Feb 18, 2012

பாதுகை – பிரபஞ்சன்

இரண்டு பெருச்சாளிகள் பக்கத்தில் பக்கத்தில் நிற்பதுபோல அந்தச் சப்பாத்துகள் இருந்தன. புத்தம் புதிய சப்பாத்துகள். முகம் பார்த்துத் தலை சீவிக் கொள்ளலாம் போன்ற பளபளப்பு. வாசலில் காய்ந்த வெயில் வெளிச்சம் பட்டுக் கறுப்பு மின்னல் மாதிரி அலைகள் ஒளிர்ந்தன.

பொன்னுத்தம்பி அந்தச் சப்பாத்துக் குழந்தைகளைப் பார்த்தான். கறுப்பு இரட்டைக் குழந்தைகள். வெள்ளைக்காரத் தெருவில், துரைமார்களுக்கு மட்டுமே பாதுகைகள் செய்prabanயும் மாடன் சிரத்தையோடும் ஆர்வத்தோடும் செய்திருந்தான் அவற்றை. விலை கொஞ்சம் கூடுதல்தான்.  அதற்கென்ன செய்ய முடியும். துரைமார்கள் கொடுக்கிற கூலியைத் தானே தானும் கொடுக்க வேண்டியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். ரொம்ப நாள் ஆசை அன்று நிறைவேறியது பொன்னுத் தம்பிக்கு துரைமார்களைப் போலவே படித்து அவர்களோடேயே தொழிலும் செய்கிறவன். அவர்களைப் போலவும் உடுத்த வேண்டாமா என்ன?

கஞ்சி முடமுடப்பில் நிமிர்ந்து கத்தி மாதிரி நின்ற கால் சராய்களின் மடிப்பு பழுதுபடா வண்ணம் வாகாக உட்கார்ந்து கொண்டு, மேஜோடுகளை எடுத்தான். மேஜோடுகளும் புதியவைதான். பாம்பு உரித்த சட்டை மாதிரி, மெருகும் மென்மையுமாய் இருந்தன அவை. இரண்டு கால்களிலும் மேஜோடுகள் அணிந்து முடித்து, சப்பாத்துகளை எடுத்தான்.

மேலே படிந்திருந்த தூசை, அவற்றுக்கு நோகாமல் தட்டிக் சுத்தம் செய்தான். ஒவ்வொன்றிலும் காலை நுழைத்துக் கயிற்றால் இழுத்துக் கட்டிக் கொண்டான். வளர்ப்பு நாய்க்குட்டி காலைக் கவ்வியது மாதிரி சப்பாத்துகளும் கவ்விக் கொண்டன. நாலடி நடந்தான்.

என்ன சுகம். நடக்கவே சந்தோஷத்தையும் உந்துதலையும் கம்பீரத்தையும் கூட அவை தந்தன. ஏழெட்டு வயது குழந்தை மாதிரியும் இருந்தன.

திண்ணையில் பொன்னுத்தம்பியின் அப்பா மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு உட்கார்த்திருந்தவர் மகனைப் பார்த்தார். எழுந்து நின்றார்.

அப்பாவுக்குக் கூன் போட்டிருந்தது. முதுமை காரணமாக வந்த கூன் அல்ல அது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக வெள்ளைகாரர் வீட்டுப் பட்லர் முதல் வெள்ளை நிறத்தோரைக் காணும் தோறும் குனிந்துகுனிந்து வணங்கியதால் ஏற்பட்ட வளைவு. வழக்கம்போல அவர் சொன்னார்.

“பத்ரம்பா, பத்திரம்! துரைகளோடு வாழ்க்கை நடத்தறது பேயோட சம்சாரம் பண்ணற மாதிரி. எப்போ மரம் ஏறும் எப்போது இறங்கும்னே கண்டுபிடிக்க முடியாது. கும்பிட்டு வாழனும். கும்பிட்டவன் கூழ் குடிப்பான். வம்பிட்டவன் வைக்கோல் தின்பான்னு பெரியவங்க சொல்லுவாங்க.“

வழக்கம்போல அந்த உபதேசங்களை இடக்காதில் வாங்கி வலக்காது வழியே வெளியேற்றிவிட்டு வீதியில் இறங்கினான் பொன்னுத்தம்பி

வழக்கமாகப் புஷ் வண்டியில்தான் தம்பி நீதிமன்றத்துக்குப் போவான். அன்று நடந்தே போவது என்று முடிவெடுத்தான். பொட்டு லாடமும் முந்திரி லாடமும் அடித்த சப்பாத்து ‘நடநட‘ என்று சொல்லியது அவனிடம். தகரத்தில் சுத்தியலை அடித்தமாதிரி விநோத சப்தங்களை எழுப்பிக்கொண்டு ஒரு கறுப்புத் துரை வீதி வழி போவதைத் திண்ணையில் இருந்தவர்கள் பார்த்து, எழுந்து நின்றார்கள். நிற்பதன் மூலம், அந்த உத்தியோகஸ்தருக்குத் தம் மரியாதையைப் புலப்படுத்திக் கொண்டார்கள். தம்பியை அவர்கள் அறிவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் சப்பாத்து அணிந்திருக்கிறானே! ஆகவே பெரிய உத்தியோகம் வகிப்பவனாகவே இருக்க வேண்டும். போகிற வருகிறவர்கள் நிமிர்ந்து நின்று கும்பிட்டார்கள். மிஷன் தெருவில் அடைத்துக்கொண்டு நெருக்கமாக நின்றிருக்கும் பூவரச மரங்கள் வெயிலைத் தாங்கித் தெருவுக்கு நிழலைத் தந்து கொண்டிருந்தன. பொன்னுத்தம்பி நிதானமாக நிமிர்ந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்தான்.

நீதிமன்றம் தொடங்கியிருந்தது. கனம் நீதிபதி ஏற்கனவே தம் ஆசனத்தில் அமர்ந்துவிட்டிருந்தார். அரசு வழக்கறிஞரும் ஏனைய வழக்கறிஞர்களும் தத்தம் ஆசனத்தில்அமர்ந்திருந்தனர். யாருடைய வழக்கொன்றோ எடுத்துக்கொள்ளப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

நடுவானத்துக்குள் நின்றவாறே பொன்னுத்தம்பி தலைகுனிந்து “வணக்கம், கனம் நீதிபதி அவர்களே!“ என்று பிரான்சே மொழியில் பணிந்தான்.

கறுப்பாக ஒளிவீசும் அவன் சப்பாத்துகளை மேலிருந்து குனிந்து கவனித்தார் நீதிபதி. பொன்னுத்தம்பிக்கும் கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது.

வெள்ளைப் பளிங்குக்கல் மாதிரியான நிறம் நீதிபதிக்கு. இந்தியாவுக்கு வரும்போது மாசு மருவற்ற பளிங்குச் சிற்பம் மாதிரியே இருந்தார் அவர். இந்தியச் சூரியனின் உஷ்ணத்தைத் தாங்க மாட்டாது, முகப்பரு மாதிரி சிவப்புப் புள்ளிகள் அவர் முகத்தில் ஏற்பட்டு இருந்தன. நீலக்குண்டுகள் மாதிரி இருக்கும் அவர் கண்கள் முதல் தடவையாகச் சிவந்ததை முதல்முறையாக அப்போதுதான் பார்த்தான் பொன்னுத்தம்பி.

“நீங்கள் காலில் அணிந்திருப்பது சப்பாத்துத்தானே?“ என்றார் நீதிபதி. அவர் குரல் வழக்கத்துக்கு மாறாக உயர்ந்தும் கறுத்தும் இருந்தது.

பொன்னுத்தம்பி ஒருமுறை குனிந்து தன் சப்பாத்துகளைப் பார்த்தவாறே, “ஆம், கனம் நீதிபதி அவர்களே!“ என்றான். நீதிபதிக்கு நிகராக பிரான்சே மொழியின் அழகோடும், உச்சரிப்போடும்!

மறுப்புக்கு உரிய அடையாளமாக, நீதிபதியின் தலை அசைந்தது. “தங்கள் நடத்தைக்கு நான் வருந்துகிறேன். மிஸ்யோ பொன்னுத்தம்பி பிள்ளை! என் மன்றத்துக்குள் தாங்கள் சப்பாத்து அணிந்து வருவதை நான் ஆட்சேபிக்கிறேன்.“

பொன்னுத்தம்பி நீதிபதியின் கால்களைப் பார்த்தான். அவனது சப்பாத்துக்களைப் போலவே அவரும் சப்பாத்து அணிந்திருந்தார். பிரான்ஸ் தேசத்துக்காரரும் அரசு தரப்பு வழக்கறிஞருமான அவன் சகாவும் அவனது போன்ற சப்பாத்துகளையே அணிந்திருந்தார். தமிழ் வழக்கறிஞர்கள் இருவர் மட்டும் கோட்டும், பஞ்சகச்சமும் அணிந்து வெறும் காலுடனேயே இருந்தார்கள் என்பதையும் கவனித்தான்.

பொன்னுத்தம்பி நிமிர்ந்து நேராக நீதிபதியைப் பார்த்துச் சொன்னான். “கனம் நீதிபதி அவர்களே! என் நண்பரும் அரசு வழக்கறிஞருமான இவரும், மரியாதைக்குரிய தாங்களும் சப்பாத்து அணிந்து மன்றத்துக்குள் இருக்கும்போது, நான் மட்டும் அணியக் கூடாது என்று தாங்கள் சொல்லும் கட்டளையை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.“

நீதிபதியின் வெண்பளிங்கு முகம் செங்கல்லாகச் சிவந்ததைத் தம்பி கண்டான். இகழ்ச்சி கலந்த சிரிப்பு ஒன்று அவரிடமிருந்து வெளிப்பட்டது.

“மிஸ்யோ பொன்னுத்தம்பி பிள்ளை! தாங்கள் இந்தியர், இந்தியப் பழக்க வழக்கங்களையே தாங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று நாம் அபிப்பிராயப் படுகிறோம்.“

நீதிபதியின் மனக்கருத்தை இப்போது பொன்னுத்தம்பியால் புரிந்துகொள்ள முடிந்தது. அவரைப்பார்த்து அவன் சொன்னான். “கனம் நீதிபதி அவர்களே, மரியதைக்குரிய இந்த மன்றத்துக்குள் தாங்கள் பிரான்ஸ்காரராகவோ, நான் இந்தியனாகவோ பிரவேசிக்க வில்லை. நீதியைப் பரிபாலனம் செய்யவே வந்திருக்கிறோம். வழக்கறிஞர்கள் என்ன உடை உடுத்த வேண்டுமோ அந்த மரபுப்படி நான் உடுத்தியிருக்கிறேன். ஐரோப்பிய வழக்கறிஞர்கள் இன்னவிதமாயும் இந்திய வழக்கறிஞர்கள் இன்னவிதமாயும் உடுத்த வேண்டும் என்ற நியதியை நம் நீதிமன்றம் ஏற்படுத்தவில்லை. ஆகவே நான் எந்த விதமான உரிமையையும் மீறும் பிரச்சினை எழவில்லை. தாங்கள், நான் சப்பாத்து அணிந்து வருவதை மறுப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவி்ல்லை.“

மாபெரும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியான, வணக்கத்துக்குரிய ஒரு நீதிபதியைப் பார்த்து, அடிமை நாட்டைச் சேர்ந்த ஒரு சாதாரண மனிதர், முகத்துக்கு நேரே தன் எதிர்ப்பைப் புலப்படுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் அப்போது நிகழ்ந்து முடிந்திருந்தது.

நீதிபதி எழுந்து நின்றார். சபையும் எழுந்து நின்றது.

“தாங்கள் வரம்புக்கு மீறிப் பேசினீர்கள். எங்கள் காலனி நாட்டைச் சேர்ந்த ஒருவர் இப்படிப் பேசியது தவறானது மட்டுமல்ல, மரியாதை குறைவானது. ஐரோப்பிய கனவான்களோடு தங்களை ஒப்பிட்டுப் பேசுவதை நான் அங்கீகரிக்க முடியாது. என் மன்றத்துக்குள் தாங்கள் சப்பாத்து அணிந்து வரக்கூடாது என உத்தரவிடுகிறேன். வருவீராயின், தங்கள் வழக்கறிஞர் உரிமை பறிக்கப்படும் என்பதை அறிவீராக! தாங்கள் வெளியேறலாம்“ என்று கூறிவிட்டு நீதிபதி வேகமாகச் சென்றுவிட்டார். அவரைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞரும் சென்றார்.

பொன்னுத்தம்பியின் சகாவும் இந்திய வழக்கறிஞர்களுமான இருவர் மாத்திரம் அரங்கில் இருந்தார்கள். சுப்பிரமணிய ஐயர் அவன் கைகளைப் பற்றிக்கொண்டு சொன்னார். “பிள்ளைவாள், பெருமைக்குரிய காரியம் பண்ணி விட்டீர்கள். நாம் எந்தவித்தில் தாழ்ந்து போய்விட்டோம்? அவர்களுக்கு நிகராக நாமும் படிக்க வில்லையா? நம் சட்ட ஞானத்தை வெளிப்படுத்தவில்லையா? இதை விட்டுவிடக் கூடாது? பிள்ளை! கடைசி வரைக்கும் ஒரு கை பார்த்து விடுவோம்!“

வீரபாகு, தம்பியைத் தழுவிக் கொண்டார். “மிஸ்யோ பிள்ளை! பிரெஞ்சிந்திய வரலாற்றில் புதிய அத்தியாயத்தை இன்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். நிறத் திமிருக்கு எதிராக இன்று நீங்கள் வைத்த நெருப்பு ஒரு சினனப் பொறி. இந்தப் பொறிதான் வளர்ந்து நாளைக்கு இந்தக் காட்டையே அழிக்கப் போகிறது, பாருங்கள்!“

இருவரும் சென்ற பிறகும் பொன்னுத்தம்பி அங்கேயே நின்று கொண்டிருந்தான். அவமானப்படுத்தப்பட்ட உணர்வு அவனை நகரவொட்டாமல் அடித்தது. பிடித்துக் கட்டிவிட்டது போன்று இருந்தது. சிரமப்பட்டு வெளியே வந்தான்.

வெயில் தகித்தது. அருகே கடல் அலை புலம்பும் குரல் கேட்டது. வண்டிக்காரன் ஒருவன். “வர்றீங்களா ஏஜமான்?“ என்று கேட்டான் எதையும் காதில் வாங்கும் நிலையில் அவன் இல்லை. கடற்கரையை ஒட்டி, கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு, மெல்ல வீட்டை நோக்கி நடந்தான் தம்பி.

நிலவு உச்சிக்கு வந்துவிட்டிருந்தது. நட்சத்திரங்களே இல்லாத வானம். குழந்தைகளே இல்லாத பள்ளிக்கூடம். வீடுகள் இருட்டுப் போர்வைக்குள் முடங்கிக் கொண்டிருந்தன. இந்த வீடுகளுக்குத்தான் எத்தனை முகங்கள். பகலில் ஒரு முகம். இரவில் வேறொரு முகம். மனிதர்களைப் போலவே வீடுகளுக்கும் முகம் அமைந்துவிடும் போலும்!

மொட்டை மாடியில் உலவிக் கொண்டிருந்தான் தம்பி. தூக்கம் வரவில்லை. வருமா என்ன? நடுத்தெருவில் வேஷ்டி உரியப்பட்டது போல், கண்ணுக்குத் தெரியாத சக்தி பின்னால் இருந்து அறைந்தது போல் இருந்தது.

மனிதர்கள் தான் எத்தனை எத்தனை பள்ளங்களாகப் பிளவுபட்டுப் போகிறார்கள். ஜாதி, மதம், தேசியம், நாடு, இனம், ஐரோப்பியன், இந்தியன், வெள்ளை, கறுப்பு, உசத்தி, தாழ்த்தி… எத்தனையெத்தனை பள்ளங்கள். எத்தனை ஞானிகள் எத்தனை மகான்கள் தோன்றி எத்தனை பேசி, எழுதிப் போயிருக்கிறார்கள். எல்லாம் வெறும் புத்தகங்கள். எங்கோ ஒரு கூடு மறந்த பறவை ‘கீச்‘சென்றது. கீழே இறங்கித் தன் அறைக்கு வந்தான் தம்பி.

பேப்பரை எடுத்து வைத்துக்கொண்டு, கட்டைப் பேனாவில் மையைத் தொட்டுக்கொண்டு எழுதத் தொடங்கினான்.

பாரீஸ் நகரத்து உச்சநீதிமன்ற நீதிபதிக்கு விலாசமிட்டு, அன்று மன்றத்துக்குள் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கூடுதல் குறைவின்றி உண்மையை மாத்திரம் எழுதினான்.

‘சுதந்திரம், சகோதரத்துவம், சகவாழ்வு என்கிற மனித குலத்தின் பெருமை மிக்க ஒரு தேசத்தின் கற்றறிந்த நீதிபதி, ஒரு வழக்கறிஞருக்கு இந்த அநீதியைச் செய்தது முறையா? இதைத் தங்கள் நீதிமன்றம் அனுமதிக்கிறதா?

நீதிதேவதைக்கு முன்னால் வெள்ளை கறுப்பு என்கிற வித்தியாசங்கள் தான் உண்டா? தேசம் ஒவ்வொன்றுக்கும் ஒரு குணம் உண்டு. கலாசாரப் பூந்தொட்டியும், கலைகளின் விளைநிலமும் ஆன பிரான்ஸ் தேசத்தின் முகத்தில் நிறவெறிக் கறையைப் பூச ஒரு தனி மனிதரும், ஆணவத்தையே உரிமையாகக் கொண்டவரும் ஆன ஒரு நீதிபதிக்குத் தங்கள் நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறதா?

வணக்கத்துக்குரிய நீதிபதி அவர்களே! எனக்குப் பிரயமானதும், நீதிமன்றம் அனுமதித்ததுமான உடைகளையும் சப்பாத்தையும் அணிந்தே நான் நீதிமன்றம் செல்லத் தாங்கள் உத்தரவிடவேண்டும். புதுச்சேரி நீதிபதியின் தீர்ப்பையே தாங்களும் ஆதரிப்பீர் எனில், இந்த வழக்குரைஞர் வேலையை விடுவேனே அல்லாது, என் வழக்கத்தை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். நீதி ஒருபோதும் சாகாது என்பதை நான் அறிவேன். சர்வ வல்லமை பொருந்திய இறைவனின் சந்நிதானத்தின் முன் மனிதர் என்ற முறையில், சமத்துவத்தை மட்டுமே நான் கோருகிறேன்‘ என எழுதி முடித்தான். அடுத்த நாளே கடிதத்தைப் பாரீசிலிருக்கும் தன் நண்பரும் வழக்கறிஞரும் முற்போக்காளருமான ஜூரி கோதீனுக்கு அனுப்பி வைத்தான். நம்பிக்கையோடு அன்று இரவு உறங்கவும் செய்தான்.

அப்பா சொன்னார்.

“எனக்கு அப்பவே தெரியும். ராஜாவோடு சூதாட முடியுமாடா? முட்டாளே! அவன் நூறு கிராமம், ஆயிரம் பசுன்னு பந்தயம் வைப்பான். தலையிலே இருக்கிறதைக் கொத்தாகப் பிடுங்கி வச்சாக்கூட ஆயிரம் மயிரு தேறுமாடா உன் தலையில்?“ என்றார்.

“ஆச்சு. தை பிறந்தா வருஷம் ஒன்றாகப் போகுது. இன்னும் ஒரு தகவலும் பாரீசு பட்டணத்திலிருந்து வந்தபாடில்லை. சும்மா வீட்டிலே உட்கார்ந்து கொண்டு மொட்டுமொட்டென்று தேவாங்கு மாதிரி உறங்கறதைக் காட்டிலும் ஒரு வெற்றிலை பாக்குக் கடை வச்சுக்கிட்டு உட்கார். காலட்சேபமும் நடக்கும். நாலு காசும் கிடைக்கும்“ என்றார். தம்பிக்கு அதுவே சரியென்றுபட்டது.

ஆனால், விதி வேறாக இருந்தது. பாரீஸ் உயர்நீதி மன்றம், புதுச்சேரி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து, பொன்னுத்தம்பிப் பிள்ளை தன் விருப்பம் போல உடுத்திச் சப்பாத்து அணிந்து நீதிமன்றத்துக்கு வரலாம் என்று உத்தரவிட்டிருந்தது.

ஓராண்டுக்குப் பிறகு பொன்னுத்தம்பி, ஐரோப்பியர் போலவே உடுப்பும் சப்பாத்தும் அணிந்து நிமிர்ந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்தான். சுப்பிரமணிய ஐயரும் வீரபாகுவும் கண்ணீர் சுரக்கக் கட்டி அணைத்து வரவேற்றார்கள். நாடு ஷண்முக வேலாயுத முதலியார் போன்ற ஊர்ப் பிரமுகர்கள் தம்பிக்கு மாலை அணிவித்தார்கள்.

“பிள்ளை, பிரெஞ்சு ஆட்சியோடு போராட்டம் நடத்தி முதல் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். பிரான்சிலும் மக்களாட்சி ஏற்பட்டிருக்கிறது. நாம் விடுதலை பெற ரொம்ப நாள் ஆகாது“ என்று நெஞ்சம் விம்ம, ஷண்முக முதலியார் வாழ்த்தினார்.

நீதிபதியின் வளாகத்துக்குள் நுழைந்தான் பொன்னுத்தம்பி. நீதிபதி மாறிவிட்டிருந்தார். முந்தையவரினும் முதிய ஒருவர் நீதிபதி ஆசனத்தில் இருந்தார்.

பொன்னுத்தம்பி, “வணக்கம் கனம் நீதிபதி அவர்களே!“ என்று தலை குனிந்து அவருக்கும் மன்றத்துக்கும் வணக்கம் செலுத்தினான்.

நீதிபதி அவனைப் பார்த்தார். அதே பளிங்குப் பொம்மை போன்ற செம்மை கலந்த வெள்ள நிறம். அவரிடமிருந்து சினேகம் போன்ற மிகுந்த புன்னகை வெளிப்பட்டது.

மிஸ்யோ, பொன்னுத்தம்பி பிள்ளை! நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் நான் அறிவேன். ஒன்று மட்டும் உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன். பிள்ளை! முந்தைய நீதிபதி தங்களைக் குறித்துச் சொன்ன கருத்து அவருடைய சொந்தக் கருத்தே தவிர, எங்கள் தேசத்தின் கருத்து என்று தவறாகக் கருதிவிடாதீர்கள். சமத்துவத்திலும் சகோதரத்துவத்திலும் எனக்கு ஆழமான நம்பிக்கை உண்டு. மனிதர்களில் உசத்தி, தாழ்த்தி சொல்வது இறைவனுக்கே விரோதமானது என்பது என் நம்பிக்கை. தோலின் நிறம்தான் நமக்கு வேறே தவிர அடிப்படையில் நாமெல்லாம் மனிதர்கள் தானே? வாருங்கள். எலலா மனிதர்களையும் நாம் நேசிப்போம். நமக்கு விதித்திருக்கிற நீதியைப் பரிபாலனம் செய்கிற கடமையை முழுச் சித்தத்தோடு நாம் செய்வோம். என் நீதிமன்றம் தங்களை வரவேற்கிறது“ என்றவாறு நீதிபதி எழுந்து தன் கைகளை பொன்னுத்தம்பியிடம் நீட்டினார்.

பொன்னுத்தம்பி அந்த நேசக் கரத்தைப் பற்றிக் கொண்டான்.

******

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

3 கருத்துகள்:

Rathnavel Natarajan on February 19, 2012 at 7:14 AM said...

அருமையான பதிவு.
நன்றி ஐயா.

Aishwarya Govindarajan on February 19, 2012 at 7:22 PM said...

பிரபஞ்சன் என்னும் ஒரு எழுத்தாளரின் எழுத்துக்களை உன்னிப்பாய் படிக்கத் துவங்கியது இக்கதையிலிருந்துதான்.பள்ளித் துணைப்பாட நூலுக்கு நன்றி,

Unknown on April 22, 2015 at 5:38 PM said...

beautiful story

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்