யார் சொல்லிக் கொடுத்தா, நம்ம சம்பந்திக்காரன்தானே! பெண்ணைத் தள்ளி வைச்சோம் என்கிற வயிற்றெரிச்சலில் என்ன வேணுமானாலும் செய்வான் அவன், மாப்பிள்ளையும் சரியான பித்துக்கொள்ளி - சொல்லு - நிஜத்தைச் சொல்லு - குட்டிச்சுவரே! என்ன பாவத்தைப் பண்ணினேனோ!-”
பாபம் பச்சையாயிருக்காதே?
பார்வையிழந்து முதல் பச்சையுடன் புழுங்கிப் புழுங்கி அவனுக்கே சொந்தமான தனி அனுபவத்தில் அவன் அவ்வர்ணத்திற்கே ஒரு தனி உயிர், உரு, குணம், உயர்வு எல்லாம் நிர்மானித்துக் கொண்டு விட்டான்.
அழகுப் பச்சையழகு!
எல்லோருக்கும் தெளியச் சொல்ல வரவில்லை. சொன்னாலும் யாரும் சிரிப்பார்கள், இப்பொழுது இவள் சிரிப்பது போல்.
அவள் அடுப்பில் கொள்ளிக் கட்டையைச் சரியாய்த் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தாள். கட்டையினின்றும் சிதறும் தணல் போல் அவள் மனம் கொதித்துக்கொண்டிருந்தது. ஊஞ்சலில் அவள் கணவன் அனாதைபோல் ஒடுங்கிப் படுத்திருக்கும் நிலைமை கண்டு ஒரு பக்கம் பரிதவித்தது. வாய் மூடியவண்ணம் அவரைச் சூழ்ந்த அந்தகாரத்தில் உறைந்து போய் விடுகிறார். தூங்குகிறாரா அல்லது யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறாரா? அப்படி என்ன ஒரு யோசனையோ?
ஏதோ, ஒரு சமயமில்லாவிட்டால் ஒரு சமயம் எரிச்சல் வந்தாலும் அவரால் ஒரு சமயமும் ஒரு விதமான துன்பமுமில்லை. கண் அவிந்தது முதல் ஒரு விதத்தில் வளர்ச்சி நின்று விட்டது போலும். எல்லோரைப் போல, கண்ணால் உலகைக் கண்டு அதனுடன் மூப்படையும் அநுபவம் அவருக்கில்லை. அதனாலேயே அவர் கேள்விகளும் செயல்களும் சில சமயங்களில், சமயமற்று சலிப்பை விளைவித்தன.
தாழ்வாரத்திலிட்ட பிரம்பு நாற்காலியில் சாய்ந்து கொண்டு குனிந்த தலை நிமிராது யோகத்தில் ஆழ்ந்தது போல் உட்கார்ந்திருந்தார். என்ன இருக்கிறது இவ்வளவு யோசனை பண்ண? கண்ணிருந்தாலே பொழுது போக மாட்டேன்கிறது. இவருக்குப் பார்வையில்லாமல், பேச்சுமில்லாமல் எப்படிப் பொழுது போகிறது?
மாலை முதிர்ந்து இருள், தோட்டத்தில் வாழை மரங்களிலும் வைக்கோற்போரிலும் கிணற்றடியிலும்  வழிய ஆரம்பித்தது. வானம் அப்பொழுதுதான் தூக்கம் கலைந்ததுபோல், அதன் பல்லாயிரம் கண்கள் ஒவ்வொன்றாயும், ஒருங்கொருங்காயும் விழித்துச் சிமிட்ட ஆரம்பித்தன.
“கலத்தில் சாதம் போட்டிருக்கிறேன்; சாப்பிட வாங்கோ.”
”ஊஹூம்.”
”சாப்பிடாதபடி என்ன நடந்துவிட்டது? கண்ணாடி போனால் பீடை தொலைஞ்சது - நீங்க வாங்கோ.”
“இல்லை எனக்கு வேண்டியில்லை. வற்புறுத்தாதே; நான் மாடிக்குப் போகிறேன்.”
அவன் படிப்படியாய்த் தொட்டு மாடியேறுவதைப் பார்த்துகொண்டிருந்தாள். ஏதேது, இந்தத் தடவை கோபம் மீறிவிட்டாப்போல் இருக்கு! சமாதானப்படுத்த வேண்டியதுதான்.
மாடிக்குப் போய் ஜன்னலண்டை போட்டிருக்கும் குறிச்சியில் சாய்ந்தான். தென்றல் நெற்றி வியர்வை ஒற்றியது.
“கீச் - கீச் -”
இரவில் கண்ணிழந்து அவனைப்போலவே தன்னந்தனியான பறவை இடந்தேடியலைகிறது.
“கீச் - கீச் - கீச்”
கிளி, ‘பச்சைக்’கிளி.
அவள்  மாடியேறி வரும் சத்தம் கேட்டது.
எதிரே மேஜை மீது டம்ளரை வைத்தாள்.
என்னது? பால். பசும்பால், பச்சைப்பால், அவன் குறிச்சி கையைப் பிடித்தவாறு மண்டியிட்டாற்போல் அவன் காலடியில் உட்கார்ந்தாள். அவள் விரல்கள் அவன் கைமேல் பட்டன.
மெதுவாய், “கோபமா?”
“இல்லையே!” நிஜமாகவே இல்லைதான். நேற்றிரவு கண்ட கனவு எழுப்பிய நினைவுகளுக்கு அவள் என்ன செய்வாள்?
“பின்னே ஏன் ஒரு மாதிரியிருக்கேள்?”
”நான் நேற்றிரவு ஒரு கனாக்கண்டேன். உன் மேல் கோபமில்லையென்றால் நம்பு, தப்பு என் மேல்.”
”இல்லை என் மேல்தான். உங்களுக்கே தெரியும்.”
“இல்லை, ஒருத்தருக்கொருத்தர் இப்படிப் பரிமாறிக் கொள்வதற்காக நான் சொல்லவில்லை. என்னைச் சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். நீயும் உன் தம்பியும் இப்படிக் கொஞ்சம் இடமாற்றலாய் எங்கேயாவது போய் இருந்துவிட்டு வாருங்களேன்.”
“அடேயப்பா, ரொம்ப ரொம்பக் கோவம் போல இருக்கு! எனக்குப் புகலிடம் ஏது? உங்களுக்கே தெரியும். நானும் தம்பியும் அனாதையென்று.”
“அந்த ஒரே காரணத்தால் உன்னை நான் கலியாணம் பண்ணிக்கொண்டது தப்புத்தானே! எனக்கு ஆதரவை முக்கியமாய் நினைத்து உன்னை மணந்தது உன்னை ஏமாற்றியது போல் தானே! உனக்குத் திக்கில்லாததை என் சௌகரியத்திற்காக உபயோகித்துக் கொண்டுவிட்டேன். ஆனால் நானும் திக்கில்லாதவன்தான், அதனால் என் காரியம் எனக்கே தெரியவில்லை.”
”அதெல்லாம் ஒண்ணுமில்லை,” என்றாள். குருடனைக் கலியாணம் பண்ணிக்கொள்ள திக்கென்றுதானிருந்தது. ஆயினும் அவளும் அவள் தம்பியும் மானமாய்க் காலம் தள்ளுவதே தவிப்பாயிருந்த சமயத்தில் தனக்கு இடம் அந்தஸ்து எல்லாம் கொடுத்துதவியதை மறக்க முடியுமா? எவ்வளவு நல்லவர்! கண்ணொன்றில்லை தவிர மற்றெதில் அவரிடம் குறை?
ஆயினும் அவள் மனதில் தோன்றியது நன்றியா அல்லது ஆசையா?
சே, என்ன சங்கடமான கேள்வியெல்லாம் கேட்கிறது இந்தக் குழந்தை!
கொஞ்ச நாழி ஜன்னலுக்கு வெளிப்பக்கமாய் முகத்தைத் திருப்பிக்கொண்டிருந்தாள்.
“உனக்கு ஒரு மூத்தாள் இருந்தாள் என்று உனக்குத் தெரியுமோ?”
அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது. தனக்கு மூத்தாளிருக்கும்படி அவருக்கு அவ்வளவு வயதாகிவிடவில்லையே! இன்னமும் இருக்கிறாளா? அவரைப் பற்றி அவளுக்கென்ன தெரியும்?
“எங்கள் கலியாணம் கிராமாந்தரக் கலியாணம். அவள் பிறந்த வீடு அடுத்த தெருவுதான். எனக்குக் கண் போவதற்கு முன்னாலேயே கலியாணம் நடந்துவிட்டது. என் தகப்பனார் வைதீகம். சாரதா சட்டம் அமுலுக்கு வரு முன்னர் அதைச் சபித்துக்கொண்டு நடந்த அவசரக் கலியாணம். எனக்கு அவளை என் கண்ணிருக்கையிலேயே சரியாய்க் கண்ட நினைவில்லை. எல்லாவற்றையும் மறைத்த ஓமப்புகையும் வைதீகக் கூட்டமும்தான் ஞாபகமிருக்கிறது.
ஆனால் கலியாணமான பிறகுதான் குட்டு வெளியாயிற்று. பெண்ணுக்குப் பேச்சுக் கொச்சையாய்க்கூட வரவில்லை. படு ஊமை. அத்துடன் படு செவிடு. குண்டு போட்டாலும் காது கேட்காது. அவள் பண்ணின பாவம், ஏக பாப ஜன்மங்கள்!
அப்பாவுக்கு சம்பந்திமேல் குரோதம் பிறந்துவிட்டது. தன் அவசரத்துக்குத் தகுந்தாப்போல், தன்னைச் சம்பந்தி ஏமாற்றிவிட்டதாக எண்ணிக்கொண்டு விட்டார். சீர்வரிசையெல்லாம் அப்படியே திருப்பினார். பெண்ணோ, பெண் வீட்டாரோ தன் வாசல் படி மிதிக்கக்கூடாது என்று தீர்த்துச் சொல்லிவிட்டார். எங்கப்பா முரடு, கிராமத்துக்குப் பெரிய மனுஷன் என்றும் பெயர். அப்புறம் கேட்பானேன்!
எனக்கென்ன அப்போ தெரியும்? அப்பா எனக்கு மறுமணம் செய்வதாக்கூட யோசித்துவிட்டார். ஆனால் அதற்குள் நான் என் கண்ணை அவித்துக்கொண்டது அவர் மூக்கை அறுத்தாற்போலாயிற்று.
என் மாமனாரும் சந்தோஷந்தானோ என்னவோ, “வேணும் அந்தப் பயலுக்கு, குருட்டு மாப்பிள்ளைக்கு ஊமைப் பெண் குறைந்து போயிற்றா?” என்று பதட்டமாய்ப் பேசிவிட்டார். இரு குடும்பங்களுக்குமிடையே வைரம் முற்றிற்று.
நான் -
குருடர்களின் உலகம் குறுகிவிடுகிறது. நினைத்தவிடம் போகமுடியுமா, வரமுடியுமா, நாலு பேருடன் இஷ்டப்பிரகாரம் சேர முடியுமா? எல்லோரும் எவ்வளவோ பிரியமாய் இருந்த போதிலும் அவர்களின் இரக்கம் ஏளனமாய்த்தான் படுகிறது. அவளுக்கிருப்பது எனக்கிருக்கிறதா?
ஆகவே, எப்பவும் நான் தன்னந்தனியன்தான். நான் வீட்டிலில்லாத வேளையில், வேலையில்லாத வேளையிலும், குளக்கரையில் உட்கார்ந்துகொண்டு கல்லை ஜலத்தில் விட்டெறிந்து கொண்டிருப்பேன். அதுதான் என் வீட்டுக்குக் கிட்ட; அங்கு ஒருவரும் வருவதில்லை. அந்த ஜலம் ஸ்னானத்திற்கு உபயோகமில்லை. நான் எதற்கும் பயனற்றுப் போன பிறகு பதுங்குமிடம் அப்பயனற்ற குளக்கரைதான்.
நான் அங்கே உட்கார்ந்துகொண்டு என்னென்ன  நினைத்திருப்பேன் என்று கேட்டால் எனக்கு நிச்சயமாய்ச் சொல்லத் தெரியாது. வயது ஏற ஏற கூடவே ஊறும் வேதனை இன்னதென்று நிச்சயமாய் எங்கே தெரிகிறது?
ஒருநாள் பகல் பன்னிரண்டு மணிக்கு மண்டையைப் பிளக்கும் வெய்யிலில் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தேன்.
பின்னால் யாரோ நிற்பதுபோல் திடீரென்று தோன்றிற்று.
”யாரது?” பதில் இல்லை. பகீரென்றது. ஆனால் பயத்தால் இல்லை.
யாரது? என் மேல் ஒரு கை பட்டது. முரட்டுத்தனமாய் அக்கையைப் பற்றி இழுத்தேன். அவள் சாயும் கனம் தாங்காது அப்படியே நான் சாய்ந்தேன். பிடித்திழுத்த வேகத்தில் நிலையிழந்து அவள் என் மேல் விழுந்தாள். ஒரு பெரும் மூர்ச்சை எங்களிருவர் நினைவையும் அடித்துச் சென்றது. எனக்கு அப்பொழுது வயது பதினெட்டா?
யாரது? என்ன அர்த்தமற்ற கேள்வி என் கேள்வி?
அன்று முதல் நாங்கள் என்னென்ன பேசினோம்? என்ன பேச முடியும்? பேச என்ன இருக்கிறது? எங்கள் பச்சை நரம்பில் துடிக்கும் ரத்தத்தின் படபடப்புத்தான் எங்கள் பாஷை. நான்தான் பச்சை பச்சையாய் சொல்கிறேனே! எனக்கு இஷ்டமானதெல்லாம் பச்சையாய்க் காண விரும்பும் ஒரு இஷ்டத்தில், அன்று முதல் அவளுடன் கழித்த வேளைகளெல்லாம் பச்சையாயின. பச்சைப் பகல், பச்சையிரவுகள்.
நான் இப்பவும் யோசிக்கிறேன், நாங்கள் புல்லிய வேகத்திலேயே எங்கள் எலும்புகள் நொறுங்கி - இருவருக்கும் ஒரே சமயத்தில் ஏன் சாவு சிந்திக்கவில்லை? அச்சாவே புதுப்பிறப்பாயிருக்கும். அல்லது இரவிலோ பகலிலோ குறைவிலாது நடமாடும் பூச்சி பொட்டுக்கள் ஏன் பிடுங்கிக் கொல்லவில்லை? அல்லது துர்த்தேவதைகள், வாயிலும் மூக்கிலும் செவியிலும் ரத்தம் குபுகுபுக்க அறைந்து ஏன் எங்கள் உயிர் குடிக்கவில்லை?
விதி! விதி!! விதி!!!
இதெல்லாம் நிஜமாக நடந்திருக்க முடியுமா? ஒரு ஒரு சமயம் என்னையே கேட்டுக் கொள்கிறேன்.
நடக்கிறதே, என்ன சொல்கிறாய்? என்று அவள் உருவம் என் மனதில் பச்சையாய் எழுந்து அவள் ஊமை வாய் என்னைக் கேட்கிறது.
குளக்கரையில் பசும் புற்றரையில் நாள் தவறாது உட்கார்ந்து உட்கார்ந்து என்னுள் ஊறிய பச்சைத்தாபமே என்னையுமறியாது மாறி மாறித் தோன்றும் குருட்டுக்கனவாயிருந்ததாலோ? “ஓஹோ, நீ கண்டது குருட்டுக்கனவானால் நான் கண்டது ஊமைக் கனவா?” என அவள் உரு, என் காணாத கண்கள் காண, பேசாத வாயால் என்னைக் கேட்கிறது. எல்லாமே கனவாயின் பிற நேர்ந்தனவும் கனவா?
பின் நேர்ந்த நனவின் முந்தைய இரவு இப்பொழுது என் முன் எழுகிறது. சித்திரையின் சந்திரிகையாம் - ரொம்ப உசத்தியாமே? அப்படித்தானா?
நிலவின் ஒளி கூட கண்ணு உறுத்துமோ? ஏனெனில் என் மைமேல் இரண்டு சொட்டுக்கள் கண்ணீர் உதிர்ந்தன. என் கைகள் அவள் கண்களைத் தேடின. அவள் என் கைகளைப் பற்றித் தன் வயிற்றில் வைத்துக் கொண்டாள். அவள் பச்சை வயிறு ஏன் கொதித்ததோ? என் மேல் சாய்ந்திருந்த அவளுடல் விம்மிக் குலுங்கிற்று. அவளைவிட நான் துர்ப்பாக்கியசாலியா? என்னைவிட அவளா? யாரு அறிவார்? ஏனோ?
இன்றில்லாவிடினும் என்றேனும் நீ எனக்குச் சொல்ல வேண்டும். தூங்குவதற்கும் விழித்திருப்பதற்கும் என்ன வித்தியாசம்?
எனக்கு இரண்டும் ஒன்றாயிருந்தது. எப்பவும் இருள்தான். வெய்யில் உடலில் உறைத்தால் அது பகலா? அப்புறம் வெய்யிலாகாது. தெருக்குறட்டில் நான் கட்டிலில் படுத்துவிட்டால் அது இரவா? இப்பொழுது நான் தூங்குவதாக அர்த்தமா? தூக்கம் நிஜமா? விழிப்பு நிஜமா? தூங்குகிற சமயத்திலாவது உருவமற்ற உருக்கள் என் கண்ணுள் தோன்றி மறைகின்றன. என் பெண்டாட்டி ஏன் இன்று அழுதாள் என்ற கேள்வியே உருவமற்ற உருவாய் எனக்குத் தோன்றுகிறாற் போலிருக்கிறது. ஆகையால் நான் தூங்குகிறேனா விழித்துக் கொண்டிருக்கிறேனா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும் அரை நினைவு நிலையில் வாசல் கதவை யாரோ தடதடவென்று அவசரமாய்த் தட்டினார்கள்.
“என்ன:-” என் தகப்பனார் அலறியடித்துக்கொண்டு உள்ளிருந்து ஓடிவந்தார்.
”சமாசாரம் கேட்டியோ? உன் நாட்டுப் பெண் திடீர்னு செத்துப்போயிட்டாளாம்” அப்பா மேல்துண்டு போட்டுக்கொள்ளவும் மறந்து அவசரமாய் அவர்களுடன் ஓடினார்.
நான் தெரியாத கண்ணைத் திறந்த வண்ணம், கட்டிலில் அசைவற்றுப் படுத்துக் கொண்டிருந்தேன். ஒரு விஷயம் நன்றாகப் புலனாயிற்று. விடிந்து விட்டது. ஆகையால் நான் விழித்துக் கொண்டுதானிருந்தேன். என் கண்ணில் பொட்டு ஜலம் கூட இல்லை. சற்று நேரம் பொறுத்து யாரோ இருவர் என்னைப் பிடித்து மாமனார் வீட்டுக்குக் கூட்டிச் சென்றனர். எப்படிப்பட்ட மாப்பிள்ளை வருகை! கூடத்தில் பிணத்தைக் கிடத்தி இருந்தது. கையில் மண் செப்பில் அவள் குடித்தது போக பாக்கிச் சாறு எஞ்சியிருந்தது. அந்தச் செப்பைத் தொட்டேன். பிறகு அவள் உதட்டைத் தொட்டேன். பச்சையாய்த்தானிருக்க வேண்டும். வீட்டுக் கொல்லைப் புறத்தில் வைத்தியத்திற்காக வேண்டிய விஷப்பூண்டு ஏதோ பயிரிட்டிருக்கிறது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
விஷத்தை அப்படியே பொசுக்க முடியவில்லை. புது மணியக்காரர் ஊருக்குப் புதிசு. கொஞ்சம் பயந்த பேர்வழி, யாருக்கும் தெரியாமல் அவரே பக்கத்தூரிலிருந்து போலீஸ், டாக்டர் எல்லாம் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார். ரண வைத்தியர் பிணத்தின் வயிற்றைக் கிழித்தார்.
வயிற்றில் மூன்று மாதத்து சிசு.
ஊரே பற்றி எரிந்தது. அப்பா நடுங்கிப் போனார். இதைத்தான் தெரிவிக்க முயன்றாளோ? இதுதான் அவள் தெரிவிக்க முயன்றபோது எனக்குத் தெரியவில்லையோ? ஒருவேளை தெரியாமலிருப்பதே மேலென்று உயிரை மாய்த்துக் கொண்டாளோ? தெரிந்துதான் நான் என்ன செய்யமுடியும்? ஏற்கனவே குருடு. இத்துடன் பெரியவர்களின் ஆசி பெறாத குழந்தை பிறந்த அவமானத்தையும் சுமத்துவானேன் என்ற எண்ணமோ? இத்தனைப் பகை நடுவில் பயிரான உறவைப் பாதுகாப்பதில் சட்டென்று சலிப்பேற்பட்டுவிட்டதோ? நாங்கள் பாபத்தையிழைத்து விட்டோம் என்ற பயமா? இல்லை எங்கள் ரகசியம் எங்களிருவரோடு மட்டும்தான் இருக்கவேண்டுமென்று, அது பஹிரங்கமாகுமுன் அவள் இவ்வுலகை விட்டுப் புறப்படத் தீர்மானித்துவிட்டாளோ? இந்த உறவு உருப்படப் பிறக்கவில்லை என்று உணர்ந்தாளோ?
‘அந்தக் குழந்தை என்னுடையது’ என்று நான் சொல்லியிருந்தாலோ கதை முடிந்துவிடும் புதிர் போல், எல்லாம் வெளியாயிருக்கும். இந்த மூன்று மாதங்களும் ஊரின் பொது சொத்தாயிருக்கும். அவள் நினைவு எனக்கே சொந்தமாயிருத்தல்தான் எனக்கிஷ்டம். என் சுயநலத்தால், நான் பயந்தாங்கொள்ளியாயிருந்து விட்டுப் போகிறேன். அவள் பெயருக்கு விழுந்த களங்கம் நீங்காவிட்டாலும் பரவாயில்லை. உயிருடனிருந்த சமயத்தில் எங்கள் பாரத்தைக் குறைக்க யார் என்ன செய்துவிட்டார்கள்? செத்த பிறகு அவள் தலையில் பூச்சூடா விட்டால் பரவாயில்லை. உயிர் நிலையின் ஒரே மூச்சுப்போன்ற அம்மூன்று மாதப் பச்சைக் கனவின் மிச்சம் - நான்தான்.
இருந்தும் ஓரொரு சமயம் என் மனம் அக்கொலையுண்ட குழந்தைக்கு ஏங்குகிறது. அது உயிருடன் இருந்தால் எனக்கு ஆறுதலாயிருக்குமோ?
இது எவ்வளவு அசட்டுத்தனமான யோசனை? எனக்கு உடனே தெரிகிறது. அது உயிருடனிருந்தால் அவளும் உயிருடனிருக்க மாட்டாளா? ஒன்றினின்று மற்றொன்றைப் பிரித்துச் சிந்திப்பது எவ்வளவு அர்த்தமற்று இருக்கின்றது? அவள் போனால் அக்குழந்தையும் போக வேண்டியதுதான். இம்மனத்தின் நிலையை என்னென்று சொல்வது?
அவள் மனதில் முடங்கிக் கிடந்த பாசம் எழுந்த ஆவேசத்தில் தொண்டையை முண்டியது. குறிச்சியில் சாய்ந்தபடியே அவனை அப்படியே அணைத்துக் கொண்டாள்.
“நான் - நான் -”
திடீரென்று மனம் குழந்தை கனிவில், அது மானவெட்கத்தை விட்டது.
“இதுக்கென்ன நமக்கு வர வருஷம் குழந்தை பிறக்காதா?” என்றாள். அந்த யோசனை  அவள் மனதில் உறுத்தும் குறைக்கு ஆறுதலளித்தது.
“ஆம். வாஸ்தவம்தான். ஆனால் பெண்ணாய்ப் பிறக்க வேண்டும். பெண்ணுக்கு நல்ல பேர் வைக்க வேண்டும்.-”
“என்ன பேர் வைப்போம்?” என்று ஆசையின் அதிசயிப்புடன் கேட்டாள்.
அவன் கண்கள் ஒளியைப் பெற்றன போல் விரிந்தன.
”பச்சை.”

******
தட்டச்சு : சென்ஷி

Aug 25, 2010

நகுலன் என்றொரு இலக்கியப் புதிர்-ஆ மாதவன்


நினைவோடை


இம்மாதம் 18_ஆம் தேதி இரவு பதினோரு மணியளவில், நகுலன் எனும், அற்புத, அதிசய, அபூர்வ, குண நலம் கொண்ட தமிழ் எழுத்தாளன். திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். 85 வயதில்_இடையே ஏறத்தாழ ஒரு பத்தாண்டு காலம். அவர் இந்த நிஜ உலகில் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். திட நினைவில்லாத தடுமாற்ற உணர்வு நிலை.Nagulan2 ‘‘நீங்கள் தானே மாதவன்? நான் நாஞ்சில் நாடனுடன்தான் பேசிக் கொண்டிருந்ததாக நினைத்தேன்… சுந்தரராமசாமி இப்பொழுதெல்லாம் வருவதே இல்லை… பார்த்து நாளாயிற்று…’’ இப்படியாக

கவிதா சண்முக சுப்பையா, நீல.பத்மநாபன், இருவரும் இங்கே அவருக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்திலுள்ளவர்கள். இதில் அவருக்கு நெருக்கமான சுப்பையா காலமாகிவிட்டார். மரணம் பற்றி, திருமணம் பற்றி, இல்லறம் பற்றி, தாயன்பு பற்றி, சகோதர பந்தங்கள் பற்றியெல்லாம், அதீதமான_அழுத்தமான, அற்புதமான தத்துவ தீர்மானங்களை வகுத்திருந்தார், இந்த பிரம்மசாரி!

தமிழில் கவிதைகள் எழுதினார். ஆங்கிலத்திலும் அந்த அளவில் வீச்சோடு தீட்சணமாக கவிதை நூற்கள் படைத்த இவர், கதைகளிலும் நாவல்களிலும்தான் பெரும்பான்மை பெற்றிருந்தார் எனலாம். க.நா.சு., கு.ப.ராஷகோபாலன், ந. முத்துசாமி என்றெல்லாம் பழகிய வட்டமும், சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன் என்றிவ்வாறு நட்பு தொடர்பும் பெற்றிருந்தாலும் யாரையும் முன் மாதிரியாகவோ, ஏற்றி வைத்து ஒப்புக் காட்டவோ செய்யாத பண்பு நலம் நகுலனுடையது!

‘நினைவுப்பாதை’ தொட்டு ஆறேழு முழு நாவல்களும், ‘கோட்ஸ்டாண்டு கவிதைகள்’ என்ற வேறு நான்கு கவிதைத் தொகுதிகளுமாக தமிழுக்கு படையல் தந்துள்ள நகுலன், தமிழின் பெரும்பான்மை வாசகர்கள் அறியாத தத்துவமுறுக்கின் பிரம்மஞானி. பெரிய எழுத்துச் சிற்பிகளின் தலைமை பீடக்காரர். தேர்ந்த விமர்சகர் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக நுட்பமான வாசிப்புச் செறிவு கொண்டவர். நான் எனது ‘கிருஷ்ணப்பருந்து’ நாவலை முன்னுரைக்காக அவர் முன் வைத்தபோது_ எழுதிய நானே அறியாத ஒருவித நீரோட்ட உணர்வைச் சுட்டிக் காட்டி எனது பலத்தையும் பலவீனத்தையும் பகுத்துக் காட்டி… ‘அஹ்ஹா…’ என்று, அவருக்கே உரித்தான அந்த ‘மாஸ்டர் பீஸ்’ சிரிப்பைக் காணிக்கை ஆக்கினார்.

கதைகள் வடித்திடும் அவரது விதேக விசித்திரங்களில், சுசீலா, நவீனன், கேசவமாதவன், எஸ்.நாயர் போன்ற ‘கோட்டுப் பாத்திரங்கள்’ அதிகமாக உலவினர். அனேகமாக, அவரது படைப்புகள், சுய சிந்தனைகளின் திரட்சிப் பாதை வழியாகவே பயணம் செய்தன. இந்த வறட்சி, ‘பைங்கிளி’ கதை பழகிய தமிழ் வாசகனுக்கு எட்டாத, புரியாத அறியாமையாகப்பட்டது.

இனி அவரது விசித்திரமான கதைத் தலைப்போடு (ஒரு ராத்தல் இறைச்சி.) ஆரம்பமாகும் ஒரு கதையின் துவக்கம், அவரது உண்மை உலகைக் காட்டுவதாக, தத்ரூபமாக அமைந்திருப்பதைப் பார்ப்போம்: ‘‘என் பெயர் நவீனன். சென்ற 25 வருஷங்களாக எழுதி வருகிறேன். நான் எழுதியது ஒன்றாவது பிரசுரமாகவில்லை. அப்படிச் சொல்வதுகூட பிசகு. சுமார் 15 கதை, குறுநாவல், கவிதை, பிரசுரமாகியிருக்கும். இவற்றில் 13_க்கு ஒரு வித சன்மானமும் கிடைக்கவில்லை. 14_ஆவது கதைக்கு வந்த செக்கை கமிஷன் கழித்து கையில் கிடைத்தது 4ரூ.25.பைசா… நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். அவர் பெயர் சுசீலா. அவளுக்குக் கல்யாணம் நடந்தது. இப்பொழுது அவள் என் தாயார். இதை நினைக்கும் பொழுதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இருந்தாலும் கல்யாணம் நடைபெறுவதும் குழந்தை பெறுவதும் சர்வசாதாரண நிகழ்ச்சிகள் என்பதும் எனக்குத் தெரியாததில்லை… நான் கடந்த ஐந்து வருஷமாக ஒரு நாய் வளர்த்து வந்தேன். அது ஒரு நாட்டு நாய். மங்கின செங்கல் வர்ணம். வளையாத காதுகள், குள்ளமும் இல்லை உயரமுமில்லை. நல்ல முரட்டுத் தேகம். அதற்கு நான் ராஜி என்று பெயர் வைத்திருந்தேன். அதற்கு இப்பொழுது வயோதிகம் தட்டி விட்டது. இருந்தாலும், அது என்னிடம் அன்பாக இருந்தது. சில நாட்கள் நான் அதனுடன் பேசுவேன்…’’ …நகுலனின் ஒட்டுமொத்தமான _ அவரே குறிப்பிடுவது போல பத்துப் பதினைந்து படைப்புகளின் உள்படிமான உணர்த்தல்களுக்கு எடுத்துக் காட்டு …. இவை. நகுலன், உரக்க மந்திர உச்சாடனம் செய்யாத வால்மீகம் மூடி வளர்ந்த தத்துவஞானி. வாய்வீரம் பேசாத வாள் வீச்சுக்காரன். மணம் உள்பொதிந்த விடிகாலையின் பாதிவிரிந்த மலர். அவரது அந்தரங்கமே அவரது கவிதைகள், கதைகள், நிஜவாழ்வின் ஈரவிறகுகள் போன்ற குமைவுகளை படிமங்களாகக் கொண்டு அவர் இலக்கியம் படைத்தார்.

‘இன்னார் போல் அவர்…’ என்று எடுத்துக் காட்டிட முடியாத அந்தத் தத்துவப் பேழை. இங்கே 85 ஆவது வயதின் தொடக்கத்தில் திருவனந்தபுரத்து மலையாள மயானத்தில் அடங்கிப் போய் விட்டது. வருங்கால அறிவு உலகம் நகுலனின் உத்வேக உணர்வுகளை மனதிலேற்றிக் கொண்டால், தமிழ் இலக்கிய உலகம் விழிப்பில் பார்வைத் தெளிவு கொள்ளும் என்பது உண்மை!

குமுதம் தீராநதி

Aug 22, 2010

ஒளியும் இருளும்-மகாகவி பாரதியார்

ஒளியும் இருளும்

வான மெங்கும் பரிதியின் சோதி;
மலைகள் மீதும் பரிதியின் சோதி; barathhiyar_23
தானை நீர்க்கடல் மீதிலு மாங்கே
தரையின் மீதுந் தருக்களின் மீதும்
கான கத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள்மீதும் பரிதியின் சோதி;
மான வன்ற னுளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே!
சோதி யென்னுங் கரையற்ற வெள்ளம்,
தோன்றி யெங்குந் திரைகொண்டு பாய,
சோதி யென்னும் பெருங்கடல், சோதிச்
சூறை, மாசறு சோதி யனந்தம்,
சோதி, யென்னு நிறைவிஃ துலகைச்
சூழ்ந்து நிற்ப, ஒருதனி நெஞ்சம்
சோதி யன்றதொர் சிற்றிருள் சேரக்
குமைந்து சோரும் கொடுமையி தென்னே
தேம லர்க்கொ ரமுதன்ன சோதி,
சேர்ந்து புள்ளினம் வாழ்த்திடும் சோதி,
காம முற்று நிலத்தோடு நீருங்
காற்று நன்கு தழுவி நகைத்தே
தாம யங்கிநல் லின்புறுஞ் சோதி,
தரணி முற்றுந் ததும்பி யிருப்ப,
தீமை கொண்ட புலையிருள் சேர்ந்தோர்
சிறிய நெஞ்சந் தியங்குவ தென்னே!
நீர்சு னைக்கணம் மின்னுற் றிலக,
நெடிய குன்றம் நகைத்தொழில் கொள்ள,
கார்ச்ச டைக்கரு மேகங்க ளெல்லாம்
கனக மொத்துச் சுடர்கொண் டுலாவ,
தேர்ச்சி கொண்டுபல் சாத்திரங் கற்றுந்
தெவிட்டொ ணாதநல் லின்பக் கருவாம்
வேர்ச்சு டர்பர மாண்பொருள் கேட்கும்
மெலிவொர் நெஞ்சிடை மேவுத லென்னே!

Aug 21, 2010

ப. சிங்காரத்துடன் ஒரு நாள்…..

எல்லாம் யோசிக்கும் வேளையில்...’
ந. முருகேசபாண்டியன்

பெரிய கட்டடத்தின் மாடிப் படியேறும்போது இயந்திரங்களின் பேரிரைச்சல் காதைத் துளைத்தது. பெரிய அறையினுள் நுழைந்தேன். தூய வெள்ளாடை உடுத்திய கருத்து வாட்டசாட்டமான பெரியவர் எழுதிக் கொண்டிருந்தார். வழுக்கைத் தலை பளபளத்தது. சுவரையொட்டியிருந்த டெலிபிரிண்டர்கள் கட-கடத்தன. அடுத்திருந்த பெரிய ஹாலில் ராட்சத அச்சு இயந்திரங்கள் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருந்தன. கரடுமுரடான ஓசை. எங்கும் மிஷின் எண்ணெய் நெடியும் புழுக்க நாற்றமும் கசகசப்பான மனநிலை. ‘திரும்பிப் போயிடலாம். அவரை இன்னொருக்க பார்க்கலாம்.’ மனதின் ஊசலாட்டத்-தையும் மீறி வெள்ளாடைப் பெரியவரிடம் கேட்டேன். ‘‘ஐயா... வணக்கம்... இங்க ப. சிங்காரங்கறது யாருங்க?’’

‘‘நான்தான்’ உட்காருங்க’’ மூக்கைத் தடவிக்-கொண்டார். இறுக்கமான முகம். ஆழமான இடுங்கிய கண்கள். என்ன விஷயம் என்பது போல முகத்தை முன்னுக்குத் தள்ளி என்னை உற்றுப் பார்த்தார்.

‘‘நான்... உங்களோட புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால்... ரெண்டு clip_image002நாவல்களையும் படிச்சிருக்கேன்.’’

‘‘அப்படியா?’’ வறட்சியுடன் மெல்லச் சிரித்தார். இப்ப அதுக்கென்ன? அது ஏதோ சம்பந்தமில்லாத விஷயம் என்பது போன்ற முகபாவனை. அவரது நாவல்களைப் பற்றிய எனது அபிப்ராயங்களைக் கூறினேன். தமிழில் மிகவும் முக்கியமான நாவல், முதல் புலம்பெயர்ந்த நாவல்... இப்படிப் பாராட்டினேன்.

‘‘நீங்க இப்படிச் சொல்றீங்க. அஞ்சாறு மாசத்துக்கு முந்தி கோணங்கின்னு ஒருத்தர் வந்து நாவலைப் பற்றிப் பேசிட்டுப் போனார். பத்து வருஷங்களுக்கு முந்தி பிரகாஷ்ங்றவர் திடீர்னு வந்து ரொம்பவும் பாராட்டிச் சொன்னார். இன்னும் சில பேர் தேடிவந்து பாராட்டியிருக்காங்க. சுமார் ஐந்து வருஷங்களுக்கு முந்தி கி. ராஜநாராயணன்னு ஒருத்தர் புயலிலே ஒரு தோணி நாவலைப் பாராட்டிக் கடிதம் எழுதியிருந்தார்... இவங்களைப் பத்தி உங்களுக்குத் தெரியுமா? எதுவும் பெரிசா எழுதியிருக்காங்களா?’’

‘‘நீங்க சொன்னவங்க எல்லாரும் எனக்கு நண்பர்கள். தமிழ் இலக்கிய, சிறுபத்திரிகைச் சூழலில் முக்கியமானவங்க’’ என்றேன்.

கொஞ்ச நேரம் விசித்திரமாக எனது முகத்தைப் பார்த்தார்... ‘‘அப்படிங்களா... கி. ராஜநாராயணன் மூலம் எனது நாவலைப் பற்றிக் கேள்விப்பட்ட சிட்டி, சிவாபாதசுந்தரம்னு ரெண்டுபேர் வந்து நாவலைப் பற்றி ரொம்ப உயர்வாகப் பேசினார்கள். சென்னையில கொண்டு போய் Original Version_க்கு நல்ல பதிப்பு கொண்டு வாரோம்னு என்னிடமிருந்த ஒரே பிரதியையும் வாங்கிட்டுப் போனாங்க. பல வருஷமாச்சு. இன்னும் ஒரு பதிலயும் காணாம்’’ எவ்விதமான ஈடுபாடும் இல்லாமல் தகவல்களைச் சொன்னார். ‘‘புயலிலே ஒரு தோணி நாவலைப் போட்டால் இன்னிக்கி யாரு காசு கொடுத்து வாங்கி படிப்பாங்க... இங்க சீரியசாப் படிக்கிற வழக்கமே இல்லாம போச்சு. சீரியசா எழுதத்தான் எவ்வளவோ விஷயமிருக்கு. இன்னக்கி நம்ம ஆளுக இல்லாத இடம் உலகத்தில எங்க இருக்கு? ஆனால் போன இடத்துல என்ன இருக்குன்னு கூர்மையாகப் பார்க்க மாட்டாங்க... அப்படிப் பார்த்திருந்தாங்கன்னா இன்னிக்கித் தமிழில ஏகப்பட்ட புத்தகம் வந்திருக்கும்... பாருங்க புயலிலே ஒரு தோணி நாவல்ல தோணில போறதப்பத்தி ஒரு இடம்வருது. அது நாங்க யுத்த நேரத்ல இந்தோனே-ஷியாவிலிருந்து மலேயாவுக்கு சரக்குகளோட போனதுதான். புயலடிச்சதால சரக்குகளைக் கடலில் வீசினோம். நாவல் எழுதறப்ப தோணும்னா சில சந்தேகங்களைக் கூட வந்தவங்க கிட்டே கேட்டேன். ஆமா போனோம் வந்தோம். கூட யாரு வந்தா, என்ன நடந்ததுங்கிறதெல்லாம் ஞாபகமில்லேனுட்டாங்க. அது எதுக்கு... வெள்ளைக்காரன் மூணு வருஷம் நம்ம நாட்ல வந்து தங்கினாப் போதும். நம்ம வாழ்க்கையை வச்சு நாவல் எழுதிப்பிடுவான். மதுரை டவுன்ஹால் ரோட்ல சாயங்காலம் நடக்கிறதப் பார்த்திங்களா? மூணுசீட்டு போடுறவன், திரி குத்துறவன், முடிச்சவிழ்க்கிறவன், கூவி ஏலம் போடுறவன், பிராத்தலுக, மாமாகாரனுக... நிறைய எழுதலாம். அதுமாதிரி கீழமாசி வீதிப் பலசரக்குக் கடைகள்... அது ஒரு தனி உலகம். அங்க நடக்கிறத வச்சு எவ்வளவு எழுதலாம் தெரியுமா? உண்மையைச் சொன்னா நம்ம வாழ்க்கையிலதான் எழுத எவ்வளவு விஷயமிருக்கு தெரியுமா? ஆனால் கூர்மையாகப் பார்த்து எழுதுற வழக்கம் நம்ம ஆளுகளுக்குக் கிடையாது.’’

‘‘நீங்க எப்ப மலேசியா போனீங்க?’’

‘‘எனக்கு இன்னிக்கி அறுபத்து நாலு வயசாகுது. பதினெட்டு வயசுல கப்பலேறினேன். வட்டிக் கடையில வேலை பார்த்தேன். அப்ப ரெண்டாம் உலக யுத்தம் தொடங்கினதால இந்தியாவுக்குக் கப்பல் போக்குவரத்து இல்ல. இந்தியாவிலிருந்து எந்த தமிழ்ப் பத்திரிகையும் அங்க வராது. வேற வழியில்லாம பினாங்கு லைப்ரேரியில ஹெமிங்வே, தல்ஸ்தோய், பாக்னர், செகாவ், தாஸ்தாயேவ்ஸ்கி... இப்படிப் பலரையும் படிக்க ஆரம்பிச்சேன். ஹெமிங்வேயோட ‘ஏஃபேர்வெல் டூ ஆர்ம்ஸ்’ நாவல்தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச நாவல். அது அமெரிக்க இலக்கியத்ல திருப்புமுனைன்னு நினைக்கிறேன். தல்ஸ்தோயோட அன்னா கரேனினா நம்பர் ஒன். ஆனால் மேல்நாட்டு க்ரிட்டிக்ஸ் ‘வார் அண்ட் பீஸ்’ தான் சிறந்ததுன்னு சொல்றாங்க.’’

‘‘தமிழ்ல யாரெல்லாம் படிச்சிருக்கீங்க?’’

‘‘என்னோட பதினெட்டு வயசுக்கு முந்தி இந்தியாவுல இருக்கிறப்ப ‘மணிக்கொடி’ பத்திரிகை வாசிச்சிருக்கேன். புதுமைப்பித்தன், மௌனி கதைகள் படிச்சிருக்கேன். அப்புறம்தான் அங்கே போயிட்டேனே! இன்னிக்கி வரைக்கும் தமிழ்ல நாவல்கள் வாசித்தது இல்லை. பூரா ஆங்கிலம்தான். இப்பத்தான் சுஜாதா, சிவசங்கரி கதைகளை எடுத்து வாசித்துப் பார்த்தேன். விஷயமே இல்லாம இருக்கு. ரெண்டு பக்கம்கூட வாசிக்க முடியல.’’

தமிழில் இதுவரை நல்ல நாவல்கள் எழுதிய நாவலாசிரியர்களின் பெயர்களைச் சொன்னேன். ‘‘அவங்க எழுதியதை படிக்கவில்லை’’ என்றார்.

‘‘யுத்த காலத்தை மையமாக வச்சுத் தமிழில் விரிவாக நாவல் எழுதுனது நீங்கள்தான். நீங்க ஐ.என்.ஏ.யில் இருந்தீங்களா?’’

‘‘இல்லை. என்னோட நண்பர்கள் பலர் ஐ.என்.ஏவுல இருந்தாங்க. ஆர்மியில பெரிய பதவியில இருந்தாங்க. அங்க பினாங்கில காபி, டீ கடைகள் ஐரோப்பிய மாதிரியில இருக்கும். அதை கிளப்ன்னு சொல்வாங்க. சாயங்கால நேரம் ஒரு கோப்பை காபியைக் குடிச்சிட்டு ஐந்தாறு மணிநேரம் பேசிக்கிட்டிருப்போம். அப்பத்தான் யுத்தம் பத்தின பல சமாசாரங்களைக் கேள்விப்பட்டேன். அப்புறம் நண்பர்களுடன் சேர்ந்து நானே பல ராணுவ முகாம்களுக்கு நேரடியாகப் போயிருக்கேன். நாவல்னா என்னா? கற்பனையில எழுதுறதுதானே! அப்படியேவா எழுதணும்? நாம கேள்விப்பட்ட விஷயங்கள், அனுபவங்களைத் தொகுத்துக் கற்பனையோடு எழுதலாம். ஒரு கதாபாத்திரம்னா அவன் ரெண்டு மூணு பேரோட சேர்க்கையா இருக்கலாம். நாவல்ல வர்ற சின்னமங்கலம் கிராமம்கூட ரெண்டு கிராமங்களை ஒன்றாக்கியதுதான்.’’

‘‘நீங்க படிச்சது முழுக்க ஆங்கிலத்துல... தமிழ்ல எழுதணும்னு உங்களுக்கெப்படி தோணுச்சு.’’

‘‘தமிழ்ல _ தாய்மொழியில _ எழுதினாத்தான் உணர்ச்சிபூர்வமா நாம நினைக்கிறத சொல்ல முடியும்னு எழுதினேன்.’’

‘‘திரும்ப இந்தியாவுக்கு எப்ப வந்தீங்க?’’

‘‘சுதந்திரங்கிடைச்ச பின்னாடி வந்தேன். உடனே ‘தினத்தந்தியி’ல வேலைக்குச் சேர்ந்தேன். அப்பயிருந்து மதுரையிலதான் இருக்கேன்.’’

‘‘முதல் நாவலை எப்ப எழுதினீங்க?’’

‘‘1950_இல் ‘கடலுக்கு அப்பால்’ நாவலை எழுதினேன். அதைப் பிரசுரம் செய்ய பல பிரசுரகர்த்தர்களைக் கேட்டேன். அதுக்காகவே மதுரைக்கும் சென்னைக்கும் பல தடவைகள் அலைஞ்சேன். யாரும் வெளியிட முன்வரலை. ஆனந்தவிகடன் நாவல் போட்டிக்கு அனுப்பினேன். திரும்பி வந்தது. ஆனால் தேர்வுக் குழுவில இருந்த ஒருத்தர் தனிப்பட எனக்குத் கடிதமெழுதி நாவலைப் பாராட்டியிருந்தார். அவர் அந்த நாவலை என்னிடமிருந்து வாங்கி ரெண்டு மூணு வருஷமாப் பிரசுரிக்க முயன்று தோற்றுப் போனார். கடைசீல ‘கலைமகள்’ பரிசுப் போட்டிக்கு அவரே அனுப்பினார். அதுக்கு முதல் பரிசு கிடைச்சுது. நாவலும் 1959_ல் பிரசுரமாச்சு.’’

‘‘புயலிலே ஒரு தோணி?’’

‘‘அது மட்டுமென்ன? அது பிரசுரம் ஆனதும் பெரிய கதை. அதை 1962_வாக்கில எழுதினேன். பல பிரசுரகர்த்தர்களிடம் கிடந்தது. ஒண்ணும் ஆகலை. கடைசீல சென்னை நண்பர் ஒருத்தரின் விடாத முயற்சியினால் கலைஞன் பதிப்பகம் 1972_இல் வெளியிட்டது. அதுவும் வெட்டிச் சுருக்கி வெளியாச்சு.’’

‘‘நாவலைப் பற்றி விமர்சனம் வந்ததுங்களா?’’

‘‘ம்... ஒரு பாத்திரம் தன் மனதுக்குள் யோசிப்பதை எழுதும்போது ஒற்றைக் குறிக்குள் போடலைங்கிற-துக்காக ‘கண்ணதாசன்’ பத்திரிகையில ஒருத்தர் யார் யாரிடம் பேசுறாங்க என்பதுகூடப் புரியலை... குழப்பமாயிருக்குன்னு எழுதியிருந்தார். நம்ம ஆளுகளுக்கு எல்லாத்தியும் வெளிப்படையாப் பெருவெட்டாகச் சொல்லணும். தமிழ்ல பீணீsலீ_க்கும் லீஹ்ஜீலீமீஸீ_க்கும் வித்தியாசமே பலருக்குப் புரியல.’’

காபியை ரெண்டு கிளாஸ்ல ஊத்துங்க என்று அலுவலக உதவியாளரிடம் சொல்லிவிட்டு சற்று நேரம் கண்ணைமூடி யோசித்தவர் மீண்டும் பேசத் தொடங்கினார்.

‘‘அப்புறம் எந்த நாவலாக இருந்தாலும், எழுத்தாளன் சொல்லக்கூடிய உலகம் ரொம்பப் புதிதாக இருந்தாலும், அவன் சரியாக ஒழுங்குடன் சொல்லியிருந்தால் அந்த உலகம் வாசிக்கிற யாருக்கும் தெளிவாப் புரியும். அப்படித்தான் நான் சொல்லியுள்ளவை. போர், வெளிநாட்டுச் சூழல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் _ தமிழ் ஆளுகளுக்குப் புதுசு என்றாலும் _ நிச்சயம் விளங்கும். ஆனா அந்த நாவல் கவனிக்கப்படலை.’’ அவரது குரலில் நம்பிக்கை தொனித்தாலும் முடிவில் வருத்தம் வெளிப்பட்டது.

‘‘குடிங்க’’ காபி கிளாஸை என்னை நோக்கி நகர்த்தினார். பணியாளிடமிருந்து சிகரெட்டை வாங்கி மேசை டிராயருக்குள் வைத்தார்.

கிளாஸை எடுத்து ஒரு மடக்குக் குடித்தேன். அவர் ஒரே மூச்சில் கிளாஸைக் காலி செய்தார்.

‘‘நீங்க தொடர்ந்து எழுதலியே...’’

‘‘அதெல்லாம் ஒரு காலத்து ஆர்வம். அப்ப உற்சாகப்படுத்தி முடுக்கிவிட ஆளுக யாருமில்லை. இப்ப அந்த மனநிலை இல்ல.. எழுதவும் முடியாது.’’

‘‘புயலிலே ஒரு தோணி நாவலில் பழந்தமிழ் இலக்கிய மேற்கோள்கள் வருதே... உங்களுக்கு அதிலே ரொம்ப ஈடுபாடா?’’

‘‘அப்படியெல்லாம் பெரிசா ஒண்ணுமில்லே. 1947_லிருந்து மதுரை சீ.வி.சி.கி.யில தங்கியிருக்கேன். முந்தி பக்கத்து அறையில தியாகராசர் கல்லூரி தமிழ் லெக்சரர் இருந்தார். அவரிடமிருந்து புத்தகங்களை வாங்கி அகராதியை வைச்சு நானே படிச்சேன். அவ்வளவுதான். ஈடுபாட்டோட படிச்சா எதையும் படிச்சிடலாம். இங்கிலீஷ்ல பார்த்தீங்களா? எதைப் பத்தியெல்லாம் புத்தகம் வருது தெரியுமா? ஷிஷீutலீ மிஸீபீவீணீஸீ ஜிக்ஷீமீமீsன்னு ஆயிரம் பக்கத்துல பெரிய புத்தகம் போடுறான். அதையும் வாங்கிப் படிக்க ஆளுக இருக்குது. இங்க அதுமாதிரியில்ல. அதனால பப்ளிஷர்ஸ் நல்ல புத்தகம் போடறதில்ல. என்னோட முதல் நாவல் கடலுக்கு அப்பால்... ரொம்ப சொல்ல முடியாது. ஆனால் புயலிலே ஒரு தோணி நல்ல நாவல். ஆனால் என்ன ஆச்சு? எந்த க்ஷீமீsஜீஷீஸீsமீம் இல்ல.’’ மூக்கைத் தடவிக்கொண்டு சிரித்தார். ‘‘அந்த நாவலில் செட்டிமார்பற்றி வருது. பல பப்ளிஷர்ஸ் செட்டிமார். அதனால அதை பப்ளிஷ் பண்ணமாட்டாங்க. ஏதாவது மாட்டு வாகடம், கந்தர் அலங்காரம்... இப்படி போட்டுக் காசு பண்ணுவாங்க.’’

‘‘உங்க குடும்பம்...’’

‘‘நான் ஒரு widower.’’

சற்று நேரம் என்ன பேசுவது எனத் தோன்றவில்லை. சூழல் இறுகியது. அவரே தொண்டையைக் கனைத்துக்கொண்டு பேசினார்.

‘‘மலேயாவில் மனைவியோட முதல் பிரசவத்தில மனைவியும் ஆண்குழந்தையும் இறந்துட்டாங்க. பிறகு இந்தியாவுக்கு வந்தேன். அப்புறம் மறுபடி கல்யாணம் பண்ணிக்க முயற்சி பண்ணவேயில்லை. திரும்ப மலேயாவுக்குப் போயிடலாம்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டிருந்தேன்... ஆனால் போகலை.’’

‘‘அப்ப 37 வருஷமா தனிமையிலேவா இருக்கீங்க?’’

‘‘என்ன தனிமை!’’ கண்களை மூடி வறட்சியாகச் சிரித்தார். ‘‘உண்மையாப் பார்த்தால் எல்லாரும் தனிமையிலதான் இருக்கோம்.’’

‘‘உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?’’

‘‘அதெல்லாமில்ல. கோயிலுக்குப் போவதுமில்லை சாமி கும்பிடுறதும் இல்லை.’’

இடையில் பத்திரிகைக்குச் செய்தி கொடுக்க வந்தவரிடம் ழிமீஷ்s ணிபீவீtஷீக்ஷீஐப் பாருங்க என்று கூறி, பத்திரிகை தொடர்பாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார். நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘‘உங்க சொந்த ஊரு?’’

‘‘எங்க சொந்த ஊரு அருப்புக்கோட்டைக்குப் பக்கத்தில் உள்ள பாலையம்பட்டி கிராமம். எங்க அப்பா காலத்திலேயே சிங்கம்புணரிக்குப் போயிட்டோம்.’’

‘‘உங்க சொந்தக்காரங்க...’’

‘‘சிங்கம்புணரியில இருக்காங்க... ரொம்ப போறதும் வர்றதும் கிடையாது...’’

அவரது கலை, இலக்கியம் பற்றிய புரிதல்கள், வாழ்க்கையனுபவம் பற்றிய விரிவான நேர்காணலுக்கு அனுமதி கேட்டேன். ‘‘அதெல்லாம் எதுக்கு...? வேணாம்’’ கைகளை ஆட்டி உறுதியான குரலில் மறுத்தார். நான் இலக்கிய உலகில் அவரது இடம் மிகவும் முக்கியமானது... எனவே நேர்காணல் முக்கியமான பதிவாகும் என்று வலியுறுத்தினேன். ‘‘தயவுசெய்து வேண்டாம்’’ என்று அழுத்தமாக மறுத்துவிட்டார். சற்றுநேரம் இருவருக்குமிடையில் கனமான மௌனம். அடுத்து என்ன பேசுவது? திணறல். அவரது முகம் இறுகியது. சகிக்க முடியாத அமைதி சுவரானது.

‘‘சரி அப்ப வர்ரேன்’’

எழுந்து நின்று கைகூப்பினேன். அவரும் எழுந்து நின்று கைகூப்பி ‘‘வாங்க’’ என்றார் தளர்ச்சியான குரலில்.

மாடிப்படிகளில் இறங்கினேன். அப்பொழுதுதான் ராட்சத இயந்திரங்களின் பலமான ஓசை உறைத்தது. வெயில் கண்களைச் கூசச் செய்தது.

குழு அல்லது அமைப்புடன் எவ்விதமான தொடர்புமற்றுத் தனித்து ஒதுங்கி நிற்பதால் ப. சிங்காரம் தமிழ்ச் சூழலில் போதிய கவனத்தைப் பெறவில்லை என்றும் உலகின் சிறந்த நாவல்களுடன் ஒப்பிடும் வகையில் அவரது நாவல் உள்ளது என்றும் நான் கூறியபோது, ஒருவிதமான கூச்சத்துடன் ‘‘அதெல்லாம் இல்லீங்க. நான் என்னமோ எழுதினேன்’’ என்று சாதாரணமாகக் கூறினார். சாதனையாளரான ப. சிங்காரத்தினுடைய இலக்கியத்தின் மீதான புறக்கணிப்பு, தமிழ்ச் சூழலின் மோசமான வெளிப்பாடாகும். ஏக்கமும் கசப்பும் கலந்த மனநிலையுடன் கட்டட வளாகத்தைவிட்டு வெளியே வந்தேன். வெளியே வெப்பக் காற்று புழுதியுடன் வலுவாக வீசிக் கொண்டிருந்தது.

Aug 19, 2010

வெள்ளி விழா - ந.பிச்சமூர்த்தி

வெள்ளி விழா

சுதந்திர தின வெள்ளி விழாவுக்கு
மெரினாவில்
காந்தி சிலைமுதல் na_pitchamurthy
விவேகானந்தர் சிலைவரை
சவுக்கு முளை அடித்து
குறுக்குக் கழிகட்டி
வேடிக்கை பார்க்கவரும் வெள்ளம்
அணிவகுப்பை அழிக்காமல் 
வெற்றிக்கு வித்திட்ட கண்டிராக்டர்
மறுநாள் கணக்குப் பார்த்தார்
நல்ல ஆதாயம்.
மக்கள் கணக்குப் பார்த்தார்.
விழாதான் ஆதாயம்
காலைக் கருக்கிருட்டில்
சுள்ளி பொருக்க வந்த கிழவிக்கு
சவுக்கைப் பட்டைகளை
உரித்தெடுத்துக் கொண்டபோது
ஆளரவம் கேட்டதனால்
ஆதாயம் குறைப் பிரசவம்

கொக்கு

படிகக் குளத்தோரம்
கொக்கு.
செங்கால் நெடுக்கு.
வெண்பட்டுடம்புக்
குறுக்கு
முடியில் நீரை நோக்கும்
மஞ்சள் கட்டாரி மூக்கு.

உண்டுண்டு
அழகுக் கண்காட்சிக்
கட்டாயக் கட்டணம்
சிலவேளை மீனும்
பலவேளை நிழலும்...

வாழ்வும் குளம்
செயலும் கலை
நாமும் கொக்கு.
சிலவேளை மீனழகு
பலவேளை நிழலகா?
எதுவாயினென்ன?
தவறாது குளப்பரப்பில்
நம்மழகு _
தெரிவதே போதாதா?

லீலை

மண்ணில் பிறந்தால்
வானேற ஆசை,
காலோடிருந்தால்
பறப்பதற்காசை,
வானாயிருந்தால்,
பூமிக்கு வேட்கை,
கொண்டலாயிருந்தால்
மழையாகும் ஆசை.
மின்னாயிருந்தால்
எருக்குழிக்காசை.
எருக்குழியானால்
மலராகும் பித்து
இரும்பாயிருந்தால்
காந்தத்திற்காசை
துரும்பாயிருந்தால்
நெருப்புக்காசை
தனியாயிருந்தால்
வீட்டுக்கு ஆசை.
வீட்டோடிருந்தால்
கைவல்யத்திற்காசை
நானாயிருந்தால் நீயாகும் ஆசை.
உனக்கோ?
உலகாகும் ஆசை.

விஞ்ஞானி

கடவுளால் என்ன முடியும்?
புல்லைச் செய்வார்.
மேயவென்று மாட்டைச் செய்வார்
பொங்கும் நுரைப்
பாலைச் செய்வார்.
ஊட்டவென்று கன்றைச் செய்வார்.
மண்ணென்ற ஒன்றைத் தருவார்.
வளர்ந்திடும் ஏக்கம் தருவார்.
வானத்தினிடையே வீணில்
ஒளியினைக் கொட்டும் கோள்கள்
மந்தையை ஓட்டிச் செல்வார்.
கோடையெனும் பெரிய அன்பின்
மடைகளைப் பிடுங்கி வைப்பார்...
நாமன்றி கடவுளேது?
நாமவர்க் கிளைப்பதேது?
புல்லுக்குப் போட்டியாக
மண்டும் கிருமி குண்டைச் செய்வோம்
மாட்டுக்குக் கன்றைக் காட்டி
பாலினைச் சுரக்கச் செய்யும்
மடமையை,
கலையின் குறைவை
காட்டுவதற்காக வென்றே
வைக்கோலும் தோலும் ஆன
தந்திரம் ஒன்றைச் செய்வோம்,
பாலை யாம் வரவழைப்போம்;
உழைப்புக்கு ஓய்வை அளிக்கும்
உணவு சத்துக்கள் செய்வோம்.
ஆண் பெண்ணின் கல்வியின்றி
உயிரை உற்பத்தி செய்யும்
உயிரியல் மர்மம் தேடி
உழைக்கின்றோம்.
வெற்றி காண்போம்.
நோக்கின்றி சாட்டையின்றி
தானாக விரையும் கிரகமாம்
சந்திரன், செவ்வாய், சுக்ரன்
மீதினில் குதிரை ஏறி
தளங்களை அமைத்துவிடுவோம்.
அருளெனும் ஜாலவித்தை
செலாவணி ஆகாதய்யா.
மடமையால் உலகைச் செய்தால்,
அறிவினால் களைதல் தவறா?

Aug 17, 2010

கிருஷ்ணன் நம்பி கவிதைகள்


1.
ஆனை வேணுமென்று _ குழந்தை
அழுது கூச்சலிட்டான்
ஆனை கொண்டு வந்தார் _ ஆனால் knambi
அழுகை தீரவில்லை 

பானை வேணும் என்றான் _ குழந்தை
பானை கொண்டு வந்தார்
ஆனை பானை இரண்டும் _ வந்தும்
அழுகை ஓயவில்லை  

`இன்னும் அழுவதேனோ _ குழந்தாய்
இனியும் என்ன வேணும்?’
என்று கேட்டபோது _ குழந்தை
ஏங்கி அழுது கொண்டு

இந்தப் பானைக்குள்ளே _ அந்த
ஆணை போக வேணும்!
என்று சொல்லுகின்றான் _ ஐயோ
என்ன செய்ய முடியும்?

2.
அம்பிப் பாப்பா விஷயம் என்றால்
அம்மா சலுகை அதிகம்தான் _ எங்கள்
அம்மா சலுகை அதிகம்தான்.

பாலைக் கொட்டிக் கவிழ்த்தினாலும்
`பார் சமர்த்தை’ என்கிறாள்!
சீலத்தோடு சிரித்துக் கொண்டே
சிந்திய பாலைத் துடைக்கிறாள் _ அம்மா
சிந்திய பாலைத் துடைக்கிறாள்!

பள்ளிப் புத்தகத்தை எல்லாம்
பறித்துக் கிழிக்கும் வேளையில்
அள்ளி அணைத்து முத்தமிட்டு
அம்பிப் பயலைப் புகழ்கிறாள் _ அம்மா
அம்பிப் பயலைப் புகழ்கிறாள்

கண்ணில் கண்ட பொருளையெல்லாம்
காலால் உதைத்துத் தள்ளினால்
`கண்ணன் இவன்’ என்று அம்மா
கண்டது போல் சொல்கிறாள் _ ரொம்பக்
கண்டதுபோல் சொல்கிறாள்!

அம்மா என்று திக்கித் திக்கி
அம்பி உளறிக் கொட்டினால்
அம்பிப் பயலை வாரி எடுத்து
அறிஞன் என்று மெச்சுறாள் _ அம்மா
அறிஞன் என்று மெச்சுறாள்!

அம்பிப் பாப்பா விஷயம் என்றால்
அம்மா சலுகை அதிகம்தான் _ எங்கள்
அம்மா ரொம்ப மோசம்தான்!

3. மண்ணிலே பொன்னிருக்கு!

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

கையில் வலு இருக்கோ _உன்றன்
மெய்யில் வலு இருக்கோ?
கையில் வலு உளதேல் _ உன்றன்
மெய்யில் வலு உளதேல்,.

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

மண்வெட்டி ஒன்றுளதோ _ நல்ல
மண்வெட்டி ஒன்றுளதோ?
மண்வெட்டி ஒன்றுளதேல் _ நல்ல

மண்வெட்டி ஒன்றுளதேல்,

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

காணி நிலம் உளதோ _ ஒரு
காணி நிலம் உளதோ?
காணி நிலம் உளதேல் _ ஒரு
காணி நிலம் உளதேல்,

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

வெட்டத் தெரியாதோ _ வேர்வை
கொட்டத் தெரியாதோ?
வெட்டத் தெரியுமெனில் _ வேர்வை
கொட்டத் தெரியுமெனில்,

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

வித்து சிறிதிருக்கோ _ மழை
வெய்யில் சிறிதிருக்கோ?
வித்து சிறிதுளதேல் _ மழை
வெய்யில் சிறிதுளதேல்,

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

ஊக்கம் உனக்கிருக்கோ _ வேலை
பார்க்கத் திறமிருக்கோ?
ஊக்கம் உனக்கிருந்தால் _ வேலை
பார்க்கத் திறமிருந்தால்,

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

                                
                              
நன்றி: கிருஷ்ணன் நம்பி படைப்புலகம் தமிழாலயம் வெளியீடு.

Aug 16, 2010

சில புத்தகங்களை படிப்பது பெரிய தண்டனை - தோப்பில் நேர்காணல்

தோப்பில் முகம்மது மீரான் நேர்காணல்
சந்திப்பு: சங்கர ராம சுப்ரமணியன், தளவாய் சுந்தரம்

 

தமிழ் நாவல் இலக்கியத்தில் 70களில் நிகழ்ந்த தோப்பில் முகம்மது மீரானின் வரவு  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு சமூகம் தன் இருட்பிரதேசங்களில் மறைத்து வைத்திருந்த நூற்றாண்டு சோகங்கள், ஆதங்கங்கள், கதறல்கள், இளைப்பாறுதல்கthoppilள் தோப்பில் முகம்மது மீரான் மூலம் வெளிச்சம் பெற்றது.தன் அனுபவங்களின் ஊடான பயணம் அவருக்கு இலகுவாய் இருக்கிறது. நாவல்களைப்போலவே தோப்பிலின் பேச்சிலும் மலையாளம் கலந்திருக்கிறது. ஊரிலிருந்து வெளியேறி 20 ஆண்டுகள் மேலாகியும் தோப்பில் இன்னும் தேங்காய்பட்டின மனிதராகவே இருக்கிறார்.

  தோப்பில் முகம்மது மீரானுக்கு சாகித்ய அகாடமி பரிசு 1997 ஆம் ஆண்டு 'சாய்வு நாற்காலி' நாவலுக்காக வழங்கப்பட்டது. திருநெல்வேலியில் ஒரு காலை நேரத்தில் அவர் வீட்டு முன்னறையில் இப்பேட்டி பதிவு செய்யப்பட்டது. அறையில் சுற்றிலும் அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களை காண்பித்து மீரான் சிரித்துக்கொண்டே சொன்னார். ``நான் பெரும்பாலும் புத்தகங்களை படிப்பதில்லை. தமிழ்வாசிப்பது சிரமம். ஆனாலும் நண்பர்கள் தொடர்ந்து அனுப்பிக் கொண்டேயிருப்பதால் குவிந்துவிட்டது


.   கே: உங்கள் இளமைக் காலத்தில் நிகழ்ந்த என்ன மாதிரியான விஷயங்கள் உங்களை எழுத்தாளராக மாற்றியதுன்னு நினைக்கிறீங்க?

  தோப்பில் முகம்மது மீரான்: என் அப்பா கடந்த கால விஷயங்களைச் சொல்லிக்கொண்டே இருப்பார். என் அப்பாவுக்கும், மற்ற குடும்பங்களுக்கும் பணக்கார மேல்தட்டுவர்க்க மக்களால் ஏற்பட்ட சிரமங்கள் பற்றி சொல்வார். எங்களுக்கு எப்போதும் உயர் வர்க்கத்தினரால் துன்பம் ஏற்பட்டது. தற்பாதுகாப்புக்காக போராட வேண்டிய சூழ்நிலையில் மூன்று தலைமுறை எங்களுக்குள்ளே இருந்துகொண்டே இருக்குது. இதற்குள் இருந்து ஒரு கலகக்காரன் உருவாகத்தான் செய்வான். நான் ரொம்ப அடிமட்டத்துல இல்லைன்னாலும் அடிமட்ட மக்களின் அனுபவம் எனக்கு கிடைச்சுப்போச்சு. எனக்குள் ஒரு கலக மனோபாவம் இருந்தது. அநீதிக்கு எதிரா போராடனும்னு ஒரு சுயமே உருவாச்சிது. எப்பவுமே ஒரு சமூகத்தை, இன்னொரு சமூகம் ஒடுக்கனும்னு நினைக்கும்போது, ஒடுங்கின சமூகத்தில் ஒரு கலக உணர்ச்சி உண்டாகும். இந்த கலக உணர்ச்சி கலையா வெளிப்படலாம். சமூகப் புரட்சியாளர்கள் உருவாகலாம். சிலர் கலைஞராகவும் வரலாம். நான் இந்த துறைக்கு வர அதுதான் காரணம், முதலாளி வர்க்க மனோபாவத்தோடதான் நம்ம எதிர்ப்பு. ஒரு தனிப்பட்ட முதலாளியோட எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை.

  கே: உங்க நாவல்கள் பெரும்பாலும் தேங்காய் பட்டனத்தில் உங்களுக்குக் கிடைத்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டவை. அங்கு உங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது?

  மீ: அங்க, எங்களைப் பெரும்பாலும் திருமணத்துக்குக் கூப்பிடமாட்டாங்க. நாங்க வாழ்ந்த பகுதியில், உயர்நிலை மக்கள் இருந்தாங்க. புராதனமான பள்ளிவாசல் ஒன்று இருக்கும். பொருளாதார அளவில் உயர்ந்திருந்த சிலர், தாங்கதான் அரேபியால இருந்து வந்தவங்க, குடும்பப் பாரம்பரியம் உள்ளவங்க என்கிற எண்ணத்தில், பள்ளிவாசலைச் சுற்றி வாழ்ந்துக்கொண்டு இருந்தாங்க. ஊருல ஒரு சுடுகாடு இருக்கு. அதை ஒட்டிதான் எங்க மூதாதையர் குடியிருக்காங்க. அந்த இடத்துக்குப் பேர்தான் தோப்பு. எங்க வீட்டு மதிலுக்குப் பின் பக்கம்தான் சுடுகாடு. தோப்பு என்கிற அந்த இடம் ஊரிலேயே பிற்படுத்தப்பட்டு ரொம்ப மோசமான இடமா கருதப்பட்ட காரணத்தினாலதான் புரட்சியா தோப்பில் முகம்மது மீரான்னு பேர் வைச்சுகிட்டேன்.

  கே: ஒரு புத்தகத்தின் சமர்ப்பணத்தில் 'என்னை மகனாக வளர்த்த இன்னொரு அம்மாவுக்கு'ன்னு சொல்லி இருக்கீங்க.

  மீ: அந்த அம்மாதான் என்னை வளர்த்தது. அப்பாவோட முதல் மனைவி. எங்க அப்பா முதல்ல ஒரு கல்யாணம் பண்ணிச்சு, குழந்தைகள் இல்லை. பிறகு ரெண்டாவது திருமணம். அதுதான் என் அம்மா. அதில் 13 குழந்தைகள். 9 பேர் இருக்கோம். நாலு பேர் இறந்திட்டாங்க. அந்த அம்மாவை பற்றிய விவரம் நான் 'உம்மா' என்ற ஒரு சிறு கதையில சொல்லியிருக்கேன். கிட்டத்தட்ட 12 வயது வரைக்கும் அவங்கதான் என் அம்மான்னு நினைச்சுட்டு இருந்தேன்.

  கே: உங்கள் அப்பா, அம்மா சொன்ன கதைகள் உங்கள் எழுத்தை, பாதிதித்திருக்கிறதா?

  மீ: கடலோரக் கிராமத்தின் கதைகளை முழுசா சொல்லித்தந்தது என் அப்பா. அவர் சொல்லும் போதே ஒரு படம் மனசுல கிடைக்கும். ஒரு அப்பாவும் பிள்ளைக்கும் உள்ள உறவைவிட அவரு ஒரு கதை சொல்பவராகவும் நாங்க அதை கேட்பவருமாகவும் இருந்து தினமும் கதை கேட்போம். கடலோரக் கிராமங்களை பத்தி, அப்பு சொன்னது, அவங்க குதிரைல போனது எல்லாம் என் மனசுல பதிஞ்சது. படத்தைப் பார்த்து வரைஞ்ச மாதிரி 'கடலோரக் கிராமத்தின் கதை' எழுதினேன். அப்பா சொன்ன கதையை அப்படியே உருவாக்கினதாலதான் அது வெற்றிகரமாய் அமைந்தது.

  கே: உங்களது ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு தொடர்ச்சி இருக்கும். கதாபாத்திரங்கள், அவங்களோட படிப்பின்மை, படிக்காததுனால ஏற்படும் மூட பழக்கங்கள். இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் உங்களை பாதிச்சுதா.

  மீ: முதல்ல பள்ளிக்கூடத்துக்கு போனதும், படிச்சதும் எங்கள் தலைமுறைதான். எங்க அப்பா, அம்மால்லாம் படிக்காதவங்க. நான் ஒரு கதை எழுதினா அதை திருத்தி தர ஆள் கிடையாது. சொன்னா கேக்குறதுக்கு ஆள் கிடையாது. ஏன்னா இன்னும் அந்த உணர்வு அங்க போய்ச் சேரலை. இந்த படிப்பு நமக்கு தேவையில்லை. இது உலகக் கல்வி. நம்ம மறுமைகுல கல்விதான் படிக்கனுன்னு சொல்லி அரேபி படிக்க தெரியுமா. ஆண்டவனே என் வாயால, மலையாளம் பேச வைக்காதே. அரபிதான் நாம பேசனும். இப்ப, பிராமணன் சமஸ்கிருதம் பேசறாங்கனு சொல்லறோம் பாத்தீங்களா. இதே போல அன்னிக்கு முஸ்லீம்கள் எங்க வாயால அரபிதான் பேசுவோம்னாங்க. அந்த தலைமுறைக்கு கடைசி கன்னி நான்.

  அது என்னை பாதிச்சது. என்னை பள்ளிக்கூடத்துக்கு போகவிடாம, புத்தகம் வாங்கி கொடுக்காம, சிலேட் வாங்கி தராம பள்ளிக்கூடத்துக்கு கட்டணம் தராம என பல சங்கடங்கள். யாருக்குமே அதில் விருப்பமில்லை. கல்வி பற்றிய சிந்தனையே என் தந்தைக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி கிடையாது. இந்த சூழலில் இருந்துதான் நாங்க படிச்சோம். எங்க ஊருல அப்ப யாருமே எஸ்.எஸ்.எல்.சி. பாசானது கிடையாது. நான் கூட எஸ்.எஸ்.எல்.சி. நாலு தடவை பெயில் ஆனேன். நான் எதிலே படிச்சேன்னு கூட என் அப்பாவுக்கு தெரியாது. அவர் பள்ளிக்கு கல்லூரிக்கு வந்தது கிடையாது. நாங்களே சுய முயற்சியிலேயே போய் சேர்ந்தோம். அப்ப, ரெண்டு ரூபா ஒரு ரூபான்னு கட்டணம் உண்டு. அபராதத்தோடதான் எப்பவும் பீஸ் கட்டறது. காசு தரவே மாட்டார் அப்பா. நீ படிக்கவேண்டா நா பணம் தரமாட்டேன்னு சொல்வார். பின்ன நான், மண்ணு சுமந்து தாரேன் கல்லு சுமந்து தாரேன் அப்படினு வேலை செய்து கொடுக்கும் போது பிப்ரவரி மாச பணத்தை ஜூன் மாசம் தருவாரு. அதுகூட படிக்கனும்கிற வெறித்தாக்கத்தினால படிக்கலை. எனக்கு உள்ளே இருந்து ஒன்று படிக்கச் சொல்லி தூண்டிச்சு. நாங்க படிச்ச நேரத்தில ஆசிரியர்கள் எங்களை ரொம்பவும் கவர்ந்தாங்க. பாடங்கள் கவிதைகள் எல்லாம் சொல்ற நேரத்துல, அவங்க பாடக்கூடிய இனிமையில சொக்கி போயிருவேன். அவங்க சிலநேரம் கதைகள், நாவல்கள் பற்றி கதையா சொல்வாங்க. நமக்கு தோணும் தகழி சிவ சங்கர பிள்ளை போல ஆகனும்னு.

  இதுக்குப் பின் நான் கல்லூரிக்குப் போறேன். பி.ஏ. மலையாள இலக்கியம் படிச்சேன். அப்ப நான் கல்லூரிக்கு போனது வாசிக்கத்தான். கல்லூரியில் இருந்த எல்லா மலையாள புஸ்தகங்களையும் படிச்சேன். என்னை லைப்ரரி உள்ளே விட்டுடுவாங்க. மத்த மாணவர்களை உள்ளேவிட மாட்டாங்க.

  ஒரு ஆசிரியருக்கு என்ன சலுகை இருந்ததோ அத்தனையும் எனக்கு இருந்தது. நான் விரும்பின புஸ்தகத்தை எடுத்துட்டு வரலாம். இது என்னோட வாசிப்புக்கு ரொம்ப உதவியா இருந்தது.

  கே: கல்வி என்கிற விஷயம் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்னு நினைக்கிறீங்களா?

  மீ: கல்வி இருப்பதினால, நிறைய விஷயங்களை நாம் ஒப்பிட்டு பார்க்கிறோம். நம்ம ஊருல ஒரு விஷயம் நடக்குது. கிழவெண்மணியில், கையூரில என்ன நடந்தது என சுட்டிக்காட்ட முடியுது. பீகாரில 75 பேரை சுட்டுக் கொன்னாங்க. பத்திரிகையும் கல்வியும் இருக்கிறதுதான் அந்த விஷயத்த தெரிஞ்சுக்க முடியுது. அதோட நம்ம சமூகத்தில என்ன நடக்குன்னு ஒப்பிட்டு பாக்க முடியுதில்ல.

  கே: போன தலைமுறையில இருந்த வாசிப்பு பழக்கம் இந்த தலைமுறைக்கு இல்ல. தொலைகாட்சி, இன்டர்நெட் மற்றும் பிற பொழுதுபோக்கு சாதனங்களால வாசிப்பு பழக்கம் குறைஞ்சிட்டு போறதா கருதப்படுகிறது. நீங்களே புத்தக வெளியீட்டாகவும் இருக்கீங்க. இது பற்றி என்ன நினைக்கிறீங்க?

  மீ: புஸ்தகம் வாங்குவது குறைஞ்சிடுச்சி என்கிறதில எனக்கு உடன்பாடு இல்லே. வெளியீட்டாளர்கள் எழுத்தாளர்களை ஏமாத்தறதுக்கு டி.வி.யை முன்னிறுத்துறாங்க. டி.வி. யாரை பாதிக்குதுன்னா சாதாரண வாசகர்களைத்தான். நமக்கெல்லாம் பெண் ரசிகைகள் கம்மி. சுந்தர ராமசாமியின் நாவல்களை பாதிக்காது. நீல பத்மநாபனோட பள்ளிகொண்ட புரத்தையோ, தலைமுறைகளையோ பாதிக்காது. அசோகமித்ரனோட `தண்ணீர்'ஐ பாதிக்காது. ஜெயமோகனோட `ரப்பர்'ஐ பாதிக்காது. பாலகுமாரனோட நாவல்களை பாதிக்கும். சிவசங்கரியை பாதிக்கும். ஒரு நல்ல வாசகனுக்கு, படிப்பதில் கிடைக்கும் இன்பம் டி.வி.யிலே கிடைக்காது. டால்ஸ்டாய் நாவலை படிக்கிற இன்பம் டி.வி.யிலே கிடைக்குமா?

  கே: ஆனால் ஒரு சிறந்த வாசகன் உருவாகும் சூழலை இது பாதிக்கலைன்னு நினைக்கிறீங்களா?

  மீ: மூணு பிரிவு இருக்கு. ஒன்னு வந்து வாசகன். ரெண்டு ரசிகன். மூணு சக்ருதையன். சக்ருதையன் ஒரு சமஸ்கிருத சொல். படைப்பாளிக்கு ஒத்த மனமுடையவர்களை சக்ருதையன்னு சொல்லலாம். ஒரே பாதையிலே ரெண்டு பேரும் போறாங்க. படைப்பிலே முதலில் மௌனங்கள் இருக்கு. இடைவெளிகள் இருக்கு. தேடல் இருக்கு. இந்த மௌனங்களை சப்தமாக்கிறான் சக்ருதையன். இந்த இடைவெளியை நிரப்பறான். தேடல் அவன் மனசில் உருவாகுது. சக்ருதையன் அவனா உருவாகிறான், அவன் பிறப்பால் கலைஞன். சக்ருதையன் என்ற கலைஞனும்ம படைப்பாளி என்ற கலைஞனும் எங்க சங்கமிக்கிறாங்களோ அங்கதான் படைப்பு நிறைவு பெறுது. அதுவரை ஒரு படைப்பு முழுமை அடையாது. மனசுக்கும் கலாச்சாரத்துக்கும் இடையே பாலத்தை இவன்தான் கட்டறான். ஒரு படைப்புக்கு தேவை சகருதையன். வாசகனும், ரசிகனும் விற்பனைக்குத்தான் தேவை. இந்த சகருதையனை டி.வி. மற்றும் எந்த ஊடகத்தாலும் ஒண்ணும் பண்ண முடியாது.

  கே: உங்களை பாதிச்ச, எழுத தூண்டிய எழுத்துகள்னு யாரை சொல்ல விரும்புறீங்க?

  மீ: பஷீரின் படைப்புகளை படிச்சேன். அவரைபோல எழுதணும்னு அவரோட மொழி என்னை ஊக்கப்படுத்தியது. இப்ப உள்ள மலையாள இலக்கிய சூழலை பார்க்கும்போது தமிழ் சூழல் சிறப்பா இருப்பதாக எனக்குத் தோணுது. அங்க சிறுகதைகள் ரொம்ப மட்டமாகதான் இருக்கு. ஒரு சில நல்ல கதைகள் அப்பப்ப வருது. `வானப் பிரஸ்தம்' ஒரு உதாரணம். என்னைப் பொருத்தவரை ஜெயமோகன் ஒரு சிறந்த சிறுகதை எழுதுபவர். அவரை தென் இந்தியாவிலேயே சிறந்த எழுத்தாளர் என சொல்லுவேன். வண்ணதாசன் எழுத்து ரொம்ப நல்லா இருக்கு. சுந்தர ராமசாமியோட கதைகள் ஒரு சில நல்லா இருக்கு. நல்லா நகைச்சுவையா போகுது. `காலச்சுவடு'ல வெளிவந்த `இருக்கைகள்' ஒரு உதாரணம். நல்ல நாவல்னு சொல்லனும்னா சுந்தரராமசாமியோட `புளியமரத்தின் கதை' பிடிக்கும். `பள்ளிகொண்டபுரம்' எனக்குப் பிடிச்சது. ஜானகிராமனோட `அம்மா வந்தாள்'கிற கதை படிச்சேன். நல்லா இருக்கு. அப்புறம் பாவண்ணனோட `பாய்மரக்கப்பல்' ரொம்ப பிடிச்சது. இளைய தலைமுறை எழுத்தாளர்களைப் பத்தி சொல்லனும்னா இமயம் கதை படிச்சேன். ஒரு அஞ்சு ஆறு அத்தியாயம் படிச்சேன். வெறும் முற்போக்காத்தான் எனக்குப் படுது. சாவடியை பத்தி 18, 20 பக்கத்துல சொல்கிறார். தகவல் என்றும் கலையாகாது. இளைஞர்களில், தலித் இலக்கியத்தை எடுத்துக்கிட்டமின்னா, எடுத்த உடனே இது ஒப்பேறாத கேஸ்னு முத்திரை குத்தி மூடி வைக்க வேண்டியதுதான். இதனால் எல்லார் புத்தகங்களையும் வாசிக்க முடிவதில்லை. சில புஸ்தகங்களை வாசிப்பது பெரிய தண்டனை.

  கே: தமிழ் இலக்கிய Êசூழலில் நடைபெற்றுவரும் அரசியல் பற்றி...

  மீ:  மலையாள மக்கள் அளவுக்கு இங்கு மனங்கள் பக்குவபட்லை. படிப்பாளிகள் இருவர் மேடையிரே ஒருநாள் ஏசி பேசுவாங்க. மறுநாளே இருண்டுபேருமே ஒரு வீட்டிலே இருப்பாங்க. இது கேரளாவிலே. சுந்தர ராசாமியோட எனக்கு கருத்துவேறுபாடு இருக்கலாம். ஆனால் உறவுன்னு ஒன்னு இருக்கு. கருத்துக்கள் ஏன் உறவை பாதிக்குது. சிலர் சொல்வாங்க. நான் நாகர்கோவிலுக்கே வரமாட்டேன்னு. ஏன்னா அங்கே சுந்தர ராமசாமி இருக்கறார். இந்த மனோபாவம் மாறனும். நாம இவரை இன்னும் அங்கீகரிக்க காரணம் அவர் நம்ம மூத்த தலைமுறை. நான் முதல்ல படித்த இரண்டு புத்தகத்திலே அவர் புத்தகம் ஒன்று. எனக்கு பழைய காலத்து இலக்கியம் ஒன்னும் தெரியாது. புதுமைபித்தனோடத இன்னும் படிக்கவில்லை. பாரதியாரோடது கேட்டதோட சரி.

  கே: உங்களுடைய நாவல்கள் உங்கள் இளம் வயதிலேயே எழுதி வைக்கப்பட்டதுதான் என்று சொல்லப்படுகிறது?

  மீ: என்னுடைய மூன்று நாவல்கள் முன்னமே எழுதிவைச்சதுதான். `சாய்வு நாற்காலி'தான் கடைசியா வந்தது. `கூனன் தோப்பு' 1967-=-68-ல எழுதினது. 93-ல் தான் வெளியிட்டேன். இடையில் நான் எழுதாமலேயே இருந்தேன். எங்க அப்பா இறந்த பிறகு, ஊரிலே நிறைய பிரச்சனைகள் வந்தது. எங்க அப்பா சொன்ன அதே பிரச்சனைகள் திரும்ப வந்தது. அண்ணன் குடும்பத்தில் ஊர் விலக்கு போட்டாங்க. அப்ப கடலோர கிராமத்தின் கதை-ல வர விஷயங்கள் அதே தோரணையில் நடந்தது. எங்க அப்பா முன்பு நடந்ததாக சொன்ன பிரச்சனைகள் திரும்ப வரத்தானே செய்யுது என்று சொல்லிக்கிட்டு, எனக்கு டக்குனு ஸ்ட்ரைக் ஆகி `கடலோர கிராமத்தின் கதை' எழுதினேன். நம்ம நண்பர் ஒருத்தர் முஸ்லீம் முரசு பத்திரிகையிலே பொறுப்பேற்றார். அவர்கிட்ட அப்படியே போடனும்னு கன்டிசனோட கொடுத்தேன். ஆனா அதுவும் பத்து வருசம் வரை வெளியாகாமலேயே இருந்தது. அப்ப என் கண் முன்னே முஸ்லிம் வாசகர்கள் தான் இருந்தாங்க. மற்றவர்களை எனக்கு தெரியாது. எந்த படைப்பாளியையும் தெரியாது. தமிழ் எழுதுவதற்கு ஓடாது. நான் சொல்ல சொல்ல இன்னொரு ஆள் எழுதுவாரு. எழுதினத திருப்பி படிக்கலை. `கடலோர கிராமத்தின் கதை'-ல பிழைகள் வந்தது.

  இப்படியா `கடலோர கிராமத்தின் கதை' தொடரா வெளிவந்து பத்து வருசத்துக்கு பிறகு வெளியிட்டேன். முதல்ல யார் வெளியீடுவது வாங்குவது என்பது பற்றியல்லாம் நான் நினைச்சு பார்க்கல. அப்ப நான் ஒரு விளம்பரம் கொடுத்தேன். இப்படி `கடலோர கிராமத்தின் கதை'-னு ஒரு புத்தகம் வருது. யார்கெல்லாம் புத்தகம் வேணும்னு மட்டும் எழுதினா போதும். காசை புத்தகம் வாங்கி விட்டு கொடுத்தால் போதும். நாலே நாலு லட்டர்தான் புத்தகம் வேணும்னு வந்துச்சு. இந்த நாலு பேரை நம்பி புத்தகம் போடைரயானு சொல்லி போடாமலே விட்டுட்டேன். அப்புறம், 87=-88ல, 5,000 ரூபாய்க்கு புத்தகம் போட்டேன். அப்ப தொழில் நல்லா பண்ணிக்கிட்டு இருந்த ஒருத்தர் உதவி பண்ணுறேனு சொன்னார். அதனால அத நானே வெளியிட்டேன். ஆனால் வெளியிடுறதுக்கான சம்பிரதாயங்கள் எனக்குத் தெரியாது. அப்பத்தான் சுந்தர ராமசாமியை எனக்கு தெரிஞ்சுது. ஒரு ஜவுளிக் கடைக்காரர் தகழியோட புத்தகத்தை தமிழில் கொண்டு வந்திருக்கார்னு அறிஞ்சேன். என்னையும் அவருக்கு அறிமுகம் படுத்தி வைத்தாங்க. நானும் வெளியீட்டு விழாவுக்கு கூப்பிட்டேன். அவர் நம்மளை கண்டுக்கிடாம புத்தகம் கொடுத்தவுடனே அதுக்கான பைசாவை மட்டும் கொடுத்தார். ஏதோ சூழ்நிலையினாலே வரமுடியாதுன்னு சொன்னார். நானும் அதை கண்டுக்கிடலை. ஏனா எனக்கு அவரைப்பற்றி அதிகம் தெரியாது. நீலபத்மநாபனை வெளியீட்டுவிழாவுக்கு அழைத்தேன். அவரையும் அப்பதான் தெரியும். அந்த வெளியீட்டு விழா மேடையிலே 70 புத்தகம் வித்துச்சி. அதுக்கப்புறம் ஒரு புத்தகமும் விற்கலை. மேடையிலே தேங்காய் பட்டணத்தோட வரலாறைப் பற்றி யாரோ பேசினாதால, வரலாறுன்னு நினைச்சி நிறைய பேர் வாங்கினாங்க. மறுநாள் போட்டானுங்க சண்டை. தங்கள் புரோகிதர் வர்க்கத்தை ரொம்ப புனிதமா நினைச்சிக்கிட்டு இருந்தாங்க. அத நான் தோலுரிச்சி காண்பிச்சிட்டேன். ஊருக்குள்ள பயங்கர எதிர்ப்பு. புத்தகத்தை எரிக்கனும்னு சுடனும்னு அங்க பயங்கர கிளர்ச்சி. அப்ப அங்க இரு அரேபிய மதம் சார்ந்த புத்தக கடையில் அந்த புத்தகம் கொஞ்சம் விக்கறதுக்காக வைச்சிருந்தான். ஊருமக்கள் திரண்டுபோய் புத்தகத்தை விற்கவிடலை. புத்தகமெல்லாம் கட்டுக்கட்டாய் இருந்திச்சி. என்னசெய்யனும்னே எனக்கு தெரியல. உண்மையிலே தீ வைச்சி சுடனும்னுதான் நினைச்சேன். யாரோ ஒரு முஸ்லீம் பையன் ஒரு கேளரா பல்கலைக்கழகத்திலே கொண்டுபோய் இருக்கான். அதை அங்கே இருந்த யாரோ படிச்ச உடனே நல்லாயிருக்கேன்னு சொல்லி அதை பாடப்புத்தகமா ஆக்கிட்டான். பாடபுத்தகம் ஆக்கினது எனக்கு தெரியாது. அப்போ ஒரு ஆள், புத்தகம் வித்து தந்தாரே அந்த கல்லூரி பேராசிரியர் சொன்னாரு ``மீரான், நீங்க முஸ்லீம் யாருக்கும் கொடுக்க கூடாது''ன்னாரு. எப்படியும் புத்தகத்தை காலிபண்ணணும்னு சொல்லி எப்போதும் யாரை பார்த்தாலும் சும்மாவே தூக்கிகொடுக்கிறது. என் பெஞ்சாதியோட சொந்தகாரங்களுக்கு ஒன்னு ஒன்னு. சனியன் காலியாகட்டும்னு நினைச்சேன். அவர் சொன்னாரு இந்த புத்தகங்களை பூராம் முஸ்லீம் அல்லாதோருக்கு கொடுக்கனும்னு. கொஞ்சம் விலாசம் வாங்கி எல்லாருக்கும் இலவசமாய் 400 புத்தகங்களை அனுப்பினேன். வல்லிக்கண்ணன், அசோகமித்திரன், இந்திராபார்த்தசாரதி யாரையும் எனக்கு தெரியாது. ஆனால் அவங்களுக்கெல்லாம் இலவசமாய் அனுப்பினேன். அது போய் உடனே `கிளிக்' ஆகிடுச்சி. `கலை இலக்கியப் பெருமன்றம்' அவார்டு கொடுத்தாங்க. அப்பதான் உணர்ந்தேன். என் புத்தகத்துக்குள்ளே ஏதோ விஷயம் இருக்குன்னு. கேரள பல்கலைக்கழகத்திற்கும், பாரதி பல்கலைக்கழகத்திற்கும் 16, 16 என 32 புத்தகத்தை அனுப்பிவிட்டேன்.

  அப்ப சிலர் என்ன பிரச்சாரம் செய்தாங்கன்னா `தங்களை' பற்றி எழுதினதாலதான் மத்தவங்க இதை தூக்கினாங்க. ``எனக்கு கடவுள் பக்தி உண்டு. ஆனால் அதை நிறுவனமா ஏத்துக்கமாட்டேன். ஒரு நாளைக்கு ஐந்துமுறை தொழுகை பண்ணுவேன். குரான்ல சொன்னதையும் நபிகள் சொன்னதையும் நான் எதிர்க்கமாட்டேன். மாற்றும் சொல்லமாட்டேன். சமுதாயத்தை மட்டும் விமர்சனம் பண்ணுவேன். இஸ்லாம் ஒரு நிறுவனம் அல்ல. மார்க்ஸிசம்கிற கோட்பாடு எப்படி நிறுவனம் ஆச்சுதோ அப்படியே இஸ்லாமும் புரோகிதர்களால நிறுவனமாகி சிரழிஞ்சிடுச்சி.

  கே: நீங்கள் முறையாக பயின்றது மலையாளம்தான். வாசிப்பதும் தொடர்ந்து மலையாளம்தான். பின் ஏன் தமிழை எழுதுவதற்கு தேர்ந்து எடுத்தீங்க.

  மீ: நான் படிச்சது மலையாளம். தாய்மொழி தமிழ். வீட்டில் தமிழ்தான் பேசினேன். மலையாளம், முறையாக படித்தாலும் அது ஒரு அந்நிய மொழிதான். ஆனாலும் எல்லா நாவலும் முதலில் எழுதியது மலையாளத்தில்தான். மலையாளத்தில் எழுதிய பிறகு மலையாள நாவல்களாகவும் அது இல்லை. தமிழ் நாவலாகவும் இல்லை. நான் மலையாளத்தை இலக்கணத்தோட முறையாக படிச்சதுனால அது என்னை கட்டுப்படுத்திச்சி. அதை மீற என்னால முடியல. அதனால சில மக்களோட உணர்ச்சிகளை சொல்லாக மாற்ற மலையாளம் இடம் தரலை. பஷீருக்கு முடியும். தகழிக்கு முடியும். இல்ல வேற ஒருத்தருக்கும் முடியும். அது அவங்களோட தாய்மொழி. நான் சொல்லக்கூடிய விஷயம் முழுவதும் தமிழ் கலாச்சாரத்தோடதான் இருக்கு. ஆனால் தமிழனுக்கு அது மலையாள கலாச்சாரமாக தோணலாம், மலையாளிக்கு அது தமிழ் கலாச்சாரமாக தோணலாம். அதுரெண்டுங்கட்டான் கலாச்சாரம்.

  மலையாளத்தில் நான் என் மனசில என்ன நினைச்சிகிறேனோ அதை கொண்டுவர முடியலை. அப்பதான் தமிழ் நல்லா பேச தொடங்கினேன். எழுதுவதற்கு மூணு நாலுபேர் கிடைச்சாங்க எழுதிக்கிட்டிருக்கப்ப மக்களோட சொல்லை போடும் போதுதான், ஒரிஜினலான எபக்ட் கிடைச்சது. இது என்னோட தாய்மொழி. அந்த மக்கள் பயன்படுத்தக்கூடிய சொற்கள் எனக்கு மனப்பாடமா தெரியும். அதனால நமக்கு தமிழ் மொழிதான்னு முடிவு பண்ணினேன். நம்ம தாய்மொழியில் எழுதினால்தான் மொழி நம்ம பின்னால் வரும். மலையாளத்தில் எழுதினால் மொழிக்கு பின்னால நாம ஓட வேண்டியிருக்கு. படைப்பாளி எப்போதுமே மொழிக்கு பின்னாடியே ஓடக்கூடாது. இவன் பின்னால மொழி வரனும். அது எந்த சட்டதிட்டத்திற்கும் உட்பட்ட மொழியாக இருந்தால் பல தடங்கல் ஏற்படும். அதனால இவனுக்கே உரிய மொழியில எழுதனும். நான் மொழியை கடந்து நிற்க காரணம் தமிழோட சட்ட திட்டங்கள் தெரியாது. தெரியாததுனால என்னால மீற முடியும்.

  கி. இராஜநாராயனனோட ஒரு ப்ளஸ் பாயிண்ட் கலைத் தன்மையை விட அவரோட சொற்கள். எப்பவுமே எந்த சொற்கள் மக்களிடையே உணர்ச்சிளை வெளிப்படுத்துமோ அந்த சொற்களை அதேபடி இலக்கியத்தில் கொண்டு வருவோமேயானால் மனசில பல அதிர்வுகளை ஏற்படுத்த இயலும். எந்தசொற்கள், அதிர்வுகளை ஏற்படுத்தலையோ அது கரையேறாது. உதாரணத்திற்கு, தினமும் நம்ம காகத்தை பார்க்கிறோம். அது ஒரு அழகான பொருள் பார்க்கிறோம். அது ஒரு அழகான பொருள் அல்ல. அது ஒரு அருவருப்பான பொருள் இல்ல. யாராவது காக்கையை அப்படியே பார்த்துகிட்டேவா இருப்போம். இல்லை. இந்த காக்கை, ஒரு கலைஞன் வரைவானேயானால் கொஞ்ச நேரம் பார்க்கலாம். என்னன்னா ஏதோ ஒரு இது நம்ம மனசுல வீணை கம்பியை தட்டுது. நான் ஹைதராபாத் மீயூசியம் போனேன். அங்கே ஆர்ட் மீயூசியம் ஹேலரியில ஒரு படம் இருக்கு. `மெர்சென்ட் ஆப் வெனிஸ்'ல வர வெனிஸ் நகர தெருவை வரைஞ்சி வச்சிருக்காங்க. உண்மையில நான் அப்படியே நின்னுட்டேன். என்னை பிறகு இழுத்துதான் கொண்டு வந்தான் அந்த கைடு பிரமிச்சு போனேன். நான் ஏதோ ஒரு வெனிஸ் நகரத்து தெருவிலே நிற்கிறது போல உணர்ந்தேன். இது எப்படி ஏற்பட்டது. காரணம் என்னன்னா கண்ணுக்கு புலப்படாத, மனசுக்கு சிந்தனைக்கு எட்டாத ஏதோ ஒரு தன்மை நம்மை அதோட இழைக்குது. அது வந்து ஓவியம் மூலம், இசை மூலம், சொற்கள் மூலம். இயற்கையில் பலப்பல வண்ணங்கள் இணைந்து இருப்பது போல, சொற்களால் கோர்வைன்னு ஒன்று இருக்கு. இது தானாக விழனும். விலங்கிடாத மொழியா இருக்கனும். எல்லார்கிட்டேயும் என்ன சொல்வேனா, மீரானுக்கு மொழினா அதை விட்டுறனும். அதுல இலக்கணம் பார்க்காதீங்க. மரபு பார்க்காதீங்க. சொல் பாக்காதீங்க. தமிழானு பாக்காதீங்க. இது மீரானோட மொழி. இது இப்படித்தான் இருக்கும்னு நெனச்சிட்டு படிங்க அதான் நல்லது.

கே: எழுதுவதற்கான மனநிலை உங்களுக்கு எப்படி உருவாகுது?

  மீ: எனக்கு எப்ப எழுதனும்னு தோணுதோ அப்ப எழுதுவேன். எனக்கு ஒரு கட்டாயம் ஏற்படும். அதற்கப்புறம்தான் எழுதனும்னு தோணும். எனக்கு எழுதுவதற்காக திட்டம் இருக்கு. ஆனா அதை எப்ப எழுதனும் எப்படி எழுதனும் என்பது நேரத்திற்கு ஏற்ப மாறும். நான் ஒரு புதிய முறையில் எழுதலாம்னு திட்டமிட்டிருக்கேன். ஆனா அதுல எப்படி வெற்றி பெறப்போறேன் தெரியலை. இதுவரை சொல்லாத பாணியில ஒரு கதையை சொல்லனும். என் வாழ்க்கையோட முதல் பகுதியை மையமா வைச்சு எழுதலாம்னு இருக்கேன். சுயசரிதமாக அல்ல. நம் சுயசரிதை கதையாகாது என் சுயசரிதையை உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஒருத்தருடைய வாழ்க்கை கதையாகாது. சமூகத்தோட சில விஷயங்களை உள்வாங்கனும். அதை நம்மளா மாத்தனும். அதோட நம்ம அனுபவங்களையும் கலக்கனும். திரும்ப அதை வெளிப்படுத்தும்போது, அது வேற ஒண்ணா வெளி வருது. அந்த வேற ஒண்ணுதான் கதை. நான் கக்கூஸ் போறது, ஒண்ணுக்கு அடிக்கிறது நான் சோறு திங்காததில்ல கதையே இல்லை. இதிலே தேர்வுனு ஒன்று இருக்கு. எனக்கு வாழ்க்கைல நீண்ட அனுபவம் இருக்கு. அதையெல்லாம் கலையா ஆக்க முடியுமா. உங்களை பார்த்து நான் எழுதுவது, என்னை பார்த்து நீங்க எழுதுறது, உங்களைப் பார்த்து அவர் எழுதுறது. இவங்களையெல்லாம் படைப்பாளின்னு எப்படி சொல்ல முடியும்.

  கே: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நீங்க. அதன் செயல்பாடுகள் பத்தி என்ன சொல்ல விரும்புறீங்க.

  மீ: சாகித்ய அகாடமி, விருது தேர்வில் வெளியீட்டாளர்கள் தலையீடு ஜாஸ்தி. சிலர் சபலங்களுக்கு உட்பட்டு போறாங்க. அதுக்கு கூட படைப்பாளிகள் காரணம் அல்ல. வெளியீட்டாளரோட வணிக நோக்கம், அவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைச்சதுனா, என்ன இவனுக்கு 2000 புஸ்தகம் அதிகமா விக்கும். அந்த ஒரே நோக்கத்துக்காக படைப்பாளியும் பல நேரங்களில் பல செயல்களிலும் உட்படறாங்க. இதனால் வெளியீட்டாளர்கள் தலையீட்டை தடுக்கனும். ஏன்னா நல்ல படைப்புக்கு அங்கீகாரம் கிடக்க இவன் தடையா இருக்கான்.

  கேரள, கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் மாநில சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுது. தமிழ்நாட்டுல கேட்டா தமிழ் வளர்ச்சி கழகம் இருக்கும்பாங்க. இப்பொழுது தமிழ் சாகித்ய அகாதமின்னு ஒன்னு ஆரம்பிச்சிருக்காங்க. அங்க என்னடானா பழம் தமிழன்மார், புழுத்து, பழுத்து கிடக்காங்க. தமிழுக்கு சம்மந்தமில்லாத மி.கி.ஷி. அதிகாரியை கொண்டு போயி உட்கார வைச்சிருக்கான். நல்ல படைப்புகள் வெளி வரலை. நல்ல பல படைப்புகள் அச்சில இருக்கு. அச்சுக்குள்ளேயே இருக்கு. நிறைய எண்ணம் விற்பனை ஆகாம இருக்கு. புரபஸரை மாதிரி பழைய பாட்டம் பாடிக்கிட்டு நிறைய பேர் இருக்காங்க. நவீன இலக்கியம் பத்தி கண்ணை திறந்து கூட பார்க்கறதில்லை. போ வருஷம் யாருக்கு சாகித்ய அகாடமி கிடைச்சதுனா அவனுக்கு தெரியாது. இந்தாளை எப்படி நாம சாகித்ய அகாடமி தலைவரா ஆக்க முடியும். சாகித்ய அகாடமி தலைவர் ஆகனும்னா பல தகுதிகளை எதிர் பார்க்கிறாங்க. அது இங்க நிறைய பேருக்கு இல்லவே இல்லை.

நன்றி: தீராநதி.

Aug 14, 2010

போய்யா போ - ஆத்மாநாம்

 

போய்யா போ

நான் ஒரு கெட்டவன்athmanam
நான் பீடி குடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் இலைச்சுருள் குடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஒரு சிகரெட் குடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பில்டர் சிகரெட் குடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பில்டர் கிங்ஸ் குடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் சுருட்டு குடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பைப் குடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் மூக்குப்பொடி போடுபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் வெற்றிலைப்பாக்கு போடுபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் புகையிலை போடுபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஜர்தா பீடா போடுபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் உள்ளாடையும் பனியனும் அணிபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பேன்ட்டும் ஷர்ட்டும் அணிபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் காரில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் டாக்ஸியில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஆட்டோவில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் சைக்கிள் ரிக்க்ஷாவில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் சைக்கிளில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பேருந்தில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் நடந்து செல்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ராஜ பவனத்தில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் அரசு மாளிகையில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஈன்ற மாளிகையில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஈன்ற ப்ளாட்டில் வாழ்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் வாடகை ப்ளாட்டில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஒண்டுக் குடித்தனக்காரன்
நான் ஒரு கெட்டவன்
நான் சேரியில் வாழ்பவன்
நான் ஒரு கெட்டவன்
........................................
இப்படியே சொல்லிக் கொண்டு போனால்
யார் கெட்டவன்
யார் நல்லவன்
அவ்வளவு தானே
கெட்டவன் நல்லவன்
நல்லவன் கெட்டவன்.

Aug 13, 2010

என் நினைவுச்சின்னம் - பசுவய்யா

இந்த நிழல்


எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?
பாதத்தின் விளிம்பிலிருந்துதானா?
அல்லது அதன் அடியிலிருந்தா? sura---drawings-3-kc82
பூமியில் காலுன்றி நிற்கும் போது
நிழல்மேல்தான் நிற்கிறோமா?
காலைத் தூக்கிப் பார்க்கலாம்தான்
அந்த யோசனையை நான் ஏற்கவில்லை
பூமியில் நிற்கும் போது
எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்
என்பதுதான் எனக்கு தெரியவேண்டும்.

********************
வருத்தம்


வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைகலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில்வித்தை
பின் வாள்வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல்
ஆயுளின் கடைசித் தேடல் இப்போது
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என் முதுமை
பின்னும் உயிர் வாழும் கானல்.

********************
தனது மரணத்தை பற்றி குறிப்பிடும் போது ''ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல் எதுவும் அதில் இல்லை.'' என்கிறார் சு.ரா.


என் நினைவுச்சின்னம்

இரங்கற் கூட்டம்போட ஆட்பிடிக்க அலையாதே
நம் கலாச்சாரத் தூண்களின்
தடித்தனங்களை எண்ணி
மனச்சோர்வில் ஆழ்ந்து கலங்காதே
.
.
.
இருப்பினும்
நண்ப,
ஒன்று மட்டும் செய்.
என்னை அறியாத உன் நண்பனிடம்
ஓடோடிச் சென்று
'கவிதையை எழுப்ப முயன்று கொண்டிருந்தவன்
மறைந்து விட்டான்' என்று மட்டும் சொல்.
உன் கண்ணீர் ஒரே ஒரு சொட்டு
இந்த மண்ணில் உதிரும் என்றால்
போதும் எனக்கு.

********************

உன் கவிதையை நீ எழுது

உன் கவிதையை நீ எழுது
எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி
எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி
நீ அர்ப்பணித்துக் கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது
சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது
நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது
எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப் பற்றி எழுது

எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்
ஒன்று செய்
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு.

***

(கொல்லிப்பாவை 1985)

Aug 12, 2010

மண்ணின் மகன்-நீலபத்மநாபன்

வெறிச்சோடிய விரிந்து பரந்த இந்த வானும் கரையில் வந்து மோதி திரும்பிச் செல்லும் அலைகள் எழுப்பும் ஓசையும் இதற்கு முன்பே பழக்கப்பட்டிருப்பதைப்போன்ற ஒரு பிரமை...

nelapadmanaban-vz வேலை மாற்றலாகி, முதல் முறையாய் வந்திருக்கும் இந்த இடம் இதற்கு முன்பே பரிச்சயமானதாய் தோன்றும் இந்த விசித்திர மனமயக்கம்... ?

பஸ்ஸிலிருந்து இந்தக் கடற்கரையில் இறங்கி, ஆபீஸ்உம், குவார்ட்டர்ஸ்உம் ஒன்றாய் இயங்கும் அதோ தெரியும் சிறு கட்டிடத்தில் போய் பெட்டி படுக்கையைப் போட்டு விட்டு இங்கே வந்து இப்படி உட்கார்ந்திருக்கையில்...

மனதில் வந்து கவியும் இன்னதென்று தெரியாத அந்நியமான உணர்வுகள்.

நாளை காலையில் எட்டு மணிக்கு வேலையில், 'டியூட்டி ரிப்போர்ட் ' பண்ணிவிட்டால், பிறகு மீண்டும் யந்திர வாழ்க்கை..

தொலைவில் மும்முரமாய் இயங்கிக் கொண்டிருக்கும் யந்திரங்கள். ஆழத்தில் மணலை வாரி வரிசையாய் நிற்கும் லாரிகளில் நிறைக்கும் க்ரைன்கள்.

இதோ நான் உட்கார்ந்திருக்கும் இந்த இடம் மட்டுமே இந்தக் கடற்கரையில் கடலின் மட்டத்தில் இப்போது மிஞ்சியிருக்கிறது. மீதி இடத்திலிருந்தெல்லாம் மணல் ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது.

இன்னும் சில நாட்களில் இதுவும்...

நீர்த்திவலைகளை அள்ளிக்கொண்டு வரும் காற்று. குளிர் உடம்பில் உறைக்கத் தொடங்கிவிட்டது. அறைக்குப் போய் முடங்கிவிடக் கெஞ்சும் உடம்பு.. எழுந்திருக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது மீண்டும் வீசியடித்த வாடைக் காற்று.

கம்மென்று வந்து கமழும் பாலை பூ மணம்.

இந்தக் கடற்கரையில் இவ்வேளையில் இந்த மணம்....

யாரோ பின் பக்கம் வந்து நிற்பதைப் போன்ற உணர்வு...

திடுக்கிட்டு பார்த்தபோது, ஊமை நிலவில் ஓர் இளைஞன். முகம் சரிவரத் தெரியவில்லை.

சார் ' நீங்கதான் அற்புதராஜ் சாரின் ப்ளேஸில் புதுசா வந்திருக்கும் சயின்டிபிக் ஆபீசரா ?

ஆமா ' நீ யாரு ?

இங்கே பக்கத்தில்தான் இருக்கிறேன்.

சற்று நீங்கி அவன் உட்கார்ந்துகொண்டான் ?

ஏன் சார் ' இந்தக் கடற்கரை ஊர் மணல் முழுவதையும் இப்படி பத்து பதினஞ்சடி ஆழத்தில் தோண்டியெடுத்து வாரிக்கொண்டு போறீங்களே... இந்த ஜனங்களின் பரிதாப நிலைமையை மட்டும் நீங்க யாரும் நினைச்சுப் பார்க்காமல் இருக்கீங்களே. இது நியாயம்தானா ?

என்ன தம்பீ.. பக்கத்தில்தான் இருக்கேண்ணு சொல்றே... அப்படியிருந்துமா ஒண்ணும் தெரியாதது போல் இப்படி கேக்கறே ? எத்தனையோ மாசங்களா சர்வே, ஆராய்ச்சி எல்லாம் நடந்து முடிஞ்சு, அப்புறம் இங்கேயிருந்து மணல் வாரத் தொடங்கி இப்ப ரெண்டு வருஷத்துக்கு மேல் ஆயிடுச்சு. ஊருக்கு புதுசான ஆளு போல் நீ இப்படி எங்கிட்டே கேட்டால் ?

இந்தக் கடற்கரை மணலின் மகிமை சீமையைப் போய்ச் சேர்ந்தது பற்றி கர்ண பரம்பரையாய் கேட்க நேர்ந்த செய்திஞாபகம் வருகிறது...

செழிப்பாய் வளரும் தென்னை மரங்களுக்கு பெயர் போன இந்த ஊரிலிருந்து முன்பு ஏற்றுமதி செய்யும் வடத்தின் கயிற்றின் எடையைத் தட்டிக்காட்ட உள்ளூர் வியாபாரிகள் இந்த மணலில் புரட்டியெடுத்து அனுப்ப, யதேச்சையாய் சீமையில் கப்பலிருந்து இறக்குகையில் நடத்திய பரிசோதனையில் கதிரியக்க உலோகம் அடங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பிறகு இந்த மண்ணுக்கு வந்தயோகம்...

சார், நீங்க சொல்றாப்போல் இந்த ஊருக்கு யார் யாரல்லாம்மோ புதுசு புதுசா ஆளுங்க வந்து மணலை அள்ளிகிட்டுப் போனாங்க. ஆழமா தோண்டிப் பாத்தாங்க. அதையெல்லாம் இந்த ஊர்வாசிக, ஏழைக் குடியானவங்க, செம்படவங்க நாங்க பாத்துகிட்டுத்தான் இருந்தோம். இல்லேண்ணு சொல்லலே. ஆனா, யாருமே விஷயம் என்னாண்ணு நெஜத்தை எங்ககிட்டெ வாயைத் தொறந்து சொல்லவே இல்லையே... வேறென்னவோ சாக்குப் போக்குச் சொல்லி சமாளிச்சாங்க. கடைசியில க்ரைன், மெஷீன், லாரி வந்து மணலை வாரத் தொடங்கின. அப்புறம்தான் உள்ளதைப் புரிஞ்சுகிட்டோம்.

அதன்பின் நெடுநாள் இங்கே நடந்த ரகளை இலாகாவில் இருக்கும் எல்லோருக்கும் தெரிந்ததுதானே ' இந்த ஊர்ஜனங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து மறியல் செய்தார்கள். ஆர்ப்பாட்டம் செய்தார்கள். கடைசியில், இலாகா அதிகாரிகள், அரசியல்வாதிகள், உள்ளூர் மக்கள் பிரதி நிதிகள் இவர்களின் இடையில் பல நாட்கள் நடந்த பேச்சு வார்த்தையின் படி எல்லாம் 'சுபமாய் ' முடிவு பெற்றது. அதன் படி, இந்த மணல் வாரலால் இடம் இழந்தவர்களுக்கு பதிலுக்கு வேறு இடம் கொடுப்பது, தொழிலும் வேறு வருமான மார்க்கங்களும் இழந்து போனவர்களுக்கு இங்கே இது சம்பந்தமான வேலைகளில் முதலிடம் கொடுப்பது போன்ற விதிகள் இரு தரப்பாராலும் ஒப்புக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறதே..

இப்போது பக்கத்து மாதா கோயில் மணியோசை திடாரென்று கேட்ட ஒலிவீச்சினாலா இல்லை வெடவெடக்கும் குளிர் காரணமாகவா இந்த இளைஞனின் நடுக்கம்... ?

சற்று தொலைவில் நிழல் கோலமாய் ஒண்டியாய் தலை தூக்கி நிற்கும் மாதா கோயிலின் மங்கிய தோற்றம் ஊமை நிலவில்...

நான் அறிஞ்ச வரையில் இந்த சர்ச்சைக்கூட அப்படியே விட்டு வைக்கவும் அப்படாண்ணு நீங்க போட்ட கண்டிஷனைக் கூட சம்மதிச்சிருக்கோமே அப்புறம் என்ன ?

அவன் சிரிப்போசை...

வீடும் குடியுமெல்லாம் குளம் தோண்டப்பட்டு இழந்த செனங்க குடிபெயர்ந்து போன பிறகு இங்கே மிஞ்சியிருக்கும் சாமிக்கு பாதிரியார் மட்டும் தொணை.

ஏன்... ? ரொம்ப பேருங்களுக்கு இங்கேயே வேலை கொடுக்கப்பட்டிருக்குதே. அவுங்களுக்குப் பிரார்த்தனை செய்ய வசதியா இருக்காதா ?

இப்போது பிரமாண்டமான ஒரு கறுத்த விலங்காய் நீண்டு நிமிர்ந்து கிடக்கும் சமுத்திரத்தின் மறுமுனையில் தொடுவான விளிம்பில் மின்னல் வெளிச்சம், கூட ஓடிவரும் இடியோசை...ஜ்

மழை பெய்யப் போகுது போலிருக்குது. அதுதான் இத்தனை குளிர்.

நான் எழுந்தேன்.

அவனும் எழுந்தான்.

இப்போது முகம் இருளில் தெரியவில்லை. ஆனால் நல்ல ஆஜானுபாகு என்பது மட்டும் தெரிகிறது.

மெல்ல நடந்துகொண்டிருந்த என் பின்னால், சற்று நீங்கி கூடவே வந்து கொண்டிருக்கும் அவன் குரல்.

கடற்கரை மணலையெல்லாம் இப்படி பத்து பதினைஞ்சடிக்கு தோண்டி லாரியில் அள்ளிகிட்டுப் போனா கடல் ஊருக்குள்ளேயே ஏறி வருவதை உங்க இலாகா ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குது ? குறிப்பா, மழை காலத்தில் இந்த ஊரே கடலுக்குள்ளே போய்விடுதே...

அவன் குரல் கோஷமாய் உயர்ந்ததுபோல்.....

தம்பீ.. இந்த மண்ணின் மகன் உன் கோபத்தையும் தாபத்தையும் புரிஞ்சுக்க என்னால் முடியுது. ஆனா.. இந்த ஊரைச்சேர்ந்த உங்களுக்கு இந்த கஷ்ட நஷ்டங்களிலும் நாட்டுக்கு சில நன்மைகள் விளைந்திருப்பதை நீ ஏன் எண்ணிப் பார்க்கவில்லை ?

மீண்டும் இருளில் அவன் சிரிப்பு.

நீங்க எதைச் சொல்லுறீங்கண்ணு எனக்குத் தெரியும். உங்களுக்கு முந்தி இங்கே இருந்த அற்புதராஜ்உம் அவன் கூட்டாளிகளும் அதைச் சொல்லித்தான் எங்களை வஞ்சித்தாங்க....

அவுங்க என்ன சொன்னாங்க ?

அணுசக்தி நம் நாட்டில் தொழில் கூடங்களை உருவாக்கும், வெளிச்சம் தரும். நோய் சிகிச்சைக்குப் பயன்படுமென்று....

அதெல்லாம் மொத்தத்தில் நம் நாட்டுக்கு.... ' ஆனா, குறிப்பா இந்த ஊருக்கு கிடைக்கும் பெரிய ஒரு நன்மைஇருக்கு ' இங்கே இருக்கும் இந்த மணலில் கதிரியக்க உலோகம் கலந்திருந்தால் இந்த ஊர் குழந்தைங்க - பெரியவங்களில் பரவலாய் தென்பட்ட ஊனம், புற்றுநோய் போன்றவை இனி நாளாவட்டத்தில் குறைந்துவிடும். காரணம், இப்ப நாங்க இங்கிருந்து அள்ளிக்கொண்டு போகும் மணலில் இருந்து அந்தக் கதிரியக்க உலோகம் மோனஸைட்டை அப்புறப்படுத்தி விட்டு மறுபடியும் இதே மணலை இதே இடத்தில் கொண்டு போட்டு விடுவோம். அப்புறம் இந்தப் பள்ளங்கள் நிரம்பிவிடும். கதிரியக்க அபாயமும் நீங்கிவிடும்.

சார்.. நீங்க சொல்ற இந்த நன்மையெல்லாம் எத்தனை வருசங்களுக்கு அப்புறம் நடக்கப் போகும் காரியங்க ' அதுவரை ஏழை சனங்க இந்தக் கொடுமையெல்லாம் தாக்குப்பிடிச்சு உயிரோட இங்கே இருக்கணுமே.. அதை என்னான்னு கேட்டா அப்படி கேட்டவனையும் விட்டு வைக்கமாட்டாங்க...

சர்ச்சின் முன் ஒரு கணம் நின்று உள்ளுக்குள் இறைவா என்று பிரார்த்தித்துக் கொண்டேன்.

மீண்டும் நடந்தேன். இப்போது மெளனம். அவன் குரல் கேட்கவில்லை. திரும்பிப் பார்த்தபோது புதைக்குழிக் கல்லறைகள் மட்டும் மங்கிய நிலவில்...

அவனைக் காணோம்...

சற்றுக்கூட நடந்தபோது எதிரில் வாச்மேன் சாமுவேல் வந்து கொண்டிருந்தான்.

அதுக்குள்ளே எங்கே சார் போயிட்டாங்க... பக்கத்து ஊரில் போய் டிபன் வாங்கிட்டு வந்திருக்கேன். மழை வேறு பெய்யப் போகுது. சீக்கிரம் வாங்க...

அறைக்கு வந்து டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் சாமுவேல் சொன்னான்.

சார் நீங்க டியூட்டில் சேர வந்த உடனேயே சொல்ல வேணாமுண்ணுதான் இருந்தேன். ஆனா கடற்கரையில் நீங்க ஒண்டியா ஒக்காந்திருந்த எடத்தை நான் இங்கேருந்து பார்த்தேன். அதுதான் அங்கே ஓடியாந்து கொண்டிருந்தேன்.

ஒண்டியாகவா ? கூட இருந்த ஆளை நீ பார்க்கலயா ?

அவன் முகத்தில் ஒரு மிரட்சி.

சார்.. எதுக்கும் இனி இப்படி ஒண்டியா அங்கே போய் உக்கார வேணாம் ?

என் முகத்தில் த்வனித்த கேள்விக்குறியைப் பார்த்துவிட்டு அவனே குரலைத் தாழ்த்திச் சொன்னான்.

இந்த ஊரில் மணல் வாருவதை எதிர்த்து ரகளை நடந்துகிட்டிருந்தது உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். அதில் முக்கியபங்கு வகிச்சவன் அந்தோணி. இந்த கிராமத்திலேயே நாலு எழுத்து படிச்ச அவன் மீது எல்லோருக்குமே ரொம்ப மதிப்பு, மரியாதை, அன்பு... ரகளை முடிஞ்ச பிறகு அவனுக்கு இங்கேயே வேலை கொடுத்தாங்க... ஆனா.. அதன் பிறகும், இங்கே அப்படி வேலை பார்க்கும் மத்தவங்களையும் சேத்துகிட்டு அடிக்கடி மோதல்கள்...அப்போதுதான், ஒருநாள் ராத்திரி ஷிப்டில், மணல் ஏத்திக்கிட்டிருந்த லாரி ஏறி, இப்ப நீங்க ஒக்கார்ந்திருந்தீங்க இல்லையா, அந்த இடத்தில் வச்சு அவன் மரணம்...அதில் அற்புதராஜ் சாரின் கை உண்டுண்ணு சொல்லிக்குறாங்க. அந்தோணியை அந்த சர்ச்சின் பக்கத்தில் தான் சார் ஊர் ஜனங்க எல்லோரும் கண்ணீர் விட்டபடி பொதைச்சாங்க... சரிங்க சார்... ரொம்ப நேரமாச்சு.. படுத்துக்கங்க.

Aug 10, 2010

இருளப்ப சாமியும் 21 கிடாயும் - வேல.இராமமூர்த்தி

இருளாண்டித் தேவரை உப்பங்காற்று ‘சிலு சிலு’ என உறக்காட்டியது. முளைக் கொட்டுத் திண்ணைக்கு என்று ஒரு உறக்கம் வரும். நெஞ்சளவு உயரமான திண்ணை. நடுவில் நாலு அடுக்கு சதுரக் கும்பம். தப்பித் தவறி கால் பட்டுவிட்டால் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும். நாலு கல்தூணில் நிற்கும் ஒட்டுக் கொட்டகை. கிழக்குப் பாதையோரம் தரையோடு முளைத்த பத்ரகாளி, இளவட்டஙக்ள் பத்ரகாளிக்குப் பயந்து இரவு நேரங்களில் தப்பிலித்தனம் பண்ணுவதில்லை. இந்த விஷயத்தில் பெரியாளுகள் ரொம்பக் கண்டிஷன்.
velaram ’எளவட்ட முறுக்கிலே எவளோடயாவது போறவன்... கம்மாக்கரை, கிணத்தடி, படப்படிப் பக்கம் போயிறுங்க. தப்பி நடந்தா... காளி கண்ணைக் கெடுத்திடும்’ என்பார்கள். மற்றபடி பகம் பூராவும் வெட்டுச் சீட்டு, ரம்மி, தாயக்கட்டம், ஆடுபுலி ஆட்டம் நடக்கும். தென்புறம் இருளாண்டித் தேவர் படுத்திருந்தார். அவர் தலைமாட்டில் கந்தையாத் தேவர். வட ஓரம் ஏழு பேர் ரம்மி, ஏழு பேரில் இருளாண்டித் தேவர் மகன், மகள் புருஷன், கந்தையாத் தேவர் மகன், தம்பி மகன் ஆடிக் கொண்டிருந்தார்கள். மேலப்புறம் வெட்டுச் சீட்டு, கிழக்கே பத்ரகாளி பார்வையில் தாயக் கட்டம். இருளாண்டித் தேவரின் கால்மாட்டில் ஆடுபுலி ஆட்டம். எல்லோரும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணு சொந்தம். தகப்பன், மகன், மாமன், மச்சினன்.
சீட்டுப் பிடிக்க கை பழகாத சின்னப் பயலுகளுக்கு நிறைகுளத்தம்மன் கோயில் ஆலமரத்தில் காக்கா குஞ்சு விளையாட்டு. ஊர்க் கிணறுகள் அத்தனையும் குட்டப்புழுதி ஆகிவிடும். குதியாட்டம்தான்.
இருளாண்டித் தேவரின் இடதுகை மடங்கி தலைமாட்டில் பாந்தப்பட்டிருந்தது. இரண்டு தொடை இடுக்கிலும் வலது கையைக் கொடுத்திருந்தார். தொடை இடுக்கில் கிடந்த தழும்புகள் மேடு தட்டிக் கிடந்தன. கவுல்பட்டியில் ஆடு திருடப்போய் பிடிபட்டு பெருநாழி போலீஸார் கம்பியைக் காய வைத்து இழுத்தத் தழும்பு.
பெருநாழிக்கு மேற்கே நாலாவது மைலில் கவுல்பட்டி. தெலுங்கு பேசுகிற ரெட்டிமார் ஊரு. வண்ணான் குடிமகனைத் தவிர்த்து எல்லோரும் ரெட்டிமார்கள் தான். சம்சாரிகளுக்கான எல்லாக் கோப்புகளும் உள்ள ஊர். வீட்டு வீட்டுக்கு உழவு மாடு. கிடை கிடையாக ஆடு, ஊரைச் சுற்றி பெரும்பெரும் படப்புகள். வாய் அகன்ற மண்பானை போல் ஊரணி. மாட்டுக்கும் மனுசருக்கும் அதுதான் குடிதண்ணீர். யாரும் கால், முகம் கழுவக் கூடாது. கட்டு செட்டான ஊர். களவுக்கு இடங்கொடுக்காத ஊர்.
பத்து பேர் எதிர்த்து வந்தாலும் அடித்து விரட்டுகிற வீரன் இருளாண்டித்தேவர். அன்றைக்குக் கவுல்பட்டி களவுக்குப் போனவர்களில் யாரும் குறைந்த ஆளில்லை. முருகேசத் தேவர், ஒத்தையிலே நின்னு ஊரையே அடிக்கிற தாட்டியன். அதே மாதிரி கந்தையாத் தேவர், நாகுத்தேவர், கருப்பையாத் தேவர், முத்துத்தேவர், சுந்தரத்தேவர், குருசாமித் தேவர் எல்லாரும் வீரவான்கள். இத்தனை பேரும் கம்பு கட்டி நின்றால் எந்தப்படையும் பின்வாங்கும்.
அன்றைக்குச் சாமத்துக்கு மேலே எல்லாரும் கிளம்பி வைரவன் கோயில் பொட்டல் ஆலமரத்தடிக்கு வந்து சேர்ந்தார்கள். பின் நிலாக் காலம். ராத்திரி ஒரு மணிக்கு மேலே தான் நிலா கிளம்பும்.
ஆலமரம். பாறையில் வேர்ப்பிடித்து உச்சியில் நின்றது. ஆலமரத்துப் பட்சி உத்தரவு கொடுத்தால்தான் களவுக்குக் கிளம்புவது வழக்கம். ஆந்தை வலமிருந்து இடம் பாய்ந்தால் நல்ல சகுனம். போகிற இடத்தில் ஆபத்தில்லை. இடமிருந்து வலம் ஆகாது. வீட்டுக்குத் திரும்பிவிட வேண்டும். எல்லோர் கையிலும் வேல் கம்பு. கனத்த செருப்பு, கருப்புப் போர்வை, குத்துக்காலிட்டு காத்திருந்தார்கள். வெகுநேரம் கழித்து ‘கீச்ச்....’ என்ற சத்தத்தோடு ஆந்தை வலமிருந்து இடம் பாய்ந்தது.
இருளாண்டித் தேவர் எழுந்தார்.
“வைரவன் உத்தரவு கொடுத்துட்டாரு ஒரு குறையும் வராது. எல்லாரும் கெளம்புங்க”. கிளம்பினார்கள், பத்துப் பேருக்கு மேல் இருக்கும். நிலா கிளம்பி விட்டது. நாலு மைலும் வண்டிப்பாதை. ரெண்டு பக்கமும் முள்ளுக்காடு. இருளாண்டித்தேவர் முன்னால் போனார். பேச்சும் சிரிப்புமாக நடந்தார்கள்.
வனாந்தரம். இருட்டு. யாராவது கொஞ்சம் பலத்து பேசினாலோ, சிரித்தாலோ இருளாண்டித்தேவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
இடையிலே ரெண்டுமூணு ஓடைக்காடு. முழங்காலுக்கு வண்டல் இறக்கியது. செருப்புகளைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடைகளைக் கடந்தார்கள்.
மணிப்பத்தா ஓடையைத் தாண்டி பத்து எட்டு நடந்திருப்பார்கள். வண்டிப்பாதையின் இந்தத் தடத்துக்கும் அந்தத் தடத்துக்கும் சரியாக ஒரு பாம்பு புழுதியைக் குடித்துக்கொண்டு படுத்திருந்தது. தொடைக்கனம். முன்னே போன இருளாண்டித்தேவர் ரெண்டு எட்டு இடைவெளியில் பாம்பைப் பார்த்துவிட்டு நின்றார். நாகம் தலை தூக்கிச் சீறுமுன், வேல்கம்பால் தலையில் ஒரு குத்துக் குத்தி முள்வேலிக்குள் தூக்கி எறிந்துவிட்டு நடந்தார். கவுல்பட்டி ஊரணிக்கரையைச் சுற்றி பெரும் பெரும் புளிய மரங்க்ள் பேயாய் நின்றன. நிலா வெளிச்சத்தில் ஊரணி புளியமரங்கள் தட்டுப்பட்ட உடனே இருளாண்டித்தேவர் உதட்டில் விரல் வைத்து ‘உஸ்... உஸ்...’ என்று எச்சரித்தார். செருப்புச் சத்தம் கேட்காதபடி பொத்தி பொத்தி நடந்து முன்னேறினார்கள். ஊர்க்கிட்டே அண்ட முடியாது. வீட்டு வீட்டுக்கு நாய் கெடக்கும். ராஜபாளையத்துக்கோம்பை நாய்கள். துரத்திப் பிடித்தால் தொடைக் கறியை தோண்டி எடுத்துவிடும்.
குளிருக்குக் குன்னிப் படுத்திருக்கும் அனாதைக் கிழவி மாதிரி ஊர் உறங்கிக் கொண்டிருந்தது. ஊரை தெற்கே விட்டு, ஊரணிக்கு வடக்காக நடந்தார்கள். ஆட்டுக்கிடை ஊருக்கு வெளியே மந்தைக் காடுகளில்தான் கெடக்கும்.
“யோவ்.... குருசாமித் தேவரே.... எட்டி நடங்க...”
ஊரணிக்கு வடக்கே நாலு புஞ்சை கடப்புக்கு ஆட்டுச் சத்தம் கேட்டது.
இருளாண்டித்தேவர் வலது கையை லாத்தி காட்டினார். எல்லோரும் வடக்காக எட்டி நடந்தார்கள்.
சுந்தரத்தேவருக்கு இருமல் முட்டியது. நெஞ்சுக்குள் அமுக்கினார்.
“கந்தையாத்தேவரே.... செருப்பு சத்தம்....”
கந்தையாத் தேவர் பொதுமலாய் நடந்தார்...
எல்லா ஆடுகளும் படுத்துக்கிடந்தன. ஒரு ஆடு ‘புர்ர்ர்ர்.... ர்....ர்...’ எனத் தும்மியது. தென்கோடியில் ஒரு கயிற்றுக்கட்டில். உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை தெரியாமல் போர்த்திக்கொண்டு கிடைக்காரன் படுத்திருந்தான். கட்டிலில் ஒரு வேல்கம்பு சாத்தி இருந்தது. கட்டிலுக்கடியில் நாய். சுருட்டிப்படுத்திருந்தது.
‘நேய் படுத்திருக்கு.”
அடுத்த புஞ்சைப் பொழியில் எல்லாஅரும் பதுங்கி உட்கார்ந்தார்கள். வேல் கம்புகளைக் கிடத்தி விட்டு போர்வைகளை இறுக்கிப் போர்த்தினார்கள். வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக்கொண்டார்கள்.
”தெற்கயும் மேற்கயும் யாரும் போகாதீங்க. வடக்க பாதிப்பேரும் கிழக்கப் பாதிப்பேரும் போகணும். சுருக்கா முடியணும்.”
வேல்கம்பை கையில் எடுத்துக் கொண்டார்கள். இருளாண்டித் தேவரோடு சேர்ந்து பாதிப்பேர் கிழக்கேயும், முருகேசத் தேவரோடு பாதிப்பேர் வடக்கேயும் பிரிந்தார்கள்.
பச்சைப் பனை ஓலையைக் கிழித்ததுபோல் குட்டி ஆடுகள் சிணுங்கின. சின்னச் சின்ன சத்தங்களோடு ஆடுகள் கிடந்தன. கிடைக்காரனும், நாயும் அசையவில்லை. நல்ல தூக்கம். நிலா வெளிச்சத்தில் ஆடுகளின் நிறம் தெரியும் அளவுக்கு நெருங்கி விட்டார்கள். சுந்தரத்தேவர் மறுபடியும் இருமலை நெஞ்சுக்குள் அமுக்கினார்.
’புர்ர்...ர்...ர்’ என்று ஒரு ஆடு தும்மியது. பத்தடி நெருக்கத்திலேயே நின்று அவரவருக்குத் தகுதியான ஆடுகளை இனம் குறித்தார்கள். கிடாயாக இருந்தால் கறி நல்லா இருக்கும். பெருத்த கிடாயாக இருந்தால் தோளில் போட்டுக் கொண்டு நாலு மைல் தூரம் ஓட வேண்டும். இருளாண்டித் தேவரின் சைகைக்காக காத்திருந்தார்கள். கட்டிலில் படுத்திருந்த கிடைக்காரன் புரண்டு படுத்தான். நாய் அசையவில்லை. கிழக்கே இருந்து இருளாண்டித் தேவர் துண்டை வீசினார்.
அவரவர் குறித்து வைத்திருந்த கிடாய்களை நெருங்கி இடது கையால் வாயை இறுக்கிப் பிடித்தார்கள். வலது கையால் குரல்வளையை ‘கடக்’ என நெறித்து ஒதுக்கி விட்டார்கள். கிடாய்கள் கால்களை உதறிய சத்தந்தான் லேசாய் கேட்டது. கத்த முடியவில்லை. கைக்கு இரண்டு கால்களைப் பிடித்துத் தூக்கி, துண்டைப் போர்த்துவதைப் போல் தோளில் போட்டார்கள்.
கிடைக்காரனுக்கும், நாய்க்கும் நல்ல தூக்கம். இடது கையால் ஆட்டுக் கால்களையும் வலது கையில் வேல் கம்பையும் பிடித்துக் கொண்டு ‘லொங்கு... லொங்கு’ என ஓடக் கிளம்பினார்கள். மூன்றாவது புஞ்சைப் பொழியைக் கடந்தால்தான் வண்டிப்பாதை. முருகேசத் தேவர் முன்னால் ஓடிக் கொண்டிருந்தார். தோளில் கிடந்த ஆட்டின் சூடு, இந்தக் குளிர்ந்த நேரத்தில் எல்லோருக்கும் இதமாக இருந்தது. வண்டிப்பாதைக்கு வந்து விட்டார்கள். யாரும் வாய் திறக்கவில்லை. ஓட்டம் குறைந்து ’ஓட்டமும் நடையு’மாகப் போனார்கள்.
முத்துத்தேவரின் கழுத்தில் கிடந்த கிடாயின் குரல்வளை சரியாக நெறிபடவில்லை. ‘ம்மே... ம்மேய்... ம்மேம்...’ என்று கத்தக் கிளம்பி விட்டது. முத்துத்தேவரின் பிடி தவறியது. கிடாய் துள்ளவும் பிடியை விட்டு விட்டார்.
கீழே குதித்த கிடாய், ‘ம்  மே... மே... மேம்... ய்..’ என்று கத்தித் தீர்த்து விட்டது.
முத்துத்தேவர் சுதாரித்து, கிடாயின் குரல்வளையை கடித்துத் துப்பினார். கிடாய் சத்தம் நின்றது.
‘லொள்... லொள்... லொள்...’
இராஜபாளையத்தைக் கோம்பை கிளம்பி விட்டது. கிடை ஆடுகள் எல்லாம் கத்த ஆரம்பித்தன.  கிடைகாரன் போர்வையைச் சுருட்டி வீசிவிட்டு வேல் கம்பை கையில் எடுத்துக் கொண்டு ஊரைப் பார்த்துக் கத்தினான்.
“ஏய்..... கள்ளன்... கள்ளன்.... ஓடியாங்க...”
இருளாண்டித் தேவரோடு சேர்ந்து எல்லோரும் வண்டிப்பாதையில் கெதியாய் ஓடினார்கள். முத்துத்தேவர் கடைசியாக வந்தார். வாயில் ஆட்டு ரத்தம் ஓடிக் கொண்டிருந்தது. முதல் புஞ்சைப் பொழியை நாய் தாண்டி விட்டது. ஊர் எழுந்து கொண்டது.
ஹூ...ஹூவெனக் கூச்சல்.
சுந்தரத் தேவருக்கு மூச்சு இரைத்தது. எல்லோரும் வேல் கம்பு இருந்த வலது கையில் செருப்பைக் கழற்றி எடுத்துக்கொண்டு ஓட்டமெடுத்தார்கள்.
மணிப்பத்தா ஓடை வண்டலுக்குள் சதக்.. பொதக்.. என மிதித்து வெளியேறி ஓடினார்கள். நாய் ஒரு புஞ்சைக் கடப்பில் வந்து கொண்டிருந்தது. ஊர்ச்சனங்கள் கம்புகளோடும் ஆயுதங்களோடும் வண்டிப் பாதையில் ‘திமு திமு’ என ஓடி வந்தனர்.
‘வேய் ரா.... வேய் ரா...”
நாய், வண்டலைக் கண்டதும் மலைத்து நின்று குரைத்தது. ஓடையின் தென்கரையில் கொஞ்ச தூரம் ஓடியது. வண்டல் மாறி தண்ணீர் தட்டுப்பட்டது. பாய்ந்து நீந்தி வடகரையில் ஏறிக் கிழக்கே வண்டிப் பாதையில் விரட்டி ஓடியது.
அதற்குள் முருகேசத் தேவர் கூட்டத்தினர் எட்டிப் போய்  விட்டார்கள். வைரவன் கோயில் பொட்டல் ஆலமரம்தான் இவர்களுக்குக் குறி. கெதியாக ஓடினால் ஒன்னுக்கு இருக்கும் நேரம்தான். எல்லையைத் தொட்டு விடலாம். அப்புறம் வெளியூரான் நெருங்க மாட்டான்.
நாய், நாலுகால் பாய்ச்சலில் வந்து கொண்டிருந்தது. கவுல்பட்டிச் சனம் மணிப்பத்தா ஓடையைக் கடந்து விட்டது.
“வேய் ரா..... வேய் ரா....”
களவாணிப் பயலுகளை ஒரு தடவை ஊருக்குள் விட்டுவிட்டால் அப்புறம் ஒண்ணும் மிஞ்சாது. மனுஷன் குடியிருக்க நீதி இல்லாமல் போயிரும். இதுவரைக்கும் அக்கம்பக்கத்திலே, அடுத்த ஊரு மூணாவது ஊருலேதான் களவுபோனது. கவுல்பட்டிக்குக் களவாணிப்பயலுக வந்தது இதுதான் முதல் தடவை. அவிழ்ந்த தலைமயிரைக் கூட அள்ளி முடியாமல் பெண்கள் சேலையை ஏத்திச் செருகிக் கொண்டு ஓடி வந்தார்கள்.
“வேய்  ரா... வேய்   ரா...”
கடைசியாகப் போய்க் கொண்டிருந்த முத்துத்தேவரை நாய் எட்டிக் கவ்வியது. வேட்டி பிடிபட்டது. முத்துத்தேவர் செருப்பை ஓங்கி நாயின் வாயில் அடித்தார். வேட்டியை விட்டுவிட்டது. போர்வையைக் கவ்வியது. பிடறியில் கிடந்த கிடாயை கீழே போட்டார். செருப்புக்களையும் கீழே போட்டார். போர்வையை உதறி விட்டார். வேல் கம்பு மட்டும் கையில் இருந்தது. நாய், நெஞ்சில் குதறியது. இடது கையால் நாயின் மூஞ்சியில் அடித்தார், வேல் கம்பை ஓங்கினார். வலது மணிக்கட்டை கவ்விக் கொண்டது. திமிர முடியவில்லை. வேல் கம்பு நழுவியது. இடது கையால் நாயின் மேல் வாயைப் பிடித்து, வாய்க்குள் மாட்டி இருந்த வலது கையை கீழே அமுக்கினார். நாய், பக்கத்து முள் வேலியில் விழுந்தது. குனிந்து வேல் கம்பை எடுப்பதற்குள் நாய் முதுகில் பாய்ந்தது. கீழே சாய்ந்தார்.
முன்னால் போனவர்கள் வெகு தூரம் போய்விட்டார்கள். பின்னால் ஊர் திரண்டு வந்து கொண்டிருந்தது.
“வேய் ரா... வேய் ரா....”
நிலா வெளிச்சத்தில் சனம் வருவது தெரிந்தது.
நாயைப் புரட்டினார். கால் நகத்தால் உடம்பைப் பிறாண்டியது. நாயோடு முள் வேலியில் புரண்டார். பாளம் பாளமாய் முள் குத்திக் கிழித்தது. மறு புரட்டில் வண்டிப் பாதைக்கு வந்தார். மேலே கிடந்த நாயின் வாயெல்லாம் ரத்தம் ஒழுகியது. இரண்டு கைகளையும் நாயின் வாய்க்குள் கொடுத்துக் கிழித்தார்.
பலமான சத்தத்தோடு நாய் மல்லாக்க சரிந்தது. முத்துத் தேவரின் வாய், கை, உடம்பெல்லாம் ரத்தம்.
”வேய் ரா... வேய் ரா...”
சனம் நெருங்கிக் கொண்டிருந்தது.
முத்துத்தேவர் எழுந்து வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டினார். போர்வையைக் காயங்களின் மேலே போர்த்திக் கொண்டார். கிடாயைத் தூக்கி தோளில் போட்டு, வேல் கம்பு, செருப்புகளை வலது கையில் எடுத்துக் கொண்டு கெதியாய் ஓடினார். வைரவன் கோயில் பொட்டல் ஆலமரம் நெருங்கித் தெரிந்தது.
மறுநாள், பெருநாழி போலீஸ் நிலையத்தில் கவுல்பட்டி கிராமமே வந்து நின்றது.
முதல்நாள் ராத்திரி களவுக்குப் போனவங்க, போகாதவங்க எல்லா ஆம்பளைகளுக்கும், போலீஸார் கம்பியைக் காய வைத்து துடிக்கத் துடிக்க, கதறக்கதற சூடு போட்டார்கள். கன்னத்திலே, தொடையிலே, கையிலே, கழுத்திலே, வயிற்றிலே, முதுகிலே என்று பலமாதிரி சூடு. அன்றைக்கு இழுத்த சூடுதான், இருளாண்டித் தேவரின் தொடை இடுக்கில் தழும்பேறிக் கிடந்தது.
இருளாண்டித் தேவர் புரண்டு படுத்தபோது, கால்மாட்டில் ஆடுபுலி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்த நாகுத் தேவரின் இடுப்பில் கால் பட்டுவிட்டது.
“நல்லா மிதிங்க மச்சான்.”
நாகுத் தேவர் நக்கலாய்ச் சிரித்தார்.
“எங்கிட்ட மிதி வாங்கணும்னா முன் ஜென்மத்திலே புண்ணியம் செஞ்சிருக்கணும் மாப்ளேய்...”
இருளாண்டித் தேவர் உதட்டோரம் சிரித்தபடி கால்களை ஒடுக்கி மறுபடியும் தலை சாய்த்துக் கொண்டார்.
ரம்மி ஆட்டத்தில் ஜோக்கர் வெட்டியதில் தகராறு. தாயக் கட்டத்தில் ஒருநாய் வெட்டுப்பட்ட சந்தோஷம். சிரிப்பும் கேலியுமாய்ச் சத்தம்.
கிழக்கே இருந்து முருகேசத் தேவர் வந்தார்.
“ஏய்ய்... நம்ம மூத்தவர்மகன் சேது வந்திருக்குதாம்...”
எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். சீட்டாட்டம், ஆடு புலி, வெட்டுச் சீட்டு, தாயக்கட்டம் எல்லாவற்றையும் கலைத்தார்கள். உறங்கிக்கொண்டிருந்த இருளாண்டித் தேவரையும் கந்தையாத் தேவரையும் எழுப்பினார்கள்.
எல்லோரும் கிளம்பி மூத்தவர் வீட்டுக்கு நடந்தார்கள்.
சேது, கால், முகம் கழுவி துடைத்துவிட்டு அப்பாவுடைய போட்டோவுக்கு முன்னால் நின்றான். அய்யாவின் நெற்றியில் குங்குமம் இட்டிருந்தது. உச்சிநத்தம் காசிநாதன்செட்டி வீட்டில் கன்னம் போட்டு களவாடப் போனபோது அந்த ஊர்ச் சனங்களோடு நடந்த சண்டையில் வெட்டுப்பட்டு அய்யா இறந்து போனார். சேதுவுக்கு அருகில் அம்மா நின்றது. படத்தில் இருந்த கணவரையும் பக்கத்தில் நின்ற மகனையும் மாறி மாறிப்பார்த்து அம்மா அழுதது. சேதுவுக்குக் கண்கலங்கிப் பார்வையை மறைத்தது. வீட்டு வாசலில் ஆள் அரவாட்டம் தெரிந்ததும் சேது திரும்பி வாசலைப் பார்த்தான்.
“மருமகனே”.. கூட்டத்துக்கு முன்னால் முருகேசத் தேவர் நின்றார். சேது வாசலுக்கு வந்தான்.
“கும்பிடுறேன் மாமா.. கும்பிடுறேன் சின்னய்யா.. கும்பிடுறேன் மச்சான்.. வாங்க எல்லாரும் வாங்க...”
கண்டதும் சேது, கையெடுத்துக் கும்பிட்டதில் எல்லோருக்கும் சந்தோஷம் தாங்க முடியலே.
“எப்போ வந்தீங்கப்பூ...?”
”இப்போதான் மாமா.”
அம்மா திண்ணையில் பாய்களை விரித்தது. எல்லோரும் சம்மணம் போட்டு உட்கார்ந்தார்கள்.
“டூட்டி ஒப்புக்கொண்டுட்டீங்களா?” - நாகுத்தேவரின் கன்னத்தில் தழும்பு கிடந்தது.
“நாளைக்குப் போயி ஜாய்ன்ட் பண்றேன் மாமா.”
”எங்கே டூட்டி?” - குருசாமித் தேவரின் வலது கையில் தழும்பு இருந்தது.
“பழனி பக்கத்திலே மடத்தாகுளம் போலீஸ் ஸ்டேசன்லே”
“சப்-இன்ஸ்பெக்டருதானே?” - கந்தையாத் தேவருக்குப் பிடறியில் தழும்பு.
“ஆமாம், சின்னய்யா, ஒரு வருசம் ட்ரெயினிங் முடிஞ்சு... முதல் போஸ்டிங்”
திண்ணையின் மூலையில், ஓரத்தில் உட்கார்ந்து இருந்தவர்கள் எல்லாம் எம்பி எம்பி சேதுவைப் பார்த்தார்கள்.
‘உடுப்பு போட லாயக்கான ஆளு.’ எல்லோருக்கும் பெருமை தாங்கலே.
“உங்க அண்ணனை எங்கே காணோம்?”
“எனக்கு சப்-இன்ஸ்பெக்டர் வேலை கெடைச்சா.. இருளப்ப சாமிக்குக் கிடாவெட்டி பொங்கல் வைக்கணும்னு அம்மா நேர்த்திக் கடன் வச்சதாம். அதுக்கு ஒரு கிடாக் குட்டி வெலைக்கு வாங்க அண்ணன் வெளியே போனாரு.”
முருகேசத் தேவர் கன்னத்தில் கிடந்த தழும்பைத் தடவிக்கொண்டே “என்னது..! கிடாக்குட்டியை வெலைக்கு வாங்கப்போனாரா? பைத்தியக்காரப் பிள்ளைக. நம்ம வீட்டுப் பிள்ளைக்கு சப்-இன்ஸ்பெக்டர் உத்தியோகம் கெடச்சிருக்கு. நம்ம சனமெல்லாம் சேர்ந்து கொண்டாட வேண்டாமா? நம்ம குலதெய்வம் இருளப்பனுக்கு நாளைக் காலையிலே ஒரு கிடாய் இல்லே.. இருபத்தியோரு கிடாய் வெட்டுப்படுது.” என்றவர் திண்ணையில் இருந்த எல்லோரையும் பார்த்து “ஏய்...ய்... வீட்டு வீட்டுக்கு ஒரு கிடாயைப் பிடிச்சுக் கொண்டு வந்து இங்கே கட்டுங்கடா” என்று உத்தரவிட்டார்.
“எதுக்கு மாமா.. வேண்டாம்...” சேது மருகி மருகி எல்லோரையும் பார்த்தான்.
“கள்ள ஆடு இல்லே மருமகனே.. எல்லாம் நம்ம சொந்த ஆடு.”
சேதுவின் கண்களில் குபுக் என நீர் அடைத்தது. காலமெல்லாம் காயம் பட்ட சனங்கள்.
“தம்பி சேதூ... இந்தப் பயலுகளுக்கு ஒரு ஆசை...”
“என்ன மாமா சொல்லுங்க”
“நீங்க சப்-இன்ஸ்பெக்ட்டர் உடுப்பு மாட்டிக்கிட்டு வந்து, கொஞ்ச நேரம் எங்க எல்லாரோடயும் உக்கார்ந்து பேசிக்கிட்டிருக்கணும்.”
முருகேசத் தேவரின் கைகளைச் சேது பிடித்துக் கொண்டான்.
“இதோ வர்றேன் மாமா.” வீட்டிற்குள் போனான். எல்லோரும் உள்வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான். சிறிதுநேரத்தில் சேது சப்-இன்ஸ்பெக்டர் உடுப்போடு திண்ணைக்கு வந்தான். எல்லோரும் பதறியெழுந்து, தோளில் கிடந்த துண்டைக் கையில் எடுத்தபடி திண்ணையைவிட்டு இறங்கிக் கீழே நின்றார்கள்
*******
தட்டச்சு : சென்ஷி

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்