Mar 30, 2011

நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை- பவா செல்லதுரை

நடுநிசியைத் தாண்டிய மூன்றாம்ஜாமத்தில், அசைவற்றுப் புதருக்குள் பதுங்கியிருந்து, திடீரெனப் பிரவேசிக்கும் ஒரு துஷ்டவிலங்கைப் போல, ஊமையன் எங்கிருந்தோ அத் தெருவுக்குள் நுழைந்தான். அசைவற்றுக்கிடந்த அத்தெருவின் உறக்கம் அவன் எதிர்ப்பார்த்ததுதான். இத்தெரு வீடுகள் ஒவ்வொன்றும் எப்போதோ அவனுக்குள் பதிவாகியிருந்தன. தெரு மனிதர்களின் முகம், வயது, நிறம், குழந்தைகள் குறித்த விபரங்களைப் பத்து பதினைந்து வருடங்களின் தொடர்ச்சி அவனுக்குள் ஏற்றியிருந்தது.bava_chelladurai

எங்கிருந்து ஆரம்பிக்க?

யோசனை அறுபட ஆறேழு நாய்களின் திடீர் குரைப்பொலி காரணமானது. நிதானித்து, குரைத்த நாய்களைச் சமீபித்து பார்வையால் துளைத்தான். பழக்கப்பட்ட மனித வாசனையால் கட்டுண்டு நாய்கள் குரலடங்கி அகன்றன. உறுதிப்படுத் தலுக்காகத் திரும்பிப் பார்த்து அவன் நின்ற முதல் வீடு நிறைமாத கர்ப்பிணியான மேரிவில்லியம்ஸின் முல்லைப் பந்தல் விரிந்த ஓட்டுவீட்டு வாசல்.

ஒரு விநோத ஒலியெழுப்பி அவன் பேசினான். அச்சமெழுப்பும், ம் ... ம் ... ம் ... என்ற ஒலி, ஒரு அபஸ்வரம் மாதிரி அந்த அமைதியைக் குலைத்து ஒலித்தது.

திகிலுற்றெழுந்த மேரி அவ்வொலியின் முழு அர்த்தத்தை உள்வாங்கினாள். குறட்டைவிட்டுத் தூங்கும் தன் கணவனை நெருங்கிப் படுத்தாள். அவனுக்குள் பதுங்கி, அவன் உஷ்ணத்தை உணர்ந்து தன் மீது படரும் இந்த நச்சுப் பாம்பை உதறிவிட எத்தனித்துத் தோற்றாள். முழிப்புத்தட்டி, எழுந்து படுக்கையில் குப்புற உட்கார்ந்து கொண்டாள். எழுந்து விளக்கைப் போடவும் அச்சம் அனுமதி மறுத்தது.

ம் ... ம்ம் ... ம்ம் ... ஒலியுடன் ஊமையன் விளையாடிக் கொண்டிருந்தான்.

வார்த்தைகளற்ற தன் ஒலி உள்ளே ஒருத்தியின் உடம்பை நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் என்பதை அறிந்தவனாகவோ ... அல்லது அறியாதவனாகவோ...

ஒலியினுள் புதைந்திருந்த வார்த்தைகள் மேரி வில்லியம்ஸ÷க்கு ஒரு ரகசியத்தைப் போல நுட்பமாகப் பதிந்தது.

’இந்தக் குழந்தையும் உனக்குத் தங்காது’

பட்டாம்பூச்சிகள் பறந்து திரிந்த அவள் கனவின் மீது ஊமையன், எரியும் கொள்ளிக்கட்டையை வீசியிருக்கிறான். தீ எங்கிருந்து வேண்டுமென்றாலும் பற்றலாம்.

இருட்டுக்குப் பழக்கப்பட்ட கண்களினூடே, ஆட்டுக் குட்டியை மார்பில் அணைத்து நிற்கும் இயேசுவின் புகைப்படத்தை வெறித்துப் பார்த்தாள். கொஞ்சம் தெரிந்தும் தெரியாமலும், இயேசுவும் ஆட்டுக்குட்டியும் போக்குக் காட்டினார்கள்.

தெரு நுனியிலிருந்து ஊமையனின் ஒலி சப்தம் இன்னமும் கேட்டுக்கொண்டிருந்தது. அச்சத்தத்தைக் கேட்க திராணியற்று உட்கார்ந்த வாக்கில் தன் இரண்டு முட்டி கால்களுக்கிடையே முகம் புதைத்துக்கொண்டாள். அந்த அடர்த்தி அவள் அழுகையைக் கட்டுப்படுத்தப் போதுமானதாயில்லை.

பெத்தலகேமில் பிறந்தவரை போற்றித் துதி மனமே - நீ பெத்தலகேமில் பிறந்தவரை போற்றித் துதி மனமே ...

என்ற கீர்த்தனைப் பாடல் ட்ரம்ஸ் சத்தத்தில் மெருகேறி, அந்த இரவின் தனிமையையும், குளிரையும் துரத்தி அடித்தது. மார்கழியில் பதினைந்து நாட்களுக்குத் தொடரும் இப்பஜனைப் பாடல்கள் சபைத்தெருவை கிருஸ்மஸ் கொண்டாட்டங்களுக்குத் தயார்ப்படுத்தும். பெருகும் ட்ரம்ஸ் சத்தம் குழந்தைகளை பஜனைக் குழுவை நோக்கி இழுக்கும் தூண்டில்கள். மப்ளர் சுற்றிப் பனியில் நனைந்து, விடியலைப் பார்த்து, யார் வீட்டிலாவது குடித்த கறுப்பு காப்பி சுவையுடன் திரும்பும் குழந்தைகளுக்கு அன்றிரவு வரை இக்கொண்டாட்டங்கள் மனதைவிட்டகலாது. யார் தலையிலாவது சுமக்கப்படும் பெட்ரோமாக்ஸ் விளக்கொளி இச்சூழலை அப்படியே காப்பாற்றிக்கொள்ளும்.

அப்பாடலை நோக்கி அவள் மனம் நகர முயன்று தோற்றது. கடவுள், கணவன், ஊமையன், பாடல், புகைப்பட ஆட்டுக்குட்டி எதுவுமே பிடிக்காமல் போனது.

கை நிறைய சில்லறைக் காசுகளோடு பஜனைக் குழுவினரை வரவேற்கும் அவள் இயல்பு படுக்கையைவிட்டகலாமல் கிடந்தது. திறக்கப்படாத கதவின் முன் நின்று,

’தேவநாம சங்கீர்த்தன பஜனை

தேவா ... தேவா ... நித்யபிதா ஒருவருக்கே நமோஸ்தே ... நமோஸ்தே ...’

என்று குரலெழுப்பி அடுத்த வீட்டை நோக்கி நடந்தார்கள்.

குழுவின் சப்தத்தால் தூக்கம் கலைந்து புரண்டு படுத்த வில்லியம்ஸ், தன் மனைவி இப்படி குப்புற உட்கார்ந்திருந்ததை இயல்பெனக் கருதினாலும், அவளைத் தொட்டு முகத்தைத் திருப்பினான். அந்தச் சிவந்த முகத்தில் நீண்டநேர அழுகையின் படிதல்களைப் பார்த்து அதிர்வுற்றான்.

நீண்டநேர கெஞ்சல், அதட்டல், ஆறுதலுக்குப் பிறகு அவள் ஊமையனின் குறி சொல்லலைச் சொல்லி வெடித்தழுதாள். உள்ளுக்குள் அவனுக்கும் ஒரு பயமிருந்தும் அவளுக்குத் தெரியக்கூடாதெனக் கருதி, தைரியமானவனைப் போல

’அவனே நாக்கறுக்கப்பட்ட ஊமையன். பேச முடியாது. அவன் ஏதோ பிச்சை வாங்க உளறனதைப் போயி பெரிசுபண்ணி இப்படி அழறியே, நீ படிச்சு உத்யோகம் பாக்குற பொம்பளைதானே” என மெதுவானக் குரலில் அதட்டினான்.

”இல்லீங்க, கர்ப்பிணிங்க வீட்டு முன்னாடி அபஸ்வர குரலெழுப்பி அவன் சொன்ன அத்தனையும் பலிச்சிருக்கு, நகோமி டீச்சர் துவங்கி டெய்சி சித்தி வரை” என்று விட்டு விட்டுப் பேசினாள். ...

எங்கேயோ கேள்விப்பட்டதை ஒரு செய்தியாக உள்வாங்கியிருந்தவனுக்குத் தன் வீட்டிலேயே அது நிகழப்போகிறது என்பதை ஒரு செய்தியாக உணரமுடியவில்லை. துக்கத்தின் அடர்த்தி அவனையும் நெட்டித்தள்ளியது. எதுவுமற்றவனாக நடித்து தன் மனைவியைத் தேற்றி தைரியம் சொல்லித் தன் வார்த்தைகளின் உதாசீனத்தால் அவள் காயப்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தான். தன் நெருக்கமான ஸ்பரிசம் அவளைத் தேற்றுமென நம்பி, தனக்குள் புதைத்துக் கொண்டான். குளிரோடு துவங்கிய அன்றைய காலை அவர்களுக்கு முடிவின்றியே நீண்டது.

யாருமற்ற தனிமை பயத்தை வாயோடு கவ்விக்கொண்டு அவள் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தது. மீண்டும் தெருவில் கேட்ட ஊமையனின் குரல் நடுக்கமேற்படுத்தியது. கதவைத் திறந்து தெருவை வெறித்தாள். இரவு சொன்ன செய்திக்காக சேகரிக்கப்படும் பகல்நேர பிச்சையில் ஊமையன் மும்முரமாயிருந்தான். கதவுகளினூடான இடைவெளியில் நின்று, எதிர்வீட்டில் நிற்கும் அவனை முழுவதுமாக ஊடுருவினாள் மேரி.

நெடுநெடுவென வளர்ந்த தோற்றம். நல்ல சிவப்பு நிறம். தோல் சுருக்கங்களுக்கிடையே அவன் வயது முதிர்ந்து ஒளிந்திருந்தது. கலர் கலரான அழுக்கு உடைகளை உடம்பு முழுக்கச் சுற்றியிருந்தான். தோளில் மாட்டியிருந்த இரண்டு மூன்று பைகளில் ஒன்று நிரம்பியிருந்தது. கறுப்பு மையால் நெற்றியில் பொட்டிட்டு, பின்னணியில் ஆரஞ்சு கலர் சாந்து பூசியிருந்தான். யாரையும் கிட்ட நெருங்கவிடாத தோற்றம். கண்கள் உள் புதைந்திருந்தது.

சடேரென இவள் வீட்டுப்பக்கம் திரும்பி நின்று என்னமோ நிதானித்து, பின் நிராகரித்து அடுத்த வீட்டிற்கு நகர்ந்தான். கெட்ட செய்தி சொன்ன வீட்டில் தட்சணை என்ன வேண்டியிருக்கு? என்ற தர்மம் அவனுக்குள்ளும் நிரம்பியிருந்திருக்கலாம்.

இச்செய்கையில் மேலும் கலங்கினாள். நேற்றிரவு நடந்தது ஒரு துர்க்கனவு மாதிரியென நினைத்துத் துடைக்க முடியாமல் தன் சரீரத்தில் படிந்திருப்பதை உணர்ந்தாள். கதவை உட்பக்கம் தாழிட்டு படுக்கையறைத் திரைச் சீலையையும் இழுத்துவிட்டு அறையை இருட்டாக்கினாள். கட்டியிருந்த புடவையைத் தளர்த்தி கீழ்வயிற்றில் கைவைத்து குழந்தையின் அசைவை உணர்ந்து அதன் உயிர்ப்பை உறுதிப்படுத்தினாள். வயிற்றுச் சுருக்கங்கள் இழந்த இரு குழந்தைகளின் ஞாபகத்தை வடுக்களாக்கி வைத்திருந்தன.

தெரு கிருஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு தன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுத்திருந்தது. பெருகி வழியும் இசை சப்தம், அவ்வப்போது ஆலயத்திலிருந்து கேட்கும் எக்காள பாடல்கள், வீடுகள் பூசிக்கொள்ளும் புது வர்ணங்கள், வீடுகளில் தொங்கின கலர் கலரான நட்சத்திரங்கள், அமைக்கப்பட்ட குடில்கள், வந்து குவியும் வாழ்த்து அட்டைகள் எனச் சூழல் குதூகலமாகிக் கொண்டேயிருந்தது. எதிலும் ஆர்வமற்று ஒரு பிணம் மாதிரி கிடந்தாள் மேரி.

வில்லியம்ஸின் ஆறுதல்கள் பாறைகளில் விதைத்த விதை மாதிரி விரயமாகிக் கொண்டிருந்தன. அன்றிரவு கன்னிமரியாள் ஒரு கழுதையின் மீதேறி யோசேப்புடன் வரும் காட்சி அவள் கனவில் விரிந்தது. கன்னி மரியாளின் வயிற்றில் அசையும் ஒரு குழந்தையின் கருவை மேரி தேடினாள்.

ஏரோதின் பளபளக்கும் வாள் நுனியில் ஒட்டியிருந்த குழந்தைகளின் ரத்தத்துளி ஒன்று தன் முகத்தில் தெறிப்பதை உணர்ந்து திடுக்கிட்டு அலறினாள். நாடெங்கும் சிதறிக்கிடந்த குழந்தைகளின் தலையில்லாத முண்டங்கள் மீண்டும் மீண்டும் அவளுக்குமுன் நினைவுக்கு வந்துகொண்டிருந்தன.

தன் குழந்தையும் இப்படித்தான் அனாதையாகத் தெருவில் கிடக்குமா? அல்லது உத்தான தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுமா என்ற துக்கத்தின் வலி பொறுக்க முடியாமல் துடித்து துடித்து அடங்கினாள். அவளைத் தேற்ற வார்த்தைகளற்ற வில்லியம்ஸ் உள்மனப் புகைச்சலில் குமைந்து கொண்டிருந்தான்.

ஏரோது மன்னனின் போர்வீரர்களின் பூட்ஸ் ஒலிச் சத்தம் மிக சமீபத்திருந்தது. அக்கூட்டத்து வீரர்களின் முகங்களைத் தேடி அலைந்தாள். ஊமையன் போர்வீரர்களுக்கான உடையில், கொலைவெறி மின்னும் கண்களோடு போய்க்கொண்டிருந்தான். அவன் இடுப்புறையில் வாள் வெளியே துருத்திக் கொண்டிருந்தது தெரிந்தது. திடுக்கிட்டு எழுந்து ஜன்னலைத் திறந்து தெருவைப் பார்த்தாள். ஒரு கறுப்புப்பூனை மட்டும் எதிர்வீட்டு மதிற்சுவரில் உட்கார்ந்திருந்தது. தீயைப் போல ஒளிர்ந்த அதன் சிவப்புக் கண்களில் மரணம் ஒளிந்திருப்பதைப் பார்த்து பயந்து தன் அடிவயிற்றை மீண்டும் தடவிப் பார்த்துக் கொண்டாள். பஜனை சப்தமும், மனித நடமாட்டமுமற்ற தெரு இருண்டிருந்தது. தூரத்தில் இருட்டை விலக்கி ஒளிர்ந்து கொண்டிருந்த ஒரு நட்சத்திரம் தெரிந்தது. வான சாஸ்திரிகளுக்கு வழிகாட்டும் நட்சத்திரம் அதுதானென்று நம்பி கைகூப்பி வணங்கினாள். தன் வீட்டுப் பக்கம் அந்த நட்சத்திரம் திரும்பினால், தன் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்று நம்பினாள். நட்சத்திரம் எதிர்திசையில் மேகங்களுக்கிடையே நகர்ந்து கொஞ்ச நேரத்தில் மறைந்தது, மேரிக்கு இன்னும் பயத்தைத் தந்தது.

”என் குழந்தையைக் காப்பாற்றவும் ஒரு ரட்சகர் வேண்டும்”

என முட்டியிட்டு இறைந்து மன்றாடினாள். நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்குமான இடைவெளியைத் தன் மனதால் தொட்ட வண்ணம் அந்த இரவைக் கடந்தாள்.

கிருஸ்மஸ் வெகு சமீபத்திலிருந்தது.

இன்றைய இரவின் நகர்தலில் அதை அடையமுடியும். பகலுக்கான அவசியமின்றி தெரு இருட்டை மின்விளக்குகள் உறிஞ்சி வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தன. மார்கழிக் குளிர் பண்டிகைக்கால உற்சாகத்தைக் கொட்டிக்கொண்டிருந்தது. சீரியல் விளக்கொளியும், பெண்களின் ராமுழிப்பும், குழந்தைகளின் புதுத்துணி குதூகலமும், அடுத்தநாள் விடியல் ஒரு குழந்தையின் பிறப்பு உலகம் முழுக்க சந்தோஷத்தை அள்ளி கொட்டப்போகிறதை முன்னறிவிப்பு செய்துகொண்டிருந்தன.

மேரி மாட்டுக்கொட்டகையின் வைக்கோல் படுக்கையில் ரணமான வலியில் முனகிக் கொண்டிருந்தாள். பக்கத்திலமர்ந்து ஜோசப் அவள் தலைமுடியைக் கோதிக்கொண்டிருந்தான். வில்லியம்ஸ்சின் மடியில் மேரி சலனமற்றுப் படுத்திருந்தாள். மொழியற்ற ஒரு சத்தம் அவளை முடக்கிப் போட்டிருந்தது. அன்று இரவு ஆராதனை அவர்களின்றி இயேசுவின் பிறப்புக்காக நடந்தேறியது.

பட்டாசுகள் வெடிக்க மீண்டும் ட்ரம்ஸ் ஒலி முழங்க, கிருஸ்மஸ் தாத்தா வேடம் போட்ட ஒருவர் கையில் சாக்லெட் நிரப்பப்பட்ட பெரிய பக்கெட்டில் கைவிட்டு அள்ளி அள்ளி ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுத்துக் கொண்டிருந்தார். கொத்துகொத்தான சந்தோஷத்தில் தெரு நிரம்பிக் கொண்டிருந்தது.

ட்ரம்ஸ் சத்தம் உச்சத்திற்கு போய்க்கொண்டிருந்தது.

”சர்வத்தையும் படைத்தாண்ட சர்வ வல்லவர் - இங்கே பங்கமுற்ற பசுந்தொட்டியில் படுத்திருக்கின்றார்.”

ஆராதனை முடிந்த பகல்நேர பஜனைக் குழுவினரின் நடை, கிட்டத்தட்ட ஓட்டமாக மாறியிருந்தது. ஒவ்வொருவரின் முகத்திலும் பண்டிகையின் மகிழ்ச்சியும், அவசரமும் இருந்தது.

அழுது வீங்கின முகத்தோடு மேரி வாசற்கதவைப் பிடித்துக் கொண்டு தனியாக நின்றிருந்தாள். யாருமற்றுப்போன வெளி அவளைச் சுற்றிப் படிந்திருந்தது. சத்தத்தின் வலி பொறுக்காமல் எங்காவது வனாந்தரத்தை நோக்கி ஓடிப்போய் விடமுடியுமா? என்ற தவிப்பிருந்தது.

வீட்டிற்குள் திரும்ப நினைத்த அவள் கையைப் பிடித்து விரித்து, கிருஸ்மஸ் தாத்தா நிறைய சாக்லெட்டுகளைத் திணித்தார்.

”எதுக்கு இவ்ளோ?”

”நேற்றிரவு நம் கன்னிமரியாளுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது.”

”எந்தச் சேதாரமுமின்றியா?”

எதிர்பாராத இக்கேள்வியால் கிருஸ்மஸ் தாத்தாவின் கைகள் லேசாக நடுங்கின. சமாளித்து,

”தாயும் சேயும் பூரண நலம்”

மேரி ஒரு கன்றுக்குட்டி மாதிரி துள்ளிக் குதித்து வீட்டிற்குள் ஓடி ஒரு ட்ரே நிறைய கேக்குகளையும், பலகாரங்களையும் அடுக்கிக் கொண்டிருந்தாள் பஜனைக் குழுவினருக்குக் கொடுக்க.

*****

<http://bavachelladurai.blogspot.com/2009/05/blog-post.html>

Mar 26, 2011

சுவர்ப்பேய் - யுவன் சந்திரசேகர்

வேலையில் சேர்ந்த முதல்நாள் சாயங்காலம் இனம் புரியாத வெறுமை மனமெங்கும் நிறைந்திருந்தது. பட்டப்படிப்பை முடித்து விட்டு வீட்டில் காத்திருந்த நாட்களில் என் மனத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் நாடித்துடிப்பு மாதிரி நிறைந்திருந்த நாள் நிஜமாகவே வந்து கடந்த yuvanchandrasekar பிறகு ஒருவித வெற்றிடம் உருவாகிவிட்டது. அதில் வேறு கற்பனைகளை இனிமேல்தான் நிரப்பியாக வேண்டும்.

வங்கிக் கட்டடத்தின் எதிர்மருங்கில் இருந்த தேநீர்க்கடையில் தனியாக நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன். அந்தத் தனிமையும், யாருக்காகவும் ஒளிந்து குடிக்க அவசியமற்று என் கையில் புகைந்த சிகரெட்டும் தந்த விட்டேற்றியான மனநிலை வெகு ஆனந்தமாக இருந்தது. யாரோ என் தோளைத் தொட்டார்கள்.

காசுத்துறை அதிகாரி அருணாசலம். அவருடைய மொழியும் பேச்சும் வித்தியாசமானவை. புதுமைப்பித்தனின் கதையிலிருந்து இறங்கி வந்த கதாபாத்திரம்போலப் பகல் முழுவதும், கிளை முழுவதும் ஒலித்துக்கொண்டிருந்தது அவரது உரத்த குரல்.

தனீயா நின்னு சீரெட்டை என் ஜாய் பண்ணுதீராக்கும்?

வண்டிக்காரத் தெருவில் போய்க் கொண்டிருந்த ஓரிருவர் திரும்பிப் பார்த்தார்கள். நான் அவசரமாக சிகரெட்டைப் பின்புறம் கொண்டு போனேன்.

”குடியும் குடியும். உத்தியோகத்துலே சேந்தாச்சு. இன்னமே நீரும் பெரியமனுசன்தானே வே. “என்று சிரித்தார். தலைமுடியும் வரிசைப் பற்களும் போட்டி போட்டுக்கொண்டு வெளுத்திருந்தன. தாமும் ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டார். நான் அசட்டுத்தனமாகச் சிரித்துக்கொண்டே கையை முன்புறம் கொண்டுவந்தேன்.

ஒமக்குப் பூர்வீகம் எந்தூர்ன்னு சொன்னேரு?

கரட்டுப்பட்டி சார்.

எது, சோளவந்தான் கரட்டுப் பட்டியா?

ஆமா சார்.

அட. அங்கினெ நம்ம பய ஒர்த்தென் வாத்தியா இருந்தானே . . .

ஞாபக அடுக்குகளில் எதையோ தேடுகிற மாதிரி அவர் முகத்தில் தியானம் கவிந்தது. விழிகளைச் சுருக்கி தெருவை வெறித்தார். நினைவு வந்துவிட்டமாதிரிக் கண்கள் மலர்ந்தபோது என்னிடம் சொன்னார்.

அதுவும் இருக்குமே, ஆறேளு வருசம் இருக்கும். ஆச்சு, டச்சு விட்டுப்போய் ரொம்ப வருசம் ஆச்சு. இப்பொ எங்கினெ இருக்கானோ?

தன் ஞாபக அடுக்குகளுக்குள் புகுந்து அவர் தேடிய அதே சமயம் நானும் மானசீகமாகக் கரட்டுப்பட்டிக்கும் மதுரைக்கும் சென்று வந்திருந்தேன். பின்னாட்களில், கல்லூரியில் படித்த காலத்தில், தல்லாகுளம் பொது நூலகத்தில் எடுத்து வந்த காஞ்சனையில் கந்தசாமிப் பிள்ளையின் பேச்சில் ராஜுவாத்தியார் வாசனையடித்தது உடனடியாக நினைவு வந்து விட்டது.

ராஜூ வாத்தியாரா சார்?

அவம்தான். ராசுதான். நமக்குத் தூரத்துச் சொந்தக்காரென்வே அவன். எங்க அம்மெ வளியிலே . . . நல்ல பய. அவனெ மாதிரி ஒரு ஜெம்மைப் பாக்க முடியாது . . .

சிகரெட்டை வேகமாக இழுத்தார். புகை அதைவிட வேகமாக வெளியேறியது.

. . .ம்ஹும். விடு, நல்ல மனுசங்களைத்தானெ தெய்வம் தொரத்தித் தொரத்தி அடிக்கிது. சவம் நம்ம கோயில்கள்ள குடியிருக்கது சாமியா பிசாசான்னு சமயத்திலெ சந்தேகம் வந்துருது.

அவர் சிகரெட்டைக் கீழே போட்டுத் தேய்த்த விதத்திலேயே தெரிந்தது, விஷயத்தை அவர் முடித்துக் கொண்டுவிட்டார் என்பது. அவர் வங்கியை நோக்கியும் நான் என்னுடைய புது அறை நோக்கியும் நகர்ந்தோம்.

மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு அறை நண்பர்களுடன் திரும்பினேன். என்னுடைய வழக்கப்படி மொட்டைமாடியில் படுக்கச் சென்றேன். நண்பர்கள் வெட்டவெளியில் படுப்பதை விரும்புவதில்லையாம். எனக்கானால் கூரைக்குக் கீழ் படுத்தால் தூக்கம் வராது. திருமணத்துக்குப் பிறகு என்ன செய்வீர்கள் என்று என் புதிய நண்பர் ஒருவர் கேட்டுச் சிரித்தார். தெரியாது என்று நானும் சிரித்துக்கொண்டே பதில் சொன்னேன்.

மொட்டைமாடியில் இருட்டும் நிசப்தமும் அடர்ந்திருந்தன. கீழே வீதியில் எப்போதாவது ஒரு வாகனம் உறுமிச் செல்லும் எந்திர ஓசை. யாரோ ட்ரான்ஸிஸ்டர் கேட்கிறார்கள். இன்ன பாட்டு என்று தெரியாத, ஆனால் பாட்டு என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிற, தொலைவிலிருந்து ஒலிக்கும் இசையைக் கொஞ்சநேரம் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு சிகரெட் பற்றவைத்தேன். முடித்துவிட்டு மடக்குக் கட்டிலில் மல்லாந்து படுத்தேன். நானும் ஒரு ஆகாயம் நிரம்ப நட்சத்திரங்களும் மட்டும் பகிர்ந்து கொண்ட தனிமையில் அமிழ்ந்திறங்கும்போது ராஜு வாத்தியார் ஞாபகம் கனத்து எழுந்தது.

அப்பாவின் மரணத்தையொட்டி கிராமத்தைவிட்டு வெளியேறிவிட்டோம். அதன்பிறகு ஒன்றே கால் வருடம் கழித்து மதுரையில் வந்து குடியமர்ந்தோம். நாங்கள் கிராமத்தைவிட்டுக் கிளம்புவதற்கு ஆறேழு மாதங்கள் முன்னால் மேல்நாச்சிகுளம் நடுநிலைப் பள்ளிக்கு மாற்றலாகி வந்தார் ராஜூ வாத்தியார்.

கிராமப் பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனி ஆசிரியர்கள் கிடையாது. வகுப்பாசிரியர் என்று ஒருவர் இருப்பார். எல்லாப்பாடத்தையும் அவர்தான் எடுத்தாகவேண்டும். ராஜு வாத்தியார் எந்தப் பாடமானாலும் சுவாரசியமாக எடுக்கக்கூடியவர். அவர் பேசுகிற தமிழ் இன்னும் பிரமாதமாக இருக்கும்.

லே மக்கா . . . சேசுராசு . . .

என்று கூப்பிடுவதும், கேக்கான் பாக்கான் குட்மாணிங் வைக்கான் கூப்புடுதான் அந்தாலே இந்தாலேவாறு கால் ஓவு என்றும் அவர் பேசப்பேசக் கேட்டுக்கொண்டேயிருக்கத் தோன்றும் . . . அவ்வையார் மீது எனக்கு இன்றுவரை இருக்கும் காதலுக்கு ராஜூ வாத்தியார்தான் முதல் காரணம்.

அவ வலுத்த கிளவீல்லா . . .

என்று ஆரம்பித்து அவ்வையார் பாடல்களை – பாடப்பகுதியில் வந்தவை போக – ஏகப்பட்டது மனப்பாடமாகச் சொல்லுவார்.

அவர் பணிபுரிந்தது மேல்நாச்சி குளத்தில் என்றாலும், குடியிருந்தது கரட்டுப்பட்டியிலிருந்த நாட்டாமைக்காரர் வீட்டில் என்று சொன்னேனல்லவா? அந்த வீட்டில் மேற்குப்புறம் ஒரு சுவர் இருந்தது. உண்மையில், முற்காலத்தில் அது சுவராக இருந்திருக்க வேண்டும். பிறகு என்ன காரணத்தாலோ நடுவில் மாத்திரம் இடிந்து, மேற்கூரையில்லாத குட்டிச்சுவராகி நின்றது. சிவப்பு நிறத்தில் இளித்துக்கொண்டு நிற்கும் செம்மண் சுவர். சுவரையொட்டி உட்புறம் இருந்தது திறந்த வெளி முற்றம்தான் என்பதால் குடி வந்தவர்கள் யாரும் அதைப் பொருட்படுத்தாமல் விட்டு விட்டார்கள் போல.

ராஜுவாத்தியார் அந்தச் சுவரைப் பற்றி எங்களுக்கு ஒரு கதை சொன்னார். அவ்வையார் ஒரு தடவை கரட்டுப்பட்டி வழியாக வந்தாராம்.

சாடையிலே அந்தக் கிளவி நம்ம முத்தாச்சி மாதிரியே இருப்பா . . .

என்றார் வாத்தியார்.

ஆனா ஒண்ணு, சேலையைக் கெண்டைக்கால் வரைக்கி எறக்கித்தான் கட்டுவா கிளவி. முத்தாச்சி மாதிரித் தொடை வரைக்கி வளிச்சு ஏத்தியிருக்கமாட்டா.

வகுப்பு ஓவென்று சிரித்தது. தாமும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார் வாத்தியார்.

அவ்வைக்குக் கடுமையான பசி. கையில் காசில்லை. வழக்கமாகத் தோளிலிருக்கும் கந்தை மூட்டையில் தினை மா கொண்டுவருவார். சமயநல்லூருக்கு அருகில் வரும்போதே அதுவும் தீர்ந்தாகிவிட்டது. இனிமேல் நிலக்கோட்டை போனால்தான் சாப்பாடு கிடைக்கும். அங்கே தார்வேந்தன் என்று ஒரு பிரபு இருக்கிறார். அவர் மேல் பாடுவதற்கு ஓரிரண்டு வெண்பாக்கள் கட்டலாம் என்றால், பார் மேலும் சீர் மேவும் கார் போலும் என்று எதுகைகள் உதிக்கிறதே தவிர கரு திரள மாட் டேனென்கிறது. வயிற்றைக் கிள்ளுகிற பசிதான் காரணம்.

நம்ம நாட்டாமெக்காரரோட கொள்ளுப்பாட்டனுக்கு ஒரு கொள்ளுப்பாட்டன் இருந்தாரு. அவரு சம்சாரம் ஒரு ஆச்சி இருந்துச்சே, அதுக்கு நீலி ஆச்சின்னு பேரு. அது ரெம்பத் தடவை இந்தச் செவுத்தெக் கெட்டி நிறுத்தீறணும்னு நோங்குச்சு. அதாண்டே, நாங்க இருக்க வீட்டுலெ ஒரு குட்டிச் செவுரு நிக்கில்லா, அதெத்தாம். கொத்தரு வந்து கெட்டுவாரு, கூலியெ வாங்கிக்கிட்டு அவரு நகந்ததும் செவுரு வுளுந்திரும். உள்ளூர்லெ கோடாங்கி அடிச்சுப் பாத்தாக. அப்பத்தான் நூஸு தெரிஞ்சுச்சு. இந்தச் செவுருக்குள்ற முனியில்லா இருக்காம். பாக்க அப்புராணி மாதிரி நிக்ய செவுரு. உள்ளுக்குள்ள எம்புட்டுப் பெரிய ரகசியம் வச்சிருக்கு பாரு.

ஆச்சி சுதாரிச்சுக்கிச்சு. வெளியூர்லருந்து வேலெ தேடி வார கொத்தமார்ட்டெ கண்டிசனாச் சொல்லிப்போடும். செவுர எடுத்துக் கெட்டீட்டு ராத் தங்கிறணும். காலையிலே செவுரு நின்னா பதக்கு நெல்லு கூலி, இல்லாட்டி இல்லே.

இந்தச் சமயத்திலேதான் நம்ம அவ்வெ வாராக. கிளவி நீலி ஆச்சிட்டெ வந்து சாப்பாடு கேக்கா. ஆச்சி, போடுதேன், செரமம் பாக்காமெ இந்தச் செவுர எடுத்துக் கட்டிர்றியா? ன்னு கேக்கு.

எம்புட்டுக் கூலிங்கா அவ்வை யாரு. ஒரு பதக்கு நெல்லுத்தாரேன்ங்கு ஆச்சி. போர வளிக்காச்சேன்னு தலையாட்டுதா அவ்வெ. சாப்புடும்போது ஆச்சி வெசயத்தெ வௌக்கமாச் சொல்லுது. அப்பிடியா சேதின்னு கிட்டெப்போயி செவுத்தெத் தட்டிப்பாக்கா அவ்வெ. தலையத் தலைய ஆட்டிக்கிடுதா. ஏதோ புரிஞ்சு போச்சு அவளுக்கு.

செம்மண்ணெக் கொழைச்சுத்தாறதுக்கும் பாண்டுலெ நெரப்பித் தூக்கியாறதுக்கும் ஒரு ஆள் மட்டும் ஏற்பாடு செஞ்சாக் கட்டீறலாம்ன்னு ஆச்சிட்டெச் சொல்றா. கிளவியா இருக்காளே, கூட ஒரு பதக்கு நெல்லுத்தானே, சவம் செவுரு நின்னாச் சரிதான்னு ஆச்சி ஒத்துக்கிடுது. செவுரைக் கெட்டி முடிச்சுட்டு கும்பா நெறையக் கூழ் வாங்கிக் குடிக்கா அவ்வெ. குடிச்சு முடிச்சுத் திரும்பிப்பாத்தா, செவுரு லேசா ஆட்டம் காட்டுது . . . அந்தாலே செவுரெப் பாத்து ஒரு பாட்டுப் பாடுதா.

மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட் டிங்கு வந்தேன்

சொற்கொண்ட பாவின் சுவை யறிவா ரீங்கிலையே

விற்கொண்ட பிறைநுத லாள் நீலி தரும் கூலி

நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே . . .

அப்புறம் அவ்வைக் கிழவி சாகும்வரை அந்தச் சுவர் வீழாமல் நின்றதாம். பிறகு ஏதோ ஒரு கால கட்டத்தில் மின்னல் தாக்கியதில் மீண்டும் குட்டிச் சுவராகிவிட்டது.

கையில் எடுத்த சிட்டிகைப் பொடியை, கண்களை இறுக மூடிக்கொண்டு உறிஞ்சி முடித்தார் வாத்தியார். நாசியில் ஏறிப் புகுந்த துகள்கள் நிஜமாகவே ஏதோ மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

டியூப் லைட்டுலெ வெளிச்சம் இருக்கது எதுனாலெ? உள்ளாறே கரண்டு ஓடுது. அதேதாம்லெ மின்னலுக்கும். ஒரு மின்னல்லெ இருக்க கரண்டெ வெச்சு நம்ம முனியாண்டி கோயில் டியூப்லைட்டெ ஆயிரம் வருசத்துக்கு எரிய வைக்கலாம் . . .

என்று விஞ்ஞானப் பாடத்துக்குத்தாவினார் ராஜூ வாத்தியார்.

அவ்வையாரின் பெயரோடு முத்தாச்சியின் முகமும் பொருந்திக் கிடந்துவருகிறது எனக்குள். மேற்சொன்ன கதையின் ஆரம்பத்திலேயே இது நிகழ்ந்துவிட்டது என்று தோன்றுகிறது. இவ்வளவுக்கும் அவ்வையார் முத்தாச்சிபோல தொடர்ந்த வெற்றிலைப் பழக்கத்தால் காவியேறிய பற்கள் கொண்டவரா, பொக்கைவாய்க் கிழவியா என்று எனக்குத் தெரியாது.

ராஜு வாத்தியாரின் வீட்டுக்கு மேற்குப்புறம் முத்தாச்சிக் கிழவியின் வீடு. ஊரின் கடைசி வீடு. வீட்டின் முன்வாசல் முற்றத்தையும் திண்ணையையும் சிறு கடையாக மாற்றியிருந்தாள். நாங்கள் பள்ளிக்கூடம் போகும்போதும் வரும்போதும் முத்தாச்சி கடைமுன் சற்று நின்றுவிட்டுப் போவோம், அட்டைகளில் தொங்கும் வற்றல்கள், வடகங்கள், பல்லிமிட்டாய்ப் பொட்டலங்கள் ஊறுகாய்ப் பாக்கெட்டுகளை வேடிக்கை பார்த்தபடி. இதுபோக எந்நேரமும் அந்த வீட்டுக்குள்ளும் சுற்றுப் புறத்திலும் நிரம்பியிருக்கும் கருவாட்டு மணம். அவளுடைய திண்ணையில் எந்நேரமும் யாராவது வெளியூர்ப் பெண்கள் வந்து அமர்ந்திருப்பார்கள். அக்கம்பக்க கிராமங்களிலெல்லாம் கிழவியின் கைவைத்தியத்துக்குப் பெரும் மவுசு.

முழங்காலுக்கு மேல் ஏற்றிச் சொருகிய கண்டாங்கிச் சேலையுடன் பழைய ஒரு ரூபாய் நாணயம் அளவு விட்டமுள்ள சிவப்புக்கல்தோடுகள் அணிந்து திண்ணையின் ஓரத்தில் அமர்ந்து சதா வெற்றிலைமென்றுகொண்டிருப்பாள் முத்தாச்சி. ஏந்திய கீழுதட்டிலிருந்து வார்த்தைகளும் கெட்ட வார்த்தைகளும் செந்நிற எச்சில் சாரலும் சரமாரியாய்க் கொட்டும். அவற்றின் வேகத்துக்கிசைய புத்தர்போல வளர்த்த காதுச் சவ்வின் கீழ்ப்புறம் தோடுகள் ஊசலாடும்.

சற்று அதிகநேரம் நாங்கள் நின்று விட்டாலோ, கூட்டம் அதிகமாகச் சேர்ந்துவிட்டாலோ எங்களை நோக்கி ஆவேசமாய்க் கேட்டு விரட்டுவாள்.

இங்கென்னா வேலெ. அம்மணக்குண்டி ஆட்டம் பாக்க வந்தீகளாக்கும்?. ஓடு ஓடு, பள்ளிக் கொடத்துல மணியடிச்சுரும்.

இதையெல்லாம்விட, முத்தாச்சி எனக்குக் கற்றுத்தந்த பாடம்தான் முக்கியமானது.

ஆண்களும் பெண்களும் சமம் என்ற கருத்தை முதன்முதலில் எனக்குள் விதைத்தவள் முத்தாச்சிதான். எங்கள் வீட்டிலெல்லாம் நிலைமை வேறு மாதிரியிருந்தது. அப்பாவைக் கேட்காமல் அம்மா ஒரு துரும்பைக்கூட நகர்த்த மாட்டாள்.

எங்கே . . . அவ எடுத்த முடிவெ சாதுர்யமா என் வாயாலெ வர வழைச்சுர்றா.

என்று அப்பா கேலி பேசினாலும், இறுதி முடிவுகள் அப்பாவின் பெயரால்தான் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. அண்ணன்மார் இன்னும் ஒருபடி மேலே போனார்கள். குறிப்பாக இரண்டாவது அண்ணா. அவன் மன்னியைக் கண்மூடித்தனமாக அடிக்கும்போது இந்தக் குடும்பத்துக்கும் அந்த நிகழ்வுக்கும் சம்பந்தம் கிடையாது என்பதுபோன்று ஒரு பொது அமைதி நிலவும். வீங்கின முகத்துடன் தனியாக உட்கார்ந்து அழும் மன்னியை அணைத்துக்கொள்ள வேண்டும்போல எனக்குப் பரபரக்கும். நல்லவேளை, நானெல்லாம் பெண்ணாய்ப் பிறக்கவில்லை என்று ஆறுதல் பட்டுக் கொள்வேன். ஏழாம் வகுப்புப் படிக்கும் மனத்துக்கே உரிய ஆறுதல் அது என்று பிற்பாடு பலநாட்கள் தோன்றியதுண்டு.

இந்த இடத்தில்தான் முத்தாச்சியின் முக்கியத்துவம் வருகிறது. பிள்ளையார் கோவில் திடலில் விளையாடிக்கொண்டிருக்கும்போது, வெள்ளைக்கரடுவரை போய்விட்டு வரலாம் என்று பாண்டி யோசனை சொன்னான். கரட்டை ஒட்டி ஏகப்பட்ட புதர்கள் இருக்கும். சப்பாத்திக் கள்ளிகளும் கருவேல மரங்களும் காவல் காக்கும் ஒற்றையடிப்பாதை வழியே வரும்போது கரட்டான்களும் பாம்புகளும் நத்தைகளும் மரவட்டைகளும் வெல்வெட் பூச்சிகளும் தவளைகளும் பார்க்கக் கிடைக்கும். தாத்தா வாத்தியாரின் காச நோய் வைத்தியத்துக்கு நத்தை பொறுக்க ரீஸஸ் பீரியடில் எங்களை அழைத்துச் செல்லும்போது பார்த்திருக்கிறேன்.

எங்கள் வீட்டில் அந்தப் பக்கமெல்லாம் போக விடமாட்டார்கள். பெண் குழந்தைகளுக்குச் சமமான பாதுகாப்புடன் என்னை வளர்த்து வந்தார்கள். பாண்டி இருந்த தைரியத்தில், அப்பா மறைவுக்குப் பிறகு அம்மா திண்ணையில் உட்கார்ந்து ஊர்ப்பெண்களுடன் வம்பு பேசுவது குறைந்துவிட்ட தைரியத்தில், அண்ணன்மார் எவரும் தற்சமயம் ஊரில் இல்லை என்ற தைரியத்தில், பாண்டியின் யோசனைக்கு உடன்பட்டேன். வழியில் காய்ந்தும் பச்சையாகவும் கிடந்த மலக் குச்சங்களைப் பார்க்கும்போதெல்லாம்,

தாயில்லாப் பிள்ளெ கெடக்கு. பாத்து வா.

என்று எச்சரித்தபடி கைபிடித்துக் கூட்டிப் போன பாண்டி, சட்டென ஓரிடத்தில் என் கையை அழுத்தி நிறுத்தினான். உதட்டில் ஆள்காட்டி விரலை வைத்து எச்சரித்தான். அவன் சுட்டிக்காட்டிய இடத்தில் முத்தாச்சி குத்த வைத்து அமர்ந்திருந்தாள்.

இடுப்புக்கும் மேலே வழித்தேற்றிய சேலைக்குக் கீழே பளிங்கு போலப் பளபளத்த புட்டத்தை விடவும் என் கவனத்தைக் கவர்ந்த வேறு ஒரு சங்கதி இருந்தது. அவள் கம்பீரமாக சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்தாள். இதெல்லாம் ஆம்பளைகள் சமாசாரமில்லையா என்று ஒரு கணம் தோன்றியது. என்றாலும், பெண்கள் சம்பந்தமான பிற்கால அறிதல்கள் பலவற்றுக்கு ஒரு ஆரம்பப்புள்ளியாய் அந்தச் சுருட்டு என்னையறியாமலே எனக்குள் ஏறி அமர்ந்தது.

எஸ்ஸெஸ்ஸெல்ஸியில் நல்ல மதிப்பெண் வாங்கி பள்ளிக்கூடத்தில் இரண்டாவது மாணவனாகத் தேறியபோது, கரட்டுப்பட்டிப் பிள்ளையாரைப் பார்த்து நன்றிகூறி வரச் சொன்னாள் அம்மா. மீசை அரும்பிவிட்ட பருவம் என்பதால் தனியாகச் சென்றுவர அனுமதி கிடைத்தது. பிள்ளையாருக்கு விடல் போட்டுவிட்டு ஊருக்குள் போனேன்.

கடைவாசலில் கால்நீட்டி உட் கார்ந்து பஞ்சுபோல் முழுக்க நரைத்த தலைமுடியை ஈருவளியால் சிடுக்கெடுத்துக்கொண்டிருந்தாள் முத்தாச்சி. ரவிக்கை போடும் வழக்கம் இல்லாதவள். இடது முலை சேலைக்குள் பாதி மறைந்தும் பாதி தெரிந்தும் அவள் இடுப்பில் நிரந்தரமாகச் செருகியிருக்கும் சுருக்குப்பையின் சாயலுடன் ஆடியது. அக்குள் ரோமங்களில் நரை பாய்ந்திருந்தது. தெருவில் நடந்துவந்து அவள் கடை வாசலில் நின்றுவிட்ட என்னைக் கண்களைச் சுருக்கிப் பார்த்தாள்.

ஆத்தாடி, ஐயரு மகென்தானே, அம்மா நல்லாருக்காகளா சாமீ?

என்று கூவினாள். வியாபாரப் பொருட்களைப் பரத்திய திண்ணையின் ஓரமாக எஞ்சியிருந்த இடத்தில் என்னை உட்காரச் சொன்னாள்.

கலர் சாப்புடுறீகளா?

நாலே வருடத்தில் முத்தாச்சிக்கு இருபது வயது கூடிவிட்ட மாதிரிக் கிழடு தட்டியிருந்தாள். அதற்கு இரண்டு வருடங்கள் கழித்து இடது மார்பில் புற்றுநோய் தாக்கி சில மாதங்கள் போராடிவிட்டு இறந்தே போனாள் என்று கேள்விப்பட்டேன். நான் பார்த்த நாளில் அந்த நோய் வேர்பிடித்து ஆழ இறங்கத் தொடங்கியிருக்கலாம் ஒருவேளை, அவளே அறியாதவண்ணம்.

வாத்தியார் வீடு பூட்டிக்கெடக்கே ஆச்சி?

அதையேங் கேக்குறீக? அவுகதேன் ஊரெ விட்டே போய்ட்டாகளே?

அப்பிடியா? எந்தூருக்குப் போனாங்க ஆச்சி?

தேவதானப்பட்டிக்கி அங்குட்டு ஏதோ ஒரு பள்ளிக்கொடமாம்.

ஏன், என்னாச்சு?

அது பெரீய்ய கதெ சாமி.

போனவருடம் சாமிகும்பிடு முடிந்த மறுநாள் ஊர்ப்பெண்கள் எல்லாம் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்துச் சென்று முல்லையாற்றில் கரைத்துத் திரும்பினார்கள் அல்லவா, வாத்தியாரின் மனைவி சிரித்து முத்தாச்சி பார்த்தது அன்றுதான் கடைசி.

தொடர்ந்து நாட்கணக்காக உற்சவம் நடத்தி முடித்த களைப்பில் ஊரே உறக்கத்தில் மூழ்கிக் கிடந்தபோது, ராஜூ வாத்தியாரின் வீட்டுக்குள் திருடன் புகுந்துவிட்டானாம். உடைந்த சுவர் வழியாக முற்றத்தில் நுழைந்து பம்மிக் காத்திருந்திருக்க வேண்டும் என்பது முத்தாச்சியின் யூகம்.

நள்ளிரவில் குட்டிச்சுவருக்கு இந்தப்புறம் சிறுநீர் கழிக்க எழுந்து வந்தாளாம் முத்தாச்சி. வாத்தியார் வீட்டிலிருந்து வாட்டசாட்டமான ஒரு ஆள் இறங்கி ஓடியிறங்கியிருக்கிறான். வீட்டுக்குள் வாத்தியார் சம்சாரம் அழும் சப்தமும் வாத்தியார் அவளுக்கு சமாதானம் சொல்கிற மாதிரியும் கேட்டதாம். இதுவரை சாதாரணமாகச் சொல்லி வந்த முத்தாச்சியின் குரல் சடாரென்று தழைந்தது.

ஏஞ் சாமீ, களவாங்க வந்தவன் வீட்லயிருந்து எறங்கி ஓடுறான். நம்ம கூட்டாளமிண்டா என்ன செய்வோம்? திருடன் திருடன் ஓடுறான் புடிண்டு அலற மாட்டோம்? வாத்தியார் வீட்லெருந்து ஒரு சின்ன மொனக்கங்கூட இல்லே.

ம்

அதுனாலெதான் எனக்கு இன்னமும் சந்தேகம் . . .

இருந்த இடத்தில் இருந்தவாறே, பாவனையாக என் காதருகில் தன் உதட்டைக் கொண்டுவந்தாள் முத்தாச்சி. குரலில் மேலும் கொஞ்சம் ரகசியம் சேர்ந்தது.

. . . வந்தவென் வெறுங்கையோட ஓடுன மாரித்தான் இருந்துச்சு சாமி. அவன் ஓடுன சீரெப்பாத்தா பொருளெக் களவாங்க வந்தவனெ மாரித் தெரீலே. ஆனா, அவென் சீவரங்கொளத்தான் இல்லேண்றது மட்டும் நிச்சியம். அவிங்ய ஆளுமேல கைவய்க்க மாட்டாங்ய.

இதற்குள் முத்தாச்சியைப் பார்ப்பதற்காக இரண்டு பெண்கள் வந்து சேர்ந்தார்கள். தாயும் மகளும்போல இருந்தார்கள். இருவர் முகத்திலும் உயிர்க்களை இல்லை. அந்தப் பெண் தேவையில்லாமல் அடிக்கடி தன் அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறாள் என்று எனக்குத் தோன்றியது. என்னிடம் பேசிய போது இருந்த பாவத்துக்குச் சம்பந்தமேயில்லாத அதிகாரத் தொனியில் முத்தாச்சி கேட்டாள்

எந்தூரு?

நீரேத்தான்.

பதில் சொன்ன மூத்தவளின் குரலில் லேசான நடுக்கம் இருந்தது. நான் முத்தாச்சியைப் பார்த்துத் தலையாட்டிவிட்டுக் கிளம்பினேன். எதிர்ச்சாரிப் பொட்டலில் மண்டியிருந்த எருக்கலஞ்செடிகளின் ஊடாகப் பழுப்பும் வெள்ளையும் கலந்த நாய் ஒன்று புகுந்து ஓடியது.

ஞாபகத்தின் ஆழ்பரப்பில் புதையுண்டு கிடக்கும் எந்த ஒரு சம்பவமாவது தனியாகக் கிடக்கிறதா, சொல்லுங்கள்? வியர்த்த உடம்புடன் மணல்தரையில் புரண்டு எழுந்த மாதிரி, மேற்பரப்புக்கு எழுந்துயரும் எந்தவொரு நிகழ்ச்சி, தனிநபர், அல்லது நாளுடனும் பல்வேறு உபரி நினைவுத் துகள்கள் ஒட்டிக்கொண்டு வரத்தானே செய்கின்றன. ராஜு வாத்தியார் என்ற பெயர் தன்னுடன் இழுத்து வரும் வால் வெகு நீளமானது. கரட்டுப்பட்டி, முத்தாச்சி, அவ்வையார், ராஜு வாத்தியாரின் கருகருவென்ற சுருள்முடி, இடது கைக் கட்டை விரல் நகத்தில் அவர் நாலைந்து தடவை தட்டிவிட்டுத் திறக்கும் பழுப்புநிறப் பொடி மட்டை, கரும்பலகையில் சச்சதுரமாகத் திரண்டு வரும் சாக்பீஸ் எழுத்துகள், முல்லையாற்றுக்கரையில் சாயங்காலம் அவருடன் நடந்து வரும் அவரது மனைவி, அந்த அம்மாளின் நிமிர்ந்த நடையில் மிளிரும் கம்பீரம் . . .

ராஜு வாத்தியாரைவிட அவருடைய மனைவி ஒரு பிடி உயரம். வாத்தியார் நல்ல சிவப்பு நிறம். உள்ளங்கைகள் செக்கச்செவேலென்று பூவிதழ்கள் மாதிரி மிருதுவாக இருந்தது நினைவு வருகிறது. அந்த அம்மாள் சற்று நிறம் மட்டுத்தான். எங்கள் ஊர்ப்பக்கம் புதுநிறம் என்பார்கள். இருந்த கொஞ்ச மாதங்களில் அவர்கள் வீட்டுக்கு வாரந்தோறும் சென்று வந்திருக்கிறேன். எங்கள் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து சேரும் குமுதத்தைச் செவ்வாய்க்கிழமை கொண்டு கொடுப்பதும், வியாழன் அல்லது வெள்ளியன்று திரும்ப வாங்கி வருவதும் என்னுடைய வேலை.

இருவரும் சேர்ந்திருக்கும் சந்தர்ப்பங்களில் நேருக்கு நேராகப் பேசிக் கொண்டு நான் பார்த்ததே கிடையாது. பள்ளிக்கூடத்தில் சதா பேசிக் கொண்டே இருக்கும் வாத்தியார், வீட்டுக்குள் நுழைந்ததும் மௌனமாகிவிடுகிறாரே என்று தோன்றும். அவர்கள் வீட்டினுள் எப்போதுமே நிலவும் அமைதி எங்கள் வீட்டின் சூழ்நிலைக்கு நேர்மாறானது. கொண்டாட்டமாகவோ, தகராறாகவோ மனிதக் குரல்களும், பெரியக்காவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததையொட்டி வீட்டுக்குப் புதிதாக வந்திருந்த பிலிப்ஸ் வால்வு ரேடியோவின் சினிமாப் பாட்டுகளும், சமையலறையில் எந்நேரமும் இருந்துகொண்டிருக்கும் பாத்திர ஒலிகளும் எனச் சதா ஓசையால் நிரம்பியிருக்கும் வீடு எங்களது. இந்த வித்தியாசத்தைப் பற்றி அம்மாவிடம் ஒருநாள் கேட்டேன்.

கொழந்தையில்லாத வீடு இல்லையா? நிசப்தமாத்தான் இருக்கும்.

என்று சுலபமாகச் சொன்னாள்.

சோழவந்தான்- நிலக்கோட்டையை இணைக்கும், வாகனப் போக்குவரத்து நிறைந்த, தார்ச் சாலையை ஒட்டிய வளாகத்தில் உள்ள வீடு எங்களுடையது, ஊர்க் கோடியில் ஆள் நடமாட்டமே அரிதாக இருக்கும் பகுதியில் ராஜு வாத்தியார் வீடு இருந்தது என்பது அவள் சொல்லாத இன்னொரு காரணம்.

நினைவில் பதிந்த எண்ணற்ற முகங்கள் தாமாகக் கொள்ளும் சுழற்சிவிதியின் பிரகாரம், ராஜு வாத்தியார் முகமும் விதவிதமான சந்தர்ப்பங்களில் ஞாபகம் வந்து போகும். ஆனால், அவரைத் தவிர வேறு நினைவு இல்லாதபடி மனம் குவியக் கிடைத்த சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. நான் வேலையில் சேர்ந்தது 1983 ஏப்ரல் 7ஆம் தேதி. முன்னரே சொன்னபடி, அன்றிரவில் அழுத்தமாக மேலெழுந்த ராஜு வாத்தியார் ஞாபகம் வேறு இரண்டு சந்தர்ப்பங்களிலும் தீர்க்கமாக நினைவு வந்தது.

ஒன்று, 79-ல். கல்லூரி நூலகத்திலிருந்த தனிப்பாடல் திரட்டு நூலை எடுத்துப் படித்து வந்த ஒரு நாளில், அவ்வையார் பாடியதாக எங்களுக்கு ஒரு கதைபோல விரிவாக ராஜூ வாத்தியார் சொன்ன, பேய்ச் சுவரை நிறுத்திய, பாடல் அந்தப் புத்தகத்தில் இருந்தது.

அந்தப் பாடலைப் பாடியவர் கம்பர். அவ்வையார் இல்லை. இந்தத் தகவல் தெரிந்த கணத்தில் என் மனம் முழுக்க ராஜு வாத்தியார் நிரம்பினார். அவர் சொல்லி நினைவிலிருக்கும் பழம் பாடல்கள் அத்தனைக்கும் நேர் எதிரில் மானசீகமாக நிலைகொண்டிருந்த புலவர்களின் பெயர்கள் இடம்பெயர்ந்து கொசுக்கள்போலத் தன்னிச்சையாகப் பறக்க ஆரம்பித்தன.

அதன் பிறகு, நானும் எழுதவென்று ஆரம்பித்த பின்னர், ராஜு வாத்தியாரின் அருமை வேறு ஒரு விதமாகத் தெரிய வந்தது. எங்கோ நடந்துகொண்டிருந்த அவ்வையாரையும் அந்தப் பாடலையும் கரட்டுப்பட்டி ஊருக்குள் அழைத்துவந்த தன் சிருஷ்டிகரமும், அதன்வழியே என்றும் மறக்கவியலாதபடி என் மனத்தில் பதிய வைத்த பயிற்றுவிக்கும் கலையும் வெகு விசேஷமானவையாகத் தென்பட்டன.

புரவலர்களையும் மன்னர்களையும் அரசவைகளையும் பரிசில்களையும் மாணாக்கர்களையும் விமர்சகர்களையும் எதிரிகளையும் இழப்புகளையும் தன்வசம் கொண்டிருந்த கம்பர் போன்ற காவியகர்த்தாவை விடவும், ஊரும் உறவும் அற்றுத் தனியாய்த் திரிந்த, உப்புக்குப் பாடி, புளிக்கும் ஒரு பாட்டுப் பாடிய, தேசாந்திரிக் கிழவிக்குத்தான் அந்தப் பாடல் நெருக்கமாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது என்றும் தோன்றியது.

இயற்றியவர் பெயர் மட்டுமில்லை, வேறு சில பாடபேதங்களும் ராஜு வாத்தியார் கூறிய பாடலுக்கு உண்டு. நெற்கூலி கொடுத்த பெண்ணின் பெயர் நீலி அல்ல, வேலி. அவள் பிறைநுதலாள் அல்ல, வாணுதலாள் . . . இப்போது வேறு ஒரு குழப்பம் வந்துவிட்டது. ஒருவேளை ராஜு வாத்தியார் சரியாகவே சொல்லி, நான் நினைவில் ஏற்றுக்கொண்ட பதிவுகள்தாம் தவறாக இருந்திருக்குமோ என்று.

அவர் சொன்ன பாடல் மட்டுமல்ல, அவர் சம்பந்தமாக நான் அறிந்து வைத்திருந்த விதமும் கூடத் தவறாக இருக்கலாம் என்பது புரிய 2002 வரை நான் காத்திருக்க வேண்டியிருந்தது, வாத்தியார் திருநெல்வேலிக் கொச்சைவழக்கில் பேசினாலும்கூட, புதுமைப்பித்தனின் கதையிலிருந்து இறங்கி வந்தவராய் இல்லாமல், கு ப ராஜகோபாலனின் கதையிலிருந்து இறங்கி வந்தவரோ என்ற சந்தேகத்தைக் கிளப்பிய ஒரு தருணம் வரும்வரை.

அந்த முறை வந்த ஞாபகத்தில் இன்னும் முக்கியமான அம்சம் ஒன்று இருந்தது. ஒரே சமயத்தில் தத்துவார்த்தமாகவும் உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்ததாகவும் மனம் பிளவுகொண்டது. உலகம் மிகவும் சுருங்கிவிட்டது போன்ற சித்திரம், அல்லது ஒன்றுக்கொன்று தொடர்பற்ற ஏகப்பட்ட விஷயங்களை ஒன்றாக நான் கோத்துப் பார்ப்பதால் அது சுருங்கிவிட்ட மாதிரித் தோன்றுகிறதோ என்ற சந்தேகம் ஒருபுறம். மறு புறம், இனம்புரியாத ஒரு வேதனை மனத்தில் கனத்தது. அதற்கு முன்புவரை ராஜுவாத்தியாரை நான் நினைவுகூர்ந்த சந்தர்ப்பங்களெல்லாம் சந்தோஷத்தால் நிரம்பியவை . . .

பத்மினி தன் தாயாருக்கு உடல் நலம் சரியில்லை என்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பிறந்தகம் சென்றிருந்தாள். மனித வாசனை முழுக்க அற்றுவிட்டது போன்ற இறுக்கம் சூழ்ந்திருந்தது வீட்டை. நான் மட்டும் தனியாக இருந்தேனா, கொசுக்களுக்குச் சமமாகத் தனிமையும் மண்டி ரீங்கரித்தது.

பொழுதின் கழுத்தில் கை வைத்து நெட்டித் தள்ளுவதற்காக, பழைய தினசரிகள் பத்திரிகைகள் கிடந்த மர அலமாரியைக் குடைந்து கொண்டிருந்தேன். ஆங்கில தினத்தாளுக்கு ஈடாகப் பெண்கள் பத்திரிகைகள் விதவிதமாகச் சேர்ந்திருந்தன. நூதனமான சமையல் குறிப்புகளுக்காக பத்மினி அவற்றை விடாமல் வாங்கிச் சேர்ப்பாள். அவளுக்கும் அவளுடைய தாயாருக்கும் நடந்த உரையாடல் நினைவு வந்தது.

விதவிதமாச் சமைச்சுப்போட்டு கொழந்தைகளுக்கு இப்பிடி நாக்கை வளத்துவிடறயே பத்தா.

அது சரி. ஒனக்கு உண்டைக் கட்டி சாதமும் ஒரு கரண்டி தயிரும் போதும். எல்லாரும் ஒன்னை மாதிரி இருப்பாளா? ஒத்தொருத்தர் ருசியும் பசியும் ஒவ்வொரு மாதிரி.

மிகப் பிரபலமான பத்திரிகைக் குழுமம் சென்ற வருடம் தொடங்கியிருந்த பெண்கள் பத்திரிகையின் பழைய இதழ் ஒன்று அகப்பட்டது. புரட்டினேன். பொதுவாக இது போன்ற பத்திரிகைகளில் இருக்கும் வழக்கமான சமாசாரங்கள்தாம், சமையல், கை வேலைப்பாடுகள், பதினாறு புள்ளி எட்டுவரிசைக் கோலம், வீட்டிலிருந்தே பணம் சம்பாதித்தல், ஜோசியம், அசட்டுத்தனமான ஓரிரு சிறுகதைகள் என்று.

ஆனால், இந்தப் பத்திரிகைகளில் வாசகர் பங்கேற்பாக வரும் பகுதிகள் சுவாரசியமாக இருக்கும். அதிலும்கூட, வெள்ளைப்படுவது, மார்பகம் விகிதாசாரக் குறைவாகச் சுருங்கியிருப்பது, விடாய்க் காலத்தில் பிறப்புறுப்பில் தாளமுடியாத நமைச்சல் என்பது போன்று மருத்துவரிடம் நேரில் சென்று ஆலோசனை கேட்க வேண்டிய விஷயங்களை நாலு வரிப் போஸ்ட் கார்டில் எழுதிப் போடும் வாசகிகள் உண்மையிலேயே வாசகிகள்தாமா, அல்லது ஆசிரியர் குழுவின் கற்பனைக்குப் பெயர் மட்டும் நல்குகிறவர்களா என்று சந்தேகமும் உண்டு. தவிர, பெண்கள் பத்திரிகையில் ஆண்களுக்கான தனிப்பகுதியோ இது என்றும் சந்தேகம்.

நான் பார்த்த இதழில், வாசகியர் தம் வாழ்வின் சில அந்தரங்கமான நெருக்கடிகளில் எடுக்க நேர்ந்த முடிவு சரியா தவறா, தொடர்ந்து தான் எந்தத் திசையில் செல்வது என்ற குழப்பத்தை முகம் தெரியாத எண்ணற்ற சக வாசகியருடன் பகிர்ந்துகொள்ளும் பகுதி ஒன்று இருந்தது. முந்தைய இதழில் விரிவாக வெளியான கடிதத்தின் சுருக்கம் இந்த இதழில் பிரசுரமாகியிருந்தது. விஷயம் இதுதான். கணவரை இழந்தவரான அறுபத்தைந்து வயது வாசகி ஒருவர். இளம் வயதில் தம்மைக் காதலித்தவர் இப்போது திரும்பவும் தன் வாழ்க்கையில் குறுக்கிட்டிருக்கிறார், தம்மோடு வாழ வரும்படி அழைக்கிறார், குழந்தைகள் அரைக் கிழமாகிவிட்ட நாட்களில், பேரக்குழந்தைகள் கல்லூரி செல்லும் நாட்களில், சமூக மரியாதையும் நெடுநாள் காதலும் எதிரெதிராய் இழுக்கும்போது தாம் என்ன முடிவெடுப்பது என்று வாசகியரிடம் ஆலோசனை கேட்டிருந்தார்.

இந்த இதழில் வாசகியர் வாக்களித்திருந்த விதம் அசாதாரணமானது. 97 சதவீதம் காதலருடன் வாழச் செல்லும்படி அறிவுறுத்தியிருந்தது. 3 சதவீதம் மட்டும் பலவீனமான காரணங்களைச் சொல்லி வேண்டாம் என்று கூறியிருந்தது.

தொடர்ந்து, இந்த இதழுக்கான கட்டுரைக் கடிதம். சாய்வு நாற்காலியில் சென்று உட்கார்ந்து கொண்டு சாவகாசமாகப் படிக்க ஆரம்பித்தேன்.

அன்புள்ள தோழியருக்கு,

முதலில் என்னைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகவே சொல்லி விடுகிறேன். அப்போதுதான் என் பிரச் சினை உங்களுக்கு நன்றாகப் புரியும்.

நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். வீட்டின் செல்லக் குழந்தை. மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் அன்பானதாய் தந்தையரும் என்று ஆனந்தமாகப் போய்க் கொண்டிருந்த இளமைப் பிராயம். அந்த நாட்களில் நான் ஏறாத மரமில்லை. நீந்தாத நீர்நிலை இல்லை. பனைமரத்தில் நான் ஏறும் வேகத்தைப் பார்த்து என் சகோதரர்களே ஆச்சரியப்படுவார்கள். பாவாடையை ஏற்றிச் செருகிக்கொண்டு கபடி விளையாடுவேன். என் பால்ய ஞாபகங்களில் நான் பாண்டியோ பல்லாங்குழியோ விளையாடியதாக நினைப்பே இல்லை.

பருவ வயதை எட்டியபோது, இத்தனைபேருடன் இருந்தபோதும், ஒருவிதமான தனிமையை உணரத் தொடங்கினேன். கிராமத்தின் தெருக்களில் ஓடியும் சாடியும் நான் தீர்த்துக்கொண்ட தினவு, என் உடம்புக்குள் ஆழ ஆழப் புதைந்து கொண்டது. உடல் வளர்வதற்கு இணையாக எனக்குள் அது வளர்ந்துகொண்டும் போனது. எவ்வளவுதான் சுதந்திரம் நிலவும் வீடாக இருந்தாலும், பிறருடன் பகிர்ந்துகொள்ள முடியாதது அது. ரகசியமாகக் கிளைவிரித்துப் படரும் தாவரம்போல எனக்குள் வளர்ந்து வந்தது.

இந்த நேரத்தில் எனக்குத் திருமணம் பேசினார்கள். எங்களைப் போன்ற நடுத்தர வருமானமுள்ள குடும்பம்தான். நாகரிகமான மனிதர்கள். அந்த நாட்களில் பெண்ணைப் பெற்றவர்கள் படும் பண ரீதியான சிரமத்தையோ, மனச்சிக்கலையோ சற்றும் எதிர்கொள்ளாமலே என் பெற்றோர் என்னை மணமுடித்து அனுப்பினார்கள்.

வேறொரு கிராமத்தில் நாங்கள் தனியாகக் குடியமர்ந்தோம். அவர் மிருதுவானவர். அதிர்ந்து பேசக்கூடமாட்டார். எதிராளியின் மனத்தைப் புண்படுத்திவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாய் இருப்பார். சுத்தத்தைப் பற்றி அபார அக்கறை கொண்டவர். தினந்தோறும் சலவை உடைதான் அணிவார். சும்மா இருக்கும் நேரங்களில் வீட்டின் ஏதாவது ஒரு பகுதியைச் சுத்தம் செய்துகொண்டேயிருப்பார். ஒரு தடவை சொன்னார். மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையறாது நடந்துவரும் மாபெரும் போரில் இயற்கை கைக்கொள்ளும் கொடூரமான ஆயுதம் தூசிதானாம். இது தம்முடைய கண்டுபிடிப்பு அல்ல என்றும், ஏதோ ஒரு விஞ்ஞானப் புத்தகத்தில் படித்ததாகவும் சொன்னார்.

சைவப் பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவள்தான் நானும் என்றாலும் மசாலாப் பொருட்கள் கலந்த சமையலில் மிகவும் பிரியம் கொண்டவள். சமையலில் உப்பு புளி காரம் எண்ணெய் எல்லாமே மிதமாகத்தான் இருக்கவேண்டும் அவருக்கு. பத்தியச் சாப்பாடு மாதிரி. உறுத்தாத மெல்லிய மணம் உள்ள ஊதுபத்தியோ தசாங்கமோ சதா மணம் நிரப்பியி ருக்கும் வீடு. எல்லாமே தாறுமாறாகக் கிடக்கும் என் தாய் வீட்டின் சூழ்நிலைக்கு நேர் விரோதமாக நேர்த்தியும் அழகும் அலங்காரமும் அமைதியும் கொண்டிருந்த எங்கள் தனிவீடு முதல்நாள் முதலே வேறு யாருடைய வீடோபோலத் தோன்ற ஆரம்பித்துவிட்டது எனக்கு.

வீட்டின் சகல முனைகளிலும் நிலவிய அந்நியத்தன்மை எங்கள் படுக்கையறையையும் விட்டு வைக்கவில்லை. தாம்பத்திய வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லாமல்தான் பார்த்துக்கொண்டார் என்னவர். உண்மையில், இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவரை என்னவர் என்று குறிப்பிடும்போது மிகவும் நெகிழ்வாக உணர்கிறேன். அவரை நான் அடைந்தது எனது பல ஜென்மப் பேறு என்று நிஜமாகவே நம்புகிறேன்.

இவ்வளவு இருந்தும், என் அக ஆழத்தில் ஒரு பள்ளம் இருப்பது போலவும், அது நிரம்பாமலே என் வாழ்நாள் கழிந்துகொண்டிருக்கிறது என்கிற மாதிரியும் உணர ஆரம்பித்தேன். ஏழு வருடங்கள் இப்படியே கழிந்தன.

ஏழாவது வருடத் துவக்கத்தில் எனக்கு ஒரு கனவு அடிக்கடி வரத் தொடங்கியது. எங்கள் ஊர்ப் பக்கம் கந்த சஷ்டியை ஒட்டி சூரன் வேடம் தரித்து வருவார்கள். அப்படிப்பட்ட ஒரு சூரன் என் கனவில் தவறாமல் வருவான். கல்த் தொட்டியாக ஆகியிருக்கும் என் அடிவயிற்றைக் கூர்மையான சூலத்தால் குத்திப் பிளப்பான். நானானால் சிரித்துக்கொண்டிருப்பேன்.

இந்நிலையில் எங்கள் வீட்டுக்குள் நள்ளிரவில் ஒருவன் புகுந்து விட்டான். திருட வந்தவனாகத் தான் இருக்க வேண்டும். கத்தி முனையில் எங்களை நிறுத்தித் தூணோடு கட்டிப்போட்டு விட்டு, அலமாரிச் சாவியைக் கேட்டு மிரட்டினான். என் முகத்திலும் அவர் முகத்திலும் டார்ச் லைட் ஒளி பட்டுப் பட்டு விலகியபோது பார்வை கூசியது எனக்கு. கண்களைச் சுருக்கிக் கொண்டு பார்த்ததில் வந்தவனுடைய உருவமும் முகமும் ஓரளவு துலங்கியது. இளைஞன்தான். வயது இருபத்தைந்தை ஒட்டி இருக்கலாம்.

என்ன நினைத்தானோ, எதைக் கண்டானோ, சடாரென்று என்னை நெருங்கி என் கட்டுகளை மட்டும் அவிழ்த்துவிட்டான். பல்லிடுக்கில் கவ்விய கத்திக்கு மறுபுறம் மலர்ந்த முறுவல் பயங்கரமானதாக இருந்தது. பிறகு அவன் என் கணவரின் கண்முன்னே என்னை . . . என்னை . . .

இதற்காகவே வந்தவன்போல இறங்கிப்போய்விட்டான். தான் தேடி வந்ததை விடவும் அதிகமாகவே கிடைத்துவிட்டதாக உணர்ந்தானோ என்னவோ.

நான் குமுறிக் குமுறி அழுதேன். என்னவர் அருகில் அமர்ந்து ஆறுதல் சொன்னார். விபத்தில் ஒரு அங்கம் ஊனமாகிறவர்கள் கிடையாதா, இதை ஒரு விஷய மாகவே நினைக்க வேண்டியதில்லை, யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்ளலாம் என்றெல்லாம் பலவிதமாகத் தேற்றினார். சில விஷயங்களை அப்படியெல்லாம் மூடி மறைத்துவிட முடியாது என்பதுகூடத் தெரியாத அப்பாவி அவர். அவருடைய அன்பின் ஜ்வாலையில் அப்படியே பொசுங்கிவிட மாட்டோமா என்று ஏக்கமாக இருந்தது.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல வேறு இரண்டு பிரச்சினைகள் முளைத்தன. என்னவரின் அன்பில் ஒரு இம்மி அதிகரித்துவிட்டது போலவும், அதற்குக் காரணம் அவரால் இனி வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத அந்த இரவுதான் என்றும், தன்னுடைய உபரிப் பரிவின் மூலம் எனக்கும் அதை சதா நினைவூட்டி வருகிறார் என்றும் தோன்றத் தொடங்கியது எனக்கு. எங்களுக்குள் தொடுகை என்பதே அநேகமாக நின்றுபோய் விட்டது என்பதுபோக, நான் ஒரு பிச்சைப் பாத்திரத்துடன் எந்நேரமும் அவர் முன்னால் இறைஞ்சிக்கொண்டு நிற்பதுபோல உணர ஆரம்பித்தேன்.

இரண்டாவது விஷயம்தான் இன்னும் சிக்கலானது. சூலத்தால் கல்த் தொட்டியைப் பிளக்க வந்து சேரும் கனவுச் சூரனுக்கு ஒரு முகம் கிடைத்துத் தொலைத்தது. வேளை கெட்ட வேளைகளில் கண்முன் அந்தரத்தில் மிதந்து பழிப்புக் காட்டியது.

அதிக நாட்கள் இந்தச் சித்திரவதையைத் தொடர அனுமதிக்கவில்லை நான். என்னவரைப் பிரிந்து பிறந்தவீடு திரும்பிவிட்டேன். விட்ட இடத்திலிருந்து படிப்பைத் தொடர்ந்து நானாக உத்தியோகம் தேடித்தனியாக வாழ்ந்து தீர்த்து போன ஆண்டுதான் ஓய்வு பெற்றேன். நான் பிரிந்துபோவதாக அறிவித்த பிறகுகூட ஒரு சொல் வன்மமாக உதிர்க்காத, கோர்ட் படியேறாத உத்தமரைப் பிரிந்து வந்தது தவறோ என்று சமீபகாலமாக அடிக்கடி தோன்றுகிறது. வயதாகிவிட்டதில்லையா, குற்றவுணர்ச்சியின் வேகம் தாள முடியாததாக இருக்கிறது.

வாசகிகள்தாம் சொல்ல வேண்டும், நான் செய்தது சரியா தவறா என்று.

ஆனால், அவர்களிடம் இன்னொரு உண்மையையும் நான் மறைக்க விரும்பவில்லை. எனக்குள் ஒரு பள்ளம் நிரந்தரமாக இருந்து வந்தது என்று சொன்னேனில்லையா, அது நிரம்பித் ததும்பியதும் அந்த விபத்து நடந்த இரவில்தான் . . .

பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

*******

நன்றி: உயிர்மை

Mar 25, 2011

ஒரு கட்டுக்கதை - அம்பை

பன்றி என்னுடன் சம்பாஷிக்க வந்தபோது மாலை ஆறரை மணி இருக்கும். ஒரு பதினைந்து
இருபது குட்டிகளாவது இருக்கும் தொளதொளத்துத் தொங்கிய அதன் வயிற்றில்.
சாக்கடையில் புரண்டுவிட்டு வந்திருந்தது. மேல்உடம்பு கன்னங்கரேல் என்று
சாக்கடைத் தண்ணீரில் பளபளத்தது. கீழே, வயிறு சதையின் நிறத்தில்
கட்டிகட்டியாய்த் தொங்கியது.ambai5

''இதோ பார். எனக்குப் பேச வேண்டும்'' என்றது.

''என்னை எப்படித் தேர்ந்தெடுத்தாய்?'' என்றேன்.

''உன் புத்திசாலித்தனமான, தீட்சண்யமான கண்களைக் கண்டு உன்னைத் தேர்ந்தெடுத்தேன் என்றெல்லாம் சொல்வேன் என்று எதிர்பார்க்காதே. பார்க்கப்போனால் அப்படி ஒரு ஒளியும் எனக்குத் தெரியவில்லை. பார், நான் ஒரு பன்றி. எனக்குப் பேச வாய்ப்புக் கொடு. பொழுது போகாமல் திண்டாடும் பன்றி நான்'' என்றது.

அப்படி புகழ்ச்சியில் மயங்கும் நபர் இல்லை நான். இருந்தாலும் இது கொஞ்சம் அத்து மீறிய ஆணவமாய்ப் பட்டது.

''இதோ பார், எனக்கு நேரம் இல்லை'' என்று சூடாகச் சொல்வதற்குள் குட்டிகள் தொங்கும் பகுதியைப் பக்கவாட்டில் தழையவிட்டு அமர்ந்துவிட்டது பன்றி.

''சரி பேசு'' என்றேன்.

''பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்'' என்றது, பெருத்த தலையைக் கீழே சாய்த்தபடி.

''என் காதில் விழவில்லை''

''மெளனமாய்ப் பேசுகிறேன்'' என்றது.

ஆணவப் பன்றிகளுக்கு அடுத்தபடி என்னால் பொறுக்க முடியாதது வேதாந்தப் பன்றிகள். அசுவாரஸ்யமாய்த் தலையைத் திருப்பிக் கொண்டடேன் எதிர்ப்பக்கம்.

''சும்மா தமாஷ். ஜனங்கள் மிருகங்களின் வாயிலிருந்து ஞானம் சொட்டும் சொற்கள் வரும் என்று நினைக்கிறார்கள். நீதிக் கதைகளில் ஓட விடுகிறார்கள். 'சீ, சீ இந்தப் பழம் புளிக்கும்' போன்ற நீதியை உதிர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். குப்பையில் அளைந்து, சோர்ந்து, சலித்துப்போன பன்றி நான். ஞான சம்பந்தமான விஷயங்களில் எனக்கு ஈடுபாடில்லை'' என்றது.

''எதைப் பற்றித்தான் பேச விரும்புகிறாய்?''

''உங்கள் கட்டடத்தின் வாயிற்கதவு பற்றி.''

மாடியும் கீழுமாய் ஆறு வீடுகள் கொண்ட கட்டடம் அது. அடுத்தாற்போல், முள்வேலியால் இரு பக்கமும் அடைக்கப்பட்ட வெற்று மனை. வெற்று மனை என்று சொன்னது பேச்சுக்காத்தான்.குடிசை ஜனங்களின் கட்டணம் இல்லாத கழிப்பிடம் அது. பன்றிகளின் வாசஸ்தலம். மத்தியான வேளைகளில் ஜன்னல் அருகே ட்ரியோ ட்ரியோ என்று கூச்சம் கேட்கும். பன்றிகள் ஓடும். சில சமயம் தெரு ஆரம்பத்திலுள்ள சந்தில் நுழையும் போது க்ஹே க்ஹே என்று ஆரம்பத்திலுள்ள ச்நதில் நுழையும்போது க்ஹே க்ஹே என்று மூச்சு சீறும் கதறல் கேட்கும். நின்றால், ''போயிட்டேயிருங்க. பன்னி அடிக்கிறாங்க'' என்று தள்ளி விடுவார்கள்.

''எதுக்கு, எதுக்குப்பா அடிக்கிறாங்க?''

''எதுக்கு அடிப்பாங்க? சாப்பிடத்தான். நவந்துகிட்டே இருங்க.''

கட்டடத்தின் வாயிற்கதவில் ஒருநாள் நுழையும் சதுர அளவு இடம் இருந்தது. பலமுறை,
துரத்தப்பட்ட பன்றிகள் அதில் நுழைந்து ஓடும். அதை மூடிவிடும் யோசனை இருந்தது.

''அந்த நுழைவாயில் எனக்குப் பிடிக்கிறது. அதில் நான் ஆனந்தமாய் நுழைய முடிகிறது. நாலு பக்கமும் முள்வேலி இருக்க, நுழைவதற்கான வாகான இடம். பரபரவென்ற நான் ஓடும்போது சுவர்க்கக் கதவு மாதிரி எனக்குத் திறந்து வழிவிடுகிறது. அதைப்பற்றிப் பேச எனக்குப் பிடிக்கிறது. ஒரு பன்றிக்குத் தேவை, நுழையக் கூடிய கதவுதான் என்று எனக்குத் தோன்றுகிறது.''

வோட்ஹவுஸின் புத்தகங்களின் செல்லப் பன்றி நினைவுக்கு வந்தது. பிரபுவின் கொழுத்த ரோஜா வண்ணப் பன்றி. போட்டிகளில் பரிசு பெறும் பன்றி.

அதைப்பற்றிச் சொன்னேன்.

அமெரிக்கப் பன்றிப் பண்ணைகளில் கொழுக்கவைக்கப்பட்டு, வலியில்லாமல் இறக்கும் பன்றிகள்பற்றிச் சொன்னேன். வலியில்லாமல் இறப்பது ஒரு பெரிய சலுகைதான் என்ற.
நிறம்பற்றி அவ்வளவு சுவாரஸ்யம் காட்டவில்லை. சாகப்போகிற பன்றி கறுப்பானால் என்ன, ரோஜா வண்ணமானால் என்ன என்றது. மற்றவர்கள் சாப்பிடுவதற்காக இறப்பதுப்பற்றி ஒரு ட்சேபனையும் காட்டவில்லை. அதுபற்றிக் கேட்டபோது ஆட்சேபணை காட்டக்கூடிய அதிகாரம் உள்ள நிலையில் தான் இல்லை என்று பேச மறுத்துவிட்டது. சிறிது நேரம் மெளனத்தில் கழிந்தது.

''சாவைப்பற்றி என்ன நினைக்கிறாய்?'' என்றேன்.

''அது ஒரு பெரிய கழி'' என்றது. ''நீளமாய், உருண்டையாய் இருப்பது. இரும்பாலோ, மரத்தாலோ ஆனது. இரும்பானால் ஆசனத்திலிருந்து வாய்வரை செருகப்படும் சாவு. மரமானால் அடிச்சாவு.

''எப்படி அலட்டிக்கொள்ளாமல் சொல்கிறாய்?''

''அலட்டிக்கொண்டு ஒன்றம் ஆகப்போவதில்லை. செருகுச் சாவு, அடிச்சாவு, இயந்திரச்சாவு என்று பிரித்துத் தேர்ந்தெடுக்கும் சலுகை வேண்டும் என்று போராடலாம். பன்றிகளிடம் ஒற்றுமை இல்லை.''

''இயற்கையான சாவு பற்றிச் சொல்லமாட்டேன் என்கிறாயே?''

''சாவதில் என்ன இயற்கை இருக்கிறது? வலுக்கட்டாயம்தான்.''

''இல்லையில்லை. மரத்திலிருந்து இலை உதிர்வது மாதிரி மெல்ல இயற்கையோடு கலப்பது...''

''எனக்கு ஒரு உபகாரம் செய்''

''என்ன?''

''தயவுசெய்து இதில் கவிதையைக் கொண்டுவராதே'' என் வாழ்க்கை ஏற்கனவே கெட்டுக்கிடக்கிறது. கவிதையை வேறு என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.''

''நான் சொன்னதில் என்ன கவிதைத்தனம் இருக்கிறது?''

''நீ சாவிலிருந்து ரத்தத்தைப் பிரிக்கிறாய். ரத்தம் சிந்தாத, அழகான இலையுதிர்ச் சாவு பற்றிச் சொல்கிறாய். ஆனால் ரத்தம் சேர்ந்தது சாவு. வெளியில் கொட்டினாலும் உள்ளே உறைந்து போனாலும் ரத்தமில்லாமல் சாவு இல்லை. நீ சாவை அழகாக்கப் பார்க்கிறாய்.''

குற்றச்சாட்டு.

சாவைப்பற்றி முதலில் எண்ணியது பன்னிரண்டு வயதில். கால்கள் அந்தரத்தில் மிதக்க, ஒரு பந்தை எம்பிப் பிடித்துக் கொண்டிருந்தபோது, தலையை மேலே வீசிப் பந்தைப் பார்த்த கணத்தில், வலியுடன் கூடிய மின்னலாய் அந்த எண்ணம் தாக்கியது. நாம் சாகிறோம். உள்ளே ஓடிவந்து முட்டியில் முகம் கவித்துப் பயந்தேன். கை, கால், முகம், உடம்பு எல்லாம் அந்நியமாகப்பட்டது. மாட்டிவிட்ட ஒன்றாய்த் தோன்றியது. இதனுள்ளே நான், நான், நான் என்று புகுந்து பார்த்தேன். பீதி கவ்வியது. செவிக் குழியிலா, கண்ணினுள்ளா, பல்லிடுக்கிலா, அக்குள் பள்ளத்திலா எதில் நான் இருக்கிறேன் என்று தேடினேன். பயத்தில் வியர்த்துப்போனேன்.

அதன்பின் சில சலுகைகளை நானே எனக்குத் தந்துகொண்டேன். சில வகைகளில் நான் சாக
விரும்பவில்லை. விபத்தில் சாக விரும்பவில்லை. உடல் சிதைய, திடீர்த் தாக்குதலில் சாவு, விபத்துச் சாவு. எனக்கு வேண்டாம். வலியுடன் துடித்துச் சாவு - அதுவும் வேண்டாம். இரண்டாம் உலகப்போர்பற்றிப் படித்தபின் யூதர்களைப் போல் விஷப் புகைக்கூண்டுகளில் சாக நான் விரும்பவில்லை. அணு ஆயுதத்தால் ஆன ஹிரோஷிமாச் சாவும் வேண்டாம். வியட்நாமிற்குப்பின் நபாம் போன்ற இரசாயனக் குண்டுகளால் ஆன சாவையும் ஒதுக்கினேன். ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்கக் கண்டங்களைக் கண்டுகொண்டபின், பஞ்சசாவு, வெள்ளச் சாவு, பூகம்பச் சாவு, சிறையில் சாவு, தூக்குக் கயிற்றுச் சாவு, துப்பாக்கிச் சாவு என்று ஒவ்வொன்றாய் விலக்கிக்கொண்டே வந்தேன். எஞ்சியது அழகுச் சாவு. வெளியுடன் கலக்கும் கவிதைச் சாவு. வலியில்லை. ரணமில்ல. குருதியில்லை.

பன்றியின் கோபம் எனக்குப் புரிந்தது.

சில நாட்களுக்குப் பின் ஒரு விடிகாலைப் பொழுது க்ஹரே... என்று அலறல் கேட்டது. நாலு பேர் கழியுடன் பன்றியைத் துரத்தினார்கள். அது விரைந்து வாயிற்கதவை நோக்கி ஓடியது. அதன் உடம்பு இன்னமும் பெருத்துவிட்டதை அது மறந்துவிட்டது. அந்தச் சதுர இடைவெளியில் சிக்கிக்கொண்டது. நான் ஓடிவரும் முன் ரத்தம் பீறிட்டு, பொம்மைகள் மாதிரிப் பன்றிக் குட்டிகள் வெளியில் விழுந்தன.அருகில் போனதும் பன்றி என்னை அடையாளம் கண்டுகொண்டது. சிவப்பேறிய கண்களைத் திறந்து சொல்லியது.

''தயவுசெய்து சாவைப்பற்றிய ஏதாவது அரிய உண்மையைச் சொல்லிவிட்டுப் போவேன் என்று
எதிர்பார்க்காதே. ஒன்றுதான் என்னால் சொல்ல முடியும். நாம் சாகிறோம்.''

நீண்ட கழிகள் நெருங்கி வந்தன.

*நன்றி : வீட்டின் மூலையில் ஒரு சமையலறை*

Mar 24, 2011

சிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும் -சுரேஷ்குமார இந்திரஜித்

நான் சிங்கப்பூரிலிருந்து, தாய்லாந்திற்கு விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது, அதிர்ஷ்டவசமாக எனக்கு அடுத்த இருக்கையில் ஜப்பான் எழுத்தாளர் டோகுடோ ஷோனினைச் சந்தித்தேன். முதலில் அந்தப் பெயரை பார்த்ததும் 'சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும், என்ற நாவல் எழுதியிருந்த டோகுடோ ஷோனின் ஞாபகமே எனக்கு வந்தது. அதனால் அவரை விசாரித்து அவர்தான் இவர் என்று அறிந்து கொண்டேன். நான் விசாரித்தது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருப்பதை அவர் முகம் காட்டியது. 'நீங்கள் இந்தியாவா, ஸ்ரீலங்காவா ? ' என்று அவர் கேட்டார்.SURESHKUMARA INDRAJITH

ராபர்ட் அகஸ்ஸி மொழிபெயர்த்திருந்த அவரின் 'சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும் ' நாவல் என்னை மிகவும் ஈர்த்திருந்தது. ஒரு சிறுமியின் இயற்கையான அறிவுக்கூர்மையும் சிருஷ்டிகரமும் அவரின் பெற்றோர், சுற்றத்தார், பள்ளி ஆசிரியைகள் ஆகியோரினால் நாசமாக்கப்படுகின்றது என்பதை வெவ்வேறு கோணங்களில் அந்நாவலில் அவர் சித்தரித்திருக்கிறார். நாவலில் வரும் சிறுமிக்குப் பெயர் கிடையாது. அவள் மனம் இயற்கையாக கட்டமைக்கப்படுவதைச் சுற்றியுள்ளவர்கள் காலங்காலமாகச் சொல்லப்பட்டுவரும் கருத்துக்கள் ஆக்கிரமிப்பதையும், பள்ளிக்கூடங்கள் பயத்தை உருவாக்கி மதத்தைச் சாரும் மனத்தை உருவாக்குவதையும் ஆழமான பார்வையுடன் பார்த்திருந்தார். வீட்டின் பின்புறத்திலுள்ள நந்தவனத்தில் திரியும் வண்ணத்துப்பூச்சிகளுக்கும் சிறுமிக்கும் உள்ள உறவை அவர் சித்தரிக்கும் இடங்களில் இயற்கையான கவித்துவம் வெளிப்பட்டிருந்தது.

நான் டோகுடோ ஷோனிடம் இந்த நாவலை சிலாகித்துப் பேசினேன். தான் எழுதிய நாவல்களில் பிடித்தமான நாவலாக இதைக் கருதுவதாகவும், ஆனால் பெரும்பாலோர் 'சுழலும் காலம் ' என்ற நாவலையெ முக்கியமானதாகச் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார். அவர் எழுத்துத்துறைக்கு வந்த விதம் பற்றிக் கேட்டேன். அவர் கூறியதின் சுருக்கத்தைக் கூறுகிறேன்.

நான் எழுத்தாளர் யாசுனாரி கவாபாட்டாவின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தேன். அதன் விளைவாக எழுத முற்பட்ட எனக்கு என் ஆசிரியர் கரஷமாவின் வழிகாட்டல் உதவியாக இருந்தது. அவர் மது அருந்தும் சந்தர்ப்பங்கள் என் விருப்பத்துக்குரியனவாக இருந்தது. அவருக்கும் தெரிந்த எந்த ஒரு விஷயம் பற்றியும் கூர்மையான பார்வையுடன் வித்தியாசமாகப் பேசுவார். நான் எழுதியிருந்த கதையை முதலில் அவரிடம் காட்டியதும், அவர் அதை படித்துவிட்டு 'இந்த கதையைக் கிழித்து உன் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு மலர்ச்செடியின் கீழே புதைத்துவிடு ' என்று கூறினார். சில நாட்கள் கழித்து என்னைக்கூட்டிக்கொண்டு மியூசியம் சென்றார். அங்கு இருந்த சிலைகள் அவர் சுட்டிக்காட்டிய பின்னே அவற்றினுடைய சிருஷ்டிகரம் என்னைத் தாக்கியது. அவர் கூடச் சென்று கொண்டிருக்கும்போது திடாரென்று ஒரு மரத்தையோ, செடியையோ கல்லையோ காட்சியையோ சுட்டிக் காண்பித்துப் பார்க்கச் சொல்லுவார். அவற்றின் அழகு என் மனத்தில் பதியத்தக்கதாக இருக்கும். அவர் கூட ஒரு நாள் சென்று கொண்டிருக்கும்போது வழியில் ஒரு வாடகைக்கார் டிரைவர், அவரைப் பார்த்து ஓடிவந்தான். அந்த டிரைவர் தன்னுடைய குடும்ப விவகாரங்களை ஏற்கெனவே இவருக்குத் தெரிவித்திருப்பான் போலிருக்கிறது. மனைவியை இழந்த இரண்டு குழந்தைகளையுடைய அவனை மறுமணத்திற்கு உறவினர்கள் வற்புறுத்திக்கொண்டிருந்த போதிலும் மறுத்துக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது. நோயுற்ற மனைவி உயிரோடு இருந்தவரை அவளது நலனுக்காகவும் தற்போது குழந்தைகளின் நலனுக்காகவும் தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ளவனாகத் தோன்றினான். தியாகியாக பாவித்து இயங்கிக் கொண்டிருப்பது மனத்திற்கு சோர்வைத்தரும் என்றும், உட்புறமாக மறுமணத்தின் விருப்பத்தை மனம் வற்புறுத்திக்கொண்டேயிருப்பதால் வெளிப்புறத்தில் மனம் அதை மறுத்துக்கொண்டேயிருக்கிறது என்றும், மறுமணம் செய்வதின் மூலம் மனம் சோர்விலிருந்து விடுதலையடைந்து உற்சாகமுறும் என்றும் ஆனால் மறுமணத்திற்குப் பின்னாலும் ஏதாவது ஒரு தியாகத்தைத் தேடி மனம் அலைந்தால் அதை அவன் பரிசீலனை செய்யவேண்டும் என்றும் கரஷ்மா கூறினார்.

அவருக்கு பல வகையான மனிதர்கள் நண்பர்களாக இருந்தனர். எவ்வாறு இத்தனை வகையான மனிதர்களிடம் இவர் நட்புறவு கொண்டிருக்கிறார் என்று நான் ஆச்சரியமடைவதுண்டு. சமூகத்தின், அந்தஸ்து மிக்க மனிதர்கள், வட்டாரப் போக்கிரிகள், சிறு வியாபாரிகள், கெய்ஷா பெண்கள் என்று அவருடைய உலகம் பெரியதாக இருந்தது. ஒரு நாள் நான் அவரை காணச் சென்றிருந்தபோது வெளியே கிளம்பிக்கொண்டிருந்தார். ஒரு கெய்ஷா பெண்ணைப் பார்க்கச் செல்வதாகக் கூறி, நான் மறுத்த போதும், விடாது என்னையும் கூட்டிச் சென்றார். கரஷீமா மீது மிகுந்த மரியாதையுடையவளாக அவள் தோன்றினாள். அவளுக்கு லெளகீகக் காரியங்களில் இவர் பல உதவிகள் செய்திருக்கிறார் என்று என்னால் யூகம் செய்து கொள்ள முடிந்தது. அவர்களுடைய பேச்சு, பிரதானமாக குழந்தைகளுக்கும், பெரியவர்கள், சூழல், சமூகம் ஆகியவற்றிற்கும் இடையேயான உறவைப் பற்றியதாக இருந்தது. ஒரு சுற்றுலா மையத்தில் மரங்கள் சூழ்ந்திருந்த குளக்கரையில் சிறுமியான தன் மகளுடன் அமர்ந்திருந்த போது, பளபளக்கும் நீரைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த சிறுமி கையில் இருந்த சிறு தட்டை அக்குளத்தில் மிதக்கும் படியாக வீசி எறிய வேண்டும் போல் இருப்பதாகத் தெரிவித்த சம்பவத்தை அப்பெண் கூறினாள். இதே போல் இன்னொரு நாள் டேபிள் வெயிட்டான கண்ணாடி கோளத்திற்குள்ளே செல்லவேண்டும் போல் இருப்பதாகக் கூறியதாகவும் மற்றொரு நாள் வண்ணத்துப் பூச்சிகளுடன் பறந்து திரியும் கனவு கண்டதாகவும் கூறியதாகவும், இவை எல்லாம் மனத்தின் சிருஷ்டிகர அடையாளங்கள் என்றும், இவற்றை நாசப்படுத்தும் சக்திகளே குழந்தைகளைச் சுற்றிலும் உள்ளதாகவும் அந்தப்பெண் தெரிவித்தாள். அனைத்து விஷயங்களிலும், பெரியவர்களின் கருத்து திணிக்கப்படும் நிலையில், குழந்தைகளின் இயற்கையான கூர்மை அறிவு நிலையில் சிதைக்கப்படுவதாக கரஷ்மா கூறினார். அந்தப்பெண்ணின் பெயர் எனக்கு நினைவில் இல்லை. இது நடந்த பலகாலம் ஆகிவிட்டது. கரஷ்மாவும் இறந்து விட்டார். இந்த உரையாடல் எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அப்போது அந்த அறையில் இருந்த சிலபொருட்கள் அவற்றின் வடிவம், நிறம், அவர்கள் உட்கார்ந்திருந்த தோரணை ஆகியவை தற்போதும் அப்படியே நினைவில் உள்ளன. எழுத ஆரம்பித்தபின் இந்த உரையாடல் என்னை தொந்திரவு செய்து கொண்டேயிருந்தது. கலை வடிவமாக எழுத இயலாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். தொந்திரவை தாள இயலாமல் எப்படியோ எழுத ஆரம்பித்து முடித்துவிட்டேன். அதுதான் நீங்கள் விரும்பும் 'சிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும் ' என்ற நாவல்.

- டோகுடோ ஷோனின் கூறியதின் சுருக்கத்தை மேலே கொடுத்திருக்கிறேன். அவரின் தொழில் பற்றி விசாரித்ததற்கு ஒரு எலக்ட்ரானிக் கம்பெனியில் பணிபுரிவதாகக் கூறி அது சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கூறினார். அதில் எனக்குச் சிறிதளவிற்கு மேல் எதுவும் விளங்கவில்லை. தவிர அவை இந்தக் கதைக்கு அவசியமானதுமல்ல.

***

மறைந்து திரியும் கிழவன், சிறுகதைத் தொகுப்பு 1993

***

நன்றி: திண்ணை

Mar 21, 2011

உலக இலக்கியம் தமிழில்

 

நண்பர்களே.

   அழியாச்சுடர்கள், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுப்பதுபோல், உலக இலக்கியங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை ஒரே இடத்தில் தொகுக்கலாம் என்று,  உலக இலக்கியம் என்ற வலைத்தளத்தைத் தொடங்கியிருக்கிறோம்.  வந்து பார்த்து கருத்து கூறுங்கள். இந்த முயற்சிக்கு வித்திட்ட எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அவர்களுக்கு நன்றி.

நண்பர்கள், இந்த தளத்திற்கும் தங்கள் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி,

Mar 20, 2011

நகரம் - சுஜாதா

சுவர்களில் ஓரடி உயர எழுத்துக்களில் விளம்பரங்கள் விதவிதமாக ஒன்றி வாழ்ந்தன. நிஜாம் லேடி புகையிலை , ஆர்.கே.கட்பாடிகள் -எச்சரிக்கை! புரட்சி தீ! சுவிசேஷக் கூட்டங்கள் - ஹாஜி மூசா ஜவுளிக்கடை (ஜவுளிக்கடல் ) - 30 .9 -1973 அன்று கடவுளை நம்பாதவர்கள் சுமக்கப் போகும் தீச்சட்டிகள்

        மதுரையில் ஒரு சாதாரண தினம். எப்போதும் போல "பைப்" அருகே குடங்கள் மனிதர்களுக்காகsujatha வரிசைத் தவம் இருந்தன . சின்னப் பையன்கள் 'டெடன்னஸ்" கவலை இன்றி மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் போக்குவரத்துக் கழக பஸ்கள் தேசியம் கலந்த டீசல் புகை பரப்பிக் கொண்டிருந்தன . விரைப்பான கால்சராய் சட்டை அணிந்த ப்ரோடீன் போதா போலீஸ்காரர்கள் இங்கிட்டும் அங்கிட்டும் செல்லும் வாகன- மானிட போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி கொண்டுஇருந்தார்கள் நகரின் மனித இயக்கம் ஒருவிதப் ப்ரோவ்னியான் இயக்கம் போல இருந்தது . கதர் சட்டை அணிந்த மெல்லிய அதிக நீளமில்லாத ஊர்வலம் ஓன்று, சாலையின் இடதுபுறத்தில் அரசாங்கத்தை விலைவாசி உயர்வுக்காக திட்டிக்கொண்டே ஊர்ந்தது. செருபில்லாத டப்பாக்கட்டு ஜனங்கள் மீனாட்சி கோயிலின் ஸ்தம்பித்த கோபுரங்கள் , வற்றிய வைகை , பாலம் .. மதுரை !

நம் கதை இந்த நகரத்துக்கு இன்று வந்திருக்கும் ஒரு பெண்ணைப் பற்றியது. வள்ளியம்மாள் தான் மகள் பாப்பாத்தியுடன் மதுரை பெரியாஸ்பத்திரியில் ஓ.பி டிப்பாட்மேண்டின் காரிடாரில் காத்திருந்தாள். முதல் தினம் பாப்பாத்திக்கு சுரம். கிராம ப்ரைமரி ஹெல்த் சென்டரில் காட்டியதில் அந்த டாக்டர் பயங்காட்டிவிட்டார். "உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துகிட்டு போ' என்றார் அதிகாலை பஸ் ஏறி ....

பாப்பாத்தி ஸ்ட்ரெச்சரில் கிடந்தால். அவளைச் சூழ்ந்து ஆறு டாக்டர்கள் இருந்தார்கள். பாப்பாத்திக்குப் பன்னிரண்டு வயது இருக்கும். இரண்டு மூக்கும் குத்தப்பட்டு ஏழைக் கண்ணாடிக் கற்கள் ஆஸ்பத்திரி வெளிச்சத்தில் பளிச்சிட்டன. நெற்றியில் விபூதிக் கீற்று . மார்பு வரை போர்த்தப்பட்டுத் தெரிந்த கைகள் குச்சியாய் இருந்தன. பாப்பாத்தி சுரத் தூக்கத்தில் இருந்தால். வாய் திறந்திருந்தது.

பெரிய டாக்டர் அவள் தலையை திருப்பி பார்த்தார்.  கண் இரப்பையை தூக்கிப் பார்த்தார். கண்ணகளை விலரால் அழுத்திப் பார்த்தார். விரல்களால் மண்டையோட்டை உணர்ந்துப் பார்த்தார். பெரிய டாக்டர் மேல் நாட்டில் படித்தவர் போஸ்ட் க்ராசுவேட் வகுப்புகள் எடுப்பவர். ப்ரொபசர் . அவரைச் சுற்றிலும் இருந்தவர்கள் அவரின் டாக்டர் மாணவர்கள் .

"acute case of meningitis . notice  this .."

வள்ளியம்மாள் அந்தப் புரியாத சம்பாசனையின் ஊடே தான் மகளையே ஏக்கத்துடன் நோக்கிக் கொண்டிருந்தாள் . சுற்றிலும் இருந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து ஆப்தல்மாஸ்கோப் மூலம் அந்தப் பெண்ணின் கண்ணுக்குளே பார்த்தார்கள். 'டார்ச்' அடித்து விழிகள் நகருகின்றனவா என்று சோதித்தார்கள் . குறிப்புகள் எடுத்துக் கொண்டார்கள் .

பெரிய டாக்டர், "இவளை அட்மிட் பண்ணிடச் சொல்லுங்கள் " என்றார்.

வள்ளியம்மாள் அவர்கள் முகங்களை மாற்றி மாற்றிப் பார்த்தாள். அவர்களில் ஒருவர், 'இத பாரும்பா, இந்தப்ப் பெண்ணை உடனே ஆஸ்பத்திரியில் சேர்க்கணும். அதோ அங்கே உக்காந்திருக்காரே , அவர் கிட்ட போ , சீட்டு எங்கே ?" என்றார்

வள்ளியம்மாளிடம் சீட்டு இல்லை.

"சாரி அவரு கொடுப்பாரு . நீ வாய்யா இப்படி பெரியவரே ! "

வள்ளியம்மாள் பெரிய டாக்டரைப் பார்த்து, " அய்யா, குழந்தைக்குச் சரியா போயிருங்களா ?" என்றாள் .

"முதல்ல அட்மிட் பண்ணு. நாங்க பார்த்துக்கறோம் . டாக்டர் தனசேகரன், நானே இந்தக் கேசை பார்க்கிறேன். ஸீ தட் ஸீ இஸ் அட்மிட்டட் எனக்கு கிளாஸ் எடுக்கணும். போயிட்டு வந்ததும் பார்க்கறேன்"

மற்றவர்கள் புடைசூழ அவர் ஒரு மந்திரி போல கிளம்பிச் சென்றார். டாக்டர் தனசேகரன் அங்கிருந்த சீனிவாசனிடம் சொல்லிவிட்டு  பெரிய டாக்டர் பின்னால் விரைந்தார்.

சீனிவாசன் வள்ளியம்மாளைப் பார்த்தான்.

"இங்கே வாம்மா . உன் பேர் என்ன ..? டேய் சாவு கிராக்கி ! அந்த ரிஜிஸ்டரை எடுடா..! "

"வள்ளியம்மாள்"

"பேசண்டு பேரு?"

"அவரு செத்து போயிட்டாருங்க .."

சீனிவாசன் நிமிர்ந்தான்

"பேசண்டுன்னா நோயாளி .. யாரைச் சேர்க்கணும் ?"

"என் மகளைங்க "

"பேரு என்ன ..?'

"வள்ளியம்மளுங்க"

"என்ன சேட்டையா பண்ற ? உன் மாக பேரு என்ன ../'

"பாப்பாத்தி '

"பாப்பாத்தி!.. அப்பாடா. இந்தா , இந்தச் சீட்டை எடுத்துகிட்டு போயி இப்படியே நேராப் போனின்னா அங்கே மாடிப்படிகிட்ட நாற்காலி போட்டுகிட்டு ஒருத்தர் உக்காந்திருப்பார் . வருமான பாக்குறவரு அவருகிட்ட கொடு."

"குளந்தங்கே..?'

"குளைந்தைக்கு ஒண்ணும் ஆவாது. அப்படியே படுத்து இருக்கட்டும்  கூட யாரும் வல்லையா ? நீ போய் வா. விஜயரங்கம் யாருய்யா ?"

வள்ளியம்மாளுக்கு பாபதியை விட்டுப் போவதில் இஷ்டமில்லை . அந்த கியூ வரிசையும் அந்த வாசனையும் அவளுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. இறந்து போன தான் கணவன்மேல் கோபம் வந்தது.

அந்த சீட்டை கொண்டு அவள் எதிரே சென்றால். நாற்காலி காலியாக இருந்தது. அதான் முதுகில் அழுக்கு இருந்தது. அருகே இருந்தவரிடம் சீட்டைக் காட்டினாள்.ஆவர் எழுதிக்கொண்டே சீட்டை இடது கண்ணின் கால்பாகத்தால் பார்த்தார்."இரும்மா அவரு வருத்தம்' என்று காலி நாற்காலியை காட்டினார். வள்ளியம்மாளுக்கு தயும்பித் தன் மகளிடம் செல்ல ஆவல் ஏற்பட்டது. அவள் படிக்காத நெஞ்சில் , காத்திருப்பதா - குழந்தையிடம் போவதா என்கிற பிரச்சனை உலகளவுக்கு விரிந்தது.

"ரொம்ப நேரமாவுங்களா..? " என்று கேட்க பயமாக இருந்தது அவளுக்கு.

வருமானம் மதிப்பிடுபவர் தன் மருமானை அட்மிட் பண்ணிவிட்டு மெதுவாக வந்தார் உட்கார்ந்தார்.  ஒரு சிட்டிகைப் பொடியை மூக்கில் மூன்று தடவை தொட்டுக் கொண்டு கர்சிப்பைக் கயிறாக சுருட்டித் தேய்துக்க் கொண்டு சுறு சுறுப்பானார்.

"த பார் வரிசையா நிக்கணும். இப்படி ஈசப்புச்சி மாதிரி வந்திங்கன்ன என்ன செய்யிறது ..?"

வள்ளியம்மாள் முப்பது நிமிஷம் காத்திருந்தபின் அவள் நீட்டிய சீட்டு அவளிடமிருந்து பிடுங்கப்பட்டது.

"டாக்டர் கிட்ட கை எழுத்து வாங்கி கிட்டு வா , டாக்டர் கையழுத்தே இல்லையே அதிலே ..?

"அதுக்கு எங்கிட்டு போவனும்..?"

"எங்கிருந்து வந்தே ..?'

"மூனாண்டிபாடிங்கே !'

கிளார்க் "ஹாத்" என்றாள். சிருதார். "மூணாண்டிபட்டி ! இங்கே கொண்ட அந்த சீட்டை "

சீட்டை மறுபடி கொடுத்தால். அவர் அதை விசிறி  போல் இப்படிப் திருப்பினார்.

"உன் புருசனுக்கு என்ன வருமானம் ?"

"புருஷன்  இல்லீங்க "

"உனக்கு என்ன வருமானம்? "

அவள் புரியாமல் விழித்தாள்.

"எத்தன ரூபா மாசம் சம்பாதிப்பே ?"

"அறுப்புக்குப் போன நெல்லாக் கிடைக்கும் அப்புறம் கம்பு, கேழ்வரகு !'

"ரூபா கிடையாதா.! சரி சரி .. தொண்ணூறு ரூபா போட்டு வைக்கிறேன்."

"மாசங்களா?"

"பயப்படாதே .சார்ஜு பண்ண மாட்டாங்க . இந்த , இந்த சீட்டை எடுத்துகிட்டு கொடு இப்படியே நேராப் போயி இடது பாக்கள் - பீச்சாங்கைப் பக்கம் திரும்பு. சுவத்திலே அம்பு அடையாளம் போட்டிருக்கும் . 48  - ம் நம்பர் ரூமுக்கு போ ."

வள்ளியம்மாள் அந்த சீட்டை இரு கரங்களிலும் வாங்கி கொண்டால். கிளார்க் கொடுத்த அடையாளங்கள் அவள் எளிய மனதை மேலும் குழப்பி இருக்க , காற்றில் விடுதலை அடைந்த காகிதம் போல் ஆஸ்பத்திரியில் அலைந்தாள். அவளுக்கு படிக்க வராது. 48  ம் நம்பர் என்பது உடனே அவள் ஞாபகத்திலிருந்து விலகி இருந்தது. திரும்பி போயி அந்த கிளார்க்கை கேட்க அவளுக்கு அச்சமாக இருந்தது.

ஒரே ஸ்ட்ரச்சரில் இரண்டு நோயாளிகள் உக்கார்ந்து கொண்டு, பாதி படுத்துக்கொண்டு மூக்கில் குழாய் செருகி இருக்க அவளைக் கடந்தார்கள். மற்றொரு வண்டியில் ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் சாம்பார் சாதம் நகர்ந்து கொண்டிருதது. வெள்ளைக் குல்லாய்கள் தெரிந்தன . அலங்கரித்து கொண்டு வெள்ளை கோட் அணிந்து கொண்டு ஸ்டேதேஸ்கோப் மாலையிட்டு, பெண் டாக்டர்கள் சென்றார்கள். போலீஸ்காரர்கள், காபி டம்ளர்காரர்கள், நர்சுகள் எல்லோரும் எல்லா திசைகளிலும் நடந்து கொண்டு இருந்தார்கள். அவர்களை நிறுத்திக் கேட்க அவளுக்கு  பயமாக இருந்தது. என்ன கேட்பது என்றே அவளுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு அறையின் முன் கும்பலாக நின்று கொண்டு இருந்தார்கள். அங்கே ஒரு ஆள் சீட்டுப் போல பல பழுப்புச் சீட்டுகளைச் சேகரித்து கொண்டிருந்தான். அவன் கையில் தான் சீட்டைக் கொடுத்தாள். அவன் அதைக் கவனமில்லாமல் வாங்கி கொண்டான். வெளியே பெஞ்சில் எல்லோரும் காத்திருந்தார்கள். வள்ளியம்மாளுக்குப் பாப்பாத்தியின் கவலை வந்தது. அந்த பெண் அங்கே தனிய இருக்கிறாள். சீட்டுகளைச் சேகரித்தவன் ஒவ்வொரு பெயராக கூப்பிட்டு கொண்டிருந்தான். கூப்பிட்டு வரிசையாக அவர்களை உட்கார வைத்தான். பாப்பாத்தியின் பெயர் வந்ததும் அந்த சீட்டை பார்த்து, "இங்க கொண்டு வந்தியா! இந்தா, " சீட்டை திருப்பி கொடுத்து, "நேராப் போ,' என்றான். வள்ளியம்மாள், "அய்யா , இடம் தெரியலிங்களே"  என்றாள். அவன் சற்று எதிரே சென்ற ஒருவனை தடுத்து நிறுத்தி, " அமல்ராஜ் இந்த அம்மாளுக்கு 48 ம் நம்பரை காட்டுய்யா . இந்த ஆள் பின்னாடியே போ . இவர் அங்கேதான் போறார்." என்றான்.

அவள் அமல்ராஜின் பின்னே ஓட வேண்டியிருந்தது.

அங்கே மற்றொரு பெஞ்சில் மற்றொரு கூட்டம் கூடி இருந்தது. அவள் சீட்டை ஒருவன் வாங்கி கொண்டான். வள்ளியம்மாளுக்கு ஒன்றும் சாப்பிடாததாலும், அந்த ஆஸ்பத்திரி வாசனையினாலும் கொஞ்சம் சுற்றியது.

அரை மணி கழித்து அவள் அழைக்கபட்டாள். அறையின் உள்ளே சென்றாள். எதிர் எதிராக இருவர் உட்கார்ந்து காகிதப் பென்சிலால் எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தன் அவள் சீட்டைப் பார்த்தான். திருப்பி பார்த்தான். சாய்த்துப் பார்த்தான்

"ஓ,பி. டிபார்ட்மேண்டிலிருந்து வரியா ..?"

இந்த கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

"அட்மிட் பண்றதுக்கு எழுதி இருக்கு. இப்ப இடம் இல்லை. நாளைக்கு கலையிலே சரியாய் ஏழரை மணிக்கு வந்துடு என்ன..?"

"இங்கேயே வா, நேரா வா, என்ன ?"

வள்ளியம்மாளுக்கு அந்த அறையை விட்டு வெளியே வந்ததும் அவளுக்கு ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் தியாக வந்த விட்ட தன் மகள் பாப்பாத்தியின் கவலை மிகப் பெரியதாயிற்று.அவளுக்குத் திரும்பிப் போகும் வழி தெரியவில்லை. ஆஸ்பத்திரி அறைகள் யாவும் ஓன்று போல் இருந்தன.ஒரே ஆசாமி திரும்ப திரும்ப பல்வேறு அறைகளில் உட்கார்ந்திருப்பது போல தோன்றியது. ஒரு வார்டில் கையை காலைத் தூக்கி கிட்டி வைத்துக் கட்டி பல பேர் படுத்திருந்தார்கள் . ஒன்றில் சிறிய குழந்தைகள் வரிசையாக முகத்தைச் சுளித்து அழுது கொண்டிருந்தன.மிஷின்களும், நோயாளிகளும், டாக்டர்களுமாக, அவளுக்குத் திரும்பும் வழி புரியவில்லை.

"அம்மா" என்று ஒரு பெண் டாக்டரை கூப்பிட்டு தான் புறப்பட இடத்தின் அடையாளங்களைச் சொன்னாள். "நெறைய டாக்டருங்க கூடிப் பேசிக்கிட்டாங்க. வருமானம் கேட்டாங்க. பணம் கொடுக்க வேண்டாமுன்னு சொன்னாங்க. எம் புள்ளைய அங்கிட்டு விட்டுட்டு வந்திருக்கேன் அம்மா! "

அவள் சொன்ன வழியில் சென்றாள். அங்கே கேட்டுக் கதவு பூட்டி இருந்தது. அப்போது அவளுக்கு பயம் திகிலாக மாறியது. அவள் அழ ஆரம்பித்தாள். நட்ட நடுவில் நின்று கொண்டு அழுதாள். ஒரு ஆள் அவளை ஓரமாக நின்று கொண்டு அழச்சொன்னான். அந்த இடத்தில் அவள் அழுவது அந்த இடத்து அசெப்டிக் மணம் போல எல்லோருக்கும் சகஜமாக இருந்திருக்க வேண்டும்.

"பாப்பாத்தி! பாப்பாத்தி! உன்னை எங்கிட்டு பாப்பேன்? எங்கிட்டுப் போவேன்? " என்று பேசிக் கொண்டே நடந்தாள். ஏதோ ஒரு பக்கம் வாசல் தெரிந்தது. ஆஸ்பத்திரியை விட்டு வெளியே செல்லும் வாசல். அதான் கேட்டை திருந்து வெளியே மட்டும் செல்ல விட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வாசலைப் பார்த்த ஞாபகம் இருந்தது அவளுக்கு.

வெளியே வந்து விட்டாள்.அங்கிருந்து தான் தொலை தூரம் நடந்து மற்றோரு வாசலில் முதலில் உள் நுழைந்தது ஞாபகம் வந்தது. அந்தப் பக்கம் ஓடினாள். மற்றொரு வாயிலை அடைந்தாள். அந்த மரப்படிகள் ஞாபகம் வந்தது. அதோ வருமானம் கேட்ட ஆசாமியின் நாற்காலி காலியாக இருக்கிறது. அங்கேதான்!

ஆனால் வாளில்தான் மூடப்பட்டிருந்தது உள்ளே பாப்பாத்தி ஒரு ஓரத்தில் இன்னும் அந்த ஸ்ட்ரச்சரில் கண் மூடிப் படுத்திருப்பது தெரிந்தது.

"அதோ! அய்யா, கொஞ்சம் கதவைக் திறவுங்க, எம்மவ அங்கே இருக்கு .'

சரியா மூணு மணிக்கு வா. இப்ப எல்லாம் க்ளோஸ்'" அவனிடம் பத்து நிமிஷம் மன்றாடினாள். அவன் பாஷை அவளுக்குப் புரியவில்லை. தமிழ்தான். அவன் கேட்டது அவளுக்கு புரியவில்லை. சில்லறையைக் கண்ணில் ஒத்திக் கொண்டு யாருக்கோ  அவன் வழி விட்டபோது அந்த வழியில் மீறிக்கொண்டு உள்ளே ஓடினாள். தன் மகளை வாரி அணைத்துக்கொண்டு தனியே பெஞ்சில் போய் உட்கார்ந்து  கொண்டு  அழுதாள்.

பெரிய டாக்டர் எம்.டி. மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து முடிந்ததும் ஒரு கப் காப்பி சாப்பிட்டு விட்டு வார்டுக்கு சென்றார். அவருக்கு காலை பார்த்த மெனின்ஜைடிஸ் கேஸ் நன்றாக ஞாபகம் இருந்தது.B .M .J  யில்  சமீபத்தில் புதிய சில மருந்துகளை பற்றி வர படித்திருந்தார்.

"இன்னைக்குக் காலையிலே அட்மிட் பண்ணச் சொன்னேனே  மெனின்ஜைடிஸ் கேஸ். பன்னிரண்டு வயசுப் பொண்ணு எங்கேய்யா..?

"இன்னிக்கு யாரும் அட்மிட் ஆகலையே டாக்டர் "

"என்னது? அட்மிட் ஆகலையே? நான் ஸ்பெசிபிக்கா சொன்னேனே! தனசேகரன், உங்களுக்கு ஞாபகம் இல்லை ..?"

"இருக்கிறது டாக்டர் ! "

"பால்! கொஞ்சம் போயி விசாரிச்சு கிட்டு வாங்க அது எப்படி மிஸ் ஆகும் ?"

பால் என்பவர் நேராகக் கீழே சென்று எதிர் எதிராக இருந்த கிளாற்குகளிடம் விசாரித்தார்."எங்கயா! அட்மிட் அட்மிட்டுன்னு நீங்க பாட்டுக்கு எழுதிபுடுறீங்க. வார்டிலே நிக்க இடம் கிடையாது! "

"சுவாமி சீப்  கேக்குறார் !"

"அவருக்கு தெரிஞ்சவங்களா ?"

"இருக்கலாம் எனக்கு என்ன தெரியும்?"

"பன்னண்டு வயசுப் பொண்ணு ஒண்ணும் நம்ம பக்கம் வரல. வேற யாரவது வந்திருந்தாக் கூட எல்லோரையும் நாளைக்கு காலையிலே வர சொல்லிட்டேன். ராத்திரி ரெண்டு மூணு பெட்டு காலியாகும். எமேர்ஜன்சின்னா முன்னாலேயே சொல்லணும்! இல்லை பெரியவருக்கு அதிலே இண்டரஸ்ட் இருக்குன்னு ஒரு வார்த்தை! உறவுக்காரங்களா ..?'

வள்ளியம்மாளுக்கு மறுநாள் காலை ஏழரை மணி வரை என்ன செய்ய போகிறோம் என்பது தெரியவில்லை. அவளுக்கு ஆஸ்பத்திரியின் சூழ்நிலை மிகவும் அச்சம் தந்தது. அவர்கள் தன்னைப் பெண்ணுடன் இருக்க அனுமதிப்பார்களா என்பது தெரியவில்லை. வள்ளியம்மாள் யோசித்தாள். தன் மகள் பாப்பாத்தியை அள்ளி அணைத்துக் கொண்டு மார்பின் மேல் சார்த்திக் கொண்டு, தலை தோளில் சாய, கைகால்கள் தொங்க, ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தாள். மஞ்சள் நிற சைக்கிள் ரிக்சாவில் ஏறிக் கொண்டாள். அவனை பஸ் ஸ்டாண்டுக்குப் போகச் சொன்னாள்.

"வாட் நான்சென்ஸ்! நாளைக்கு காலை ஏழரை மணியா! அதுக்குள்ள அந்த பொண்ணு செத்துப் போயிடும்யா! டாக்டர் தனசேகரன் நீங்க ஓ.பி யிலே போயி பாருங்க . அங்கேதான் இருக்கும்! இந்த ரெச்சர்ட் வார்டிலே ஒரு பெட் காலி இல்லைன்னா நம்ம டிப்பாட்மென்ட் வார்டில பெட் இருக்குது. கொடுக்க சொல்லுங்க! க்விக்!"

"டாக்டர்! அது ரிசர்வ் பண்ணி வைச்சிருக்கு "

"i dont care. i want that girl admitted now. Right now!"

பெரியவர் அம்மாதிரி இதுவரை இரைந்தது இல்லை. பயந்த டாக்டர் தனசேகரன், பால், மிராண்டா  என்கிற தலைமை நர்ஸ் எல்லோரும் வள்ளியம்மாளை தேடி ஓ.பி டிபாட் மெண்டுக்கு ஓடினார்கள்.

"வெறும் சுரம்தானே ? பேசாமல் மூனாண்டிப் பட்டிக்கே போயி விடலாம்.வைத்தியரிடம் காட்டிவிடலாம். கிராம ஆஸ்பத்திரிக்கு போக வேண்டாம். அந்த டாக்டர் தான் பயங்காட்டி மதுரைக்கு விரட்டினார். சரியாக போயிவிடும். வெள்ளைக்கட்டி போட்டு விபூதி மந்திரித்து விடலாம்." சைக்கிள் ரிக் ஷா  பஸ் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வள்ளியம்மாள், "பாப்பாத்திக்குச் சரியாய் போனால் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு இரண்டு கை நிறைய காசு காணிக்கையாக அளிக்கிறேன்' என்று வேண்டி கொண்டாள்.

******

Mar 18, 2011

எதிர்கொண்டு-பூமணி

வெளியே சாயங்காலச் சத்தங்கள் வெளிச்சத்தைப் போல் உள்வாங்கிக் கொண்டிருந்தன.

கீழ்வீட்டுக்காரி இன்னேரம் வந்திருக்கணுமே. வேலைக்காரனிடம் பெருமை கொழித்துக்கொண்டு பொடி நடையாக வருவாள். அவன் இவளுக்குத் துணை போனவன். அதென்ன வாய் ஓயுதா கை ஓயுதா. ராத்திரி நேரங்கூடத் தூங்குவாளோ என்னமோ. என்னேரம் பார்த்தாலும் வாய் பொரிப் பொரியும்.poomani2

சுட்டுப் போட்டாலும் இன்றைக்கு அவளுக்கு உறக்கம் வராது. கனைத்துக் கனைத்து அழுகணும்.

திருணையில் குப்புறப் படுத்து முதுகில் காலால் தாளம் போட்ட சுந்தரம் திருப்பிக்கொண்டான்.

நேரத்தோடு சோறுகேட்டு அம்மாவிடம் வசவு வாங்கிக் கட்டிக் கொண்டதுக்கு இதுக்குள் கீழ வீட்டுக்காரி கச்சேரி வைத்திருந்தால் தோதாக இருக்கும். சே சின்னத்தங்கச்சி என்னேரம் பார்த்தாலும் வாள் வாள் என்று கத்திக் கொண்டு அடுத்த ஆள் சத்தம் கேட்க விடாமல். இந்த அம்மா தான் அவளை எடுத்து அமர்த்தினால் என்ன.

பிச்சமணியாவது வந்தால் முற்றத்தில் பாய் விரித்து கச்சேரி கேட்கலாம். ஆறாங்கூட்டம் காராம்பசு என்று மேகத்தில் வெள்ளி பார்த்துக்கொண்டே சிரிக்கலாம். அவன் ஒரு குசுவிணிப் பயல். பேசாமல் முடக்கிப் படுத்திருப்பான்.

எல்லாம் இனிக் கொஞ்ச நேரத்தில் தெரியும். என்னென்ன வசவுதான் வாயில் வரப் போகிறதோ. அவளுக்கு இது காணாது. காட்டில் ஈ காக்காய் இறங்கினால் கூட மே வீட்டிலிருந்து கையைக் கண்ணாடி போட்டுப் பார்த்து நாறலாக வையச் சொல்கிறதா. அடேயப்பா நாயிலெத்தனை கழுதையிலெத்தனை.

எதுக்கு வைவதென்றில்லை. களத்தில் தும்பைச் செடி கும்மலுக்குள் வண்ணாத்திப்பூச்சி பிடித்ததுக்கெல்லாமா வையணும். ரெம்ப எரிச்சலாக இருந்தது. பிச்சமணியென்றால் ஓட்டம் பிடித்துவிட்டான். அவள் புருசன் வேறு பொதுக் பொதுக்கென்று கருத்த எருமை மாதிரி விசாரிக்க வந்துவிட்டார். அதுக்கு அவள் சொல்கிறாள்.

'சின்னக் கழுதைக களத்துல ஒழப்புதுக. சத்தம்போட்டா போகுதுகளான்னு பாருங்க. அந்த கெங்கையாப் பெய மகன் இருக்கானே. மொளச்சு மூணெலப் போடல. அதுக்குள்ள மொறச்சிட்டுல்ல போறான். துமுராக்கும். '

பெரிய மனுசனும் என்னமோ தானியம் ஒழப்பிக் கெடந்த மாதிரி 'அதெவம்லே கொழுப்பா இங்க வந்து ஒட்டிக்கிட்டு ' என்று துணைக்கு வைகிறார் குருட்டுப் பார்வை பார்த்தபடி. அதுக்குத்தான் இந்த வயசிலேயே கண்ணை மறைத்திருக்கிறது. முதலில் பெண்டாட்டி நின்ற இடம் தெரிந்ததோ என்னமோ.

கெங்கையாப் பயலாம். இன்றைக்கு வரைக்கும் அவள் ஒரு பிள்ளைகூடப் பெறவில்லை. வாயில் எப்படி வருகிறது. அய்யாவிடம் சொன்னதுக்கு. 'ஆமா அவ பெரிய வீட்டுச் சீமாட்டி. அப்படித்தான் பேசுவா. கழுத பொலம்பீட்டுக் கெடக்கு. ' என்று எச்சைத் துப்பிவிட்டு வேலைக்கு கிளம்பிவிட்டார். இதைப் போய் அம்மாவிடம் சொன்னால் அவள் கேட்கிறாள்.

'ஒனக்கு வண்ணாத்திப் பூச்சி புடிக்கிறது வேற எடமே கெடைக்கலயாலே. '

நல்ல அம்மாதான்.

பிச்சமணியைக் கேட்ட கேள்வியில் விக்கிப் போனான். பிறகென்ன எடுத்ததுக்கெல்லாம் விசுக்கென்று கழட்டிக்கொண்டு ஓடினால் எப்படி. முதுகில் ரெண்டு சாத்தலாம் என்று கூடத் தோணியது. பிறகு ஓயாமல் அழுவான். அமர்த்தி முடியாது.

அவன் மற்ற பிள்ளைகளுடன் சேரமாட்டான். எத்தனை அடித்தாலும் மாறி மாறி வீட்டுக்குத் தேடி வருவான். ஓயாமல் விளையாட்டுத்தான். பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை. குண்டி கிழிந்த கால்சட்டையைப் போட்டுக்கொண்டு எப்படிப் போவதாம். அய்யாவிடம் கேட்டால் 'அது ஒண்ணுதான் கொறச்சலாக்கும் ' என்கிறார்.

ஊரில் நிறையப் பேர் ஆடுமாடு மேய்க்கிறார்கள். சாணியெடுக்கிறார்கள். எல்லாம் மத்தியான நேரம் ஊருணிக்கரையில் கூடினால் ஒரு கூட்டமே திரண்டு விடும். பள்ளிகூடப் பிள்ளைகள் அவ்வளவு இருக்காது.

வீட்டு மூலையில் அய்யா உஸ்ஸென்று மம்பட்டியை இறக்கினார். தலைத் துண்டை எடுத்து உச்சியில் சொறிந்தார். அம்மா வென்னீர்ப் பானையை இறக்கி கொட்டாரத்துப் பக்கம் கொண்டு போனாள். தங்கச்சியைத் தூக்கிக் கொண்டு பின்னால் போன அய்யா சொன்னார்.

'சுந்தர மொதலாளி யென்ன நேரத்தோடயே நித்திரையில கூடியாச்சு இண்ணைக்கு. '

இவர் ஒருத்தர் வாய்த்தார். மண்டையைச் சொறியத்தான் தெரியும்.

கீழத்தெருவில் கசபுசல் கேட்டது. ரெம்பப் பேர்சத்தம் போட்டார்கள். சே பொட்டக் கூத்தாக்கும். ஆரம்பித்தாயிற்றா இன்றைக்கும். இனி ஓய்ந்தாற் போலத்தான். ஒண்ணைத் தொட்டு ஒண்ணாக பின்னிக் கொண்டே போகும். கடைசியில் ஒருத்தி அழுகணும்.

கீழ வீட்டுக்காரி இன்னும் வந்திருக்க மாட்டாளோ. வீடெல்லாம் விளக்குப் பொருத்தியாயிற்றே. இதுக்குள் வந்திருப்பாளே. வழியில் எத்தனைப் பேரிடம் வாயைக் கொடுத்து நிற்கிறாளோ. வீட்டில் வந்து பிள்ளையையா அமர்த்தப் போகிறாள்.

ஊர்ச்சனம் முக்கால்வாசி அவள் வீட்டில் வேலை செய்கிறது. கொத்து வாங்க எத்தனை பேர் காத்திருக்கிறார்களோ வீட்டு வாசலில். அம்மாகூட அடிக்கடி பெட்டித் தூக்கிக் கொண்டு போவாள். அன்றைக்கெல்லாம் ராத்திரிச் சாப்பாடு பிந்திக் கிடைக்கும். அவள் வீட்டில் அப்படிக் காத்துக் கிடக்கணும். அதுகூட அவளுக்குப் பிடிக்காது. கிணற்றில் ரெண்டு பேர் குளித்தாலே விரட்டியடிக்கிறாளே அதை பொறுப்பாளா.

பிச்சமணிக்கு அன்றைக்குச் சரியான எறி. ஊருணியில் தண்ணீரில்லையென்று மாமரத்துக் கிணற்றுக்குக் குளிக்கப் போனதை எப்படியோ தெரிந்து வந்துவிட்டாள். கண்டபடி வைது மண்கட்டியால் எறிந்தாள். பிச்சமணியென்றால் கூப்பாடு போடுகிறான். எறிக்கு முங்கித் தப்பித்து வெளியேறியும் கண்ணில் மண் விழுந்து உறுத்தியது. கிணற்றை விட்டு ஏறும்போது மண்டையிலேயே குட்டினாள்.

கால்ச்சட்டையைக் கையிலெடுத்து ஓடி ஓடைக்குள் வைத்துப் போட்டுக் கொண்டபோது அவள் கழுகு மாதிரி மிதிகல்லில் நின்று இன்னும் வைது கொண்டிருந்தாள். ஓடும்போது 'அம்மணக்குண்டி அரட்டவாள ' என்று கேலி பண்ணிய கொத்து வேலைப் பெண்களைப் பார்த்து கல்லெறியலாமா என்றிருந்தது. பிச்சமணி மண்டையைத் தடவித் தடவி அழுதான். மண்டையில் உருண்டையாகப் புடைத்திருந்தது. அவன் அழுகையோடு சொன்னான்.

'இவள ஒரு நாளைக்காச்சும் நெத்தியில உச்சுறனா இல்லையான்னு பாரு. '

அப்படிச் செய்து அவள் அழுவதைப் பார்த்தால் நன்றாகத்தானிருக்கும்.

இதாச்சும் என்ன தைப் பொங்கலுக்குக்கூடப் பொலிகட்ட அவளது வேப்ப மரத்தில் குழை ஒடித்ததற்கு வைத வசவிருக்கிறதே ஒரு கடகமிருக்கும். மரம் தளிர்க்காமல் பட்டுப் போகுமாம். அவர்களுக்கு மட்டும் வேலைக்காரன் கட்டுக் கட்டாக ஒடிக்கிறானே அது எதுக்காம்.

இவளுக்கு இதோடா போயிற்று. இருக்கட்டும் இருக்கட்டும். முந்தா நாளே ஒரு ஆட்டம் ஆடியிருப்பாள். அதுக்கு லாய்க்கில்லாமல் போய்விட்டது. அதை பிச்சமணியே செய்தான். மத்தியானம் படப்பு மறைவில் அவள் வீட்டுக் கோழியை அடித்து வேலிக் கருவலைக்குள் திணித்துவிட்டு அருவமில்லாமல் வந்தாயிற்று. சரியான கோழி. ராத்திரிவரை வாயலுக்கத்தையே காணும். என்ன விஷயமென்று மறுநாள் போய்ப் பார்த்தால் வெருகு சரியானபடிக்குத் தின்றிருக்கிறது. அதுக்கு வளம். பிறகெங்கே வைவாள். வெருகைத் தேடி வைய வேண்டியதுதான். கதை அப்படியே இல்லையென்றால் தெருவில் சனங்கள் நடமாடியிருக்க முடியாது.

பிச்சமணிக்கென்றால் எரிச்சல்.

'இதுக்கு வேறெதாச்சும் வழியிருக்காடா. '

'இருக்குடா பெரிய வேட்டா வைக்க வேண்டியதுதான். '

அவள் வீட்டு வெளித் தொழுவில் பசுங்கண்ணுக்குட்டி மட்டும் கட்டிக் கிடந்தது. மதியந்தான். பசுமாட்டை அவுத்துக் கொண்டு காட்டுக்குப் போயிருந்தார்கள். வீட்டில் யாருமே இல்லை. சரி இதுதான் சமயமென்று கோலி தட்டும் கம்பியை எடுத்துப் போய் அதுக்கு நடுமண்டையில் ஒரேயடி. சொதுக்கென்று செத்து விழுந்தது. கயிற்றை அவுத்து நிறைசலுக்குத் தூக்கிக்கொண்டு போய் தூணோரம் நிற்கிற வாக்கில் தண்ணீர்ப் பானைக்குள் மூஞ்சியை ஒட்டிவைத்துவிட்டு மெல்ல நழுவும் வரை பிச்சமணி அடிக்கடி வெளியே வந்து ஆள் பார்த்தான்.

காரியத்தை முடித்துவிட்டு வருகையில் பிச்சமணி சொன்னான்.

'இதும் சரிப்படலன்னா ஒரு நா ராத்திரி மாமரத்துக் கெணத்துக்குப் போயி மிதிகல்ல ஒடச்சுப் போட்டுட்டு வந்துற வேண்டியதுதான். '

'அது பெறகில்ல. '

பொழுதடைந்ததும் வீட்டுக்கு வருவதாகச் சொன்ன பிச்சமணியைக் காணவில்லை. எந்த மூலையில் கிடக்கிறானோ.

இதுக்குள் கீழவீட்டுக்காரி வந்திருப்பாள். முதலில் நிறைசலுக்குப் போய் ரெம்பத் தோதாக முகங்கால் கழுவி விட்டு வீட்டுக்குவருவாள். இன்றைக்குச் சரியான கூத்துத்தான். தெருவெல்லாம் ஆட்டம்போடுவாள். அடுத்தவர்களின் ஆடுமாடு படப்புப்பக்கம் லாந்தினால் கூட கண்மூக்குத் தெரியாமல் எறியச் சொல்கிறதா. அதுக்கெல்லாம் வட்டி வாசியாக இன்றைக்கு ஆடணும். கீழத்தெருவில் போடும் சத்தம் மேலத் தெருவரைக்கும் கேட்கும். டிய்ய்ங்ங் ரேடியோ பாடப்போகிறது.

எத்தனை வைது என்ன செய்ய. யாராவது சொன்னால் தானே. பிச்சமணி லேசுக்குள் சொல்ல மாட்டான். மண்டையெறி மறக்கவில்லை.

வீட்டில் காத்திருப்பவர்களுக்கு இன்றைக்கு கொத்தளந்தாற் போலத்தான். இன்றைக்கில்லையென்றால் நாளைக்கு.

அய்யாவும் அம்மாவும் சாப்பிட்டு விட்டு வாசலில் உட்கார்ந்து எதையோ கசகசவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். சின்னத் தங்கச்சியை மடியில் போட்டுத் தட்டினாள் அம்மா. உள்ளே அக்காவும் மொட்டைத் தங்கச்சியும் சாப்பிட்டார்கள். அவர்களாவது பேசாமல் சாப்பிடக் கூடாதா.

கீழத் தெருவில் இருட்டைத் தள்ளிக் கொண்டு வசவுச் சத்தம் பெருகிவந்தது.

படுக்கையை விட்டுத் துள்ளியெழுந்த சுந்தரம் வாசலிலிருந்த அய்யாவை நெரித்து அம்மாவைத் தாண்டி ஓடி வெளிப்பானையில் வாய் நிறையத் தண்ணீர் கொப்புளித்து முற்றத்தில் வட்ட வட்டமாகப் பீச்சி விளையாடினான்.

'படுக்கிற முத்தத்தப் பாழாக்கிறியே ஒனக்கென்ன கோட்டியாலே இப்ப வந்தம்னாத் தெரியுமா ' என்று அம்மா அரட்டியதையும் சட்டை செய்யாமல் இப்போது பிச்சமணியிம் கூட இருந்தால் நன்றாக இருக்குமென நினைத்தான்.

*******

நன்றி: திண்ணை

Mar 14, 2011

அன்றிரவு-புதுமைப்பித்தன்

அரிமர்த்தன பாண்டியன்

     நான்மாடக்கூடலில் அன்றிரவு மூவர் உறங்கவில்லை. அதில் ஒருவன் சொக்கேசன். மனிதனுடன் மனிதனாக நடமாடி, அவர்களுடைய சுகதுக்கங்களில் பகிர்ந்து கொண்டு, வளையல் விற்று, சாட்சி சொல்லி, சங்கப் புலவர்கள் கருவமடக்கி, வாழையடி வாழையாக ஆண்டு வரும் பாண்டியர்களுக்கு மந்திரியாய், நல்லாசிரியனாய், தெய்வமாய்க் கைகொடுத்துவரும் சொக்கேசன், அழகன் உறங்கவில்லை. பிறவா நெறி காட்டுவானுக்கு உறக்கம் ஏது? ஊண் ஏது? அடுத்த நாள் ஓர் அரசன்; pp பாண்டியன், அரிமர்த்தன பாண்டியன், இமையா நாட்டம் பெற்றவன் போல, சயனக்கிருஹத்தில் மஞ்சத்தில் அமர்ந்து நினைவுக் கோயிலில் நடமாடிவந்தான். அறிவை அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் சரக்கூடம் போட்டன; நடைபெற்ற நிகழ்ச்சிகள் வாலுடன் தலையிணைத்துக் காட்டி நகரின் வரம்பமைத்த பாம்பு மாதிரி அறிவு சக்கரவியூகம் போட்டது.

     பிரகாசம் கண்ணைத் குத்தித் தூக்கத்திற்கு ஊறு விளைக்காமல் இருப்பதற்காக அமைத்த நீலமணி விளக்கு, அவனது மார்பில் கிடந்த ஆரத்தில் பட்டு, சற்று அசையும்போது மின்னியது. கை விரல் மோதிரத்தை நெருடிக்கொண்டே சாளரத்தின் வழியாகத் தெரிந்த சிறிய துண்டு வான்வெளியை நோக்கிக் கொண்டிருந்தன. அன்றிரவு கிருஷ்ண பட்சத்துச் சந்திரன்; அது உதயமாக இன்னும் இரண்டு சாமம் கழிய வேண்டும். சாளர வரம்புக்கு உட்பட்ட தாரகைகள் ஒன்று இரண்டு, தீர்க்கதரிசிகளின் அறிவு வரம்புக்குள் அடைப்பட்ட பிரபஞ்ச ரகசியங்கள் ஒரு குறிப்பிட்ட கோலத்தில் அமைந்து, மனித உயிர் நாடும் வேட்கைக்குச் சாந்தி தரும் சமயம் என்ற ஒரு குறிப்பிட்ட கோலத்தைக் காட்டுவது போல, ஜோதிட விற்பன்னர்கள் வகுக்காத ராசி மண்டலங்களை அமைத்துக் காட்டியது.

     சாளரத்தின் உச்சியிலிருந்து, வானத்துக்கு நேர் கோட்டில் ஆணியடித்து வைரம் பதித்தது மாதிரி, அல்ல, மஞ்சள் கலந்து சிவப்புக்கல் பதித்த மாதிரி, ஒரே ஒழுங்கில் அமைந்து நின்று அசைந்து கண் சிமிட்டியது. மன்னன் மனம், அன்றைய நிகழ்ச்சிகளை ஒரு விநாடி மறந்து தாரகைக் கூட்டத்தில் லயித்தது. மனம் ஒன்ற ஒன்ற, இருட்டுக்குள் இருளுக்கு வரம்பு போட்ட மாதிரி கோபுரமும் கலசமும் திரண்டு உருவாயின; அதன் மத்தியில் அந்த விளக்குகள். என்ன, நம்மூர்க் கோயிலைக் கூடவா, நாம் தினம் கும்பிட்டு மன உளைச்சல் என்ற சுமையை இறக்கிவைக்கும் சுமைதாங்கியான கோயிலைக் கூடவா மறந்துவிட்டோ ம் என்று நினைக்கிறான் பாண்டியன். தன்னை அறியாமல் மீசையை நெருடிக்கொண்டே சிரிக்கிறான். கோபுரத்தைத் தாண்டி ஒண்டித் தெரியும் துண்டு வானத்தில் ஒரு நட்சத்திரமும் கூடச் சிரிக்கிறது.

     'முப்பது வயசுக்குள் எவனாவது திடீரென்று மாறிப் பரம் ஒன்றே என்ற நினைப்புடன் நடமாட முடியுமா? குதிரை வாங்கப் போன மந்திரி திரும்பிவரும்பொழுது, விழுந்து கும்பிடு என்று என் மனசே சொல்லும்படி எப்படி மாறிவிட முடியும்? கொண்டு போன பணத்தை என்ன செய்தான்? விரயம் செய்து போகத்தில் ஆழ்வதென்றால் அவன் உடம்பு அதைக் காட்டியிருக்குமே.'

     அரிமர்த்தனன் மனசிலே அன்று பிற்பகல் பட்டிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன.

     அமாத்தியன் திருவாதவூரன், பகல் முழுவதும் கால் கடுக்க நடுவெயிலில் நின்று கல் சுமந்து கசையடிபட்டதன் சோர்வு சற்றும் காட்டாமல், வந்தபோது பூத்து அலர்ந்த புன்சிரிப்புடன் நிற்கிறான். அரசன் அரிமர்த்தன பாண்டியன் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கின்றான்.

     "அமாத்தியரே, குதிரைகளுக்குக் கொடுத்தனுப்பிய தொகை எங்கே?"

     "அவனைத் தவிர இவ்வுலகில் கொடுப்பவர் யார்? கொள்பவரார்?"

     "வாதவூரரே, அப்படியானால் பணம் வாங்கவில்லை என்று மறுக்கிறீரா?"

     "குதிரை வரும் என்று சொல்கிறேன்."

     "குதிரையைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். பணத்தை என்ன செய்தீர், சொல்லிவிடும்; உம்மை மன்னித்துவிடுகிறேன்."

     "அரசே, வாதவூரர் கொண்டு சென்றது அரசாங்கப் பணம்; அதை விரயம் செய்யத் தங்களுக்குக் கூட உரிமை கிடையாது என்பதைத் தாங்கள் எத்தனை முறை இந்த வாதவூரர் முன்னிலையிலேயே சொல்லியிருக்கிறீர்கள்; மன்னிப்பது என்றால் பாண்டியன் தனது ஆட்சியை அழிப்பது என்பதே பொருள்" என்று இடைமறிக்கிறார் ருத்திரசாத்தனார் என்ற மந்திரி.

     "பணம் வந்துவிட்டால் போதுமா? சமயத்தில் குதிரைகள் கிடைக்காததனால் நாம் எவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்தோம்? சோழன் திரட்டிய சேனை நம்மீது விழுந்திருந்தால் நாடு என்ன கதியாகும்? களப்பிரர்கள் சோழநாட்டைச் சூறையிடாதிருந்தால் இன்று மீன் கொடியில் ரத்தக்கறைகள் அல்லவா படிந்திருக்கும்? தோல்வி என்பது நமக்கு இல்லை. சொக்கேசன் உள்ளவரை, பாண்டியன் உள்ளவரை, அந்நியன் தலை மண்ணில் உருளத்தான் செய்யும்; இருந்தாலும்..." என்கிறார் ஏனாதியான பகைக்கூற்றச் சித்திரனார்.

     "வாதவூரரே, என்ன சொல்லுகிறீர்? தொகை எங்கே?" என்கிறான் அரிமர்த்தனன்.

     "கொடுத்தவன் வாங்கிக் கொண்டான்; குதிரைகள் வரும்" என்கிறார் வாதவூரர்.

     "அரசே, வாதவூரருக்கு வயது முப்பதுதான். திருக்கோவையாரைப் பாடியவர் என்பதற்காக, அவரை நாம் சிறிது காலம் பார்க்காமல் இருந்துவிட்டதற்காக, ஜீவன்முக்தராகிவிட்டார் என்று நினைப்பது தவறு. சங்கரனார் நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற நாடு இது. சங்கரருக்கே அப்படியென்றால் வாதவூரருக்கு மட்டும் என்ன இளக்காரம்?" என்கிறார் ருத்திரசாத்தனார்.

     "வாதவூரரே, என்ன சொல்லுகிறீர்? சித்தர்கள் போலப் பரிபாஷையில் பேசி ராஜாங்க நேரத்தைக் கழிக்க வேண்டாம். குதிரைகள் வரும் என்கிறீரே; எப்போது வரும்?"

     வாதவூரன் கண்கள் ஏறச் செருகிவிட்டன. நின்ற நிலையிலேயே உள்ளோடு ஒன்றிவிட்டான்.

     உதடுகள், "குதிரைகள் - குதிரைகள் - குதிரைகள்..." என முணு முணுக்கின்றன.

     பாண்டியன் மனசிலும், "குதிரைகள், குதிரைகள், குதிரைகள்" என்ற வார்த்தைகள் எதிரொலிக்கின்றன.

     பட்டிமண்டபத்துக்கு வெளியே சடபடவென்று ஆர்ப்பாட்டமான சத்தம். காவலர்கள் இருவர் ஓடி வருகிறார்கள். "குதிரைகள் வந்து விட்டன! அரசே குதிரைகள் வந்துவிட்டன!" என்று நமஸ்கரிக்கின்றனர்.

     "என்ன, குதிரைகளா! எங்கே?" என்று எழுந்திருக்கின்றான் மன்னன். சபையும் திரண்டு எழுந்திருக்கிறது. வீரக்கழல் முழங்க, அரசன் மிடுக்குடன் வாசலுக்குப் போகிறான். மந்திரி பிரதானிகள் பின் தொடர்கிறார்கள். பட்டிமண்டபத்திலே 'குதிரைகள் குதிரைகள்' என்று தம்மை மறந்து ஜபிக்கும் வாதவூரரையும் சிலைகளையும் தவிர யாரும் இல்லை.

     குதிரைகள் தாம் எத்தனை! பத்து அக்குரோணிக்குப் போதுமானவை; அவ்வளவும் வெள்ளை. குதிரை நோட்டம் தெரிந்த கணக்காயர்கள் சுற்றிச் சுற்றிப் பார்க்கிறார்கள்; ஒரு சுழி இருக்க வேண்டுமே. அத்தனையும் உயர்ந்த ஜாதிக் குதிரைகள்.

     குதிரைப் பாகன் தான் கண்கொள்ளாக் காட்சி. அவனை அழைத்துச் சென்று அப்படியே முடிசூட்டிவிடலாமா என்று கூட நினைத்தான் அரிமர்த்தனன். என்ன அசட்டுத்தனமான நினைப்பு! அவன் துருஷ்கனா, யவனனா, சோனகனா? கண்களிலேதான் அம்மம்ம, என்ன பயங்கரம்! சாட்டையைக்கொண்டு சிமிட்டாக் கொடுக்கிறான். அத்தனை குதிரைகளும் அணிவகுத்து நிற்கின்றன!

   "பெற்றுக்கொண்டு சீட்டைக் கொடும்; போகவேண்டிய வழி கணக்கில் அடங்காது" என்கிறான் குதிரைப் பாகன். குரலில் இனிமையும் பயங்கரமும் கலந்திருந்தன.

     அரசன் முறிச்சீட்டில் கையெழுத்திட்டுத் தருகிறான். பாகன் வாங்கிக் கொண்டு வணக்கங்கூடச் செய்யாமல் போய்விடுகிறான்.

     மன்னனும் மந்திரிப் பிரதானிகளும் பட்டிமண்டபத்துக்குள் திரும்ப வருகிறார்கள். வாதவூரன் முகத்தில் சோகம் தேங்க, "நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே, வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்" என்று தழுதழுத்தபடி உருகி நிற்கிறார்.

     "வாதவூரரே, என்னை மன்னிக்க வேண்டும்; நான் ராஜ்யத்தைச் சுமக்கிறவன்." "அரசே, நான் உலகின் துயரத்தை, வேதனையைச் சுமக்கிறவன்."

     "வாதவூரரே, அப்படி மனம் நொந்துகொள்ளக் கூடாது. தாங்கள் பழையபடி எனக்கு அமைச்சராகவே இருக்க வேண்டும்; தாங்கள் இல்லாவிட்டால் இத்தனை குதிரைகள் கிடைக்குமா?"

     "அமைச்சன் மருத்துவனைப் போல இருக்கவேணும் என்பதை நான் தங்களுக்குச் சொல்ல வேண்டுமா?" என்கிறார் ருத்திரசாத்தனார்.

     "பகையை விரட்டப் படைப்பலம் வேண்டாமா?" என்கிறார் ஏனாதி.

     அரிமர்த்தனன் மனசு மறுபடியும் அந்தக் குதிரைகள் மீது, அந்த வெள்ளைக் குதிரைகள் மீது சவாரி செய்கின்றன. பகைவர்கள் தலைமீது நடமிடும் குதிரைகள். வாதவூரன் கொடுத்த குதிரைகள் அல்லவா? என்ன அறிவு, என்ன தூய்மை! தெய்வாம்சமாக, தெய்வமாகக் குதிரைப் பாகனைப் போலவே நின்றானே...

     நடுச்சாமத்தைப் புள்ளியிடச் சங்கு விம்முகிறது, அலறுகிறது, முழங்குகிறது. அதன் ஓசையும் மடிகிறது.

     அது என்ன சத்தம், தனி நரி ஊளையிடுகிற மாதிரி! அதன் குரல் ஒடுங்கும் சமயத்தில் ஆயிரம் ஆயிரமாக நரிகள் ஊளையிடுகின்றன. நான்மாடக்கூடலில் நரிகளா? குதிரைப்பந்தி இருக்கும் திசையிலிருந்து அல்லவா கேட்கிறது! அரிமர்த்தனன் எழுந்து நிலாமுற்றத்துக்குச் செல்லுகிறான். காதுகளை ஈட்டியிட்டுக் குடைவது போன்ற இரைச்சல். இருட்டில் கண்கள் துழாவுகின்றன. இருட்டைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

     மன்னவன் வீரக்கழல் ஒலிக்க, உத்தரீயம் தரையில் புரள, மறுபடியும் சயனக்கிருஹத்தில் நுழைகிறான். மஞ்சத்தருகில் சாய்த்து வைத்திருந்த உடைவாளுடன் அறையைவிட்டு விரைகிறான். வாசலில் தூக்கமும் மருட்சியும் கண்களில் தேங்க, குழலும் மேலாக்கும் சரிய, துவண்ட நடையில் விளக்கெடுத்து முன் செல்லுகிறார்கள் பணிப் பெண்கள். அந்த மங்கிய ஒளியில் தான் அவர்கள் என்ன அழகு!

     அரசன் அரண்மனை வாசலில் வந்து நிற்கிறான். "குதிரை லாயத்தில் நரிகள் புகுந்துவிட்டன, அரசே, அவை நகருக்குள்ளும் பிரவேசித்துவிடும் போலத் தெரிகிறது..." என்று கும்பிடுகிறார்கள் குதிரைப் பந்தியின் காவலர்கள்.

     மூன்று ஜோடிக் கழல் ஒலிகள் இருட்டில் படிப்படியாக மங்கி ஓய்ந்தன.

     திடீரென்று இருட்டையே கூர்ங் கத்திகொண்டு கிழிப்பதுபோல ஒரு தனி அலறல். பீதியில் வெருண்டு உயிருக்குப் போராடி மடியும் குதிரையின் குரல் அது. அதைத் தொடர்ந்து ஆயிரம் பேய்கள் கெக்கலிகொட்டி நகைப்பது போன்ற நரி ஊளை. போர்க்களத்தில் கவந்தங்கள் ஆடுவதையும் அச்சிற்று விழும் தேரில் அடிபட்டு நசுங்கும் குதிரைகள் யானைகள் போடும் கூச்சல்களையும் கேட்டவன் தான் அரிமர்த்தன பாண்டியன். ஆனால் அன்று கேட்ட அந்தத் தனிக் குதிரையின் சப்தம், அவனிடம் அபயம் கேட்டு ஏமாந்து உயிர்விடுவது போல இருந்தது. நான்மாடக்கூடலில் இந்த இருட்டுப் பேய்க்கூச்சல் ஜனங்களை எழுப்பிவிட்டிருக்கக் கூடும். அவர்கள் இரட்டைத் தாழிட்டு வீட்டுக்குள் அமர்ந்துவிட்டனர்.

     குதிரைக் கொட்டடியின் முன் காவலர்கள் கதவைத் தாழிட்டுக் காவல் காத்து நின்றனர்.

    "உள்ளே மருந்துக்குக்கூட ஒரு குதிரை இல்லை. நமது லாயத்தில் நின்ற பழைய குதிரைகளைக்கூட ஒன்று பாக்கிவிடாமல் கொன்று கிழித்துவிட்டன" என்றார்கள் காவலர்கள்.

     "புதுக் குதிரைகள்?"

     "அவை மறைந்த மாயந்தான் தெரியவில்லை. உள்ளே நரிகள் நின்றுதான் ஊளையிடுகின்றன. அவை வெளியே வந்துவிடாமலிருக்க, கதவை இழுத்துச் சாத்தி வைத்திருக்கிறோம். நாங்கள் சாத்து முன்பே பெரும் பகுதி வெளியே ஓடிவிட்டன."

     "அரசே, குதிரைப் பந்திக்குள் நரிகள் ஊளையிடுகின்றனவே; புதுக் குதிரை ஒன்று கூட இல்லையே" என்று பக்கத்தில் ஒரு குரல் கேட்டது.

     அரசன் திரும்பிப் பார்க்கிறான். அமாத்தியர் ருத்திரசாத்தனார் நின்றுகொண்டிருந்தார்.

     "ஆமாம். புதுக் குதிரைகளைக் காணவில்லையாம்" என்றான் அரிமர்த்தனன்.

     "நானும் அப்படித்தான் எதிர்பார்த்தேன். தங்கள் மந்திரியின் சித்து விளையாட்டாக இருக்கலாம். நீங்கள் கவனித்தீர்களோ, குதிரைகள் வந்தபோது அவனது நிலையை? நான் வரும்போதே மீண்டும் அவரைக் கைது செய்யும்படி உத்திரவிட்டுவிட்டு வந்தேன்."

     "சீ! அப்படி இருக்காது. மேலும் நீதி வகுக்க நாம் யார்?"

     "அரசே, தாங்களுமா?"

     "குதிரைப் பாகன் எங்கு மறைந்தான் என்பதுதான் தெரியவில்லை. நேற்று நமது கோயில் ஆயிரக்கால் மண்டபத்தில் சென்று படுத்ததைத் தான் சிலர் பார்த்ததாகத் தெரிகிறது. ஒற்றர்கள் கிரகித்த தகவல் இதுதான்" என்றது மற்றொரு குரல். ஏனாதி பகைக்கூற்றச் சித்திரனார் தாம்.

     "பாகனைப் பிடித்தால் காரியம் தெரியும்."

இடைவெட்டு

     அடியார்க்கு நல்லார்: நான் தான் அப்பொழுதே சொன்னேனே; குதிரைகள் நிச்சயமாக வரும் என்று? எனக்குத் தெரியாதா வாதவூரனை.

     சேனாவரையர்: வாதவூரன் பொய்யன் என்று நான் எப்பொழுதும் சொன்னதுண்டா? சமயத்துக்கு வராத குதிரைகள் இனி வந்து என்ன, வராமல் என்ன? இப்பொழுது வெகு சிரேஷ்டமான பரிகள் கிடைத்தாலும் அவை நரிகளுக்குத்தான் சமம். மானம் கெட்டுப்போய் அரசனும் அவற்றை ஏற்றுக் கொண்டானே!

     இளம்பூரணர்: புரை தீர்ந்த நன்மை பயக்கும் என்றால் எதுவும் பொய்யே அல்ல. இன்று அரசன் ஏற்றவை நரிகளாகவே இருந்தாலும் அவை பரிகளே. வாதவூரனுக்கு வயசு முப்பது என்பதற்காக வாயில் வந்தபடி எல்லாம் பேசுவதா?

     ஒற்றன்: குதிரைகள் கொண்டுவந்தானே, அவனை நீங்கள் எங்காவது கண்டீர்களா?

     அடியார்க்கு நல்லார்: சொக்கேசன் ஆலயத்து வசந்த மண்டபத்துக்குள் போய் உட்கார்ந்தான். நான் என் கண்களால் கண்டேன்.

     சேனாவரையர்: நான் பார்க்கும்பொழுது அவன் வசந்த மண்டபத்தில் இருந்தான் என்று சொல்லும். அவன் இப்பொழுது எங்கும் இருக்கலாம். அவனது கழுத்தில் கிடந்த மறுவைப் பார்த்தீர்களா? ஆலகால விஷம் மாதிரி அல்லவா இருந்தது? உன்மத்தன் போல் அல்லவா, நிதான புத்தியுடன் நடந்துகொள்ளச் சிரமப்படும் உன்மத்தன் போல் அல்லவா, அவன் விழித்தான்?

     இளம்பூரணர்: மறு இருக்கிற இடத்தில் இருந்தால் எல்லாருக்கும் அதிருஷ்டந்தான். அவன் அதிருஷ்டசாலிதான் என்பது நிச்சயமில்லை. வாதவூரன் நிச்சயமாக அதிருஷ்டசாலிதான்.

2

வாதவூரர்

     வாதவூரன் மனசும் அறிவும் தட்டுமறித்து விளையாடின. யாருக்கு யார் பதில் சொல்லுகிறார்கள் என்ற நினைப்பின்றி யாரோ மனசில் சொன்னதை, தாம் நாவால் சொன்னதாகவே வாதவூரருக்குப்பட்டது. குதிரைகள் வாங்க வேண்டும் என்ற நினைப்பே அற்றுப் போகும்படி தம்மை இழுத்து உட்கார்த்திவிட்ட பெரியார் தம்மிடம் என்னத்தைக் கண்டுவிட்டார் என்பதுதான் முடிவில்லாப் புதிராக அவரை மலைக்க வைத்தது.

     கல்லால நீழலில் அமர்ந்த தட்சிணாமூர்த்தத்துக்கு, கண்கூடாகக் கண்டு, ஸ்பரிசித்துப் பேசக்கூடிய ஒரு ரூபம் இருக்குமாகில் அது அவர்தாம். என்னை ஆட்கொள்வதற்காக அம்மையப்பனே அப்படி வந்தானோ! சீ! நான் யார்? எனக்குத் தகுதி என்ன? மனசில் அவன்மீது நாட்டம் இருந்துவிட்டால் போதுமா? கால் எடுத்து வைக்கமுடியாமல், அறிவுதான் அடிக்கு நூறு வேலிகள் கட்டுகிறதே, அப்படிப்பட்ட அறிவு, என்னை ஆட்கொண்டு என்னை அளந்து நிற்கும்போது, அவனால்தான் வர முடியுமா, என்னால்தான் அவனிடம் போக முடியுமா?

     பாண்டியனிடம் சமத்காரமாகப் பேசிவிட்டதால் நான் செய்த காரியம் சரியாகிவிடுமா? அவன் கொடுத்தானாவது! அவன் வாங்கிக் கொண்டானாவது! அவன் அரிமர்த்தனனாக வந்து கொடுத்த பொழுது அரிமர்த்தனனாக நிற்கும் அவனிடம் கணக்குக் காட்டுவதை விட்டு, வேதாந்தம் பேசி என்னை நான் பொய்த்துக் கொண்டேனே! என்னை விட நெஞ்சறி கள்வன் எவன்? என்னையும் நம்பி, பணத்தைக் கொடுத்தானே பாண்டியன்! பாண்டியன் பணம். பாண்டியன் பணம் கரையும் பொழுது காலம் நின்றதே; களனே அழிந்ததே. அந்த பெரியவரை நான் திரும்பவும் பார்க்க வேண்டுமே அவர் அருகில் இருந்தால், தாய் மடியில் இருப்பது போலல்லவா இருந்தது? அவர் என்னிடம் என்ன சொன்னார்? என்னத்தைத்தான் சொல்லவில்லை? அவர் சொன்னதை வேதமும் வேதாந்திகளும் சங்கரனும் சொல்லத் தான் செய்திருக்கிறார்கள். அவர் சொன்னதன் நுட்பம் வார்த்தைக்குள் இல்லையே. குரலிலா? கண்ணிலா? அவர் எதைக் கொண்டு என்னை இழுத்து விட்டார்? எனக்குத் தெரிந்ததைத் தான் சொன்னார். ஆனால் தெரிந்தது என நான் நம்பி இருந்ததற்கு எவ்வளவு உள்ளுறை கொடுத்துவிட்டார்! "தாமே குதிரைகள் வரும்; நீ உன் குதிரைகளை அடக்கக் கற்றுக் கொள்" என்றாரே சிரித்துக் கொண்டு! அப்பொழுது பாண்டியனும் அவனுடைய குதிரைகளும் அவனுடைய குதிரை வேட்கையும் இந்தப் பிரபஞ்ச லீலையில் எவ்வளவு அற்பமாக, துச்சமாகப் பட்டன; நமது பார்வைக்குள் படவேண்டாத ஒன்றாகப் படும்படி செய்துவிட்டாரே! நானா பணத்தை எடுத்துக் கொடுத்தேன்? இந்தப் பிரபஞ்சமே எடுத்துக் கொடுத்தது. அதற்குப் பாண்டியன் என்னை வெயிலில் நிறுத்த வேண்டும், கசையடி கொடுக்க வேண்டும், கண்ணைப் பிடுங்க வேண்டும், யானையை விட்டு என் தலையை இடற வேண்டும்? இவையெல்லாம் அற்பத்துக்கு அற்பமான காரியங்கள். பாண்டியனது குதிரை வேட்கை மாதிரி பிரபஞ்சத்தின் பார்வையில் படவேண்டாத ஒன்று. என்னுடைய கட்சியும் பாண்டியன் கட்சி போன்றதுதான். மதுரை அதிருஷ்டம் பெற்ற ஊர்தான். பாண்டியநாடு அதிருஷ்டம் பெற்ற நாடுதான். என்னை எப்படியாவது நீதியின் ஆதிக்கத்திலிருந்து பாதுகாப்பதற்காக என்ன என்ன பாடு பட்டான்! அவனுக்குக் குதிரையைப் பற்றிக்கூட அக்கறை இல்லை போல் இருக்கிறது. நீதி என்ற ஒன்று திருப்தியடையும்படி நான் பதில் தந்துவிட்டால் என்னைப் பாதுகாத்து மறுபடியும் இந்த மந்திரி உத்தியோக விலங்கை மாட்டிவிடுவதில் அவனுக்கு என்ன ஆசை! அரிமர்த்தனனும் அதிருஷ்டசாலிதான். என் உயிருக்கு உயிரான ருத்திரசாத்தனும் ஏனாதியும் சத்திரவைத்தியர்கள் போல அல்லவா நடந்துகொள்ளுகிறார்கள்! மனித வம்சம் அநாதி காலந்தொட்டு இன்றுவரை, இனிமேலும், அறுகு போலப் படர்ந்து கொண்டே இருக்க, கண்களைக் கட்டிக்கொண்டு நடக்கும் நீதியின் பின்புறமாக, தம் மனசைச் செப்புக் கோட்டைக்குள் சிறை செய்து நடந்தார்களே, அவர்கள் அல்லவா மந்திரிகள்! மந்திரிகள் என்று உலகத்தில் வேடமிட்டால் மந்திரியாகவே நடிக்க வேண்டும். இடையிலே வேஷத்தைக் கலைத்துக் கொள்ளலாமா? அது மனுதர்மமாகாது; உயிர்த் தருமம். உயிர்த் தருமத்துக்கு அரசனது பட்டிமண்டபத்தில் இடங்கொடுக்க முடியாது? கொடுத்தால் பட்டி மண்டபத்தில் வௌவாலும் குறுநரியும் கொண்டாடி நடக்குமே...      என்ன

      குதிரைகளா? பாண்டியனுடைய பணியாளர்கள் அல்லவா வந்து சொல்லுகிறார்கள்? குதிரைகள்! குதிரைகள் வந்துவிட்டனவோ? குதிரைகளாவது வருவதாவது! பணம் போன திக்கில் குதிரைகள் ஏது? உன்னை ஆட்கொண்ட ஐயன், அன்று கல்லாலின் அடியில் உன்னையே உருக்கிவிட்டவன், உன்னைக் காப்பாற்றக் குதிரைகளைக் கொண்டு வந்து விட்டானா? என்ன ஆபத்து! எனக்காக, என் பொய்க்காக, என்னுடைய நிலையில்லா மனசுக்காக, என்னுடன் சேர்ந்து தெய்வமே, என்னுடைய குருதேவனே, அந்தப் பொய்யை நிலைநாட்டத் துணிந்தானா? நான் கொடுக்காத தொகைக்குக் குதிரைகளா? எனக்காக, என்னுடைய அற்ப ஜீவனைப் பற்றுவதற்காக, சகல லோகங்களுமே திரண்டு நின்று எனது பொய்யை நிலைநாட்ட வருவதா? களங்கமற்ற தர்மமானது என்னுடைய சிற்றறிவின் கொடுக்கல் வாங்கல்களின் அற்ப நடத்தைகளுக்கு, அகந்தைக்குத் துணை வருவதா? உலகத்தையே பொய்ப்பிக்கும் பொய்யை உண்டாக்கிய நான் அதமன் அல்லவா? சர்வேசுவரனுடைய லீலை என்னுடைய பொய்க்கும் துணை நின்று அதை மெய்ப்பிக்க அதல பாதாளத்தில் இறங்குமாகில் அது... அது... எனது நா எழவில்லையே...!

     வாதவூரரின் உடலிலிருந்து விலங்குகள் கழற்றப்படுகின்றன. அவருக்குப் பழைய மரியாதைகள் செய்யப்படுகின்றன. ஆனால் அவை மெய்யான பாரவிலங்குகளாக ஊனையும் உயிரையும் உணர்வையும் அதற்குப் பின்புறமாக உள்ள மகாசூட்சுமமான கரணங்களின் சேர்க்கைக் கோப்பையும் அழுத்தின. அவரது நெஞ்சு உலர்ந்தது, வறண்டது, சுழன்றது, பொங்கியது, குமுறியது; சுழித்து நுரைத்துக் கொப்புளித்துப் பொய்ம்மை என்னும் வேதனையைக் கக்கி விக்கித் தடுமாறியது. அவருடைய வேதனை உலகத்தின் வேதனை ஆயிற்று. மதுரை மூதூரின் வேதனையாக உருவெடுத்தது, பெருக்கெடுத்தது. பிரவாகமாகச் சுழித்துக் குறியற்றுக் குறிக்கோள் அற்று விம்மிப் புடைத்து ஓடியது. கரைகள் என்ற பிரக்ஞை இல்லாமலே மதுரை மூதூரை நனைத்தது, முழுக்கியது, ஆழ்த்தியது. பஞ்சணை மெத்தையில் அமர்ந்திருந்தது வாதவூரன் உடல். அவருடைய வேதனை உலக வியாபகமாக, மதுரையையும் அதற்கும் அப்பால் உள்ள அண்டங்களையும் தன்னுள் ஆக்கியது...

     நடுநிசியில் ருத்திரசாத்தனுடைய சேவகர்கள் அவருடைய உடலில் விலங்கிட்டனர். விலங்குகள் ஏறின என்ற உணர்வும் அற்றுப் போன சமயம் அது. வேதனை வெள்ளம் அவரையும் அவரது பிரபஞ்சத்தையும் அமுக்கித் தன்னுள் ஆக்கித் தடந்தெரியாமல் செய்துவிட்டது.

*இடைவெட்டு*

     சேனாவரையர் : வையை நதியிலே வெள்ளம் இப்படி வந்தது என்று சொன்னால் நம்புகிறவர்கள் யார்? சில சமயங்களில் கண்ணால் காணும் விஷயங்கள் கூட நிஜமா என்ற சந்தேகம் தோன்றுகிறது. நீர் அந்தப் பக்கமாக ஒரு கூடை மண்ணை அள்ளிப் போடும்.

     இளம்பூரணர் : பரிகள் நரிகளுக்குச் சமம் என்றீரே. உமக்கு யக்ஷிணி உபாசனை உண்டோ ? சொன்ன மாதிரி பாண்டியன் குதிரை லாயத்திற்குள் நரிகள் எப்படிப் புகுந்தன? தலையாலங்கானத்துப் போரில் கவந்தங்கள் ஆடினவாம். கூளிகளும் பேய்களும் கூழ் அட்டனவாம். அன்று கேட்ட பேரிரைச்சல் கூட இன்றைய நரி ஒன்றின் சத்தத்துக்கு ஈடாகாதே. அலறல் கால பாசம் போல் அல்லவா உயிரை நாடித் தடவியது! நரிச் சத்தம் கேட்டே நகரத்தில் சாவுக்குக் கணக்கு இல்லையாம்.

     அடியார்க்கு நல்லார் : பேசிக்கொண்டே நிற்காதீர். முழங்கால் பரியந்தம் தண்ணீர் சுற்றுவது தெரியவில்லை? இன்று வையையில் வெள்ளம் எப்படி உண்மையோ அப்படி நரிகளும் உண்மை. இவை கண்ணுக்குத் தெரிந்தவைகள். இவற்றிற்கும் மேலாக ஏதோ ஒன்று, ஆதிகாரணமான ஒன்று...

     ஒற்றர் : ருத்திரசாத்தன் உத்தரவுப்படி வாதவூரனை விலங்கிட்டு விட்டார்கள். அவனைப் பிடித்தால் போதாது. குதிரைப் பாகனையும் பிடிக்க வேண்டும்.

     மூவரும் : மன்னவன் ஆக்ஞை அல்ல அது. அவன் அப்படி உத்தரவு போடமாட்டான். ஐயோ, வெள்ளம் பொங்குகிறதே! நுரைகள் புரள்வதைப் பாருங்கள். சிவனுடைய சிரிப்பு மாதிரி...

3

சொக்கன்

     ஆலவாய்மெய்யன், உலகத்தைத் தன்வசம் இழுக்கும் சொக்கன் விளையாடினான். ஜீவாத்மாவின் வேதனையை உணராது விளையாடினான். அங்கயற்கண்ணியின் கண்ணில் பாசமும் கன்னத்தில் குழிவும் தோன்ற அவன் விளையாடினான். பெரியவராக வந்து, பெரிய ஞானோபதேசம் செய்வதுபோலப் பாவனை செய்து, தெரிந்ததையே சொல்லி, ஏற்கனவே தன் பாசத்தில் சிக்கிய ஜீவனை இன்னும் ஒரு பந்தனம் இட்டு வேடிக்கை பார்த்தான். ஈசன் விளையாடினான். வாதவூரன் அவனுடைய விளையாட்டுப் பொம்மையானான். ஈசனுக்குப் பிரபஞ்சமே வாதவூரனாயிற்று. பிரபஞ்சத்துக்கு உடைமையான அவனது பார்வை வாதவூரன் மீது மட்டும் விழுந்தது. பிரபஞ்சமும் அண்டபகிரண்டமும் அனந்தகோடி ஜீவராசிகளும் யோக நித்திரை போன்ற தாமஸ் நித்திரையில் ஆழ்ந்துள்ள நிலைப்பொருள்களும் ஏகோபித்து ஏற்றுச் சுமக்க வேண்டிய அவனது பார்வை அத்தனையையும் விட்டு அதில் ஒன்றான மகாநுட்பமான வாதவூரன் என்ற தோற்றத்தின் மீது, ஓர் உருவ வரம்புக்கு உட்பட்ட தனிச் சாகையின் மீது விழுந்தால் அது சுமக்குமோ?

     ஆமாம், அதனால் தான் வாதவூரன் நெஞ்சிலே வேதனை பிறந்தது. சொக்கன் திடுக்கிட்டான். விளையாட்டு விபரீதமாயிற்று. அவன் மனசையும் அந்த வேதனை கவ்வியது. அங்கயற்கண்ணியின் கண்கள் வாளையைப் போலப் புரண்டு சிரித்தன. கன்னங்கள் குழிவுற்றன. கோவைக் கனிக்கு நிறமும் மென்மையும் கற்பிக்கும் அவள் அதரங்கள் மலர்ந்தன. கொங்கைகள் பூரித்தன. காம்புகள் விம்மின. செல்வி சிரிக்கத் தொடங்கிவிட்டாள். அண்ணல் தன் செயல் கண்டு, பித்தாடும் சொக்கன் வேதனை கொண்டு சிரிக்கலானான். சிரிப்பு நாபிக் கமலத்திலிருந்து கொப்புளித்துப் பொங்கியது.

     ஈசன் மனசிலோ வேதனை. ஈசன் வாதவூரனாகிவிட்டான். அவன் துயரம் இவன் துயரமாகியது. ஜீவனுடைய பொறுப்புக்குள் உட்பட்டு, அதன் அற்பத்திலும் அற்பமான கொடுக்கல் வாங்கல் பேரங்களின் சிக்கலை நன்குணர்ந்து அதன் சுமைகளைத் தாங்கலானான். ஈசன் கழுத்துத் தள்ளாடியது. என்ன சுமை! என்ன பாரம்! கண்கள் ஏறச் செருகின.

     அவனது வேதனையைக் கண்டு அங்கயற்கண்ணி சிரிக்கிறாள். அண்டபகிரண்டமும் ஏகோபித்து அவளுடன் சேர்ந்து ஈசனைப் பார்த்துச் சிரிக்கின்றன.

     வாதவூரனாக ஈசன் வேதனை கொண்டான். அவன் மனம் என்ற சர்வ வியாபகமான காலம் கொல்லாத சர்வ மனம் நைந்தது. குமுறியது. கொப்புளித்தது. வாதவூரனாகக் கிடந்து வெம்பியது. குதிரை எனக்காட்டி ஏமாற்றி வந்துவிட்ட செயலுக்காக தானும் அந்த மனிதனைப் போல சிட்சை பெற்றால்தான் ஆறும்; வாதவூரன் தன் அருகில் வந்தால், அவனருகில் தான் இருக்க லாயக்கு என்று நினைத்தாள்.

     வேதனை சுமந்த கழுத்துடன் ஆலவாய்க் கர்ப்பக் கிருகத்திலிருந்து வெளிவந்தது ஓர் உருவம். ஈசன் வெளிவந்தான். சுற்றுமுற்றும் பார்த்தான். எங்கே பார்த்தாலும் வெள்ளம். மதுரை மூதூரை ஊர் என்று அறிய முடியாதபடி ஆக்கிவிட்டது வெள்ளம். ஈசன் நடந்தான். ஈசன் சிரித்தான். ஈசன் வெள்ளத்தில் நீந்தி விளையாடி முக்குளித்துக் கும்மாளி போட்டுக்கொண்டிருந்தான்.

     அங்கயற்கண்ணி சிரித்தாள். வெள்ளம் இன்னும் உக்கிரமாக நுரை கக்கிப் பாய்ந்தது.

     மனித வம்சம் துயரத்திலும் வேதனையிலுமே ஒன்றுபட்டு வரும். தன்னை அறியாமலே முக்திநிலை எய்தும். அன்றிரவு அவ்வூரின் நிலை அது. யானையும் காளையும் மனிதனும் மதிலும் மண்ணும் அரசனும் ஆண்டியும் அன்று வெள்ளத்தைத் தடுக்க, மறிக்க, தேக்கி நகரத்தைக் காப்பாற்ற, காரிருட்டில் அருகில் இருப்பவன் என்ன செய்கிறான் என்பதை அறியாமல் மண்வெட்டிப் போட்டுப் போட்டு நிரப்பினர். மண் கரைந்தது. மறுபடியும் போட்டனர். கரைந்தது. மறுபடியும் போட்டனர்.

     அன்றிரவு இரண்டு ஜீவன்கள் வெவ்வேறான துயரத்தில் வாடின. வாதவூரன் தன் பொய்யை நிலைநாட்டிய தெய்வத்தின் கருணையைச் சுமக்க முடியாமல் வேதனைப்பட்டான். மண் வெட்டி வெட்டிப் போடும் அனந்தகோடி ஜனங்கள் முயற்சியை அவனது வேதனை கரைத்தது. உழைத்து உழைத்துச் சோர்வடைகிறவர்களுக்குப் பசியாற்ற ஒரு கிழவி, பந்தமற்ற நாதியற்ற கிழவி பிட்டு அவித்து அவித்துக் கொட்டி விற்று வருகிறாள். அவள் கிழவி. அவளுக்கு நாதி இல்லை. பந்தம் இல்லை. பிட்டும் பிட்டுக் குழலுந்தான் பந்தம். தணிக்கை பண்ணிவரும் கணக்கர்கள் பசி போக்கப் பிட்டுக்காரியிடம் வந்தார்கள். அவளது அடுப்பில் எரிந்த நெருப்பில் கொஞ்சம் எடுத்து அவளது வயிற்றில் கொட்டிவிட்டுப் போனார்கள். மதுரைவாசிகள் எல்லாரும் கரைக்கு மண் போடவேணுமாம். அவளது பங்குக்கும் தச்சிமுழம் நாலு அளந்து போட்டிருக்கிறதாம். அவள் என்ன செய்வாள்? பிட்டுக் குழலைப் பார்ப்பாளா? அடுப்பைப் பார்ப்பாளா? அந்த இருட்டில் ஆள் தேடிப் போவாளா?

     இருட்டிலே "ஆச்சீ" என்ற குரல் கேட்டது. அதிலே எக்களிப்பும் பரிவும் கலந்திருந்தன. வேதனை வெள்ளத்தில் முக்குளித்த ஈசன் குரல் அல்லவா?

     "யாரப்பா, புட்டு வேணுமா?" என்று கேட்டாள் ஆச்சி.

     "என்ன ஆச்சி, புட்டா அவிக்கிறாய்? புட்டு நன்றாக இருக்குமா?" என்கிறான் ஈசன்.

     "என்னப்பா, இப்படி வா. உன்னை வெளிச்சத்தில் நல்லாப் பார்க்கட்டும். என் பேரன் மாதிரி இருக்கியே; வா இப்படி உட்காரு. உன் பங்கை நிரப்பிவிட்டியா? எனக்கு நாலு மொளம் அளந்திருக்காங்களாம். நீதான் ரெண்டு கூடை மண்ணை போடேன். உனக்குக் கோடி புண்ணியம் உண்டு" என்றாள் கிழவி.

     "எனக்கு என்ன கொடுப்பாய் ஆச்சி?"

     "என்னிடம் காசு பணம் ஏது? இப்பவரை சாப்பிட்டவங்க கணக்குச் சொல்லிவிட்டு போயிட்டாங்க. உனக்கு வேணும்னா, புட்டுத் தாரேன்."

     "ஆச்சி, அப்படியென்றால் நீ ரொம்ப ஏழையா?"

     "இதென்ன கூத்தா இருக்கு! உங்க ஊர்லே பணக்காரங்களா புட்டுச் சுட்டுப் பொளைக்கிறாங்க?" என்று சிரித்தாள் கிழவி. நாலு புறமும் நரிகள் ஊளையிடும் வனாந்தரத்தில் சிக்கிக்கொண்ட ஜீவனின், நிர்க்கதியாகத் தவிக்கும் உயிரின், துயரம் அந்தச் சிரிப்பிலே இழையோடியது.

     "நீயோ பரம ஏழை. எனக்கோ பசி சொல்லி முடியாது. போனாப் போகிறது. புட்டு உதிர்ந்து போனால், அதை மட்டும் எனக்கு எடுத்து வைத்திருந்து கொடு. நான் போய் உன் பங்குக்கு மண் போடுகிறேன். ஆனால் எனக்குப் பசி அதிகம். ஒரு கூடை போட்டால் உடனே ஓடி வருவேன்."

     "இந்தா..."

     "இப்ப வேண்டாம் ஆச்சி. போட்டுவிட்டு வருகிறேன்..."

     ஈசன் மறுபடியும் வெள்ளத்தில் முக்குளித்து விளையாடினான். கரையேறினான். மறுபடியும் தண்ணீரில் குதிக்க ஆசை. ஆனால் பிட்டு ருசி நாக்கைச் சுழற்றியது. ஒரு கூடை மண் எடுத்துப் போட்டான்.

     பாதிவெள்ளம் படக்கென்று வற்றியது. ஆனால் ஜலம் மனித வெள்ளம் இட்ட மண் கரைமேல் மோதித் தத்தி அலம்பி வழிந்து கொண்டிருந்தது.

     "ஆச்சீ, ஒரு கூடை போட்டுவிட்டேன். பசிக்கிறது. புட்டுப்போடு."

     "பேரப்பிள்ளை, தெய்வமேதான் உன்னை இங்கே அனுப்பியிருக்கு. நீயும் அதிட்டக்காரந்தான். நீ போனதுலே இருந்து எடுக்கிற புட்டு எல்லாம் உதுந்துதான் போகிறது. இதோ பார், எத்தனை பேர் காத்து உட்கார்ந்திருக்கிறார்கள்."

     "அது கெடக்கட்டும். இந்த முந்தித் துணியிலே புட்டெப் போடு. நேரமாச்சு. மண்ணைப் போட்டு கரையை அடைக்க வேண்டாமா?"

     "ஆமாம், ஆமாம். நேரமும் விடியலாச்சு. ராசா வந்தா..."

     "ஆமாம், ஆமாம்."

     ஈசன் ஒரே அமுக்கில் பிட்டை விழுங்கி விட்டான். என்ன ருசி! பேரின்பம்! ஒரே ஓட்டமாக ஓடி, கூடையை விட்டெறிந்துவிட்டு, வெள்ளத்தில் குதித்து விளையாடினான்.

     அசுரப் பசி போலச் சுழித்தோடும் வெள்ளத்தில் மீன்போலப் புரண்டு, முழுகி, முக்குளித்து விளையாடினான். வெள்ளத்தில் படம் விரித்துச் சீறிக்கொண்டு நீந்திச் செல்லும் நாக சர்ப்பம் மாதிரி எதிர்த்து நீந்துவான். ஆனந்த வெள்ளத்தில் மிதக்கும் யோகியைப் போலச் சுகாசனமிட்டு வெள்ளத்தின் போக்கில் மிதந்து வருவான். திரும்பவும் வாலடித்துத் திரும்பும் முதலையைப் போலக் கரை நோக்கி வருவான். பிறகு மீன்கொத்திப் புள் மாதிரி கைகளைத் தலைக்குமேல் வீசிக் கோபுரம் போலக் குவிய நீட்டிக் கொண்டு உயரப் பாய்ந்து தலை குப்புற ஜலத்தைக் கிழித்துக் கொண்டு மறைந்துவிடுவான். ஜனங்கள் செத்தானோ என்று பயப்படும்போது மறுகரையில் தலை தெரியும். பிறகு சீறிவரும் பாம்பு மாதிரி நீந்தித் திரும்புவான்.

     வெளிச்சம் வர ஆரம்பித்தது. வெள்ளத்தின் பீதி குறைய, ஜனங்களும் கரைகளில் நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

     சூரியனுடைய முதல் கிரணங்கள் வெள்ளத்தின் நுரைகளில் வானவில்லிட்டன. அரிமர்த்தன பாண்டியனுடைய மணிமுடி மீதும் பட்டத்து யானையின் வைரமிழைத்த முகபடாம்மீது பட்டுத் தெறித்து மின்னி விளையாடின.

     அரசன் கரையோரமாகப் பட்டத்து யானைமேல், ஜனங்களிட்ட கரையைப் பார்த்துக் கொண்டு, கணக்கர்கள் கணக்கு ஒப்பிக்க, வந்து கொண்டிருந்தான். தூரத்திலே அவன் கண்ணில் ஒரு பகுதி மட்டும் உடைத்துக் கொண்டு வெள்ளம் பாய்வது தெரிந்தது. மீசை துடிக்க அந்த இடத்துக்கு யானையை விரட்டி ஓட்டும்படி சொல்லுகிறான். பாகன் அங்குசத்தினால் குத்துக் குத்தி, செவியின் புறத்தில் விரல்களால் இடிக்கிறான். அடுத்த கணம் யானை அந்த இடத்துக்கு வந்து நிற்கிறது.

     அரிமர்த்தன பாண்டியன் தரையில் குதிக்கிறான்.

     மேல்மூச்சு வாங்க ஓடி வந்த கணக்கர்கள் அவசர அவசரமாக ஏடுகளைப் புரட்டி, "பிட்டு வாணிச்சி பங்கு" என்கிறார்கள்.

     கூடியிருந்த ஜனக் கும்பல் "தண்ணீரில் கும்மாளி போடுகிறவன் கடமை" என்கிறது.

     அரசன் கைதட்டிச் சைகை செய்து கரைக்கு வரும்படி அழைக்கிறான்.

     ஈசன் நாகசர்ப்பம் போலக் கரைக்கு நீந்தி வந்தான். கரையேறி ஈரம் சொட்டச் சொட்ட நிற்கிறான்.

     கோபாவேசமாக, "ஏன், மண்ணைப் போடாமல் பொழுதைக் கழிக்கிறாய்? சோம்பேறி!" என்று கேட்கிறான் அரசன்.

     ஈரச் சிகையை அண்ணாந்து உலுப்பிக்கொண்டு ஈசன் வாய்விட்டு அசட்டுச் சிரிப்பு சிரித்தான். கண்டத்தில் நனைந்த மறு சூரிய ரேகை பட்டு மின்னியது. ஈசன் சிரித்தான்.

     அரசன் கோபித்தான். கூட்டத்தை விலக்குவோர் வசம் இருந்த பொற்பிரம்பை வெடுக்கெனப் பிடுங்கி ஓங்கி ஓர் அடி கொடுத்தான். பொற்பிரம்பு ஈசன் முகத்திலும் நெஞ்சிலும் ரத்த விளிம்பு காட்டியது.

     அரசன் சினம் அவியவில்லை. மீண்டும் ஓங்கினான்.

     ஈசனது அசட்டுச் சிரிப்பு அதிகமாயிற்று. வெருண்டவன் போல ஜலத்தில் பாய்ந்தான்.

     அரசன் சினம் அவிந்தது. ஈசனைக் காப்பாற்ற அவனைத் தாவி எட்டிப் பிடித்தான். ஈசனது முடிப்பிட்ட முந்தி கிழிந்து கையுடன் வந்தது. ஈசன் ஜலத்தில் முக்குளித்து மறைந்துவிட்டான். அரசனும் தொடர்ந்து குதித்து மறைந்துவிட்டான்.

     வெள்ளம் மடமடவென்று வற்றியது. நுங்கும் நுரையுமாகக் கொப்புளித்த பிரளயம் சர்வேசனது ஹிரண்ய கர்ப்பத்தில் ஒடுங்கியது.

     ஈரச் சகதியிலே மன்னவன் அரிமர்த்தன பாண்டியனது சடலம் கிடந்தது.

     உலராத சகதியிலே, முகத்தில் சிவந்த வடுவுடனும் சொல்லில் அடங்காத பொலிவுடனும் மன்னவன் அரிமர்த்தன பாண்டியனது சடலம் கிடந்தது.

     மடங்கி இறுகப் பற்றிய கைக்குள், முன்றானைக்குள் பந்தகமிட்ட ஓலை நறுக்கு ஒன்று இருந்தது.

     ஈசனுக்குக் குதிரைகள் பெற்றுக் கொண்டதாக எழுதித் தந்த அந்த முறிச்சீட்டு.

*இடைவெட்டு*

     இளம்பூரணர் : அவன் மண் சுமப்பவன் என்றால் என்ன? நெஞ்சில் தைரியம் இருந்தால் தண்ணீரில் நீந்தக் கூடாதா? மதுரை நகரத்தில் எத்தனை வீரர்கள் உண்டு! அவர்கள் காலில் உள்ள வீரக்கழல்களின் ஓசை எவ்வளவு! அவ்வளவு பேரும் மண்ணை வெட்டித்தானே போட்டுக்கொண்டிருந்தார்கள்? அவன் ஒருத்தன் தானே தனக்குள் வெள்ளம் அடக்கம் என்பது போல அதன்மீது பாய்ந்து நீந்தினான்? அவனை அடிக்கலாமா?

     அடியார்க்கு நல்லார் : இருட்டில் இருந்த பயம் நமக்கு இப்பொழுது இல்லை. வெள்ளமும் வற்றிவிட்டது. வெள்ளத்தில் வரம்பு தெரிகிறது. அவன் எங்கே? அரிமர்த்தன பாண்டியன் எங்கே?

     சேனாவரையர் : பரிகள் எங்கேயோ, வெள்ளம் எங்கேயோ, வெள்ளத்தில் நீந்தியவன் எங்கேயோ, அங்கே அரிமர்த்தனபாண்டியன்.

4

அங்கயற்கண்ணி

     மதுரை மூதூரின் கர்ப்பக்கிருகத்திலே மணியூசலிலே கருங்குயில் ஒன்று உந்தி உந்தி ஆடிக்கொண்டிருந்தது. விளக்கற்ற வெளிச்சத்திலே புலன்களுக்கு எட்டாத ஒளிப் பிரவாகத்திலே மணியூசல் விசையோடு ஆடியது. அளகச் சுருள் புலன் உணர்வு நுகரும் இருட்டுடன் இருட்டாகப் புரள, கால் விசைத்து உந்திச் சுழி குழிந்து அலைபோல உகள, கொங்கைகள் பூரித்து விம்மிக் குலுங்க, அன்னை மணியூசல் ஆடினாள். ஆலவாய் ஈசன், அழகன் சொக்கன் வருகை நோக்கி மணியூசலாடினாள். தோள் துவள அவள் சங்கிலிகளைப் பற்றி அமர்ந்த பாவனை, சொக்கனை ஆரத் தழுவ அகங்காட்டும் செயல் போல அமைந்திருந்தது. அங்கயற்கண்ணியின் அதரத்திலே கீற்றோடிய புன்சிரிப்பு; மருங்கிலே துவட்சி; கண்ணிலே விளையாட்டு; நெஞ்சிலே நிறைவு. செல்வி மணியூசல் ஆடினாள். அண்ட பகிரண்டங்களையும் சகல சராசர பேதங்கள் யாவற்றையும் தன்னுள் அடக்கும் ஆலிலை வரிவிட்டு புரண்டு விளையாடியது.

     அந்த ஒளியில், அந்த இருட்டில், அந்த நிறைவில் சொக்கன் வந்தான். முகத்திலே வடு, மார்பிலே வடு, நெஞ்சிலே நிறைவு. விளையாடச் சென்ற ஈசன் வீடு திரும்பினான். விளையாட்டின் பலன் ஏற்று ஈசன் வீடு திரும்பினான்.

     அன்னை அகங்குழைய நெஞ்சம் பூரிக்க அண்ணலை நோக்கினாள். அந்தப் பார்வை அகிலத்தை இழுக்கும் சொக்கனை இழுத்தது. தானாக, தன்னில் ஓர் அம்சமாகப் பிரபஞ்சத்தைக் கொண்ட ஈசனது அகன்ற மார்பில் அன்னை துவண்டாள். மணியூசலிலே வேகமும் கனலும், வேட்கையற்ற வேட்கையும் இரண்டு நாகசர்ப்பங்கள் உயிர்ப் பாசத்தினால் பின்னிப் புரளுவது போல, ஏதோ ஒரு தோற்றந்தான் அந்த இருட்டில் தெரிந்தது. அன்னையின் நெஞ்சு சுரந்தது. ஈசனின் வேதனை அவிந்தது.

     மணியூசல் விசைகொண்டு உயர்ந்து பொங்கியது. வாமபாகத்தில் தன்னில் ஓர் அம்சமாக அன்னையை அமர்த்தி, வலக்கரம் கொண்டு சங்கிலியைப் பற்றி விரல்கொண்டு ஊன்றி ஆடினார்.

     பாதத்தினடியில் முயலகன் முதுகு சற்று வளைந்து கொடுத்தது. கொடுமை என்ற அவனது கோரப் பற்களிடையிலும் புன்சிரிப்பு என்ற எழில் நிலாப் பொங்கியது.

     வாமபாகத்தமர்ந்த அன்னை இடக்கரம் ஒரு சங்கிலியைப் பற்றியது. அவளது பெருவிரல் ஈசனது பெருவிரலில் பின்னிப் பிணைந்து உந்தியது.

     "அடித்ததற்குப் பலன் அரியணைக்குப் பதில் அரன்மடி போலும்" என்றாள் அன்னை.

     அவர்களது மடிமீது அரிமர்த்தன பாண்டியன் அமர்ந்திருந்தான்; சிசுவைப் போல, கவலை இல்லை; எதுவும் இல்லை.

     "வாதவூரன் நெஞ்சில் வெள்ளம் அடங்கவில்லை. வழிநடையும் தூரந்தான்" என்றான் ஈசன்.

பொற் பிரம்பு

     ஈசன் முகத்தில் விழுந்தது பொற்பிரம்பின் அடி. அவனது மார்பில் விழுந்தது. நெஞ்சில் விழுந்தது. அப்புறத்து அண்டத்தின் முகடுகளில் விழுந்தது. சுழலும் கிரகங்களின் மீது விழுந்தது. சூலுற்ற ஜீவராசிகளின் மீது விழுந்தது. கருவூரில் அடைப்பட்ட உயிர்கள் மீது, மண்ணின்மீது, வனத்தின் மீது, மூன்று கவடாக முளைத்தெழுந்த தன்மீது, முன்றிலில் விளையாடிய சிசுவின் மீது, முறுவலித்த காதலியின் மீது, காதலின்மீது, கருத்தின் மீது, பொய்மையின் மீது, சத்தியத்தின் மீது, தருமத்தின்மீது அந்த அடி விழுந்தது.

     காலத்தின் மீது விழுந்தது. தர்மதேவனுடைய வாள் மீது விழுந்தது. சாவின் மீது, பிறப்பின் மீது, மாயையின் மீது, தோற்றத்தைக் கடந்தவன் மீது, வாதவூரன் மீது, வாதவூரன் வேதனையின் மீது, அவன் வழிபட்ட ஆசையின் மீது, அவனது பக்தியின் மீது அந்த அடி விழுந்தது.

     அங்கயற்கண்ணியின் மீது விழுந்தது. அவளது நெற்றித் திலகத்தின் மீது, கொங்கைக் குவட்டின்மீது அந்த அடி விழுந்தது.

கலைமகள், ஜனவரி-பிப்ரவரி 1946

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்