May 31, 2010

கற்பக விருட்சம்-கு.அழகிரிசாமி

 

மாலை ஐந்து மணி அடிப்பதற்கு முன்பே சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் வந்து உட்கார்ந்து விட்டான் ஸ்ரீனிவாசன். கையில் ஒரு காசுகூடக் கிடையாது. ku azhakirisamiஇருந்ததெல்லாம் ஒரு மலிவு விலைப் பவுண்டன்பேனா, ஒரு வேஷ்டி, ஒரு சட்டை, சட்டையில் இரண்டு பிளாஷ்டிக் பித்தான்கள், அன்று மாலைப் பதிப்பாக வெளிவந்த  ஒரு தமிழ்த் தினசரி, சந்தேகத் தெளிவுக்காக வாங்கிய ஓர் ஆங்கில தினசரிப் பத்திரிக்கை--இவ்வளவுதான். பிளாட்பாரத்தின் கோடியில் கிடந்த ஒரு பெஞ்சில் தனியாளாக ஒரு மணி நேரத்துக்கு மேலேயே உட்கார்ந்துகொண்டிருந்து விட்டான். இவனுக்கு முன்னும் பின்னும் இரண்டொரு பிரயாணிகளும், ஏகதேசமாக ஒரு ரயில்வே ஊழியரும், ஒரே ஒரு தடவை மட்டும் முதுகுக்குப் பின்புறமாக ஒரு போலீஸ்காரரும் நடந்து சென்றார்கள். அடிக்கடி குறித்த காலத்தில் மின்சார வண்டிகள் வருவதும் புறப்படுவதுமாக இருந்தன.

ஸ்ரீனிவாசன் பெஞ்சில் சாய்ந்துகொண்டு யாரையும் எதையும் பார்க்காமல், வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். விதிவிலக்காக மின்சார வண்டிகளை மட்டும் இரண்டொரு தடவைகள் பார்த்துவிட்டு முகத்தை மேல் நோக்கித் திருப்பிக்கொண்டான். வானத்துக்கும் இவனுக்கும் இடையே வெகுநேரம் வரைக்கும் ஒரு துளி கண்ணீர் திரை போட்டு மறைத்துக் கொண்டிருந்தது. கண்ணுக்குத் தெரியும் வானக் காட்சி மனசைப் போலவே கலங்கிப் போயிருந்தது. துயரத்தின் போது, வெளியிலும் தெளிவில்லை; உள்ளேயும் தெளிவில்லை. தெளிந்து, தீர்மானத்துடன், துணிவுடன் வந்த ஸ்ரீனிவாசனைத் துயரம் திடார் திடார் என்று பொங்கி எழுந்து கலக்கி அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

பயப்பட வேண்டியதற்கே பயப்படாமல் வந்தாகிவிட்டது. அப்புறம் வேறு எதற்குப் பயப்படுவதிலும் அர்த்தமில்லை. இதனால்தான் டிக்கெட் இல்லாமலும் காசு இல்லாமலும் ஸ்டேஷன் பிளாட்பாரத்துக்கு உள்ளே வேகமாக வந்துவிட்டான். வீட்டுக்கு வெளியே உட்காருவதற்கு அது ஒன்றுதான் அவனுக்கு இடமாகப் பட்டது. வந்து சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, பெஞ்சில் அமர்ந்தான். முன்பின் தெரியாத பிரயாணிகளைத் தவிர வேறு யாரும் இல்லை. இது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

மாலை ஐந்து மணி அடித்தது. இருட்டுவதற்கு இன்னும் ஒன்றரை மணி நேரம் ஆகும். அது வரை அங்கேயே உட்கார்ந்திருப்பது என்ற முடிவு; உட்கார்ந்து கொண்டிருந்தான்.

வேகமாக ரயில் வண்டிகள் வந்து போயின. ஓட்டமும் நடையுமாக வந்து வண்டிகளில் தொற்றிக்கொண்டிருந்தார்கள் பிரயாணிகள். சூழ்நிலை முழுதுமே ஓட்டமும் பரபரப்புமாக இருந்தது. ஆனால் ஓட்டமின்றி சாவதானமாக வேலை செய்துகொண்டிருந்தது கடிகாரம் ஒன்றுதான். அரை மணி கழிந்திருக்கும் என்று ஏறிட்டுப் பார்த்தால், ஐந்து நிமிஷம்கூட ஆகியிராது. இது அவனுடைய துன்பத்தைப் பெரிதாக்கிக் கொண்டிருந்தது. எத்தனைப் பேரைப் பற்றிய நினைவுகள், எத்தனை வருஷத்துச் செய்திகள், எத்தனைவித அனுபவங்கள்-- எல்லாவற்றையும் மாறி மாறி ஒன்றுக்குப் பல தடவையாக நினைத்துப் பார்த்து, பெருமூச்சு விட்டு, சில சமயங்களில் தன்னுணர்வையும் இழந்து, கடைசியில் திரும்பிப் பார்த்தாலும், கடிகாரம் ஒரு சில நிமிஷங்களுக்கு மேல் தாண்டியிராது.

ஒரு விஷயத்தில் தவறு செய்து விட்டோம் என்றே ஸ்ரீனிவாசனுக்குத் தோன்றியது. தெருக்களில் சுற்றி அலைந்திருந்தால், நேரம் வேகமாகக் கழிந்திருக்கும். ஒரு மணி நேரம் கால் போன போக்கில் திரிந்துவிட்டு அப்புறம் ஸ்டேஷனுக்கு வந்திருக்கலாம். எடுத்த எடுப்பிலேயே இங்கே வந்து உட்கார்ந்து, காலத்தை ஓட்ட முடியாமல் அவதிப்படுவதற்குத் தன்னுடைய முட்டாள்தனமே காரணம் என்று நினைத்து வருந்தினான். இனி என்ன செய்வது ? என்ன செய்ய முடியும் ? டிக்கெட் இல்லாமல் ஸ்டேஷனை விட்டு வெளியே போகமுடியாது. எனவே, தானே புகுந்த சிறைக் கூடத்தில், இருக்கவேண்டிய காலத்தை இருந்தே தீர்ப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது.

இப்படிச் சிரமப்பட்டுத் திக்குமுக்காடிக் கொண்டிருந்த ஸ்ரீனிவாசனைத் திடாரென்று ஒருவன் தன் வாய்ச்சொல்லால் தட்டி எழுப்பினான். அவன் ஸ்டேஷனைச் சேர்ந்த ஒரு சிப்பந்தி. அவன் கவனித்த வரையில், மூன்று வண்டிகள் வந்து போயும்கூட ஸ்ரீனிவாசன் ஒரு வண்டியிலும் ஏறாமல் உட்கார்ந்திருந்ததால் அருகில் வந்தான். 'யாரப்பா ? ஏன் இங்கே உட்கார்ந்திருக்கிறாய் ? ' என்று கேட்டான். உடனே, 'எங்கே போகவேண்டும் ? ' என்றும் கேட்டான்.

ஸ்ரீனிவாசனுக்கு உலகப் பிரக்ஞை வந்தது. ஒரு பதிலும் சொல்லாமல் எழுந்து நின்றான்.

'எங்கே போகவேண்டும் ? '-- திரும்பவும் கேட்டான் ரயில்வே சிப்பந்தி.

ஸ்ரீனிவாசன் தன்னைச் சமாளித்துக் கொண்டு, 'எழும்பூருக்கு ' என்றான்.

'சரியாய்ப் போச்சு, போ ' எழும்பூருக்கு அந்தப் பக்கமாகப் போய் நில். இங்கே தாம்பரம் வண்டிதான் நிற்கும் ' என்று சொல்லி ஸ்ரீனிவாசனை அவன் கிளப்பி விட்டான்.

'நல்ல வேளை ' என்று ஸ்ரீனிவாசன் எழுந்து எதிர்ப்பக்கப் பிளாட்பாரத்தை நோக்கி நடந்தான். சிப்பந்தி தன் வேலையைக் க்வனிக்க போய்விடவே, இவன் அந்தப் பிளாட்பாரத்தில் ஒரு மூலையைத் தேடிப் பிடித்து உட்கார்ந்தான். அப்பொழுதிலிருந்துதான் அவனுக்குப் பய உணர்ச்சி தோன்ற ஆரம்பித்தது. அந்த அளவுக்குத் துயர நினைவுகள் குறையலாயின. சில சமயங்களில் பயம் தாழ்ந்து, துயரம் பொங்கும். இந்த இரண்டும் இரண்டு அலைகளாக அவன் மனத்தில் எழுவதும் விழுவதுமாக இருந்தன.

ஒவ்வோர் ஆளைப் பார்க்கும்போதும் ஒரு சந்தேகம், ஒரு பயம் --- அவன் ரயில்வே சிப்பந்தியாக இருக்கலாமோ என்று. அவன் பார்த்துவிட்டால், இவனை முழுக்க முழுக்கச் சந்தேகித்து, 'டிக்கெட் இருக்கிறதா ? ' என்று கேட்பான். 'இல்லை ' என்று பதில் சொன்னால் மறுகணமே ஸ்டேஷன் மாஸ்டர் முன்னிலையில் போய் நிற்கவேண்டி வரும். அப்புறம், தன் மீது குற்றம் சாட்டப்படும். அதைத் தொடர்ந்து வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டு.... அதன்பின் என்ன நடந்தால் என்ன ? வீட்டுக்குத் திரும்பி விட்டால் அப்பாவைப் பார்க்கவேண்டும்; அம்மாவைப் பார்க்கவேண்டும்; தங்கையைப் பார்க்க வேண்டும்; மூவருடைய கண்ணீரையும், கசப்பையும், சிதைந்த கனவையும் பார்க்க வேண்டும். ஒரு மனிதனுக்கு இத்தனையுமே அதிகம். ஆனால் ஸ்ரீனிவாசனோ இவற்றையும் தாண்டி, சுகன்யாவையும் வேறு பார்க்கவேண்டியிருந்தது. அவளைப் பார்ப்பது என்றால் தன் அவமானத்தையே கண்ணெதிரே பார்ப்பது என்றுதான் அர்த்தம். 'உனக்கு இனி உய்வில்லை, வாழ்க்கையில்லை ' என்று சொல்லாமல் சொல்லும் ஒரு கொடிய விதியைக் கண்ணெதிரே காண்பதற்கும் அதற்கும் வித்தியாசம் இல்லை. இவற்றைப் பார்ப்பதைவிட, மரணத்தைப் பார்ப்பது எவ்வளவு சுலபம் ' எவ்வளவு இதமானது '--- இப்படித் தோன்றிவிட்டது அவனுக்கு. இந்த யோசனையுடனேயே ஸ்டேஷனை நோக்கிப் பத்திரிக்கையும் கையுமாக வந்தான். பத்திரிகையில் அன்று மாலை எஸ்.எஸ்.எல்.சி. பரிட்சை முடிவுகள் வெளியாகியிருந்தன. தமிழ் பத்திரிக்கையிலும் அவனுடைய நம்பர் இல்லை; ஆங்கிலப் பத்திரிக்கையிலும் இல்லை.

* * * *

கிருஷ்ணசாமி ஐயங்கார் தம் மகனுடைய எஸ்.எஸ்.எல்.சி. படிப்பை ஒரு கற்பக விருட்சமாகவே கருதியிருந்தார். அவன் படித்துப் பாஸ் பண்ணிவிட்டால், கற்பக விருட்சம் விரும்பியதையெல்லாம் கொடுக்காவிட்டாலும் ஓய்ந்து உட்காருவதற்கு நிழலாவது கொடுக்கும் என்பது அவர் நம்பிக்கை. வாழ்நாளெல்லாம் பட்ட துன்பங்களுக்கு ஒரு முடிவும் உண்டு, தமக்கு ஒரு விடிவுகாலமும் உண்டு என்று அவர் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, நிகழ்காலத்தைத் தள்ளிக்கொண்டு வந்தார்.

அவருடைய குடும்பம் அப்படி ஒன்றும் பெரியதல்ல. மனைவி, மகன், மகள், அப்புறம் அவர்--இந்த நான்கு பேர்தான். ஏகாங்கியேயானாலும் போதிய வருமானமில்லாவிட்டால், தரித்திரத்திலிருந்து தப்புவது எப்படி ? அவருக்குத் தொழில், பெருமாள் கோவில் பூஜை செய்வது. கோவிலோ அவரைப் போன்றே ஏழ்மை நிலையில் இருந்தது. அந்தப் பகுதியில் வசித்து வந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியாருக்கு அந்தப் பெருமாள், குலதெய்வம். பூஜித்துக் கொண்டாடவேண்டியவர்களில் பெரும்பாலோர் வசதியான நிலையில் இல்லாததால் தெய்வத்துக்குச் சிற்ப்பும் பூசனையும் இல்லாது போய்விட்டது. பெரும்பாலும் இரண்டொரு பணக்கார வியாபாரிகளின் தயவில்தான் கோவிலும், கோவிலை நம்பிய கிருஷ்ணசாமி ஐய்யங்கார் குடும்பமும் நிலைபெற்று வந்தன. மாதம் ஐம்பது அறுபதுக்குள்ளாகவே வருமானம். இதில் வாடகை, பள்ளிச் செலவு போக மீதி முப்பது முப்பத்தைந்தை வைத்துத்தான் உண்ணவும் உடுத்தவும் வேண்டும். இப்படி வருஷக் கணக்கில் ஜீவனம். பையன் எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் செய்து விட்டு வரட்டும், ஏதாவது ஒரு வழி செய்யலாம் என்று கோவில் பக்தர்களில் ஒருவரான பணக்கார வியாபாரி ஒருவர் ஐய்யங்காரிடம் உறுதியளித்திருந்தார் மிஞ்சிப் போனால் தம் கடையிலேயே தற்காலிகமாக வேலைக்கு வைத்துக்கொண்டு, அவன் டைப்பும் சுருக்கெழுத்தும் படித்தபின் வேறு நல்ல வேலையில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்வதாக அவர் சொல்லியிருந்தார். எனவே, முழு நம்பிக்கையோடு காத்திருந்தார் ஐய்யங்கார். மகனுடைய படிப்பின் மீது தம் எதிர்காலச் சுமையைத் தூக்கி வைத்துவிடலாம் என்றே அவர் கோட்டை கட்டினார்.

ஸ்ரீனிவாசனின் தாயார் தன் பங்குக்கும் சுமை ஏற்றத் தவறவில்லை. மகனுடைய படிப்பை அஸ்திவாரமாக கொண்டு அவள் கட்டிய மனக்கோட்டைகள் பல. அவன் உத்தியோகம் பார்த்துச் சம்பாதிப்பதைச் சேர்த்து வைத்து மகளுக்குக் கல்யாணம் பண்ணிவிடவேண்டும்; அப்புறம், இரண்டு அறைகள் உள்ள ஒரு வீட்டைப் பார்த்து வாடகைக்குப் பிடிக்க வேண்டும்; மகனுக்கும் கல்யாணம் ஆகவேண்டும்; பேரன் பேத்தி எடுத்துப் பார்க்கவேண்டும்.....

இப்படிப் பெற்றோர் இருவருமே அந்தக் கற்பக விருட்சத்தின் அடியில் போய்ப் புகலிடம் தேடக் காத்திருந்தனர். இது ஸ்ரீனிவாசனுக்குத் தெரியும். தன்னுள்ளே தான் வளர்க்கும் கற்பகக் கன்று வாடிவிடக் கூடாது என்று அதற்கு அல்லும் பகலும் உரமிட்டு வளர்க்கும் முறையில், அரும்பாடுபட்டுப் படித்தான். செடியை தண்ணீர் விட்டோ, கண்ணீர் விட்டோ, ரத்தத்தைச் சிந்தியோகூட வளர்த்துவிடலாம். ஆனால் செடி முளை விடுவதற்கு ஒரு சாண் அகலக் கொல்லையாவது வேண்டாமா ?

ஸ்ரீனிவாசனுக்கு நிம்மதியாக இருந்து படிக்க வீட்டில் இடமில்லை. ஒட்டுக் குடித்தனமாக இருக்கும் ஒரே அறைதான் வீடு. இதனால் புத்தகமும் கையுமாகப் பெருமாள் கோவிலுக்கே போய்விடுவான். பள்ளிக்கூடம் போகும் வரை படிப்பான். அப்புறம் பள்ளி முடிந்து வந்து இருட்டும் வரையில் அங்கே உட்கார்ந்து படிப்பான். விடுமுறை நாட்களில் பகல் முழுதும் அங்கேதான். கோவிலில் சில சமயங்களில் வழிப்போக்கர்கள் சிலர் தூங்குவார்கள்; பிச்சைக்காரர்கள் குறட்டை விடுவார்கள்; குழந்தைகள் ஓடி விளையாடுவார்கள்; வீண் பேச்சுப் பேசிக்கொண்டிருப்பார்கள் சில ஆசாமிகள்......இந்தச் சூழ்நிலையில் ஸ்ரீனிவாசன் கற்பகக் கன்றை வளர்த்து வந்தான்.

ஆனால் ரத்தத்தை விட்டு வளர்த்த செடியும் பரிதாபகரமாகக் கருகிவிட்டது. இதற்கு யாரை நொந்துகொள்வது ? உலகத்தில் காரணம் தெரியாத துன்பங்களுக்குப் பஞ்சமா என்ன ? தேனினும் இனிய குரல் படைத்திருந்த எவனோ ஒரு பாடகனுக்குத் தொண்டையில் புற்றுநோய் வந்ததாமே, அதற்கு என்ன காரணம் ?

பரீட்சையில் தேறவில்லை என்பது தெரிந்ததும் ஸ்ரீனிவாசனுக்கு இந்த உலகமே காலடியிலிருந்து நழுவிவிட்டது. கடையில் பத்திரிக்கையை வாங்கிப் படித்தவன், ஆவலோடு காத்திருக்கும் பெற்றோர்களை நோக்கி வராமல் ஸ்டேஷனைப் பார்த்து வெறி கொண்டவன் போல் நடந்தான். அப்பொழுது பெற்றோரின் நினைவும், கல்யாணத்துக்குக் காத்திருக்கும் தங்கையின் நினைவும் வந்திருந்தால் வெறும் வேதனையாக மட்டும் இருந்திருக்கும். ஆனால் சுகன்யாவின் முகம் மனக்கண்முன் வந்து நின்று விடவே, வேதனையோடு அவமானமும் கலந்தது. தன்னைத் தானே வெறுத்தான்.

தன்னை ஒரு மனிதப் பிறவி என்று மதிக்கவே அவனால் முடியவில்லை. தான் இந்த உலகத்துக்கு ஒரு களங்கமாக, அசிங்கமாக இருப்பது போலவே அவனுக்குத் தோன்றியது. இந்தக் களங்கத்தைப் போக்கினால்தான் தன் அருவருப்பு உணர்ச்சி நீங்கும். சேற்றிலே நிற்பது போல் அவன் உடம்பில் உயிர் நின்று தத்தளித்தது. சீக்கிரத்தில் இந்தச் சாக்கடையை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று வேகமாக ஸ்டேஷனை நோக்கி வந்தான்.

இருட்டும் வரையில் அங்கே உட்கார்ந்திருக்க வேண்டும்; இருட்டிய பிறகு எழுந்து சிறிது தூரம் நடக்க வேண்டும்; அப்புறம் ஓடும் ரயில் முன்னால் விழுந்து உயிரைப் போக்கிக்கொள்ள வேண்டும். இதுதான் அவன் செய்திருந்த முடிவு.

* * * * * * * * * * *

நேரம் ஆக ஆக ஸ்ரீனிவாசன் பெற்றோரையும், அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையையும், பரிட்சை தேறாமல் போனதையும்கூட மறந்துவிட்டான். அந்த நினைவுகளுடன் சம்பந்தப்பட்ட உணர்ச்சிகளெல்லாம் கோரக்கூத்தாடிவிட்டு ஓய்ந்து விட்டன். மிஞ்சி நின்ற நினைவு, அனைத்தையும்விடச் சக்தி வாய்ந்ததாக இருந்த நினைவு சுகன்யாவைப் பற்றிய நினைவுதான்.

சுகன்யா பரிட்சையில் தேறிவிட்டாள். அவளுடைய நம்பர் பத்திரிக்கையில் இருக்கிறது; இரண்டு பத்திரிக்கைகளிலுமே இருக்கிறது. இதை நினைக்கும்போது அவனுக்கு அவமானமாக இருந்த நிலைமாறி, அவள்மேல் கோபம் கொள்ளும் ஒரு விசித்திரமான நிலையும் ஏற்பட்டது. எதற்காகக் கோபம் ? எதற்காகவுமே கோபம்தான். அவள் ஏன் பரிட்சையில் தேறினாள் ? ஏன் ஒரு பெண்ணாகப் பிறந்தாள் ? எதற்காக எதிர்வீட்டுக்கு அப்பா அம்மாவோடு குடியிருக்க வந்தாள் ? பரிட்சை நெருங்கும் சமயத்தில் ஏன் அடிக்கடி தன்னிடம் வந்து, தெரியாததையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டாள் ? அவள் செய்த காரியங்கள் அனைத்துமே அவனுடைய கோபத்துக்குக் காரணங்களாகிவிட்டன.

சுகன்யா மீது இப்படிக் கோபமும் ஆத்திரமும் பிறக்கும் ஒரு கட்டம் வரும் என்று அவன் எதிர்பார்த்ததே இல்லை. அதனால் இப்போது கோபம் வருவதைக் கண்டு, தனக்கு மூளைக் கோளாறு ஏற்பட்டுவிட்டதோ என்றுகூட ஒரு கணம் பயந்தான். உள்ளமும் உடம்பும் கொதித்தன. தன் நெருப்பு தன்னையே சுட்டது. வெப்புத் தாங்கமுடியாமல், 'சுகன்யா ' ' என்று வாய்விட்டே சொல்லி அனல் வீசும் சுவாசத்தை வெளியே விட்டான். 'சுகன்யா ' எதற்காக நீ எதிர்வீட்டுக்கு வந்தாய் ? ஏன் என்னிடம் வந்து பாடம் படித்தாய் ? எதற்காக நீ பரிட்சையில் பாஸ் பண்ணினாய் ? '

* * *

ஸ்ரீனிவாசன் குடியிருந்த வீட்டுக்கு எதிர்வீடு ஒரு வருஷத்துக்கு முன் காலியாயிற்று. யாரோ ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தர் மனைவியோடும் மகளோடும் அங்கே குடிவந்தார். மகள் பள்ளிக்கூடம் போகிறவளாக இருந்தாள். எந்தப் பள்ளிக்கூடம், என்ன வகுப்பு என்பவற்றையெல்லாம் சிரத்தை எடுத்துக் கண்டு பிடித்துவிட்டான் ஸ்ரீனிவாசன். தன்னைப் போலவே எஸ்.எஸ்.எல்.சி. படிப்பவள். வயதிலும்கூடத் தனக்குச் சமதையாக இருக்கக்கூடும் என்று நினைத்தான். முதலில் அவனுக்கு இது ஆச்சரியமாகக்கூட இருந்தது. ஏனென்றால் அவன் படிக்கும் வகுப்பில் அவன்தான் அசாதாரணமாக மூத்தவன். இருபது வயதுப் பையன். தனக்கு அடுத்த வயது மாணவன், நான்கு வயது குறைந்தவனாகவே இருந்தான். இடையிடையே பணக்கஷ்டம் வந்து, அந்தந்த வருஷத்துப் படிப்பைப் பாழடித்தது. ஒரு தடவை நோய்வாய்ப்பட்டு மாதக்கணக்கில் கிடந்தான். இத்தனை தடங்கல்களையும் தாண்டவேண்டிய நிர்பந்தத்தினால், இந்த வயதில் இந்த வகுப்புப் படிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் சுகன்யாவுக்கு என்ன தடங்கல்கள் ஏற்பட்டிருக்கமுடியும் ? வசதியான குடும்பத்தில் பிறந்து ஏகபுத்திரியாக இருக்கும் அவள், இப்போது கல்லூரியில் அல்லவா படிக்கவேண்டும் ? இந்தத் திகைப்பு அவனுக்குப் பல மாதங்கள் வரை நீங்கவில்லை.

சுகன்யா அழகாக இருந்தாள். நிமிர்ந்து பார்த்தாலும் யாரையும் பார்க்காத ஒரு பார்வை. முகத்தில் சிரிப்புக் களையை ஒருநாள்கூட அவன் பார்த்தவனல்ல. எதிர்ப்பட்ட சமயங்களிலெல்லாம் பார்க்காதவள்போல் தன்னைக் கடந்து செல்லுவாள். மிகவும் கர்வம் பிடித்தவளாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். இது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அவள் அழகு பிடித்திருந்தது; அவள் எதிர்வீட்டில் குடியிருந்தது பிடித்திருந்தது; ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது அவளைப் பார்ப்பதும் அவனுக்கு பிடித்திருந்தது.

பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் சுகன்யா வீட்டுக்கு ஒரு டியூஷன் வாத்தியார் வர ஆரம்பித்தார். எந்நேரமும் அவள் புத்தகமும் கையுமாக இருந்தபடியால் முன்போல் தினந்தவறாமல் அவளுடைய தரிசனம் கிடைக்கவில்லை. கண்ணாரக் கண்டால், அதைப் பற்றி எண்ணி இன்ப உணர்ச்சி பெறுவது சிறிது நேரமே நீடிக்கும்; காணாத தினத்திலோ. ஏமாற்ற உணர்ச்சி நாளெல்லாம் நீடித்திருக்கும். இதற்காக அவன் படிப்பில் அசிரத்தையாக இருந்துவிடவில்லை. பெருமாள் கோவிலில் உட்கார்ந்து மனப்பாடமாக இருந்த பாடங்களையும்கூடத் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டுதான் இருந்தான்.

ஒருநாள் மாலையில் நன்றாக இருட்டியதும் புத்தகக் கட்டுடன் வீட்டுக்குத் திரும்பினான் ஸ்ரீனிவாசன். நல்ல பசி. காலையில் சாப்பிட்டது. மத்தியானம் வெறும் காபிதான். வீட்டுக்கு வந்து பார்த்தால் சாப்பாடு இன்னும் தயாராகவில்லை. சோர்ந்து துவண்டு ஒரு மூலையில் படுத்துவிட்டான். சிறிது நேரத்துக்கெல்லாம் எதிர்பாராவிதமாக வீட்டுக்குள்ளே வந்தாள் சுகன்யா.

ஸ்ரீனிவாசனின் தாயார் புரியாமல் விழித்துப் பார்த்தாள். அவனுக்கோ ஒன்றுமே விளங்கவில்லை. சுகன்யா தனது வீட்டுக்கு வருவதா ?

வீட்டுக்குமட்டும் அவள் வரவில்லை; அவன் அருகிலும் வந்தாள். அவள் கையில் ஆங்கிலப் புத்தகம் இருந்தது. அவன் எழுந்தான். குறிப்பிட்ட ஒரு பக்கத்தை திறந்து அவனிடம் காட்டிச் சில சந்தேகங்களைக் கேட்டாள். அவை மிகமிக எளிமையான பகுதிகள், அவனைப் பொறுத்த வரையிலும். சந்தேகங்களைப் போக்கினான்--- நின்றுக்கொண்டேதான். அப்பொழுது அவள் கேட்ட இரண்டொரு கேள்விகள், அவளுடைய கல்வித் தரத்தை எடுத்துக்காட்டுவனபோல் இருந்தன. ஆனால், அதைப்பற்றி அவன் அப்போது நினைக்கவில்லை. அவள் வந்ததும், நின்றதும் சில வார்த்தைகள் பேசிவிட்டுப் போனதும்தான் அவன் மனசில் பதிந்திருந்தன. அவள் தன்னைத் தேடி வந்துவிட்டாள்; தன்னிடம் உதவி கோரி வந்துவிட்டாள். தனக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. இந்தக் காரணங்களெல்லாம் சேர்ந்து, சிறிது நேரத்துக்கு அவன் பசியைக்கூட மறக்கடித்துவிட்டன். தாங்கமுடியாத சந்தோஷம்.

இரவு சாப்பிட்டுப் படுத்த பிறகு, அவள் தனக்கு 'நன்றி ' சொல்லாமலே போனது ஞாபகம் வந்தது. சர்வ சாதாரணமான எளிய பகுதிகளைக்கூடப் புரிந்துகொள்ளாத மோசமான கல்வித்தரம் நினைவுக்கு வந்தது. நிச்சயம், பல வகுப்புக்களில் பெயிலாகியிருப்பாள் என்று நினைத்தான். அவள் தனக்குச் சமமான பிராயத்தில் இந்த வகுப்புப் படிப்பதன் காரணம் இப்போது புலனாகிவிட்டது. அவனுக்கு.

அழகாக இருந்தாலும் புத்திக்கூர்மை இல்லை. அத்துடன் நன்றி உணர்ச்சியும் இல்லை. எது இல்லாமல் போனால்தான் என்ன ? அழகு இருந்தது; தன்னைத் தேடி வருவதில் இன்பானுபவம் இருந்தது. அப்புறம், இல்லாத எதைப்பற்றித்தான் கவலை ?

ஸ்ரீனிவாசன் விழுந்து விழுந்து படிப்பதற்குக் குடும்பத்தின் எதிர்கால ஷேமம் மட்டும் காரணமல்ல; சுகன்யாவின் கண்முன் தான் ஓர் அறிவாளியாக, வீரனாக விளங்க வேண்டுமென்ற வேட்கையும் உண்டாகிவிட்டது.

அந்தப் பெண் இரண்டு வாரங்களுக்குப்பின் மற்றொரு முறையும் வந்தாள். பரீட்சை தொடங்குவதற்கு முன் மேலும் இரண்டு தடவைகள் அவள் வந்துவிட்டாள்.

ஒரு சந்தர்ப்பத்தில்கூட அவள் உட்காரவில்லை. தன் சந்தேகங்களைக் கேட்பதைத் தவிர வேறு எதைப்பற்றியும் பேசவில்லை. 'தாங்க்ஸ் '---அதை உச்சரிக்கக்கூட இல்லை.

ஒருநாள் தெருவில் கண்ணுக்கு எதிரே அவளைப் பார்த்தபோது, பழகிய பெண் என்பதால் ஸ்ரீனிவாசன் இலேசாகப் புன்னகை செய்தான். அவள் பதிலுக்குச் சிரிக்கவுமில்லை; அவனைப் பார்க்கவுமில்லை. கவனியாமலே போய்விட்டாள்.

உரிய நாளில் அவர்கள் இருவரும் பரீட்சை எழுதினார்கள்.

அவள் தேறிவிட்டாள்.

அவன் தேறவில்லை.

* * * *

நன்றாக இருட்டிவிட்டது. ஸ்டேஷனில் ஒன்றுபாக்கியில்லாமல் எல்லா விளக்குகளும் ஏற்றப்பட்டுவிட்டன. தான் குறித்திருந்த நேரமும் வந்துவிட்டது. இனியும் அங்கே உட்கார்ந்திருப்பதில் அர்த்தமில்லை. இவ்வளவு நேரமும், ஸ்டேஷன் சிப்பந்திகளிடம் அகப்படாமல் இருக்கவேண்டுமே என்ற பயத்துடன் இருந்தாகிவிட்டது எப்படியோ தப்பிவிட்டோம். கடைசி நேரத்தில் அகப்பட்டுவிடக்கூடாதே என்று ஸ்ரீனிவாசன் நெரிசல் மிகுந்த ஒரு சமயத்தில் ஸ்டேஷனை விட்டு வெற்றிகரமாக நழுவி வெளியே வந்துவிட்டான்.

வெளிப்புறமாகத் தண்டவாளத்தை ஒட்டிச் செல்லும் நடைபாதையை நோக்கி நடந்தான். சற்று முன்பு கண்ணீர்த் திவலையினால் பரந்த வானம் மங்கியதைப்போல், ரயில்வே சிப்பந்தியிடம் கொண்ட பயத்தினால் மங்கி மறைந்திருந்த மரண பயம் இப்போது முழுமையாக, தெளிவாக எதிரே வந்துவிட்டது.

'சும்மா நடந்து போகவில்லை; சாவதற்காக நடந்து போகிறோம். '

----இதை நினைத்துப் பார்த்தான் ஸ்ரீனிவாசன். நடை நிற்காவிட்டாலும் மனம் ஸ்தம்பித்துவிட்டது. முன்புறம் மரணம்; பின்புறம் வாழ்க்கை. இரண்டுமே நினைக்கமுடியாத பயங்கரங்களாக இருந்தன. எதை ஏற்பது ? எதை உதறுவது ?--- அவனால் முடிவுகட்ட முடியவில்லை. நடந்து செல்லும் கால்களே முடிவுகட்டட்டும் என்று விட்டுவிட்டவனைப்போல் போய்க்கொண்டிருந்தான். அவனுடைய உயிர் அந்தக் கால்களிலேயே தஞ்சம் புகுந்துவிட்டது. அவை விட்டவழி விடட்டும்.....

மாம்பலம் ஸ்டேஷனை நோக்கி நடக்கும்போது, ஒரு நிமிஷம் மரணத்தைப்பற்றிய சிந்தனை; மறுநிமிஷம் வீட்டைப்பற்றிய நினைவு.

ஒரு கட்டத்தில் சாவைப்பற்றி எண்ணாமல், 'சாவுக்குப் பின் என்ன ? ' என்பதைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டான். அந்த சிந்தனை வளர்ந்து கொண்டே போயிற்று.

செத்தபிறகு, தாயும் தந்தையும் தங்கையும் கதறித் துடிப்பார்கள். மூவரில் ஒருவருக்காவது பைத்தியம் பிடிக்கும்; ஒருவருக்குத் தன்னைப்போலவே தற்கொலை எண்ணம் பிறக்கும்; மற்றொருவர், இரண்டையும்விட பயங்கரமான ஒரு நிலையில் அகப்பட்டுக்கொண்டு தத்தளிப்பது நிச்சயம். தான் உயிரோடு இருந்தால், இத்தனையும் நிகழாமல் தடுத்துவிடலாம். வேறு கஷ்டங்கள் ஏற்பட்டால் சமாளிக்கமுடியும். இந்த மாதிரியான எண்ணம் பிறந்த பிறகும்கூட அவன் திரும்பிவிடவில்லை. நடந்து கொண்டுதான் இருந்தான். தான் நினைத்த காரியத்தை ஒரு சில நிமிஷங்களுக்குள் முடித்துவிடும் உறுதியோடும் இருந்தான்.

'வீட்டாரின் தத்தளிப்பையும் பொருட்படுத்தாமல் சாவை அரவணைக்கத் தன்னைத் தூண்டுவது, அவமான உணர்ச்சிதான் என்பதில் என்ன சந்தேகம் ? அந்த உணர்ச்சிக்குக் காரணம், சுகன்யா ' பாஸ் பண்ணிய சுகன்யா ' அந்த சுகன்யாவுக்காகத்தான் சாகப்போகிறோம். '

ஸ்ரீனிவாசன் அப்படியே பிரமை பிடித்தவன்போல் நின்றுவிட்டான்.

அவளுக்காகத்தான் சாவு என்றால், அந்த மரணத்துக்கு என்ன மதிப்பு ? சாகிறவனுக்குத்தான் என்ன மதிப்பு ? அவள் தன்னைக் காதலிக்கவில்லை; தானும் அவளைக் காதலிக்கவில்லை.

அவள் எதில் சிறந்தவள் ?---படிப்பிலா ? நன்றி உணர்ச்சியிலா ? அரிய குணங்களிலா ? அவளைப் போன்ற கர்வியை, மக்குத்தனமானவளை, நன்றி உணர்ச்சியற்றவளை இதுவரை பார்த்ததுகூட இல்லை. அவளிடம் இருப்பதெல்லாம் அழகு ஒன்றுதான். அதை விட்டால், பாஸ் பண்ணிவிட்டாள் என்ற ஒரு பெருமிதம் இருக்கிறது. இந்த இரண்டுக்காகவும் சாவதென்றால், ஊரில் இருக்கிற ஒவ்வொரு அழகிக்காகவும், ஒவ்வொரு பாஸ் பண்ணிய பெண்ணுக்காகவும் சாகவேண்டும்.

அர்த்தமில்லாமல் முட்டாள்தனமாக இந்த முடிவு எடுத்து வந்துவிட்டோம் என்று கருதினான். தன் பிணத்தைப் பார்த்து அவள் அழுவது ஒருபுறம் இருக்கட்டும்; அருவருப்பில்லாமலாவது பிணத்தைப் பார்ப்பாளா ?

தன் முட்டாள்தனத்துக்கு, தன் தலையிலேயே கல்லை எடுத்து ரத்தம் வரும் வரையில் இடித்துக்கொள்ளலாம் போல் இருந்தது.

மிகுந்த ஆவேசத்துடன் கையிலிருந்த பத்திரிக்கைகளைத் துண்டுதுண்டாகக் கிழித்தெறிந்தான் ஸ்ரீனிவாசன். வந்த வழியே அவன் திரும்பிவிட்டான்.

* * * *

கிருஷ்ணசாமி ஐயங்காரும் தெரிந்த கடை ஒன்றில் பத்திரிக்கையை எடுத்துப் பார்த்தார். பையனுடைய நம்பர் வரவில்லை என்று கண்டதும் ரத்த ஓட்டம் நின்று விட்டது. வெகு சிரமப்பட்டு மனத்தைக் கட்டுபடுத்தினார். பல்லைக் கடித்துக்கொண்டு நிதானமாக வீட்டை நோக்கி நடந்து வந்தார். அப்புறம் அரைமணி நேரம் வீடு முழுதுமே மெளனம் நிலவியது. ஆகாயக்கோட்டை கட்டிய ஒவ்வொருவருக்கும் மற்றவருடைய முகத்தைப் பார்க்கவும், பார்த்துப் பேசவும் வெட்கமாக இருந்தது. இடிந்துபோய் ஆளுக்கு ஒரு பக்கம் ஒதுங்கினார்கள்.

அரைமணி நேர மெளனத்துக்குப் பிறகு, வீடு அல்லோகல்லோலப்பட்டது. ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு வராமல் இருப்பது ஏன் ? எங்கே போயிருப்பான் ? எங்கே போனான் ?

ஐயங்கார் திகிலோடு எழுந்து போய் மகனைத் தேடினார். கோவில், பள்ளிக்கூடம், வாசகசாலை, சிநேகிதர்களின் வீடுகள்....அரைமணி நேரம் சுற்றிப் பார்ப்பது; பிறகு வீட்டுக்கு வந்து, 'வந்துவிட்டானா ? ' என்று பார்த்து விட்டு, பழையபடியும் வெளியே போவது; ஆறு தடவை வந்து பார்த்துவிட்டார். ஆறு தடவைகளிலும் வீட்டில் ஆறு இடிகள் விழுந்தன.

இந்தக் கலவரங்கள் எதிர்வீட்டுக்கு எட்டியதும் சுகன்யா வந்தாள். ஸ்ரீனிவாசனின் தாயாரும் தங்கையும் அவளைப் பார்த்து, 'கோ 'வென்று அழுதார்கள். அவளுக்கும் கண்ணீர் வந்துவிட்டது. 'ஒரு வேளை, நம்பர் விட்டுப் போயிருக்கும். நாளை பேப்பரையும் பார்க்கவேண்டும் ' என்று சொல்லி ஆறுதல் அளிக்க முயன்றாள் சுகன்யா.

அப்போது வீட்டில் யாருக்குமே நம்பர்களைப்பற்றிய கவலை இல்லை. நம்பர்கள் நாளை வந்தாலும் வரட்டும், அல்லது வராமலே போகட்டும், ஸ்ரீனிவாசன் வந்தால் போதும் என்ற நிலையில் இருந்தார்கள்.

இதற்கு அந்தப் பெண் என்ன ஆறுதல் அளிக்கமுடியும் ? ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டுத் தன் வீட்டுக்குத் திரும்பிவிட்டாள்.

ஏழாவது தடவையாக அலைந்துவிட்டு வந்த கிருஷ்ணசாமி ஐயங்கார், யாரிடமும் எதுவும் பேசாமல் ஓர் ஓரமாகச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்து விட்டார். மனைவியும் மகளும் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை.

அப்புறம் அந்த வீட்டுக்குச் சுகன்யாவின் அம்மா வந்தாள். தன் மகள் சாப்பிடாமல் அழுதுகொண்டு படுத்திருக்கிறாள் என்ற செய்தியையும் சொல்லிவிட்டு ஸ்ரீனிவாசனைப் பற்றி விசாரித்தாள்.

மனமில்லாமலும் தெம்பில்லாமலும் கண்ணீரும் கம்பலையுமாக ஐயங்காரின் மனைவி பதில் சொல்லிக்கொண்டிருக்கும் சமயம்.....

ஸ்ரீனிவாசன் வந்துவிட்டான் '

'சீனு ' ' என்று ஒரு பெரிய கூப்பாடு போட்டுவிட்டு, அவனைக் கட்டிக்கொண்டு அழுதாள் தாய். தங்கையும் வந்து, 'எங்கே போனே சீனு ? ' என்று கேட்டுவிட்டுக் கேவி கேவி அழுதாள். ஐயங்கார் நிமிர்ந்து உட்கார்ந்தார். முழங்கால்களைக் கட்டிக்கொண்டு வெறித்த பார்வையோடு மகனையும் மற்றவர்களையும் பார்த்தார்.

அவன் வந்துவிட்ட செய்தியறிந்த சுகன்யா ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து ஓடிவந்தாள். வந்து அவனுடைய குனிந்த தலையை, வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

'சீனு ' ' என்று சுகன்யா அவனை அழைத்தாள். பெயர் சொல்லி அழைத்தாள்.

ஸ்ரீனிவாசன் முகத்தைத் தூக்கிச் சுகன்யாவின் கண்களைப் பார்த்தான்.

அந்த இரு கண்களிலும் கண்ணீர் ததும்பியிருந்தது. கண்ணீரையும் பார்த்தான். அப்போது.... அந்தக் கண்ணீரில் வேறொரு கற்பகக் கன்று தளிர்த்தது.

அவனுடைய கண்ணீருக்கும் ரத்தத்துக்கும் வளராமல் கருகிய கற்பகத்துக்குப் பதில் மற்றொரு கற்பகத்துக்குக் கண்களால் நீர் வார்க்கும் தரும தேவதையைப் பார்ப்பது போலவே சுகன்யாவைப் பார்த்தான் ஸ்ரீனிவாசன்.

* * * *

'சுகன்யா ' உன்னை வெறுத்ததால் நான் சாகாமல் வாழ நினைத்தேன்; இப்போது உன்னுடைய அன்பால் (உன்னிடம் கொண்ட அன்பால் என்று நினைக்கச் சங்கோஜமாக இருந்தது) சாகாமல் வாழ நினைக்கிறேன் ' நீ எப்போதுமே என்னைச் சாகவிடமாட்டாய் ' அப்படித்தானே ? ' ----ஆனந்தக் கண்ணீரைத் தலையணையில் ஒற்றிக் கொண்டான் ஸ்ரீனிவாசன்.

******

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

3 கருத்துகள்:

Dr.Rudhran on June 1, 2010 at 2:41 PM said...

thank you for publishing this unsung hero

சென்ஷி on June 3, 2010 at 7:28 PM said...

அருமை..

Unknown on February 27, 2015 at 10:06 PM said...

pathivuku nanri

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்