கோபி கிருஷ்ணன்
இலக்கியச் சிந்தனை 1986ம் ஆண்டு சிறந்த சிறுகதை ஒன்றைத் தேர்வு செய்யும்படியாக கோபி கிருஷ்ணனைக் கேட்டுக்கொண்டபோது அவர் எனது சிறுகதையான தெருவின் சுபாவத்தைத் தேர்வு செய்திருந்தார். அந்தக் கதையைப் பற்றி தபால் கார்டு ஒன்றில் பாராட்டுக் கடிதம் ஒன்றும் எனக்கு எழுதியிருந்தார். அப்படித்தான் கோபி கிருஷ்ணனுக்கும் எனக்குமான உறவு துவங்கியது.
அதன் முன்னதாக கோபியின் கதையொன்றை கணையாழியில் வாசித்திருக்கிறேன். அவரது குறு நாவல் ஒன்றும் என்னுடைய குறுநாவல் ஒன்றோடு தி.ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தேர்வாகியிருந்தது. கோபியின் குறுநாவலை வாசித்தபோது அதன் பரிகாசமான குரலும், அன்றாட வாழ்வை அவர் காணும் விதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் யார் கோபிகிருஷ்ணன், எங்கேயிருக்கிறார் என்று நான் அதிகம் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை.
பின்னர் இனி இதழில் புயல் என்றொரு கோபியின் கதை வெளியாகியிருந்தது. அந்தக் கதையைப் பலமுறை படித்திருப்பேன். எதிர்பாராத ஒரு மழை நாளைப் பற்றியது கதை. கதையின் மையமாகபுயல் இருந்தபோதும் கதை மத்தியதர வர்க்கக் குடும்பம் ஒன்றில் நிகழ்கிறது. கதையை கோபி எழுதியுள்ள விதம் அற்புதமானது. குரலை உயர்த்தாமல் கதையின் வேகம் அதிகமாகிக்கொண்டே போகும். கதை முடியும்போது கதையின் மையம் புயல் அல்ல நமது அன்றாட வாழ்வின் நிலைகுலைவு என்பது புரியத்துவங்கும்.
அந்தக் கதையை வாசித்த நாளில் இருந்து கோபி கிருஷ்ணனைச் சந்திக்க வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். அவர் சென்னையில் வசிக்கிறார் என்ற விபரத்தைத் தவிர வேறு எதையும் அப்போது அறிந்துகொள்ள முடியவில்லை. பிறகு அவரது ஒவ்வாத உணர்வுகள் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. அதிலிருந்த கதைகளும் எனக்குப் பிடித்திருந்தன.
கோபி கிருஷ்ணனின் கதைகள் நகரவாழ்வின் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் மனிதர்களைப் பற்றியவை. குறிப்பாக வாழ்விடத்தில் அவர்கள் கொள்ளும் சிக்கல்கள், பிரச்சினைகள் அதன் ஊடாக வெளிப்படும் அதீத மனவோட்டங்கள் இவை அவரது கதைகளின் அடிநாதம். கோபி கதைகளை மிகச் சிறியதாகவே எழுதக்கூடியவர். நான்கு பக்க அளவிற்குள் பெரும்பான்மைக் கதைகள் முடிந்துவிடுகின்றன. ஆனால் இந்தக் கதைகள் நம்மைச் சுற்றிய சமூகவாழ்வைப் பிரதிபலிக்கக்கூடியவை. சினிமா, அரசியல், அதிகாரம், நகரவாழ்வின் வேகம் என்று பெருநகரின் பிரிக்கமுடியாத அம்சங்கள் அவரது கதைகளில் திரும்பத் திரும்ப எழுதப்பட்டுள்ளன.
கோபியின் கதாபாத்திரங்கள் எதிர்பாராத நிலைகுலைவைச் சந்திப்பவர்கள். அல்லது ஏதோவொரு குற்றபோதத்திற்குத் தன்னை ஒப்புக் கொடுத்துக்கொண்டவர்கள். எல்லாப் பிரச்சினைகளுக்குப் பிறகும் உலகின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். மனச்சிதைவு கொண்டவர்கள் என்று அறியப்பட்டு ஒதுக்கப்படுகின்றவர்கள் மீது அவரது பெரும்பான்மை கவனம் குவிகிறது. மனச்சிதைவின் பின்னால் உள்ள காரணங்களும் மனச்சிக்கல்களுக்கு, குடும்பம் என்ற அமைப்பு எவ்வளவு ஆதாரமாக உள்ளது என்பதையும் அவரது கதைகள் விவரிக்கின்றன.
1990களின் துவக்கத்தில் சென்னையில் சுற்றியலைந்த போது ஒருநாள் மதிய நேரத்தில் தி.நகர் கிருஷ்ணவேணி திரையரங்கம் அருகில் தற்செயலாக கோபி கிருஷ்ணன் கடந்து போவதைக் கண்டேன். அது கோபி கிருஷ்ணன்தானா என்று நிச்சயமாகத் தெரியாது. ஆனால் அவரது புகைப்படம் ஒன்றைக் கண்டிருக்கிறேன். ஆகவே அது கோபியாகத்தான் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் பின்னாடியே சென்றேன். அவர் பேருந்து நிலையத்தின் எதிரிலிருந்த டீக்கடையில் நின்று கொண்டு தேநீர் அருந்தினார்.
அருகில் சென்று நீங்கள் கோபி கிருஷ்ணன்தானே என்று கேட்டேன். ஆமாம் என்று தலையசைத்தார். நான் எஸ். ராமகிருஷ்ணன், கணையாழியில் எனது கதை வெளி வந்திருக்கிறது என்றதும் உடனே என் கைகளைப் பற்றிக் கொண்டு உற்சாகமாக நல்லா எழுதிட்டு வர்றீங்க நான் உங்க சிறுகதையை இலக்கியச் சிந்தனைக்காகத் தேர்ந்தெடுத்தேன். ஞாபகமிருக்கா என்று கேட்டார். பின்னர் இருவருமாகத் தேநீர் குடித்துவிட்டு அங்கேயே பேசிக் கொண்டிருந்தோம். பேருந்தின் இரைச்சல்களை மீறி எங்கள் பேச்சு தொடர்ந்தது.
கோபியின் பார்வை இடையிடையே என் பேச்சைக் கடந்து அருகில் இருந்த கடையின் ஓரமாக உட்கார்ந்திருந்த ஒரு மனிதன் மீது குவிந்து இருந்தது. அந்த மனிதன் கசக்கி எறியப்பட்ட காகிதம் ஒன்றைக் கிழித்து வீசியபடியே உட்கார்ந்திருந்தான். அவன் தலை செம்பட்டை படிந்து பற்கள் காவியேறிப் போயிருந்தன. அழுக்கேறிய பேண்டும் சட்டையும் போட்டிருந்தான். அவனது வலது கையில் பெரிய தழும்பு தெரிந்தது. வயது நாற்பதைக் கடந்திருக்கும். முகத்தில் இறுக்கம் படிந்து போயிருந்தது. தன் கைகளை வேகமாகக் காற்றில் வீசி அவன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.
கோபி அவனை கையைக் காட்டி அவன் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறான் பாருங்கள் என்று சொன்னார். இருவருமாக அவனைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அவன் செய்கைகள் ஒருபோதும் ஒன்றாக இருப்பதில்லை, அதில் ஒவ்வொரு முறையும் புதிதாக ஒருவிதம் உருவாகிறது. அவன் மிக உற்சாகமாக இருக்கிறான் என்று சொல்லியபடியே பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் தான் புகை பிடிக்கலாமா என்று என்னிடம் கேட்டார். நடந்து சென்று சிகரெட் வாங்கிக்கொண்டு வந்து பற்றவைத்த படியே திரும்பவும் அந்த மனிதனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
பிறகு என்னிடம் நீங்கள் முன்றிலுக்கு வந்தீர்களா என்று கேட்டார். ஆமாம் என்றதும் அருகில் ஆத்மன் ஆலோசனை மையம் என்ற ஒன்றை, தானும் நண்பர் சபியும் சேர்ந்து திறந்திருப்பதாகவும் அதற்காகத் தான் மாலை வேளைகளில் அங்கே வந்து போவதாகவும் அந்த மையம் புகை மற்றும் மதுப் பழக்கங்களில் இருந்து மீண்டுவர நினைப்பவர்களுக்கான ஆலோசனையைத் தருகிறது என்றார். நான் தலையசைத்துக்கொண்டேன். பிறகு அவராகவே அந்தப் பழக்கங்கள் என்னிடமே இருக்கிறது. ஆனாலும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அதை மீறிச் செல்லும்போதுதான் ஆலோசனைகள் தேவை. தன்னால் அதை ஒரு மருத்துவச் சேவையாக எடுத்துச் சொல்லவும் மாற்றவும் முடியும் என்று சொல்லிவிட்டு சிரித்தார்.
கோபி கிருஷ்ணனின் சிரிப்பு மிக அலாதியானது. இயல்பாகவும் அடக்க முடியாததாகவும் சில வேளைகளில் வெளிப்படும். கோபி எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடியவர் என்பதை அருகில் இருந்து சில முறைகள் கண்டிருக்கிறேன். முதல் சந்திப்பிலே என்னிடம் கோபி, உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டார். எதற்காகக் கேட்கிறீர்கள் என்று கேட்டேன்.
இல்லை தஸ்தாயெவ்ஸ்கியிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். “My friends, God is necessary to me, because he is the only being that I can love eternally.” என்ற அவரது பதில் குழப்பமாக இருக்கிறது, திடீரென அது நினைவிற்கு வந்தது. எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் நிறைய நேரங்களில் கடவுள் இருந்தால் நன்றாக இருக்கக்கூடும் என்றும் தோன்றுகிறது என்றபடியே நீங்கள் தஸ்தாயெவ்ஸ்கியைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டார்.
இருவரும் அந்தத் தேநீர்க்கடையில் இன்னொரு தேநீர் குடித்தபடியே தஸ்தாயெவ்ஸ்கி பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். தனக்கு தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளை ரொம்பவும் பிடிக்கும். குறிப்பாக இடியட் என்னும் நூலைப் பலமுறை வாசித்திருப்பதாகச் சொல்லியபடியே குற்றமும் தண்டனையும் நாவலில் இடம்பெற்றுள்ளதாக Talking nonsense is man's only privilege that distinguishes him from all other organisms என்ற வரியைச் சொல்லியபடியே இது மிக நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்று அவராகச் சிரித்துக்கொண்டார்.
இருவருமாகப் படியேறி ஆத்மன் ஆலோசனை மையமிருந்த வளாகத்திற்குள் சென்றோம். நான் முன்றில் புத்தகக் கடைக்கும் அவர் ஆலோசனை மையத்திற்குள்ளமாகப் பிரிந்துவிட்டோம். முன்றில் கடையில் இருந்த எழுத்தாளர் மா. அரங்கநாதன் அவர்கள் கோபி உங்க கூட வந்த மாதிரி இருந்தது. இருக்கானா என்று கேட்டார். ஆமாம் என்றதும் அவர் தன்னிடம் படிக்கக் கேட்டதாகச் சொல்லி ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டினார். அது டி.ஹெச்.லாரன்ஸின் யீஷீஜ் என்ற புத்தகம். சில நிமிசங்களுக்குப் பிறகு கோபி வந்து அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு சென்றார்.
அரைமணி நேரத்திற்கு ஒருமுறை புகைபிடிப்பதற்காக கோபி முன்றிலைக் கடந்து அருகில் இருந்த வெற்று வெளிக்குச் செல்வார். அப்போது குனிந்த தலையோடு மிக மெதுவாகவே கடந்து செல்வார். தனியே புகைபிடித்துவிட்டு வேகமாகக் கடந்து போய்விடுவார்.
ஆத்மன் ஆலோசனை மையத்திற்கு யார் வருகிறார்கள் என்று தெரிந்துகொள்ள நான் ஆவல் கொண்டதில்லை. ஆனால் அங்கே வரும் கோபி கிருஷ்ணனோடு பல நாட்கள் பேசிக்கொண்டிருந்திருக்கிறேன்.
ஒரு முறை அவர் சூளைமேட்டுப் பகுதியில் ஒரு வெள்ளைக்காரருடன் பேசிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்ததைக் கண்டேன். அந்தப் பக்கமிருந்த பொன்விஜயன் அச்சகத்தில் கல்குதிரை ஓடிக் கொண்டிருந்தது. ஆகவே அதைப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது எதிரே வந்தார் கோபி. வெள்ளைக்காரனை எனக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு மூவருமாகத் தேநீர் அருந்தச் சென்றோம். அவர் பேசிய மிக அழகான ஆங்கிலம் என்னை வியப்பூட்டியது.
அதன் மறுநாள் பேருந்தில் இருவரையும் மறுபடி பார்த்தேன். அந்த வெள்ளைக்காரன் ஒரு அமெரிக்கன் என்று சொல்லி ஆய்வுப் பணிக்காக வந்திருக்கிறான் என்றார். அவருக்கு நிறைய வெளிநாட்டு நண்பர்கள் இருந்தார்கள்.
கோபி அவ்வப்போது சிறுகதைகள் எழுதக்கூடியவர். தனது கதைகளைப் பற்றி அவர் அதிகம் பேசிக் கொண்டதில்லை. கதைகள் நன்றாக உள்ளது என்று பாராட்டும்போது கூட அவர் சிரித்துக்கொள்வார். அதுபோலவே வேறு எந்த எழுத்தாளரையும் பற்றி அவர் கடுமையாகப் பேசியது கிடையாது. கோணங்கியின் ‘பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்’ கதையைப் படித்து விட்டு மிக நன்றாக வந்திருக்கிறது. அதுபோல தானும் ஒரு கதையை எழுதிப் பார்த்ததாகச் சொன்னார். தன்னைப் பற்றியோ தனது மன உளைச்சல்கள் பற்றியோ அவர் அதிகம் சொல்லியதில்லை.
ஒரு முறை அவரைத் தற்செயலாக அம்பத்தூர்ப் பகுதியில் பார்த்தேன். தன் வீடு அருகில்தான் இருக்கிறது என்று சொல்லி அழைத்துச் சென்றார். மிகச் சிறிய குடியிருப்பு. எளிமையான குடும்பம். தன் மனைவியைத் தான் காதலிப்பதாகவும் மனைவியைக் காதலிப்பதில் ஒரு சௌகரியமிருக்கிறது, அதற்கு அதிகம் செலவு செய்யத் தேவையில்லை என்றும் சொல்லிச் சிரித்தார்.
அவரது கதைகளில் அவரது வசிப்பிடமும் அதன் நெருக்கடியும் அதிகமாகப் பதிவாகியிருக்கின்றன. அப்படிப் பதிவான கதைகளில் ஒன்றில் அண்டை வீட்டுக்காரன் ஒருவனின் காயப்போட்ட ஜட்டி ஒன்று காணாமல் போய்விடுகிறது. உடனே அந்தக் குடித்தனத்தில் இருந்த ஆண்கள் அத்தனை பேரையும் ஜட்டியைக் காட்டச் சொல்லி அந்த நபரின் மனைவி வலம் வருவாள். இந்த சம்பவம் உண்மையில் நடந்ததா என்று கோபியிடம் கேட்டேன்.
அவர் சிரித்தபடியே அந்தப் பெண்மணி முரட்டுத்தனமானவள். தன் கணவனின் ஜட்டியை எடுத்தவர்கள் திருப்பிக் கொடுக்காவிட்டால் அப்படி நடந்து கொள்ளப் போவதாக உரத்துக் கத்திக் கொண்டிருப்பதைக் கேட்டேன். உள்ளுக்குள் ஒரே நேரத்தில் அப்படி நடந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆவலும், அதே நேரம் அவமதிப்பாகிவிடுமே என்ற உணர்ச்சியும் ஒன்றாகத் தோன்றியது. வீட்டில் இருக்கவே முடியவில்லை. அவளுக்கு பயந்து வீட்டிற்குப் போகாமல் இரவு வரை வெளியே சுற்றிக் கொண்டிருந்தேன் என்றார்.
கோபி மதுரையில் பிறந்தவர். தன் பால்ய வயதில் கண்ட மதுரையைப் பற்றிய நினைவுகள் அதிகம் அவருக்குள் இருந்தன. அதை எழுத வேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். கடைசி வரை எழுதவேயில்லை.
உளவியல், சமூக சேவை இரண்டிலும் அவர் முதுகலைப் பட்டம் பெற்றவர். சென்னையில் உள்ள பிரபலமான சில உளவியல் மையங்களில் பணிபுரிந்திருக்கிறார். சிகிட்சை மையங்களில் செயல்படும் அதிகாரமும் நோயாளிகளிடம் அவர்கள் நடந்துகொள்ளும் முறையும் அவரை இணைந்து செயல்படவிடாமல் தடுத்திருக்கிறது.
தான் வேலை செய்த இடம் ஒன்றில் கையூட்டு அதிகம் நடை பெறுகிறது என்று சொல்லி வேலையை விட்டதாகச் சொன்னார். இன்னொரு அலுவலகத்தில் வெளிநாட்டுப் பணத்தை வாங்கி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று குற்றம் சொன்னதால் வேலையை விடும்படி ஆனது என்றும் அப்படி வேலை நீக்க உத்தரவு தந்த போது, தான் அந்த உத்தரவில் நாலைந்து ஆங்கிலச் சொற்கள் தவறாகப் பிரயோகப்படுத்தப்பட்டிருப்பதோடு எழுத்துப் பிழையும் இலக்கணப் பிழையும் இருப்பதைக் கண்டு பிடித்து உயரதிகாரிக்குத் தெரிவித்தபோது அவர் மிகுந்த ஆத்திரத்துடன் கோபப்பட்டுத் துரத்தியதாகவும் பரிகாசத்துடன் சொன்னார்.
ஒரு மனிதன் தனக்கு வேலை பறிபோன விஷயத்தைக்கூட இப்படிப் பரிகாசமும் எள்ளலுமாகச் சொல்ல முடியுமா என்று தோணியது. வாழ்க்கை நெருக்கடி அவரை தினசரி படுத்தி எடுத்தபோது அவரிடமிருந்த எள்ளல் மற்றும் இயல்பான நகைச்சுவை உணர்வு குறையவேயில்லை. அவரது மனைவி ஒரு அச்சகத்தில் பணியாற்றுகிறார் என்றும் அங்கே வேலை கடினம் என்றும் அவராகச் சில வேளைகளில் சொல்லியிருக்கிறார். அபூர்வமாகத் தன் மகளைப் பற்றி உணர்ச்சி பூர்வமான நெகிழ்வுடன் பேசுவார்.
கோபியின் கதைகள் மனித அவலங்களை, கீழான செயல்களை, ஒடுக்கப்படும் உணர்வுகளை, மறுக்கப்படும் பாலியலை, அடங்க மறுக்கும் மனச்சிதைவுகளைப் பேசுகின்றவை. அந்த வகையில் அவரது எழுத்திற்கான முன்னோடியாக நகுலனைக் குறிப்பிடலாம். ஆனால் நகுலனிடம் உள்ள தத்துவ சார்பு கோபியிடம் இல்லை. அது போலவே கோபியிடம் உள்ள அன்றாட உலகமும் அதன் மீதான எள்ளலான விமர்சனமும் நகுலனிடம் கிடையாது. இருவருமே தஸ்தாயெவ்ஸ்கியைக் கொண்டாடுபவர்கள்.
தன் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக எந்த வேலையும் செய்வதற்கு அவர் தயராக இருந்தார். சில மாதங்கள் அவர் நக்கீரன் பத்திரிகையில் பிழை திருத்துபவராக வேலை செய்தார். சில மாதங்கள் ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் வேலை செய்தார். கொஞ்ச நாட்கள் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார்.
சென்னையில் அம்பலம் என்றொரு அமைப்பின் கலை இலக்கியப் பணிகளை நான் சில மாதங்கள் ஒருங்கிணைப்புச் செய்து கொண்டிருந்தேன். அவர்கள் தங்களது நிகழ்ச்சி குறித்த பதிவுகளைத் தமிழ் ஆங்கிலம் இரண்டிலுமாக வெளியிடுவார்கள். இதற்கான மொழிபெயர்ப்பு வேலையை கோபி கிருஷ்ணனிடம் ஒப்படைத்திருந்தேன்.
அடிக்கடி என்னைப் பார்க்க திருவான்மியூர் வருவார். பேருந்தில் பயணம் செய்து வந்து இறங்கி நடந்து சீனிவாசபுரத்திலிருந்த அம்பலம் அலுவலகத்தில் தன் மொழியாக்கத்தைத் தந்துவிட்டு அதற்கான சொற்ப ஊதியத்தை வாங்கிக்கொண்டு போவார். அப்போது சில மணிநேரங்கள் எங்காவது நடந்து சென்று மனதில் பட்டதைப் பேசிக்கொண்டிருப்போம்
திருநெல்வேலியில் உள்ள சேவியர் கல்லூரியில் நடைபெற்ற நாட்டுப்புறவியல் கருத்தரங்கம் ஒன்றில் வாசிக்கப்படும் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய கோபி கிருஷ்ணன் நெல்லை வந்திருந்தார். அந்த நிகழ்வில் நானும் கலந்துகொண்டிருந்தேன். அதனால் அவர் அறையும் என்னுடைய அறையும் அருகாமையில் இருந்தன.
ஒரு நாள் இரவு அவர் தனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் சில மருந்துகள் தேவைப்படுகின்றன. தன்னோடு பாளையங்கோட்டை வரை வரமுடியுமா என்று கேட்டார். இருவருமாகக் கிளம்பி பாளையங்கோட்டை வரை சென்றோம். அவர் கேட்ட மருந்தை கடைக்காரர் இல்லை என்று சொன்னதால் வேறு ஒரு மருந்தை கோபி கேட்டார்.
மருந்துச் சீட்டு இல்லாமல் அதைத் தன்னால் தர இயலாது என்று கடைக்காரர் சொன்னதும் தனக்கு அந்த மருந்து கிடைக்காவிட்டால் நிச்சயம் உறங்க இயலாது எப்படியாவது கொடுக்கும்படியாகக் கெஞ்சும் குரலில் கேட்டார். கடைக்காரர் மறுத்துவிடவே அங்கிருந்த ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினார். அது தூக்க மாத்திரை என்றும் அதன் அளவு முன்பு தான் சாப்பிடுவதைவிடவும் தற்போது அதிகமாகி உள்ளதாகவும் அதற்கான மருந்துச் சீட்டை, தான் எடுத்துவரவில்லை என்பதால் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாகத் தடுமாற்றத்துடன் சொன்னார்.
அப்போது நெல்லையில் இருந்த லேனாகுமார் மருத்துவத்துறை தொடர்பானவர் என்பதால் அவரை அழைத்து விபரம் சொன்னதும் அவர் எங்கிருந்தோ அந்த மாத்திரைகளை வாங்கி வந்து தந்து இந்த அளவு தூக்கமாத்திரையா சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டதும், கோபி அது தனக்குப் பழகிப்போய் விட்டது, இதைப் போட்டால் கூட பின்னிரவில் எழுந்துவிடுவேன். பிறகு விடியும் வரை விழித்தபடியே இருக்க வேண்டியதுதான் என்று அதே சிரிப்போடு சொன்னார்.
அப்போது அவரது கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. அதை மறைக்க அவர் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டார். பின்னர் அறைக்குத் திரும்பிய சில நிமிசங்களில் அவர் மாத்திரையைப் போட்டுக்கொண்டு படுத்துக் கொண்டார். ஆனால் அவருக்கு உறக்கம் வரவில்லை பாதித் தூக்கமும் விழிப்புமாக அவர் வராந்தாவில் நடந்து கொண்டிருந்தார். என் அறைக்கு வந்து தண்ணீர் இருக்கிறதா என்று கேட்டார். டம்ளரில் தந்தபோது அப்படியே பிளாஸ்டிக் ஜக்கை எடுத்துக் கடகடவெனக் குடித்தார்.
அன்றிரவு அவரால் இயல்பாக உறங்கமுடியவில்லை என்றதும் திரும்பவும் குமாரை அழைத்துச் சொன்னதால் மாற்று மருந்து ஒன்றை வாங்கி வந்து சாப்பிடச் சொன்னார். விடிகாலை வரை இந்த அவஸ்தையில் இருந்த கோபி உறங்கி, காலை ஒன்பது மணி அளவில் கண்விழித்து குளித்துவிட்டு வழக்கம் போலக் கருத்தரங்கில் கலந்து கொண்டு தன் மொழியாக்க வேலையைச் செய்யத் துவங்கினார்.
அசதியும் சோர்வும் அவரது முகத்தில் பீடித்திருந்தன. சாப்பாட்டை வெகுவாகக் குறைத்திருந்தார். சிகரெட் மற்றும் தேநீர்தான் அவரது பிரதான உணவாக இருந்தன. அவரது உடல் நலத்திற்கு என்ன பிரச்சினை. ஏன் இப்படி தன்னை வருத்திக்கொண்டு வேலை செய்கிறார் என்று வருத்தமாக இருந்தது. அவர் தொடர்ந்து மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார் என்பதும் அப்படியிருந்தும் நோய்மை கட்டுக்குள் அடங்கவில்லை என்பதும் நேரடியாகப் புரிந்தது.
அதன் பிறகு சில மாதங்கள் நான் கோபியைச் சந்திக்கவில்லை. ஒரேயொரு முறை இலக்கியக் கூட்டமொன்றில் சந்தித்துப் பேசிக்கொண்டோம். கோபி ரொம்பவும் தளர்ந்து போயிருந்தார். பிறகு அவரது புத்தகம் வெளியான சமயத்தில் தற்செயலாக நண்பர் ராஜன்குறையின் வீட்டில் சந்தித்துக்கொண்டு உரையாடினோம். கோபியின் அன்றாட வாழ்வு மிக நெருக்கடியாக உள்ளது என்று பலமுறை நண்பர் வெளிரங்கராஜன் சொல்லியிருக்கிறார். ஆனால் கோபி இதை எவரிடமும் சொல்லிக்கொண்டது கிடையாது. ஒருமுறை அவர் பொங்கல் வாழ்த்து அட்டைகள் அனுப்பி வைத்திருந்தார்.
அட்சரம் இதழுக்காக அவரிடமிருந்து பிராய்டு பற்றிய கட்டுரை ஒன்றைக் கேட்டேன். தன்னால் முடிந்தால் எழுதித் தருவதாகச் சொன்னார். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அதைத் தன்னால் எழுத முடியவில்லை என்பதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்வார்.
கோபியின் கதைகள் மனித வலிகளை மிக ஆழமாகப் பதிவு செய்திருக்கின்றன. குறிப்பாக சகமனித துவேசங்கள் அவமதிப்புகள் அதிகாரத்தின் பெயரால் நடைபெறும் கீழ்மைகள், பாலியல் வேஷங்கள், சமூக வாழ்வில் காணப்படும் இரட்டைத்தன்மை. வெகுமக்களின் ரசனை சார்ந்த வெளிப்பாடுகள் என்று அவர் நகரவாழ்வின் இருண்ட பகுதியைத் தன் படைப்பில் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். இன்னொரு பக்கம் மன நலச்சேவைகள். இன்று எந்த அளவு மனிதாபிமானமற்று நடத்தப்படுகின்றன என்பதைப் பற்றியும் கடுமையான எதிர்ப்புக்குரல் கொண்டிருந்தார். இதை வெளிப்படுத்த அவரும் சபியும் இணைந்து சிறிய நூல் ஒன்றை வெளியிட்டார்கள்.
தூயோன், மானுட வாழ்வு தரும் ஆனந்தம் போன்ற அவரது சிறுகதைத் தொகுப்புகளும் உள்ளிருந்து சில குரல்கள் என்ற அவரது நாவலும் குறிப்பிடத்தக்க படைப்புகள். டேபிள்டென்னிஸ் என்ற அவரது குறுநாவல் பாலியல் சிக்கல் குறித்த பகடியை மிக அழகாக வெளிப்படுத்துகிறது.
தன் மகளின் திருமணத்திற்கு கோபி என்னை அழைத்திருந்தார். ஆனால் கலந்து கொள்ளவில்லை. பிறகு தற்செயலாக ரங்கராஜனுடன் சந்தித்தபோது தன் மருமகனைப் பற்றி மிகப் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அவரது குடும்பச் சூழல் மிகவும் நெருக்கடியாகிவிட்டிருப்பதை அவரது பேச்சின் ஊடாகப் புரிந்துகொள்ள முடிந்தது. புதிதாகத் தான் எழுத விரும்பும் கதை பற்றிப் பேசிக்கொண்டிருந்தது வியப்பாக இருந்தது.
ஒரு கதையை நிம்மதியாக அமர்ந்து எழுதுமளவுகூட வீட்டின் சூழல் இல்லை என்று அவர் சொன்னவிதம் வலி தருவதாக இருந்தது. அன்று லதா ராமகிருஷ்ணனைப் பார்க்கச் செல்வதாகச் சொல்லியபடியே நடந்து செல்லத் துவங்கினார்.
2003ல் கோபி மரணமடைந்த நாளில் நான் விருதுநகரில் இருந்தேன். செய்தி கேள்விப்பட்டவுடன் மனதில் கோபியின் சிரிப்புதான் முதலில் தோன்றியது. கோபியோடு அதிகம் நட்பு கொண்டிருக்கவில்லை என்றபோதும் நான் அறிந்த தமிழ் எழுத்தாளர்களில் கோபி மிகவும் தனித்துவமானவர். அத்தோடு தமிழ்ச் சிறுகதைகளில் அவரது பங்களிப்பு சிறப்பானது. அவரது கதை உலகிற்கு நிகரான பகடியும் ஆழ்ந்த துக்கமும் கொண்ட கதைகள் இன்று வரை வேறு எவராலும் எழுதப்படவில்லை.
தஸ்தாயெவ்ஸ்கியைப் போல வாழ்வின் கருணையற்ற நெருக்கடியை எதிர்கொண்டபடியே திரும்பத் திரும்ப வாழ்வு தரும் ஆனந்தத்தைப் பேசியவர் கோபி கிருஷ்ணன். இன்று வாசிக்கையில் அந்த ஆனந்தமும் பரிகாசமும் தீர்க்க முடியாத வலியை உருவாக்குகிறது என்பதே நிஜம்.
*****
நன்றி: உயிர்மை
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
7 கருத்துகள்:
அருமையான பகிர்வு.
உங்கள் பரிந்துரைப்பகுதியில் வாசகர் அனுபவம் தளம் upadate ஆகாமல் இருக்கிறதே!
ஜெகதீஷ் வாசகர் அனுபவம் தளத்தின் Feed-ஐ கவனியுங்கள். எனது Reader-லும் Update வருவதில்லை.
thanks for sharing, I guess 2 years back this article has came in Uyirmmai.
Whevener I cross Tnagar krishnaveni thetre, I rememebr these lines of Es raa
பகிர்விற்கு நன்றி!
பகிர்விற்கு நன்றி... மேலும் வலிமையான எழுத்துக்கள் எப்போதும் மிகவும் நெருக்கடியான மனநிலையிலேஅதிக கூர்மை பெறுகின்றன என்பதும் என் நிலை... (நெருக்கடியான சூழலில் யோசிப்பது என்பதே பெரிய காரியமாக இருக்கிறது)
அடுத்த மனிதரையும் அவரின் படைப்புகளையும் பற்றிப்பேசியது , அதையும் சொய்வில்லாமல் சொன்ன விதம் அருமை.
கோபிகிருஷ்ணன் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த கட்டுறை வெகு அருமை. நகர் வாழ் மத்தியதர மனிதர்களின் அன்றாட அல்லகளை தன் எழுத்தில் பதிவு செய்தவர் கோபி. அவர் எழுத்தில் இருக்கும் அங்கதம் காணகிடைக்காத ஒன்று. அவருடைய படைப்புகளை இன்னும் அதிகம் எதிர் பார்கிறோம். நன்றி.
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.