க.நா.சு.100
ஐரோப்பிய இலக்கியங்களின் சிகரமாக ஸ்காண்டிநேவிய இலக்கியத்தைச் சொல்லலாம். ஸ்காண்டிநேவிய இலக்கியத்தின் முக்கிய வெளிப்பாடாக ஸெல்மா லாகர்லேவின் படைப்புகளைச் சொல்லலாம்.
இவர் 1848ல் பிறந்து 1940ல் தன் 82 வது வயதில் மறைந்தார். 1891ல் இவரது முதல் நாவல் கெஸ்டா பெர்லிங் வெளி வந்தது. போர்ச்சுகலியாவின் சக்கரவர்த்தி. லொவாக்ஸ்னில்டின் கணையாழி வில்லியக்ரோனாவின் வீடு போன்ற இவரது நூல்கள் இவருக்குப் பெரும் புகழ் தேடித் தந்தன.
1906ல் இவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும் இவரது நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இந்தக் கதை
இது காதல் கதையல்ல. ஆனால் சுவாரசியத்தில் காதல் கதைகளுக்குச் சற்றும் தாழ்ந்ததல் ல. ஸ்காண்டிநேவிய இலக்கிய மேன்மைக்கு மிகச் சிறந்த உதாரணம் இக்கதை. நம்நாட்டுப் பண்டைய இலக்கியங்களைப் போல, ரஷ்யர்களின் இன்றைய கதைகளும் நாவல்களும் மனித உள்ளத்தை, மனித உள்ளத்தின் அடிப்படையைத் தொடுகின்றன என்றும் நாம் அறிந்துகொள்ள ஆரம்பித்து விட்டோம். ரஷ்யாவுடன் இலக்கியத்தில் போட்டி போடக் கூடிய ஒரு சிறு நாடு ஐரோப்பாவிலேயே இருக்கிறது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. ஸ்காண்டிநேவிய தேசங்களில், ஸ்வீடன், நார்வே, டென்மார்க் என்று பல பகுதிகள் இருக்கின்றன. இந்தத் தேசங்கள் ஒவ்வொன்றிலும் இலக்கியம் அற்புதமாக அமைந்திருக்கிறது. ஐரோப்பிய இலக்கியத்தின் சிகரமாக ஸ்காண்டிநேவிய இலக்கியத்தைச் சொல்லலாம் என்பது அறிஞர் கருத்து. ஸ்காண்டிநேவிய இலக்கியத்தின் ஒரு விசேஷ அம்சம், அது கடவுளை இன்னும் மறந்துவிடவில்லை என்பது தான். இந்த 20ஆம் நூற்றாண்டிலும் கடவுளை மறந்துவிடாதவர்கள் ஸ்காண்டிநேவியர்கள்தான் என்று சொல்வது மிகையாகாது. அவர்களுடைய கலை எல்லா அம்சங்களிலும் விட்டு விலகி விடாமல் நிற்கிறது. மத விஷயமாகத்தான் அவர்கள் கதை எழுதுகிறார்கள் என்றில்லை. மதம் என்பது வெறும் சமூகக்கோப்பு. மனித உள்ளத்தின் அடிப்படைகளை மனிதன் மறக்காமல் காப்பாற்றுவது இன்று ஐரோப்பாவிலே ஸ்காண்டிநேவியர்களுடைய இலக்கியமும் மற்ற கலைகளும் கடவுளின் வழிவிட்டு விலகவில்லை என்பதே அவர்களுடைய கலை மேன்மைகளின் முக்கிய காரணம்.
ஸ்காண்டிநேவிய இலக்கியத்தின் மேன்மையான அம்சங்களனைத்தும் நிறைந்தது இக்கதை.
தேவமலர்
ஸெல்மா லாகர்லெவ் -தமிழில்: க.நா.சு.
பல குற்றங்களைச் செய்து மாட்டிக் கொண்ட அந்தத் திருடன் தன் மனைவியுடனும் ஐந்து குழந்தைகளுடனும் தலைமறைவாகக் காட்டுப்பிரதேசத்தில் ஒரு ரகசியமான குகையில் வசித்து வந்தான். கீயிங்கே காட்டை விட்டு அவன் வெளியே வரமுடியாது. நகரவாசிகள் யாராவது கண்டுவிட்டால் அவனைப் பிடித்துக் கொண்டு விடுவார்கள். அதிகாரிகள் அவனைச் சிறையில் அடைத்து வாட்டி விடுவார்கள். காட்டுப் பிரதேசத்தில் யாராவது அந்நியர்கள் வந்து வழி தெரியாமல் மாட்டிக் கொண்டால் திருடன் அவர்கள் பொருளைப் பிடுங்கிக் கொள்ளுவான். பணக்கார அந்நியர்கள் கையில் பணத்துடன் அந்தக் காட்டுக்குள் வருவது கொஞ்சம் கொஞ்சமாக அரிதாகிக் கொண்டிருந்தது. கீயிங்கே காட்டில் வசித்து வந்த அத்திருடனின் பெருமை நாடெங்கும் பரவியிருந்தது. அதனால் யாருமே தக்க துணையில்லாமல் காட்டுக்குள் போகத் துணிவதில்லை.
ஒரு சமயம் பல நாட்களாகவே காட்டுக்குள் யாரும் வரவில்லை. வந்து திருடனிடம் மாட்டிக் கொள்ளவில்லை. திருடனின் குடும்பம் சில நாட்கள் பட்டினியாகவே கிடந்தது. கடைசியில் திருடனின் மனைவி தன் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு நாட்டிலே பிச்சை எடுத்து உணவு சேர்க்கக் கிளம்பினாள். அந்தக் குழந்தைகள் ஐந்தும் அறுதல் பழசான செருப்புகளும், ஆடைகளும் அணிந்திருந்தன. ஆனால் ஒவ்வொன்றின் கையிலும் ஒரு பெரிய பையைக் கொடுத்திருந்தாள் தாய்க்காரி. அந்தப் பைகள் ஐந்தும் நிறையும்படி பிச்சையெடுத்து உணவு கொண்டு வருவதாக அவள் உத்தேசம்.
ஐந்து பைகளும் நிரம்பிவிடும் என்பதிலும் சந்தேகமில்லை. ஏனென்றால், திருடனின் மனைவி பிச்சை என்று கேட்டால் இல்லை என்று சொல்ல அந்தப் பக்கத்தில் யாருக்குமே தைரியம் வராது. அவனிடம் ஜனங்களுக்கு அவ்வளவு பயம். அவளையும் அவள், குழந்தைகளையும் மனிதர்களாகவே ஜனங்கள் மதிப்பதில்லை. ஓநாய்கள் என்றே மதித்தார்கள். ஓநாய்களையும் விட மோசமானவர்கள் என்றே மதித்தார்கள். ஒரே வீச்சில் அவர்களை வெட்டி வீழ்த்திவிட்டால் தேவலை என்றுதான் அவர்களுக்கு ஆசை. ஆனால் அப்படிச் செய்ய யாருக்கும் தைரியம் வரவில்லை. அவளை வெட்டி விடலாம். ஆனால் காட்டிலே இருந்தானே அவள் கணவன். எதற்கும் அஞ்சாதவன். சூரன். பயங்கரச்சித்தம் படைத்தவன். அவன் வந்து பயங்கர வஞ்சம் தீர்த்துக் கொள்வானே என்று எண்ணி பயந்தார்கள்.
திருடனின் மனைவியும், அவள் குழந்தைகளும் வீடு வீடாகப் புகுந்து பிச்சையெடுத்துக் கொண்டே வந்தாக்ள். கடைசியில் ஊவிட் மாளிகையை அடைந்தார்கள். அந்தக் காலத்தில் ஊவிட் மாளிகை மதகுருமார்களின் மடமாக இருந்தது. மடத்தின் வெளிக்கதவு மணியை அசைத்து விட்டுத் திருடனின் மனைவி பிச்சை கேட்டாள். அவள் குழந்தைகளும் உணவு கேட்டுக் குரல் கொடுத்தன. வாசற்காப்போன் திட்டி வாசலைத் திறந்து ஆறு ரொட்டித் துண்டுகளை அவளிடம் அளித்தாள். அவளுக்கு ஒன்று. அவளுடைய ஐந்து குழந்தைக்கும் ஆளுக்கு ஒவ்வொன்று. இதை அவள் வாங்கிப் பையில் அடைத்துக் கொண்டு நிற்கும்போது அவளுடைய குழந்தைகள் அங்கும் இங்குமாக ஓடி ஆடித்திரிந்து கொண்டிருந்தன. அவள் ரொட்டித் துண்டுகளைப் பத்திரப் படுத்தி விட்டுத் திரும்ப யத்தனிக்கும் சமயம் அவளுடைய கடைசிக் குழந்தை மேலங்கியைப் பிடித்து இழுத்தது. அதற்கு இங்கே வந்து பாரேன் விசேஷம் இருக்கிறது என்று அர்த்தம் என்பது அவளுக்குத் தெரியும். அவள் தன் குழந்தையைப் பின்பற்றினாள்.
மடத்தைச் சுற்றி ஓர் உயர்ந்த சுவர் எழுப்பப்ட்டிருந்தது. உள்ளே என்ன இருந்தது என்று வெளியே தெரியாது. சுவரிலே ஒரு மூலையில் ஒரு சிறிய கதவு இருந்தது. அச்சமயம் அந்தக் கதவு திறந்திருந்தது என்பதை அச்சிறுவன் கண்டு விட்டான். இதை அறிவுறுத்தவே அவன் தன் தாயாரின் மேலங்கியைப் பிடித்து இழுத்தான். திறந்த கதவு வழியாக நுழைவது திருடனின் மனைவியின் பழக்கம். அவள் யாருடைய அனுமதியையும் எதிர்பார்ப்பதுமில்லை. கேட்பதுமில்லை. அந்த வாசல் வழியாகத் தன் குழந்தைகள் பின் தொடர அவள் உள்ளே புகுந்தாள்.
அந்த நாளில் ஊவிட் மடத்தின் தலைமை அப்பட் பதவி வகித்தவருக்கு குரு ஹான்ஸ் என்று பெயர். அவருக்கு தோட்டக் கலையிலும், மூலிகை புல்பூண்டு மலர்களிலும் அபாரமான பிரியம் உண்டு. மடத்துத் தோட்டத்தில் ஒரு மூலையில் அவர் வெகு அற்புதமான பலவித மூலிகைச் செடிகளையும், மலர் செடிகளையும் வைத்துப் பயிராக்கியிருக்கிறார். சிறிய தோட்டம் தான் அது. ஆனால் அதிலிருந்தே செடி கொடிகளையும், புல் பூண்டுகளையும் பல பிரதேசங்களிலிருந்து வெகுவாகச் சிரமப்பட்டு சேர்த்துக்கொண்டு வந்து வைத்து வளர்த்திருந்தார். திறந்திருந்த வாசல் வழியாக இந்தத் தோட்டத்திற்குள்தான் வந்தார்கள் திருடனின் மனைவியும், அவள் குழந்தைகளும்.
இந்த அழகான சிறுதோட்டத்தைக் கண்டு திருடனின் மனைவி முதலில் ஆச்சரியமடைந்து சில விநாடிகள் ஸ்தம்பித்து அப்படியே நின்று விட்டாள். காலம் நடு வஸந்த காலம். செடிகளும், கொடிகளும் பசுமையாக இருந்தன. சிவப்பும், நீலமும் மஞ்சளுமாக ஆங்காங்கே விதவிதமான மலர்கள் மலர்ந்து மனசையும், கண்களையும் ஒருங்கே மயக்கின. தோட்டத்தைக் கண்ட வினாடி முதலே திருடனின் மனைவி தன் மனசைப் பறிகொடுத்து விட்டாள் – திருப்தியும், மகிழ்ச்சியும் அவள் முகத்திலே மலர்ந்தன. பாத்திகளுக்கிடையே வளைந்து வளைந்து செல்லும் பாதை வழியாக நாலாபக்கமும் பார்த்துக் கொண்டே நடக்கலானாள்.
மடத்தைச் சேர்ந்த சிஷ்யர்களில் ஒருவன் தோட்டத்தில் களை பிடுங்கிக் கொண்டிருந்தான். தோட்டத்துக் கதவைத் திறந்து வைத்திருந்தவன் அவன்தான். தான் விடுங்கிய விழலை வெளியே எறிவதற்காகவே அவன் அந்தக் கதவைத் திறந்து வைத்திருந்தான். திருடனின் மனைவியும், அவள் குழந்தைகளும் அக்கதவு வழியாகத் தோட்டத்துக்குள் வந்ததை அவன் முதலில் கவனிக்கவில்லை. ஆனால் கவனித்தவுடன் எழுந்து ஓடி வந்து வெளியே போ, வெளியே போ என்று கத்தினான். ஆனால் அவன் அப்படிக் கத்தியதையோ, அவன் வந்ததையே கவனிக்காதவள் போலவே திருடனின் மனைவி தோட்டத்தின் அழகுகளைப் பார்த்துக் கொண்டே மேலே நடந்தாள். ஒரு நிமிஷம் வெள்ளை அரும்புகளின் பாத்தி ஓரமாக நின்று தலையைச் சாய்த்துக் கொண்டு பார்த்தாள். அடுத்த நிமிஷம் நிமிர்ந்து மடாலயத்தின் சுவரில் படர்ந்து ஏறிய புல்லுருவியைக் கவனித்தாள். மடத்தின் சிஷ்யனைக் கவனிக்கவேயில்லை. அவளுக்கு காது கேட்கவில்லை என்று எண்ணினான் அந்த சிஷ்யன் அல்லது தான் சொன்னது அவளுக்குப் புரியவில்லையோ என்று யோசித்தான். கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் அவளை வெளியே விட்டு விட்டு வருவது என்று எண்ணியவனாக அவன் அவளை அணுகினான். ஆனால் அந்தச் சமயம் அவள் நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பார்வையின் முன் சோர்ந்து போய் பின் வாங்கினான் சிஷ்யன். இவ்வளவு நேரம் முதுகில் இருந்த மூட்டையின் கனத்தால் குனிந்து கூனியபடியே நடந்து கொண்டு வந்த அவள் நேராக நிமிர்ந்து நின்று சொன்னாள். நான் கீயிங்கே காட்டுத் திருடனின் மனைவி. உனக்குத் தைரியமுண்டானால் நீ என் மேல் கை வைக்கலாம் என்றாள்.
அவள் இதைச் சொன்ன குரல் எப்படியிருந்தது தெரியுமா? டென்மார்க் தேசத்து ராணியே அவ்வளவு பெருமையுடன் தான் யார் என்பதை சொல்லிருக்க மாட்டாள் அது மட்டுமா? தான் யார் என்று அறிந்தவுடன் அந்த மடத்து சிஷ்யன் அலறிக் கொண்டு ஓடிவிடுவான் என்று அவள் எதிர்பார்த்தாள் போலும். அவள் யார் என்று அறிந்த பின்னரும் அந்த சிஷ்யன் தயங்கவில்லை. அவளைக் கையைப் பிடித்து வெளியே இழுத்துக் கொண்டுபோய் விட்டு விடுவது என்கிற எண்ணத்தை விட்டு விட்டனே தவிர, அவளை வெளியே போகச் சொல்வதை நிறுத்தவில்லை.
இதோ பார் நீ கீயிங்கே காட்டுத் திருடனின் மனைவியாக இருக்கலாம். ஆனால் இது மதகுருமாரும், அவர்களுடைய சிஷ்யர்களும் வசிக்கும் இடம். இங்கு ஸ்திரிகள் வரக்கூடாது. நீ போய்விடு. நீ இப்பொழுதே போகாவிட்டால் கதவைத் திறந்து வைத்திருந்த குற்றத்திற்காக குருமார் என்னிடம் கோபித்துக் கொள்வார்கள். அந்தக் குற்றத்துக்காக என்னை மடத்திலிருந்து வெளியே துரத்தி விடுவார்கள் என்றான் மடத்து சிஷ்யன்.
இந்த மாதிரிப் பேச்செல்லாம் திருடனின் மனைவி காதில் ஏறவேயில்லை. அவள் தன் பாட்டில் பாத்திகளுக்கிடையே உல்லாசமாக உலாத்திக் கொண்டிருந்தாள். ஹிஸ்ஸம் பாத்தியண்டை நின்றாள் சிறிது நேரம் நீல-ஹிஸ்ஸம் புஷ்பங்களைப் பார்த்துக் கொண்டு. அடுத்த நிமிஷம் ஆரஞ்சு நிறமான காலை மந்தாரைப் புஷ்பங்களை நோக்கித் தன் கண்களைப் பார்த்தாள்.
சிஷ்யனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கடைசியில் அவளை வெளியே துரத்த உதவி கொண்டு வர வேண்டி மடத்துக்குள் ஓடினான். திடகாத்திரமான இரண்டு குருமார்களுடன் வெளியே வந்தான். அவர்களைக் கண்டவுடனேயே அவர்களுடைய உத்தேசம் திருடனின் மனைவிக்குத் தெரிந்து விட்டது. கால்களை ஊன்றிப் பாதையில் நிமிர்ந்து நின்று கொண்டு உரத்த குரலில் பேச ஆரம்பித்தாள். தோட்டத்தில் தன்னை இஷ்டப்படித் திரிய விடாவிட்டால், அந்த அடத்தையே அழித்து விடுவேன் என்று கூப்பாடு போட்டள். தான் தோட்டத்தைப் பார்வையிடுவதில் அவர்களுக்கு என்ன நஷ்டம் என்றாள். அவள் பயமுறுத்தல்களுக்கெல்லாம் அஞ்சுவதாக இல்லை மதகுருமார். அவளை அலக்காகத் தூக்கி வெளியே கொண்டு போய்ப் போட்டு விடுவது என்ற உத்தேசத்துடன் அவளை அணுகினார்கள்.
ஆனால் அவர்கள் தன்னை அணுகும் வரையில் காத்திருக்கத் தயாராக இல்லை திருடனின் மனைவி. ஒரு பயங்கரமான கூச்சலுடன் திடீரென்று கைகளையும், கால்களையும் விசிறிக் கொண்டு அவர்கள் மேல் பாய்ந்து வந்தாள் அவள். அடித்தாள். குத்தினாள். உதைத்தாள். கூச்சலிட்டாள். அவளுடைய ஐந்து குழந்தைகளும் சந்தோஷ ஆரவாரத்துடன் வீரப்போர் புரிய வந்து தயாராகக் கலந்து கொண்டன. மதகுருமார் இருவரும், சிஷ்யன் ஒருவனும் அதி சீக்கிரமே தோல்வியை ஒப்புக் கொண்டு புது ஆள் பலம் கொண்டு வரப் பின்னிட்டனர்.
மடத்துக்குள் செல்லும் பாதையிலே அவர்கள் வேகமாக ஓடிக் கொண்டிருக்கையில் எதிர்ப்பட்டார் மடாலயத்தின் அதிபதி அப்பட் ஹான்ஸ். தோட்டத்திலிருந்து எழுந்த கூச்சல் அவர் காது வரை எட்டி, என்ன விஷயம் என்று விசாரிக்க அவர் அதிவேகமாக விரைந்து கொண்டிருந்தார். கீயிங்கே காட்டுத் திருடனின் மனைவி தோட்டத்தில் புகுந்து விட்டதாகவும், மூவரும் சேர்ந்தும் அவளை அப்புறப்படுத்த முடியவில்லை என்றும், துணைக்கு இன்னும் சிலரை அழைத்து வரப் போய்க் கொண்டிருப்பதாகவும் அவரிடம் தெரிவித்தனர் மதகுருமாரும் சிஷ்யனும்.
உதவிக்கு ஆள் கூப்பிட வேண்டாம் என்றார் அப்பட்ஹான்ஸ். அவளைப் பலவந்தமாக அப்புறப்படுத்த முயன்றதே தவறு என்றார் அவர். இரண்டு மதகுருமார்களையும் போய் உங்கள் வேலையைக் கவனியுங்கள் என்று கடிந்து அனுப்பி விட்டு, அந்தக் கிழ அப்பட் சிஷ்யப்பிள்ளையை மட்டும் தன்னுடன் அழைத்துக் கொண்டு தோட்டத்துக்குள் வந்தார்.
திருடனின் மனைவி இன்னும் தோட்டத்திலேதான் இருந்தாள். பாத்தி பாத்தியாகப் பார்த்துக் கொண்டே நின்றாள். அவளை ஆச்சரியத்துடனும், சற்று மகிழ்ச்சியுடனுமே கவனித்தார் அப்பட்ஹான்ஸ். அவள் அந்த மாதிரித் தோட்டத்தை அதற்கு முன் எங்கேயும் கண்டிருக்க முடியாது என்பது என்னவோ நிச்சயம். அதுபற்றி அப்பட்ஹான்ஸுக்கு சந்தேகமேயில்லை. ஆனால் ஏதோ தினம் தனக்குப் பழக்கமான காரியத்தைச் செய்வது போல் அவள் பாத்தி பாத்தியாகப் பார்த்துக் கொண்டே வந்தது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. பழைய நண்பர்களைப் பார்ப்பது போல அவள் சில செடிகளைப் பார்த்தாள். சில மலர்களைப் பார்த்துத் தலையை ஆட்டினாள். சில செடிகளைத் தடவிக் கொடுத்தாள். அவள் முகத்திலே படர்ந்திருந்த ஆனந்தத்தைக் காணக் காண அப்பட்ஹான்ஸுக்கு இன்பமாக இருந்தது.
மதகுருமார் அதுவும் மடாதிபதிகள் அநித்தியமான வஸ்துக்களின் மேல் ஆசை வைக்கக்கூடாது தான் எனினும் நமது மதகுரு அப்பட்ஹான்ஸ் தனது தோட்டத்தின் பேரில் அளவு கடந்த ஆசை வைத்திருந்தார். எவ்வளவோ சிரமப்பட்டுத் தேடிப்பிடித்துத் தன் கையாலேயே நட்டு வைத்து, தண்ணீர் ஊத்தி வளர்த்த செடிகள் பல இருந்தன. அந்தத் தோட்டத்திலேயே தன்னைப் போலவே அவளும் அந்தத் தோட்டத்தின் அழகிலே ஈடுபட்டிருப்பதைக் கண்டு அப்பட்ஹான்ஸ் சந்தோஷப்பட்டார். அவளைப் பார்த்தால் பயங்கரமான காட்டு மிராண்டி போலத்தான் இருந்தது. ஆனால் தன் தோட்டத்தின் அழகைக் காண்பதற்காக அவள் மூன்று பேருடன் தனியாகப் போராடி ஜெயித்தாள் என்று எண்ணும் போது அப்பட்ஹான்ஸுக்குத் தன் தோட்டத்தைப் பற்றிச் சற்றுப் பெருமையாகவே இருந்தது. அவர் அவளை அணுகித் தாழ்மையுடனே கேட்டார். இந்தத் தோட்டம் உனக்குப் பிடித்திருக்கிறதா என்று.
திருடனின் மனைவி எது வந்தாலும் எதிர்ப்பது என்ற திடசித்தத்துடன் திரும்பினாள். ஏதோ பேச்சுக் கொடுத்து ஏமாற்றி தன்னைக் குண்டுக்கட்டாக வெளியேற்றி விடுவார்கள் என்று எதிர்பார்ப்பவள் போல் அவள் தயாராகத் திரும்பினாள். ஆனால், அப்பட்ஹான்ஸின் தலைமயிர் தூய வெள்ளையாக இருந்தது. அவர் குரலைப் போலவே அவர் தேகமும் மெலிந்திருந்தது. அவள் அமைதியாகவே பதிலளித்தாள்.
இதைவிட அழகான தோட்டத்தை நான் கண்டதில்லை என்றுதான் முதலில் நினைத்தேன், ஆனால்…
ஆனால் என்ன? என்றார் அப்பட்ஹான்ஸ்.
ஆனால் இதைவிட அழகான தோட்டம் ஒன்றை நான் பார்த்திருக்கிறேன். அதனுடன் இதை ஒப்பிடுவதற்கேயில்லை என்றாள் திருடனின் மனைவி சாந்தமாக.
அப்பட்ஹான்ஸ் இந்த மாதிரியான பதிலை எதிர்பார்க்க வில்லை. தன்னுடையதை விட அழகான தோட்டத்தைப் பார்த்திருப்பதாக அவள் சொன்னவுடனே அவருடைய முகம் சற்றே சிவந்தது. என்ன பதில் அளிப்பது என்று அறியாமல் சற்று மௌனமாக நின்றார். அவர் அண்டையில் நின்ற சிஷ்யன் சற்றுப் பதட்டமாக அதட்டலாகவே சொன்னான். இது யார் தெரியுமா? இம்மடத்தின் அதிபதியான அப்பட்ஹான்ஸாக்கும் இவர். எவ்வளவோ சிரமப்பட்டு நாடெல்லாம் தேடித் திரிந்து மூலிகைகளையும், மலர்களையும், கொடிகளையும், செடிகளையும் இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். பைத்தியக்காரி நீ. உனக்கு என்ன தெரியும்? இந்த மாதிரி தோட்டம் இந்த தேசத்திலேயே கிடையாது. தெரியுமா? நீ ஏதோ காட்டிலே வசிப்பவள். எவ்விதமான தோட்டத்தையுமே கண்டறியாதவள். இதைப் பற்றி அபிப்பிராயம் சொல்ல உமக்கு என்ன தெரியும்?
உன்னையோ, உன் மடத்து அதிபதியையோ தாழ்மைப்படுத்த நான் விரும்பவில்லை என்று பதில் அளித்தாள் திருடனின் மனைவி. ஆனால் எனக்குத் தெரியும் ஒரு தோட்டம். இந்தக் கண்களால் அதைப் பார்த்திருக்கிறேன். அந்தத் தோட்டத்தை மட்டும் நீங்கள் பார்த்திருப்பீர்களானால் இது என்ன தோட்டம் என்று நீங்களே வெட்கப்பட்டு இதிலுள்ள செடிகளையெல்லாம் பிடுங்கி எறிந்து விடுவீர்கள் என்றாள்.
மடத்துத் தோட்டத்தைப் பற்றி அப்பட்ஹான்ஸைப் போலவே அந்தச் சிஷ்யனும் பெருமை கொண்டவன். காட்டில் வசிக்கும் ஒரு காட்டுமிராண்டி இப்படிச் சொன்னதைக் கேட்டு அவன் நகைத்தான். அதேசமயம் அவனுக்குக் கோபமும் அளவு கடந்து வந்தது.
ஆமாம் உங்க காட்டிலே இதைவிட அழகான தோட்டம் இருக்கு. போடி போ, பைத்தியக்காரி. கடவுளின் மேல் ஆணையாகச் சொல்கிறேன். நீ ஒரு தோட்டத்தைப் பார்ப்பது இதுவே முதல் தடவை என்று நான் நினைக்கிறேன் என்றான் அவன்.
திருடனின் மனைவிக்குக் கோபம் வந்தது. தன் வார்த்தைகளைப் பொய் என்று ஒருவன் சொல்கிறானே என்று உண்மைதான் என்றாள் கோபமாக. நான் இன்று வரை மனிதனால் நிர்மாணிக்கப்பட்டத் தோட்டத்துக்குள் போய் பார்த்ததில்லை என்பது உண்மையே. ஆனால் தோட்டம் என்றால்.. நீங்கள் புனிதமான வாழ்க்கை நடத்துபவர்கள் மதகுருக்கள், அவர்களின் சிஷ்யர்கள் நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? பிரதி வருஷமும் கிறிஸ்துமஸுக்கு முந்திய இரவு வஸந்தகாலம் போல கீயீங்கே வளம் பூத்துக் குலுங்குகிறது என்று நீங்கள் கேள்விப்பட்டதில்லையா, பார்த்ததும் இல்லையா? நடு மாரிக்காலத்தில் நமது கிறிஸ்துவின் பிறப்பின் ஞாபகர்த்தமாக, கிறிஸ்து அர்ப்பணமாக வஸந்தகாலம் தோன்றி மரமும் செடியும் கொடியும் பூத்துக் குலுங்கும் என்று நீங்கள் அறிந்தில்லையா? காட்டில் வசிக்கும் நாங்கள் பிரதி வருஷமும் இந்த விஷயத்தைக் கண்டிருக்கிறோம். என்ன அற்புதமான புஷ்பங்கள். என்ன அழகான வர்ணங்கள். எவ்வளவு இன்பகரமான வர்ண விஸ்தாரங்கள் அடடா. நாவால் சொல்லி மாளாது. கைநீட்டி அந்தப் புஷ்பங்களில் ஒன்றைப் பரிக்கவும் மனசு வராதே. அவ்வளவு அழகு.
மதகுருவின் சிஷ்யன் ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தான். ஆனால், ஒன்றும் சொல்லதே, பேசாதிரு என்று அப்பட்ஹான்ஸ் கையைக் காட்டினார். கீயிங்கே வனம் நடுமாரியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டுவதற்காக வஸந்த ஆடை தரிக்கிறது என்கிற கதையை அவர் இளவயசிலிருந்தே கேள்விப்பட்டதுண்டு. அந்தச் சமயத்தில் வனத்தைப் பார்க்க வேண்டுமென்று அவர் பல தடவைகளில் ஆசைப்பட்டதுமுண்டு. ஆனால் காண நேர்ந்ததில்லை. இப்பொழுது அதைப் பார்க்க ஒரு சந்தர்பபம் கிடைக்கும்போல் இருந்தது. கிறிஸ்துமஸ் தினத்தன்று தன்னை அழைத்துப் போய் அந்த வித்தையைக் காட்ட வேண்டும் என்று திருடனின் மனைவியிடம் அவர் வேண்டிக் கொண்டார். அவளுடைய குழந்தைகளில் ஒருவனை வழிகாட்டுவதற்கு அனுப்பினால் வருவதாகக் கூறினார். தனியாக வருவதாகவும், தன்னால் அவளுடைய குடும்பத்துக்கு எவ்விதமான கெடுதியும் வராது என்றும் சொன்னார். கெடுதிவராது என்பது மட்டுமல்ல. திருடனுக்கும், அவன் குடும்பத்துக்கும் தன்னாலான உதவி செய்வதாகவும் வாக்களித்தார்.
முதலில் திருடனின் மனைவி தயங்கினாள். அப்பட்ஹான்ஸ் மூலமாகத் தனது கணவனுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து விட்டால் என்ன செய்வது என்று பயந்தாள். காட்டில் தங்களுடைய வாசஸ்தலத்தை அறிந்து கொண்டு அப்பட்ஹான்ஸ் காட்டிக் கொடுத்துவிட்டாரானால்.. ஆனால் தன்னுடைய கிறிஸ்துமஸ் தோட்டத்தை அவருக்குக் காட்ட வேண்டும்மென்ற விருப்பம் மேலோங்கி நின்றது. கடைசியில் ஒப்புக் கொண்டாள். நிபந்தனைகளும் விதித்தாள்.
நீங்கள் ஒருவரை மட்டுமே உடன் அழைத்து வரலாம். வேறு யாரையும் அழைத்து வரக்கூடாது. புனிதமான மதகுருவாகிய நீங்கள் எங்களை ஏமாற்றி அதிகாரிகளிடம் காட்டிக் கொடுப்பதில்லை என்று வாக்களிக்க வேண்டும். எங்கள் வாசஸ்தலங்களையும், அதை அணுகும் வழியையும் காட்டிக் கொடுக்கக் கூடாது.
அப்பட்ஹான்ஸ் அப்படியே சத்தியம் செய்து கொடுத்தார். திருடனின் மனைவி கடைசித் தடவையாகத் தோட்டத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்து விட்டு கிளம்பினாள். தாங்கள் இப்படிக் கிறிஸ்துமஸ் தினத்துக்கு ஏற்பாடு செய்திருப்பதை ஒருவரிடமும் சொல்லக்கூடாது என்று தன் சிஷ்யனுக்குக் கட்டளையிட்டார். வெளியில் தெரிந்து விட்டால் காரியம் நடக்காது. கிழவனாகிய அவரைத் தனியே அனுப்ப, அதுவும் கீயிங்கே காட்டில் திருடனின் குகைக்கு அனுப்ப, மடத்தைச் சேர்ந்தவர்கள் அனுப்ப மாட்டார்கள் என்று பயந்தார் கிழ மதகுரு அப்பட்ஹான்ஸ்.
இந்த விஷயம் பற்றி அவராகவே யாருடனும் பேசுவதும் இல்லை. பேசியும் இருக்க மாட்டார். ஆனால் ஒரு நாள் ஒண்டு நகரில் இருந்து ஆர்ச் பிசப்பு அப்ஸலன் வந்திருந்தார். ஊவிட் மடத்தில் ஓர் இரவு தங்கினார் அப்பட்ஹான்ஸ் பெருமையுடன் சாயங்கால வேளையில் தனது தோட்டத்தை ஆர்ச்பிஷ்ப்பு அப்ஸ்லனுக்குக் காட்டிக் கொண்டிருந்தார். அன்று அவருக்கு என்னவோ ஞாபகம் வந்தது. முன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அப்பட்ஹான்ஸ் அந்த விஷயத்தை அர்ச்சு பிஷப்பிடம் சொல்வது அந்த சிஷ்யன் காதில் விழுந்தது.
முதலில் கீயிங்கே காட்டில் வசித்து வந்த திருடனைப் பற்றி அவர் பேச்செடுத்தார். அவன் பிரஷ்டம் செய்யப்பட்டு எவ்வளவோ வருஷங்களாகி விட்டன. நகரை விட்டுத் துரத்தியதால் அவன் பேரில் ஏற்பட்டிருந்த அபக்கியாதியை நீக்கி அவனை மறுபடியும் மனிதர்களிடையே மனிதனாக நடமாட அனுமதிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகக் கூறினார் அப்பட்ஹான்ஸ்.
அயோக்கியனை மீண்டும் யோக்கியர்களிடையே நடமாட விடுவது தவறு என்றார் ஆர்ச்பிஷப் அப்ஸலன். அவன் காட்டிலே வசிப்பதுதான் உலகத்துக்கே ஷேமம் என்றார் அவர்.
இதைக் கேட்ட அப்பட்ஹான்ஸ் அந்தத் திருடனை மன்னிக்கத்தான் வேண்டும் என்று உத்ஸாகத்துடன், ஆர்வத்துடன் பேசத் தொடங்கி விட்டார். பேச்சு மும்முரத்தில் அவர் கீயிங்கே காட்டைப் பற்றியும், அதில் ஒவ்வொரு மாரியிலும் கிறிஸ்துமஸ் சமயத்தில் வஸந்தம் விளையாடுகிறது கிறிஸ்துவைக் கௌரவிப்பதற்காக என்றும், அந்தக் காட்சியைத் திருடன் என்று ஜனங்களால் பிரஷ்டம் செய்யப்பட்ட அவன் பிரதி வருஷமும் காண்கிறான் என்று சொன்னார். அவன் திருடன் என்று நம்மால் ஒதுக்கப்பட்டவன். கடவுளின் விந்தைகள், மாயங்கள், பெருமைகள் நமக்குப் புலப்படுவதற்கு அதிகமாகவே அவனுக்குப் புலப்படுகின்றன என்றால் நம்மைவிட அவன் தேவலை என்று ஏற்படவில்லையா? கடவுள் அவனை ஒதுக்கவில்லை என்றும் ஏற்படவில்லையா? என்றார்.
இதற்கு என்ன பதில் சொல்லாம் என்று ஆர்ச்பிஷப் நன்கு அறிந்திருந்தார். சற்றும் தயங்காமலே பதில் அளித்தார். அப்பட்ஹான்ஸ் இது ஒன்று மட்டும் நான் உங்களிடம் சத்தியமாகச் சொல்கிறேன். ஏதோ கிறிஸ்துமஸ் சமயத்தில் வஸந்த மலர்கள் அத்திருடன் குகையில் பூக்கின்றன என்கிறீரே, அந்த மலரில் ஒன்றைக் கொண்டு வந்து என்னிடம் காட்டும். அன்றே அந்தத் திருடனையும், அவன் குடும்பத்தையும் மன்னித்து திரும்பவும் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளச் செய்கிறேன்.
இதைச் சொல்லிவிட்டு ஆர்ச்பிஷப் லேசாகச் சிரித்தார்.
இத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த சிஷ்யனுக்குத் தெரிந்து விட்டது. இந்தக் கிறிஸ்துமஸ் தோட்டக் கதையை ஆர்ச்பிஷப்பும் தன்னைப் போலவே நம்பவில்லை என்று. ஆனால் அப்பட்ஹான்ஸுக்கு இம்மாதிரி சிந்தனைகள், சந்தேகங்கள் ஒன்றும் இல்லை. இந்த விந்தையை பார்க்கத்தான் போகிறோம் என்று நிச்சமிருந்தது. எனவே ஆர்ச்பிஷப்புக்கு வந்தனம் சொன்னார். அத்திருடன் மேல் பச்சாதாபம் கொள்வதாக வாக்களித்ததற்காக கூடிய சீக்கிரமே ஆர்ச்பிஷப் கேட்ட அந்த மலரைக் கொண்டு வந்து தருவதாகவும் சொன்னார்.
கிறிஸ்துமஸுக்கு முந்திய தினம் கீயிங்கே வனத்துக்குக் கிளம்பிவிட்டார் அப்பட்ஹான்ஸ். திருடனின் மனைவி தான் சொல்லிவிட்டு வந்ததை மறந்துவிடாமல் தன்னுடைய குழந்தைகளில் ஒருவனை அனுப்பியிருந்தாள், அவருக்கு வழிகாட்ட. அன்று தோட்டத்தில் களைபிடுங்கிக் கொண்டிருந்த அதே சிஷ்யப்பிள்ளை பின்தொடர, திருடனின் வாண்டுப் பயல் முன்னே வழிகாட்டிக் கொண்டு ஓட அப்பட்ஹான்ஸ் கீயிங்கே வனத்துக்குள் பிரவேசித்தார்.
இந்தப் பிரளாணத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர் அப்பட்ஹான்ஸ். திருடர்களின் கண்ணுக்குப் புலனாகித் தன்னைப் போன்ற புனிதமான மடாதிபதிகளுக்குக்கூடப் புலனாகாத அந்த தெய்வீகமான வஸந்தக் காட்சியைக் காண அவர் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தார். அவருடன் வந்த சிஷ்யனுக்குத்தான் சற்றுப் பயமாக இருந்தது. அவனுக்குத் தன்னுடைய குருவிடம் அபாரமான பிரேமை. அது காரணமாகத்தான் அவன் குருவுக்கு காவலாக வந்திருக்கிறான். வேறு யாருடனும் அவரைச் சேர்த்து அனுப்ப அவனுக்குத் தைரியமில்லை. என்ன நேர்ந்துவிடுமோ என்று பயம். ஆனால் அவனுக்கு உள்ளூர ஒரு நிச்சயம். இரவு வஸந்தகாலம் பூணுகிறது என்பது கட்டுக்கதை என்று தான் நம்பினான். திருடனின் மனைவி ஏதோ கதைத்தாள். அது தவிர வேறு ஒன்றுமில்லை என்றே அவன் எண்ணினான். அப்பட்ஹான்ஸைப் பிடித்துக் கொல்லத் திருடனின் மனைவி செய்த சதியாகவும் இருக்கலாமோ அது என்றுகூடச் சில சமயம் அவனுக்குத் தோன்றியது.
கீயிங்கே காட்டுக்குப் போகும் வழியெல்லாம் வசித்த ஜனங்கள் கிறிஸ்துமஸ் நாளை எதிர்பார்த்துக் குதூகலமாக இருந்தார்கள். முந்திய கிறிஸ்துமஸ் நாட்களைப் போலவே இந்த கிறிஸ்துமஸையும் கொண்டாட ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்திய தினமாதலால் ஏற்பாடுகளெல்லாம் முடிவடையும் தருணத்திலிருந்தன. பெரிய பெரிய அண்டாக்களில் ஸ்நானத்திற்கு வெந்நீர் தயாராகிக் கொண்டிருந்தது. ரொட்டி மற்றும் ரக ரகமான திண்பண்டங்களும் தாராளமாகத் தயாராகியிருந்தன. உக்கிராணங்களிலிருந்து சாப்பாட்டு அறைக்குச் சென்று கொண்டிருந்தன. வீடுகளிலும், வாசலிலும், தரையிலும், வைக்கோல் பரப்பியிருந்தது. வழிநெடுக இருந்த சிறு மாதாகோவில்களெல்லாம் கிறிஸ்துமஸை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. கிறிஸ்துமஸைவிட பெரிய உத்ஸவம் எது? இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டே மனசில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் சவாரி செய்தார் அப்பட்ஹான்ஸ். பாஸ்யேர மடத்திற்குப் போகும் பாதையில் ஒரே கூட்டமாக இருந்தது அன்று. அந்த மடத்தில் ஏழை எளியவர்களுக்குச் சாப்பாடு போடுவார்கள். தவிரப் பணக்காரர்கள் பலர் சேர்ந்து தானதருமங்கள் செய்வார்கள்.
கிறிஸ்துமஸ் ஏற்பாடுகள் இப்படி ஆனந்தமாக நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கப் பார்க்க அப்பட்ஹான்ஸுக்கு ஆவல் அதிகரித்தது. உள்ளம் துடிதுடித்தது. தான் அது வரையில் கொண்டாடிய கிறிஸ்துமஸ் உத்ஸவங்களை எல்லாம்விட அதி அற்புதமான, அதிசிரேஷ்டமான கிறிஸ்துமஸ் உத்ஸவத்தைக் கீயிங்கே காட்டில் திருடன் குடும்பத்துடன் கொண்டாடப் போகிறோம் என்ற ஞாபகம் அவரை மேலும் மேலும் வேகமாகத் தன் குதிரையைத் தட்டிவிடத் தூண்டியது. மற்றவர்கள் பலருக்கு அதுவும் மடாலயத்தில் தன்னையும்விடப் பெரியவர்கள், மதிப்பு வாய்ந்தவர்களுக்குக் கூடக்கிடைக்காத ஒரு பாக்கியம் தனக்குக் கிடைக்க இருந்தததை எண்ண எண்ண அவருக்கு ஆனந்தமாக இருந்தது.
ஆனால் அவருடன் வந்த சிஷ்யப்பிள்ளையோ அப்படியில்லை. போக போக அவன் மனம் துன்பத்தில் ஆழ்ந்தது. ஊரெல்லாம் வழக்கம்போல கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு குடும்பத்திலும் உத்ஸாகமாக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவர்கள் வீட்டிலோ எவ்விதமான ஏற்பாடுகளையுமே காணோம். விருந்துண்ணுவதற்குக் கூட சாதாரண உணவுப் பண்டங்களையும் காணோமே. கிறிஸ்துமஸ் தினத்தன்று இவர்களுக்கு உண்ண உணவு கூடக் கிடைக்காது போலிருக்கிறதே. ஐயோ பாவம். அந்தப் புனிதமான நன்னாளை எதிர்பார்த்து இவள் தன் குடிசையை அலம்பி சுத்தம் கூடச் செய்யவில்லையே. கிறிஸ்துமஸ் தினத்தன்று கூட அவர்களுக்குச் சாப்பிடக் கிடைத்தது ஏதோ கஞ்சி தான் அதுவும் அரைவயிறு அலம்பக் கூடப் போதுமானதாக இராது என்று யோசித்தார்.
ஆனால் திருடனின் மனைவி இதைப் பற்றியெல்லாம் சிந்தித்ததாகவே தெரியவில்லை. ஒரு பெரிய மனுஷி. தன் மாளிகையில் விருந்துக்கு வந்த மற்றப் பெரிய மனிதர்களை வரவேற்பது போன்ற குரலில் சொன்னாள். இப்படிக் கணப்பண்டை வந்து உட்காருங்கள், அப்பட்ஹான்ஸ். தங்கள் சிஷ்யனும் இங்கே வரலாம். இரவு உணவு ஏதாவது கையில் கொண்டு வந்திருந்தீர்களானால் அதை அருந்துங்கள் ஏனென்றால் காட்டில் நாங்கள் வழக்கமாக அருந்தும் உணவு உங்களுக்குப் பிடிக்காது என்றே நினைக்கிறேன். நீண்ட பயணம் செய்திருக்கிறீர்கள். களைப்பாயிருந்தால் இப்படியே படுத்து உறங்குங்கள். கிறிஸ்து பிறந்த உத்ஸவத்தை இக்காடு கொண்டாடும் விதத்தை நீங்கள் பார்க்காமல் தூங்கிவிட மாட்டீர்கள். நான் விழித்துக் கொண்டிருப்பேன். தூங்கிவிட மாட்டேன். சரியான சமயத்தில் உங்களை எழுப்புகிறேன் என்றாள்.
அப்பட்ஹான்ஸ் தன்னுடன் உணவு கொண்டு வந்திருந்தார். ஆனால், அதை எடுத்துச் சாப்பிட அவருக்குச் சிரமமாக இருந்தது. அவ்வளவு களைப்பு. உணவு கூட அருந்தாமல் சும்மாப் படுத்து விட்டார். படுத்தவுடன் தூங்கியும் போய்விட்டார்.
அவருடைய சிஷ்யனும் படுத்துக் கொண்டான். ஆனால் அவனுக்குச் சுலபத்தில் தூக்கம் வரவில்லை. தூங்கிக் கொண்டிருப்பது போலப் படுத்திருந்த திருடன் விழித்துக் கொண்டு தங்களைக் கட்டிப் போட்டு விட்டால் என்ன பண்ணுவது என்று பயந்தான். ஆனால் அவனாலும் அதிகநேரம் விழித்திருக்க முடியவில்லை. தன்னையும் அறியாமலே தூங்கிவிட்டான்.
சிஷ்யப் பிள்ளை மீண்டும் கண்விழித்துப் பார்த்தபோது அப்பட் ஹான்ஸ் எழுந்து விட்டான்.
சிஷ்யப் பிள்ளை மீண்டும் கண் விழித்துப் பார்த்தபோது அப்பட் ஹான்ஸ் எழுந்து விட்டார். எழுந்து கணப்பருகே திருடனின் மனைவி பக்கத்திலே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். திருடனும் விழித்துக் கொண்டு விட்டான். அவன் முகத்திலே சோம்பல் பாவமும், உத்ஸாகமின்மையும் படர்ந்திருந்தன. தன் மனைவியும், அப்பட்ஹன்ஸும் பேசிக் கொண்டிருந்ததில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை போலும். அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.
திருடன் மனைவியிடம் அப்பட்ஹான்ஸ் கிறிஸ்மஸைப் பற்றியும் பொதுவாகவும், கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாட ஜனங்கள் ஊரெங்கும் செய்து கொண்டிருந்த ஏற்பாடுகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். அவள் பழைய சிந்தனைகளில் ஈடுபட்டவளாக அதிகம் பேசாமல் இருந்தாள். அவளும் ஒரு காலத்தில் சாதாரண ஜனங்களிடையே சாதாரண மனுஷியாக சாதாரண வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தவள் தான். அந்தக் காலத்தில் அவளும் கிறிஸ்துமஸ் விழாக்களிலும் கொண்டாட்டங்களிலும் கலந்து கொண்டவள் தான். அந்த ஞாபகங்களே எவ்வளவு இன்பமாக இருந்தன.
உன் குழந்தைகளை எண்ணி நான் துக்கப்படுகிறேன் என்றார் அப்பட்ஹான்ஸ் அவர்கள் சாதாரண மக்களைப் போல இவ்விழாக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கில்லையே.
முதலில் திருடனின் மனைவி அதிகமாகப் பேசவில்லை. கேட்டதற்கு ஒவ்வொரு வார்த்தை பதில் அளித்தாள். சிறிது நேரம் கழித்து அப்படி வார்த்தை சொல்வதையும் நிறுத்தி விட்டாள். சிந்தனை அலைகள் மோதி மோதி அவள் முகத்திலே ஓர் ஆனந்தப்பரவசம் படர்ந்தது. வாய் திறவாமல் அப்பட்ஹான்ஸ் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். திடீரென்று திருடன் திரும்பிச் சம்பாஷணையில் குறுக்கிட்டான். அப்பட்ஹான்ஸின் முகத்திற்கெதிரே முஷ்டியைத் தூக்கிக் காட்டினான்.
மதகுருவாம் மதகுரு வந்து விட்டார். என் பொண்டாட்டி. பிள்ளையை என்னிடமிருந்து பிரித்துக் கொண்டு போகவா நீ வந்தாய்? நாங்கள் காட்டை விட்டு வெளியே வர முடியாது. வந்தால் எங்களைப் பிடித்து சிறையில் அடைத்து விட மாட்டார்களா? நாங்கள் காட்டை விட்டு வெளிவர முடியுமா?
அவன் கோபத்தைக் கண்டு பயப்படாமல் அப்பட்ஹான்ஸ் சொன்னார். இதோ பார். நான் ஆர்ச் பிஷப் அப்ஸலனிடம் சொல்லியிருக்கிறேன். உன் குற்றங்களை மன்னித்து உன்னை மீண்டும் ஜனங்களிடையே அனுமதிக்கும்படியாக நீ திரும்பவும் நகருக்கு வந்து மனிதர்களிடையே மனிதனாக வசிக்கலாம்.
இதைச் செவியுற்ற திருடனும், திருடனுடைய மனைவியும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ஆர்ச் பிஷப் அப்ஸலன் எப்படிப்பட்டவர் என்பது அவர்களுக்குத் தெரியும். அவராவது அவர்களை மன்னிக்கவாவது அவர்கள் விழுந்து, விழுந்து சிரித்தார்கள்.
“நான் ஆர்ச் பிஷப்பு அப்ஸலனிடம் சொல்லியிருக்கிறேன். அவர் கவனித்துக் கொள்வார்”. என்று மீண்டும் சொன்னார் அப்பட்ஹான்ஸ். அவர் நிமிர்ந்து திருடனைப் பார்த்தார். நேருக்கு நேராகப் பார்த்தார்.
அவர் பார்வையைக் கவனித்த திருடன் சொன்னான். “ஓ அப்படி என்னை மன்னித்து மறுமடியும் ஜனங்களிடையே நடமாட அனுமதிப்பாரா ஆர்ச் பிஷப்பு – அப்படிச் செய்தாரானால் நான் சத்தியமாகச் சொல்லுகிறேன். இனி என் ஆயுளில் ஒரு நாள் கூட நான் திருடமாட்டேன். எதையுமே ஒரு சிறு வாத்துக்குஞ்சைக் கூடத் திருடமாட்டேன் என்றான் அவன் உணர்ச்சியுடன்.
தன் முயற்சிகள் பலிக்கும் என்று அறிந்து அப்பட்ஹான்ஸ் சந்தோஷப்பட்டார். ஆனால் திருடனின் வார்த்தைகள் அவருடைய சிஷ்யனுக்குச் சந்தோஷமூட்டவில்லை. அதற்கு நேர் மாறாக அவனுக்குக் கோபமூட்டின. தன் கருவைக் கேலி செய்கிறார்கள் என்று எண்ணினான் அவன். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. மடாலயத்தில் இருப்பதை விட அதிகச் சந்தோஷமாக இருக்கிறார் தன் குரு என்பதைக் காண அவனுக்கே சந்தோஷமாக இருந்தது.
திடீரென்று திருடனின் மனைவி எழுந்தாள். “நீங்கள் பாட்டுக்கு ஒரு கவலையுமில்லாமல் இங்கு உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறீர்களே, அப்பட் ஹான்ஸ்”, என்று கேட்டாள் அவள். “உங்களுக்குக் காது கேட்கவில்லையா? கீயிங்கே வனம் தேவவனமாக மாறுவதைப் பார்க்க வேண்டாமா? மனிதர்களின் சப்தம் கேட்க ஆரம்பித்து விட்டதே. கிறிஸ்து பிறந்த வினாடி நெருங்குகிறது. அதன் ஞாபகார்த்தமாக தேவலோகத்து மணிகள் ஒலிக்கத் தொடங்கி விட்டனவே என் காதில் கேட்கிறதே” என்றாள்.
திருடனின் மனைவியின் காதில் தேவலோகத்து மணிகள் ஒலித்தன. அப்பட் ஹான்ஸும் அவர் சிஷ்யனும் உற்றுக் கேட்டார்கள். அவர்கள் காதில் ஒன்றும் கேட்கவில்லை. தெய்வத்தின் வழிகளே விசித்திரமானவை என்று சிந்தித்தவராக அப்பட்ஹான்ஸ் சும்மா இருந்தார்.
“வாருங்கள் வெளியே போகலாம். வனத்திலே தெய்வ சாந்நித்தியம் தாண்டவமாடுவதைக் காண்போம் என்று கூறிக்கொண்டே எழுந்தாள் திருடனின் மனைவி.
அப்பட் ஹான்ஸும், அவர் சிஷ்யனும், திருடனின் குழந்தைகளும் குதித்தெழுந்தார்கள். மரக்கதவைத் திறந்து கொண்டு குடிசைக்கு வெளியே சென்றார்கள்.
வெளியே கும்மிருட்டாக இருந்தது. ஒரே குளிராகவும் இருந்தது. கண்ணுக்கெட்டிய வரையில் இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இப்போது அப்பட் ஹான்ஸுக்கும், அவர் சிஷ்யனுக்கும் கூடக் கேட்டது. தென்றலில் மிந்தது வரும் மணிகளின் சப்தம் எவ்வளவு இனிமையாக ஒலித்தது அந்த நள்ளிரவில், மனித சஞ்சாரமேயற்ற அந்தக் காட்டில்.
“ஆனால் இந்த மணிச்சப்தம் கேட்டு இக்காடு விழித்துக் கொள்ளுமா? எப்படி விழித்துக் கொள்ளும்? இக்காடு தேவகரனமாக மாறும் என்று சொல்லித் திருடனின் மனைவி என்னை ஏமாற்றத்தான் ஏமாற்றி விட்டாளோ?”, என்று ஆவலுடனும், ஆச்சரியத்துடனும், சந்தேகத்துடனும் தன்னையே கேட்டுக் கொண்டார் அப்பட் ஹான்ஸ். நாலாபக்கமும் பனி விழுந்து தரையெல்லாம் மூடியிருந்தது. மேலும் பனி பெய்து கொண்டே இருந்தது. ஒரே இருட்டு வேறு. ஒரு மரத்திலாவது இலை என்று பெயருக்குக் கூட இல்லை. ஒரு இலை, ஒரு பூ, ஒரு காய் இல்லாத கடுங்குளிர் காலம். திடீரென்று வெளிச்சமும், இலையும், பூவும், காயும், அழகும் எங்கிருந்து வரும்? இவ்வளவு நாழிகையாய் அவர் மனசில் ஊசலாடிக் கொண்டிருந்த நம்பிக்கை அறுந்து விழுந்தது.
ஆனால் அதே சமயம் வனத்திலே மங்கலானதோர் வெளிச்சம் தோன்றத் தொடங்கியது. மணிகளின் ஒலியைப் பின்னணியாகக் கொண்டே வனம் பூராவும் பரவுவது போலிருந்தது.
வெளிச்சம் தோன்றித் தோன்றிப் பரவிப் பரவி மறைந்ததை உஷத்காலம் தோன்றுவது போலிருந்தது. அதை என்ன ஒளி என்று சொல்வது என்று அப்பட்ஹான்ஸிற்குத் தெரியவில்லை. தெய்வீகமானதோர் ஒளி என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்த ஒளி அலை பரவுவதைக் கவனித்துப் பலவிதமான சிந்தனைகளில் லயித்திருந்த அப்பட்ஹான்ஸ் தன் நினைவு பெற்று குனிந்து பார்த்தபோது தரையிலிருந்த பனியெல்லாம் மறைந்து போய்விட்டது என்று கண்டார். பனி பெய்வதும் நின்று விட்டது. சில்லென்று குளிர்ந்து வீசிய காற்றும் ஓய்ந்து விட்டது. மணம் நிறைந்த தென்றல் இன்பமாக வீசிக் கொண்டிருந்தது. பூமியின்மேல் போர்த்தியிருந்த மாரிக்காலத்துப் போர்வையை ஏதோ ஒரு மாயக்கை, தெய்வீகமாக கை எடுத்து விட்டது போல இருந்தது. அப்பட் ஹான்ஸினுடைய கண் முன்னர் பூமியின்மேல் பச்சைப் போர்வை படர்ந்தது. புல்லும், பூண்டும் அடர்ந்து ஒரு நொடியில் வளர்ந்து தலை தூக்கின. எதிரே தெரிந்த குன்றுகளின் சரிவெல்லாம் திடுமென்று பச்சைப்பசேலென்றாகி விட்டது. வித விதமான பூச்செடிகள் முளைத்துத் தலைதூக்கிப் பூத்துக் குலுங்கின. அந்த வர்ண விஸ்தாரமே அபூர்வமானதாக, அற்புதமானதாக இருந்தது. வேறு என்ன சொல்வது? தெய்வீகமானதோர் வர்ண விசித்திரம் அது.
கீயிங்கே காடு விழித்தெழுந்து விட்டது என்று கண்ட அப்பட் ஹான்ஸுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் வியப்புக்கோர் அளவில்லை. “ஊவிட் மடத்தின் அதிபதி நான். கிழவன். என் வாழ்க்கையில் புதியதோர் அதிசயத்தை இக்கண்கள் கொண்டு காண நான் என்ன அதிர்ஷ்டம் செய்தேனோ?” என்று எண்ணினார் அப்பட் ஹான்ஸ். அவர் கண்கள் நிறைந்தன.
திடீரென்று வெளிச்சம் சற்று மங்கிற்று. மறுபடியும் போல இருட்டிப் போய்விடுமோ என்று பயந்தார் அப்பட்ஹான்ஸ், ஆனால் மங்கிய வெளிச்சம் முன்னிலும் அதிகமாயிற்று. அலைமேல் அலையாக முன்னிலும் அதிகமாக வெளிச்சம் தெரிந்தது. அவ்வெளிச்சத்துக்குப் பிண்ணனியாக ஆறுகளின் சலசலப்பும், அவற்றியும் இசையும் எழுந்தது. எங்கேயோ தூரத்தில் ஒரு நீர்வீழ்ச்சியின் சப்தம் கேட்டது. மொட்டை மரங்கள் துளிர்த்தன. ஒரு வினாடியில் கோடிக்கணக்கான பச்சை வண்ணத்தில் பூச்சிகள் அந்தக் கிளைகளில் குடிபுகுந்தது போல் இருந்தது. காட்டிலே நடுமாரியில் தூங்கிக் கொண்டிருந்த மரங்களும் செடிகளும் மட்டுமே விழித்துக் கொண்டுவிட்டன. விதவிதமான குரல்களைக் கிளப்பின. மரங்கொத்திப் பறவைகள் ‘டக்டக்’ என்று மரங்களின்மேல் சப்தப்படுத்தின. ஸ்டார்லிங் பறவைகள் கூட்டம் கூட்டமாக பறந்து வந்து மரங்களின்மேல் அமர்ந்து உத்ஸாகமாகக் குரல் எடுத்துப் பாடின. இப்படிப் பறவைகள் பறந்து திரிவது என்றுமில்லாத அதிசயமாகப் பட்டது அப்பட்ஹான்ஸிற்கு. விலையுயர்ந்த அற்புதமான நவரத்தினங்கள் இழைத்த அணிகளைக் காற்றிலே வாரி இறைத்தது போலிருந்தது.
மீண்டும் ஒரு விநாடி இருண்டது. ஓர் ஒளி அலை வீசிற்று. மனோகரமான மனத்தைச் சுமந்து கொண்டு வந்தது தென்றல். அதே வினாடி தரையிலிருந்து பலவிதமான செடிகொடிகள் முளைத்துத் தழைத்தன. தன்னூரில் பயிராகக் கூடிய எல்லாச் செடிகளையும் பற்றி அறிந்திருந்த அப்பட் ஹான்ஸ் ஆச்சரியப்பட்டார். அந்த ஊரில் பயிராகாது என்று அவர் எண்ணியிருந்த செடிகளெல்லாம் கூட அன்று அங்கே காணப்பட்டன.
அவர் அப்படி ஸ்தம்பித்து நிற்கையில் அவர் கண்ணெதிரிலேயே மரங்களும், செடிகளும் காய்த்துக் குலுங்கின. நாரைகளும், காட்டு வாத்துக்களும் கிறீச்சிட்டுக் கொண்டு பறந்து வந்தன. சிட்டுகள் மரங்களின் உச்சியிலே கூடு கட்டத் தொடங்கின. அணில்கள் மரங்களின் உச்சியிலே கூடு கட்டத் தொடங்கின. அணில்கள் வாலைத் தூக்கிக்கொண்டு காடெங்கும் ஒலிக்கும்படியாகப் பேசின.
அந்த மாறுதலின் வேகத்தை அப்பட்ஹான்ஸால் கண்காணித்துக் கொள்ள இயலவில்லை எவ்வளவு விந்தைகள் எவ்வளவு வேகமாக அவர் கண்ணெதிரே நடந்து கொண்டிருந்தன. இதெல்லாம் விந்தைகள், எதன் பின் எந்த விந்தை நடந்தது என்று அறிந்து கொள்ள மாட்டாமல் தவித்தார். அப்பட்ஹான்ஸ். இது விந்தை என்று சிந்தித்துக் கொண்டிருக்கக் கூட அவருக்குப் போதுமான நேரம் இல்லை. அவர் கண்களுக்கும் முழுமையாக வேலையிருந்தது.
அடுத்த ஒளி அலையிலே மிதந்து வந்தது. புதுசாக உழுது பண்படுத்தப்படும் வயல்களின் வாசனை. எங்கேயோ வெகு தொலைவிலிருந்து இடைச்சிகள் தங்கள் பசுக்களிடம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசிக்கொண்டே பால் கறந்து கொண்டிருக்கும் சப்தம் வந்தது. ஆட்டு மந்தைகளின் மணிகள் ஒலித்தன. மரங்களெல்லாம் சிவப்பும், நீலமும், மஞ்சளும், ஊதாவுமாகப் பூத்துக் கொண்டிருந்தன. பச்சையாகக் காய்த்திருந்த காய்கள் அப்பட்ஹான்ஸுடைய கண் எதிரே கனிந்து நிறம் மாறிப் பழுத்தன. பூக்கள் தரையெங்கும் விழுந்து பரவி விதவிதமான வர்ணம் காட்டின. ஏதோ மாயமான ரத்ன கம்பளம் விரித்தது போல் இருந்தது.
அப்பட்ஹான்ஸ் குனிந்து காலடியில் பூத்திருந்த ஒரு பூவைப் பறித்தார். அதை அவர் கையில் எடுத்துக்கொண்டு நிமிர்வதற்குள் பூ, காயாகி மாறிப் பழுத்து விட்டது. காட்டில் ஒரு குகையிலிருந்து குள்ளநரி ஒன்று வந்தது தன் குட்டிகளுடன். அந்தக் குட்டிகள்தான் எவ்வளவு அழகாக இருந்தன. நரி நேரே திருடனிடன் மனைவியிடம் வந்து உடம்பை வளைத்து அவள் காலில் தேய்த்துக் கொண்டு நின்றது நாயைப்போல. அதன் குட்டிகள் குழந்தைகளைச் சுற்றி விளையாடின. திருடனின் மனைவி குனிந்து நரியின் காதில் ஏதோ சொன்னாள். நரி அவள் சொன்னதைக் கேட்டு ஆனந்தப்படுவது போல் இருந்தது. திடீரென்று காட்டில் தோன்றிய வெளிச்சம் ஆந்தைகளுக்கும், கூகைகளுக்கும் தான் இடைஞ்சலாக இருந்தது. அவை பயந்து தங்கள் பொந்துகளுக்குள் புகுந்து கொண்டன. சேவல் கூவிற்று. ‘குக்கூ‘ பறவைகள் சிறகடித்து பறந்து கொண்டிருந்தன.
திருடனின் குழந்தைகள் ஆனந்தக் கூச்சலிட்டுக் கொண்டு கைக்கு எட்டிய பழங்களை எல்லாம் பறித்துச் சாப்பிட்டனர். வயிற்றுப்பசி ஆறியவுடன் அவர்கள் குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டிருந்த முயல் குட்டிகளுடனும், நரிக்குட்டிகளுடனும் விளையாடத் தொடங்கினார்கள். பறக்கத் தெரியாத சில பறவைக் குஞ்சுகள் கீழே விழுந்து கிடந்தன. அவற்றை எடுத்துப் பறக்க விட்டு வேடிக்கை பார்த்தார்கள். அடுத்தபடியாக ஒரு பெரிய பாம்பையும் அதன் குட்டிகளையும் தோளில் எடுத்துப் போட்டுக் கொண்டு திரிந்தார்கள். பாம்புக்கும், அதன் குட்டிகளுக்கும்கூட அது விளையாட்டாகத்தான் இருந்தது.
திருடன் அன்றிரவு சாப்பிடவில்லை போலும். அவனும் தன் குழந்தைகளைப் போலவே கையில் அகப்பட்டதை எல்லாம் பறித்துத் தின்று கொண்டிருந்தான். ஒரு வழியாகச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு குனிந்து அவன் பார்த்தபோது அவன் அண்டையில் சாதுவாக ஒரு கரடி வந்து நின்று கொண்டிருந்தது. அதன் முதுகைத் தடவிக்கொடுத்தபடியே ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவனாக நின்றிருந்தான். பின்னர் “இதோ பார், கரடி. இது எனக்குச் சொந்தமான இடம். நீ இங்கு வரக்கூடாது என்று சொல்லி ஒரு சிறு குச்சியை எடுத்து அதன் முகத்தில் அடித்தான். அவன் சொன்னதை அறிந்து கொண்டதுபோலக் கரடியும் ஒரு தரம் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு உடம்பைக் குலுக்கிக் கொண்டே ஓடிப்போய்விட்டது.
மாரிக் காலத்துக் குளிர் மறைந்து விட்டது. வஸந்தத்தின் உஷ்ணம், மனசுக்கும் உடம்புக்கும் குளுமையான உஷ்ணம் பரவியிருந்தது எங்கும். தெய்வீகமான ஒளி எங்கும் பரவி நின்றது. ஒரு சிறு குட்டையில் நீந்திக் கொண்டிருந்த வாத்துகள் க்ளக் க்ளக் என்று குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. வஸந்தத்தின் மகரந்தப்பொடி, மாயப்பொடி காற்றிலே நிறைந்திருந்தது. தாமரைகள் ஆகாயத்திலே மிதந்து வருவது போல பலவித வர்ணமான வண்ணத்தப் பூச்சிகள் அங்கும் இங்கும் பறந்தன. ஓங்கி வளர்ந்திருந்த ஒரு மரத்தின் பொந்திலிருந்து தேனடை நிரம்பி வெளியே வழிந்து சொட்டிக் கொண்டிருந்தது. உலகத்திலுள்ள அழகான மலர்ச் செடிகள் எல்லாம் கிறிஸ்து பிறந்ததன் ஞாபகர்த்தமாய் பூத்து கீயிங்கே வனத்தை தெய்வீகமான அழகு கொண்டதாகச் செய்தன. சில மலர்கள் பொடிப்பொடியாக நவரத்தினங்கள் போல் ஜொலித்தன. சில மலர்கள் பெண்ணின் முகாத விந்தங்கள் போல் அழகுகூடிப் பெரிதாக இருந்தன. ரோஜாக் கொடியொன்று மலையடிவாரத்தில் முளைத்து மலையுச்சிவரையில் ஒரே நொடியில் படர்ந்தது நெடுகிலும் கண்ணைப் பறிக்கும் வண்ணமலர்கள் பூத்துக் குலுங்கின. இதற்குப் போட்டியாகப் படர்ந்தது கருப்புப் பூவுடைய ஒரு கொடி அதன் பூக்களைப்போல அப்பட்ஹான்ஸ் எங்கேயும் கண்டதில்லை.
இது தேவவனம்தான் சந்தேகமில்லை. திருடனின் மனைவி அன்று சொன்னது போலவே இது அப்பட் ஹான்ஸினுடைய மடத்துத் தோட்டத்தைவிட அற்புதமானதுதான். அழகானது தான். சந்தேகத்துக்கிடமேயில்லை. இதை நினைக்கும்போது அப்பட் ஹான்ஸுக்கு இன்னொரு ஞாபகம் வந்தது. ஆர்ச் பிஷப்பு அப்ஸலன் திருடனை மன்னிக்கும் விஷயமாகச் சொல்லியது ஞாபகம் வந்தது. இத்தேவவனத்திலிருந்து ஒரு தேவமலரைக் கொண்டு போய்க் கொடுத்தால் அவர் அந்த திருடனை மன்னித்து மறுபடியும் மனிதர்களிடையே வாழ அனுமதி தந்து விடுவார். ஆனால் இத்தேவ மலர்களில் எந்த மலரைப் பறித்து வைத்துக் கொள்ளுவது என்று அப்பட் ஹான்ஸிற்குத் தெரியவில்லை. ஒன்றைவிட ஒன்று அழகானதாகவும், அற்புதமாகவும் இருந்ததே. எல்லாவற்றிலும் சிறந்த மலரைக் கொண்டுபோய் அப்ஸலனுக்குக் காட்ட வேண்டுமென்று விரும்பினார் அப்பட் ஹான்ஸ்.
ஒளி அலைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து மேலும் வந்தன. காடு மட்டுமின்றி வானமும் ஒளியால் நிறைந்து பிரகாசம் பெற்றது. நிமிர்ந்து பார்ப்பது சிரமமான காரியமாக இருந்தது கோடி சூரியப்பிரகாசம் என்பார்களே அதேல்லாம் கற்பனையில் தான் என்று எண்ணியிருந்த அப்பட் ஹான்ஸிற்கு புதிய ஞானம் பிறந்தது. வசந்தத்தன் காற்று, மணம், ஒளி, ஒலி எல்லாம் அப்பட் ஹான்ஸைச் சூழ்ந்திருந்தன. அப்போது கிறிஸ்து பிறந்ததின் ஞாபகர்த்தமான இதைவிட ஆனந்தமான ஓர் அனுபவம் ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையிலே வேறு ஏற்படாது என்று நம்பினார் அப்பட்ஹான்ஸ். ஆனால் அவருக்குத் தெரியும். அடுத்த அலையுடன் புதிய விந்தைகள், புது அற்புதங்கள், புது ஆனந்தங்கள், புது அழகுகள் தோன்றும் என்று எண்ணியபோது அவர் மெய் சிலிர்த்தது.
இன்னமும் ஒளி அலைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன. அவை எங்கிருந்து வந்தன என்று யாரால் சொல்ல முடியும்? தெய்வீகமான ஒளி, தெய்வீகமான காற்று. தெய்வீகமான மணிகள் உத்ஸாகமாக ஒலித்துக் கொண்டிருந்தன. ஏதோ எட்டாத தொலைவிலிருந்து கணக்கிட முடியாத தூரத்திலிருந்து அந்த மணிச் சப்தத்துக்கும் அப்பாலிருந்து வந்து ஓர் இசை அப்பட் ஹான்ஸின் காதில் விழுந்தது. அந்த ஒலி அவர் உள்ளத்தையே நாட்டியமாடச் செய்தது என்றுதான் சொல்ல வேண்டும். கடவுளின் மகன்,மனிதர்களுக்கிடையே அவர்கள் உய்வதற்கென்று திரு அவதாரம் செய்த நாளிலே தெய்வீகமான காரியங்கள் நிகழ்ந்தன என்று அப்பட் ஹான்ஸ் படித்திருந்தார். அந்த தெய்வீகமான காரியங்கள் எல்லாம் மீண்டும், தன் முன் ஒருமுறை நடக்கின்றன என்று உணர்ந்தார். கிறிஸ்து ஜனித்த தினத்தின் ஞாபகர்த்தமாக ஒவ்வொரு வருஷமும் இவ்விதத் தெய்வீகமாக மாறுதல்கள் நேரத்தான் நேருகின்றன என்பது அவர் அறிந்த விஷயம்தான். ஆனால் தன் கண் முன்னரே, தன் ஏனக் கண்கள் கொண்டு பார்க்கும்படியாக இம்மாயங்கள், தெய்வீகக் காரியங்கள் நிகழுமென்று அவர் எதிர் பார்க்கவில்லை. கற்பனையில் எதிர்பார்த்தாலும் ஏதோ கொஞ்சமே எதிர்பார்த்திருக்க முடியும் நடந்து அவ்வளவையும் அவரால் எதிர்பார்த்திருக்க முடியாது என்பது நிச்சயமே. கற்பனை எல்லையையும் கடந்ததாக இருந்தது அவர் கண்முன் அன்று நடந்த காரியங்கள். இன்னும் என்னென்ன கண்டு களிக்க வேண்டுமோ அவ்வளவையும் கண்டு விடுவது என்று மனசையும், கண்களையும், செவிகளையும் தீட்டிக் கொண்டு நின்றார் அப்பட் ஹான்ஸ்.
திடீரென்று எல்லா ஒலிகளும் அடங்கி விட்டன. சப்தமில்லா மைக்கே லகூஷியமாக எடுத்துக் காட்டக் கூடிய ஒரு மௌனம் நிலவியது சில வினாடிகள். பஷிகள் கூடக் கூவுவதை நிறுத்தி விட்டன. நரிக்குட்டிகளும் நிச்சலனமாக இருந்தன. பூக்கள் மலருவதையும் மறந்தன. அதுவரை வினாடிக்கொரு வண்ணமும், பொழுதொரு மேனியுமாக வளர்ந்த செடி கொடிகளெல்லாம் வளர்ச்சியின் பூரணத்தை எட்டி விட்டன போல் நின்றது. ஏதோ ஒன்று என்னவென்று அதை விவரிப்பது தெய்வீகமான ஒன்று அணுகிக் கொண்டிருப்பதை அப்பட் ஹான்ஸ் உணர்ந்தார். அவர் இதயத் துடிப்பு கூட அந்த விந்தையைக் கவனிப்பதிலேயே நின்று விட்டது போலிருந்தது. அவர் ஆத்மா ஈசனை எட்டித்தொட விரும்பியது போல இருந்தது. வெகு தூரத்திற்கப்பாலிருந்து யாழ் மீட்டப்படுவது போல த்வனி கேட்டது அத்துடன் இசைந்து பலர் பாடுவது போலவும் இருந்தது. அந்த யாழையும், இசையையும் என்னவென்று சொல்லுவது? தெய்வீகமானது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த யாகும், குரலும் இசைந்து மனசையும், இதயத்தையும், ஆத்மாவையும் உருக்கிற்று உருகிப் பாகாய் ஓடச் செய்தது.
அப்பட் ஹான்ஸ் கையைக் கட்டிக் கொண்டு மண்டியிட்டு தலையைக் குனிந்து வணங்கினார். வணங்கியபடியே இருந்தார். அவர் முகத்திலே ஆனந்த பரவசம் படர்ந்தது. தன் வாழ்நாளில் இது சாத்தியமான காரியமென்று அவர் நம்பியிருந்ததில்லை. ஏதோ புண்ணியம் அதிகம் பண்ணாவிட்டாலும், பாவம் அதிகம் தெரிந்து செய்யாதிருந்தால் மேல் உலகத்தில், கடவுளின் ஆனந்த உலகத்திலேயே, ஒரு மூலையில் தனக்கென்று ஓர் இடம் கிடைக்கும், அங்கிருந்தபடியே தேவர்கள் பாடுவதையும், ஆனந்தப்படுவதையும் பார்க்கலாம் என்று அவர் எண்ணியதுண்டு. தேவ லோகத்துக் காட்சிகளை அவர் அன்று அத்திருடனுடைய மனைவியின் உதவியால் கண்டு கொண்டார். தேவர்கள் கிறிஸ்துமஸ் பாட்டுக்களைப் பாடிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். அவர் உள்ளத்திலே மகிழ்ச்சி வெள்ளம் பொங்கிக் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.
இவ்வளவு நேரமும் அப்பட் ஹான்ஸினுடைய சிஷ்யப்பிள்ளை என்ன செய்து கொண்டிருந்தான்? தன் குருவின் பக்கத்திலே நின்று கொண்டு தான் இருந்தான். ஆனால் அப்பட் ஹான்சின் மனசில் இருந்தது போல அவன் மனசில் திருப்தியோ, மகிழ்ச்சியோ, ஆனந்தமோ தோன்றவில்லை. அவன் மனசும் உள்ளமும் இருண்டு கிடந்தன. அவன் சிந்தனைகளிலே இருண்ட எண்ணங்கள். பயங்கரமான ஞாபகங்கள் ஊசலாடின. அவன் நினைத்தான். இம்மாயங்கள் எல்லாம் உண்மையில் தெய்வீகமானவையாக இருக்க முடியாது என்பது நிச்சயம். மடாதிபதி, ஆர்ச் பிஷப்பு, அப்பட்ஹான்ஸ் இவர்கள் கண்ணிலெல்லாம் படாத அதிசயங்கள், குற்றவாளிகளான இத்திருடனுக்கும், திருடன் குடும்பத்தாருக்கும் வருஷா வருஷம் படுவதால் இதில் ஏதோ ஒரு சூது இருக்கத்தான் வேண்டும். கடவுளின் செயலாக இராது கடவுளுக்கு எதிரியான சைத்தானின் காரியமாகத்தான் இருக்க வேண்டும். அவன் சூது தான் இது. நமது மனசை மயக்கி அந்தகாரத்தில் மூழ்க அடித்து ஏமாற்றுகிற வித்தையே தவிர வேறு அல்ல. இல்லாத தெல்லாவற்றையும் இருப்பது போலக் காட்டி நம்மை ஏமாற்றுகிறான் சைத்தான் என்று எண்ணினான்.
தேவர்கள் யாழ் மீட்டிப் பாடிக் கொண்டு நெருங்கினார்கள். அவர்களைச் சுற்றிலும் எவ்வளவு அற்புதமான ஒளி வீசிக் கொண்டிருக்கிறது? அவர்கள் உருவங்களைக் கண்ணெடுத்துப் பார்க்கவும் அஞ்சி அப்பட் ஹான்ஸ் ஒரு வினாடி பார்ப்பதும், ஒரு வினாடி கண்ணைத் தாழ்த்திக் கொள்வதுமாக இருந்தார். அவருடைய சிஷ்யப்பிள்ளையின் கண்களிலும் அந்தத் தேவர்கள் பட்டார்கள். அவர்களுடைய இன்னிசை அவன் காதிலும் விழுந்தது. ஆனால் இந்த அழகெல்லாம் தெய்வீகமான அழகென்று அச்சிஷ்யன் நினைக்கவில்லை. சைத்தானின் கைத்திறமை என்றே எண்ணினான். எண்ணிப் பயந்தான். கிறிஸ்து பிறந்த தினத்தன்று இப்படியெல்லாம் சைத்தானுக்கு இடம் கொடுப்பது தவறு என்று எண்ணினான்.
இன்னொரு விசேஷமும் இருந்தது. அப்பட் ஹான்ஸை நெருங்கி அவர் மேல் உட்கார்ந்து உறவாடிய பறவைகள் எல்லாம் அவருடைய சிஷ்யப்பிள்ளையைக் கண்டு மிரண்டு பயந்து ஓடின. மிருகங்களோ அவன் பக்கம் போகவேயில்லை. அவன் பாம்பைக் கண்டு மிரண்டானோ இல்லையோ, பாம்பு அவனைக் கண்டு மிரண்டது. ஒரே ஒரு புறா மட்டும் சற்று அசட்டுத் தைரியத்துடன் சிஷ்யன் பக்கம் பறந்து போய் அவன் தோளில் உட்கார்ந்தது. வேறு ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த சிஷ்யப்பிள்ளை, சைத்தான்தான் தன் தோள்மேல் வந்து உட்கார்ந்து விட்டான் என்று பதறித் துடித்து அலறினான். தன்னையும் மயக்க வந்துவிட்டான் சைத்தான் மற்றவர்களை மயக்கியதுபோல என்று எண்ணினான்.
உடனே அந்தப் புறாவைக் கைகளால் விரட்டினான். உரத்த குரலில் சொன்னான். நகரத்திலிருந்து வந்தவனே. சைத்தானே. ஓடிப்போ. என்று காடு முழுவதும் எதிரொலிக்கும் படியாகக் கூவினான்.
அந்த சமயம் யாழுடன் பாடிக் கொண்டு வந்த தேவர்கள் அப்பட் ஹான்ஸண்டை வந்து விட்டார்கள். அவர்களுடைய இறக்கைகளின் அசைவின் சப்தம் அப்பட் ஹான்ஸினுடைய காதில் தெளிவாக ஒளித்தது. கடவுளைப் பாடி வந்த அந்தத் தேவர்களை ஆனந்தத்துடனும் அன்புடனும் தாழ்மையுடன் வணங்கினார் அப்பட்ஹான்ஸ். அதே சமயம் அவருடைய சிஷ்யனின் சைத்தானே ஓடிப்போ, என்றகுரல் காடு முழுவதும் ஒலிக்கும்படி எழுந்தது. உடனே இசை ஒலி நின்றது. தேவகானம் பாடிக் கொண்டு வந்த தேவர்கள் தயங்கி ஒரு வினாடி நின்று மௌனமாகத் திரும்பிச் செல்லத் தொடங்கினார்கள். அப்பட்ஹான்ஸினுடைய சிஷ்யன் மனசில் இருந்தது போலவே இருட்டும், பயங்கரமும், குழப்பமும் வெளியேயும் ஆட்சி செய்யத் தொடங்கி விட்டன. கடவுளின் அருள் மனிதனை அன்று அவ்வளவு நெருங்கி வந்தது. மனிதனின் மனசிலே ஆட்சி செலுத்திய அவநம்பிக்கையையும், இருளையும் கண்டு மிரண்டு தேவதூதர்களும் திரும்பி விட்டார்கள். எவ்வளவு அதிசயமாக எல்லாம் நிகழ்ந்ததோ அவ்வளவு அதிசயமாக ஒரே நினாடியில் எல்லாம் மறைந்து விட்டது. குளிரின் முதல் அலை வீசத் தொடங்கியது. இருண்ட இரவின் ஆட்சி கொஞ்சம் கொஞ்சமாக சற்றும் எதிர்ப்பின்றி வலுத்தது. மறுபடியும் பனிவிழ ஆரம்பித்து விட்டது. செடிகொடிகள் உயிரிழந்தன. மிருகங்கள் சீறிக் கொண்டே உறுமிக் கொண்டே குகைகளுக்குள் பதுங்கி விட்டன. பறவைகள் வாயோய்ந்து, பாட மனமில்லாது கூடுகளுக்குள் அடங்கிவிட்டன. ஆற்றின் சலசலப்பு நின்று விட்டது. மரங்களிலிருந்து இலைகள் உதிர்ந்தன. மழை பெய்வது போலச் சப்தம் கேட்டது. எல்லாவற்றையும் விட அதிகமாக அந்தக் குளிரும், இருட்டும் அப்பட்ஹான்ஸினுடைய இதயத்தைப் பாதித்தன. பேரானந்தம் நிறைந்திருந்த அவர் உள்ளம் ஒரே வினாடியில் எல்லை காணாத துக்கத்தில் ஆழ்ந்தது.
இந்தத் துக்கத்தைச் சகிக்க என்னால் இயலாது. இதை மீறி என்னால் வாழ முடியாது என்பது நிச்சயம். தேவலோகத்திலிருந்து வந்த தேவர்கள் என்னை அணுகினார்கள். எனக்கு கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடிக்காட்டினார்கள். இன்னும் பாடியிருப்பார்கள். எல்லை அற்ற இன்பத்தைக் கண்டிருப்பேன் நான். அவர்கள் துரத்தப்பட்டார்கள். மனிதனின் அவநம்பிக்கை என்னும் சைத்தான் அவர்களைத் துரத்தி விட்டது. என் செய்வேன்? என்று துக்கம் தாளாமல் முனகினார் அப்பட்ஹான்ஸ்.
ஆனால் அந்த நிமிஷத்திலும் அவருக்கு ஞாபகம் இருந்தது. திருடனுக்கு மன்னிப்பு வாங்கித் தருவதாகத் தான் சொல்லிருந்த விஷயம். ஆர்ச் பிஷப்பு அப்ஸலனுக்குத் தான் மலர் கொண்டு வந்து வருவதாகச் சொன்ன விஷயம் ஞாபகம் வந்தது. தேவவனத்திலிருந்து ஒரு தேவமலர் கொண்டு போய் ஆர்ச்பிஷப்பிடம் காட்டி விட்டால் அவர் அந்தத் திருடனை மன்னித்து விடுவார். தேவவனம் கண்ணெதிரே மறைந்த அழிந்து கொண்டிருக்கிறது. கடைசி நிமிஷத்தில் அப்பட்ஹான்ஸ் கீழே விழுந்து தன் கையில் அகப்பட்ட புஷ்பத்தை பறிக்க முயன்றார். ஒரு மலர் சற்று முன் அங்கு செழித்துக் கிடந்த வனத்திலிருந்து ஒரு மலர் பறித்து விடவேண்டுமென்று அவர் முயன்றார். தரையில் பட்ட அவர் கைகள் சில்லிட்டன. தரை சற்று முன் இருந்த நிலை மாறி மீண்டும் பனியால் மூடப்பட்டிருந்தது. பனிப்போர்வைக்குள் விரல்களால் துழவினார் அப்பட்ஹான்ஸ். கையில் ஏதோ கிழங்கு போல ஒன்று அகப்பட்டது. அதை எடுத்துக் கொண்டு நடக்க முயன்றார். எழுந்திருக்க முடியவில்லை. நெடுஞ்சாங்கிடையாகக் கீழே விழுந்தார். விழுந்தபடியே கிடந்தார்.
அவர் அப்படிக் கீழே விழுந்து கிடந்ததை யாரும் கவனிக்க வில்லை. மீண்டும் இருட்டி விட்டது. பனி பெய்தது. மாரிக்காலம் தோன்றிவிட்டது என்று கண்டவுடன் திருடனும், அவன் மனைவியும், குழந்தைகளும், சிஷ்யனும் திருடனுடைய குடிசைக்குத் திரும்பி விட்டார்கள். இருட்டிலேயே தட்டுத்தடுமாறிக் கொண்டு திரும்பினார்கள். குடிசையினுள் எரிந்த சிறு விளக்கு வெளிச்சத்தில் போய் நின்ற பிறகுதான் அப்பட்ஹான்ஸ் தங்களுடன் குடிசைக்குத் திரும்பவில்லை என்று அறிந்தார்கள். கனப்பில் எரிந்து கொண்டிருந்த நாலைந்து கட்டைகளை எடுத்துக் கொண்டு, குடிசைக்கு வெளியே அவர்கள் வந்து அப்பட்ஹான்ஸைத் தேடினார்கள். பனியின் மேல் இறந்து கிடந்தார். அப்பட்ஹான்ஸ். அவருடைய சிஷ்யன் அடித்துக் கொண்டு அழுதான். தன்னால் தான் அப்பட்ஹான்ஸ் உயிரிழக்க நேர்ந்தது என்று சந்தேகமில்லாமல் தெரிந்தது. எல்லையற்ற ஆனந்த சாகரத்தின் கரையிலே நின்றிருந்த அவர் அதிலே இறங்க முடியாமல் செய்து விட்டான். சைத்தானின் சூழ்ச்சி என்று எண்ணி அத்தேவவனத்தையும், அத்தேவ ஆனந்தத்தையும் அழித்து விட்டார். பாபிதான் அவன். கிண்ணத்திலே தேவமது, தேவாம்ருதம் நிரம்பியிருந்தது. அதை அவர் கையில் அந்த வினாடியில் அவர் கையிலிருந்த கிண்ணத்தைத் தட்டி விட்டான் சிஷ்யன். பாபிதான் அவன் சந்தேகம் என்ன?
அப்பட்ஹான்ஸினுடைய சடலத்தை ஊவிட் மடத்துக்குத் தூக்கிச் சென்றார்கள். உடலைக் கழுவிக் கிடத்த முயலும் போது அவர் வலது கை மூடியிருப்பதை சிஷ்யர்கள் கண்டார்கள். சாகும் சமயத்தில் அவர் கையில் ஏதையோ பற்றிக் கொண்டிருந்தார் போலும். கையைப் பிரித்துப் பார்த்தபோது கைக்குள் இரண்டு கிழங்குகள் இருப்பது தெரிந்தது. சிறு கிழங்குகள், எந்த மாதிரியான செடியின் கிழங்குகள் அவை என்பது யாருக்கும் தெரியவில்லை.
கீயிங்கே காட்டுக்குள் அப்பட் ஹான்ஸுடன் போய் வந்த சிஷ்யன் அந்தக் கிழங்குகளைக் கொண்டு போய் அவருடைய தோட்டத்தில் ஊன்றி வைத்தான். அவை எப்படி முளைக்கின்றன. முளைத்துத் தழைக்கின்றன. பூக்கின்றன என்று பார்க்க வேண்டும் என்று தன் கையாலேயே தண்ணீர் விட்டு தினம் தினம் கவனித்து வந்தான். பூக்குமா, பூக்காதா என்று கூடத் தெரியவில்லை. அது வளமாகக் கூட வளரவில்லை. வஸந்தம் வந்து போயிற்று. கோடை வந்து போயிற்று. அடுத்த மாரிக்காலமும் வந்தது. அப்பட் ஹான்ஸினுடைய தோட்டத்திலிருந்த செடி கொடிகளெல்லாம் அழிந்து விட்டன. அழுகி விட்டன. சிஷ்யன் கூட இப்பொழுதெல்லாம் தோட்டத்திற்குள் போவதில்லை. என்ன இருக்கப் போகிறது என்ற சிந்தனை போலும்.
சரியாக ஒரு வருஷம் கழிந்து விட்டது. மறுநாள் விடிந்தால் கிறிஸ்துமஸ். அப்பட்ஹான்ஸுடன் தான் கீயிங்கே வனத்துக் போய் வந்தது பற்றி அன்று சிஷ்யனுக்கு ஞாபகம் வந்தது. புனிதமான தன் குருவைப் பற்றிய ஞாபகங்களைத் தனிமையில் அவருடைய தோட்டத்தில் அனுபவிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் அவன் தோட்டத்திற்குள் சென்றான். அங்கு ஓர் அபூர்வமான விஷயம் அவன் கவனத்தைத் கவர்ந்தது. அப்பட்ஹான்ஸ் கையில் இருந்த கிழங்குகளை நட்டிருந்த இடத்தில் ஏதோ ஒரு செடி முளைத்திருந்ததைக் கண்டான். பச்சைப்பசேலென்ற இலைகளுடன் அது வளர்ந்திருந்தது. வியப்பான விஷயம்தான். தேவ வனத்திலிருந்தது வந்த அந்த கிழங்கு கிறிஸ்து பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக இப்பொழுது முளைத்து இலைகள் விட்டிருக்கிறது. அற்புதமாகப் பூத்தாலும் பூக்கும் என்று எண்ணும் போது சிஷ்யனின் மெய்சிலிர்த்தது. அதே வினாடி அந்தச் செடியிலே அழகான புஷ்பங்கள், வெள்ளியும் தங்கமுமாக மலர்ந்து கண்ணை மயக்கின.
ஓட்டமும், நடையுமாகப் போய் மடத்திலிருந்த மதகுருமாரையும், சிஷ்யர்களையும் கூப்பிட்டுக் கொண்டு வந்தான். அக்காலத்தில் முளைத்துத் தழைத்து மலர்ந்திருந்த அந்தச் செடியைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியத்தில் அழுந்தினார்கள். உலகத்திலே வேறு எங்கும் இல்லாத அதிசயம் அது. தேவவனத்திலிருந்து அப்பட்ஹான்ஸ் தன் உயிரையும் கொடுத்துக் கொண்டு வந்திருந்த அந்த தேவ மலர்ச்செடியை வணங்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றிற்று. அந்தச் செடியில் பூத்திருந்த சில மலர்களைப் பறித்துக் கொண்டு போய் ஆர்ச் பிஷப்பு அப்ஸலனிடம் கொடுக்க வேண்டும் என்று அப்பட்ஹதக்ஸினுடைய சிஷ்யனுக்குத் தோன்றிற்று. ஆர்ச் பிஷப்புக்கும், அப்பட் ஹான்ஸீக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் அவனுக்குத் தெரியும். ஆகவே நேரே ஆர்ச் பிஷப்பண்டை போய் அந்த மலர்களைக் கொடுத்து விட்டு அவன் சொன்னான்.
“அப்பட் ஹான்ஸ் இந்த மலர்களை உங்களிடம் அனுப்பி இருக்கிறார். போன கிறிஸ்துமஸ் அன்று கீயிங்கே வனத்தில் அப்பட் ஹான்ஸ் பறித்துத் தங்களிடம் கொடுக்க வேண்டுமென்று எண்ணியவை இவைதான்.
நடு மாரியில், புல் பூண்டெல்லாம் செத்து அழுகிக் கிடக்கையில், மலர்ந்த அத்தேவ மலர்களை ஆச்சரியத்துடன் பார்த்தார் ஆர்ச் பிஷப்பு அப்ஸலன். அப்பட் ஹான்ஸினுடைய சிஷ்யன் சொன்ன வார்த்தைகளையும் கவனித்தார். ஏதோ ஒரு விந்தையைக் கண்டவர் போலப் பிரமித்து நின்றார். நீண்ட நேரம் மௌனமாக இருந்தார். பின்னர் சொன்னார்.
“தான் கொடுத்த வாக்கை அப்பட் ஹான்ஸ் நிறைவேற்றி விட்டார். நானும் என் வாக்கைக் காப்பாற்றி விடுகிறேன்“, என்றார் ஆர்ச் பிஷப். உடனே தன் குமாஸ்தாவைக் கூப்பிட்டு மன்னிப்புக் கடிதம் எழும்படி உத்தரவிட்டார். திருடன் மீண்டும் மனிதர்களிடையே மனிதனாக நடமாடலாம். அவன் செய்திருந்த குற்றங்களெல்லாம் மன்னித்தாகி விட்டது என்று விளம்பரம் செய்யச் சொன்னார். மன்னிப்புக் கடிதத்தை மலர்களைக் கொண்டு வந்த சிஷ்யனிடம் கொடுத்து அனுப்பினார்.
காலந்தாழ்த்தாமல் அன்றிரவே சிஷ்யன் புறப்பட்டுத் திருடனைத் தேடிக் கொண்டு கீயிங்கே காட்டுக்குப் போனான். கிறிஸ்துமஸ் தினத்தன்று அதிகாலையில் திருடனுடைய குடிசையை அடைந்தான். அவனைப் பார்த்தவுடன் திருடன் கோபமாகக் கையில் ஒரு கோடாலியைத் தூக்கிக் கொண்டு வந்தான்.
“உன்னையும், மடத்தைச் சேர்ந்த உன்னைப் போன்றவர்களையும் வெட்டிக் கண்டதுண்டமாக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. நீங்களும் கிறிஸ்தவர்களா?“ மேலும் சொன்னான், “உன்னால்தான் நேற்று இரவு இவ்வனத்தில் வழக்கம்போல் கிறிஸ்துமஸ் மலர்கள் மலரவில்லை.
“என்னால் தான் என்று ஒப்புக்கொள்கிறேன். நான் செய்த தவறுதான் அது. நான் செய்த தவறுக்காக நான் என் உயிரைக் கொடுக்கவும் தயாராகவே இருக்கிறேன். ஆனால் நான் சாவதற்கு முன் ஒரு காரியம் உங்களிடம் சொல்ல வேண்டும். அப்பட் ஹான்ஸிடமிருந்து வந்திருக்கிறேன்“ இப்படிச் சொல்லிக் கொண்டே அவன் ஆர்ச் பிஷப்பினுடைய மன்னப்புக் கடிதத்தை திருடன் கையில் கொடுத்தான். இனிமேல் திருடன் யாருக்கும் பயந்து காட்டில் ஒளிந்து கொள்ள வேண்டியதில்லை என்று தெரிவித்தான். இனிமேல் நீயும், உன் மனைவியும், உன் குழந்தைகளும் காட்டிலே தனியாகக் கிடந்து அவஸ்தைப்பட வேண்டியதில்லை. மற்றவர்களைப் போல நீயும் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடலாம். கோயிலுக்குப் போகலாம். மனிதனாகி விட்டாய் நீ – அப்பட் ஹான்ஸின் முயற்சியால் மீண்டும். சாகும்போதுகூட அவர் உன்னை மறக்கவில்லை.
திருடனுக்கு நம்பிக்கை வரவில்லை. வெகுநேரம் ஸ்தம்பித்துப் போய் அப்படியே நின்றான். முகம் முதலில் வெளிரிட்டது. பின்னர் இரத்தமேறிச் சிவந்தது. என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தான். திருடனுக்குப் பதில் அவன் மனைவிதான் கடைசியில் அளித்தாள்.
“அப்பட் ஹான்ஸ் தன்னுடைய வார்த்தையைக் காப்பாற்றி விட்டார். என் கணவனும் தன் வார்த்தையைக் காப்பாற்றுவான். அவன் இனித் திருடமாட்டான். மனிதர்களிடையே யோக்கியனாக வாழுவான் என்றாள்.
திருடனும், திருடனுடைய மனைவியும், குழந்தைகளும் அக்கணமே குடிசையை விட்டு நகருக்குப் புறப்பட்டனர். அவர்கள் போன பின் அப்பட் ஹான்ஸினுடைய சிஷ்யன் அங்கே நடுக்காட்டில் குகையில் குடியேறினான். தான் செய்த பாபத்துக்கெல்லாம் பிராயச்சித்தம் செய்ய விரும்பினான் அவன். தன் காலத்தை சிந்தனையிலும், பிரார்த்தனையிலும் கழித்தான். தவம் செய்தான்.
ஆனால் கீயிங்கே காட்டிலே அதற்கப்புறம் எந்தக் கிறிஸ்துமஸ் எவ்விதமான மாறுதலும் நேருவதில்லை. அதற்குப் பிறகு தேவவனம் யார் கண்ணிலும் பட்டதில்லை. அத்தேவவனத்தின் ஞாபகர்த்தமாக இப்போது இருப்பதெல்லாம் ஊவிட் மடத்திலே அப்பட் ஹான்ஸினுடைய தோட்டத்திலே உள்ள அந்த ஒரு செடிதான். அந்தச் செடிக்கு கிறிஸ்துமஸ் ரோஜாச்செடி என்றும், அதில் பூக்கும் பூக்களை தேவமலர்கள் என்றும் ஜனங்கள் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு வருஷமும், அச்செடி கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்திய இரவு பூக்கிறது. நடுமாரிக்காலத்திலே உலகத்தில் மற்றெல்லாச் செடிகளும் இலைகள்கூட இல்லாமல் அழிந்துபோய் நிற்கும் சமயத்திலே அது பசேலென்று இலை தளிர்த்து வெள்ளேரென்று பூக்கிறது. உண்மையிலே அது தேவமலர் தான்.
*********
நன்றி: தட்டச்சு செய்த அகநாழிகைக்கும், பிழை திருத்தம் பார்த்த கேவிஆர்க்கும் .
தகவல்: அச்சு வடிவில் வாசிக்க விரும்புவோருக்கு, வெளிவரவிருக்கும் அகநாழிகையில் மீள்பிரசுரமாக வரவுள்ளது.
நன்றி: விமலாதித்த மாமல்லன்
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
3 கருத்துகள்:
இக்கதை இவ்வளவு நாட்களாக அழியாச்சுடர் தளத்தில் வெளிவராமல் இருந்தது ஆச்சரியம்தான்!!!
அற்புதமான கதை. தட்டச்சு செய்த கரத்திற்கும், கதையைப் வெளியிட்ட இதயத்திற்கும் கோடி நன்றிகள்.
அருமையான கதை.
அழியாச்சுடர்களின் பணி தொடர வாழ்த்துகள்
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.