யானைத்துப்பாக்கியைத் தூக்கி தனக்கு இணையாக நிறுத்திக் கொண்டு துரை என்னைப் பார்த்துக் கண்ணைச்சிமிட்டினான். பெரும்பாலான துரைகளுக்குக் கண்களைச் சிமிட்டும் பழக்கம் உண்டு. சின்னவயதில் நானும் என்ன செய்வதென்று தெரியாமல் பதிலுக்குக் கண்களைச் சிமிட்டிக் காட்டுவேன். அது துரைகளுக்குக் கோபத்தை உருவாக்கும் என்று சீக்கிரமே புரிந்துகொண்டேன். அதன்பின் முப்பதுவருட வேட்டைத்துணைவனின் வாழ்க்கையில் நான் மிகமிக அமைதியாக இருக்கக் கற்றுக் கொண்டேன். வேட்டை நாய் எப்படி இருக்குமோ அப்படி இருப்பேன். நா ன் கூடச்செல்வதே தெரியாது. தேவையான இடத்தில் மட்டும் சைகை செய்வேன். சைகை மூலம் சொல்லமுடியாத விஷயத்துக்கு மட்டும் குரல். அதுவும் ஒரு சொல் அல்லது இரண்டு சொல். எனக்கு ஆங்கிலம் சொற்களாகத் தான் தெரியும். ஆகவே என்னை ‘ஊமைச்செந்நாய்’ என்று அவர்கள் அழைத்தார்கள்.
“என்னை வில்சன் என்று கூப்பிடு” என்றான் துரை. அவனுக்கு நாற்பது வயதுதான் இருக்கும். ஆனால் நம்மூரில் நாற்பதுவயதில் இருபது வயதான மகன் வந்து அவனுக்கும் பிள்ளை பிறந்து தாத்தா ஆகி மிச்சமிருக்கும் நாட்களை எண்ண ஆரம்பித்திருப்பார்கள். தொப்பை சரிந்து தாடைக்குக் கீழே சதை தொங்கி கண்ணுக்குக் கீழே கறை விழுந்து தெரிவார்கள். துரை இறுக்கமாக பனைநாரால் பின்னிச் செய்தவன்போல இருந்தான். நரம்புகள் பச்சை நிறமாக தோளிலும் கழுத்திலும் கைகளிலும் தெரிந்தன. உதடே கிடையாது. காட்டுப் பூனையின் கண்கள். இரு பக்கங்களிலும் கைகளைக் கொடுத்து அழுத்திச் சப்பியது போன்ற முகம் அவனுக்கு. மூக்கு நீளமாக வயதான கழுகின் அலகு போல. தேங்காய் நார்போன்ற தலைமுடி. சேற்றுப் பாறை போல மடிப்பு மடிப்பாக இறுகி இருந்த அவன் வயிற்றைப் பார்ப்பவர்கள் அவன் ஒரே வேளையில் இரண்டு காட்டுச்சேவல்களைத் தின்பவன் என்று நம்ப மாட்டார்கள்.
துரையளவுக்கு உயரம் இருந்தது துப்பாக்கி. அதன் கட்டைக்கு நல்ல ஈட்டியை போட்டிருந்தார்கள். கைபட்டு கைபட்டு எண்ணை ஊறி வழவழப்பாகக் கறுத்திருந்த அந்தத்தடி ராஜநாகம் போலிருந்தது. அதன்மீது நல்ல மினுமினுக்கும் உருக்கில் இரட்டைக்குழாய்கள். துப்பாக்கியின் விசைக்கொண்டி பித்தளை. அதில் விரல்படும் இடம் பொன்னிறமாக இருந்தது. சொந்தத் தம்பியைக் கூட நிறுத்தி அணைத்துக்கொள்பவன்போல துரை நின்று புளியங்கொட்டைகள் போன்ற பற்களைக் காட்டி சிரித்தான். “எப்படி இருக்கிறது?” என்றான். நான் புன்னகை செய்தேன். “ஒரே குண்டு போதும். மத்தகம் பிளந்து மூளை வெளியே கொட்டும் . . . வெண்ணைப்பானை உடைவது போல” நான் அவன் சொன்னதைப் புரிந்து கொண்டாலும் அதே புன்னகையை மட்டும் காட்டினேன்.
“நாம் நாளைக்காலை கிளம்புவோம். விடிவதற்கு முன்பாக . . .” என்றான் துரை. நான் அதற்கும் புன்னகை மட்டுமே செய்தேன். துப்பாக்கியை மெல்ல சாற்றிவிட்டு அவன் நாற்காலியில் அமர்ந்தான். கால்மேல் கால் போட்டுக்கொண்டு ஒரு வெள்ளி சம்புடத்தை எடுத்துத் திறந்து உள்ளிருந்து ஒரு சுருட்டை எடுத்து வாயில் வைத்துக்கொண்டான். கரிய ஆண்குறி போல பெரிய சுருட்டு. அதைப் பற்றவைக்க அவனிடம் ஒரு கருவி இருந்தது. அதைப் பலமுறை சொடுக்குவான். சிட்டுக் குருவி சிலைப்பு போன்ற அந்த ஒலி எனக்குப் பிடிப்பதில்லை. என் முதுகு சிலிர்த்துக்கொண்டிருக்கும். அதில் சுடர் அடியில் சிவப்புள்ள நீலநிறத்தில் சங்குபுஷ்ப இதழ் போல எரிய ஆரம்பித்ததும் அதில் சுருட்டைக் கருக்குவான். சுருட்டு புகைய ஆரம்பிப்பது எனக்குப் பிடிக்கும். பின்னர் புகையை ஊதி உள்ளிழுத்து மூக்கு வாய் வழியாக வெளியே விடுவான். அவன் வரும் மோட்டாரின் பின்பக்கம் அதே போலத்தான் புகை எழுகிறது.
நான் நின்றுகொண்டிருந்தேன். துரை என்னைப் பார்த்து “ஒரு சுருட்டு எடுத்துக்கொள்” என்றான். நான் அதை மறுத்தேன். மறுக்க வேண்டும் என்றுதான் துரைகள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அந்தச் சுருட்டு அதன் காகிதச் சுருள் வரை வந்ததும் எனக்குத் தந்துவிடுவார்கள். நான் அப்படி நிறைய சுருட்டு வைத்திருந்தேன். என் மடியில் கூட இரண்டு சுருட்டுத்துண்டுகள் இருந்தன. தினம் இரு முறை நான் சுருட்டு பிடிப்பேன். சாராயம் குடித்தபின் சுருட்டை இழுக்க மிகவும் பிடிக்கும். துரையின் பற்களில் சுருட்டுக்கறை அடுப்புக்கல் போலப் பழுத்திருந்தது. அவன் சுருட்டு பிடிக்கும்போது ஏதாவது ஒரு திசையைக் கூர்ந்து பார்ப்பான். மெல்ல ஆங்கிலத்தில் முனகிக் கொள்வான். அது பெரும்பாலும் ஏதாவது பாட்டாக இருக்கும்.
துரை என்னிடம் மிஞ்சிய சுருட்டைத் தந்ததும் நான் அதை வாங்கி குத்தி அணைத்து மடியில் வைத்துக் கொண்டேன். மெதுவாகப் பின்னுக்கு நகர்ந்து பங்களாவின் பின் பக்கம் சமையலறைக்குச் சென்றேன். தோமா சமையல் செய்துகொண்டிருந்தான். நான் வெளியே நின்றேன். “எந்தா கோணா, எந்து காரியம்?” என்றான். நான் மெல்ல “சோறு?” என்றேன். “இரியெடே . . . சாயிப்பு உண்டிட்டில்ல . . . நினக்கு நாய்க்கும் பின்னீடு ஆவாம் . . .” என்றான்.
நான் சமையலறையின் சிறிய வராந்தாவிலேயே அமர்ந்திருந்தேன். பங்களாவின் முன்னால் நின்ற பெரிய இலந்தை மரத்தின் உச்சியில் ஒரு தேன்கூடு, அல்ல அது பழ உண்ணி. பெரியது. நிதானமாக, கொடிக்கயிற்றில் மழைத்துளி போவதுபோல, கிளைவழியாகச் சென்றது. பழ உண்ணியைப் பிடிக்க வேண்டுமென்றால் அதன் வழியை நன்றாகக் கவனித்தபின் அங்கே பொறி வைக்க வேண்டும். அதன் வழியைக் கண்டுபிடிப்பது எளியது. முகர்ந்துபார்த்தால் போதும். பழ உண்ணி தலைகீழாகக் கிளையில் நகர்ந்து இலைகளுக்குள் சென்றது.
பெரிய தட்டில் முழுதாகப் பொரித்த இரண்டு வான்கோழிகளுடன் தோமா முன் அறைக்குச் சென்றான். பிறகு சீமைப்பலாவும் பன்றியிறைச்சியும் போட்டுச்செய்த கறி, செங்கல் போன்ற பெரிய ரொட்டி, ஒரு பெரிய கண்ணாடிக் குடுவை நிறைய நிறையப் பொன்னிறமான அன்னாசிப் பழச்சாறு. பெரிய வெள்ளைத்தகரப் பாத்திரம் நிறைய வெங்காயம் வெள்ளரிக்காய் உப்பு போட்ட முள்ளங்கித் துண்டுகள். அவன் உள்ளே அவற்றைப் பரப்பி வைப்பதை என்னால் காண முடிந்தது. பங்களாவின் ஜன்னல்கள் மிகவும் பெரியவை. தாழ் வானவையும்கூட. தோமா அங்கே தொங்கிய ஒரு நாழிமணியின் நாவைப் பிடித்து ஒருமுறை அடித்தான்.
துரை எழுந்து வந்து ஒரு வெண்ணிறத் துண்டைக் கழுத்தில் கட்டிக் கொண்டு அமர்ந்து கொண்டான். மனைவி போல தோமா அருகே நின்று துரைக்கு முதலில் காய்கறிகளைப் பரிமாறினான். துரை பூனைக்கால் கரண்டியால் அவற்றைக் குத்தி எடுத்து வாயிலிட்டு உதடுகளை மூடிக்கொண்டு மென்று தின்றான். அவனது சவரம் செய்யப்பட்ட தாடை உரித்த கோழியின் தொடை போல சிவப்பாக இருந்தது. அவன் மெல்வதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பின் வான்கோழிகளைக் கத்தியால் வெட்டி பூனைக்கால் கரண்டியால் குத்திப் பிய்த்துத் தின்றான். அவன் பழச்சாறைக் குடித்து முடித்ததும் அருகே நின்ற தோமா அவன் வாயைத் துடைத்தான்.
நான் காத்திருந்தேன். தோமா தட்டுகளுடன் வந்தான். அவற்றில் வான்கோழியின் எலும்புகளும் கொஞ்சம் சதையும் இருந்தன. தோமா தனக்காகச் சோறு பொங்குவான். தேங்காய் போட்டு வான் கோழிக் குழம்பும் வைப்பான். கொஞ்ச நேரத்தில் எனக்கு சட்டியில் சோறு வந்தது. வான் கோழிக் குழம்பு ஊற்றப்பட்டிருந்தாலும் துண்டுகள் இல்லை. துரை மிச்சம் வைத்த பொரித்த கோழி எலும்புகளைச் சோற்றுடன் சேர்த்துப் போட்டிருந்தான். நான் ஆவலுடன் சோற்றை வாரி வாரித் தின்றேன். நான் காலைமுதலே ஒன்றும் சாப்பிடவில்லை. மேலும் எனக்கு வேகமாகத் தின்றுதான் பழக்கம்.
சுருட்டை எடுத்து மூக்கில் வைத்து அதன் வாசனையை முகர்ந்த பிறகு நான் மெல்ல நழுவி கக்கூஸ் சுவருக்கு அருகே அமர்ந்து என் கச்சையில் இருந்து சிக்கிக் கல்லை எடுத்து உரசி நுங் கெண்ணை தோய்த்த பஞ்சுப் பிசிறைப் பற்ற வைத்து சுருட்டைக் கொளுத்தினேன். அதை ஆழமாக இழுத்து மெல்லமெல்ல விட்டேன். என் மனதில் சிந்தனைகள் நிறைந்தன. ஆனால் நான் எதைப்பற்றிச் சிந்திக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.
தோமா என்னை அழைத்த ஒலி கேட்டு ஓடிச்சென்றேன். “சாயிப்பினு பெண்ணு வேணும் . . . ஓடிப்போ.” நான் கொல்லைப்பக்கம் பள்ளத்தில் இறங்கி ஊடு வழியை அடைந்து அதன்வழியாகக் காட்டுக்குள் சென்றேன். காட்டுக்குள் மதிய வெயில் ஆறுவதன் வெக்கை இலை மணத்துடன் கலந்து வீசியது. ஒரு கீரி என் வழியைக் கடந்து சென்றது. செள்ளைப்பாறை ஏறி மறுபக்கம் சென்று ஓடைக்கரையில் இருந்த குடிகளை அடைந்தேன். என்னைக் கண்டதும் அங்கே கூவைக்காயை உரலில் இடித்துக்கொண்டிருந்த பெண்கள் வேலையை நிறுத்தி கூர்ந்து பார்த்தார்கள்.
“துரையினு கூட்டு வரணும்” என்று சொன்னேன். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. தரையில் இருந்த சேவப்பெண்ணைப் பார்த்தார்கள். சேவப்பெண்ணை நான்பையனாக இருந்தபோது பார்த்திருக்கிறேன். அப்போது அவள் முலைகள் தேங்காய் போல இருக்கும். இப்போது அவை தூக்கணாங் குருவிக்கூடுகள் போல இருந்தன. சேவப்பெண்ணு என்னைப் பார்த்து “நீயல்லடா எரப்ப நாயி?” என்றாள். நான் புன்னகைத்தேன். “சோதி நீ போயிட்டு வாயெடீ” என்றாள் கிழவி. “சோதி வேண்டா . . .” என்றேன். “துரை அடிப்பான்.” கிழவி தூ என்று துப்பி “சோதி மதி. . . நீ போடி பெண்ணே” என்றாள்
சோதி என்னுடன் வரும்போது தலை குனிந்து மெல்ல அழுதபடியே வந்தாள். விசும்பல் ஒலி கேட்டு நான் “நீ எந்தெடீ குட்டி கரையுந்நே?” என்றேன். அவள் தூ என்று தரையில் துப்பினாள். நான் அதன்பின் அவளைப் பார்க்கவில்லை. நாங்கள் மீண்டும் பங்களாவை அடைந்தபோது தோமா வாசலிலேயே நின்றான். “இவளா? இவளை அந்நு சாயிப்பு சாட்டை கொண்டு அடிச்சானே” என்றான்.
தோமா சோதியைக் கூட்டிச் சென்று முற்றத்தில் வைத்தே அவளுடைய முண்டுகோந்தலையை அவிழ்த்து நிர்வாணமாக ஆக்கினான். அவள் தன் கையால் முலைகளைப் பொத்தியபடி கண்ணீருடன் என்னைப் பார்த்தாள். அவளுடைய பின்பக்கம் பருத்து இரு பலாக்காய்களைச் சேர்த்து வைத்தது போல் இருந்தது. தோமா அவள் புட்டத்தில் படீரென்று அடித்து “போ போ” என்றான். அவள் தயங்கி உள்ளே செல்வதற்கு முன் என்னை ஓரக்கண்ணால் பார்த்தாள்.
நான் வராந்தாவில் மீண்டும் கால் மடித்து அமர்ந்துகொண்டேன். தோமா பக்கவாட்டில் சென்று நின்று ஜன்னல் வழியாக உள்ளே பார்த்து சிரித்தான். திரும்பி என்னைப் பார்த்து வா வா என்று கைகாட்டினான். நான் எழுந்து தோமாவின் அருகே நின்றேன். உள்ளே துரை நிர்வாணமாக நின்று தரையில் அமர்ந்திருந்த சோதியின் முகத்தை தன் இடுப்புடன் சேர்த்து, அவள் தலைமயிரைப் பிடித்து இறுக்கி வேகமாக அசைத்தான். அவள் மூச்சுத்திணறி துடித்துக் கொண்டிருந்தாள்.
தோமா என்னிடம் பெரிய பற்களைக் காட்டிச் சிரித்தான். நான் பேசாமல் நின்றேன். கொஞ்ச நேரத்தில் துரை மாட்டுத்தோல் சாட்டையால் சோதியை அடித்துக் கொண்டே நரி குழறுவது போல ஏதோ சொன்னபடி அவளைத் துரத்தி வந்தான். அவள் முலைகள் குலுங்க “என்றே தேவே . . . என்றெ தேவே” என்று அலறியபடி ஓடி வந்து முற்றத்தில் நின்றாள். நிர்வாணமாக வந்த துரை முற்றத்தில் துப்பிவிட்டு உள்ளே போனான். சோதி தரையில் குந்தி அமர்ந்து ஓங்கரித்து கோழையைத் துப்பினாள்.
தோமா அவளை தலைமுடியைப் பிடித்துத் தூக்கி சமையலறைக்குள் இழுத்துக்கொண்டு சென்றான். அவள் "என்றெ தேவே என்றெ தேவே" என்று சொல்லி அழுதுகொண்டிருந்தாள். அவன் உள்ளே சென்றதுமே அவளைக் கீழே தள்ளிப் போட்டு மேலே படுத்துக் கொண்டான். நான் அவன் செய்வதைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப் பழ உண்ணி கீழே இறங்கி வருவதைக் கண்டேன். அது அடுத்த மரம் நோக்கி வேகமாக ஓடிப்போய் ஏறிக் கொண்டது.
நிர்வாணமாக சோதி வந்து என்னிடம் அவளுடைய முண்டு துணியை எடுத்துத் தரச்சொன்னாள். நான் எடுத்துக் கொடுத்ததும் அதை அவள் தோளில் முடிச்சிட்டு தற்றுடுத்துக் கொண்டாள். தோமா பீடி பற்ற வைத்தபடி உள்ளிருந்து வந்து “இந்நாடீ , இதெடுத்தோ” என்றான். அவன் சுட்டிக்காட்டிய பெரிய சட்டியில் பழையசோறும் வான்கோழிக்கறியும் சேர்த்துக் கொட்டப்பட்டிருந்தது. சோதி அந்தச் சட்டியை எடுத்துக்கொண்டாள்.
நாங்கள் நடந்து செல்லும்போது அவள் தலைகுனிந்தே வந்தாள். நான் சட்டியை வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டேன். அவள் திரும்பியே பார்க்கவில்லை. முச்சலோடை அருகே வந்தபோது அவள் சட்டியைக் கீழே வைத்துவிட்டு முண்டுசுற்றை அவிழ்த்து கரையில் வைத்துவிட்டு நீரில் இறங்கினாள். அவளுடைய முலைகள் நீரில் மிதப்பதைப் பார்த்துக்கொண்டு இலஞ்சி மரத்து வேரில் அமர்ந்திருந்தேன். அவள் என்னைப் பார்க்கவில்லை. நீரில் இருந்தபடியே சேற்றுமண் எடுத்து பல் தேய்த்தாள். பிறகு எழுந்து வந்து என்னைத் தாண்டிச் சென்று உடையை எடுத்தாள். அவளை நான் திரும்பிப் பார்த்தபோது அவள் கூந்தல் புட்டத்தில் நீரைச் சொட்டிக்கொண்டிருந்தது.
சட்டென்று சோதி என்னைப் பின்னாலிருந்து வந்து அணைத்துக் கொண்டாள். அவளுடைய குளிரான கனத்த முலைகளை நான் என் முதுகில் உணர்ந்தேன். உடனே நான் அவளை திரும்பித் தழுவிக் கொண்டேன். அவளுடைய கைகளும் கால்களும் என்னை இறுக்கிக் கொண்டன. அவள் என்னை “நாயே நாயே” என்று திட்டிக்கொண்டும் என் முதுகைத் தன் நகங்களால் பிராண்டிக்கொண்டும் இருந்தாள். கடைசியில் என் தோளில் அத்தனை பற்களும் பதிந்து ரத்தம் வரும் அளவுக்குக் கடித்தாள்.
பின்னர் நாங்கள் இருவரும் ஓடையில் இறங்கிக் குளித்தோம். இலவம்பஞ்சு வெடித்ததுபோல சிறிய வெண்பற்கள் காட்டி அவள் சிரித்து என் மீது வண்டலை வாரி வீசினாள். நான் குளித்தபின் என்னுடைய காக்கி நிக்கரையே மீண்டும் அணிந்துகொண்டேன். எனக்கு ஒரே நிக்கர்தான் உண்டு. அவள் எழுந்து தன் உடைகளை அணிந்து கொண்டு சட்டியை எடுத்தாள். என்னிடம் “பயிக்கிணா?” என்றாள். எனக்குப் பசித்தது. “ஆந்நே” என்றேன்.
அவள் ஒரு தேக்கிலையைப் பறித்துப் பரப்பி அதில் குழம்பு கலந்த பழைய சோற்றைப் போட்டாள். நான் வேகமாகத் தின்றேன். “தோனே வேணுமா?” என்று கேட்ட போது தலையாட்டினேன். நானே எல்லா சோற்றையும் தின்றுவிட்டேன். அவள் சட்டியை ஓடையில் கழுவினாள். நான் “நினக்கு நான் மானிறைச்சி தரும்” என்றேன். “எப்போ?” என்றாள். “நெலாவு கறுக்கும்போ . . . நாளையிலெ நான் ஆனை வேட்டைக்குப் போகும்” என்றேன். அவள் என்னைப் பார்த்தபடி கொஞ்ச நேரம் இருந்துவிட்டு “காரிக்கொம்பனையா?” என்றாள். “ஓ” என்றேன்.
சோதி “காரிக்கொம்பனுக்கு மல தெய்வம் மாதி துணையுண்டு... தீயுண்டை அவன்டெ மேலே கொள்ளுகில்ல” என்றாள். நான் மலைதெய்வங்கள் துரைகளைப் பார்த்தால் பயப்படும் என்றேன். மலைதெய்வங்களெல்லாம் இப்போது மலைதாண்டி பாண்டிநாட்டுக்குப் போய்விட்டன என்று தோமா என்னிடம் சொன்னான். சத்திய வேத தெய்வம் மட்டும்தான் இனி மலைகளுக்கு தெய்வம். அது துரைகளுக்குக் கட்டுப்பட்ட தெய்வம். அந்த தெய்வம் யானைகளுக்குக் காப்பு அல்ல. ஆகவே காரிக் கொம்பனை துரை கண்டிப்பாகக் கொல்வார்.
சோதி பேசாமல் எழுந்து சட்டியுடன் நடந்தாள். நான் அவள் பின்னால் சென்றேன். அவளைப் பின்தொடர்ந்து சென்று சத்தியவேத தெய்வத்தைப்பற்றி தோமா சொன்னதைச் சொல்ல விரும்பினேன். சோதியின் குழந்தைகளுக்குத் தேன் கொண்டு கொடுக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அதன் பின்னர் நான் அந்தப் பழ உண்ணியைப்பற்றி நினைக்க ஆரம்பித்தேன்.
சோதியைவிட்டுவிட்டு நான் திரும்பி வந்தேன். தோமா சமையல் அறைக்குள் வாயைத் திறந்து வைத்து கனத்த குறட்டை விட்டுக் கொண்டு தூங்கிக்கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்தபின் மெல்ல உள்ளே போய் சட்டியைத் திறந்து மிஞ்சியிருந்த கோழிக்கறியின் துண்டுகளை எடுத்துத் தின்றேன். அதன்பின்னர் பங்களாவுக்கு வந்தேன். துரை உள்ளே குறட்டை விடும் ஒலி கேட்டது. நான் மெல்ல நடந்து உள்ளே சென்றேன்.
துரையின் மேஜைமீது நீலநிறமான வாத்துக்கழுத்து குப்பியில் சீமைச்சாராயம் இருந்தது. மெல்லிய கண்ணாடியால் ஆன கொக்குக் கால் கோப்பையில் கொஞ்சம் சாராயம் மிச்சம் இருந்தது. நான் சாராயத்தை ஊற்றி நாலைந்து முறை குடித்தேன். பின் அந்தக் குப்பியில் இருந்தும் கொஞ்சம் குடித்தேன். காட்டில் அம்மச்சிப்பலா அருகே பலாப்பழம் பழுத்து உதிர்ந்து அழுகி நாறுவது போல ஒரு இனிமையான குமட்டல் அதற்கு.
அதன் பின் மெல்ல உள் அறைக்குச் சென்றேன். அங்கே அந்த யானைத்துப்பாக்கி சுவரில் மாட்டப்பட்டு நின்றிருந்தது. அதைக் கையில் எடுத்துப் பார்த்தேன். பெண்ணின் கை போலவே மென்மையாக இருந்தது. அதன் குழாயில் என்னுடைய பிம்பம் சப்பிப்போய்த் தெரிந்தது. அதைத் திறந்து குழாய் வழியாகக் கண்ணை வைத்துப் பார்த்தேன். இரண்டு குண்டுகளை அதில் ஒரே சமயம் போட முடியும். குழாய்க்கு ஒரு குண்டு. அதன் வழியாக நான் ஜன்னலுக்கு அப்பால் தெரிந்த காட்டைப் பார்த்தேன். எனக்குப் பாட வேண்டும் போலிருந்தது. எனக்குச் சின்ன வயதில் என் தாத்தா சொல்லித்தந்த பாட்டைப் பாடினேன்.
கன்னங்கறுத்திட்ட பாறையாணே -ஓளே
பென்னம்பெரியொரு பாறையாணே
தும்பிக்கை உள்ளொரு பாறை யாணே -ஓளே
அம்பரம் போலத்தே பாறை யாணே...
2
மறுநாள் அதிகாலையில் நான் குளிருக்குள் எழுந்து தோமாவை எழுப்பினேன். அவன் என்னை "புலையாடி மோனே" என்று திட்டியபடி எழுந்து சிலுவை போட்டபின்பு போய் அடுப்பில் ஒரு சில்லாட்டையைப் பற்றவைத்து காப்பிக்குத் தண்ணீர் போட்டான். நான் சென்று துரையின் சப்பாத்துகளை எடுத்து வைத்தேன். அவற்றை நேற்றே பாலீஷ் போட்டு வைத்திருந்தேன். வராண்டாவில் நான் காத்து நின்றபோது தோமா கையில் பெரிய வெள்ளைத்தகரக் கோப்பையில் சூடான காப்பியுடன் சென்று துரையை எழுப்பினான். துரை தலைக்குமேல் கம்பளியை இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான்.
அவனருகே நின்று தோமா "குட்மானிங்! குட்மானிங்!" என்று நிறைய தடவை சொன்னான். போர் வைக்குள் இருந்து துரை குழறலாக ஏதோ சொன்னான். தோமா அதற்கும் "குட்மானிங்!" என்றான். துரை போர்வையை விலக்கி எழுந்து அமர்ந்து தோமாவின் கன்னத்தில் அறைந்தான். "டாமிட் ஸ்டுபிட் . . . கண்ரி ஃபூல் . . . ஃபக் யுவர் ஆஸ்" என்று அவன் வழக்கமாகச் சொல்வதைச் சொன்னான். அடிபட்ட போதும் தோமா காபியைத் தளும்ப விடவில்லை. "காபி சாய்பே" என்று பவ்யமாக நீட்டினான்.
துரை ஒன்றும் சொல்லாமல் காபியை ஊதி ஊதிக் குடிக்க ஆரம்பித்தான். தோமா அதற்குள் பக்கத்து அறைக்கு ஓடினான். துரை டீ குடித்த பின்னர் நிர்வாணமாக எழுந்து பின்பக்க அறைக்குச் சென்றான். அங்கே ஒரு மர முக்காலியில் ஓட்டை போட்டு வைத்திருந்தான். அதன் கீழே தோமா நாலைந்து தேக்கிலைகளைப் பரப்பி வைத்திருந்தான். துரை முக்காலியில் அமர்ந்து மலம் கழிக்க ஆரம்பித்தான். அப்போது தோமா அவனுக்கு, பனையோலை போலிருந்த மென்மையான கூரிய கத்தியால் ஷேவ் செய்துவிட்டான். முகத்தைத் தைலம்போட்டுத் துடைத்து முடித்த பின்னர் துரையின் பின்பக்கத்தை ஒரு பெட்டியில் இருந்து எடுத்த இலவம்பஞ்சால் நன்றாக நாலைந்து முறை துடைத்தான்.
துரையை ஈரமான டவலால் தோமா துடைத்துவிடுவதை நான் பார்த்துக்கொண்டு நின்றேன். அந்த பங்களாவில் எல்லா கதவுகளும் மிக அகலமானவை. உயரமானவை. முன்வாசல் கதவை மட்டுமே இரவில் மூடுவார்கள். எல்லா அறையும் எல்லா இடத்திலும் தெரியும். துரை எழுந்து ஒரு மரத்தொட்டியில் தோமா கொண்டு வந்து வைத்த வெந்நீரால் தன் முகத்தையும் கைகளையும் அக்குளையும் கழுவிக் கொண்டான். அதன் பின் தோமா அவனைத் துடைத்தான்.
துரை தன் காக்கி கால்சட்டைக்குள் கால்களை நுழைத்து அதன் மீது நிறைய பைகள் தைத்த காக்கி சட்டையை அணிந்து உள்ளே செலுத்தினான். அப்போது அவன் ஒரு மரப்பொம்மை போல ஆகி விட்டதாக எனக்குத் தோன்றியது. முழங்கால்களுடன்கூடிய பெரிய ரப்பர் சப்பாத்துகளைப் போட்ட பின் யானைத்துப்பாக்கியை எடுத்தான். அதன் குழாயைத் திறந்து உள்ளே கண்விட்டுப் பார்த்தான். சுவர் அடுக்குப்பெட்டியில் இருந்து சிறிய அலுமினியப்பெட்டியை எடுத்து அதில் இருந்த சிறிய கரிய புட்டியை எடுத்துத் திறந்தபோது எரியும் தைலமணம் எழுந்தது. அந்தக் கரிய குழம்பை பஞ்சில் தேய்த்து குச்சியில் பொருத்தி உள்ளே விட்டு இழுத்தான். அதே எண்ணைக் குழம்பை துப்பாக்கியின் விரல் வளையத்துக்கு உள்ளே இருந்த இடைவெளிவழியாக விட்டு உள்ளே இருந்த சிறிய சக்கரங்களில் பூசினான்.
என்னிடம் "இவள் ரொம்ப அழகி இல்லையா?" என்று கேட்டு கண்ணைச் சிமிட்டினான். அப்போதுதான் துரை அந்தத் துப்பாக்கியைப் பெண்ணாக நினைப்பது எனக்குப் புரிந்தது. அதை மெல்ல முத்தமிட்டு விட்டு "அவள் வெடி நிறைந்தவள்.." என்று என்னிடம் சொல்லி மடியில் கிடைமட்டமாக வைத்துக்கொண்டான். அதன் வளைவில் என் தோற்றம் ஒரு நிறமாகத் தெரிந்தது.
தோமா ரொட்டியும் பொரித்த கோழியும் பால் இல்லாத காபியும் கொண்டுவந்து பரிமாறிவிட்டு மணியை அடித்தான். துரை சாப்பிட ஆரம்பித்தபோது நான் பேசாமல் நின்றேன். துரை எனக்கு ஒரு ரொட்டித்துண்டை எடுத்து வீசினான். நான் அதைப் பொறுக்கி மண்போக ஊதிவிட்டு வேகமாகத்தின்றேன். அதற்குள் எனக்குக் கோழித்தொடை ஒன்றை அவன் எறிந்தான். துரை சாப்பிட்டு எழுந்ததும் நான் வெளியே சென்றேன்.
எடை குறைவான பெரிய மரப் பெட்டியில் துரைக்குத் தேவையான பொருட்கள் நான்கு நாட்கள் முன்னரே எடுத்து வைக்கப்பட்டிருந்தன. மென்மையான காகிதங்களில் சுற்றப்பட்ட நன்றாக வெயிலில் உலர்த்திய ரொட்டிகள். டப்பாக்களில் காற்று புகாமல் அடைக்கப்பட்ட வெண்ணை. சாராயக் குப்பிகள். மாற்று உடைகள். இன்னும் ஒரு சப்பாத்து. கூடாரம் கட்டும் துணி என்று பலவகையான பொருட்கள். அவற்றை முறையாக உள்ளே அடுக்கவும் திருப்பி எடுக்கவும் என்னால் மட்டும்தான் முடியும்.
துரை தன் தோளில் மாட்டிய தோல்வார் கொண்ட கித்தான் பையில் வடக்குநோக்கிக் கருவி, பாட்டுப்பெட்டி ஆகியவற்றையும் துப்பாக்கிக்குரிய அலுமினியப் பெட்டியையும் புகையிலை டப்பாவையும் வைத்தான். தலையில் கட்டிக்கொள்ளும் விளக்குகள். கையில் பிடித்துக்கொள்ளும் விளக்கு ஆகியவையும் அவனிடம்தான் இருந்தன. என்னுடைய பெட்டிக்குள் பத்து பேட்டரிகள் மேலதிகமாக வைத்திருந்தேன். துரை ஒரு துவாலை, பத்துக் கைக்குட்டைகள் ஆகியவற்றையும் எடுத்துக்கொண்டான். கழுத்தில் தூரநோக்கிக் குழாயைத் தொங்கவிட்டான். துப்பாக்கி தோளில் குறுக்காகத் தொங்கியது. இடுப்பில் கட்டப்பட்ட தோல் பட்டையில் ஒருபக்கம் தோலுறைக்குள் சிறிய கைத்துப்பாக்கியும் இன்னொரு பக்கம் குடிநீர்ப் பையும் தொங்கின. அலுமினியத்தால் ஆன ஊன்றுகம்பு. அதை விரித்துக் குத்தி விட்டு முக்காலிபோல உட்கார்ந்தும் கொள்ளலாம். துரை தயாரானதும் தோமா கொண்டுவந்த இன்னொரு காப்பியை சூடாகக் குடித்துவிட்டு தன்னுடைய காக்கி நிறமான சட்டித்தொப்பியையும் வைத்துக் கொண்டான்.
நான் பெட்டியை என் தோளில் வார்களைப் போட்டு பின்பக்கம் தூக்கிக்கொண்டதும் நாங்கள் கிளம்பினோம். நான் முந்தைய நாளே நன்றாகக் கூர் தீட்டி வைத்திருந்த என்னுடைய நீளமான கத்தியை எடுத்துக்கொண்டேன். துரைபடிகளில் கால் வைத்ததும் "ஜீஸஸ்!" என்று சொல்லி சிலு வைக்குறி போட்டுக்கொண்டான். பங்களாவில் இருந்து இறங்கி இடுங்கலான பாதை வழியாக நாங்கள் காட்டுக்குள் நுழைந்தோம்.
காலைநேரத்தில் காடு தலைக்கு மேல் பறவைகளின் ஒலியால் நிறைந்திருந்தது. இருட்டு விலகாத இலையடர்வின் உள்ளே இளமழை போல பனித்துளிகள் சொட்டின. நானும் துரையும் சில கணங்களிலேயே நன்றாக நனைந்துவிட்டோம். குளிரில் என் உடம்பு சிலிர்த்து அசைந்தது. துரை இருபக்கமும் பார்த்தபடி தனக்குள் ஏதோ முனகியபடி நடந்து வந்தான். துரை அவ்வளவு எளிதில் மூச்சுவாங்குவதில்லை என்பதை நான் கவனித்திருக்கிறேன். ஊரில் வாழ்பவர்கள் என்றால் சீராக மேடேறிச் சென்றுகொண்டே இருக்கும் இந்த ஒற்றையடிப்பாதையில் இதற்குள் மூச்சுத் திணறி நின்றிருப்பார்கள்.
காட்டில் அப்பகுதி முழுக்க காட்டிலந்தை, சீலாந்தி, பெருநெல்லி, கொடுந்தை மரங்களும் தவிட்டைப்புதர்களும்தான். எவையுமே காயோ கனியோ கொட்டையோ தருவதில்லை. மேலே நெடுந்தூரத்துக்கு ஏறிய பின்பு காட்டுச்செடிகளின் அடர்த்திக்குள் சுழலிப்பாறை தெரிந்தது. பாறையின் வெடிப்பு வழியாகத் தண்ணீர் கசிந்து வழிந்தது. பாறையை அடைந்ததும் துரை மூச்சுவிட்டபடி சற்று அமர்ந்துகொண்டார். நான் பெட்டியைத் தரையில் வைத்துவிட்டு அமர்ந்து கொண்டேன். அப்போதெல்லாம் உடனடியாகத் தூங்கிவிடுவேன். எனக்குத் தெரியாத எங்கெல்லாமோ சென்றுகொண்டிருந்து விட்டு குரல் கேட்டதும் திரும்பி விடுவேன். அப்படி நான் போகும் இடங்களும் காடுகள்தான். ஆனால் நான் அங்கே நன்றாகவே ஆங்கிலம் பேசிக்கொண்டிருப்பேன்.
துரை ஒரு சுருட்டைப் பற்ற வைத்தான். சில நிமிடங்கள் ஆழமாக இழுத்துவிட்டு உடனே அதைக் குத்தி அணைத்து திரும்பி தன் இடுப்புப் பைக்குள் வைத்துக் கொண்டபின் "நேற்று அந்தப் பெண்ணை நீயா கூட்டி வந்தாய்?" என்றான். நான் "அவள்தான் இருந்தாள்" என்றேன். "அவளுக்கு நோய் இருக்கிறது. அவளை வரக்கூடாது என்று நான் சொல்லியிருந்தேன். . ."என்றான். நான் ஒன்றும் சொல்லாமல் பார்த்தேன். "பெருச்சாளி போலப் பார்க்காதே . . . இந்தியக் கறுப்புப் பெருச்சாளி. . ." என்று சொல்லி துரை என் மீது ஒரு கல்லை எடுத்து எறிந்தான். "கரடி போல நாற்றமடிக்கிறாள் அந்த வேசி . . . அவளை இனிமேல் கூட்டிவந்தால் உன்னையும் அவளையும் சுட்டுவிடுவேன்" துரை என் கண்களைப் பார்த்து "டாமிட்" என்றான்.
மீண்டும் நாங்கள் கிளம்பி பாறைக்கு அப்பால் சரிந்து இறங்கும் காட்டுச்சாலையில் சென்றோம். அது யானைப்பாதை. அவ்வப்போது தேனெடுக்கும் காணிகளும் சென்றிருக்கலாம். மழைபெய்துகொண்டே இருப்பதனால் இலைகள் வளர்ந்து வழியை மூடியிருந்தன. சில இடங்களில் காட்டு ஈஞ்சையும் துடலியும் முள்கொடிகளை நீட்டியிருந்தன. அவற்றை வெட்டித்தள்ளி துரை வருவதற்கு வழிசெய்துகொடுத்தேன். துரை ஒரு செடியில் இருந்து பச்சைப்பாம்பு ஒன்றை சட்டென்று பிடித்தான். மிகவும் சின்னப் பாம்பு. பச்சைநிறமான அரக்கால் செய்தது போல இருந்தது.
"பார் பச்சைக்கண்ணாடிக் குழாய் போல இருக்கிறது . . ." என்றான் துரை. அது அவன் பிடியில் நின்று நெளிந்து நாக்கைப் பறக்கச் செய்தது. அவனது முழங்கையில் வாலைச்சுற்றி வைத்துக்கொண்டது. நான் முன்னால் சென்றபோது பின்பக்கம் அந்தப் பாம்புடன் துரை மெல்ல ஏதோ சொன்னபடியே வந்து கொண்டிருந்தான். எனக்கு அந்தக் குரலை விட்டு கவனத்தை நீக்கவே முடியவில்லை. மெல்ல மெல்ல என் பதற்றம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் நான் அவன் கையில் நெளியும் பாம்பைப்பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தேன்.
காட்டுக்குள் ஈரம் உலர்ந்து நீராவி எழ ஆரம்பித்தது. எனக்கு வியர்த்துக் கொட்டியது நான் நவரப் பச்சிலைகளைப் பறித்து மென்று சாற்றைக் குடித்து சக்கையை உமிழ்ந்து தாகத்தைத் தணித்துக் கொண்டு நடந்தேன். துரை தன் புட்டியில் இருந்து தண்ணீர் குடித்துக்கொண்டான். பாதையைக் கடந்து சென்ற கொடி காட்டுகும்பளம் என்று கண்டதும் நான் அதைத் தொடர்ந்துசென்று ஒரு கும்பளக் காயைப் பறித்தேன். அதன் சாற்றைக் குடித்து முடித்ததும் என்னுடைய தாகம் முழுமையாக நீங்கியது.
நாங்கள் மீண்டும் அமர்ந்தபோது துரை என்னிடம் "இவள் நல்ல நடனக்காரி இல்லையா?" என்றான். பச்சைப்பாம்பு அதன் வாயைத் திறந்து மூச்சுக்காக ஏங்கியபடி எரியும் கயிறு போல முறுகியது. துரை அதைக் கீழே போட்டு தன் சப்பாத்தால் அதன் தலையை அழுத்தித் தேய்த்தான் அதன் வால் தீயின் நாக்கு போல துடிதுடித்து சப்பாத்தின் பக்கவாட்டு ரப்பரில் அறைந்த பின் மெல்ல சொடுக்கிச் சொடுக்கி அசைவிழந்தது. துரை மீண்டும் அந்த எஞ்சிய சுருட்டைப் பற்ற வைத்து இழுத்தான்.
நாங்கள் மீண்டும் கிளம்பி சுண்டுமலை நோக்கிச் சென்றோம். காட்டுக்குள் வெயில் கண்ணாடிக் குழாய்கள் போலவும், திரைச்சீலைகள் போலவும், காட்டருவி போலவும், பெரிய அடிமரங்கள் போலவும், சில இடங்களில் வெள்ளைச் சுவர் போலவும் விழுந்துகிடந்தது. வெயில் காற்றில் ஆடுவதைக் காட்டில்தான் காணமுடியும். இலைகள் மீது விழுந்த பச்சைநிற ஒளிவட்டங்கள் காற்றில் குளத்து நீரின் ஆம்பல் இலைகள் போல அலையடித்தன. வெயில் எங்கள்மீது அடிக்கவில்லை என்றாலும் நன்றாகப் புழுங்கியது. குளிர்ந்த காற்று மேலே பட்டபோது மெல்ல புல்லரித்தது.
மதிய உணவுக்கு என்று துரை ஒரு சிறிய ஓடையின் கரையில் நின்றான். ஓடையில் தெளிந்த நீர் பாசிபடிந்த உருளைப்பாறைகள் நடுவே சத்தமேதும் இல்லாமல் சாரைப்பாம்பு போல வழுக்கிச் சென்றுகொண்டிருந்தது. தண்ணீர் தேடி வந்த காட்டுச்செடிகள் நீரை நோக்கி அடர்ந்து வரம்பிட்டிருந்தன. பாறைகள் நடுவே கொக்குக்கால் விரல்கள் போல ஏராளமான வேர்கள் தெரிந்தன. துரை ஒரு பாறை மேல் அமர்ந்து கொண்டான்.
நான் என் வாளுடன் காட்டுக்குள் புகுந்தேன். ஒரு நீளமான மூங்கிலை வெட்டி நுனியைச் செதுக்கி அதன் மீது என் இடுப்பில் இருந்து கூரிய ஈட்டிநுனியை எடுத்து ஒரு முறை பாறையில் தேய்த்துவிட்டு இறுகப்பொருத்தினேன். ஈட்டியுடன் தழைகள் நடுவே மெல்ல மெல்ல ஊர்ந்துசென்றேன். என்னை ஒரு சிறுத்தையாகக் கற்பனை செய்து கொண்டேன். சிறுத்தை செல்லும் போது மண் அதிரக்கூடாது. புல் அலையக்கூடாது. சிறுத்தை, மீன் நீரில் செல்வது போல காட்டுப் புதருக்குள் செல்லக்கூடியது.
புதருக்குள் என் எதிரே நான் ஒரு மானைக்கண்டேன். கொம்பு விரியாத கேழைமான். அது படுத்திருந்த இடத்தில் இருந்தே என்னுடைய வாசனையைக் கேட்டு காதுகளை என் பக்கமாகக் குவித்து முன்னங்காலைத் தூக்கி வைத்தது. என்னை அது பார்த்து உடல் சிலிர்த்து எழுவதற்குள் நான் ஈட்டியை எறிந்தேன். ஈட்டியுடன் அது பாய்ந்து ஒரு மரத்தில் முட்டி விழுந்து குளம்புகளை உதைத்துக் கொண்டது. நான் ஓடிச்சென்று அதை நெருங்கி ஈட்டியைப் பிடுங்கி அதன் இதயத்தைப்பார்த்து இருமுறை குத்தினேன். உடைந்த கருங் கல்சில்லு போல ஈரம் மின்னிய கரிய கண்களால் அது என்னைப் பார்த்தது. நேற்று நான் சோதியின் மேலே முரட்டுத்தனமாக இயங்கிக் கொண்டிருந்த போது அவள் கண்கள் அப்படித்தான் இருந்தன என்று தோன்றியது. அவளுக்கு உச்சம் வந்தபோது அந்த மானைப் போலத்தான் உலுக்கிக்கொண்டு தொண்டை கமறும் ஒலியை எழுப்பினாள். அதன் பின் அவள் கண்கள் அப்படித்தான் மெல்ல இமை மூடின.
நான் அந்த மானை அங்கேயே போட்டு என் வாளால் அதன் தோலை உரித்தேன். சதையில் இளஞ்சூடும் துடிப்பும் இருந்து கொண்டே இருந்தது. தொடை நரம்பை வெட்டியதும் ரத்தம் என் கைகளை நனைத்தது. இதயத்தை வெட்டி எடுத்தபோது ஊற்றுப் போல ரத்தம் என் மீது பீறிட்டு அடித்தது. தொடைச்சதைகளையும் மார்புச்சதைகளையும் எலும்பு இல்லாமல் போதிய அளவு வெட்டி எடுத்து பரப்பிய தேக்கிலை மீது வைத்துவிட்டு கீழே கிடந்த கமுகுப் பாளை ஒன்றை எடுத்து பையாகக் கோட்டி அதில் இறைச்சியை நிறைத்து எடுத்துக்கொண்டு ஓடைக் கரைக்கு வந்தேன்.
காட்டில் எப்போதும் ஓடைக் கரையில்தான் காய்ந்த விறகு கிடைக்கும். ஓடைவழியாகச் சென்றபோது பாறைகள் ஓடையை திசை திருப்பிய இடத்தில் நீரில் வந்து மட்கி உலர்ந்த சுள்ளிகளும் மரங்களும் சிக்கி இருந்தன. உலர்ந்த மரங்களைப் பொறுக்கிக் கொண்டு வந்து குவித்தேன். தேக்கிலையில் மான்கறியை நன்றாகப் பொட்டலங்களாகக் கட்டி அதை ஓடையில் எடுத்த களிமண்ணில் பொதிந்து உருட்டி உருளைகளை அடுக்கி விறகு போட்டு தீயை மூட்டினேன். காட்டுக்குள் சென்று இலைகளை ஆராய்ந்து காய்ச்சிலைக் கண்டு பிடித்து, அதன் கொடியைத் தூக்கி வேரைக் கண்டுபிடித்து, கிழங்கைத் தோண்டி எடுத்துக் கொண்டுவந்து தீயில் போட்டேன்.
தீயருகே அமர்த்து கொண்டு கிழங்குகளையும் இறைச்சி உருண்டைகளையும் புரட்டிப்போட்டு சுட்டேன். களிமண் சிவந்து கருகியதும் உருட்டி எடுத்து ஓரமாக வைத்தேன் மூன்று உருண்டைகளைக் கொண்டுசென்று துரை அருகே தேக்கிலையில் வைத்தேன். துரை அதைச் சிறிய கல்லால் உடைத்தான். உள்ளிருந்து வெந்த வாசனையுடன் மானின் நெய் வழிந்தது. கறி உருகி வெந்து வெண்மை கொண்டிருந்தது. துரைக்கு என் பெட்டியில் இருந்து உலர்ந்த ரொட்டி வில்லைகளையும் சாராயக் குப்பியையும் எடுத்துக் கொண்டு சென்று வைத்தேன். அவன் மானிறைச்சியின் நெய்யில் உலர்ந்த ரொட்டியைத் தோய்த்துக் கடித்து மென்று தின்ன ஆரம்பித்தான். நடுநடுவே சாராயத்தையும் ஓரிரு வாய் குடித்தான்.
துரைக்கு உப்பில்லாத கறி பிடிக்கும். எனக்குக் கொஞ்சம் உப்பும் மிளகாயும் தேவைப்படும். வரும் வழியிலேயே காந்தாரி மிளகாய் பறித்து வைத்திருந்தேன். என்னிடம் எப்போதுமே உப்பு இருக்கும். மிளகாயையும் உப்பையும் சேர்த்து பாறையில் வைத்து இடித்து பசையாக ஆக்கி வைத்துக் கொண்டேன். காய்ச்சில்க்கிழங்கை உடைத்து சூடாகப் பிய்த்து எடுத்து மான்கறியில் கலந்து பிசைந்து உப்பு மிளகாயில் தொட்டுக்கொண்டு தின்றேன். என்னால் இரண்டு இறைச்சி உருளைகளை மட்டுமே தின்ன முடிந்தது. துரை இன்னும் ஒரு இறைச்சி உருளை கேட்டான்.
துரை சுருட்டை தீயில் மீண்டும் பற்றவைத்து இழுத்தான். நான் தண்ணீர்விட்டு அதை அணைத்து விட்டு ஓடையில் தண்ணீர் அள்ளிக் குடித்துவிட்டு புறப்பட ஆயத்தமாக என் பெட்டியை நன்றாக மூடிக் கட்டி அதன் வார்களைத் தோளில் மாட்டியபடி அமர்ந்திருந்தேன். மிஞ்சிய எட்டு இறைச்சி உருளைகளைப் பாளைப்பையில் போட்டு கையில் எடுத்துக் கொண்டேன். துரை ஏப்பம் விட்டு துப்பிய படி எழுந்ததும் நானும் பெட்டியுடன் எழுந்துகொண்டேன்.
நாங்கள் மெல்லமெல்ல இறங்கிச் சென்றுகொண்டே இருந்தோம். சுண்டுமலையின் உச்சி மரங்களுக்கு மேல் சாய்ந்த வெயிலில் ஒளிவிட்ட மடம்புகள் மடக்குகளுடன் தெரிந்தது. அதன் ஒருபக்கம் மழைநீர் வழிந்த கரிய தடம். மேலே நீல வானத்தில் இரண்டு மேகப்பொதிகள் மாபெரும் வெண்முயல்கள் போல நின்றன. முயல்களின் காதுகளைக்கூடப் பார்க்க முடிந்தது.
மலையை நோக்கிச் சென்று கொண்டே இருந்தோம். மலை நாங்கள் எத்தனை நடந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் அங்கேயே இருந்தது. காட்டுக்குள் மெல்ல மெல்ல வெளிச்சம் அணைய ஆரம்பித்தது. பறவைகளின் ஒலிகள் கனத்து ஒலித்தன. வானத்தில் கூட்டம் கூட்டமாகக் கொக்குகள் மேற்கு நோக்கிச் சென்றன. குளத்தில் பரல்மீன்கூட்டம் செல்வதுபோல் இருந்தது. கொசுக்கள் புகைப்படலம் போலப் பறந்துவந்து எங்கள் முகங்களில் அப்பின. துரை துப்பிக்கொண்டே இருந்தான்.
காட்டுக்குள் இருட்டு கனத்துக் கொண்டே வந்தது. அப்போதும் சுண்டுமலை தூரத்தில்தான் இருந்தது. அதன் மேல் இன்னொரு பெரிய மேகம் வந்து படிந்து தன் சிறகுகளைத் தாழ்த்தி அமர்ந்திருந்ததைக் கண்டேன். வவ்வால்கள் கலைந்து, சிவந்த ஒளி பரவிய வானத்தில் பறக்க ஆரம்பித்தன. பலவகையான பறவைகள் பெரிய கலவர ஒலியுடன் கூடணைந்த மாபெரும் அயனி மரம் ஒன்றைத் தாண்டிச்சென்றோம். அதன் கீழே பறவை எச்சத்தின் காரவாசனை நிறைந்திருந்தது.
காட்டுக்குள் ஒரு தட்டையான பாறையைக் கண்டதும் துரை அங்கே தங்கலாம் என்று சொன்னான். நான் மேலே ஏறி இடம் பார்த்தேன். பெட்டியில் இருந்து கூடாரத்துணியையும் கயிறுகளையும் ஆணிகளையும் எடுத்தேன். பாறை இடுக்குகளில் ஆணியை கல் வைத்து அறைந்து இறுக்கிய பின்னர் அவற்றில் கயிறு கட்டி இறுக்கி கூடாரக்காம்பை நிறுத்தினேன். கூடாரத்துணியை விரித்து அந்தக் காம்புகளில் இறுகக் கட்டி இழுத்து கூடாரத்தை நிற்கச்செய்தேன். உள்ளே மெத்தைவிரிப்பைப் போட்டு பக்கவாட்டுத் துணிகளையும் தொங்கவிட்டேன். ஊரும் பூச்சிகள் உள்ளே செல்லாமலிருக்க பக்கவாட்டுக் கித்தானை நன்றாக மடித்து உள்ளே செருகினேன். கூடாரம் தயாராகும் வரை துரை பாறை மேல் மல்லாந்து படுத்திருந்தான். அவனருகே யானைத்துப்பாக்கிபடுத்திருந்தது.
துரை கூடாரத்துக்குள் சென்று பார்த்துவிட்டு தன்னுடைய உறக்கப்பையை எடுத்து உள்ளே போட்டுக் கொண்டான். நான் காட்டுக்குள் போய் பெரிய உலர்ந்த மரங்களைத் தூக்கி வந்து போட்டு தீப் பொருத்தினேன். காட்டுக்குள் இருந்து இருட்டு வந்து எங்களைச் சூழ்ந்துகொண்டது. இருட்டுக்குள் தீ புலியின் நாக்கு போல சிவப்பாக எரிந்து புகை விட்டு வெடித்து கங்குகளை மேல் நோக்கி உமிழ்ந்து நெளிந்தது. பெட்டியில் இருந்து மெல்லிய கம்பியை எடுத்து தீயின் இருபக்கமும் நட்டு மரத்துண்டுகளில் கட்டி அதில் அலுமினிய கெட்டிலைத் தொங்கவிட்டேன்.
துரை வந்து தீயருகே அமர்ந்து கொண்டான். நான் என்னிடமிருந்த இறைச்சி உருளைகளை அவனுக்குக் கொடுத்தேன். அவன் அதை வாங்கி உடைத்து அதில் உலர் ரொட்டியைத் தோய்த்துத் தின்றான். புட்டியில் இருந்த சாராயத்தைத் தீயில் லேசாகக் காட்டி அதனுள் இருந்து ஆவி கிளம்பியதும் அந்த ஆவியுடன் சேர்த்தே குடித்தான். நான் டீயை வெள்ளைத் தகரப் போணியில் ஊற்றிக் கொடுத்ததும் சாராயத்தை அந்த டீயில் விட்டு ஊதி ஊதிக் குடித்தான்.
நான் உட்கார்ந்தபடியே தூங்க ஆரம்பித்தபோது துரை ஏதோ கேட்டான். நான் விழித்து புன்னகை செய்தேன். "நீ அந்த வேசியைக் கொண்டு சென்று அவள் கிராமத்தில் விட்டாய் அல்லவா?" என துரை கேட்டான். நான் அதற்குப் பேசாமல் பார்த்தேன். சட்டென்று துரை எழுந்து என்னை ஓங்கி உதைத்தான் "நீ அவளை அனுபவித் தாய் . . . நீ அவளை அனுபவித் தாய். . . நீ என் நாய் . . . நீ என் நாய்" என்று கூவியபடி நாலைந்துமுறை உதைத்தான்.
நான் பக்கவாட்டில் சரிந்து விழுந்து அந்த உதைகளை என் விலாவிலும் தோளிலுமாக வாங்கிக் கொண்டேன். துரை என் மீது துப்பிவிட்டு திரும்பி கூடாரத்துக்குள் சென்றுவிட்டான். நான் எழுந்து தீயை நன்றாகத் தூண்டி விட்டுக்கொண்டேன். தீயருகே என் உடலைக் காட்டிக்கொண்டு அமர்ந்தேன். வானில் கரிய பரப்பில் நட்சத்திரங்கள் மொட்டுகள் போலத் தெரிந்தன. அவற்றில் இருந்து நுண்மையான மழைபோல குளிர் என் மீது கொட்டியது. என் முதுகில் குளிரும் மார்பில் கனலும் இருந்தன. நான் தீயையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு தூங்கிவிட்டேன்.
3
மறுநாள் காலை நான் இருட்டுக்குள்ளேயே எழுந்து கங்குவிட்டிருந்த தீயைத் தூண்டி எரியவிட்டுவிட்டு கெட்டிலுடன் பக்கத்துக் கோடைக்குச்சென்று குச்சி ஒடித்து பல் தேய்த்து மலம்கழித்துவிட்டு கெட்டிலில் தண்ணீர் அள்ளி வந்து தீயில் தொங்கவிட்டுவிட்டு கூடாரத்துக்குள் சென்று துரையை எழுப்பினேன். எழுந்ததுமே அவன் என்னை அடிப்பான் என எண்ணி நான் காத்து நின்றாலும் அவன் என்னை வெறித்துப் பார்த்துவிட்டு பற்களைக்காட்டி "குட்மானிங்" என்றான். நான் அவனை பேசாமல் பார்த்தேன். "நீ ஒரு மிருகம் . . ." என்று அவன் சொன்னான். நான் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை. "டீ இருக்கிறதா?" என்றான். நான் ஆமாம் என்றேன்.
துரை எழுந்து வெளியே வந்து சோம்பல் முறித்தான். இரு முறை கொட்டாவி விட்டபின் நேராகச் சென்று தீயருகே அமர்ந்துகொண்டான். நான் அவனுக்கு டீ கலந்து கொடுத்தேன்."என் பிராந்தியை எடுத்துவா" என்று அவன் சொன்னான். அதில் கொஞ்சத்தை டீயில் விட்டுக் குடித்தான். பின்னர் எழுந்து யானைத் துப்பாக்கியை மட்டும் எடுத்துக்கொண்டு அவனே நடந்து காட்டுக்குள் சென்றான். நான் அவன் பின்னால் சென்றேன். அவன் துப்பாக்கியைத் தரையில் வைத்துவிட்டு ஒரு சிறிய பாறைமீது ஏறி அமர்ந்து மலம் கழித்தான். என்னைப் பார்த்துக் கண் சிமிட்டினான். நான் அவனுக்குத் துடைத்து விட்டதும் அவன் எழுந்து ஓடையில் இறங்கி வாயைக் கொப்பளித்து கழுத்தையும் முகத்தையும் கழுவிக் கொண்டான்.
தலைக்குமேல் பறவைகள் கலைந்து கூச்சலிட்டுக்கொண்டிருந்த காலையில் மங்கலான ஒளியில் காட்டுச்செடிகளின் இலைகள் எல்லாம் தெளிவான பச்சை நிறம் கொண்டிருந்தன. எங்களைத் தாண்டி ஒரு பெரிய மிளா உடல் முழுக்க சருகுகள் ஒட்டியிருக்க திமிர் தெரியும் தசையசைவுகளுடன் சென்றது. துரை அதை நோக்கி துப்பாக்கியைக் குறி வைத்தான். சுடுவதற்காக அல்ல என்று தெரிந்தது. சாய்வாக காட்டுக்குள் விழுந்த இளவெயிலில் காடு தூள்பாசியும் நூல்பாசியும் நிறைந்த நீர் கொண்ட ஒரு பச்சைநிறத் தடாகம் போலத் தெரிந்தது. உள்ளே இறங்கிய வெயிலில் இலைகள் பளபளவென அசைவதை நான் கனவுகளிலும் கண்டிருக்கிறேன்.
ஒருமுறை அமர்ந்து சுருட்டு பிடித்துவிட்டு எழுந்து மீண்டும் நடந்தோம். துரை ஒரு நவர இலையைப் பறித்து "இதை நான் சாப்பிட முடியுமா?"என்றான். "இதைச் சாறு மட்டும்தான் குடிக்கவேண்டும். சக் கையைத் தின்றால் பேதி போகும்" என்றேன். "உனக்கு ஆங்கிலம் பேச வருகிறதே"என்றான். நான் ஒன்றும் சொல்லவில்லை.
சுண்டுமலை அருகே தெரிய ஆரம்பித்தது. அதன் சிகரத்துக்கு விலாவில் இருந்த காடு அதன் மடக்குகளுக்குள் கசிந்து பசுமையாக இறங்கியிருந்ததையும் மரங்கள் சிறிய புற்பூண்டுகள் போலத் தெரிவதையும் கண்டேன். கூர்ந்து கவனித்த போது மலைப்பாறையில் ஒரு மடிப்புவழியாகத் தலைவகிட்டில் பேன்கள் செல்வது போல வரையாடுகள் செல்வதைக் கண்டேன். துரை என்னிடம் "என்ன?" என்றான். நான் வரையாடுகளைச் சுட்டிக் காட்டினேன். துரை தன் துப்பாக்கியைத் தூக்கி அந்த ஆடுகளை விளையாட்டாகக் குறி வைத்தபின் என்னை நோக்கி கண்களைச் சிமிட்டினான்.
நாங்கள் பாதை இல்லாதபடி வளர்ந்து கிடந்த யானைப்புல் பரப்பை வந்தடைந்தோம். உள்ளே செல்லவேண்டுமானால் புல்லை சரித்து பாதையை உருவாக்க வேண்டும். நான் ஒரு பெரிய குச்சியை எடுத்து புல்லை அடித்து சரித்து வகிடு எடுத்து அதன் வழியாகச் சென்றேன். காலில் சதுப்புச்சேறு மிதிபட்டது. யானைப்புல்லின் விளிம்பு பட்டு என்னுடைய உடலெங்கும் கீறல்கள் விழுந்தன. சில கீறல்களில் ரத்தம் கசிந்து எரிந்தது.
நான் முதலில் வாசனையை உணர்ந்தேன். துரைக்குக் கையைக் காட்டினேன். துரை அப்படியே சிலை மாதிரி நின்றான். மிகமெல்ல துப்பாக்கியைத் திருப்பி அதன் கட்டையை தன் அக்குள்சதைமேல் வைத்துக்கொண்டு விசையில் விரலை நுழைத்தான். தரையில் மண்டியிட்டு முன்னால் சென்று நான் யானைப்பிண்டத்தைக் கண்டடைந்தேன். சிலமணி நேரம் முந்திய பிண்டம் அது. சக்கையின் மீது இருக்கும் சாணிப்பசை உலர ஆரம்பித்துவிட்டிருந்தது. இன்னும் சிலமணி நேரத்தில் அதில் வண்டுகள் துளைபோட்டு முட்டை போட்டிருக்கும். பிண்டத்தின் அருகே இருந்த யானையின் காலடித்தடங்களைப் பார்த்தேன்.
துரை அருகே வந்து "அதுதானா?" என்றான். நான் சைகையால் ஆமாம் என்றேன். அந்த அளவுக்கு அகலமான இடைவெளியுள்ள வேறு யானைக் காலடித் தடம் காட்டுக்குள் வேறு இல்லை. துரை அருகே வந்து அந்தக் காலடித் தடத்தைக் கூர்ந்து நோக்கினான். நான் அந்தப் பிண்டத்தைக் காலால் புரட்டிப் பார்த்தேன். ஈஞ்சைச் சக்கையாக இருந்தது. சுண்டுமலையின் தென்புறம் ஈஞ்சைக்காடு அடந்திருக்கும். இரவு அங்கே தங்கி விட்டு காலையில் அங்கிருந்து இங்கே வந்திருக்கிறது. வெயில் ஏறி விட்டதனால் திரும்பி ஈஞ்சைக்காட்டுக்கே சென்றிருக்கும். நான் அந்த புல்லடர்வு முழுக்க ஊடுருவி வேறு பிண்டங்கள் கிடக்கின்றனவா என்று பார்த்தேன். கொம்பன் ஒற்றை யானை. அது இருக்கும் இடத்தில் பிற யானைகள் வராது. மதம் கொண்டு இளகும்போது மட்டுமே அது பிடியானைகளைத் தேடிப் பிற யானைப்பற்றங்களுக்குச் செல்லும்.
"இப்போது எங்கே இருக்கும் அது?" என்று துரை கேட்டான். "ஈஞ்சைக்காடு . . ." என்று நான் சொன்னேன். "அங்கே முள் அடர்ந்திருக்கும். இங்கே திறந்த வெளி இருக்கிறது. இங்கேயே தங்குவோம். காலையில் இங்கே வரும்..." என்று துரை சொன்னான். ஆனால் அங்கே மரங்கள் ஏதும் இல்லை. நேரடியாக வெட்டவெளியில் நின்று யானையை எதிர்கொள்வது சிரமம். நான் அதைச் சொல்லவில்லை. துரையே ஊகித்துக்கொண்டு தன் துப்பாக்கியைக் காட்டி கண்களைச் சிமிட்டினான்.
கொம்பனின் பிண்டத்தை அள்ளி சதுப்புக்குழியில் இருந்த நீரில் கலக்கி உடல்மீது தெளித்துக் கொண்டோம். சுருட்டு பிடிக்கக் கூடாது. சாராயம் குடிக்கக்கூடாது, ரொட்டி இறைச்சியைத் தின்பதும் கூட சரியில்லைதான். ஆனால் நான் எஞ்சிய இறைச்சி உருண்டையை உடைத்துக் கொடுத்தேன். நான் இரண்டு உருண்டை தின்றேன். துரை மிஞ்சிய நான்கு உருண்டைகளைத் தின்றான்.
நாங்கள் புல்நடுவே அமர்ந்து கொண்டோம். எங்கள்மேல் தவளைகள் எம்பிப் பாய்ந்தன. கண்ணாடிவிரியன் இருக்கக்கூடும் என்று நான் மோப்பம் பிடித்துக்கொண்டே இருந்தேன். கொசுக்கள் எங்கள் மேல் பரவி போர்வை போல ஒட்டிக் கொண்டன. துரை துப்பிக் கொண்டே இருந்தான். துவாலையால் முகத்தை மூடி அவை மூக்குக்குள் போவதைத் தடுத்தான்.
இருட்டிக்கொண்டே வந்தது. நட்சத்திரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய ஆரம்பித்தன. மேற்கு வானில் சரிபாதிப் பிறைநிலவு எழுந்துவந்தது. ஒரு தும்மல் ஒலியை அருகே கேட்டேன். பெரிய மிளா ஒன்று என்னருகே நின்று என்னை உற்றுப் பார்த்தது. அதன் கண்களின் மெல்லிய மினுமினுப்பைக் கண்டேன். அது மீண்டும் தும்மியது. துரை "முட்டாள் மிருகம்" என்று சொன்னான். மிருகங்களில் முட்டாளே இல்லை.
துரை அமர்ந்தவாறே தூங்க ஆரம்பித்து பின்னர் முழங்காலைக் கூட்டிவைத்து நன்றாகவே தூங்கி விட்டான். அவன்மேல் கொசுக்கள் ரீங்காரமிட்டன. நான் தூங்காமல் நிலவையும் நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டு நிறைய விஷயங்களை நினைத்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். என்னுடைய அம்மாவைப் பற்றியும் என் ஊரான நெடு மங்காட்டைப் பற்றியும் நினைத்தேன். சிறு வயதில் அம்மா ஃப்ளெட்சர் துரையின் வீட்டில் சமையல்செய்தாள். அப்போதுதான் நான் பிறந்தேன். என்னைச் சிறு வயதில் என் மலைக்குடியில் காட்டுப்பூனை என்று அழைத்தார்கள். அப்போது என் கண்கள் நீலமாகவும் என்னுடைய தோல் கறுப்பாகவும் இருந்தது. பிறகு என் கண்கள் ஓநாயின் கண்கள் போல ஆகிவிட்டன.
என் அம்மாவுக்கு சீக்கு வந்து உடம்பெல்லாம் புண் ஆகியபோது நான் அம்மா சொன்னதைக் கேட்டு பிளெட்சர் துரையிடம் பணம் கேட்கச் சென்றேன். அவர் என்னை "போ போ" என்று சொல்லித் திட்டி குடையை என் மீது எறிந்தார். அம்மா செத்துப்போனபிறகு நான் சிம்ஸன் தோட்டத்தில் வேலைக்குச் சென்றேன். அங்கே நான் காட்டிலேயே இருந்தேன். என்னுடன் எவருமே பேசுவதில்லை. செந்நாய்க் கண்கள் கொண்டவன் தீய தெய்வங்களுக்கு நெருக்கமானவன் என்று சொன்னார்கள். நான் தீய தெய்வங்களைக் கண்டதேயில்லை.
முதல்முறையாக நான் செந்நாயைக் கண்டபோது அது என்னை அடையாளம் கண்டுகொள்ளும் என்று எதிர்பார்த்தேன். முப்பத்திரண்டு வருடம் முன்பு காரி மலைக்காட்டுக்குள் நான் புதருக்குள் குந்தியமர்ந்து தூங்கிக்கொண்டிருந்தபோது அது என்னருகே மிக நெருங்கி வந்திருந்தது. நான் அதன் சீறல் கேட்டுக் கண்விழித்தேன். மாலைநேர மஞ்சள் வெளிச்சத்தில் அதன் தேங்காய் நிறமான பிடரிமுடி சிலிர்த்து நிற்பதைக் கண்டேன். கண்கள் என்னை விழித்துப் பார்த்தன. வாயைத் திறந்து கரிய ஈறுகளில் வெண்ணிறப்பற்கள் தெரிய ர்ர்ர் என்றது. நான் மெல்ல கையை என் இடுப்பில் இருந்த கத்தியை நோக்கிக் கொண்டுசென்றேன். அது பாய்ந்து ஓடி புதருக்குள் வால் சுழற்றி தாவி மறைந்தது. புதருக்குள் இருந்த மேலும் பல செந்நாய்கள் அதைத்தொடர்ந்து ஓடின.
காலையில் நன்றாகக் குளிர ஆரம்பித்தது. நான் கைகளை என் வெற்றுடல் மேல் கட்டி இறுக்கிக் கொண்டேன். வானத்தில் நட்சத்திரங்கள் இடம்மாறிவிட்டிருந்தன. கீழ்வானில் வெள்ளி தெரிந்தது. எனக்கு நன்றாகவே பசித்தது. ஆனால் அப்போது எதையாவது உண்பதைப்போல முட்டாள்தனம் ஏதுமில்லை. அப்போது நான் நிலம் அதிர்வதை உணர்ந்தேன். காற்று மறு திசைநோக்கி வீசியதனால் மோப்பம் கிடைக்கவில்லை. ஆனால் அது நல்லதுதான் எங்கள் மோப்பமும் அதற்குக் கிடைக்காது.
நிலம் அதிர்வது நெருங்கிவந்தது. நான் எழுந்து பார்த்தபோது இருளுக்குள் கொம்பனின் உயரமான மத்தகத்தைப் பார்த்தேன். செம்மண் மீது கொன்றைப் பூக்கள் உதிர்ந்து கிடந்தன. துதிக்கை மடிப்புகளில் மண் வரியடித்து உலர்ந்த சேறு வெடித்தது போல் இருந்தது. தோணி போன்ற இரு பெரும் தந்தங்களும் கீழ் நோக்கி சரிந்திருந்தன. துரையை மெல்ல உலுக்கினேன். அக்கணமே அவன் விழித்துக் கொண்டு தோளில் சரிந்த துப்பாக்கியை சரியாகப் பிடித்துக் கொண்டு மெல்ல எழுந்தான். இருவரும் யானையைப் பார்த்தபடி அசையாமல் நின்றோம்.
துரை துப்பாக்கியை யானையின் மத்தகத்தை நோக்கி நீட்டி குறி வைத்தான். அந்தக் கணங்கள் மிக மெல்ல அடிவயிற்றை தரையில் ஒட்டி தவழ்ந்து முன்னேறும் புலி போல நீண்டன. என்ன செய்கிறான் என்று நான் வியந்தேன். அவன் மீண்டும் மீண்டும் குறி பார்த்தால். கண்முன் நிற்கும் யானையைச் சுடுவதற்கு ஏன் கிளையில் அமர்ந்த பறவையைச் சுடுவதற்குப் பார்ப்பது போல் குறியைத் தீட்டிக் கொள்கிறான்? அவன் விரல்கள் துப்பாக்கிக் கட்டையில் நடுங்கியபடி பற்றியிருப்பதைக் கண்டேன். அவன் மனம் பதறுகிறது என்று ஊகித்தேன்.
மலைதெய்வமான மாதி காட்டுக்குள்ளேயே மிகவும் தலையெடுப்புமிக்க யானைமீது அமர்ந்திருப்பாள் என்று குடிகளில் சொல்வார்கள். சின்னஞ்சிறு குழந்தைகள் மட்டுமே அவளைப் பார்க்க முடியும். மாதி துரையின் கைகளைப் பிடிக்கிறாளா? துரை இதயம் உடைந்து விழுந்து ரத்தம் கக்கிச் செத்துப்போகப் போகிறானா? நான் அவனையே பார்த்தேன். என் இதயம் துடித்து வாய்க்குள் அதன் அதிர்வு தெரிந்தது.
துரையின் விரல் விசையை அழுத்தியதும் துப்பாக்கியின் பூட்டு விடுவித்துக்கொண்டு 'லிலிக்' என்றது. அந்த ஒலியிலேயே கொம்பனின் காதுகள் நின்றன. அதன் மத்தகம் திரும்பி எங்களைப் பார்த்தது. கண்களைச் சந்திக்க முடியவில்லை. காதுகளை அசையாமல் நிறுத்தி அது எங்களைப் பார்த்தது. ஒரு பெரும் காட்டுப்பாறை உயிர் கொண்டு என்னைப் பார்ப்பது போல உணர்ந்தேன். பல்லாயிரம் கோடி வருடங்களுக்கு முன்பே இருந்து கொண்டிருக்கும் பாறை. தெய்வங்கள் பிறப்பதற்கு முந்திய பாறை.
ஆனால் கொம்பன் அசையவில்லை. முன்னால் வரவும் இல்லை. துரை சில அடிகள் பின்னால் நகர்ந்தான். அவன் முதுகில் சட்டை வியர்வையில் ஒட்டியிருந்தது. கன்னங்களில் வியர்வை வழிந்தது. நெற்றியில் நீல நரம்பு புடைத்தது. கொம்பன் மீண்டும் காதுகளை ஆட்டிக்கொண்டு புல்லைப் பிடுங்கி சுழற்றி தன் முன்வலதுகாலில் அடித்து மண் களைந்து, வாழைப்பூ போலத் தொங்கிய வாய்க்குள் போட்டு மெல்ல ஆரம்பித்தது
துரை பெருமூச்சு விட்டான். பின்னர் ஒரு அடி முன்னால் வைத்தான். நான் யானையையே பார்த்துக்கொண்டிருந்ததனால் என்னருகே யானைத்துப்பாக்கி செவி பிளக்க வெடித்த ஒலியில் திடுக்கிட்டு அதிர்ந்தேன். என் செவிகளில் தேனீ ரீங்காரம் ஒலித்தது. யானை திகைத்து நின்றது அதன் முன் காலுக்கு மேல் குண்டுபட்ட இடத்தில் சிவந்த குழி உருவானதைக் கண்டேன். பாறை பிளக்கும் ஒலியுடன் பிளிறியபடி கொம்பன் எங்களை நோக்கி ஓடி வந்தது.
நான் துரையை நோக்கி "ஓடுங்கள் . . ." என்று கூவியபடி யானையை நோக்கி ஓடினேன். துரை பின்பக்கமாக விலகி ஓடினான். நான் யானையை நோக்கிச் சென்று அதனிடம் "ஹோ!" என்று கை நீட்டி ஆர்ப்பரித்தபின் வலப் பக்கமாகத் திரும்பி புல்லை ஊடுருவி வெறி பிடித்தவன் போல ஓடினேன். கொம்பன் பிளிறியபடி என்னைத் துரத்தி வந்தது.
யானையை மனிதன் ஓடி வெல்லமுடியாது. இன்னும் சில கணங்களில் எனக்கு ஒரு மரம் கிடைத்தாக வேண்டும். மரம் மரம் மரம் என்று என்னுடைய மனம் எண்ணிக்கொண்டிருக்க நான் ஓடிக் கொண்டே இருந்தேன். ஒரு பெரிய பலா மரம் என்னை நோக்கி வந்தது. அதில் கனத்த கொடிவள்ளிகள் அடர்ந்து பின்னி மேலேறியிருந்தன. நான் போனவேகத்திலேயே அதைப் பற்றி மேலேறி மூன்றாமடுக்குக் கிளைக்குச் சென்றுவிட்டேன். என் உடலெங்கும் புல்கீறல்களும் முள் காயங்களுமாக ரத்தம் கசிந்தது. என் உடலில் வியர்வை ஆவி பறந்தது. நான் வாயாலும் மூக்காலும் காதுகளாலும் மூச்சு விட்டேன். என் நெஞ்சு உடைந்து விடுவது போலிருந்தது.
யானை மரத்தருகே வந்து ஆவேசமாக மரத்தில் மத்தகத்தால் முட்டியபோது மரம் அதிர்ந்து மேலிருந்து சருகுகள் அதன் மேல் உதிர்ந்தன. அதன் வலதுகால் முழுக்க ரத்தம் சேறாக குமிழிகளுடன் வழிந்திருப்பதைக் கண்டேன். மறுபக்கம் துரை ஒரு பாறை மீது கைகளை ஊன்றி ஏற முயன்றுகொண்டிருந்தான். துப்பாக்கியுடன் அவன் ஓடியதனால் ஏற முடியவில்லை. துப்பாக்கியை உதறிவிட்டு ஓட அக்கணம் அவனால் எண்ண முடியவில்லை.
என்னைப் பிடிக்க முடியாது என யானை புரிந்துகொண்ட வேகம் என்னை ஆச்சரியம் கொள்ளச்செய்தது. நானறிந்து எந்த யானையும் அப்படி சிந்தனை செய்ததில்லை. அது திரும்பி புல் கூட்டத்தை மிதித்து ஒரு பிளவை உருவாக்கியபடி துரையை நோக்கிச் சென்றது. துரையைப் பிடித்துவிடுமெனத் தெரிந்ததும் நான் கூவியபடி பலாமரத்தில் இருந்து குதித்து கீழே கிடந்த கற்களை எடுத்து யானை மேல் வீசினேன். யானை நின்று வால் சுழலத் திரும்பி வெறியுடன் என்னை நோக்கி வந்தது.
நான் மீண்டும் பலா மரத்தில் ஏறிக்கொண்டேன். யானை என் மரத்தின் அடியில் வந்து நின்றபோது வெம்மையான குருதி வீச்சத்தை நான் உணர்ந்தேன். யானை மரத்தில் சாய்ந்து அடிபட்ட காலைத் தூக்கியபடி நின்றது. துதிக்கை மலைப்பாம்பு போல மாபெரும் தந்தங்கள் மேல் ஏறிச் சறுக்கியது. அந்தத் தந்தங்களுக்காகத் தான் துரை வந்திருக்கிறான். தெந் திருவிதாங்கூரிலேயே பெரிய தந்தங்களாக அவை இருக்கும். துரையின் யானை இல்லாத நாட்டில் ஏதோ சீமாட்டியின் பெரிய நிலைக்கண்ணாடியின் இருபக்கமும் அது இருக்கும். இரண்டு வெள்ளைக்கார வேலைக்காரர்களைப்போல.
நான் மூச்சு அடங்கி என் உடல் எரிச்சலை உணர்ந்தபடி யானையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அது மெல்ல எழுந்து மேலே துதிக்கை நீட்டி என்னைப் பிடிக்க முயல்வது போல அல்லது என்னிடம் எதையோ சொல்ல முயல்வது போல நுனியை அசைத்தது. கைக் குழந்தையின் சிவந்த வாய் போன்ற துதிக்கை முனை.
கொம்பன் மெல்லத் திரும்பி வாலைச் சுழற்றியபடி புல்லுக்குள் சென்று மறைந்தது. அது போன பாதை புல்லில் தெரிந்தது. மேலே மரக்கிளைகள் விரிந்த இருண்ட காட்டுக்குள் சென்றதும் அது 'ப்பாய்ய்ங்' என்ற ஒலியை எழுப்பியது. காட்டிலெங்கோ ஒரு பாறை அதை எதிரொலி செய்தது. சற்றுத் தள்ளி மீண்டும் அந்தப் பிளிறல் எழுந்தது.
துரை பாறை மேல் இருந்து கை காட்டி என்னை அழைத்தான் "ஊமைச்செந்நாயே..." நான் கையைத் தூக்கிக் காட்டியபடி இறங்கி அவனை நோக்கிச் சென்றேன். யானை எங்கள் பெட்டியை எதுவும் செய்யவில்லை. துரையும் இறங்கி என்னை நோக்கி வந்தான். ". . . மிருகம் . . . தப்பிவிட்டது . . ." என்றான் துரை. "பூட்டின் ஒலியைக் கேட்டு அது திரும்பாவிட்டால் இந்நேரம் மண்டை பிளந்திருக்கும்."
துப்பாக்கியைப் போட்டுவிட்டு அவன் பெட்டியிலிருந்து சாராயத்தை எடுத்து நேரடியாகவே மடமடவெனக் குடித்தான். ஏப்பம் விட்டு தலையைக் குனிந்தான். இருமுறை ஆவியை உமிழ்ந்தான். "ஜீஸஸ்!" என்று தலையை உலுக்கினான். நான் பெட்டியை மூடி நன்றாகக் கட்டினேன்.
"அதை விடக்கூடாது. அது அதிக தூரம் போயிருக்காது. சீக்கிரமே அதன் ரத்தம் தீர்ந்து விடும் . . ." என்றான் துரை. "அது சிந்திக்கிறது..." என்றேன். "டாமிட்" என்றான் துரை. "நாம் அதை பின் தொடர்ந்து செல்கிறோம் . . . ரத்தத்தைப் பார்த்தே அது போனவழியைக் கண்டுபிடிக்க முடியும் . . ."
நான் ஒன்றும் சொல்லாமல் பெட்டியை எடுத்துக்கொண்டேன்.
4
நாங்கள் சென்ற வழி முழுக்க சிறிய கட்டிகளாக ரத்தம் கையேந்தி நின்ற இலைகள் மீது கொட்டியிருந்தது. ரத்த வாசனையை வைத்தே தடம் பார்த்துச் செல்ல முடிந்தது. ஒரு நுணா மரத்தில் கொம்பன் சாய்ந்து நின்றிருக்க வேண்டும். அந்த மரத் தடியில் ரத்தம் கொட்டி தாமரையிலைகளின் வடிவில் கிடக்க அதன் மேல் படலம் உருவாகி சிறிய பூச்சிகள் வந்து சுற்றிப்பறந்து கொண்டிருந்தன.
"அது எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் ஓடும் . . . எப்போது அதன் ரத்தம் வற்றி உடல் தளர்கிறதோ அப்போது விழுந்து கிடக்கும் . . ." என்றான் துரை. நான் அவனைப் பார்த்துவிட்டு முன்னால் சென்றேன். அந்த யானை வெறும் மிருகம் அல்ல என்றும் அதற்கு நாங்கள் பின் தொடர்ந்து வருவோம் என்றும் தெரியும் என்றும் சொல்ல விரும்பினேன். அந்த யானை இந்நேரம் எங்களை எதிர் பார்த்து அதற்கு மிக வசதியான இடத்தில் நின்றிருக்கும். ஆனால் நான் சொல்லவில்லை. என் சொற்கள் பெரும்பாலும் உதடுகளுக்கு வருவதில்லை.
"நீ ஒரு ஆங்கிலேயனைப்போன்ற இயல்புகொண்டவன் . . ." என்றான் துரை. நான் திரும்பி அவனைப் பார்த்தேன். "நீ எப்போதும் எதையும் சொல்வதில்லை. ஆனால் நீ நினைப்பது என் கண்ணுக்கே தெரிகிறது."
அவன் சொல்ல வருவதென்ன என்று எனக்குப் புரியவில்லை. துரை, "நீ இரவில் என் துப்பாக்கியை எடுத்துப் பார்த்தாய் . . . அதை நான் கண்டேன் என்பதை இப்போது தான் நினைவுகூர்ந்தேன். அது கனவு போல் இருந்தது . . . இப்போது நான் சுடும்போது நீ என் துப்பாக்கியைப் பார்த்ததை எண்ணிப்பார்த்தேன். உன்னால் ஒரே பார்வையிலேயே என் துப்பாக்கியின் விசையைப்பற்றியும் குண்டுபோடும் முறையைப் பற்றியும் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது என்று தெரிந்தது . . . உன் அம்மாவைப் புணர்ந்த அந்த வெள்ளையன் உனக்குள் அந்த அறிவை அளித்திருக்கிறான்."
நான் பேசாமல் நடந்தேன். துரை பேசியபடியே என் பின்னால் வந்தான் "ஆனால் நீ ஒரு நாய் . . . ஆங்கிலேயன் ஒருபோதும் ஒரு போதும் அடிமையாக இருப்பதில்லை. அதை நீ மறந்துவிட்டாய். நீ என் காலை நக்கும் ஒரு நாய் மட்டும்தான். உன்னுடைய செந் நாய்க்கண்களைப் பார்க்கும் போதெல்லாம் உன் தலையைக் குண்டுகளால் சிதறடிக்க எனக்கு வெறி வருகிறது..." துரை மூச்சிரைத் தான் "நீ ஆங்கிலேயரை உன் இருப்பின் மூலமே அவமானம் செய்கிறாய் . . .கடவுளே! உன்னைக் கொல்ல நான் எத்தனை தூரம் விரும்புகிறேன் தெரியுமா?"
நான் அவன் ஏறி வருவதற்காகக் காத்து நின்றேன். "இந்தத் துப்பாக்கியை நீ தொடக்கூடாது . . . இனி இந்தத் துப்பாக்கி மேல் உன் கைபட்டால் நான் உன் மூளையைச் சிதறடிப்பேன் . . . கண்டிப்பாக அதைச் செய்வேன்" என்றான். மேலே ஏற நான் கை கொடுத்தேன். "நீ வெள்ளைப்பெண்ணை எப்போதாவது புணர்ந்தாயா?" நான் ஒன்றும் சொல்லவில்லை "சொல்லித் தொலை ஊமைச்செந்நாயே . . . உன்னைக் கொல்லும்படி செய்யாதேÓ நான் இல்லை என்றேன். "உன் கண்களைப் பார்த்தால் அவர்கள் கூப்பிடுவார்கள். நீ எப்போதாவது வெள்ளைப்பெண்ணுடன் படுத்தாய் என்று தெரிந்தால் நான் உன்னைத் தேடிவந்து கொல்வேன். . ."
பெரிய வேங்கைமரத்து வேர்கள் பரவி சிறிய இறக்கத்தில் மௌனமாக இறங்கினேன். பள்ளத்தில் நின்று கூர்ந்து பார்த்தேன். ரத்தம் சொட்டியிருந்தது குறைந்திருந்தது. ஆங்காங்கே சில இலைகளில் கருஞ்சிவப்பு முத்துகள் மட்டுமே தென்பட்டன "நீ எனக்குத் தேவைப்படுகிறாய் . . . இல்லையேல் உன்னைக்கொல்வதே எனக்குக் கொண்டாட்டம்" என்றான் துரை. நான் வாயில் கைவைத்துக் காட்டினேன். அவன் துப்பாக்கியைத் தோளில் ஏற்றிக்கொண்டான். "நீ மனதுக்குள் ஆங்கிலத்தில் பேசிக்கொள்கிறாய். அதை எங்களிடமிருந்து மறைக்கவே நீ பேசுவதே இல்லை . . . முட்டாள். முட்டாள்தனமான ஊமைச்செந்நாய்" என்று பல்லைக்கடித்தபடி அவன் கிசுகிசுத்தான்.
நான் என் கைகளை ஊன்றி கிட்டத்தட்ட தவழ்ந்து முன்னே சென்றேன். புதர்களுக்கு அப்பால் மண் மீண்டும் மேலேறிச்சென்றது. மேட்டில் இரு பாறைகள் இணைந்து நிற்கும் யானைகள் போல் நின்றன. அதற்கு அப்பால் தான் என்று எனக்குத் தெளிவாகப் புரிந்தது. நான் மெல்ல மெல்லக் காலடி எடுத்து வைத்து பின்னால் வந்தேன். கைநீட்டி "அங்கே" என்றேன்.
"எங்கே?" என்று துரை கிசுகிசுத்தான். "அந்த இரு பாறைகளுக்கு நடுவே . . ." என்றேன். அவன் உடனே அதைப் புரிந்துகொண்டான். "அது ஒரு சாத்தான் . . . சாத்தான்தான் மிருக வடிவில் வந்திருக்கிறது . . . மிருகங்கள் ஒருபோதும் இப்படிச் சிந்திப்பதில்லை!" என்றான். துப்பாக்கியின் எட்டும் தொலைவுக்குள் எங்கே சென்றாலும் மேட்டில் இருந்து யானை வேகமாகக் கீழே பாய்ந்துவந்து தாக்கமுடியும். நாங்கள் பின்வாங்க வேண்டுமென்றால் எங்களுக்குப் பின்னால் உள்ள மேட்டில் ஏற வேண்டும். அதற்குள் அது எங்களைப் பிடித்துவிடும்.
"மேலே ஏறிக்கொள்வோம் . . ." என்றபடி துரை பின்பக்க மேட்டில் ஏறிக்கொண்டான். "இப்போது செய்யக்கூடியது ஒன்றுதான். பொறுமைச் சீட்டாட்டம் . . ." என்றான் துரை "வா . . . வேசிமகனே..வா விளையாடுவோம்" என்று பாறைக்கு அப்பால் நின்ற கொம்பனை நோக்கிச் சொல்லிவிட்டு வேர்மீது ஏறி அமர்ந்துகொண்டான். துப்பாக்கியைத் தோள்மேல் ஏந்திக்கொண்டான்.
துப்பாக்கிக்குண்டுத் தொலைவுக்கு அப்பால் இரு பாறைகளும் மிக அமைதியாகக் காத்து நின்றன. இப்பால் துரை மெல்லிய குரலில் வைதுகொண்டும் துப்பிக்கொண்டும் காத்திருந்தான். நேரம் சென்று கொண்டே இருந்தது. பொறுமை விளையாட்டில் மிருகங்களை வெல்ல எந்த மனிதனாலும் முடியாது என்று சொல்ல நான் விரும்பினேன்.
துரை துப்பாக்கியைத் தோள் மாற்றினான். "உன்னை ஏன் உன் குடிப்பெண்கள் மணந்துகொள்வதில்லை?" என்றான். நான் பாறையையே பார்த்துக்கொண்டிருந்தேன். "உன் கண்களைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள் அல்லவா?" நான் பாறையை விட்டு கண்களை எடுக்கவில்லை.
நெடுநேரம் கழித்து துரை "ஜீஸஸ் . . . இது என்னைக் கொல்கிறது" என்றான். "என் பிராந்தியை எடு" நான் பிராந்தியுடன் ரொட்டியையும் அவனுக்குக் கொடுத்தேன். அவன் ரொட்டியைத் தின்று பிராந்தியைக் குடித்தான். அவன் முகம் வெந்த சீனிக்கிழங்கு போலச் சிவந்தது. மூக்கு காரட்கிழங்கு போலிருந்தது.
இரவுக்கு முன்னால் யானை வெளியே வந்தாக வேண்டும். இருளில் யானைக்கு ஆயிரம் கண்கள். இருட்டிவிட்டதென்றால் மரங்களில் ஏறி அமர்ந்து இரவைக் கழிக்க வேண்டியதுதான். உணவும் மதுவும் எல்லாம் இன்னும் மூன்று நாட்களுக்கு இருந்தன. இத்தனை சீக்கிரம் கொம்பனைக் காண்போ மென நான் எதிர்பார்க்கவில்லை. சுண்டுமலைக்கு அப்பால் தெற்குக் காட்டில் பலாமரங்கள் அதிகம். அங்கேதான் இருக்கும் என்று எண்ணியிருந்தேன்.
காட்டுக்குள் ஒலிகள் மாறுபட ஆரம்பித்தன. நிழல்கள் எங்களை நோக்கி சரிந்து வந்தன "சாத்தானுக்குப் பொறுமை அதிகம் . . ." என்றான் துரை. துப்பிவிட்டு கைகளை உரசிக் கொண்டு மீண்டும் துப்பாக்கியை எடுத்தான். "சரி, இப்போது ஒரே வழிதான். நீ முன்னால் செல் . . . அதைக் கூப்பிடு" என்றான்.
கீழே உருளைக்கற்களும் சருகுகளும் நிறைந்த பள்ளம். அது மழைக் காலத்தைய ஓடைகளில் ஒன்றாக இருக்கலாம். அதில் நான் ஓடித்தப்ப முடியாது. நான் துரையைக் கூர்ந்து நோக்கினேன். துரை என்னை நோக்கி துப்பாக்கியைத் திருப்பினான் "போ . . . இல்லாவிட்டால் உன்னைச் சுடுவேன் . . . கண்டிப்பாகச் சுடுவேன் . . ."
நான் அவனுடைய கண்களைப் பார்த்து ஒரு கணம் நின்றபின் மெல்ல பள்ளத்தில் இறங்கினேன். பாறைகளில் என் கால்கள் இடறின. கொடிகளில் பாதங்கள் பின்னிக் கொண்டன. நான் ஒவ்வொரு உறுப் பாலும் மேலே நின்ற யானையைப் பார்த்தபடி முன்னால் சென்றேன். துப்பாக்கியின் எல்லை வரும்வரை என் பின்னால் வந்தபின் துரை நின்றுகொண்டான். "ம்ம் போ" என்றான். நான் மேலும் முன்னகர்ந்தேன். என் கால்கள் மிகமிகக் கனமாக இருந்தன.
நான் பக்கவாட்டில் ஓடித் தப்பி விட்டாலென்ன என்று எண்ணியதுமே துரை "ஓடினால் உன்னைச் சுடுவேன் . . . நீ தப்பிவிட்டாலும்கூட எல்லா காட்டுக்கும் ஆளனுப்பி உன்னைப் பிடித்துவந்து சுடுவேன் . . ." என்றான்.
நான் மெல்லமெல்ல முன்னேறினேன். பாறைக்கு அப்பால் ஒரு அசைவு நிகழ்வதை என் காது கேட்கவில்லை, சருமம் கேட்டறிந்தது. "ம்ம் . . . போ . . .மேலே போ" என்றான் துரை. நான் மேலும் முன்னால் சென்றேன். எனக்குப் பின்னால் துரை துப்பாக்கியின் பூட்டை விடுவித்தான். அப்பால் யானையின் காதுகள் நிலைக்கின்றன என்று அறிந்தேன்.
நான் எதிர்பார்த்து நின்ற அக் கணத்தில் காட்டுமரம் சரியும் ஓலம் போல பிளிறியபடி கொம்பன் துதிக் கையைத் தூக்கிச் சுழற்றிப் பாய்ந்து என்னை நோக்கி வந்தது. நான் உறைந்து போய் அது வருவதை அணுஅணுவாகப் பார்த்தபடி நின்றிருந்தேன். பின்னர் என் உடல் தசைகள் எல்லாம் துடிக்க திரும்பி ஓட முயலவும் கூழாங்கல்லில் கால் தடுக்கி விழுந்துவிட்டேன். அதே கணத்தில் துப்பாக்கி வெடித்து காட்டுக்குள் பல இடங்களில் எதிரொலி முழங்கியது.
யானை பிளிறியபடி அதே வேகத்தில் வந்து முன்காலை மடித்து முன்னால் விழப்போயிற்று. கனத்த கொம்புகள் நிலத்தில் ஊன்றின. துரை மீண்டும் சுட்டான். யானை பக்கவாட்டில் சரிந்து விலா மண்ணில் அழுந்தி மறுபக்கம் வயிறு புடைத்தெழ விழுந்து துதிக்கையையும் இரு கால்களையும் உதைத்துக்கொண்டது.
நான் எழுந்து யானையை நெருங்கினேன். அது என்னைக் கண்டதும் பிளிறியது. துதிக்கை அடிபட்ட மலைப்பாம்பு போல புழுதியில் புரண்டு நெளிந்தது. பின்னங்கால் மட்டும் நீண்டு அதிர்ந்துகொண்டிருந்தது. கொம்பனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து அதன் மத்தகம் வழியாக மண்ணில் சொட்டியது. அதன் அசைவுகள் அடங்குவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
பின்பக்கம் "செந்நாயே . . ." என்று துரையின் குரல் கேட்டது. கையில் துப்பாக்கியுடன் கோணலான புன்னகையுடன் துரை நெருங்கி வந்தான் "பயமுறுத்தப்பட்டால் நீ மிகவும் தைரியமாகச் செயல்படுகிறாய் . . ." என்றான். யானையை நெருங்கி அதன் மீது தன் சப்பாத்துக் காலைத் தூக்கி வைத்தான். யானையின் வயிற்றிலும் துதிக்கை நுனியிலும் மெல்லிய அசைவு மிச்சமிருந்தது. அதன் கண்கள் மெல்ல மூடிக்கொண்டிருந்தன, அந்த விழிகள் கரிய உடலுக்குள் மெல்ல மெல்லப் புதைந்து மறைவதுபோல் உணர்ந்தேன்.
துரை அதன் தந்தங்களைத் துப்பாக்கியால் தட்டிப்பார்த் தான். "அனேகமாக இதுதான் இந்தியாவிலேயே பெரிய யானைத் தந்தம்" என்றான். "ஆப்பிரிக்க யானைகளின் அளவுக்கே பெரியது . . . ஆமாம், இது ஒரு மன்னன். யானைகளில் ஒரு மன்னன்" என்றான். யானையின் முன்னங்கால் மேல் அமர்ந்து கொண்டு தன் ஒரு சப்பாத்தைக் கழற்றினான்.
"மிகப்பெரியது...கன்ன எலும்பைப் பார்த்தால் எண்பது வயது கூடச் சொல்லலாம். மூத்தவர்" என்றான் துரை என்னிடம். நான் அவன் கண்களிலும் புன்னகையிலும் மகிழ்ச்சியே இல்லாததைக் கவனித்தேன். அதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. பெரிய வேட்டையைக் கொன்றதும் ஏமாற்றம் வந்துவிடுகிறது. ஏனென்றால் அதற்குமேல் வேட்டையாட ஏதுமில்லை. ஆனால் அது மட்டுமல்ல. மிருகம் எப்போதுமே சாவின்மூலம் மனிதனை வென்றுவிடுகிறது. வேறு ஒரு உலகைச் சார்ந்ததாக ஆகிவிடுகிறது. அதை மகத்தானதாகவும் பெருந்தன்மை மிக்கதாகவும் நாம் நினைக்க ஆரம்பித்துவிடுகிறோம் என்று சிம்ப்ஸன் பெரிய துரை ஒருமுறை சொன்னார். புலி ஒன்றைக் கொன்றபின் அவர் அதனருகே நின்று பிரார்த்தனை செய்து கொண்டே கண்ணீர் விட்டார்.
துரை என்னிடம் "நான் புதருக்குள் விழுந்துவிட்டேன். என் தொப்பியை எடுத்துவா" என்றான். என் உடம்பெங்கும் முள். நான் புதரை நோக்கிச்சென்றேன். துடலிமுள் அடர்ந்த குட்டையான புதருக்குள் துரையின் தொப்பி கிடந்தது. அதை எடுக்கச் சென்றபோது என் மூக்கு அதிர்ந்தது. கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு துரையை நோக்கித் திரும்பினேன்.
துரை யானைமீதிருந்து எழுந்து கையை ஆட்டி ஏதோ சொல்ல முயன்றான். துப்பாக்கி நழுவிக் கீழே விழுந்தது. அவன் வாய் இழுத்துக் கொண்டது. அவன் கழுத்து அறுபட்ட கோழி போல நடந்து, சில அடி தூரம் முன்னால் வந்து, குப்புற விழுந்தான். நான் அவனை நோக்கி ஓடி அவன் சப்பாத்துகளை உருவி எடுத்தேன். அவன் சப்பாத்துக்கு சற்றுமேல் கண்ணாடி விரியனின் கடித்தடம் இருந்தது.
நான் இடையில் வைத்திருந்த ஈட்டி நுனியால் அந்த இடத்தைக் கிழித்தேன். பிளந்து ரத்தம் கொட்டிய காயத்தை அழுத்திப் பிழிந்த பின்னர் காட்டுக்குள் ஓடினேன். இலைகளுக்குள் முழந்தாளிட்டுத் துழாவியபடி வெறியுடன் அலைந்தேன். கைநீலிச் செடியைக் கண்டு பிடித்ததுமே கைநிறைய இலைகளைப் பறித்துக்கொண்டு வேகமாக ஓடிவந்தேன். அந்த இலைகளில் ஒரு தளிரை வாயிலிட்டுப் பார்த்தேன். என் குடல்கள் வரை கடும் கசப்பு பரவி உடல் அதிர்ந்தது.
பச்சிலையைக் கசக்கி வெட்டுக் காயத்தில் சாற்றைச் சொட்டினேன். பலா இலையைக் கோட்டி அதில் பச்சிலையைச் சாறு பிழிந்தேன். கிட்டித்துவிட்டிருந்த துரையின் வாயை ஈட்டி நுனியால் நெம்பித் திறந்து உள்ளே சாற்றைச் செலுத்தி வாயில் வாய் வைத்து ஊதி உள்ளே புகுத்தினேன். கண்களிலும் மூக்கிலும் காதுகளிலும் பச்சிலைச்சாற்றைச் செலுத்தியபின் துரையைத் திருப்பிப்போட்டு எஞ்சிய சக்கையை அவன் குதத்துக்குள் செருகினேன்.
துரையின் ரத்தம் கெட்டிப்படாமலிருக்க அவன் கைகால்களை மடக்கி நீட்டியபடி இருந்தேன். கைகால்கள் இறுகியபடியே வந்தன. பின்னர் மெல்ல அவை இலகுவாயின. துரையின் மூக்கு வழியாக கொஞ்சம் கரிய ரத்தம் வந்தது. வெட்டுக்காயத்தில் வழிந்த ரத்தம் கரிய பசையாகவும் தெளிந்த நீராகவும் பிரிந்து வெட்டுக்காயம் மாங்காய் பிளந்தது போல வெளிறித் தெரிந்தது. மீண்டும் பச்சிலை கொண்டுவந்து துரைக்குக் கொடுத்தேன்.
மெல்ல துரையின் இமைகளில் அசைவை உணர்ந்தேன். அது பிரமையா என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆனால் இமை மெல்ல மெல்லத் துடித்து பிளவு விட்டு வெண் விழிகாட்டி பின்பு திறந்து கொண்டது. "தண்ணீர் . . . தண்ணீருக்குள் . . . ஆழம்: என்றான் துரை. அவன் பார்வை தண்ணீருக்குள் இருப்பது போல அலையடிக்கிறது என்று தெரிந்து கொண்டேன். மீண்டும் கண்களில் இரு சொட்டு பச்சிலையை விட்டேன். துரை "கப்பலில் . . . ஒரு ஸீகல் . . . கப்பல் . . . ஆனால் நீ என்னை . . ." என்றான். அவன் உதடுகள் துடித்துக் கொண்டே இருந்தன "நான் வந்து விடுவேன்...பெரியம்மை ஜீஸஸ்" என்று உளறிக்கொண்டிருந்தான்.
சட்டென்று தீப்பட்டவன் போலத் துடித்தெழுந்து தன் துப்பாக்கிக்காகக் கை நீட்டினான். நான் துப்பாக்கிகளை ஏற்கனவே எடுத்து அகற்றியிருந்தேன். அவன் என்னிடம் "நான் உன்னைக் கொல்வேன் ஊமைச்செந்நாயே . . ." என்றான். வறண்ட வாயில் நான் மீண்டும் சாற்றைப் பிழிந்தேன் ". . . இது மிகவும் தித்திப்பானது" என்று நக்கினான். கண்களை மூடிக்கொண்டான்.
இரு சடலங்கள் போல யானையும் துரையும் மண்ணில் கிடந்தார்கள். யானையின் ரணத்தில் சிறிய பூச்சிகள் வர ஆரம்பித்து விட்டிருந்தன. நான் பெட்டியில் இருந்து துணியை எடுத்து யானை ரத்தத்தில் தோய்த்தபின் சிறிய கிழிசல்களாக ஆக்கிக்கொண்டேன்.
துரை மீண்டும் கண்விழித்த போது சோர்வாகவும் தெளிவாகவும் இருந்தான். மெல்லிய குரலில் "எந்த இடம்?" என்றான். "காடு" என்றேன். அவன் கையை ஊன்றி எழுந்து கொண்டான். தலை சுழன்றதனால் மீண்டும் படுத்தான் "எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது . . ." என்றான். நான் அவனுக்குப் பச்சிலைச் சாறு பிழிந்து சேர்த்த தண்ணீர் கொடுத்தேன். "இனிக்கிறதா?" என்றேன்.
"கொஞ்சம் . . ." என்றான். "இன்னும் விஷம் போகவில்லை . . ." என்றேன். துரை "என் தலை சுழல்கிறது" என்றான். "உங்கள் ரத்தத்தில் பாதி நீராக மாறிவிட்டது . . . இனி நீங்கள் நன்றாக ஆவதற்கு ஒரு வருடம்கூட ஆகும் . . ." என்றேன்.
துரை முழுபலத்தாலும் எழுந்து அமர்ந்துவிட்டான். "இங்கே இருக்க முடியாது. . . இன்னும் சற்று நேரத்தில் செந்நாய்களும் நரிகளும் வந்து விடும்." நான் "ஆம்" என்றேன். "என்னைப் பிடித்துக்கொண்டு மெல்ல நடந்தால் போய்விடலாம் . . ."
"கிளம்புவோம்" என்றான் துரை. பெட்டியை நான் சுமக்க முடியாது என்பதனால் அதை நன்றாக மூடி தூக்கி ஒரு மரத்தடியில் வைத்தேன். துரைக்கு ஒரு கம்பு வெட்டி ஊன்றிக்கொள்ளக் கொடுத்துவிட்டு யானைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு நடந்தேன். துரை ஒரு கையை என் தோளில் வைத்து மறுகையில் குச்சி ஊன்றி மெல்ல நடந்தான்.
"நாம் அதிக தூரம் வந்துவிடவில்லை, நல்ல வேளை . . ." என்றேன். யானை ரத்தம் தோய்ந்த கிழிசல்துணிகளை செடிகளில் கட்டியபடி நடந்தேன். சிலநாட்களுக்குப் பின்னர் ஒரு வேட்டை நாய் துணையுடன் வேலையாட்களுடன் வந்து தந்தங்களை எடுத்துக் கொண்டு போகலாம். அழுகிய சதையில் இருந்து தந்தங்களை வெட்டிஎடுப்பது எளிது. யானையின் உடலில் சிறு பகுதிதான் அப்போது மிஞ்சியிருக்கும்.
5
இரவாகும் வரை நாங்கள் நடந்தோம். துரை ஒன்றும் பேசாமல் உரக்க மூச்சுவிட்டபடி, அவ்வப் போது "ஜீஸஸ்!" என்று குரலெழுப்பி அழுதபடி, என் தோளில் எடையை அளித்து தள்ளாடி வந்தான். நான்கு இடங்களில் அமர்ந்து ஓய்வெடுத்துக்கொண்டு எஞ்சிய மதுவைக் குடித்தான். இரவு ரீங்காரத்துடன் வானில் இருந்து பொழிந்து காட்டை மூடியது. துரைக்கு நான் மீண்டும் மீண்டும் பச்சிலைச் சாற்றைக் கொடுத்தேன். அதன் இனிப்பு குறைந்து வந்தது. கசப்பு தெரிய ஒரு வாரம்கூட ஆகும்.
"நாம் ஏதாவது மரத்தின்மேல் ஏறிக்கொள்ளலாம்" என்றேன். துரை "என்னால் மரமேற முடியாது . . . பாறை மீது தங்குவோம்" என்றான். "இன்றிரவு இங்கே நிறைய செந்நாய்களும் நரிகளும் திரண்டு வரும் . . ." என்றேன். ஒரு யானையின் சடலம் அவற்றுக்குப் பலநாள் உணவாகும். துரை பெருமூச்சு விட்டான்.
நான் அவனை அமரச்செய்து விட்டு மரத்தில் ஏறி கொடிகளை வெட்டிக் கயிறாக்கித் தொங்கவிட்டேன். அவன் பலத்த முனகல்களுடன் மெல்லமெல்ல ஏறிவந்தான். அவனை என் பலத்தால் தூக்கி மரக்கிளையில் அமரச்செய்தேன். அதன்பின் காட்டுக்கொடிகளால் அவனைக் கிளைகளுடன் சேர்த்துக் கட்டினேன். "நீங்கள் தூங்கினாலும் பிரச்சினை இல்லை. நான் விழித்திருப்பேன்" என்றேன்.
துரை மெல்ல "ஜீஸஸ்" என்றான். நான் இன்னொரு கிளையில் அமர்ந்து என் தோளை அடிமரத்தில் சாய்த்துக்கொண்டேன். காட்டுக்குள் பன்றிக்கூட்டம் ஒன்று செல்லும் உறுமல்தொகைகள் கேட்டன. சில்வண்டுகளின் ரீங்காரத்துடன் காற்று செல்லும் ஓசையும் இணைந்துகொண்டது. நான் காட்டுக்கு மேல் இலைக்கூரைக்கு அப்பால் கரியவானில் மின்னியபடி விரிந்திருக்கும் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டேன். துரை தூங்கிவிட்டானா என்று தெரியவில்லை.
துரை அசையும் ஒலி கேட்டு நான் "ம்?" என்றேன். துரை "ஊமைச் செந்நாயே" என்றான் "நீ என்னை ஏன் காப்பாற்றினாய்?'' நான் இருட்டுக்குள் பேசாமல் இருந்தேன். "நீ என்னை விட்டுவிட்டுப் போயிருக்கலாமே" நான் ஒன்றும் சொல்லவில்லை.
துரை சற்றுநேரம் பேசவில்லை. பின்பு "என்னைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?" என்றான். நான் அதற்கும் பதில் சொல்லவில்லை. "சொல்." நான் மெல்லக் கனைத்ததுடன் சரி. "நீ சொல்ல மாட்டாய் எனத் தெரியும்" என்றான் துரை. "ஆனால் நீ ஒன்று தெரிந்துகொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன் . . . நான் கெட்டவன் அல்ல. ஆணவம் பிடித்தவனாக இருக்கலாம். இனவெறியனாக இருக்கலாம். ஆனால் நான் உள்ளூர கெட்டவன் அல்ல . . ."
அவன் நான் ஏதேனும் சொல்லக்கூடுமென எதிர்பார்த்தான். பின்னர் தொடர்ந்தான் "ஊமைச் செந்நாயே, நாடுவிட்டு இந்த வெப்ப நாட்டுக்கு வந்திருக்கும் நானும் என்னைப் போன்றவர்களும் எங்கள் சமூகத்தில் உன்னைப் போலவே கடைப்பட்டவர்கள். எங்களை எவரும் மனிதர்களாக மதிப்பதில்லை. ஒரு நல்ல குடும்பத்துப் பெண் எங்களை ஏறிட்டும் பார்க்கமாட்டாள். ஒரு சாதாரண விருந்தில்கூட நாங்கள் கலந்துகொள்ள முடியாது. எங்கள் கழுத்துக்குட்டைகளையும் காலுறைகளையும் தொப்பிகளையும் பார்த்து அவர்கள் சிரிப்பார்கள். அவர்கள் சிரிக்கும் தோறும் நாங்கள் மேலும் கோமாளிகள் ஆவோம் . . . நாங்கள் எங்கள் சமூகத்தில் உள்ள புழுப்பூச்சிகள் தெரியுமா?"
பேச ஆரம்பித்ததும் அவனுக்குப் பேச்சு வந்தது "எல்லாவற்றையும் உதறிவிட்டு இந்த வெயில் காடுகளுக்குள் வந்து பதுங்கிக்கொள்கிறோம். எங்களை வெறுப்பவர்களை நாங்கள் வெறுக்க முடியாது. அவர்கள் எங்கள் எஜமானர்கள். ஆகவே உங்களை வெறுக்கிறோம். சாட்டையால் அடிக்கிறோம். அவமானப்படுத்துகிறோம். நீயே பார்த்திருப்பாய், அடிமைகள் அனைவருமே நாய் வைத்திருப்பார்கள்."
நெடுநேரம் இருவர் நடுவே இருள் மட்டும் இருந்தது. பின்புதுரை "நீ அசாதாரணமான மனிதன். என்னைவிட நீ எத்தனையோ பெரியவன். நான் சாதாரணமானவன் . . . ஆனால் நான் உனக்கு ஏதாவது தரவேண்டும் . . . பதிலுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும். உனக்கு என்ன வேண்டும்?" அவன் என்னை நோக்கி கை நீட்டி என் முழங்காலைத் தொட்டான். அவன் கை சூடாக நடுங்கிக்கொண்டிருந்தது "சொல் . . . உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்?"
நான் ஒன்றும் சொல்லாமலேயே இருந்தேன். என் முழங்காலைப் பிடித்து அவன் உலுக்கினான் "சொல் . . . நிறைய பணம் தருகிறேன். கீழே கிராமத்துக்குப் போய் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு நிலம் வாங்கி வீடுகட்டி விவசாயம் செய் . . ." அவன் மேலும் உலுக்கினான் "சொல் என்ன வேண்டும் உனக்கு? அந்த சோதியைத் திருமணம் செய்துகொள்கிறாயா? அவளைக் கட்டாயப்படுத்தி உன்னை மணக்கச் செய்கிறேன் . . ."
நான் பேசாமலிருந்ததும் அவன் வெறிகொண்டான் "சொல், முட்டாளே, சொல் . . . ஊமைச்செந் நாயே . . . உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்? சொல். வாயைத் திறந்து சொல் . . . ஏன் பேசாமலிருக்கிறாய்?"
நான் மெல்ல, "ஏனென்றால் நான் ஒரு ஊமைச்செந்நாய்" என்றேன். அவன் தளர்ந்து மெல்ல சாய்ந்துகொண்டான். "நான் உன்னிடம் சொல்வதெல்லாம் இவ்வளவுதான். நீ என் நண்பன். என் சகோதரன். என் வாழ்நாளெல்லாம் நான் உன்னை நினைத்திருப்பேன் . . . ஒரு நாளும் உன் நினைவை நான் இழக்கமாட்டேன்" அவன் குரல் தழுதழுத்திருந்தது.
அதன்பின் அவன் பேசவில்லை. ஆனால் அவன் இரவெல்லாம் தூங்கவில்லை. பெருமூச்சு விட்டபடியும் நெளிந்தபடியும்தான் இருந்தான். இருமுறை தண்ணீர் கேட்டான். விடியற்காலையில் அவன் சற்றுத் தூங்கிவிட்டிருந்தான்.
தலைக்குமேல் பறவைகளின் ஒலி கேட்டபோது நான் எழுந்து அவனை எழுப்பி அவன் கட்டுகளை அவிழ்த்தேன். அவன் முகம் தெளிவாக இருந்தது. அது தூங்கியதனால் இருக்கலாம். அல்லது இரவு அவன் பேசியதனாலும் இருக்கலாம். என்னிடம் "இன்று நானே நடப்பேன் என்று நினைக்கிறேன்"என்றான். நான் புன்னகை செய்தேன்.
காட்டுக்குள் இறங்கி இருவரும் சென்றோம். அவன் சற்று திடமாகவே நடந்தான். ஏற்றங்களில் மட்டும் நான் சற்றுப் பிடிக்க வேண்டியிருந்தது. மலைப்பாதை பெரிய குன்றின் விலாவில் வளைந்து சென்றது. கீழே மிக ஆழத்தில் பாம்புச் சட்டை போல ஆறு ஓடும் பள்ளம் தெரிந்தது. "அது காரோடையா?" என்றான். நான் ஆம் எனத் தலையசைத்தேன்.
அவனை மரத்தடியில் நிறுத்தி விட்டு நான் காட்டுக்குள் சென்றேன். பாதையோரத்தில் சிறிய பாறை ஒன்றின் இடுக்கில் ஊற்று கசிந்து அப்பால் பள்ளம் இறங்குவதைக் கண்டேன். நீரை அள்ளிச் செல்ல ஒரு கமுகுப்பாளை எடுத்து கோட்டிக்கொண்டிருந்தபோது சீறல் ஒலியைக் கேட்டேன். என் முன்னால் மாங்கொட்டை நிறத்து உடலுடன் ஒரு செந்நாய் நின்றது. அதன் பழுப்புக்கண்களைப் பார்த்துக் கொண்டே நான் காலைத் தூக்கிப் பின்னால் வைத்தேன்.
புதர்களுக்குள் மெல்லிய அசைவுகளாக நான் செந்நாய்களைக் கண்டேன். எந்த திசை நோக்கி விலகுவது என நான் கண்களை மட்டும் திருப்பிப் பார்ப்பதற்குள் செந்நாய் ஒன்று என் விலாப்பக்கமிருந்து என்னைத் தாக்கியது. யானைரத்தம் தோய்ந்த துணி அங்கே இருந்தது. அதை முகர்ந்து பின்னால் வந்த கூட்டம் அது. நான் என் இடுப்புத் துணியை உருவிவிட்டுக்கொண்டு பாய்ந்து அந்தப் பாறையில் ஏறினேன். என் அலறல் கேட்டு துரை திரும்பிப் பார்த்து "ஜீஸஸ்!" என்ற படி தன் கைத்துப்பாக்கியை உருவி இருமுறை சுட்டான்.
காடே ஒலியில் அதிர செந்நாய்கள் வால் சுழற்றி எம்பிப்பாய்ந்து புதர்களுக்குள் விலகி ஓட துரை என்னை நோக்கி வருவதைப் பார்த்திருந்தபோது காட்சி சற்றே ஆடுவதை உணர்ந்தேன். அதைப் புரிந்து கொள்ளும் சில கணங்களுக்குள் நான் நின்றிருந்த சிறிய பாறை மண்ணுடன் பெயர்ந்து சரிவில் இறங்கியது.
நான் அதிலிருந்து குதித்து ஒரு தவிட்டைச்செடியைப் பற்றினேன். பாறை பெயர்ந்து உருண்டு வேகம் கொண்டு தம்ம்ம் என்ற ஒலியுடன் ஆழத்துக்காட்டை அடைந்தது. தவிட்டைச்செடி என் எடையைத் தாங்காமல் பிடுங்கப்பட்டு வந்தது. நான் பல்வேறு செடிகளைப் பிடிக்க முயன்று ஈரமண்ணில் வழுக்கி வழுக்கி கீழிறங்கி செங்குத்தான சரிவின் விளிம்பில் நின்ற ஒருவேரைப் பற்றிக்கொண்டு தொங்கினேன். மண்ணில் ஊன்ற முயன்று வழுக்கிய என் கால்களுக்குக் கீழே ஆழத்தைப் பார்க்காமலேயே உணர்ந்தேன்.
துரை ஓடிவந்து மேலே குப்புறப்படுத்துக்கொண்டு "பயப்படாதே . . . பயப்படாதே . . . ஒரு நிமிடம். . ." என்று கூவினான். தன் இடுப்பில் இருந்து பெல்ட்டை உருவி அதன் ஒரு நுனியைத் தன் கையில் சுற்றிப்பிடித்துக்கொண்டு அதை நீட்டினான்.
பெல்ட் என் முகத்தருகே வந்தது. என் வலக்கையை நீட்டி அதைப் பிடித்தபடி மேலே பார்த்தேன் "பிடித்துக்கொள்...நான் இழுக்கிறேன்" என்று அவன் கூவினான்.
நான் "நரகத்துக்குப் போ!'' என்று அவன் கண்களைப் பார்த்துச் சொல்லி காறித் துப்பிவிட்டு என் பிடிகளை விட்டேன். அடியாழத்தில் விரிந்திருந்த பசுமையான காடு பொங்கி என்னை நோக்கி வர ஆரம்பித்தது.
******
நன்றி: உயிர்மை இதழ் நவம்பர் 2008
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
1 கருத்துகள்:
என் வாழ்வில் இனிய தருணம் இதை படித்ததுதான்.. ஒரு காட்டில் பயணித்த உணர்வு..
மிக்க நன்றி..
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.