Mar 18, 2011

எதிர்கொண்டு-பூமணி

வெளியே சாயங்காலச் சத்தங்கள் வெளிச்சத்தைப் போல் உள்வாங்கிக் கொண்டிருந்தன.

கீழ்வீட்டுக்காரி இன்னேரம் வந்திருக்கணுமே. வேலைக்காரனிடம் பெருமை கொழித்துக்கொண்டு பொடி நடையாக வருவாள். அவன் இவளுக்குத் துணை போனவன். அதென்ன வாய் ஓயுதா கை ஓயுதா. ராத்திரி நேரங்கூடத் தூங்குவாளோ என்னமோ. என்னேரம் பார்த்தாலும் வாய் பொரிப் பொரியும்.poomani2

சுட்டுப் போட்டாலும் இன்றைக்கு அவளுக்கு உறக்கம் வராது. கனைத்துக் கனைத்து அழுகணும்.

திருணையில் குப்புறப் படுத்து முதுகில் காலால் தாளம் போட்ட சுந்தரம் திருப்பிக்கொண்டான்.

நேரத்தோடு சோறுகேட்டு அம்மாவிடம் வசவு வாங்கிக் கட்டிக் கொண்டதுக்கு இதுக்குள் கீழ வீட்டுக்காரி கச்சேரி வைத்திருந்தால் தோதாக இருக்கும். சே சின்னத்தங்கச்சி என்னேரம் பார்த்தாலும் வாள் வாள் என்று கத்திக் கொண்டு அடுத்த ஆள் சத்தம் கேட்க விடாமல். இந்த அம்மா தான் அவளை எடுத்து அமர்த்தினால் என்ன.

பிச்சமணியாவது வந்தால் முற்றத்தில் பாய் விரித்து கச்சேரி கேட்கலாம். ஆறாங்கூட்டம் காராம்பசு என்று மேகத்தில் வெள்ளி பார்த்துக்கொண்டே சிரிக்கலாம். அவன் ஒரு குசுவிணிப் பயல். பேசாமல் முடக்கிப் படுத்திருப்பான்.

எல்லாம் இனிக் கொஞ்ச நேரத்தில் தெரியும். என்னென்ன வசவுதான் வாயில் வரப் போகிறதோ. அவளுக்கு இது காணாது. காட்டில் ஈ காக்காய் இறங்கினால் கூட மே வீட்டிலிருந்து கையைக் கண்ணாடி போட்டுப் பார்த்து நாறலாக வையச் சொல்கிறதா. அடேயப்பா நாயிலெத்தனை கழுதையிலெத்தனை.

எதுக்கு வைவதென்றில்லை. களத்தில் தும்பைச் செடி கும்மலுக்குள் வண்ணாத்திப்பூச்சி பிடித்ததுக்கெல்லாமா வையணும். ரெம்ப எரிச்சலாக இருந்தது. பிச்சமணியென்றால் ஓட்டம் பிடித்துவிட்டான். அவள் புருசன் வேறு பொதுக் பொதுக்கென்று கருத்த எருமை மாதிரி விசாரிக்க வந்துவிட்டார். அதுக்கு அவள் சொல்கிறாள்.

'சின்னக் கழுதைக களத்துல ஒழப்புதுக. சத்தம்போட்டா போகுதுகளான்னு பாருங்க. அந்த கெங்கையாப் பெய மகன் இருக்கானே. மொளச்சு மூணெலப் போடல. அதுக்குள்ள மொறச்சிட்டுல்ல போறான். துமுராக்கும். '

பெரிய மனுசனும் என்னமோ தானியம் ஒழப்பிக் கெடந்த மாதிரி 'அதெவம்லே கொழுப்பா இங்க வந்து ஒட்டிக்கிட்டு ' என்று துணைக்கு வைகிறார் குருட்டுப் பார்வை பார்த்தபடி. அதுக்குத்தான் இந்த வயசிலேயே கண்ணை மறைத்திருக்கிறது. முதலில் பெண்டாட்டி நின்ற இடம் தெரிந்ததோ என்னமோ.

கெங்கையாப் பயலாம். இன்றைக்கு வரைக்கும் அவள் ஒரு பிள்ளைகூடப் பெறவில்லை. வாயில் எப்படி வருகிறது. அய்யாவிடம் சொன்னதுக்கு. 'ஆமா அவ பெரிய வீட்டுச் சீமாட்டி. அப்படித்தான் பேசுவா. கழுத பொலம்பீட்டுக் கெடக்கு. ' என்று எச்சைத் துப்பிவிட்டு வேலைக்கு கிளம்பிவிட்டார். இதைப் போய் அம்மாவிடம் சொன்னால் அவள் கேட்கிறாள்.

'ஒனக்கு வண்ணாத்திப் பூச்சி புடிக்கிறது வேற எடமே கெடைக்கலயாலே. '

நல்ல அம்மாதான்.

பிச்சமணியைக் கேட்ட கேள்வியில் விக்கிப் போனான். பிறகென்ன எடுத்ததுக்கெல்லாம் விசுக்கென்று கழட்டிக்கொண்டு ஓடினால் எப்படி. முதுகில் ரெண்டு சாத்தலாம் என்று கூடத் தோணியது. பிறகு ஓயாமல் அழுவான். அமர்த்தி முடியாது.

அவன் மற்ற பிள்ளைகளுடன் சேரமாட்டான். எத்தனை அடித்தாலும் மாறி மாறி வீட்டுக்குத் தேடி வருவான். ஓயாமல் விளையாட்டுத்தான். பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை. குண்டி கிழிந்த கால்சட்டையைப் போட்டுக்கொண்டு எப்படிப் போவதாம். அய்யாவிடம் கேட்டால் 'அது ஒண்ணுதான் கொறச்சலாக்கும் ' என்கிறார்.

ஊரில் நிறையப் பேர் ஆடுமாடு மேய்க்கிறார்கள். சாணியெடுக்கிறார்கள். எல்லாம் மத்தியான நேரம் ஊருணிக்கரையில் கூடினால் ஒரு கூட்டமே திரண்டு விடும். பள்ளிகூடப் பிள்ளைகள் அவ்வளவு இருக்காது.

வீட்டு மூலையில் அய்யா உஸ்ஸென்று மம்பட்டியை இறக்கினார். தலைத் துண்டை எடுத்து உச்சியில் சொறிந்தார். அம்மா வென்னீர்ப் பானையை இறக்கி கொட்டாரத்துப் பக்கம் கொண்டு போனாள். தங்கச்சியைத் தூக்கிக் கொண்டு பின்னால் போன அய்யா சொன்னார்.

'சுந்தர மொதலாளி யென்ன நேரத்தோடயே நித்திரையில கூடியாச்சு இண்ணைக்கு. '

இவர் ஒருத்தர் வாய்த்தார். மண்டையைச் சொறியத்தான் தெரியும்.

கீழத்தெருவில் கசபுசல் கேட்டது. ரெம்பப் பேர்சத்தம் போட்டார்கள். சே பொட்டக் கூத்தாக்கும். ஆரம்பித்தாயிற்றா இன்றைக்கும். இனி ஓய்ந்தாற் போலத்தான். ஒண்ணைத் தொட்டு ஒண்ணாக பின்னிக் கொண்டே போகும். கடைசியில் ஒருத்தி அழுகணும்.

கீழ வீட்டுக்காரி இன்னும் வந்திருக்க மாட்டாளோ. வீடெல்லாம் விளக்குப் பொருத்தியாயிற்றே. இதுக்குள் வந்திருப்பாளே. வழியில் எத்தனைப் பேரிடம் வாயைக் கொடுத்து நிற்கிறாளோ. வீட்டில் வந்து பிள்ளையையா அமர்த்தப் போகிறாள்.

ஊர்ச்சனம் முக்கால்வாசி அவள் வீட்டில் வேலை செய்கிறது. கொத்து வாங்க எத்தனை பேர் காத்திருக்கிறார்களோ வீட்டு வாசலில். அம்மாகூட அடிக்கடி பெட்டித் தூக்கிக் கொண்டு போவாள். அன்றைக்கெல்லாம் ராத்திரிச் சாப்பாடு பிந்திக் கிடைக்கும். அவள் வீட்டில் அப்படிக் காத்துக் கிடக்கணும். அதுகூட அவளுக்குப் பிடிக்காது. கிணற்றில் ரெண்டு பேர் குளித்தாலே விரட்டியடிக்கிறாளே அதை பொறுப்பாளா.

பிச்சமணிக்கு அன்றைக்குச் சரியான எறி. ஊருணியில் தண்ணீரில்லையென்று மாமரத்துக் கிணற்றுக்குக் குளிக்கப் போனதை எப்படியோ தெரிந்து வந்துவிட்டாள். கண்டபடி வைது மண்கட்டியால் எறிந்தாள். பிச்சமணியென்றால் கூப்பாடு போடுகிறான். எறிக்கு முங்கித் தப்பித்து வெளியேறியும் கண்ணில் மண் விழுந்து உறுத்தியது. கிணற்றை விட்டு ஏறும்போது மண்டையிலேயே குட்டினாள்.

கால்ச்சட்டையைக் கையிலெடுத்து ஓடி ஓடைக்குள் வைத்துப் போட்டுக் கொண்டபோது அவள் கழுகு மாதிரி மிதிகல்லில் நின்று இன்னும் வைது கொண்டிருந்தாள். ஓடும்போது 'அம்மணக்குண்டி அரட்டவாள ' என்று கேலி பண்ணிய கொத்து வேலைப் பெண்களைப் பார்த்து கல்லெறியலாமா என்றிருந்தது. பிச்சமணி மண்டையைத் தடவித் தடவி அழுதான். மண்டையில் உருண்டையாகப் புடைத்திருந்தது. அவன் அழுகையோடு சொன்னான்.

'இவள ஒரு நாளைக்காச்சும் நெத்தியில உச்சுறனா இல்லையான்னு பாரு. '

அப்படிச் செய்து அவள் அழுவதைப் பார்த்தால் நன்றாகத்தானிருக்கும்.

இதாச்சும் என்ன தைப் பொங்கலுக்குக்கூடப் பொலிகட்ட அவளது வேப்ப மரத்தில் குழை ஒடித்ததற்கு வைத வசவிருக்கிறதே ஒரு கடகமிருக்கும். மரம் தளிர்க்காமல் பட்டுப் போகுமாம். அவர்களுக்கு மட்டும் வேலைக்காரன் கட்டுக் கட்டாக ஒடிக்கிறானே அது எதுக்காம்.

இவளுக்கு இதோடா போயிற்று. இருக்கட்டும் இருக்கட்டும். முந்தா நாளே ஒரு ஆட்டம் ஆடியிருப்பாள். அதுக்கு லாய்க்கில்லாமல் போய்விட்டது. அதை பிச்சமணியே செய்தான். மத்தியானம் படப்பு மறைவில் அவள் வீட்டுக் கோழியை அடித்து வேலிக் கருவலைக்குள் திணித்துவிட்டு அருவமில்லாமல் வந்தாயிற்று. சரியான கோழி. ராத்திரிவரை வாயலுக்கத்தையே காணும். என்ன விஷயமென்று மறுநாள் போய்ப் பார்த்தால் வெருகு சரியானபடிக்குத் தின்றிருக்கிறது. அதுக்கு வளம். பிறகெங்கே வைவாள். வெருகைத் தேடி வைய வேண்டியதுதான். கதை அப்படியே இல்லையென்றால் தெருவில் சனங்கள் நடமாடியிருக்க முடியாது.

பிச்சமணிக்கென்றால் எரிச்சல்.

'இதுக்கு வேறெதாச்சும் வழியிருக்காடா. '

'இருக்குடா பெரிய வேட்டா வைக்க வேண்டியதுதான். '

அவள் வீட்டு வெளித் தொழுவில் பசுங்கண்ணுக்குட்டி மட்டும் கட்டிக் கிடந்தது. மதியந்தான். பசுமாட்டை அவுத்துக் கொண்டு காட்டுக்குப் போயிருந்தார்கள். வீட்டில் யாருமே இல்லை. சரி இதுதான் சமயமென்று கோலி தட்டும் கம்பியை எடுத்துப் போய் அதுக்கு நடுமண்டையில் ஒரேயடி. சொதுக்கென்று செத்து விழுந்தது. கயிற்றை அவுத்து நிறைசலுக்குத் தூக்கிக்கொண்டு போய் தூணோரம் நிற்கிற வாக்கில் தண்ணீர்ப் பானைக்குள் மூஞ்சியை ஒட்டிவைத்துவிட்டு மெல்ல நழுவும் வரை பிச்சமணி அடிக்கடி வெளியே வந்து ஆள் பார்த்தான்.

காரியத்தை முடித்துவிட்டு வருகையில் பிச்சமணி சொன்னான்.

'இதும் சரிப்படலன்னா ஒரு நா ராத்திரி மாமரத்துக் கெணத்துக்குப் போயி மிதிகல்ல ஒடச்சுப் போட்டுட்டு வந்துற வேண்டியதுதான். '

'அது பெறகில்ல. '

பொழுதடைந்ததும் வீட்டுக்கு வருவதாகச் சொன்ன பிச்சமணியைக் காணவில்லை. எந்த மூலையில் கிடக்கிறானோ.

இதுக்குள் கீழவீட்டுக்காரி வந்திருப்பாள். முதலில் நிறைசலுக்குப் போய் ரெம்பத் தோதாக முகங்கால் கழுவி விட்டு வீட்டுக்குவருவாள். இன்றைக்குச் சரியான கூத்துத்தான். தெருவெல்லாம் ஆட்டம்போடுவாள். அடுத்தவர்களின் ஆடுமாடு படப்புப்பக்கம் லாந்தினால் கூட கண்மூக்குத் தெரியாமல் எறியச் சொல்கிறதா. அதுக்கெல்லாம் வட்டி வாசியாக இன்றைக்கு ஆடணும். கீழத்தெருவில் போடும் சத்தம் மேலத் தெருவரைக்கும் கேட்கும். டிய்ய்ங்ங் ரேடியோ பாடப்போகிறது.

எத்தனை வைது என்ன செய்ய. யாராவது சொன்னால் தானே. பிச்சமணி லேசுக்குள் சொல்ல மாட்டான். மண்டையெறி மறக்கவில்லை.

வீட்டில் காத்திருப்பவர்களுக்கு இன்றைக்கு கொத்தளந்தாற் போலத்தான். இன்றைக்கில்லையென்றால் நாளைக்கு.

அய்யாவும் அம்மாவும் சாப்பிட்டு விட்டு வாசலில் உட்கார்ந்து எதையோ கசகசவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். சின்னத் தங்கச்சியை மடியில் போட்டுத் தட்டினாள் அம்மா. உள்ளே அக்காவும் மொட்டைத் தங்கச்சியும் சாப்பிட்டார்கள். அவர்களாவது பேசாமல் சாப்பிடக் கூடாதா.

கீழத் தெருவில் இருட்டைத் தள்ளிக் கொண்டு வசவுச் சத்தம் பெருகிவந்தது.

படுக்கையை விட்டுத் துள்ளியெழுந்த சுந்தரம் வாசலிலிருந்த அய்யாவை நெரித்து அம்மாவைத் தாண்டி ஓடி வெளிப்பானையில் வாய் நிறையத் தண்ணீர் கொப்புளித்து முற்றத்தில் வட்ட வட்டமாகப் பீச்சி விளையாடினான்.

'படுக்கிற முத்தத்தப் பாழாக்கிறியே ஒனக்கென்ன கோட்டியாலே இப்ப வந்தம்னாத் தெரியுமா ' என்று அம்மா அரட்டியதையும் சட்டை செய்யாமல் இப்போது பிச்சமணியிம் கூட இருந்தால் நன்றாக இருக்குமென நினைத்தான்.

*******

நன்றி: திண்ணை

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

ADMIN on March 18, 2011 at 1:13 PM said...

அருமை சார்.. ! படிக்க படிக்க சுவை கூடுகிறது.. எழுத்துக்கள் எமை ஆட்கொண்டுவிடுகிறது.. வாழ்த்துக்கள்..தொடருங்கள்...!! www.thangampalani.blogspot.com

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்