Mar 20, 2011

நகரம் - சுஜாதா

சுவர்களில் ஓரடி உயர எழுத்துக்களில் விளம்பரங்கள் விதவிதமாக ஒன்றி வாழ்ந்தன. நிஜாம் லேடி புகையிலை , ஆர்.கே.கட்பாடிகள் -எச்சரிக்கை! புரட்சி தீ! சுவிசேஷக் கூட்டங்கள் - ஹாஜி மூசா ஜவுளிக்கடை (ஜவுளிக்கடல் ) - 30 .9 -1973 அன்று கடவுளை நம்பாதவர்கள் சுமக்கப் போகும் தீச்சட்டிகள்

        மதுரையில் ஒரு சாதாரண தினம். எப்போதும் போல "பைப்" அருகே குடங்கள் மனிதர்களுக்காகsujatha வரிசைத் தவம் இருந்தன . சின்னப் பையன்கள் 'டெடன்னஸ்" கவலை இன்றி மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் போக்குவரத்துக் கழக பஸ்கள் தேசியம் கலந்த டீசல் புகை பரப்பிக் கொண்டிருந்தன . விரைப்பான கால்சராய் சட்டை அணிந்த ப்ரோடீன் போதா போலீஸ்காரர்கள் இங்கிட்டும் அங்கிட்டும் செல்லும் வாகன- மானிட போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி கொண்டுஇருந்தார்கள் நகரின் மனித இயக்கம் ஒருவிதப் ப்ரோவ்னியான் இயக்கம் போல இருந்தது . கதர் சட்டை அணிந்த மெல்லிய அதிக நீளமில்லாத ஊர்வலம் ஓன்று, சாலையின் இடதுபுறத்தில் அரசாங்கத்தை விலைவாசி உயர்வுக்காக திட்டிக்கொண்டே ஊர்ந்தது. செருபில்லாத டப்பாக்கட்டு ஜனங்கள் மீனாட்சி கோயிலின் ஸ்தம்பித்த கோபுரங்கள் , வற்றிய வைகை , பாலம் .. மதுரை !

நம் கதை இந்த நகரத்துக்கு இன்று வந்திருக்கும் ஒரு பெண்ணைப் பற்றியது. வள்ளியம்மாள் தான் மகள் பாப்பாத்தியுடன் மதுரை பெரியாஸ்பத்திரியில் ஓ.பி டிப்பாட்மேண்டின் காரிடாரில் காத்திருந்தாள். முதல் தினம் பாப்பாத்திக்கு சுரம். கிராம ப்ரைமரி ஹெல்த் சென்டரில் காட்டியதில் அந்த டாக்டர் பயங்காட்டிவிட்டார். "உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துகிட்டு போ' என்றார் அதிகாலை பஸ் ஏறி ....

பாப்பாத்தி ஸ்ட்ரெச்சரில் கிடந்தால். அவளைச் சூழ்ந்து ஆறு டாக்டர்கள் இருந்தார்கள். பாப்பாத்திக்குப் பன்னிரண்டு வயது இருக்கும். இரண்டு மூக்கும் குத்தப்பட்டு ஏழைக் கண்ணாடிக் கற்கள் ஆஸ்பத்திரி வெளிச்சத்தில் பளிச்சிட்டன. நெற்றியில் விபூதிக் கீற்று . மார்பு வரை போர்த்தப்பட்டுத் தெரிந்த கைகள் குச்சியாய் இருந்தன. பாப்பாத்தி சுரத் தூக்கத்தில் இருந்தால். வாய் திறந்திருந்தது.

பெரிய டாக்டர் அவள் தலையை திருப்பி பார்த்தார்.  கண் இரப்பையை தூக்கிப் பார்த்தார். கண்ணகளை விலரால் அழுத்திப் பார்த்தார். விரல்களால் மண்டையோட்டை உணர்ந்துப் பார்த்தார். பெரிய டாக்டர் மேல் நாட்டில் படித்தவர் போஸ்ட் க்ராசுவேட் வகுப்புகள் எடுப்பவர். ப்ரொபசர் . அவரைச் சுற்றிலும் இருந்தவர்கள் அவரின் டாக்டர் மாணவர்கள் .

"acute case of meningitis . notice  this .."

வள்ளியம்மாள் அந்தப் புரியாத சம்பாசனையின் ஊடே தான் மகளையே ஏக்கத்துடன் நோக்கிக் கொண்டிருந்தாள் . சுற்றிலும் இருந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து ஆப்தல்மாஸ்கோப் மூலம் அந்தப் பெண்ணின் கண்ணுக்குளே பார்த்தார்கள். 'டார்ச்' அடித்து விழிகள் நகருகின்றனவா என்று சோதித்தார்கள் . குறிப்புகள் எடுத்துக் கொண்டார்கள் .

பெரிய டாக்டர், "இவளை அட்மிட் பண்ணிடச் சொல்லுங்கள் " என்றார்.

வள்ளியம்மாள் அவர்கள் முகங்களை மாற்றி மாற்றிப் பார்த்தாள். அவர்களில் ஒருவர், 'இத பாரும்பா, இந்தப்ப் பெண்ணை உடனே ஆஸ்பத்திரியில் சேர்க்கணும். அதோ அங்கே உக்காந்திருக்காரே , அவர் கிட்ட போ , சீட்டு எங்கே ?" என்றார்

வள்ளியம்மாளிடம் சீட்டு இல்லை.

"சாரி அவரு கொடுப்பாரு . நீ வாய்யா இப்படி பெரியவரே ! "

வள்ளியம்மாள் பெரிய டாக்டரைப் பார்த்து, " அய்யா, குழந்தைக்குச் சரியா போயிருங்களா ?" என்றாள் .

"முதல்ல அட்மிட் பண்ணு. நாங்க பார்த்துக்கறோம் . டாக்டர் தனசேகரன், நானே இந்தக் கேசை பார்க்கிறேன். ஸீ தட் ஸீ இஸ் அட்மிட்டட் எனக்கு கிளாஸ் எடுக்கணும். போயிட்டு வந்ததும் பார்க்கறேன்"

மற்றவர்கள் புடைசூழ அவர் ஒரு மந்திரி போல கிளம்பிச் சென்றார். டாக்டர் தனசேகரன் அங்கிருந்த சீனிவாசனிடம் சொல்லிவிட்டு  பெரிய டாக்டர் பின்னால் விரைந்தார்.

சீனிவாசன் வள்ளியம்மாளைப் பார்த்தான்.

"இங்கே வாம்மா . உன் பேர் என்ன ..? டேய் சாவு கிராக்கி ! அந்த ரிஜிஸ்டரை எடுடா..! "

"வள்ளியம்மாள்"

"பேசண்டு பேரு?"

"அவரு செத்து போயிட்டாருங்க .."

சீனிவாசன் நிமிர்ந்தான்

"பேசண்டுன்னா நோயாளி .. யாரைச் சேர்க்கணும் ?"

"என் மகளைங்க "

"பேரு என்ன ..?'

"வள்ளியம்மளுங்க"

"என்ன சேட்டையா பண்ற ? உன் மாக பேரு என்ன ../'

"பாப்பாத்தி '

"பாப்பாத்தி!.. அப்பாடா. இந்தா , இந்தச் சீட்டை எடுத்துகிட்டு போயி இப்படியே நேராப் போனின்னா அங்கே மாடிப்படிகிட்ட நாற்காலி போட்டுகிட்டு ஒருத்தர் உக்காந்திருப்பார் . வருமான பாக்குறவரு அவருகிட்ட கொடு."

"குளந்தங்கே..?'

"குளைந்தைக்கு ஒண்ணும் ஆவாது. அப்படியே படுத்து இருக்கட்டும்  கூட யாரும் வல்லையா ? நீ போய் வா. விஜயரங்கம் யாருய்யா ?"

வள்ளியம்மாளுக்கு பாபதியை விட்டுப் போவதில் இஷ்டமில்லை . அந்த கியூ வரிசையும் அந்த வாசனையும் அவளுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. இறந்து போன தான் கணவன்மேல் கோபம் வந்தது.

அந்த சீட்டை கொண்டு அவள் எதிரே சென்றால். நாற்காலி காலியாக இருந்தது. அதான் முதுகில் அழுக்கு இருந்தது. அருகே இருந்தவரிடம் சீட்டைக் காட்டினாள்.ஆவர் எழுதிக்கொண்டே சீட்டை இடது கண்ணின் கால்பாகத்தால் பார்த்தார்."இரும்மா அவரு வருத்தம்' என்று காலி நாற்காலியை காட்டினார். வள்ளியம்மாளுக்கு தயும்பித் தன் மகளிடம் செல்ல ஆவல் ஏற்பட்டது. அவள் படிக்காத நெஞ்சில் , காத்திருப்பதா - குழந்தையிடம் போவதா என்கிற பிரச்சனை உலகளவுக்கு விரிந்தது.

"ரொம்ப நேரமாவுங்களா..? " என்று கேட்க பயமாக இருந்தது அவளுக்கு.

வருமானம் மதிப்பிடுபவர் தன் மருமானை அட்மிட் பண்ணிவிட்டு மெதுவாக வந்தார் உட்கார்ந்தார்.  ஒரு சிட்டிகைப் பொடியை மூக்கில் மூன்று தடவை தொட்டுக் கொண்டு கர்சிப்பைக் கயிறாக சுருட்டித் தேய்துக்க் கொண்டு சுறு சுறுப்பானார்.

"த பார் வரிசையா நிக்கணும். இப்படி ஈசப்புச்சி மாதிரி வந்திங்கன்ன என்ன செய்யிறது ..?"

வள்ளியம்மாள் முப்பது நிமிஷம் காத்திருந்தபின் அவள் நீட்டிய சீட்டு அவளிடமிருந்து பிடுங்கப்பட்டது.

"டாக்டர் கிட்ட கை எழுத்து வாங்கி கிட்டு வா , டாக்டர் கையழுத்தே இல்லையே அதிலே ..?

"அதுக்கு எங்கிட்டு போவனும்..?"

"எங்கிருந்து வந்தே ..?'

"மூனாண்டிபாடிங்கே !'

கிளார்க் "ஹாத்" என்றாள். சிருதார். "மூணாண்டிபட்டி ! இங்கே கொண்ட அந்த சீட்டை "

சீட்டை மறுபடி கொடுத்தால். அவர் அதை விசிறி  போல் இப்படிப் திருப்பினார்.

"உன் புருசனுக்கு என்ன வருமானம் ?"

"புருஷன்  இல்லீங்க "

"உனக்கு என்ன வருமானம்? "

அவள் புரியாமல் விழித்தாள்.

"எத்தன ரூபா மாசம் சம்பாதிப்பே ?"

"அறுப்புக்குப் போன நெல்லாக் கிடைக்கும் அப்புறம் கம்பு, கேழ்வரகு !'

"ரூபா கிடையாதா.! சரி சரி .. தொண்ணூறு ரூபா போட்டு வைக்கிறேன்."

"மாசங்களா?"

"பயப்படாதே .சார்ஜு பண்ண மாட்டாங்க . இந்த , இந்த சீட்டை எடுத்துகிட்டு கொடு இப்படியே நேராப் போயி இடது பாக்கள் - பீச்சாங்கைப் பக்கம் திரும்பு. சுவத்திலே அம்பு அடையாளம் போட்டிருக்கும் . 48  - ம் நம்பர் ரூமுக்கு போ ."

வள்ளியம்மாள் அந்த சீட்டை இரு கரங்களிலும் வாங்கி கொண்டால். கிளார்க் கொடுத்த அடையாளங்கள் அவள் எளிய மனதை மேலும் குழப்பி இருக்க , காற்றில் விடுதலை அடைந்த காகிதம் போல் ஆஸ்பத்திரியில் அலைந்தாள். அவளுக்கு படிக்க வராது. 48  ம் நம்பர் என்பது உடனே அவள் ஞாபகத்திலிருந்து விலகி இருந்தது. திரும்பி போயி அந்த கிளார்க்கை கேட்க அவளுக்கு அச்சமாக இருந்தது.

ஒரே ஸ்ட்ரச்சரில் இரண்டு நோயாளிகள் உக்கார்ந்து கொண்டு, பாதி படுத்துக்கொண்டு மூக்கில் குழாய் செருகி இருக்க அவளைக் கடந்தார்கள். மற்றொரு வண்டியில் ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் சாம்பார் சாதம் நகர்ந்து கொண்டிருதது. வெள்ளைக் குல்லாய்கள் தெரிந்தன . அலங்கரித்து கொண்டு வெள்ளை கோட் அணிந்து கொண்டு ஸ்டேதேஸ்கோப் மாலையிட்டு, பெண் டாக்டர்கள் சென்றார்கள். போலீஸ்காரர்கள், காபி டம்ளர்காரர்கள், நர்சுகள் எல்லோரும் எல்லா திசைகளிலும் நடந்து கொண்டு இருந்தார்கள். அவர்களை நிறுத்திக் கேட்க அவளுக்கு  பயமாக இருந்தது. என்ன கேட்பது என்றே அவளுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு அறையின் முன் கும்பலாக நின்று கொண்டு இருந்தார்கள். அங்கே ஒரு ஆள் சீட்டுப் போல பல பழுப்புச் சீட்டுகளைச் சேகரித்து கொண்டிருந்தான். அவன் கையில் தான் சீட்டைக் கொடுத்தாள். அவன் அதைக் கவனமில்லாமல் வாங்கி கொண்டான். வெளியே பெஞ்சில் எல்லோரும் காத்திருந்தார்கள். வள்ளியம்மாளுக்குப் பாப்பாத்தியின் கவலை வந்தது. அந்த பெண் அங்கே தனிய இருக்கிறாள். சீட்டுகளைச் சேகரித்தவன் ஒவ்வொரு பெயராக கூப்பிட்டு கொண்டிருந்தான். கூப்பிட்டு வரிசையாக அவர்களை உட்கார வைத்தான். பாப்பாத்தியின் பெயர் வந்ததும் அந்த சீட்டை பார்த்து, "இங்க கொண்டு வந்தியா! இந்தா, " சீட்டை திருப்பி கொடுத்து, "நேராப் போ,' என்றான். வள்ளியம்மாள், "அய்யா , இடம் தெரியலிங்களே"  என்றாள். அவன் சற்று எதிரே சென்ற ஒருவனை தடுத்து நிறுத்தி, " அமல்ராஜ் இந்த அம்மாளுக்கு 48 ம் நம்பரை காட்டுய்யா . இந்த ஆள் பின்னாடியே போ . இவர் அங்கேதான் போறார்." என்றான்.

அவள் அமல்ராஜின் பின்னே ஓட வேண்டியிருந்தது.

அங்கே மற்றொரு பெஞ்சில் மற்றொரு கூட்டம் கூடி இருந்தது. அவள் சீட்டை ஒருவன் வாங்கி கொண்டான். வள்ளியம்மாளுக்கு ஒன்றும் சாப்பிடாததாலும், அந்த ஆஸ்பத்திரி வாசனையினாலும் கொஞ்சம் சுற்றியது.

அரை மணி கழித்து அவள் அழைக்கபட்டாள். அறையின் உள்ளே சென்றாள். எதிர் எதிராக இருவர் உட்கார்ந்து காகிதப் பென்சிலால் எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தன் அவள் சீட்டைப் பார்த்தான். திருப்பி பார்த்தான். சாய்த்துப் பார்த்தான்

"ஓ,பி. டிபார்ட்மேண்டிலிருந்து வரியா ..?"

இந்த கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

"அட்மிட் பண்றதுக்கு எழுதி இருக்கு. இப்ப இடம் இல்லை. நாளைக்கு கலையிலே சரியாய் ஏழரை மணிக்கு வந்துடு என்ன..?"

"இங்கேயே வா, நேரா வா, என்ன ?"

வள்ளியம்மாளுக்கு அந்த அறையை விட்டு வெளியே வந்ததும் அவளுக்கு ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் தியாக வந்த விட்ட தன் மகள் பாப்பாத்தியின் கவலை மிகப் பெரியதாயிற்று.அவளுக்குத் திரும்பிப் போகும் வழி தெரியவில்லை. ஆஸ்பத்திரி அறைகள் யாவும் ஓன்று போல் இருந்தன.ஒரே ஆசாமி திரும்ப திரும்ப பல்வேறு அறைகளில் உட்கார்ந்திருப்பது போல தோன்றியது. ஒரு வார்டில் கையை காலைத் தூக்கி கிட்டி வைத்துக் கட்டி பல பேர் படுத்திருந்தார்கள் . ஒன்றில் சிறிய குழந்தைகள் வரிசையாக முகத்தைச் சுளித்து அழுது கொண்டிருந்தன.மிஷின்களும், நோயாளிகளும், டாக்டர்களுமாக, அவளுக்குத் திரும்பும் வழி புரியவில்லை.

"அம்மா" என்று ஒரு பெண் டாக்டரை கூப்பிட்டு தான் புறப்பட இடத்தின் அடையாளங்களைச் சொன்னாள். "நெறைய டாக்டருங்க கூடிப் பேசிக்கிட்டாங்க. வருமானம் கேட்டாங்க. பணம் கொடுக்க வேண்டாமுன்னு சொன்னாங்க. எம் புள்ளைய அங்கிட்டு விட்டுட்டு வந்திருக்கேன் அம்மா! "

அவள் சொன்ன வழியில் சென்றாள். அங்கே கேட்டுக் கதவு பூட்டி இருந்தது. அப்போது அவளுக்கு பயம் திகிலாக மாறியது. அவள் அழ ஆரம்பித்தாள். நட்ட நடுவில் நின்று கொண்டு அழுதாள். ஒரு ஆள் அவளை ஓரமாக நின்று கொண்டு அழச்சொன்னான். அந்த இடத்தில் அவள் அழுவது அந்த இடத்து அசெப்டிக் மணம் போல எல்லோருக்கும் சகஜமாக இருந்திருக்க வேண்டும்.

"பாப்பாத்தி! பாப்பாத்தி! உன்னை எங்கிட்டு பாப்பேன்? எங்கிட்டுப் போவேன்? " என்று பேசிக் கொண்டே நடந்தாள். ஏதோ ஒரு பக்கம் வாசல் தெரிந்தது. ஆஸ்பத்திரியை விட்டு வெளியே செல்லும் வாசல். அதான் கேட்டை திருந்து வெளியே மட்டும் செல்ல விட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வாசலைப் பார்த்த ஞாபகம் இருந்தது அவளுக்கு.

வெளியே வந்து விட்டாள்.அங்கிருந்து தான் தொலை தூரம் நடந்து மற்றோரு வாசலில் முதலில் உள் நுழைந்தது ஞாபகம் வந்தது. அந்தப் பக்கம் ஓடினாள். மற்றொரு வாயிலை அடைந்தாள். அந்த மரப்படிகள் ஞாபகம் வந்தது. அதோ வருமானம் கேட்ட ஆசாமியின் நாற்காலி காலியாக இருக்கிறது. அங்கேதான்!

ஆனால் வாளில்தான் மூடப்பட்டிருந்தது உள்ளே பாப்பாத்தி ஒரு ஓரத்தில் இன்னும் அந்த ஸ்ட்ரச்சரில் கண் மூடிப் படுத்திருப்பது தெரிந்தது.

"அதோ! அய்யா, கொஞ்சம் கதவைக் திறவுங்க, எம்மவ அங்கே இருக்கு .'

சரியா மூணு மணிக்கு வா. இப்ப எல்லாம் க்ளோஸ்'" அவனிடம் பத்து நிமிஷம் மன்றாடினாள். அவன் பாஷை அவளுக்குப் புரியவில்லை. தமிழ்தான். அவன் கேட்டது அவளுக்கு புரியவில்லை. சில்லறையைக் கண்ணில் ஒத்திக் கொண்டு யாருக்கோ  அவன் வழி விட்டபோது அந்த வழியில் மீறிக்கொண்டு உள்ளே ஓடினாள். தன் மகளை வாரி அணைத்துக்கொண்டு தனியே பெஞ்சில் போய் உட்கார்ந்து  கொண்டு  அழுதாள்.

பெரிய டாக்டர் எம்.டி. மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து முடிந்ததும் ஒரு கப் காப்பி சாப்பிட்டு விட்டு வார்டுக்கு சென்றார். அவருக்கு காலை பார்த்த மெனின்ஜைடிஸ் கேஸ் நன்றாக ஞாபகம் இருந்தது.B .M .J  யில்  சமீபத்தில் புதிய சில மருந்துகளை பற்றி வர படித்திருந்தார்.

"இன்னைக்குக் காலையிலே அட்மிட் பண்ணச் சொன்னேனே  மெனின்ஜைடிஸ் கேஸ். பன்னிரண்டு வயசுப் பொண்ணு எங்கேய்யா..?

"இன்னிக்கு யாரும் அட்மிட் ஆகலையே டாக்டர் "

"என்னது? அட்மிட் ஆகலையே? நான் ஸ்பெசிபிக்கா சொன்னேனே! தனசேகரன், உங்களுக்கு ஞாபகம் இல்லை ..?"

"இருக்கிறது டாக்டர் ! "

"பால்! கொஞ்சம் போயி விசாரிச்சு கிட்டு வாங்க அது எப்படி மிஸ் ஆகும் ?"

பால் என்பவர் நேராகக் கீழே சென்று எதிர் எதிராக இருந்த கிளாற்குகளிடம் விசாரித்தார்."எங்கயா! அட்மிட் அட்மிட்டுன்னு நீங்க பாட்டுக்கு எழுதிபுடுறீங்க. வார்டிலே நிக்க இடம் கிடையாது! "

"சுவாமி சீப்  கேக்குறார் !"

"அவருக்கு தெரிஞ்சவங்களா ?"

"இருக்கலாம் எனக்கு என்ன தெரியும்?"

"பன்னண்டு வயசுப் பொண்ணு ஒண்ணும் நம்ம பக்கம் வரல. வேற யாரவது வந்திருந்தாக் கூட எல்லோரையும் நாளைக்கு காலையிலே வர சொல்லிட்டேன். ராத்திரி ரெண்டு மூணு பெட்டு காலியாகும். எமேர்ஜன்சின்னா முன்னாலேயே சொல்லணும்! இல்லை பெரியவருக்கு அதிலே இண்டரஸ்ட் இருக்குன்னு ஒரு வார்த்தை! உறவுக்காரங்களா ..?'

வள்ளியம்மாளுக்கு மறுநாள் காலை ஏழரை மணி வரை என்ன செய்ய போகிறோம் என்பது தெரியவில்லை. அவளுக்கு ஆஸ்பத்திரியின் சூழ்நிலை மிகவும் அச்சம் தந்தது. அவர்கள் தன்னைப் பெண்ணுடன் இருக்க அனுமதிப்பார்களா என்பது தெரியவில்லை. வள்ளியம்மாள் யோசித்தாள். தன் மகள் பாப்பாத்தியை அள்ளி அணைத்துக் கொண்டு மார்பின் மேல் சார்த்திக் கொண்டு, தலை தோளில் சாய, கைகால்கள் தொங்க, ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தாள். மஞ்சள் நிற சைக்கிள் ரிக்சாவில் ஏறிக் கொண்டாள். அவனை பஸ் ஸ்டாண்டுக்குப் போகச் சொன்னாள்.

"வாட் நான்சென்ஸ்! நாளைக்கு காலை ஏழரை மணியா! அதுக்குள்ள அந்த பொண்ணு செத்துப் போயிடும்யா! டாக்டர் தனசேகரன் நீங்க ஓ.பி யிலே போயி பாருங்க . அங்கேதான் இருக்கும்! இந்த ரெச்சர்ட் வார்டிலே ஒரு பெட் காலி இல்லைன்னா நம்ம டிப்பாட்மென்ட் வார்டில பெட் இருக்குது. கொடுக்க சொல்லுங்க! க்விக்!"

"டாக்டர்! அது ரிசர்வ் பண்ணி வைச்சிருக்கு "

"i dont care. i want that girl admitted now. Right now!"

பெரியவர் அம்மாதிரி இதுவரை இரைந்தது இல்லை. பயந்த டாக்டர் தனசேகரன், பால், மிராண்டா  என்கிற தலைமை நர்ஸ் எல்லோரும் வள்ளியம்மாளை தேடி ஓ.பி டிபாட் மெண்டுக்கு ஓடினார்கள்.

"வெறும் சுரம்தானே ? பேசாமல் மூனாண்டிப் பட்டிக்கே போயி விடலாம்.வைத்தியரிடம் காட்டிவிடலாம். கிராம ஆஸ்பத்திரிக்கு போக வேண்டாம். அந்த டாக்டர் தான் பயங்காட்டி மதுரைக்கு விரட்டினார். சரியாக போயிவிடும். வெள்ளைக்கட்டி போட்டு விபூதி மந்திரித்து விடலாம்." சைக்கிள் ரிக் ஷா  பஸ் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வள்ளியம்மாள், "பாப்பாத்திக்குச் சரியாய் போனால் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு இரண்டு கை நிறைய காசு காணிக்கையாக அளிக்கிறேன்' என்று வேண்டி கொண்டாள்.

******

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

31 கருத்துகள்:

Prabu M on March 20, 2011 at 10:29 AM said...

"நகரம்" சிறுகதையைப் படித்தவர்களைவிட படிக்காதவர்கள்தான் குறைவாக இருப்பார்கள்....
மீண்டும் படித்தேன்... புதிதாகத்தான் இருந்தது... ஆங்காங்கே சுஜாதாவின் கூர்மையான ஒற்றைவரிகள் அதே ஊசிமுனை வலியைக் கொடுத்தன... கதை புதிதாக இருப்பதற்குக் காரணம் ஒருவேளை மதுரை ஜி.ஹெச் இன்றும் எந்த மாற்றமுமின்றி அப்படியே இருப்பதாலோ??? மனது கணக்கின்றது.... பெரியாஸ்பத்திரி இன்னும் இப்படியேதான் இருக்கின்றது.... போன வருடம்கூடப் போக நேர்ந்திருந்தது.... சென்ற வருடம் கண்ட காட்சிகளை வைத்து இந்தப் பழம்பெரும் சிறுகதையைக் காட்சிப்படுத்திப் பார்க்க முடிவதை நினைக்கையில் பாப்பாத்திகளின் ஆவிகளின் குமுறல்கள் காதடைக்கின்றது..... :-(

ராஜகோபால் on March 20, 2011 at 12:58 PM said...

அமரர் சுஜாதாவின் எழுத்து என்றும் இளமைதான் நன்றி!

மேலும் சில சுஜாதா சிறுகதைகள் படிக்க இங்க வாங்க

http://gundusbooks.blogspot.com/2011/02/blog-post_4527.html

Essex Siva on March 20, 2011 at 3:24 PM said...

மதுரை ஜிஹெச் மட்டுமல்ல, உள்ளே போய் விட்டால், எல்லா ஊர் மருத்துவமனைகளும் ஒன்றுதான். வேண்டுமானால் மக்களின் உச்சரிப்பை வைத்து எந்த ஊர் என ஊகித்துக்கொள்ளலாம்!

Essex சிவா

Kaarthik on March 23, 2011 at 4:05 AM said...

அப்பாடா! ஒரு வழியாக சுஜாதாவின் கதை இங்கு வந்துவிட்டது :-)

மாலோலன் on March 25, 2011 at 12:30 AM said...

சுஜாதாதான் இலக்கியவாதி இல்லையே சார்!!,இன்றய முன்,பின்,நடு நவீன அறிவு ஜீவீ எலக்கியவாதிகளின் அள்வுகோல்படி!!அப்புறம் எப்படி இத்தளத்தில் அவருடைய கதை?

RAMESHKALYAN on March 26, 2011 at 2:03 PM said...

நகரம் கதையை நீண்டநாளுக்குப்பின் மறுமுறை படிக்கும்போதும் அதே அனுபவம் கிடைக்கிறது. சுஜாதா. 1970ல் எழுதியிருப்பார் இதை. தேங்கலாக அலைந்துகொணடிருக்கும் ஜனத்திரளை ப்ரவ்னியன் இயக்கம் இயக்கம் என்கிற திரவஇயக்க கோட்பாடு ஒன்றை அப்போதே ஒப்பிடுகிறார் அறிவியல் சுஜாதா. There is a void. We miss him.

சி.பி.செந்தில்குமார் on March 26, 2011 at 2:45 PM said...

aahaa

Anonymous said...

நான் ப‌டித்த‌ சிறு க‌டைக‌ளிலே மிக‌ச் சிற‌ந்த‌ க‌தை. முன்பு ஆன‌ந்த‌ விக‌ட‌னில் ப‌டித்த‌தாக‌ ஞாப‌க‌ம்.

Guru.Radhakrishnan on April 18, 2011 at 8:50 PM said...

Thestory of Late Mr.Sujatha is telling the truth of a village women whose daughter suffering from Meningities taking to Govt.Hospital,Madurai and explaing things that are existing in the hospital. The thme of the story is however the innocent people from remote village has no way to go to the govt.hospital and taking the patients since the lathargic attitude of employees of the hospital.t5he slong of the wordshave ben written colloquelly.Hats of hisdeeds and devotion in short stories.

Balaraman on May 27, 2011 at 5:25 PM said...

நான் சுஜாதவின் நெடு நாளைய ரசிகன். கிட்டத்தட்ட பள்ளியிருக்கும் போதே.

இவருடைய கதைகளை இரண்டு முறை படிக்க வேண்டியிருக்கும்.

கூர்மையான எழுத்து.

மறைமுக சமுதாய சாடல்.

விஞ்ஞாணம்.

அனைத்தும் நிறைந்திருக்கும். சொற்களுக்கு புதிய பரிமானம் கொடுத்தவர்.

இதற்கு முன் இருக்கும் comments களைப் படிக்கும் போது, இவரை 'இலக்கிய
வட்டத்தில்' சேர்ப்பதில் சற்று தயக்கம் இருப்பது போல் இருக்கிறது.

நவீன எழுத்தாளர்களில் மறக்க முடியாதவர். We miss u SUJATHAA...

KKPSK on May 28, 2011 at 8:14 PM said...

வேறு தளத்தில் இதை படித்தேன்..படித்த ஒருவாரத்திற்கு என்னால் மறக்கவே முடியவில்லை. இதில் வரும் மக்களை, இடங்களை வெகு அருகில் பார்த்ததும், பழகியதும் மற்றும் சுஜாதாவும்..காரணங்கள்!
கற்றதும் பெற்றதும்..i miss a lot!

வை.கோபாலகிருஷ்ணன் on July 17, 2011 at 8:09 PM said...

சுஜாதாவின் இந்தக்கதையை இப்போது தான் முதன் முதலாகப்படிக்கிறேன். யதார்த்தமான சம்பவங்கள் மிக அருமையாக சொல்லப்பட்டுள்ளன. மனதை என்னவோ செய்கிறது. பகிர்வுக்கு நன்றி.

prem kumar on October 19, 2011 at 10:02 AM said...
This comment has been removed by the author.
prem kumar on October 19, 2011 at 10:03 AM said...

எப்படி கற்பனைகளை வாழ வைப்பது என்று சுஜாதாவிடம் இந்த கால எழுத்தாளர்கள் கற்று கொள்ள வேண்டும், அறிவியல் அரசியல் அவருக்கு கை வந்த கலை... கதையை முடிக்கும் போது ஏதோ ஒரு பாரம் ஏதோ ஒன்றை இழந்ததைப் போல ஒரு அமைதி.... அது பாப்பாத்திகாகவா? சுஜாதாவிற்காகவா தெரியவில்லை...

Bala on January 5, 2012 at 5:28 PM said...

One of a kind.Irreplacable.I part of me has gone.
Is there any other stronger word than miss you?
That word Sujatha.

MARUTHU PANDIAN on January 12, 2012 at 2:48 PM said...

Disturbing story.

santhosh on March 21, 2012 at 9:18 PM said...

whatever be our notion about his contribution to the literature, we cannot deny the obvious fact that his language is fresh, and his observation skills are extra-ordinary.

santhosh on June 12, 2012 at 9:58 PM said...

சுஜாதாவின் ஆளுமையை அறிய இக்கதையின் ஆரம்பத்தில் வரும் சாலையைப் பற்றிய வர்ணனை மட்டுமே போதும். அவரை வர்த்தக எழுத்தாளர் என்று குறை சொல்பவர்களும் மறுக்க முடியாதவை அவரது சமயோசித வார்த்தைப் பிரயோகங்கள்.

Unknown on August 9, 2012 at 11:37 PM said...

சுஜாதா-வின் எழுத்துக்கள் என்றும் இளமையானவை!

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி on March 4, 2013 at 1:39 PM said...

மூட நம்பிக்கையே மேல்..

Unknown on April 1, 2013 at 11:58 AM said...

thanks to all who made this website

Unknown on June 28, 2013 at 4:04 PM said...

fine story. murugesu kanagalingam

Nanji on July 25, 2015 at 9:30 PM said...

Novice writers:
அவர் எழுதிக்கொண்டே சீட்டை கவனமின்றி பார்த்தார்.
Experience writers:
அவர் எழுதிக்கொண்டே சீட்டை இடது கண்ணால் பார்த்தார்.
Sujatha:
அவர் எழுதிக்கொண்டே சீட்டை இடது கண்ணின் கால்பாகத்தால் பார்த்தார்.
Wow!

வே.நி.சூர்யா on September 13, 2015 at 9:18 PM said...

சுஜாதாவின் கதைகளை மறக்கவோ மறுக்கவோ இயலவில்லை

அண்டனூர்சுரா on August 24, 2017 at 9:52 PM said...

பூசாரிகள் இன்னும் ஏன் தேவைப்படுகிறார்கள் என்பதற்கு இக்கதை ஒரு தேவை

Unknown on October 18, 2019 at 11:21 PM said...

(நிஜாம் லேடி புகையிலை , ஆர்.கே.கட்பாடிகள் -எச்சரிக்கை!) - அவரின் இளமைக் குசும்பு

(கதர் சட்டை அணிந்த மெல்லிய அதிக நீளமில்லாத ஊர்வலம் )- 1973லயே காங்கிரஸ் அப்படிதான்னு கிண்டல் அடிச்சிருக்கார்...

அரசு மருத்துவமனையின் அழுக்கும், வள்ளியம்மாலின் பயமும் மனங்களில் அப்பிக்கொண்டு நிற்கிறது.

Susa on April 18, 2020 at 1:09 PM said...

There are many things still hold good even now. Among them first is Madurai accent and even usage of words which is not easy to understand.
Second the description of GH now it is Rajaji hospital.
Brownian movement though it is physical molecular movement it is aptly applicable now for the corona virus movement or mutation and I fear it may be the same attitude in near future for the corona case admission and that time we may not expect the same royal treatment given now(atleast we guess from the daily tracking and reporting by government at this initial time).

Tamil Mathi.EN on January 18, 2021 at 12:35 PM said...

கோவிட் காலத்தில் இக்கதையை படிக்கிறேன். இன்றும் நம் வாழ்வியலோடு ஒட்டி பார்க்க முடிகிறது. இன்னும் நகரம் அப்படியேதான் இருக்கிறது.

Unknown on February 17, 2021 at 11:14 AM said...

அற்புதமான கதை.2ஆவதோ3ஆவது தரம் படித்தேன்.ஙேஙேஙே........

Srinivas on May 26, 2021 at 5:13 AM said...

Re reading it for the umpteenth time. Took me back to my Medical College days in 1970s.Can anyone portray the sheer helplessness of a village womanwho is made to run from pillar to post? Please note that there is no con man/woman relieving the woman of what little money she has, as a lesser writer would have done

ramasamyrajesh on May 14, 2023 at 9:04 AM said...

“நகரத்தை” எனது பதின்ம வயதிலேயே படித்துவிட்டேன். மீண்டும் ஒரு வாசிக்கும் தருணத்தைத் தந்தமைக்கு நன்றி. மிகவும் இயல்பாக எழுதக் கூடியவர்தான் சுஜாதா. அலட்டிக் கொள்ளாத வழக்கு மொழியில் கதையின் ஜீவனைப் பிரதிபலித்துவிடக்கூடியவர். முன்பு படித்தபோது எனக்கு பாமர மக்களின் வாழ்வியல் அவலத்தையும் அவர்களது நம்பிக்கை சார்ந்த வாழ்க்கையையும் உணர்வுரீதியாக பார்க்க முடிந்தது. இந்த “ஏழு கழுதை” வயதில் மீள்வாசிப்புக்கு ஆட்படும்போது, அதன் அடியாழத்தைக் கண்டுவிட்டோமோ என இன்னொரு அனுபவ தரிசனத்தைக் கொடுகிறது.
மனித வாழ்க்கை என்பது அடிப்படையில், வாழும் சூழலின் அகம் புறம் சார்ந்தது, இதற்கு படித்தவர்களும் பாமரர்களும் விலக்கல்ல. ஒரு பட்டித்தொட்டியில் வாழும் வள்ளியம்மாள் தனது மகள், பாப்பாத்தியின் சிகிட்சைக்காக பட்டண மருத்துவமனைக்கு வரும்போது, அவளுக்கு நிகழ்கின்ற அனுபவங்கள், அதையும்விட, தன்னை அந்த சூழலோடு பொருத்திக்கொண்டு புழங்க இயலாத அறியாமை, படிப்பின்மை, கிலேசமாய் பயமாய் அவளைக் ஆட்கொள்கிறது. கதையின் வழி நெடுக தெளித்திருக்கும் சின்ன சின்ன சம்பாஷனைகள், சமூக தட்டுகளில் உழலும் மாந்தர்களின் இடைவெளியை நுணுக்கமாக காட்டுகிறது. அடிதட்டு வர்க்கமான கிராமவாசி, அதினிலும் மேலான மத்திய கீழ்தட்டு, மத்திய தட்டு மருத்துவமனை பணியாளர்கள் எனும் வர்க்கவாசிகளின் குணாதிசயங்கள் இயல்பாக சொல்லப்படுகிறது. இந்த இடைவெளிதான், வள்ளியம்மாவை கலவரமாக்கி, தமக்கு ஒவ்வாத சூழலிடமிருந்து விடுவித்து, அவளுக்கு உவப்பான தோதான வழியைத் தேர்ந்தெடுக்க வைக்கிறது. மூளைக்காய்ச்சலால் அவதியுற்று அபாயகட்டத்தில் இருக்கும் தன் மகள் பாப்பாத்தியை இந்த இடைவெளிகள்தாம் கொல்கின்றன என்பது அப்பபட்டமான உண்மை. உயிரைப் பறித்துக் கொண்டிருக்கும் முளைக்காய்ச்சலின் அபாயம் அறியாது, வெறும் மந்திரித்து தரும் விபூதியும், பிரார்த்தனையுமே தமது மகளைக் காப்பாற்றிவிடும் எனும் எண்ணத்திற்கு தள்ளியது எது? இதை உரித்துப் பார்க்கும்போது, மனிதரிடையே நிலவும் சமுக, அரசியல் மற்றும் பொருளாதார அலகிலான இடைவெளியே. இரண்டு மூன்று தட்டுகள் உராய்ந்து, ஒன்றாக இயங்கவேண்டிய “லூப்ரிகேஷன்” எனும் பசை இல்லாமையே காரணம். இநத அவலத்தைத்தான் சூட்சமமாக பார்க்க முடிகிறது.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்