Dec 27, 2009

திரை - கு.ப.ரா

கு.ப.ரா

தான் வந்து இரண்டு நாட்களாகியும் ராஜம் தன்னிடம் பேசக்கூட மாடிக்கு வராதது அவனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. தான் ஒரு விதமாகவும் பிசகு செய்ததாக அவனுக்குத் தெரியவில்லை. ஆகையால் அவள் கோபித்துக் கொண்டிருப்பாள் என்பதற்கும் இடமில்லை. அதுவுமின்றித் திருமண மான பிறகு, முதல் முதலாக அப்பொழுதுதான் அவளைப் பார்க்க வந்திருந்தான். அதற்கு முன் நேரில் கண்டு பேசினதே இல்லை. ஆகையால் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவள் அதற்குள் கோபித்துக் கொள்ள முடியாது.

modern-art-10

ஒருவருக்கொருவர் இடைவிடாமல் கடிதங்கள் எழுதிக்கொண்டார்கள். அவற்றில் அவ்வளவு ஆர்வத்துடனும் உணர்வுடனும் எழுதிவிட்டு, நேரில் வந்தபோது ஏன் அவள் அப்படி இருந்தாள் என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை. தின்பண்டம், பலகாரம், காப்பி எல்லாம் மாமியார் கொண்டுவந்து வைத்தாள். தாம்பூலம் மடித்து வந்தது, அதை யார் மடித்தார்கள்?

மாடி அறையில் அவன் தனியாக எவ்வளவு நேரந்தான் அவளை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பது? பகலெல்லாம் எதிர்பார்த்தான்; இரகசியமாக வருவாளோ என்று இரவில்கூட வெகுநேரம் விழித்துக் கொண்டு படுக்கையில் கிடந்தான்.

கடிதத்தில் வெகு துணிச்சலாக எழுதிவிட்டாள். நேரில் கண்டவுடனே வெட்கம் மேலிட்டு விட்டது போல் இருக்கிறது! ஒருவேளை அப்படி அசடுபோல் கடிதத்தில் எழுதி விட்டோமே என்று பயந்தே தன்னிடம் வராமல் இருந்தாளோ என்று எண்ணினான்.

என்ன சமாதானம் செய்து கொண்டாலும் அவள், அவ்வளவு அருகில், தன்னிடம் வராமல் இருந்ததன் காரணம் அவனுக்கு விளங்கவே இல்லை.

இரண்டாவது நாள் இரவு எட்டு மணி. தொலைவில் கோவிலிருந்து திருவிழாக் கொட்டு முழக்குச் சத்தம் கேட்டது. தெருவில் பெண்கள் கும்பல் கும்பலாகக் கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். சாளரம் வழியாக உள்ளே விழுந்த வெண் நிலவு அவனது இருதயத்தை வலைபோட்டு வெளியே இழுப்பதுபோல இருந்தது. வெளியுலகத்து இன்பம் அவனை 'வா, வா' என்று அழைத்தது. ஆனால் அப்பொழுது அவனுக்கு அதெல்லாம் காதில் ஏறவில்லை. அந்த அழகு அவன் கண்களில் படவில்லை. அவன் உள்ளம் முழுவதும் ராஜத்தின் மேல் இருந்தது. அவள் எழுதின கடிதங்களின் வாக்கியங்களும் அவளுடைய முகமும் கண்களுமே அவன் முன் நின்றன.

அன்றிராவாவது கட்டாயம் ராஜம் தன்னிடம் வருவாள் என்று எண்ணினான். நடுப்பகல் வேடிக்கையாக மைத்துனனைப் பார்த்து, "உன் அக்கா இந்த ஊரில்தானே இருக்கிறாள்?" என்று கேட்டான். அதைக் கேட்டுக் கொண்டிருந்த மாமியார்கூடக் கொஞ்சம் பதறிப் போய் ஏதோ குசுகுசுவென்று யாருடனோ பேசினாள். யாருடனோ என்ன, 'அவளுடன்' தான். ஆகையால் தன்னுடைய மனநிலையை ஒருவாறு அவர்கள் அறிந்திருந்ததால் அன்றிரவு கட்டாயம் வருவாள் என்றே எதிர் பார்த்தான். முதல் நாளிரவு பாவம், வெகுநேரம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிரமத்தால் தன்னை அறியாமல் தூங்கிப் போய்விட்டான். மறுநாள் காலையில் அவனுக்குக் கோபமும் துக்கமும் வந்து, காப்பி வேண்டாம் என்று சொல்லி விடலாமா என்றுகூட எண்ணினான்.

கீழே வீணை மீட்டும் சத்தம் கேட்டதும் சற்று நேரத்திற்கெல்லாம் சங்கராபரணத்தில் "தாரி சூசுசுன்னதி நீது ப்ரியா" என்ற ஜாவளியை யாரோ பாடிக்கொண்டே வாசித்தார்கள். வேறு யார்? அவள்தான்!

"உன் காதலி உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள், உன் வழி நோக்கிக் கொண்டிருக்கிறாள்" என்று பொருள்படத் தொடங்கிய அந்தப்பாட்டு, படுக்கையறையின் அலங்காரத்தைக் கவர்ச்சி கரமாகச் சித்தரித்தது. இசையும் பாட்டுமாகக் கலந்து அவனது உள்ளத்தை உருக்கின.

"ஆகா! நல்ல ரசிகையாக அல்லவா இருக்கிறாள் ராஜம்! ஏன் இருக்க மாட்டாள் அவளுடைய கடிதங்களே அவ்வளவு கதையாக இருந்தனவே! என்ன வாசிப்பு, என்ன சாரீரம். இதற்கு மேற்பட்ட இன்பம் கிடையா... ஆனால் இதோடு அவளுடைய வாய் வார்த்தை ஒன்றை, என் முன்பு, என் ku.ba.ra பக்கத்தில், நான் கேட்டால்... இன்பத்தின் மின்னொளியைப் பாய்ச்சும் அவளுடைய கைபட்டதும் எழும்பும் இனிமை என்னுள் பாய்ந்தால் என்ன பேறு பெறுவேன்! ராஜம் வேண்டுமென்றுதான் இப்படி ஏக்கத் தீயிட்டு என் உள்ளத்தை வாட்டுகிறாளோ? எதற்காக இந்தச் சோதனை? என் கடிதங்களில் காணவில்லையா அவள், என் உள்ளத்தின் வேட்கையை? பெண்ணின் கொடுமை உன்னிடங்கூடத்தான் இருக்கிறது. உன் இங்கிதமும், புத்தியும், தேர்ச்சியும், ஈரமும் எங்கே? உன் கடிதங்களிலேயே நின்றுவிட்டனவே அவை! இல்லை, இது சரியன்று. ராஜம் உடனே வீணையைக் கீழே வைத்துவிட்டு என்னிடம் வா! அந்த வீணை எதற்கு உனக்கு? என் இருதய வீணையை மீட்டி வாசி, சுருதி கலைந்து கிடக்கிறேன் நான். குழைவற்றிருக்கிறேன். உன் இழைக்கும் விரல்களால், என்னைச் சுருதி கூட்டிச் சரி செய்து, உன் விரல் விந்தையால், விண்ணொலி கொள்ளச் செய்" என்று உணர்ச்சி மேலிட்டவனாய்த் தனக்குள்ளேயே பிதற்றிக் கொண்டிருந்தான் அவன்.

"உன் காதலி வழி நோக்கிக் கொண்டு கத்திருக்கிறாள்" என்ற பல்லவி திரும்பத் திரும்ப ஓர் ஏக்கக் குரலாக வந்து அவன் காதில் தாக்கிற்று. அவனுக்கு அங்கே இருக்க முடியவில்லை. எழுந்து கீழே இறங்கிப் போனான்.

முற்றத்திலிருந்த மாடிப்படியின் உச்சியில் நின்று கொண்டு கூடத்தைப் பார்த்தான். அங்கே கையில் வீணையுடன் உட்கார்ந்திந்தாள்! ராஜம் அல்ல! அவளுடைய தமக்கையாகத்தான் இருக்க வேண்டும். ஆமாம் அவள் பிறந்த வீட்டில் இருப்பதாகத்தான் சொன்னார்கள். அவள் ஒரு வருஷத்திற்கு முன்பு கணவனை இழந்தவள், பாவம்! அவள் கதை ஒரு சோக நாடகம். எல்லோரும் கதை கதையாகச் சொன்னார்கள். நிரம்பக் கெட்டிக்காரி: அழகு என்றால் அப்படி; கணவன் ஒரு குடிகாரன்; ஈரல் வீங்கி இறந்தான். குடும்பம் என்று அவள் நடத்தி அறியாள்.

அவளா வீணை வாசித்தது! ஏன் அப்படி வாசித்தாள்? வீட்டில் மற்ற எல்லோரும் எங்கே? கோவிலுக்குத்தான் போயிருக்க வேண்டும் - ராஜம் கூட! ஒருவரும் வீட்டில் இல்லாதபொழுது, ஏன் இவள், அவன் கேட்கும்படி வீணையை எடுத்து வைத்துக் கொண்டு இப்படி உருக வேண்டும்?

திடீரென்று அவன் உலுக்கி விழுந்தான். ஒரு வேளை கடிதங்களெல்லாம் இவள் எழுதினவைதாமோ? ராஜத்தின் பெயரை வைத்து இவள்தான் அப்படி உள்ளத்தைக் கொள்ளை கொண்ட முறையில் எழுதினாளோ? ஆமாம், அப்படித்தான் இருக்க வேண்டும்! இல்லாவிட்டால் அவ்வளவு எழுதினவள் இப்போது அருகில்கூட வராமல் இருப்பாளா?

மடமடவென்று அவன் மாடிப்படி இறங்கினான். வீணையும் கையுமாக உட்கார்ந்திருந்த சரசுவதி சட்டென்று வீணையைக் கீழே வைத்துவிட்டு எழுந்திருந்தாள், உள்ளே போய் மறைந்து கொள்ள. அதற்குள் அவன் அவள் அருகில் வந்துவிட்டான். ஒன்றும் செய்யாமல் அப்படியே திகைத்து நின்றாள் சரசுவதி.

கூடத்து மின்சார விளக்கின் வெளிச்சத்தில் அவளது உருவம் நன்றாகத் தெரிந்தது. அவளது உடம்பும் உடையும் ஒரே வெள்ளையாக இருந்தன. தலைமயிரை அசிரத்தையாக முடிந்திருந்தாள். நெற்றியில் குங்குமம் இல்லாததால் அவளது முகம் காலை நேரத்துச் சந்திரன் போல வெளுத்த சோபையற்று இருந்தது. ஆனால் சிறிது நேரத்துக்கு முன்பு வாசித்த பாட்டால் ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கில் அதில் இருந்த சோகம் கொஞ்சம் மறைந்து சற்றே ஒளிர்ந்தது.

"நீதானா கடிதங்கள் எழுதினது?" என்று அவன் உடனே கேட்டான்.

"இல்லை, - அவள்தான் எழுதினாள் - அதாவது" என்று ஒன்றும் மேலே சொல்ல முடியாமல் திகைத்தாள் சரசுவதி.

"உண்மையைச் சொல்லிவிடு!"

"அதாவது அவள் சொன்னாள் - நான் எழுதினேன்" என்று அவள் இழுத்தாள்.

"நிஜமாக!"

"அவள் உள்ளம் சொல்லிற்று, நான் பார்த்து எழுதினேன்."

"எப்படித் தெரியும்?"

"எப்படியா -" என்று கேட்டுச் சற்றுத் தயங்கினாள் சரசுவதி.

பிறகு திடீரென்று அவள், "எப்படியா? நான் நினைத்தது போலத்தானே அவள் நினைத்திருக்க வேண்டும்? ஆகையால் அப்படியே எழுதிவிட்டேன்" எனச்சொல்லிவிட்டு, சொல்லக்கூடாததைச் சொல்லிவிட்டது போலவும் கதிகலங்கினவள் போலவும் நாலு புறமும் பார்த்தாள்.

"மாப்பிள்ளை! நீங்கள் இங்கே நிற்கக்கூடாது. மாடிக்குப் போய்விடுங்கள். அவர்கள் வந்து விடுவார்கள். குடி முழுகிப்போகும்" என்று கெஞ்சினாள் பிறகு.

அவன் தீர்மானமாக அங்கே நின்றான்.
"என்னை ஏன் கூப்பிட்டாய்?" என்று ஏக்கப் பார்வையுடன் கேட்டான்.

"கூப்பிட்டேனா! ஐயோ! இல்லையே! தெரியாமல் செய்திருந்தால் மன்னியுங்கள் - இல்லை - கூப்பிடவில்லை. பிசகு!" என்று சரசுவதி நிலை தவறினவள் போல் பதற்றத்துடன் பேசினாள்.

"ராஜத்தின் மூலமாக -" என்று அவன் ஆரம்பித்தான்.

"இல்லை - வேண்டாம் - எல்லாம் மறந்துவிடுங்கள் தவறு"

"எப்படி மறப்பது சரசுவதி? மறக்கும்படியாகவா எழுதியிருந்தாய் நீ?"

"மன்னியுங்கள்; பிசகு செய்துவிட்டேன் இப்படி ஆகுமென்று தெரியாது!"

"நான் கட்டை என்று எண்ணினாயா?"

"தப்பிதம், தப்பிதம்!" என்று வெறி பிடித்தவளைப் போல சொன்னாள்.

"தப்பிதம் இல்லை; சரசுவதி, உண்மையை எழுதினாய், அல்லவா?"

அவள் குற்றவாளியைப்போல் நடுநடுங்கினாள், உணர்ச்சி மேலிட்டு அழலானாள்.

"சரசுவதி! பயப்படாதே, அம்மா! நீ ஒன்றும் குற்றம் செய்யவில்லை. உண்மையாகவே கட்டைபோல இருந்த என்னைச் செப்பனிட்டு வாத்தியமாக்கி விட்டாய்!"

"இல்லை, இல்லை. அப்படிச் சொல்லாதேயுங்கள்! ராஜந்தான்! நீங்கள் அவள் சொத்து. அவள்தான் உங்களை உருக்க உரிமை பெற்றவள். அவள் எழுதியதாகவே எண்ணுங்கள்."

"இந்தப்பாட்டு -"

"அவள் பாடியதுதான். தேர்ச்சி இருந்தால், அறிந்திருந்தால், அவளே இப்படிப் பாடியிருப்பாள்."

"பாடியிருப்பாள்! - தேர்ச்சியிருந்தால்தானே? சரசுவதி, தைரியமாக நீதான் அவற்றை எழுதினது சொல்லேன், என்ன பிசகு?"

"ஐயோ, கூடாது."

"ஏன்?"

"நான் - நான் - எனக்குக் கை ஏது எழுத? எனக்கு வாய் ஏது - பாட? அவள்தான் என் கை, அவள் தான் என் வாய். அவள் மூலந்தான் எனக்கு வாழ்க்கை. அவள் மூலந்தான் என் உயிர்."

"இன்னும் வேறொன்றும் இல்லையா?" என்று அவன் இளகிக் கொண்டான்.

"உண்டு - அதையும் சொல்ல வேண்டுமா என் வாய் திறந்து?" என்று சரசுவதி ஒருவிதமான அமைதியுடனும் ஏக்கத்துடனும் தன்னையே மறந்து கேட்டுவிட்டாள்.

கோவிலுக்குப் போயிருந்தவர்கள் திரும்பி வந்து வாசற் கதவைத் தட்டினார்கள்.

அவன் மாடிக்குப் போனான். அவள் உள்ளே போனாள்.

இருவருக்கும் நடுவில் மறுபடியும் திரை வந்து கூடிற்று.

ஆனால் திரை என்ன அறியும்?

"ராஜம்! மாடிக்குப் போ!" என்றாள் சரசுவதி, சற்று நேரம் கழித்து.

********

நன்றி:   விட்டல் ராவ் தொகுத்த 'சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்' என்ற தொகுப்பிலிருந்து. வெளியீடு: கலைஞன் பதிப்பகம், 10, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

4 கருத்துகள்:

வித்யாஷ‌ங்கர் on December 17, 2010 at 5:28 PM said...

therntha kathai sollal

சேரலாதன் பாலசுப்பிரமணியன் on January 6, 2011 at 5:33 PM said...

நல்ல சிறுகதை. எழுதப்பட்ட ஆண்டு குறித்த தகவல் கிடைக்குமா?

-ப்ரியமுடன்
சேரல்

R.S.KRISHNAMURTHY on September 13, 2011 at 7:53 PM said...

படிக்கும் நமக்கே சரசுவதியின் பதட்டம் ஒட்டிக் கொள்கிறது. அருமையான நடை. வலையேற்றியதற்கு நன்றி!

Unknown on October 17, 2015 at 3:00 PM said...

author is a legend

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்