Jul 8, 2010

விகாசம் - சுந்தர ராமசாமி

அம்மா கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாள். நான் கட்டிலை ஒட்டிக் கீழே படுத்துக்கொண்டிருந்தேன். பிந்தி எழுந்திருப்பதை நானும் அம்மாவும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தோம். நாங்கள் சிறிது போராடிப் பெற்றிருந்த உரிமை இது. சூரியோதயத்திற்கு முன் குளியலை முடித்து விடும் தர்மத்தை யுகாந்திரங்களாகக் காப்பாற்றி வரும் குடும்பம். நாங்களோ நோயாளிகள். அம்மாவுக்கு ஆஸ்துமா. எனக்கு மூட்டுவலி. இரண்டுமே காலை உபாதைகள் கொண்டவை.
sura 12 குதிரை பிடரியை உதறும் மணிச்சத்தம் கேட்டது. வண்டியைப் பூட்டியாயிற்று. அப்படி என்றால் அப்பா கடைச் சாவிக்கொத்தை எடுத்துக்கொண்டுவிட்டார் என்று அர்த்தம். கடிகாரம் எட்டரையை நெருங்கிவிட்டது என்றும் அர்த்தம். இனி செருப்பு அணிதல். கிரீச் கிரீச். படி இறங்கியதும் குடையைப் படக்கென்று ஒரு தடவை திறந்து மூடல். குடையின் அன்றாட ஆரோக்கிய சோதனை அது.
கதவு லேசாகத் திறந்தது. இடைவெளியில் பாய்ந்த சூரிய ஒளி கண்ணாடிக்குழாய் போல் உருப்பெற்று உயர்ந்தது. ஒளித்தூணில் தூசி சுழல்கிறது. அப்பா! கண்ணா, ஒரு கண், பாதி விபூதிப் பூச்சு, சந்தனப்பொட்டு, அதற்குமேல் குங்குமப்பொட்டு.
“டேய் அம்பி, எழுந்திரு” என்றார் அப்பா.
நான் கண்களை மூடிக்கொண்டேன். ஆழ்ந்த நித்திரைக்கு வசப்பட்டுவிட்டதுபோல் அசையாமல் கிடந்தேன்.
“டேய் எழுந்திருடா தடியா. அப்பா கூப்பிடறார்” என்றாள் அம்மா.
ஓரக்கண்ணால் அப்பா முகத்தைப் பார்த்தேன். அது அன்பாக இருந்தது. மிருதுவாக இருந்தது. கடுமையான தூக்கத்தைத் தகர்த்துக் கொண்டு வெளிப்படும் பாவனையில் கண்களைத் திறந்தேன்.
”டேய், குளிச்சு சாப்பிட்டுட்டு ஆனைப்பாலம் போ” என்றார் அப்பா. “போய் ராவுத்தரைக் கையோட கடைக்குக் கூட்டிக்கொண்டு வந்துடு. நான் போய் வண்டி அனுப்பறேன்” என்றார்.
நான் அப்பா முகத்தையும் அம்மா முகத்தையும் மாறி மாறிப் பார்த்தேன். கடையில் முன் தினம் ராவுத்தருக்கும் அப்பாவுக்கும் நடந்த மோதலைப்பற்றி அம்மாவிடம் சொல்லியிருந்தேன். “அவர் இல்லாம உங்களுக்கு முடியுமா முடியாதா?” என்று கேட்டாள் அம்மா. “எத்தனை வருஷமாச்சு இந்தக் கூத்து” என்றாள். “விலகறதும் சேத்துக்கறதும்” என்றாள்.
அப்பாவின் முகம் சிவந்தது. மேலும் சிவந்தால் மூக்கு நுனியில் ரத்தம் கசிந்துவிடும் என்று தோன்றிற்று.
“ஓணம் வர்றது... நீ கடைக்கு வந்து பில்போடு” என்றார் அப்பா. கோபத்தின் உக்கிரத்தில் உதடுகள் கோணி வலித்துக் காட்டுவதுபோல் வார்த்தைகள் தேய்ந்தன.
“இந்த லோகத்திலே ராவுத்தர் ஒருத்தர்தான் பில்போடத் தெரிஞ்சவரா?” என்றாள் அம்மா.
”வாயை மூடு” என்று கத்தினார் அப்பா. சடேரேன்று என்னைப் பார்க்கத் திரும்பிக்கொண்டே, “எழுந்திருடா” என்று ஒரு அதட்டல் போட்டார். நான் படக்கென்று எழுந்திருந்து வில் மாதிரி நின்றேன். “போ, நான் சொன்ன மாதிரி செய்” என்றார். என் காலில் கட்டியிருக்கும் சக்கரத்தை யாரோ இழுத்ததுபோல் வேகமாக வெளியே நகர்ந்தேன்.
குதிரைவண்டி கிளம்பும் சத்தம் வாசலில் கேட்டது.
காலைக் காரியங்களைப் பம்பரமாகச் செய்து முடித்தேன். என்ன சுறுசுறுப்பு! வழக்கத்திற்கு மாறாக அரை நிஜாருக்குமேல் வேட்டியைக் கட்டி, முழுக்கைச் சட்டையும் அணிந்து கொண்டேன். இரண்டும் சேர்ந்து சற்றுத் தெம்பாக என்னைப் பேசவைக்கும் என்று ஒரு நம்பிக்கை. அப்பாமீது வழக்கமாக வரும் கோபம் அன்று வரவில்லை. வருத்தமும் இல்லை. கொஞ்சம் பிரியம்கூட கசிவது போல் இருந்தது. பாவம், ஒரு இக்கட்டில் மாட்டிக்கொண்டுவிட்டார். முன்கோபத்தில் முறித்துப் பேசிவிட்டார் ராவுத்தரிடம். சிறிது சாந்தம் கொண்டிருக்கலாமே என்று சொல்லலாம். அவர் ஒரு முன்கோபி என்றால் சிறிது சாந்தம் கொண்டிருக்கலாம். முன்கோபமே அவர் என்றால் எப்படி சாந்தம் கொள்ள முடியும்? இந்த மனப்பின்னல் தந்த குதூகலத்தில், அம்மா முன் சென்று அவள் முகத்தைப் பார்த்து, “முன் கோபமே அவர் என்றால் எப்படி சாந்தம் கொள்ள முடியும்?” என்று கேட்டேன். அம்மா சிரித்தாள். மறுகணம் சடக்கென்று முகத்தைக் கடுமையாக்கிக்கொண்டு, “ரொம்ப இலட்சணம்தான். புத்தியுள்ள பிள்ளை என்றால் ராவுத்தரைக் கூட்டிக் கொண்டு கடைக்குப் போ” என்றாள். தன்நெஞ்சின் மீது வலது கையை வைத்துக்கொண்டு “அவர் என்ன பேசியிருந்தாலும் அதற்காக நான் வருத்தப்படறேன்னு சொல்லு” என்றாள்.
நான் போய் குதிரைவண்டியில் ஏறிக்கொண்டேன்.
ஓணம் விற்பனையை ராவுத்தர் இல்லாமல் சமாளிக்க முடியாது என்றுதான் எனக்கும் தோன்றிற்று. அவர் மாதிரி யாரால் கணக்குப் போடமுடியும்? மனக்கணக்கில் ஒரு மின்னல் பொறி அவர். அவரும் சரி, வரிசையாக ஐந்து பேர் உட்கார்ந்து காகிதத்தில் கூட்டிக் கழிப்பதும் சரி. மனித மூளையா அது! அமானுஷ்யம். பில்போடும் பகுதியில் கூடிநிற்கும் வாடிக்கையாளர்கள் பார்த்து வியக்கும் அமானுஷ்யம். ஆச்சரியத்தில் விக்கித்துப் போய் “மனுஷ ஜென்மம்தானா இது!” என்று பலர் வாய்விட்டு கேட்டிருக்கிறார்கள். “காதாலே கேட்டேஇப்படி போடுறாரே மனுஷன்; கண்ணால் பார்க்க முடிஞ்சா எப்படிப் போடுவாரோ?” என்று கேட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் ஸ்கூல் படிப்பு மூணாம் கிளாஸ். கடையைப் பெருக்கிப் பாய் விரித்து தண்ணீர் வைக்கும் கோமதியைவிட வருஷம் படிப்புக் குறைவு.
அன்று இதமாகத்தான் பேச்சுத் தொடங்கிற்று. “கடனை இப்படி மேலே ஏத்திண்டே போனா எப்படி ராவுத்தர்? தொகை ஏகமா ஏறிப்போச்சே” என்றார் அப்பா. தனக்கு வேண்டிய துணிகளையெல்லாம் பொறுக்கித் தன்பக்கத்தில் குவித்து வைத்துக்கொண்டுவிட்டு அதன்பின் கடன் கேட்டது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை என்று தோன்றிற்று. “என்னச் செய்யச் சொல்றீங்க ஐயா? வீடு முழுக்க பொட்டைக. மகன்க கூறில்லே. மாப்பிள்ளைக கூறில்லே. மக நாலு. மருமக நாலு. பேத்திக எட்டு. பேரன்க எட்டு. எத்தனை ஆச்சு? ஆளுக்கொண்ணு எடுத்தாலும் தொகை ஏறிப் போகுதே” என்றார் ராவுத்தர். ராவுத்தரின் முகத்தை அப்பா கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். ‘இளக்காரம் கொஞ்சம் கூடிப்போச்சு. அத மட்டுப்படுத்திக் காட்டறேன் இப்போ’ என்று அவர் தனக்குள் கறுவிக்கொள்வதுபோல் இருந்தது. “கோலப்பா, துணிக்கு பில் போட்டுக் கட்டித் தந்துரு” என்றார் ராவுத்தர். தான் சம்மதம் தருவதற்குமுன் அவரே எடுத்துக் கொண்டு விடுவதா? அப்பாவின் முகம் சிவந்தது. “இந்தத் தவா கடன் தர சந்தர்ப்பம் இல்லை” என்றார் அப்பா. குரலில் கடுமை ஏறி இருந்தது. “அப்படீன்னா நம்ம உறவு வேண்டாம்னுதானே ஜையா சொல்றீங்க? குட்டீ, என்னெ ஊட்ல கொண்டுபோய் சேர்த்துடு” என்று சொல்லிக்கொண்டே எழுந்திருந்தார் ராவுத்தர். கோமதி, ராவுத்தரின் வலது கையைத் தனது இடது தோளில் தூக்கி வைத்துக்கொண்டது. படி இறங்கிற்று. ராவுத்தரும் படியிறங்கினார். கடை சாத்தும்போது ஒவ்வொரு நாளும் ‘வரேன் ஐயா’ என்று அப்பா இருக்கும் திசையைப் பார்த்து ராவுத்தர் கும்பிடுவது வழக்கம். அன்று அவர் விடை பெற்றுக் கொள்ளவில்லை. அதாவது விடைபெற்றுக் கொண்டுவிட்டார்.
கோமதியைக் கூட்டிக்கொண்டு ராவுத்தர் வீட்டுக்குப் போகலாம் என்று நான் யோசித்தேன். அப்படிச்  செய்தால் ராவுத்தர் மனதில் இருக்கும் வெக்கை சற்றுத் தணியும் என்று எனக்குத் தோன்றிற்று. ஆனால் கோமதி வீட்டில் இல்லை. “ராவுத்தர் வரலேன்னு சொல்லிட்டாரு. இப்பத்தான் போகுது கோமதி கடைக்கு” என்றாள் அவள் தாயார்.
தோப்பைக் குறுக்காகத் தாண்டி, சந்து வழியாக நுழைந்து, ராவுத்தரின் வீட்டு முன்னால் போய் நின்றேன். ஓட்டு வீடு. தணிந்த கூரை. முன் முற்றத்தில் வலதுபக்கம் கிணறு. காரைப் பூச்சு இல்லாத கைப்பிடிச் சுவர் இடிந்து கிடந்தது. சுவரிலும் கிணற்றைச்சுற்றித் தளத்திலும் வெல்வெட் பாசி புசுபுசுவென்று. வீட்டின்முன் வெட்டுக் கல் படிகள். நிலையில் சாக்கு விரிப்புத் தொங்கிக் கொண்டிருந்தது.
“அம்பி வந்திருக்கேன்” என்றேன் நான் உரக்க.
ஒரு சிறுமி வெளிப்பட்டாள். இரட்டையில் மற்றொன்று என்று தோன்றிய இன்னொரு சிறுமியும் அவள் பின்னால் வந்தாள். உள்ளேயிருந்து “யாரம்மா?” என்று ராவுத்தரின் குரல் கேட்டது.
“நான்தான் அம்பி” என்றேன்.
“வா, வா” என்றார் ராவுத்தர். உற்சாகத்தில் கொப்பளிக்கும் குரல்.
நான் படுதாவைத் தள்ளிக்கொண்டே உள்ளே போனேன். சாணி மெழுகிய தரையில் வஸ்தாத் மாதிரி ராவுத்தர் சப்பணம் கூட்டி உட்கார்ந்து கொண்டிருந்தார். இரு கரங்களும் அந்தரத்தில் உயர்ந்திருந்தன. “வா, வா” என்று வாய் அரற்றிக்கொண்டே இருந்தது. நான் அவர் முன்னால் போய் முட்டுக்குத்தி நின்றேன். துழாவிய கரங்கள் என் மீது பட்டன. கண்கள் மலங்க மலங்க விழித்தன. என்றோ இழந்து விட்ட ஜீவ ஒளியை மீண்டும் வரவழைக்க அவை துடிப்பதுபோல் இருந்தன. என் தோள்பட்டையை அழுத்தி என்னைத் தன்பக்கத்தில் இழுத்து உட்கார வைத்துக்கொண்டார் அவர். உணர்ச்சி வசப்பட்டதில் அதிகம் நெகிழ்ந்துவிட்டது போல் இருந்தது.
“இன்னிக்கு என்ன, வேட்டி கட்டிக்கிட்டாப்ல!” என்றார்.
“தோணிச்சு” என்றேன்.
“என்ன கரை?”
“குண்டஞ்சி.”
“ஐயர் மாதிரியே. பாக்கவும் ஐயர் மாதிரியே இருக்கேன்னு கடைப்பையன்க சொல்வானுக. எனக்குத்தான் கொடுத்து வைக்கல பாக்க.” இப்படிச் சொல்லிவிட்டு என் கன்னம், கழுத்தும், நாடி, வாய், மூக்கு, கண், நெற்றி, காது எல்லாம் தடவிப் பார்த்தார். “எல்லாம் கணக்கா வச்சிருக்கான்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.
வந்த விஷயத்தைச் சொல்ல இதுதான் சந்தர்ப்பம் என்று தோன்றிற்று. ஆனால், கண்ணுக்குத் தெரியாத ஒரு கை மென்னியைப் பிடித்துக்கொண்டிருக்கிறது. நாக்கு புரள மறுக்கிறது.
“அம்மா...” என்று பேச்சைத் தொடங்கினேன்.
ராவுத்தர் குறுக்கிட்டு, “எப்படி இருக்கு அவங்களுக்கு உடம்பு?” என்றார்.
”அப்படியேதான்” என்றேன்.
”நம்மட்ட தூதுவளை கண்டங்கத்திரி லேகியம் இருக்கு. இழுப்புக்கு அதுக்கு மேலே மருந்து இல்லே. ஐயருக்கு புட்டி மேலே இங்கிலீஷ்ல எழுதியிருக்கணும். நம்மகிட்ட இங்கிலீஷ் இல்லே. மருந்துதான் இருக்கு” என்று சொல்லி விட்டுப் பெரிதாகச் சிரித்தார்.
விஷயத்தைச் சொல்ல இதுவும் நல்ல தருணம்.
“அம்மா உங்களைக் கடைக்குக் கூட்டிண்டு போகச் சொன்னா. அப்பா ஏதாவது முன்பின்னா பேசியிருந்தாலும் அதுக்காக அம்மா வருத்தப்படறதாகச் சொல்லச் சொன்னா. தப்பா எடுத்துக்கப்படாதாம். தட்டப்படாதுன்னும் சொன்னா” என்றேன்.
ராவுத்தரின் முகம் பரவசத்தில் மலர்ந்தது. இரு கரங்களையும் மேலே உயர்த்தி, “தாயே நீ பெரிய மனுஷி” என்று கூவினார். “எழுந்திரு, இப்பவே போறோம் கடைக்கு” என்றார்.
அந்த வருடம் ஓணம் விற்பனை நன்றாக இருந்தது. படு உற்சாகமாக இருந்தார் ராவுத்தர். தன்னைச் சுற்றி முண்டி மோதும் கடைப் பையன்களை எப்போதும்போல் அனாயாசமாகச் சமாளித்தார். அபிமன்யு தன்னந்தனியாகப் போரிட்டது போல் இருந்தது. துணியின் அளவும் விலையும் காதில் விழுந்த மறுகணம் விடை சொல்கிறது வாய். என்ன பொறி மூளைக்குள் இருந்ததோ அந்த தெய்வத்துக்குத்தான் வெளிச்சம். விடை சொல்ல ஒரு கணம்கூடத் தேவையில்லாத அந்தப் பொறி என்ன பொறியோ? பதினாறு அயிட்டங்களுக்குப் பெருக்கி வரிசையாக விடை சொல்லி விட்டு, “அயிட்டம் பதினாறு, கூட்டுத்தொகை ரூபா 1414, பைசா 25” என்று கூறும் அந்தப் பொறியை மனித மூளை என்று எப்படிச் சொல்ல முடியும்? அவ்வளவும் கரும்பலகையில் எழுதிப்போட்டிருந்தால்கூடப் பார்த்துக்கூட்ட எனக்கு அரை மணி நேரம் பிடிக்கும். இங்கோ விடை மின்னல் அடிக்கிறது. ஒரு பிசகு விழுந்ததில்லை அன்று வரையிலும்.
அம்மா சொல்லியிருந்தாள். முன்னெல்லாம் அப்பா இரவில் கண் விழித்து ராவுத்தரின் விடைகளைச் சரி பார்ப்பாராம். “துள்ளல் கொஞ்சம் கூடிப்போச்சு அந்த மனுஷனுக்கு. ரெண்டு தப்பைக் கண்டுபிடிச்சு ஒரு தட்டுத் தட்டி வைக்கணும்” என்பாராம். ஆனால், இரவில் கண் விழித்ததுதான் மிச்சம். ஒரு தவறைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை அப்பாவால்.
ஒரு நாள் ஓர் ஒற்றைக்காளை வண்டி கடை முன்னால் வந்து நின்றது. முன்னும் பின்னும் வெள்ளைப் படுதா போட்டு மூடிக் கட்டிய வண்டி. வண்டிக்குள் இருந்து ‘ஓ’வென்று பெண்களின் ஓலம். குஞ்சு குளுவான்களின் கத்தல்கள்.
“நம்ம வூட்டுப் பொட்டைப் பட்டாளம் இல்லா வந்திருக்கு” என்றார் ராவுத்தர்.
ராவுத்தரின் வீடு ஏலத்திற்கு வந்து விட்டதாம்! சாமான்களைத் தூக்கி வெளியே வீசுகிறானாம் அமீனா.
“எனக்கு என்ன செய்யணும்னு தெரியலியே, ஆண்டவ” என்று கதறினார் ராவுத்தர்.
குழந்தை மாதிரி அழத் தொடங்கி விட்டார். அப்படி அவர் அழுது கொண்டிருந்தபோது, கடைச் சிப்பந்தி கோலப்பன் பில்லுடன் வந்து, “13 ரூபா 45 பைசா; 45 மீட்டர் 70 சென்டி மீட்டர்” என்றான். அழுகையை நிறுத்தி விட்டு “எழுதிக்கோ, 614 ரூபா 66 பைசா” என்றார் ராவுத்தர். இப்படிச் சொல்லிவிட்டு அப்பா இருந்த கல்லாப் பெட்டி பக்கம் திரும்பி, “ஐயா, வட்டியும் முதலுமா ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் கோர்ட்டிலே கட்டணுமே.... நான் எங்கே போவேன் பணத்துக்கு” என்று கதறினார்.
ராவுத்தரும் அப்பாவும் குதிரைவண்டியில் வக்கீலைப் பார்க்கச்  சென்றார்கள்.
அடுத்த நாள் ராவுத்தர் கடைக்கு வரவில்லை. செட்டியார் ஜவுளிக்கடையில் அவர் பில் சொல்லிக் கொண்டிருப்பதைத் தன் கண்ணால் கண்டதாகக் கோலப்பன் அப்பாவிடம் சொன்னான்.
“என்ன அநியாயம்! இப்பத்தானே அவருக்காக கோர்ட்ல பணத்தைக் கட்டிட்டு வரேன். காலை வாரிவிட்டுட்டாரே நன்றி கெட்ட மனுஷன்” என்று கத்தினார் அப்பா.
கடைக் கோலப்பனுக்கு மிதமிஞ்சிய கோபம் வந்துவிட்டது. “கணக்குப் போடத் தெரியுமே தவிர, அறிவுகெட்ட ஜென்மமில்லே அது” என்றான். “இதோ போய்த் தரதரன்னு இளுத்துக்கிட்டு வாறேன்” என்று சைக்கிளில் ஏறிச் சென்றான்.
அப்பா சோர்ந்து தரையில் உட்கார்ந்து விட்டார். அவர் வாய் புலம்பத் தொடங்கிவிட்டது. “ரொம்பப் பொல்லாதது இந்த லோகம்” என்றார். “பெத்த தாயை நம்ப முடியாது இந்தக் காலத்திலே” என்றார்.
சிறிது நேரத்தில் கோலப்பன் திரும்பிவந்தான். சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் ராவுத்தர்!
ராவுத்தரைக் கல்லா முன்னால் கொண்டுவந்து நிறுத்தினான் கோலப்பான்.
“புத்தி மோசம் போயிட்டேன் ஐயா” என்றார் ராவுத்தர் இரு கைகளையும் கூப்பியபடி.
“உம்ம கொட்டம் அடங்கற காலம் வரும்” என்று அப்பா கத்தினார்.
“அப்படிச் சொல்லாதீங்க ஐயா.... வேலைக்கு வா, நான் பணம் கட்டறேன்னு சொன்னார் செட்டியார். புத்தி மோசம் போயிட்டேன் ஐயா” என்றார் ராவுத்தர்.
“உம்ம கொட்டம் அடங்கற காலம் வரும்” என்று மீண்டும் சொன்னார் அப்பா.
ஆச்சரியம்தான், அப்பாவின் வாக்குப் பலித்ததுபோல் காரியம் நடந்தது. அந்தத் தடவை கொள்முதலுக்கு பம்பாய் போய்விட்டு வந்திருந்த அப்பா, ஒரு சிறு மிஷினை அம்மாவிடம் காட்டினார். “இது கணக்குப் போடும்” என்றார்.
“மிஷினா?”
“போடும்” என்றார் அப்பா.
அம்மா ஒரு கணக்குச் சொன்னாள். அப்பா பித்தான்களை அழுத்தினார். மிஷின் விடை சொல்லிற்று.
நான் காகிதத்தை எடுத்துப் பெருக்கிப் பார்த்தேன். “விடை சரிதான் அம்மா” என்று கத்தினேன்.
“ராவுத்தர் மூளையை மிஷினா பண்ணிட்டானா?” என்று கேட்டாள் அம்மா.
நான் அன்று பூராவும் அதை வைத்து அளைந்து கொண்டே இருந்தேன். இரவு தூங்கும்போது கூட பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்கினேன். ஆகக் கஷ்டமான கணக்குகளை எல்லாம் அதற்குப் போட்டேன். ஒவ்வொன்றுக்கும் விடை சரியாகச் சொல்லிற்று அது. கோமதி சொன்னது நினைவுக்கு வந்தது. ‘தாத்தா எப்படி நிமிட்ல போடறீங்க கணக்கை?’ என்று கேட்டதாம் கோமதி. ‘மூளையில் மூணு நரம்பு அதிகப்படியாக இருக்கு’ என்றாராம் ராவுத்தர். அந்த அதிகப்படியான நரம்புகள் எப்படி இந்த மிஷினுக்குள் வந்தன? ஆச்சரியத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கோமதியிடம் கொண்டுபோய்க் காட்டினேன். கோமதியும் மாறிமாறிக் கணக்குப் போட்டுப் பார்த்தது. “எனக்கும் சரியா வருதே” என்றது. “தாத்தாவை விட இது பொல்லாதது” என்றது.
ஒருநாள் மாலை. ராவுத்தர் விடை சொல்லிக் கொண்டிருந்த நேரம். கோமதி பாவாடையின்மீது கால்குலேட்டரை வைத்து விடைகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தது. தன்னையறியாமல் ஒரு தடவை “சரிதான் தாத்தா” என்றது. “நீயா சொல்றது சரின்னு?” என்று கேட்டார் ராவுத்தர். “கணக்குப் போட்டுத்தான் சொல்றேன் தாத்தா” என்றது கோமதி. “இப்போ போடறேன் சொல்லு” என்று ராவுத்தர் ஒரு கணக்குப் போட்டார். கோமதி விடை சொல்லிற்று. இன்னொரு கணக்கு. அதற்கும் விடை சொல்லிற்று.
வெளிறிப் போய்விட்டது ராவுத்தர் முகம்!
“ஆண்டவனே, இந்த மூட ஜென்மத்துக்கு ஒரு சூச்சுமமும் விளங்கலியே” என்று கதறினார் ராவுத்தர்.
“நான் போடலே தாத்தா. இந்த மிஷின் போடுது” என்றது கோமதி. கால்குலேட்டரைத் தாத்தாவின் கையில் திணித்தது.
கால்குலேட்டரை வாங்கிய தாத்தாவின் கை நடுங்கிற்று. விரல்கள் பதறின. அதை முன்னும் பின்னும் தடவிப் பார்த்தார். “இதா கணக்குப் போடுது?” என்று திரும்பத் திரும்பக் கேட்டார். “ஆமா” என்றது கோமதி. “நீயே வச்சுக்கோ” என்று அதைத் திருப்பிக் கொடுத்தார்.
அதன்பின் அன்று ராவுத்தரால் பேசமுடியவில்லை. அவருக்கு வாயைக் கெட்டிவிட்டது. உடலசைவுகூட இல்லை. ஸ்தம்பித்துப் போய் சுவரில் சாய்ந்து கொண்டிருந்தார். அன்று நானும் கோமதியும் தான் மாறிமாறி பில் போட்டோம். நீண்ட நேரம் கழித்து தாத்தாவின் தொடையை நோண்டி, “ஏன் தாத்தா பேசமாட்டேங்குறீங்க?” என்றது கோமதி. அதற்கும் அவர் பதில் சொல்லவில்லை.
நடைப்பிணம் போல் ஒவ்வொரு நாளும்  ராவுத்தர் கடைக்கு வந்து போய்க்கொண்டிருந்தார். சிரிப்பு, சந்தோஷம், இடக்கு, கிண்டல், குத்தல் எல்லாம் அவரைவிட்டு உதிர்ந்து போய் விட்டிருந்தன. குரல் இறங்கிப் போய்விட்டது. உடம்புகூட சற்று இளைத்ததுபோல் இருந்தது.
அப்பா அவரை பில் போடச் சொல்லவே இல்லை.
ஒருநாள் பிற்பகல் நேரம். கடை கலகலப்பாக இருந்தது. முருகன் வெட்டியிருந்த துணிகளுக்கு நான் கணக்குப் போட்டுச் சொல்லிக் கொண்டிருந்தேன். நடுவில் “இந்தாப்பா நில்லு” என்று குறுக்கிட்டார் ராவுத்தர்.
முருகன் சொல்வதை நிறுத்திவிட்டு ராவுத்தர் முகத்தைப் பார்த்தான்.
“பாப்ளின் என்ன விலை சொன்னே?”
“மீட்டர் 15 ரூபா 10 பைசா.”
“தப்பு. பீஸை எடுத்துப்பாரு. 16 ரூபா 10 பைசா.”
அப்பா எழுந்திருந்து ராவுத்தர் பக்கம் வந்தார்.
பீஸைப் பார்த்த முருகன் முகம் தொங்கிவிட்டது. “நீங்க சொன்னதுதான் சரி” என்றான்.
“பத்து மீட்டர் கொடுத்திருக்கே. பத்து ரூபாய் போயிருக்குமே. ஐயர் முதல அள்ளித் தெருவுல கொட்டவா வந்திருக்கே?” என்று அதட்டினார் ராவுத்தர்.
”உங்களுக்கு விலை தெரியுமா?” என்று கேட்டார் அப்பா.
“ஒரு ஞாபகம்தான் ஐயா” என்றார்.
“எல்லாத்துக்கும்?” என்று கேட்டார் அப்பா.
“ஆண்டவன் சித்தம்” என்றார் ராவுத்தர்.
“ஆக சின்ன டவல் என்ன விலை?” என்று கேட்டார்.
“4 ரூபா 10 பைசா.”
“ஆகப் பெரிசு?” என்று
“36 ரூபா 40 பைசா.”
அப்பா கேட்டுக்கொண்டே போனார்.
பதில் வந்துகொண்டே இருந்தது.
ஆச்சரியத்தில் விரிந்து போயிற்று அப்பாவின் முகம். நம்ப முடியவில்லை அவரால். நீண்ட பெருமூச்சு விட்டார். பெருமூச்சுக்களை அடக்க முடியவில்லை.
“அப்படீன்னா ஒண்ணு செய்யும். பில் சொல்லறச்சே விலை சரியாயிருக்கான்னு பாத்துக்கும்” என்றார் அப்பா.
“முடிஞ்ச வரையிலும் பார்ப்பேன் ஐயா” என்றார் ராவுத்தர். இப்படிச் சொல்லிவிட்டுத் தலையைத் தூக்கி “ஐயா, மின்சாரக் கட்டணம் கட்டிட்டேளா? இன்னிக்குத் தானே கடேசி நாள்” என்றார்.
“ஐயோ, கட்டலியே!” என்று சொன்ன அப்பா, “கோலப்பா” என்று கூப்பிட்டார்.
“இன்னிக்கு அவன் வரலியே ஐயா” என்றார் ராவுத்தர்.
“உமக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார் அப்பா.
“ஒவ்வொருத்தருக்கும் ஒரு குரல் இருக்கு. ஒரு மணம் இருக்கு. இன்னிக்கு அவன் குரலும் இல்லே, மணமும் இல்லே.” இப்படிச் சொல்லிவிட்டு, “முருகா” என்று கூப்பிட்டார் அவர்.
முருகன் வந்தான்.
“நேத்து இவன் ஒரு வாடிக்கைக்கு ரெட்டை வேட்டி இல்லைன்னு சொன்னான். கண்டியுங்க ஐயா” என்றார் ராவுத்தர்.
“என்ன சொல்றீர்னு புரியலையே” என்றார் அப்பா.
“ஐயா, பத்து வேஷ்டிக்கு விலை போட்டு வச்சீங்க. ஏளு வேட்டிதானே வித்திருக்கு. மீதி மூணு இருக்கணுமில்லே?” என்றார்.
அப்பா வேஷ்டியை எடுத்துக்கொண்டு வரச் சொன்னார்.
மூன்று சரியாக இருந்தது.
ராவுத்தர் தன் குரலைச் சற்றுக் கோணலாக மாற்றிக் கொண்டு, “முருகப் பெருமானே, இருக்கறத இல்லைன்னு சொல்லி ஆளை நைசா அனுப்பி வைக்கிறீரே... வியாபாரத்துக்கு உக்காந்து இருக்கோமா, இல்ல தர்மத்துக்கு உக்காந்து இருக்கோமா?” என்று கேட்டார்.
அன்று மாலை பில்போடும் பகுதியிலிருந்து அப்பாவின் பக்கம் போய் உட்கார்ந்துகொண்டார் ராவுத்தர்.
”உங்க பக்கத்துலே இருந்தா இன்னும் கொஞ்சம் உபயோகமா இருப்பேன் ஐயா” என்றார். அதன்பின் “உங்க மின்விசிறியே சித்த கூட்டி வைச்சா அடியேனுக்கும் கொஞ்சம் காத்து வரும்” என்றார்.
அப்பா மின்விசிறியைக் கூட்டிவைக்கச் சொன்னார்.
“வருமானவரி முன்பணம் கட்ட நாள் நெருங்குதே ஐயா. ஆடிட்டரெ பாக்க வேண்டாமா?” என்று கேட்டார் ராவுத்தர்.
“பாக்கணும்” என்றார் அப்பா.
கடை சாத்தும் நேரம்.
”ஐயா, அம்மாவுக்கு மருந்து வாங்கணும்னு சொன்னீங்களே... வாங்கிட்டீங்களா?” என்று கேட்டார்.
“வாங்கறேன்” என்றார்.
சாத்திய கடையின் பூட்டுக்களை இழுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் அப்பா.
“ஐயா, தாயாருக்கு திதி வருதுன்னு சொல்லிட்டிருந்தீங்களே. முருகன் கிட்ட சொன்னா போற பாதையிலே புரோகிதர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுவானில்லே” என்றார்.
“சொல்றேன்” என்றார் அப்பா.
கடைச் சிப்பந்திகள் ஒவ்வொருவராகக் கலைந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
கோமதி, தாத்தாவின் கையைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு நகரத் தொடங்கிற்று. “தாத்தா, இனிமே கணக்குப் போட வரவே மாட்டீர்களா?” என்று கேட்டது அது.
“இப்போ இப்ராஹிம் ஹசன் ராவுத்தர் கணக்கு மிஷின் இல்லே. மானேஜர். ஆண்டவன் சித்தம்” என்றார் ராவுத்தர்.
நன்றி: இந்தியா டுடே, 1990
*********
தட்டச்சு : சென்ஷி
flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

10 கருத்துகள்:

Vidhoosh on July 9, 2010 at 4:01 PM said...

:) kalakkal. vaasikka koduththathukku nandrikal.

தமிழ்ச் செல்வன்ஜீ on July 15, 2010 at 8:49 PM said...

naan sundararamasamiyai athigam vasithathu illai -aanal intha kathai padiththapinbu avarai athigam vasikkum aarvam erpattullathu nandri

Unknown on January 7, 2011 at 3:06 PM said...

மிகவும் அருமையான கதை வாசிப்பதற்கு வாய்ப்பு அளித்தற்கு நன்றி

பரிசல்காரன் on December 26, 2011 at 7:24 PM said...

Enna Maadhiriyoru Ezuthu! Raatshasan!!

ஷேக்பரீத் on December 26, 2011 at 8:07 PM said...

பிரமித்தேன்... என்று கூறுவதையன்றி வேறெதுவும் எழுதத் தோணவில்லை.. பகிர்வுக்கு நன்றிகள்..

நான் மதன் on December 27, 2011 at 10:13 AM said...

அருமையான பதிவு வேற என்ன செல்லறது தெரியல

J.BANU HARUN on September 27, 2016 at 10:19 PM said...

amma...ithu kathaiyaa? izhuththukkattip pidikkuthu manasai...

Unknown on February 22, 2018 at 7:01 AM said...

என்ன அற்புதமான எழுத்து!

ranga on July 11, 2018 at 8:26 PM said...

டெக்னாலாஜி இன்னோவேஷனைப்பாத்து மனுஷனோட பயம், பதட்டம், தேவையான கவலை,பீதி என்ற நிலைகள் பொங்கி மிதக்கின்றன. ஆனால், டெக்னாலாஜியை மீறியது மேனேஜ்மென்ட் ஸ்கில்னுகிறத திரில்லோட ராவுத்தரை வைச்சு கண்கள் கலங்க முடிச்சது. சூப்பர் பினிஷ் .

I was reading these lines few times visually

“இதா கணக்குப் போடுது?” என்று திரும்பத் திரும்பக் கேட்டார். “ஆமா” என்றது கோமதி. “நீயே வச்சுக்கோ” என்று அதைத் திருப்பிக் கொடுத்தார்.

avanevan on April 28, 2023 at 8:58 PM said...

Classic the way the story unfolds before your eyes. Shri. Sundara Ramasamy has his own style of narrating events. Thanks so much for sharing.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்