May 3, 2010

''எழுத்து - எதிர்புணர்வுக்கான ஆயுதம்'' - பாமா

பாமா (பிறப்பு - 1958), தலித் இலக்கியம் படைக்கும் குறிப்பிடத்தக்க முன்னணி எழுத்தாளர் ஆவார். இவர் 1992 இல் எழுதிய தன்வரலாற்றுக் கூறுகளுடன் எழுதிய கருக்கு என்னும் புதினம் புகழ் பெற்றது. அதில் இவர் தலித் மக்கள் மொழியைப் பயன்படுத்தி எழுதியது புதிய பாதை வகுத்தது என கருதப்படுகின்றது. கன்னியாஸ்திரியாகிப் பின்னர் அப்பொறுப்பிலிருந்து விலகி ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவரது கருக்கு புதினத்தை லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

இவரது நூல்கள்

கருக்கு (நாவல்) (1992)
சங்கதி (நாவல்) (1994)
வன்மம் (நாவல்) (2002)
கிசும்புக்காரன் (சிறுகதைகள்) (1996)

*******

சிறுகதை மற்றும் நாவலுக்கென வரையறுக்கப்பட்ட எந்த கட்டமைப்புமின்றி, புது வடிவியல் ரீதியில் தலித் மொழி, தலித் பெண்ணிய மொழியை நோக்கிப் பயணப்பட்டிருப்பவர் பாமா. இவரது படைப்புகளில் கதாபாத்திரங்களின் எதிர்ப்புணர்வைப் படிக்கும் போது, நமக்கும் அந்த தாக்கம் வந்துவிவதைத் தவிர்க்க முடியாது. 2000 ஆண்டின் 'கிராஸ் வேர்ட்புக்' விருதைப் பெற்றிருக்கும் இவர், அவ்விருதை தலித் இலக்கியத்திற்கான அங்கீகாரமாக மட்டுமல்லாமல் தலித் மக்களுக்கான அங்கீகாரமாகக் கருதுகிறார். தலித் முரசுக்காக பாமா வழங்கிய நேர்காணல்.


கன்னியாஸ்திரியாக இருந்த நீங்கள், அதிலிருந்து வெளியேறுவதற்கான காரணம் என்ன? bam4

நா  ன், அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தேன். கன்னியாஸ்திரியாகப் போனால் அதிகாரம் வரும், வசதி இருக்கும், அதன் மூலம் தலித் குழந்தைகளுக்கு, மக்களுக்கு உதவி செய்யலாம் என்று நினைத்தேன். உதவி என்றால் பொருளாதார உதவியில்லை. அவர்களுக்குச் சிறப்பாக சொல்லிக் கொடுத்து, வாழ்க்கை லட்சியத்தோடு உருவாக்கலாம் என்று நினைத்தேன். அதனால் ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு கன்னியாஸ்திரியாக ஆனேன்.

ஆனால், அங்கு போன பிறகு எனக்கு அந்த மாதிரியான வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. வசதியான குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிற வாய்ப்புதான் கிடைத்தது. அங்கேயும் நான் ஆசிரியராக மட்டுமே இருக்க முடிந்தது. எனக்கும் மக்களுக்குமான தொடர்பு கொஞ்சம் கொஞ்சமா விடுபட்டுப் போய்விட்டது. எந்த நோக்கத்திற்காக அங்கே போனேனோ அதற்கும் நான் வாழ்ந்த கன்னியாஸ்திரி வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தது. அது மட்டுமல்ல, ஒதுக்கப்பட்ட மக்களிடம் அவங்களோட நடவடிக்கை என்ன மாதிரி −ருக்கிறது என்று பார்க்கிறப்ப எனக்கு அவர்களோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பண்பாட்டு ரீதியிலும் நிறைய முரண்பாட்டை உணர்ந்தேன்.

'இன்டர் நேஷனல்' சபையைக்கூட 'லோக்கலைஸ்டு' பண்றாங்கன்னா, இங்க இருக்கிற மக்களோடும் பண்பாட்டோடும் இணைய வேண்டும். ஆனால், அவர்கள் அப்படிச் செய்ய மறுக்கிறார்கள். நம்மைத்தான் அவர்கள் மாற்றப் பார்க்கிறார்கள்.

ஒரு தலித் என்கிற முறையில் 'கான்வென்ட்டில்' என்ன மாதிரியான வேறுபாட்டை உணர்ந்தீங்க?

எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்த வேறுபாடும் இல்லை. என்னோட சான்றிதழில் சாதி கிடையாது என்பதால், நான் தலித்துன்னு அவர்களுக்குத் தெரியாது. நானே சொன்னால்தான் ஆச்சு. அப்படிச் சொல்வதற்கான சந்தர்ப்பம் வரலை. ஆனால், மற்ற தலித் வேலைக்காரர்கள் மற்றும் வறுமையில் இருப்போரிடம் அவர்களுடைய தொடர்பு, அணுகுமுறை எனக்குப் பிடிக்கவில்லை.

பண்பாட்டு ரீதியாகப் பார்க்கும் போது, உதாணரத்துக்கு ஓட்டல்ல போய் ஆயிரம் இரண்டாயிரம்னு செலவு செய்வது, எனக்கு 'கிரிமினல் வேஸ்டா' தோணுச்சு. அதை வச்சு ஒரு மாதம் இரண்டு மாதத்துக்கு ஒரு குடும்பத்தோட பசியைப் போக்கிடலாம். ஆனால், அது அவர்களுக்கு சாதாரணமாகத் தெரிகிறது. அப்படியொரு வாழ்க்கை வாழ்வதை, ஒரு குற்றமாக உணர்ந்தேன். நான் 'கான்வெனட்டை' விட்டு வெளியே வருவதற்கு இந்த மாதிரி நிறைய காரணங்கள் −ருந்தன.

இந்துமதம் சாதி அமைப்பைக் கட்டிக் காக்கிறது என்று சொல்லி தொடர்ந்து மதமாற்றம் வலியுறுத்தப்படுகிறது. கிறித்துவமோ இஸ்லாமோ தலித் மக்களின் நிலைமைகளை மாற்றும் என்று நினைக்கின்றீர்களா?

மாற்றவில்லை என்பதைத்தான் என்னோட வாழ்க்கையிலேயே பார்த்தேன். என்னைப் பொறுத்தவரைக்கும் எந்த மதமும் விடுதலைக்கான மதம் இல்லை. மதம், மக்களை மழுங்கடிக்கத்தான் செய்கின்றது. அதனால் மதமே வேண்டாம் என்று சொல்கிறேன்.

உங்களுக்கள் தலித்திய சிந்தனை வந்ததற்கான பின்னணி என்ன?

தலித்திய சிந்தனை என்பது இறக்குமதி செய்யப்படுவதில்லை. நான் ஒரு தலித். அதைவிட வேறென்ன வேண்டும். நான் பிறந்ததிலிருந்து என்னோட ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒடுக்கப்பட்டுதான் வருகிறேன். நான் படித்து வேலை பார்க்கிறேன் என்பதாலேயே எனக்கு விடுதலை கிடைத்துவிடவில்லை. எல்லோரும் சமம் என்று சொல்லிதான் நான் வளர்க்கப்பட்டிருக்கிறேன். எனக்குள் தலித் சிந்தனை முனைப்போடு வந்ததற்கு, என்னுடைய அண்ணன் ராஜ்கவுதமனும் ஒரு காரணம். சின்ன வயசிலிருந்தே அவர் என்னிடம் சொல்வார். 'பிறப்பால் நாம இந்த ஜாதின்னு ஆகியாச்சு. அதை மாற்ற முடியாது. ஆனால், படித்து முன்னேறிட்டோம்னா நம்மைத் தேடி வருவாங்க' என்பார்.


பேச்சுமொழி ஒடுக்கப்பட்டவர்களுக்கான மொழி என பழைய இலக்கியங்களிலிருந்து மீடியா வரை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் அதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
எனக்கு அதில் உடன்பாடு இல்லை. முதலில் இந்தப் பழைய இலக்கியங்கள் முதல் மீடியா வரை அனைத்தையும் கையில் வைத்திருந்தவர்கள் தலித் அல்லாதவர்கள். (அதாவது பார்ப்பனர்கள், வெள்ளாளர்கள்) மதிப்பீடுகள், பழக்க வழக்கங்கள் என எல்லா விஷயத்திலும் கடைசியில் அவங்க சொல்வதுதான் தீர்மானமா வந்திடும். அவங்க என்ன செல்றாங்களோ அதைத்தான் நாம செய்ய வேண்டும். அவங்க சொல்றாங்க என்பதற்காக, இது இழிவான மொழியாகிவிடாது. பார்ப்பனர்கள் 'அவாள்', 'இவாள்', 'வர்றச்ச', 'போறச்ச'ன்னு பேசுறாங்க. அதை 'மாஸ் மீடியா'வில் காட்டுகிறார்கள். அதையும் நாம் பார்த்து ரசிக்கிறோம். அது மாதிரி நானும் என்னுடைய மொழியை கவுரவமாக மதிக்கிறேன். இது மக்கள் மொழி. இதுதான் நல்ல மொழின்னு நினைக்கிறேன்.


'கருக்கு' நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் போது, ஏதாவது மொழிச் சிக்கல் வந்தது என்று சொன்னார்களா?
மொழிச் சிக்கல் மட்டுமல்ல; சில நிகழ்வுகள், வாழ்க்கைச் சம்பவங்கள் கூட புரியாமல் இருந்தது. ஆனால் நாங்கள் இது குறித்து பலமுறை பேசி முடிவு செய்தோம்.


இரண்டாயிரம் ஆண்டின் 'கிராஸ்வேர்ட் புக்' விருது உங்களுக்குக் கிடைத்தது, தலித் இலக்கியத்திற்கான அங்கீகாரம் என்று நினைக்கின்றீர்களா?
தலித் இலக்கியத்திற்கான அங்கீகாரம் என்பதோடு, என் மக்களுக்கு அவர்களின் வாழ்க்கைக்கு கிடைத்த அங்கீகாரமாகத்தான் நினைக்கிறேன். இலக்கிய ரீதியில் எப்படி எடுத்துக்கிறாங்க என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. என்னுடைய கதை பரவலாக்கப்பட்டு இன்னும் பரந்த வாசகர்களைச் சென்றடைகின்றது என்னும்போது, எனக்கு அது மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது.

உங்கள் எழுத்து, கட்டுரைத் தன்மையோடு இருக்கிறது என்று வருகின்ற விமர்சனம் பற்றி என்ன சொல்றீங்க?
என்னுடைய நாவலை நாவலே இல்லை என்றுகூட சொல்றாங்க. ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிற மாதிரி சிறுகதைன்னா இப்படி இருக்க வேண்டும். நாவல்ன்னா இப்படி இருக்க வேண்டும். கவிதைன்னா இப்படி இருக்கணுங்கிற வரை வரைமுறையை வைத்துக் கொண்டு, அதுக்குள்ள கட்டுப்பட்டு எழுத வேண்டாம் என்று தோன்றுகிறது. 'கருக்கு' வேண்டுமென்றே மாற்றி எழுத வேண்டும் என்றுதான் அப்படி எழுதினேன். அதை சுயசரிதைன்னும் முத்திரை குத்த முடியாது. அது ஒரு நாவல் என்றும் முத்திரை குத்த முடியாது. எற்கனவே இருக்கிற மாதிரியான வடிவம் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்து அப்படி எழுதினேன்.

விமர்சனங்களை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
கருத்து ரீதியில் விமர்சனம் செய்தால், அதுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பேன். வடிவம், மொழி, அழகியல் பற்றி விமர்சனம் வந்தால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். மொழி பற்றி அவங்க விமர்சனம் செய்யும் போதுதான், வீம்பா பேச்சு மொழியிலேயே எழுத வேண்டும் என்று தோன்றும்.

தமிழ் இலக்கியச் சூழலில் பாமாவின் இடம் என்ன?
தவிர்க்க முடியாதது. எனை ஒதுக்கணும்னு சொன்னாக்கூட ஒதுக்க முடியாது.

எழுத்து உங்களுக்கு என்னவாக இருக்கிறது?
எதிர்ப்புணர்வைக் காட்டுகிற ஆயுதமாக விடுதலைக்கான வழியாக இருக்கிறது. சமூகக் காழ்ப்புணர்ச்சிகளை, முரண்பாடுகளை மனசுக்குள் அடைத்து வைத்துக் கொள்வது கடினமாக இருக்கின்றது. எழுத்து அதற்கெல்லாம் வடிகாலாக உள்ளது.

தலித் விடுதலையை எழுத்து மட்டும்தான் தீர்க்குமா?
எழுத்து மட்டும் தீர்க்காது. எழுத்தும் தீர்க்கும்.

தலித் அரசியல் பற்றி உங்களுடைய கருத்து என்ன?
தலித் மக்களுக்கென்று ஒரு கட்சி கண்டிப்பாக வேண்டும். திரும்பத் திரும்ப அம்பேத்கர் அதைத்தான் சொல்கிறார். ''அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும்வரை நாம் அடிமைகளாகத்தான் இருப்போம்'' எனவே, அடிமைத்தனம் நீங்க வேண்டும் என்றால், அரசியல் அதிகாரம் தேவை. ஆனால், எனக்குள் இருக்கிற ஆதங்கம் என்னவென்றால் எல்லா தலித் கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும். அதை விட்டுவிட்டு இவங்க ஆளுக்கொரு பிரிவாக −ருப்பது வருத்தமாக இருக்கின்றது.

தலித் அரசியலில் பெண்களின் பங்களிப்பு எந்தளவுக்கு உள்ளது?
அவ்வளவாக இல்லை. தலித் அரசியலைப் பொறுத்தவரை, ஆண்களே இப்பொழுதுதான் நுழைஞ்சிருக்காங்க. பெண்களை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிழுக்க வேண்டும்.

சாதியே இல்லாமல் போகணும்னா என்ன வழி?
இப்ப வர்ற 'அல்டிமேட்'எல்லாமே சாதி ஒழிப்புதான் என்றாலும்கூட, தமிழகச் சூழலில் சாதியைத் தவிர்க்க முடியவில்லை. நான் விரும்பி −ந்த சாதியில் வரவில்லை. இவங்க இழிவு என்று சொல்வதால் நான் இழிவாகி விடமாட்டேன். பார்ப்பனர், நாயுடு, ரெட்டியார் என்று சாதிப் பெயர்கள் போட்டுக் கொள்கிறார்கள். அதைப் போல நானும் சாதியை ஒத்துக் கொள்கிறேன். சாதியை ஏத்துக்கும் போது ஒரு வீம்பு, வைராக்கியம் வரத்தான் செய்யுது. யாராது சாதியை கேட்கும் போது, எஸ்.சி.ன்னு சொல்றதா, 'அரிஜன்னு' சொல்றதான்னு கஷ்டமாக இருக்கும். ஏதோ தப்பு செய்துவிட்டது போல உணர்வு வரும். அதையே, என்ன சாதி என்று கேட்டால் பறையன் என்றோ, பள்ளன் என்றோ, சக்கிலியன் என்றோ சொல்லிப் பாருங்க. கேட்டவனுக்குப் பட்டுன்னு போயிடும். அதிர்ச்சியை ஏற்படுத்தும். இதுகூட ஒரு கலகக் குரல்தான்.

பெண்ணிய எழுத்து, பெண்மொழி என்பது எந்த அளவுக்கு உணரப்பட்டிருக்கிறது?
பெண்களுக்கான மொழியே நமக்குக் கிடையாது. தொல்காப்பியத்திலிருந்து எடுத்துக் கொண்டீர்கள் என்றால், மொழி என்பது, ஆண்கள் தங்களுடைய அதிகாரத்தைக் கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்டதாக −ருக்கிறது. எல்லா இலக்கியங்களிலும் ஆணை மய்யப்படுத்திய மொழியே உள்ளது. ஆங்கிலத்தில் பெண் எழுத்தாளர்கள், பெண் எழுத்து எல்லாம் 'ஸ்ட்ராங்கா' வந்துவிட்டது.
ஆனால் இங்கு இப்பொழுதுதான் அதைப்பற்றி சிந்தனை, தெளிவு, கவனம், தேவை உணரப்பட்டிருக்கிறது. அப்படி பெண் மொ தோன்றம் போது கருத்தாடல், கதை சொல்கிற முறை எல்லாவற்றிம் வேறுபாடு இருக்கும். இப்பொழுது இருப்பது ஆண்மொழி என்றால், அதற்கு நேரெதிராக அதிகாரக் கட்டமைப்பில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்துவதாகப் பெண் மொழி இருக்கும்.

பெண் எழுத்தாளர்கள் நிறைய பேர் எழுத வந்தும் ஏன் பெண் மொழி உருவாக்கப்படவில்லை?
பெண் எழுத்தாளர்கள் எழுத ஆரம்பித்தும் ஆண் மொழியைத் தான் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். குடும்பம், இலக்கியம், எல்லாமே ஆணை மய்யப்படுத்தி இருப்பதுதான் அதற்குக் காரணம். பெண் எழுத்தாளர்களும் ஆண் எழுத்தாளர்களையே முன் மாதிரியாக வைத்து எழுதியிருக்கிறார்கள். இப்பதான் வேற மாதிரியாக சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

தலித் சினிமா, தலித் கலை, தலித் எழுத்து இவற்றைப் பரவலாக மக்கள் மத்தியில் எடுத்துக் கொண்டு போவதில் உள்ள சிக்கல் என்ன?
வர்ணாசிரம அடிப்படையில் பார்ப்பனர்கள் என்ன வைத்திருக்கிறார்களோ, அது உயர்வாகத்தான் கருதப்படுகிறது. பறையை பார்ப்பனர்கள் அடித்திருந்தார்கள் என்றால், அதுவே உயர்வாக இருந்திருக்கும். கர்நாடக சங்கீதத்தை தலித் மக்கள் வைத்திருந்தார்கள் என்றால், அது இழிவானது என்று ஒதுக்கியிருப்பார்கள். கலை, அடிப்படையில் சாதியை வைத்துதானே தீர்மானிக்கப்படுகின்றது.
மொழிச் சிக்கல்ன்னு சொல்றாங்க. சென்னை மொழி, கோவை மொழி, தேவர், கவுண்டர், பார்ப்பனர் மொழியெல்லாம் மக்கள் மத்தியில் சென்று சேருகின்றது. ஆனால், 'தலித் மொழி' பேசினால் மட்டும் சிக்கல் வருவதாக நினைக்கிறார்கள், ஏன்? அந்த மொழிகள் எல்லாம் காலங் காலமாக இருப்பதால் அதற்கு அங்கீகாரம் இருக்கிறதா?
காலங்காலமாக இருந்தால் மட்டும் நீங்கள் அங்கீகாரம் கொடுப்பீர்கள். புதிதாக வந்தால் கொடுக்க மாட்டீர்கள். அப்படியானால் நாங்களும் ஆரம்பித்து அதையே காலங் காலமாகக் கொண்டு வருவோம்.

ஒதுக்கப்பட்ட எல்லோரும் பெண்கள் உட்பட 'தலித்' என்று சொல்கிறோம். நீங்கள் 'தலித்' என்று யாரை சொல்கிறீர்கள்?
ஒரு சிலர், ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட எல்லோரும் தலித் என்ற சொல்கிறார்கள். இச்சொல்லுக்கு 'மண்ணின் மாந்தர்கள்' என்று பொருள் வரும். இப்பொழுது பள்ளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், நாங்க தலித் கிடையாது; தேவேந்திர குல வேளாளர்கள் என்கிறார்கள். தலித் என்றாலே பறையன் என்றுதான் நினைக்கிறார்கள். எது அப்படி நினைக்க வைக்கின்றது? தேவேந்திர குல வேளாளர்கள், நாங்கள் பறையரை விட உயர்ந்தவர்கள் என்று சொல்ல வேண்டும். அதற்காகத்தானே. டாக்டர் கிருஷ்ணசாமி நல்ல நிலையில் இருக்கார் என்பதாலேயே எல்லா பள்ளர்களும் அப்படியிருக்காங்கன்னு சொல்ல முடியாது. தேவேந்திர குல வேளாளர்கள் என்ற பேரினால், தலித் தன்மை அழிந்து போய்விடும் என்பதும் நடைமுறையில் இல்லையே.

அவர்களும் ஒடுக்கப்பட்டுத்தானே இருக்காங்க?
அவர்கள் பிரச்சினையை அனுபவித்தாலும் நாங்க மாட்டுக்கறி சாப்பிடமாட்டோம். அதனால் நாங்கள் தலித் இல்லை என்று நினைக்கிறாங்க. ஆண்டுகள் ஆக ஆக, உட்பிரிவுகள் அதிகமாகிக் கொண்டே போகின்றதே தவிர குறைந்தபாடில்லை. முன்பு பள்ளன், பறையன், சக்கிலியன் அனைவரும் ஒன்று சேரலாம் எனும் முனைப்போடு இருந்தார்கள். அந்த உத்வேகம் இப்பொழுது இல்லாமல் போய்விட்டது என்று தோன்றுகிறது. தங்களுக்குள்ளேயே தனித்தனி அடையாளங்கள், பண்பாடுகள், இருப்பதாக நினைக்கிறார்கள்.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கின்றதா?
இருக்கு, இல்லை இரண்டுமே. நான் கான்வென்ட்டிலிருந்து வெளியே வந்தபிறகு வெளிச்சடங்குகளில் வெளிப்படையாக ஈடுபடவில்லை. ஆனால், ஏன் கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்று சொல்கிறேன் என்றால், எனக்கு ஏசு மேல் தனிப்பட்ட பிரியம் இருக்கு. அவருடைய புரட்சிகரமான கருத்துகள், மதிப்பீடுகள் மீது ஒரு ஈர்ப்பு இருக்கின்றது. அவர் வாழ்ந்த காலகட்டத்தில், ஓரங்கட்டப்பட்ட ஒதுக்கப்பட்ட மக்களிடம்தான் உறவாடியிருந்தார். அது எனக்கு அவரிடம் பிடித்த விஷயம்.
அம்பேத்கரைக் கூட கடவுள் என்று சொல்கிறார்கள். அதைப் போலத்தான் ஏசுவும். அவர் கருத்துக்கள் மூலம் எனக்கொரு முன்னுதாரணமாக இருக்கிறார். அதுவும் இல்லாமல் ஏசு எனக்கு முதலில் கடவுளாகத்தான் அறிமுகமானார். கடவுள் நம்ம சக்திக்கு அப்பாற்பட்டது என்னும் போது, என் சக்தியை ஊக்கப்படுத்துவதையும் நான் கடவுள் என்று சொல்கிறேன்.

ஏசு வேண்டும்; ஆனால் மதம் வேண்டாம் என்றால் எப்படி?
இல்லை. நீங்க ஏசுவை மதத்துக்குள்ள சிறை வச்சிருக்கீங்க. நான் மதத்துக்குள் இருக்கிற ஏசுவைப் பற்றியே பேசவில்லை. எசு என்றாலே மதம்தான் என்று நீங்கள் முடிவு செய்யக்கூடாது. அதைப்போல, ஏசு ஆரம்பித்தது மதம் இல்லை. அது ஒரு இயக்கம். இப்ப இருக்கிற மதவாதிகள். ஏசுவை அவர்களுக்கு ஏற்ற மாதிரி பயன்படுத்திக் கொண்டு அவருடைய புரட்சிகரமான விஷயங்களை மக்களிடம் காட்டுவது இல்லை. வரலாற்றில் ஏசுன்னு ஒரு மனிதர் பிறந்து புரட்சிகரமாக வாழ்ந்திருக்கிறார். அவருடைய கருத்துகள் எனக்குப் பிடிக்கிறது. ஆனால், அவரை எனக்கு கடவுளாகக் காட்டினார்கள். எனக்கு ஏசு யார், மதம் என்ன, போதனைகள் என்ன என்று நன்றாகவே தெரியும். நான் தெளிவாக இருக்கிறேன்.

கீழே இருக்கிற மக்களுக்கு ஒரு நம்பிக்கை தேவைப்படுகிறது. ஏசு வேற, மதம் வேற என்கிற இதே கருத்தை நானும் மக்களிடம் வைத்திருக்கிறேன். அதை அவர்களால் தாங்கிக்க முடியவே இல்லை. அவங்களுக்கு அடிப்படையாக இருக்கிற ஒன்றை உடைச்சிட்டு அதுக்கு மாற்று என்ன கொடுக்கிறீங்க. அவங்களோட நம்பிக்கைகள் சில ஆழமானது; உணர்வுப்பூர்வமானது. அதையெல்லாம் உடனடியாக உடைக்க முடியாது. உடைக்கவும் கூடாது.

பெண்களுக்கான இடஒதுக்கீடு உள்ஒதுக்கீடுன்னு பேசினாலும் அரசியலில் அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லையே?

பொதுவாக இவர்களுக்குப் பெண்கள் வெளியில் வரக்கூடாது. அதுவும் தலித் பெண்கள் இருக்கிற இடமே தெரியக்கூடாது. நியாயப்படிப் பார்த்தால், பெண்களுக்கு 50 சதவிகிதமே கொடுக்க வேண்டும். 33 சதவிகித இடஒதுக்கீடு கொடுக்கும் போது, தலித் பெண்களுக்கான உள் ஒதுக்கீடு கண்டிப்பாகத் தேவை. அரசு, தலித் மக்களைக் கண்டு கொள்வது இல்லை. நாம் அதற்கெல்லாம் பயந்துக்கிட்டு ஒதுங்கக் கூடாது. நமக்கு நாமே பாதுகாப்பை எப்படி அமைத்துக் கொள்வது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

******

நன்றி : தலித் முரசு
flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்