Apr 2, 2017

விடிவதற்கு முன் - அசோகமித்திரன்

பங்கஜத்துக்கு முத்துவை எழுப்புவதற்கு வேதனையாகத் தான் இருந்தது. ஒன்றுக்குள் ஒன்றாக நான்கு பிளாஸ்டிக்வாளிகளை எடுத்து வந்து வாசல் படியில் வைத்தாள். இனியும் தாமதிக்க முடியாது என்று தீர்மானித்து, "முத்து, முத்து' என்று அழைத்தாள்.

முத்து படுக்கையில் அசைந்து கொடுத்தான். "முத்து, எழுந் திரு. என் கண்ணோல்லியோ" என்றாள். அவ்வளவு இருட்டிலும் அவன் ஒருமுறை கண் விழித்துப் பார்த்தது அவளுக்குத் தெரிந்தது.

"இதுக்குள்ளே தண்ணீ வந்திருக்காதும்மா” என்று முத்து சொன்னான்.

"வந்துடும்டா, கண்ணு. தெருக்காரா எல்லாரும் போயிட்டா.
நன்றி விகடன்
இப்போவே போனத்தான் இரண்டு மணிக்காவது தண்ணீ பிடிச்சுண்டு வந்து கொஞ்சம் கண்ணசரலாம்."

"நீ போய் பக்கெட்டை வைச்சுட்டு வாம்மா. நான் இதோ வந்துடறேன்."

பங்கஜம் வாசல் கதவைத் தாளிடாமல் வெறுமனே சாத்தி விட்டுத் தெருவுக்கு வந்தாள். ஒரு தெரு விளக்கும் எரியாது போனாலும் வீட்டை விட வெட்ட வெளியில் கண் நன்றாகத் தெரிந்தது. விறுவிறுப்பாகப் பல உருவங்கள் வந்து போய்க் கொண்டிருந்தன.

பங்கஜம் சாலையைக் கடந்து எதிர் சாரியில் மூடிக்கிடந்த பல கடைகள் நடுவே மறைந்து கிடந்த ஒரு குறுகலான சந்துக்குச் சென்றாள். சந்து இடைவெளியில் காலி வாளியே இருமுறை பக்கத்துச் சுவரில் இடித்தது. சந்து ஒரு வீட்டின் முற்றத்தில் முடிந்தது. அந்த இருட்டிலும் அங்கு டஜன் கணக்கில் தவலைகளும், வாளிகளும் பரத்தி வைத்தது தெரிந்தது. சுவரோரமாகப் பதித்து வைத்திருந்த தண்ணீர் பம்பு அருகே நான்கைந்து ஆண்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் பங்கஜத்தைப் பார்த்து, "இனிமே இங்கே வராதீங்கன்னு போன தடவையே சொன்னேனே?" என்றார்.

"இன்னிக்கு மட்டும் தயவு பண்ணுங்க. நாளைக்கு வேறே இடத்துக்குப் போறேன்” என்று பங்கஜம் சொன்னாள்.

"இங்கே வீட்டிலே இருக்கிறவங்களுக்கே தண்ணீ பத்தலே. சும்மா சும்மா வந்து கூட்டம் கூடினா!"

பங்கஜம் பதில் சொல்லாமல் நின்றாள். "பக்கெட்டை வைச்சுட்டு வெளியே நில்லுங்க தண்ணீ வந்தா உள்ளே வந்துக்கலாம்."

பங்கஜம் வாளிகளை ஒரு மூலையில் வைத்துவிட்டு மீண்டும் சாலைக்கு வந்தாள். நட்ட நடுநிசியில் அப்படிச் சாலையோரமாக நிற்பது அவளுக்கு அசாதாரணமாகத் தோன்றாமல் போய் மாதக் கணக்கில் ஆயிற்று.

கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் கிடப்பது சாதாரணமாக இருந்தது. குழாய்த் தண்ணீர் ஒருநாள் விட்டு ஒருநாள் வருவதாகப் பேச்சு. ஆனால் வீட்டுக் குழாயில் வராது. எங்கே வருகிறதென்று தேடிப் பிடித்து அது வரும் இரு மணி நேரத்தில் பரபரக்க ஏராளமானவரோடு தேவையற்ற துவேஷம் வளர்த்து இரு பாத்திரங்களில் வண்டலும் வடிசலுமாகத் தண்ணீர் பிடித்து எடுத்து வந்தால் இரு நாட்களுக்கு அதைச் சமையலுக்கும் வைத்துக் கொண்டு குடி தண்ணீராகவும் கொட்டிக்கொள்ள வேண்டும். இன்றிரவு இங்கு ஒரு வழியாகச் சமாளித்தால் நாளை மறுநாள் இப்படி நடுத் தெருவில் அலைய மனதைத் திடப் படுத்திக் கொண்டால் போதும்.

நடைபாதை ஒரக்கல்லிலும் இன்னும் பலர் காத்துக் கிடந்தார்கள். அங்கு சாதாரணமாகக் கிடைக்கும் அசுத்தத்தில் பகல் வெளிச்சத்தில் நிற்கக் கூட அருவருப்பாயிருக்கும்.

தொளதொளவென்று ஒரு சட்டையை ஒழுங்காகப் பொத்தான் கூடப் போடாமல் முத்து வந்து சேர்ந்தான். பங்கஜம் முத்துவைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். "குழந்தை தூங்கிண்டு இருக்காளா?” என்று கேட்டாள்.

"நான் பார்க்கலேம்மா. ஆனா அவ அழலே" என்று முத்து சொன்னான்.
"கதவைச் சாத்திண்டுதானே வந்திருக்கே?"

"ஆமாம்."

"நீ இங்கேயே நில்லு, நான் தவலையை எடுத்துண்டு ஐஸ் டெப்போலே ஒரு தடவை தண்ணீபிடிச்சுண்டு வந்துடறேன்."

"இங்கே தண்ணீ வந்துடுத்தா?” "இன்னும் வரலே. வீட்டுக்காரா இப்போதான் பம்பை மாட்டிண்டு இருக்கா"

பங்கஜம் சாலையைக் கடக்கவிருந்தவள் சட்டென்று நின்றாள். அசாத்திய வேகத்தில் ஒரு லாரி அவளைக் கடந்து சென்று மறைந்தது. அதை அடுத்து இன்னும் ஒரு காரும் மோட்டார் சைக்கிளும் பறந்து சென்றன.

பங்கஜம் முத்துவைக் கவலையோடு திரும்பிப் பார்த்தாள். பிறகு அவள் வீட்டுக்கு ஒட்டமும் நடையுமாகப் போனாள். தெருவில் அப்போதுதான் யாரோ கைவண்டியில் எங்கிருந்தோ தண்ணீர் பிடித்துக் கொண்டு போயிருக்கிறார்கள். சிந்திய தண்ணீர் தெரு நடுவில் பட்டையாகக் கோடிட்டிருந்தது.

போட்ட படுக்கைக்குச் சம்பந்தமே இல்லாமல் சம்பா தரையில் தூங்கிக் கொண்டிருந்தாள். பங்கஜம் அவளைத் தூக்கவில்லை. படுக்கையில் கிடக்கும் போது குழந்தை விழித்துக் கொண்டால் என்ன செய்வது? பெரியவர்களைப் போலக் குழந்தையும் ஒருநாள் விட்டு ஒருநாள் தூங்கக் கற்றுக் கொள்ள வில்லை.

பங்கஜம் தண்ணீர்த் தவலையுடன் ஒரு வெண்கலப் பானையையும் தூக்கிக் கொண்டு மீண்டும் தெருவுக்கு வந்தாள். எதை நம்பி இருட்டில் குழந்தையைத் தனியே விட்டுவிட்டு வீட்டையும் தாளிடாமல் போகிறோம்? கணவன் ஊரிலிருந் தாலும் இல்லாது போனாலும் இதுவரை தண்ணீருக்காக அவன் இன்னொருவர் வீட்டுக் கொல்லையில் நிற்கப் போகவில்லை. ஆனால் வீட்டுக்கும் குழந்தைக்குமாவது காவலாக இருக்கலாம்.

ஐஸ் டெப்போ காவல்காரன், "ஏய், எங்கே போறே?" என் றான். பங்கஜம் இடுப்பிலிருந்து கால் ரூபாய் சில்லரை எடுத்தாள். அவன் அதைக் கவனியாது போல, "போம்மா. போ போ போ. இன்னிக்கு ஒருத்தரையும் உள்ளே விட முடியாது. போ போ போ!' என்றான். அங்கு கூடியிருந்த கூட்டம் அவனிடம் கடுமையை உண்டு பண்ணியிருக்க வேண்டும். அதைப் பொருட் படுத்தாமல் எல்லா வயதுக்காரர்களும் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். பங்கஜமும் அவள் பங்குக்கு, "இன்னைக்கி ஒருநாள் மட்டுங்க” என்றாள். ஒருநாள் மட்டும், ஒரு நாள் மட்டும் என்றே எவ்வளவு நாட்களாகி விட்டன? இன்னும் எவ்வளவு நாட்கள் இப்படி?

முத்து அவளைத் தேடி வந்து விட்டான். "இன்னும் மூணு பேர் பிடிச்சப்புறம் நம்பதாம்மா" என்றான்.

"நாலு பக்கெட்டும் சரியா இருக்கா?”

"இருக்கு"

"நீ இங்கே நில்லு. நான் போய் தண்ணீ அடிச்சு வைச்சுட்டு உன்னைக் கூப்பிடறேன்."

"இந்த வெங்கலப் பானையை ஏம்மா எடுத்துண்டு வந்தே? இதிலே தண்ணீயும் ரொம்பக் கொள்ளலே, தூக்கறதும் கஷ்டமாயிருக்கே?"

"என்ன பண்றதுடா? பெரிய அடுக்கிலே நேத்திக்குத் துணி அலசின தண்ணீயைச் சேத்து வைச்சிருக்கேன்.”

முத்துவிடம் தவலையையும் வெண்கலப் பானையையும் ஒப்படைத்து விட்டு பங்கஜம் வாளிகளை வைத்திருந்த வீட்டுக்கு விரைந்தாள். அங்கு இப்போது அசாத்தியக் கும்பல் சேர்ந்திருந்தது. "இப்போ வந்துட்டு எங்கே உள்ளே போறே? நாங்கள்ளாம் உனக்கு மனுஷாள்களாத் தெரியலியா?" என்று ஒரு கிழவி பங்கஜத்தைத் தடுத்தாள்.

"பன்னெண்டு மணிக்கே நான் வந்து பாத்திரம் வைச் சிருக்கேன்."

கிழவி சந்தேகத்துடன் பங்கஜத்தைப் பார்த்தாள். பங்கஜம் அந்தக் கும்பலில் அந்தக் குறுகலான சந்துக்குள் முன்னேறிச் சென்றாள்.

அந்தச் சாலையில் தண்ணீர் வந்த ஐந்தாறு வீடுகளில் அந்த ஒரு வீட்டு பம்பில்தான் சிறிது அதிகமாக வரும். ஆதலால் தண்ணீர் பிடிக்க வருபர்களும் அங்குதான் அதிகம். பம்பு அருகே நின்றவர்களுடன் பங்கஜமும் முண்டியடித்துக் கொண்டு தன் முறைக்குக் காத்திருந்தாள். தண்ணீர் இன்னும் சிறிது நேரமே வரும் என்ற உணர்வில் ஒருவர் தவறாமல் பம்புப் பிடியை அரக்கத்தனமாக இயக்கிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு அடியும் சம்மட்டியடி போல ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது. பங்கஜத்துக்கு முந்தைய இடத்தில் பாத்திரம் வைத்திருந்த அம்மாள் தலைப்பை இழுத்துச் சொருகிக் கொண்டு தயாராக இருந்தாள். அவள் முறை வந்ததும் பங்கஜமே அந்த அம்மாளுடைய தவலையைப் பம்படியில் நகர்த்தி வைத்தாள். அதைத் தவலை என்பதைவிட வேறு பெயர் ஏதாவதுதான் சொல்ல வேண்டும். அது நிரம்பினால் எப்படி நகர்த்துவது என்று ஒரு கணம் பங்கஜத்துக்குப் பயம் எழுந்தது. பாவம், அந்த அம்மாள் வீட்டில் எவ்வளவு நபர்களோ? ஆனால் ஒருவர்கூட அவளுக்குத் துணை வரவில்லை.

தவலை பாதி நிரம்பியபோது அந்த அம்மாள் திரும்பித் திரும்பிப் பார்த்த வண்ணம் இருந்தாள். தவலைக்குப் பிறகு இன்னும் நான்கு பெரிய அடுக்குகள். அதன் பிறகு பங்கஜத்தின் முறை.

இரண்டாம் அடுக்கு நிரம்புவதற்குள் அந்த அம்மாளுக்குப் பெரிதாக மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கத் தொடங்கியது. பம்பு அடிப்பதிலும் கை தடுமாறியது, "நான் அடிக்கறேன். நீங்க பாத்தி ரத்தை நகர்த்துங்க" என்று சொல்லிப் பங்கஜம் பம்ப் பிடியை வாங்கிக் கொண்டாள். பம்பைச் சுவரில் பதித்து வைத்திருந்ததால் ஒரே பக்கமாக ஒரே கையில்தான் அடிக்க முடியும். நிதானமாக அடித்தாலே ஒரு பாத்திரத்திற்குள் கை சளைத்துவிடும்.

பங்கஜம் அந்த அம்மாளின் பாத்திரங்கள் அனைத்திற்கும் தண்ணீர் அடித்துத் தந்துவிட்டுத் தன் வாளியை நகர்த்தி வைத்தாள். அங்கு நின்றிருந்த ஒருவர், "ஒருத்தரே அண்டா அண்டாவாத் தண்ணீர் எடுத்துப்போனா மத்தவங்க என்ன பண்ணுவாங்க?" என்று சொன்னார். மூச்சிறைக்கப் பங்கஜம், "இதுதான் என்னுது முதல் பாத்திரம்” என்றாள்.

அந்த நபர், "யோவ், சந்தானம்! இங்கே என்ன கேள்வி கேப்பாரு யாருமில்லே? இந்தப் பொம்பளைங்க இப்படி ஒரேயடியா பம்பைப் பிடிச்சு வளைச்சிட்டிருக்காங்களே! விடும்மா, நாங்களும் தண்ணீ பிடிக்கத்தான் மணிக்கணக்கா நின்னுட்டிருக்கோம்” என்றார்.

தண்ணீர் நிரம்பிய அடுக்குகளை எடுத்துப் போய்க் கொண்டிருந்த அம்மாளிடம் பங்கஜம், "நீங்கதான் அவர்கிட்டே சொல்லுங்கம்மா" என்றாள்.
அந்த அம்மாள் அந்த நபரிடம், "அவுங்க இன்னும் பிடிக்க வேல்லப்பா" என்றாள்.

"ஆமாம், இதுல கூட்டு"

பங்கஜத்தின் தோளே கழண்டுவிடும் போல இருந்தது. இன்னும் மூன்று வாளிகள் அடித்தாக வேண்டும். கொண்டு வந்த வற்றில் முழுக்கத் தண்ணீர் எடுத்துக்கொண்டு போனால்கூட இரண்டாம் நாள் மாலையில் எல்லாம் காலியாகிக் கிடக்கும்.

அரிசியைச் சரியாகக் களைய முடியாது. சட்டென்று யாராவது ஊரிலிருந்து வந்து விட்டால் முகம் கழுவிக் கொள்ள ஒரு செம்புத் தண்ணீர் தரமுடியாது. மறுநாள் சுத்தமான வேஷ்டி புடவை வேண்டும் என்றால் துணி நனைத்து உலர்த்த முடியாது.

பங்கஜம் அவளுக்கு ஞாபகமிருந்த தோத்திரங்களை மனதுக்குள் சொல்லிக் கொண்டு பம்பை அடித்தவண்ணம் இருந்தாள். ஒருமுறை கூட ஒரு தோத்திரத்தைக் கூட முழுக்கச் சொல்ல முடியவில்லை. அங்கு விரலிடுக்கு இடமில்லாமல் நிறைந்திருந்த மக்களும் பாத்திரங்களும் அவளுடைய கண்ணில் மிக இலேசான நிழலாகத் தென்பட்டதுபோலத் தோத்திரங்களும் ஒரே குழப்பமான குவியலாக வந்து போய்க் கொண்டிருந்தன. லலிதா சகஸ்ரநாமத்தில் செளந்தர்யலகரி நடுவே கிருஷ்ணாஷ்டகம், பித்துக்குளி முருகதாஸ் பஜன் பாட்டு. அம்மா! அம்மா! அம்மா!

பங்கஜத்துக்கு அம்மாவென்று கத்தியழைக்கக்கூட முடியாது போலத் தோன்றிற்று. அவளுடைய கை ஏதோ தனிப்பட்டுப் போனது போல ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. மார்பு எவ்வளவு கனத்ததோ அந்த அளவு மனம் காலியாக இருந்தது. அவள் அவளே இல்லை. அவள் வேறு யாரோ. வேறு யாரோ என்று சொல்வது கூடத் தவறு. வேறு ஏதோ மூன்றாவது வாளி அடிக்கும் போது முத்து வந்துவிட்டான். ஐஸ் டெப்போவில் என்ன ஆயிற்று என்று கேட்கக்கூட முடியாமல் பம்புப் பிடியை பங்கஜம் முத்துவிடம் கொடுத்தாள். அவன் கையால் அடிக்க முடியாமல் இரு கைகளாலும் பிடியைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் தன் முழு உடலையும் உயர்த்தி அடித்தான்.

பங்கஜம் ஒவ்வொரு வாளியாகத் தூக்கிச் சாலை நடைபாதையில் கொண்டு போய் வைத்தாள். அங்கே இன்னும் எவ்வளவோ பேர் தண்ணீர் பிடித்ததும் பிடிக்காததுமாகப் பாத்திரங்களையும் வாளிகளையும் வைத்திருந்தார்கள். ஆண்கள் சைக்கிள்களில் எப்படியெல்லாமோ குடங்களையும், தவலைகளையும் கட்டித் தொங்க விட்டுக் கொண்டு அலைந்து கொண்டிருந்தார்கள். ஊரே வெறி பிடித்தது போலக் குழாய்த் தண்ணீருக்கு அலை பாய்ந்து கொண்டிருந்தது.

பங்கஜத்துக்கு அடிவயிற்றில் சுளிரென்று ஒருமுறை வலித்தது. போன தடவையும் இப்படித்தான் வலி வந்து தெருவிலேயே சுருண்டு விழுந்திருந்தாள். சம்பா பிறந்தவுடனே அவளது கணவன் ஆஸ்பத்திரியில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான். ஆபரேஷன் ஆனபோது பெரிய தொந்தரவு இருக்கவில்லை.
                                                                                                                    ஆனால் இப்போது இரண்டு வருடங்கள் கழித்து வலி வரத் தொடங்கியிருக்கிறது. பெரிதாகிப் போய் படுத்த படுக்கையாகத் தள்ளி விடக்கூடாது.

கிடைசி வாளி அடித்துவிட்டுத் தூக்கமாட்டாமல் அதைச் சிறிது சிறிதாக நகர்த்திக் கொண்டு முத்துவும் நடைபாதைக்கு வந்து சேர்ந்தான். அவனுக்கும் வயிற்றை வலிக்கும். ஹெர்னியா என்று சொல்லிப் போன வருஷமே ஆபரேஷன் செய்ய வேண்டு மென்று டாக்டர் சொன்னார். சொன்னவர் பயமுறுத்திச் சொல்லியிருந்தால் ஒரு வேளை உடனே ஏதாவது செய்திருக்க லாம். பங்கஜம் முத்துவை அணைத்துக் கொண்டாள். நீ போடா வீட்டுக்கு. நான் ஒவ்வொண்ணாய்க் கொண்டு வந்துடறேன்" எனறாள.

'ஐஸ் டெப்போலே சாவித்திரிக்கிட்டே சொல்லிட்டு வந்திருக்கேன். அதையும் அடிச்சுட்டுப் போறேம்மா" என்று முத்து சொன்னான்.

"வேண்டாம்டா, கண்ணா. இது போறும். எப்படியாவது பார்க்கலாம்."

"அப்போ அங்கே போய்க் காலி பாத்திரத்தை எடுத்துண்டு போகட்டுமா?"

"இல்லை, நீ வீட்டுக்குப் போ. நான் எடுத்துண்டு வரேன்." பங்கஜம் ஒவ்வொரு வாளியாகச் சாலையைக் கடந்து மறு புறமிருந்த நடைபாதையில் கொண்டு போய் வைத்தாள். அங்கே ஒரு கன்றுக்குட்டி அவளருகே வந்தது. "போ, போ' என்று விரட்டினாள். அது நகராமல் அங்கேயே நின்றது. அடுத்த வாளி எடுத்து வர அவள் நகர்ந்தவுடன் அது நிச்சயம் தண்ணீரில் வாயை வைத்து விடும்.

பங்கஜம் மறுபடியும் அந்தக் கன்றுக்குட்டியை விரட்ட முயன்றாள். எந்தத் துவேஷமும் பாராட்டாமல் அது சொறிந்து கொடுக்க வாகாகத் தலையை உயர்த்தியது.

"சரி, குடி” என்று பங்கஜம் சொன்னாள். சாலை மறுபுறத்தில் வைத்திருந்த இதர பக்கெட்டுகளை எடுத்து வர விரைந்தாள். நாளை மறு நாள் இந்த அளவு தண்ணீராவது கிடைக்குமா என்று தெரியாது. ஆனால் இன்றையப் போது இதோடு முடிந்துவிட்டது. விடிய இன்னும் வெகு நேரம் இருந்துங்கூட.

1984
flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

9 கருத்துகள்:

kesavan on April 3, 2017 at 6:53 AM said...

வணக்கம்,இதில் ஆட்சேபணை எங்கிருந்து வந்தது,என்னை போன்றவர்களுக்கு நல்ல இலக்கியம் படிக்க வாய்ப்பு கிடைத்ததே.
நன்றி.

naanjil on April 4, 2017 at 6:27 PM said...

எளிய மக்களின் வாழ்க்கை சிக்கல்களை தெளிவாக எடுத்துரைக்கும் ப்டைப்பு.

பனுவல் மணம் on April 7, 2017 at 1:58 PM said...

தண்ணீர் வீண் செய்பவர்களுக்கு இந்த கதை ஒரு சவுக்கடி. என்ன கஷ்டம் என்றாலும் கன்று குட்டிக்கு தண்ணீர் விட்ட மனிதநேயம் இன்னும் அந்த எழைகளிடமே இருக்கிறது என்பது கசப்பான உண்மை. சுடு தண்ணீர் வைக்க தெரியும் என்று சொல்லும் நாகரீக பெண்களுக்கு பங்கஜம் ஒரு உதாரணம். பெண்மை போற்றுதல்.....

Suresh on November 19, 2017 at 8:46 AM said...

1982-89 கால கட்டத்தில் சிறுவர்களுக்கு தண்ணீர் பிடிப்பதும் பால் வாங்குவதும் முக்கிய மான வீட்டு வேலைகள். அருமை.

Unknown on October 10, 2018 at 2:39 PM said...

arumayana kathai katchigal ovondrum kanmun virindu kidakindrana. 7m vaguppu thunaipadathil idanai paditha ninaivugal

vignesh on March 20, 2019 at 8:31 PM said...

Ithu oru sirantha naval
Ithanai vaasikkaiyil situ vayathu ninaivoogal nenjil voosaladukirathu

Bala on July 23, 2019 at 11:33 PM said...

எனது நினைவுகளை 23 ஆண்டுகளுக்கு பின் கொண்டு சென்று விட்டது. அருமை!

ஜனார்த்தனம் க on June 11, 2021 at 7:37 PM said...

மனிதநேயம் வறட்சி காலத்திலும் மறையாது என்பதை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார் அசோகமித்ரன் ஐயா அவர்கள்.

பச்சை தங்கம் on June 20, 2021 at 6:24 AM said...

இலக்கியம் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு இந்த சிறுகதை எடுத்துக்காட்டு.
80களின் சென்னை தட்டுப்பாட்டையும் மனிதர்களின் மனிதநேயத்தையும் ஒருங்கே வரலாற்று ஆவணமாக ஆக்கிவிட்டார் அசோகமித்திரன்

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்